அத்தியாயம் 133
காரை விட்டு முதலில் இறங்கிய ஸ்ரீ தளர் நடையில் வீட்டிற்குள் நுழைய, அவளைப் பின் தொடர்ந்த சத்யன் கூடம் காலியாக இருப்பதை பார்த்ததும், வீட்டுப் பெரியவர்கள் வெளியே சென்றிருப்பதை புரிந்துகொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டு விட்டு
"ப்ரியா , நீ போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா...அதுக்குள்ள நான் பிரபாவ பார்த்து நடந்தத சொல்லிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்ப பார்க்கிறேன்..."
என்றவன் அவளது பதிலுக்கு காத்திராமல், கீழ் தளத்தில் இருந்த தன் அறைக்குள் நுழைய, ஸ்ரீ மிகுந்த களைப்போடு தன் அறை நோக்கி படியேறினாள்.
அறைக்குள் வந்தவனைப் பார்த்ததும் பிரபா
"வாங்க, நாளைக்கு ஊருக்கு போறதுக்காக எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன் .... நாளைக்கு காலையில ...." என இயல்பாக படபடத்தவளின் பேச்சை இடைவெட்டி , சற்று முன் நடந்த அனைத்தையும் சத்யன் அடை மழையாய் பொழிந்து தள்ள , கேட்டுக் கொண்டிருந்தவள் அதிர்ச்சியில் உறைந்தே போனாள்.
"எனக்கு என்னவோ இது உன் தங்கச்சி ப்ரீத்தியோட வேலையா இருக்குமோன்னு தோணுது ...." கோபத்தோடு சத்யன் வார்த்தைகளை கடித்து துப்ப,
"ஐயையோ அப்படியெல்லாம் அவ செய்ய மாட்டாங்க ....."
"அடியேய், அவ பாண்டி விஷயத்துல ஏற்கனவே ஆடின ஆட்டம் தான் நமக்கெல்லாம் தெரியுமே .... NIA வரைக்கும் பிரச்சனையாயி சந்தி சிரிக்கல...இன்னுமா அவள நம்பற..."
"இல்லங்க, இப்ப எல்லாம் அவ தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கா அவ திருந்திட்டா..."
"நான் இப்பவே போய் இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு, என் ஃபிரண்டு மூர்த்தி மூலமா எம்எல்ஏவ புடிச்சி , அந்த பசங்க யாரு என்னன்னு இம்மீடியேட்டா கண்டுபிடிக்க ஏற்பாடு பண்றேன் .... ஒருவேளை இன்வெஸ்டிகேஷன்ல உன் தங்கச்சியோட கை அதுல இருந்ததுன்னு வை, குறைந்தபட்சம் ஜெயில்ல 10 வருஷமாவுது அவள களி தின்ன வைக்காம, நான் விடமாட்டேன் ...."
சத்யன் குமுற
"அப்படி அவ செஞ்சிருந்தான்னா, பத்து வருஷம் என்ன.... 20 வருஷம் கூட களி தின்னுட்டுமே .... எனக்கு ஒன்னும் இல்ல .... ஆனா எனக்கு தெரிஞ்சு, இப்ப எல்லாம் அவ வீட்டை விட்டு வெளிய போறதே இல்ல .... எப்பவும் டிப்ரஷன்லயே சுத்திக்கிட்டு இருக்கா... ...சோ அவ செய்திருக்க வாய்ப்பில்ல.... இப்ப எல்லாம் செயின் ஸ்னாட்சிங் ரொம்ப சகஜம் ஆயிடுச்சு .... காலேஜ் பசங்க கூட ரவுடி பசங்க மாதிரி கஞ்சா அடிச்சுட்டு இதையே தொழிலா வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கானுங்க .... சோ அது சாதாரண செயின் ஸ்னாட்சிங்கா தான் இருக்கும்னு தோணுது ... எனிவே நீங்க ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிறது நல்லது தான் .... "
என பிரபா முடித்ததும் , தன் காரை எடுத்துக்கொண்டு பஞ்சாய் பறந்தான் சத்யன்.
சத்யன் கிளம்பியதும், பிரபா சற்று பெருத்த குரலில் ஸ்ரீயை அழைக்க, அயர்ச்சியோடு படி இறங்கி வந்தாள் ஸ்ரீ.
வந்தவளிடம்,
"இப்ப தான் சத்யா எல்லாத்தையும் சொன்னாரு .... பயப்படாத ப்ரியா... கூடிய சீக்கிரம் யாரு என்னன்னு போலீஸ் கண்டுபிடிச்சிடுவாங்க ... நீ ரொம்ப டயர்டா தெரியற... மொதல்ல சாப்பிடு ..." என பிரபா
மூத்த சகோதரியை போல் அக்கறையாக ஆறுதல் கூற,
"வேணாக்கா பசிக்கல ...." என்றாள் வீராவின் மனையாட்டி துக்கம் தொண்டையை அடைக்க.
"ஏய் .... நீ காலையிலேயே சமைச்சு வச்சுட்டு சாப்பிட கூட நேரமில்லாம ஆபீஸ்க்கு கிளம்பி போயிட்டேன்னு அத்தை சொன்னாங்க ...நீ வந்ததும் உன்னை சாப்பிட சொன்னாங்க .... அத்தை, மாமா, பாட்டி எல்லாரும் இப்பதான் சாப்பிட்டு முடிச்சிட்டு கோவில்ல நடக்கிற உபன்யாசம் கேக்க போயிருக்காங்க .... இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாங்க.... ...."
ஸ்ரீயை இயல்பு நிலைக்கு கொண்டு வர, இப்படி தானாகவே பல விஷயங்களை முன் வந்து பிரபா பேச, அதற்கு மேல் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால், செய்து வைத்திருந்த இரவு உணவினை தட்டிலிட்டு உண்ண ஆரம்பித்தாள் ஸ்ரீ .
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை, சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த பிரபா, அவள் கை கழுவிக் கொண்டு வந்ததும்,
"உன்கிட்ட ஒன்னு சொல்லனும் ப்ரியா ... நான் வந்த அன்னைக்கே சொல்லனும்னு நெனச்சேன் .... ஆனா நீ எப்படி எடுத்துப்பியோனு ஒரு சின்ன பயம் இருந்தது ... அதான் சொல்லாம விட்டுட்டேன் ... ஆனா இன்னைக்கு சொல்லியே ஆகணும்னு தோணுது .... நீ பேசாம வேலையை விட்டுட்டு கொஞ்ச நாள் ரெஸ்ட் எடேன்.... அத்தை சொல்ற மாதிரி குழந்தை விஷயத்துக்காக நான் வேலையை விட சொல்லல ... நான் கல்யாணத்தப்ப உன்னை பார்த்ததுக்கும், இப்ப பாக்கறதுக்கும் நிறையவே இளைச்சிட்ட... .... தாடை எல்லாம் ஒட்டி போச்சு... கண்ணை சுத்தி கருவளையம்.... ரொம்ப வீக்கா தெரியற .... இப்படியே போச்சுன்னா உன் ஹெல்த் ரொம்ப மோசமாயிடும் ப்ரியா... அப்புறம் போகப்போக ரொம்ப கஷ்டப்படுவ ..."
என பொறுமையாக அனைத்தையும் எடுத்துச் சொல்ல, ஏற்கனவே தன் கணவனோடு பேசி திட்டமிட்டிருந்ததை சொல்லாமல்,
"ராம் இந்தியா வந்ததும் பேப்பர் போடலாம்னு இருக்கேன்க்கா .... கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வேற கம்பெனியில ஜாயின் பண்ணலாம்னு பிளான் பண்ணி இருக்கேன் ..."
என ஸ்ரீ, அவள் சொன்னதை ஆமோதிப்பது போல் பேச,
"குட் டெசிஷன் ப்ரியா ...." என பிரபா மெச்சுதலாக சொல்லிக் கொண்டிருக்கும் போது சத்யன் வந்து சேர்ந்தான் .
"போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன் .... அந்த ஸ்ட்ரீட்ல இருக்கிற சிசிடிவி கேமராவ வச்சு ஆளுங்க யாருன்னு கண்டுபிடிக்கிறேன்னு சொல்லி இருக்காங்க .... மூர்த்தி மூலமா எம்எல்ஏவோட பிஏ கிட்டயும் பேசிட்டேன் .... எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்குள்ள யாரு என்னன்னு தகவல் கிடைச்சிடும்னு சொல்லி இருக்காரு ..." என்றவன் ஸ்ரீயை பார்த்து ,
"எனக்கு உங்க ஆபிஸ் கேப் டிரைவர் மேலயும் கொஞ்சம் டவுட் இருக்கு ... நாளைக்கு ஆபீஸ்க்கு போனதும் ட்ராவல் டெஸ்க் , க்ரிவென்சஸ் டிபார்ட்மெண்ட்லயும் ஒரு கம்ப்ளைன்ட் ரெய்ஸ் பண்ணிடு... ஆங் ... சொல்ல மறந்துட்டேனே .... இனிமே இந்த மாதிரி ஏதாவது சிச்சுவேஷன் வந்தா அப்பாவுக்கு ஃபோன் பண்ணு ... அவரு வந்து கூட்டிக்கிட்டு வருவாரு ... கூடிய மட்டும் ஆபீஸ்லயிருந்து லேட்டா கிளம்பாத ... சரியா..... .... நீ இத பத்தி ரொம்ப யோசிக்காத , இந்த விஷயத்தை இனிமே நான் பாத்துக்கறேன் ... " என முடிக்க,
"தேங்க்ஸ் மாமா ... நீங்க சமயத்துக்கு வரலைன்னா, ரொம்ப கஷ்டப்பட்டு போய் இருப்பேன் ..." என்றாள் கம்மிய குரலில்.
"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கும்மா.... இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இரு ..." என அவன் முடிக்க
"நாளைக்கு காலைல 11 மணிக்கு நாங்க ஊருக்கு போறோம் .... ஏதாச்சும் ப்ராப்ளம்னா ஃபோன் பண்ணு ... நாங்க பாத்துக்கறோம்......தைரியமா இரு ப்ரியா ..."
என பிரபா சொல்லவும் , அகல்யா, சுந்தராம்பாள் பொன்னம்பலம் ஆட்டோவில் வந்திறங்கவும் சரியாக இருந்தது.
வந்தவர்களோடு ஓரிரு கணம் பேசிவிட்டு சத்யன் தன் மனைவியோடு புறப்பட்டுச் சென்றதும்,
"பிரியா சாப்டீயா ..." என்றார் அகல்யா அவளது முகத்தில் இருந்து பார்வையை விலக்காமல்.
அவளோ அவர் முகத்தைக் கூட பார்க்காமல்,
"ம்ம்ம்..." என்று மொழிந்து விட்டு, விலகி நடக்க,
"பிரியா, என் மேல இருக்கிற கோவத்துல, சமைச்சு மட்டும் வச்சுட்டு சாப்பிடாம போனா என்ன அர்த்தம் .... உன் அம்மா தப்பித்தவறி உன்னை ஏதாவது சொல்லிட்டா இப்படித்தான் கோவிச்சுக்கிட்டு உங்க வீட்லயும் சாப்பிடாம போவியா ...."
என அகல்யா தன் பேச்சால் அவளை நிறுத்த,
"முதல்ல என் அம்மா கோவமே பட மாட்டாங்க...... அப்படியே கோவப்பட்டாலும் , நீங்க சொன்ன அந்த வார்த்தையை என்னை மட்டுமில்ல ... வேற யாரைப் பார்த்தும் சொல்ல மாட்டாங்க ..." என்றவளின் குரல் வெகுவாக கமர , ஓரிரு கணம் அங்கு அமைதி நிலவ,
"என் மேல இருக்கிற கோவத்தை, இனிமே சாப்பாட்டுல காட்டாத ..."
வெடுக்கென்று மொழிந்து விட்டு அகல்யா தோட்டத்தை நோக்கி நடக்க, பொன்னம்பலம் அவரைப் பின்தொடர, ஸ்ரீ குழம்பிய மனநிலையில் தன் அறை நோக்கி நடை போட்டாள்.
"அகல்யா நில்லு ..., நல்ல வேளையா உன் அம்மா வந்ததும் , அசதியாய் இருக்குன்னு தூங்க போயிட்டாங்க .... அவங்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிய வந்தா நிச்சயம் உன்னைய திட்டி தீர்த்திருப்பாங்க ...." என்ற கணவனைப் பார்த்து
"ஏதோ பேச்சுல, ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை கூட கொறச்சலா வந்துடுச்சு ... அதையே புடிச்சிகினு அவ தொங்கினா என்ன அர்த்தம் ..."
அகல்யா ஸ்ரீயை குற்றம் சாட்ட,
"மனசாட்சி தொட்டு சொல்லு ..... எதேச்சையா சொன்ன வார்த்தையா அது ..."
பொன்னம்பலம் சற்று காட்டத்தோடு வினவ, அகல்யா அமைதியாக தலைக் கவிழ்ந்தார்.
"அகல்யா, உன்கிட்ட இருக்கிற ஒரே பிரச்சனை, உன் பொண்ணு என்ன சொன்னாலும், அது உண்மைன்னு நம்பறது தான்.... இவ்ளோ வயசு ஆச்சு எப்ப தான் நீ மனுஷங்களை சரியா எடை போட கத்துக்க போற .... நம்ம பாண்டி ஒன்னும் எவளாவது கிடைப்பாளான்னு பொண்ணுங்க பின்னாடி அலையற ரகமில்ல... அவன் நெனச்சிருந்தா, இதோ இந்த வாட்ச் கொடுத்தாளே ஷோபனா, அவள மாறி கூட படிச்ச யாராவது ஒரு பொண்ண விரும்பறேன்னு வந்து நின்னு இருக்கலாம் .... அப்படி எதுவும் செய்யாம அன்பு ஓட கல்யாண முடிஞ்சதுக்கு அப்புறம் கூட தனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணுமானு யோசிச்சவன் ....
அவ்ளோ மனமுதிர்ச்சி உள்ளவன் தான், பொண்டாட்டி வேலைக்கு போவணுங்கிறதுக்காக, குழந்தை வேணாம்னு முடிவு எடுத்திருப்பானா ...
இத விட பொண்டாட்டி மேல இருக்கிற மோகத்தால, குழந்தை வேணாம்னு அவன் முடிவெடுத்திருக்கிறதா சொன்னையே .... அது சுத்த அபத்தமா தெரியல ....
கல்யாணமான புதுசுல புருஷன் பொண்டாட்டி ஒருத்தர் மேல ஒருத்தர் ஆசையா இருக்கிறது உலக வழக்கம் தானே........
ஏன் நாம கல்யாணம் ஆன புதுசுல, அப்படி இருந்ததில்லயா .... அப்ப என் அம்மா உன்னை பார்த்து அந்த வார்த்தைய சொல்லி இருந்தா நீ பொறுத்து போயிருப்பியா ... "
பொன்னம்பலம் பொரிந்து தள்ள , அகல்யா விக்கித்து போய் உறைந்து நின்றார்.
"இப்ப எல்லாம் கல்யாணமே ஏதோ பிசினஸ் கான்ட்ராக்ட் மாதிரி நடக்குது .... கல்யாண முடிச்ச ஒரே வாரத்துலயே, ஏதேதோ காரணத்துக்காக சண்ட வந்துடுது ... பொண்ணு பையனோட சண்டை ஒரு பக்கம்னா, பொண்ணு வீட்டு ஆளுங்க தலையீடு இன்னொரு பக்கம் ..... ஆனா நம்ம வீட்ல அப்படியா நடக்குது ...
பாண்டியும் பிரியாவும் ஒத்துமையா இருக்காங்க .... சம்மந்தியும் சரி சம்மந்தி அம்மாவும் சரி இப்ப வரைக்கும் எந்த விஷயத்திலும் தலையிட்டதில்ல.... பிரியாவையும் தப்பு சொல்ல முடியாது.... அது வேலைக்கே போனாலும் வீட்டு வேலை எல்லாம் செஞ்சு வச்சுட்டு தான் போவுது ...
இப்படி எல்லாம் சரியா இருந்தும், உன் பொண்ணு பேச்ச கேட்டுக்கினு என்னென்னமோ பேசி, நல்லா இருந்த குடும்பத்தை ஓடச்சிட்ட.... திரும்பவும் ஒட்ட வைக்கணும்னு பார்க்கற... ஆனா அது நடக்கும்னு எனக்கு தோணல ....இனிமேவாவது பாண்டி வர வரைக்கும் வாய மூடிக்கிட்டு சும்மா இரு .... அவன் வந்து என்ன முடிவு எடுக்கிறான்னு பார்ப்போம் ..."
என்றவர், அதற்கு மேல் அங்கு நிற்காமல் தன் அறை நோக்கி நடக்க , முதன்முறையாக, தான் பேசிய வார்த்தையின் வீரியத்தை பரிபூரணமாக உணர்த்து நொந்து போனார் அகல்யா.
படியேறி அறைக்கு வந்தவளுக்கு, பைத்தியம் பிடிக்காத குறை தான் ....
அப்படி ஒரு மன அழுத்தம் ....
ஒரு இடத்தில் பிரச்சனை என்றால்... பரவாயில்லை .... ஆனால் கால் வைத்த இடம் எல்லாம் கன்னி வெடி என்பது போல் திரும்பிய இடமெல்லாம் பிரச்சனை என்றால் பாவம் எப்படித்தான் சமாளிப்பாள்...
அலுவலகப் பிரச்சனை, வீட்டு பிரச்சனையே சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவளுக்கு, தற்போது வீதியிலும் பிரச்சனை ஏற்பட, மனம் ஒடிந்து போனாள் மாது .
ஏதோ ஒரு சூனியத்தில் சிக்கிக் கொண்டது போல், தன்னை சுற்றி குழப்பங்கள் கூடிக் கொண்டே வருவதை எண்ணி மனம் நொந்து கண்ணீர் வடித்தாள்.
சில மணித்துளிகளுக்குப் பிறகு, மனம் கனத்து வடித்த கண்ணீரானது, அவளது மன அழுத்தத்தை வெகுவாக குறைத்திருக்க, ஒரு மெல்லிய திடம் பரவ ஆரம்பிக்க , இன்றோடு சேர்த்து இன்னும் இரு இரவுகள் கடந்துவிட்டால், என்னவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கை ஒளி மெல்ல மேலெழும்பும் போது , வீராவிடமிருந்து குரல் செய்தி வந்து சேர்ந்தது.
அதில்,
"எப்படி இருக்க பட்டு .... உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் டி .... தொடர்ந்து 3 டிஃப்ரண்ட் ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு .... ஆனா வந்த வேலை சீக்கிரமா முடியுதுன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு .... இன்னைக்கு மீட்டிங்கும் ரொம்ப நல்லா போச்சு .... இன்னும் ரெண்டே நாள் தான், வேலை முடிச்சதும் பறந்து வந்துடுவேன் .... ஐ லவ் யூ டி ... மிஸ் யூ ..."
என்றவனின் குரலில் ஏகத்துக்கும் ஏக்கம் தெரிய, கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு குறைந்திருந்த அழுகை, மீண்டும் துளிர்த்தது.
கிட்டத்தட்ட ஐந்து மாதத்திற்கு முன்பு யார் என்றே தெரியாத ஒருவன், இன்று அவளது ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து அவளது ஆன்மாவை ஆகர்ஷிப்பவனாக இருக்கிறான் என்பதை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியம் மேலிட ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பந்தம் தொடர வேண்டும் இறைவா என மானசீகமாக வேண்டுதல் வைத்தபடி பதில் குரல் செய்தியை அனுப்பினாள் கூடிய விரைவில் அவளே அவனிடத்தில் பிரிவை யாசிக்கப் போகிறாள் என அறியாமல் .
அதீத மன உளைச்சல் காரணமாக ஆழ்ந்த உறக்கம் இல்லாததால் மறுநாள் காலையில் வெய்யோன் வந்த பிறகே விழித்தெழுந்தவளுக்கு வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவிற்கு, மீண்டும் ஒருவித மன அழுத்தம் ஆட்கொள்ள , நேற்றைய தாக்கமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு, அதனைப் புறந்தள்ளி விட்டு புத்துணர்வு பெற்று கீழ் தளத்திற்கு வந்த போது, காலை உணவினை தயார் செய்து முடித்திருந்தார் அகல்யா.
உணவு மேஜையில் இருந்த உணவினை கண்டதும் அவரது நேற்றைய வார்த்தைகள் நினைவுக்கு வர, தனக்குத் தேவையானதை தட்டிலிட்டு உண்டவள், பொன்னம்பலம், சுந்தராம்பாளிடம் மட்டும் சொல்லிக்கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.
பயணத்தின் போதும் வரையறுக்க முடியாத ஏதோ ஒருவித இறுக்கம், நடுக்கம் ,அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகளால், அவளது மனம் ஆக்கிரமிக்கப்பட்டு அல்லலுற்றது ....
காரணம் அறியாத அந்த உள்ளுணர்வு தாக்கம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து அதனை மொழிபெயர்க்க முயற்சித்தாள் ...
முடியவே இல்லை .... விடை காணா விடுகதையாய் அது தொடர்ந்து கொண்டே செல்ல, கடைசியில் நிம்மதி வேண்டி கடவுளின் மீது பாரத்தைப் போட்டவள் அலுவலகத்தை அடைந்ததும் , முதல் வேலையாக குறை தீர்ப்பு பிரிவு மற்றும் பயண பிரிவுக்குச் சென்று அதன் தலைமைகளை சந்தித்து முந்தைய தின இரவு நடந்ததை வாய் வார்த்தையாக மட்டுமில்லாமல் எழுத்துப்பூர்வமாகவும் எழுதிக் கொடுத்துவிட்டே தன் இருக்கைக்கு திரும்ப, அதற்குள் விஷயம் அறிந்த மோனிஷாவும் அவளை அழைத்து நடந்ததை மீண்டும் விசாரித்துக் கொண்டிருக்கும் போது திலக் அங்கு வந்து சேர்ந்தான்.
தான் எடுக்கப் போகும் நீண்ட விடுப்புக்காக சில அலுவலக சடங்குகளை மேற்கொள்ள வந்தவனுக்கு, அந்த செய்தி அதிர்ச்சியை கொடுக்க, அவனும் ஸ்ரீயிடம் ஒரு சில கேள்விகளை முன் வைக்க, தயங்காமல் தெளிவாக பதில் சொன்னாள் வீராவின் மனைவி.
சில மணித்துளிகள் உரையாடல்களுக்கு பிறகு அவள் விடைபெற்றதும், மோனிஷாவிடம் சில விஷயங்களை பேசியவன், மான்சி வீட்டில் இருப்பதை தெரிந்துகொண்டு, ராணாவின் வீட்டிற்கு பயணப்பட்டான்.
அன்று மாலையில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பிற்காக, நாயகிக்கான பிரத்தியேக உடைகளை தயார் செய்து கொண்டிருந்தவளை சந்தித்தவன்,
"நீ மனுஷியே இல்ல .... மான்சி ..." என்றான் எடுத்த எடுப்பில் பெரும் கோபத்தோடு.
அவனை ஆச்சரிய பார்வையில் எதிர்கொண்டவள்,
"ஆமா... நான் மனுஷி இல்ல... நான் தேவதை...." என்றாள் வெடுக்கென்று.
" தேவதையா.... நீயா .... ..."
அவன் வார்த்தைகளில் வெறுப்பை கக்க,
"ஆமா.... ராணா காட்டற அலட்சியத்தையும், நிராகரிப்பையும் இவ்ளோ வருஷமா பொறுத்துக்கிட்டு இதே வீட்லயே அவரோட இருக்கேன்னா அப்ப நான் தேவதை தானே .... "
"சினிமாகாரிக்கு பேச சொல்லியா கொடுக்கணும் ....." என்றான் திலக் நக்கலாய்.
" மைண்ட் யுவர் வேர்ட்ஸ் திலக் ...."
"இந்த மிரட்டலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.... ... நீயும் ராணாவும் ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையில கபடி விளையாடறீங்களே ... உங்க ரெண்டு பேருக்கும் மனசாட்சியே இல்லையா ..."
"சின்ன பொண்ணா... யாரது ..."
"தெரியாத மாறி கேட்காத .... ராணா ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிற ஸ்ரீப்ரியாவை உனக்கு தெரியாது??? ...."
அவள் அமைதியாய் நோக்க,
"அவ பார்க்க மது மாதிரியே இருக்காங்கிற ஒரே காரணத்துக்காக உன் புருஷன் ராணா அவ பின்னாடியே பைத்தியமா சுத்திகிட்டு இருக்கான் .... அதுவாது தெரியுமா.... ..."
"தெரியும் ...." என்றாள் அமர்த்தலாய்.
"சோ, அதுக்குத்தான் அந்த பொண்ண போட்டு தள்ள நேத்து நைட் ஆள ஏற்பாடு பண்ணி இருந்தியா ..... " என்ற படி திலக் அவளை உறுத்து நோக்க,
"இல்லையே.... அப்படி எதுவும் செய்யலையே...... ...." என அவள் மெய்யாகவே படபடக்க, அவளை முறைத்த படி
"நல்ல வேளையா அந்தப் பொண்ணோட பிரதர்-இன்-லா அங்க எதேச்சையா வந்ததால
செயின் ஸ்னாட்சிங் பண்ற மாறி, செயினை மட்டும் அறுத்து எடுத்துக்கிட்டு ஓடி இருக்கானுங்க ..... மத்தவங்களுக்கு வேணா அது சாதா செயின் ஸ்னாட்சிங் இஷ்யூ வா தெரியலாம்.... ஆனா எனக்கு நீ அந்தப் பொண்ணை கிட்னாப் பண்ண போட்ட பிளானோனு தோணுது ..." என்றான் காட்டமாய்.
"நோ திலக் ... நான் எதுவுமே செய்யல..."
"ஒன்னு மட்டும் ஞாபகத்துல வச்சுக்க... அந்தப் பொண்ணு இன்னசென்ட் ..... அந்த பொண்ணு மேல ஒரு சின்ன தப்பு கூட கிடையாது .... உன் புருஷன் தான் அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான் .... "
"என்னை நம்பு திலக் .... நான் அவ விஷயத்துல எதுவுமே பண்ணல ..."
"உன் பையன் மேல சத்தியமா சொல்லு .... அந்த பொண்ணு விஷயத்துல நீ எதுவுமே பண்ணலன்னு ...." பெருங்கோபத்தோடு திலக் வினவ
ஓரிரு கணம் அமைதி காத்தவள்
"பண்ணனும்னு நெனச்சேன் ..... ஆனா பண்ணல ..... " என்றாள் தீர்க்கமாய்.
"மான்சி , ப்ளீஸ் உண்மைய சொல்லு ... "
அவன் அதிர்ச்சியாய் கேட்க,
"சொல்றேன் .... செய்யாத தப்புக்காக இத்தனை வருஷமா நரக வேதனை அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன் ....
அதைவிட அந்தத் தப்பை செஞ்சிட்டா, இப்ப அனுபவிக்கிற வேதனை செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம்னு தோணிடுமில்ல.... அதுக்கு தான் மது மாதிரியே இருக்கிற அந்த பொண்ண ஏதாவது பண்ணனும்னு முடிவு பண்ணேன் ... அவளைப் பத்தி தெரிஞ்சிக்க மோனிஷா கிட்ட விசாரிச்சேன் ....
அவளும் நீ சொன்ன மாறி அந்தப் பொண்ணு இன்னசென்ட்னு தான் சொன்னா .... ஆனா எனக்கு அவ வார்த்தைல நம்பிக்கை இல்ல ....
அப்பதான் ஓரியண்டேஷன் ப்ரோக்ராம்ல கடைசியா அந்த பொண்ணு பேசின கிளிப்பிங்கை போட்டு காட்டினா ...
அதுல என் ஹஸ்பண்டுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் அதான் பாடினேன்னு அந்தப் பொண்ணு சொன்னத பார்த்தேன்.... ராணா அவகிட்ட க்ளோசா மூவ் பண்ண , ட்ரை பண்ணின ஒரு சில இன்சிடென்சயும் மோனிஷா சொல்லி அதுக்கு அந்த பொண்ணு ரெஸ்பான்ஸே பண்ணலன்னும் சொன்னா ....
ஆனா நான் மோனிஷாவை நம்பாம, அந்த பொண்ணு ராணாவை வெளிய எங்கயாவது மீட் பண்றாளான்னு தெரிஞ்சுக்க ஒரு வாரம் பிரைவேட் டிடெக்டிவ் வச்சி, அவளை ஃபாலோ பண்ணி பார்த்தேன் ....
அவ தான் உண்டு தன் வேலை உண்டு குடும்பம் உண்டுனு இருக்கிறதோட அவ ராணாவை எந்த வழிலயும் என்கரேஜ் பண்ணலன்னும் புரிஞ்சுகிட்டேன்... கூடிய சீக்கிரம் ராணாவோட இன்டென்ஷன புரிஞ்சுகிட்டு அவளாவே ஒதுங்கிடுவாங்கிற நம்பிக்கையும் அவ மேல வந்துடுச்சு ....
உணர்ச்சிவசப்பட்டு, கொஞ்சம் கூட யோசிக்காம தப்பை எல்லாம் என் புருஷன் மேல வச்சுகிட்டு அந்த அப்பாவி பொண்ண கொல்லனும்னு நெனச்சது எவ்ளோ பெரிய பாவம்னு அதுக்கப்புறம் தான் புரிஞ்சது .... உடனே மனச மாத்திக்கிட்டேன் ...
இப்ப சொல்றேன் கேட்டுக்க ... நேத்து நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.... இந்த உலகத்துல எனக்கு இருக்கிற ஒரே உறவு என் பையன் மட்டும்தான் அவன் மேல சத்தியமா சொல்றேன் .... நான் சொன்னது அத்தனையும் உண்மை ..." என்று முடித்தாள் விழி நீரோடு.
"தெரியாம தான் கேட்கறேன் ..... ராணாவோட பிரச்சினை உனக்கு தெரியுமில்ல ... எல்லாம் தெரிஞ்சும் நீ ஏன் உன் இத்தனை வருஷ வாழ்க்கையை வீணடிச்சி கிட்ட ....
அவன் தான் டிவோர்ஸ் கொடுக்க தயாரா இருக்கானே ..... "
"அவருக்கு அவர் காதல் மேல இருக்கிற பிடிவாதம், வைராக்கியம் மாறி, எனக்கும் என் காதல் மேல பிடிவாதம் வைராக்கியம் இருக்கு திலக் .... நான் ராணாவ நேர்ல பாக்கறதுக்கு முன்னாடியே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்...... என்னோடது பப்பி லவ்...... ஃபர்ஸ்ட் லவ் .... எந்த காலத்துலயுயே எந்த ஜென்மத்துலயும் மறக்காது ...நானும் ராணாவும் சந்தோஷமா வாழ்ந்தது வெறும் ரெண்டு மாசம் தான் .... அந்த ரெண்டு மாசத்த மனசுல வச்சிக்கிட்டு தான் இந்த 20 வருஷமா வாழ்ந்துகிட்டு இருக்கேன் ..."
என்றவளின் கண்ணீர் கோடாய் கன்னங்களில் இறங்க
"எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல.... கடவுளால மட்டும் தான் உங்க ரெண்டு பேர் பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல முடியும் .... சரி.... நான் சுனந்தாவோட ட்ரீட்மென்ட்காக சிங்கப்பூர் போறேன் .... ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் உடனே வந்துடுவேன் ...எதுக்கும் ராணா மேல ஒரு கண்ணு இருக்கட்டும் .... பீ கேர் ஃபுல் ..." என்றான் திலக் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி .
லேசான கலக்கத்தோடு சுனந்தாவின் உடல் நிலை குறித்து கேட்டு தெரிந்து கொண்டவள்
"நீ ஏன் ராணாவுக்கு அவர் பண்றது தப்புன்னு எடுத்து சொல்லி புரிய வைக்கக் கூடாது .... ????...
நீ சொன்னா அவரு கேட்பாரில்ல ...."
என்றவளை பரிதாபமாக பார்த்து விரக்திப் புன்னகை பூத்தவன்,
" நீ இன்னும் ராணாவ புரிஞ்சிக்கவே இல்ல .... அவன் அட்வைஸ்க்கு எல்லாம் அப்பாற்பட்டவன் .... தான் நினைச்சத சாதிச்சே ஆகணுங்கிறதுக்கு எந்த எல்லைக்கும் போவான் .... ஆனாலும் என்னால முடிஞ்ச அட்வைஸ பண்ணிட்டேன்...ஆனா அதை எடுத்துக்கிற மனப்பக்குவத்துல அவன் இல்லயோனு தோணுது ...
அவனை மொத்தமா எதிர்க்கவும் மனசு வரமாட்டேங்குது ...
காரணம் எங்கேயோ ராஜஸ்தான்ல கோட்டா சிட்டில துணி வித்துக்கிட்டு இருக்க வேண்டிய நான், இன்னைக்கு இப்படி காரு, பங்களா பிசினஸ், ஏன் நான் பேசற இங்கிலீஷ் எல்லாமே ராணா போட்ட பிச்சை .... அந்த விஸ்வாசம் தான் அவனுக்கு எதிரா எதையும் செய்ய முடியாம கட்டிப்போடுது.... அதே சமயத்துல மனசாட்சிய அடகு வச்சுட்டு இப்படி வாழறதும் ரொம்ப கஷ்டமா இருக்கு........
ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், அவன் ஸ்ரீ விஷயத்துல ராவணனா களம் இறங்கினா, நான் விபீஷணனா களமிறங்க தயங்க மாட்டேன் .... நன்றி விசுவாசத்துக்காக பாவத்துக்கு துணை போவேன்னு மட்டும் நினைச்சுக்காத ..."
என படபடத்து விட்டு, நண்பனை ஆழம் பார்க்க மீண்டும் அலுவலகத்திற்கு பயணமானான் திலக்.
அலுவலக பணியில் மூழ்கியிருந்த ஸ்ரீக்கு பிரபாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
அதில் , அவளை மிகவும் கவனமாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருந்ததோடு, சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்பு கொண்டு பேசுவதாக தெரிவித்திருந்தாள் ...
அச்செய்தி மனதிற்கு ஒரு வித இதத்தைப் தர, அப்போது அவளது கணவனிடமிருந்தும் குறுஞ்செய்தி வந்தது.
வழக்கம் போல் அன்றைய தினம் நன்றாக அமைய குரல் ஒலியாய் அவளது வாழ்த்துக்களை கேட்டிருந்தான் ...
உடனே புன்னகை தவழ , தனது காதலையும் வாழ்த்தையும் வெகு அழகாக ஆழமாக இரண்டே வரிகளில் மென் குரலில் அனுப்பியவள் , கார்த்திகேயன் வகை தொகை இல்லாமல் அனுப்பி இருந்த பணியில் மூழ்கிப் போனாள்.
மதிய உணவும் கடந்தது .... மாலை 4 மணியும் கடந்தது .... ஆனால் வேலை தான் முடிந்த பாடில்லை ....
இந்நிலையில் காலையிலிருந்து அலுவலகத்திற்கே வராமல் எங்கேயோ சென்றிருந்த ராணா, அப்போது தான் அலுவலகத்திற்கு வந்து , தன் அறைக்குள் நுழைய, அவனது வருகையை டிரைவர் மூலம் அறிந்து கொண்ட திலக், அவனை சந்தித்தான்.
"என்ன ராணா... காலையிலிருந்து ஆளையே காணோம் .... எங்க போயிருந்த ..." என்றான் திலக் சந்தேகமாய்.
"ம்ச்.... ஒரு கவர்மெண்ட் ப்ராஜெக்ட் விஷயமா, ஒருத்தரை பார்க்க வேண்டியது இருந்தது ... அதான் போய் பாத்துட்டு வந்தேன் ..."
"வழக்கமா என்னையும் கூட்டிக்கிட்டு தான போவ ... இது என்ன புது பழக்கம் ..."
"ப்ச்.... நீ நாளைக்கு ஊருக்கு போக போற.... அதுக்கப்புறம் நான் மட்டும் தானே இந்த ப்ராஜெக்ட்ட ஃபாலோ பண்ண வேண்டி வரும்... அதான் இன்னைக்கே போயிட்டு வந்துட்டேன் ....."
நண்பன் எதையோ மறைக்கிறான் என்பது, அவனது தடுமாறிய விழிகளும் தயங்கிய நாவும் வெகு அழகாக பறைசாற்ற, அதனை ஆழமாய் உள்வாங்கிக் கொண்டே,
" உனக்கு விஷயம் தெரியுமா ..." என ஆரம்பித்து, முந்தய இரவு ஸ்ரீக்கு நடந்த சம்பவத்தை விரிவாக விவரித்து விட்டு,
"நல்லவேளை, அவளோட பிரதர்- இன்-லா எதேச்சையா அங்கு வந்ததால , பெருசா எந்த பிரச்சனையும் இல்லாம அந்த பொண்ணு தப்பிச்சிட்டா .... உடனே அவ பிரதர்-இன்-லா, நேத்து நைட்டே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்ததோட எம்எல்ஏவையும் புடிச்சு , பிரஷர் கொடுத்து இருக்காரு.... இன்னைக்கு காலையில ஆபீஸ்ல அவ கம்ப்ளைன்ட் கொடுத்ததும் , அந்த டிரைவரை கூப்பிட்டு விசாரிச்சோம் ..... விசாரிச்சதுல அந்த டிரைவர் மேல தப்பு இல்லன்னு தெரிய வந்துச்சு .... உடனே ஃபீமேல் எம்பிளாயிச எப்படி சேஃப்பா டிராப் பண்ணனும்னு எல்லாருக்கும் ஒரு சர்குலர் அனுப்பியாச்சு... அதோட நம்ம சைடுல இருந்தும், போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு ....எஸ்பிக்கும் போன் பண்ணி பேசிட்டேன் ....48 ஹவர்ஸ்ல அந்த பசங்கள கண்டுபிடிச்சிடுவோம்னு சொல்லி இருக்காரு...."
கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் குருதிப்புனலாய் சிவந்து போக, அவனது உடலில் ஒருவித விறைப்புத்தன்மை தெரிய,
"ஸ்கவுண்டரல்ஸ் ...அந்தப் பரதேசி பசங்க யாரா இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கைய கால முறிக்கணும் ..... ஜென்மத்துக்கும் நடக்கவே முடியாதபடி செஞ்சா தான் புத்தி வரும் ..... இரு .... இப்பவே டிஜிபிக்கு ஃபோன் பண்றேன்..." என்றான் பெருங்கோபத்தோடு.
"ராணா.... ஸ்ரீப்ரியா நம்ப எம்பிளாயி.... அவ கொடுத்த கம்ப்ளைன்ட்டுக்கு என்ன செய்யணுமோ செஞ்சாச்சு .... இப்ப நீ எதுக்கு தேவையில்லாம டிஜிபிக்கு போன் பண்ற.... 2 வருஷத்துக்கு முந்தி இந்த மாதிரி ஒரு பிரச்சனை மான்சிக்கு வந்தப்ப நீ கண்டுக்கவே இல்லையே ... ஆனா இப்ப இவ்ளோ பதர்ற... மான்சி உன் பொண்டாட்டி டா.... அவள பத்தி கவலைப்படாம எவனோ ஒருத்தன் பொண்டாட்டிக்காக இவ்ளோ யோசிக்கறயே... உனக்கு வெக்கமா இல்ல ...."
திலக்கின் காட்டமான வார்த்தைகள் மற்றும் அவனது முகத்தில் தெரிந்த கடுப்பை கண்டு , சுயம் உணர்ந்து சுதாரித்தவன்,
"அ..அது.... இவ மது மாறியே இருக்காளா..... அ...அதனால வந்த அக்கறை .... மத்தபடி வேற எதுவும் இல்ல ...."
என அழகாக பொய்யுரைக்க, தன் சந்தேகம் சரி.... இவன் துளி கூட மாறவில்லை. மாறிவிட்டதாக நடிக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டவன் இனி பேசி பிரயோஜனம் இல்லை என்ற முடிவை எடுத்துவிட்டு,
"சரி ராணா, எனக்கு நாளைக்கு காலையில பிளைட் ..... தேவையில்லாத விஷயத்துல தலையிட்டு லைஃப்ப கெடுத்துக்காத.... டேக் கேர் ...."
என பொத்தாம் பொதுவாக அறிவுறுத்தி விட்டு , தன் இருக்கையிலிருந்து அவன் எழும்ப ,
" ஆல் தி பெஸ்ட் ... சுனந்தாவ நல்லபடியா பாத்துக்க .... ஏதாவது ஹெல்ப் வேணும்னா ஃபோன் பண்ணு .... இம்மீடியட்டா செய்யறேன்... ..."
அக்கறையோடு மொழிந்த ராணாவை, ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு, இடத்தை காலி செய்தான் திலக்.
திலக் சென்றதும்,
"யாருடா நீங்க .... உங்களுக்கு எவ்ளோ திமிர் இருந்தா என் மது மேல கை வச்சிருப்பீங்க .... போலீஸ்ல சிக்குங்க... அப்புறம் உங்களுக்கு ஊதறேன் சங்கு ..." என்றவன் தன் நண்பனுக்கு நண்பனான டிஜிபிக்கு அழைப்பு விடுத்து, விஷயத்தை பகிர்ந்தான்.
கூடிய விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என்ற பதில் கிடைக்க மகிழ்ந்து போனான் ....
ஏனோ அந்தக் கணமே அவனது மதுவை அழைத்துப் பேசி தன் மனக்குமுறல்களை கொட்ட வேண்டும் என்ற ஆசை துளிர்க்க, அதற்கான தருணத்திற்காக காத்திருக்க தொடங்கினான்.
மாலை மணி ஆறை கடந்தது .
ஸ்ரீ, தன் பணியிலேயே மூழ்கி இருக்க, அவள் ஏழு மணிக்குத்தான் இனி புறப்படுவாள் என்று முடிவு செய்தவன், அதற்கு முன்னதாக மோனிஷாவை அப்புறப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, பருத்தியே புடவையாய் காய்த்தது போல், சற்று நேரத்திற்கெல்லாம் மோனிஷாவே அவனை சந்தித்து, தன் குழந்தையின் உடல் நிலையை காரணமாகச் சொல்லி, மீதி வேலையை மறுதினம் முடித்து அனுப்புவதாக சொல்லி விடை பெற, குதூகளித்துப் போனான்.
உள்ளடங்கி அமைந்திருக்கும் அவனது அறைக்கு எதிராக மோனிஷா மற்றும் ஆண்டனியின் பணியிடங்கள் மட்டுமே இருக்கும்.
அவர்கள் இருவரும், இல்லையென்றால், அவனது அறை தனித் தீவுதான் .....
அங்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதை மற்றவர்கள் அறிய வாய்ப்பே இல்லை ...
அது மட்டுமல்ல தன் மனநிலை பிரச்சனைக்காக ஏற்கனவே அவன் தனது அறையில் சவுண்ட் ப்ரூப் மற்றும் இரட்டைக் கண்ணாடி தொழில்நுட்பத்தை நிர்மாணித்திருந்ததால், தற்போது நடைபெறவிருக்கும் தன் காதலியுடனான சந்திப்பு வெளியே கசிய வாய்ப்பில்லை என்பதால்,துணிச்சலாகவே களம் இறங்க தயாராகிக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் ஆண்டனியும் கிளம்பி விட , வார இறுதி என்பதால் அந்தத் தளத்தில் இருந்த பெரும்பாலானோர் கிளம்ப, மணி ஏழைத் தொடப்போவதைக் கண்டு, ஸ்ரீயும் அன்றைய பணி குறித்த மின்னஞ்சலை கார்த்திகேயனுக்கு அனுப்பி விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது , அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
அவள் அழைப்பை அனுமதித்ததும்,
"ஸ்ரீ, கொஞ்சம் என் ரூமுக்கு வர முடியுமா .... " அவன் வினவ
எதிர் முனையில் அவள் அமைதி காக்க,
"ஒரு டூ மினிட்ஸ் பேசணும் அவ்ளோ தான்.." என்றான் இயல்பாய்.
சிறு தயக்கத்திற்கு பிறகு,
"ஓகே ... " என அழைப்பை துண்டித்தவள், கணினியை அணைத்து விட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.
வந்தவளை, உச்சி முதல் பாதம் வரை அக்கறையும் தவிர்ப்புமாய் பார்த்தவன்,
"உக்காரு ஸ்ரீ .... நேத்து நைட் உங்க ஏரியால என்ன நடந்தது ... " என்றான் பரிவோடு எடுத்த எடுப்பில்.
அவள் சற்று தடுமாறி கொண்டே முந்தைய இரவு சம்பவத்தை சொல்ல சொல்ல, அவன் உடலில் ஒரு வித இறுக்கமும், வெம்மையும் மின்னல் ஒளியாய் பரவ, உடனே அதனை கட்டுப்படுத்த நினைத்து சிகரெட்டை உதட்டில் வைத்து லைட்டரால் பற்ற வைத்தவன் , லைட்டரை கண்ணாடி மேஜையின் மேல் வீசிவிட்டு, ஆழ்ந்த புகை ஒன்றை வெளியேற்றி
" ஸ்ரீ.... லிசன் ...." எனத் தொடங்க
" ஐ அம் அலர்ஜிக் டு ஸ்மோக் ... ராணா...." என்றாள் வெடுக்கென்று.
" சாரி ...." என மேஜையின் மேல் இருந்த ஆஷ் ட்ரேயில் சிகரெட்டை குத்தியவன்
"இ.....இங்க பாரு ம.... மது .... பி கேர்ஃபுல் ...நீ என் லைஃப் மது .... உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்னால தாங்கிக்கவே முடியாது .... நீ இப்பவே என் கூடவே வந்துடு மது ..... நாம பிரைவேட் ஜெட்ல இன்னைக்கு நைட்டே கிளம்பிடலாம் ..."
என்றான் உடல் நடுங்க, முகம் சிவக்க உணர்ச்சிப் பூர்வமாய்.
ஆனால் ஸ்ரீயோ அவனை அச்சத்தோடு, புரியாத பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தாள் .
காரணம் அவன் பேசியது முழுக்க முழுக்க சிந்தி மொழியில்.
மெல்லிய நீர் திரையோடிய உணர்ச்சிப் பிழம்பான விழிகள் , உதறிய கரங்கள், நடுங்கிய உடல் மொழி ஆகியவை, அவன் அலுவலக விஷயத்தை தாண்டி வேறு ஏதோ சொல்ல வருவதை சொல்லாமல் சொல்ல,
"ப்ளீஸ் எக்ஸ்கியூஸ் மீ ..... நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல ...." என்றாள் விருட்டென்று நாற்காலியை நகர்த்திவிட்டு எழுந்து நின்று, இல்லாத தைரியத்தை இழுத்துப் பிடித்து.
" ஓ சாரி.... மதூ.... உனக்கு சிந்தி மறந்து போச்சு இல்ல ...."
" ஐயோ ... இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு.... ஏன் என்னென்னமோ பேசறீங்க.... .... யார் அந்த மது ..... "
" நீதான் மது ....."
" நானா ..."
தலையும் புரியாமல் காலும் புரியாமல் தடுமாறியவள், அவனுக்கு ஏதோ மனநிலை சரியில்லை என்பதை மட்டும் கண நேரத்தில் அனுமானித்து விட்டு,
"நீங்க சொல்ற மது நான் கிடையாது .... உங்களுக்கு ஏதோ உடம்பு சரி இல்லனு நினைக்கிறேன் .... சீக்கிரம் டாக்டர பாருங்க ..."
என்றவள் அவனது பதிலுக்கு காத்திராமல் வேகமாக கண்ணாடி அறை கதவை நோக்கிச் செல்ல , கண நேரத்தில் ஓடி வந்து வழி மறைத்தவன்,
"நீ என் மது தான் ..... அதே கண்ணு .... அதே முகம் ... அதே கலர் ....அதே கன்னக்குழி .... "
என சொல்லிக்கொண்டே லேசாக மூச்சிரைத்தபடி அவன் முன்னேற, அவள் அச்சத்தில் பின்னோக்கி அடி மேல் அடி வைத்து நடந்து, ஒரு கட்டத்தில் பரந்த விரிந்த கண்ணாடி மேஜையின் மீது மோதி நிற்க,
"இன்னும் ஒன்னு சொல்லட்டுமா .... உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிஞ்ச விஷயம் ...."
கண்களில் மோகமும் தாபமும் வகைத்தொகை இல்லாமல் தாண்டவமாட, தன் இரு கரங்களையும் கண்ணாடி மேஜையின் மேல் பதித்து அவளை தன் கைகளுக்குள் சிறை பிடித்தவன்,
" உன் முதுகுல, ரைட் சோஷ்டர்க்கு கீழ , ரொம்ப டீப்பா ஒரு சிவப்பு மச்சம் இருக்கு .... சரியா ..." என்றதும், இருதயம் இயங்க மறுக்க, மூச்சு பந்தனம் செய்ய , அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் வீராவின் கண்ணாட்டி.
அவள் முதுகில் இருக்கும் அம்மச்சத்தை அவ்வளவு எளிதாக புதியவர்களால் பார்க்கவே முடியாது என்கின்ற நிலையில், அவன் தெளிவாக உரைத்தது, அவளது நெஞ்சத்தை படபடக்க செய்ய,
"திஸ் இஸ் டூ மச் .... இப்படி மிஸ் பிஹேவ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன் ...."
என்றாள் முகத்தில் வழிந்த வியர்வையை நடுங்கிய கரத்தால் துடைத்துக் கொண்டே.
" இருக்கா.... இல்லையா அத சொல்லு ..."
இப்பொழுது அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் மோத, அவன் முகத்திற்கும் அவள் முகத்திற்கும் இடையே சில கடை விரல்கள் தொலைவே இருக்க, உடனே சுதாரித்தவள் , அவனை முறைத்துக் கொண்டே கண நேரத்தில் கண்ணாடி மேஜையின் மேல் துழாவி லைட்டரை இடது கையால் தேடி எடுத்து ,
"இன்னும் ஒரு இன்ச் கிட்ட நெருங்கின , என்னை நானே கொளுத்திப்பேன் ...."
என்றாள் லைட்டரை அவன் முகத்துக்கு நேராக ஒளிரச் செய்து .
லைட்டரில் கொழுந்து விட்டிருந்த நெருப்பை கண்டதும்,
" ஐயோ மது ..... அப்படி எதுவும் பண்ணிடாத ...." என்றபடி அவன் மேலும் நெருங்க, அவன் கண்களில் தெரிந்த கட்டுப்பாடற்ற பயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டாவை கழற்றி எடுத்து, அதில் அவள் நெருப்பு வைக்க, ஜார்ஜெட் என்பதால் அது அதிவிரைவில் கொழுந்து விட்டெரிய,
"ப்ளீஸ் மது .... நான் உன்கிட்டயே வரமாட்டேன் மது.... தீய வச்சுக்காத .... ப்ளீஸ் ...."
என செஞ்சாந்தாய் சிவந்த கண்களோடு , தன் தலையை பிடித்துக் கொண்டு அவன் கதற, இதுதான் தருணம் என எரிந்து கொண்டிருந்த துப்பட்டாவை தரையில் வீசிவிட்டு, தன் கைப்பையோடு மின்னல் வேகத்தில் அந்த அறையை விட்டு வெளியே வந்தவள் மின் தூக்கிக்கு கூட காத்திராமல் நான்கு நான்கு படிகளாய் தாவி கீழ் தளத்தை அடைந்தாள்.
மேல் மூச்சு கீழ் மூச்சிறைக்க, இருதயம் இடம் மாறி துடிக்க, கை கால்கள் நடுங்க, செய்வதறியாத ஒரு கணம் சமைந்து நின்றவள், திடீர் முடிவாய் அலுவலக வாகனத்தில் பயணிக்க விரும்பாமல் சாலையில் சில அடிகள் வேகமாய் நடந்து, எதிர் வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் அமர்ந்ததும் தான், நிம்மதி பெருமூச்சு விட்டவள் இந்த வேலைக்கு இன்றோடு முழுக்க போடுவது மட்டுமல்லாமல், மறுதினமே மதுரைக்கு பயணப்பட வேண்டும் என்ற முடிவையும் எடுத்துவிட்டு, அதை செயல்படுத்தும் வழிமுறையை எண்ணிய படி வீட்டிற்கு பயணப்பட்டாள்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....
Super mam
ReplyDeletethanks dr
Deleteawesome as always 💕💕💕💕💕💕
ReplyDeletethanks dr
DeleteApo unmaiya mathu oda maru jenmam thana nama sri... Veera kita iruka matala... Pavam la... Knjm sikkirama nxt ud kodunga mam... Rmba wait panna vaikkiringa...
ReplyDeleteud upload panniten da...thanks ma
DeleteVery interesting sis. Waiting for next ud. Seekirama podunga. Sri epadiyo escape agi madurai poyita pothum. Veera vanthathum pathupan.
ReplyDeletethanks a lot da....ud upload panniten da
Delete