அத்தியாயம் 132
அடை மழை போல் அழுது முடித்தது ஒரு வித நிம்மதியை தர, முகம் கழுவி புத்துணர்வு பெற்று குளியல் அறையிலிருந்து வெளிப்பட்டவனின் கண்களில் , அவனவளின் இமைகளுக்குள் கருவிழிகளின் நகர்வுகள் தென்பட, அளவுக்கு அதிகமான ஆனந்தத்தில் உடல் நடுங்க, கண்கள் துளிர்க்க மனையாளை நெருங்கியவன்,
"லக்ஷ்மி .... லக்ஷ்மி .... " என்றான் தளும்பிய குரலில் அவள் கன்னம் தொட்டு.
இம்முறை இமைகளின் அசைவோடு விரல்களிலும் அசைவு தெரிய, தன் இரு கரங்களால் அவள் கன்னங்களைப் பற்றிக் கொண்டு
"லக்ஷ்மி.... ப்ளீஸ்மா ..... கண்ணு முழிச்சி என்னை பாரு...." என்றான் கண்களில் நீர் வழிய.
சில மணித்துளிகள் அவனை சோதித்து விட்டு, மெல்ல முயன்று களைப்பாய் அவள் இமைகளை திறக்க, விழிகள் பொங்க அவள் விழிக்குள் அவன் நோக்க, அவனைக் கண்டு கொண்டதற்கு அடையாளமாக மெல்லிய மின்னலாய் அவளது விழிமணிகள் ஜொலிக்க ,
" லட்சுமி.... லட்சுமி ....."
அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவளது கரங்களை தன் கரங்களுக்குள் அவன் கொண்டு வர, அவளது விழிகளிலும் மெல்லிய நீர் கோர்க்க,
"தேங்க்ஸ் லக்ஷ்மி ...." என்றான் உணர்ச்சி பெருக்கில்.
அவனது நன்றியை உணர்ந்து கொண்டதற்கு அடையாளமாக கன்னகதுப்புகள் லேசாக அசைய உதடுகளை திறக்க முயன்றவள், அடுத்த சில கணத்தில் மீண்டும் நித்திரையை தழுவினாள்.
உடனே அவன் மருத்துவரை அழைத்து நடந்ததை தெரிவிக்க, விரைந்து வந்த மருத்துவர் லட்சுமியை பரிசோதித்துவிட்டு
"ஷீ ஈஸ் அப்சல்யூட்லி ஃபைன் நவ் ... இன்னும் 48 ஹவர்ஸ்ல, ஷீ வில் பி பர்பெக்ட்லி ஆல்ட்ரைட் ...." என்றார் சந்தோஷமாக.
"தேங்க்ஸ் டாக்டர் ... தேங்க்ஸ் ... தேங்க்ஸ் அ லாட் ...." என்றான் அவரது கரத்தைப் பற்றிக் கொண்டு ஆனந்தத்தில்.
"இன்னும் ஒரு குட் நியூஸ் .... உங்க ரெண்டு குழந்தைகளும் ரொம்ப அருமையா ரெஸ்பான் பண்றாங்க .... ஜான்டீஸ் டிரேசஸ் எல்லாம் இப்ப கம்ப்ளீட்லி சால்வ்டு.....
மில்க் இன் டேக் நல்லா இருக்கு ..... குழந்தைகளோட எடை நல்ல கூடியிருக்கு ...
இன்னும் ஒரு வாரத்துல நீங்க அவங்களை வீட்டுக்கே கூட்டிட்டு போயிடலாம் .... வீட்ல குழந்தைகள பாத்துக்க நர்ஸ ஏற்பாடு பண்றேன் ..."
"தேங்க்யூ சோ மச் டாக்டர் ...." என்றான் ராம்சரண் மீண்டும் மிகுந்த மகிழ்ச்சியில்.
அவனது இரண்டு ஆண் குழந்தைகளும், நிறத்தில் அவனைக் கொண்டும், சாயலில் லட்சுமியை கொண்டும் பிறந்திருந்தார்கள் ....
அத்துணை அழகான குழந்தைகள் தாயில்லாத குழந்தைகளாகி விடக்கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தவனுக்கு, ஒரே தினத்தில் சர்க்கரைச் செய்திகள் அணிவகுத்து வந்து சேர, ஆனந்தத்தில் திக்கு முக்காடி விட்டான் லட்சுமியின் மணாளன்.
விஷயத்தை கேள்விப்பட்டு, ராம்சரணின் வீட்டிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அளவில்லா ஆனந்தம் அடைய, நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டார் ரங்கசாமி.
லட்சுமி கண் விழித்ததும் முதல் வேளையாக , திருமணம் முடிந்தும் மருத்துவமனையே பழியாய் கிடக்கும் ஸ்ரீனி ராமலட்சுமியை எங்காவது தேன் நிலவிற்கு அனுப்பி அவர்கள் மண வாழ்க்கையை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டார் அந்த மாபெரும் மனிதர்.
----------------------- -----------------------------------------
ஏதேதோ நினைவுகளோடு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவளிடம்,
"பிரியா, கிழங்கு செஞ்சு வச்சுட்டேன்..... சப்பாத்தி மட்டும் எல்லாருக்குமா செஞ்சிடு......... ..." என்றார் அகல்யா தொலைக்காட்சியில் இருந்து பார்வையை விளக்காமல்.
அலுவலகப் பணிச்சுமையை விட , ராணாவின் நடவடிக்கையால் அலுவலகத்தில் அவளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் அரசியல், அவளை வெகுவாக அலை கழித்திருக்க, உடலும் மனமும் சோர்வின் உச்சத்திற்கே சென்று ஓய்வை எதிர்பார்த்திருந்த நிலையில் , இப்படி ஒரு கட்டளை அவளைத் தடுமாறச் செய்ய, திணறி போனாள் பெண்.
அவளவன் இருந்திருந்தால் , அவளது விழிச்சோர்விலேயே, வலியை அறிந்து கொண்டு உதவி இருப்பான் ....
இப்பொழுதும் வலியை வாய் விட்டுச் சொன்னால், உதவிக்கரம் நீட்டுவார்கள் தான்.... ஆனால் அதற்குப் பின்பான ஜாடை மாடையான வசவுகளையும் அவள் தானே தாங்கியாக வேண்டும் .....
அதற்கு சத்தம் இல்லாமல், சமைப்பதே மேல் என்ற எண்ணம் வர, துரிதமாக புத்துணர்வு பெற்று வந்து அடுக்களைப் பணியில் ஈடுபட்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் இரவு உணவு தயாராகி விட, தொண்டை கரகரப்பு ஜலதோஷம் காரணமாக சுந்தராம்பாள் முதல் ஆளாக பெயருக்கு ஒரு சப்பாத்தியை கொறித்து விட்டு ஓய்வெடுக்க சென்றுவிட, நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த பொன்னம்பலம் அப்போது வீடு திரும்ப , அவருடன் அகல்யாவும், ஸ்ரீயும் இரவு உணவை உட்கொண்டு முடித்தனர்.
அடுத்த அரை மணி நேரத்தில், அவசர அவசரமாக அடுக்களை பணியை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தவளுக்கு, அவனது நாயகனிடமிருந்து whatsapp காணொளி அழைப்பு வர, துள்ளி குதிக்காத குறையாய் அழைப்பை அனுமதித்து,
"சூப்பர்ப் ஸ்பீச்.... அருமையா இருந்தது ...."
என்றாள் எடுத்த எடுப்பில் .
"அது இருக்கட்டும் ... நீ எப்படி இருக்க ..... உடம்பு சரி இல்லையாடி.... ரொம்ப டல்லா இருக்க ... வீட்ல ஏதாவது பிரச்சனையா ... "
என்றான் அவளது முகத்தில் தெரிந்த அளவுக்கு அதிகமான சோர்வைக் கண்டு.
அவனைப் பொறுத்தமட்டில் வீட்டு பிரச்சினை தான் பெரும் பிரச்சனை. பொறுமையாகவும் மனமுதிர்ச்சியோடும் கையாளபட வேண்டியதும் அது மட்டும் தான்......மற்றபடி அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் தற்காலிகமானதே ....
பணிச்சுமை அதிகம் இருந்தாலோ, அல்லது தலைமை அதிகாரி அதிகம் கெடுபுடியாக செயல்பட்டாலோ, பணியை மாற்றிக் கொள்ளலாம் என்ற அடிப்படை எண்ணம் கொண்டவன் என்பதால், அவ்வாறு வினவ ,
"வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல.... இன்னைக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வொர்க் லோடு அதிகம்... அதான் ... " என்றாள் பெண் சோர்வை மறைத்து.
"ஓ.... " என்றவன் நினைவு வந்தவனாய்,
"பட்டு, ஒரு குட் நியூஸ் .... நாளைல இருந்து தொடர்ந்து 3 நாள் வார் ரூம் மீட்டிங் ஸ்கெடியூல் ஆயிருக்கு .... அது மட்டும் 100% சக்சஸ் புல்லா முடிஞ்சிடுச்சின்னா , நான் இந்த வீக் எண்டுலயே ஊருக்கு வந்துடுவேன்........" என்றான் குதூகலமாய்.
"வாவ் வெரி குட் .... ஆனா அது என்ன வார் ரூம் மீட்டிங் .... அதுவும் தொடர்ந்து 3 நாளைக்கு.....???.."
"ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்ல, பிளானிங், டெசிஷன் மேக்கிங் , கிரைசிஸ் மேனேஜ்மென்ட், பிசினஸ் டெவலப்மெண்ட்னு ஏகப்பட்ட விஷயம் இருக்கு ... அதுல ஏதாவது ஒரு முடிவு எடுக்கணும்னா சம்பந்தப்பட்டவங்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு, அவங்க ரிப்ளைக்காக காத்திருக்கணும் ....
அதே மாதிரி ஏதாவது ஒரு விஷயத்துக்கு கிளையன்ட் அப்ரூவல் வாங்கணும்னா, அதுக்கு கிளைண்டுக்கு மெயில் போடணும் ... இல்லன்னா மீட்டிங் அரேஞ்ச் பண்ணி வார கணக்கா பேசி, டெசிஷன் எடுக்கணும் .... இந்த ப்ராசஸ்க்கு எல்லாம் நேரம் விரயமாகும்....
அதுவே வார் ரும் மீட்டிங் அரேஞ்ச் பண்ணினா, ப்ராஜெக்ட் கிளையன்ட்ஸ டைரக்டா மீட் பண்ணி , பேசி, எல்லா முக்கியமான முடிவுகளை ஒரே நாள்லயே எடுத்திடலாம் ..... வந்த வேலையும் சீக்கிரமா முடிஞ்சு போயிடும் ... நான் இங்க வந்தது மொத்தம் 3 ப்ராஜெக்ட்ஸ்காக ....
எப்படியோ அந்த நாலு கிளையன்ட் கிட்டயும் பேசி, தொடர்ந்து 3 நாள் வார் ரூம் மீட்டிங்க அரேஞ்ச் பண்ணிட்டேன் ....அது மட்டும் சக்சஸ் ஃபுல்லா முடிஞ்சிடுச்சின்னா மறுநாளே நான் ஊருக்கு கிளம்பி வந்துடுவேன் ...." என்றான் மகிழ்ச்சியாய்.
" வாரே வாவ்... சூப்பர்ப் ராம்...."
" ஆனா இதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு ...."
" சிக்கலா.... என்ன ராம்...."
"நாளைல இருந்து ஒரு 3 நாளைக்கு உன் கிட்ட பத்து நிமிஷம் கூட பேச முடியாது .... ஃபர்ஸ்ட், யுகே இந்தியா டைமிங் டிஃபரென்ஸஸ் .... ரெண்டாவது 3 ப்ராஜெக்ட்ஸ்க்கும் தொடர்ந்து பிரிப்பர் பண்ண ஆன்சைட் கவுண்டர் பார்ட்ஸ் என் கூடவே இருக்க போறாங்க .... சோ நோ பிரைவசி .... அதைவிட ஹெவி டியூட்டி கால்குலேஷன்சுங்கிறதால கொஞ்சம் கான்சன்ட்ரேஷன் மிஸ்ஸானாலும் மீட்டிங்கே சொதப்பிடும் .... அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு ... "
"3 நாள் தான... ஒன்னும் பிரச்சனை இல்ல ... நான் மேனேஜ் பண்ணிப்பேன் ... 15 டேஸ் ஒர்க்க, ஒரு வாரத்துக்குள்ள முடிச்சிட்டு வரேன்னு சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு .... ஒரு சின்ன ஹாய் ஹலோ மெசேஜ் மட்டும் அனுப்பிடுங்க .... எனக்கு அதுவே போதும் ... மீட்டிங்க நல்லபடியா முடிச்சுட்டு அஞ்சாவது நாள் போன் பண்ணுங்க ... நிறைய பேசலாம் ..."
"உன்னோட பேசிக்கிட்டே இருந்தா டைம் போறதே தெரியல டி.... அதன் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் ... இந்த 3 நாளைக்கும் ஹோட்டல் சாப்பாடு தான் ... சமைக்க கூட நேரம் இல்ல..."
"இட்ஸ் ஓகே ஏவிபி சார்... உங்க வேலைல கான்சன்ட்ரேட் பண்ணி அதை சக்சஸ் ஃபுல்லா முடிச்சிட்டு வாங்க ... ... அதுவே போதும் ..."
என்றவளுக்கு ராணாவின் சமீபத்திய நடத்தை மற்றும் அலுவலகத்தில் நடக்கும் அரசியலைப் பற்றி தற்போது பகிர்வது அவசியமற்றது என்று தோன்ற, ஓரிரு வார்த்தைகள் மட்டும் இயல்பாய் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
அவனது பணியின் கடினங்களை அவள் நன்கு அறிவாள்.
அவன் அவளுக்காகத்தான் இவ்வளவு பாடு படுகிறான், என்பதோடு அந்த வார இறுதியிலேயே ஊர் திரும்பப் போகிறான் என்பதால் தேவையில்லாமல் தன் அலுவலகப் பிரச்சனைகளை பற்றி கூறி அவனது மன அழுத்தத்தை கூட்ட மனமில்லாமல், மகிழ்ச்சியோடு அழைப்பை முடித்துக் கொண்டாள் , இனி வரும் ஒவ்வொரு தினத்தையும் கடக்க அவள் நெருப்பாற்றை நீந்த வேண்டும் என்று அறியாமல்.
மறுநாள் இயல்பாய் விடிந்தது.
வழக்கம் போல் வீட்டுப் பணிகளை துரிதமாக முடித்துவிட்டு, அரக்கப் பறக்க கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தவளுக்கு வகைத்தொகை இல்லாமல் வரிசை கட்டி புதுப்புது பணிகளை மின்னஞ்சலில் ஒதுக்கியிருந்தான் கார்த்திகேயன்.
நியமித்திருந்த பணிகள் சற்று கடினமே என்றாலும், புதியவைகள் என்பதால், அறிந்து கொள்ளும் நோக்கில் ஆர்வமாய் கவனம் செலுத்த தொடங்கினாள்.
பணியில் மூழ்கி இருந்தவளை வழக்கம் போல், மடிக்கணினியினூடே அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான் ராணா.
அடர் நீல நிற முழு கை டாப்ஸ் , கருப்பு நிற ஜீன்ஸில் சற்று உயர்த்திப் போடப்பட்டிருந்த குதிரைவால், லேசான உதட்டுச் சாயம், நெற்றியில் சிறு அரக்கு நிற பொட்டு, சிறு கீற்று வகுட்டு குங்குமத்தோடு வேறு அரிதாரம் ஏதும் இல்லாமல் பிறந்த குழந்தையின் சருமத்தில் காணப்பட்டவளை லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு , அவளது வகுட்டு குங்குமம் லேசான எரிச்சலை தர,
"இது என்ன ஜீன்ஸ் போட்டுக்கிட்டு, கர்நாட்டாகமா, வகுட்டுல சின்னதா சிந்தூர் ....
நல்லாவே இல்ல ..." என்றான் வாய்விட்டு பொறாமையோடு.
ஆனால் உண்மையில் அவள் அந்த சாதாரண ஒப்பனையிலும் அழகாகவே இருந்ததை அவன் மனம் ரசிக்கவே செய்தது.
அது மட்டுமல்ல அவள் அணிந்து வரும் ஜீன்ஸ் டீ சர்ட் கூட, உடலைக் கவ்விக் கொண்டு இறுக்கமாக இல்லாமல், சற்று தளர்வாகவும் நேர்த்தியாகவுமே இருக்க சுடிதார் , புடவையில் கூட ஆபாசத்திற்கு இடம் தராமல், அழகாக போர்த்தினார் போல் அணியும் பாங்கை ஆராய்ச்சி கண் கொண்டு பார்த்தவனுள் வகைத்தொகை இல்லாமல் மோகம் வழிந்தோடியது.
அவனது மதுவிற்கு பிறகு, மான்சி உட்பட ஆயிரம் மாதுகளை பார்த்து விட்டான் , உடல் வேட்கை தான் தணிந்ததே ஒழிய, நாடி நரம்பெங்கும் உருகி ஓடும் நேசத்தை எவரிடத்திலும் அணு அளவு கூட அவன் உணர்ந்தே இல்லை.
ஆனால் இவளிடத்தில் மட்டும் ஆசையும் காதலும் அழையா விருந்தாளிகளாய் , அவ்வப்போது வந்து ஆக்கிரமித்து இம்சிப்பதை ஒரு போதையாய் உள்வாங்கியவன்,
"அந்த யூஸ்லெஸ் ஃபெல்லோ யுகே ல இருந்து வர்றதுக்குள்ள, உன்னை என் கோட்டைக்கு கூட்டிகிட்டு போயிடுவேன் மது ... அப்பத்தான் நீ நல்லா இருக்க முடியும் நீ நல்லா இருந்தா தானே நான் நல்லா இருக்க முடியும் ..."
என முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய கலந்தாய்வுக்கான அழைப்பு வர, அதில் மூழ்கிப் போனான்.
எப்பொழுதுமே யாரிடமும் வலிய சென்று பேசும் பழக்கம் இல்லாதவள் ...
அதே சமயத்தில் யாரேனும் பேசினால் நன்றாக பேசுபவள் ...
ஆனால் முந்தைய தினத்திலிருந்து அலுவலக உறுப்பினர்கள் அவளிடம் காட்டிய இடைவெளி , ராணாவை பற்றி கயல்விழி கொடுத்த விளக்கம் ஆகியவை, அவளை மேலும் இறுகச் செய்ய, யாரையும் பார்க்க பிடிக்காமல் தன் இருக்கையிலேயே மதிய உணவை உண்டு முடித்தாள்.
அப்போது அவளது கண்ணாளனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
"குட் மார்னிங், விஷ் மீ குட் லக் ..."
என்றதை படித்ததும், தனது பணிக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவம், மெனக்கெடல்கள் ஒரு கணம் அவளை வியக்கச் செய்ய,
"ஆல் தி பெஸ்ட் ராம்.... யூ வில் டு வொண்டர்ஸ்..." என்ற பதிலை மனமார தன் ஆன்ம தெய்வங்களை மனதில் நிறுத்தி அனுப்பி வைத்தாள்.
முந்தைய தின இரவு தன் அலுவலகப் பிரச்சனைகளை பகிராமல் விட்டது எத்துணை சரி என்றும் உணர்ந்தவள், இன்றோடு சேர்த்து 3 இரவுகள் கடந்தால் போதும், கணவன் ஊர் திரும்பி விடுவான், என்ற எதிர்பார்ப்பிலேயே அன்றைய பணியில் மூழ்கிப் போனாள்.
மாலை 6 மணிக்கு மேல் வீடு திரும்பியவளை கார் போர்டிகோவில் தன் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பிரபா இன் முகத்தோடு வரவேற்க , அவளுடன் பேசியபடி வீட்டிற்குள் நுழைந்தவளிடம் ,
"பிரியா, இந்த வெந்தயக் கீரைய எல்லாம் எடுத்து பிரிட்ஜில வை ... வித்துப் போகலன்னு அஞ்சாறு கட்ட தலைல கட்டிட்டு போயிடுச்சு அந்த கீரை காரம்மா ..." என சுந்தராம்பாள் சோர்வாகச் சொல்ல
"அக்கா, நீங்க ரெண்டு கட்ட எடுத்துட்டு போங்களேன் .... வெந்தயக்கீரைல அயன் சத்து இருக்கு ... ப்ரெக்னென்ட் லேடீஸ்க்கு ரொம்ப நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் ..."
என்றாள் ஸ்ரீ , பிரபா தன் வீட்டிற்கு செல்ல பைகளில் துணிகளை அடுக்கிக் கொண்டிருப்பதை பார்த்து.
அதற்கு பிரபா பதிலளிப்பதற்கு முன்பாக,
"அவ ஒன்னும் உன்ன மாதிரி இல்ல .... ரெண்டு புள்ளைய பெத்தவ.... இப்ப மூணாவது வேற மாசமா இருக்கா .... அவளுக்கு போய் நீ புத்தி சொல்றயா.... கால கொடுமை...." என அகல்யா வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை விட, அப்படியே கூனிக்குறுகி உறைந்து விட்டாள் பெண்.
அவமானம் ஒரு புறம் ... அதிர்ச்சி ஒரு புறம் ...
நல்லதை எண்ணி இயல்பாகச் சொன்ன ஒரு விஷயத்திற்கு, இப்படி ஒரு தாக்குதலை அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
பொங்கி வரும் அழுகையை கண்கள் சிமிட்டி அவள் தடுக்க முயன்று கொண்டிருக்கும் போது ,
"ஏன் அகல்யா, எதுக்கு தேவையில்லாம இவ மேல பாயற .... நல்லது தானே சொன்னா ...." சுந்தராம்பாள் சற்று கட்டமாக வினவ, எப்படி பேசுவது, என்ன பேசுவது என தெரியாமல் பிரபா தடுமாற, அப்போது ஆபத் பாண்டவனாய் வீட்டிற்குள் வந்தான் சத்யன்.
வந்தவன்,
"பாட்டி.... எங்க கூடவே கிளம்பு.... டாக்டர பாத்துட்டு வந்துடலாம் ..." என்,றான் அவசரமாய்.
"எதுக்குப்பா தேவை இல்லாத செலவு ...
நீ பிரபாவ மட்டும் டாக்டருக்கு கூட்டிக்கினு போ.... எனக்கு ஒன்னுமில்ல ..... இன்னும் ஒரு ரெண்டு நாள்ல தானா உடம்பு சரியாடும் ..."
"ஐயோ பாட்டி .... சொன்னா கேளு .... இப்ப எல்லாம் ஏதேதோ விஷக்காய்ச்சல் பரவுதாம் ... சாதாரண ஜலதோஷம் வந்தா கூட 60 வயசுக்கு மேல இருக்கிறவங்க நிச்சயமா டாக்டர பாத்தே ஆகணும்னு சொல்றாங்க ...."
என விடாப்பிடியாக தன் மனைவி மக்களோடு பாட்டியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டான் சத்யன்.
ஏனோ உடையை மாற்றிக் கொள்ள கூட மனமில்லாமல் அடுக்களைக்குள் புகுந்தவள் மடமடவென்று இரவு உணவை தயாரித்து விட்டு
"அத்த, டின்னர் ரெடி... சாப்பிட வாங்க ...."
என்றாள், சமைத்து வைத்த உணவை உணவு மேஜையில் அடுக்கிய படி .
"உங்க மாமா வெளியே போயிருக்காரு ....
அவர் வந்ததும் சாப்பிடறேன் .... இந்தா, இந்த டிவிய பாரு ... உன்னை மாறியான ஆளுங்க தான் உட்கார்ந்து பேசிக்கினு இருக்காங்க ...."
என்றார் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சியை காட்டி..
DINK -( டூயல் இன்கம் நோ கிட்ஸ் ...)
கணவன் மனைவி இருவருமே சம்பாதித்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என்று கூறும் தம்பதியரை பற்றிய நிகழ்ச்சி அது.
காரசாரமாக விவாதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, ஒரு கணம் அவளும் நின்று பார்க்க
"கல்யாணமே அடுத்த தலைமுறை முறையா உருவாகணுங்கிறதுக்காக தான் செஞ்சு வைக்கிறாங்க ... அது கூட தெரியாம, இவங்க எல்லாம் இவ்ளோ பெரிய படிப்பு படிச்சு , பதவியில இருந்து என்ன பிரயோஜனம்....
பணத்தைக் கட்டு கட்டா சேர்த்து வச்சிட்டு பரம்பரையை கோட்ட விட்டுட்டு வாழற வாழ்க்கை இப்ப வேணா நல்லா இருக்கலாம்...... ஆனா கடைசி காலத்துல வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போயிடும் ....." என தொலைக்காட்சியை பார்த்தபடி பொருமியவர் , ஸ்ரீயை பார்த்து
"நீயும், என் மகன் பாண்டியும் இதே தான் செஞ்சுகினு இருக்கீங்க .... ஆனா இந்த எழவுக்கு கல்யாணமே அவசியமில்லயே....
கல்யாணம் கட்டிக்காமலே சேர்ந்து வாழறாங்களே அந்த மாறியே வாழ்ந்துட்டு போவலாமே ....
என் மகனுக்கு குழந்தைன்னா ரொம்ப ஆசை......பெரியவனோட பசங்க ஸ்ரீநாத், சாய்நாத் பொறந்தப்ப ரெண்டு பேத்தையும் கீழவே விடாம அப்படி தூக்கி தூக்கி வச்சுக்கினு கொஞ்சிக்கினு இருப்பான் ...
ஆனா இப்ப நீ வேலைக்கு போவணுங்கிறதுக்காக அப்படிப்பட்டவனோட ஆசையில மண் அள்ளி போட்டுக்கினு இருக்க....
ஒன்னு சொல்றேன் கேட்டுக்க... புள்ள பொறக்கணுங்கிறதுக்காக தான் ஒரு ஆம்பள பொண்டாட்டி கிட்ட போவான் .... வெறும் சுகம் வேணும்னா , அவனுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற அழகிங்க போதும் ....
புள்ளயே வேணாம்னு சொல்லி புருஷனை மட்டும் கைக்குள்ள போட்டுக்கினு இருக்கிற உனக்கும், அந்த தாசிகளுக்கும் என்ன வித்தியாசம்... நீயே சொல்லு ..."
அவளுக்கு அவர் சொன்ன விஷயம் சிரசில் ஏறி சிந்தையில் உரைக்க, சில கணகள் தேவைப்பட , அமில ஆற்றில் யாரோ பிடித்து தள்ளியது போலான உணர்வைப் அந்த வார்த்தைகளின் அர்த்தங்கள் கொடுக்க , உடலின் ஒவ்வொரு அணுகும் ரணத்தால் எரிய, நெஞ்சில் பாரம் ஏறி கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க,
"ப்..... ப்ளீஸ்............. ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ...."
என்றாள் முகம் சிவந்து தழுத தழுத்தக் குரலில்.
அகல்யா பேசிய வார்த்தைகளை சினிமாவில் ஓரிரு காட்சிகளில் வில்லனோ வில்லியோ பேசி பார்த்திருக்கிறாள் ....
மற்றபடி அவள் வளர்ந்த சூழ்நிலையில், யாரும் யாரையும் கடும் கோபத்தில் கூட அம்மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்திக் கேட்டதே இல்லை ...
ஒரு நொடி ஆகாது, ஆகச்சிறந்த பதிலடியை அவளாலும் கொடுக்க முடியும் ....
ஆனால் தன்னவன் இல்லாத நேரத்தில், அவனைப் பெற்றவள் தான் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறாள் என்றால், தானும் அப்படி தரம் இறங்கி நடப்பது சரியல்ல, என்ற மனமுதிர்ச்சி முட்டுக்கட்டை போட, அதற்கு மேல் அங்கு நிற்காமல், விரு விருவென்று தன் அறைக்கு வந்து சேர்ந்தாள்.
நியாயமற்ற வார்த்தைகள் அவளது பசியை, தற்காலிகமாக விழுங்கி இருக்க, குளியல் அறைக்குச் சென்று புத்துணர்வு பெற்று மாற்று உடையில் படுக்கையில் விழுந்தவளுக்கு , அப்போது அவளது கணவனிடம் இருந்து வாய்ஸ் மெயில் ஒன்று வந்து சேர, கண்களில் கண்ணீர் வழிய, அதனை தட்டித் துவக்கினாள்.
அன்று முதல் நாள் , முதல் திட்ட வரைவின் கலந்தாய்வு வெகு சிறப்பாக சென்றதை பெருமையோடு பகிர்ந்து இருந்தான்.
இன்னும் 2 நாட்கள், 2 திட்ட வரைவுகளின் கலந்தாய்வும் இது போலவே வெற்றி அடைந்து விட்டால், மறுதினமே ஊருக்கு கிளம்பி விடுவேன் என்று குழந்தை போல் குதூகலித்திருந்தான் ...
கணவனின் குரலை கேட்க கேட்க கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது ....
சற்று முன்பு நடந்த விஷயத்தை , அவனிடம் வாய்ஸ் மெயிலில் பகிர ஒரு கணம் ஆகாது .....
ஆனால் அது தேவையில்லாமல் அவனது மன அழுத்தத்தை கூட்டி, தொடர்ந்து வரவிருக்கும் 3 நாட்களின் முக்கிய வேலைகளை கெடுத்து விடும் .... என்பதால் கணவனின் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வாழ்த்துகளை குரல் செய்தியாய் அனுப்பாமல் குறுஞ்செய்தியாய் அனுப்பி வைத்தாள், அவளது குரலை வைத்தே அவளது மனதைப் படித்து விடுவான் என்பதால்.
சற்று நேரத்திற்கெல்லாம் பசி வயிற்றைக் கிள்ள, உண்பதற்கு ஏதும் இல்லாமல், வெறும் தண்ணீரை மட்டும் பருகி விட்டு உருண்டு புரண்டு படுத்தவள், நள்ளிரவிற்கு மேல் தான் நித்திரையை தழுவினாள்.
மறுநாள் வழக்கம் போல் விடிந்தது.
ஆனால் எழுந்ததுமே, பசியும் சோர்வும் அவளை வாட்டி வதைக்க, உடன் உள்ளமும் ரணமாய் கொதிக்க , குளியலறைக்குச் சென்ற புத்துணர்வு பெற்று வந்தவள் , அடுக்களைக்குச் சென்று வழக்கம் போல் மேற்கொள்ளும் பணிகளை வேகவேகமாக முடித்துவிட்டு, தோட்டம் கூடம் என அங்கும் இங்குமாய் நடந்தபடி அவளையே நோட்டமிட்டு கொண்டிருந்த அகல்யாவின் முகத்தைக் கூட பார்க்காமல் , செய்து முடித்த உணவையும் உட்கொள்ளாமல், தேநீர் கூட அருந்தாமல் அலுவலக காரில் அலுவலகத்திற்கு பயணப்பட, உறைந்து நின்றார் அகல்யா.
இத்தனை நாட்களில், எத்தனையோ முறை அவளை உதாசீனப்படுத்தி இருக்கிறார்.... ....
ஆனால் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவளாகவே வந்து பேசி விடுவாள் ....
ஆனால் இதுதான் முதல் முறை .... இம்மாதிரி அவரைக் கண்டு கொள்ளாமல், அதே சமயத்தில் தன் கடமையிலும் குறை வைக்காமல், தன் கோபத்தை தான் உண்ணும் உணவின் மீது காட்டிவிட்டு அவள் சென்றது ....
முதன் முறையாய் தான் பேசிய பேச்சு அதிகப்படியோ என்று அவருக்கு தோன்ற ஆரம்பிக்க, அப்போது பார்த்து பொன்னம்பலம்,
"நீ என்னமோ மூஞ்ச தூக்கி வச்சுக்கினு பிரியாவையே உத்து உத்து பார்த்துகினு இருந்த .... அது உன்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம சமைச்சு மட்டும் வச்சுட்டு, சாப்பிடாமயே ஆபீசுக்கு கிளம்பி போவுது... என்ன தான்டி பிரச்சனை .... சொல்லு..... ..." என்றார் காட்டமாய்.
"அது வந்து ...." என்று ஆரம்பித்து சிறு தயக்கத்தோடு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அகல்யா பகிர்ந்தது தான் தாமதம், அவரை அடிக்க பொன்னம்பலம் ஏறக்குறைய கையை உயர்த்தி விட்டு
"ரெண்டு அடி போட்டா தான் அடங்குவ போல......அடியேய்.... தெரிஞ்சு தான் பேசினியா.... எவ்ளோ அசிங்கமான வார்த்தைய சொல்லி இருக்க தெரியுமா .... இந்த விஷயத்தை உன் பையன் கேள்விப்பட்டா துடிச்சு போயிடுவான் .... அடுத்த நிமிஷமே தனி குடுத்தனம் போயிடுவான் ....
பாண்டி தன் பொண்டாட்டிக்கு ஏதோ கர்ப்பப்பைல நீர்கட்டி பிரச்சனை இருக்கு அதனால தான் குழந்தை உண்டாவலனு சொன்னானா இல்லையா ... அதை காதுலயே வாங்கிக்காம , அன்பு ஏதோ வன்மத்துல வாய்க்கு வந்தபடி உளறினதை மனசுல வச்சுக்கிட்டு, ஏடாகூடமா அந்த பொண்ணு கிட்ட பேசி வச்சிருக்கியே உனக்கு அறிவே இல்லையா .... இனிமே ஒன்னா இருந்தா பிரச்சனைகள் வேற வேற மாதிரி நித்தமும் வெடிக்கும் .... அது நம்ம குடும்பத்துக்கு நல்லதில்ல .... பாண்டி வந்ததும் நானே அவங்கள தனி குடித்தனம் வெச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் .... உன் பொண்ணு கிட்ட சொல்லி வை .... அவ ஆசைப்பட்டதை சாதிச்சிட்டான்னு ...." என்றவர் விருவிருவென்று தன் அறைக்குச் சென்று கதவை அறைந்து சாத்த, உறவை உடைத்த வலியை முதன் முறையை உணர ஆரம்பித்தார் அகல்யா.
அலுவலகத்தில் கணினி முன்பு அமர்ந்திருந்தவளின் மனம் ரணமாய் கொதித்துக் கொண்டிருந்தது ....
எப்பொழுதும் எதையும் தராசு போல் சரியாக சீர்தூக்கிப் பார்க்கும் அவளது மனமானது , இம்முறையும் அதனை செவ்வனே செய்து கொண்டு தான் இருந்தது ....
அவளைப் பொருத்தமட்டில், அந்த நிகழ்ச்சியைக் காட்டி அவளது மாமியார் சொன்ன கருத்தில் எந்த பிழையும் இல்லை.
அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் அது சரியே ...
ஆனால் அவரது மகனும் மருமகளும் அதே வாழ்க்கையை தான் வாழ்கிறார்கள் என்று தன்னிச்சையாக முடிவு செய்தது தான் தவறு ...
அதைவிட அவர்களது அற்புதமான தாம்பத்தியத்தை வேசித்தனத்தோடு ஒப்பிட்டது , மாபெரும் தவறு ...
அவள் கணவன் திருமணமானதிலிருந்து அவளது உடலை விட மனதிற்கு மதிப்பளித்தே அவளை நாடுபவன்....
காமத்தின் மத்தியில் கூட, காதலின் உச்சத்தில் தான், அவளை ஆட்கொள்வான் ...
இவையெல்லாம் ஒரு தாயாய் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், இத்துணை தரமான மைந்தனைப் பெற்று வளர்த்து விட்டு, வெறும் சதைக்கு அலையும் சராசரி ஆண் மகனாய், அவனை சித்தரித்ததும் , அவளை வேசியாய் வர்ணித்ததும் தான், அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருக்க , அதிலிருந்து மீள முடியாமல், தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.
கொண்டிருக்கும் மனக்குமுறல்களை யாரிடமாவது கொட்டி விட்டால் ஓரளவிற்கேனும் நிம்மதி கிட்டிவிடும் ...
ஆனால் யாரிடம் கொட்டுவது என்று தெரியாத சூழல் வேறு.....
தாயிடம் கொட்டலாம் என்றால் திருமணமான தினத்தில் இருந்து இக்கணம் வரை, தன் குடும்பப் பிரச்சினையை ஒன்று கூட பகிர்ந்ததில்லை .....
காரணம் பெரும் பிரச்சனை என்று பொட்டலம் கட்டிக் கொண்டு சொல்லும் அளவிற்குஅவளது புகுந்த வீட்டிலும் சண்டை சச்சரவுகள் ஏதும் இருந்ததில்லை .....
தற்போது இந்த விஷயத்தை பகிரலாம் என்றால், அவரது மனநிம்மதியை கெடுத்து விடுவோமோ என்ற அச்சம் .....உடன் தன் கணவன் மீதும் ,புகுந்த வீட்டின் உறுப்பினர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் மரியாதையை குலைந்து விடுமோ என்ற பயம்..... ...
ஆஸ்திரேலியா தோழி அனுவை நாடலாம் என்றால், அவளது தாய் தந்தையர் இரு வார கால சுற்றுப்பயணத்திற்காக அங்கு சென்றிருப்பது நினைவுக்கு வர, வேறு வழி இன்றி சோகத்தை மென்று முழுங்க முயன்று கொண்டிருந்தாள் ...
ஆனாலும் சோகமே உருவாய் காட்சி அளிக்கும் அவளது சிவந்த முகமும் அடிக்கடி கண்களை துடைத்துக் கொள்ளும் செயலும், ராணாவின் கண்களில் இருந்து தப்பவில்லை ...
கடல் கடந்து சென்றிருக்கும் கணவனை எண்ணி கலங்குகிறாள் போலும் என்று எண்ணிக் கொண்டு, பற்களை நறநறவென்று கடித்தான் அந்த அசுரன் ...
உன் கணவனின் நினைவுகள் இருக்கும் வரை தான் உனக்கு இந்த கண்ணீரும் கலக்கமும்....
கூடிய விரைவில் அனைத்தையும் தூசு போல் துடைத்தெறிந்து விடுவேன் ....
பிறகு உன் நினைவுகளில் நான் மட்டும் .... என் நினைவுகளில் நீ மட்டுமாய்.... ஆனந்த வாழ்க்கையை வாழப் போகின்றோம் ........
என கர்வத்தோடு கொக்கரித்தபடி, அன்றைய பணியில் மூழ்கிப் போனான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.
இரவும் உண்ணவில்லை, காலை உணவையும் தவிர்த்து விட்டு வந்ததால், அலுவலக கேண்டீனுக்கு அரக்க பறக்க பறந்து கொண்டிருந்தவளுக்கு அவளது மணாளனிடமிருந்து whatsapp குரல்செய்தி ஒன்று வர, ரணம் கண்டிருந்த மனதிற்கு அது இதத்தைத் தர , தன்னை மறந்து குறுநகை புரிந்தபடி அதனை தொட்டு துவக்கினாள்.
அதில்,
" குட் மார்னிங் .... விஷ் மீ குட்லக் இன் வாய்ஸ் மெயில் பட்டு ..." என அவன் குழைந்திருக்க,
மென் புன்னகை பூத்தபடி தண்ணீர் அருந்தி குரலை சரி செய்து கொண்டு , அவனின் அன்றைய பணிகள் சிறப்புற நடந்தேற, ஆண்டவனைப் பிரார்த்தித்து அழகான குரல் செய்தியை ஒன்றை அனுப்பி வைத்துவிட்டு உண்டு முடித்து, இருக்கைக்குத் திரும்பியவளுக்கு ஓரளவிற்கு மனம் இதம் கண்டிருக்க அன்றைய பணியில் மூழ்கத் தொடங்கினாள்.
நேரம் ஆக ஆக பணியின் மீதிருந்த ஆர்வம் அவளை சுனாமியாய் சுருட்டிக்கொள்ள , கால நேரம் தெரியாமல் அவள் அதில் கரைந்து கொண்டிருக்கும் போது , திடமான காலடி ஓசையும், மெல்லிய உயர்தர வாசமும் அவளது கவனத்தைக் கலைக்க, விழி மலர்த்தி பார்த்தவளை ராணா புன்னகையால் எதிர்கொண்டான்.
அப்போது தான் அந்த தளமே காலியாகி இருப்பதும், மணி எட்டை தொடப்போவதும் தெரிய வர, ஒரு கணம் சிறு அதிர்வு அவள் உடலில் தோன்றி மறைய, பட்டென்று எழுந்து நின்றவளிடம்
" ஸ்ரீ, நீ இன்னும் வீட்டுக்கு போலயா ...."
என்றான் அவள் விழிகளுக்குள் நோக்கி.
அந்தப் பார்வையில் அப்படி ஒரு நெருக்கம், சினேகம் ....
அவனை அறிந்து கொண்டதிலிருந்து , அவன் மீது ஒருவித வெறுப்பும் கோபமும் நீர் பூத்த நெருப்பாய் அவளுள் தகித்துக் கொண்டிருக்க , அதை முகத்தில் காட்டாமல்,
"வொர்க் லோடு கொஞ்சம் அதிகம்... அதான் முடிச்சுட்டு போலாம்னு ...." என்றாள் கடின முகத்தோடு பொய்யுரைத்து.
வீட்டில் அகல்யாவால் பிரச்சனை ...
இங்கு இவனால் பிரச்சனை ....
நான் எங்க போவேன் ..... கடவுளே ...
என்ற சுய இரக்கம் சட்டென்று ஏற்பட்டு விழி நீர் வெகு மெல்லியதாய் விழிகளில் கோடிட, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அந்த சிறு மாற்றம் சரியாய் சென்றடைய,
"வா.... நான் ட்ராப் பண்றேன் ...." என்றான் வினையமாய், கணவனை நினைத்து கலங்குகிறாள் என்றெண்ணி.
"இட்ஸ் ஓகே .... 8 ஓ கிளாக் ஷட்டில்ல நான் போய்க்கிறேன் ..." என்றவள் , துரிதமாக தன் கணினியை அணைத்துவிட்டு, வழி மறைத்து நின்றவனின் மீது வெகு ஜாக்கிரதையாக படாமல், கண்ணிமைக்கும் நேரத்தில் இடத்தை காலி செய்ய, சென்றவளின் முதுகையே வெறித்துப் பார்த்தவனின் மனதில், அவனது மது அவனை முதன் முறையாய் சந்தித்து விட்டு துள்ளி ஓடியது படமாய் விரிய,
கூடிய சீக்கிரம் நீ என் மதுவா என்கிட்ட வரத்தான் போற...
அப்ப உன் நினைவுல நான் மட்டும் தான் இருப்பேன் ....
முன்ன மாதிரி என்னையே சுத்தி சுத்தி வருவ......
அப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ....
அழகழகா ரெண்டு குழந்தைகளை பெத்துக்கிட்டு ரொம்ப சந்தோஷமா நிம்மதியா வாழ்லாம் ...
கடைசியா ஒருநாள் ரெண்டு பேரும் ஒன்னாவே செத்துப் போய்டலாம் ....
எப்படி.... நம்ம லைஃப் .... கேக்கவே சூப்பர்பா இல்ல ....
என தன் ஆசைகளை அவன் வரிசை கட்ட, தப்பிப்பது போல் ஓடி சென்றவளோ இரண்டு பேர் அமர்ந்திருந்த கேப்பில் துரிதமாக ஏறி அமர்ந்து, நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியேற்றினாள்.
அடுத்த சில மணித்துளியில் கார் கிளம்ப, நேற்றிய நிகழ்வுகள் மனக்கண்ணில் காட்சிகளாய் விரிய, கண்கள் குளம் கட்ட, வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலையை எண்ணி நொந்து கொண்டாள்.
அலுவலகத்திலும் இருக்க முடியவில்லை.... வீட்டிலும் வாழ முடியவில்லை ........ என மீண்டும் அவள் மனம் சுய இரக்கம் கொள்ள, உடனே
இன்னும் ஈர் இரவுகள் மட்டும் பொறுத்திரு மனமே..... என்னவன் வந்து விடுவான் என்னைக் காக்க .....
என்று தனக்குத்தானே ஆறுதல் கூறி தேற்றிக் கொண்டிருக்கும் போதே , அவளுடன் பயணித்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி விட, அவளது இல்லத்தை அடைய இரண்டு தெருக்கள் இருந்த நிலையில் அவள் பயணித்த வாகனம் பழுதாகி நின்று போனது.
ஓட்டுநர் தன்னால் இயன்றவரை ஏதேதோ செய்து பார்த்தார், ஆனால் வாகனம் அசையாமல் அப்படியே உறைந்து நிற்க, ஒரு கட்டத்தில்,
"அண்ணா நான் கிளம்பறேன் .... என் வீடு இங்கிருந்து ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கு..... பத்து நிமிஷத்துல நடந்து போயிடுவேன் ..."
"வண்டிக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியலம்மா .... அசைய கூட மாட்டேங்குது .... ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணீங்கன்னா,
மெக்கானிக் வந்துடுவாரு ...."
"இல்லண்ணா, நான் கிளம்பறேன் ..." என்றாள் தீர்மானமாய்.
அவள் அலுவலகத்தில் இருந்து கிளம்பியதே தாமதம், மேலும் இங்கு நின்று நேரத்தை கடத்த மனம் இல்லாததால் இறங்கி விருவிருவென்று நடக்கத் தொடங்கினாள்.
முதல் தெரு முடிந்து, இரண்டாவது தெருவின் தொடக்கத்தில் தான், லேசாக அவளுக்கு பயம் தட்டியது.
ஏனென்றால் பெரும்பாலான இடங்களில், மங்கிய ஒளி விளக்குகள் , சில இடங்களில் விளக்குகளே இல்லை.
துரிதமாக நடந்தால் ஏழு எட்டு நிமிடங்களில் வீட்டை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் அவள் கால்களில் வேகத்தைக் கூட்ட, அப்போது அந்த தெருக் கோடியில் இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
மெல்லிய விளக்கொளி பகுதி அது.
அந்தப் பகுதியை கடந்துவிட்டால் அதற்கு மேல் 100 மீட்டரில் அவளது வீடு வந்து விடும் ...
ஒரு வித தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாய் அந்தப் பகுதியை அவள் கடக்க முயல, அதுவரை அரட்டியடிப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று அவளை சுற்றி வளைக்க, ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனாள்.
அவள் சுதாரிப்பதற்குள் ஒருவன் அவன் கைப்பையை பற்றி இழுக்க, மற்றொருவனோ அவளது துப்பட்டாவை இழுக்க, அவளோ தன் முழு பலத்தையும் திரட்டி கூச்சல் போட்டதோடு, அவர்களின் பிடியிலிருந்து விலக முயல, அப்போது பார்த்து பலத்த வெளிச்சத்தோடு கார் ஒன்று வந்தது.
கார் வெளிச்சத்தைக் கண்டு , யாரேனும் காக்க வரமாட்டார்களா என்று எண்ணி அவள் பலத்த குரல் எழுப்ப , அவள் எதிர்பார்த்தது போல் அந்தக் காரில் இருந்து
ஒரு ஆண் துரிதமாய் இறங்கி அவர்களை நோக்கி வர, அந்த சூழ்நிலையிலும் விடாமல் அவள் கழுத்தில் இருந்த மெல்லிய சங்கிலியை ஒருவன் பறிக்க, மற்றொருவன் கைப்பையை பற்றி இழுக்க, அப்போது அங்கு வந்த அந்த ஆண் , கைப்பையை பற்றியவனை நையப் புடைக்க தொடங்க, மற்றவன் தப்பி ஓடி இருசக்கர வாகனத்தை கிளப்ப, அடி வாங்கிக் கொண்டிருந்தவனும் ஓடிச் சென்று இருசக்கர வாகனத்தில் தொத்திக் கொள்ள, இருவரும் கண நேரத்தில் அந்த இடத்தை விட்டு சிட்டாய் பறந்து மறைந்தனர்.
கைப்பையை இறுகப் பற்றிக் கொண்டு கொண்டு ஸ்ரீ விம்மி அழும் போது தான் ,
"ப்ரியா ...." என்று அழைத்தபடி சத்யன் நெருங்க , அப்போதுதான், அந்த அரை இருளில் அவன் முகத்தை அரைகுறையாக பார்த்தவள்,
"மாமா நீங்களா .... " என்றாள் பெரும் நிம்மதியோடு.
"நான் யாரோ ஒரு பொண்ணு நினைச்சு தான் வந்தேன் .... நீ எப்படி இங்க வந்த ...." என்றவனிடம் , அவள் நடுக்கத்தோடே , திக்கி திணறி விசும்பிய குரலில் நடந்ததைச் சொல்லி முடிக்க,
"உனக்கு அடிகிடி படலையே ...." என்றான் பதறி.
"இல்ல மாமா ...."
"தேங்க் காட்.... சரி வா... வீட்டுக்கு போலாம் .... பிரபா கிட்ட மட்டும் விஷயத்தை சொன்னா போதும் .... மத்தபடி வீட்ல யார்கிட்டயும் எதையும் சொல்லாதே .... ஏற்கனவே அம்மாவுக்கு நீ வேலைக்கு போறது சுத்தமா பிடிக்கல ... இந்த ஒரு காரணம் போதும், நீ என்னைக்குமே எங்கேயுமே வேலைக்கு போக முடியாதபடி அழுது கலாட்டா பண்ணிடுவாங்க .....
இப்ப எல்லாம் இந்த மாதிரி வழிபறி, ரொம்ப அதிகமாயிடுச்சு .... அதுவும் தமிழ்நாட்ல சொல்லவே வேணாம் .... எங்க பாத்தாலும் கஞ்சா குடிச்சிட்டு, பொண்ணுங்க கிட்ட தகராறு செஞ்சுக்கிட்டு இருக்காங்க .... நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும் ..."
"மாமா, என் செயின அறுத்துக்கிட்டு போய்ட்டாங்க .... நல்ல வேளை தாலி உள்ளே இருந்ததால தப்பிச்சுது ..."
"செயின் போனா போகட்டும்மா... வேற வாங்கிக்கலாம் ... உனக்கு ஒன்னும் ஆகலயே.... அதுக்கே நாம கடவுளுக்கு நன்றி சொல்லணும்... நான் உன்னை வீட்ல விட்டுட்டு, இம்மீடியட்டா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடறேன்.... ஏன்னா இது செயின் ஸ்னாட்சிங்கா.... இல்ல வேற ஏதாவது மோட்டிவ்வானு தெரிஞ்சுக்கணும் .... ஆங்.... சொல்ல மறந்துட்டேனே ... நீ பாண்டி கிட்ட எதுவும் சொல்லிடாத .... அவன் இந்த மாதிரியான விஷயத்தை எல்லாம் அரக்கத்தனமா டீல் பண்ணுவான் ..... ஒரு தடவை எவனோ அன்புவோட கைய புடிச்சு இழுத்தான்னு , அவன் மூஞ்ச அடிச்சு உடைச்சு .... போலீஸ் கேஸ் ஆகிற அளவுக்கு போயிடுச்சு .... அப்புறம் நான் தான் எம்எல்ஏவை புடிச்சு, கேச ஒன்னும் இல்லாம பண்ணேன் .....
இப்ப வேற அவன் ஊர்ல இல்ல .... விஷயம் தெரிஞ்சா ரொம்ப டென்ஷன் ஆயிடுவான்... வந்ததும் சொல்லிக்கலாம் ...."
என சத்யன் தன் தம்பியை பற்றி சொல்லிக் கொண்டே செல்ல, அவளும் ஒரு முறை உணவகத்தில் தன்னவனின் கோபத்தை கண்டிருக்கிறாள் அல்லவா
"ஓகே மாமா.... இப்போதைக்கு சொல்லல ...." என்று சொல்லும் போதே கார் வீட்டை அடைந்தது.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....
very interesting 💕💕💕💕 keep rocking 💕💕💕💕💕💕
ReplyDeletethanks ma
DeleteLakshmi kannu mulichitanga... Supr mam... Nan kuda rana than nu nenaichan... Ana ipdiii oru entry ethiri pakkala...
ReplyDeletethanks dr
DeleteSuper mam
ReplyDeletethanks dr
DeleteSemma semma sis. Story vera level. Lakshmi seekirama seri aagita ... I hate that agalya. Ethukaga ipadi pesuranga konjam kuda manasatchiye illama. I too thought Rana than vanthu help panranu, twist satyan arrival. Nice story
ReplyDeletethanks a lot dr
DeleteMa'am, when is the next episode?
ReplyDeletetonite after 10;30 , ud wil b uploaded ma
Delete