அத்தியாயம் 118
வழக்கம் போல் காலை வேலைகளை கணவனின் உதவியோடு முடித்துவிட்டு அலுவலகத்திற்கு லேசான பட்டு ரோஜா நிற டிஷ்யூ புடவையில் அன்றலர்ந்த ரோஜா பூ போல் தயாராகி வந்தவளை பார்த்து இமைக்க மறந்தவன்
"ஹேய்... இன்னைக்கு உன் ஆபீஸ்ல டீம் லஞ்ச் இருக்கு இல்ல .... மறந்தே போயிட்டேன் ..... லுக்கிங் சோ க்யூட் பட்டு... ஆனா ஏன் சாரி கட்டியிருக்க .... " என்றான் ரசனையாய்.
"டிரஸ் கோட் ட்ரடிஷனல் டிரஸ்னு இன்விடேஷன்ல போட்டு இருந்தாங்க ராம்...."
" ஓ.... என்ன லூஸ் ஹேர்ல இருக்க ..."
"இங்க பாருங்க .... எவ்ளோ பெரிய பேக் நெக் ... நான் சொன்னது ஒன்னு அவன் செஞ்சது ஒன்னு .... " என அவள் தையல்காரனை வசைப்பாடிய படி முதுகைக்காட்ட ,
"ஆமா ... வலது பக்க தோளுக்கு கீழ இருக்கற செவப்பு மச்சம் கூட அழகா தெரியுதே..."
"ம்ம்ம்ம்... அதுக்காக தான் லூஸ் ஹேர் விட்டேன் ..."
"இது கூட அழகா தான் இருக்கு ..."
"உண்மையாவே அழகா இருக்கேனா..."
அவனவள் லேசான நாணத்தோடு , கன்னக் குழி விழ , ஆவலோடு கேட்க,
"நிஜம்ம்மா ரொம்ப அழகா இருக்க ... நீ எவ்ளோ இந்த புடவைல அழகா இருக்கன்னு சொல்லட்டுமா ...." பார்வையில் விரசத்தை காட்டியபடி அவன் நெருங்க,
"நோ நோ நோ .... கஷ்டப்பட்டு கட்டி இருக்கேன் கிட்ட வராதீங்க ..."
வாய்விட்டு சிரித்தவன்,
"அப்ப ஈவினிங் கவனிச்சிக்கிறேன்... ஆங்... சொல்ல மறந்துட்டேன்....இப்ப இம்பார்டன்ட் கிளைன்ட் மீட்டிங் இருக்கு... கார்ல தான் கனெக்ட் பண்ணிக்க போறேன் கோவப்படாத ப்ளீஸ் ..." என காரில் அமர்ந்ததும் வழக்கம் போல் தன் அலுவலகக் கலந்துரையாடலில் மும்மரமாக ஈடுபட அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே வர, ஒருவழியாக அவளது அலுவலகம் வந்து சேர்ந்ததும், ஒலிவாங்கியை அமைதிக்கு தள்ளிவிட்டு,
"ஆபீஸ்க்கு போய் தான் ஆகணுமா ...." என்றான் திடீரென்று விஷமமாய்.
"ஏன் ...." அவள் காரில் இருந்து இறங்கியபடி வினவ,
"என்னோட எல்லா மீட்டிங்சும் இன்னைக்கு கேன்சல் ஆயிடுச்சு ... ஆபீஸ்க்கு போகணும்னு கூட அவசியமில்ல... இப்படியே எங்கேயாவது ரெண்டு பேரும் போலாமா ..." அவன் ஆசையாய் மொழிய
"ஐயடா ... AVR சார், AVPஆ இருக்கீங்க... இப்படி காலேஜ் ஸ்டுடென்ட் மாதிரி பிஹேவ் பண்றிங்களே .."
"ஓரே ஓரு நிமிஷம், உள்ள வந்து உட்காரேன்......ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ..." அவன் விஷமமாக வினவ
"நான் மாட்டேன் .... அப்படியே கடத்திட்டு போலாம்னு ஐடியாவா ...."
"அடி கள்ளி .... கண்டுபிடிச்சிட்டியா ..." அவன் குலுங்கி நகைக்க,
"அதான் முகத்துலயே தெரியுதே .... எனக்கு டைம் ஆச்சு ... கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கிற வழிய பாருங்க சாரே...."
"ஈவினிங் வாடி நான் எவ்ளோ பொறுப்புன்னு காட்டறேன் ...." என அவன் ஜொள்ளு விட , அவன் தலையில் லேசாக கொட்டி விட்டு சிரித்தபடி அவள் விடை பெற, அதை அலுவலக கார் பார்க்கிங்கில் தன் காருக்குள் அமர்ந்தபடி கைபேசியில் கண்டு பொங்கிக்கொண்டிருந்தான் ராணா.
வீராவின் முகத்தை பார்க்க முடியவில்லை, அவர்கள் பேசிக் கொண்டதையும் கேட்க முடியவில்லை என்றாலும், திரும்பிய ஸ்ரீயின் முகத்தில் தெரிந்த அதீத சிவப்பும், சிரிப்பும் , அவர்கள் ஏதோ அந்தரங்க விஷயத்தை விவாதித்த கதையை சொல்லாமல் சொல்ல, குமுறிப் போனான் அந்த அசுரன்.
கணவன் விடை பெற்றதும், வழக்கமாக பயணிக்கும் மின் தூக்கியை நோக்கி அவள் செல்ல
"ஹாய் ஸ்ரீ ..... குட் மார்னிங் ..." என்றான் கம்பீரமாய் .
திரும்பிப் பார்த்தவள்
"ஹலோ சா....ராணா... கு..குட் மார்னிங் ..."
என்றாள் ஒரு கணம் தடுமாறி.
அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை...
என்பதோடு அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரியானவன் சாதாரண ஊழியராக இருக்கும் அவளை நினைவில் வைத்துக் கொண்டு வெகு நாள் பழகிய தோழனை போல் அங்கு வந்து காலை வணக்கம் சொன்னது புதிதாக பட , அதுவும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வெகு இயல்பாக நடந்து கொண்டதெல்லாம் வித்தியாசமாகப்பட தடுமாறிப் போனாள் பெண் .
" என்ன ப்ரிஸ் ஆயிட்ட ...."
அவன் மென் புன்னகையோடு வினவ
" ஒ...ஒன்னுமில்ல...." என அவள் திணறிக் கொண்டிருக்கும் போதே ,
"கொஞ்சம் முன்னாடி வந்து வேலை பார்த்தா தானே, கம்பெனி உன்னை மாதிரி செழிப்பா முன்னுக்கு வர முடியும் ... இப்படி கரெக்டா ஒன்பது அடிக்க அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வந்தா .... எப்படி ..."
என்றவனின் திடீர் பேச்சும் பார்வையும் அவள் மீது விரசமாக விழ , கண நேரத்தில் வேதியல் மாற்றம் போல் அவள் முகம் சுருங்கி போக, கண்ணிமைக்கும் நொடியில் சுதாரித்தவன்,
"ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்க்கு மாறி நாலு நாளைக்குள்ள விஷயத்தை கத்துக்கிட்டு பக்காவா மார்ஜின் பிரிப்பேர் பண்ற உன்ன மாதிரியானவங்க சீக்கிரம் வந்தா தானே, நம்ப கம்பெனி முன்னுக்கு வரும் ..." என தன் கூற்றுக்கு தானே முரட்டு முட்டுக் கொடுக்க, சற்று முன் அவனிடம் தோன்றிய பேச்சும் பார்வையும் பொய்யோ என சொல்லும் அளவிற்கு அவன் உடல் மொழி அப்பட்டமாக மாறி இருக்க , ஒன்றுமே புரியாமல் அமைதியாகிப் போனாள் பாவை .
"சரி வா போலாம் ...." என்றவன் தன் தனி மின் தூக்கியை நோக்கி நடக்க,
" லிஃப்ட் இங்க இல்ல இருக்கு ..."
"அங்கயும் ஒரு லிப்ட் இருக்கு .... அதுல தான் நான் யூஷ்வலா போறது வழக்கம்...
நாம ரெண்டு பேருமே பிப்த் ப்ளோர் தானே போய் ஆகணும் ... அதான் ஒன்னா போலாம்னு கூப்பிட்டேன் ..." என்றான் நடந்தபடி வெகு சகஜமாக .
அவன் பேச்சை எப்படி எடுத்துக் கொள்வது எனப் புரியாமல் தடுமாறியவள் வேறு வழி இல்லாமல் பின் தொடர, மின்தூக்கிக்குள் நுழைந்ததும், அவள் நேர் எதிரே நின்றவன், சற்றும் தயங்காமல், சளைக்காமல் அவளையே உச்சாதி பாதம் வரை விழிகளால் வருட, நடந்தது, நடப்பது எதுவுமே புரியாத குழப்ப மன நிலைக்கு ஆட்பட்டவள் வழக்கம் போல் தன் பார்வையை கைபேசியில் செலுத்தி தஞ்சம் அடைந்தாள்.
ஓரிரு கணத்தில் ஐந்தாம் தளத்தில் மின்தூக்கி தரைத்தட்ட , அவன் முதலில் வெளியேற அவள் பின்தொடர , இடவலமாக காரிடாரில் நடந்து கொண்டிருந்த அந்தத் தளத்து ஊழியர்களுக்கு அது புதிதாக பட, மோனிஷாவிற்கு மட்டும் வெகு நூதனமாகவும் குழப்பமாகவும் தோன்ற ஆராய்ச்சிப் பார்வை பார்க்கத் தொடங்கினாள் .
முதல் மூன்று மணி நேரம், இயல்பாய் அனைத்து ஊழியர்களும் அன்றைய பணிகளில் மூழ்கி போக, ராணாவும் வழக்கத்தை விட தனது பிரத்யேக பணியில் , அதாவது மடிக்கணினியில் ஸ்ரீயை அணு அணுவாக கண்காணிப்பதும் ரசிப்பதுமான பணியில் ... அதீத நிலையில் மூழ்கிப் போனான்.
மதிய உணவு அதே தளத்தின் திறந்தவெளி பகுதியில் குழு உறுப்பினர்களுக்காக, பஃபே(Buffet) முறையில் தயாராக இருக்க, சற்று நேரத்திற்கெல்லாம் குழு கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின .
நவீன பாடல்களை ஒலிக்கச் செய்து, நடனம், நாட்டியம் என ஆண் பெண் பேதம் இல்லாமல் சிலர் அருமையாக ஆட, ஓரிருவர் மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி என்று கலக்க, நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அருமையாக கலை கட்டத் தொடங்கின.
இதையெல்லாம் தன் பரிவாரத்தோடு கூட்டத்தின் முதல் ஆளாக நின்று கொண்டு சிரித்து மகிழ்ந்து ரசித்து கொண்டிருந்த ராணா தான், அன்றைய தினத்தின் முழு ஆச்சரியமாக மோனிஷா மற்றும் திலக்கிற்கு பட, நடக்கும் நிகழ்ச்சிகளை காட்டிலும், ராணாவின் செயல்பாடுகளிலேயே அவர்களது கவனம் முழுவதுமாய் குவிய, அப்போது அந்தக் குழுவின் தலைமை அதிகாரி கார்த்திகேயன் ராணாவைப் பார்த்து
"ராணா, திஸ் இஸ் யுவர் டேர்ன்.... யூ மாஸ்ட் டூ சம்திங் ...." என அழைக்க, அவனோ அலட்டிக் கொள்ளாமல் வெகு இயல்பாக ஒலி வாங்கியை வாங்கி விடுகதை போடுவதாக சொல்லி,
"Why it is difficult to find a loving, caring & handsome guy ?( ஏன் அன்பான, அழகான காதலிக்கும் ஆண் கிடைப்பது கடினமாக உள்ளது ...?) " என கண்களில் குறும்பை காட்டியபடி அவன் கேள்வி எழுப்ப, ஒரு கணம் சபையே அமைதி ஆகிப்போக, பெண்கள் அனைவரும் தீவிர சிந்தனையில் மூழ்கினர்.
ஓரிரு கணத்திற்கு பிறகு ஒரு சிலர் ஏதேதோ குறும்பாக பதிலளிக்க அனைத்தையும் சிரித்த முகத்துடனே மறுத்தவன்,
"because i am married...."( ஏனென்றால் எனக்கு திருமணம் ஆகிவிட்டது) என அந்த விடுகதைக்கான விடையை சொல்லி அவன் சிரிக்க , கரகோஷம் விண்ணை பிளந்தது.
தொடர்ந்து அம்மாதிரி வேடிக்கையான அதே சமயத்தில் புத்திசாலித்தனமான விடுகதைகளை அவன் சொல்ல, குழு உறுப்பினர்களும் சிலவற்றிற்கு சரியாக பதில் அளிக்க என குஷியும் கும்மாளமுமாய் அது முடிய, அடுத்து கரோகேவில் பாடல் பாடுவது தொடங்கியது.
நாட்டுப்புறப் பாட்டு , கிராமத்து பாட்டு, குத்து பாட்டு, இளம் காதலர்கள் பாடும் பெப்பி பாட்டு, ஆங்கில வார்த்தைகள் நிறைந்த தமிழ் பாட்டு, பிரபல பழம்பெரும் அன்னிய மொழி பாட்டு என வெவ்வேறு விதமான திரை இசை பாடல்களை தனித்தனியே சிறு சிறு சீட்டுகளில் எழுதி ஒரு குவளையில் இட்டு, பாடுபவர்களிடம் நீட்ட , அதில் ஒரு சீட்டை அவர் தேர்வு செய்து அதில் எழுதப்பட்டிருப்பது போல் பாடல் பாட வேண்டும் என விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
முதலில் கயல்விழி தனக்கான பாடலை தேர்வு செய்ய, அதில் இளம் காதலர்கள் பாடும் பெப்பி பாட்டு எனக் குறிப்பிடப்பட்டிருக்க,
மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே...
சாரல் அடிக்காத பெண்ணே பெண்ணே ...
.
.
.
பறக்க பறக்க துடிக்குதே...
பழகப் பழகப் பிடிக்குதே ...
பழைய ரணங்கள் மறக்குதே ...
என அவள் கணீர் என்று அருமையாக பாட, அவளோடு பலரும் பாடி ஆடி மகிழ,
"குட் , வெல்டன் கயல்விழி ...." என ராணாவும் பாராட்டி மகிழ்ந்தான்.
"ஸ்ரீ நீங்க நல்லா பாடுவீங்கன்னு தெரியும் பாடுங்க ...." என கார்த்திகேயன் ஸ்ரீயை ஊக்க, அவளும் இயல்பாக தனக்கான சீட்டை தேர்வு செய்ய, அதில் பிரபல பழம் பெரும் அன்னிய மொழிப்பாடல் எனக் குறிப்பிடப்பட்டிருக்க, ஓரிரு கணம் யோசித்து விட்டு பாடலை தனக்குள் தேர்வு செய்தவள், அதற்கான ட்ராக்கை கரோகேவில் அமைத்துவிட்டு பாடத் தொடங்கினாள்.
தேரே மேரே பீச் மெய்ன்...
கைசே ஹைய பந்தன் அஞ்சானா ...
மேனே நஹி ஜானா ....
தூனே நஹி ஜானா ....
என்ற பழம்பெரும் பிரபலமான ஒரு காலத்தில் பட்டையை கிளப்பிய பாடலை அவள் ரசித்துப் பாட, மகுடிக்கு கட்டுப்படும் பாம்பு போல் அனைவரும் ரசித்தபடி உறைந்து நின்றனர்.
மற்றவர்களே இப்படி என்றால் ராணாவை பற்றி சொல்லவே வேண்டாம் ...
அவன் அவளிடம் சொல்ல நினைத்த உணர்வுகள் வரிகளாய் அதில் இடம்பெற்றிருக்க மெய் மறந்து போனான் ...
அந்த பாடலின் முதல் சரணத்தின் முடிவில் ... நாயகன் நாயகியை பார்த்து தமிழில்,
நீ ரொம்ப அழகா இருக்க .... என்று கூறுவது போல் அமைந்திருக்கும் ....
அதே போல் ஒலிவாங்கியில் அந்த சரியான இடத்தில், ராணா ஸ்ரீயை பார்த்து ரசித்தபடி
"ஏய் நீ ரொம்ப அழகா இருக்க" .... என சொல்ல,
குழுமியிருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்க எதிர்பாராத அந்த தலையீட்டால் அவள் உறைந்து நிற்க, பாடலைத் தொடரு என்பது போல் அவன் மென் புன்னகையோடு சைகை செய்ய, கணநேரத்தில் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள்.
இரண்டாவது சரணத்தின் முடிவிலும்,
"பரவாயில்லையே ரொம்ப நல்லா பாடறயே..." என்ற வசனம் வரும் இடத்திலும், அவன் சரியாக அதையும் சொல்ல, அதற்கும் ஏகப்பட்ட ஆரவாரம் கிட்ட, பாடலில் கவனம் செலுத்த முடியாமல் அவள் தடுமாறி நிற்க, உடனே பல்லவியை தானே அருமையாக பாடி முடித்தவன் , கனவுலகில் சஞ்சரிப்பது போல் அவளை நெருங்க முயலும் போது,
"வாவ் ராணா சூப்பர்ப்....." என்று கம்பீரமாக குரல் எழுப்பி, அவனை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தான் திலக்.
கண நேரத்தில் தன்னை மீட்டெடுத்த ராணா அன்றைய நிகழ்ச்சிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு உரையை முடித்துக் கொள்ள, உடனே கார்த்திகேயன் பங்கு கொண்ட அனைவரின் பெயரையும் தனித்தனியே குறிப்பிட்டு பாராட்டு பத்திரம் வாசித்தான்.
அதில் குறிப்பாக ஸ்ரீயை பார்த்து,
"லதா ஜி குரல மறுபடியும் லைவ்ல கேட்ட மாதிரி இருந்தது .... ஆன்மாவோடு கலந்து பாடுவாங்கன்னு சொல்லுவாங்க அது மாதிரி அருமையா பாடினீங்க ... உச்சரிப்பும் ரொம்ப சரியா இருந்தது ... இது உங்க ஃபேவரைட் சாங்கா ..."
என கார்த்திகேயன் முடிக்க, தான் சொல்ல வந்ததை அவன் சொல்லி முடித்ததை எண்ணி ராணா புன்னகையும் ஆர்வமாய் ஸ்ரீயை நோக்க ,
"என் ஹஸ்பண்டோட ஃபேவரட் சாங் .... அடிக்கடி பாடுவேன்..." என அவள் சொன்னது தான் தாமதம், தீயை மிதித்தாற் போல் உஷ்ணமும் எரிச்சலும் அவன் உடலெங்கும் பரவ, உடனே அதி முக்கிய வேலையில் ஈடுபடுவது போல் கைபேசியில் முகம் புதைத்துக் கொண்டான்.
சில ஆண்டுகள் பழகிய மோனிஷாவிற்கே, அவனின் மாற்றங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்த நிலையில், அவனுடன் சிறுவயதில் இருந்தே பழகி வரும் திலக்கிற்கு கல்லூரி கால ராணாவை மீண்டும் பார்ப்பது போல் தோன்ற, அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் உறைந்து நின்றான்.
அலுவலக ஊழியர்களில் பாதிப்பேர் அவனை இதுவரை கண்டதே இல்லை ... மீதி பேர் அவனை ஓரிரு முறை சந்தித்திருந்தாலும், இறுகிய முகத்துடனே வலம் வருபவனை தான் கண்டிருக்கிறார்கள் ...
இப்படி குழு கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சகஜமாக பழகிய ராணா அவர்களுக்குமே புதிது தான் ....
அதுவும் இந்த குறிப்பிட்ட பிரிவு தான், நிறுவனத்திலேயே அவனது நேரடி பார்வையில் இயங்கும் பிரிவு என்ற போதிலும், பலமுறை இங்கு குழு கேளிக்கைகள் நடந்த போதும், ஒரு முறை கூட அவன் பங்கெடுத்துக் கொண்டதே இல்லை.
அதெல்லாம் ஊழியர்களுக்கானது என்ற மனோபாவத்தோடு ஒதுக்கி வைத்துவிட்டு, தான் உண்டு தன் வேலையுண்டு என்று பாறை முகத்துடனேயே தன் பணியில் மூழ்கிப் போவான் ....
அப்படிப்பட்டவன் தான் இந்த முறை உடையிலிருந்து அனைத்திலும் பங்கெடுத்துக் கொண்டு, ஊழியர்களோடு ஊழியராக சகஜமாக பழகியது, ஸ்ரீ மற்றும் அவளுடன் புதிதாக சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக தெரிய, வெளிக்காட்டிக் கொள்ளாமல் அதற்கான காரணத்தை தாங்களே தேட முயன்றனர்.
மதிய உணவிற்கான நேரம் வர, பஃபே முறை என்பதால் அவரவர்களுக்கு தேவையான உணவினை தட்டிலிட்டு எடுத்து வந்து, தன் தோழமைகளோடு சிரித்துப் பேசி மகிழ்ந்த படி உண்ண தொடங்கினர் .
ராணாவின் மனம் மட்டும் கனலாய் எரிந்து கொண்டிருந்தது.
அவனால் அவள் கடைசியில் பேசிய பேச்சை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவள் மீது கோபமும் முகம் தெரியாத அவளது கணவனின் மீது ஆத்திரமும் வர, அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திலக், கார்த்திகேயன் , மோனிஷா மற்றும் இன்னும் பிற தலைமைகளோடு பேசிக்கொண்டே உணவு அருந்துவது போலான பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
ஆனால் ஸ்ரீயோ, கயல்விழி மற்றும் இன்னும் பிற தோழமைகளோடு மிகுந்த சந்தோஷத்துடன் பேசிக்கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தாள்.
அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ராணாவை பற்றிய பேச்சு வர, உடனே கயல் விழி
" ராணா சார் இவ்ளோ ஜோவியலா கம்பெனில பேசி இன்னைக்கு தான் பாக்கறேன் .... அவர் தன் வைஃப்போட ஒரு டிவி இன்டர்வியூல பேசும் போது ரொம்ப அருமையா ப்ரெண்ட்லியா பேசியிருந்தாரு... அவரும் அவங்க வைஃப்பும் மேட் ஃபார் ஈச் அதர் ....
அவரோட ஒய்ஃப் சான்சே இல்ல அவ்ளோ அழகா இருப்பாங்க ... அவங்க ஆக்ட்ரஸ் த்விஷாக்கு பர்சனல் மேக்கப் ஆர்டிஸ்டா இருக்காங்க .... உண்மைய சொல்லனும்னா த்விஷாவிட அவங்க தான் அழகு ... சினி இண்டஸ்ட்ரில நிறைய பேருக்கு அவங்க டிரஸ் டிசைனராவும் இருக்காங்க ....
அவங்களோட சன்னும் ராணா சார் மாதிரியே ரொம்ப ஹான்சம்...." என தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லி அவள் ஆஹா ஓஹோ என்று ராணாவை புகழ்ந்ததோடு ,
தன் கைபேசியில் ராணாவும் மான்சியும் இணைந்து கொடுத்த அந்தப் பேட்டியையும்
இயக்கி காட்ட, உடன் இருந்த அனைவரும் ஸ்ரீ உட்பட அந்தப் பேட்டியில் முழுவதுமாய் மனம் தொலைத்தனர்.
உலகில் உள்ள பேரழகிகள் எல்லாம் அவளிடத்தில் பிச்சை எடுக்க வேண்டும் என்பது போல் பேரழகியாக காட்சியளித்தாள் மான்சி .
நாற்பதின் தொடக்கத்தில் இருப்பவள் என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் ....
அவ்வளவு அழகான, மென்மையான, மஞ்சளும் ரோஜா நிறமும் கலந்த அப்பழுக்கற்ற சருமத்திற்கு சொந்தக்காரி.....
உடல் மொழியில் நளினம், மேல்தட்டு வர்க்க நாசூக்கு, நுனி நாக்கு ஆங்கிலம், ஒய்யாரமான நடை உடை , செதுக்கிய சிற்பம் போல் உடல்வாகு என அனைத்திலும் பிரபஞ்ச அழகியையே மிஞ்சும் அளவிற்கு பிரமாதமாக இருந்தாள்...
அதுமட்டுமல்ல அவள் ராணாவை பற்றி காதலோடு லயித்து பேசும் அழகும், அதற்கு ராணா குறும்பும் காதலுமாய் பதிலளித்த பாங்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்க, அதனைப் பார்த்து ரசித்துபடி ஒருவழியாக அனைவரும் உண்டு முடித்துவிட்டு
கை கழுவிக்கொண்டு திரும்பும் போது கயல் விழிக்கு அலைபேசி அழைப்பு வந்தது.
அவள் தனியே சென்று பேச தொடங்கியதும் மற்றவர்களோடு அதிக நெருக்கம் இல்லாததால் ஸ்ரீ பணிமனைக்குச் செல்ல நினைத்து கிளம்பும் போது யாரோ பின் தொடர்வது போல் உள்ளுணர்வு உரைக்க, திரும்பிப் பார்த்தவளுக்கு சற்று தொலைவில் இருந்து ராணா அவளை பார்வையால் தொடர்வது தெரிய, ஒரு கணம் உறைந்தவள் மறுக்கணமே முகம் திருப்பிக் கொண்டு விருவிருவென்று நடந்தாள்.
ஈரடி நடந்திருப்பாள் அதற்குள் ஆயிரம் சந்தேகங்கள் ....
எதற்காக ராணா அப்படி என்னை பார்க்க வேண்டும்.... ஏன் பார்க்க வேண்டும் .... அந்தப் பார்வையில் ஒரு தேடல் தெரிந்ததே ....
தேடலைத் தாண்டி ஏதோ ஒரு செய்தியும் இருந்ததே ....
புரியாமல் ஒரு கணம் யோசித்தவள் ....
முதலில் அவன் என்னை பார்த்தது உண்மை தானா அல்லது ஏதாவது மன பிராந்தியா .... என்ற சந்தேகம் பிறக்க, உடனே உறுதி செய்துகொள்ள அவள் திரும்பிப் பார்க்க,
அங்கு அவன் இருந்ததாக சிறு தடம் கூட இல்லாமல் போக , சிலையாகிப் போனாள் பெண்.
அப்போது 'ப்ரியா' என்ற அழைப்போடு கயல்விழி வர , சுயம் உணர்ந்தவள் அவளுடன் பேசியபடி தன் கேபினுக்குச் சென்று, மற்றதை மறந்து விடுபட்டிருந்த அன்றைய பணிகளில் மூழ்கி போனாள்.
வழக்கம் போல் மாலையில் அவளை அழைத்துச் செல்ல வீரா வர , இன்முகத்தோடு காரில் ஏறி அமர்ந்தவளை நேரலையாக பார்த்துக் கொண்டிருந்த ராணாவிற்கு ஆத்திரம் வகைத்தொகை இல்லாமல் ஏற மறுதினமே அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற முடிவை அக்கணமே எடுத்தான் அந்த அரக்கன்.
கணவனைக் கண்டதும் மனதில் உள்ளதை
கொட்ட எண்ணியவளுக்கு திடீரென்று ஒரு தயக்கம் முளைக்க, அமைதியாகிப் போனாள்.
தன்னவனிடம் சொல்வதற்கு முன்பு அன்று முழுவதும் நடந்ததை மீண்டும் ஒரு முறை
மனதில் ஓட்டிப் பார்த்தவளுக்கு, ராணா நடந்து கொண்ட விதம் அனைத்தும் ஒரு வகையில் இயல்பாகவே தோன்ற ஆரம்பித்தன.
தொழில்நுட்ப வடிவமைப்பாளர் பிரிவிலிருந்து திட்ட மேலாண்மைக்கு மாறிய நான்கு தினங்களில் அடிப்படையை துரிதமாக கற்றுக்கொண்டு அவள் சிறப்பாக செயல்பட்டதை கார்த்திகேயன் மூலம் அறிந்ததால், மேலும் அவளை ஊக்குவிக்க எண்ணி வானளாவி புகழ்ந்து அவன் மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம் ...
அதைவிட அவளுக்கும் கௌதமிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையானது , அலுவலக விவகாரங்களை தாண்டி வித்தியாசமாக இருந்ததால் அவளை அவன் சுலபமாக நினைவில் வைத்திருக்கலாம் ...
அதோடு அலுவலக வளாகத்தில், தான் பயன்படுத்தும் பிரத்தியேக மின்தூக்கியில் பயணிக்க அவளை அழைத்தது கூட இருவருமே ஐந்தாம் தளத்திற்கு பணி நிமித்தமாக செல்வதால் தான் என்ற காரணத்தையும் அப்பொழுதே சொன்னானே..... ...
குழு கேளிக்கையில் அவள் பாடும் போது இடையிடையே அவன் சொன்னது கூட அந்தப் பாடலில் வரும் திரைப்பட வசனங்கள் தானே.... ...
அதுமட்டுமல்லாமல் அவளைப் பாராட்டியது போல் கயல்விழியையும் நன்றாக பாடியமைக்கு பாராட்டு தெரிவித்தானே ...
என்றெல்லாம் யோசித்தவளுக்கு கடைசியாக அவளை தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது மட்டும் ஒருவித நெருடலை கொடுத்தாலும், அதுவும் மன உளைச்சல் காரணமாக தனக்கு ஏற்பட்ட மாயத்தோற்றமோ ...
என்ற எண்ணம் வர, உடனே முடிவெடுத்தாள்.
அவளது கணவன் அனைத்தையும் இயல்பாக எடுத்துக் கொள்பவன் என்றாலும், அவள் விஷயத்தில் மட்டும் பெரும் கோபக்காரன் ...
ஏற்கனவே அதனை ஒரு முறை உணவகத்திலும் கண்டிருக்கிறாள்.....
எனவே ராணாவை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல், தன்னவனிடம் முறையிடுவது நல்லதல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தவள், சோடாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காற்று போல் பொங்கி வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு, அடக்கி வாசிக்கத் தொடங்கினாள்.
ஆனால் மனையாளின் முகத்தில் காணப்பட்ட வழக்கத்திற்கு மாறான சோர்வை கண்டவன்,
"என்னடா ஒரு மாதிரி இருக்க .... ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா ..." என்றான் அவள் தலைகோதி வாஞ்சையாய் .
"ம்ச்... ஒன்னுமில்ல... லேசா தலை வலிக்குது..."
"தலைவலியா ... நான் வேற என்னமோனு நினைச்சேன் ..." என அவன் குறும்பாக சிரிக்க
"என்ன நினைச்சீங்க ..."
"இந்த புடவைல அழகா இருக்கேன்னு யாரும் காம்ப்ளிமென்ட் கொடுக்கல போல அதான் சோகமா இருக்கியோனு நெனச்சேன் ..."
அவன் முகம் பார்த்து முறைத்தவள், லேசான முறுவலோடு அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள் , ராணாவை பற்றிய தன் அபிப்பிராயத்தை மட்டும் மறைத்து.
வழக்கம் போல் அவள் கணவன் இயல்பாக எடுத்துக் கொண்டு ,
"சரியான பாட்ட தான் ச்சூஸ் பண்ணி இருக்க.... " என பாராட்ட,
"ராம், இப்படியே எங்கேயாவது போலாமா..." என்றாள் ஏக்கமாக.
"ஏய் காலையில வரமாட்டேன்னு சொன்ன .... இப்ப கேக்கற... எனிவே நான் ரெடி ... எனக்கு எந்த வேலையும் கிடையாது .... நாளைக்கு லீவு போட்டுடு... ஜாலியா ஊர சுத்திட்டு வரலாம் ... வா" அவன் உல்லாசமாக மொழிய,
அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் திணறிப் போனாள் தலைவி.
ஏதோ ஒரு நுண்ணர்வு , கண்களில் விழுந்த தூசு போல் உறுத்திக் கொண்டே இருந்ததால், அவளது காப்பானாக விளங்கும் கணவனோடு இருந்தால் மன அமைதி கிட்டும் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டாள் ....
ஆனால் அகல்யா அறிய நேர்ந்தால் ஆடி தீர்த்து விடுவார் என்ற எண்ணம் தாமதமாக தான் தலையைத் தட்ட, சுதாரித்தவள்,
"லீவு எடுக்க முடியாது ராம் .... உங்க பிரண்டோட கல்யாணத்துக்கு வேற லீவு எடுக்கனுமே.... காலைல நீங்க கேட்டீங்க இல்ல அதுக்காக இப்ப நான் சும்மா கேட்டேன்......" என முடிக்க,
"பொய் சொல்லாத டி.... ஏதோ ஒரு விஷயம் உனக்குள்ள குடைஞ்சுகிட்டே இருக்கு .... ஆனா என்னன்னு தான் சொல்ல மாட்டேங்குற ....
இட்ஸ் ஓகே ... எனக்கு கொஞ்சம் மெயில் க்ளியர் பண்ற வேலை இருக்குது ஆனா நான் செய்யப் போறதில்ல உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன் ... அதைத்தான் நீ எதிர்பார்க்கிறேன்னு நினைக்கிறேன் ..."
என பொட்டில் அடித்தாற் போல் அவள் மனம் அறிந்து அவன் சொல்ல, மனம் மகிழ்ந்தவள் இதனை விட பல மடங்கு மன உளைச்சலை கொடுக்கும் சம்பவங்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருப்பதை அறியாமல் , அன்றைய சிறு மன உளைச்சலுக்கே கணவனின் அருகாமையை எதிர்பார்த்து சற்று நெருங்கி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
வீட்டில் அகல்யா விட்டேற்றியாய் கைபேசியில் மூழ்கி இருக்க, வழக்கம் போல் கணவனின் உதவியோடு இரவு உணவை தயாரித்து அனைவருக்கும் பரிமாறி விட்டு தானும் உண்டு முடித்தவள் தன் அறைக்கு வந்த அடுத்த கணமே ஆதிசேஷனின் மேல் பள்ளி கொண்டிருக்கும் திருமால் போல் காட்சியளித்த தன் மன்னவனின் மார்பில் படர,
"பட்டு, ஏதாவது பீர்(peer) பிரஷர் ஃபீல் பண்றியா... புது டிபார்ட்மெண்டுங்கறதால கோப் அப் பண்ண முடியலையா ...." என கேள்விகளை அடுக்கினான் அவளது புதுவித நெருக்கத்தைக் கண்டு.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல .... கொஞ்ச நேரம் எதையாவது பேசுங்களேன் .... ரொம்ப நாளாச்சு நிம்மதியா பேசி ..." என்றவளின் விழிகளில் அப்பட்டமாய் பொய் தெரிய , அதனை அப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு ,
"அலுவலகத்தில் நடந்தவைகள், ராம்சரண் ஸ்ரீனி உடன் ஆன அவனது நட்பு .... ஸ்ரீனியின் திருமணத்திற்காக ஊட்டி பயணத்திற்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் ...." என ஏதேதோ அவன் பேச, அவன் தொடைகளின் மீது தன் கால்களை ஒய்யாரமாக போட்டுக்கொண்டு அவன் தோள் மேல் தலை வைத்துக்கொண்டு , அவன் முகத்தையே அவள் ரசனையாய் பார்த்தபடி கேட்டுக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அந்தப் பார்வையில் மயங்கியவன், அவளை நெருங்கி இதழை சிறைப்பிடித்தான்.
"ம்ச்......ம்ம்...ம்... வி... டுங்க ..விடுங்க ..." என்று சிரமப்பட்டு விலகியவள்,
" பேசிகிட்டு இருக்கலாம்னு தானே சொன்னேன் ..."
"ஏண்டி கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா பேசிக்கிட்டு இருக்கேன் .... இன்னுமா பேசணும் .... மீதி கதையை நாளைக்கு சொல்றேன் ..." என்றபடி அவள் கழுத்தில் முகம் புதைத்து அவளை தன் வழிக்கு கொண்டு வந்ததோடு தானும் அவளுடன் இரண்டற கலந்து, கரைந்து காணாமல் போனான்.
உறக்கம் பிடிப்படாமல் ராணா தன் அறையில், அடுத்து எடுத்து வைக்கப் போகும் அடியை பற்றி தீவிரமாக யோசித்தபடி இடவலமாக நடந்து கொண்டிருக்க , அவன் மனைவியோ அவளது அறையில் ஸ்ரீயை பற்றி அறிந்து கொள்ளும் எண்ணத்தில் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள்.
நீண்ட யோசனைக்கு பிறகு.....
" ஒரு பத்து தடவைக்கு மேல ஆபீஸ்க்கு போயிருப்பேன்.... இதுவரைக்கும் மது ஸ்ரீ மாதிரியே இருக்கிற அந்தப் பெண்ணை நான் பாத்ததே இல்ல ...
ஒருவேளை சமீபத்துல நடந்த வாக்-கின் இன்டர்வியூல புதுசா ஜாயின் பண்ணி இருப்பாளோ....
இருந்தாலும் இருக்கலாம் .... ஓரியண்டேஷன் வீடியோவ பார்த்தா கண்டுபிடிச்சிடலாம் ..." என தனக்குத்தானே பேசிக்கொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் சமீபத்தில் நடந்த ஓரியண்டேஷன் நிகழ்ச்சியை தேடிச் சென்றவளுக்கு, தொடக்க இணையதள பக்கத்திலேயே, அன்று காலை நடந்தேறிய குழு கேளிக்கை நிகழ்ச்சி youtube காணொளி போல் பதிவேற்றப்பட்டிருக்க, அதன் தம்பு நெய்லில்(Thumb nail) கயல்விழி, ஸ்ரீ, ராணா, கார்த்திகேயன் , இன்னும் சிலரின் முகங்கள்
மின்னி மின்னி மறைய, ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தவள், மறுக்கணமே அதனை தொட்டுத் துவக்கினாள்.
நடனம் , நாட்டியம், பாடல்கள் என ஒவ்வொன்றையும் பொறுமையில்லாமல் ஓடவிட்டுப் பார்த்தவள், ஸ்ரீ பாடிய பாடலில் மட்டும் உறைந்தே போனாள்.
அவள் கணவன் ராணா, ஸ்ரீ பாடிய பாடலுக்கு இடையிடையே அந்தத் திரைப்படத்தின் நாயகன் பேசிய காதல் வசனத்தை வசீகரத்தோடு பேசியதையும், உடன் இணைந்து பாடியதையும் கண்டு அதிர்ச்சியில் சிலையானவளின் கண்கள் ஆற்றாமையும் ஏக்கமுமாய் கண்ணீரை உகுக்க, மெல்லிய விசும்பலோடு வாய்விட்டே அழத் தொடங்கினாள்.
ஆசை ஆசையாய் காதலித்து மணந்தவனோடு இத்துணை ஆண்டு காலம் ஒரே வீட்டில் வாழ்ந்தும், மனைவிக்கான உரிமையை அடைய முடியவில்லையே என்கின்ற ஆதங்கம் அவள் நெஞ்சை பிசைய,
விழி நீரை துடைத்தபடி , கணவனின் உரையோடு காணொளியை முடித்துக்கொண்டு
"மதுஸ்ரீ விஷயத்துல நான் சொன்ன ஒரு சின்ன பொய் என் மனச உறுத்திக்கிட்டு இருந்ததால தான், இத்தனை நாளா பொறுமையா இருந்தேன்.... ஆனா இனிமே அப்படி இருக்க மாட்டேன் .... எனக்கு என் ராணா வேணும் .... அதுக்கு நான் எந்த எல்லைக்கும் போவேன் ..."
என கோபத்தோடு முழங்கியவள் , ராணாவின் உரையோடு நிறுத்தாமல், கார்த்திகேயன் ஸ்ரீயை புகழ்ந்ததையும் அதற்கு அவளது பதிலையும் பார்த்திருந்தால் அவளைப் பற்றிய தவறான எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொண்டிருப்பாள்.....
ஆனால் விதி யாரை விட்டது ......
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
.
Super mam
ReplyDeleteThanks dr
Deleteawesome 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
ReplyDeletethanks dr
DeleteSemma semma sis. Interesting uh poguthu. Waiting for next ud.
ReplyDeletethanks dr
Delete