ஸ்ரீ-ராமம்-130

 அத்தியாயம் 130 



ஸ்ரீ அழைப்பை ஏற்றதும் ,


"பட்டு..." என அவன் அழைத்தது தான் தாமதம்,  அவள் கண்களில் மெல்லிய நீர் திரையிட்டதோடு தொண்டையும்  கனத்து வலிக்க ,


"ம்ம்ம்...  "  என்றாள் மென்மையாய்.


"ஸ்ரீ.... என்னாச்சு ... அழறயா .... பாட்டி, அம்மா ஏதாவது சொன்னாங்களா ..." 


அவன் எதிர் முனையில் பதற,


"அவங்க யாரும் எதுவும் சொல்லல ராம்... நான் தான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்..." 


"நானும் தான் டி உன்னை மிஸ் பண்றேன் ..."

அவன் குரலிலும் ஏக்கம் தெரிய, 


"அங்க டைம் என்ன .....  சர்வீஸ் அபார்ட்மெண்ட் எப்படி இருக்கு ... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாமில்ல ..." என பேச்சை மாற்றி அவள் கேள்விகளை அடுக்க,


"இங்க மார்னிங் 5:30 ....  இந்த அப்பார்ட்மெண்ட் நல்லா இருக்கு ....  அப்புறமா உனக்கு சுத்தி காட்டறேன்...  இன்னைக்கு எந்த வேலையும் கிடையாது ...  நாளைக்கு தான் ரிப்போர்ட்டிங் .... தூக்கமும் வரல .... அதான் ஃபோன் பண்ணேன்..."


"மொதல்ல நீங்க  நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க, அப்புறம் எனக்கு போன் பண்ணுங்க .... தினமும் ஃபோன் பண்ணனும்... " என்றவளின் குரல் வெகு லேசாக தழுதழுக்க, 


"நீ உன் வேலைல கான்சன்ட்ரேட் பண்ணு... நானும் என் வேலைல கான்சன்ட்ரேட் பண்றேன் ... டைம்  சீக்கிரமா போயிடும் .... நானும்  சீக்கிரமா  வேலைய முடிச்சுட்டு வர பார்க்கறேன்...  அதோட  எப்ப டைம் கிடைக்குதோ அப்பெல்லாம்  போன் பண்றேன்.... சரியா " என்றான் அவளது உணர்வுகளை புரிந்து கொண்டு. 


"ம்ம்ம்ம்.." அவள் தயக்கத்ததோடே பதில் அளிக்க 


"யோசித்துப் பார்த்ததுல ஒன்னு புரிஞ்சிது.... நமக்கு கல்யாணம் ஆகி முழுசா ஆறு மாசம் கூட ஆகல .... அதுக்குள்ள என் அம்மா குழந்தை குழந்தைனு சொல்றதுக்கு காரணம்,  அவங்க ஈகோவா இருக்குமோன்னு தோணுது  ... ஏன்னா நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்க வீட்ல எல்லா முடிவையும் எங்க அம்மா தான் எடுப்பாங்க ....  அவங்க பேச்சை மீறி  எங்க வீட்ல எதுவுமே  நடந்ததில்ல ..... மொதல் முறையா அவங்க பேச்சை மீறி நீ வேலைக்கு போறதால,  கன்சீவ் ஆகாதத  காரணமா சொல்லி உன்னை வேலையை விட்டு நிக்க  சொல்றாங்களோனு  தோணுது .... ஒருவேளை நீ வேலைக்கு போகாம இருந்திருந்தா , நீ கன்சீவ் ஆகாதத பத்தி அவங்க கவலைப்பட்டு இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ... .... 


அதோட அவங்க அப்படி பேசுறதுக்கு இன்னொரு  காரணம் என் தங்கச்சி  அன்புவும் தான் ... அவ தான் இல்லாததையும் பொல்லாததையும் என் அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்திருக்கா ... ஆனா அவ ஏன் உன் விஷயத்துல இப்படி நடந்துக்கிறான்னு தான் இப்ப வரைக்கும்  எனக்கு  புரிய மாட்டேங்குது  ... 


ஆனா இதுல ரியலி ஜெனியூன்னா நடந்துக்கிற ஒரே ஆள்  என் பாட்டி தான் .... அவங்க மட்டும் தான் உண்மையான அக்கறையோட குழந்தையை பத்தி விசாரிக்கிறாங்க ....


இதெல்லாம் ஏன் சொல்றேன்னா,  நம்ம வீட்ல என்ன நடந்தாலும்  நீ எனக்கு அப்டேட் பண்ணனுங்கிறதுக்காக  ..."


பல ஆயிரம் மையிலுக்கு அப்பால் இருந்தாலும்,  அவனது சிந்தனை முழுவதும் அவளை சுற்றியே மையம் கொண்டுள்ளதை எண்ணி மனம் மகிழ்ந்தவள்,


"நிச்சயமா ... உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன் ...  டயர்டா இருப்பீங்க இப்ப நிம்மதியா தூங்குங்க.. அப்புறமா ஃபோன் பண்ணுங்க ..." 


அவனுடைய ஆதரவும்,  அறிவுரையும் தேவை படும் அதி முக்கிய நேரத்தில் ,  இவளது அலைபேசி  அழைப்பை அவன்  எடுக்கப் போவதில்லை என அறியாமல், அவன் குரலில் தெரிந்த சோர்வைக் கண்டு அவ்வாறு கூறி  அழைப்பை துண்டித்தாள். 



அதற்கு மேல் அலுவலகத்தில்  அன்றைய பொழுது அழகாகவே கழிந்தது.



இரவு 7 மணியைக் கடந்து வீட்டை அடைந்தவளுக்கு, பிரபாவின் தாயாருக்கு மாதாந்திர  பரிசோதனைக்காக பிரபாவும் சத்யனும்  மருத்துவமனை சென்று இருப்பதாக கிடைத்த தகவலைத் தவிர , மற்றபடி  முந்தைய தினம் போலவே  இரவு உணவு முடிய, தன் அறைக்கு வந்து விழுந்தவளுக்கு,  அவளது  நாயகனிடமிருந்து அழைப்பு வர, அனுமதித்ததும்


"ஹேய் ஸ்ரீ...." என்றான் whatsapp காணொளி அழைப்பில்  தோன்றி. 


" ரொம்ப டயர்டா இருக்கீங்க போல.... " என்றாள் அவனது கண்களை சுற்றி தெரிந்த கருவளையத்தை பார்த்து.


"டூ ஹவர்ஸ்க்கு முந்தி தான் தூங்கி எழுந்தேன்.... இப்ப தான் வெளியே போய் கொஞ்சம் கிரோசரீஸ், வெஜிஸ் அண்ட்  ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வந்தேன் ..." என்றபடி காணொளியில் அவனது அறையை  சுற்றி காட்டினான். 


ஆஸ்திரேலியாவில் அவர்கள் தங்கி இருந்தது போலவே,  அழகான சகல வசதிகளுடன் கூடிய ஒற்றைப் படுக்கையறை வீடாக இருந்தது அது.


மாலை நேரம் என்பதால்,  அனைத்தும் வெகு அழகாக காட்சிப்பட,  அவளுடன் பேசிக்கொண்டே இரவு உணவுக்கான தயாரிப்பில் ஈடுபட்டவன்,  அவர்கள் மேற்கொண்ட ஆஸ்திரேலியா பயணத்தின் போது நடந்த சிலவற்றை பகிர்ந்து வழக்கம் போல் அவளைக் கொஞ்சினான், சீண்டினான்,  வெட்கப்பட வைத்தான்.


பிரிவு உடல்களுக்கானதாக இருந்ததே ஒழிய,  உணர்வுகளுக்கோ , விழிகளுக்கோ இல்லாததால்,  அதிகத் தனிமையை உணராமல் இருவரும் ஒருவரை ஒருவர் காணொளியில் பார்த்துக் கொண்டே, ஏதேதோ உரையாடி மகிழ்ந்தனர்.


அதற்குள் எல்லா காய்கறிகளையும் போட்டு அவன் செய்த பிரியாணி தயாராகி விட,  உடன் அவன் அடுக்களையை கையோடு சுத்தம் செய்தும் முடிக்க,


"உங்க கிட்ட பிடிச்ச விஷயமே நீங்க எல்லாத்துலயும் பர்பெக்ட்டா நடந்துகிறது தான்  ..."  என்றாள் பாராட்டும் விதமாக. 


"ஆமாண்டி,  நான் எல்ல்ல்ல்லாத்துலயும் ரொம்ப பர்ஃபெக்ட்டா நடந்துப்பேன்   ..." 

என்றவனின் கண்ணில்  தோன்றிய குறும்பு, அவன் இரு பொருள் படும் படி பேசுவதை தெளிவாக உணர்த்த,


"ஐய்ய.... எப்பவும் எதையாவது எடக்கு மடக்கா புரிஞ்சுகிட்டு பேச வேண்டியது ..." அவள் நாணி கோண ,


"பேசணும்னு சொல்லும் போது தான் நினைவு வருது ஸ்ரீ ... நாளைக்கு ஃபர்ஸ்ட் டே மீட்டிங்ல அட்ரஸ் பண்ண போறேன் .... அதுக்கு பிரிப்பேர் பண்ணனும் ..." என்றான் ஆர்வமாய். 


"ஆல் தி பெஸ்ட் .... எனக்கு லிங்க் ஷேர் பண்ணுங்க நானும் பாக்கணும் ...." 


"பண்றேன் டா  .... உனக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு தூங்க போ .... ஆமா ..... ஆபீஸ் எப்படி போச்சு ...." என்றான் நினைவு வந்தவனாய். 


இத்துணை நாட்களாக  ராணாவின் செயல்பாடுகளை வரையறுக்க முடியாமல்  இருந்தவளுக்கு,   அன்று அலுவலகத்தில்  பலர் அறிய  அவளிடம்  வெளிப்படையாய் அவன் வழிந்து  பேசி தன் சபல புத்தியை  காட்டியது நினைவுக்கு வர,  அதைப் பற்றி சொல்லலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றமும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேற, கடைசியில்  வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள் பெண்.


காரணம், அவள் கணவன் நாடு திரும்பியதும்,  அவள் பணிக்கு முழுக்கு போடப் போகிறாள் .... வெறும் இரு வார காலம் மட்டுமே இருக்கப் போகின்ற இடைஞ்சலை பற்றி தேவையில்லாமல் தற்போது  பேசி அயல்நாட்டில் இருக்கும்  கணவனின் மன அழுத்தத்தை  கூட்ட மனமில்லாமல் ,


"நல்லா போச்சு ராம் ...  ஆண்டனியும் கயலும் வந்துட்டாதால ஒர்க் லோடும் குறைஞ்சு போச்சு ... "


"குட் ... டேக் கேர் .... குட் நைட் ..."   என்றான் காணொளியில் அவள் விழிகளையே பார்த்தபடி.


அவளும் அவனையே பார்த்துக் கொண்டு நிற்க ,


"என்ன லுக்கு விட்டுகிட்டு இருக்க ... காலையில ஆபீஸ் போகணும் இல்ல ...." 

என்றவன் நினைவு வந்தவனாய்  அலைபேசியில் அவளது நெற்றியில் முத்தமிட


"எங்க மறந்துட்டீங்களோனு நினைச்சேன்...."  

என்றவளும் உதடுகளை குவித்து அவன் கன்னத்தில் முத்தமிட, 


"மொபைல ஆஃப் பண்ணிட்டு தூங்கு டி ..." 

என அவன்  குறுநகை பூக்க,  அதில் லயித்த படி ,  "குட் நைட் " என அழைப்பை துண்டித்தாள் ஸ்ரீ. 



அதே நேரத்தில்,  ஐந்து நட்சத்திர விடுதியின் பிரைவேட் கேபினில் திலக்கை சந்தித்தான் ராணா .


வந்தவன் அவன் முன்பிருந்த வஸ்துக்களை கண்டு  " என்ன திலக் இது  .... நீயும் குடிக்க ஆரம்பிச்சிட்டியா ...."  என்றான் ஆதங்கமாய்.


"மனசே சரியில்லடா ....  சுனந்தாவுக்கு லங் கேன்சர் வரும்னு நான்  கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... அதுவும் செகண்டரி ஸ்டேஜ்ல தான் கண்டுபிடிச்சிருக்கோம்னு நினைக்கும் போது ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு ...  என் பொண்ணுங்க ரெண்டும்,  அம்மாவுக்கு இப்படி ஆயிபோச்சேனு உடைஞ்சு போய் உக்காந்து இருக்காங்க .... பெரியவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம் பேசலாம்னு இருந்தேன் டா .....எல்லாம் போச்சு ...   ஃபர்ஸ்ட் கீமோ முடிச்சதுமே , ரத்த வாந்தி எடுத்தா டா... என்னால பாக்கவே முடியல .... நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாச்சு ... அதான் இன்னைக்கு தண்ணி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் ...."


என்றவன் சொன்னது பாதி உண்மை பாதி பொய்.


அவன் மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய் வந்திருப்பது  உண்மை.  அதற்கான சிகிச்சையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 


 முதல் அறிகுறியிலேயே கண்டுபிடித்து விட்டதால்,  100% காப்பாற்றி விடலாம்  என்று மருத்துவர்கள் உறுதியளித்த நிலையில்,  இரண்டாம் கட்டத்தில் இருக்கிறாள் என்று அவன் பொய் உரைத்ததற்கு காரணம்,  ராணாவின் மனதில் இருப்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்,  ராணா மது அருந்த வேண்டும்.


ஸ்ரீப்ரியாவின் வருகைக்குப் பிறகு , அவன் மது அருந்துவதை அறவே நிறுத்தி இருந்தான்.  அவன் தெளிவாக இருந்தால் அவனிடமிருந்து மருந்தளவிற்கு கூட   விஷயத்தைக் கறக்க முடியாது என்பதால், இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி, மது விருந்தை திலக் துவங்கி இருக்க,


"நானும் தண்ணி அடிச்சு ரொம்ப நாள் ஆச்சு.... கம் லெட்ஸ் ஸ்டார்ட் த பார்ட்டி ..." என்றான் ராணா மதுவை கண்ணாடி கோப்பையில் ஊற்றி கையில் எடுத்துக்கொண்டு. 


முதல் இரண்டு சுற்றுகள் ,  வெகு இயல்பாக தன் மனைவி மகள்களைப் பற்றியே பேசிய திலக்,  மூன்றாவது சுற்று தொடங்கியதும்,


"எதுக்குடா உனக்கு திடீர்னு  அவ்ளோ பணம் தேவைப்படுது  ....அவ்ளோ பணத்த வச்சி என்ன பண்ண போற ..." என்றான் இயல்பாய்.


"ஒரு முக்கியமான விஷயத்துக்கு தேவைப்படுது .... அத பத்தி அப்புறம் சொல்றேன் ...."   ராணா குழறிய குரலிலும் உஷாராக ஒதுங்கிக் கொள்ள, அமைதி காத்தவன், நாலாம் சுற்று தொடங்கியதும் மெதுவாக ஸ்ரீப்ரியாவை பற்றி பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.




திலக்கின் முயற்சி வீண் போகாமல் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து ராணா உளற ஆரம்பித்தான். 



" யூ நோ .... இப்பெல்லாம் எனக்குத் தலைவலியே வர்றதில்ல... நானும் எந்த மாத்திரையும் சாப்பிடறது இல்ல... ரொம்ப ரொம்ப  ஹாப்பியா இருக்கேன் .... அதுக்கெல்லாம் காரணம் என் மது டா ...  அவளை பாத்துக்கிட்டே இருக்கேனா , நோ தலைவலி நோ டென்ஷன் .... என்ன ஒன்னு ஈவினிங் ஆனதும் வீட்டுக்கு போயிடறா ....  சாட்டர்டே சண்டே ஆபீஸ் லீவுங்கிறதால அவள பார்க்க முடியறதில்ல...  அது தான் கொஞ்சம் கடுப்பா இருக்கு .. ...." 


"உன் படிப்பு, அந்தஸ்து, தரத்துக்கு, இதெல்லாம் உனக்கு தேவையா ராணா .... அடுத்தவன் பொண்டாட்டி உனக்கு எதுக்கு ..."

"அடுத்தவன் பொண்டாட்டியா ... ஸ்ரீ போன பிறவில  என் பொண்டாட்டி டா .....   இப்ப இந்த ராம் அவளை  கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவன் பொண்டாட்டி ஆயிடுவாளா .... நெவர் .... என் மது எனக்கு வேணும் ... அதுக்காகவே  அவனை போட்டு தள்ளனும்னு திட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்.....  அதுக்குள்ள அவனே  யூகே போனதால அதுக்கு அவசியமே இல்லாம போயிடுச்சு ... அவன் திரும்பி வர்றதுக்குள்ள எப்படியாவது  என் ஸ்ரீயை தூக்கிடறேன்  பாரு..... .."


"ராணா.... ரொம்ப தப்பா பேசற .... அடுத்தவன் பொருள் மேலயோ  பொண்ணு மேலயோ கண்ணு வைக்காத  ...  அப்படி வச்ச , அழிவு நிச்சயம் .... ராமாயண கதை தெரியுமில்ல..."


"என்னைப் பொறுத்த வரைக்கும், கட்டின பொண்டாட்டிய சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்ன  ராமனை விட,  சீதையோட விருப்பம் இல்லாம அவளை   தொடக்கூடாதுனு  அவ சம்மதத்துக்காக காத்துக்கிட்டு இருந்த ராவணன் எவ்ளோ பெட்டர் ...  அந்தப் பத்து தலை ராவணன் மாதிரி தான் இந்த ராணாவும் ... என்ன தான் என் ஸ்ரீயை  தூக்கிட்டு போக திட்டம் போட்டாலும்  அவ சம்மதம் இல்லாம  அவள தொட மாட்டேன் ...."


"வாரே வா, அது என்னவோ தெரியல ... 

ராமாயணத்தை படிச்சவன் படிக்காதவன்,  வந்தவன் போனவன் ... எல்லாருமே ராமன் தன் பொண்டாட்டிய சந்தேகப்பட்டு தீ குளிக்க சொன்னான்னு  இல்லாத ஓன்ன இட்டுக்கட்டி வாய்க்கு வந்தபடி வசை பாடறீங்களே....ஏன்..."


" இல்லாத ஒன்னா...."


"ஆமா,  வால்மீகி ராமாயணத்தை ஒழுங்கா  படிச்சிருந்தா, நீ இப்படி எல்லாம் பேசியிருக்க மாட்ட ...


 இராவணன நல்லவங்கிறதால தான் சீதாவ தொடலன்னு  சொல்றியே,   எவனாவது தெரிஞ்சே  ட்ரான்ஸ்பாரத்துல கைய வைப்பானா டா ...,


சீதாவ அவளோட விருப்பம் இல்லாம  தொட்டா தன் தலை சுக்கு நூறா வெடிச்சிடும்னு ராவணனுக்கு நல்லாவே தெரியும் ...


நமக்கு  என்ன வியாதி இருக்குன்னு நமக்கு தானே தெரியும்.... அது  மாதிரி அவனுக்கு என்ன சாபம் இருக்குனு அவனுக்கு நல்லாவே  தெரியும் ...


ராவணனுக்கு இந்திரனால கொடுக்கப்பட்ட சாபம் அது ... எந்தப் பெண்ணையும் அவளோட விருப்பம் இல்லாம அவன்  தொடக்கூடாது... அப்படி தொட்டா  அவன் தலை சுக்கு நூறா வெடிச்சிடும்  ...


இது ராமனுக்கும் தெரியாது சீதாக்கும் தெரியாது ... ஆனா ராவணனுக்கு தெரியுமே ... அதுக்காகத்தான் அடக்கி வாசிச்சான்....


அவன் தன் உயிரை காப்பாத்திக்க அடக்கி வாசிச்சத தெரிஞ்சுக்காம , ஏதோ நல்லவன் வல்லவன்னு அவனுக்கு புகழாரம் சூட்டற ....


 நீ ராமனை கடவுளா பார்க்க வேணாம் கதாநாயகனா கூட பார்க்க வேணாம்... 

ஜஸ்ட் ஒரு கதாபாத்திரமா பார்த்து ராமாயணத்தை சரியா உள்வாங்கி படிச்சிருந்தாலே,  இதெல்லாம் உனக்கே புரிஞ்சிருக்குமே ...


சரி ராவணனை விடு ... ராமனுக்கு வரேன் ...


அவனுக்கு தன் பொண்டாட்டி  மேல ஒரு சதவிகிதம்,  ஏன் ஒரு அணு அளவு சந்தேகம் வந்திருந்தா கூட இப்படி காட்ட கடந்து, கடலை கடந்து , வானர கூட்டத்தை கூட்டிக்கிட்டு மாசக்கணக்கா கஷ்டப்பட்டு  அவளை தேடி இலங்கை போயிருக்க மாட்டான் ...


ஒருவேளை ராவணன் சீதாவ பலவந்தமா அடைச்சிருந்தா கூட, என் சீதா மேல தப்பு இல்லங்குற எண்ணம் இருந்ததால தான் அவளை தேடி ராமன்  அவ்ளோ தூரம் போனான் ....


இன்னொரு விஷயம் சொல்லவா ....

ராமன் சீதாவ தீக்குளிக்க சொல்லவே இல்ல ...

அவளா தான் லக்ஷ்மணன் கிட்ட  அக்னி குண்டத்தை ஏற்பாடு செய்ய சொல்லி  அதுல இறங்கினா ..."


"இது என்னடா புது கதையா இருக்கு ..." என்றான் ராணா கிண்டலாய். 


" கதை இல்ல இதுதான் உண்மை ...


சீதா ஏன் அப்படி செஞ்சா தெரியுமா ....


ராமன் நாடாளப் போகும் ராஜா   ...


அந்த கால சட்டப்படி ஒரு நாடாளற ராஜா ஆயிரம் கல்யாணம் கூட பண்ணிக்கலாம் ...

ஆனா ராமன்  தன்னை தவிர  வேற எந்த பொண்ணையும்  சிந்திச்சது கூட இல்லன்னு சீதாவுக்கு நல்லாவே தெரியும் ...


அதனால  வனவாசம் முடிஞ்சதும் ராமனுக்கு  பட்டாபிஷேகம் நடக்கும் .... அப்ப தான் தான்  பட்டத்தரசியா பதவி ஏத்தாகணும் ...


அதுக்கப்புறம் வாழற வாழ்க்கையில தான் கருத்தரிச்சா ,  மாசக்கணக்கா ராவணனோட இருந்துட்டு வந்ததால,  நிச்சயம்  பொறக்கப் போற அந்த குழந்தை மேல  ஊர் ஜனங்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பு இருக்கு..... 

ஏன்னா பொறக்க போற அந்த குழந்தை சூரிய வம்சத்தோட முதல்  வாரிசு ...சோ மக்களை ஆளப்போற ராஜாவோட பொறப்புல, எந்த காலத்துலயும் எந்த சந்தேகமும் வந்துட கூடாதுங்கிற ராஜ தர்மத்தை காப்பாத்த நினைச்சு தான் சீதா நெருப்புல இறங்கினா...

நெருப்புக்கு எப்பவுமே ஒரு தனி தன்மை உண்டு... தன்னோட சேர்ந்த  எதையும்  உரு தெரியாம  அழிச்சு  தன்னோடவே ஐக்கியமாக்கிடும் ....

ஆனா தண்ணிய மட்டும் அதனால ஒண்ணுமே பண்ண முடியாது ...

தண்ணியால நெருப்பு தான் அழிஞ்சு போகும்..... 

தான் அந்த மழைதுளி மாதிரி  தூய்மையானவ, குளிர்ச்சியானவங்கறதால தான், எதைப் பத்தியும் கவலைப்படாம நெருப்புல இறங்கி சீதா தன்னை ப்ரூவ் பண்ணா ...

ராஜ பதவியை ஏத்துக்கிட்டா  எதிர்காலத்துல இந்த மாதிரி  ஊர் ஜனங்களுக்கு  பதில் சொல்ல வேண்டி வரும்னு  நினைச்சி தான் , முன்கூட்டியே ராமன் தன் தம்பி பரதன் கிட்ட பதவியை கொடுத்தான் ... ஆனா  அவன் ராமனோட  பாதுகைய வச்சு ஆட்சி செஞ்சானே ஒழிய,  கடைசி வரைக்கும் பதவியே ஏத்துக்கல...


என்னை பொறுத்த வரைக்கும் ராமன் கடைசி வரைக்கும் பண்ண ஒரே தப்பு, எல்லாருக்கும் எல்லா விதத்துலயும் நேர்மையாவும் நல்லவனாவும் இருக்கணும்னு நினைச்சது தான்...


மக்களுக்கு ராஜா ராமனா ,

மனைவிக்கு சீதாராமனா,

பெத்த தாய்க்கு கௌசல்யா ராமனா,

அப்பாவுக்கு கொடுத்த வாக்க  காப்பாத்த

தசரதராமனானு இப்படி எல்லாருக்காகவும் யோசிச்சு யோசிச்சு  வாழ்ந்ததால தான் , கடைசி வரைக்கும் ராமன் நிம்மதியாவே வாழல ..." என்றவனின் பேச்சை இடைமறித்து 


" ப்ஃபூ.... ஏண்டா... எதுக்குடா இவ்ளோ பெரிய விளக்கம் கொடுத்து அறுக்கிற  ...."


" எப்பவுமே பழி சொல்ல ரெண்டு வரி போதும் டா ... அதை  இல்லன்னு தெளிவுபடுத்த  20 வரி தேவைப்படும் ....  நீயாவும் ஒரு விஷயத்தை படிச்சி தெரிஞ்சிகிறதில்ல ...  தெரிஞ்சவன் சொன்னாலும்  அத காதுல வாங்கறதில்ல  ..." என்றான் திலக் பெருங்கோபத்தோடு. 


"சரி நீ சொன்னது உண்மையாவே இருக்கட்டும் .... ஆனா நாடு நாடுனு நாட்டு ஜனங்களுக்காக யோசிச்சுக்கிட்டே   தானும் வாழாம தன் பொண்டாட்டி புள்ளைங்களையும் வாழ விடாம செஞ்ச ஒரு ஃபெயிலியர் கதாபாத்திரத்துக்கு இவ்ளோ முட்டு  அவசியமா ...."



"நீ இப்படி எல்லாம் பேசலன்னா தான் ஆச்சரியப்படனும் .... ஒன்ன சொல்லி தப்பில்ல ராசா .... நம்ம நாட்டோட லட்சணம் அப்படி ...


ராஜா எத்தனை கல்யாணம் வேணாலும் செஞ்சுக்கலாம்னு சட்டம் இருக்கும் போதே ஒருவனுக்கு ஒருத்தினு வாழ்ந்து நல்லாட்சி செஞ்சவன்  ராமன் ... ஆனா இப்ப இருக்கிற இந்திய சட்டப்படி எல்லாரும்  ஒருவனுக்கு ஒருத்தினு தான் வாழ்ந்து ஆகணும் ...

ஆனா இங்க இருக்கிற ஆட்சியாளர்கள் அப்படியா இருக்காங்க  ... நாட்ட பத்தி கவலைப்படாம , மனைவி துணைவி இணைவி பிணைவினு இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வச வசன்னு புள்ளைங்கள பெத்து போட்டுட்டு , யாரை பத்தியும்  கவலைப்படாம ஊழல் செஞ்சி அவங்களுக்காக  எக்கச்சக்கமாக சொத்து சேர்த்துட்டு  , எந்த பழி சொல்லுக்கும் அஞ்சாம வாழறவங்கள பார்த்ததால தான், ராமன் மாதிரி யோக்கியமானவன  வாழத் தெரியாதவன் லிஸ்ட்ல நீ சேர்க்கற...

அப்பெல்லாம் மன்னர் ஆட்சியே மக்களாட்சி மாதிரி நடந்தது ... இப்ப எல்லாம் மக்களாட்சியே  வாரிசு அரசியலால மன்னராட்சி மாதிரி  நடக்குதே... " என்றவனின் பேச்சை மீண்டும்  அவசரமாக  இடைவெட்டி 


" ஐயோ  திலக்...  இப்ப எதுக்குடா தேவை இல்லாம அரசியல் பேசி இம்சை பண்ற  ... தலை வலிக்குது ..." என்றான் ராணா தன்  தலையைப் பற்றிக் கொண்டு. 


"அரசியல் பேசல டா... நீ கேட்ட கேள்விக்கு  பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்..... 

 சரி ராமனை விடு .... நீ மட்டும் என்ன யோக்கியம் ....  அருமையான பொண்டாட்டி அம்சமான மகன்  இருந்தும்  வாழ தெரியாம இல்ல  வாழ்ந்துகிட்டு இருக்க ....

இங்க பாரு இதிகாச ராமன பத்தி பேசுறதுக்கு ஒரு தகுதி வேணும் ...  உன்னை மாதிரி ஒன் நைட் ஸ்டேண்ட்க்கு பொண்ணுங்க கிட்ட போறவனுக்கு எல்லாம் அந்த தகுதியே கிடையாது  ....


பத்து நாள் பொண்டாட்டி பக்கத்துல இல்லனா எவன் கூட போய் கூத்தடிக்கிறாளோனு சந்தேகப்படற நீ எங்க ....

பொண்டாட்டி தன்னை விட்டு போய் பத்து மாசம் ஆனாலும் அவ ஒழுக்கமானவனு நம்பி  அவளை தேடி கஷ்டப்பட்டு கடல் கடந்து  இலங்கைக்கு போன ராமன் எங்க ...

அதே போல அனுமன் அசோகவனத்துல சீதாவ  பார்த்து  , நான் உங்களை ராமன் கிட்ட கூட்டிட்டு போய்  விட்டுடறேன்  என்கூட வந்துடுங்கன்னு கூப்பிடும் போது கூட,

ராவணன் தான் கோழை மாதிரி என் புருஷன் இல்லாதப்ப  என்னை தூக்கிட்டு வந்தான் ....   நானும் அப்படி யாருக்கும் தெரியாம இங்கிருந்து போக தயாரா இல்ல...

என் புருஷன் என்னை தேடி வருவாரு ...

இவனை  அடிச்சு பொளந்துட்டு என்னை கூட்டிக்கிட்டு  போவாருனு சீதா சொன்னா ...

அதுதான் ஆத்மார்த்தமான தம்பதிகளுக்குள்ள இருக்கிற பரஸ்பர நம்பிக்கை ...

நீயும் உன் பொண்டாட்டிம் வாழற அசிங்கமான  வாழ்க்கைக்கு,  அதோட அர்த்தமெல்லாம்  சத்தியமா உங்களுக்கு  புரியவே  புரியாது ...

ஆங்.......  என்ன சொன்ன...  பத்து தலை ராவணனா.... அது பத்து தலை இல்ல  பத்து கலை ராவணன் .... அவ்ளோ  கலைகள்ல வல்லவன்...   ஜாதில பிராமணன்  .....  ஆனா போர் திறமைல சிறந்த சத்ரியன் ...  அப்படி ஒரு பராக்கிரமசாலி ... இலங்கைல படைபலம் மிக்க  மாமன்னன் ....  தேவர்களுக்கு சமமானவன் ... அவனோட இசைக்கு சிவனே அடிமை ....  அதனால தான் ஈஸ்வரனுக்கு  இணையா ராவணேஸ்வரன்னு பட்டம் வேற ..... இவ்ளோ  இருந்தும் எதுவுமே இல்லாத   சாதாரண  சாமானியன் ராமன்  கிட்ட தோத்து போனதுக்கு ஒரே காரணம் அடுத்தவன் பொண்டாட்டி மேல அவன்  ஆசை பட்டது தான் ...


அவன் தோத்து போனது ராமன் கிட்ட இல்ல... தர்மத்து கிட்ட ....


இப்பவாது புரிஞ்சுதா ...


இனிமே நீ  பண்ண போற அயோக்கியத்தனத்துக்கு ராமாயணம் மகாபாரதத்தை எல்லாம்  உதாரணமா காட்டின நான் மனுஷனா இருக்க மாட்டேன் ... "  என உச்சஸ்தாழியில் திலக் பொங்கிக் கொண்டிருக்க,   ஏதோ திரைப்படக் காட்சியை பார்ப்பது போல் , மூன்றாம் நபர் முகபாவத்தோடு விட்டேற்றியாக அவனை ராணா பார்த்துக் கொண்டிருக்க, அதனைக் கண்டு மேலும் கடுப்பானவன்


"அடேய்,  உனக்காகவும் உன் பணத்துக்காகவும் உன் கூட படுக்க ஏகப்பட்ட பொண்ணுங்க இருக்காங்க இல்ல ....அவங்கள அப்ரோச் பண்ணி கள்ளத்தொடர்ப ஏற்படுத்திக்க வேண்டியது தானே ... ( ராணா முறைக்க) 


ஓ.... கள்ளத்தொடர்புன்னு சொல்லக்கூடாதோ.... சரி... திருமணம் கடந்த உறவு .... அப்படி ஏதோ ஒரு எழவ ஏற்படுத்திக்கிட்டு ஜாலியா வாழறத விட்டுட்டு  எதுக்கு  டா தேவையில்லாம ஸ்ரீ மாதிரியான நல்ல பொண்ண உன் வாழ்க்கைல  இழுக்க  பார்க்கற....


ராணா .... நான்  உன்னை  வார்ன் பண்றேன் ஸ்ரீ விஷயத்துல இனி தலையிடாத ... அது உனக்கு நல்லதில்ல ...." என்றான் திலக் தீவிரமாய் கண்கள் சிவந்து. 


"மொதல்ல ராமாயண கதையை சொல்லி ரம்பமே இல்லாம என் கழுத்தை  அறுத்த,  அப்புறம் என்னை கழுவி கழுவி  ஊத்தன....அப்புறமா அட்வைஸ் பண்ண ... இப்ப மிரட்டறியா  ....  நீ இன்னைக்கு நேத்தாடா என்னை திட்ற ... என் அம்மா அப்பாவை விட என்னை அதிகம் திட்டினது,  நீயா தான் இருப்ப ... இதுக்கெல்லாம் நான் டென்ஷன் ஆகற ஆள் கிடையாது ....

இங்க பாரு  எனக்கு இந்த ராமாயணம் மகாபாரதங்கிற கற்பனை கதை மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது .... என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை  செய்யப் போறேன் அவ்ளோதான்  ... "


"தூங்குறவங்களை எழுப்பலாம் ராணா... தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது .... எனக்கென்ன தலை எழுத்தா,  என் பொண்டாட்டி அங்க உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கும் போது  உன் கூட உட்கார்ந்துகிட்டு  ராமாயணத்தை  பத்தி அலசி ஆராய .... ராமாயணம் உண்மைதான்னு ஆர்க்யூ பண்றதுக்கு இப்ப  எனக்கு நேரமும் இல்ல .... அதை முழுசா  கேட்கிற அளவுக்கு உனக்கு பொறுமையும் இல்லனு எனக்கு நல்லாவே  தெரியும்  .... நீ தப்பான வழில போற அதனால தான் அதை உதாரணமா சொன்னேன் ...அது கதையாவே இருந்துட்டு போகட்டுமே... அதுல சொல்லியிருக்கிற நீதிய மட்டும் எடுத்துக்கோனு சொல்றேன் ....  


பிறன் மனை நோக்கா பேராண்மைனு .....


வள்ளுவரும் தான் சொல்லி இருக்காரு....   நல்ல விஷயத்தை ஆராயாம ஏத்துக்க பழகு டா.... இங்க பாரு ... நான் எந்த பிறவில செஞ்ச பாவம்னு தெரியல .... என் பொண்டாட்டி வாழ்வா சாவானு போராடிக்கிட்டு இருக்கா .... என் பொண்டாட்டின்னா  எனக்கு உயிரு.... அவளுக்கு ஒன்னும் ஆகக் கூடாதுன்னு எல்லா தெய்வத்துக்கும் வேண்டுதல் வச்சிக்கிட்டு இருக்கேன் ....  நீ பண்ண போற அயோக்கியத்தனத்துல கூட்டு களவாணியா இருந்து மேலும்  பாவத்தை சேர்த்துக்க நான் தயாரா இல்லை .... 


அந்த ஸ்ரீபிரியாவுக்கு என் பொண்ணு வயசு டா..... ....அவ வாழ்க்கையை நீ கெடுக்கணும்னு நினைக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல ...

நான் எப்படி எப்படியோ சொல்லி பாத்துட்டேன் நீ கேட்கிறதா இல்ல... இனிமே இந்த விஷயத்தை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு எனக்கு தெரியும் நான் பாத்துக்கறேன் ...."  என முடித்தான்  திலக் தீவிரமாய் தீர்மானமாய்.


நண்பனின் அளவுக்கு அதிகமான கோபத்தால்  தலைக்கேறி இருந்த மது போதை மின் தூக்கிப் போல் விருட்டென்று கீழ் இறங்க , சுயம் உணர்ந்தவன் சிந்திக்க  ஆரம்பித்தான்.


தேவை இல்லாமல் மனதில் இருந்ததைக் கொட்டி மாட்டிக்கொண்டு விட்டோமோ என்று தன்னைத்தானே குட்டிக் கொண்டான் ராணா.... ...


இதே கோபம் நீடித்தால் நிச்சயம் திலக் ஸ்ரீயை சந்தித்து , தன் திட்டத்தை சொன்னாலும் சொல்லிவிடுவான் பிறகு போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் அனைத்தும் வீணாகிவிடும் என்ற பயமும் அவனுக்கு  துரிதமாக தோன்ற தொடங்கியது. 


அது மட்டுமல்ல, அவனது  திட்டப்படி ஸ்ரீ உடன் அவன் தலைமறைவானால் ,  அவனது நிறுவனத்தை அவன் மகன் தலைமை ஏற்கும் வரை கட்டி காத்து,  சரியான திசைக்கு கொண்டு செல்வதற்கான  நேர்மை,  தன்னம்பிக்கை,  உழைப்பு திலக்கிடம்  மட்டும் தான் உள்ளது.


 ஆதலால் தான் தனக்குப் பிறகு அவனையே நிறுவனத்தின் தலைமையாக பொறுப்பேற்க தேவையான ஆவணங்களையும் தயார் செய்து வைத்திருக்கிறான் ...


 இந் நிலையில் திலக் கோபப்பட்டுக் கொண்டு வேலையை விட்டு சென்று விட்டால் , அவனது நிறுவனத்திற்கு மட்டுமல்ல அவனது போட்டு வைத்திருக்கும்  திட்டத்திற்கும்  எதிர்காலமே இல்லாமல் போய்விடும் ....


எப்படி பார்த்தாலும் , திலக்கின் இப்போதைய கோபம் அவனுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும்  என்பதை கண நேரத்தில் கூட்டி கழித்து பார்த்தவன்,


"ம்ச்.... திலக் எதுக்கு தேவையில்லாம கோவப்படற .... ஸ்ரீ பார்க்க மது மாதிரியே இருக்காளேனு ஆசைப்பட்டேன் .....  

இப்ப நீ எடுத்து சொன்னதும்,  புரிஞ்சுகிட்டேன்....இனிமே அவ பக்கம் கூட போக மாட்டேன் போதுமா ...."  என்றான் கனிவாய். 


" நெஜமாவா ராணா..."


" சத்தியமா டா ...." 


என்ன தான் நண்பன் உண்மையாக  பேசுவது போல் 100% தெரிந்தாலும்,  அவனது விழிகளில் எங்கோ ஒரு துளி பொய்மை ஒளிந்து கொண்டிருப்பது போல் திலக்கிற்கு தோன்ற ,


"ஆமா எதுக்கு .... போன சாட்டர்டே அதுக்கு முன் சாட்டர்டே பெங்களூருக்கு போன ..." 

என்றான் பார்வையை கூர்மையாக்கி.


"என்ன டா ...என்னை வேவு பார்க்கறாயா ....."  ராணா சிறு புன்னகையோடு வினவ ,


" நான் ஆபீசுக்கு 10 நாள் லீவுன்னாலும், ஆபீஸ்ல நடக்கிறத தெரிஞ்சுக்கிட்டு தானே ஆகணும் .... அதான் மோனிஷா கிட்ட விசாரிச்சேன் .... அவதான் உன்னோட பெங்களூர் ட்ரிப்ப பத்தி சொன்னா  ..."


"அது வேற ஒன்னும் இல்ல ... சிவராஜன் போயிருக்க வேண்டியது அவர் லீவுல இருந்ததால SNG ப்ராஜெக்ட்டுகாக நான் பெங்களூரு போய் இருந்தேன் அவ்ளோ தான்..... ...." 


"ராணா , நான் உன்னை முழுசா நம்பறேன் ... வர சனிக்கிழமை  நான் என் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு அவளோட டிரீட்மென்ட்காக சிங்கப்பூர் போறேன் .... வர பத்து நாள் ஆகும்.....

அதுக்குள்ளேயும்   எந்த அசிங்கத்தையும்  செஞ்சு வைக்க மாட்டேன்னு நம்பறேன் ...." 


நண்பனின் திடீர்  சிங்கப்பூர் பயண செய்தி  ராணாவிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது ....


ஏனென்றால் அவன் திட்டமிட்டிருக்கும்  நாட்களோடு,  திலக்கின் பயணமும் பொருந்தி வர, யாதொரு இடைஞ்சலும் இல்லாமல் நிம்மதியாக  தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் மூழ்கி முத்தெடுத்தவன் ,


"இந்த ராணா பேச்சு மாற மாட்டான்னு உனக்கு தெரியுமில்ல .... நீ நிம்மதியா சிங்கப்பூர் போயிட்டு வா .... நல்லபடியா சுனந்தாவ பாத்துக்க.... ஒரு 10 லாக்ஸ்  ட்ரான்ஸ்ஃபர் பண்றேன் .... மேற்கொண்டு பணம் வேணும்னாலும் கேளு தரேன் ...

நல்லபடியா அவளுக்கு ட்ரீட் பண்ணி முடிச்சுக்கிட்டு ரெண்டு பேரும் ஊர் வந்து சேருங்க ... இப்ப வீட்டுக்கு போலாம் வா ...." 

என ராணா எழுந்து நடக்க,  அவனைப் பின்தொடர்ந்தான் திலக். 


---------------------------------------------------


ஊட்டியில் .....



"ஏன் ரம்யா இவ்ளோ லேட்டு ...."   மருத்துவமனை படுக்கையில்,  ஒரு கை ஒரு காலில் கட்டுப்போட்ட நிலையில், சாய்ந்து படுத்திருந்த  ரிஷி கடுகடுத்தான் அவன் அறைக்கு பரபரப்பாக வந்த செவுிலி பெண்ணை பார்த்து.



" சாரி சார் ...ஜெனிபர் சிஸ்டர் இன்னைக்கு லீவு.... .... அவங்க அட்டென்ட் பண்ற கோமா பேஷன்ட்க்கு நான் ட்ரெஸ்ஸிங் பண்ண வேண்டியதா ஆயிடுச்சு .... அதான் லேட்டு..."


 சிறு பயத்தோடு பதில் அளித்தாள் அந்த இளம் செவிலி  பெண்.


லட்சுமி அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனையில் மேல் தளத்தில் தான் ரிஷி  தன் கை கால்கள் முறிவுக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தான்.


அவனது கார் விபத்துக்குள்ளானதுமே,  காரில் இருந்த ஜிபிஎஸ் மூலமாக,  விபத்து நடந்த இடத்தை  கண்டறிந்து அங்கு விரைந்து சென்று  அவனை துரிதமாகக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து இருந்தான் அவனது செயலாளர் கிஷோர்.


நடந்த முடிந்த  விபத்து இயற்கையானதா அல்லது திட்டமிடப்பட்டதா என்ற நோக்கில் காவல்துறை விசாரணை நடந்து  கொண்டிருப்பதோடு, பெரும் தங்க நகை வியாபாரியான ரிஷியின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு  மருத்துவமனையின்  முதன்மை நிர்வாக உறுப்பினர்களை  தவிர மற்ற அனைவருக்கும்  அவனை பற்றிய உண்மையான தகவல்களை மறைத்து, ஏதோ ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிவதாக சொல்லியே மருத்துவமனையில் சேர்த்திருந்தான் கிஷோர். 


ரிஷி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகப்போகிறது.


முதல் இரண்டு தினங்கள் மட்டும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தவனுக்கு ஒரு கை ஒரு கால் முறிவை  தவிர பயப்படும் படியாக பெரிய காயங்கள் ஏதும் இல்லாமல் தப்பித்ததால்  டீலக்ஸ் அறைக்கு மாற்றப்பட , அப்போது அவனுக்கென்று பிரத்தியேக செவிலி பெண்ணாக  பணியமர்த்தப்பட்டாள் ரம்யா. 


ரம்யா தன் பணியை பொறுப்பாகவும் பொறுமையாகவும் செய்தாலும்,  சில நேரம் வாய் துடுக்க அதிகம். அதிகம் பேசுவாள் அழகாக பேசுவாள். 


கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பறந்து பறந்து வியாபாரம் செய்தவனுக்கு, இப்படி  மருத்துவமனையே கதி என்று படுக்கையில் படுத்து கிடப்பது வெறுமையைத் தர, வேறு வழி இல்லாமல்  நேரத்தை நெட்டி தள்ள அவளிடம்  அவளது படிப்பு,  குடும்பம் , மற்ற நோயாளிகளைப் பற்றி அறிந்து கொள்ள பேச்சுக் கொடுத்தான். 



முதல் ஓரிரு தினம் அதுவுமே  இயந்திரத்தனமாகத்தான் இருந்தது. 


 ஆனால் போகப்போக அவளது பேச்சில் இருந்த எதார்த்தமும் உண்மையும் பிடித்துப் போக ,  அவன் அறிந்திராத வேறு ஒரு உலகத்தை அவள் மூலம் அறிந்து கொள்வதில் ஒருவித சுவாரசியம் ஏற்பட, அதிலிருந்து அவளுடன்  உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். 


இந்நிலையில் இன்று அவள் வர சற்று தாமதமாகி விட, அவனது அலைபேசி எண்ணும் முடக்கப்பட்ட நிலையில் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் திணறியவன் அவள் வந்ததும் கடிந்து கொண்டு



" ரம்யா,  இனிமே லேட் ஆச்சுன்னா எனக்கு இன்டர் காம்ல சொல்ற...."   என்றான் காட்டமாக. 


" சரிங்க சார் ...."  அவள் மென்மையாக பதில் அளிக்க, 



" ஆமா .... பேஷன்ட்  லேடியா ஜென்னா .... எப்படி கோமால போனாங்க ......." என்றான் ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த.


"பேஷன்ட்  லேடி சார் ....  லாரிக்காரன் வந்து மோதிட்டானாம் .... நல்லவேளையா அவங்களுக்கு பெருசா எந்த அடியும் படல ...

அவங்க மாசமா இருந்திருக்காங்க போல .... ரெட்டை குழந்தைங்களையும் சிசேரியன் பண்ணி எடுத்து காப்பாத்திட்டாங்க ....  

இப்ப கொஞ்சம் கொஞ்சமா கை, கால்ல அசைவு இருக்கு.... கூடிய சீக்கிரம் கண் முழிச்சிட்டு வாங்க சார் ...."


"இடியட்ஸ் ... வர வர இந்த லாரி காரங்க தொல்லை தாங்க முடியல .... தண்ணி அடிச்சிட்டு வண்டியை ஓட்டி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம அப்பாவி ஜனங்களை சாகடிக்கிறாங்க ..... இவன்களுக்கெல்லாம் சரியான தண்டனை கொடுத்தா தான் .... அடங்குவானுங்க ...." என்றான் தன் நிலையையும் நினைத்து. 


"நிஜமாகவே அந்த லேடியை பார்க்க பாவமா இருந்தது சார் .... அதைவிட அந்த லேடி ஓட  வீட்டுக்காரு , ஒரு வயசு பெண் குழந்தை, 

அவங்களோட அம்மா அப்பானு எல்லாருமே ஹாஸ்பிடல்லே கதியா இருக்காங்க .... அந்த லேடி ஓட மாமனார் பெரிய எஸ்டேட் ஓனராம்.... ஜெனிபர் அக்கா சொன்னாங்க .... அவரும் இந்த வயசான காலத்துல , மருமகளுக்கு இப்படி ஆயிடுச்சேனு வருத்தப்பட்டுக்கிட்டு,  மார்னிங் ஈவினிங்னு ஹாஸ்பிடல் வந்து போய்க்கிட்டு இருக்காராம் ...." 


அவளது பேச்சைக் கேட்டு துணுக்குற்றவன்,


"அயோத்தி எஸ்டேட் ஓனரா ...." என்றான் பதற்றமாய். 


" எஸ்டேட் ஓனர்ன்னு சொன்னாங்க சார் அயோத்தி எஸ்டேட்டானு  தெரியாது ...."


" பேஷன்ட் பேரூ ஸ்ரீலட்சுமியா..."


" ஆமா சார் ...."


" ஓ காட் ...." என்று அவன் தலையில் அடித்துக் கொள்ள,


" சார் உங்களுக்கு அவங்களை தெரியுமா ...."


"தெரியும் .... என் அண்ணன் பொண்ணுக்கு அவங்க தான் டீச்சர் ..... எனக்கு அவங்கள பாக்கணுமே...."  என்றான் கண்களில் மெல்லிய நீர் திரையிட்டு. 



ஸ்ரீராமம் வருவார்கள் .....



























































































  

 

































Comments

Post a Comment