ஸ்ரீராமம்-137

 அத்தியாயம்-137


சம்யுக்தா கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரை சார்ந்தவள்.....


வீட்டிற்கு ஒரே பெண் ....


அவளது தந்தை தோலால்(Leather) செய்யும் காலணிகள்,  இடுப்பு பெல்ட்,  பர்ஸ்,  பெண்களுக்கான பிரத்தியேக கைப்பைகள், இன்னும் சில கைவினைப் பொருட்களை செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் ...


பொருளாதார நிலையில் நல்ல வளமான குடும்ப பின்னணியை கொண்டவள் ...


அவளது தாய் ஸ்பான்டைலிட்டிஸ் என்னும் முதுகெலும்பு வீக்கத்தால் , மிகவும் அவதியுற்றதால், அவரது வைத்தியத்திற்காக இங்கு வந்திருக்கிறாள்.


அதுவும் அவளது  தந்தை முக்கிய  வியாபாரத்திற்காக வெளிநாட்டிற்கு சென்றிருப்பதால் , வேறு வழி இன்றி தாயின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக உடன் வந்திருக்கிறாள் ...


ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றுவதில் இருக்கும் ஆர்வம், பெற்ற தாய் தந்தையருக்கு உதவுவதில் என்றுமே அவளுக்கு  இருந்ததில்லை ...


அழகான கம்பீரமான ஆண்களைக் கண்டால் போதும் உருகி விடுவாள் ....


அதுதான் அவளது பலவீனம் ...


சரியாகச் சொன்னால், இவள் பிரபாவின் தங்கை ப்ரீத்தியின் மினி வர்ஷன் என்றால் சரியாக இருக்கும் .....


ஏன் மினி வர்ஷன் என்றால்,  ஒன்று கிடைக்கவில்லை என்றதும்  ப்ரீத்தியைப் போல் பழிவாங்கும் நடவடிக்கையில்  இறங்காமல்  கிட்டாதாயின் வெட்டென மற.... சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் ....  என்ற எண்ணத்தில்,  வெகு எளிதாக கடந்து விடுவாள் .... அவ்வளவே ....


மற்றபடி  கனியை அடைய  கல் எறிந்து  பார்ப்பதில் வல்லவள்... கிட்டினால் அனுபவிப்பாள்.... இல்லையேல் விட்டொழித்து விடுவாள் ...


இளநிலை கட்டிட  பொறியியல் முடித்துவிட்டு, தற்போது ஒரு பெரும் நிறுவனத்தில், பொறியாளராக பணிபுரிந்து வருகிறாள் ....


தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவதில் விருப்பமில்லை என்பதோடு நண்பர்களோடு ஊர் சுற்றுவதற்கு அந்தப் பணி வசதியாக இருப்பதால், இப்போதைக்கு  இதில் செலுத்திக் கொண்டிருக்கிறாள் ....


இதுதான் சம்யுக்தாவின் வாழ்க்கை வரலாறு ...


" ராம் ,  இது என்ன சைக்கிள்.... யார் கொடுத்தா..... ..." 


ஸ்ரீ  வீராவை பார்த்து கேட்டதும் சம்யுக்தா முந்திக் கொண்டு ,


"இங்கிருந்து மெயின் ஆபீஸ் கொஞ்சம் தூரம் இல்லையா .... பேஷண்ட்ஸ்க்கு மட்டும் தான் அங்க போக பேட்டரி கார் ஃபேஸிலிட்டி.... மத்தவங்க இங்க கொடுக்குற சைக்கிளை யூஸ் பண்ணிக்கலாம் .... இல்லாட்டி நடந்து தான் போகணும் ..." 

என தெளிவான ஆங்கிலத்தில்  விளக்கிவிட்டு


"ஆமா... யாருக்காக இங்க வந்து இருக்கீங்க ...  யாரு பேஷன்ட் ...."  என்றாள் பார்வையை வீராவின் மீது பதித்து.


அவன் பதில் சொல்வதற்குள்,  ஸ்ரீ  தான் தான் நோயாளி .... எனத் தொடங்கி தன்னை ஆட்கொண்டிருக்கும் நோயை பற்றி கூறி முடித்ததும் சம்யுக்தாவின் முகம் செந்தாமரையாய் விரிய,


"ஓ .... நீங்க தான் பேஷண்டா .... ஓகே ஓகே ...." என்றபடி அவள்  ஸ்ரீ மீது ஒருவித ஏளன பார்வையை செலுத்த, அதனை கண நேரத்தில்  உள்வாங்கிக் கொண்ட வீரா


"ஸ்ரீ வா போலாம்  .... லன்சுக்கு அப்புறம்  வைஃபை கனெக்ஷன்காக நான் மெயின் ஆபீஸ் போக வேண்டி இருக்கு  .... " என்றான் உடனே இடத்தை காலி செய்யும் எண்ணத்தில்.


"அங்க வைஃபை கனெக்ஷன் வொர்க் ஆகுதா ராம் ...."  ------- ஸ்ரீ.


"ஆங்... அங்க நல்லா  ஒர்க் ஆகுது..... பேஷன்ட் கூட வந்தவங்க நிறைய பேர் அங்க தான் லேப்டாப்ப வச்சு  ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்காங்க ... லஞ்சுக்கு அப்புறம்  நான் போனா  வர ஈவினிங் ஆயிடும்.... ஆமா .... உன் லன்ச் வந்துடுச்சா ..."


"இன்னும் இல்ல ராம் .... ஆமா நீங்க சாப்டீங்களா ...."


"உன் லன்ச் முடிஞ்சதுக்கு அப்புறம், மெயின் ஆபீஸ் போகும் போது கேன்டீனுக்கு போய் சாப்ட்டுக்கலாம்னு இருக்கேன் ..."


இப்படியாக சம்யுக்தாவை  கண்டு கொள்ளாமல் கணவன் மனைவி இருவருமே உரையாடிக் கொண்டிருக்க,  ஓரிரு கணம் பொருத்துப் பார்த்தவள் 


"ராம்,  வைஃபை கனெக்ஷனுக்காக நீங்க மெயின் ஆபிஸ் போகும் போது , என்னையும் கூப்பிடுங்க .... ரெண்டு பேருமே சேர்ந்தே போலாம் ... எனக்கும் கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்கு ...."  என்றாள் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள .


ஸ்ரீக்கு தன்னவனை அவள் ராம் என்று அழைத்தது பிடிக்கவில்லை ....


 அவளை விட வீராவிற்கு துளி கூட பிடிக்கவில்லை.


வேறு வழியும் இல்லை .... 


அவனுடைய பெரிய பெயரை, ஏதோ ஒரு வகையில் சுருக்கி தானே அழைத்தாக வேண்டும் என்பதால் அமைதி காத்தவன் 


"நீ எனக்காக வெயிட் பண்ணாத .... எனக்கு ஆபீஸ்ல இருந்து போன் வந்தா தான், zoom மீட்டிங்காக  மெயின் ஆபீஸ் போய் ஆகணும்.... மத்தபடி இங்க ஈவினிங் 6 டு 8  சிக்னல் கிடைக்கும் போதே  ரிப்போர்ட்ஸ்  ப்ரிப்பேர் பண்ணிப்பேன் ..."  


என வெடுக்கென்று மொழிந்து விட்டு, அவன் காட்டேஜை நோக்கி நகர, உடனே 


"ராம்,  எங்க வேலை செய்யறாரு...." என்றாள் சம்யுக்தா ஸ்ரீயை பார்த்து .


"ZZZZZ கம்பெனியில அசோசியேட் வைஸ் ப்ரெசிடெண்ட்டா இருக்காரு ...." 


" ஒ...... குட் ....." 


பெண்கள் இருவரும் பேசியது வீராவின் காதுகளில் விழ,  உடனே பற்களை நறநறவென்று கடித்தவன் ,


" ஸ்ரீ........... "  என பெரும் குரல் எடுத்து அழைக்க ,


"கூப்பிடறாரு ...அப்புறம் பேசலாம் ...நைஸ் மீட்டிங் யூ ...." என சம்யுக்தாவிடமிருந்து ஸ்ரீ விடை பெற,  அவள் மெதுவாக தாங்கி தாங்கி நடந்து தாழ்வாரத்தை  அடையும் வரை,  அவளது நடையையே  வெறுத்து பார்த்துவிட்டு இடத்தை காலி செய்தாள் சம்யுக்தா. 


வெளியே இருவரும் படபடவென்று பேசி விட்டு வந்திருந்தாலும்,  அறைக்குள் வந்ததும் மீண்டும் அவர்களது மனம் வியாதியிலேயே மையம் கொள்ள,மனபாரம் கூடிப்போனது.


"பட்டும்மா, இங்க வாயேன்... உனக்கு இந்த பிரச்சனையே ரொம்ப மையில்டா தான்  இருக்காம்...  கூடிய சீக்கிரம் கியோர் பண்ணிடலாம்னு டாக்டர் சொன்னாரு...

அதோட உனக்கு  பத்திய சாப்பாடு எல்லாம்  பிரச்சனையே இல்ல ...  நீதான் ருசிக்கு சாப்பிடாம பசிக்கு சாப்பிடற ஆளாச்சே .... இப்ப வரைக்கும் நீ சாப்பிடற சாப்பாடே பத்திய  சாப்பாடு மாதிரி தானே இருக்கு ... சோ , சீக்கிரம் கியோர் ஆயிடுவ டா ..."  

என்றான் மருத்துவர் சொன்ன அவளுடைய  மறதி பிரச்சனையை மனதில் நிறுத்தி,    உள்ளுக்குள் தளும்பிக் கொண்டே .


அவனது வாய் உரைத்ததை விட , விழிகள் அவன் மனதில் இருந்ததை வெட்ட வெளிச்சமாக  சொல்ல, அவளும் மருத்துவர் சொன்ன தன் மறதி பிரச்சனையை அவன் அறியாமல்  அறிந்திருந்ததால்  உள்ளுக்குள் கலங்கிய படி, மென்மையாய் தலையசைக்க, நிம்மதி பெருமூச்சு விட்டான் நாயகன். 


அதற்கு மேல் அறைக்குள் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க,


"வா...  லன்ச் வர வரைக்கும் .... கொஞ்ச நேரம் பின்னாடி தோட்டத்துல உட்கார்ந்து இருக்கலாம்  ..." 


 அவன் அழைக்க ,அவள் மௌனமாய் பின் தொடர, அவர்களை கண்டதும் எதையோ எழுதிக் கொண்டிருந்த சோம்நாத் அதைப் பாதியிலேயே விட்டுவிட்டு , சுற்றுப்புற சுவர் மீது கை வைத்தபடி அவர்கள்  இருவரையும் அழைத்து நட்பாகப் பேசத் தொடங்கினார். 


குறிப்பாக வீராவிடம்,  அவர் அருமையான ஹிந்தியில் உரையாட,  அவனும் அதற்கு சரளமாக பதிலளிக்க,  சோம்நாத்தின் மனைவி அஞ்சலியும் அந்த உரையாடலில் கலந்து கொள்ள, என  அந்த நிமிடங்கள் கலகலப்பாகக் கழிந்தன.


அப்போது வாசலில் இருந்து அழைப்பு மணி  ஒலிக்க, உடனே சோம்நாத் 


"சாப்பாடு வந்துடுச்சு போல.... போய் சாப்பிடும்மா..."  என ஸ்ரீயை பார்த்து சொல்ல, உடனே வீரா முந்திக் கொண்டு வேகமாக நடந்து சென்று, உணவு கூடையை  சுமந்து வந்த செவிலி பெண்ணிடம் , மருந்துகளைக் குறித்த தகவல்களை சேகரித்து முடிக்க மெதுவாக நடந்து அவனை அடைந்தவள்,


"இவ்ளோ நல்லா ஹிந்தி பேசுறீங்க ...எப்ப கத்துக்கிட்டீங்க ..."  என்றாள் ஆச்சரியமாய். 


" ஐஐடில படிக்கும் போது கத்துக்கிட்டேன் டி ... அங்க மோஸ்ட்லி நார்த் இந்தியன்ஸ் தான் ....  அவங்களுக்குள்ள பேசிக்கிறத கேட்டு கேட்டு,  நானும் அவங்களோட பேசி பேசி கத்துக்கிட்டேன் ..." என்றவன் பொறுப்பாக அவளுக்கு உணவை தட்டில் போட்டுவிட்டு,  மருந்து மாத்திரைகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு,


"பட்டு,  நான் கேண்டீன் போய் சாப்டுட்டு அப்படியே மெயின் ஆபீஸ் போயிட்டு வந்துடறேன் ...." 

என  தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு கிளம்ப,


"சம்யுக்தா வரேன்னு சொன்னா இல்ல ...   போகும் போது அவளையும்  கூட்டிட்டு போங்களேன் ...." என்றவளை முறைத்து  பார்த்து விட்டு பதில் சொல்லாமல் அவன் கிளம்பிச் செல்ல,


'எனக்கு புடிக்குதோ இல்லையோ அந்தப் பொண்ணு சொல்லிச்சேனு சொன்னேன் .... அதுக்கு ஏன் இப்படி  முறைச்சுட்டு போறாரு ....

திடீர்னு ஹிந்தி பேசறாரு ..... திடீர்னு முறைக்கிறாரு ....  ஒண்ணுமே புரிய மாட்டேங்குது .... கல்யாணமாய் நாலு மாசம் ஆகப் போகுது .... இவர பத்தி எல்லாம் தெரியும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் ..... 


இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு இப்ப இல்ல தெரியுது ....' 


தனக்குத் தானே வாய்விட்டே புலம்பிக் கொண்டு,  உணவை உண்டுவிட்டு மாத்திரைகளை விழுங்கி முடித்தாள்.


காலில் வலி இருந்தாலும் அமர்ந்திருக்க மனமில்லாமல் சற்று நேரம் காலாற நடக்க,  அவள் பின் தோட்டத்திற்குச் செல்ல,  அப்போது பத்மினியை சந்தித்தாள்.

 

தொடக்க தினம் என்பதால்,  இருவரும்  தத்தம்  உடல்நிலை குறித்த விபரங்களை மட்டும் உரையாடிவிட்டு விடை பெற்றனர் .


மதியம் சற்று நேரம் கண்ணயர்ந்து விட்டு எழுந்தவள்,  கணவனின் வரவை எதிர்பார்த்து வாயிலில் காத்திருக்க, வீராவும் சம்யுக்தாவும் சைக்கிளில் வருவது தெரிய,  சம்யுக்தா  பேசிக் கொண்டே வீராவை தொடர,  வீரா அவளுக்கு சரியாக பதில் அளிக்காமல் வேகமாக வருவதை பார்க்க முடிந்தது. 


கணவனும் அவளும் இயைந்து பேசிக்கொண்டு வரவில்லை என்று புரிந்தாலும்,  அவர்களை ஜோடியாக பார்த்த மாத்திரத்தில்,  அவளது மனம் காந்தவே செய்ய,  மனம் வெதும்பி  பயனில்லை , உயிரோடு இருந்தும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்றாகி விட்ட நிலையில் , ஒதுங்கி இருப்பது தான்,  தன்னவனின் வாழ்விற்கு  செய்யும் நன்மை என்று திடீர் நப்பாசை தோன்ற , ஒட்ட வைத்த புன்னகையோடு இருவரையும்  எதிர்கொண்டாள் ஸ்ரீ. 


அதனை துளிகூட கண்டுகொள்ளாமல் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்து நிறுத்திவிட்டு தன் இருப்பிடத்தை நோக்கி  நடையிட்டவன் , 


" ஸ்ரீ......  இங்க வா ....." என்றான் தாழ்வாரத்தை அடைந்ததும்  பெருங்குரலெடுத்து. 


அதற்குள் சம்யுக்தா ஏதோ ஸ்ரீயிடம் பேச வர , அதற்கு முன்பாக கணவனின் அழைப்பை  கேட்டவள்


" கூப்பிடறாரு...  அப்புறம் பேசலாம் ...." என பதில் அளித்துவிட்டு  விடை பெற,  மற்றவளின் முகம் முற்றிலும் விழுந்து விட்டது.


வீரா தன்னை முற்றிலும் தவிர்க்கிறான் என்பதை புரிந்து கொண்டாலும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல்,  


எங்க போயிடப் போறாங்க .... இன்னும் ஒரு மாசம் , இங்க தானே வாசம் ...பாத்துக்கலாம் ....

மனதோடு பேசியபடி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தாள் சம்யுக்தா.


அன்றைய மாலை பொழுது,  ஓரளவிற்கு நன்றாகவே கடக்க,  இரவு உணவை உண்டு முடித்துவிட்டு இருவரும் உறங்கச் சென்று விட ,  ஆழ்ந்த உறக்கத்தில் திடீரென்று  ஸ்ரீக்கு  அடிவயிற்றில் வலி ஏற்பட, படுக்கையை விட்டு எழக் கூட முடியாமல் வலியில் துடித்தவள்,  தொடைகளில் ஏதோ பிசுபிசுப்பதை உணர்ந்து போர்வையை விளக்கிப் பார்த்தாள்.

அந்த மாதத்திற்கான மாதவிடாய் வந்திருந்தது.

ஏற்கனவே உடலெங்கும் ஊசி குத்துவது போல் வலி இருந்து கொண்டிருக்கும் நிலையில்,  மாதாந்திர வலியும் இணைந்து கொள்ள தவித்துப் போய்விட்டாள்  பெண். 


அதே அறையில் சாளரத்தை ஒட்டி ஒற்றைக் கட்டிலில் கணவன் உறங்கிக் கொண்டிருந்தாலும்,  அவனை எழுப்ப மனம் இல்லாமல், குருதியில் தோய்ந்திருந்த  இரவு உடை மற்றும் படுக்கை விரிப்பை அவள் அப்புறப்படுத்த முயல,  கால் மற்றும் இடுப்பு வலி காரணமாக சரியாக நிற்க முடியாமல் அதை பாந்தமாக செய்ய முடியாமல் போக,  அதற்குள் அந்த சிறு சப்தத்தை கேட்டு எழுந்தமர்ந்த அவள் கணவன், கணநேரத்தில் பிரச்சனையை புரிந்து கொண்டு,


" ஏய் ஸ்ரீ....  நீ ஒன்னும் பண்ணாதே  எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன் .... நீ   பாத்ரூம் போய் கிளீன் பண்ணிக்க ..." என்று அவளை அப்புறப்படுத்தி விட்டு,  புதிய படுக்கை விரிப்பை மாற்றி, கரை படிந்த துணிகளை  முன் தோட்டத்தில் இருக்கும் குழாயில் காட்டி  மேம்போக்காக சுத்தம் செய்து முடித்தான்.


பிறகு குளியலறைக்குச் சென்று தன்னவளுக்கு தேவையான வஸ்துக்களை கொடுத்து உதவியவன்  அவள் கால்கள் நடுங்குவதைக் கண்டு, அப்படியே அவளை கரங்களின்  அள்ளிக்கொண்டு வந்து படுக்கையில் கிடத்திவிட்டுமருத்துவர் பரிந்துரைத்திருந்த வலி நிவாரணியை  கொடுத்து அவளை உட்கொள்ளச் செய்ய, அரை மணி நேரம் வலியில் உழன்றவள் , பிறகு வலி குறைய குறைய ஆழ்ந்த உறக்கத்தை தழுவினாள்.


காலையில் எழுந்தவளின் விழிகளில் , அவன் நேற்று இரவு கறை படிந்திருந்த துணிகளை துவைக்கும் எந்திரத்தில் இருந்து எடுத்துச் சென்று தோட்டத்தில் உலர்த்திக் கொண்டிருப்பது தெரிய, அப்படியே சரிந்தமர்ந்து விட்டாள்.


வேலையை முடித்துவிட்டு அறைக்கு வந்தவன்,


"இன்னும் நாலு நாளைக்கு நீ யோகா கிளாஸ அட்டென்ட் பண்ண முடியாதுன்னு மெயின் ஆபீஸ்க்கு போன் பண்ணி சொல்லிட்டேன்... இப்ப கஷாயம் ஏதோ கொடுத்து அனுப்பறேன்னு சொன்னாங்க .... போய் பிரஷ் பண்ணிட்டு வா ....  ஏய் நடக்க முடியுமில்ல ... " 

என்றபடி அவளை நெருங்க ,


"ராம், உங்களுக்கு கடவுள்  இன்னும் நிறைய நல்லதை கொடுத்திருக்கலாம் ..... ஏனோ  கொடுக்காம விட்டுவிட்டாரு..." என்றாள் லேசான கலங்கிய விழிகளோடு  கமரிய குரலில்.


"எனக்கு என்னடி குறைச்சல் .....  நல்ல அம்மா அப்பாவுக்கு பொறந்தேன் ....  டாப் மோஸ்ட் எஜுகேஷன் இன்ஸ்டியூட் ஆன IITல படிச்சேன்   டாப் ரேங்க் கம்பெனில டாப் பொசிஷன்ல வொர்க் பண்றேன் ....இதை எல்லாத்தை விட தங்க விக்ரகம் மாதிரி பொண்டாட்டி ....  பார்க்க மட்டுமில்ல   பொறுமையா இருக்க வேண்டிய இடத்துல அமைதியா இருக்கிறது,  பேச வேண்டிய இடத்துல பேசறதுன்னு பேச்சு, செயல் எல்லாத்துலயும் நேர்மையாவும் , நேர்த்தியாவும் இருக்கிற  உன்னை எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறாரு.... நமக்கு கல்யாணம் ஆகி இந்த நாலு மாசத்துல உன்னால நம்ம வீட்ல பிரச்சனைனு ஒன்னு  வந்ததே இல்ல .... இதைவிட ஒரு மனுஷனுக்கு வேற என்ன டி வேணும் ...."


" ம்ச்....  ஆயிரம் சமாதானம் சொல்லுங்க .... உங்க வேலையெல்லாம் விட்டுட்டு நீங்க இங்க வந்து இப்படி கஷ்டப்படறதுக்கு நான் தானே காரணம் .... "


"ஒன்னு சொல்லட்டுமா .... உன்ன எப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ,  அப்ப இருந்து இப்ப வரைக்கும் மனசுல ஒரு இனம் புரியாத நிம்மதி , சந்தோஷம் இருந்துகிட்டே இருக்கு .... ஏண்டா கல்யாணம் பண்ணோம்னு ஒரு தடவை கூட யோசிச்சதில்ல... அதைவிட எப்ப உன்னை தொட்டேனோ, அன்னையிலிருந்து நான் தொட்டதெல்லாம் பொன்னா மாறிடுச்சு .... ரெண்டு வருஷம் கழிச்சு வரப்போற ப்ரொமோஷன் அடுத்த மாசமே வரப்போகுது  அதைவிட டைரக்டர் போஸ்ட் கொடுத்து இப்ப வாங்கிகிட்டு இருக்கிற சம்பளத்தை விட ரெண்டு மடங்கு சம்பளம் கொடுக்க,  என் கிளைட்டே  தயாரா இருக்கான் ..... முன்னெல்லாம் அடிக்கடி தலைவலி ஜலதோஷம் வரும் .... இப்ப அதெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல .... இப்படி உடம்பு, மனசு , செய்யற வேலையில வெற்றினு எல்லா சந்தோஷத்தையும் நீ வந்ததுக்கு அப்புறம் தான் டி அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன் ....

மனசு நிம்மதியா இருக்கிறதால,  உடம்புல வியாதி வர்றதில்ல.... செய்யற வேலைலயும் சரியா கான்சன்ட்ரேட் பண்ண முடியறதால  தொட்டதெல்லாம் ஜெயிக்க முடியுது ....  இதைவிட வேற என்ன வேணும்... ..." என அவளை நெருங்கி கரம் பற்றி  அவன் மொழிய, அவள் லேசாக வெட்கி தலை குனிய , ஒரு கணம் ரசித்தவன்,




பட்டென்று கரத்தை எடுத்து விட்டு,


"இந்த மாதிரி கண்டதையும் யோசித்து குழப்பிக்காம, பாசிட்டிவா இருக்கிற வழிய  பாரு ...  நீ எவ்வளவுக்கு எவ்வளவு பாசிட்டிவா இருக்கியோ,  அவ்வளவுக்கு அவ்வளவு இந்த யூனிவர்ஸ் பாசிட்டிவ்வ உனக்கு அள்ளிக் கொடுக்கும் ...." 


என்று இயம்பியவனை பார்த்து,  மென்  புன்னகை பூத்தபடி  குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

  


அப்போது சத்யனிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.


இயல்பான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, 


"பாண்டி,  அந்த பசங்கள புடிச்சுட்டாங்க ....   காலேஜ் பசங்க தான் .... கஞ்சா குடிக்க பணம் வேணுங்கிறதுக்காக செயின் அறுத்ததா விசாரணைல சொல்லி இருக்கானுங்க .....  ரெண்டு தட்டு தட்டினதுல , செயினை ஒரு சேட்டு கிட்ட வித்ததையும் ஒத்துக்கிட்டாங்களாம் .... சேட்டு அட்ரஸ் வாங்கிக்கிட்டு போய், செயினை போலீஸ்காரங்க மீட்டு கிட்டு வந்துட்டாங்களாம் ..... நீ  இப்ப  கேரளால இருக்கிறத  சொல்லி இருக்கேன்  ..... அடுத்த மாசம்  ஸ்டேஷனுக்கு போய் எழுதி கொடுத்தா  செயின் கிடைச்சிடும்னு சொல்லி இருக்காங்க ... சரி .... பிரியா எப்படி இருக்கா .... டாக்டர பாத்தீங்களா.. என்ன சொன்னாங்க ..." 


என்றவனிடம்,  இங்கு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவன்,


"அன்பு எப்படிண்ணே  இருக்கா .... இன்னைக்கு  அவளுக்கு போன் பண்ணலாம்னு இருக்கேன் ...."  என்றான் பாசத்தோடு.

என்ன தான் அன்பு,   ஸ்ரீ விஷயத்தில் தரம் இறங்கி நடந்து கொண்டாலும்,  சிறுவயதில் இருந்து மகளைப் போல் தூக்கி வளர்த்தவன் அல்லவா,  அந்த பாசத்தில் அவன் வினவ,


" நல்லா இருக்கா .... நாளைக்கு சாயங்காலம் டிஸ்சார்ஜ்னு அப்பா சொன்னாரு  ....  முந்தா நாள் அன்புக்கு அபார்ஷன் ஆயிடுச்சின்னு அவர் சொன்னதும் எனக்கும் பிரபாவுக்கும் ஒரு மாதிரி மனசு பாரம் ஆயிடுச்சு பாண்டி  ... அப்ப பிரபா, உங்க அம்மாவும் அன்புவும் தேவையில்லாம ஸ்ரீ  விஷயத்துல ஆடின ஆட்டம் தான்,  இப்ப இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கு....   யார் வாயிலயும் தேவையில்லாம விழக்கூடாதுங்க .... உங்க அம்மா அன்னைக்கு ஸ்ரீயை  ரொம்ப தான் பேசிட்டாங்கனு  புலம்பி  தீர்த்துட்டா ....." என்றவன், தாய்மை அடைந்திருக்கும்  பிரபாவை ஸ்ரீ வெந்தயக்கீரை சாப்பிட சொன்னதைக் பார்த்து அகல்யா,  அவள் தாய்மை அடையாததை சொல்லி குத்தி காட்டி பேசிய சம்பவத்தை பகிர, உறைந்து தான் போனான் வீரா.


ஏனென்றால் இந்த செய்தியும் அவனுக்கு புதிது ....


சற்றுமுன் பாசத்தால் தங்கை மீதும் தாய் மீதும் தணிந்திருந்த கோபம் மீண்டும் தலை தூக்க,  அதனைக் காட்டிக் கொள்ளாமல், பிரபாவின் உடல் நிலையை மட்டும்  விசாரித்துவிட்டு அழைப்பை துண்டித்தான்.


அன்றைய தினம் முழுவதும் மனம் பாரமாக இருந்தாலும்,  மனைவியை இன்னமும் நன்றாக  பேணிக் காத்து அவளை குணப்படுத்தியே தீர  வேண்டும் என்ற எண்ணம் மட்டும், இன்னும் அதிகமாகி போக,  அவளைப் பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டான்.


தொடர்ந்து வந்த இரு தினங்களும்,  வெகு  சில மாறுபாடுகளோடு இயல்பாகவே கழிந்தன.


வலி மற்றும் உதிரப்போக்கின் காரணமாக, ஸ்ரீ அறையை விட்டு வெளியே செல்லவில்லை என்றாலும்  சம்யுக்தா மட்டும் ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு அவ்வப்போது அவர்களது காட்டேஜிற்கு வந்து போய்க்கொண்டிருந்தாள்.


அப்படி வரும்  போதெல்லாம்,  சில நேரம் இணைய தொடர்பு இல்லாவிட்டாலும்  வீரா தன் மடிக்கணினியில் கணக்கீடுகளில் ஈடுபட்டிருப்பான் , இணையத் தொடர்பு இருக்கும் பட்சத்தில்  குழு உறுப்பினர்களோடு ஜூம் கலந்தாய்வில் பேசிக் கொண்டிருப்பான்   ....


அப்படி அவன் ஓய்வே இல்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்ரீயிடம் , அவளை ஆட்கொண்டிருக்கும் நோயைப் பற்றி இணையத்தில் படித்து விட்டு வந்து இல்லாததையும் பொல்லாததையும் கட்டுக்கதைளாக சொல்லி  கலங்கடிப்பாள் சம்யுக்தா ....


ஏற்கனவே நோயின் தன்மைகளை அறிந்திருந்ததோடு அனுபவித்துக் கொண்டும் இருப்பதால்,  அவள்  இயல்பாக  உண்மை நிலவரத்தை தான் எடுத்துச் சொல்கிறாள்,  என்று எண்ணிக் கொண்டு மேலும் கலங்கிப் போனாள் ஸ்ரீ.


மூன்றாவது நாள் ஸ்ரீ ஓரளவிற்கு உடல் தேறிய நிலையில்,  வீட்டு பின் தோட்டத்திற்குச் செல்ல, அவளை கண்டதும்  பத்மினி 


"என்ன ஆச்சு .... ரெண்டு நாளா உன்ன வெளியவே காணோம் .... தம்பி(வீரா)  மட்டும் துணிய உலர்த்திக்கிட்டு  இருந்தத பார்த்தேன்.... ....  உடம்பு சரி இல்லையா ... உடம்பு வலி இப்ப  பரவால்லயா.... கொடுத்த மாத்திரை ஒத்துக்குச்சா ...." வாஞ்சையோடு நலம் விசாரிக்க, ஸ்ரீ உடனே  விஷயத்தை சொல்ல,


"ம்ம்ம்ம்.... உன் வீட்டுக்காரர் உண்மையிலயே ரொம்ப நல்ல மனுஷன் தான் .... உன்னை  ரொம்ப நல்லா பாத்துக்குறாரே..."


"இப்பன்னு இல்லக்கா .... கல்யாணம் ஆன நாளிலிருந்து எப்பவுமே இப்படித்தான் ரொம்ப நல்லா  பாத்துக்குவாரு ... பொறுமையான மனுஷன் ..." என்றவளிடம், அவளது குடும்ப விஷயங்களைப் பற்றி பத்மினி விசாரிக்க,  

வழக்கம் போல் மனம் திறந்து அனைத்தையும் கொட்டினாள்  ஸ்ரீ. 


ஒரு கட்டத்தில் பத்மினி தானாகவே முன் வந்து தன் கதையைச் சொல்ல,  கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு,  இப்படிக் கூட ஆண்கள் இருக்கின்றார்களா என்ற அதிர்ச்சியில்  திகைத்துப் போனாள்.


அவள் அறிந்த முதல் ஆண் அவள் தந்தை.


அம்மையப்பனிடம்  எப்பொழுதுமே கோபமும் சிடுசிடுப்புத்தனமும் அதிகமாக  இருந்தாலும், மது, மாது, புகை போன்ற கெட்ட பழக்கங்கள் அறவே இல்லாதவர் ....


மனைவியிடம் எறிந்து விழுந்தாலும்,  அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால்,  தன்னால் இயன்றவரை அவளை  பொறுமையோடு பார்த்துக்கொள்பவர் ...


இப்படிப்பட்ட தந்தையும்,திருமணத்திற்கு பிறகு அவளை  கைக்குழந்தை போல்  பேணி பாதுகாக்கும் கணவனும் அமையப்பெற்றவளுக்கு பத்மினியின் கணவன் ராட்சசன் ஆகத்தான் தென்பட்டான். 


நிற்காமல் போகும் உதிரமும்,  அடித்து துவைக்கும் அடிவயிற்று வலியிலும் நித்தம் நித்தம் மனையாள் அவதியுருகிறாள் என்று அறிந்தும், தன் உடல் சுகத்திற்காகவும்,  ஆண் வாரிசு பெறுவதற்காகவும் கட்டிகள் நிறைந்த கர்ப்பபையை காலத்திற்கும் அவள் தூக்கிச் சுமந்தே ஆக வேண்டும் என்று கட்டளை இட்டவன் அவளுக்கு கயவனாகவே தெரிந்தான் ...


"எங்களுக்கு பணத்துக்கு ஒன்னும் பஞ்சமில்ல பிரியா ...  எங்க வீட்ல நானும் என் தங்கச்சி மட்டும் தான் ....  எங்க ரெண்டு பேத்துக்குமே நெலம், வீடு, நகைனு எங்க அப்பாரு நிறையவே சேர்த்து வச்சிருக்காரு ... சொந்த அக்கா பையன் ... பொண்ணை கண்ணுக்கு கண்ணா பாத்துக்குவானு,  1000 சவரம் போட்டு,

500 கிலோ வெள்ளி கொடுத்து,  எங்க கல்யாணத்தை சும்மா அதிறி புதிரியா அஞ்சு நாளைக்கு நடத்தினாரு என் அப்பா ...

என்ன பிரயோசனம் ..... எனக்கு வைத்தியம் பார்க்க கூட என் அம்மா கூட வந்தாக வேண்டிய நிலைமைல இருக்கேன்  ....

நான் பண்ணின பெரிய தப்பு,  ஒரு டிகிரிய கூட ஒழுக்கமா முடிக்காம,  காலேஜ் கட் அடிச்சிட்டு அந்த  ஆள லவ் பண்ணினது தான் ....

அந்த ஆளுக்கு அப்பவே தண்ணி தம்முன்னு எல்லா கெட்ட பழக்கமும் உண்டு ...

தெரிஞ்சும் இதெல்லாம் ஒரு விஷயமானு நெனச்சுக்கிட்டு கண்டுக்காம விட்டுட்டேன் ...

அதுக்கு தான் பெரியவங்க குடி குடியை கெடுக்கும்னு சொன்னாங்க போல ...

அந்த ஒரு பழக்கம் மட்டும் இருந்தா போதும் மத்த கெட்ட பழக்கம் எல்லாம் தானா வந்துடும்னு அப்ப எனக்கு தெரியாது ...

கண்ட கண்ட  கதை புக்க படிச்சு போட்டு,  ஏதோ மாமன் மகன் இருந்தாலே லவ் பண்ணியே ஆகணுங்கிற மாறி, அந்த ஆள போய் பறந்து பறந்து லவ் பண்ணேன்...

இப்ப நினைச்சு பார்த்தா எல்லாம் அசிங்கமாவும் அருவருப்பாவும் இருக்கு ...

கல்யாணம் ஆன நாள்லயிருந்து ஆண் வாரிசு இல்லாத வீட்டோட சொத்தை எப்படி  எல்லாம் ஆட்டய போடலாம்னு  அவன்  யோசிச்சானே ஒழிய,  ஒரு முறை கூட என்கிட்ட அவன் அன்பாவே நடந்துகிட்டதே இல்ல ....


கடைசியா நடந்த குடும்ப பஞ்சாயத்துல, ஆம்பளைன்னா கொஞ்சம் அப்படி இப்படின்னு தான் இருப்பான் .....


ஊர் நாட்ல  நடக்காதததையா... நான் செஞ்சிட்டேன்.. ...

இதுக்கு போய் , எவளாவது ஒரமொறய  கூட்டி பஞ்சாயத்து வெப்பாளா....

நோயாளி பொண்டாட்டிய வச்சுக்கினு, எத்தினி  நாளைக்கு தான் நான் அடி வயித்துல  துண்ட கட்டிக்கினு  இருக்கிறது ....

பேசாம உன் ரெண்டாவது மகளை எனக்கே கட்டிக் கொடுத்துடு மாமா ....

சொந்தத்துக்கு சொந்தம் ஆச்சு .... சொத்தும் வெளியே போவாது ....  உன் மூத்த பொண்ணு அவ பாட்டுக்கு ஒரு மூலையில வாழ்ந்துட்டு போவட்டும்.... உன் இளைய பொண்ணு கண்ணாட்டம் எனக்கு ரெண்டு ஆண் வாரிச பெத்து போடட்டுமே ... எப்படி மாமா... நான் சொல்றது சரிதானேனு என் அப்பாரை பார்த்து கேட்டான்.....

 என் அப்பாரு  துடிச்சி போயிட்டாரு ....

அன்னைக்கு தான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன் ...

அவனுக்கு என்னை டிவோர்ஸ் பண்ணனும்னு ஆசை தான் .... ஆனா என் பேர்ல இருக்கிற பெரிய துணிக்கடை, தென்னந்தோப்பு,  ஒரு பங்களா வீடு எல்லாம் போயிடுமே ...... அதுக்காகத்தான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறான் ...." பத்மினி சொல்லிக் கொண்டே செல்ல, ஸ்ரீயின் மனம்  சிந்தனையில் ஈடுபடத் தொடங்கியது. 


பொதுவாகவே மனித மனம்,  அனிச்சையாகவே ஏதாவது ஒரு சம்பவத்தையோ ,  செயலையோ அதற்கு ஈடானவையோடு  ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்புடையது ......


அப்படித்தான் ஸ்ரீயின் மனம்,  அந்தக் கண்ணுக்குத் தெரியாத கயவனோடு, தன் காதல் கணவனை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியது ...


திருமணம் முடிந்த நாளிலிருந்து இந்தக் கணம் வரை,  எல்லா வகையிலும் நேர்மையாய் நடந்து கொண்டிருக்கிறான் ....


அவன் நினைத்திருந்தால், தன் தந்தை  செய்ய நினைத்த மறு வீட்டு சீரை,   இது தந்தை மகளுக்கு இடையேயான பாசப்பிணைப்பு .... இதில் நான் தலையிட விரும்பவில்லை என்பது போலான பாசாங்கு  வசனங்களைப் பேசி,  நான் எதுவும் கேட்கவில்லை அவராகத்தான் தன் மகளுக்கு செய்கிறார் என்பது போலான நிகழ்வுகளை சித்தரித்து காட்டி கண்டும் காணாதது போல் இருந்து ,  நல்ல பெயரை எடுத்துக் கொண்டே  சீர் வரிசைகளை தட்டிச்சென்றிருக்கலாம் ....


அதை விடுத்து,  கெட்ட பெயர் வந்தாலும் வரட்டும் என்று,  நாசுக்காக தவிர்த்தானே....


அப்படி தவிர்த்ததற்காக,  அவளது உறவினர்களுக்கு மத்தியில் அவனது ஆண்மையே பேச பொருளாகிப் போனதே ...


பத்மினியின் கணவன் போன்ற  அயோக்கியன்கள்  வசிக்கும் இதே பூமியில் தான், தன் கணவனை  போன்ற  நல்லவர்களும்  வாழ்கிறார்கள் என்று என்னும் போது  அவளுக்கு மளைப்பாக இருக்க 


"பிரியா,  உன் வீட்டுக்காரர் நெஜமாவே கிரேட் தான் .... தன் பொண்டாட்டிக்கு இப்படி ஒரு வியாதி வந்திருக்குன்னு  தன் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் தெரிஞ்சா,  ஏற்கனவே குழந்தை உண்டாகலன்னு  இளப்பமா பாக்குறவங்க  இன்னும்  அசிங்கப்படுத்துவாங்கன்னு புரிஞ்சுகிட்டு, அவங்க  கிட்ட ஒரு வார்த்தை சொல்லிக்காம,  உங்க அப்பா அம்மா  கிட்ட கூட மூச்சு விடாம ,  ஆபீசுக்கு லீவு போட்டுட்டு லட்ச கணக்குல பணத்தை செலவழிச்சு உனக்கு வைத்தியத்துக்காக இங்க கூட்டிட்டு வந்திருக்காரே .... உண்மையிலயே நீ ரொம்ப அதிர்ஷ்ட காரி தான் ...."  


பத்மினி புகழ்ந்து கொண்டே செல்ல அதில் ஒரு விஷயம்,   ஸ்ரீயை நின்று நிதானித்து யோசிக்க செய்தது. 


"அக்கா,  இங்க வைத்தியம் பார்க்க லட்சக்கணக்குலயா பணம் செலவாகும்....???" அவள் அதிர்ச்சியும் ஆச்சரியமாய் கேள்வி எழுப்ப,


"என்ன பிரியா இது... சின்ன புள்ள கணக்கா கேள்வி கேட்கற ... இப்ப நாம தங்கி இருக்கிறது ராயல் டீலக்ஸ்  காட்டேஜ் ....


ஒரு நோயாளிக்கு மட்டும் இங்க தங்க, மூணு வேளை சாப்பாடு,  டாக்டர் ஃபீஸ் ,  மருந்து  மசாஜ் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு வாரத்துக்கு கிட்டத்தட்ட முணே முக்கா லட்சம் ஆகுது ....  அப்ப மூணு வாரம்னா உனக்கு  மட்டுமே கிட்டதட்ட 12 லட்சம் செலவாகுதே .... உன் வீட்டுக்காரரும் இங்க தங்கறதால அவருக்கு சாப்பாடு , மத்த  செலவெல்லாமும் இருக்கு இல்ல ....இது இல்லாம கோயம்புத்தூர்ல இருந்து பிளைட்ல வந்திருக்கீங்க .... நான் சொன்னதை விடவே நிறையவே செலவாயிருக்கும் பிரியா .... 

ஏன் இதெல்லாம் அவரு உன்கிட்ட சொல்லவே இல்லையா ...." 


எங்கு சொன்னான் .... அனைத்தையும் ஏற்பாடு செய்து விட்டேன் என்ற தகவலை மட்டும் பகிர்ந்து விட்டு  அவளைக் கைக்குழந்தை போல் அல்லவா தூக்கிக் கொண்டு வந்திருக்கிறான்   ...

அவளுக்கு திருமணம் முடிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிறது .....

இந்தக் கணம் வரை அவள் கேட்பதற்கு முன்பாகவே அவளது தேவைகளை அறிந்து கொண்டு, அனைத்தையும் அவள் கண்முன்னே கொண்டு வந்தல்லவா  நிறுத்தி இருக்கிறான் ...

அவளது சம்பாத்தியத்தை பற்றி அவன் கேட்டதும் இல்லை ....அதை தொட்டதும் இல்லை .....

திருமணத்திற்கு முன்பு அம்மையப்பனின் மகளாக  எப்படி வரவு செலவு பற்றி கவலை இல்லாமல்,  கருத்தில் கொள்ளாமல் இருந்தாளோ,  இக்கணம் வரை அப்படியே தான்  இருக்கிறாள் ....

இன்னும் சொல்லப்போனால் அவளவன் பொருளாதார நிலையில் , சற்றே உயர்தர மத்திய வகுப்பை சார்ந்தவன் தான்....

மற்றபடி பத்மினியின் குடும்பம் போல் பல கோடிகளுக்கு எல்லாம் அவன் அதிபதி அல்ல.....  

மாத சம்பளமாக சில லட்சங்களை பெறுகிறான் அவ்வளவே.... அதற்கும் தனது ரத்தத்தை வியர்வையாக அல்லவா வெளியேற்றுகிறான் ....

எப்படிப் பார்த்தாலும் , அவன் வெட்ட வெளிச்சமாக சொல்லவில்லை என்றாலும்,  அவனுக்கு பணமுடை இருக்க வாய்ப்புள்ளது...... ....


இத்தகைய பொருளாதார சூழ்நிலையிலும் விளையும் நிலத்திற்கு செலவழித்தாலாவது பரவாயில்லை .... என் போன்ற  மலட்டு மண்ணிற்கு அல்லவா மனமார வாரி இருக்கின்றான் ....


இதையெல்லாம் அகல்யா அறிய இருந்தால் ஆடி தீர்த்து விடுவார் ....


ஏற்கனவே தாசியைப் போல்  தாய்மையை தள்ளிப் போடுகிறேன்... என்று தாறுமாறாக குற்றம் சாட்டிக் கொண்டிருப்பவருக்கு, தற்போது  தாரம் என்ற பதவிக்கே தகுதியற்றவளாகிவிட்டேன்... என்ற செய்தியும் அறிய நேர்ந்தால் அவ்வளவுதான்,  அன்றாடம் அமில வார்த்தைகளில் தான் தீக்குளித்தாக வேண்டும் .....


அகல்யா மற்றும்  அன்புவின் ஆட்டம் ஒருபுறம் இருக்கட்டும்,  என்னவன்,  என் மணாளன் ,  என் கண்ணாளன் அவனுக்கென்று ஒரு தரமான வாழ்க்கை அமைய வேண்டாமா ....


மனைவி மழலை என்று மனநிறைவான வாழ்க்கை அவன் வாழ வேண்டாமா ....


பெற்ற தாயே சுயநலத்தை பேணும் இக்காலத்தில் , தனக்கு பாக்கியப்பட்டு விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக சுயநலம் ஏதும் இன்றி,  பாரியாளை பச்சிளம் மழலையாய் வாழ்நாள் முழுமைக்கும் தூக்கி சுமக்க அவன் தயாராக இருக்கலாம் ....

அவன் வாழ்க்கை அப்படி பட்டு  போவதை பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடியாது ...


கூடிய விரைவில்,  ஏதாவது செய்த அவனிடமிருந்து விலகியாக வேண்டும்... எனக்காக செலவழிக்க போகும் பணத்தையும் காப்பாற்றியே தீர வேண்டும் ..." 


என்றெல்லாம் யோசித்து , ஒரு முடிவுக்கு வந்தவள் 


"இல்லக்கா அவரு இந்த செலவை பத்தி எல்லாம்  எதுவுமே சொல்லல ..." என்றாள்  தொண்டை கனத்து கலங்கிய விழிகளோடு.


உடனே


" பிரியா, இவ்வளவு நாளா முடிவெடுக்க முடியாம குழப்பத்துல இருந்தேன்...  ஆனா இன்னைக்கு உன் கூட பேசினதுல ஒரு நல்ல முடிவ என்னால எடுக்க முடிஞ்சது ..."  என்ற பத்மினியை பார்த்து குழப்பத்துடன்,


" என்ன முடிவுக்கா...."


"நான் இங்க வந்து ஒரு மாசம் ஆகப்போவுது .... ஏழு கிலோக்கு மேல வெயிட்ட  குறைச்சிட்டேன்....  இந்த மாசம் மூணே நாள்ல  உதிரம் நின்னு போச்சு... வயித்து வலியும் சுத்தமா இல்ல .... இவங்க கொடுத்த மருந்து மாத்திரை என் உடம்புக்கு நல்ல ஒத்துக்குது.... 

ஒரு காலத்துல இப்படி எல்லாம் உடம்பு தேறினதுக்கு பொறவு,  பொண்ண பெத்து வச்சிருக்கோமே ஊர் நாட்டுக்காவது அந்த ஆள் கூட போய் வாழனும்னு நினைச்சுக்கினு இருந்தேன் .... இப்ப அந்த முடிவை சுத்தமா மாத்திக்கிட்டேன் .... அவன் என்ன என்னை வேணாம்னு சொல்றது .... அவன் இனிமே எனக்கு வேணாம் ....  நான் அவனுக்கு டைவர்ஸ் நோட்டீஸ்  அனுப்புறதா முடிவு பண்ணிட்டேன்.... ...."


"ஐயோ... ஏன் அக்கா இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க ..."


"இவ்ளோ வருஷம் கழிச்சு இப்பதான் சரியான முடிவு எடுத்திருக்கிறேன் பிரியா ...


எனக்கு இந்த ஃபைப்ரைட்ஸ்  பிரச்சனை அதிகமானதிலிருந்து,  ஆம்பளன்னா அப்படித்தான் இருப்பாங்க நீ தான் அனுசரிச்சு போவணும் .... சீக்கிரமே உடம்பை குணமாக்கிக்கினு புருஷனோட போய் சேர்ந்து  வாழற வழிய பாருனு..... 

அவன் உணர்ச்சிக்கு மட்டுமே மரியாதை கொடுத்து என் வீட்டு ஆளுங்க , அவங்க வீட்டு ஆளுங்கன்னு எல்லாரும் மாத்தி மாத்தி  சொல்லிக்கினே இருந்தாங்க ....

நானும் ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க போலன்னு நினைச்சுகினு இருந்தேன் .... ஆனா இப்ப உன் வீட்டுக்காரை பார்த்ததும் தான் , இப்படிப்பட்ட ஆம்பளைங்களும் உலகத்துல இருக்கத்தான் செய்றாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.... 


புருஷன் நோய் வாய்ப்படும் போது , பொண்டாட்டி தன் சுகத்தை யோசிக்காம அவனுக்காகவே வாழனும்... ஆனா பொண்டாட்டி நோய்வாய் பட்டுட்டா,  

புருஷன் உடல் சுகத்துக்காக எவள வேணாலும் தேடி போவலாம்  தப்பில்லனு சொல்ற அசிங்கமான ஆணாதிக்க  சமுதாயத்துல வாழ்ந்துகினு  இருந்திருக்கேன்னு இப்ப தான் புரியுது ....


நான் எந்த ஜென்மத்துல  செஞ்ச பாவமோ, இப்படி ஒரு புருஷனுக்கு வாக்கப்பட்டு இவ்ளோ நாள் கஷ்டப்பட்டுட்டேன் .... இனிமே அந்த கஷ்டத்தை தொடர நான் தயாரா இல்ல...."


பத்மினியின் வாழ்க்கை ஸ்ரீயின் மனதில்  ஏற்படுத்திய தாக்கத்தைப் போல் ஸ்ரீயின் வாழ்க்கை பத்மினியின் மனதில் வேறொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க, கடைசியில் ஸ்ரீ தன் கணவனின் மீது இருக்கும் அதீத  காதலால் ...

பத்மினி தன் கணவனின் மீது இருக்கும் அதீத வெறுப்பால் இருவருமே தத்தம்  கணவர்களை விட்டு பிரிந்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.


அறைக்கு வந்தது முதல் வேலையாக தன் தாயை அறை தொலைபேசி வாயிலாக  தொடர்பு கொண்டாள்  ஸ்ரீ.


"என்ன அம்மு எப்படி இருக்க .... புது நம்பர்ல இருந்து போன் பண்ணி இருக்க .... கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா ...." 


வழக்கம் போல் சுசீலா , மகளை ஆசையோடு விசாரிக்க, அப்போது தான் நண்பனின் திருமணத்திற்காக  கேரளாவுக்கு  செல்வதாக அம்மையப்பனிடம் சொல்லிவிட்டு வந்தது அவளுக்கு  நினைவுக்கு வர,


"ஆமாம்மா... கல்யாணம் ரொம்ப நல்லபடியா முடிஞ்சுது ...." என்றவள் ஓரிரு கணத்திற்கு பிறகு ,


"அம்மா எனக்கு கொஞ்சம் பணம் வேணும் ..." என்றாள் தயக்கத்தோடு. 


" பணமா .... எவ்வளவு கண்ணு வேணும் ...." 


இயல்பாய் சுசிலா வினவ,


" ஒரு பத்து லட்சம் வேணும் ...." என்றாள் இளையவள்  வெகு தயக்கத்தோடு.


" 10 லட்சமா .... ஏன் அம்மு... எதுக்கு கேக்கற..."


"அது .... வந்து ...எனக்கு ஏற்கனவே PCOD பிரச்சனை இருக்குல்ல ...  அத குணப்படுத்த  இங்க கேரளால தங்கி  ஆயுர்வேதிக் மெடிசன் எடுத்தா சரியாயிடும்னு சொல்றாங்க .... அதுக்கு தான் கேட்கறேன் ..... அப்பா கிட்ட பணம் இருக்கும் இல்லம்மா ...." 


வாழ்க்கையில் முதன்முறையாக தாயிடம் பொய் உரைக்கிறாள் ....


அதைவிட முதன்முறையாக,  பொய் உரைத்து பணம் கேட்கிறாள் ....


அவளுக்கே அசிங்கமாக தான் இருந்தது, இருந்தாலும்,  வேறு வழி இல்லை என்ற நிலை ...


"அதெல்லாம்  இருக்கும்மா... மாப்பிள்ளை அக்கவுண்டுக்கு போட்டு விட சொல்லவா ஏன்னா அப்பா இப்ப ஊர்ல இல்ல ..... சென்னை வரைக்கும் போயிருக்காரு... ஊர் திரும்ப ரெண்டு நாள் ஆவும் .... "


" ஒன்னும் அவசரம் இல்லம்மா .... இப்ப ஃபோன் பண்ணி சொல்லி அப்பாவை கலவரப்படுத்தாத .... அவரு ஊருக்கு வந்ததும் விஷயத்தை சொல்லி, பொறுமையா  பணம் அனுப்பினா போதும் ...." 


"சரி அம்மு ....  போன வாரம் தேன் கேரளாவுல பகவதி அம்மன் கோவில்ல,

சீக்கிரமா நீ மாசமாகி,  நல்லபடியா உனக்கு  குழந்தை பொறக்கணும்னு வேண்டுதல் வச்சேன் .... இப்ப அதே ஊர்லயே  உனக்கு நல்ல வைத்தியம் அமைஞ்சிருக்கு பாத்தியா  அதான் அம்மனோட மகிமை ... ஆமா இந்த வைத்தியத்துக்காக வேண்டி எவ்ளோ நாள் உங்க தங்கி இருக்கோணும் ..."


வெள்ளந்தியாக சுசிலா மொழிய,  மனதை கல்லாக்கிக் கொண்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் இட்டுக்கட்டி சொல்ல ஆரம்பித்தாள் ஸ்ரீ, கூடிய விரைவில் கணவனின் ருத்ரதாண்டவத்தை  பார்க்கப் போவதை அறியாமல். 


ஸ்ரீராமன் வருவார்கள் ....

Dear friends,

இன்னும் ரெண்டு எபிசோட்,  ஒரு epilogue இருக்கு ... பிரதிலிபில நடக்கிற போட்டி கதைங்கிறதால அடுத்த வாரத்துக்குள்ள கதையை நான் முடிச்சு ஆகணும் ...

டைம் கிடைக்கும் போதெல்லாம் எழுதிக்கிட்டே இருக்கேன் ... அடுத்த எபிசோடு புதன் இரவு வந்துவிடும் ....

Climax -- expect the unexpected dr...

Love you all for support and encouragement ..

With love

Priya Jagannathan


 










 





  













































































Comments

Post a Comment