அத்தியாயம் 138
ஊட்டியில் ....
கடந்த சில தினங்களாக ராம் சரண் சிறகுகள் இல்லாமலேயே விண்ணில் வட்டமடித்துக் கொண்டிருந்தான்.
தமிழ் மொழியில் மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம் , ஆரவாரம், கும்மாளம், குதூகலம் போன்ற நேர்மறை உணர்வுகளை குறிக்கும் வார்த்தைகள் என்னென்ன உண்டோ அனைத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தான் என்று சொன்னால் மிகை ஆகாது.
அவன் நாயகி கண் விழித்து விட்டாள் என்பதோடு ஓரளவிற்கு உணவு உண்ணவும் பேசவும் ஆரம்பித்து விட்டாள் என்பது தான் அதற்குக் காரணம்.
அவளுக்கு பேச்சுப்பயிற்சி, கை கால்களை அசைக்க பிசியோதெரபி, சிறிது நேரம் நடைப்பயிற்சி போன்றவைகள் சத்தான சரிவிகித உணவோடு பார்த்து பார்த்து வழங்கப்பட்ட வந்த நிலையில் முன்பை காட்டிலும், ஓரளவிற்கு நன்றாகவே தேறியிருந்தாள்.
ராம்சரண் இம்மி அளவு நகராமல் பொக்கிஷத்தை பூதம் காப்பது போல் அவளை பார்த்துக் கொண்டான் .... ஸ்ரீ பாப்பா தாயை கண்களில் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டே ,
" இனிமே ரொம்ப தாச்சி தூங்காத ...
மம்மு சாப்டு ....
என்னோட வெள்லாடு.."
என சொன்னதும் , குழந்தையின் ஆழ் மனதில் தாயைப் பற்றிய தேடல் ஆழமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து பெற்றவர்கள் கண் கலங்கி போயினர்.
நினைவு திரும்பி ஒருவாரத்திற்கு மேல் ஆன நிலையில், அவளது உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் , தன் குழந்தைகளை காண வேண்டுமென்ற அவளது விருப்பம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவமனை நிர்வாகம் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க சுபயோக சுபதினத்தில் வீடு வந்து சேர்ந்தாள்.
சிவகாமி ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்து வரவேற்றதும், முதல் வேலையாக கணவனின் கரத்தை பற்றுகோளாய் பற்றிக் கொண்டு மெதுவாக நடந்து சென்று, தன் புத்தம் புதிய செல்வங்களை கண்ணாரக் கண்டு, ஆனந்தக் கண்ணீர் சிந்திய படி, ஆசையாக தொட்டுப் பார்த்தாள்.
குழந்தைகள் இரண்டும் அவளது சாயலில், ராம்சரணின் நிறத்தில் ஜொலிக்க, மனம் கொள்ளா மகிழ்ச்சியில் உறைந்து போனாள்.
வீட்டு உறுப்பினர்கள் முதல் வீட்டு வேலைக்காரர்கள் வரை புடை சூழ்ந்த படி இன்முகத்தோடு நலம் விசாரித்தது விவரிக்க முடியாத அளவிற்கு , அவளுள் இனிமையை நிறைத்திருக்க புது மஞ்சள் கயிறு கழுத்தில் மின்ன, பளிச் புன்னகையில் ராமலட்சுமி , ஸ்ரீனி உடன் ஜோடியாக வரவேற்றது, அவளது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க, உள்ளுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டாள் , மரணத்திலிருந்து தப்பிய அந்த மங்கை.
தாய் ருக்மணி , தந்தை தியாகராஜனின் விழிகள் கலங்கிய நிலையில் மகளைப் பாசத்தால் வருட, இமை மூடி திறந்து லேசாக இடவலமாக தலையசைத்து கவலைப்படாதீர்கள் என்பது போல் மௌனமாய் பெற்றவளுக்கு ஆறுதல் சொன்னவள், தாய்ப்பால் முற்றிலும் வற்றி போய்விட்டதால் மருத்துவர்கள் பரிந்துரைத்த பால் பொடிகளை குழந்தைகளுக்கு கலந்து கொடுக்கும் போது மட்டும் தாயாய் மனம் கலங்கி போனாள்.
மற்றபடி அவளையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள இரண்டு அனுபவம் மிக்க செவிலிப் பெண்களை முன்னதாகவே ரங்கசாமி நியமித்திருந்தது குழந்தைகளுக்கான பராமரிப்பில் பேருதவியாக இருக்க, திருப்தி அடைந்தாள் ராம்சரணின் மனையாட்டி.
அடுத்த வேலையாக தங்கையின் திருமணத்தை கண்ணாரக் காண முடியாமல் போனதால், அதனை காணொளியில் கண்டு மகிழ்ந்தவள், தன் கணவன் , தன் மகளோடு சோர்ந்த முகத்துடன் மணமேடையின் ஓரத்தில் நிராதரவாய் நின்றிருந்த காட்சியைக் கண்டு கலங்கி விட்டாள்.
"ஏய், எதுக்கு அழற .... இப்ப தான் நீ நல்லபடியா வீட்டுக்கு வந்துட்ட இல்ல .... அப்ப உனக்கும் குழந்தைகளுக்கும் ஹாஸ்பிடல்ல டிரீட்மென்ட் போய்கிட்டு இருந்தது ... அந்த சோகத்துல இருந்தேன் அவ்ளோ தான் ..." என்றான் ராம்சரண் மனைவியை சமாதானப்படுத்தும் விதமாக.
இங்கு 99% மனிதர்களுக்கு திருமண வாழ்க்கையில் இரண்டாவது சந்தர்ப்பம் அமைவதே இல்லை ....
அப்படியே அமைந்தாலும், அதனைப் பலமாக பற்றிக் கொண்டு மீண்டும் உறவினை புதுப்பித்து அன்னியோன்யமாக வாழும் தம்பதிகள் இங்கு வெகு வெகு குறைவு ....
அந்த வகையில் ராம்சரண் , ஸ்ரீலக்ஷ்மியின் வாழ்க்கை கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று தான் ....
தொடக்கத்தில் காதல் இருந்தும் புரிதல் இல்லாத மணவாழ்க்கை ...
பிறகு புரிதலற்ற பிரிவு ...
பிரிதலுக்குப் பின்பான புரிதல் துவங்கிய காலத்தில், விபத்து அவர்களது வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட, வாழ்வா சாவா என்று வாழ்க்கையின் கடைசி படிக்கட்டுகளில் நின்று போராடி கொண்டிருக்கும் போது,
"தந்தேன் வாழ்க்கையை ..." என்பது போல் மீண்டும் கடவுள் அவர்கள் இருவருக்கும் வாழ்க்கையை பரிசளிக்க, தற்போது இருவருமே மறுஜென்மம் பெற்ற தம்பதிகளாகி போயினர் ...
அந்த வீட்டின் மூத்த தலைவரான ரங்கசாமியில் ஆரம்பித்து, வீட்டின் கடைநிலை ஊழியரான பன்னீர்செல்வம் வரை, அனைவருக்குமே லட்சுமி மறுஜென்மம் எடுத்து வந்திருப்பது அளவில்லா ஆனந்தத்தை கொடுத்திருக்க, மறுபிறவி எடுத்து வந்தவளும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு ஆனந்தத்தில் அமிழ்து தான் போனாள்.
ஸ்ரீனியின் குடும்பத்திற்கும் விஷயம் தெரிவிக்கப்பட , அவர்களும் அவளைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்தனர்.
சுமித்ரா லட்சுமியை தொடர்பு கொண்டு, மருத்துவம் சார்ந்த சில அறிவுரைகளை வழங்கிவிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தாள்.
மருத்துவமனையில் லட்சுமிக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பயிற்சியையும் வீட்டிலும் கொடுக்கப்பட ரங்கசாமி ஏற்பாடு செய்திருக்க, அது அவளது உடலிலும் மனதிலும் பழைய உறுதியை ஓரளவிற்கு மீட்டெடுக்க பேருதவியாக அமைந்து போயின.
மருமகள் வீட்டிற்கு வந்த மூன்றாவது நாளிலேயே, தேன் நிலவிற்காக ஒரு மாத காலம் ராமலட்சுமி ஸ்ரீனியை சகல வசதிகளோடு சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைத்தார் ரங்கசாமி.
வீட்டு மனிதர்கள், குழந்தைகள் , செவிலி பெண்களுக்கு மத்தியில் கணவன் மனைவிக்கான தனிமை வெகு அரிதாக கிட்டிய நிலையில்,
"நான் தான் ஹாஸ்பிடல்ல கோமால படுத்து கிடந்தேன் ... அதனால பாதியா இளைச்சிட்டேன் .... உங்களுக்கு என்ன .... நீங்க எதுக்கு இப்படி பாதியா இளைச்சீங்க ..."
என்றவளை பார்த்து வாய்விட்டு சிரித்தவன் ,
"நான் இளைச்சு போயிட்டேனா .... நல்லா சொன்ன போ ... இங்க பாரு... நான் நின்னா என் பின்னாடி இருக்க பீரோவே தெரிய மாட்டேங்குது ... 90 கிலோக்கு ஒரு கிராம் கூட குறையாம இருக்கேன் டி... என்னை போய் இளைச்சிட்டேன்னு சொல்ற .... " என்றபடி அவளை கரங்களில் அள்ளி அவன் தட்டாமலை சுற்ற,
"ப்ளீஸ் இறக்கி விடுங்க ...." என அவள் திணற
"நான் ஹெல்த்தியா இருக்கேன்னு ஒத்துக்கோ... இறக்கி விடறேன் ..."
அவன் பேரம் பேச, ஒரு வழியாக பெண்ணவள் , அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு லேசாக சிரித்தபடி தலையசைத்து ஆமோதிக்க,
"அது ..." என்றான் அழுத்தமாய் அவளை இறக்கிவிட்டு தன்னோடு அணைத்துக் கொண்டு .
ஓரிரு கண அமைதிக்கு பிறகு ,
"குட்டிக்கு கல்யாணம் நடந்தது அருணாவுக்கு தெரியுமா ..." அவள் மென்மையாய் கேட்க,
"இப்ப எதுக்கு தேவையில்லாம அவளை பத்தி பேசற ..." அவன் வழக்கம் போல் தூர்வாச முனிவராய் சீற,
"அப்ப இன்னும் தெரியாதா ..." அவள் தலை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து வெள்ளந்தியாய் வினவ , அப்போது தான் நடந்து முடிந்த அசம்பாவிதங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது என்பதே அவன் நினைவுக்கு வர
"இங்க பாரு ... இனிமே அருணா கற்பகத்தை பத்தி பேசுறத முதல்ல நிறுத்து .... அவளுங்களால வாழ்க்கையில நாம நெறைய நல்ல சந்தர்ப்பத்தை இழந்துட்டோம் .... இனி மேலும் அதுங்கள பத்தி பேசி நம்ம டைம வேஸ்ட் பண்ண வேண்டாம் ... "
என அவன் உறுதியாக உரைத்த போது தான் ஏதோ நடக்கக்கூடாதவைகள் நடந்தேறி இருக்கின்றன என்று அவளுக்கு தோன்ற உடனே,
"நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் .... அது ......"
அவள் வெற்றியைப் பற்றி சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன்
"ம்ச்... லட்சுமி .... எனக்கு எல்லல்ல்ல்லாம் தெரியும் .... சும்மா பழசை பேசி உன் ஹெல்த்த கெடுத்துக்காத ...எனக்கு இப்போ உன்னோட ஹெல்த்தும் குழந்தைகளோட ஹெல்த்தும் தான் முக்கியம். .... இனிமே நாம அதுல தான் கான்சன்ட்ரேட் பண்ணனும் .... மத்தத பத்தி யோசிச்சு கூட பாக்க கூடாது புரிஞ்சுதா ..."
என்றான் அவளை அர்த்த புஷ்டியான பார்வை பார்த்து.
ராமலட்சுமியின் திருமண விஷயத்தில் அருணாவைக் காப்பாற்ற காமாட்சி பொய் சொன்னதிலிருந்து, தன்னவளை கொல்ல அருணாவும் கற்பகமும் திட்டமிட்டது , பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிறையில் இருப்பது வரை அனைத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆசை அவனுள் இருந்தாலும், பச்சை உடம்பு காரி, உடன் விபத்தில் அடிபட்டு கோமாவில் இருந்து இப்போது தான் மீண்டிருக்கிறாள் ... .. அவளது உடலும் மனமும் தேற , குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆவது ஆகும் என்பதால் அதுவரை அடக்கி வாசிக்க முடிவு செய்தே அப்படி சொன்னான்.
கணவனின் அர்த்தம் பொதிந்த பார்வையில், அவனுக்கு வெற்றியை பற்றி ஏதோ தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள் மேற்கொண்டு பேச மனமில்லாமல்,
" வாங்க குழந்தைகள போய் பார்க்கலாம் ..."
என புன்னகை ததும்ப மொழிந்து விட்டு முன்னேற, அவளது கரம் பற்றிய படி மனநிறைவோடு பின் தொடர்ந்தான் ராம்சரண்.
--------------—-----------------------------------------
சில தினங்களுக்கு முன்பு ,
"சார், அவங்க டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு கிளம்பறாங்க ...." வேகமாய் ஓடி வந்து ரிஷியிடம் படபடத்தாள் ரம்யா .
அவள் லட்சுமியை தான் சொல்கிறாள் என்பதை கண நேரத்தில் புரிந்து கொண்டவனுக்கு, கடைசியாக ஒரே ஒரு முறை தொலைவிலிருந்தாவது அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறக்க , உடனே தன் அறையின் பால்கனியில் இருந்து ராம்சரண் லட்சுமியை கைத்தாங்களாக அழைத்துச் சென்று காரில் ஏற்றியதை பார்த்தான் கண்கள் பனிக்க.
பாதியாய் இளைத்திருந்தவளை பார்க்க பார்க்க , அவன் அடிமனம் ஆழமாய் பிசைய,
'துரோகிக்கு கூட என்னோட நிலைமை வரக்கூடாது .... ' என மனதோடு பேசிக் கொண்டவனுக்கு, மாற்றான் மனைவியை இன்னமும் மனமார காதலித்துக் கொண்டிருப்பது ஒருவித அவமானம் கலந்த கூச்சத்தை தர, கார் கிளம்பிய மறு நொடியே அறைக்குத் திரும்பி, மனதை திசை திருப்ப மடிக்கணினியில் மூழ்கிப் போனான்.
அப்போது கிஷோரிடமிருந்து ( அவனுடைய , மெய்காப்பாளர் மற்றும் செயலாளர் ) அழைப்பு வந்தது.
"சார், ஐஜி இப்ப தான் பேசினாரு .... எல்லா ஆங்கில்லயும் விசாரணை நடத்தி முடிச்சிட்டாங்களாம் .... உங்களுக்கு நடந்தது சாதாரண ஆக்சிடென்ட் தானாம் .... ஆக்சிடென்ட் செஞ்ச லாரி டிரைவரை விசாரிச்சதோட, அவன் குடும்பப் பின்னணி அவனோட தொடர்புல இருக்கிறவங்கன்னு எல்லாரையும் அலசி ஆராய்ஞ்சதுல பிசினஸ் ரிவெஞ்ஜுக்காக அந்த ஆக்சிடென்ட் நடக்கலன்னு ப்ரூவ் ஆயிடுச்சுனு சொன்னாரு........" என கிஷோர் முடிக்க,
"ஓகே குட் ... ஹாஸ்பிடல்ல பேசிட்டியா ..."
"ஹாஸ்பிடல் சேர்மன், டீன்(dean) ரெண்டு பேர் கிட்டயும் பேசிட்டேன் .... நீங்க இன்னைக்கே எப்ப வேணாலும் டிஸ்சார்ஜ் ஆகலாம்னு சொல்லிட்டாங்க .... இன்னும் கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் ரிப்போர்ட் கிடைச்சுடும்.....வாங்கிட்டு வந்துடறேன் சார் .... ரெடியா இருங்க .... ஊருக்கு கிளம்பிடலாம் ..."
" ஓகே கிஷோர்.... ஐ அம் வெயிட்டிங் ..." என முடித்தான் லேசான மன பாரத்தோடு.
அவனுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உடல்நிலை தேறி விட்டது.
ஆனால் நடந்த விபத்து குறித்து சரியான தகவல்கள் கிடைக்க பெறாத நிலையில் மருத்துவமனையை விட்டு அவன் வெளியேறுவது நல்லதல்ல என காவல்துறை உயர் அதிகாரி அறிவுறுத்தியிருந்ததால், கூடுதலாக ஒரு வார காலம் மருத்துவமனையில் அவன் தங்க வேண்டியதாயிற்று.
அவன் சுவாசிக்கும் அதே காற்றை சுவாசித்துக் கொண்டு, அவனது மனதிற்கினியவளும் அதே மருத்துவமனையில் வேறொரு மூளையில் இருக்கிறாள் என்பதே ஏதோ ஒரு வகையில் நிம்மதியை கொடுத்திருக்க , அந்த உணர்வில் மிதந்தபடியே ஒரு வார காலத்தை ஓட்டியிருந்தவனுக்கு , தற்போது அரை மணி நேரத்திற்குள் கிளம்பியாக வேண்டிய நிலை.
அவனுடைய சொர்ண சாம்ராஜ்யங்கள் அவனது வரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தன...
என்ன தான் அவன் அண்ணன் ராகேஷ் ஷா, குடும்பத்தையும் , நகை வியாபாரத்தையும் தரமாக ஏற்று நடத்திக் கொண்டிருந்தாலும் தங்கம், வைரம் , வைடூரியத்தின் கொள் முதலில் இருந்து அதன் விற்பனை வரை ரிஷி கையாளும் வியாபார நுணுக்கத்தை அவனால் சரிவர கையாள முடியாது என்பதால், அவன் ரிஷியின் வரவை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்க, அதற்காகவே துரிதமாக கோயம்புத்தூர் செல்ல தயாராக தொடங்கினான் ரிஷி.
அவனது பயணத்திற்காக வழக்கம் போல் தன்னாலான உதவிகளை ரம்யா சுறுசுறுப்பாக செய்து கொண்டிருக்க, ஒரு கணம் அவன் பார்வை அவள் மீது படிந்து நிலைத்தது.
ரம்யா ஊட்டியில் வசிக்கும் படுகர் இனத்தைச் சார்ந்த பெண் ....
வெகு சாதாரண குடும்பப் பின்னணியை கொண்டவள் ....
ஒரு அண்ணன் மற்றும் தங்கையோடு பிறந்திருந்தவளுக்கு, தங்கைக்கு 3 வயதாகும் போது , அவள் தந்தை விபத்தில் மரணம் அடைய, அதன் பின் தாயின் உழைப்பு மற்றும் அரவணைப்பில் அவள் வளர்த்து ஆளாகும் சூழ்நிலை உருவாகி போனது.
மகன் தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் கிடைக்கும் பயிர் வேலைகளை எல்லாம் ஓய்வின்றி செய்து அவள் தாய் அவளது தமையனை படிக்க வைக்க, அவனோ படித்து முடித்து உத்தியோகத்தில் அமர்ந்ததும், தாய் , தங்கைகளை பற்றி கவலைப்படாமல் பணக்காரப் பெண்ணை காதலித்து மணந்துக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறினான்.
நல்ல வேளையாக அவள் நர்சிங் படித்து முடித்த சமயம் அது என்பதால், விட்டுச் சென்றவனைப் பற்றி கவலைப்படாமல், அவள் முழு வீச்சில் வேலை தேட, உடனே நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைக்க, அன்றிலிருந்து பெற்றவளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தங்கையை படிக்க வைத்துக் கொண்டு, குடும்பத்தைக் தூக்கி நிறுத்தும் தூணாகிப் போனாள்.
இவையெல்லாம் அவளைப் பேச வைத்து அவன் அறிந்து கொண்டவைகள்.
மூன்று ஆண்டிற்கு முன்பு , எந்த பயிற்சி நிறுவனத்திற்கும் செல்லாமல், அவளது தங்கை வீட்டிலிருந்தே படித்து நீட் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்ததை , அவனிடம் செய்தித்தாளில் காட்டி மகிழ்ந்தவள் தன் நன்றி கெட்ட அண்ணனுக்கு முன்பாக, தன் தங்கையை மருத்துவராக்கி காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உழைப்பதாக சொல்லியிருந்தாள்.
அவளைப் பொறுத்த மட்டில், ரிஷி ஏதோ ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறான் என்பதால்,
" சார் , ஒரு மாசமா ஹாஸ்பிடல்ல அட்மிட்டாயி இருக்கீங்களே .... இந்த மாசத்துக்கு உங்க கம்பெனில சம்பளம் கொடுப்பாங்களா மாட்டாங்களா .....
உங்களுக்கு ஒரு 80 ஆயிரம் சம்பளம் இருக்குமா .... இஎம்ஐ ஏதாவது இருக்கா ....
எனக்கெல்லாம் இருபதாயிரம் தான் சம்பளம்..... ....
பார்க்க நான் டம்மி பீஸ் மாதிரி தான தெரியறேன்... ஆனா எனக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இருக்குன்னு சொன்னா நம்புவீங்களா ....
ஆனா.... என்னையும் நம்பி ஒரு லட்ச ரூபா கடன் கொடுத்திருக்காங்கன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் ....
என்ன ஒன்னு, என் அம்மாவுக்கு கடன் வாங்கறது சுத்தமா புடிக்காது சார் ..... யார்கிட்டயும் பத்து காசு கடனாவோ இனாமாவோ வாங்கினா கோவப்படுவாங்க ...
நான் நர்சிங் படிச்சதை விட இப்ப என் தங்கச்சிக்கு பீஸ் ரொம்ப கம்மி சார் .... அந்த பீஸ்ஸாவது கட்டினா தானே என் தங்கைய டாக்டராக்க முடியும் .... அதனால தான் என் அம்மாவுக்கு தெரியாம இந்த கடன வாங்கி வச்சிருக்கேன் .... எப்படியாவது கூடிய சீக்கிரமே கடனை அடைச்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு ...
உங்களுக்கு கடன் இருக்கா சார் ....
நானே ஒரு லட்ச ரூபா கடன் வச்சிருக்கேன்னும் போது உங்க சம்பளத்துக்கு 20 லட்சமாவது கடன் இருக்குமில்ல ...
இப்படித்தான் அவன் கேட்கிறானோ இல்லையோ வாய் ஓயாமல் தன் சொந்தக் கதை சோகக் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பாள் ....
ஒரு கட்டத்தில் அவளது பேச்சில் இருக்கும் வெள்ளந்தி தனத்தையும் , நிதர்சனத்தையும் ரசிக்க ஆரம்பித்தான் ரிஷி ....
மருத்துவமனை உணவு பிடிக்காமல் அவன் தவித்த சமயங்களில் , சப்பாத்தி சப்ஜி போன்ற வட இந்திய உணவு வகைகளை, தன் வீட்டில் தயார் செய்து எடுத்து வந்து உண்ணக் கொடுப்பாள் ....
இரவு மாத்திரையை உட்கொள்ளாமல் உறங்கி விட்டால், அவனை எழுப்பி மாத்திரையின் உட்கொள்ள செய்து விட்டே உறங்கச் செல்வாள் ....
உறக்கத்தை களைத்து விட்டாள் , என அவன் குற்றம் சாட்டினாலும், மாத்திரையின் தீவிரத்தை மெதுவாக எடுத்துச் சொல்லி புரிய வைப்பாள்...
அலட்டிக் கொள்ளாமல் குடும்ப நிலவரத்தை உள்ளது உள்ளபடியே சொல்வது, தாய் தங்கையின் மீது அவள் வைத்திருக்கும் அளவற்ற பாசம், தாயை ஏமாற்றிய தமையனுக்கு எதிராக தங்கையை உயர்த்தி காட்ட வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக செயல்படும் பாங்கு போன்ற அவளது குணாதிசயங்கள் அவனைக் கவரவே செய்ய, 'இன்று ஒரு தகவல்' என்பது போல் , அவளே பேச மறந்தாலும் அன்றாடம் அவளிடம் அவளது குடும்ப விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வான் ....
இப்படியாக கடந்த ஒரு மாதமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தவன் , தற்போது உடல் தேறி ஊருக்கு கிளம்பும் தருணம் வந்ததும்,
"ரம்யா இங்க வா ...."
என்றழைத்தான் ஏதோ ஒன்றை சிந்தித்துக் கொண்டே.
அவள் வந்து நின்றதும், ஒரு கணம் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன்,
"ம்ம்ம்ம்ம்ம்.... ஆங்..... இதா .... இத வச்சுக்க ..."
என்றான் தன் கையில் இருந்த கடிகாரத்தை கழற்றி கொடுத்து.
கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தாலான நான்கு விலைமதிப்பற்ற சிறு வைர கற்கள் பதித்த கடிகாரம் அது. ஆண் பெண் இருபாலரும் பயன்படுத்தலாம் ....
ஒரு முறை வியாபார நிமித்தமாக அவன் லண்டன் சென்றிருந்த போது , வைர வியாபாரி ஒருவர் அவனுக்கு பரிசாக அளித்த கடிகாரம் அது.
அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ற எண்ணம் மட்டும் அவனுள் இருந்து கொண்டே இருந்தது ....
பணமாக கொடுத்தால் நிச்சயம் பெற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை அறிந்ததால், பரிசுப் பொருளாக கொடுக்க எண்ணி அந்த கடிகாரத்தை கொடுக்க,
"அய்யய்யோ, வாட்ச் எல்லாம் வேணாம் சார்.... .... இங்க பாருங்க.... இந்த வாட்ச் போன மாசம் போனஸ்ல வாங்கினது .... 2000 ரூபா நல்லா இருக்கு இல்ல .... "
" உன் வாட்ச் நல்லா தான் இருக்கு..... இருந்தாலும் இந்த வாட்ச்சையும் என் ஞாபகார்த்தமா வச்சிக்கோயேன் ..."
"உங்கள மறக்க முடியுமா சார் ... ஒரு வேளை உங்களை மறந்தாலும், அந்த டீச்சர் அம்மாவுக்காக நீங்க கண் கலங்குனீங்களே.... அதை மறக்கவே முடியாது சார் .... "
என்றவளை மென் புன்னகையோடு பார்த்தவனுக்கு, கடிகாரத்தின் விலையைச் சொல்லி அதனை ஏற்றுக் கொள்ளச் செய்ய மனமில்லை.
அப்படியே விலை அறிய நேர்ந்தாலும், ஏற்றுக் கொள்ளவே மாட்டாள் என்பதை அறிந்திருந்ததால்,
"சரி ..... என் நம்பரை குறிச்சிக்கோ.... இது என் பர்சனல் நம்பர் .... உனக்கு ஏதாவது வேணும்னா போன் பண்ணு ..." என்றான் கனிவாய்.
"எனக்கு உங்க ஊர்ல ஏதாவது பெரிய ஹாஸ்பிடல்ல வேலை இருந்தா சொல்லுங்க சார் ..அதே மாதிரி ஃபாரின்ல எங்கயாவது வேலை இருந்தாலும் சொல்லுங்க சார் .... அடுத்த வருஷம் என் தங்கச்சி படிப்பு முடியறதுக்குள்ள கடன அடச்சியாகணும் ..."
அவள் வழக்கம் போல் மனதில் இருப்பதை எதார்த்தமாக கொட்ட,
"நிச்சயமா ...." என்றான் சட்டை பொத்தான்களை சிரமப்பட்டு போட்டுக் கொண்டே.
அவன் திணறுவதைக் கண்டு, அவளே மீதம் இருக்கும் பொத்தான்களை போட்டு முடிக்க , அப்போது அங்கு கிஷோர் வரவும் சரியாக இருந்தது.
"கிஷோர், பேக்ஸ கொண்டு போய் வண்டில வையுங்க .... மத்தத போகும் போது பேசிக்கலாம் ...." கட்டளை இட்டு விட்டு, ஊன்றுகோலோடு அவன் மெதுவாக மின் தூக்கியை நோக்கி நடக்க, அவனது கணினி பையை சுமந்துக்கொண்டு உடன் பயணித்தாள் ரம்யா.
சொன்னது போல் கிஷோர் அனைத்தையும் முடித்துவிட்டு காரோடு அந்தக் கட்டிட வளாக வாயிலில் வந்து நிற்க,
"போயிட்டு வரேன் ...." என்றபடி அவன் அவளைப் பார்க்க
" சார், ஹாஸ்பிடல்ல யாராவது போயிட்டு வரேன்னு சொல்லுவாங்களா சார் ... நீங்க இனிமே எப்பவுமே ஹாஸ்பிடல்கே போகக்கூடாதுனு கடவுளை வேண்டிக்கிறேன்.....நீங்க ரொம்ப அழுத்தம் சார் .... உங்கள பத்தி இதுவரைக்கும் எதுவுமே சொன்னதில்ல .... எப்பவும் போன்ல ஹிந்திலயே வேற பேசிகிட்டு இருந்தீங்களா ...
எனக்கும் நீங்க பேசறத வச்சு எதையும் கண்டுபிடிக்க முடியல .... ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலன்னு மட்டும் தெரியும் .... அதனால உங்க அம்மா அப்பாவ கேட்டதா சொல்லுங்க......இனிமே காரை ரோட்ல மட்டும் ஓட்டுங்க சார் .... உங்களுக்கு கல்யாணம் முடிவாச்சின்னா பத்திரிகை அனுப்புங்க.... வரேன் ...."
அவள் குறும்போடு சொல்லி முடிக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்விட்டு சிரித்தவன்,
"நிச்சயமா சொல்றேன் .... தேங்க்ஸ் ரம்யா... தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்...."
அவளிடம் தான் யார் என்றே காட்டிக் கொள்ளாமல் விடை பெற்றான். இருவருக்கும் அடுத்தவரின் உதவி தேவைப்படும் தருணத்தில், காலம் அவர்களை சந்திக்க வைக்கும் சூழ்நிலையை உருவாக்கும் என்பதை அறியாமல்.
------------------------------------------------------------
கேரளாவில்....
தன் மடிக்கணினியை மூடி பையில், வைத்து விட்டு ஆசிரம அலுவலகத்தில் இருந்து வீரா கிளம்ப எத்தனிக்கும் போது , ராம்சரணிடமிருந்து அழைப்பு வந்தது .
அவனே நண்பனுக்கு அழைப்பு விடுக்க எண்ணியிருந்த நிலையில், உற்ற நண்பனே அழைத்திருந்தது மகிழ்ச்சியை தர , உடனே அழைப்பை அனுமதித்து இயல்பாக நலம் விசாரிக்க தொடங்கினான்.
ராம்சரண், தன் மனையாள் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தகவலை பகிர,
"கங்கிராஜுலேஷன்ஸ் சரண் .... நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிட்ட டா ... இனிமே உன் வாழ்க்கைல எப்பவுமே சந்தோஷம் மட்டும் தான் ...." மனமார வீரா வாழ்த்த, அப்போது அவன் எதேச்சையாக ஸ்ரீயை நலம் விசாரிக்க , நடந்த அனைத்தையும் யாரிடமாவது கொட்ட வேண்டும் என்ற மன அழுத்தத்தில் இருந்தவன், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தன் மனையாளை ஆட்கொண்டிருக்கும் நோயிலிருந்து , அவளை அடையத் துடிக்கும் ராணா வரை அனைத்தையும் சொல்லி முடிக்க, திகைத்துப் போனான் ராம் சரண்.
"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில டா .... இப்படி எல்லாம் கூடவா ஒருத்தன் இருப்பான்..... நீ சொல்றதை எல்லாம் வச்சு பார்த்தா , அவன் ஏதோ பெருசா பிளான் பண்ணி இருக்கான் டா .... நல்ல வேளையா ஸ்ரீ அந்த கல்யாணத்துக்கு போய் அவன் கிட்ட சிக்கலான்னு சந்தோஷப்பட்டாலும், இப்படி ஒரு ஹெல்த் இஷ்யூல அஃபெக்ட் ஆகி அவ கஷ்டப்படறத நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு ..... ஆனா நீ அலோபதிய நம்பாம அவளுக்கு ஆயுர்வேதிக் ட்ரீட்மென்ட்டுக்கு உடனே ஏற்பாடு பண்ணினது ரொம்ப நல்ல விஷயம் டா ...100% ஸ்ரீ கூடிய சீக்கிரம் குணமாயிடுவா... .... உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு.... அங்க மூணார்ல அப்பாவுக்கு தெரிஞ்ச எஸ்டேட் காரங்க நிறைய பேர் இருக்காங்க .... ஒரு போன் பண்ணா போதும் இம்மீடியட்டா வந்துடுவாங்க ..."
என்றவன் நண்பனுக்கு பல வகையில் ஆறுதலும் அறிவுரையும் கூறிவிட்டே அழைப்பை துண்டித்தான்.
நண்பனிடம் மனம் விட்டு பேசியது, மனபாரத்தை வெகுவாக குறைத்து , புது தென்பினை கொடுத்திருக்க, அந்த உற்சாகத்தில் துரிதமாக சைக்கிளை ஒட்டிக்கொண்டு வீரா தன் காட்டேஜை நோக்கி வரும் போது , ஸ்ரீ சோம்நாத் மற்றும் அவரது மனைவியோடு முன்புற தோட்டத்தின் மர பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
சைக்கிளை நிறுத்தி விட்டு வீரா அவர்களை நெருங்கும் போது, அவன் வரவுக்காகவே காத்திருந்தது போல் எங்கிருந்தோ ஓடி வந்து அந்த குழுவில் ஐக்கியமான சம்யுக்தா ,
"ஹாய் ராம், ஹலோ அங்கிள் ஆன்ட்டி ..."
என அனைவரையும் பார்த்து புன்னகைத்தாள் ஸ்ரீயை மட்டும் தவிர்த்து.
அதனை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் வீரா கண்டுகொண்டான் இறுகிய முகத்தோடு.
அப்போது உள்விளையாட்டு சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் வர , சீட்டுக்கட்டில் மறைந்திருக்கும் கணிதம், செஸ்ஸில் ஒளிந்திருக்கும் முடிவெடுக்கும் திறன், ரூபிக்ஸ் கியூபில் முப்பரிமாணத்தை அடிப்படையாக வைத்து சிக்கலை தீர்க்கும் திறன் ஆகியவை பேசப்பட, அப்போது சோம்நாத் தன் மனைவி கையில் இருந்த ரூபிக்ஸ் கியூபை காட்டி
"இவளுக்கு இந்த ரூபிக்ஸ் கியூப சால்வ் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை .... தினமும் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கா ...
இப்ப வரைக்கும் இவளால ரெண்டு லேயர் தான் பண்ண முடியுது.... ஒரு காலத்துல அல்காரிதத்தை ஞாபகம் வச்சுக்கிட்டு நான் மூணு லேயரையும் சால்வ் பண்ணேன் .... இப்ப மறந்து போச்சு ..."
என சொல்ல ,
" என்னாலயும் மூணு லேயரையும் சால்வ் பண்ண முடியாது அங்கிள் .... ஆனா ஸ்ரீ மூணு நிமிஷத்துல மூணு லேயரையும் பக்காவா சால்வ் பண்ணிடுவா..."
என வீரா பெருமிதமாகச் சொல்ல,
"ஸ்ரீ எங்களுக்கு கொஞ்சம் செஞ்சி காட்டும்மா..... நாங்களும் கத்துக்குறோம் ..." என சோம்நாத் ரூபிக்ஸ் கியூபை , ஸ்ரீயிடம் கொடுக்க ,
"மழை வர மாதிரி இல்ல ..." என்றாள் சம்யுக்தா பேச்சை மாற்றும் முயற்சியில், உள்ளுக்குள் காந்தியபடி.
ஆனால் மற்றவர்கள் அதை கண்டு கொள்ளாமல் , ஸ்ரீயின் கையில் இருந்த ரூபிக்ஸ் கியூபை ஆர்வத்தோடு பார்க்க, அவளும் அமைதியாய் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க
" ஏய் ஸ்ரீ.... என்ன ஆச்சு .... " என்றான் வீரா அவசரமாய்.
"ராம், கை... கைய மடக்கி இதை ஹோல்ட் பண்ணி ட்விஸ்ட் பண்ண முடியல ...." கமரியக் குரலில் கண் கலங்கியபடி அவள் மொழியும் போது தான், அவளை ஆட்கொண்டிருக்கும் நோயின் தீவிரமே அவனுக்குத் தெரிய வர, துடித்துப் போய் விட்டான்.
மூத்த தம்பதியர் முகமும் சோகத்தில் மூழ்க,
"இந்த வியாதி இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சகஜம் .... இன்னும் கொஞ்ச நாள் போனா உங்களால பேனாவை புடிச்சு எழுத கூட முடியாது ..."
வெடுக்கென சம்யுக்தா சொல்ல, அவளை தீப்பார்வை பார்த்தவன் ,
" நீ பை ப்ரொபஷன் சிவில் இன்ஜினியர் தான..... .... டாக்டர் இல்லையே .... ஏதோ எக்ஸ்பர்ட் மாதிரி பேசற ..." வீரா எரிந்து விழ,
"ஸ்ரீ.... இப்ப தான உனக்கு டிரீட்மென்ட் ஸ்டார்ட் ஆயிருக்கு ... போகப் போக மெடிசன் , மசாஜ் எல்லாம் கொடுத்தா சரியாயிடும் .... இவ இங்க வரும் போது (தன் மனைவியை காட்டி) , இவளால முட்டிய மடக்க முடியாது, தரையில உட்கார முடியாது, கொஞ்ச தூரம் நடக்க கூட முடியாது .... ஆனா இப்ப இதையெல்லாம் சர்வ சகஜமா செய்றா.... இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கும் இந்த பிராப்ளம் எல்லாம் சால்வ் ஆயிடும்மா... வருத்தப்படாத ..."
என சோம்நாத் ஆறுதலும், அறிவுரையும் வழங்கிக் கொண்டிருக்கும் போதே , கேட்க மனம் இல்லாமல் வேலை இருப்பதாக சொல்லிக் கொண்டு சம்யுக்தா இடத்தை காலி செய்ய , பிறகு மூத்தவர்கள் விடை பெற, இளையவர்களும் அறைக்குத் திரும்பினர்.
கணநேர அமைதிக்குப் பிறகு,
"ராம் ...." என தழுதழுத்த குரலில் ஸ்ரீ அழைக்க , மடிக்கணினியை மேஜையின் மீது வைத்துக் கொண்டிருந்தவன்,
" என்னடா ..." என்றான் தலையை திருப்பாமல்.
அவனால் அவளை பார்க்க முடியவில்லை ...
உள்ளுக்குள்ள அவன் மனம் ஊமையாய் கதறிக் கொண்டிருந்தது ...
எங்க அவளைக் கண்டால் உடைந்து விடுவோமோ என்று அஞ்சியே, தலை திருப்பாமல் அவன் தவிக்க
"என்னால முன்ன மாதிரி பாட கூட முடியல ராம்.... வர வர நான் எதுக்குமே யூஸ் ஆகாம போயிடுவேன் போல இருக்கு ..."
என்றவள் குரல் உடைந்து கதறியழ, அடுத்த கணமே அவளை கட்டியணைத்துக் கொண்டு உடைந்து விட்டான் காளை.
அவள் பாடினால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.... வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தன்னை மறந்து அவள் பாடும் பாடலை ரசித்து கேட்பான் ...
அதுவும் அவர்களது அறைக்குள் அவன் மடி மீது அமர்ந்து கொண்டு
வா வா வா கண்ணா வா ....
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா ....
அவன் முகம் பார்த்துக் கொண்டே தலைக்கேசத்தை கோதியபடி அவள் பாடினால் , லயித்துப் போவான் ...
இப்படி அவள் அவனை மன்மதனாய் கொண்டாடியதை விட மழலையாய் கொஞ்சிய தருணங்கள் தான் அதிகம் ...
அதையெல்லாம் நினைத்து மனதோடு ஏங்கி தவித்தான் அந்த மாறன் ...
சில மணித்துளிகள் அமைதிக்குப் பிறகு, தானே உடைந்து விட்டால் தன்னம்பிக்கைக்கு வேறு எங்கு செல்வாள்... என்பதை தாமதமாக உணர்ந்தவன் கண நேரத்தில் சுதாரித்துக் கொண்டு,
" பட்டு, அதான் அந்த அங்கிள் சொன்னாரு இல்ல .... ட்ரீட்மென்ட் எடுக்க எடுக்க எல்லாம் சரியாயிடும்னு .... இப்ப ஏன் அதையெல்லாம் நினைச்சு கவலைப்படற ..... மனச லேசா வச்சுக்க..." என கரகரப்பான குரலில் சொல்லிக்கொண்டே அவளை விட்டு வேகமாய் விலகி எழுந்து நின்றான்.
அவர்கள் பெரும் காமம் கொண்டு கலவியில் கூடி மகிழ்ந்ததை காட்டிலும், காதலில் கட்டியணைத்துக் கொண்டு கட்டுண்டு கிடந்த நாட்கள் தான் அதிகம் ....
என்ற நிலையில் இப்படி தொட்டு அணைப்பதற்கும், தோள் சாய்வதற்கும் தடை விதித்திருப்பது வேறு அவனை பாடாய்ப்படுத்த ,
" பட்டுமா, இந்த ட்ரீட்மென்ட் முடியும் போது நீ ஃபர்பெக்ட்டா குணமாயிடுவ .... என் வார்த்தையை நம்பு...."
அவளுக்கு சொல்வது போல் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவன், அதற்கு மேல் இரவு உணவு, மாத்திரைகளை, கொடுத்து அவளை உறங்க வைத்துவிட்டு தானும் கேண்டீனுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்து தன் படுக்கையில் முடங்கிப் போனான்.
மறுநாள் காலை வழக்கம் போல் விடிய, அன்று ஏதோ அரசாங்க விடுமுறை என்பதால் , அலுவலகம், பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருக்க , மருத்துவமனை வளாகத்தை தாண்டி இருக்கும் மைதானத்தில் பதின் பருவத்து சிறார்கள் மட்டைப்பந்து விளையாட்டை மிகுந்த ஆரவாரத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
" ஸ்ரீ, வா ... அங்க பசங்க கிரிக்கெட் விளையாடிகிட்டு இருக்காங்க .... போய் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, அப்படியே வாக்கிங் முடிச்சுட்டு வரலாம் ..."
தன்னவளை அழைத்துக் கொண்டு வீரா கிளம்பியதுமே , தன் காட்டேஜிலிருந்து வெளிப்பட்ட சம்யுக்தா,
"என்ன ராஜா, இந்த ராணியை விட்டுட்டு கிளம்பிட்டீங்க ... " என்றபடி வேகமாக ஓடி வந்து அவனது இடப்புறமாக இணைந்து கொள்ள,
"எங்களை கொஞ்ச நேரம் தனியா விட்றயா..." என்றான் நறுக்கென்று.
"இன்னைக்கு லீவு எனக்கும் பொழுது போகணுமில்ல .... அதான் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாம்னு வந்தா இவ்ளோ கோவப்படறீங்க ...."
அவளுக்கு பதில் அளித்தால் இன்னும் பேசுவாள் என்பதால் அவளது பேச்சை கண்டு கொள்ளாதது போல் காற்றில் விட்டு விட்டு, மனைவியோடு மெல்ல நடந்து அந்த மருத்துவமனையின் வளாகச் சுற்று சுவரை அடைந்தான் .
பதின் பருவத்து சிறார்கள் மட்டைப்பந்து விளையாட்டை ஆரவாரத்தோடு விளையாடிக் கொண்டிருக்க, அதனை ரசித்துப் பார்த்தபடி மனைவியிடம் விமர்சித்துக் கொண்டிருந்தான்.
அங்கு அவனும் அவன் மனைவி மட்டும் இருப்பது போலவே அவன் நடந்து கொள்ள, அவனது இடது புறத்தில் நின்று கொண்டிருந்தவளுக்கு அதைக் காண காண கடுப்பு ஏற, அதற்கு மேல் நிற்க பிடிக்காமல் இடத்தை காலி செய்தாள்.
சில மணித்துளிகளுக்கு பிறகு, பந்து அவர்களை நோக்கி வர, அதை அவன் லாவகமாக பிடித்து திருப்பி சரியாக எறிய, சிறுவர்கள் ஆர்ப்பரித்துப் போயினர்.
இப்படியாக ஓரிருமுறை நடந்த பிறகு, சிறுவர்கள் அவனை விளையாட அழைக்க, ஸ்ரீயும் சந்தோஷமாய் சம்மதம் சொல்ல, வளாகத்தின் பின்பக்க கதவருகே அமர்ந்திருந்த பாதுகாப்பு அதிகாரி வைத்திருக்கும் வருகை பதிவில் கையொப்பமிட்டு விட்டு குதூகலமாய் சென்று அந்த குழுவில் இணைந்தான் நாயகன்.
அருமையாக விளையாடினான் ....
அனைத்து பந்துகளும் நான்கு ஆறாய் பறக்க, சிறுவர்கள் அரவாரித்து மகிழ்ந்தனர்.
அந்தக் குழுவில் 'ச்சிண்ட்டு' என்று செல்லமாக அழைக்கப்படும் சிறுவன், இவனோடு பசை போல் ஒட்டிக்கொண்டான் ...
விளையாடிய ஒரு மணி நேரத்தில், தான் விளையாடியதோடு மட்டுமல்லாமல், அந்த சிறுவர்களுக்கும் விளையாட்டின் நுணுக்கம் மற்றும் நேர்த்தியை அவன் தெளிவாக சொல்லிக் கொடுத்து விளையாட வைக்க, அவர்களும் ஆர்வமாய் கற்றுக்கொண்டதோடு அவனைத் தலைவனாய் ஏற்றுக்கொண்டு கொண்டாடி தீர்த்தனர் ...
"இந்த கிரிக்கெட்ல அப்படி என்னதான் இருக்கோ ..." என மனதோடு சொல்லிக் கொண்டவளுக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னவனின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சி மனதை நிறைக்க, அவனை அழைத்து
"ராம், கொஞ்சம் டயர்டா இருக்கு .... நான் ரூமுக்கு போறேன்... ..." என அவள் சொல்ல,
"வா ரெண்டு பேருமே கிளம்பலாம் ...." என கிளம்ப முற்பட்டவனை தடுத்து, நிம்மதியாக விளையாடி விட்டு வருமாறு சொல்லிவிட்டு அறைக்கு வந்து முடங்கினாள் அவன் மாது.
அடுத்த அரை மணி நேரத்தில் அறைக்கு வந்தவனின் முகம், சோடியம் வேப்பர் விளக்காய் பிரகாசிக்க,
" உங்களை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ராம்.... அது எப்படி லாங்குவேஜே தெரியாம அந்த பசங்களோட க்ளோஸ் ஆயிட்டீங்க ...." என்றவளின் கண்களில் தெரிந்த காதலை ரசித்தபடி,
"கிரிக்கெட்டே யூனிவர்சல் லாங்குவேஜ் தான் பட்டு... அத கத்துக்கவோ கூட விளையாடவோ லாங்குவேஜ் அவசியமே இல்ல.... ஹேய்... சொல்ல மறந்துட்டேன் ... இன்னைக்கு ஈவினிங் அங்க இருக்கிற குளத்துல, ஸ்விம் பண்ண வாங்கன்னு அந்த பசங்க கூப்பிட்டாங்க... வரேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். ... நீயும் வா ஸ்ரீ .... பர்மிஷன் கேட்டு உன்னையும் கூட்டிக்கிட்டு போறேன்...... ..."
திருமணத்திற்கு பிறகு நண்பர்களோடு அவன் வெளியே சென்றதைக் காட்டிலும், அவளோடு உலா சென்ற நாட்கள் தான் அதிகம் ....
தனக்கு சந்தோஷம் தரும் இடங்களுக்கு தனியாக செல்லாமல் மனைவியோடு செல்வதில் ஆர்வம் உள்ளவன் என்பதால், அவளும் மறுக்காமல் ஒத்து கொண்டாள்.
சொன்னது போலவே மாலையில், அவளை மைதானத்தை ஒட்டி அமைந்திருந்த குளக்கரைக்கு அழைத்துச் சென்றவன் அங்கிருந்த கல்மேடையில் அவளை அமரச் செய்துவிட்டு, பச்சை பசேலென்ற நிலத்தை ஒட்டி அமைந்திருந்த குளத்தில், சிறுவர்களோடு சிறுவனாய் அம்சமாய் நீந்தி மகிழ்ந்தான் ...
அவன் நீந்துவான் என்று மட்டும் அவளுக்குத் தெரியும் ....
ஆனால் நீந்துவதில் இருக்கும் அத்தனை வகைகளும் அவனுக்குத் அத்துபடி என்று அன்று தான் தெரிந்து கொண்டாள் ....
மேல் சட்டையின்றி இருந்தவனின் இறுக்கமான உடல் அமைப்பும், திரண்ட புஜங்களும், கம்பீரமான தோற்றமும், கந்தர்வன் போல் அவனை கவர்ச்சியாக காட்ட, இப்படிப்பட்டவனுக்கு தன்னை இணைக் கூட்டிய கடவுளை எண்ணி அவள் மனம் நொந்து கொண்டிருக்கும் போது, அருகில் வந்தமர்ந்தாள் சம்யுக்தா.
இவள் திரும்பிப் பார்க்க,
"ஹாய் ..." என்று வேண்டா வெறுப்பாக சொல்லிவிட்டு பார்வையை ஸ்ரீயின் நாயகன் மீது ஆழமாக படற விட்டாள்.
அவ்வப்போது அவள் ஸ்ரீயை ஏளனமாகவும் பார்த்து வைத்தாள் ...
"நீ வாழ்வதற்கே லாயக்கி அற்றவள் ... " என்பதை வாயால் சொல்லாமல் விழிகளால் உணர்த்தி கொண்டேயிருந்தாள்...
ஆனால் விதியை நொந்து கொண்டு வாழ்க்கையில் பிடிப்பு என்ற ஒன்றே இல்லாமல் , வாழவே பிடிக்காமல், தினம் தினம் வலியில் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருப்பவளுக்கு , அவளது பார்வை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போக,
'இந்த நிலையிலயும் இவளுக்கு திமிர பாரு....
ஆண்டவன் ஆட்டுவால சரியாத்தான் அளந்து வச்சிருக்கான் .....'
என அதனையும் அவளது நெஞ்சழுத்தமாக கருதி , சம்யுக்தா உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருக்கும் போது , நீந்தி முடித்து குளத்திலிருந்து வெளியேறினான் வீரா.
அவனைக் கண்டதும் ஆர்வமாய் அருகே சென்று,
" ரொம்ப ஆழமா ..." என்றாள் சம்யுக்தா.
" ம்ம்ம்ம்.... ஆமா ...."
" சின்ன பசங்க கூட ஸ்விம் பண்றாங்களே...???"
"அவங்க எல்லாருக்கும் நீச்சல் தெரியும் ..."
"நீங்க நல்ல ஸ்விம் பண்றீங்க... எங்க கத்துக்கிட்டீங்க ..."
" எங்க கிராமத்துல ...."
கேட்ட கேள்விகளுக்கு மட்டும் கருக் தெரித்தாற் போல் , பதில் அளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டே தன்னவளோடு அவன் நடையை கட்ட ,
' கிரிக்கெட் , ஸ்விம்மிங்னு எங்க வந்தாலும் , பூனை குட்டி மாறி இவள வேற கூடயே கூட்டிக்கிட்டு வர வேண்டியது ...'
சம்யுக்தா உள்ளுக்குள் குமுறி கொண்டிருக்க , தம்பதியர் இருவரும் ஏதேதோ பேசியபடி வீடு வந்து சேர்ந்தனர்.
அறையில் மனைவியோடு சற்று நேரம் செஸ் விளையாடினான் ....
அலுவலகத்தில் நடந்த ஹாசியங்களை சொல்லி அவளை சிரிக்க வைத்தான் ....
இரவு உணவு வந்ததும், அவளுக்கு ஊட்டி விட்டான் ...
இப்படியாக அன்றைய பொழுது அழகாக கழிய, மறு தினத்திலிருந்து மனஸ்தாபங்கள் வரிசை கட்டி வர வரவிருப்பதை அறியாமல், நிம்மதியாக நித்திரையை தழுவினர் அந்த ஜோடி புறாக்கள்.
மறுநாள் காலை வீராவுக்கு சுறுசுறுப்பாகவே விடிந்தது ....
வார இறுதி என்பதால், புதிதாக கிடைத்திருக்கும் இளைய நட்பு வட்டங்களோடு காலையிலேயே மட்டைப்பந்து விளையாட திட்டமிட்டு இருந்தான்....
அதற்காக விடுபட்டிருந்த திட்ட வரைவு கணக்கீடுகளை அவன் துரிதமாக முடித்துக் கொண்டிருக்கும் போது, யோகா வகுப்பிலிருந்து திரும்பிய ஸ்ரீ, அன்றைய நிகழ்வுகளை சொல்லிக் கொண்டிருக்க, அப்போது சம்யுக்தா அங்கு வந்து சேர்ந்தாள்.
அவளைக் கண்டதும், வீரா ஸ்ரீயிடம்
"வரும் போது கதவ மூடிட்டு வரணும்னு உனக்கு தெரியாதா .... என் பின்னாடியே அப்படியே வந்துடுவியா ...."
என தமிழில் எறிந்து விழ , அது அரைகுறையாக புரிந்தாலும் புரியாதது போல் காட்டிக் கொண்டு,
"ராம், லேண்ட் கொட்டேஷன் டாக்குமெண்ட்ட நேத்து ராத்திரி முழுசும் கண் முழிச்சு கஷ்டப்பட்டு பிரிப்பேர் பண்ணேன் .... இப்ப என்னால அதை ஓபன் பண்ண முடியல..... ஃபைல் கரப்டட்னு வருது .... இன்னைக்கு மதியத்துக்குள்ள அனுப்பியாகணும் .... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் ...." என தன் மடிக்கணினியை திறந்து கொண்டே அவள் கெஞ்ச , வேறு வழி இல்லாமல் அவளது மடிக்கணினியை வாங்கி, உதவும் நோக்கில் ஆராய ஆரம்பித்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அவன் ஏதோ கேட்க , அவள் ஏதோ பதில் சொல்ல என உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் இதுதான் தருணம் என அவர்களை தனியே விட்டுவிட்டு ஸ்ரீ மெதுவாக காட்டேஜை விட்டு வெளியேறி காலாற நடக்கத் தொடங்கினாள்.
15 நிமிடத்திற்கு பிறகு அவள் வீடு நோக்கி வரவும், அப்போது சரியாக வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா அவளை வெறுப்போடு பார்த்து,
" ச்ச.... சச்அ போரிங் பர்சனாலிட்டி ...."
என்றாள் கோபத்தோடு.
"ஏன்... என்னாச்சு .... கரப்ட்டட் ஃபைல ரெக்கவர் பண்ண முடியலையா ...." ஸ்ரீ வெள்ளந்தியாக வினவ,
"அது ரெக்கவர் ஆயிடுச்சு .... ஆனா எதைப் பேசினாலும் , எதைக் கேட்டாலும் ஸ்ரீ...ஸ்ரீ...ஸ்ரீ... தான்.... உங்க கல்யாண போட்டோஸ், ஹனிமூன் போட்டோஸ்னு ஒன்னு விடாம காட்டி போர் அடிச்சிட்டாரு ..."
என மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு, அவள் இடத்தை காலி செய்ய, ஸ்ரீ யோசனையோடே உள்ளே நுழைய ,அவளை கண்களில் கனலோடு வரவேற்றான் நாயகன்.
பயத்தில் அவள் தலை குனிய,
"நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டி .... வேற ஏதாவது ட்ரை பண்ணு ....என்னை என்ன அவ்ளோ வீக் பர்சனாலிட்டின்னு நினைச்சிட்டயா ...."
அவன் வார்த்தைகளை அம்புகளாய் செலுத்த ,
"நான் கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு வரலாம்னு தான் போனேன் ...." என்றாள் அவன் முகம் பாராமல் .
" பொய் சொல்லாத டி ... எதுக்கு என்னை அவளோட தனியா விட்டுட்டு போன ..."
என்றவனின் கேள்வி ஏனோ அவளுக்கு திடீரென்று சிரிப்பை வரவழைக்க, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு,
" அவ உங்களை அப்படி என்ன தான் பண்ணிடுவா ... எதுக்கு தேவையில்லாம பயப்படறீங்க "
"இது பயம் இல்ல அருவருப்பு ... அவ மட்டும் ஏதாவது பண்ணி இருக்கட்டும் அவளையும் அடிச்சி இருப்பேன்... உன்னையும் அடிச்சிருப்பேன்... இதே மாதிரி வேற எவனோடயாவது நான் உன்னை தனியா விட்டுட்டு போயிருந்தா உனக்கு எப்படி இருந்திருக்கும் ...."
அவன் குரலில் ஆவேசம் கொந்தளிக்க, அந்தக் கேள்வி அவளை செருப்பால் அடித்தது போல் இருக்க, தலை குனிந்து கொண்டாள்.
அதற்கு மேல் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை ....
கோபத்தில் தன்னவளை அழைக்காமல் காலை 11 மணியளவில் அவன் மீண்டும் மட்டைப்பந்து விளையாட செல்ல, அதனை தன் அறையில் இருந்து பார்த்த சம்யுக்தா , தனியாக செல்கிறான் என தெரிந்து கொண்டு வேகமாக அவனைப் பின் தொடர்ந்து சென்று பார்வையாளர்கள் அமரும் மர பெஞ்சில் அமர்ந்து கொண்டு, விளையாட்டை பார்க்கலானாள்.
வழக்கம் போல் அவன் நான்கு ஆறாய் பந்தை பறக்க விட, அங்கிருந்த சிறார்கள் அதில் லயித்து கை கொடுத்து அவனைக் கட்டி அணைக்க, அதுதான் தருணம் என சம்யுக்தாவும் ஓடி வந்து அவனைக் கட்டி அணைக்க, அடுத்த கணமே அவளை ஓங்கி அறைந்தான்.
"மைண்ட் யுவர் லிமிட்ஸ் ......" என அவன் கர்ஜிக்க, சம்யுக்தா அவமானத்தில் முகம் சிவந்தபடி தலை குனிந்துக்கொண்டே வெளியேற, அங்கிருந்த சிறார்கள் அதிர்ச்சியில் உறைய,
" கைய்ஸ், ஈவினிங் மீட் பண்ணலாம் ...." என மட்டையை சிறுவன் ச்சிண்ட்டுவிடம் கொடுத்துவிட்டு வேகமாக வெளியேறினான்.
அறைக்கு வந்தவனின் முகமும் விழிகளும் வழக்கத்திற்கு மாறாக சிவந்திருக்க ,
"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ... ஏன் சீக்கிரம் வந்துட்டீங்க ..." ஸ்ரீ கேள்விகளாய் எடுக்க,
"அவள அடிச்சிட்டேன் ...." என்றான் விரைப்போடு.
"யாரு .... சம்யுக்தாவயா அடிச்சீங்க ..."
"அவளை மட்டும் இல்ல டி... உன்னையும் அடிச்சிருக்கணும் ....
உன் பிளான் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா ....
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகுங்கிற மாதிரி, உனக்கு எப்ப கெட்டது நடக்கும்னு காத்துக்கிட்டு இருக்கிறவளோட என்னை கோர்த்து விடணும்னு பாக்கறியே உன்னை எதால அடிச்சா தகும்.....
என் மேல பொசசிவ்னஸ்சோட என் கிளாஸ்மேட் ஷோபனாவை பத்தி குடைஞ்சு குடைஞ்சு கேட்ட ஸ்ரீ தான் எனக்கு வேணும் .....
பஸ்ல எவ்ளோ என் தோள் மேல சாய்ஞ்சிகிட்டு வந்ததைப் பார்த்து கோவப்பட்ட ஸ்ரீ தான் எனக்கு வேணும் ....
யூ ஆர் மைன்.... ஒன்லி மைன்.... ஆல் ரைட்ஸ் ஆர் ரிசர்வ்டு ஒன்லி டு மீ னு என்னை கொஞ்சின ஸ்ரீ தான் எனக்கு வேணும் ...
இப்படி என்னை யாருக்கோ தாரை வாக்கணும்னு நினைக்கிற நீ எனக்கு வேண்டாம் .....
நீ எப்ப என்னை சரியா புரிஞ்சுகிட்டு உன் எண்ணத்தை மாத்திக்கிறயோ .... இனி அப்ப தான் நமக்குள்ள பேச்சு வார்த்தை எல்லாம் ..."
என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு தன் சைக்கிளில் ஏறி பறந்து விட்டான்.
இப்படிப் பேசும் ஒருவனிடம் எப்படி பேசுவது...... ....
எதைச் சொல்லி புரிய வைப்பது ...
மனம் நொந்து கண்ணீர் சிந்தினாள் .... தன் கணவனின் எதிர்காலம் கண் முன்னே வீணாகி போகப் போவதை காண சகிக்காமல்.....
ஒரு கட்டத்தில் அழுது கரைந்தது போதும் இனி அழுவதற்கு தெம்பில்லை ... என்ற நிலை வந்ததும், அறையில் அமர்ந்திருக்க மனமில்லாமல் மனதை திசை திருப்ப தன் காட்டேஜின் பின்புறத் தோட்டத்தில் அவள் மெதுவாக நடைபயில தொடங்கும் போது, சோம்நாத் அலைபேசியில் யாரிடமோ ஆங்கிலத்தில் சற்று பெரும் குரலில் உரையாடிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.
அதில் ராகு, கேது, சனி, குரு என ஏதேதோ ஜோசியம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் அடிபடுவதை கண்டு, அவள் தயங்கி நிற்க, அப்போது பேசி முடித்து அலைபேசி அழைப்பை துண்டித்தவர், அவள் உறைந்து நிற்பதை பார்த்து,
"என்னம்மா அப்படியே நின்னுட்ட ...." என்றார் வழக்கம் போல் ஆங்கிலத்தில் இயல்பாய்.
"அது வந்து .... நீங்க என்னமோ சீரியஸா பேசிக்கிட்டு இருந்தீங்க ..... உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு அமைதியா இருந்தேன் ...."
"என் அக்கா பையன் ஒரு ஜாதகத்தை அனுப்பி அதுல சில டவுட்ஸ் கேட்டான் .... அதைத்தான் எக்ஸ்பிளைன் பண்ணிக்கிட்டு இருந்தேன் ..."
என்று முடித்தது தான் தாமதம், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தவித்துக் கொண்டிருந்தவளுக்கு , சஞ்சீவினி மருந்தே கைகளில் கிட்டியது போல் சந்தோஷம் பிறக்க,
"அங்கிள், நீங்க ஜோசியம் பாப்பீங்களா ...." என்றாள் ஆர்வமாய்.
"யாருக்கு ஜோசியம் பார்க்கணும் ...."
"எனக்கும் என் ஹஸ்பண்டுக்கும்... ரெண்டு பேருக்குமே பார்க்கணும் ..." என படபடத்தாள் பெண்.
"அப்போ உன்னோட பிறந்த தேதி, சரியான பிறந்த நேரம், நீ பிறந்த ஊரு, எல்லாத்தையும் சொல்லு... பலன் சொல்றேன் ..."
"அது வந்து .... என்னோடது பிறந்த தேதி, ஊரு மட்டும் தான் தெரியும் .... நேரம் தெரியாது அங்கிள்... அம்மாவ கேட்டா தான் தெரியும் ...." என அவள் தயங்க
"அப்ப உன் ஹஸ்பண்டோடது தெரியுமா ..."
ஒரு கணம் யோசித்தவள்,
" ஆங்.... என் அப்பா என் ஹஸ்பண்டோட பயோடேட்டாவ கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு வாட்ஸ் அப் பண்ணி இருந்தாரு ..அதுல ஹார்ஸ்கோப்பும் இருக்கு ...ஒரு நிமிஷம் அங்கிள் ...."
என்றவள் அம்மையப்பன் அனுப்பிய whatsapp செய்திகளில் இருந்து அதனை துரிதமாக தேடி எடுத்து, சோம்நாத்திடம் காட்ட, தனக்கு தேவையான தகவல்களை அந்த ஜாதக கட்டங்களில் இருந்து எடுத்துக் கொண்டவர் தன் அலைபேசியில் அந்தத் தகவல்களை கொடுத்து அடுத்த கணமே வீராவின் ஜாதகத்தை கணித்து முடித்து அதில் ஆழ்ந்து போக, அவர் அருகில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்தபடி ஒருவித எதிர்பார்ப்போடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.
சில மணித்துளிகள் ஜாதகத்தை ஆழ்ந்து கண்ணுற்றவர், ஏதேதோ மனக்கணக்குகளை போட்டுவிட்டு, பிறகு ஆச்சரியத்தில் இரு புருவங்களையும் உயர்த்தியபடி அவளைப் பார்த்து,
"சரி சொல்லு .... உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும் ...." என்றார் ஆர்வமாய்.
"அது.... அது வந்து ... என் ஹஸ்பண்டுக்கு செகண்ட் மேரேஜ் இருக்கா .... " என்றாள் வெகு தழுதழுத்த குரலில்.
அந்த கேள்வியில் ஒரு கணம் ஆடிப் போனவர்,
"என்னம்மா இப்படி கேக்கற .... உனக்கு என்ன ஆச்சு ..."
"இப்படி ஒரு வியாதில மாட்டிக்கிட்டு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்னு தெரிஞ்சும் என் ஹஸ்பண்ட் கடைசி வரைக்கும் என் கூட தான் இருப்பேன்னு சொல்றாரு....
எனக்கு அவரரோட எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு .... சாவும் வந்து தொலைய மாட்டேங்குது .... சரி சூசைடாவது பண்ணலாம்னு பார்த்தா, கல்யாணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது .... இப்ப நான் சூசைட் பண்ணிக்கிட்டா, என் ஹஸ்பண்ட தான் எல்லாரும் சந்தேக படுவாங்க .... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ...
அடிப்படையில அவர் ரொம்ப நல்ல மனுஷன் அங்கிள் .... அவர் ரொம்ப நாளைக்கு சந்தோஷமா நல்லபடியா வாழனும் ....
இனிமே நான் எந்த வகையிலயும் அவருக்கு பயன்பட மாட்டேன்னு தெரிஞ்சும் எனக்காக உழைச்சிகிட்டு இருக்காரு ...
இந்த வலியால என்னால வேலைக்கும் போக முடியாது, வீட்டு வேலையும் செய்ய முடியாது அவருக்கு பொண்டாட்டியாவும் இருக்க முடியாது ....புள்ள குட்டிகளையும் பெத்து போட முடியாது ....இப்படி எதுக்குமே உபயோகம் இல்லாம போன எனக்காக அவர் தன்னோட வாழ்க்கையை வீணடிச்சுக்கிறத நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு ...
ஏற்கனவே என் மாமியார் குழந்தை இல்லன்னு, என்னை நிறைய பேசிட்டாங்க .... அதையெல்லாம் எடுத்து சொன்னாலும் புரிஞ்சிக்கிற மனநிலையில இப்ப என் ஹஸ்பண்ட் இல்ல ....
அதான் ஏதாவது ஒரு அதிசயம் நடந்து, என் வீட்டுக்காரருக்கு ரெண்டாவது கல்யாணம் நடந்துடாதானு ஒரு நப்பாசைல கேட்கிறேன்......... ...." என்றவளின் குரல் உடைய,
"இந்த பாரும்மா, எனக்கு 22 வயசுல கல்யாணம் ஆச்சு .... போன மாசம் தான் நாற்பதாவது கல்யாண நாள கொண்டாடினோம் .... இந்த 40 வருஷத்துல எங்களுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா உண்டான புரிதல், விட்டுக்கொடுத்தல் எல்லாம் வெறும் நாலு மாச கல்யாண வாழ்க்கையிலயே உங்க ரெண்டு பேர் கிட்டயும் இருக்கிறத பார்த்தா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு .... நீ அவருக்காக யோசிக்கிற.... அவரு உனக்காக யோசிக்கிறாரு .... வயசு, அனுபவத்தை மீறி உங்க ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கிற அன்னியோன்யம் எனக்கு ஆச்சரியமா இருக்கு ...."
"என்ன இருந்து என்ன அங்கிள் .... அவரோட வாழ்க்கை என்னால கெட்டுப் போச்சுனு நெனச்சாலே தூக்கமே வர மாட்டேங்குது ... அவரு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டிய பெத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கணும் ..... அது நடக்குமான்னு சொல்லுங்களேன் ...."
"நிச்சயமா நடக்காது ...." என்றார் தீர்க்கமாய்.
"என்ன அங்கிள் இப்படி சொல்றீங்க ...." அவள் வருத்தத்தோடு கேட்க
"உன் ஹஸ்பண்டோட ஜாதகம் சத் களத்திர யோக ஜாதகம்மா ...."
" அப்படின்னா ...."
"மனம் போல் மாங்கல்யம்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி , மனசுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளோட மட்டும் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கிற ஜாதகம் .... களத்திர ஸ்தான அதிபதி, களத்திர ஸ்தானம், களத்திரக்காரகன் சுக்கிரன்னு எல்லாமே வலிமையான குரு பார்வையில சுபத்துவமா இருக்கு ..... உயிரையே விட்டாலும் விடுவாரே ஒழிய இன்னொரு பொண்ண நெனச்சு கூட பாக்க மாட்டாரு...."
" ம்ச்.... இப்படி சொன்னா எப்படி ... அவருக்குன்னு வாழ்க்கை வேண்டாமா... குழந்தைங்க வேண்டாமா ....???"
"ஆண் ஒன்னு... பெண் ஒன்னுனு ஒண்ணுத்துக்கு ரெண்டு குழந்தைங்க அவருக்கு இருக்கே ..... ...."
" புரியல அங்கிள் ..... இன்னொரு கல்யாணமும் நடக்காது .... பின்ன அவருக்கு எப்படி ரெண்டு குழந்தைங்க பொறக்கும் ...."
" நீதான அவரோட ஒய்ஃப் .... "
" ஆமா ..."
"அப்ப உனக்கு தான் ரெண்டு குழந்தைங்க பொறக்கும் .... அவரோட புத்திர ஸ்தானமும் குருவால பார்க்கப்பட்டு சுபத்துவமா ஸ்ட்ராங்கா இருக்கே.... "
"நெஜமாவா அங்கிள் .... என்னால நம்பவே முடியலையே .... நான் ரொம்ப வருத்தப்படாறேங்கிறதுக்காக நீங்க பொய் சொல்லலயே...."
"இங்க பாரும்மா.... நான் இதை ப்ரொபஷனா செய்யல .... இது என்னோட பேஷன் .... இதுல நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல .... பொய்யும் சொல்ல மாட்டேன் ..."
ஒரு கணம் அவள் தயக்கத்தோடு அவரைப் பார்க்க ,
"சத்தியமா.... அவரோட ஜாதகத்துல இருக்கிறத தான் சொல்றேம்மா ..... என்னை நம்பு .... உன் வீட்டுக்காரரோட ஜாதகம் அருமையான ஜாதகம் ....சகல சௌபாக்கியத்தோட அவர் சந்தோஷமா , உன்னோட வாழத்தான் போறாரு .... என்னோட போன் நம்பர், வீட்டு அட்ரஸ் எல்லாத்தையும் கொடுத்துட்டு போறேன் .... கூடிய சீக்கிரமே நீ எனக்கு போன் பண்ணி நான் சொன்னதெல்லாம் நடந்ததுன்னு சொல்லுவ பாரு .... உனக்கு கிராஸ் செக் பண்ணனும்னா, நாளைக்கு உன்னோட பிறந்த நேரத்தை தெரிஞ்சிகிட்டு வந்து சொல்லு உன்னோட ஜாதகத்தையும் போட்டு பலன் ஒத்துப் போகுதான்னு பார்த்திடலாம் ....ஒன்னு மட்டும் நிச்சயம், உன்னோட கணவர் ஜாதகம் அருமையான ஜாதகம் ....சகல சௌபாக்கியத்தோட கடைசி வரைக்கும் அருமையா இருப்பாரு....அதுக்கு நான் கேரண்டி ...."
என தீர்மானமாய் அவர் சொல்ல, மனம் குழம்பிப் போனவளுக்கு ஏதோ தெய்வமே இறங்கி வந்து அருள்வாக்கு சொன்னது போல் தோன்ற,
"தேங்க்ஸ் அங்கிள்.... தேங்க்ஸ் எ நாட் ..." என சந்தோஷத்தின் உச்சத்தில் நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றாள்.
அறைக்கு வந்தவளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு உறக்கம் கண்களை சொக்க, சற்று நேரம் நிம்மதியாய் நித்திரையை தழுவினாள்.
மாலை சூரியன் மறையும் பொழுது தான், மெல்ல உறக்கம் களைந்து எழுந்த அமர்ந்தவள் , படுக்கையை விட்டு இறங்க முற்படும் போது , வேகமாக உள்ளே வந்த வீரா,
"அடியேய்.... உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா .... என்னால சூசைட் கூட பண்ணிக்க முடியல .... என் ஹஸ்பண்டுக்கு செகண்ட் மேரேஜ் நடக்குமானு ஏதேதோ தத்து பித்துன்னு உளறி சோம்நாத் அங்கிள் கிட்ட ஜோசியம் கேட்டயாமே.... ஏண்டி உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா ..."
என்றவன் கர்ஜித்துக் கொண்டிருக்கும் போது அவனது அலைபேசிக்கு குயில் ஓசையில் ஏதோ குறுஞ்செய்தி வந்து சேர,அதனைத் தட்டிப் பார்த்தவனின் முகம் மேலும் செஞ்சாந்தாய் கோபத்தில் சிவந்து போக,
"ஏண்டி ... என்னடி பண்ணி வச்சிருக்க ... உங்க அப்பா எதுக்குடி எனக்கு 10 லட்ச ரூபாய் அனுப்பி, அந்த செக்க ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பியிருக்காரு.... உண்மைய சொல்லு உங்க அப்பா அம்மா கிட்ட என்ன சொல்லி பணம் கேட்ட ...."
ஏற்கனவே ருத்ரதாண்டம் ஆடிக் கொண்டிருந்தவன், தற்போது நெற்றிக்கண்ணையும் திறக்க,
"ஐயோ கடவுளே, எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டேனே .... மணி ஆறானததால நெட் கனெக்சன் வேற வந்து , இருக்கிற பிரச்சினைல எண்ணெய்யை ஊத்திடுச்சே ... இருக்கிற கால் வலில இப்ப எழுந்து கூட ஓட முடியாதே.... அப்படியே ஓட ட்ரை பண்ணாலும், டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி புடிச்சிடுவாரே... கடவுளே நீதான் காப்பாத்தணும் .... இப்ப நான் என்ன பண்றதுன்னு தெரியலையே ...."
உள்ளுக்குள் பயந்து கொண்டே அவள் அவன் முகத்தை பார்க்க , அவனோ நெற்றிக்கண்ணை திறந்து வெப்பக் கதிர்வீச்சை அவள் மீது செலுத்த,
" குதிச்சிடு டா கைப்புள்ள ..."
என தனக்குள்ளே சொல்லிக் கொண்டு, அருகில் இருந்த போர்வையை அள்ளி முழுவதுமாய் போர்த்துக்கொண்டு அப்படியே படுத்துக்கொண்டாள்.
ஸ்ரீராமம் வருவார்கள் ....
Dear friends,
அடுத்த எபிசோடு கிளைமாக்ஸ் ... அப்புறம் ஒரு எபிலாக இருக்கு ....
ரிஷியோட கதை இதோடு முடியுது ....
ரிஷியோட Character ரொம்ப matured and noble character.... அதனால உடனே ரம்யாவை கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி காட்டினா சரி வராது ... அதோட ரிஷி ரம்யா ரெண்டு பேருமே இந்த கதையை பொருத்தமட்டில் out of syllabus ....
அவங்களுக்காக சின்னதா 20 எபிசோடு உள்ள ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன் ...அது டைரக்ட் புக்கா அமேசான்ல பப்ளிஷ் ஆகும் ...
Thanks for your love and support
With love,
Priya Jagannathan
Super mam
ReplyDeleteThanks a lot dr
Deleteawesome as always 💕💕💕💕💕💕💕
ReplyDeleteThanks a lot dr
DeleteNangalum ungalukaga wait pandrom yngalayum knjm kavaninga....
ReplyDeleteThanks a lot dr
DeleteSupero super sis. Story final epi vanthathu konjam illa neraya kashtama iruku. But we are waiting for the next one. Epadiyum ungaluku oru 3-4 months break kodukanum for the next story . Take care of your health sis
ReplyDeleteThanks a lot dr... really i need 3 to 4 months rest dr..thanks for ur concern da
DeleteIm happy for saran nd laks, sam ku oru end card kudunga irritating ah iruku veera ku, shree kum enaku mariyea alagana oru ponnum anbana oru paiyanum pokkanum, ranaa ena anarunu therinjikanum sisy..
ReplyDeleteThanks a lot ma... sure... next epi climax da
Delete