அத்தியாயம் 126
மஹிக்கா, அலுவலகத்தில் இருந்து, மாலை 4 மணிக்கு முன்பாகவே வீட்டிற்கு கிளம்பி சென்றதை தன் செயலாளர் மூலம் அறிந்து கொண்டு ராம்சரண் காவல்துறைக்கு தகவல் சொல்ல , உடனே காவல்துறையினர், வினோத் வீட்டில் குடியிருக்கும் மஹிக்காவை தேடி அங்கு விரைந்தனர்.
நினைத்ததை சாதித்து விட்ட சந்தோஷத்தில் , மாடி தாழ்வாரத்தில் காலாற நடந்தபடி ஆவி பறக்கும் தேநீரை அவள் ரசித்து ருசித்து கொண்டிருக்கும் போது காவல்துறை வாகனம் அங்கு போய் நின்றது.
சத்தம் கேட்டு மாடியில் இருந்து அவள் எட்டிப் பார்க்க,
"மேடம், கொஞ்சம் கீழ வரீங்களா ...." என பெண் துணை ஆய்வாளர் அழைக்க, ஒரு கணம் பயப்பந்து அவளது நெஞ்சை இறுக்க, வெளிக்காட்டிக் கொள்ளாமல், கம்பீரமாக படி இறங்கிச் சென்றவள்
"எதுக்காக கூப்பிட்டீங்க..." என்றாள் போலி தோரணையில்.
காவல் ஆய்வாளர் வந்த விபரத்தை முழுவதுமாய் சொன்னதோடு, அவளும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறாள் என்பதை வினோத் தன் வாக்குமூலத்தின் மூலம் உறுதி செய்திருப்பதையும் சொல்ல,
"இங்க பாருங்க ... இதெல்லாம் சுத்த பொய் .... எனக்கு அந்த லட்சுமி யாருன்னே தெரியாது .... வினோத் ஏன் இப்படி ஓளறாருன்னு எனக்கு சுத்தமா புரியல ...." என அவள் ஏதேதோ பேசி, திசை திருப்ப
"நீ சொல்ற கதைய கேக்க இப்ப எங்களுக்கு நேரமில்ல... என்ன சொல்றதா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லு ..."
"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க ... நான் என் லாயர கூப்பிடறேன் ..."
"அட்டம்ட் மர்டர் -307ல கேஸ் புக் ஆகியிருக்கு .. அது நான்-பெயிலபுல் ... உங்க லாயர்னு இல்ல சுப்ரீம் கோர்ட் லாயரே வந்தாலும் இப்போதைக்கு ஒன்னுமே பண்ண முடியாது .... பேசாம வண்டில ஏறு ... இல்ல ... பொம்பளைன்னு பார்க்க மாட்டேன்... நாலு போடு போட்டு வண்டியில தூக்கி போட்டுகிட்டு போயிட்டே இருப்பேன் ...."
என அந்தப் பெண் ஆய்வாளர் அரற்ற, அதற்கு மேல் தாமதித்தால், தனக்குத்தான் அசிங்கம் என்பதைப் புரிந்து கொண்டு, அவர்களோடு கிளம்பிச் சென்றாள் மஹிக்கா.
--------------------------------------------------------------------
அதற்குள் சற்றுமுன் நடந்து முடிந்த திட்டமிட்ட விபத்தோடு சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து விண்ணப்பித்ததற்கும் அருணா கற்பகம் அரங்கேற்றிய அசிங்கமான சூழ்ச்சியே காரணம் என்பதை லட்சுமியின் குடும்பத்தாரிடம் ரங்கசாமி ஒளிவு மறைவு இல்லாமல் பகிர, ருக்மணி ராமலட்சுமியோடு தியாகராஜனும் முதன்முறையாக அதிர்ந்து உறைந்து போனார்.
எதையுமே பொருளாதார கண் ஓட்டத்திலேயே பார்ப்பவருக்கு , மகள் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கத்தி மேல் நடப்பது போல் நித்தம் நித்தம் தன் புகுந்த வீட்டில் நாளை கடத்தி இருக்கிறாள் என்பதை கேட்க கேட்க, மனம் குமைந்ததோடு அவள் கைக்குழந்தையோடு வழியற்று பிறந்தகத்திற்கு வந்த போது, தான் நடந்து கொண்ட அற்பத்தனமும் அடாவடித்தனமும் மனக்கண் முன் வந்து தாண்டவமாட , குற்ற உணர்வில் கூனிக்குறுகிப் போனார் மனிதர்.
அதுவரை நடந்தது விபத்து என்றே நம்பிக் கொண்டிருந்த நிலையில், அது கற்பகம் அருணாவின் கைங்கரியம் என அறிந்ததும் அனைவரும் அதிர்ச்சியில் சிலையாகிப் போக,
"என்னை மன்னிச்சிடுங்க சம்பந்தி ... மருமக நல்ல குணவதியா வரணும்னு நினைச்சேனே ஒழிய , அவளை அந்த குணம் கெட்ட ராட்சசிகளோட கொண்டு போய் வைக்கிறேனேனு கொஞ்சம் கூட யோசிக்கல..... ..."
குற்ற உணர்வில் ரங்கசாமி , ருக்மணி மற்றும் தியாகராஜனை பார்த்து மன்னிப்பு கேட்க, அவர்களுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, மௌனமாய் தலை குனிந்து கொண்டனர்.
இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அறுவை சிகிச்சையின் மூலம் லட்சுமியின் வயிற்றிலிருந்து பாதுகாப்பாக இரண்டு குழந்தைகளும் வெளியே எடுக்கப்பட்டன.
கிட்டத்தட்ட பிரசவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பிறந்ததால், அந்தக் குழந்தைகள் எடை குறைவாக இருந்ததோடு குறை பிரசவ குழந்தைகளுக்கே உண்டாகும் நுரையீரல் பிரச்சனை காரணமாக சுவாசப் கோளாறும் ஏற்பட, உடனே மருத்துவர்கள் பிறந்த குழந்தை பராமரிப்பு அவசர சிகிச்சை பிரிவில் (NICU) சேர்த்து வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்க ஏற்பாடு செய்துவிட்டு அறுவை சிகிச்சை அறையில் இருந்து இருந்து வெளியேற, அவர்களை கண்டதும்
"லட்சுமி எப்படி இருக்கா டாக்டர் ...." என்றான் ராம்சரண் பதற்றத்தோடு.
ராம் சரண் உட்பட அங்கு கூடியிருந்த அனைவரையும் ஒருசேர ஒரு சங்கட பார்வை பார்த்த தலைமை மருத்துவர்,
"நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க ... அஸ் பர் மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் , லட்சுமிக்கு ஏற்கனவே ஏதோ ஸ்ட்ரெஸால ஹைப்பர் டென்ஷன் இருந்திருக்கு .... இந்த ஆக்சிடென்ட்ல அது இன்னும் அதிகமாகி, ஸ்ட்ரோக் வந்ததால அவங்க கோமால போய்ட்டாங்க .."
" ஐயோ டாக்டர் ...." என ராம்சரண் பதற,
"ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் ராம்சரண்....... "
"எப்ப டாக்டர் என் பொண்ணு குணமாவா ...." ருக்மணி இடைப் புகுந்து தழுதழுத்த குரலில் வினவ
"ஆக்சிடென்ட்ல லட்சுமி அன்கான்சியஸ் ஆனதுமே, அவங்களுக்கு இம்மிடியட்டா மெடிக்கல் ஹெல்ப் கிடைச்சதால, அஸ் ஆஃப் நவ் , அவங்க அன்கான்ஷியஸ் ஸ்டேட்ல இருந்தாலும், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ , இசிஜி , இஇஜி ரிசல்ட்ஸ் எல்லாம் ப்ரபரா வந்திருக்கு......சோ , கூடிய சீக்கிரம் கோமால இருந்து வெளியே வந்துருவாங்க..."
"எப்ப டாக்டர் ...." மனசு உடைந்து போய் ராம்சரண் கேட்க,
"எல்லாமே ஸ்டெப் பை ஸ்டெப் பிராசஸா தான் நடக்கும் ராம்சரண் ... அவங்க அன் ரெஸ்பான்சிவ் (unresponsive) ஸ்டேட்ல இருந்து மினிமல் கான்ஷியஸ் ஸ்டேட்டுக்கு வர்றதுக்கே இன்னும் ஒரு வாரமாவது ஆகும் ... அப்புறம் ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி, காக்னெட்டிவ் தெரபினு எல்லாம் கொடுக்க கொடுக்க கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி ஒன் ஆர் டூ மந்த்ஸ்ல நார்மல் ஆயிடுவாங்க ... "
என டாக்டர் முடிக்க, அப்படியே அங்கிருந்த நாற்காலியில் சரிந்தமர்ந்தவன், தன் கரங்களால் தலையைப் பற்றி குனிந்து கொண்டு உள்ளுக்குள் ஓங்காரமாய் கதறி அழுதான்.
மகனை பரிதாபமாக பார்த்தபடி
"அவ்ளோ நாள் ஆகுமா டாக்டர் .... " நம்ப மாட்டாமல் ரங்கசாமி கேட்க,
"பொதுவா ஸ்ட்ரோக் வந்து கோமால போனவங்க, கண் விழிக்கிறதுக்காக இமைய அசைக்கிற ரெஸ்பான்சிவ் ஸ்டேட்டுக்கு வர்றதுக்கே குறைந்தபட்சம் ஆறு மாசத்துல இருந்து , ஒரு வருஷம் கூட ஆகலாம் .... சிலர் அந்த ஸ்டேஜ்க்கு வராமலே அன் கான்ஷியஸ் ஸ்டேட்லயே இறந்தும் போகலாம் ... ஆனா லட்சுமிய பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு இமிடியேட் மெடிக்கல் ஹெல்ப் கிடைச்சதால, இப்ப வரைக்கும் எந்த மேஜர் டிராபேக்கும் இல்ல ... என்ன ஒன்னு இந்த பிரச்சனைல அவங்களுக்கு சிசேரியனும் நடந்திருக்கிறதால, ரெக்கவரி ஆக கொஞ்சம் நேரம் எடுத்துக்கலாம்... மத்தபடி சினிமாவுல காட்டற மாதிரி, கோமால இருந்து எழுந்தவங்களால, உடனே இயல்பா பேசி, நடக்க எல்லாம் முடியாது ... அவங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா தெரபி கொடுத்து, ட்ரைனிங் பண்ணா தான் நார்மலான லைஃப்க்கு திரும்ப முடியும் ... ஒரு மாசத்துல இருந்து ரெண்டு மாசம் வரைக்கும் நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும் ...." என அறிவுறுத்திவிட்டு மருத்துவர் குழு விடை பெற்றனர்.
தலை கவிழ்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அருணா கற்பகத்தின் மீது கொலைவெறி ஏற்பட்டதோடு , தாய் தங்கையின் மீதான தனது கண்மூடித்தனமான நம்பிக்கையும், தன்னவளிடம் காட்டிய தன்னகங்காரமும் தான் தன் மனையாட்டிக்கு இப்படி ஒரு நிலைமையை தேடிக் கொடுத்திருக்கிறது என்று தன் மீதேயான தணியாத கோபமும் தலைக்கேற விருட்டென்று எழுந்தவன்,
"அப்பா, இப்பவே அந்த அருணாவையும் கற்பகத்தையும் என் கையால வெட்டி போட்டா தான் என் மனசு ஆறும்...." சொல்லிக்கொண்டே, அந்த இடத்தை விட்டு அவன் கிளம்பவும், ரங்கசாமிக்கு தலைமை காவல் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருக்க, நகர்ந்தவனின் கரம் பற்றி தடுத்தபடி அலைபேசி அழைப்பை அனுமதித்தார் ரங்கசாமி.
"சார், மஹிக்காவ ரெஸ்ட் பண்ணிட்டோம் ....
அவகிட்ட விசாரணை நடந்துகிட்டு இருக்கு .... கோயம்புத்தூர் இன்ஸ்பெக்டரும் எஸ்ஐயும் அருணா கற்பகத்தை தேடி உங்க வீட்டுக்கு போயிருக்காங்க ... ஆனா வீடு பூட்டி இருக்காம்.... அக்கம் பக்கத்துல விசாரிச்சதுல ஏதோ குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு டாக்டருக்கு போய் இருக்கிறதா சொன்னாங்களாம் ... அவங்க ரெண்டு பேரும் எப்ப வந்தாலும், இம்மீடியேட்டா அரெஸ்ட் பண்ண ரெண்டு செண்ட்ரிய அங்க போட்டு இருக்கோம் ... நாளைக்கு காலையிலயும் வரலேன்னா, தமிழ்நாட்ல இருக்கிற எல்லா போலீஸ் ஸ்டேஷன் , செக் போஸ்ட்க்கும் தகவல் கொடுக்கிறதா இருக்கோம்.... கவலைப்படாதீங்க... எப்படியும் நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள அரெஸ்ட் பண்ணிடலாம் ...."
"தேங்க்ஸ் சார் ...." என அழைப்பை துண்டித்த ரங்கசாமி, காவல் அதிகாரி சொன்னதை மறுஒளிபரப்பு செய்துவிட்டு,
"சரண், நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு ... ஏற்கனவே உன் வாழ்க்கையை கெடுக்கணுங்கிற எண்ணத்துல தான் அவளுங்க ரெண்டு பேரும் இவ்ளோ பெரிய திட்டம் போட்டிருக்காளுங்க..... லாரி டிரைவருங்க, வினோத், மஹிக்கா இவங்க கொடுத்த வாக்குமூலமே போதும் , அவளுங்க ரெண்டு பேரையும் உள்ள தூக்கி வச்சு 10 வருஷம் களித்தின்ன வைக்க... நீ தேவையில்லாம அவளுங்கள ஏதாவது பண்ண போய் உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே .... அதான் டாக்டர் சொல்லிட்டாரே லட்சுமி , ஒரு வாரத்துல கண் முழிச்சிடுவான்னு.... மூணு குழந்தைக்கு தகப்பன்பா நீ... கொஞ்சம் பொறுமையா இரு... உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு ...."
"என் லட்சுமிய இப்படி என்னால பாக்க முடியலப்பா .... அவளுக்கு ஏதாவது ஆச்சின்னா அப்புறம் என்னை உயிரோடவே பார்க்க முடியாது ..." என்றவனின் குரல் உடைய , உடனே சுமித்ரா,
"சரண், கவலைப்படாதீங்க ... இன்னும் ரெண்டு மூணு நாளுக்குள்ள ஷீ வில் கெய்ன் ஹர் கான்ஷியஸ் ... என் வார்த்தையை நம்புங்க..." என ஆறுதல் கூற, தலையசைத்து ஏற்றவன்
"அப்போ அருணா கற்பகத்த ஒரு வார்த்தை கூட கேட்காம அப்படியே விட சொல்றீங்களா..... ..." ரங்கசாமியை பார்த்து கோபத்துல எகுற,
"நான் அப்படி சொல்லலையே .... எனக்கே அவளுங்களை பார்த்து நாக்கு புடுங்கிட்டு சாவுற மாறி நாலு கேள்வி கேட்கணும்னு இருக்கு ..... முதல்ல நாளைக்கு காலையில கல்யாணம் முடியட்டும் .... அப்புறம் நாம ரெண்டு பேரும் கோயம்புத்தூர் கிளம்பிப் போய் மத்ததை பாத்துக்கலாம் ..."
ரங்கசாமி முடித்த மாத்திரத்தில்,
"நாளைக்கு எனக்கு கல்யாணம் வேணாம் ..... அக்கா இப்படி இருக்கும் போது என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது ...."
என கதறினாள் ராமலட்சுமி .
"அம்மா, எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா .... நடக்க இருந்த உன் கல்யாணத்தை அருணா அவதூறு சொல்லி நிறுத்தினதால தானே பிரச்சனையே ஆரம்பிச்சது ....நாளைக்கு லட்சுமி கண்ணு முழிச்சா அவ கேட்கிற மொத கேள்வி உன் கல்யாணத்தை பத்தி தான் இருக்கும் .... அது இன்னமும் நடக்கலன்னு தெரியவந்தா ரொம்ப ஃபீல் பண்ணுவா .... அவளோட ஹெல்த் கண்டிஷனுக்கு அது நல்லதில்லம்மா ..." என ரங்கசாமி புத்திமதி சொல்லிக் கொண்டிருக்கும் போது ,
"சார் சொல்றது ரொம்ப கரெக்ட் ....
லட்சுமிக்கு கான்ஷியஸ் வந்ததும், அவ நிச்சயம் உங்க கல்யாணத்தை பத்தி தான் கேப்பா... அதுக்கு பாசிட்டிவா பதில் சொன்னா தானே மா அவ ஹெல்த்துக்கு நல்லது ... "
என ஸ்ரீனியின் தந்தையும் மொழிய , ருக்மணி, தியாகராஜனுக்கும் அதுவே சரி என்று பட, மறுதினம் குறித்த நேரத்திலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்துவிட்டு அனைவரும் தத்தம் பணிக்கு கலைய, ஸ்ரீனி சோகமே உருவாய் நின்றிருந்த ராமலட்சுமியிடம்,
"ஆர் யூ ஓகே ...." என்றான் திருமணத்தை குறித்த ஏற்பாட்டினை மனதில் வைத்து.
"அக்கா நம்ம கல்யாணத்தை பாக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டா ... அவ இல்லாம நம்ம கல்யாணம் நடக்க போகுதேன்னு வருத்தப்பட்டேன் ... ஆனா மாமாவும் உங்க அப்பாவும் எடுத்து சொன்னதுக்கு அப்புறம் தான், இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்னு இப்ப தோணுது ஸ்ரீனி ..."
"கூடிய சீக்கிரம் லட்சுமி கண் முழிச்சிடுவாங்க .... கவலைப்படாத டா...." என்றான் அவள் தோளை மென்மையாய் தட்டி.
பிறகு ராம்சரண், தியாகராஜன் மற்றும் ருக்மணி மருத்துவமனையிலேயே தங்கிக் கொள்ள, மற்றவர்கள் எஸ்டேட் பங்களாவிற்கு பயணித்தனர்.
அந்தப் பளிங்கு பங்களா, சோழர் கால அரண்மனை போல் பறந்து விரிந்து வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
எங்கு திரும்பினும் பணத்தின் செழுமை.
அதுவும் மறுதினம் திருமணம் நடக்க இருப்பதால், மணமேடையில் இருந்து உணவு கூடம் வரை, ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து பிரத்தியேக அலங்காரம் செய்யப்பட்டு வெகு சிறப்பாக காட்சியளித்தன.
வீரா தம்பதியர் தங்கிக் கொள்ள ஒதுக்கப்பட்டிருந்த அறையானது கிட்டத்தட்ட பத்து நபர்கள் உருண்டு புரளும் அளவிற்கு பெரியதாக இருந்ததோடு சகல வசதிகளுடன் கூடிய ஏழு நட்சத்திர விடுதி போல் காட்சியளிக்க, அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் துளி கூட இல்லாமல் இருவரும் விட்டத்தை வெறித்துக்கொண்டு பஞ்சு மெத்தையில் அருகருகே படுத்திருந்தனர்.
"ராம், முதல்ல உங்களுக்கு கைல ஆக்சிடென்ட் ஆச்சு ... இப்ப லட்சுமிக்கு கோமாவுல போற அளவுக்கு பெரிய ஆக்சிடென்ட் ஆயிருக்கு .... இதெல்லாம் நெனச்சா இனம் புரியாத ஒரு பயம் வருது ....." என்றாள் தழுதழுத்த குரலில் வீராவின் மனையாட்டி.
"டாக்டர் சொன்னத கேட்ட இல்ல .... லட்சுமிக்கு இம்மிடியட் மெடிக்கல் ஹெல்ப் கிடைச்சதால தான், லட்சுமிய காப்பாத்த முடிஞ்சதுன்னு சொன்னாரு இல்ல ... லிசன் .... எனக்கு கையில அடிபட்டதால தான், பிரைவேட் கேப்ல டிராவல் பண்ற நிலைமை வந்துச்சு ... சமீர் மாதிரி நல்ல மனுஷன், இடம் தெரிஞ்சவரு டிரைவரா வந்ததால தான், ஷார்ட்கட் ரூட்ல போக முடிஞ்சுது ... அப்படி போனதால தான் உயிருக்கு போராடிகிட்டு இருந்த லட்சுமிக்கு இம்மிடியட் மெடிக்கல் ஹெல்ப்க்கு ஏற்பாடு செய்ய முடிஞ்சது ... இதைத்தான் எது நடந்தாலும் நன்மைக்கேனு சொல்லுவாங்க ..... ஏதாவது சின்ன பிரச்சனை வருதுன்னா, ஏதோ ஒரு பெரிய பிரச்சனையிலிருந்து காப்பாத்த தான் வந்திருக்குன்னு பாஸிட்டிவா நினைச்சிக்க ... பயமே வராது ..."
என்றவனின் பேச்சு மனதிற்கு இதம் அளிக்க , அவனது நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டு விட்டு ஒருகளித்து படுத்திருந்தவனின் மார்பில் வழக்கம் போல் முகம் புதைத்துக் கொண்டு அவள் உறக்கத்தை தழுவ, உடன் அவள் கணவனும் நித்ரா தேவியின் அருளால் உறங்கிப் போனான்.
மறுநாள் காலை, தேவலோகம் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய பளிங்கு பங்களாவின் மத்திமப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரிய மணமேடையில் ஐயர் வளர்த்த அக்னியின் முன்பு உறவினர்கள், நண்பர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் புடை சூழ, ஸ்ரீனி பொன் மாங்கல்யத்தை ராமலட்சுமியின் கழுத்தில் அணிவித்து தன் வீட்டு மகாலட்சுமியாக ஏற்றுக்கொண்டான்.
மணமகள் மற்றும் மணமகன் ஒப்பனைக்காக வந்திருந்த ஒப்பனைக் கலைஞர்கள், புகைப்பட நிபுணர்கள் , வாத்தியக்காரர்கள், கேட்டரிங் நிறுவனம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைவருமே தத்தம் பணியினை வெகு சிறப்பாக செய்திருக்க, மனமகிழ்ச்சியோடு உயிர்ப்பும் உணர்வுமாய் அதனை ரசித்து கொண்டாட வேண்டிய மணமக்களின் மனம் மட்டும் இயந்திரத்தனமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அவர்களின் நிலைமையை காட்டிலும் சுயநினைவற்ற மனைவி மற்றும் புதிதாய் பிறந்திருந்த தன் இரட்டை குழந்தைகளை மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் விட்டு விட்டு தன் சின்னஞ்சிறு பெண் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, அருணா கற்பகத்தின் மீதான வெஞ்சினத்தை அடக்கியபடி, பெரும் மனச்சுமையோடு, மண மேடையில் நின்று கொண்டிருந்த ராம் சரணின் நிலை படுமோசமாக இருக்க, அதனை உணர்ந்தபடி அங்கு வந்த ரங்கசாமி, அவன் தோளில் ஆறுதலாய் கை வைக்கும் போது, அவரது அலைபேசி சிணுங்கியது.
ஒளிர் திரையில் காவல்துறை உயர் அதிகாரியின் அழைப்பு என தெரிந்ததுமே, மைந்தனோடு மணமேடையை விட்டு விரு விரு வென இறங்கிச் சென்று, மக்கள் கூட்டம் இல்லாத சற்று மறைவான பகுதியில் அழைப்பை அவர் ஸ்பீக்கரில் அனுமதிக்க,
"சார், இன்னைக்கு காலையில 6:00 மணிக்கு தான் அருணாவும் கற்பகமும் வீட்டுக்கு வந்தாங்க ... உடனே அவங்கள அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்தாச்சு.........ஆனா ஸ்டேஷனுக்கு வர்ற வழில குழந்தைக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கிறதா சொல்லி அருணா ரொம்ப பிரச்சனை பண்ணிட்டா .... உடனே எந்த ஹாஸ்பிடல்னு தெரிஞ்சுகிட்டு போன் பண்ணி விசாரிச்சா, குழந்தை ICUல இருக்கிறதா டாக்டர் சொல்றாரு ... அவ கிட்ட இன்னொரு குழந்தை வேற இருக்கு ... நாங்க அவங்கள கோர்ட்ல ப்ரோடுயூஸ் பண்ணியாகணும் .... என்ன பண்றதுன்னு தெரியல சார் .... "
"அருணாவோட வீட்டுக்காரர் ஹரிஷும் அவரோட தங்கச்சியும் அங்க தான் இருக்காங்க ... அவங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்... அவங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துடுவாங்க .... அவங்க கிட்ட குழந்தையை கொடுத்துடுங்க .... நானும் என் மகனும் உடனே கிளம்பி ஒரு 3 மணி நேரத்துல அங்கு வந்து சேர்ந்திடுவோம் .... குழந்தைய எந்த ஹாஸ்பிடல்ல அருணா சேர்த்திருக்கா ..."
" குட் லைஃப் ஹாஸ்பிடல் சார் ..."
" ஓகே ..."
ரங்கசாமி அழைப்பை துண்டித்ததும்
"லட்சுமிய போட்டுத்தள்ள அந்தக் கிராதகி பிளான் பண்ண மாதிரி .... ஒரு வேளை போலீஸ் அரெஸ்ட் பண்ண வர்ற விஷயத்தை எப்படியோ தெரிஞ்சுகிட்டு , குழந்தைய ஏதாவது செஞ்சிருப்பாளோ..."
என ராம்சரண் கோபத்தில் கொந்தளிக்க,
"கொஞ்சம் பொறுமையா இரு சரண் ... நான் ஹாஸ்பிடலுக்கு போன் போட்டு விசாரிக்கிறேன் ...."
ரங்கசாமி குட் லைஃப் மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்து விசாரிக்க, அருணாவின் குழந்தை அஜய் மூச்சுத் திணறல் காரணமாக அங்கு அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வர, உடன் கடந்த சில மாதங்களாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை குழந்தைக்கு சரியாக கொடுக்காமல் விட்டதோடு மூச்சுத் திணறல் அதிகரித்த நிலையில் தான், மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்ததால் குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் மொழிய, உடனே அவரிடம் வேறு சில தகவல்களை விசாரித்துக் கொண்டு அழைப்பை துண்டித்த ரங்கசாமி ஹரிஷின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தார்.
ரங்கசாமி ஹரிஷை தொடர்பு கொண்டு பேசிய தருணங்களை விரல் விட்டே எண்ணி விடலாம் .
அதுவும் மிகவும் அவசியம் என்றால் தான் அவர் தொடர்பு கொள்வார் என்பதால், அருணாவிற்கு தான் அனுப்பிய விவாகரத்து நோட்டீசை பற்றி பேச எண்ணி அழைக்கிறார் போலும் என நினைத்தபடி ஹரிஷ் அழைப்பை ஏற்க,எடுத்த எடுப்பிலேயே நடந்த அனைத்தையும் அவனிடம் ஒன்று விடாமல் ரங்கசாமி சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தவன் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று உறைந்து போனான்.
கட்டிய கணவன் என்பதால் அவனுக்கு அருணாவை பற்றி ஒரு அளவிற்கு நன்றாகவே தெரியும் என்றாலும், சொந்தத் தமையனின் மனைவியை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டும் அளவிற்கு தரம் தாழ்ந்து போவாள் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை .
தற்பொழுது ஒரு குழந்தை மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்க, தாயும் மகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது, மற்றொரு குழந்தையின் நிலைமையை எண்ணி பதறியவன், உடனே மற்ற தகவல்களை கேட்டு அறிந்துகொண்டு காவல் நிலையத்திற்கு செல்வதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
அதற்கு மேல் தாமதிக்காமல் ரங்கசாமியும் ராம்சரணும் கோயம்புத்தூர் செல்ல முடிவெடுத்து, அந்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து பகிர, உடனே வீராவும் தன் மனைவியோடு அவர்களுடனேயே கோயம்புத்தூருக்கு திரும்புவதாக முடிவெடுக்க, அடுத்த கணமே நால்வரும் கோயம்புத்தூர் நோக்கி பயணப்பட்டனர்.
அதற்குள் காவல் நிலையத்தில் கற்பகமும் அருணாவும், காவல் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
"நான் என் வக்கீலுக்கு போன் பண்ணனும் .... என் ஃபோனை குடுங்க ...."
அருணா அரற்ற,
"இங்க பாரு, உன்னை தகுந்த ஆதாரத்தோட அட்டம்ட் மர்டர் கேஸ்ல அரெஸ்ட் பண்ணி இருக்கோம் .... இது நான்-பெயிலபுள், உன் வக்கீல் இல்ல, வேற எவன் வந்தாலும் உன்னை வெளியே எடுக்க முடியாது ..... போன போகுதேன்னு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன் ... ரொம்ப பேசின... அடிச்சு பொலந்துடுவேன் ...." பெண் அதிகாரி பதிலுக்கு சீறிக் கொண்டிருக்கும் போது , ஹரிஷ் தன் தங்கை சுகந்தியோடு அங்கு பிரவேசிக்க அவனைக் கண்டதும் அஷ்ட நாடியும் அடங்கிப் போய் தலை குனிந்து கொண்டாள் அருணா .
"அடியேய் , நீ இவ்ளோ கேடு கெட்டவளா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல..... ..... கொலைகார பாவி .... சொந்த அண்ணியையே போட்டு தள்ளனும்னு ஆள ஏற்பாடு பண்ணி இருக்க ... உன்னை எல்லாம் கண்டந்துண்டமா வெட்டினா கூட தப்பு இல்லடி ...."
கர்ஜித்துக் கொண்டே ஹரிஷ் அருணாவின் தலை முடியை கொத்தாக பற்றி, அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்ததோடு , தன் கால்களாலும் அவளை விடாமல் எட்டி எட்டி உதைக்க, கற்பகம் பதற, உடனே காவல் ஆணையரோடு மற்ற காவலர்களும் இணைந்து கொண்டு அவனைப் பற்றி இழுத்து தடுத்தனர்.
"மேடம் என்னை விடுங்க ...இவளை அடிச்சு கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும்.... உடம்பு ஓரளவுக்கு தேறிக்கிட்டு வந்த என் அம்மா திடீர்னு எப்படி செத்து போனாங்கன்னு .... இப்பதான் புரியுது... சொந்த அண்ணிய கொல்ல திட்டம் போட்ட மாதிரி , என் அம்மாவையும் இவ தான் ஏதோ பண்ணி சாகடிச்சிருக்கணும் ..."
என ஹரிஷ் ஓங்காரமாய் வசை பாடிக் கொண்டிருக்கும் போது, அந்தப் பெண் காவல் ஆணையருக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாவின் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவ நிர்வாகம் தகவல அளிக்க , அதனை கேட்டதும் கொந்தளித்த போன ஹரிஷ், பாய்ந்துச்சென்று அருணாவை பற்றி இழுத்து மீண்டும் நையப் புடைக்க ஆரம்பிக்க, தடுக்க வந்த கற்பகத்தையும் விடாமல் இடி போல் தாக்க,
இரு பெண்களையும் அவனிடமிருந்து பிரித்தெடுப்பதற்குள், காவல் நிலையமே இரண்டாகி போனது.
"என் குழந்தைகளை என் கண்ணுல கூட காட்டாம வச்சிருந்ததோட, உடம்பு சரியில்லாத குழந்தைய டாக்டருக்கும் காட்டாம விட்டுட்டதால, இப்ப என் குழந்தை செத்துப் போச்சு ... மேடம்... இப்ப நீங்க எல்லாம் தடுக்கிறதால இவ உயிரோட இருக்கா ... தனியா சிக்காமலா போயிடுவா.... அப்ப இவள போட்டு தள்ளிடறேன் பாரு ...."
மீண்டும் ஹரிஷ் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது,
"இந்தாங்க, உங்க குழந்தையை பிடிங்க ... நாங்க இவங்கள கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணனும் ..." என்ற பெண் ஆய்வாளர்,
"ஏட்டையா, அந்த ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ கொண்டு வாங்க .... இவளுங்க ரெண்டு பேருக்கும் மூஞ்செல்லாம் வீங்கி போய் உதடு கிழிஞ்சு ரத்தம் வருது .... நாம ஏதோ அடிச்சிட்டோம்னு ஜட்ஜ் சந்தேகப்பட போறாரு.....கொஞ்சம் ட்ரெஸ்ஸிங் பண்ணி விடுங்க ...
இந்தம்மா( அருணா கற்பகத்தை பார்த்து) , தலையெல்லாம் கலஞ்சிருக்கு ... டிரஸ் எல்லாம் கசங்கி இருக்கு சரி பண்ணிக்கோங்க ..." என்றவர்
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்களை ஜிப்பில் ஏற்றிக்கொண்டு காவல்துறை வாகனத்தில் நீதிமன்றத்தை நோக்கி பயணப்பட்டார்.
தலைமை காவல் அதிகாரி மூலமாக குழந்தை இறந்த விஷயம் கோயம்புத்தூருக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்த ரங்கசாமிக்கு தெரிய வர துடித்துப் போய்விட்டார் மனிதர்.
"தானும் வாழல, வாழ வேண்டிய குழந்தையையும் வாழ விடல ..... ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து அவ கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டினேன் பாரு ... இதெல்லாம் எனக்கு தேவை தான்.... கற்பகம் அருணாவை தன்னைப்போலவே விஷச்செடியா வளர்க்கறானு தெரிஞ்சும், கண்டுக்காம இருந்தேன் பாரு ... அதுக்கெல்லாம் ஆண்டவன் கொடுக்கிற தண்டனை இது ..."
என அவர் கதறி துடிக்க,
"ராமலட்சுமி கல்யாணம் நின்னு போன விஷயத்துல, அருணா குழந்தை மேல பொய் சத்தியம் பண்ண போகும் போது , லஷ்மி எவ்வளவோ தடுத்து பார்த்தா .... குழந்தை வாழ்க்கைல விளையாடாத அருணா .... ஏற்கனவே உடம்பு சரியில்லாத குழந்தை .... நீ உன்னை காப்பாத்திக்குறதுக்காக அது மேல பொய் சத்தியம் பண்ணாதனு எவ்வளவோ சொல்லி பார்த்தா .... அந்த தருணத்துல எல்லாரையும் முட்டாளாக்கி ஜெயிச்சா போதும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அருணா எதையுமே காதுல வாங்கிக்காம பொய் சத்தியம் பண்ணா... இப்ப அதோட பலன், குழந்தையே போயிடுச்சு ..... "
என தழுதழுத்த ராம்சரண் உடனே தீவிரத்தை தத்தெடுத்துக்கொண்டு ,
"அந்த அரக்கிய என் கையாலே அடிச்சு கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும் .... அவ சுயநலத்துக்காக எத்தனை பேர தான் காவு வாங்குவா ....." என உறுமிக் கொண்டிருந்தவனிடம்,
"சரண், தப்பு செஞ்சவங்க கையும் களவுமா மாட்டிக்கிட்டாங்க .... நீ ஏதாவது பண்ணி புது பிரச்சனையை இழுத்து விட்டுடாத ... " என்ற வீரா ரங்கசாமியிடம்,
"லாரி டிரைவர்ஸ், வினோத், மஹிக்கா எல்லாரையும் கோயம்புத்தூர் கோர்ட்லயா ப்ரொடியூஸ் பண்ண போறாங்க அங்கிள் ..." என கேட்க
"ஆமாம்பா .... அவங்களையும் கோயம்புத்தூர் கோர்ட்ல தான் ப்ரொடியூஸ் பண்ண போறாங்களாம்..... குழந்தை விஜய, ஹரிஷ் கிட்ட ஒப்படைச்சிட்டு அருணா கற்பகத்த கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ண கூட்டிகிட்டு போயிருக்காங்கனு இப்பதான் எஸ் பி சொன்னாரு ..." என முடித்தார் ரங்கசாமி .
ஏற்கனவே இனம் புரியாத பயத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த ஸ்ரீப்ரியாவிற்கு , தன்னை சுற்றி நடப்பதை கேட்க கேட்க, அச்சமும் நடுக்கமும் கூடிக் கொண்டே செல்ல, அந்த சூழ்நிலையில் அதனை கணவனிடம் கூட பகிர முடியாத நிலை என்பதால், அவனை ஒட்டி அமர்ந்தபடி தன் கைபேசியில் கவனம் செலுத்தலானாள்.
இவர்கள் காவல் நிலையத்தை அடைந்த போது , என்ன தான் ஹரிஷ் தந்தை என்றாலும், பெரும்பாலும் அருணா குழந்தைகளுக்கு தந்தையின் வாசமே இல்லாமல் வளர்த்ததால், இருப்புக் கொள்ளாமல் சுகந்தி, ஹரிஷிடம் அழுது கரைந்த குழந்தை ராம் சரணை கண்டதும், பாசத்தால்,
"மாமா ..." என்றழைத்தபடி ஓடி வந்து அவன் கால்களை கட்டிக்கொள்ள, அவனும் பொங்கி வந்து அழுகையில் தன் மருமகனை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.
சற்று நேரம் அங்கு அமைதி நிலவ, அப்போது நீதிமன்ற விசாரணையை முடித்துக் கொண்டு திரும்பிய ஜீப்பில் இருந்து கற்பகம் , அருணா இறங்க, குழந்தையோடு கதைத்துக் கொண்டிருந்த ராம்சரணின் கண்களில் அந்த காட்சி பட்டது தான் தாமதம், குழந்தையை தன் தந்தையிடம் கொடுத்துவிட்டு , சீறி எழுந்த காளையாய் பாய்ந்து சென்று அருணாவை பற்றி இழுத்து , தாக்கத் தொடங்கினான்.
கணநேரத்தில் நடந்த தாக்குதலை காவலர்கள் சூழ்ந்து கொண்டு ஒரு வழியாக தடுத்து நிறுத்த,
"புருஷன் கையாலயும் அடி வாங்கிட்ட... அண்ணன் கையாலயும் அடி வாங்கிட்ட ..... மாமியாரையும் போட்டு தள்ளிட்ட .... அண்ணிய ஆள வச்சு ஆக்சிடென்ட் பண்ணி கோமாவுக்கு அனுப்பிட்ட... ஹார்ட் டிசீஸ் இருந்த குழந்தய சரியா கவனிக்காம விட்டு சாகடிச்சிட்ட... இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் , வாழனும்னு ஆசைப்பட்டு கிட்டு ஜட்ஜ் கிட்ட ஜாமின் கேட்கற... தூ...நீ எல்லாம் என்ன ஜென்மமோ .....
ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்க ... நீங்க ரெண்டு பேரும் எங்க பாதுகாப்புல இருக்கிற வரைக்கும் தான் சேஃப் .... எதாவது ஃபிராடு பண்ணி ஜாமீன் வாங்கிட்டு வெளிய போனீங்க உன் அண்ணன், உன் புருஷன் யாராவது ஒருத்தர் உங்களை போட்டு தள்ளிடுவாங்க... பாத்துக்க.."
பெண் காவல் ஆணையர், அருணா கற்பகத்தை பார்த்து மிரட்ட ,
"மேடம், எனக்கு என் குழந்தையை பார்க்கணும் .... என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க ..." என்றாள் அருணா கண்களில் கண்ணீரோடு .
"அதான் நீயே உன் குழந்தைய கவனிச்சுக்காம விட்டுட்டு போட்டு தள்ளிட்டியே... அப்புறம் என்ன .... ஹார்ட் டிசீஸ் இருக்கிற குழந்தையை கூட கவனிச்சுக்காம அண்ணிய போட்டு தள்ளுற விஷயத்துல தீவிரமா இருந்து குழந்தையை கோட்ட விட்டுட்டு , இப்ப குழந்தையை பார்க்கணும்னு நாடகம் ஆடினா நம்பிடுவோமா ...
இங்க பாரு ... உன்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறதுக்கு எல்லாம் அனுமதி கிடையாது .... வந்ததுமே உன் புருஷன் உன்ன கொலவெறில தாக்கினாரு .... அப்புறம் உன் அண்ணன் அடிச்சு பொளந்துட்டாரு .... உன்ன நாங்க வெளிய கூட்டிட்டு போய் வேற எவனாவது உன்ன போட்டு தள்ளிட்டான்னு வை , அப்புறம் நாங்க தான் கோர்ட்டு கேஸ்ன்னு சுத்தணும் ..."
என பெண் ஆய்வாளர் முடிக்க,
"இனிமே இவளுங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.... இவ இறந்து போன என் பேரனை பார்க்கவும் கூடாது அவனுக்கு நடக்கப் போற ஈமச்சடங்குகள்ல கலந்துக்கவும் கூடாது..... அப்படி மீறி கலந்துகிட்டா நீங்க இப்ப சொன்னது தான் இவளுங்களுக்கு நடக்கும் .... ஞாபகத்துல வச்சுக்குங்க ..."
என ஆய்வாளரை பார்த்து மிடுக்காக சொன்ன ரங்கசாமி , கற்பகம் மற்றும் அருணாவை நெருங்கி
"நீங்க ரெண்டு பேரும் ஆடின ஆட்டம் உங்களை எங்க கொண்டுட்டு வந்து நிப்பாட்டி இருக்கு பாத்தீங்களா .....
பொறுப்பில்லாத குடிகார ஆம்பளை மட்டும் வீட்டுக்கு கேடு இல்ல .... உங்கள மாதிரி சோம்பேறி, ஊதாரி, பொறாமை எண்ணத்தோடு அடுத்தவன் குடிய கெடுக்கனும்னு நினைக்கிற பொண்ணுங்களும் வீட்டுக்கு கேடு தான் ... நல்ல வேளை என் பையன ஹாஸ்டல்ல வளர்ந்ததால தப்பிச்சான்.... இல்லன்னா அவனும் கஞ்சா கடத்தினான், குண்டு வச்சான்னு எதிலயாவது மாட்டி உங்களோட இங்க நின்னு இருப்பான் ....
(கற்பகத்தை பார்த்து) சரண் நீ பெத்த புள்ள .... (அருணாவை பார்த்து) உனக்கு அவன் அண்ணன் ..... ஆனா அந்த பாசம் கொஞ்சம் கூட இல்லாம, அவனுக்கு பொண்டாட்டி புள்ளங்க இருக்கக் கூடாதுன்னு எப்படி எல்லாம் திட்டம் போட்டீங்க....
இப்ப உங்க ரெண்டு பேருக்கு புருஷனும் இல்ல புள்ளைகளும் இல்ல.... நாம அடுத்தவங்களுக்கு என்ன நினைக்கிறோமோ அது நமக்கு வட்டியும் மொதலுமா வந்தே சேரும் .... உங்களை வெளியே எடுக்கறதுக்கு ஒருத்தனும் வர மாட்டான் ... கடைசி வரைக்கும் ஜெயில்ல இருந்து சாவுங்கடி ...."
என்றவர்,
"ஹாஸ்பிடலுக்கு போலாம் வாங்க ..." என கமரிய குரலில் ராம்சரண், ஹரிஷ் மற்றும் வீராவை ஒரு சேர பார்த்து கூறிவிட்டு காரை நோக்கி நடக்க, இளையவர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.
மருத்துவமனையில் வெள்ளைத் துணியினால் பொட்டலமாய் சுற்றப்பட்ட குழந்தையை கண்டதும் ராம்சரண் ரங்கசாமிக்கு மட்டுமல்ல வீரா ஸ்ரீப்ரியாவிற்கு கூட அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
வாழ வேண்டிய சின்னஞ்சிறு குழந்தை, விண்ணுலகம் சென்று விட்டதை எண்ணி பெரியவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, தன் அணுவைப் பகிர்ந்து கொண்டதோடு கர்ப்பவாசத்தையும் பகிர்ந்து கொண்டவன் காலமாகி விட்டான் என்பதை அறிந்து கொள்ளும் முதிர்ச்சி இல்லாமல் , குழந்தை விஜய் அந்த இடத்தையும் அங்கிருக்கும் மக்களையும் வேடிக்கை பார்த்தபடி விளையாடிக் கொண்டிருக்க,
இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவன் தன் இணையை பற்றி கேட்டால் என்ன பதில் சொல்வது என தெரியாமல் துக்கம் தொண்டையை அடைக்க,
பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்திய படி சிலையாகி நின்றிருந்தான் ராம்சரண் .
அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனை சடங்குகள் அனைத்தும் மள மளவென முடிந்ததும் யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால் அருகில் இருந்த மின் மயானத்திலேயே அந்தச் சின்னஞ்சிறு இதயத்திற்கு இறுதிச் சடங்கை தந்தை என்ற முறையில் ஹரிஷ் செய்து முடித்தான்.
இப்படி ஒரு நாளை ராம்சரண், தன் வாழ்நாளில் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.
மனைவி உணர்வற்றும் , பிறந்த குழந்தைகள் உயிருக்காகவும் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்க, தாய் தங்கை என்ற தாடகைகள் தன் மனைவியை கொல்வதற்காக போட்ட திட்டத்தில் பிடிபட்டு காவல்துறை கண்காணிப்பில் இருக்க, தன் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே ஆசை ஆசையாய் தூக்கி வளர்த்த தன் மருமகனை அக்னிக்கு தாரை வார்த்த நிலை ஏற்பட்டிருக்க என உயிரையும் உணர்வையும் கொல்லாமல் கொல்லும் அனைத்து சம்பவங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறி அவனை உருக்குலையச் செய்திருக்க,
"லஷ்மியும் என்னை விட்டு போயிட மாட்டா இல்ல டா ...." என்றான் குரல் உடைந்து வீராவிடம் பரிதவிப்போடு.
"சரண், லட்சுமிக்கு ஒன்னும் ஆகாது டா ... ஷி வில் பி ஆல் ரைட் சூன் ..."
"ராமலட்சுமி கல்யாண விஷயத்துல காமாட்சி மாத்தி பேசினதுல இருந்து, அன்னைக்கு எங்க வீட்ல வெற்றி அவ கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினது வரைக்கும் எனக்கு எல்லா உண்மையும் தெரியும்னு அவளுக்கு தெரியாது டா ... அதையெல்லாம் சொல்லி அவகிட்ட சாரி கேட்கணும்னு நெனச்சேன்...
ஆனா அவளோட ஹெல்த் கண்டிஷன், சரி இல்லாததால டெலிவரி ஆனதுக்கப்புறம் பேசலாம்னு விட்டுட்டேன் .... இப்ப டெலிவரி முடிஞ்சு போச்சு ... நான் பேசற நிலையில இருக்கேன் ஆனா கேக்குற நிலை அவ இல்ல....
அவளுக்கு நடந்த , நடந்துகிட்டு இருக்கிற எல்லா பிரச்சனைக்கும் நான் தான் டா காரணம் .... நான் சரியா இருந்திருந்தா அவளுக்கு இந்த நிலைமையே வந்திருக்காது ...
கடைசி வரைக்கும் அவகிட்ட சாரியே கேட்க முடியாம போயிடுமோன்னு பயமா இருக்குடா..... ....."
குரல் உடைந்து ராம்சரண் குலுங்கி அழ, அவன் தோளை ஆதரவாக பற்றிய வீரா,
"அடுத்த வாரம் இந்நேரத்துக்கெல்லாம் நீ லட்சுமியோட பேசிகிட்டு இருப்ப .. என் வார்த்தையை நம்பு ...."
என்றவனை பாசமாய் பார்த்தவன்,
"தேங்க்ஸ் டா .... நீ மட்டும் அந்த வழியா வரலன்னா, என் லட்சுமிய நான் உயிரோட பார்த்திருக்கவே முடியாது ...."
" நீ எனக்கு மட்டும் தேங்க்ஸ் சொன்னா போதாது .... ராங் சைடுல வண்டியை ஓட்டிக்கிட்டு வந்து என் காரை ஆக்சிடென்ட் பண்ணவன்ல இருந்து எங்கள அந்த வழியில கூட்டிட்டு வந்த டிரைவர் சமீர் வரைக்கும் நீ தேங்க்ஸ் சொல்லி ஆகணும் ....." என்றான் வீரா மென் புன்னகை பூத்து.
ஒரு வழியாய் அனைத்தும் முடிந்ததும், ரங்கசாமி ஹரிஷிடம்,
"என் பொண்ணு உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க வாழ்க்கைய கெடுத்துட்டா.... இனிமேவாவது ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழ பாருங்க... என் பேர குழந்தை என் கூடவே இருக்கட்டும் ...." என்றார் குழந்தையை சுமந்து கொண்டு.
"ப்ளீஸ் மாமா ... இவன் என் கூடவே இருக்கட்டுமே ... இத்தனை நாளா அருணா குழந்தைகளை என் கண்லயே காட்டாம வச்சிருந்தா ... இனிமேவாது என் குழந்தையோட நிம்மதியா காலத்தை கழிக்கணும்னு ஆசைப்படறேன் ....."
"உங்களுக்கு வயசு இருக்கு ... வாலிபம் இருக்கு..... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நிறைய குழந்தைகள பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழுங்க .... உங்களுக்கு எப்ப எல்லாம் இவனை பாக்கணும்னு தோணுதோ ஊட்டிக்கு கிளம்பி வந்து, பத்து நாள் தங்கி இருந்துட்டு பார்த்துட்டு போங்க ..."
என ரங்கசாமி முடிக்க, அரைகுறை மனதோடு சம்மதம் சொல்லியவன் தன் தங்கை சுகந்தியுடன் கவலை தோய்ந்த முகத்தோடு நடையை கட்டினான் .
சில மணித்துளிகளுக்குப் பிறகு, குழந்தையின் அஸ்தியை பெற்றுக்கொண்டு கனத்த இதயத்தோடு ராம் சரணும் ரங்கசாமியும் விடைபெற, வீரா தம்பதியரும் தங்கள் இல்லம் நோக்கி பயணப்பட்டார்கள்.
அவர்களுக்காக அங்கு ஒரு இனிப்பான செய்தி காத்துக் கொண்டிருப்பதையும் , அந்த சர்க்கரை செய்தியால் அவர்களின் வாழ்க்கையில் புதிதாய் பிரச்சனைகள் முளைக்கப் போவதையும் அறியாமல்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
Lakshmi sikkirama recover agi varanum... Indha punishment avanga rendu perukum pathathu priya mam... Veera ku good news ynavah irukum nu sikkirama therinjikanum pola iruku mam.. Sikkirama nxt ud podunga... Eagerly waiting..
ReplyDeleteSuper mam
ReplyDeleteawesome as always 💕💕💕💕💕💕💕
ReplyDeleteSupero superb sis. Finally criminals arrested. Lakshmi coma la irunthu varanum, pavam antha kulantha, Aruna pana thappunala chinna kulantha Bali ayiduchu. Ivangaluku ellam inum periya punishment kedakanum. Sripriya ku next twist irukoo
ReplyDelete