ஸ்ரீ-ராமம்-131

 அத்தியாயம் 131


எப்பொழுதுமே அவனிடத்தில் ஒருவித கம்பீரம் குடி கொண்டிருக்கும்..... ....


அடிப்பட்டு பெரும் வலியோடு  படுக்கையில் அசைய முடியாத நிலையில் இருந்த சமயங்களில் கூட , அவனிடத்தில் அவள் கலக்கத்தை கண்டதில்லை ....


நண்பன் கிஷோரிடம்(  அவனை அவளிடம்  அப்படித்தான் அறிமுகப்படுத்தியிருந்தான் ) பேசும் போது கூட , அவனது உடல் மொழியில் ஒருவித தோரணையும் துறுதுறுப்பையும் தான் கண்டிருக்கிறாள் ....


எந்த விஷயத்திற்கும் அவன் அலட்டிக் கொண்டு அவள் பார்த்ததே இல்லை ....


எதையுமே வெகு இயல்பாக கையாளும் சுபாவம் உடையவன் என்றே எண்ணி இருந்தவளுக்கு தற்போது அவனது கலங்கிய விழிகள்,  ஆச்சரியத்தோடு அதிர்ச்சியையும் கொடுக்க,


"சார்,  இப்ப பெரிய டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாங்க அவங்க கிட்ட நீங்க பர்மிஷன் கேளுங்க ....  அவங்க ஓகே சொன்னா,  நான் உங்கள வீல் சேர்ல  கூட்டிட்டு போறேன் ...." 

என்றாள் அவன் முகத்தில் இருந்து பார்வையை விளக்காமல்.


அமைதியாய் படுக்கையில் சரிந்தவனின் எண்ண அலைகள் அவனது மனம் என்னும் கடலில் கொந்தளிக்க தொடங்க , முகம் சிவக்க விட்டத்தையே வெறிக்கத் தொடங்கினான். 


அவன் தன் பதின் பருவத்திலேயே   கடனில் மூழ்கியிருந்த குடும்ப வியாபாரத்தை தன் தமையனின் துணையோடு  தூக்கி நிறுத்தும் பணியில்  தீவிரமாக இறங்கியதால் காதல் என்ற உணர்வை உணரும் சந்தர்ப்பம்  அமையாமலே போய்விட்டது. 


25 வயதை கடக்கும்போது தாய் தந்தையரின் அறிவுறுத்தலால்,  அவர்கள் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.

அங்கு தான் அவனது வாழ்க்கை முற்றிலும் திசை மாறிப் போனது.  வந்தவள் பணக்காரி மட்டுமல்ல குடிகாரி ஊதாரியும் கூட.

அவளுடன் வாழவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் அவன் தவித்துக் கொண்டிருக்கையில், ஒரு சுபயோக சுபதினத்தில்  அவளே விவாகரத்திற்கு விண்ணப்பிக்க, ஒரு வழியாக அந்த பெண் பிசாசிடமிருந்து விடுதலைப் பெற்றான்.


காலம் சுழன்றது.  இரண்டாவது திருமணத்திற்காக பெற்றவர்கள் அவனுக்கு பெண் தேட தொடங்க . திருமணத்தில் முற்றிலும் விருப்பம் இல்லை என்று தீர்மானமாய் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டான்.


அந்த சூழலில் தான்,  அவனது  அண்ணன் மகள் அக்கான்ஷா ,  வியாபார எதிரிகள் பின்னிய காதல் வலையில் விழ,  அவளை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் அவனும் அவன் குடும்பமும் திணறிக் கொண்டிருக்கும் போது,  விடிவெள்ளியாய் வந்து சேர்ந்தாள் லட்சுமி.


லட்சுமியின் அறிவுரைகள்,  அக்கான்ஷாவை  தவறான பாதையில் இருந்து மீட்டெடுத்ததோடு, அவனது குடும்பம் தொலைத்திருந்த மகிழ்ச்சியையும் மீட்டுக் கொடுக்க, அன்றிலிருந்து லட்சுமி அவர்களது குடும்பத்திற்கு தேவதையாகி போனாள.


அவளைப் பற்றி அறிந்து கொள்ள அவன்  தகவல்களை திரட்டும் போது தான்,  அவள் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருப்பது தெரிய வர,  அவளை மறுமணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு பின் தொடர்ந்தான்.


முதன்முறை அவளை தன் இல்லத்திற்கு அழைத்து  தன் விருப்பத்தை சொன்னான் ..


மென்மையாய் மறுத்து விட்டாள் ....


பிறகு ஊட்டிக்கு வந்தவளை தேடி வந்து அவன் சொன்ன போது தான்,  கோபத்தில் வெடித்து சிதறி தன் மனக்குமுறல்களை கொட்டியபடி மறுமணத்திற்கு மறுத்துவிட்டாள். 


அதுதான் அவன் அவளை கடைசியாய் உயிரும் உணர்வுமாய்  சந்தித்த தருணங்கள்...... 


தற்போது உணர்வுகள் அனைத்தும் மரித்துப் போய் வெறும்  உயிர் மட்டும் துடித்துக் கொண்டிருக்கும் கூடாய் கிடக்கிறாள் என்ற செய்தி அறிந்ததில் இருந்து,  அவன் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலான வலி ஏற்பட, உள்ளுக்குள் ஊமைக்காயம் கண்டவனாய் கதறி துடிக்கத் தொடங்கினான்.


அவன் காதல் என்ற உணர்வை முதன் முதலாய் உணரத் தொடங்கியது அவளைக் கண்ட போது தான் ...


அவனது காதலில் தவறில்லை ...


 அவளை அவன் கண்களுக்கு காலம் கடந்து  காட்டிய கர்மாவின் தவறு  அது  ...


முதல் காதல் முழுமை அடையாமல்,  இப்படி முற்றுப்பெற்று விட்டதே .... என்ற எண்ணம் அவன் மனதின் அடி ஆழம் வரை  அமிலமாய் சென்று  ரணத்தை ஏற்படுத்த, மாற்றான் மனைவி என்ற லட்சுமண ரேகையை தாண்டி  வராதவளை  தன் வாழ்க்கைக்குள் இழுக்க மனமற்று , அதே சமயத்தில் அவளை மறக்கவும் முடியாமல்  மிகுந்த  மனபாரத்தோடு மருகத் தொடங்கினான். 



15 நிமிடங்கள் மௌனமொழியாய் கடந்தன ....


தலைமை மருத்துவர் வந்தார் ...


வந்தவரிடம் தன் விருப்பத்தைச் சொன்னான் ...




அவனது உடல்நிலை சற்று தேறி இருந்ததால்,  உடனே அவர் அனுமதி தர, ரம்யாவின் உதவியோடு சக்கர நாற்காலியில் கீழ் தளத்தில் லட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த அறையை அவன் அடையவும்,  அந்த அறையிலிருந்து ராம்சரண் வெளியே வரவும்  சரியாக இருந்தது. 


ஒரே கணத்தில் அவன் ராம்சரணை அடையாளம் கண்டுகொண்டு விட்டான் ...


ஆனால் ராம்சரணுக்கு தான் கை கால்களில் கட்டோடு இருந்தவனை அறிந்து கொள்ள சில மணித்துளிகள் தேவைப்பட்டது. 


இருவரின் பார்வைகளும் நேர்கோட்டில் சந்தித்தன ....


உனக்குமா விபத்து நடந்தது  ..... என்ற அதிர்ச்சி  கேள்வி ராம் சரணின் விழிகளில் தெரிய,


"நான் லட்சுமிய பார்க்கணும் ..." 

என்றான் ரிஷி லேசான கமரிய குரலில்.


"வா.. வாங்க பார்க்கலாம் ...."  


என ராம் சரண் சற்று தடுமாறி கூறிவிட்டு  முன்னே நடக்க,  சக்கர நாற்காலியில் பின் தொடர்ந்தான் ரிஷி.


நேர்த்தியும் நேர்மையுமாய் வலம் வந்த நங்கை,  சகல உணர்வுகளையும் பறிகொடுத்து விட்டு கலைந்த கோலமாய் படுத்திருந்த காட்சி, பார்த்தவனின் மனதை பாதியாய் உருக்க, திரையிட்டு இருந்த விழி நீர் தளும்பி வெளியே வர , மறைக்க எண்ணி தலை குனிந்து கொண்டான்.


அவனது சக்கர நாற்காலியின் கைப்பிடிகளைப் பிடித்தபடி அருகில் நின்று கொண்டிருந்த ரம்யாவிற்கு தான் ஒன்றுமே விளங்கவில்லை.


அவனது ஆசிரியையாக இருந்திருந்தாலும் குரு பக்தி மற்றும் பாசத்தால் கண்ணீர் வடிக்கின்றான் என்று எடுத்துக் கொள்ளலாம்...... 


ஆனால் படுக்கையில் தன்னிலை மறந்து இருக்கும் பெண்மணியோ,  இவனை விட நிச்சயம் வயதில் இளையவளாய்  காட்சி அளிக்கிறாள் அதோடு இவனது அண்ணன் மகளின் ஆசிரியை என்று சொன்னவன்  இப்போது எதற்காக கண்ணீர் வடிக்கின்றான்..... என்று குழம்பித் தவித்தாள். 


சிவந்த கண்களும் விழி நீருமுமாய் காணப்பட்ட ரிஷியின் முக பாவமே லட்சுமியின் மீதான அவனது தூய்மையான அன்பை பறைசாற்ற,  அது சமீப காலமாய் அடங்கியிருந்த ராம்சரணின்  குற்ற உணர்வை மீண்டும் கிளர்ந்தெழ செய்தது.


என்னவளை  தாய் தங்கை என்ற தாடகைகளடமிருந்து காக்காமல் விட்டுவிட்டதன் விளைவல்லவா  தற்போது அவள் மரண அவஸ்தையில் தவித்துக் கொண்டிருக்கிறாள் ....


வெறும் ஐந்தாறு மாதத்திற்கு முன்பு ஏதோ ஒரு சூழ்நிலையில்  என்னவளை சந்தித்து,  அவளிடத்தில் ஒரு தலையாய் காதல் கொண்டவனுக்கு இருக்கும் அன்பும் அக்கறையும் கூட அவளை  திருமணம் முடித்து மூன்றாண்டுகள் வாழ்ந்த எனக்கு இல்லாமல் போய்விட்டதே ....


என்றெல்லாம் எண்ணி ராம்சரண் மருகிக் கொண்டிருக்கும் போது ,


"ரம்யா,  ஒரு பத்து நிமிஷம் வெளியே இரு ... நான் இவர்கிட்ட கொஞ்சம் பேசணும்   ..." 


என அவளை அப்புறப்படுத்திய ரிஷி,


"உங்களுக்கு என் மேல கோவம் இருக்கலாம்.... ஆனா என் தரப்பு நியாயத்தை நான் தானே சொல்லி ஆகணும் ....  அதுக்கான சான்ஸ் இப்பதான் கிடைச்சிருக்கு .... ப்ளீஸ் நான்  கொஞ்சம் மனசு விட்டு பேசணும் ..." 


"சொல்லுங்க ..." என்றான் ராம்சரண் தன்மையாய்.


"ஆணோ  பொண்ணோ சரியான நபரை  கல்யாணம் பண்ணலன்னா வாழ்க்கையே சூனியம் ஆய்டும் ....   


அப்படி ஒரு கல்யாணம் தான் எனக்கு நடந்தது.... .... " என்று ஆரம்பித்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவன்,


"லக்ஷ்மி டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் .... நான் அவங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ணேன் .... ஆனா  கிளியரா நோ சொல்லிட்டாங்க ... அப்புறம்  வேலைய ரிசைன் பண்ணிட்டு ஊட்டிக்கு போய்ட்டாங்கன்னு கேள்விப்பட்டேன் அவங்கள தேடி இங்க வந்து ,  மீட்  பண்ணேன்...... ...


உங்க வீட்டு பொண்ணுக்கு நல்லது நெனச்ச ஒரே காரணத்துக்காக என் வாழ்க்கையை கெடுக்க பாக்கறீங்களே... ப்ளீஸ் சார்... என்னை நிம்மதியா வாழ விடுங்கனு ரொம்ப கோவப்பட்டாங்க ....


அது தான் அவங்கள நான் கடைசியா மீட் பண்ணினது ....


உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனைன்னு எதுக்காக டிவோர்ஸ் வரைக்கும் போனீங்கன்னு  எனக்கு தெரியாது.... .... அதை நான் தெரிஞ்சுக்கவும் விரும்பல ...


ஆனா லட்சுமி மாதிரியான ஒரு லாயலான ஒய்ஃப் ... எல்லாருக்குமே அமைஞ்சிடாது  ....


அவங்க நல்ல டீச்சர் மட்டும் இல்ல,  நல்ல ஹியூமன் பீயிங் கூட ...


நான் ஒரு வைர வியாபாரி .... வைரத்தை சாதாரணமா  பார்க்கும் போதே அதனோட தரத்தை என்னால சொல்ல முடியும் .... 


100% எந்த ஒரு தோஷமும் இல்லாம வைரம் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம் .... ஆனா அது கூட சில சமயம் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா கிடைச்சிடும் ... 


ஆனா லட்சுமி மாதிரி ஒருத்தர் வாழ்க்கையில கிடைக்கவே மாட்டாங்க ...  லக்கிலி அவங்க உங்களுக்கு மனைவியாவே அமைஞ்சிருக்காங்க.... 


அதைவிட அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ....  எங்கேயுமே  உங்கள அவங்க விட்டுக் கொடுக்கவே இல்ல ...


நீங்க எந்த பிறவில செஞ்ச புண்ணியமோ இப்படி உங்களை விரும்பற ஒரு வைஃப் உங்களுக்கு அமைஞ்சிருக்காங்க...


கூடிய சீக்கிரம் அவங்க நல்லபடியா கண் முழிச்சிடனும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.... ...


ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் ஹர் ... "


என ரிஷி  ஒருவித திடத்தோடு பேசிக்கொண்டே செல்ல,  தன் மனைவியின் மகத்துவத்தை மாற்றான் புரிந்து கொண்ட அளவிற்கு கூட தான் புரிந்து கொள்ள வில்லையே என உள்ளுக்குள் ஓங்காரமாய் கதறிக் கொண்டிருந்தான் ராம்சரண்.


ஒரு பெண் சட்டென்று அடுத்த பெண்ணிடம் கண்கலங்கி விடுவாள் ....


ஆனால் ஒரு ஆண் அடுத்த ஆணிடம் அவ்வளவு எளிதாக உடைய மாட்டான் ...


எங்கு பேசினால் தன் குரல் உடைந்து விடுமோ என்று அஞ்சி எச்சில் கூட்டி விழுங்கிய ராம் சரண் 


"தேங்க்ஸ் ..." என முடித்துக் கொண்டான் ஒற்றை வார்த்தையில்.


அடுத்த கணமே, ரிஷி,  "ரம்யா " என்று இரு முறை பலமாக குரல் எழுப்ப, ஓட்டமும் நடையுமாய் அவள் வந்து நிற்க,


"கிளம்பலாம் ..." என்றான்  தொலைத்த கம்பீரத்தை மீண்டும் குரலில் கொண்டு வந்து. 


அவன் சென்ற மறு கணமே , குளியலறைக்குச் சென்று வாய்விட்டே கதறி அழுதான் ராம்சரண்.


வாழ்க்கையின் கடைசி படியில் நின்று  கொண்டு கதறியவனின் குரல்,  கடவுளுக்கு கேட்டது போலும் .... 


ஆழ்ந்த நித்திரையில் இருந்த அவனது மனைவியின் கருவிழிகள்  மெல்ல இடவலமாக நகரத் தொடங்கியது.


---------------------------------------------------------------


அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஸ்ரீக்கு, திடீரென்று  தன்னை சுற்றி ஏதோ சரி இல்லை என தோன்றத் தொடங்கியது.

காலையில் அவள் அலுவலகத்தில் நுழைந்ததிலிருந்து கார்த்திகேயன்,  ஆண்டனி,  மோனிஷா இன்னும் சில அலுவலக ஊழியர்களின் பார்வையில் திடீரென்று காணப்பட்ட  அன்னியம்,  அதோடு பணி நிமித்தமாக அவளாகச் சென்று உரையாடிய போதும்  அவர்கள் காட்டிய இறுக்கம் எல்லாம் மனக்கண் முன் வந்து போக, முன் தினம் ராணா பலர் முன்பு அவளிடம் வழிந்து பேசியது தான் அவர்களது ஒதுக்கத்திற்கு  காரணம் என்பதை கண நேரத்தில் கண்டு கொண்டவளுக்கு, லேசாக கண்கள் பனிக்க தொடங்க, உடனே அவளது மனமானது தொடக்க தினத்திலிருந்து முன் தினம் வரையான ராணாவின் நடவடிக்கைகளை அவசரகதியில்  அசை போட்டுப் பார்க்கத் தொடங்கியது. 


முதல் தினம் அவளைத் தன் அலுவலக  அறைக்கு அழைத்து,  ஏதோ ஒரு புது மொழியில் ஒருவித பரிதவிப்போடு அவன் உரையாடியது....


அதன் பின் அவ்வப்போது முக்கிய காரணங்களுக்காக மட்டும் அவளை அழைத்து உரையாடினாலும் அப்படி உரையாடும் பொழுதும் அவளது தனிப்பட்ட விஷயங்களில் அவன் கவனம் செலுத்தியது ...


கயல், ஆண்டனி விடுப்பில் இருந்தபோது , அவர்களது பணியை அவள் எடுத்துச் செய்தது சாதாரண விஷயமே என்றாலும் அதற்காக அவளை அழைத்து வெகுவாக பாராட்டி விட்டு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தது ....


முந்தைய தினம் கூட ஏதோ இளம் காதலர்கள் தன் இணையோடு தன்நிலை மறந்து  நகைச்சுவை பேச்சில் ஈடுபடுவது போல் பலர் அறிய,  அவளுடன் அவன் மதிமயங்கி  உரையாடியது ...


என அனைத்தும் வரிசை கட்டி வரும் பொழுது, இத்துணை தினங்களாக  அவள் கவனிக்க தவறிய சில முக்கியமானவைகளும் அவள் கவனத்திற்கு வர ஆரம்பித்தன. 


அலுவலக வாயிலில் தன் கணவனுடன்  அவள்  உரையாடிய காட்சியை குறிப்பிட்டு கௌதம் ஏளனம் செய்ததை  அவள் பகிர்ந்த போது,  தானும் அந்த காட்சியை கண்டதாகவும், அது வெகு அழகாக இருந்ததாகவும்  அவன்  சிரித்து  மழுப்பியது ....


ஊட்டி பயணத்திற்காக  எடுத்த விடுப்புகளில் கடைசி தினத்தை  ரத்து செய்துவிட்டு,  அவள் அலுவலகம் வந்த அன்றும் சரி,  அதற்கு முன்பும் சரி அவள் அலுவலகத்தை அடைந்து  இருக்கைக்கு வந்த மறுக்கணமே,அவளது   உள் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து, அவன் உரையாடியது..... என அனைத்தும் நினைவுக்கு வர,


அவள் முதல் தினத்தில் இருந்தே அவனால் கண்காணிக்கப்படுகிறாள் .... என்பது ஊர்ஜிதமாகி போக,  ஒரு கணம் செய்வதறியாது திகைத்தவள் சில மணித்துளிகளுக்கு பிறகு, தான் கண்டறிந்த அனைத்தையும் தன் கணவனிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.


அதே சமயத்தில்  தன் கணவன் நாடு திரும்புவதற்கு முன்னால்,  பணிக்கு முழுக்குப் போடக்கூடாது என்பதிலும் உறுதியாக  இருந்தாள்.


காரணம்,  வீட்டில் இருக்கும் சொற்ப நேரத்திலேயே அகல்யாவின் குத்தல் பேச்சு இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்து வரும் நிலையில்,  அவள் வேலையை விட்டு விட்டு  முழு நேரம்  வீட்டில் இருக்கும் நிலை வந்தால்,  தேவையில்லாத பல வாய் வார்த்தைகளை கேட்க நேரும் என்பதால் அப்படி ஒரு முடிவை அவள் எடுத்து முடிக்கும் போது,  கயல்விழி அங்கு வந்தாள்.


கயல்விழிக்கு நடக்கவிருக்கும் திருமணம் காதல் திருமணம்.

அவளும் அவளது இணையும் வெவ்வேறு சமுதாயத்தை சார்ந்தவர்கள் ...

பல நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகே, இருவரது வீட்டிலும் சம்மதம் கிட்டியதால்,  நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தவள்,  தன் திருமண ஏற்பாடுகள் குறித்து சிலாகித்து பேசிவிட்டு,


"நீங்க ஏன் ப்ரியா லவ்  மேரேஜ் பண்ணிக்கல........." என்றாள் குறு நகையுடன் .


"எனக்கும் லவ் மேரேஜ் பண்ணிக்கனும்னு தான் ஆசை  .... ஆனா ராம் என் கண்ணுல படறதுக்கு முன்னாடியே  என் அப்பா கண்ணுல பட்டுட்டாரே.... அதான் அரேஞ்ச்டு மேரேஜ் ஆயிடுச்சு ...."


அந்த பதிலை கேட்டு குலுங்கி சிரித்தவள்,


"உங்க வீட்டுக்காரர வீட்டு கொடுக்க மாட்டீங்களே .... ஆங்.... கேக்க மறந்துட்டேனே... என் கல்யாணத்துக்கு வருவீங்க இல்ல ..."  என்றாள் மிகுந்த எதிர்பார்ப்போடு. 


"நிச்சயமா வருவேன் .... தேஜு, மணிகண்டன் , ஆண்டனி  எல்லாரும் கல்யாணத்துக்கே போகலாம் ரிசப்ஷனுக்கு வேண்டாம்னு சொன்னாங்க  ...  சோ நானும் அவங்களோட ஜாயின் பண்ணிக்கலாம்னு இருக்கேன் ..."


"நல்ல வேலை பண்ணீங்க.... பெரிய தலைங்க சிவராஜன், மோனிஷா கார்த்திகேயன் எல்லாரும் ரிசப்ஷனுக்கு வர்றதா சொல்லி இருக்காங்க ..... ராணாவுக்கும் வாட்ஸ் அப்ல இன்விடேஷன ஷேர் பண்ணேன் ....  அவரு இன்விடேஷனை பார்த்து இருக்காரு ஆனா ரிப்ளை பண்ணல .... ராணா வர்றது கஷ்டம் அப்படி வந்தா,  எங்க கூட ரிசப்ஷனுக்கு தான் வருவாருன்னு கார்த்திகேயன் சொன்னாரு....."


"ஓ.... "  என வேண்டா வெறுப்பாய் சொன்னவளுக்கு, ராணா தங்களோடு இணைந்து கொள்ளவில்லை என்பது ஒரு வித இதத்தை தர , அதே நேரத்தில், அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு விட்டு பருத்தியே புடவையாய் காய்த்த திருப்தியில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தான் ராணா .


கயல்விழியின் திருமணத்திற்கு ஸ்ரீ வருவாளோ மாட்டாளோ என்று அஞ்சிக் கொண்டிருந்தவனுக்கு, அவன் போட்டு வைத்திருந்த திட்டங்கள் அச்சு பிசகாமல் நடந்தேற வழி வகுக்கும் விதமாக , வரவேற்புக்கு வராமல் திருமணத்திற்கு வருவதாக அவள்  சொன்னது, இரட்டிப்பு மகிழ்ச்சியை தர, 'தேங்க்ஸ் காட்'  என்றான் வாய்விட்டு குதூகலமாய்.


என்ன தான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக  திட்டம் தீட்டி அதற்கான ஏற்பாடுகளை  அருமையாக செய்து வைத்திருந்தாலும் அதனை  செயல்படுத்த சரியான கால நேரம் மிக அவசியமல்லவா ....


வரவிருக்கும் அந்த ஒரு வாரம் தான், வீரா மற்றும் திலக்கின் தலையீடு இல்லாமல் தனது திட்டத்தை செயல்படுத்த சரியான காலம் என்று எண்ணி ஸ்ரீயின் நகர்வுகளை கண் குத்தி பாம்பு போல் கவனித்து வந்தவனுக்கு  அவனே எதிர்பார்க்காத வகையில் இப்படி ஒரு வழி அமைந்து போக,  அளவில்லா ஆனந்தத்தில் ஆர்ப்பரித்துப் போனான். 


அப்போது பார்த்து  பேராசிரியர் மைக்கேல்  மார்க்கிடமிருந்து ஒரு மின்னஞ்சல்  வந்தது.


அதில், 

வரும் புதன் கிழமை நான் இந்தியா திரும்புகிறேன். வியாழன் அன்று  உங்களை எனது அமெரிக்க குழுவுடன் சந்திக்க இருப்பதில்  பெருமகிழ்ச்சி அடைகிறேன் .... 

நமது திட்டம 100% வெற்றி பெற்று  உலக நரம்பியல்  வரலாற்றிலேயே பெரும் சாதனையாக உருவெடுக்கும்  என நம்புகிறேன். 

என்று முடித்திருந்தார்.


அந்த செய்தியை ஒன்றுக்கு இரண்டு முறை படித்தவனின் இதழில் வெற்றிப் புன்னகை எட்டிப் பார்க்க,   இரண்டு மாதங்களுக்கு முன்பு முதன் முதலாக மைக்கேல் மார்க்கை , பெங்களூரில் உள்ள  உலகத் தரம் வாய்ந்த மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவமனையில் சந்தித்தது நினைவுக்கு வர, அப்போது அவருடன் நடந்த உரையாடல்களும் அவன் மனகண்ணில் திரைப்படமாய் விரியத் தொடங்கியது.



மைக்கேல் மார்க் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்,  நரம்பியல் பிரிவின் தலைவராக இருந்து பல சாதனைகளைப் புரிந்துவிட்டு பிறகு  விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு ,  பெங்களூரில் உலகத்தரம் வாய்ந்த மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவமனையை ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக  சிறப்பாக நடத்திகொண்டு வருகிறார். 


அவரது பல வழிமுறைகள் (procedures) , அறுவை சிகிச்சைகள்,  அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு  மக்களுக்கு பயன்படும் வகையில் இருந்தாலும்,  சில சிகிச்சை முறைகள்  சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆய்வு மனப்பான்மையோடு மேற்கொள்ளப்படுபவை ஆகும். 


அப்படி அவர் செய்த, மனித ஞாபக சக்தியை அடிப்படையாக வைத்து  சில சர்ச்சைக்குரிய சிகிச்சை முறைகள் அரைகுறையாக வெற்றி பெற்றிருந்தாலும்  அது சமுதாயத்திற்கு பல வகையில்  ஊறு விளைவுக்கும் நிலைமையில்  இருந்ததால், அரசாங்கத்தால்  அது முற்றிலும்  தடை செய்யப்பட, அப்படி தடை செய்யப்பட்டதை   வெளி உலகத்திற்கு பயன்படுத்தாமல் ஆய்வக நோக்கத்திற்காக தன் ஆய்வகத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்வார். 


இப்படி அவரைப் பற்றிய தகவல்களை, மனநல மருத்துவர் ஷர்மாவை சந்திக்க சென்றிருக்கும் போது, காத்திருப்பு பகுதியில் நேரத்தைப் போக்குவதற்காக மருத்துவ கட்டுரைகள் உள்ளடக்கிய ஆய்விதழ் ஒன்றை வாசிக்கும் போது தெரிந்து கொண்டான்.


அப்போது அவர் தனக்கு எதிர்காலத்தில் தேவைப்படுவார் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 


இருந்தாலும்,  அதில் குறிப்பிட்டு இருந்த சில சிகிச்சைகள்,  அவன் மனதில் ஆழமாய் பதிந்து போய் இருக்க,  ஸ்ரீப்ரியாவின் வரவிற்கு பின் , அவரை  சந்திக்கும் தேவையும் ஏற்பட, உடனே   இணையம் மற்றும் பல்வேறு தொடர்பின் மூலம் அலைந்து திரிந்து அவரது முகவரியை கண்டுபிடித்து தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டான்.


எப்பொழுதுமே வழக்கறிஞர் மற்றும் மருத்துவரிடம் உண்மையை உடைத்துப் பேசினால் தான் கை மேல் பலன் கிட்டும் என்பதற்கேற்ப , தன் கடந்த காலம், நிகழ்காலம் என அனைத்தையும் ஒன்று விடாமல் பகிர்ந்தவன்,


"என் ஸ்ரீக்கு , இப்ப அவ வாழ்ந்துகிட்டு இருக்க வாழ்க்கை ,அதாவது  அவ ஹஸ்பண்ட் ராமை பத்தின எல்லா ஞாபகங்களும்  மறந்து போகணும் ... அப்புறம் என் கூட அவ மதுவாய் வாழ்ந்த நாட்கள் அவளுக்கு  ஞாபகத்துக்கு வரணும் .... முடியுமா டாக்டர் ..."  என்றான் எதிர்பார்ப்போடு. 


" நியூரோ சயின்ஸ்ல  மெமரி எரேசிங் ட்ரீட்மென்ட் (Memory Erasing Treatment) வழியா,  அந்த பொண்ணோட மைண்ட்ல இருக்கிற அவங்க  ஹஸ்பண்ட பத்தின மெமரிஸ மட்டும் பிளாக் பண்ண முடியும்.... ஏன் இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றேன்னா ஒரு நாலு மாசமா தான் அந்த பொண்ணுக்கு அவங்க ஹஸ்பண்ட தெரியும்னு சொல்லி இருக்கீங்க .... சோ லாங் டெர்ம் மெமரி ப்ராசஸ்(long term memory) இல்லாததால , ரொம்ப ஈஸியா செய்ய முடியும்னு நினைக்கிறேன் ...


ஆனா 24 வருஷத்துக்கு முன்னாடி உங்களோட  வாழ்ந்த மதுவோட நினைவுகளை அவங்களுக்கு நிச்சயமா  கொண்டு வரவே முடியாது ...  "



" ஏன் டாக்டர் ...."



"நீங்க கேட்கிறது Reincarnation , தட் மீன்ஸ் மறுபிறப்பு மாதிரியான ஒரு விஷயத்தை கேக்கறீங்க ....  அது நடக்கவே நடக்காது  ... அது நியூரோ சயின்ஸ்க்கு அப்பாற்பட்டது .... ஆனா  மெமரி எரேசிங் ட்ரீட்மென்ட் முடிஞ்சு ,    டார்கெட்டட் மெமரிஸ எல்லாம் பிளாக் பண்ணினதும்,  மெமரி ரீ கன்சாலிடேஷன் (Memory reconsolidation) பண்ணி பார்த்துட்டு ,

விடுபட்ட மெமரி சர்க்யூட்ல, சைக்கோ டைனமிக் தெரபி(Psychodynamic therapy) அதை நாங்க  டாக்கிங் தெரபினு (talking therapy) சொல்லுவோம் .... அது வழியா  நீங்க ஆசைப்படற எமோஷனல் பாஸ்ட (emotional past) பத்தி கதை கதையா பேசியே  அவங்க மனசுல ,  நாளடைவுல பதிய வச்சிடலாம் .... ஆனா அதுக்கு நிறைய நேரமும் பணமும் செலவாகும் .... ஏன்னா இது கம்ப்ளீட்லீ இல்லீகல் .... கொலம்பியா யூனிவர்சிட்டில இந்த மாதிரி ஒரு ரிசர்ச்ச எலி, நாய், சிம்பான்சி குரங்குகளை வச்சி செஞ்சி சக்சஸ்  பண்ணதுமே  அரசாங்கம் மட்டும் இல்ல மக்கள் தரப்பிலும் பலத்தை எதிர்ப்ப சந்திச்சோம்... ஆனா  ஹியூமன வச்சு செய்யாததால், ஏதேதோ சொல்லி  ஒரு வழியா அந்த பிரச்சனைல இருந்து வெளியே வந்துட்டோம் .... இப்ப கூட சில தடை செய்யப்பட்ட மருந்துகளை வச்சு,  சிவியர் டிப்ரஷன், ஸ்ட்ரெஸ்க்கெல்லாம் நான் ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.....அது ஒர்க் அவுட்டும் ஆயிட்டு தான் இருக்கு ...  ஆனா அதுவும் இல்லீகல்லுங்கறதால , ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் அந்த மாதிரியான ட்ரீட்மெண்ட்ஸ் கொடுத்துக்கிட்டு இருக்கேன் ... சோ நியூரோ சயின்ஸ் சம்பந்தப்பட்ட விஷயத்துல உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ண தயாரா இருக்கேன் .. " 


"தேங்க்ஸ் டாக்டர் .... பணத்தை பத்தி பிரச்சனை இல்லை ... எவ்ளோ கோடி வேணாலும் கொடுக்கறேன் ...என் மது அந்த ராமை மறந்துட்டு என் கூடவே இருக்கணும் ...."


"இன்னும் ஒரு முக்கியமான விஷயம்..... நீங்க எவ்ளோ பணம் செலவு பண்ணாலும்  வி ஆர் கோயிங் டு பிளே வித் த பிரைன் சர்க்யூட்ஸ்...  பிரைன் தி மோஸ்ட் கிரிட்டிக்கல் பார்ட் இன் அவர்  பாடி ...( மூளைல இருக்கிற நரம்புகளோடு விளையாட போறோம்... நம்ம உடம்புலயே ரொம்ப  கடினமான ஒரு பாகம்னா அது மூளை தான் ...) அதனால இந்த ட்ரீட்மென்ட் ஓட சக்ஸஸ் ரேட் ரொம்ப ரொம்ப கம்மி ... ஜஸ்ட் 10% அவ்ளோ தான் ....  ஏன்னா இதுவரைக்கும் இந்த மாதிரியான ஒரு ட்ரீட்மென்ட்ட  யாரும் செஞ்சதே இல்ல .... ட்ரீட்மென்டோட முடிவுல,  அவங்களுக்கு எல்லாமே மறந்து போய் ஒரு ரெண்டு வயசு குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணவும்  வாய்ப்பு இருக்கு ....  வொர்ஸ்ட் கேஸ்ல பிரைன் ஹெமரேஜால உயிர் போகவும் வாய்ப்பு இருக்கு .... இதுக்கெல்லாம் நீங்க தயாரா இருந்தா,  இந்த ரிசர்ச்ல நானும் என் டீமும் களம் இறங்கறோம்  ..."


ஓரிரு கணம் யோசித்தவன்,


"எது நடந்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல டாக்டர் ... கோ எ ஹெட் ..." என்றான் தீர்மானமாய். 


"ஆங்.... இன்னொரு விஷயத்தையும் இப்பவே சொல்லிடறேன் .... ஒருவேளை நாம எதிர்பார்த்தபடி ட்ரீட்மென்ட் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா,  ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு புது நாடு,  மக்கள் , மொழி கலாச்சாரம்னு இந்தியாவை விட்டு வேற எங்கேயாவது அவங்கள கூட்டிட்டு போயிடுங்க ... ஏன் சொல்றேன்னா,  ஒரு சினிமா பாட்டு,  ஏதாவது போஸ்டர்,  ஒரு டிரஸ்,   இப்படி ஏதாவது ஒன்னு  அவங்க மனசுல ஆழமா பதிஞ்சு போன ஏதாவது ஒரு விஷயத்தை லேசா  ட்ரிக்கர் பண்ண ஆரம்பிச்சாலே போதும்  அவங்க நியூரான்ஸ்

அது சம்பந்தமான விஷயங்களை தேட ஆரம்பிச்சுடும்  ..... அது டூயல் மெமரிய கிரியேட் பண்ணி , அவங்கள சிவியர் டிப்ரஷனுக்கு கொண்டு போய்டும் .... சோ பீ கேர்ஃபுல் .... இதுக்கெல்லாம் உங்களால ஏற்பாடு செய்ய முடியும்னா, வீ வில் ஸ்டார்ட் த பிரசீஜர் ..." 


"முடியும் டாக்டர் ....  ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் அவளை எங்கேயாவது கூட்டிட்டு போயிடறேன்... ஆனா அந்த ட்ரீட்மென்ட் எப்படி நடக்கும் .... ஆப்ரேஷன் மாதிரியா ... இல்ல டேப்லட்ஸா .... இல்ல வேற ஏதாவது ப்ரோசீஜரா ..." என்றான்  ஆர்வமாய். 


"என்னால முடிஞ்ச அளவுக்கு லேமேன் லாங்குவேஜ்ல எக்ஸ்பிளைன் பண்றேன்... புரியுதான்னு பாருங்க .... 


நம்ம மூளையில வெவ்வேறு நினைவுகள் வெவ்வேறு நியூரான்ஸ்ல சேவ் ஆயிருக்கும்...

எந்த நினைவுகள் சம்பந்தப்பட்ட நியூரான்ஸ் நமக்கு தேவையில்லங்கிறத கண்டுபிடிச்சு அதை நியூரான்ஸ மட்டும்  டார்கெட் பண்ணி சர்ப்ரஸ்  பண்ணனும்  ...

அந்த டெக்னிக்கு  செலெக்ட்டிவ் மெமரி சப்ரஷன்னு பேரு .... 


அதுல பேஷண்ட்க்கு செமி செடேஷன்  ( பாதி மயக்கம்) , மசில் ரிலாக்டண்ட்  ட்ரக்ஸ் ( நரம்புத் தளர்வு)  கொடுத்து ஒரு மாதிரியான அன்கான்ஷியஸ் ஸ்டேஜ்க்கு கொண்டு போய்டுவோம் ...




பேஷண்டோட தலையில எலக்ட்ரோடு பேட்ஸ் (electrode pads) கட்டி,  அதை பிரைன் ஃபங்சனிங்  மானிட்டரோட இணைச்சிடுவோம் ....


அப்புறம் அவங்க கிட்ட பேச்சுக் கொடுக்க ஆரம்பிப்போம் .... ஃபார் எக்ஸாம்பிள் உங்க கேஸ்ல,  அந்த பொண்ணு கிட்ட அவங்க ஹஸ்பண்டை பத்தி பேச்சு கொடுப்போம் .... 


அப்படி பேச்சு கொடுக்கும் போது  அவங்க ஹஸ்பண்ட் சம்பந்தப்பட்ட மெமரீஸ் உள்ள நியூரான்ச மானிட்டர்ல மார்க் பண்ணிக்கிட்டே வருவோம் ...


இந்த ப்ராசஸ் முடிஞ்சதும்,  மார்க் பண்ணின நியூரான்ச மட்டும்  டார்கெட் பண்ணி  சப்ரஸ் பண்ணிடுவோம் ....


அதுக்கப்புறம் மெமரி ரீ கன்சாலிடேஷன் பண்ணுவோம் .... 


அப்ப நடக்குற மெமரி டெஸ்ட்ல,  அவங்க ஹஸ்பண்டை பத்தி அவங்களுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு   வரலன்னா  ட்ரீட்மென்ட் சக்சஸ்ஃபுல்னு அர்த்தம் ....


அப்புறம் சப்ரஸ் பண்ண மெமரி ஸ்டோரேஜ்  நீங்க அக்சஸ் பண்ணி,  டாக்கிங் தெரபி வழியா,  உங்க மனசுல இருக்கிறத அவங்க மைண்ட்ல நீங்க ரீ ரைட் பண்ணலாம் ...


இந்த ப்ராசஸ் எலி, சிம்பான்சிக்கு ரொம்ப சக்சஸ்ஃபுல்லா வொர்க் அவுட் ஆயிருக்கு ...


ஆனா ஹியூமன்ல எந்த அளவுக்கு பாசிபுல்னு  இனிமே தான் தெரிய வரும் .... இப்படி நாம செய்யப் போறது கவர்மெண்டுக்கு தெரிய வந்தா நிச்சயம் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் .... எல்லாம் தெரிஞ்சும் நான் ஏன் ரிஸ்க் எடுக்கறேனா,  எனக்கு பணத்தைவிட,  இந்த ரிசர்ச் சக்சஸ்ஃபுல் ஆனா,  அப்புறம் வேர்ல்ட்  ஆஃப்  நியூரோ சயின்ஸ்ல ஹியூமன் செலக்டிவ் மெமரி சப்ரஷனுக்கு நான் தான் காட் ஃபாதர்  ..."

 என பெருமையோடு அவர் முடிக்க, ஒரு சிறிய யோசனையில் மூழ்கிப் போனான்.


அவனுடைய தாய் தந்தை இருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது.  


தமையன் ராகேஷ் கோட்டா நகரத்தில் பாட்டன்  ராஜ்குமார் விட்டுச் சென்ற வியாபாரத்தை சிறப்பாக செய்து கொண்டு வருகிறான்.    ஏதாவது திருமணம் போன்ற விசேஷத்திற்கு மட்டும் கோட்டா நகரத்திற்கு சென்று தமையனின் குடும்பத்தை  சந்தித்துவிட்டு வருவான் ....


மற்றபடி அவனது மகனைத் தவிர வேறு யாரிடமும் அவனுக்கு பற்றுதல் இல்லை ..


நடைபெறப் போகும் இந்த நூதன மருத்துவத்தில்,  தன்னவள் தன் விருப்பப்படி கிட்டினால் , கண் காணாத இடத்தில் அவளுடன் களிப்போடு  வாழலாம் ....  இல்லையேல் அவளுடனேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும்   என்ற தீர்க்கமான முடிவை எடுத்தவன்,   அந்த மருத்துவத்திற்கான ஏற்பாட்டை செய்யுமாறு மைக்கேலை பணித்துவிட்டு  கோயம்புத்தூர் திரும்பியிருந்தான். 

பிறகு ஒரு பத்து நாட்களுக்கு முன்பு மீண்டும் பெங்களூருக்கு சென்று மருத்துவர் மைக்கேலை சந்தித்து,  அவர் கேட்டிருந்த பணத்தை  பணக்கட்டுகளாக கொடுத்து விட்டு வந்திருந்தான் .


இவற்றையெல்லாம் அவன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீயுடன் பேசிக் கொண்டிருந்த கயல்  


" வாங்க பிரியா,  பசிக்குது கேன்டீன் போலாம்..... ...." என்றாள்.


"தக்காளி சாதம் கொண்டு வந்திருக்கேன் கயல்  ...  ரெண்டு பேரும் இங்கயே ஷேர் பண்ணி சாப்பிடலாம் ...."


"காலையிலயே சரியா சாப்பிடல .... இப்ப ரொம்ப பசிக்குது .... இன்னைக்கு கேன்டீன்ல வெஜ் பிரியாணி வாங்கி ஒரு கட்டு கட்டணும்னு இருக்கேன் ... வாங்க போலாம் ..." 


என கயல் அழைத்ததும்,  இருவரும் மதிய உணவு அருந்த கேண்டீனுக்கு சென்றனர்.


அப்போது பார்த்து வீராவிடமிருந்து ஒரு இணையத்திரி வாட்ஸ் அப்பில் வர, யோசனையோடே அதை ஸ்ரீ தட்டி துவக்க,  அவளது நாயகன்,  பலர் நிறைந்த சபைக்கு முன்பாக கம்பீரமாய் மேடையில் நின்றுகொண்டு  உரையாற்றிக் கொண்டிருக்கும்  காட்சிகள் விரியத் தொடங்கின.


அந்த 15 நிமிட காணொளியை பெண்கள் இருவரும் ஆழ்ந்து ரசித்து பார்த்தனர் ...


அவனுக்குப் பின்புறமாக இருந்த மாபெரும் திரையில் காணப்பட்ட எண் கணிதத்தை , பார்க்காமல்,  கையில் இருந்த ஐபேடையும் பார்க்காமல்,  கூட்டத்தை மட்டும் பார்த்தபடி,  கணிதத்தை விரல் நுனியிலும், ஆங்கிலத்தை நுனி நாக்கிலும்  வைத்துக் கொண்டு வெகு சிறப்பாக பலரும் வியக்கும் வண்ணம் உரை நிகழ்த்தி கொண்டிருந்தான் ஸ்ரீயின் நாயகன்.


அவளுக்கு மிகவும் பிடித்த சாம்பல் நிற ப்ளேசர்,  ஜெல் தடவி படிய வாரிய கேசம், எப்பொழுதுமே முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் மென் புன்னகை என வழக்கம் போல்  கவர்ந்தவனை விழி விலக்காமல் , லயித்து பார்த்துக் கொண்டிருந்தாள். 


அவன் பேசிய விஷயங்களில் ஓரிரண்டை  தவிர பெரும்பாலானவைகள்  விளங்கவில்லை என்றாலும், அவன் உடல் மொழியில் காட்டிய தோரணையும்,  கணீரென்ற கம்பீரமான குரலும்,  அந்தக் காணொளியை முழுமையாக பார்க்க வைத்தது.


"வாவ் சூப்பர்ப் ப்ரியா.... உங்க ஆளு அடிச்சு பின்றாரு ....  என்னமா பேசறாரு .... வீட்ல கூட இப்படித்தான் பேசுவாரா ..."

என்ற கயலின் பேச்சைக் கேட்டு குலுங்கி சிரித்த ஸ்ரீ


"வீட்ல ரொம்ப பேசவே மாட்டாரு...  ஆனா பேசினா ரொம்ப ஜாலியா இருக்கும் ...

நான் தான் எப்பவும் வளவளன்னு ஏதாவது பேசிக்கிட்டே இருப்பேன் ...." என்று அவள் முடிக்கும் பொழுது,  கயல் கேட்டிருந்த உணவை சிப்பந்தி கொண்டு வந்து வைக்க,  இருவரும்  ஏதேதோ பேசிக்கொண்டே  உணவு அருந்தத் தொடங்கினர்.



உணவருந்தி முடிந்ததும்,  


"ப்ரியா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் ...   நீங்க என்னை தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா சொல்றேன்   ...."  என கயல் பெரும் பீடிகை போட,


"எதுவா இருந்தாலும் சொல்லுங்க ...." என்றாள் ஸ்ரீ இயல்பாய் . 


"அது வந்து .... .... இந்த ஆபீஸ்ல நான் ஜாயின் பண்ணி கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது .... நான் வந்ததுல இருந்து ராணாவ பாத்துகிட்டு இருக்கேன் .... எப்பவும் ஸ்ட்ரிக்டா இருப்பாரு... யார் கூடயும் பேசவே மாட்டாரு ... எந்த ப்ரோக்ராம்லயும் கலந்துக்க மாட்டாரு .... இன் ஃபாக்ட்  அவரு எப்ப ஆபீஸ்க்கு வராரு  போறாருன்னு கூட மோனிஷாவை தவிர வேற யாருக்குமே தெரியாது ....


ஸ்ட்ரிக்ட் ஆபிசர், மிஸ்டர் கிளீன், ஆல்ஃபா மேல்னு ஏகப்பட்ட பட்டபேர் அவருக்கு உண்டு.... ....


ஆனா இப்ப ராணா கம்ப்ளீட்டா சேஞ்ச் ஆயிட்டாரு .... " என முடித்தாள்  வித்தியாசமான குரலில். 


ஸ்ரீ அவளை புரியாத பார்வை பார்க்க 


"இன்னும் ப்ரிசைஸ்ஸா சொல்லனும்னா , நீங்க வந்ததுக்கப்புறம் அவர்கிட்ட 180 டிகிரி சேஞ்சஸ் தெரியுது  ..."


" வாட் டூ யூ மீன் ...." 


" பாத்திங்களா.... கோவப்படறீங்க ..."


" நான் கோபப்படல கயல் ... நீங்க என்னமோ சொல்ல வரீங்க .... அதை தெளிவா சொல்லுங்கனு கேட்கறேன் ..."


"நீங்க இந்த கம்பெனில ஜாயின் பண்ணின கொஞ்ச நாள்லயே உங்கள நல்லா புரிஞ்சுகிட்டேன் ...  நீங்க உங்க வீட்டுக்காரர் தவிர வேற யாரை பத்தியும் அதிகமா பேசினதே இல்ல ....  விளையாட்டுக்காக கூட

யாராவது சினிமா ஆக்டர்ஸ், ஸ்போர்ட்ஸ் பர்சனை  ரொம்ப பிடிக்கும்,  கிரஷ்னு  கூட நீங்க சொல்லி  நான் கேட்டதில்ல .... காசிப் பேச மாட்டீங்க .... நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு பர்ஃபெக்ட்டா இருப்பீங்க .....  அதனால தான் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சு ...நீங்க பாக்கறது ராணாவோட ஒரிஜினல் நேச்சர் கிடையாது ... அவரு உங்க கிட்ட மட்டும் தான் அப்படி நடந்துகிறாரு...." 

என அவள் தீவிரமாய்  உடைத்துப் பேச , ஏற்கனவே ஸ்ரீ அனுமானித்த விஷயம் தான் என்றாலும்,  மெல்லிய அச்சம் அவளை ஆக்கிரமிக்க, மறுக்கணமே, கணவன் நாடு திரும்பியதும், இந்தப் பணிக்கு முழுக்கு போடப் போகின்றோமே என்ற எண்ணமும் மின்னலாய் வந்து நிற்க, உடனே சுதாரித்தவள்,


"யார் எப்படி இருந்தா எனக்கென்ன கயல் ....   நான் சரியா இருக்கிற வரைக்கும் யாராலயும்,  எதுவும் பண்ண முடியாது ..."

என்றாள் தீர்மானமாய். 


" நீங்க சொல்றதும் சரிதான் ...  ஆனாலும்  நாம  எவ்ளோ சரியா இருந்தாலும் , சில சமயம் மத்தவங்க முன்னாடி  ராணா மாதிரியானவங்களோட நடத்தை , நம்ம நடத்தைய மத்தவங்க சந்தேகப்படற அளவுக்கு கொண்டு வந்து விட்டுடும்  ....  நேத்து அவரு எல்லார்  முன்னாடியும்  உங்ககிட்ட ரொம்ப ஜோவியலா  பேசினது எனக்கு மட்டும் இல்ல நம்ம டீம்கே ஆச்சரியமா  இருந்தது ... சோ பீ கேர்ஃபுல் ப்ரியா ... நான் நாளிலிருந்து லீவுல போறேன் .... கல்யாணம் முடிஞ்சு,  ஒரு வாரம் கழிச்சு தான் ஆபீஸ்ல ஜாயின் பண்ண போறேன் ... ஏனோ போகறதுக்கு முன்னாடி சொல்லனும்னு தோணுச்சு .... சொல்லிட்டேன்.........." என்றாள் நட்பாய். 


"இனிமே இந்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும்  ... தேங்க்ஸ் கயல்...  "


"என் மேல கோபம் இல்ல இல்ல .... என் கல்யாணத்துக்கு வருவீங்க இல்ல ..."


"ஹேய்... டோன்ட் பி சில்லி .... நிச்சயமா வருவேன் ... நோ வொரிஸ்..." என்றாள் ஸ்ரீ மென் புன்னகை பூத்து.


"ப்ராமிஸ் பண்ணுங்க ...."


"ப்ராமிஸ் எல்லாம் எதுக்கு ..."


"நீங்க ப்ராமிஸ் பண்ணா தான் நான் சொன்ன விஷயத்தை நீங்க சரியா எடுத்துக்கிட்டீங்கன்னு  நம்புவேன் ..."


"ப்ராமிஸ் ..." என்றாள் கயலின் கரம் பற்றி.


"ப்ராமிஸா என் கல்யாணத்துக்கு நீங்க வரீங்க..... ...." என்றாள் கயல் அவள் கரத்தை விடாமல். 


கயல் கூறியதில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொண்டாலும், உயர் அதிகாரிகளில் இம்மாதிரியான சபல புத்தி கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.... என்று நினைத்து  கொண்டாளே ஒழிய,  ராணா சைக்கோ புத்திக் கொண்டவனாக இருப்பான்  என்று துளிகூட எண்ணவில்லை.


எது எப்படி இருந்தாலும் இன்று இரவு அலைபேசி  உரையாடலில்,  கணவனிடம்  அனைத்தையும்,  சொல்லி விடுவது நல்லது என்று எண்ணிக் கொண்டாள் , சூழ்நிலை அப்படி ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து தரப்போவதில்லை என அறியாமல்.



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....






























































































































































Comments

  1. Aiyooo apo veera kita pesa vidama... Inaikae priyavah thukkiduvangalo... Achoo pavam...

    ReplyDelete
  2. Sis soopero superb. Waiting for the next ud. Neraya thrilling uh next ud irukum polaye. Sri pavam la, Ava ram maranthuta Ram oda nelama enna agumney theriyalaye.

    ReplyDelete

Post a Comment