அத்தியாயம் 134
என்ன தான் தப்பித்து வந்து விட்டாலும், அந்த அதிர்ச்சியில் இருந்து அவ்வளவு எளிதாக அவளால் மீளவே முடியவில்லை.
உடலும் உள்ளமும் ஒருசேர நடுங்கிக் கொண்டிருக்க, கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட, இரவு நேர தனித்த ஆட்டோ பயணத்தில் அழுவது, முந்தைய இரவு சம்பவம் போல் புது பிரச்சனையை இழுத்து விட்டுவிடும் என்ற எண்ணம் கண நேரத்தில் உதயமாக, உடனே எங்கோ பார்ப்பது போல் இடவலமாக தலையை திருப்பி, ஓட்டுநர் அறியா வண்ணம் கண்ணீரை துடைத்து கொண்டாள்.
என்ன தான் தன்னம்பிக்கை , தைரியம் உள்ள பெண்ணாக இருந்தாலும் , சிறுவயதிலிருந்தே நல்லொழுக்கம் என்னும் கண்ணுக்குத் தெரியாத லட்சுமண ரேகையை தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்டு வளர்ந்தவளுக்கு சற்று முன் நடந்த சம்பவம், மரண அச்சத்தை ஏற்படுத்திருக்க, மனம் ஒடிந்து போனாள் மாது .
ஆனால் இவ்வளவு அதிரிப்புதரியிலும் ஆறுதலுக்குரிய விஷயம் என்னவென்றால் , கடந்த இரு தினங்களாக கணவனோடு மேற்கொண்டிருந்த சூழ்நிலை மௌன விரதம் அன்று இரவோடு முடிவுக்கு வரவிருப்பது தான் அவளுள் ஒருவித திடத்தை ஏற்படுத்தியிருக்க , கடந்த இரு தினங்களாக தான் எதிர்கொண்ட அனைத்து பிரச்சனைகளையும் கணவனிடம் பகிர்ந்து, பணியை உடனடியாக ராஜினாமா செய்வது குறித்தும் , மறுதினம் மேற்கொள்ளவிருக்கும் மதுரை பயணம் குறித்தும் விவரமாக விவாதித்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் மூழ்கியவள் அதனை செயல்படுத்தும் விதத்தை தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே , ஆட்டோ வீட்டை அடைய, ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு, வீட்டிற்குள் நுழைந்தவளை பார்த்து
"ஏய் பிரியா... என்ன ஆச்சு , ஏதோ பேய் அறைஞ்ச மாதிரி முகம் எல்லாம் சிவந்திருக்கு..." என்றார் சுந்தராம்பாள் ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி.
"அ...அது வந்து ...ஒன்னுமில்ல பாட்டி .... கொஞ்சம் தலை வலிக்குது அதான்...."
"இந்த நாசமா போற வேலையை என்னைக்கு விடறயோ, அன்னைக்கு தான் உனக்கு இந்த தலைவலி எல்லாம் போவும் ..." வெடுக்கென்று பெரியவள் மொழிய, அமைதியாகிப் போனாள் சின்னவள்.
அவள் எடுத்திருக்கும் முடிவைச் தற்போது பகிர்ந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார் , ஆனால் அதே நேரத்தில் அதற்கான காரணத்தையும் அவள் பொருத்தமாக சொல்லியாக வேண்டும் ....
இப்போது இருக்கும் மனநிலையில் பொய்யான காரணத்தை இட்டுக்கட்டி கூட சொல்லும் நிலையில் அவள் இல்லாததால், அவரது கூற்றுக்கு பதிலாய் அவள் மௌனம் சாதிக்க, உடனே
"பிரியா ... சீக்கிரமா போய் கை கால் கழுவிகினு சாப்பிட வா ...." என்றார் அகல்யா லேசான கடுகடுப்போடு.
அவள் இருந்த மனநிலையில், அவரது முக பாவமோ பேச்சோ , அவளது சிந்தையை சற்றும் எட்டாமல் போக விட்டால் போதுமென அறையை அடைந்தவளுக்கு, பசியும் இல்லை.... .... படபடப்பும் அடங்கவில்லை...
சற்று நேர ஓய்வுக்காக உடல் கெஞ்சியது ...
ஆனால் அவள் எடுத்திருக்கும் முடிவை செயலாற்ற வேண்டும் என்றால், அவள் கீழ் தளம் சென்றே ஆக வேண்டும் என்பதால், துரிதமாக புத்துணர்வு பெற்று வேறு உடைக்கு மாறி உணவருந்தச் சென்றாள்.
ரெண்டு இட்லியை தட்டிலிட்டு , சட்னியின் உப்பு உறைப்பு கூட தெரியாமல், வேகவேகமாக விழுங்கி முடித்தவள் இரவு நடையை முடித்துக் கொண்டு தோட்டத்திலிருந்து தலைப்பட்ட பொன்னம்பலத்திடம், உடன் பணியாற்றும் கயல்விழியின் திருமணம் சிவகங்கையில் நடக்கவிருப்பதை சொன்னதோடு அவள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்த திருமணப் பத்திரிகையையும் காட்டி, அதில் கலந்து கொள்வதற்காக மறுநாள் காலையே மதுரைக்கு பயணப்படவிருப்பதாக சொன்னாள்.
"சரிம்மா ... போய்ட்டு வா .... மதுரைல இருந்து சிவகங்கை ரொம்ப பக்கம் தான்... அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டயா பாண்டிக்கும் விஷயம் தெரியுமில்ல ..."
என பொன்னம்பலம் இயல்பாய் வினவ ,
அப்போது தான் அந்த இரண்டையும் தான் செய்யவே இல்லை என்ற எண்ணமே உதயமாக, கண நேரத்தில் சுதாரித்தவள் ,
"உங்ககிட்ட சொன்னதுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லலாம்னு இருக்கேன் மாமா ... போன வேலை ஏறக்குறைய முடிஞ்சு போச்சுனு ராம் சொன்னாரு .... இந்த ஞாத்திக்கிழமையே கூட வந்தாலும் வந்துடுவாரு மாமா... " என்றாள் தடுமாறி.
"ஓ அப்படியா நல்லதும்மா.. கேப் அரேஞ்ச் பண்ணட்டும்மா...???" என்ற கேள்வியில் ஒரு கணம் யோசித்தவள்,
"மாமா அன்னைக்கு நாங்க ஊட்டிக்கு போக ஒரு கேப் அரேஞ்ச் பண்ணிங்களே .... அதே டிரைவர அரேஞ்ச் பண்ணுங்க .... அவர் பொறுமையா பொறுப்பா ஊட்டிக்கு கூட்டிக்கிட்டு போனாரு .... அது இல்லாம அந்த கேப் ஓனர் உங்க ஃபிரண்டு வேற .... எந்த பயமும் இல்லாம நான் நிம்மதியா ட்ராவல் பண்ணலாம் .... " என்றாள் மேம்போக்கான காரணங்களை அடுக்கி.
முந்தைய இரவு வீதியில் நடந்த பிரச்சனை, இன்று அலுவலகத்தில் நடந்த பிரச்சனை எல்லாம் சேர்ந்து அவளை அளவுக்கு அதிகமான அச்சத்தில் ஆழ்த்தியிருந்ததால், ஓட்டுனர் சமீர் போன்று நன்கு அறிந்த, சுயநலம் இல்லாத, நேர்மையான மனிதரோடு பயணிப்பது தான் தன்னுடைய தற்போதைய சூழ்நிலைக்கு நல்லது என்று எண்ணியே அப்படி ஒரு முடிவுக்கு வந்து அவள் மொழிய ,
"சரிம்மா அரேஞ்ச் பண்றேன் ... கல்யாணம் முடிஞ்சதும், எப்பமா ஊருக்கு திரும்பற ...."
"வர செவ்வாய்க்கிழமை மாமா ..."
"ஆபீஸ்ல லீவு சொல்லிட்டியா ..."
"சொ... சொல்லிட்டேன் மாமா..." என்றாள் தடுமாறி.
அவள் இன்றோடு வேலையை விடப் போவது உறுதி என்றாலும், அதனை அவரிடம் அப்போதே சொல்ல மனமில்லை ...
கணவன் வரட்டும் .... அவன் மூலமே இவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு , மதுரைக்கு செல்ல மட்டும் இரு காரணங்கள் இருந்தன ..
ஒன்று ,
கயல்விழிக்கு அவளது திருமணத்திற்கு வருவதாக கொடுத்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் ....
இரண்டாவது, அவள் இருக்கும் தற்போதைய மனநிலையில் கணவன் வரும் வரை, அகல்யாவின் ஏச்சுப் பேச்சுகளை தாங்கிக் கொண்டு அடக்கி வாசிப்பது மிகவும் கடினம் என்பதால், கயல்விழியின் திருமணத்தை சாக்காக வைத்தே மதுரைக்குச் பயணப்பட எண்ணினாள்.
"சரிம்மா , உசேன் பாய்க்கு போன் பண்ணி , நாளைக்கு காலையில 6 மணிக்கு வண்டி அனுப்ப சொல்றேன் ... அன்னைக்கு அனுப்பின டிரைவரையே அனுப்புங்கன்னும் சொல்றேன்..... .... சரியா " என பொன்னம்பலம் முடிக்க, அகல்யாவின் முகம் சுண்டி போனது.
தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், பயணத்திற்கான அனுமதியை தன் கணவனிடம் மட்டும் கேட்டு பெற்றது, அகல்யாவின் கோபத்தை மேலும் தூண்டி இருக்க, வெடுக்கென்று இருக்கையை விட்டு எழுந்தவர், ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை பட்டென்று அணைத்து விட்டு , தன் அறைக்குச் சென்று அறை கதவினை அடித்து சாத்த, மகளின் கோபத்தை புரிந்து கொண்ட சுந்தராம்பாள், மருமகளிடம் சுமூக உறவை நிலை நாட்ட ,
"உன் அம்மா அப்பாவ விசாரிச்சேன்னு சொல்லு பிரியா ... நல்லபடியா போய், கல்யாணத்த பாத்துட்டு, நல்லபடியா வந்து சேரு ..." என்றார் அக்கறையாய்.
"சரிங்க பாட்டி ...." என்று அவசரமாய் மொழிந்து விட்டு கணவனுடன் பேசப்போகும் ஆவலிலும், தந்தைக்கு அழைப்பு விடுக்கும் எண்ணத்திலும் நான்கு நான்கு படிகளாக தாவி அறையை அடைந்தவள், முதலில் தன் தாய்க்கு அழைப்பு விடுத்தாள்.
அடுத்த கணமே இணைப்பில் வந்த சுசிலா ,
"சொல்லு அம்மு... எப்படி இருக்க ..." என நலம் விசாரித்ததும், அவள் விஷயத்தை சொல்ல,
"அம்மு நான் இப்ப கேரளால இருக்கேன் ... நானும் உன் பெரியம்மாவும் பகவதி அம்மன் கோயிலுக்கு போக போறோம்னு ரெண்டு வாரத்துக்கு முந்தியே சொல்லி இருந்தேனே மறந்துட்டியா .... " என்ற போது தான், அவர் முன்பே கூறியிருந்தது நினைவுக்கு வர,
"ஆபீஸ் வேலைல மறந்தே போயிட்டேன்மா ...." என சமாளித்தாள் பெண்.
"நல்லவேளை .... உங்க அப்பா எங்கயும் போவல வீட்ல தான் இருக்காரு .... நான் அவருக்கு போன் பண்ணி சொல்லிடறேன் நீயும் அவருக்கு போன் பண்ணி சொல்லிடு அம்மு .... நான் வர புதன் கிழமை வந்துடுவேன்... ... நீ சமைச்சு கஷ்டப்படாத..... சந்தானம் அண்ணன் வீட்டிலிருந்து உங்க அப்பாவுக்கு சாப்பாடு வருது .... நீயும் அதையே சாப்டுக்க..." என சுசிலா முடித்ததும், மேலும் ஓரிரு விஷயங்கள் பேசி அழைப்பை துண்டித்தவள், அம்மையப்பனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல,
மகளின் வரவு மகிழ்ச்சியை தர,
"நான் எங்கனும் போவல.... வீட்லதான் இருப்பேன் ரேவதி .... பாத்து பத்திரமா வந்து சேரு ... ஏதாச்சும்னா போன் பண்ணு.." என்றார் அம்மையப்பன் அக்கறையோடு.
அழைப்பை துண்டித்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், கணவனின் அழைப்புக்காக காத்திருந்த நிலையில், திடீரென்று அலுவலகத்தில் ராணா 'மது மது' என்று கூறிக்கொண்டே அவளை அணுகிய விதம் பட காட்சிகளாய் விரிய ,ஆற அமர சிந்திக்க தொடங்கினாள் பாவை.
'ராணா ஏன் திடீர்னு மதுன்னு யாரோ ஒரு பொண்ணு பேர சொல்லி, நான் அவளை மாறியே இருக்கேன்னு என்னை நெருங்கணும்.... .....
கயல் விழி சொன்னது போல , ஆபீஸ்ல என்னை தவிர வேற யார்கிட்டயும் ராணா வழிஞ்சு பேசினதே இல்ல ... ஒருவேளை அவன் சொன்ன மது மாறியே நான் இருக்கேங்கிறதால தான் , ஆபீஸ்ல சேர்ந்த நாள்லருந்து என்னை கவனிக்கிறானோ ....
சரி ...மதுன்னு ஒரு பொண்ணு என்னை மாறியே இருந்தான்னே வச்சுப்போம் ... ஆனா ராணாவுக்கு இப்ப வயசு கிட்டத்தட்ட 40க்கு மேல் இருக்குமே ... எப்படி என்னை மாறி ஒரு பொண்ண , அதுவும் என் வயசு பொண்ண அவன் இந்த வயசுல லவ் பண்ணி இருக்க முடியும் ...
எப்பவோ காதலிச்ச பொண்ணை நெனச்சு, அவன் பேசின மாதிரியும் தெரியல ....
ஏன்னா , அவனோட எமோஷன்ஸ் எல்லாம் ரொம்ப உண்மையா இருந்தது .... ரொம்ப ப்ரெஷ்ஷாவும் இருந்தது ...
அதோட அவன் அழுததெல்லாம் வச்சு பார்த்தா, அந்த பொண்ணு உயிரோட இருக்க வாய்ப்பு இல்லனும் தோணுது ...
ஒருவேளை செத்துப்போன அந்த பொண்ணு மாறியே நான் இருக்கேன்னு , நெனச்சி தான் என்னை நெருங்கினானா ...
இல்ல அவனுக்கு ஏதாவது மனநோயா ...
ஒண்ணுமே புரியலையே கடவுளே ...
என்று குழப்பத்தில் இருந்தவளுக்கு வேறொரு சிந்தனையும் மின்னலென முளைக்க ,
"ஆ... அன்னைக்கு youtube-ல அவனோட வைஃப் மான்சியோட அவ்ளோ சந்தோஷமா இன்டர்வியூ கொடுத்தானே ....
ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்னு , ஊர் உலகமே கமெண்ட்ஸ்ல சொல்ற அளவுக்கு அந்த இன்டர்வியூ இருந்ததே ....
என் வைஃப இப்படி லவ் பண்ணேன்... அப்படி லவ் பண்ணேன்னு என்னென்னமோ கதை விட்டானே ....
அப்ப அதெல்லாம் பொய்யா ....
அவனோட வைஃப் மான்சி பக்கத்துல, டாப் சினி ஸ்டாரே நிக்க முடியாது ...அவ்ளோ அழகான வைஃப் வச்சுக்கிட்டு, ரொம்ப சாதாரணமா இருக்கற என் பின்னாடி ஏன் சுத்தணும் .....
அது மட்டுமில்ல , நீ தான் மது .... உனக்கு சிந்தி லாங்குவேஜ் மறந்து போச்சுன்னு ஓவர் எமோஷனலா என்னென்னமோ பேசினானே...... ....
அவனோட எந்த முகம் உண்மை ....
ஒரு வேளை சில பொம்பள பொறுக்கிங்க பொண்ணுங்க கிட்ட பேச்ச தொடங்க, உங்களை எங்கேயோ பார்த்த மாறி இருக்கேன்னு ஆரம்பிப்பாங்களே...
அந்த மாதிரி இவனும் , மதுன்னு ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி கதை சொன்னானோ ....
இருந்தாலும் இருக்கலாம் .....
மதுன்னு யாரோ ஒரு பொண்ண பத்தி இன்னைக்கு அவன் பேசினது உண்மைன்னா, அன்னைக்கு மான்சியோட சந்தோஷமா பேட்டி கொடுத்தது பொய்யா இருக்கணும் ....
இல்ல ... அது உண்மையாய் இருந்தா, இன்னைக்கு அவன் மதுன்னு ஒரு பொண்ண பத்தி பேசினது பொய்யா இருக்கணும் ...
எது எப்படியோ, அந்த பொறுக்கி கிட்ட இருந்து தப்பிச்சாச்சு ... இப்பவே ரிசிக்னேஷன மெயில்ல தட்டி விட்டுட்டா, இனி அவன் முகத்தை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது ...
கயல் கல்யாணத்துக்கு கூட , அவன் நாளைக்கு ஈவினிங் நடக்கிற ரிசப்ஷனுக்கு வந்துட்டு போயிடுவான்னு கார்த்திகேயன் சொன்னாரே .... நான் நாளன்னிக்கு காலைல நடக்க போற கல்யாணத்துக்கு தானே போக போறேன் ... சோ, இனிமே அவனை மீட் பண்ண வேண்டிய அவசியமே வராது ஒருவேளை ரெசிக்னேஷனுக்கு அப்புறம் சர்டிபிகேட்ஸ் வாங்கறதுக்காக ஆபீஸ்க்கு போக வேண்டிய நிலைமை வந்தா, ராம் கூட போய்க்கலாம் ...'
என்று எண்ணியவளுக்கு தெரியாது, அவன் அவளை கட்டம் கட்டி தூக்க திட்டமிட்டு இருப்பதே, கயல்விழியின் திருமண தினத்தன்று தான் என்று.
அவன் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், திருமணத்திற்கு முந்தைய தினம் நடைபெறும் வரவேற்பில் மூத்த அலுவலக ஊழியர்களோடு கலந்து கொள்வது போல் காட்டிக் கொண்டு அவர்களுடனேயே விடை பெற்று விட்டு, மறுதினம் காலையில் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு அவள் வரும் பொழுதே, வழியிலேயே சமயம் பார்த்து அவளை கடத்தி சென்று விட வேண்டும், என்ற மாபெரும் திட்டத்தைப் போட்டு வைத்துவிட்டு அல்லவா மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல் அவளது வருகைக்காக ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து கொண்டிருக்கிறான், என்று பாவம் அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.
உறக்கம் கண்களைச் சொக்க,
'ராம் ஏன் இன்னும் ஃபோன் பண்ணல ... இன்னையோட வார் ரூம் மீட்டிங் முடியுதே.........ஒருவேளை இன்னும் கண்டினியூ ஆகுதோ அதனால தான் போன் பண்ணலயோ..... எதுக்கும் இன்னும் ஒன் அவர் வெயிட் பண்ணி பார்க்கலாம் ....
அதுக்குள்ள ரெசிக்னேஷன் லெட்டரையும் ஃபிரேம் பண்ணிடலாம் ..."
என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு, ராஜினாமா கடிதத்தை தயார் செய்தாள்.
வேலையை விடுவதற்கு , தன் உடல்நிலை சரியில்லை என்பதை காரணமாக குறிப்பிட்டு இருந்தாள்.
வேலையை விடும் எண்ணம் இருந்தால், இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டும் என்பது பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைபிடிக்கும் முறையாகும்.
இல்லையென்றால் அந்த இரண்டு மாதத்திற்கு உண்டான சம்பளத்தை அறிவிப்பு கால தொகையாக கட்டினால் தான், அனுபவச் சான்றிதழ் மற்றும் பள்ளி கல்லூரி சான்றிதழ்களை பெற முடியும் என்பது விதி என்பதால், தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் இரண்டு மாத சம்பளப் பணத்தை அறிவிப்பு கால(Notics period) தொகையாக கட்டி விடுவதாகவும் அதோடு அவளுக்கு அளிக்கப்பட்ட மேலாண்மை பயிற்சிக்கு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் அதனையும் செலுத்தி விடுவதாகவும் சொல்லி, தெளிவாக ராஜினாமா கடிதத்தை தயார் செய்து முடித்தாள்.
அந்த கடிதத்தை தயார் செய்து முடிக்க, கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பிடித்த நிலையில், இன்னமும் அவளது மணாளனிடமிருந்து எந்த செய்தியும் வராமல் இருக்க, தவித்துப் போனாள்.
கணவனிடம் பேசி அவனுடைய முடிவையும் தெரிந்து கொண்ட பிறகே தயார் செய்து வைத்திருந்த மின்னஞ்சலை அனுப்பலாம் என்று காத்திருந்தவளுக்கு, நேரம் ஆக ஆக ஏமாற்றமே மிஞ்ச, அதற்கு மேல் தாமதிப்பது முறையல்ல என்பதோடு , அலுவலகத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஏதேனும் பிரச்சனை எழும் பட்சத்தில் வேலையை விட்டு விடு என்று அவன் அறிவுறுத்தியதும் நினைவுக்கு வர, உடனே மின்னஞ்சலை மோனிஷா மற்றும் கார்த்திகேயனுக்கு தட்டி விட்டாள்.
ஏதோ ஒரு பெரும் சிறையிலிருந்து வெளியேறிய உணர்வு இதமாய் ஆக்கிரமிக்க, அந்த இன்பத்திலேயே கடிகாரத்தை பார்த்தவளுக்கு, அது நள்ளிரவை நெருங்கப் போவது தெரிய வர, யூகேவில் அன்றைய தினம் முடிவுக்கு வந்திருக்குமே என அனுமானித்து கணவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
முழு அழைப்பு சென்றதே ஒழிய , எதிர் முனையில் எடுத்த பாடில்லை ....
மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்தாள், இம்முறையும் அடித்து அடித்து அடங்கியதே ஒழிய அழைப்பை அவன் எடுக்கவில்லை ...
மனம் சோர்ந்து போனவள், மறுதினம் மதுரைக்குச் செல்வதை மட்டும், குரல் செய்தியாக அனுப்பிவிட்டு, மற்றதை அலைபேசியில் உரையாடும் பொழுது சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டு உறங்கச் சென்றாள்.
-----------------------------------------------------------------------
அதே இரவில் தன் அறையில் ராணா உறக்கம் வராமல் இட வலமாக கோபத்தோடு அலைந்து கொண்டிருந்தான்.
வகைத்தொகை இல்லாத கோபம் அவன் மீதே அவனுக்கு இருந்தது....
"ச்சே.... கொஞ்ச நேரத்துல உணர்ச்சி வசப்பட்டு, இத்தனை நாளா போட்டு வச்சிருந்த திட்டத்தை ஒன்னும் இல்லாம பண்ணிட்டேனே .....
அவ அலர்ட் ஆயிட்டா ...
இனிமே என் மூஞ்சிலயே முழிக்க மாட்டா ....
இவ்ளோ செஞ்சதும் வீணா போச்சே....
நாளைக்கே பேப்பர் போட்டாலும் போட்டுடுவாளே....
ஐயோ .... இனிமே அவளை தினமும் பாக்க முடியாதே.....
இடியட் .... உனக்கு என்னடா அவ்ளோ அவசரம்.... .... சாதாரணமா கூப்பிட்டு விசாரிச்சு அனுப்பி இருக்கலாமே ....
அத விட்டுட்டு நீ தான் மது .... அப்படி இப்படின்னு என்னென்னமோ பேசி, அவள சூசைட் த்ரெட் வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டயே .....
இனிமே இந்த ஜென்மத்துல உன்னால அவள பாக்கவே முடியாது ....
எல்லாம் போச்சு .... இப்பதான் கொஞ்ச நாளா நிம்மதியா இருந்த .... அதுல நீயே மண்ணள்ளி போட்டுக்கிட்டயே .....
ஆள் உயர கண்ணாடியில் தன்னைத் தானே பார்த்து, அதீத கோபத்தில் புலம்பி கொண்டே இருந்தவன், தன் கையில் இருந்த மது பாட்டிலை வாயில் வைத்து முழுவதுமாக குடித்து முடித்துவிட்டு,
"எனக்கு உன்னை புடிக்கல .... உன்னால தான் எல்லாம் போச்சு .... எனக்காகவே மறுபடியும் பொறந்து வந்த என் மதுவும் என்னை விட்டுப் போயிட்டா .... இனிமே நீயும் செத்துப் போ ...."
என்று ஆத்திரத்தில் ஆவேசமாக பேசிக்கொண்டே, கையில் இருந்து மது பாட்டிலை , அந்தக் கண்ணாடியை நோக்கி வீசினான்.
அது பொல பொலவென உடைந்து சிதற, தள்ளாடியபடி கட்டிலில் சென்று குப்புற விழுந்தவன் அப்படியே உறங்கிப் போனான் .
-----—--------------------------------------------------- -------
மறுநாள் காலையில் துரிதமாக விழித்தெழுந்தவள், முதல் வேலையாக தன் அலைபேசியை தேடி எடுத்து, கணவனிடமிருந்து ஏதாவது தகவல் வந்திருக்கிறதா என்று பார்த்தாள்.
அவள் அனுப்பிய குரல் செய்தியை கூட அவன் பார்க்கவில்லை என்பது தெரிய வர , மனம் குழம்பிப் போனாள்.
மீண்டும் அழைத்துப் பார்க்கலாமா என்ற எண்ணம் வர, யூகேவில் அது நள்ளிரவு என்பதும் நினைவுக்கு வர , அந்த முயற்சியை கைவிட்டாள் ...
மூன்று நாட்கள் தொடர் பணியின் காரணமாக களைப்பில் உறங்கி இருப்பான் ....
எழுந்ததும் குரல் செய்தியை பார்த்துவிட்டு அழைப்பான் ...
என்று எண்ணிக்கொண்டு, துரிதமாக புத்துணர்வு பெற்று வந்து தனக்குத் தேவையானவைகளை பையில் திணித்துக் கொண்டு பயணத்திற்கு தயாரானவள், கீழ் தளத்தை அடைந்த போது ,பொன்னம்பலம் தேநீர் அருந்திக் கொண்டிருக்க, சுந்தராம்பாள் அடுக்களையில் காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார் ...
"பாட்டி தள்ளுங்க, நான் செய்றேன் ..." என வந்தவள் சொல்ல
"வேணாம்மா... கார் வந்துட போவுது நீ டீ குடிச்சிட்டு கெளம்பு ...." என்றபடி அவர் தேநீர் கோப்பையை அவள் கையில் திணிக்க, அப்போது
"அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டியாம்மா..." என பொன்னம்பலம் அக்கறையாய் விசாரிக்க,
"சொல்லிட்டேன் மாமா .... ஆனா ராம் தான் ஃபோனை எடுக்கவே இல்ல .... என்னனு தெரியல ...."
"ஏதாவது முக்கிய வேலைல இருந்திருப்பான் மா .... எப்படியும் மதியத்துக்குள்ள ஃபோன் பண்ணிடுவான்..." என்றார் ஆறுதலாய்.
அப்போது வீட்டு வாசலில் கார் வந்து நிற்க, பயணப் பொதிகளோடு கிளம்பியவளை சுந்தராம்பாளும், பொன்னம்பலமும் வாஞ்சையாய் பேசிக் கொண்டே பின் தொடர, அப்போது தான் அகல்யாவின் அறை கதவு மூடி இருப்பதைக் கண்டாள்.
தன்னை வழி அனுப்பும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதை அதிலிருந்தே தெரிந்து கொண்டவள், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓட்டுநராக வந்திருந்த சமீரை பார்த்து புன்னகைத்த படி வாகனத்தை அடைந்தாள்.
"சிஸ்டர் எப்படி இருக்கீங்க .... சார் வரலயா ... மதுரைல நமக்கு சந்து பொந்து இண்டு இடுக்குனு எல்லா இடமும் அத்துபடி .... நீங்க எங்க போகணும் ...."
வழக்கமான துருதுரு பேச்சும், சுறுசுறுப்பும் அவனிடத்தில் தென்பட, மெல்லிய புன்னகையோடு பதில் அளித்துக் கொண்டே அவள் காரில் அமர்ந்ததும் பொன்னம்பலத்திடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவன் வண்டியை கிளப்பினான்.
அதிகாலை வேளை என்பதால் , போக்குவரத்து நெருக்கடிகள் ஏதும் இல்லாமல் பாதி தூர பயணம் அம்சமாய் கழிய, அப்போது கார்த்திகேயனிடமிருந்து அழைப்பு வந்தது.
அவள் அழைப்பை அனுமதித்ததும்,
"என்ன ப்ரியா ... ஏன் திடீர்னு பேப்பர் போட்டீங்க ...." என்றான் எடுத்த எடுப்பில்.
" உடம்பு சரியில்ல கார்த்திகேயன் .... டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு .... அதான்........ ...." என்றாள் தயார் செய்து வைத்திருந்த பொய்யை சொல்லி.
ஓரிரு கணம் அலுவலக சடங்குகள் குறித்து உரையாடியவன் , பேச்சினூடே அவளது மதுரை பயணத்தையும் அறிந்து கொண்டு , உரையாடலை முடிக்கும் தருவாயில்
"அப்ப கயலோட மேரேஜ் ரிசப்ஷனுக்கு வர மாட்டீங்களா ..." என்ற கேள்வியை முன் வைக்க ,
"கல்யாணத்துக்கு வரேன்னு கயல் கிட்ட சொல்லி இருக்கேன் ... நாளைக்கு காலைல மதுரைல இருந்து டைரக்டா கல்யாண மண்டபத்துக்கு போயிடலாம்னு டிசைட் பண்ணி இருக்கேன் ... நீங்க, ஆண்டனி, மோனிஷா எல்லாம் இன்னைக்கே போறீங்க தானே....."
"ஆமா, இன்னைக்கு ஈவினிங் நடக்கிற ரிசெப்ஷனுக்கு ஆப்டர்நூன் கிளம்பலாம்னு பிளான் பண்ணி இருக்கோம் ..."
ராணாவும் இவர்களோடு இன்றே திருமண வரவேற்பில் கலந்து கொள்வான் என்று அனுமானித்தபடி, மேலும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
-------------------------------------------------------------------+
மணி ஒன்பதை கடந்தும் நன்கு உறங்கிக் கொண்டிருந்த ராணாவின் அலைபேசி சிணுங்கியது .
அரைகுறையாக விழித்தெழுந்தவன் தட்டித் தடுமாறி அலைபேசியை தேடி காதில் வைக்க, ஸ்ரீப்ரியா ராஜினாமா செய்த செய்தியை சொன்னாள் மோனிஷா.
செய்தி சிரசில் ஏறியதும், அவனின் தூக்கம் தொலைதூரம் போக, துணுக்குற்றவன்
"ஏன் சடனா இப்படி ஒரு முடிவு எடுத்தாங்க ... ஏதாவது ரீசன் மென்ஷன் பண்ணி இருக்காங்களா ..." என்றான் அறிந்து கொள்ளும் நோக்கில்.
"அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம் ... ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் அட்வைஸ் பண்ணியிருக்காங்களாம்... அதனால வேலையை விடறதா சொல்லி இருக்காங்க .... நோட்டிஸ் பீரியட், ட்ரைனிங் எல்லாத்துக்கும் பே பண்ணிடறதா மென்ஷன் பண்ணி இருக்காங்க ..."
"நீங்க போன் பண்ணி பேசினீங்களா ..."
" இன்னும் இல்ல ராணா .... "
"போன் பண்ணி ஒரு தடவ என்ன ஏதுன்னு என்கொயர் பண்ணிடுங்க ...." என்று முடித்தவனுக்கு, உள்ளுக்குள் ஆறாத கோபமும் ஏக்கமும் போட்டி போட்டுக் கொண்டு தலைக்கு ஏற, கைக்கு எட்டியது வாய் எட்டாமல் போகச் செய்த தன் முட்டாள்தனத்தை எண்ணி எண்ணி தவித்துப் போனான்.
வேலையை விட்டு சென்றவள், உடன் பணி புரிந்த பெண்ணின் திருமணத்திற்கு மட்டும் வரவா போகிறாள்.... நிச்சயம் மாட்டாள்...
அவசர புத்தியால் போட்டு வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே....
என்று அவன் குமுறி கொண்டிருக்கும் போதே அவனுக்கு கார்த்திகேயனிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவனும் ஸ்ரீயின் ராஜினாமாவை பற்றி சொல்லிவிட்டு,
"இப்பதான் நான் அவங்களுக்கு போன் பண்ணி பேசினேன் ராணா.... உடம்பு சரி இல்ல அதனால தான் ஜாப்ல கண்டினியூ பண்ண முடியலன்னு சொன்னாங்க .... ஐ திங்க் அவங்க கன்சீவா இருக்காங்கன்னு நினைக்கிறேன் .... ஆனா அதை அவங்க வெளிப்படையா சொல்லல ...."
கேட்டுக் கொண்டிருந்தவனின் உடலில் யாரோ படாரென்று திராவகத்தை ஊற்றியது போல் ரணமாய் எறிய, பற்களை கடித்து பொறுத்துக் கொண்டவன்,
"நீங்க எல்லாம் இன்னைக்கு கயலோட மேரேஜ ரிசப்ஷன அட்டென்ட் போறீங்க இல்லையா ...." என்றான் பேச்சை மாற்றி.
"ஆமா ராணா..... "
" அப்ப கல்யாணத்தை யாருமே அட்டென்ட் பண்ண போறதில்லையா ..."
"தேஜு, மணிகண்டன், ப்ரியா அவங்க எல்லாம் கல்யாணத்த அட்டென்ட் பண்ண போறாங்க ..."
" யூ மீன் ஸ்ரீ ...?????"
"ஆமா, அவங்க இப்ப மதுரைக்கு போறாங்களாம்... அங்கிருந்து நாளைக்கு காலையில டைரக்டா சிவகங்கை வந்துடறேனு சொன்னாங்க ..."
கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, ஆனந்தம் அனைத்தும் நயாகரா நீர்வீழ்ச்சி போல் போட்டி போட்டுக் கொண்டு பொங்கி கொட்ட, அது வெளிப்படா வண்ணம் கணநேரத்தில் குரலை செருமி சுதாரித்தவன்,
"நான் உங்க எல்லாரையும் இன்னைக்கு ரிசப்ஷன்ல மீட் பண்றேன் ...." என இயல்பு போல் காட்டிக்கொண்டு அழைப்பை துண்டித்தான்.
"வாவ் .... தேங்க் காட் ..... நான் போட்ட திட்டம்
இவ்ளோ ஈசியா , பர்ஃபெக்ட்டா எக்ஸிக்யூட் ஆக போகுதுன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ...
ஸ்ரீ.... நீ பேப்பர் போட்டதால தப்பிச்சிட்டேனு நினைச்சியா ... அங்கதான் நீ வசமா சிக்கி இருக்க ....
இனிமே நான் உன்னை கடத்திக்கிட்டு போனாலும், என்னையோ என் கம்பெனியையோ யாருமே சந்தேகப்பட மாட்டாங்க .... ஏன்னா நீ ஆல்ரெடி பேப்பர் போட்டுட்ட .... உன்னோட ராமும் சரி, போலீசும் சரி என்னை என்கொயரியே பண்ண முடியாது ..."
என மனக்கண்ணில் ஸ்ரீயை நினைத்துக் கொண்டு, அந்த அறையே அதிரும் வண்ணம் சிரித்தான் அந்த அரக்கன்.
--------------------------------------------------------------+
கிட்டத்தட்ட காலை 12 மணி அளவில் ஸ்ரீ மதுரையில் உள்ள தன் வீட்டை அடையும் போது , மோனிஷாவிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
ராணாவின் அறிவுறுத்தலின் பேரில் தான் அழைக்கிறாள் என்று புரிந்து கொண்டு வேண்டா வெறுப்பாக அவள் அழைப்பை அனுமதிக்க, கார்த்திகேயன் கேட்டது போலவே திடீர் ராஜினாமாவிற்கு காரணம் என்ன ...என்று எடுத்த எடுப்பில் தொடங்கியவள், அதைத்தொடர்ந்து மேலும் சில கேள்விகளை முன்வைக்க அதற்கு ஸ்ரீயும் பொருத்தமான பதில்களை சொன்னதும் ,திருப்தி அடைந்தவள் ஒரு சில அலுவலக சடங்குகளை சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
அவளது இணைப்பு முடிந்ததும், கார்த்திகேயன் மோனிஷாவிற்கு பிறகு ராணாவும் தனக்கு அழைப்பு விடுக்க கூடும் என்ற எண்ணம் தோன்ற, அப்படி அழைத்தால் அழைப்பை எடுக்கக் கூடாது ....
புதிய எண்ணில் இருந்து எந்த அழைப்பு வந்தாலும் எடுக்கக்கூடாது .... அதுவும் ராணாவின் வேலையாக இருக்கக் கூடும் ... என்ற முடிவுக்கு வந்தவள் , உடனே பொன்னம்பலத்தை அழைத்து வீடு வந்து சேர்ந்து விட்டதாக சொல்லிவிட்டு, மீண்டும் தன் கணவனுக்கும் அழைப்பு விடுத்தாள்.
இம்முறையும் முழு அழைப்பு சென்றதே ஒழிய அவன் அழைப்பை எடுக்கவே இல்லை...
குழம்பிப்போனவள் , உடனே தன் கணவனுக்கு , மறுதினம் சிவகங்கையில் நடைபெறவிருக்கும் கயல்விழியின் திருமணத்திற்காக மதுரைக்கு வந்திருப்பது குறித்து மீண்டும் குரல் செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு, சமீருக்கும் நன்றி கூறி பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு, வீட்டு வாயிலில் அவளுக்காக காத்திருந்த தந்தையிடம் பயண விபரங்களை பற்றி பேசியபடி நிம்மதியாக வீட்டிற்குள் நுழைந்தாள்.
---------------------—-----------------------------------------------
மருத்துவர் சொன்ன 48 மணி நேரம் கடந்து பின்னரும் தன் மனைவியிடம் எந்த மாற்றங்களும் நிகழவில்லையே என மனம் நொந்தபடி மகளை கிளப்பி அழைத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி பயணப்பட்டான் ராம்சரண்.
குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, மருத்துவமனை வளாகத்திற்குள் தன் மனைவி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை நோக்கி வேக நடையிட்டுச் வந்தவனை , மிகுந்த மகிழ்ச்சியோடு மேல் மூச்சு கீழ் மூச்சு இறைக்க எதிர்கொண்ட ருக்மணி
"மாப்ள , நீங்க ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டதா சிவகாமி அக்கா இப்பதான் போன்ல சொன்னாங்க ... அதான் உங்கள பாக்க வேகமாக வந்தேன் .... நல்ல செய்தி மாப்ள ... லட்சுமி கண் முழிச்சிட்டா .... உங்கள தேடறா..." என்றதும், கையில் இருந்த குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு, ஓட்டப்பந்தய வீரன் போல் நான்கு கால் பாய்ச்சலில் தன் மனைவியின் அறையை அடைந்தான்.
அவளை சுற்றி மூன்று மருத்துவர்கள் இரண்டு செவிலியர்கள் நின்று கொண்டு பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை விலக்காத குறையாய் , படுக்கைக்கு அருகே சென்று நின்றவனிடம் பார்வையை மாற்றி லட்சுமி கனிவாய் பார்க்க, மிகுந்த மகிழ்ச்சியோடு
"லக்ஷ்மி, எப்படி இருக்க ..... ஆர் யூ ஆல்ரைட் நவ் ...." என்றான் ஆர்வமாய்.
அவள் பதில் பேச விழைய, ஆனால் வார்த்தைகள் வராமல் தொண்டை குழி மட்டும் ஏறி இறங்க , உடனே அருகில் இருந்த மருத்துவரை அவன் பார்க்க,
"அவங்களால உடனே பேசிட முடியாது ... இவ்ளோ நாளா வெறும் ட்ரிப்ஸ்ல இருந்திருக்காங்க ... தொண்ட குழி எல்லாம் வறண்டு போயிருக்கும் ... புண்ணா கூட ஆயிருக்கும் .... இளநீர் ஜூஸ் எல்லாம் குடிக்க குடிக்க தான் அது சரியாகும் ... அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிடுவாங்க ... இன்னும் ஒண்ணுத்தையும் இப்பவே சொல்லிடறேன் ...
இவங்களால உடனே எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியாது .... கை காலுக்கு மசாஜ் , ஆக்குபேஷனல் தெரபினு கொடுக்க கொடுக்க தான், கை விரல்களை மடக்கிறது, எழுந்து உட்கார்றது... கால் முட்டிய மடக்குறது..... ....எழுந்து நிக்கறது... அப்புறம் நடக்கிறதுனு ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ்ல எல்லாம் செய்வாங்க .... அதுக்கு அவங்க இன்னும் ஒரு வாரம் இங்க தங்கி ஆகணும் ..."
"ஒரு மாசம் கூட தங்கட்டும் டாக்டர்.... எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல .... அவ பழைய மாதிரி நல்லபடியா பேசி பழகி எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டாலே எனக்கு போதும் ..."
என்றவனின் விழிகளில் மெல்லிய கண்ணீர் தெரிய, அதனை உள்வாங்கி கொண்டவளின் கண்களிலும் மின்னலாய் தீட்சண்யம் தெரிய , உடனே மனையாளின் கரத்தை தன் கரங்களுக்குள் கொண்டு வந்தவன்,
"செத்துப் போயிட்டேன்டி .... உன்னை இப்படி பார்க்க பார்க்க தான், போன உயிர் கொஞ்சம் கொஞ்சமா திரும்ப வருது ..." என்றான் மனம் திறந்து, அருகில் இருந்த மருத்துவர் குழுவை பற்றி கவலைப்படாமல்.
மருத்துவர்கள் குழு விடை பெற்றதும் அவள் அவனையே விழி விலக்காமல் கேள்வியோடு பார்க்க, அதனை கண நேரத்தில் புரிந்து கொண்டவன்,
"நமக்கு ட்வின் பாய் பேபிஸ் பொறந்திருக்கு .... ரெண்டு பேரும் அருமையா இருக்காங்க .... ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் இங்க nicuல தான் இருந்தாங்க .... இப்ப வீட்ல எல்லாரோடயும் விளையாடிக்கிட்டு சந்தோசமா இருக்காங்க ....
நீயும் அடுத்த வாரம் நம்ம வீட்டுக்கு வந்துட்டா, அம்மாவை பார்த்ததும் இன்னும் சந்தோஷமாயிடுவாங்க .... அப்புறம் ஸ்ரீ பாப்பாவும் சமத்துக் குழந்தையா இருக்கா ....
என்ன ஒன்னு, அடிக்கடி உன் நினைப்பு வந்து அழுவா, உன்னை இப்படி பார்த்தா இனிமே அழ மாட்டா ... ராமலட்சுமி ஸ்ரீனி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது ...." என்று அவள் கோமாவில் இருந்த போது நடந்த நிகழ்வுகளை வரிசையாக அடுக்கியவன், அவளது விழிகளில் மற்றொரு கேள்வி இருப்பதைப் படித்துவிட்டு,
"உன் அம்மா அப்பாவும் நல்லா இருக்காங்க ... உன் அம்மா இங்கதான் இருக்காங்க இப்ப வந்துருவாங்க ... வேற என்ன ...." என்றான்.
அவள் வெகு மெல்லிய கமரிய குரலில்,
"ஆ....ஆக்சிடென்ட் ... ஏ....ஏன்.. ப்படி ..."
என விட்டு விட்டு பேச, புரிந்து கொண்டவன், அது அருணா கற்பகத்தின் கைங்கரியம் என பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, இயல்பாக நடந்த விபத்தாக அதனை சித்தரித்தான்.
அவளது மனக் கேள்விகளுக்கு அனைத்தும் விடை கிடைத்ததும், மெல்லிய பிரகாசமும் தெளிவும் அவளது முகத்தில் தோன்ற, அப்போது குழந்தையோடு அங்கு வந்தார் ருக்மணி.
தன் தாய் மற்றும் மகளைக் கண்டதும் அவளது கண்கள் வாஞ்சையாய் வருட, ருக்மணி உவகையின் உச்சத்தில் ஆனந்தக் கண்ணீர் வடிக்க, குழந்தையும் ஓடி வந்து அவளது பாதத்தை பற்றி கொண்டு,
"மம்மா...ம்மா..." என்று குதுலை மொழியில் கொஞ்ச, திக்கு முக்காடி போனவளின் முகத்தில் கதிர் வீச்சாய் ஒளி தெரிய, அதனைப் பார்த்துக் கொண்டே அவளது பாதங்களை தன் கரங்களால் பற்றிக் கொண்டான் ராம் சரண், மன்னிப்புக்கோரும் பாவனையில் .
என்னவள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று வந்ததற்கு என் தாய் என்னும் பேய் தங்கை என்னும் தாடகையின் மீது நான் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கையும், என்னுடைய தன்னகங்காரமும் தான் காரணம்..... ....
என மனதிற்குள் மருகியவனின் விழிகள், அதனை அப்பட்டமாய் வெளிப்படுத்த, கண்டு கொண்டவள், தன் பாதத்தை அவன் பிடியிலிருந்து விலக்க முயல,
"ம்ச், லட்சுமி .... கொஞ்ச நேரம் உன் பாதத்தை புடிச்சுக்கிறேனே... ப்ளீஸ் ..." என்றான் பாவத்திற்கு பரிகாரமாய், மென் புன்னகை பூத்தபடி.
அப்போது , ரங்கசாமி, ஸ்ரீனி , ராமலட்சுமி தியாகராஜன் ஆகியோர் மலர்ந்த முகத்தோடு அங்கு வந்து சேர , அவர்களைக் கண்டு லட்சுமியின் முகம் மேலும் விகசிக்க,
"ரொம்ப சந்தோஷம்மா... இப்படி ஒரு நாளுக்காக தான் இத்தனை நாளா காத்துக்கிட்டு இருந்தோம் .... " என ரங்கசாமி சந்தோஷப்பட,
"அக்கா, எங்க கல்யாணத்துல நீ இல்லங்கிற குறைய தவிர மற்றது எல்லாம் நல்லபடியாகவே நடந்ததுக்கா ..." என ராமலட்சுமி தன் பாசத்தை வெளிப்படுத்த,
"எனக்கு சாமி மேல எல்லாம் அவ்ளோ நம்பிக்கை இருந்ததில்லம்மா.... ஆனா இந்த முறை வேண்டிகினேன்.. நீ குணமாயிட்டா பழனிக்கு பால்காவடி எடுக்கிறேன்னு.... அந்த முருகன் என் வேண்டுதல நிறைவேத்திட்டான்..... ... இந்த தைப்பூசத்துக்கு பால்காவடி எடுத்தே ஆவணும்னு முடிவு பண்ணிட்டேன் ..."
என லட்சுமியின் தந்தை தியாகராஜன், தன் மன மாற்றத்தை பறைசாற்ற, இப்படியாக நீண்ட நெடிய பாலைவன நாட்களுக்குப் பின் அங்கிருந்தவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மனம் மகிழ்ந்தனர்.
ஊன்றுகோளை பற்றிக்கொண்டு இடவலமாக தாங்கி தாங்கி நடந்து கொண்டிருந்த ரிஷியிடம்
"சார் சார் ... ஒரு குட் நியூஸ் சார் ...." என்றாள் ரம்யா மூச்சு திணற ஓடி வந்து .
" என்ன ...." என்றபடி அவன் தன் அலைபேசியிலேயே பார்வையை வைத்திருக்க,
"சார், அன்னைக்கு கோமால இருந்த பேஷண்ட்ட போய் பார்த்தீங்களே ... அவங்க கண் முழிச்சுட்டாங்க சார் ..."
"இஸ் இட் .... தேங்க் காட் ..." என அவன் தன் மகிழ்ச்சியை வாய் விட்டே சொல்ல,
"வாங்க சார் ... உங்கள அவங்க கிட்ட கூட்டிகிட்டு போறேன் .... உங்கள பாத்தா அவங்க சந்தோஷப்படுவாங்க ..." அவள் ஆர்வத்தில் படபடக்க,
"மொதல்ல அவங்க என்னை பாக்கவே விரும்ப மாட்டாங்க ... அப்படியே பார்த்தாலும் கோவபடுவாங்களே ஒழிய சந்தோஷப்பட மாட்டாங்க ...." என்றான் இறுகிய முகத்தோடு.
அவனது முகம் மாற்றத்தை கண்டு, வருந்தியவள்,
"சார், அவங்கள பாத்தா ரொம்ப சாந்தமா சிம்பிளா இருக்காங்க சார் .... நீங்க சொல்ற மாறி அவங்க கோவப்படுவாங்கன்னு தோணல ..." என்றதும்
"அவங்க எப்பவுமே ரொம்ப சிம்பிள் தான், ஆனா என்னை தான் ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிட்டாங்க .... நான் அவங்கள போய் பார்க்கிறத அவங்க விரும்பவே மாட்டாங்க ...
அவங்களுக்கு விருப்பமில்லாதத நானும் செய்ய மாட்டேன் ..." என்றவன் விந்தி விந்தி நடந்து வந்து படுக்கையில் சாய்ந்தமர்ந்துக்கொண்டு அருகில் இருந்த மடிக்கணினியை எடுத்து மடியில் வைத்து அதில் மூழ்கிப் போக, ஒன்றுமே புரியாமல் திணறிப் போனாள் ரம்யா.
ராம்சரண் லட்சுமிக்கு இடையேயான அன்னியோன்யத்தை மற்ற செவிலியர்கள் மூலம் அறிந்து வைத்திருந்ததால், இவன் ஒருதலையாய் லட்சுமியை காதலித்திருக்கிறான் என்பதை மட்டும் அவளால் அனுமானிக்க முடிந்தது.
ஆனால் தன் தமையன் மகளின் ஆசிரியை என்கிறான் ....
அதுவும் அந்தப் பெண்மணியை கிட்டத்தட்ட ஓராண்டுகளாகத்தான் தெரியும் என்கிறான் ...
திருமணமான ஒரு பெண்ணை, அதுவும் கணவன் குழந்தையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஒரு தலையாய் நேசிக்கும் அளவிற்கு பண்பாடு அற்றவனா இவன் ... என்ற கேள்வி எழ
இல்லை... இல்லவே இல்லை ... இருக்கவே முடியாது ... என்ற பதிலையும் தானே சொல்லிக் கொண்டாள் ..
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் செவிலி பெண்ணாக பணிபுரிகிறாள்....
என்னதான் அந்தப் பணி உன்னத பணி என்றாலும், ஒரு சில வயது முதிர்ந்த ஆண்களே சில சமயங்களில் அவளை ரசனையாய் பார்ப்பது உண்டு.....
சீண்டும் விதமாக பேசுவதும் உண்டு ...
ஆனால் கடந்த ஒரு மாதமாக, இவனுக்கு பிரத்தியேக செவிலி பெண்ணாக பணிபுரிகிறாள்.....
பார்வை, பேச்சு, செயல் எதிலுமே கண்ணியமற்ற தன்மையை அவள் கண்டதே இல்லை ...
சில சமயங்களில் கோபப்படுவான் என்றாலும், பல சமயங்களில் தோழனாய் மாறி , இயல்பாக நடந்து கொள்வான் ....
அவளது பணியையும் பணிவிடையையும், எப்பொழுதுமே மதிப்பவன் ...
இப்படிப்பட்டவன், எப்படி கணவனுடன் அன்னியோன்யமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணை, நேசித்திருப்பான்... நேசிப்பான் ....
என்று யோசித்து குழம்பியவள், கடைசியில் இன்னும் ஒரு வார காலத்தில் கிளம்பப் போகின்றவனைப் பற்றி நான் ஏன் தேவையில்லாமல் சிந்திக்க வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, அவனுக்கான உணவு தயாரிக்கும் பணியில் கவனம் செலுத்தலானாள்.
------—----------------------------- --------------------------------
ஞாயிறு காலை லண்டன் விமான நிலையத்திலிருந்து தன் தந்தைக்கு அழைப்பு விடுத்தான் வீரா.
அடுத்த சில மணித்துளியில் பொன்னம்பலம் இணைப்புக்கு வர, தன் பயணத்தைக் குறித்துச் சொன்னவன்
"ஸ்ரீக்கு போன் பண்ணா, சுவிட்சுடு ஆஃப்னு வருதுப்பா ..... ரெண்டு மூணு முறை ட்ரை பண்ணியும் பாத்துட்டேன் சுவிட்சுடு ஆஃப்னு தான் வருது .... கூட வேலை செய்யற பொண்ணோட கல்யாணம் ஞாயித்திக்கிழமை காலைல சிவகங்கைல நடக்குது .... அங்க போக போறேன்னு அவ அனுப்பின வாய்ஸ் மெயில் மட்டும் கேட்டேன்.... பதிலுக்கு நான் வாய்ஸ் மெயில், மெசேஜ் எது அனுப்பினாலும் போக மாட்டேங்குது ... மதுரை வீட்டு லேண்ட் லைனுக்கு போன் பண்ணாலும் லைன் கிடைக்க மாட்டேங்குது ..... என் மாமனாருக்கு போன் போட்டாலும் அவரோடதும் சுவிட்ச்டு ஆஃப்னு வருது .... என்ன ஆச்சுப்பா.... ஒண்ணுமே புரியல ..." என்றான் வேதனையோடு.
"பிரியா முந்தாநாள் ராத்திரி உனக்கு போன் பண்ணிச்சாம் .... நீ எடுக்கலயாம்.... நேத்து காலையிலயும் மதுரைக்கு போவ சொல்ல , உனக்கு போன் பண்ணி இருக்கு அப்பயும் நீ எடுக்கலன்னு சொல்லுச்சு .... நீ ஏன் போனை எடுக்கல ..."
"ஃப்ரைடே அன்னைக்கு வார் ரூம் மீட்டிங் முடியவே ரொம்ப லேட் ஆயிடுச்சுப்பா .... ஒரு வழியா அத முடிச்சுட்டு ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்த போனை ஆன் பண்ணும் போது , அது கை தவறி கீழே விழுந்து டிஸ்ப்ளே போயிடுச்சு .... வேற போன்ல இருந்து
போன் பண்ணினா ரிங் போகுதே ஒழிய வெளியே கேட்க மாட்டேங்குது ..... என் கூட வேலை செய்யற ஒருத்தரோட போனிலிருந்து ஸ்ரீக்கு ரெண்டு தடவை போன் பண்ணேன்.... ஆனா அவ எடுக்கல .... நேத்து காலையில தான் ஃபோனை சர்வீஸ்க்கு கொடுத்தேன் .... இப்பதான் ஃபோன் ரிப்பேர் ஆகி கிடைச்சது ... இதுக்கு நடுவுல என் கலிக்ஸ்சோட போன்ல இருந்து அவளுக்கு போன் போட்டு பார்த்தேன்.... ... ஆனா அவ எடுக்கவே இல்ல .... இப்ப போன் பண்ணினா, சுவிட்சுடு ஆஃப்னு வருது ..... என்னப்பா ஆச்சு ஒண்ணுமே புரியல........" என்றான் நீண்ட விளக்கம் கொடுத்து .
"பிரியா, ஏதாச்சும் வீட்டு வேலைல இருந்திருக்கும்... போனை சார்ஜ் போட மறந்திருக்கும் ... அதான் அப்படி மெசேஜ் வருது .... இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்டு பாரு .... போனை எடுக்கும் ..."
என்றவரிடம்,
"நான் இப்ப போடிங்ல இருக்கேன் .... என் பிளைட் டேக் ஆஃப் ஆக இன்னும் ஒன் ஹவர் இருக்கு .... நீ சொன்ன மாதிரி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணி பாக்கறேன்ப்பா...."
என அழைப்பை துண்டித்தான், அவருடைய அடுத்த அழைப்பே பெரும் சோதனையை சுமந்து கொண்டு வரப் போகிறது என அறியாமல்.
தன் தந்தையிடம் சொன்னது போல் தன் மனைவியை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான் ....
ஆனால் மீண்டும் மீண்டும் சுவிட்சுடு ஆஃப் என்றே வர, வேறு வழி இல்லாமல் நேரத்தை கடத்த விமான நிலையத்தில் இருந்த கடைகளை நோட்டம் விட ஆரம்பித்தவனுக்கு , பொன்னம்பலத்திடமிருந்து அழைப்பு வர, தன் மனைவியை பற்றிய செய்தி ஏதாவது இருக்கும் என்ற எண்ணத்தில் வேகமாக அழைப்பை அனுமதித்தவன்
"என்னப்பா, ஸ்ரீ கிட்ட இருந்து ஏதாவது நியூஸ் வந்ததா ....." என்றான் எடுத்த எடுப்பில்.
எதிர் முனையில் சில மணித்துளி அமைதிக்குப் பிறகு
"அன்புக்கு அபார்ஷன் ஆயிடுச்சாம்... மாப்ள இப்பதான் போன் பண்ணி சொன்னாருப்பா.... உன் அம்மா அழுதுகிட்டு இருக்கா ..." என்றவரின் குரலும் கமர,
" ஐயய்யோ, என்னப்பா திடீர்னு .... ஏன் இப்படி ஆச்சு.." என்றான் இளையவன் அதிர்ந்து.
"தெரியலப்பா ... திடீர்னு வயித்த வலின்னு சொல்லி இருக்கா ... மாப்ள ஹாஸ்பிடல்க்கு கூட்டிகிட்டு போயிருக்காரு .... அங்க போனதுமே அபார்ஷன் ஆயிடுச்சாம்..."
" இப்ப அன்பு எப்படி இருக்கா ...."
" ட்ரீட்மெண்ட் போய்கிட்டு இருக்காம்...."
என்றவர், கணநேர அமைதிக்குப் பிறகு,
"அன்பு தேவை இல்லாம, உன் பொண்டாட்டி விஷயத்துல வன்மத்த கக்கினதால தான், இந்த கஷ்டமே அவளுக்கு வந்திருக்கு .... உன் அம்மாவும் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஸ்ரீ கிட்ட ஆடி தீர்த்துட்டா...." என தன் மனக்குமுறலை அவர் கொட்ட ஆரம்பிக்க,
" என்னப்பா ....என்னென்னமோ சொல்றீங்க என்ன பிரச்சனை ....." அதிர்ச்சியோடு மைந்தன் கேட்க, அகல்யா ஸ்ரீயிடம் தரக்குறைவாக பேசிய அனைத்தையும் பகிர்ந்தவர்,
"கல்யாணம் ஆகி அஞ்சு மாசம் கூட ஆவல அதுக்குள்ள குழந்தை இல்ல குழந்தை இல்லனு சொல்லி , அவ்ளோ அசிங்கமா உன் அம்மா பேசிட்டாப்பா ..... ஸ்ரீ ரொம்ப துடிச்சு போயிட்டா .... ஆனா அப்ப கூட, அவ ஒரு வார்த்தை எதிர்த்து பேசல..."
தன் தாய், மனைவியை பார்த்து கூறிய வார்த்தைகளைக் கேட்டதும், அவனுக்கு கட்டுக்கடங்காத கோபம் பொங்கி எழ, வழக்கம் போல் சூழ்நிலையை உணர்ந்து , அவன் அடக்கிக் கொள்ள ,
"மும்பைக்கு பிளைட் டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டேன்ப்பா ... இன்னைக்கு மதியமே நாங்க எல்லாரும் மும்பைக்கு போறோம் ... நீ கோயம்புத்தூர் வந்ததும், மதுரைக்கு டாக்ஸி புக் பண்ணிக்கினு உன் மாமனார் வீட்டுக்கு போயிடு.... உன் அம்மா பேசின பேச்சாலே ஏதாச்சும் அங்க பிரச்சனை வந்திருக்கும்னு தோணுது .... எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசி சரி பண்ண பாரு ..."
என்று அவர் அழைப்பை துண்டிக்க, ஏதோ ஒரு பெரும் பிரச்சனை நிகழ்ந்துள்ளது ஆனால் அது தந்தை சொன்னது போல் கிடையாது என்று அவன் உள்ளுணர்வு உரைக்க, அப்போது இந்திய பயணத்திற்கான அழைப்பு வர, குழப்ப நிலையில் பயணப் பொதிகளோடு விமானத்தை நோக்கி நடந்தான்.
ஸ்ரீராமம் வருவார்கள் ....
.
Acho adutha enoda fav couple ku prblm start agiducha... So sad...
ReplyDeleteThanks dr
DeleteSuper man
ReplyDeleteThanks dr
DeleteOMG 😱 sis such a big big ud tdy... U have already hands pain na, ethukaga ivlo kashtapatu type pani periya ud koduthu irukinga.. don't strain urself. Asusual story adi poli...no words to say.. ungal ezhuthuku naan adimai. Take care of ur health.
ReplyDeleteThanks a lot dr.... thanks for ur concern ma... sure da
DeleteGood news laks cure agitathu bad news may be sree ah ranaa kidnap paniruparo inneram ?? Super sisy, interesting nd kjm padapadappavum irukunga...
ReplyDeleteThanks a lot dr
Delete