அத்தியாயம் 127
பயணத்தின் போது இயல்புக்கு மாறாக ஒரு பெருத்த அமைதி நிலவியது.
லட்சுமி எதிர்கொண்ட விபத்தின் வீரியத்தை காட்டிலும், அந்த சின்னஞ்சிறு குழந்தையின் மரணம் வீரா தம்பதியரை வெகுவாக பாதித்திருந்தது.
இருவரது மனக்கண்ணிலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அந்தக் குழந்தையின் உடல் ஆறாத வடுவாய் பதிந்து போக, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி , அதிலிருந்து வெளிவர முடியாமல் வாயடைத்துப் போயிருந்தனர்.
அவர்களுக்கே இப்படி ஒரு நிலை என்றால், ராம்சரணின் மன அழுத்தத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது என்பதை உணர்ந்து , வருந்தியபடி பயணித்துக் கொண்டிருக்கையில்,
"பட்டு .... சரண் வீட்ல நடந்த எந்த விஷயத்தை அம்மா , பாட்டி கிட்ட சொல்லாத ...." என்றான் வீரா மௌனத்தை கலைத்து.
" ஏன் ராம்... "
"சொன்னா தேவையில்லாம 1008 கேள்விங்க கேப்பாங்க .... அதுக்கெல்லாம் பதில் சொல்லி மாளாது.. அதான்..."
"சரி .... ஆனா எனக்கு அந்த குழந்தையோட முகம் அப்படியே கண்ணுக்குள்ளேயே இருக்கு ராம்... பாவம் அந்த குழந்தை..." என்றாள் தழுதழுத்த குரலில்.
"எனக்கும் தாம்மா... ரொம்ப வருத்தமா இருக்கு ...."
இப்படியாக அவர்கள் உரையாடி கொண்டிருக்கும் போதே அவர்கள் பயணித்த ஓலா கேப் வீட்டை அடைய, அங்கு போர்டிகோவில் சத்யனின் மாமனார் கார் நின்று கொண்டிருந்தது.
"அண்ணன் அண்ணி வந்திருக்காங்க போல........ ...." என பேசிக்கொண்டே ஜிபே மூலம் ஓலா கேப்க்கு பணம் செலுத்தி அனுப்பிவிட்டு,
"என்னவா இருக்கும்...ஏன் திடீர்னு வந்திருக்காங்க .....ஒரு வேளை அண்ணியோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா ...."
என்ற பதற்றத்தோடே அவன் கார் போர்டிகோவை தாண்டி தாழ்வாரத்தை அடையும் பொழுது வீட்டில் அனைவரும் பெருத்த குரலில் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருப்பது கேட்க, பெருமூச்சொன்றை வெளியிட்டு நிம்மதி அடைந்தவன்,
"அப்பாடா, பயப்படற மாதிரி ஒன்னும் இல்ல....... ஏதோ நல்ல விஷயம் தான் போல ..." என தன்னவளிடம் மொழிந்தபடி அவன் தாழ்வாரத்தை கடக்கவும், கூடத்தில் குடும்ப உறுப்பினர்களோடு அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்த சத்யன் அவர்களை கண்டதும் மகிழ்ச்சியில்,
"ஏய் பாண்டி .... வாட் எ சர்ப்ரைஸ் ... சரணோட மச்சினிக்கு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா ... நாளைக்கு தான் நீங்க ரெண்டு பேரும் ஊட்டில இருந்து திரும்பறீங்கன்னு இப்பதான் பாட்டியும் அம்மாவும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.... ஆனா இன்னைக்கே வருவீங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..."
என வரவேற்க, அவனது பேச்சை இடைவெட்டி
"சரணோட மச்சினிக்கு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது .... ஆனா ஊட்டில கிளைமேட் படு மோசமா இருக்கு .... இவளால அந்த குளுர தாங்க முடியல .... அதான் அடுத்த தடவை ஊரை சுத்தி பார்த்துக்கலாம்னு கிளம்பி வந்துட்டோம் ..."
மனதில் தயார் செய்து வைத்திருந்த பொய்யை வீரா கனக்கச்சிதமாக சொல்லி முடித்துவிட்டு,
"வெளிய காரை பார்த்ததும் தான் , நீயும் அண்ணியும் வந்திருக்கீங்கன்னு புரிஞ்சுகிட்டேன் .... ஏதாவது அபிஷியல் ஒர்க்கா அண்ணே ......"
என்றான் மென் புன்னகையில்.
அவனது கேள்வியில் பிரபா லேசான வெட்கத்தோடு தலை குனிந்து கொள்ள, சத்யனும் புன்னகையோடு தடுமாற,
"எல்லாம் நல்ல விஷயமா தேன் வந்துகிறான்...... பிரபா மாசமாயிருக்கா... அவங்க அம்மால பாக்கணும்னு சொன்னாளாம்..... அதான் கூட்டிகினு வந்துட்டான் ...."
சுந்தராம்பாள் மகிழ்ச்சியோடு மொழிய,
"கங்கிராஜுலேஷன்ஸ் டு போத் ஆஃப் யூ ..."
மிகுந்த உற்சாகத்தில் வீரா, சத்யன் மற்றும் பிரபாவை ஒரு சேரப் பார்த்து கரம் பற்றி வாழ்த்துரைக்க, அவன் மனையாட்டியும் அதே உற்சாகத்தில்,
"கங்க்ராஜுலேஷன்ஸ் ..." என்றாள் அவர்கள் இருவர் மீதும் பார்வையை பதித்து.
"பெரியவனும் ஒரு ஃபோன் கூட பண்ணாமத்தான் வந்தான் .... நீயும் ஒரு ஃபோன் கூட பண்ணாம தான் வந்து இருக்க ... இப்படி ஒரு சர்ப்ரைஸ் மீட்டிங் நடக்கப்போவதுன்னு நாங்க கூட எதிர்பார்க்கல ..." பொன்னம்பலம் தன் கணீர் குரலில் வீராவைப் பார்த்து பூரிப்போடு சொல்ல, அதற்கு சத்யன் ஏதோ கலகலப்பாக பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக ஸ்ரீப்ரியாவின் பார்வை அகல்யாவை எதிர்கொள்ள, அவரோ கணநேரத்தில் ஒருவித எரிச்சலை காட்டிவிட்டு இறுகிய முகத்தோடு, கழுத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டார்.
அந்தக் கழுத்து திருப்பல், மூத்த மருமகள் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறாள் ... ஆனால் நீயோ முதல் முறைக்கே வகையற்று, வேலை வேலை என்று அலுவலகம் சென்று வந்து கொண்டிருக்கிறாய் .....
என்ற அர்த்தத்தினை சொல்லாமல் சொல்ல, துக்கம் தொண்டையை அடைக்க, தலை குனிந்து கொண்டாள் வீராவின் மனையாட்டி.
பொதுவாக படிப்பு , பதவி , திருமணம், குழந்தைகள் போன்றவற்றில் தாமதத்தை சந்திப்பவர்கள், தன் விதியை நொந்தபடி இயல்பாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... ஆனால் சுற்று வட்டம் தான் , அவர்களை இருப்பவர்களோடு ஒப்பிட்டுப் காட்டி வார்த்தையாலும் பார்வையாலும் பேதத்தைக் விதைத்து தேவையில்லாத மன உளைச்சலுக்கு அவர்களை உள்ளாக்கி விடுவார்கள் ...
அம்மாதிரியான மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள் ஒன்று, உறவினர்கள் நட்பு வட்டங்களோடு எவ்வித சந்திப்பையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பாமல் நத்தையாய் ஓட்டுக்குள் ஒதுங்கி விடுவார்கள் அல்லது யாருடன் ஒப்பிடப்படுகிறார்களோ , அவர்களின் மீது தேவையில்லாமல் வன்மம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகளை வளர்த்துக்கொண்டு, அவர்களை எதிரியாகவே பாவிக்கத் தொடங்குவார்கள்...
ஆனால் ஸ்ரீப்ரியாவின் வளர்ப்பு மற்றும் சுபாவத்திற்கு அவ்விரண்டு குணங்களும் துளி கூட பொருந்தி வராது என்பதால், மிகவும் பொறுமையாகவும் மனமுதிர்ச்சியாகவும் இனி வரவிருக்கும் சூழ்நிலைகளை கையாள அக்கணமே மனதை பக்குவப்படுத்திக் கொண்டவள் , வழக்கம் போல் பிரபாவிடம் மிகுந்த மகிழ்ச்சியோடு உரையாடத் தொடங்கினாள்.
என்ன தான் பிரபா எப்பொழுதும் போல் பழகுவதாக காட்டிக் கொண்டாலும், அதில் இன்னதென்று பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு இறுக்கமும், இடைவெளியும் இருப்பது போல் ஸ்ரீக்கு தோன்ற, ஆராயும் தருணம் அதுவல்ல என்பதால், அவள் இயல்பாக உரையாடி முடிக்க, சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டு மூத்தவர்களிடம் விடைபெற்ற சத்யன்
"குழந்தைகளை விட்டுட்டு வந்திருக்கோம் டா... சீக்கிரம் போகணும் ... நாளைக்கு ஈவினிங் வரோம்.."
என்று வீராவை பார்த்து மொழிந்து விட்டு பிரபா உடன் தன் மாமனாரின் இல்லத்திற்கு பயணப்பட்டான்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும்,
"பாண்டி, பிரியா .... ரெண்டு பேரும் போய் சுருக்கா உடுப்ப மாத்திக்கினு வாங்க ... சாப்பிடலாம் ..."
என உணவு மேஜையில், இரவு உணவினை கொண்டு வந்து வைத்தபடி சுந்தராம்பாள் சொல்ல,
"இதோ வந்துடறோம் பாட்டி ..." என்றபடி பயணப் பொதிகளை அள்ளிக்கொண்டு வீரா அறை நோக்கி முன்னேற, அவனைப் பின் தொடர்ந்தாள் அவன் பத்தினி .
அறைக்கு வந்ததும், மின் மயானத்திற்கு சென்று வந்ததால் ஸ்ரீ மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள ,
சுழற் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அலுவலக மின்னஞ்சலை அசுவாரசியமாக நோட்டமிட்டவனின் மனம் ஏனோ அதில் லயிக்காமல் ஏதேதோ சிந்தனையில் மூழ்கத் தொடங்கியது.
ஒரு புறம் குழந்தையின் மரணம் .... மறுப்புறம் ஜனனத்திற்கான கரு உதயம் ....
இரண்டுமே இன்ப துன்பங்களின் இரு வேறு எல்லைகள் ....
இதைத்தான் ' புனரபி(மீண்டும்) ஜனனம் புனரபி மரணம்....' என்று ஆதிசங்கரர் விவரிக்கிறார் போலும் ....
என்று எண்ணியவனுக்கு பயணத்தின் போது அனுபவித்து வந்த ரணத்திற்கு, சற்று முன்பு கேட்ட சர்க்கரைச் செய்தி களிம்பாய் மாறி வலியை குறைக்க, நிர்மலமான மனம் லேசான நிம்மதியை தத்தெடுத்துக் கொண்டது.
சில மணித்துளிகளுக்கெல்லாம் , அவனும் புத்துணர்வு பெற்று உடை மாற்றிக் கொண்டு தன் நாயகியோடு கீழ் தளத்திற்கு வந்து வீட்டு பெரியவர்களோடு இரவு உணவு உண்ணத் தொடங்கியதும்,
"நானும் வந்ததிலிருந்து பாத்துகினே இருக்கேன்... ரெண்டு பேர் முகத்துலயும் கல்யாணத்துக்கு போயிட்டு வந்த சந்தோசமே தெரியலயே .... ஏதோ கலவரத்துக்கு போயிட்டு வந்த மாறியில்ல முகம் எல்லாம் சோர்வாவும் சோகமாவும் இருக்கு ....ஏன்டா ...இன்னுமா கை வலிக்குது இல்ல வர சொல்ல ஏதாச்சும் பிரச்சனையா ..."
தன் அனுபவ அறிவை பயன்படுத்தி சுந்தராம்பாள் வினவ, சற்றும் எதிர்பார்க்காத அந்த கேள்வியில் துணுக்குற்றவன் ,
"பாட்டி , நாலு மணி நேரம் ட்ராவல் பண்ணி வந்திருக்கோம் .... அப்போ டயர்டா தான இருப்போம் ... இதெல்லாம் ஒரு கேள்வியா ..."
சமாளித்தபடி அவன் வேகவேகமாய் உண்டு முடிக்க , என்றைக்கும் இல்லாத திருநாளாய் அவன் மனைவியும் அவனுக்கு ஈடு கொடுத்து உண்டு முடிக்க, அப்போது பார்த்து அவன் அலைபேசி சிணுங்கியது.
அலுவலக ஊழியரின் முக்கிய அழைப்பு என்பதால் துரிதமாக கை கழுவிக்கொண்டு அழைப்பை அனுமதித்து பேசிய படி அவன் தோட்டத்திற்குச் செல்ல, உண்டு முடித்த பத்திரங்களை எடுத்துக்கொண்டு ஸ்ரீ அடுக்களைக்குச் செல்ல விழையும் போது ,
"நான் அடுப்பங்கரைய சுத்தம் பண்ணிக்கிறேன்... நீ போய் ரெஸ்ட் எடு..."
என்றார் அகல்யா தன்மையாய்.
"எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல அத்தை ... நான் கிச்சனை கிளீன் பண்ணிட்டே போறேன்.... ..."
"வேணாம் பிரியா ... இன்னைக்கு ஒரு நாள் நான் செய்யறேன் ... நாளையிலிருந்து வழக்கம் போல நீயே செய்...." என்றவரின் அழுத்தமான பேச்சிற்கு கட்டுப்பட்டு, அவள் தன் அறை நோக்கி செல்ல , பொன்னம்பலமும் அவரது அறைக்குச் சென்று கதவடைக்க, அதைப் பார்த்ததும் அடுத்த சில நிமிடங்களில் அழைப்பை முடித்துவிட்டு வந்த வீராவிடம்
"பாண்டி, உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ... இப்படி செத்த ஒக்காரு ..." என்றார் அகல்யா சுந்தராம்பாளின் விழியோடு ரகசியம் பேசியபடி.
"என்னம்மா சொல்லு ...." வீரா இரு பெண்களையும் பார்த்தபடி நாற்காலியில் அமர,
"பாண்டி, இப்ப எல்லாம் உன்கிட்ட பேசவே பயமா இருக்குது ... எது சொன்னாலும் கோவப்படற ..."
"என்னம்மா புதிர் போடற .... அப்படி நீ என்ன சொல்லி நான் கோவப்பட்டேன் .... சும்மா ஏதேதோ பேசாதம்மா .... என்னமோ பேசணும்னு சொன்னியே அதை சொல்லு .."
"அது.... சத்யனுக்கு மூணாவது குழந்தை பொறக்கப் போகுது ... அன்புக்கும் குழந்தை பொறக்கப் போகுது ..."
"ஆமா அதுக்கு என்ன இப்போ ..."
"இப்படி கேட்டா எப்படி டா...." சுந்தராம்பாள்
இடை பேச ,
"என்னதான் சொல்ல வரீங்க ரெண்டு பேரும்.... தெளிவா சொல்லுங்க ...." என வீரா கோபமாக வினவ
"உன் பொண்டாட்டிக்கு அப்படி என்னதான் பிரச்சனை .... டாக்டர் என்னதான் சொல்றாங்க..... .... " என்றார் சுந்தராம்பாள் வெடுக்கென்று.
"ம்ச்... எத்தனை தடவை தான் சொல்றது .... அவளுக்கு Pcod பிரச்சனை இருக்கு ... அதுக்கு மாத்திர மருந்து கொடுத்து இருக்காங்க ... போதுமா ...."
"அடேய் அவளுக்கு மட்டும் தான பிரச்சனை உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே ..."
"எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல பாட்டி ... கல்யாணம் ஆன நாளலயிருந்து இதே கேள்வியை சும்மா சும்மா கேட்டு படுத்தாத ..."
"சரி உன் பொண்டாட்டிக்கு எப்ப சரியாவுமாம்..."
"அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல ... மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க .... அவ சாப்பிட்டுக்கிட்டே இருக்கா.... அதைவிட லைப் ஸ்டைல் சேஞ்சஸ் பண்ணாலே சரியாயிடும்னு சொல்லி இருக்காங்க ...சோ கவலைப்பட ஒன்னுமில்ல... ரொம்ப சாதாரண விஷயம் பாட்டி ..." அவன் எதார்த்தமாக வார்த்தைகளை விட,
" லைப் டைல் சேன்ஜ் ... அப்படின்னா ..."
"வேளா வேளைக்கு நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடணும் ... யோகா பண்ணனும், ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கணும் .... நல்லா தூங்கணும் ... அவ்ளோதான் ..."
"ஏம்பா இதுல ஏதாச்சும் ஒண்ணயாவது உன் பொண்டாட்டி சரியா செய்றாளா .... அவ வயசுக்கு ஏத்த மாதிரி சாப்பிடறதே கிடையாது .... கவுச்சியும் சாப்பிட மாட்ட ..... காய்கறியும் மட்ட தான் சாப்பிடறா.... பாலும் குடிக்க மாட்டா... தினமும் அவ அஞ்சு மணி நேரம் தூங்கினாலே பெரிய விஷயம்.... ராத்திரி முழுசும் ஆபீஸ் வேல பார்க்கிறா... அப்படி ராத்திரி முழுசும் ஆஃபீஸ் வேலை பார்த்து மன ஓளைச்சல் அதிகமாயி பகல்ல எந்திரிக்க முடியாம ஏன்ச்சி வந்து தலைவலின்னு சொல்ற ... இப்படி இருந்தா, சாப்பிடற மருந்து மாத்திரை எப்படி வேலை செய்யும் ...."
சுந்தராம்பாள் பேச பேச, அவர் வரிசைப்படுத்திய அனைத்தும் அவனுக்கு சரி என்றே பட, இருந்தாலும் அதனை காட்டிக் கொள்ள விரும்பாமல்
"கல்யாணம் ஆகி ஆறு மாசம் கூட ஆகல பாட்டி.... "
"அடேய் .... ஆறு மாசம் எல்லாம் அதிகம்டா .... ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள் மொத்தம் 90 நாள் ... அதாவது கலியாணமானதும் மூணு மாசத்துலயே உண்டாவணும் இல்லாட்டி போனா ஆறுன கஞ்சி பழம் கஞ்சி தேன் .... "
"இப்ப என்னதான் சொல்ல வர்ற ..."
"உன் பொண்டாட்டிய முதல்ல வேலைய விட சொல்லு ... ஆபீஸ் வேலை இல்லாம நிம்மதியா தூங்கி எந்திரிச்சி நல்லா சாப்பிட்டானு வை முணே மாசத்துல மாசமாயிடுவா...."
"இப்பதான் வேலைக்கு சேர்ந்து இருக்கா உடனே வேலையை விடுன்னு சொன்னா நல்லா இருக்காது பாட்டி ..."
"என்ன நீ ... அவளுக்கு இப்படி சொம்பு தூக்கற.... .... புருஷனா லட்சணமா நீ சொல்லணும் ... அவ கேக்கோணும் .... ஆனா நீ அவ சொல்றதுக்கெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிக்கின்னு கொத்தடிமையா தொண்டு ஊழியம் பண்ணிக்கினு இருக்க ...
உன் அண்ணன் சத்யன் பேச்சை மீறி பிரபா இன்னைய வரைக்கும் ஒரு வேலை செய்ய மாட்ட... அப்படி செஞ்சான்னு வை, அவ கன்னம் தீஞ்சு போற அளவுக்கு ரெண்டு இழு இழுப்பான் .... நீயும் இருக்கயே .... சீமையிலே இல்லாத சீமாட்டிய கட்டிக்கினு வந்த மாறி , அவளே கதினு பொண்டாட்டி தாசனா இருக்க..... ...."
சுந்தராம்பாளின் வரம்பு மீறிய பேச்சு அவனது தன்மானத்தை சீண்டிப் பார்க்க, அதுவரை பொறுமை காத்தவனின் கோபம், சோடா பாட்டிலில் அடைபட்டிருந்த
காற்று போல் பொங்கி எழ, உடனே சூழ்நிலை உணர்ந்து பற்களை கடித்து, எச்சில் விழுங்கியவன், அவசரக்கால அமைதியை தத்தெடுத்துக்கொண்டு மௌனமாகிப் போனான்.
அவனுக்கு எப்பொழுதுமே வேகத்தை விட விவேகம் அதிகம்.
நாளை மறுநாள் அவன் அயல் நாட்டிற்கு பயணப்படவிருக்கும் நிலையில் அவன் தன்னை மீறி கோபத்தில் வார்த்தைகளை விட்டு விட்டால் , அதற்கான பலனை அவன் மனைவி தான் அனுபவிக்க வேண்டி வரும் என்பதால், ஆத்திரத்தை அடக்கியவன்,
"நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு நிம்மதியா சுத்திக்கிட்டு இருந்தேன் .... நான் என்ன , அண்ணன் பிரபா அண்ணிய லவ் பண்ணி கட்டின மாறி, கட்டினா அவளா தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னு அவளை கட்டிக்கிட்டேனா ...
(அகல்யாவை பார்த்து ) நீயும் அன்பும் தான
அவளை தேடி எனக்கு கட்டி வச்சீங்க ....இப்ப அவ மாசமாகலன்னதும் என்னென்னமோ பேசறீங்க ... சரி.... எது எப்படியோ .... பொண்ணு பார்த்தது நீங்கன்னாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டது நான் .... அவ என் பொண்டாட்டி ... அவளுக்கு குழந்தை பொறந்தாலும் பொறக்கலன்னாலும், கவலைப்பட வேண்டியது நான் தான் நீங்க இல்ல.... ஒருவேளை குழந்தையே இல்லாம போனாலும் அவளை கடைசி வரைக்கும் தூக்கி சுமக்க வேண்டியது என் கடமை ... இனிமே நீங்க யாரும் அவ விஷயத்துல தலையிடாதீங்க ..... "
ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவிற்கு அங்கு அமைதி நிலவியிருந்த நிலையில், அவனது கோபத்தை கண்டு சுந்தராம்பாளும், அகல்யாவும் உறைந்து நிற்க , அவர்களை விட பல மடங்கு உணர்வுகள் வடிந்த நிலையில் , படியில் சிலையாகி நின்றிருந்தாள் ஸ்ரீ.
ஆம், சுந்தராம்பாளுக்கும், வீராவிற்குமான கடைசி உரையாடலை, முழுவதுமாய் கேட்டு முடித்திருந்தாள் ஸ்ரீ .
இரவு உணவின் போது , உணவு மேஜையிலேயே தவறி வைத்து விட்டு வந்த கைபேசியை எடுப்பதற்காக படி இறங்கும் போது, கணவனின் பேச்சு கணீரென்று அவள் காதுகளில் விழ, சுக்கு நூறாய் உடைந்து போனவள், விழி நீரோடு வந்த தடம் தெரியாமல், திரும்பிச் சென்று படுக்கையில் விழுந்தாள்.
"அடேய், நாங்க என்னமோ அவள வெட்டி விட சொன்ன மாறி இல்ல நீ பேசிகினு இருக்க .... அவ உன் பொண்டாட்டி தேன்.... அவ உன் பொறுப்பு தேன்... இன்னும் சொல்லப்போனா அவ ரொம்ப நல்ல பொண்ணு .... அவள எந்த குத்தமும் நாங்க சொல்லல... நீ தான் கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்துக்கோணும்னு சொல்லுறோம்...
சாப்பிடாம , தூங்காம வேல வேலன்னு சுத்திக்கினு இருந்தா எப்படி கரு தங்கும்னு நீதான் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கோணும் ... குழந்தை மாறி அடம் புடிச்சான்னு வை ரெண்டு போட்டு புரிய வைக்கோணும்னு சொல்றோம்... அம்புட்டுத்தேன் ....இருந்து இருந்து இப்ப தேன் உனக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்கு ... நீ பொண்டாட்டி புள்ளைங்கன்னு நிம்மதியா வாழனுங்கிற ஆசை எங்களுக்கு இருக்காதா...."
சுந்தராம்பாள் நயந்து கூற, மகனின் முகம் மாநிறத்திலும் , சிவந்திருப்பது அவனது கோபத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியதும்
"பாண்டி, உனக்கே தெரியும் .... எனக்கு அன்பு, சத்யனை விட ஒரு படி அதிகமா உன்னை தான் புடிக்கும்னு... நான் உன் வாழ்க்கை கெட்டுப் போவணும்னு நெனைப்பேனா .... மத்த ரெண்டு புள்ளைகளுக்கும் குழந்தை குட்டி இருக்க மாறி, உனக்கும் குழந்தை பொறக்கணும்னு ஆசைப்பட்டேன்... அது தப்பா .."
அகல்யா சமாதானம் பேச, கட்டுக்கடங்காத சினத்தை மென்று முழுங்கி விட்டு,
" சரி, எனக்கு தூக்கம் வருது .... நான் தூங்க போறேன் .... இனிமே இத பத்தி பேசாதீங்க ...."
பொத்தாம் பொதுவாக இருவரையும் பார்த்து சொல்லிவிட்டு , அவன் இடத்தை காலி செய்ய, அதற்குள் அவன் மனையாள் அடை மழை போல் அழுது கரைந்து விட்டாள்.
அவன் பேசியது அனைத்தும் உண்மை... உண்மையை தவிர வேறு எதையுமே அவன் பேசவில்லை என்றாலும், அவர்களுக்கிடையே ஆன திருமண பந்தத்தில் அவன் உணர்வு ரீதியாக பிணைக்கப்படாமல் ஏதோ ஊருக்காக பிணைக்கப்பட்டிருப்பது போல் பேசிய விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல்
கலங்கி துடித்தாள் அவன் காரிகை.
திருமணத்திற்கு பெண் பார்த்தது நீங்கள் என்றாலும் காதலால் கசிந்துருகி தான் அவளை கரம் பிடித்தேன் ... அவள் என் கடமைக்கானவள் அல்ல என் காதலுக்கானவள்.... என்று அவன் பேசி இருந்தால், இத்துணை மாதங்கள் ஈருடல் ஓர் உயிராய் வாழ்ந்த வாழ்க்கையில் உண்மையாய் இருந்திருக்கிறான் என்ற எண்ணம் அவளுள் பிறந்திருக்கும் ....
ஆனால் அவனோ அவளிடம் காதலில் குழைந்து விட்டு வீட்டுப் பெரியவர்களிடம் பேசும் பொழுது ஏதோ கடமைக்கு வாழ்வது போல் காட்டிக்கொண்டது அவளைக் கொல்லாமல் கொல்ல, கலங்கிவிட்டாள் பாவை.
இந்த சொற்ப காலத்தில் அவனை எல்லா விதங்களிலும் சரியாகப் புரிந்து கொண்டு விட்டதாக எண்ணி மமதையில் இருந்தவளின் மண்டையில் , சந்தர்ப்பம் சமயம் பார்த்து கொட்ட, மெல்லிய விசும்பலோடு இரவு விளக்கினை ஒளிர விட்டுவிட்டு , ஒருகளித்து படுத்துக்கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
மெல்ல படி ஏறி வந்தவன், அறை அரை இருளில் மூழ்கி இருப்பதை பார்த்து, யோசனையோடு அறைக்குள் நுழைந்தான்.
அவனவளோ கழுத்து வரை போர்வை போர்த்தியபடி அசையாமல் இருக்க ,
கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து எதிர்கொண்ட மன உளைச்சல்கள், பயணக் களைப்பு, கடைசியில் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் இறப்பு என பல்வேறு சம்பவங்களால் அலைகழிக்கப்பட்டதால், சோர்வடைந்து போய் அதி சீக்கிரம் உறங்கி விட்டாள் போலும்....
என்று நினைத்தபடி, அவள் உறக்கத்தை கலைக்க விரும்பாமல், படுக்கையில் சற்று தள்ளிப் படுத்துக்கொண்டு உறங்க முயன்றான்.
ஆனால் நித்திரை அவனது விழிகளை ஆக்கிரமிக்காமல் விளையாட்டு காட்டத் தொடங்கியது ..
பின் தூங்கி முன்னெழுவாள் பத்தினி ....
என்ற வள்ளுவரின் வார்த்தைகள் யாருக்கு பொருத்தமோ இல்லையோ அவன் பத்தினிக்கு சரியாகப் பொருந்தும்.
பெரும்பாலான நாட்களில் அவன் உறங்கியதற்கு பின்பு தான் அவள் உறங்குவாள்... அதே போல் விடியற்காலையிலும் அவன் விழிப்பதற்கு முன்பே அவள் விழித்தெழுந்திடுவாள் ...
இப்படிப்பட்டவள், அன்று துரிதமாக உறங்கியது, ஏதோ ஒரு நெருடலை தர காலையில் அது குறித்து பேசிக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு அவன் வேறு சிந்தனையில் மூழ்க, அவன் கண்மணியோ சற்று முன்பான அவன் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனபெட்டகத்தில் ஒளிபரப்பி பார்த்து விழி நீரோடு உறக்கம் வராமல் உள்ளுக்குள்ளேயே தளும்பிக் கொண்டிருக்க, கடைசியில் இருவரும் மூன்றாம் ஜாமத்தின் தொடக்கத்தில் தான் விழிகள் சோர்ந்து உறக்கத்தை தழுவினர்.
மறுநாள் அதிகாலையில் வழக்கம் போல் துயில் கலைந்தவளுக்கு, மீண்டும் நேற்றைய சம்பவங்கள் அணிவகுத்து வந்து அலைகழிக்க, கண்களில் மெல்லிய நீர் திரையிடத் தொடங்கியது.
ஓரிரு கணம் அப்படியே சரிந்தமர்ந்தவளுக்கு எடுத்திருக்கும் விடுப்பை ரத்து செய்துவிட்டு அலுவலகம் சென்றால் என்ன .... என்ற தோன்ற, உடனே அதனை செயல்படுத்த துரிதமாக புத்துணர்வு பெற்று வந்து கண்ணில் பட்ட அடர் நீல நிற ஜீன்ஸ், மற்றும் பிங்க் நிற முழுக்கை டாப்பை அணிந்து கொண்டு வேகவேகமாக தயாராகி கீழ் தளத்திற்கு சென்றாள்.
" ஏம்மா .... இன்னைக்கு ஆபீஸ்க்கு போறயா ..." அகல்யா யோசனையோடே கேட்க ,
"ஆமா அத்தை... எடுத்திருந்த லீவ கேன்சல் பண்ணலாம்னு டிசைட் பண்ணிட்டேன் ... வேலை நிறைய இருக்கு ... நான் தான் செஞ்சி ஆகணும் ... அதோட லீவ வேஸ்ட் பண்ண விரும்பல ... லீவ சேர்த்து வச்சா முக்கியமான டைம்ல எடுக்கலாமே அதான் ..."
அவள் காரண காரியத்தோடு விளக்க அதனை எல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லாத அகல்யா ,
"சரி வழக்கம் போல நீ சாப்பிடற மூணு இட்லிய சாப்பிட்டு கிளம்பு ..." என்றார் அவள் முகம் பார்க்காமல் வெடுக்கென்று .
உள்ளுக்குள் அழுகை பொத்துக் கொண்டு வர, வேக வேகமாக உண்டு முடித்துவிட்டு, அலுவலக காரில் ஏறி பயணப்பட்டவளுக்கு, கணவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாமா என்ற எண்ணம் தோன்ற, உடனே வேண்டாம் என்று முடிவெடுத்ததோடு கைபேசியையும் முற்றிலுமாக அணைத்து வைத்தாள் .
எட்டரை மணி வாக்கில் விழித்தெழுந்தவனின் விழிகள் மனையாளை தேட, அவள் அறையில் இல்லை என்றதும் வழக்கம் போல் அடுக்களையில் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டு புத்துணர்வு பெற்று கீழ் தளத்திற்கு சென்றவனுக்கு அவள் அங்கும் இல்லை என்று தெரிந்ததும்
"அம்மா... ஸ்ரீ எங்க ...." என்றான் எதேச்சையாக , அவள் அலுவலகம் சென்றிருப்பாள் என்று துளி கூட அனுமானிக்காமல் .
"அவ ஆபீஸ் கிளம்பி போயிட்டாளேப்பா ... ஏன் உன்கிட்ட சொல்லலையா ...."
அந்த பதில் அவனுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுக்க, கணநேரத்தில் சுதாரித்தவன்,
" ஓ.... மறந்தே போயிட்டேன்ம்மா .... ஆபீஸ்ல வேலை அதிகமா இருக்கு ... நாளைக்கு லீவ கேன்சல் பண்ணிட்டு ஆபீஸ்க்கு போலாம்னு இருக்கேன்னு நேத்து நைட்டே சொல்லிக்கிட்டு இருந்தா ..."
அவன் கணநேரத்தில் இட்டுக் கட்டியது, ஸ்ரீ சொல்லிச் சென்றதோடு பொருந்தி வந்ததால்,
"சரி சரி, சாப்பிட வா ..."
என்றபடி இயல்பாக நகர்ந்து விட்டார் அகல்யா.
உடனே அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டவனுக்கு அது உயிர்ப்பில் இல்லாமல் போனது தெரிய வர, மனம் ரணமாய் வலிக்கத் தொடங்கியது.
இத்துணை மாத உறவில் அவனிடம் சொல்லாமல் அவள் எதையுமே செய்ததில்லை.
அப்படிப்பட்டவள் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு செல்லும் அளவிற்கு அப்படி என்ன திடீர் வேலை ....
அதோடு ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பாமல், அலைபேசியையும் அணைத்து வைத்திருக்கிறாள் என்றால் ஏதோ தன் மீது கோபம் என்பதை மட்டும் புரிந்து கொண்டவன் , அதற்கான காரணத்தை அவசரகதியில் தேட, நேற்று இரவு வீட்டின் மூத்த பெண்களோடு உரையாடியது உடனே நினைவுக்கு வந்ததோடு உடன் வழக்கத்திற்கு மாறாக அவனது மனையாட்டி துரிதமாக உறங்கச் சென்றதும் மனக்கண் முன் வர,
"ஓ காட் ... நேத்து நான் பேசினத கேட்டுட்டா போல .... "
தன் வலக்கையை மடக்கி தன் தொடையில் ஓங்கி குத்தினான் ஒரு வித ஆற்றாமையோடு.
உடனே அவன் பேசியதை மீண்டும் ஒரு முறை அவளது மனோபாவத்திலிருந்து அசை போட்டுப் பார்த்தவனுக்கு , அவளது கோபத்திற்கான காரணம் தெளிவாகப் புரிந்து போக,
"ஏண்டி, ஏன் அப்படி உங்க பாட்டி கிட்ட பேசினீங்கன்னு ஒரு வார்த்தை கேட்டிருந்தா ... அதுக்கான காரணத்தை சொல்லி இருப்பேனே... அத விட்டுட்டு பெரிய இவளட்டம் ஒரு வார்த்தை கூட பேசாம ஆபீஸ் கிளம்பி போனதோட, ஃபோனையும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க .... எப்படியும் சாயங்காலம் வீட்டுக்கு வந்து தானே ஆகணும்...... அப்ப இருக்குடி உனக்கு ..."
என்றவனுக்கு அவள் மீது கோபத்தை விட வருத்தம் தான் அதிகமாக இருந்தது.
திருமணமானதிலிருந்து முன்தினம் மாலை வரை அவர்களுக்கிடையே சிறு ஊடல் கூட நிகழ்ந்ததில்லை.
அவளுக்கு சற்று முன் கோபம் உண்டு என்றாலும், மிக முக்கிய தருணங்களில் விவேகத்தோடு சூழ்நிலையை கையாளும் அவளது பொறுமை அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.
ஆனால் இன்றோ துளிகூட முன்யோசனை இல்லாமல் பொறுமை இன்றி அவள் நடந்து கொண்டது, அவனை தீவிர சிந்தனையில் ஆழ்த்த, உடனே அதற்கான காரணத்தையும் கண்டறிந்தவன்,
" என் வீட்டு ஆளுங்க பேச்சைக் கேட்டு நானும் உனக்கு குழந்தையே பொறக்காதுன்னு முடிவு பண்ணினதால தான் அப்படி பேசினேன்னு நினைச்சிட்டியா ... ஏண்டி உனக்கு புத்தியே கிடையாதா.. ... இதான் என்னை நீ புரிஞ்சுகிட்ட லட்சணமா .... யாருக்கு எத்தனை குழந்தை பொறந்தாலும், நமக்கு குழந்தையே பொறக்கலன்னாலும் , அத பத்தி நான் கவலையே படமாட்டேன்னு உனக்கு தெரியாதா .... படிச்ச முட்டாள் .."
என வகைத் தொகை இல்லாமல் தன்னவளை வசை கொண்டிருக்கும் போது அவனது செயலாளர் ப்ரீத்தியிடமிருந்து அழைப்பு வர, உடனே அன்றைய கலந்தாய்வும் நினைவுக்கு வர, மனையாளை பற்றிய சிந்தனையை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு , தன் அலுவலகப் பணியில் மூழ்கிப் போனான்.
மிகுந்த சோர்வோடு அலுவலகத்தை அடைந்தவளுக்கு, தன் இருக்கைக்கு செல்லக் கூட பிடிக்கவில்லை.
மனம் முழுவதும் அவளது மணாளனே நிரம்பி வழியும் நிலையில் , மடிக்கணினியில் பணி செய்ய முடியுமா என்ன ...
ஆனால் வேறு வழி இல்லை, இருக்கைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்பதால் வேண்டா வெறுப்பாக தன் கேபினுக்குச் சென்று இருக்கையில் அமர்ந்தாள்.
மடிக்கணினியை உயிர்பித்து மனதை திசை திருப்பலாம் என்றால், மனம் எங்கும் அவளவன் பேசிய வார்த்தைகள் மீண்டும் வலம் வரத் தொடங்க, நல்லவேளையாக அவளது கேபின் தனி தீர்வு போல் அமைந்திருந்ததால், உணர்வுகளுக்கு கடிவாளம் இட வேண்டிய அவசியம் இல்லாமல் போக, அப்படியே தன் சுழல் நாற்காலியில் கண் கலங்கிய நிலையில் தலை சாய்ந்து கொண்டு மனதை ஒருமுகப்படுத்த முயன்றாள்.
ஆனால் துளி கூட முடியவில்லை ...
திருமணமான நாளிலிருந்து நேர்மறை எதிர்மறை என்ற பாகுபாடு இல்லாமல் உடல் உபாதைகள், மனதில் தோன்றும் சிறு சிறு கலக்கங்கள், நெருடல்கள், பயங்கள், சின்ன சின்ன வெற்றிகள், ஆசைகள், மகிழ்ச்சிகள் என உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த அனைத்து விதமான விஷயங்களையும் உடனுக்குடன் அவனிடத்தில் பகிர்ந்து விடுவாள் ...
கணவனிடம் பகிர்ந்து விட்டால் கடவுளிடம் பகிர்ந்தது போல், சந்தோஷமும் பிரச்சனைக்கான தீர்வும் கிடைத்து விடும் என நம்பினாள்...
அப்படியே நடக்கவும் செய்தது ...
ஆனால் இப்பொழுது அவன் பேசியதை கேட்டதால் வந்த மன பாரத்தை எப்படி அவனிடமே சென்று முறையிடுவாள் ...
அவனுக்கு எப்பொழுதுமே விவேகமும் பொறுமையும் அதிகம் .... அவ்வளவு எளிதாக வார்த்தைகளை அவனிடம் இருந்து வாங்கி விடவே முடியாது ...
அப்படிப்பட்டவன் எதையுமே யோசிக்காமலா அப்படி பேசி இருப்பான்.... அப்படி பேசிய வார்த்தைகளில் உண்மை இல்லாமல் இருக்குமா ...
என்று எண்ணியவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வர, கைக்குட்டையால் கண்களை துடைத்துக் கொண்டு தலை குனிந்து கொண்டாள்.
முந்தைய இரவில் நடந்த தர்க்கத்தை கேட்டதிலிருந்து , எதையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் மனநிலை முற்றிலும் இல்லாமல் போனதால், உணர்வின் பிடியில் சிக்கிய நிலையிலேயே சிந்திக்கத் தொடங்கினாள்.
உங்க வீட்டு ஆளுங்க கொடுத்த நெருக்கடியால என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால தான், உங்க பாட்டி கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்காம அப்படி ஒரு பதில உங்களால சொல்ல முடிஞ்சிருக்கு ...
ஒருத்தர் இல்லாத போது தான் அவங்கள பத்தின, அவங்களுடனான உறவு பத்தின உண்மையான உணர்வுகள் , கருத்துக்கள் வெளிப்படும்னு சொல்லுவாங்க ....
அப்படி பாத்தா நேத்து ராத்திரி நீங்க என்னை பத்தியும், நம்ம கல்யாணத்தை பத்தியும் பேசினது தான் உண்மைனு தோணுது ...
உங்க வீட்டு ஆளுங்க போல, உங்களுக்கும் எனக்கு குழந்தையே பொறக்காதுன்னு தோணிடுச்சா... அதான் கடைசி வரைக்கும் கடமைக்காக என்னை தூக்கி சுமக்கறேன்னு சொன்னீங்களா ...
என உள்ளுக்குள் கதறி அழுதபடி கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போது , அவளை ஏதேச்சையாக தன் மடிக்கணினியின் ஒளித்திரையில் பார்த்துவிட்டு
"வாவ்... வாட் எ சர்ப்ரைஸ் ..." என்று வாய்விட்டே கத்தினான் ராணா.
மறுதினம் தான் வருவாள் என்று அவளது வரவிற்காக தவம் இருந்தவனுக்கு அவளது அன்றைய தரிசனம் விண்ணை முட்டும் மகிழ்ச்சியை தர, ஆனால் அவளோ மிகுந்த சோர்வோடு கைகுட்டையால் தன் சிவந்த முகத்தையும் கண்களையும் துடைத்துக் கொண்டிருப்பதை பார்த்ததும்
"என்னாச்சு மது ... உடம்பு சரி இல்லையா ... ஏன் சோகமா இருக்க ... ராம்க்கு கூட பெருசா அடி ஒன்னும் படலனு நான் அனுப்பின ஆள் சொன்னானே... பின்ன ஏன் இப்படி இருக்க " என சைக்கோ மூளையில் சிந்தித்து மொழிந்தவன் உடனே அவளது உள் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
மேஜையின் மீது இருந்த தொலைபேசி சத்தத்தில் சுய உணர்ந்தவள், உடனே அழைப்பை அனுமதிக்க,
"ஹாய் ஸ்ரீ, இன்னைக்கே ஆபீஸ்க்கு வந்துட்ட போல .... என் ரூமுக்கு கொஞ்சம் வர முடியுமா.... ..." என்றவனின் குரலில் அளவுக்கு அதிகமான மென்மை தெரிய
"ஷூர் ராணா..." என்றவள் அடுத்த சில மணித்துளிகளில் அவன் முன்பு இருந்தாள்.
வந்து நின்றவளின் முகத்தை ஆராய்ச்சியாய் நோக்கியவன்
"உடம்பு சரியில்லையா ஸ்ரீ ... ஏன் டல்லா இருக்க ..." என்றான் அவள் விழிக்குள் நோக்கி.
"நோ...நோ... ஐ அம் பர்பெக்ட்லி ஆல்ரைட் ... ட்ராவல் பண்ணிட்டு வந்தது கொஞ்சம் டயர்டா இருக்கு... அவ்ளோ தான்..."
"இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கு வந்து இருக்கலாமே ..."
" இல்ல... வீட்ல போர் அடிச்சது ... ஆபீஸ்க்கு வந்தா கொஞ்சம் வேலையை முடிக்கலாமேனு தோணிச்சு... அதான் கிளம்பி வந்துட்டேன் ..."
அவள் பேசியது சற்று உளறலாக தான் இருந்தது. ஏதோ ஒரு மன உளைச்சலில் இருக்கிறாள் என்பதை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்நேரம் கயல் இருந்திருந்தா... அவகிட்ட இவ மனசு விட்டு பேசி இருப்பா ... எனக்கும் விஷயம் தெரிய வந்து இருக்கும்...
என உள்ளுக்குள் எண்ணிக்கொண்டவன், அதற்கு மேல் அவளிடம் தோண்டித் துருவ மனமில்லாமல்,
"நீ கார்த்திகேயன போய் மீட் பண்ணு... நியூ ப்ராஜெக்ட்ஸ்ல ரெண்டு மூணு டாஸ்க எக்ஸ்பிளைன் பண்ணுவாரு ... எவ்ளோ முடியுதோ அதை மட்டும் இன்னைக்கு முடிச்சு கொடுத்துடு ..."
என்றான் அவள் முகத்திலேயே பார்வையை பதித்து.
" ஓகே ...." என்ற பதிலை லேசான கமரிய குரலோடு மொழிந்து விட்டு அவள் வெளியேற
"கொஞ்ச நாள் பொறுத்துக்கோ மது.... கூடிய சீக்கிரம் நாம ரெண்டு பேரும் யாருமே கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு போய்விடுவோம் .. அப்புறம் நம்ம வாழ்க்கையில சந்தோஷம் மட்டும் தான் ..."
என்றான் மடிக்கணினியில் அவளைப் பார்த்தபடி உற்சாகமான குரலில்.
கார்த்திகேயனை சென்று சந்தித்தவளுக்கு, புதிய வேலைகள் வழங்கப்பட, அது மதிய உணவிற்கு பிறகும் அவளை சுனாமியாய் சுருட்டி கொள்ள , மற்றவைகளை மறந்து அன்றைய தினம் முழுவதும் மடிக்கணினிலேயே மூழ்கிப் போனாள்.
மாலை 4 மணிக்கு மேல் தன் அலைபேசியை உயிர்ப்பித்தவளுக்கு, ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் அவளது நாயகனிடமிருந்து வந்திருப்பது தெரிய , மனதில் இதம் பரவ, ஒவ்வொன்றாய் படித்தவளின் முகத்தில் புன்னகை ரேகைகள் வேகமாய் விரியத் தொடங்கின.
ஆங்கிலத்தில் அழகாக திட்டி இருந்தான்...
முதன்முறையாக அவனிடம் திட்டு வாங்குகிறாள் ... அதுவும் எழுத்து வடிவில் ...
அவனது கோபத்தைக் கூட அவ்வளவு நேர்த்தியாக வெளிப்படுத்தி இருந்தான் ....
என்ன ஒன்று கடைசி செய்தியில் மட்டும்,
"ஆறு மணிக்கு உன் ஆபீஸ் வாசல்ல நிப்பேன்.... ... நீ மட்டும் வரல .... உன் கேபினுக்கே வந்து உன்னை குண்டு கட்டா
தூக்கிடுவேன் .... உனக்கு என்னை பத்தி தெரியுமில்ல.... ஒழுக்கமா கீழ வந்து நில்லுடி....... ..."
என்று தமிழில் மிரட்டி இருந்ததை பார்த்து கலகலவென்று சிரித்தவள்,
"செய்யறதெல்லாம் செஞ்சிட்டு பெரிய ரவுடி மாதிரி ஓவரா சவுண்ட் விட்டிருக்கீங்க ... தம்பி... நான் எவ்ளோ பெரிய ரவுடினு உங்களுக்கு தெரியாது .... இன்னைக்கு இருக்குது உங்களுக்கு ..."
புன்னகையோடு சன்னமாக மொழிந்தவளுக்கு, காலையில் அலுவலகம் வந்த போதிருந்த மனநிலைக்கும், தற்போதைய மனநிலைக்குமான வித்தியாசங்கள் வியப்பை அளித்தன.
நேற்று இரவில் இருந்து நடந்த அனைத்தையும் அசைபோட்டுப் பார்த்தவகளுக்கு தன்னுடைய சிறுபிள்ளைத்தனம் சிறப்பாக தெரிய,
"ஏன் அப்படி உங்க பாட்டி கிட்ட சொன்னீங்கன்னு நேரடியா கேட்காம ... காலேஜ் பசங்க மாதிரி மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி இருக்கோமே ... எனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி நடந்துகிட்டேன் ..."
என்று யோசித்தவளுக்கு ஒன்று தெளிவாக விளங்கிப் போனது.
வீட்டுப் பெண்கள் பேசியது, அதற்கு அவளவன் அளித்த பதிலோடு, ஆழ்மனதில் தனக்கு குழந்தை பிறக்காமலே போய்விடுமோ என்றிருந்த அச்சமானது , நேற்றைய சூழ்நிலையில் தாழ்வு மனப்பான்மையாய் மாறி அவளது தன்னம்பிக்கையை அழித்திருந்ததால் ,
அவனை எதிர்கொள்ள தயங்கி இருக்கிறாள் என்பது வெட்ட வெளிச்சமாக,
"மத்தவங்க என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்ல.... ஆனா நீங்களும் என்னை ஒதுக்கிட்டீங்கன்னு நினைக்கும் போது தான் வருத்தமா இருக்கு ராம்..."
என கண் கலங்கியவளுக்கு நொடிக்கு நொடி மாறும் தன் மனநிலை வித்தியாசமாகப்பட, அதனை ஆராயும் மனநிலை இல்லாததால், அதனை ஒதுக்கி வைத்து விட்டு தன்னவனை சந்திப்பதற்காக வேக வேகமாக வேலைகளை முடிக்கலானாள்.
காலையிலிருந்து குழு கலந்தாய்வில் கலந்துகொண்டு கருத்து சொல்லிக் கொண்டிருந்தாலும் வீராவின் மனம் மட்டும் ஒரு நிலையில் இல்லை.
அவன் விடுப்பில் இருந்தாலும், இல்லை என்றாலும் அவனுக்கு அலுவலக பணிகள் அதிகம் என்பதால் முக்கிய கலந்தாய்விற்கு இணையத்தின் மூலம் இணைந்து கொள்வான்.
அதோடு அலுவலகம் சென்று தான் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் அன்று வீட்டில் இருந்தபடி தன்னவளோடு சொற்ப நேரத்தையாவது கழிக்க திட்டமிட்டிருந்தவனுக்கு சொல்லாமல் கொள்ளாமல் அவனவள் அலுவலகம் சென்றது வஞ்சனை இல்லாமல் சினத்தைக் கூட்டி இருக்க,
"மெசேஜ பாத்தயே ரிப்ளை பண்ணயா .... இன்னிக்கு இருக்குடி உனக்கு .... போனா போகுது சின்ன பொண்ணுன்னு பார்த்தா ஓவரா பண்ற ..."
என பொங்கிக் கொண்டே துரிதமாக கிளம்பியவன் பற்களை நறநறவென்று கடித்த படி, காரை கிளப்பினான்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...
Super mam
ReplyDeleteThanks dr
Deletekeep rocking 💕💕💕💕💕💕
ReplyDeleteThanks dr
DeleteWow very very superb sis. Sri kovam seri ayiduchu, naan kuda rendu perum pesa matangalonu nenachen. Waiting for next ud.
ReplyDeleteThanks dr
DeleteRelationship kula evlo purithal irukanum nu oruthar ku oruthar epdii vittu kodukama irukanum nu nalla puriya vaikkirnga mam... Sikkirama nxt ud plz.. Rmba nal wait panna vaikkathonga...
ReplyDeleteThanks dr.. try panren da
Delete