ஸ்ரீராமம்-135

 

அத்தியாயம் 135

  

திங்கட்கிழமை காலையில் வீரா  கோயம்புத்தூர் வந்து சேர்ந்தான்.


அங்கிருந்து மதுரைக்கு டாக்ஸியில் பயணப்பட்டவனின் மனம் முழுவதும் மனையாளை பற்றிய சிந்தனைகளே, நிரம்பி வழிய, ஒரு வேளை தந்தை சொல்லியது போல், தன் தாய்  பேசிய வரம்பு மீறிய  பேச்சுக்காக தான்  தன்னவள் அலைபேசியை அணைத்து வைத்திருக்கிறாளோ..... என்ற சந்தேகம் எழ, உடனே இருக்காது என்ற பதிலை அவன் மனம் அடித்துச் சொல்ல,  அடங்கிப் போனான்.


அவன் வெளிநாட்டிற்கு  செல்வதற்கு முன், அவனுக்கும் , அவனது தாய் மற்றும் பாட்டிக்கும் இடையேயான சம்பாஷணைகளை , கேட்ட போது கூட அவன் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டு அவனிடம் கோபப்பட்டாளே ஒழிய,  அவனது தாய் மற்றும் பாட்டி பேசியதை பற்றி  அவள் கருத்தில் கொள்ளவே இல்லை ....


அவளுக்கு என்றுமே அவனுடைய கூற்று  தான் முக்கியம்.....  அவளைப் பற்றிய மற்றவர்களின் கூற்றுக்கு  என்றுமே அவள்  முக்கியத்துவம் அளித்ததில்லை  என்பதால்,  அகல்யாவின் பேச்சுக்காக தன்னவள் அலைபேசியை அணைத்து வைத்திருக்க வாய்ப்பில்லை  என்ற முடிவுக்கு வந்தவனுக்கு,  வேறு எந்த காரணங்களும் பிடிபடாமல் போக, சிந்தித்து சிந்தித்து சோர்ந்து போனான். 


இடையிடையே பலமுறை அவளை  தொடர்பு கொள்ளவும் முயன்றான்.....


ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான் ....


ஐந்தாறு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக அவன் பயணித்த டாக்ஸி, ஸ்ரீயின் வீட்டை அடைய,  வண்டியில் இருந்து துள்ளி குதிக்காத குறையாய் இறங்கி பயணத்திற்கான பணத்தை செலுத்தி விட்டு,  பயண பொதிகளை சுமந்து கொண்டு  விரு விருவென்று வருபவனை,  வெளியே  செல்ல கிளம்பி வாயிலுக்கு வந்த அம்மையப்பன் ஏதேச்சையாக கண்டுவிட்டு , 


"வாங்க மாப்ள.... வாங்க , இன்னைக்கு  நீங்க கோயம்புத்தூர் வருவீகனு ரேவதி சொன்னா, ஆனா இங்க வருவீகன்னு  கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...."என்றார்  மலர்ந்த முகத்தோடு வரவேற்று. 


அவனுக்கு தன் மனையாளை காண வேண்டும்  என்ற ஆவல் இருந்தாலும் , அம்மையப்பனின் இதமான அணுகுமுறை, அவன் தந்தை அனுமானித்து சொல்லிய  செய்திக்கு  முற்றிலும் மாறாக இருக்க, அதுவும் ஒரு வகையில் நிம்மதியை தர ,


"யூகேக்கு போன  வேலை எல்லாம் முடிஞ்சு போச்சு மாமா  ... ஒரு ரெண்டு நாள் லீவு கிடைச்சது.... அதான் ஸ்ரீயோட இங்க ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு,  கையோட அவளையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்.... ..." 


முன்பே ஒரு முறை  அவன் இவ்வாறு திடீரென்று வந்து நின்ற  வரலாறு இருந்ததால்,  அந்த பேச்சை இயல்பாக எடுத்துக்கொண்டு, அவனுக்கு  உதவும் விதமாக மீதம் இருந்த பயணப் பொதிகளை சுமந்து கொண்டு அவர் வீட்டிற்குள் செல்ல,  அவரைப் பின்தொடர்ந்தவன், 


"நேத்து உங்களுக்கு ரெண்டு மூணு முறை போன் பண்ணேன் .... ஆனா உங்க போன் சுவிட்ச்டு ஆஃப்னு வந்தது ....???"  என்றான் தொக்கி நிறுத்தி. 


"அது வந்து மாப்ள... கரையான் பாடினு ஒரு இடம்.... ரொம்ப தொலைவு ..... அங்க தான் நெலம் அளக்கப் போயிருந்தேன் .... ஃபோன சரியா சார்ஜ் போடாததால , அங்க போவறதுக்கு முந்தியே  சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு .... நல்லவேளையா சந்தானம் ஃபோன்ல சார்ஜ் இருந்ததால எல்லா வேலையும் சரியா முடிச்சுட்டு,  சாயங்காலம் 7:00 மணிக்காவது வர முடிஞ்சது... இல்லன்னா கூலி ஆளுங்கள  கூப்பிட முடியாம வேல  இழுத்துகினு இருந்திருக்கும்  ..."


அவர் தன் சொந்த கதை சோகக் கதை சொல்லிக் கொண்டிருக்க,  அவனுக்கு தேவையானது முதல் மூன்று  வரிகளிலேயே கிடைத்து விட்டதால் மற்ற செய்தியில் கவனம் செலுத்தாமல் , அவன் விழிகளோ மனையாளைத் தேட ,


"அம்மு மேல இருக்கா.... உடம்புக்கு முடியலன்னு சொன்னா ....  கூப்பிடட்டுங்களா.....  சுசிலா கேரளாவுக்கு போய் இருக்கா பகவதி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட ...." 


என அவர் விடுபட்ட தகவல்களை சொல்ல, 


"ஓ... அத்தை கேரளா போயிருக்காங்களா .... ஓகே மாமா ... நானே மேல போய் ஸ்ரீய பாத்துக்கறேன் ..."  


அவன் படிகளை நோக்கி நகர,


"எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு மாப்ள  ....  இங்க அன்னபூரணி மெஸ்ல சாப்பாடு நல்லா இருக்கும் சொல்லட்டுங்களா.... ...."  


"வேணாம் மாமா...  நான் சாப்பிட்டு தான் வந்தேன்... நீங்க கிளம்புங்க ...."  என்றவன் , துரிதமாக படியேறி தன்னவளின்  அறையை அடைவதற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத அச்சம் அவனை ஆக்கிரமிக்க, அடுத்த கணமே  அதனை ஒத்திவைத்து விட்டு , ஒருக்களித்திருந்த கதவை திறந்தவனின் விழிகளில்  படுக்கையின் நடுவில் குத்து காலிட்டு  அதில் முகம் புதைத்தபடி அமர்ந்திருந்த அவனது நாயகி தென்பட ,


"ஸ்ரீ ............"  என்றான்  மெதுவாக அடி மேல் அடி வைத்து அவளை நெருங்கி. 


அவனது குரல் கேட்டு,  தலை நிமிர்த்தி பார்த்தவளின் விழிகளில் , மெல்லிய கதிர் வீச்சு போல் ஆச்சரியமும் ஆனந்தமும் பின்னிப் பிணைந்தோடியதோடு , கண்களும் லேசாக பனிக்க , உடனே தலை குனிந்து கொண்டாள்.


தினமும்  அலுவலகம் சென்று விட்டு மாலையில்  திரும்புபவனை , ஏதோ பல ஆண்டுகள் கழித்துப் பார்ப்பது போல்   தாவி வந்து தழுவி  கொள்பவள் தான் இன்று இம்மி அளவு கூட  அசையாமல் , தலையை திருப்பிக் கொள்கிறாள்....என்று அவனுக்கு வித்தியாசமாக  தோன்ற,  அதோடு ஒரு வார பயணத்திற்கு முன்பு அவன் பார்த்ததற்கும்,  தற்போது அவள் இருப்பதற்கும் கிட்டத்தட்ட ஆறு வித்தியாசங்களை அதிரடியாக அடுக்கி விடலாம் என்னும் அளவிற்கு அவளிடம் தென்பட்ட  மாறுதல்கள் அவனை அதிர்ச்சி அடைய செய்ய,  ஒரு கணம் அப்படியே  உறைந்து நின்று விட்டான்.


ஏற்கனவே மெல்லிய உடல்வாகு கொண்டவள்.. .... தற்போது மேலும் இளைத்திருந்தாள்   .....


மஞ்சள் நிற மேனி கொண்டவள், வெளிறிய சிவப்பில்  காணப்பட்டாள்.....


ஜீவனே இல்லாத கண்கள், அதை சுற்றி கருவளையம், ஒட்டிய தாடைகள் , வறண்ட வெடிப்புகள் நிறைந்த உதடுகள் ....


என அவளிடம் காணப்பட்ட மாற்றங்கள், அவனை நிலைகுலையச் செய்ய,


"பட்டு,  என்னடி ஆச்சு .... உனக்கு உடம்பு சரியில்லனு உங்க அப்பா சொன்னாரு ...."

என்றான் அவள் கரம் மீது கரம் பதித்து.


தலை நிமிர்ந்து பார்த்தவளின்   விழிகளில் , கண்ணீர் ஆராய் பெருக்கெடுத்து ஓட,


"உடம்பெல்லாம் வலிக்குது ராம்..... 

 நிக்க முடியல... நடக்க முடியல ....

கை கால் எல்லாம் உதறுது .... 

உடம்புல இருக்கிற எல்லா நரம்புகளும்

வின் வின்னு தெறிக்குது .... 

தலையே வெடிக்கிற அளவுக்கு தலைவலி

கொல்லுது ...."  என்றாள் லேசாக கதறி. 


" ஐயோ,  ஏன் திடீர்னு இப்படி ஆச்சு ...."


என்றவன் அவள் அருகே அமர்ந்து,  அவளது நெற்றியின் மீது கரம் வைக்க


"ப்ளீஸ் ராம்...  கைய எடுங்க .....   வலி உயிர் போகுது ...." 


என்ற போது தான்,  தனது உள்ளங்கை நெருப்பாய் கொதிப்பதை உணர்ந்து, அதிர்ச்சியுற்றவன்,

"ஜுரம் ஏண்டி இவ்ளோ அடிக்குது ....   வா டாக்டருக்கு போலாம் ...." என்றான் அவசரமாய். 


"வேணாம் ராம்,   நேத்தே போயிட்டு வந்துட்டேன் ...." 


"அப்ப நேத்து நீ கல்யாணத்துக்கு போகலயா......... ...."


"இல்ல ராம் .... " என்றவள் முன் தினம்  நடந்த அனைத்தையும் பகிர தொடங்கினாள்.  


திருமணத்திற்கு செல்வதற்காக அதிகாலையில் கண்விழிக்கும் போதே, அவளது உடலெங்கும் வலி லேசாக ஏற்பட, அதனைப் பொருட்படுத்தாமல், துரிதமாக குளித்து , அழகிய  புடவை தரித்து, மென் அலங்காரத்தோடு  தந்தை ஏற்பாடு செய்திருந்த காரில்  பயணித்தவளுக்கு , மதுரையின் எல்லையை தாண்டுவதற்கு முன்பாகவே, உடல் எங்கிலும் வலி ரணமாய் பரவ,  சரீரம் அக்கினி குண்டமாய் தகித்து செஞ்சாந்தாய் மாற, தலையில் ஓடும் நரம்புகள் அனைத்திலும்  மின்சாரம் பாய்வது  போல் 'வின் வின்'என்று தெறிக்க , அதற்கு மேல் பயணத்தைத் தொடர்ந்தால், அந்த வலியே தன்னை கொன்றுவிடும் என்று என்னும் அளவிற்கு நிலைமை மோசமாக, உடனே உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் காரை , நிறுத்துமாறு பணித்தாள்.


மருத்துவமனையை அடைந்ததும், தன் தந்தைக்கு அழைப்பு விடுத்தாள் ...


அவரது அலைபேசி முற்றிலுமாய் அணைக்கப்பட்டு இருப்பது தெரிய , தந்தையின் நண்பரான சந்தானத்தை தொடர்பு கொள்ளலாமா  என்ற எண்ணம் வர, உடனே மருத்துவரை சந்தித்து விட்டு பிறகு அழைப்பு விடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவள்  ஓட்டுநருக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு மருத்துவரை சந்திக்க முன் அனுமதி பெற்று காத்திருக்கத் தொடங்கினாள். 


காத்திருந்த கால் மணி நேரத்தில்,  இருக்கையில் கூட அமர முடியாமல், முதுகு தண்டில் இருந்து பாதங்கள் வரை வலி புரட்டி எடுக்க , தெரிந்தவர்கள் யாரும் உடன் இல்லாததால்,  பல்லை கடித்துக்  வலியை பொறுத்துக் கொண்டிருந்தவளுக்கு அவளுக்கான அழைப்பு வர தளர்ந்த நடையில் மருத்துவரை சென்று சந்தித்தாள்.


50 வயதை கடந்த  அனுபவம் வாய்ந்த அந்த பொதுநல மருத்துவரிடம்,  தன் உடல் உபாதைகளை அவள் பகிர, அவள் ஆட்பட்டிருக்கும் நோயின் வீரியத்தை பரிசோதித்து அறிந்து கொண்டவர்,  உடனே அதே மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு வாத நோய் நிபுணரான  (Rheumatologist) மருத்துவர் சுலோச்சனாவை சந்திக்குமாறு  பரிந்துரைத்தார். 


செவிலிப் பெண்ணின் உதவியோடு கை தாங்கலாக  வந்தவளின் வலியின் தீவிரத்தை ,  முதல் 10 நிமிடத்திலேயே  புரிந்து கொண்ட அந்த அனுபவம் வாய்ந்த   வாத நோய் மருத்துவர் , நாக்கிற்கு அடியில் வைத்து அதக்கிக் கொள்ளும்  துரித  வலி நிவாரணி மருந்தை அவளுக்கு கொடுத்து விட்டே மருத்துவ ஆலோசனைக்கான  கேள்விகளில் இறங்கினார்.


அவளுடைய வயது, படிப்பு  வேலை   திருமணம் , குடும்பப் பின்னணி,  மற்றும்  நோய் சம்பந்தமான அனைத்து விபரங்களையும்  பொறுமையாக கேட்டறிந்து கொண்டவர், 


"இந்த மாதிரி எப்பவாவது வந்ததுண்டா ....."

என்றார் அவளை ஆழ்ந்து நோக்கி.

 

"இந்த மாதிரி இதுவரைக்கும் வந்ததே இல்ல டாக்டர் ....  கால் வலி மட்டும் மாசத்துக்கு ரெண்டு மூணு முறையாவது  வரும் ... பெயின் கில்லர் எடுத்தா போயிடும் ....  சில சமயம் போகாம ரெண்டு மூணு நாள் படுத்தும் .... அப்ப டாக்டரை பார்த்து  மெடிசன் வாங்கி சாப்பிடுவேன் ... அப்புறம்  சரியா போயிடும் ..."


என்றவளிடம் கை கால்களை அசைக்கச் சொல்லி சில உடல் பரிசோதனையை  மேற்கொண்டவர், 


"நீ மேரிட் ரைட் ... உன் ஹஸ்பண்ட் வந்திருக்காரா  ..."  என்றார் யோசனையோடு. 


"இல்ல டாக்டர்  .... ஏன்... ஏதாவது பெரிய பிரச்சினையா டாக்டர் ... ஆத்தரைட்டீசா..." 

என்றாள் தழுதழுத்தக் குரலில் அங்கு மாட்டியிருந்த படங்களை பார்த்து வலியோடு.


 "ஆத்தரைட்டீஸ்ன்னா வெறும் ஜாயின்ஸ்ல மட்டும் தான் வலிக்கும்மா .... இப்படி தலை உடம்புன்னு எல்லா இடமும்   வலிக்காது ... இது ஃபைப்ரோமயால்ஜியா (Fibromyalgia)னு பேரு ....


பெரும்பாலான டாக்டர்ஸ்சால இதை சரியா டைக்னோஸ் பண்ண முடியாது ... ஏன்னா இதுக்குன்னு  பிளட் டெஸ்ட்,  எம்ஆர்ஐ ,எக்ஸ்ரேனு எதுவுமே கிடையாது .... ரொம்ப ஸ்பெசிபிக்கான சில பிசிக்கல் எக்ஸாமினேஷன வச்சு தான் கண்டுபிடிக்க முடியும் .... சரியா சொல்லணும்னா  இது  டிசீஸ்(disease)  இல்ல டிஸ்ஆடர்(disorder) ...." 


"அப்படின்னா ... புரியல டாக்டர் ..."


"டிசீஸ்னா,  அது எதனால வருது,  எப்படி தடுக்கலாம்,  அத கண்டுபிடிக்கிற முறைகள்,  அதுக்கான மருந்துகள்னு எல்லாமே சரியா இருக்கும் .... சோ,  டாக்டரோட அட்வைஸ பேஷன்ட் ஃபாலோ பண்ணாலே போதும் .... 

குணமாயிடுவாங்க ....  ஆனா இது டிஸ்ஆடர்,  இது ஏன் வருது, எப்படி வருது இத தடுக்கிற முறைகள்,  சரியான மாத்திரை மருந்துகள்னு எதுவுமே இதுக்கு இப்ப வரைக்கும்  கிடையாது.....  " என்றவர் ஒரு கணம் சிந்தித்து விட்டு, 


"சமீபத்துல உங்க மனச பாதிக்கிற மாதிரி  ஏதாவது அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம்  நடந்ததா ...  லைக்  ஆக்சிடென்ட், இல்ல யாராவது க்ளோஸ்  ரிலேட்டிவ்ஸ் ஓட டெத் ................ ....???"

என கேள்வி எழுப்ப , உடனே  அவள் மனதில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ராணாவிடமிருந்து தப்பி  வந்த காட்சியே படமாய் ஓட, அவளது முகமெங்கும் வியர்வை முத்துக்கள் வேகமாய் பூக்க 


" ஆமா ...... அது ..." 


என அவள் திணற,


"இட்ஸ் ஓகே....  அத  நீ சொல்லணும்னு அவசியம் இல்ல ... பொதுவா நம்ம உடம்புல  எங்கேயாவது அடிபட்டுச்சின்னா அங்க மட்டும் வலிய உணர வைக்கிறது தான்  நம்ம  மூளையில் இருக்கிற  (CNS) சென்ட்ரல் நர்வர்ஸ் சிஸ்டத்தோட வேலை ...


ஆனா  ஃபைவ்ப்ரோமயாலஜி டிஸ்ஆடர் இருக்கிறவங்களுக்கு ஏதாவது மனச பாதிக்கிற மாதிரியான  சிச்சுவேஷன் ஃபேஸ்ன்னா  அவங்களோட சென்ட்ரல் நர்வெஸ் சிஸ்டம்  ரொம்ப சென்சிட்டிவா வொர்க் பண்ணி முதுகுத்தண்டு வழியா உடம்பு முழுக்க தாள முடியாத வலியை உணர வச்சிடும் .... அதனால தான் இதை  சென்ட்ரல் நர்வெஸ் சிஸ்டம் டிஸ்ஆர்டர்னு  சொல்லுவோம் .... இது சில பேருக்கு அன்னைக்கே நடக்கும் .... சில பேருக்கு ஒரு வாரத்துக்குள்ள நடக்கும் அப்படித்தான் நீங்க இப்ப பெயின்ல இருக்கீங்க .... 


"அப்போ அந்த சிச்சுவேஷனால தான் இந்த டிஸ்ஆர்டர் வந்ததா டாக்டர்   ...???"


"வெயிட் வெயிட்,  அந்த சிச்சுவேஷனால தான் ஃபைவ்ப்ரோமயாலஜி வந்ததுன்னு நான் சொல்லல ..... ஏற்கனவே ஃபைவ்ப்ரோமயாலஜி  ப்ராப்ளம் உங்களுக்கு இருந்திருக்கு ... அந்த ட்ராமா(trauma)  அதை  ட்ரிக்கர் பண்ணி வெளியே கொண்டு வந்திருக்கு...  அவ்ளோ தான்... ஆனா திரும்பவும் சொல்றேன் இதை கண்டுபிடிக்கிறதுக்கு ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் வேணும் ...பெரும்பாலான டாக்டர்ஸ்  மசுல் பெயின்னு டைக்னோஸ் பண்ணி மசுல் ரிலாக்ஸன்ட் டேப்லெட்ஸ கொடுத்துடுவாங்க.....ஆனா அது வொர்க் அவுட் ஆகாது .... என் அக்கா பொண்ணுக்கு இதே பிரச்சனை இருக்கிறதால என்னால உன்னோட சிம்டம்ஸ் ஈஸியா ரிலேட்  பண்ண முடிஞ்சது .... அது மட்டும் இல்ல,  உன் மாதிரியான சில கிரிட்டிக்கல் கேசஸையும் நான் ட்ரீட் பண்ணியிருக்கேன் ..."


என அவர் முடித்ததும்,  அதிர்ச்சியில் வாயடைத்துப் போனவள்,


"இப்படியே வலி இருந்தா,  எப்படி நான் என் டே டுடே லைஃபை லீட் பண்ண முடியும் டாக்டர்........"  என்றாள் கண்கள் பொங்க .


"ஏய் பயப்படாத...   பெயின் கில்லர் சாப்பிட்டா வலி போயிடும் .... ஆனா அடிக்கடி அந்த பெயின் கில்லரை எடுத்துக்க கூடாது ... ஏன்னா , நாம சாதாரணமா தலைவலி, உடம்பு வலிக்கு யூஸ் பண்ற  பெயின் கில்லர் எல்லாம் இதுக்கு உதவாது .... சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டத்தையே கண்ட்ரோல் பண்ற அளவுக்கு 

ரொம்ப ஸ்ட்ராங் பெயின் கில்லர் தான் இதுக்கு  ஒர்க் அவுட் ஆகும் .... அதுவும்  குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தொடர்ந்து சாப்பிட்டா தான்,  கம்ப்ளீட்டா வலி போகும்.. அதனால அதுல  சைட் எபெக்ட்ஸ் ரொம்ப அதிகம்.... தொடர்ந்து எடுத்தீங்கன்னா கிட்னி,  ஹார்ட் பெய்லியர்ஸ் வர சான்ஸஸ இருக்கு ....  அதைவிட யோகா, லைஃப் ஸ்டைல் சேஞ்சஸ் , மசாஜ், அக்குபஞ்சர்னு ஏகப்பட்ட விஷயம் இருக்கு .... அதையெல்லாம் பர்ஃபெக்ட்டா ஃபாலோ பண்ணா இப்படி ஒரு நோய்  இருக்குன்னு கூட  நீங்க மறந்தே போயிடுவ .... அந்த அளவுக்கு மாச கணக்குல வலியே இல்லாம நிம்மதியா லைஃப்ப லீட் பண்ணலாம் ....

ஆனா இதுல இருக்கிற சேலஞ்ச் என்னன்னா எல்லாம் சரியா ஃபாலோ பண்ணாலும் சில சமயம் , இந்த மாதிரியான வலி  எப்ப வேணாலும் பிளேர்ஸ் அப் (Flares up) ஆகலாம்  .... அதுக்கு நான் பிரிஸ்கிரைப் பண்ற பெயின் கில்லர் டேப்லட்ஸ எப்பவுமே உங்க கூடவே  வச்சிருக்கணும் ... ட்ராவல் பண்ணும் போதும் தனியா ட்ராவல் பண்ணாம யார் கூடயாவது டிராவல் பண்றது நல்லது  ..."

என அவர் முடித்ததும் ,  வாயில் அதக்கிக் கொண்டிருந்த மருந்தின் உபயத்தால் கால் வாசி வலி குறைத்திருக்க, 


"எனக்கு கல்யாணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது .... நீங்க சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா என் இன்டிமேட் லைஃப் மட்டுமில்ல,பிரக்னன்சிலயும் பிரச்சனை வரும் போலிருக்கே.... ஏற்கனவே PCOD பிரச்சனை வேற இருக்கு டாக்டர் ...."

என்றவளின் குரல் கமர,  அவளைப் பாவமாக பார்த்தவர், 


"நீ மேரிடுங்கிறதால தான் நான் இந்த விஷயத்தை இவ்ளோ தெளிவா உன்கிட்ட சொன்னேன் .... இல்லேன்னா மருந்து மாத்திரைகளை கொடுத்து அப்படியே அனுப்பிட்டு இருப்பேன் ..... இது உன்னோட இண்டிமேட் லைஃப மட்டுமில்ல  உன் ப்ரக்னன்சியையும் பாதிக்க சான்சஸ் இருக்கு ஆனா  கண்டிப்பா பாதிக்கும்னு சொல்ல மாட்டேன் ....அதே மாதிரி பிரக்னன்டே ஆக மாட்டேன்னு சொல்ல மாட்டேன் ...


எத்தனையோ ஃபைப்ரோமயாலஜி பேஷன்ட்ஸ், நேச்சுரலாவே கன்சீவ் ஆகி குழந்தை பெத்து நல்லபடியா வாழ்க்கைய  லீட்  பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க... 


பொதுவா,  பிரக்னன்சி ஈஸ் ஆல் அபௌட் பெயின்னு சொல்லுவாங்க ....அந்த வலில உன்னால இந்த வலியும் சேர்ந்து தாங்கறது கஷ்டம் ... அதைத்தான் நீ யோசிக்கணும் ....


மத்தபடி குழந்தை உண்டாக 50% சான்சஸ் இருக்கு .... அதோட பொறக்க போற குழந்தையும் எந்த  பாதிப்பும்  இல்லாம நல்லபடியாவே  பொறக்கும்.... அதுக்கும் நான் கேரண்டி ...

என்ன ஒன்னு ... இதுக்கெல்லாம்  அண்டர்ஸ்டாண்டிங் ஆன பார்ட்னர் வேணும்...... .... அப்படி ஒரு ஹஸ்பண்ட் உனக்கு கிடைச்சிருந்தா,  நீ உன் லைஃபை நிம்மதியாவே லீடு பண்ணலாம் ..."

என முடித்தார் தீர்மானமாய்.


 உடனே அவள் , 


"என் ஹஸ்பண்ட் ரொம்ப நல்லவரு டாக்டர்.....  நீங்க சொன்ன மாதிரி அவர்  ரொம்ப மெச்சூர்டு அண்ட் அண்டர்ஸ்டாண்டிங் பார்ட்னர் ..."

என்றவளை பார்த்து ஒரு விரக்தி புன்னகை பூத்தவர்,


"விஷயத்தை  மொதல்ல சொல்லு... அப்புறம் அவரு  அண்டர்ஸ்டாண்டிங் பார்ட்னரா இல்லையான்னு உனக்கே தெரிய வரும் ஏன்னா இங்க யாரும் நல்லவங்களும் கிடையாது.... கெட்டவங்களும் கிடையாது ...


நம்ம சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் தன்னையே மாத்திக்கிட்டா ... அவங்கள நாம  நல்லவங்கனு சொல்றோம்.....  மாத்திக்கலைன்னா  கெட்டவங்கன்னு சொல்றோம்... அவ்ளோ தான்...... 


ஏன் இப்படி சொல்றேன்னா , என் அக்கா பொண்ணோடது லவ் மேரேஜ் .... ரெண்டு வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா .... அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சதும், மொதல்ல அவளோட ஹஸ்பண்ட்  அத பெருசா எடுத்துக்கல .... ஆனா போகப்போக ரெண்டு பேருக்குள்ள நிறைய பிரச்சனை வர ஆரம்பிச்சிடுச்சு அப்புறம் வேற வழி இல்லாம ரெண்டு பேரும் மியூச்சுவலா பிரிஞ்சிட்டாங்க ...


இப்ப கூட எங்க யாருக்குமே,  அவளோட ஹஸ்பண்ட் மேல எந்த கோவமும் இல்ல .... 


 இப்படி ஒரு  பிரச்சனையோட இருக்கிற  பெண்ணை நான் ஏன் லைஃப் லாங்கா தூக்கி சுமக்கணும்னு நெனச்சு,  அவன் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் ... அவன பொருத்தவரைக்கும் அது சரியான முடிவு தான் ..."


'தூக்கி சுமக்கனும்' என்கின்ற  வார்த்தையை ஊருக்குச் செல்வதற்கு முந்தைய தின இரவு,  அவளவன் , அவளைக் குறித்து அவனது தாய் மற்றும் பாட்டியிடம் உரைத்தது நினைவுக்கு வர,  உள்ளுக்குள் கலங்கிப் போனாள் பெண் .


"நீ  வருத்தப்படணுங்கிறதுக்காக  இதை எல்லாம் நான் சொல்லல  ... யூ ஷுட் பி பிரிப்பர் ஃபார்  எவரிதிங்னு சொல்ல வரேன்  ...


ஏன்னா  என் அக்கா பொண்ணை , அந்த ஏமாற்றத்துல  இருந்து வெளியே கொண்டு வர நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்குத் தான் தெரியும் ...


அவ உன்னை விட  3 வயசு பெரியவ... அவளுக்கு அப்ப கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிருந்தது ... உனக்கு இப்ப மூணு மாசம் ஆயிருக்கு... அவ்ளோ தான் வித்தியாசம் ...


ஒருவேளை நீ சொல்ற மாதிரி உன் ஹஸ்பண்ட்  அண்டர்ஸ்டாண்டிங் பார்ட்னராயிருந்தா,  யூ ஆர் சோ லக்கி ... ஜஸ்ட் என்ஜாய் தி லைஃப் ....


நான் பொதுவா பேஷன்ஸ் ஓட பர்சனல்ல தலையிடறது கிடையாது ... ஆனா உன்னோட விஷயம்  எங்க வீட்டு பெண்ணோட விஷயம் மாதிரியே இருந்ததால   தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கிட்டேன்....  அவ்ளோதான் ..." 

என முடித்தார் அக்கறையாய். 



"டாக்டர் கடைசியா ஒரு கொஸ்டின் ...இந்தப் பிரச்சனை இருக்கிறவங்களோட லைஃப் டைம் எவ்ளோ வருஷம் டாக்டர் ..."



"இப்படித்தான் கேட்பேன்னு நினைச்சேன் கேட்டுட்ட...

இது ஒன்னும்  கேன்சர், ஹார்ட் அட்டாக் மாறி ஆள கொல்ற வியாதி கிடையாது ....நீ உன்னை ஆரோக்கியமா வச்சிக்கிட்டு இருந்தா ....  நூறு வருஷம் கூட வாழலாம் ... 


ஒரு மாசத்துல ரெண்டு தடவையும் இந்த மாதிரி வலி வரலாம் .... சில சமயம் ஆறு மாசத்துக்கு வலியே வராமலும் இருக்கலாம் ...


இதுல இருக்கிற  சேலஞ்ச்  .... எப்ப வலி  வரும்,  எவ்ளோ  நாள் இருக்கும்னு , டேப்லெட்டே எடுத்துக்கிட்டாலும் எப்ப போகும்னு சரியா சொல்ல முடியாது ....


இந்த மாதிரி அடிக்கடி வலிக்கிறதால உடம்பு ரொம்ப சோர்வா இருக்கும் எந்த வேலையும் சுறுசுறுப்பா  செய்ய முடியாது .... எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது .... இதனால உன்னோட பர்சனல் லைஃப்  ,அஃபீஸியல் லைஃப் ரெண்டும் பாதிக்க சான்செஸ் இருக்கு.... ...


 மத்தபடி உயிருக்கெல்லாம் எந்த ஆபத்தும் கிடையாது ....  இன்ஃபாக்ட் உன் பாடி ஆர்கன்ஸ் எல்லாம்  எந்த டேமேஜும் இல்லாம  நல்லாவே இருக்கும் .... ஹெல்தி ஃபுட் , டயட்  எக்ஸர்சைஸ்னு பர்ஃபெக்ட்ஆ  ஃபாலோ பண்ணா நாளடைவுல  இந்த வலி மியூட் ஆகவும் சான்செஸ் இருக்கு ..


இன்னொரு விஷயத்தையும் இப்பவே சொல்லிடறேன்... சில சமயம் மாத்திரை சாப்ட்டும் தாங்க முடியாத  வலி  இருக்கும் போது சூசைட் பண்ணிக்கலாமானு கூட உனக்கு தோணும்  ...


சப்போஸ் நீ அப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு வை , அதுல அதிகம் பாதிக்கப்பட போறது உன் ஹஸ்பண்டும் உன் இன்-லாசும் தான் ... ஏன்னா  உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம் கூட ஆகாததால மத்தவங்க பார்வையில தேவையில்லாத சந்தேகம் அவங்க மேல தான் வரும் ....


உன் ஹஸ்பண்ட் ரொம்ப அட்ஜஸ்டபிள் அண்ட்  அண்டர்ஸ்டாண்டிங் டைப்பா இருந்தா ஓகே ... 


இல்லன்னா,  வாழு  , வாழ விடுங்கிற பாலிசியை ஃபாலோ பண்ணி ரெண்டு பேரும் பிரிஞ்சிடறது உங்க ரெண்டு பேருக்குமே நல்லது ....


ஏன்னா இந்த டிஸார்டர்க்கு மன நிம்மதி ரொம்ப முக்கியம் ...


நீ நல்லா படிச்சிருக்க ... நல்ல உத்தியோகத்துல இருக்க... ஃபாரின்க்கு இண்டிபெண்டன்டா ட்ராவல் பண்ணி இருக்கேங்கிறதால தான்,  எதையும் மறைக்காம  உன்கிட்ட எல்லா விஷயத்தையும்  உடைச்சி பேசறேன்...


அதோ அங்க பாரு ....( ஜன்னலுக்கு வெளியே காட்டி)  ரோட்ல ஒரு அம்மா குழந்தையை வச்சுக்கிட்டு பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கு .... அதுக்கு  வீடு கிடையாது வாசல் கிடையாது, அடுத்த வேளை சாப்பாடும் கிடையாது .... ஆனா வாழனுங்கிற எண்ணம் மட்டும்  அதிகமா இருக்கு  பாத்தியா ... அதைத்தான் அவங்ககிட்ட இருந்து நாம கத்துக்கணும் ...


நீ உன்னோட லைஃப் ஸ்டைல் சேஞ்ஜஸ்ஸ டெடிகேட்டட் டிசிப்ளினா ஃபாலோ பண்ணா, இந்த வலிய பக்கவா மேனேஜ் பண்ண முடியும் ....எல்லாமே உன் கையில தான் இருக்கு ...


இப்ப என் அக்கா பொண்ணு யுஎஸ்ல நியூட்ரிஷன் கோச்சா வொர்க் பண்றா ...  ஃபுட்,  கிளைமேட், சிச்சுவேஷன்னு  எது தனக்கு வலிய டிரிக்கர் பண்ணுதுன்னு சரியா கண்டுபிடிச்சு அதை மட்டும் அவாய்ட் பண்ண கத்துக்கிட்டா ... இப்ப அவ நிறைய பேருக்கு மோட்டிவேஷனா இருக்கா ....


நம்மள மத்தவங்க  வானிங்கா பார்க்கணுமா...... .... இல்ல ரோல் மாடலா பார்க்கணுமான்னு நாம தான் டிசைட் பண்ணனும் .... " 


என்றவரின் பேச்சில் சிறிது தன்னம்பிக்கை பிறக்க, குளம் கட்டியிருந்த கண்களை துடைத்துக் கொண்டாள் நாயகி .


பிறகு  ஊசி மூலம் வலி நிவாரணையை செலுத்தி,  ஒரு அரை மணி நேரம் அவளை ஓய்வெடுக்க வைத்தவர்  ,ஒரு வழியாக 50 சதவிகித வலி குறைந்ததும்,


"இப்ப நீ  வீட்டுக்கு கிளம்பலாம்  ... இதான் என்னோட பர்சனல் நம்பர் ஏதாவதுன்னா ஃபோன் பண்ணு .... சொன்னதை எல்லாம் ஞாபகம் வச்சுட்டு ஃபாலோ பண்ணு.... இதெல்லாம் ஒரு விஷயமே இல்லன்னு தோணிடும் ... சரியா ..." 


என்றவரிடம் அவள் நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பும் பொழுது தான்...  அந்த நோயின் மிக முக்கியமான அதே சமயத்தில்,  அரிதாக வரக்கூடிய ஒரு அறிகுறியை சொல்லாமல் விட்டு விட்டோமே என்று அவருக்குத் தோன்ற, உடனே அதனை மென்று முழுங்கினார். 


ஏற்கனவே  நோயின் தாக்கத்தை , அவளது வயது,  அனுபவத்தை  மீறி அவள் அறிந்து கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் என்பதால் , சொல்லியாகிவிட்டது ... மேலும் அந்த அரிதாக வரக்கூடிய அறிகுறியையும் சொல்லி அவளை பயமுறுத்த மனம் இல்லாமல் 


"ஆல் தி பெஸ்ட் ...." என்று வழி அனுப்பி வைத்தார் .


மதிய நேரம் கடந்தே, டாக்ஸியில்  வீடு வந்து சேர்ந்தாள். 


நல்ல வேளையாக தந்தை  வீட்டில் இல்லாததால்,  தளர்ந்த நடையில் படியேறி அறைக்கு வந்தவளுக்கு  மருந்தின் உபயத்தால் உறக்கம் கண்களைச் சொக்க, அப்படியே உறங்கிப் போனாள்.


மாலை 7 மணிக்கு மேல் வீடு திரும்பிய அம்மையப்பன்,  திருமணத்திற்கு சென்று விட்டு வந்த களைப்பில் மகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணி ,சந்தானம் வீட்டிலிருந்து கொடுத்து அனுப்பிய இட்லியை,  அவளது அறைக்கே கொண்டு வந்து கொடுக்க,  முதலில் மறுத்தவள் பிறகு மாத்திரையை உட்கொள்ள வேண்டும்  என்ற எண்ணத்தில் ,  ஒரு இட்லியை மட்டும் உண்டு விட்டு,  சிவகங்கையில் இருந்து திரும்பும் போதே உடல்நிலை சரி இல்லாமல் போனதால் வரும்  வழியில் மருத்துவரை சந்தித்து விட்டு வந்ததாக பொய் உரைத்து விட்டு,  அறையிலேயே  முடங்கிப் போனாள்.


வாழ்க்கையே சூனியமாகிவிட்டது போல் மெது மெதுவாக உணர தொடங்கினாள் ..


சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்று எண்ணியே மருத்துவமனை சென்றவளுக்கு, மருத்துவர் சொன்ன தகவல்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க,  அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துப் போனாள்....


அவளது கண்கள் ஓயாமல் கண்ணீர் சிந்த தொடங்கின....


உள்ளம் ரணமாய் கொதித்தது  ....


வாய்விட்டே  ஓ வென்று கதறி அழுதாள்....


மணித்துளிகள் பனிக்கூழாய் கரைந்தன..


ஏன் இப்படி ஒரு வியாதி வர வேண்டும்....

அதுவும் இப்பொழுது ஏன் வர வேண்டும் ...


நான்கு மாதத்திற்கு முன்னரே வந்திருந்தால்,  என் நாயகனின் வாழ்வாது தப்பித்திருக்குமே...... ...


என்றெல்லாம் எண்ணி மருகினாள்...


அரை மணி நேர அழுகை ஒருவித ஆசுவாசத்தை தர, இனி தன்  வாழ்க்கை வலியோடு தான் பயணிக்கும் என்று உறுதியான நிலையில், கர்மாவை நம்புபவள் என்பதால், வந்த  வியாதியை ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டாள் , ஆனால் மரணப் படுக்கையில் இருக்கும் தாய் , தன் மழலையின்  எதிர்கால வாழ்வை எண்ணி வருந்துவது போல்,  கணவனின் எதிர்காலத்தை பற்றிய கவலை  அவளை ஆட்கொள்ள செய்வதறியாது திணறி போனாள் ...



ஆருயிர் தோழன் ..


 அருமையான காதலன் ...


ஆகச் சிறந்த  கணவன்  ....


மணம் முடிக்க காத்திருக்கும் ஒவ்வொரு மங்கையரும் எதிர்பார்க்கும் கணவனுக்கான சாமுத்திரிகா லட்சணம் .....

அவளவன் ....


திருமணத்திற்கு பின்பான இந்த சொற்ப நாட்களில்,  அவளைத் தோழியாக, காதலியாக, மனைவியாக ஏன் அவனின் ராணியாகவே பலமுறை உணரச் செய்திருக்கிறான் ...


எந்த உறவுகள் இடத்திலும்  அவளை விட்டுக் கொடுத்தேயில்லை ....


அவளுடைய எந்த ஆசைக்கும் தடை விதித்ததும் இல்லை ,  மாறாக அதை நிறைவேற்றவே உறுதுணையாய் இருந்திருக்கின்றான் ....


அவளை, அந்த மன்மதன் மனைவியாய் மங்கையாய் எண்ணி கழித்த மணித்துளிகளை காட்டிலும், மழலையாய் கொஞ்சி மகிழுந்த தருணங்கள் தான் அதிகம்.... ...


தாயின் கருவறை கொடுத்த கதகதப்பும், தந்தையின் அரவணைப்பையும், தன் ஒற்றை அணைப்பில் ஒரு சேர உணர்த்த 

அவன் ஒருவனால் மட்டும் தான் முடியும் ...


மொத்தத்தில் அவளை அவளாகவே ஏற்றுக்கொண்டு கொண்டாடி தீர்த்த அந்த உன்னதமான உயரிய ஆண் மகனுக்கு என் போன்ற ஒரு துணை இனி தேவையா ....????   என மனம் கேள்வி எழுப்ப ,


தேவையில்லை .... என்ற பதிலை அதே மனம் அடித்துச் சொல்ல,  உடனே அதனை ஏற்றுக் கொண்டு,  நடக்க வேண்டியதை திட்டமிடத் தொடங்கினாள்.


மருத்துவர் சொன்னது போல்  அவனது அன்பை அவள்  பரிசோதிக்க விரும்பவில்லை.... ....அதற்கான அவசியமும் அவளுக்கில்லை  ...


சுருங்கச் சொன்னால்,  அவளுக்கு யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் ஏன் தன் எதிர்காலத்தை பற்றி கூட  கவலையில்லை ..


கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் அவளுக்கு அவனது நாயகனின் எதிர்காலம் பற்றிய கவலை தான் ...


பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருப்பவனின் பாதத்தில், பாறையாய் மாறி அவன் பயணத்தை பாழாக்க  அவள் விரும்பவில்லை ...


திருமணத்திற்கு அடிப்படையே தாம்பத்யம் தான் ....  முதலுக்கே மோசம் என்பது போல்,அந்த அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்ட நிலையில்,  இனி தன்னவனின் இனிமையான வாழ்விற்கு  தடை கல்லாக இல்லாமல் ஒதுங்கி விடுவது தான் நல்லது 

என்ற முடிவை எடுத்தாள் ....


ஆனால் அவளது காதல் கொண்ட மனமோ அவனை முதன்முதலாய் சந்தித்ததில் இருந்து கடைசியாக கேட்ட அவனது குரல் செய்தி வரை அனைத்தையும் எண்ணிப் பார்த்து கலங்கியது ...


கணவனின் மீது கட்டுக்கடங்காத காதல் இருந்து என்ன பயன் ....


அதனை அனுபவித்து வாழ்வதற்கு,

ஆரோக்கியம் வேண்டாமா ....


அந்த பாக்கியம் தான் தனக்கு  இல்லாமலே போய்விட்டதே....


பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத தன் காதலை காட்டி அவனை கட்டி நிறுத்துவதை  காட்டிலும் , தள்ளி நின்று அவனை மனைவியோடும் மழலையோடும் ரசிப்பது தான்,  அவன் மீது வைத்திருக்கும் ஆகச்சிறந்த காதலுக்கான அடையாளம் 

என்றெண்ணியவள்,  எடுத்திருக்கும் முடிவை, திடமான மனநிலையோடு  கலங்காமல் அவனிடம் எடுத்தியம்பவும், ஏற்ற இறக்கங்களோடு எடுத்துரைக்க  ஒத்திகை பார்க்கவும், குறைந்தபட்சம் 48 மணி நேரமாவது தேவைப்பட்டதால்  அலைபேசியை அணைத்து வைத்தாள். 


ஆனால் அவளவனோ தாய் மண்ணை மிதித்த மறுகணமே அவளைத் தேடி வந்து இன்ப அதிர்ச்சியை கொடுக்க, தன்னை கட்டுப்படுத்த முடியாமல்   மதகு உடைந்த கண்மாயாய் மருத்துவர் சொன்ன தகவல்களை மட்டும் சொல்லிவிட்டு  கலங்கி, கதறி விட்டாள் பெண். 





கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஒரு கணம் உலகமே தலைகீழாய் சுழல்வது போல் தோன்றியது .....


இது கனவல்லவே என்று ஒரு மனமும்,

இது கனவாக இருந்துவிடக் கூடாதா ....

என்ற நப்பாசையில் மறு மனமும் மாறி மாறி சிந்தனையில் மூழ்க,  மனம் ஒடிந்து போனான் நாயகன்.


எளிதில் உணர்ச்சிவசப்படாதவன்,  எச்சூழ்நிலையிலும்  பொறுமையை கையாளுபவன்  என்றெல்லாம் ,அடைமொழி வாங்கியே பழக்கப்பட்டவனுக்கு,  முதன் முறையாய் வாய் விட்டு கதறி அழ வேண்டும் போல் தோன்றியது ....


அவனது நாயகி லேசாக கண் கலங்கினாலே  உள்ளுக்குள்  கதறி விடுவான் ....


ஆனால் இன்றோ , வலி தாங்க முடியாமல்,  வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடு அவள் துடித்து அழுதது,  அவன் இதயத்தில் ஆயிரமாயிரம் ஈட்டிகளை அள்ளி வீசியது போலான ரணங்களை  கொடுக்க,  துக்கம் தொண்டையை அடைக்க,  கலங்கிய கண்களை தன் கண்மணி இடம் காட்டிக் கொள்ளாமல், இமை சிமிட்டி விழி நீரை மறைத்தவன் மெல்ல நெருங்கி அவளது கேசத்தை கோதி


"பட்டும்மா....  இங்க பாரு ....  இப்ப எல்லாம் மெடிக்கல் சயின்ஸ் ரொம்ப அட்வான்ஸ்டா வளர்ந்திருக்கு டா.... அவங்க சொன்னத மட்டும்  நினைச்சு வருத்தப்படாத... நாம இன்னும் ரெண்டு மூணு டாக்டர்ஸ் கிட்ட செகண்ட் ஓப்பீனியனுக்கு போலாம் ..... இன்னிக்கே...."


என்றவனின் பேச்சை இடைவெட்டி,


"கைய எடுக்கறீங்களா ....  ரொம்ப வலிக்குது...... ..... ஒரு பட்டாம்பூச்சி  மேல வந்து உட்கார்ந்தா கூட என்னால வலி தாங்க முடியல ..... ஃபேன் காத்து கொஞ்சம் வேகமா பட்டாலே  உடம்பெல்லாம் நடுங்குது ....  ப்ளீஸ்.... எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடுங்க .......இனிமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல  .....  ஐ வாண்ட் .......டி.... டிவோர்ஸ் ....." 

என பெருங்குரலில் சொல்லிக்கொண்டே  அவள் தேம்பி அழ,  உருக்குலைந்து போனான்  நாயகன்.

அவள் சொன்ன உடல் ரீதியான பிரச்சனையை காட்டிலும் , கடைசியாய் அவள் விட்ட வார்த்தைகள் தான் அவனை அளவுக்கு அதிகமாக அதிர்ச்சிக்கு உள்ளாக்க,  தலையைப் பற்றிக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அப்படியே சரிந்தமர்ந்தான்.


வந்திருக்கும் நோய்,  உடலைக் காட்டிலும்  மன ரீதியாக அவளை வெகுவாக பாதித்திருக்கிறது ....  என புரிந்து கொண்டான்... ...


அதோடு , தன் வலிக்காக அவள் விவாகரத்து கேட்கவில்லை ....  அவனது எதிர்கால வாழ்க்கைக்காக  விவாகரத்து கேட்கிறாள் என்பதை கண நேரத்தில் புரிந்து கொண்டவன், இனி  தர்க்கம் செய்வதோ அறிவுரை கூறுவதோ  நன்மை பயக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டு ,அங்கிருந்த தண்ணீர் ஜாடியில் இருந்து நீரை எடுத்து பருகி, வேதனையை விழுங்கியபடி


"மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எங்க ...."  என்றான் கரகரப்பான குரலில். 


"நான் ஒன்னும் பொய் சொல்லல .... அந்த டேபிள்  மேல எல்லா ரிப்போர்ட்சும்  இருக்கு .... எடுத்து பாருங்க ...." என்றாள் மென்மையாய். 


இருவரும் ஒரு சேர உணர்ச்சிவசப்பட்டால் தான்  தர்க்கம்  வரும் ...


சண்டைக்கும் சத்தத்திற்கும் அது நேரமல்ல,  என்பதை மனதில் வைத்து , காரியத்தில் இறங்க முடிவெடுத்து , மருத்துவர் அறிக்கைகளை ஆழ்ந்து நோக்கத் தொடங்கினான். 


அவள் சொன்னது போல் ,  அவளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைகள் அனைத்தும் முந்தைய தினத்தில் நடந்தேறி இருப்பது தேதியின் மூலம்  தெரிய வர,  அதைத் தன் கைபேசியில் படம் பிடிக்கத் தொடங்கினான்.


அவனது செய்கையை விரக்தியாய்  பார்த்தவள் , அவன் மனதை அறிய 


"நல்ல வேளையா நான் ப்ரக்னண்டா இல்ல ....  ப்ரக்னண்டா இருந்திருந்தா டிவோர்ஸ் கேட்க ரொம்ப யோசிச்சி இருப்பேன் .... இப்ப  ஈஸியா டிவோர்ஸ் பண்ணிக்கலாம் ..."


அவன் அமைதியாய் அவளை பார்க்க ,


"நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்னும்  நல்லவ கிடையாது ... நான் ரொம்ப செல்ஃபிஷ் தெரியுமா ... சப்போஸ் உங்களுக்கு இந்த மாதிரி ஒரு வியாதி வந்திருந்தா,  நிச்சயமா நான் உங்கள டிவோர்ஸ்  பண்ணிடுவேன் .... "


" ம்மஹும்.... ம்ம்ம்ம்...."  என்றான் ஏதோ கதை கேட்பது போல் தலை அசைத்து. 


"நீங்க நினைக்கிற மாதிரி லைஃப் ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல .... தினம் தினம் கணம் கணம் வாழணும் ...

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல நீங்க  சாதாரண கோவப்பட்டா  கூட , இந்த மாதிரி வியாதி இருக்கிற பொண்டாட்டிய கடைசி வரைக்கும் தூக்கி சுமக்கணுமேங்கிற சலிப்பைத் தான் அப்படி வெளிப்படுத்தறீங்களோனு எனக்கு தோணும் ...


நித்தம் நித்தம் வலி என்னை கொன்னுக்கிட்டு இருக்கும் போது  ஏதாவது ஒரு வகையில உங்களை காயப்படுத்திடுவேனோனு பயமாவும் இருக்கு ...


உங்களோட வாழ்ந்த  சந்தோஷமான நினைவுகளோட பிரியணும்னு ஆசைப்படறேன் ....


எப்படிப் பார்த்தாலும் மத்தவங்க என்னை பார்த்து பொறாமைப்படற அளவுக்கான ஒரு வாழ்க்கையை தான் இதுவரைக்கும் உங்களோட  வாழ்ந்திருக்கேன் ....


எனக்கு அதுவே போதும் ....


ஏற்கனவே உங்க அம்மா,  பாட்டி எல்லாம் நான் மாசமாகலங்கிற வருத்தத்துல இருக்காங்க ..... 


இப்ப நான் பொண்டாட்டிங்கிற போஸ்ட்க்கே லாயக்கி இல்லன்னு தெரிய வந்தா, உங்க மேல  இன்னும் கோவப்படுவாங்க ...


ஏதோ இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ வாழ்வுனு இருந்தா கூட பரவாயில்ல... இருக்கிற வரைக்கும்,  உங்கள பாத்துகிட்டே இருந்துட்டு போயிடலாம்னு தோணியிருக்கும் ....


ஆனா இந்த நாசமா போன வியாதி, அப்படி கூட எனக்கு விடுதலை கொடுக்க தயாரா இல்ல....


கடைசி வரைக்கும் வலி , வலி, வலினு வலியோடவே வாழ்ந்து சாகணும்னு நினைக்கும் போது , ரொம்ப பயமா இருக்கு ....


மாசத்துல எவ்ளோ நாள் இப்படி வலில துடிப்பேன்னு தெரியாத நிலையில,  உங்க வாழ்க்கையை பலிகடா ஆக்குறது தப்பு ...


இதான் என் கர்மா... நான் அனுபவிக்கனும்னு இருக்கு... நீங்க எதுக்காக என் கூட அனுபவிக்கணும் ....


நான் உங்களுக்கு எந்த வகையிலும் இனி பயன்பட மாட்டேன் .....


ப்ளீஸ் .... நாம டிவோர்ஸ் பண்ணிக்கிறது தான் நல்லது ..... "


அவள் குரல் நன்றாகவே உடைந்தது ...


உடனே தலையை குனிந்து கொண்டாள் ....


கேட்டுக் கொண்டிருந்தவனின் இதயம் கதறி துடித்தது ....


இப்படி ஒரு நிலைமை எந்த ஒரு காதல் கணவனுக்கும் வரக்கூடாது என்று எண்ணிக் கொண்டான் .


இருவருமே உணர்வுகளின் உச்சத்தில் இருந்தனர் ....


ஒரு வார்த்தை பேசினாலும்,  உணர்வுகளைக் கொட்டி விடும் அபாயம் இருந்ததால்,  சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.


அவள் அவ்வளவு பேசியதற்கு காரணம் அவன் மனதில் இருப்பதை அறிந்து கொள்வதற்காகத்தான் ....


ஆனால் அழுத்தக்காரன்,  வழக்கம் போல் தன் அமைதியால் , நிலைமையை சமூகமாக கையாண்டு விட,  அவன் மனதில் இருப்பதை அறிந்து கொள்ள நினைத்து மீண்டும், 


"நான் அவ்ளோ சொன்னேன்....நீங்க ஒண்ணுமே சொல்லல ...."


இம்முறையும்  அவன் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டு அவளை வாஞ்சையாய் பார்க்க, 


" நீங்க அமைதியா இருந்தா, நானும் அமைதியாய் இருப்பேன்னு நினைக்காதீங்க..... .... எனக்கு டிவோர்ஸ் வேணும் ...."  என்றாள் தளர்ந்த குரலில். 


அதற்கும் பதில் இல்லாமல் போக,  ஓரிரு கணத்திற்குப் பிறகு ,


" எனக்கு தூக்கம் வருது ...."  என்றாள் பலகீனமாய். 


" நல்லா தூங்கு ....."  என்றான் அக்கறையாய். 


" அப்ப டிவோர்ஸ் ...."


"பண்ணலாம்... பண்ணலாம் .... வக்கீல் எல்லாம் போய் பார்க்கணும் இல்லயா .... நீ இப்ப தூங்கு ... அத அப்புறம் பார்க்கலாம் ..."


இலவம் பஞ்சு தலையணையில் தலையை வைத்து , மெதுவாக சரிந்து படுத்து அவள் கண்களை மூட,  சில மணித்துளிகள் உறங்குபவளையே உற்றுப் பார்த்து அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதை அறிந்து கொண்டதும்,  தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு கீழ் தளத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தவன்,  அவளது மருத்துவ அறிக்கைகளை ஸ்ரீனிக்கு whatsappபில்  அனுப்பிவிட்டு,  அவனைத் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னான்.


விஷயம் அறிந்ததும் அதிர்ந்து போன ஸ்ரீனி,  உடனே தன் தமக்கை சுமித்ராவை தொடர்பு கொண்டு,  ஸ்ரீயின் மருத்துவ அறிக்கைகளை பகிர்ந்து, தகுந்த மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டினான். 


அடுத்த அரை மணி நேரத்தில் , சுமித்ராவும் மற்றொரு வாத நோய் நிபுணரும் , whatsapp வீடியோ அழைப்பில் வீராவை தொடர்பு கொண்டு,  அனைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.


" உங்க வைப்ப ட்ரீட் பண்ணின டாக்டர்  சுலோச்சனா மேடம், பைஃப்ரோமயாலஜி எக்ஸ்பர்ட்ன்னு சொல்லலாம் ... அவங்க சரியாத்தான் டைகனோஸ் பண்ணியிருக்காங்க ...." 

என்ற அந்த வாத நோய் நிபுணர் , அனைத்தையும் விளக்கிவிட்டு ,


" சமீபத்துல ஏதாவது அவங்க மனச பாதிக்கிற மாதிரியான இன்சிடென்ட் நடந்ததா ...." 


" ஏன் டாக்டர் அப்படி கேக்கறீங்க ....." என்றவனுக்கு தன் தாய் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி தன் மனைவியை திட்டியதாக தந்தை சொன்ன நிகழ்வு அழையா விருந்தாளியாய்  மனதில் வந்து போக,


" பைஃப்ரோமயாலஜி இருக்கிறவங்களுக்கு,  மனச பாதிக்கிற மாதிரியான இன்சிடென்ஸ் ஏதாவது நடந்தா  இப்படித்தான் அவங்க உடம்பு ரெஸ்பான்ட் பண்ணும்  ...."  என்றார். 


" இதுக்கு வேற மெடிசனே இல்லையா டாக்டர்.....   ...."


" அலோபதில பெயின் கில்லரை  தவிர வேற எதுவும் இல்லப்பா ..... ஆனா ஆயுர்வேதிக்ல இருக்கு .... கேரளால ஆயுர்வேதிக் ஹீலிங் ஆசிரமம்னு இருக்கு .... அங்க கூட்டிக்கிட்டு போங்க நிச்சயம்,  நல்ல மெடிசின்ஸ் தருவாங்க சீக்கிரமே குணமாகும் .... நான் அட்ரஸ ஷேர் பண்றேன் ...." என்றவருக்கு நன்றியை உதிர்த்துவிட்டு,  தன் தமையனை தொடர்பு கொண்டான் .


தன் மனைவியின் உடல்நிலை குறித்த தகவல்களை,  தன் தந்தையிடமோ,  அல்லது மாமனாரிடமோ பகிர அவனுக்கு மனமில்லை... ....


இருவருமே நல்லவர்கள் தான் என்றாலும்,  

உணர்ச்சிவசப்படுபவர்கள் ....


அதுமட்டுமல்லாமல் பொன்னம்பலம் அறிய நேர்ந்தால்,  அகல்யாவையும் அன்புவையும் சாடியே தீர்த்து விடுவார் .... என்பதை எல்லாம் கருத்தில் கொண்டே,  தன் தமையனுக்கு மட்டும் தெரிவிக்க எண்ணினான் .


விஷயம் அறிந்ததும்,  அதிர்ந்து போன சத்யன்,  சாலையோரத்தில்  ஸ்ரீயிடம் இரண்டு கயவர்கள்  சங்கலி பறிப்பில் ஈடுபட்டதை விலாவாரியாக சொல்ல,


" இது எப்பண்ணே நடந்தது ...." 


என்றவனுக்கு,  ஒருவேளை இந்த அதிர்ச்சி தான் அவளது வியாதியை தட்டி எழுப்பியதோ.... என்ற கேள்வியும் எழ,


"போன வியாழக்கிழமை நைட் பாண்டி....    போலீஸ் கம்ப்ளைன்ட் கூட கொடுத்துட்டு தான் வந்திருக்கேன் .... நாளைக்கு ஃபாலோ பண்ணா தெரிஞ்சிடும் ...." என்றான் சத்யன்.


அவனிடம் தன் மனைவியின் மருத்துவத்திற்காக,  கேரளா பயணப்படவிருப்பதை வீரா சொல்ல,


"அவங்க அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்றது நல்லதுன்னு தோணுது பாண்டி ...."


" இல்லண்ணே..... இப்போதைக்கு வேணாம்னு முடிவு எடுத்திருக்கேன் ...."


" சரி ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளு .... நான் கிளம்பி வரேன்... சரியா ... நான் உன் அண்ணிகிட்ட  கூட இந்த விஷயத்தை சொல்ல போறதில்ல....  எல்லாம் சரியாகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம் ...." 

என சத்யன் அழைப்பை முடிக்கவும், திலக்கிடமிருந்து வீராவுக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.


ட்ரூ காலரில் புதிய பெயரை கண்டு யோசித்துக் கொண்டே வீரா அழைப்பை எடுத்ததும்,


" இஸ் திஸ் அதிவீரராம பாண்டியன் ...."


"எஸ் ... ஸ்பீக்கிங் ...."


" திஸ் இஸ் திலக் ...." 

என்றான் திலக் எதிர்முனையில்.


ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

Dear Friends,

Happy Valentine's day to all.....

With love

Priya Jagannathan
















































































 



  





















  

  









 





























.







Comments

  1. Omg 😟 sri pavam sis. Ethukaga avaluku intha disorder koduthutinga. Unexpected call from thilak, atlast Ram knows about all the incidents happened to his pattu. Seekirama sri cure agidanum. Happy valentine's day to my sweet Akka. Love you always. Take care

    ReplyDelete
  2. Life la true love iruntha ellam sathiyamagum... Kandipa nala irupanga...

    ReplyDelete
  3. Ohhh my god...! Prob rana kita irundhu varum nu partha ipdiya idhuvum rana vala dhan...epdiyo sri seri agita podhum...seri agiduva ila priya ji??? surprise ud sunday post panunga priya ji plzzz

    ReplyDelete
    Replies
    1. sorry dr... type panna neramey illa da... thanks for ur support and love dr

      Delete
  4. Sree Kerala treatment ku ok soluvala, ranaa pathi thilak veera kita soli aware panuvara, manda kodiyuthu sisy... Unga love stories padikum pothu che enama love panranga care panra affectionated ah irukanga namalum irukanun thonum but avanga hard situation atha kadanthuvarathula avanga padura pattuku namaku ithukea pothum intha mari situation namala handle pandrathu rombo kastam pa apdinu iruku sisy...

    ReplyDelete
    Replies
    1. s...well said ma.... hard times only will showcase the true love dr..

      Delete

Post a Comment