அத்தியாயம் 120
அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பதில் தன்னை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்ற மமதையில் இருந்தவளுக்கு, தமையன் மற்றும் தந்தையின் மறைமுக செயல்பாடுகள் ஓங்கி உச்சந்தலையில் உளி கொண்டு அடித்தது போல் ரணமும் ரத்தமுமாய் இறங்க, குறுக்கு வழியில் சிந்தித்தே பழக்கப்பட்ட அவளது மூளையும் குப்புற படுத்துக்கொண்டு இளைப்பாற, சிந்தனையை ஒருமுகப்படுத்த முடியாமல் தடுமாறியவள், உடனே
"நீங்க போய் பொண்ணு மாப்பிள்ளைக்கும் கிப்ட் கொடுத்துட்டு வந்துடுங்க .... உங்ககிட்ட கொஞ்சம் தனியா பொறுமையா பேசணும் ...." என வினோத்தை அப்புறப்படுத்திவிட்டு, அடுத்த கணமே தாய் கற்பகத்தை நாடினாள்.
சற்று முன் வினோத்திடமிருந்து பெற்ற தகவல்களை அவள் பகிர பகிர, கற்பகத்தின் முகம் கோபத்திலும் ஆத்திரத்திலும் விகாரமாய் விரிய,
"உன் அப்பனும் அண்ணனும் இவ்ளோ பெரிய அயோக்கியத்தனத்தை பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... " என அவர் ஓங்காரமாய் புலம்ப,
"என்னால இப்ப வரைக்கும் நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியலம்மா ... ஒரு ரெண்டு மூணு நாளைக்கு முந்தி கூட ஹரிஷ் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினத பத்தி பேச ஃபோன் பண்ணப்ப ஃபாரின்ல இருக்கேன்னு தாம்மா அண்ணன் சொல்லுச்சு ...."
"அருணா... இப்பவே கெளம்பு ... நாம ஊட்டிக்கு போய் உன் அப்பன், அண்ணன் அந்த லட்சுமிய உண்டு இல்லைன்னு பண்ணி,
நடக்கப் போற கல்யாணத்தை நிறுத்தலாம் ... வா... " என்றபடி திருமண மண்டபத்தில் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி கற்பகம் நடை போட, உடன் நடந்த அருணா,
"கல்யாணத்தை நிறுத்த நீ ரொம்ப மெனக்கிட வேண்டாம் ... அங்க ஓரு கருமாதி நடந்தா போதும் தானா கல்யாணம் நின்னுடும் ...." என்றாள் பெருத்த வன்மத்தோடு.
ஒரு கணம் ஒன்றும் புரியாமல் மகளின் முகத்தை நின்று நிதானித்து கற்பகம் உற்று நோக்க,
"நாம பிளான் பண்ணி நிறுத்தின ராமலட்சுமியோட கல்யாணத்தை , நம்ம எஸ்டேட் பங்களாலயே , அதுவும் நமக்கு தெரியாம அப்பனும் அண்ணனும் நடத்த பிளான் பண்றது சுத்த ஒண்ணா நம்பர் அயோக்கியத்தனம் ...
இதை நாம சும்மா விட கூடாதும்மா ...
லட்சுமி, அண்ணனோட ஜாலியா ஊர சுத்த போயிடகூடாதுங்கிறதுக்காக , ஓரளவுக்கு உடம்பு தேறியிருந்த என் மாமியாரயே போட்டு தள்ளினவ நான்....
அந்த சாவையே சாக்கா வச்சு அவளுக்கு நடக்க இருந்த சீமந்தத்தையும் நிறுத்தினவ நான்...
இப்ப அவ ரெட்ட புள்ளைய உண்டாயிருக்காளாம்.... ஊர் அறிய அவளுக்கு சீமந்தம் நடக்கப் போகுதுதாம்....
இவ்ளோ தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவளை உசுரோட விட்டு வச்சா இவ்ளோ நாளா நான் செஞ்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடுமே...... ..."
அருணா ஆவேசத்தோடு கொந்தளிக்க,
"அருணா, உன் மாமியார் கெழவி வயசான கட்ட ... அதுவும் ஹாஸ்பிடல்ல இப்பவோ அப்பவோனு ரொம்ப நாள் இருந்ததால உன் மேல யாருக்கும் சந்தேகம் வரல .... ஆனா லட்சுமி விஷயம் அப்படி இல்ல ... ஏதாச்சும் பண்ண நிச்சயம் மாட்டிக்குவே.... ஜாக்கிரதை..... ...." என்றார் கற்பகம் வேகமாய்.
"லட்சுமிய வாழ வைக்க, அப்பனும் அண்ணனும் திட்டம் போட்டு காய் நகர்த்தும் போது , அவள சாகடிக்க நான் திட்டம் போட்டு காய் நகர்த்த மாட்டேனா .... அவங்க நம்மல நம்ப வச்சு கழுத்தறுத்த மாதிரி, அவங்கள நம்ப வச்சு நான் கழுத்தை அறுக்கிறேன் பாரு....
ராமலட்சுமிக்கு கல்யாணம் நடக்காது ....
லட்சுமிக்கு கருமாதி தான் நடக்கும் .... அத நாம தான் செஞ்சோம்னு , நாமளே சொன்னாலும் யாருமே நம்ப மாட்டாங்க.... அப்படி ஒரு ஸ்கெட்ச்ச பக்காவா போடறேன் பாரு .... " என அருணா சீரியல் வில்லிக்கே சீனியர் போல் கொலை திட்டம் தீட்ட , வாயடைத்து போன கற்பகம், ஓரிரு மணித்துளிகளுக்கு பிறகு,
"எல்லாம் சரி தான் .... ஆனா சரண் எதுக்காக அவன் ஆபீஸ்ல வேலை செய்யற மஹிக்கான்ற அந்த பொம்பளைய தனியா ஹோட்டல்ல சந்திச்சு பேசணும் .... அவங்க ரெண்டு பேத்துக்குள்ள ஏதாச்சும் இருக்குமா...... ..." என்ற முக்கிய கேள்வியை முன்வைக்க, யோசனையில் ஆழ்ந்த அருணா,
"எனக்கு தெரிஞ்சு அண்ணன் லட்சுமிய தாண்டி வேற பொண்ணு கூட நின்னு பேசி கூட நான் பார்த்ததில்ல... ஆனாலும் நீ சொன்னது வேலிட் பாயிண்ட் தான்... வினோத் வரட்டும், அடுத்த அடியை எப்படி எடுத்து வைக்கலாம்னு பேசி ஒரு முடிவுக்கு வரலாம்........ ...." என்றவள்
அண்ணே.... இந்த அருணாவ தங்கையா தான பார்த்திருக்க .... தாடகையா பார்த்ததில்லயே.... இனிமே பாப்ப....
எங்க ரெண்டு பேர் கண்ணுலயும் மண்ணை தூவிட்டு, உன் பொண்டாட்டிக்காக எவ்ளோ பெரிய வேலை எல்லாம் பார்த்திருக்க ....
கூடிய சீக்கிரம் உன் கண்ணுல மண்ண தூவிட்டு, அதைவிட பெரிய வேலை எல்லாம் நான் காட்டறேன்.... பாக்கறியா ..."
ராம் சரண் எதிரில் நிற்பது போல், அவள் மானசீகமாக எக்களிக்க, அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி சிந்தித்தபடி இடவலமாக நடைபயின்று கொண்டிருந்தார் கற்பகம்.
----------------------------
அதே இரவில், மனம் முழுவதும் அவனது மதுவின் பிரதி பிம்பமாய் வலம் வரும் ஸ்ரீயை சுமந்துக்கொண்டு , உள்ளத்து வெம்மையும், உடல் வெம்மையும் தணிக்க வழி தெரியாமல் , வெற்று மார்போடு பரந்து விரிந்த தனது அறையின் பால்கனியில் இட வலமாக நடந்து கொண்டிருந்தான் ராணா.
ஸ்ரீ தன் கணவனைப் பற்றி கயலிடம் சிலாகித்து கூறியதை கேட்டதிலிருந்து அவன் சிந்தை எங்கும் வக்கிர சிந்தனைகள் வகைத்தொகை இல்லாமல் ஓட, அதிலிருந்து வெளியேற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான் ...
இந்நேரத்தில் படுக்கை அறையில் அவர்களுக்கு இடையேயான தனிமை எப்படி இருக்கும் ...
என் மது அவனை அப்படி கொண்டாடும் அளவிற்கு, அன்பிலா, அக்கறையிலா, பாசத்திலா அல்லது படுக்கையிலா எதில் அவன் கைதேர்ந்தவனாக இருப்பான் ...
என்னவளின் இன்றைய உடல் நிலையில் கூட ,
அவளை ஆள நினைப்பானா ....
அல்லது அன்பால் அன்னையாய் அரவணைப்பானா ....
மற்ற தினங்களில் அவளை மழலையாய் கொஞ்சி மகிழ்வானா .... அல்லது மஞ்சத்தில் மட்டும் மனைவியாய் மோகம் கொள்வானா ....
என்றெல்லாம் எண்ணியவனின் மனக்கண்ணில் முகம் இல்லாத ஒரு ஆண், அவனது மதுவான ஸ்ரீயை இழுத்தணைப்பதும், இதழ் முத்தமிடுவதும், கட்டிப் புரண்டு கலவி செய்வதுமாய் படக்காட்சி ஓட,
"ஐயோ ...." என்று வாய்விட்டே அலறியவன்
தன் கரங்களால் தலையைப் பற்றிக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அப்படியே சரிந்தமர்ந்தான்.
அவனது ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகுற, உடலெங்கும் வியர்வை துளிகள் ஆறாய் வழிந்தோட, அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தவன்,
ஓரிரு கணத்திற்கு பிறகு
"மது .... உனக்கு கொஞ்சம் கூட என் ஞாபகமே இல்லயா.... நான் மட்டும் இத்தனை வருஷமா உன் நினைவுகளோடையே வாழ்ந்துகிட்டு இருக்கேன் ... நீ எல்லாத்தையும் மறந்துட்டு ராம் ராம்னு யாரோ ஒருத்தன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கியே ...
நம்ம உறவு ஒன்னும் ஒரு பிறவியோட முடியற சாதாரண பந்தமில்ல... அது பிறவி பிறவியா தொடர்ற அனுபந்தம் ...
உனக்கும் எனக்கும் அப்படி ஒரு பந்தம் இருக்கிறதால தான் ஆஸ்திரேலியாலயே நீ என் கண்ணுல பட்ட ... அடுத்த வாரத்துலயே என் ஆபீஸ்லயும் ஜாயின் பண்ணின...
ஆனா இவ்ளோ நடந்தும் , நாம வாழ்ந்த வாழ்க்கை மட்டும் உனக்கு கொஞ்சம் கூட ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே... ஏன் மது....
இப்படி நித்தம் நித்தம் தள்ளி நின்னு, யாரோ ஒருத்தனோட பொண்டாட்டியா உன்னை பாக்கறது, நெருப்பு மேல நிக்கிற மாதிரி இருக்கு டி ......
என்னால சத்தியமா முடியல ...."
என கரகரத்த குரலில் வாய் விட்டே மொழிந்தவன்,
"இதுக்கெல்லாம் ஒரே ஒரு முடிவு தான் இருக்கு.... ஒன்னு உனக்கு நாம வாழ்ந்த வாழ்க்கை ஞாபகத்துக்கு வரணும்... இல்லன்னா இப்ப நீ வாழ்ந்துகிட்டு இருக்கிற வாழ்க்கை உன் ஞாபகத்துல இல்லாம போயிடனும் ..... "
பெருமூச்சொன்றை வெளியேற்றி
"அதுக்காக தான் சில ஏற்பாடுகள் செஞ்சுகிட்டு இருக்கேன் ... கூடிய சீக்கிரம் நான் நினைச்சது நடக்கும்... நடத்தி காட்டறேன்..."
என அவன் மனதோடு பேசிக் கொண்டிருக்கும் போதே , அந்த அறை கதவை திறந்து கொண்டு மான்சி வர, அவளைக் கண்டதும் லேசாக கண்ணீர் தழும்பியிருந்த அவன் கண்கள் கனலை கக்க, உறுத்துப் பார்த்தபடி சிலையாய் நின்றான்.
வந்தவள் என்றும் இல்லாத பழக்கமாய் அவனை நெருங்கி,
"ராணா .... " என்றாள் கண்களில் காதலை தேக்கி.
இத்துணை ஆண்டு காலமாக இருவரும் ஒரே கூரையின் கீழ் வசித்தாலும், ஓரிரு வார்த்தைகள் கூட முகம் கொடுத்து பேசிக் கொண்டதே இல்லை.
இவன் அவள் அறைக்கு ஒரு முறை கூட சென்றதே இல்லை.
ஆனால் அவள் இவன் அறைக்கு பல சமயங்களில் அவர்களது மகன் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், ஏதாவது உதவி வேண்டியும் வந்திருக்கிறாள் ... அம்மாதிரியான சமயங்களில் கூட அறைக்குள் வராமல், அறை கதவை ஒட்டி நின்றபடி பேசி விட்டு சென்று விடுவாள்.
இவனுக்கும் அவள் மீது தான் கோபமே ஒழிய,
அவனையே உரித்துக் கொண்டு பிறந்திருக்கும் மகனின் மீது ஓரளவிற்கு பாசம் இருந்ததால், மறு தினமே மகன் சம்பந்தப்பட்ட விஷயத்தை கையில் எடுத்து வெற்றிகரமாக செய்து முடிப்பான்.
இப்படியாகத்தான் இதுவரை இவர்களது உறவு முறை இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றைக்கோ அவள் முதன்முறையாக அவன் அறைக்குள் நடந்து வந்து அவனை நெருங்கி, அவன் பெயரை விளித்ததெல்லாம் வித்தியாசமாக தெரிய ,
" என்ன ....." என்றான் இறுகிய முகத்தோடு.
" இல்ல ...... நான்..... நாம ..... நம்ம வாழ்க்கை இப்படியே தான் போ... போகனுமா...." என்றாள் திக்கித் திணறி.
அவன் மௌனமாய் அவளை நோக்க, அந்த அமைதி கொடுத்த தைரியத்தில்,
" நம்ம பையன் மேல சத்தியமா சொல்றேன் ...... நான் மது விஷயத்துல எந்த தப்பும் பண்ணலங்க .... ஒரே ஒரு உண்மையை போலீஸ் கிட்ட மறைச்சேன்.... அது கூட உங்க மேல இருக்கிற லவ்ல தான் அப்படி நடந்துகிட்டேன் ... இவ்ளோ வருஷமா இத சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் .... ஆனா இப்ப கேட்கற மாதிரி ஒரு முறை கூட நீங்க காது கொடுத்து கேட்டதே இல்ல... ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க ...."
" என்ன டி .... இன்னைக்கு உனக்கு எவனுமே கிடைக்கலையா .... அதான் என்னை தேடி வந்துட்டயா .... இதுவும் ஒரு வகையில நல்லதா போச்சு ... நானே வெளிய போகனும்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன் .... நீ வந்ததால அந்த பிளான் இப்ப கேன்சல் ....இருட்டுல யாராயிருந்தா என்ன ... எல்லாமே ஒன்னு தான்.... ... அங்க கொடுக்க போற பணத்தை இங்க உனக்கு கொடுக்க போறேன் அவ்ளோதான் ... "
திராவகத்தை முகத்தில் ஊற்றியது போலான அந்த பேச்சில் விக்கித்து நின்றவளின் விழிகளில் இருந்து விழி நீர் ஆறாய் வழிந்தோட ,
"ஆளும் ட்ரெஸ்ஸும் அப்படியே ஐட்டம் சாங் ஆடறவ மாறியே இருக்க.... ஐட்டம் சாங் ஆடுறவளுக்கு மேக்கப் போடுறவ தானே நீ... அவள மாறி தான் இருப்ப.... முந்தானைய சரியா போடு டி ... "
அவன் மேலும் ஆலகால விஷத்தை கக்க, ஸ்தம்பித்து நின்றவள் உணர்வு பெற்று விடைபெற முயலும் போது,
"இனிமே என் ரூமுக்கு வந்த .... இன்னும் அசிங்கப்பட்டு போவ... கெட் லாஸ்ட் ..."
அவன் கர்ஜுக்க, இனி பேசிப் பயனில்லை என்ற முடிவுவோடு விரு விருவென அந்த அறையை விட்டு மின்னலென வெளியேறினாள் மான்சி.
----------------------------------------------------
வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே வீராவிற்கு விழிப்பு வர, அருகில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனையாளை வாஞ்சையாய் நோக்கியவன், அவள் முகத்தில் படிந்திருந்த கேசத்தை மென்மையாய் ஒதுக்க, அந்த ஸ்பரிசத்தில் லேசாக கண் விழித்த அவன் நாயகி,
" என்ன ராம் ....." என்று குழறியபடி அவனோடு ஒன்றிக்கொண்டாள்.
" பட்டு, ஏன்டா உடம்பு சூடா இருக்கு ..."
" சில சமயம், பீரியட்ஸ் டைம்ல இந்த மாதிரி உடம்பு சூடா இருக்கும் .... ரொம்ப டயர்டாவும் இருக்கும் ...."
" முடியலன்னா இன்னைக்கு ஆபீஸ் போகாத..... ...."
" அய்யய்யோ நிறைய வேலை இருக்கு ராம்..."
" அப்ப, நானே உன்னை ஆபீஸ்ல டிராப் பண்றேன் ...."
" வேணாம் ராம் ... இப்பவே கேப் டிராவல பழகிக்கிட்டா தான் அடுத்த வாரம் நீங்க ஊருக்கு போகும் போது , எனக்கு வசதியா இருக்கும் ..."
பதில் ஏதும் சொல்லாமல், அவளை அணைத்து நெற்றி முத்தமிட்டவன்
" சரி, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு ..."
என மொழிந்து விட்டு காலை ஓட்டத்திற்கு தயாராக எண்ணி குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
சில மணித்துளிகளுக்கு பிறகு அவன் கிளம்பி சென்றதும், படுக்கையை விட்டு எழுந்தவள், வழக்கம் போல் அலுவலகத்திற்கு துரிதமாக தயாராக, சற்று நேரத்திற்கெல்லாம் காலை ஓட்டத்தை முடித்துக் கொண்டு வந்தவனும் அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது வீட்டு வாயிலில் கேப் வந்து நின்றது.
கணவனோடே பயணித்து பழகியவளுக்கு ,கேப்பில் பயணிக்க விருப்பமில்லை என்றாலும் , எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவள் அதில் கிளம்பிச் செல்ல இன்னவென்று பிரித்தறிய முடியாத ஒருவித ஆயசத்தோடும் வலியோடும் வீட்டு வாயிலுக்கு வந்து வழி அனுப்பி வைத்தான் வீரா.
ஒருவித சோர்வோடே அலுவலகம் வந்து சேர்ந்தவளுக்கு, அவள் சொன்னதை விட நான்கு மடங்கு வேலைகள்
" வேணாம் ராணா அவங்க எக்ஸ்பீரியன்ஸ்க்கு இது ரொம்ப ரொம்ப அதிகம் ... அவங்களால முடியாது...." என மறுத்த கார்த்திகேயனை சரிகட்டி, அவன் மூலம் வேலைகளை மின்னஞ்சலில் அவளுக்கு அனுப்பச் செய்திருந்தான் ராணா.
இயற்கையிலேயே புதியவைகளை ஆர்வத்தோடு கற்கும் சுபாவம் உள்ளவள் என்பதால் மலை போல் வந்திருந்த வேலைகளை பற்றி கவலைப்படாமல், அதில் இருக்கும் சிறுசிறு நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக முடிக்க அவள் போராடிக் கொண்டிருக்க, அதனை மடிக்கணினியின் வழியே திருப்தியாய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ராணா.
மதிய உணவு நேரத்தை தவிர, அன்று முழுவதும் அவள் மாங்கு மாங்கு என்று கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்தினாலும், அது முடிக்க முடியாமல் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்ல, வீட்டில் முடிப்பதாகச் சொல்லி கார்த்திகேயனுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, அவள் கேப்பில் வீட்டிற்கு பயணப்பட, அவளுக்கு முன்னதாகவே வீடு வந்து சேர்ந்த வீராவுக்கு திடீரென்று ஏதோ ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டு ஆட்டிப்படைக்க தொடங்க, காரணம் புரியாமல் தடுமாறிப் போனான் அந்தக் காளை.
பொதுவாகவே அவனுக்கு பணிச்சுமை அதிகம். வீட்டில் இருந்தாலும் திட்ட வரைவு கலைந்தாய்வுகள், கணக்கீடுகள் என அவன் நேரத்தை கணக்கு வழக்கு இல்லாமல் தின்று தீர்க்கும் சந்தர்ப்பங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
இம்மாதிரியான சோர்வான தருணங்களையும் மாற்றவல்லது அவனது நாயகியுடனான காலை மற்றும் மாலையில் பயணிக்கும் அலுவலக பயணங்கள் தான்.
அதிலும் சில சந்தர்ப்பங்களில் அவளுடன் பேச முடியாத சமயங்களும் அமைவதுண்டு என்றாலும், அவளது அருகாமை ஒன்றே போதுமானது, அவனுக்கான புத்துணர்ச்சியை பெற, என்ற நிலையில் இருந்து வந்தவனுக்கு,
அந்த நடைமுறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் , வார்த்தைகளில் வரையறுக்க முடியாத அழுத்தத்தை கொடுத்திருக்க,
"ச்ச, அவ கேப்ல மொத நாள் ஆபீஸ் போனதுக்கே இப்படி இருக்கு ... அடுத்த வாரம் அவ இல்லாம யூகே வேற போய் ஆகணும் .... அதுவும் ரெண்டு வாரம் அங்க இருந்தாகணும்... எப்படி தான் சமாளிக்க போறேனோ ..."
என அவன் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் போது , அவன் எண்ணத்தின் நாயகி களைத்து போய் வந்தாள்.
வந்தவள், அடுத்த கணமே தன் கைப்பையை சோபாவில் போட்டுவிட்டு, துரிதமாக அவன் மடியில் ஏறி அமர்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அதில் முகம் புதைத்துக் கொள்ள, அவனைப் போலவே அவளும் அவனது அருகாமைக்காக ஏங்கி இருக்கிறாள் என்பதை அச்செய்கையே சொல்லாமல் சொல்ல, மென் புன்னகையோடு தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,
"என்ன பட்டு ..... ஆர் யூ ஓகே ..." என்றான் இதமாய்.
" ம்ம்ம்ம்ம்ம்ம்...."
" என்ன ...ம்ம்ம்ம்ம்ம்..."
" உங்களை மிஸ் பண்றேன் ராம் ..."
பெருமையோடு குலுங்கி சிரித்தவன்,
" ஏண்டி குத்து கல்லு மாதிரி ஓக்காந்துகிட்டு இருக்கேன் .... என் மேல நீ ஒக்காந்துகிட்டு இருக்க ...அப்புறம் எப்படி மிஸ் பண்ற...." என குழைந்தான் அவள் உணர்வுகளை புரிந்து கொண்டே.
அவள் வெடுக்கென்று அவன் காதை கடிக்க,
" ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... பதில் சொல்லாம ஏண்டி கடிக்கிற ... ராட்சசி ...."
" தெரிஞ்சுகிட்டே கேட்டா .... அப்படித்தான் பண்ணுவேன் ..."
இம்முறை அவள் அவன் கன்னத்தை கடிக்க,
" வர வர சாம்பியா மாறிக்கிட்டு வர..."
என சலித்துக் கொள்வது போல் நடித்துக் கொண்டே அவள் கன்னத்தில் அவன் வன் முத்தமிடவும், " பிரியா " என்று அகல்யா
வீரியமாய் அழைக்கவும் சரியாக இருக்க,
" ஐயோ , டிரஸ் கூட மாத்தாம உங்களை கொஞ்சிக்கிட்டு இருக்கேன் ..." என முணுமுணுத்து விட்டு,
"இதோ வரேன் அத்தை ...." என்ற பதிலை ஓங்கி ஒலித்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
சில மணித்துளிகளுக்கு பிறகு புத்துணர்வு பெற்று வேறு உடைக்குமாறி தன் கணவனோடு கீழ் தளத்திற்கு சென்றவளிடம்,
"ஆபீஸ் விட்டு வந்ததும் சாப்பிட வரணும்னு உங்க ரெண்டு பேத்துக்கும் தெரியாதா ....
வெத்தல பாக்கு வச்சு கூப்பிடணுமா..." சுந்தராம்பாள் அலுத்துக் கொள்ள , ஸ்ரீ அமைதிக்காக ,பதில் பேசினால் பிரச்சனை வேறு கோணத்திற்கு செல்லும் என்று அனுமானித்தவன், அதற்கு எசப்பாட்டு எதுவும் பாடாமல், அடக்கி வாசித்தபடி இரவு உணவை தன்னவளோடு உண்டு முடித்தான்.
சுந்தராம்பாளும் தன்னால் இயன்றவரை ஏதேதோ பேச்சு கொடுத்து பார்க்க, அனைத்தையும் சிறு சிரிப்பும் தலையசைப்புமாய் கடந்து விட்டு, விட்டால் போதும் என இருவரும் அறைக்குத் திரும்ப, வந்ததும் வராததுமாய் அவன் மடிக்கணினியில் தன் பயணத்திற்கான ஆவணங்களை அலுவலக பயண பிரிவுக்கு அனுப்பத் தொடங்க ,அவளும் தன் மடிக்கணினியை உயிர்பித்து அதில் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்க, அப்போது அவ்வறையை பார்ப்பதற்கு அவர்களது அலுவலகம் போலவே காட்சியளிக்க, சில பல மணித்துளிகளுக்கு பிறகு தான் அதை உணர்ந்தவன்,
"ஏய் ஸ்ரீ .... இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க ...." என்றான் கேள்வியாய்.
"இந்த கால்குலேஷன் டேலியாகவே(tally) மாட்டேங்குது ராம் ... பயங்கர கன்ஃபியூஷனா இருக்கு ..." என்றாள் ஒற்றைக் கரத்தால் தன் தலையைப் பற்றிக் கொண்டு .
"எங்க காட்டு ...." என்றவன் அவள் காட்டிய தகவல்களையும் ஆவணங்களையும் கணநேரத்தில் பார்த்து புரிந்து கொண்டு,
" ஓ.. காட்... உன் எக்ஸ்பீரியன்ஸ்க்கு RFP deal கால்குலேஷன் எல்லாம் ரொம்ப அதிகம் டி .... என்னோட எக்ஸ்பீரியன்ஸ்க்கே இத கத்துக்க எனக்கு ஆறு மாசம் ஆச்சு .... நீ இந்த டிபார்ட்மெண்டுக்கு ஷிஃப்ட் ஆகியே பத்து நாள் தான் ஆகுது ... அதுக்குள்ள இதையெல்லாம் யார் உன் தலைல கட்டினது...... ...." என அவன் உச்சஸ்தாயில் பொங்க,
"கார்த்திகேயன் தான் மெயில் பண்ணி இருந்தாரு .... சப்போட்டிங் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் அனுப்பி இருந்தாரு .... ஆனா எவ்ளோ கோத்ரு(Go through) பண்ணியும் எனக்கு புரியல..... .... ஆண்டனியும் இன்னைக்கு ஆபீஸ்க்கு லீவ்வு.... கயலுக்கும் சரியா தெரியல... .... உங்க கிட்ட கேட்கலாம்னு தான் இப்ப எடுத்தேன் ... நீங்க பிஸியா இருந்ததால நானே முட்டி மோதிக்கிட்டு இருக்கேன் .... "
உள்ளுக்குள் கோபம் கொந்தளித்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனையாளிடமிருந்து மடிக்கணினி பெற்றவன், அடுத்த அரை மணி நேரத்தில் அந்த வேலையை அம்சமா செய்து முடிக்க
" வாவ் .... சூப்பர்ப் ராம் ...." என அவனை குதூகலமாய் அணைத்துக் கொண்டாள் அவன் மனையாட்டி.
"இனிமே இந்த மாதிரியான வேலைக்கு எல்லாம் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு ஸ்ட்ராங்கா கார்த்திகேயன் கிட்ட சொல்லிடு ....
உன்னோட எக்ஸ்பீரியன்ஸ்க்கு இதெல்லாம் ரொம்ப அதிகம் ...." என புதுவித குரலில் சொல்லிவிட்டு, அவன் விலகிச் செல்ல, மீதம் இருக்கும் ஓரிரண்டு வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு வர அவளுக்கு மேலும் அரை மணி நேரம் ஆகிப்போக, வேலையில் மூழ்கி இருக்கும் வரை லேசாக தமுத்திருந்த கால் வலியும் வயிற்று வலியும் சற்று நேரத்திற்கெல்லாம் வீரியமாகி போக, உடன் தலைவலியும் கூடிக் கொண்டு அவளைப் பாடாய்படுத்த தொடங்கின.
ஒரு கட்டத்தில் படுத்திருக்க முடியாமல் அவள் விருட்டென்று எழுந்தமர, அருகில் ஏதோ யோசனையில் இருந்தவன், அந்த அசைவை உணர்ந்து
" என்னாச்சி பட்டு ...." என்றான் துணுக்குற்று .
" காலையில் இருந்து கால் வலியும், வயித்து வலியும் லேசா இருந்தது .... இப்ப அது அதிகமாயிடுச்சு ... அதோட தலைவலியும் வந்துடுச்சு ..." என்றவளை பார்க்க பரிதாபமாக இருந்தாலும் ,
" நீ பண்ற வேலைக்கு தலைவலி வராம என்ன பண்ணும் .... இங்க பாரு ஸ்ரீ .... உன்கிட்ட இருக்கிற பிரச்சனையே எல்லாத்தையும் கத்துக்கிட்டு, எல்லாத்தையும் சரியா செய்யணும்னு நினைக்கிறது தான் ... சில விஷயங்களுக்கு நோ சொல்லலாம் தப்பு இல்ல .... எல்லாத்துலயும் எக்ஸெல் ஆகணும்னு ஆசைப்படலாம் ... ஆனா அதுக்கான ரைட் டைம் லிமிட்ட ஃபாலோ பண்ணனும் .... இப்படி ஆறு மாச வேலைய ஆறு நாள்ல சரியா செய்யணும்னு நினைச்சா தலைவலி தான் வரும் ..."
என அவன் கடிந்து கொண்டாலும், வழக்கம் போல் மனையாளுக்கு தேவையான மாத்திரை மற்றும் களிம்பை எடுத்து வந்து அவன் உதவி செய்ய, வலி நிவாரணி உட்கொண்ட மயக்கத்தில், அடுத்த பத்து நிமிடத்தில் ஆழ்ந்த நித்திரையை தழுவினாள் அவன் கண்ணாட்டி.
உறங்கும் மனையாளை உற்று நோக்கியவனுக்கு, அவளது பணி சம்பந்தமான விஷயம் லேசாக உறுத்த,
யூஸ்லெஸ் ஃபெல்லோஸ் .... ஒரு இளிச்சவாச்சி கிடைச்சா போதும் அவ தலையில எதை வேணாலும் கட்ட வேண்டியது .... இன்னொரு தடவை இப்படி நடக்கட்டும் ... அப்புறம் இருக்கு ....
என தனக்குள்ளே கொந்தளித்த படி, தன்னவளை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான்.
விடியற்காலை 4 மணிக்கெல்லாம் திடீரென்று அவன் மனையாட்டிக்கு விழிப்பு வர, தன் அணையாடையை மாற்றிக் கொள்ள துரிதமாக குளியலறைக்கு சென்று வந்தவளுக்கு, மீண்டும் லேசாக தலைவலி எடுக்க ,படுக்கையில் அப்படியே சாய்ந்து கொண்டு தன் கரங்களால் தலையைப் பற்றிக் கொண்டாள் பாவை .
அரை மணி நேரம் அவள் அப்படியே இருக்க, சற்று நேரத்திற்கு எல்லாம் வீராவிற்கு விழிப்பு வர,
"என்ன ஸ்ரீ .... உக்காந்துகிட்டு இருக்க ..." என்றான் கண்களை கசக்கியபடி.
"திரும்பவும் லேசா தலை வலிக்குது ராம்... "
"இவ்ளோ நேரமா தூங்கிக்கிட்டு தானே இருந்த ...."
"என்னதான் தூங்கி கிட்டு இருந்தாலும், உள்ளுக்குள்ள ஒரே மேத்தமேட்டிக்கல் கால்குலேஷன்ஸா ஓடிக்கிட்டே இருந்த மாதிரி இருந்தது .... நிம்மதியான தூக்கம் இல்ல ...."
" ம்ச்.... இதுக்கு தான் சொன்னேன் .....
உன்னோட கெப்பாசிட்டிக்கு மீறி ஸ்ட்ரெஸ் பண்ணாதன்னு .... இது மாதிரி எனக்கும் ஐஐடி பஸ்ட் இயர் படிக்கும் போது வந்திருக்கு .... கொஞ்சம் நாளைக்கு அப்புறம் தானா சரியாயிடுச்சு ... நாளைக்கு ஆபீஸ் போனதும் கார்த்திகேயன மீட் பண்ணி இந்த மாதிரியான வேலைகளை ஒரேடியா என் தலையில காட்டாதீங்க, எனக்கு கொஞ்சம் டைம் வேணும் பொறுமையா கத்துக்கிட்டு தான் செய்வேன்னு தெளிவா சொல்லிடு ..."
என்றவன், ஏதேதோ பேசி அவளை உறங்க வைத்துவிட்டே தானும் உறங்கிப் போனான் .
---------------------------------------------------
ஊட்டியில் காலை வேளையில், கணவனோடு மெதுவாக தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தாள் லட்சுமி.
அழகான, துளி கூட ஆபாசமில்லாத கருத்த ஊதா நிற மெட்டர்னிட்டி கவுனில் வழக்கத்தை விட அவள் பேரழகியாகத் தெரிய,
"அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது....... ..." என சரசமாய் ராம்சரண் மொழிய,
"ஏன் பயமா இருக்குன்னு சொல்றீங்க ... எனக்கு நல்லா இல்லையா ..." என்றாள் ஒருவித கூச்சத்தோடு .
மாதம் கூட கூட, இரட்டை குழந்தைகள் என்பதால் அவள் வயிறு பெருத்துக் கொண்டே செல்ல , புடவையை அணிந்து கொள்ள முடியாமல் அவள் தடுமாற, சுடிதாரும் புடவைக்கு நிகராக அவளது வயிற்றை இறுக்க, அதற்கு தீர்வு காணவே இந்த மெட்டர்னிட்டி கவுனை வாங்கிக் கொடுத்திருந்தான் ராம்சரண்.
அணிந்து கொண்டாலும் அவள் படுக்கை அறையை விட்டு வெளியே வராமல் காலம் கடத்த, ஒரு வழியாக அறிவுரை என்ற பெயரில் அவளை சமாதானப்படுத்தி பொதுவெளியில் நடைபயில அழைத்து வந்தான்.
நாளடைவில் ஓரளவிற்கு அந்த ஆடைக்கு அவள் பழகி இருந்த நிலையில் ,அவன் மேற்கண்டவாறு கூறியது அவளுள் சற்றே மறைந்திருந்த வெட்கத்தை தட்டி எழுப்பி மீண்டும் அவளை கூச்சப்பட வைக்க
"ச்சே..ச்சே... ரொம்ப ரொம்ப அழகா இருக்க .... உன்ன பாத்தா எனக்கு என்னென்னமோ தோணுது... அதான் எனக்கு பயமா இருக்கு ..."
என அவன் குழைய, அந்திவான சிவப்போடு தலை குனிந்து கொண்டவள்,
"வர வர உங்க பேச்சு பார்வை எதுவுமே சரி இல்ல.... நமக்கு கல்யாணமான புதுசுல எப்படி இருந்தீங்க .... இப்ப இப்படி மாறி போய்ட்டீங்களே ..."
"அப்ப விவரம் இல்ல டி.... இப்ப விவரம் வந்துடுச்சு இல்ல ...."
அவன் ஒற்றைக்கண்ணாடித்து பேசி அவளை மேலும் இம்சிக்க,
"இப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்க.... இனி உங்களோட வாக்கிங்கே வரமாட்டேன் ... "
" சாரி டீச்சர் அம்மா இனிமே அப்படி பேச மாட்டேன் ..... நீங்க டீச்சர்னு அடிக்கடி மறந்தே போயிடறேன் ..." என்றவன் குலுங்கி சிரித்துக்கொண்டிருக்கும் போது , அவனது அலைபேசிக்கு அழைப்பு விடுத்திருந்தார் ரங்கசாமி.
"என்னப்பா ...." என்றான் அழைப்பை அனுமதித்து .
"நீ லட்சுமிய ரூம்ல விட்டுட்டு, கொஞ்சம் மேல என் ரூமுக்கு வர முடியுமா ... உன்னோட பேசணும்..." என்றார் ரங்கசாமி.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர் முன்பு அவன் நிற்க,
"நம்ம மேனேஜர் முத்துராமனோட அம்மா தவறிட்டாங்களாம் .... அதனால அவர் ஒரு வாரத்துக்கு வேலைக்கு வர மாட்டாரு ...நம்ம எஸ்டேட்டுக்கு பின்னாடி இருக்கிற ரெண்டு ஏக்கர்ல டிம்பர் மரம் வச்சிருந்தேன் .... 20 வருஷத்துக்கு முன்னாடி வச்சது .... இப்ப நல்லா வளர்ந்து வந்துடுச்சு .... அதை வெட்றதுக்கு ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் கிட்ட பர்மிஷனும் வாங்கிட்டேன் .... இங்க குன்னுர் பக்கத்துல பாலாஜி டிம்பர் டிப்போனு ஒன்னு இருக்கு ... வழக்கமா இந்த மாதிரியான பிசினஸ் பேச நம்ம மேனேஜர் தான் போவாரு.... .... இப்ப அவரு இல்ல ... முன்ன மாதிரி ஞாபக சக்தி இல்லாததால தனியா போக எனக்கு கஷ்டமா இருக்கு .... நீ என் கூட வர்றியா..." என்றவரை பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது.
அவருடைய வயதான காலத்தில், தோள் கொடுக்கும் தோழனாக இருக்க வேண்டியவன், தன்னுடைய ஆசையே பிரதானம் என்ற எண்ணத்தில் தகவல் தொழில் நுட்பத்தை தொழிலாக எடுத்ததன் விளைவு முதியவர் அவனிடம் உதவி கேட்கும் நிலை ஏற்பட்டிருப்பதை எண்ணி வருந்தியவன்
"இதெல்லாம் கேட்கணுமாப்பா ..... வான்னு சொன்னா வந்துட்டு போறேன் .... வாங்க போலாம் ..." என்றவனோடு அவர் கிளம்ப,அடுத்த ஒரு மணி நேரத்தில் குன்னூரில் இருக்கும் பாலாஜி டிம்பர் டிப்போவை அடைந்தனர்.
ரங்கசாமி வந்திருப்பதை அறிந்து, அதன் முதலாளி கார் நிறுத்தத்திற்கே வந்து அவர்களை அழைத்துச் சென்று, தன் அலுவலக அறையில் அமர வைத்து உபச்சாரம் செய்ய, ரங்கசாமியும் அவரும் தொழில் சம்பந்தமாக நுணுக்கமாக பேசப் பேச, ராம் சரணுக்கு அதில் நாட்டம் இல்லாததால், அங்கிருந்த பரந்து விரிந்த மர ஜன்னல் வழியே அவன் தன் பார்வையை வெளியே செலுத்திக் கொண்டிருக்க, அப்போது ஏதோ ஒரு தெரிந்த முகம் மின்னல் வேகத்தில் அவன் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்றெண்ணி தப்பித்து, அங்கிருந்த பெரிய மரத்துண்டிற்கு பின்னால் ஒளிய, முற்படுவதை கண்டவன், கண நேரத்தில் அந்தத் தெரிந்த முகத்தை நினைவடுக்குகளிலிருந்து தேடிப் பார்த்தும் விடை கிட்டாமல் போக,
"அப்பா நீங்க பேசிக்கிட்டு இருங்க... இதோ வந்துடறேன் ...." என்றான் அவசரமாய்.
" தம்பி, டிப்போவை சுத்தி பாக்கணும்னு ஆசைப்படறீங்களா .... அந்தா தெரியுது பாருங்க அந்த மலை வரைக்கும் நம்மளோடது தான் .... பொறுமையா போய் சுத்தி பார்த்துட்டு வாங்க .... அங்கங்க ஆளுங்க இருப்பாங்க .... ஏதாச்சும் விவரம் வேணும்னா கேளுங்க சொல்லுவாங்க ..." என அதன் முதலாளி சொல்ல, அதையெல்லாம் சரியாக கூட காதில் வாங்கிக் கொள்ளாமல், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தை காலி செய்தவன், அந்த உருவம் மறைந்திருக்கும் மரத்திண்டை மாற்று வழியில் மெதுவாக அடைந்து,
"ஏய்.... நீ யாரு .... எதுக்காக என்னை பார்த்ததும் ஓடி ஒளியற ...." என்றதும், குரல் தன் முதுகுக்கு பின்னால் வருவதைக் கேட்டு பயந்து அந்த உருவம் திரும்பி பார்க்க,
" ரவி( அருணாவின் நாத்தனார் சுகந்தியின் கணவர்) ..... நீயா ......" என்றான் சரண் அதிர்ச்சியோடு .
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
இனிய நட்பு வட்டங்களுக்கு,
தீபாவளி நல்வாழ்த்துக்கள் .....
நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் சிவகாசியில் தயாரிக்கும் பட்டாசுகளை மட்டும் வாங்கி, அவர்களது ஓராண்டு உழைப்பிற்கு உதவுங்கள் தோழமைகளே ....
ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்.
awesome as always 💕💕💕💕💕
ReplyDeleteSemma semma ud sis... Romba perusa diwali spl kaga neraya hardwork pani type pani irukinga. Thanks alot. Intha Aruna ku ethachum oru vedi veyunga sis. Evlo kodumayanavala iruka, avanga mamiyar uh potu thalita. Diwali vazhthukal
ReplyDeleteSuper Happy Diwali mam
ReplyDelete