அத்தியாயம்-125
கார் மேட்டுப்பாளையத்தை அடைந்ததும்,
"சமீர், கொஞ்சம் காரை நிறுத்துங்க ... டீ குடிச்சிட்டு கிளம்பலாம்..." என வீரா மொழிய,
சாலையோரம் இருந்த ஒரு தேநீர் கடையில் அவன் காரை நிறுத்த, மூவரும் ஆற அமர பேசிக்கொண்டே தேநீர் பருகி விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.
சிறிது தூரம் பயணப்பட்ட பின்
"சார், அங்க பாத்தீங்களா ரோடு இரண்டா பிரியுது ... லெஃப்ட் சைட் திரும்பினா ஊருக்குள்ள போலாம் சார் .... ரைட்ல திரும்பி நேரா போனோம்னு வைங்க ரெண்டு மலை கிராமம் வரும் ... அது ஊடால போய் லெப்ட் கட் பண்ணா, நீங்க சொன்ன அயோத்தி எஸ்டேட் போற வழி வந்துடும்... அங்கிருந்து ஒரு 30 கிலோமீட்டர் அப்படியே நூல் புடிச்ச மாதிரி போனா எஸ்டேட் போய்டலாம் சார் ... உள்ளூர் காரங்க பெரும்பாலும் இந்த வழியைத்தான் பயன்படுத்துவாங்க சார் .."
"சரி ... அப்ப ரைட்லயே திரும்பிடுங்க ...."
"சில இடத்துல ரோடு ரொம்ப நல்லா இருக்கும், சில இடத்துல கொஞ்சம் குண்டும் குழியுமா இருக்கும் ... மத்தபடி யூசுவல் ரோட்டை விட இந்த வழி பார்க்க அருமையா இருக்கும் சார் ...." என்றவன் வீரா சொன்னது போலவே வலது புறம் திரும்பி, அயோத்தி எஸ்டேட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
---------------------------------------------------------------
காரின் பின் இருக்கையில் சிவகாமியோடு அமர்ந்திருந்த குழந்தை, கையில் பொம்மையை வைத்துக்கொண்டு தனக்குத் தானே பேசியபடி விளையாடிக் கொண்டே வர, முன்னிருக்கையில் சாய்ந்த அமர்ந்திருந்த லட்சுமி தனக்கு எதிரே இருந்த ரியர் வியூ மிரர் வழியாக அதனை ரசித்துப் பார்த்தபடி , மறு தினம் நடைபெறவிருக்கும் திருமண நிகழ்வுகளை குறித்து சிவகாமியிடம் உரையாடிக்கொண்டே வரும் போது அவளது குரல் கமர தொடங்க
"லஷ்மிம்மா... என்ன ஆச்சு .... " என சிவகாமி கேட்டதும், பன்னீரும் பக்கவாட்டில் திரும்பி
லட்சுமியை பார்க்க, திடீரென்று ஏற்பட்ட குமட்டலால் அவள் தன் வாயை பொத்திக் கொண்டிருப்பது தெரிய வர , உடனே வண்டியை ஓரம் கட்டி விட்டு, ஓட்டுனர் இருக்கையில் இருந்து வேகமாக இறங்கி வந்து மறுபக்க கார் கதவினை அவன் திறந்துவிட, துள்ளி குதிக்காத குறையாய் வண்டியில் இருந்து இறங்கியவள் சாலையோரம் அடர்ந்திருந்த மரங்களின் பக்கம் ஒதுங்கினாள்.
அவள் வண்டியிலிருந்து துரிதமாக இறங்குவதை கண்ட சிவகாமி , தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு உடன் தானும் இறங்கி விருவிருவென நடந்து அவள் நின்றிருந்த இடத்திற்குச் செல்ல, அதற்குள் அங்கிருந்த மரத்தடியில் மீண்டும் அவள் வாந்தியாய் எடுத்து தள்ளினாள்.
இப்பயணத்திற்கு முன்பே ஏற்பட்ட குமட்டலால் உண்ட உணவு பெரும்பாலும் வெளியேறி இருந்ததால், இம்முறை வெறும் தண்ணீரும் லேசான கசண்டுமே வெளியேறி அவளை வெகுவாக களைப்புறச் செய்ய, அப்படியே அங்கிருந்த மரத்திண்டின் மேல் சாய்ந்திருந்தவளின் கரம் பற்றி,
"லட்சுமிம்மா, இந்தாங்க ... தண்ணி குடிங்க ...." என்றார் சிவகாமி வாஞ்சையாய்.
அவள் தண்ணீரை பருகி, முகம் துடைத்து ஓரளவிற்கு புத்துணர்வு பெற்றதும் கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து காரின் முன் இருக்கையில் அமரச் செய்துவிட்டு,
"ஒரு நிமிஷம் ம்மா ....இதோ வந்துடறேன் ..."
என்றவர் காரின் டிக்கியை திறந்து, அதிலிருந்த பயணப் பொதிகளில் இருந்து, ஒரு சிறு மஞ்சள் பையினை எடுத்துக் வந்து ,
"நேத்து சிவன் கோயிலுக்கு போய் அர்ச்சனை செஞ்சேன் .... " என சொல்லிக்கொண்டே வன்னி இலைகள், சிறிய சம்பங்கி மாலை, கொஞ்சம் மரிக்கொழுந்து ஆகியவை இருந்த பையில் இருந்து எலுமிச்சம் பழத்தை தேடி எடுத்து அவளிடம் கொடுத்து
"இத மோந்துக்குங்க .... வாந்தி வராது ..." என்றவர் உடன் வன்னி இலைகளை அவள் கையில் திணித்து
"இந்த இலைகளை கொஞ்சம் வாயில போட்டு அதக்கிக்குங்கம்மா .... தல சுத்தல் நின்னு போய் தெம்பு வந்துடும்.. ..." என்றார் அக்கறையாய்.
அவர் கொடுத்த வன்னி இலைகளை கண்ணுற்ற லட்சுமிக்கு, உடனே தேயிலைத் தோட்டத்தில் அந்தப் பாட்டி சொன்ன ஆருடம் ஞாபகத்துக்கு வர, ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள் வேகமாக பரவ,
"இந்த பைய அப்படியே குடுங்க.... வச்சிக்கறேன் ..." என வாங்கிக் கொண்டவள் எலுமிச்சை பழத்தை முகர்ந்து கொண்டே, கொஞ்சம் வன்னி இலைகளை வாயில் போட்டு லேசாக மென்று விட்டு கன்னப்பகுதியில் அடக்கிக் கொள்ள
"வண்டி எடுக்கவாம்மா ...." என்றான் பன்னீர் பணிவாய்.
"கொஞ்சம் மெதுவா ஓட்டுங்கண்ணே .... ஏற்கனவே குமட்டல் அதிகமா இருக்கு ...
மலைப்பாதை வேற ... வேக வேகமா வளைஞ்சு போன இன்னும் அதிகமாயிடும் ...."
"40 , 50 கிலோ மீட்டர் ஸ்பீட்ல போன வண்டி இனிமே 30 , 35 கிலோமீட்டர் ஸ்பீட்ல தான் போவும்... சரியா ... திரும்பவும் குமட்டினாலும் சொல்லும்மா... வண்டிய நிப்பாட்டறேன் ...." என தன்மையாக அவன் மொழிய,
"சரிங்கண்ணா ...." என்ற போது தான், குழந்தை சிவகாமியின் மடியில் உறங்க தொடங்கி இருப்பது தெரிய வர,
"பாப்பா, தூங்கிட்டாளா ...." என்றாள் திரும்பிப் பார்த்து.
"ஆமாம்மா தூங்கிட்டா..."
"அவளை அப்படியே பேபி சீட்ல சாய்ச்சு உட்கார வச்சு பெல்ட் போட்டுடுங்க ...."
என சொன்னதும் , சிவகாமி அடுத்த கணமே செய்து முடிக்க, பெருமூச்சு விட்டவள் , கையில் இருந்த எலுமிச்சையை நுகர்ந்தபடி அப்படியே கண்களை மூடி லேசா கண்ணயர்ந்தாள்.
--------------------------------------------------------------++
அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வேகமாக சென்று மின்தூக்கியில் புகுந்து கொண்டவன் , அது பணி தளத்தை அடைந்தும் , புயலென வெளியேறி தன் அலுவலகப் பகுதிக்குள் நுழைய, அவனது வரவுக்காகவே வழி மேல் விழி வைத்து காத்திருந்த மஹிக்கா, பட்டு வேட்டி சட்டையில், நெற்றியில் கீற்றாய் திருநீறு, குங்குமம் சகிதமாக கம்பீரமாக நடந்து வந்தவனை கண்டு, ஒரு கணம் இமைக்க மறந்து உறைந்து நின்றாள்.
மணக்கோலத்தில் பார்ப்பது போல், அவனைப் பட்டு வேட்டி சட்டையில் பார்த்ததும், அவன் மேலிருந்த வன்மம், கோபம் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு ஆயிரம் மடங்கு மோகங்கள் அவளுள் ஊற்றெடுக்க, அவனோ அவளை மட்டுமல்ல, அங்கிருந்த எவரையுமே கண்டுகொள்ளாமல் நேராக, தன் அலுவலக அறையின் பயோமெட்ரிக் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரில் தன் விரல்களை பதித்து அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, அவனை துரிதமாக பின் தொடர்ந்த அவனுடைய செயலாளர் சங்கர்,
" சார்.... இப்பதான் சந்தோஷ் சார் போன் பண்ணாரு .... நீங்க வந்ததும் உங்ககிட்ட ..."
என்றவனின் பேச்சை ஒற்றைக்கரம் உயர்த்தி தடுத்தவன், அந்த அறையின் கடைசி மேஜையின் மேல் இருந்த சந்தோஷின் மடிக்கணினியை எடுத்து வர சொல்லி கடவுச்சொல்லை போட்டு திறந்து, அனுமதி கொடுக்க வேண்டிய தரவுகளுக்கு துரிதமாக அனுமதி கொடுத்துவிட்டு,
"எல்லா அப்ரூவல்சும் கொடுத்துட்டேன் ... சப்போட்டிங் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இந்த ஃபோல்டர்ல இருக்கு .... இதை யூஸ் பண்ணி நாளைக்கு சப்மிஷனுக்கான கால்குலேஷன்ஸ மஹிக்காவ ப்ரிப்பேர் பண்ண சொல்லுங்க ..." என முடித்தான் அவசரமாய்.
" ஓகே சார் .... "
"சங்கர் ... நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே ... என்ன ..."
"நீங்க வந்ததும், ப்ராஜெக்ட் டீலிங் அப்ரூவல்ஸ் பத்தி சந்தோஷ் சார் ஞாபக படுத்த சொன்னாரு .... ஆனா நான் சொல்றதுக்குள்ள நீங்களே எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டீங்க ..."
" குட் .... ஆல் டன்... ஐ அம் லிவிங் நவ்... ... " என விடை பெற்றவனின், மனமெங்கும் சற்று முன் அவன் மனையாளின் முகத்தில் தென்பட்ட அச்சமே வியாபித்திருக்க, தனித்த காட்டில் தன்னவளை தனியே விட்டு விட்டு வந்தது போலான ஒரு கலக்கம் பிரட்டி எடுக்க, ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனை அங்கிருந்து அடித்து விரட்டாத குறையாய் உந்த, மின்னல் வேகத்தில் மின் தூக்கியை நோக்கி நகர்ந்தவனை,
" ராம்சரண் ...." என்ற மஹிக்காவின் குரல் தடுத்து நிறுத்தியது.
" என்ன ...." என்றான் திரும்பி வேண்டா வெறுப்பாய் .
" 10% மார்ஜின 15% ஆ மாத்தினா ...." என்றவளின் பேச்சை இடைவெட்டி
"லிசன், உனக்கு என்ன டவுட்ஸ் இருந்தாலும்,
சந்தோஷுக்கு போன் பண்ணி கேளு ... ஹி வில் ஹெல்ப் யூ அவுட் .... ஐ ஹவ் டு கோ நவ் ...." என படபடத்துவிட்டு, அவளது பதிலுக்கு காத்திராமல் விடைபெற்றவனின் மீதான வன்மத்தை காட்டிலும் , லட்சுமியின் மீதான வன்மம் அவளுள் விஸ்வரூபமாய் கொழுந்து விட்டெறிய ,
போ போ ... பொண்டாட்டிய பாக்கத்தானே இந்த ஓட்டம் ஓடற ... ஓடு... என்ன ஓட்டம் ஓடினாலும் அவ பொணத்தை தான் உன்னால பார்க்க முடியும் .... என்ன ஒன்னு ... இந்நேரம் நீயும் அவளோடவே போய் சேர்ந்திருக்கணும்.... .... நான் தான் சந்தோஷுக்கு போன் பண்ணி ப்ராஜெக்ட் சப்மிஷனுக்காக, ஆபீஸ் ரூம்ல இருக்கிற அவரோட லேப்டாப் வேணும்னு சொல்லி உன்னை இங்க வரவழைச்சு காப்பாத்திட்டேன் ....
நாளைக்கு மதியம் தான் ப்ராஜெக்ட் சப்மிஷன்... நாளைக்கு காலைல சந்தோஷ் வந்ததுக்கு அப்புறம், அவர்கிட்ட இருந்து அவரோட லேப்டாப்பை வாங்கி ரெண்டு மணி நேரத்துல மார்ஜின் ரிப்போட்ட என்னால பக்கவா பிரிப்பேர் பண்ண முடியும் .... ஆனா அப்படி செய்யாம, இப்ப உன்ன இங்க வரவழைச்சதுக்கு காரணம் , நீயும் லட்சுமியோட சாகக்கூடாதுங்கிறதுகாகத்தான் ...
அப்படி செஞ்சது உன் மேல இருக்கிற ஆசையால நினைச்சிக்காத ....
உன் மேல இருக்கிற ஆசையை விட, உன் மேலேயும் உன் பொண்டாட்டி மேலயும் எனக்கு வன்மம் அதிகம் ...
உன் பொண்டாட்டி கூடவே உனக்கு சாவு வந்தா அது உனக்கு பரம சந்தோஷம்னு எனக்கு நல்லாவே தெரியும் .... அதான் சாவுல கூட நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சாகக்கூடாதுனு தான், இப்படி ஒரு ஏற்பாட்ட பண்னேன்....
உன் பொண்டாட்டி லட்சுமி துடிதுடிச்சு செத்திருக்கணும் ... அத பார்த்து நீ ரத்த கண்ணீர் வடிச்சு கதறி துடிக்கணும்.... அத நான் ரசிக்கணும்... " என்று சென்றவனின் முதுகை வெறித்தபடி அவள் தன் மனதிற்குள் வகைத்தொகை இல்லாமல் வக்கிரத்தை கொட்டிக் கொண்டிருக்கும் போது மின்தூக்கிக்குள் நுழைய எத்தனித்தவன்,
எதேச்சையாக பக்கவாட்டில் திரும்பி பார்க்க , அப்போதும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவளது பார்வையில் தெரிந்த கனலும், முகத்தில் தெரிந்த குரூரமும் , ஒரு கணம் அவனை யோசிக்க வைக்க, அதற்குள் அவன் பார்வையை உள்வாங்கி கொண்டவள்
சடுதியில் முகத்தில் மென்மையை கொண்டு வந்து இயல்பாய் புன்னகைக்க , அதனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி மின் தூக்கிக்குள் நுழைந்து கொண்டான் நாயகன்.
அவன் சென்ற இரண்டாவது நிமிடம், வினோத்திடமிருந்து ( எஸ்டேட் மேலாளர்) அவளுக்கு அழைப்பு வந்தது.
" என்ன வந்துட்டு போயிட்டானா .... "
"ம்ம்ம்... இப்ப தான் போனான்.... சரி சொல்லுங்க ... பிளான் சக்சஸ் தானே ...." மஹிக்கா உற்சாகமாய் வினவ,
"ம்ம்ம்... இப்போதைக்கு சக்சஸ் தான் .... லட்சுமி ட்ராவல் பண்ணின காரை அடிச்சு தூக்கியாச்சு .... மத்ததெல்லாம் அப்புறம்தான் தெரிய வரும் .... ஆமா தெரியாம தான் கேட்கிறேன் ... அவன் தங்கச்சி அருணாவுக்கு இல்லாத அக்கறை, உங்களுக்கு ஏன் அந்த சரண் மேல .... இப்ப கொஞ்ச நாளா லட்சுமி எங்கேயாச்சும் தனியா கார்ல போனா, அந்த காரை தூக்கிடுங்கன்னு தான் அருணா சொல்லிக்கிட்டு இருந்தது ... நானும் அதுக்கு ஏத்த மாதிரி ஆளை ஏற்பாடு செஞ்சி லட்சுமி தனியா எங்கேயாச்சும் வெளிய போகுதான்னு வேவு பாத்துக்கிட்டு இருந்தேன் .... ஆனா நேத்து ராத்திரி திடீர்னு அருணா போன் பண்ணி, லட்சுமி என் அண்ணன் கூடவோ , அப்பா கூடவோ யார் கூட போனாலும், அந்தக் காரை போட்டு தள்ளிடுங்க.... எப்ப அவங்க என்னை நடுத்தெருவுல நிறுத்தி பாக்கணும்னு ஆசைப்பட்டுட்டாங்களோ ..... இனிமே அந்த அப்பனும் அண்ணனும் உயிரோடிருந்து எனக்கு பிரயோஜனம் இல்லனு சொல்லிடுச்சு.... .... அதான் திடீர்னு இப்படி ஒரு பிளான் போட்டு லட்சுமிய தூக்கிட்டேன்...
இதுல தேவையில்லாம சொதப்பினது நீங்க தான் .... ராம் சரணை சந்தோஷ் மூலமா நீங்க ஆபீசுக்கு கூப்பிடாம இருந்திருந்தா , இந்நேரம் அவனும் லட்சுமியோட போய் சேர்ந்திருப்பான் .... மொத்தமா எல்லா வேலையும் முடிச்சிருக்கும் ...."
என வினோத் எதிர் முனையில் குமுற,
"நான் ஒன்னும் அவன் மேல இருக்க ஆசைல அவனை காப்பாத்தல... அவன் என்னை பல முறை உதாசீனபடுத்தி இருக்கான் ... அதுக்கு அவன் அனுபவிக்க வேணாம் ... அதுக்காகத்தான் .... அவன் பொண்டாட்டி செத்து அவன் உயிரோடு இருக்கிறது தான் ... அவனுக்கு நான் கொடுக்கிற பெரிய தண்டனை... சரி லாரி மலையை விட்டு இறங்கிடுச்சா ..."
"இல்ல ... இன்னும் ரெண்டு செக்போஸ்ட் இருக்குதாம்.... அதை எந்த தடங்கலும் இல்லாம கடந்துட்டா, அப்புறம் பிரச்சனையே இல்லன்னு இப்ப தான் சொன்னாங்க ... எனக்கு இப்ப ஒரு முக்கிய வேலை இருக்கு அப்புறம் கூப்பிடறேன்..."
என அழைப்பை துண்டித்தான் வினோத்.
---------------------------------------------------—----------
கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு முன்பு நடந்தவைகள் ...
லேசாக கண் அயர்ந்திருந்த லட்சுமியிடம் அசைவு தெரிந்ததும் ,
"இப்ப குமட்டல் எல்லாம் பரவாயில்லையாம்மா...."
சிவகாமி வினவ ,
"எவ்வளவோ பரவாயில்லக்கா .... தல சுத்தல், குமட்டல் எல்லாம் சுத்தமா நின்னுடுச்சு .... " என்றவள், பன்னீரிடம்
" உங்க வைஃப், குழந்தைங்கள எல்லாம் நீங்க போய் கூட்டிகிட்டு வரணுமா ... இல்ல அவங்களே வந்துடுவாங்களா ..." என கேட்க,
"அவிங்க எல்லாம், காலையிலயே எஸ்டேட் பங்களாவுக்கு போய்ட்டாங்கம்மா .... வாழை மரம் கட்ற வேலையிலிருந்து எல்லா வேலையும் , என் மச்சானும் சம்சாரமும் தான் செஞ்சுக்கினு இருக்காங்க ...."
என பக்கவாட்டில் திரும்பி அவளை பார்த்து புன்னகைத்த படி, அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வளைவிலிருந்து திரும்பிய லாரி ஒன்று அதிவேகமாய் அவர்களது காரை நோக்கி வர, அதன் வேகத்தையும் திசையையும் வைத்து ஏதோ சரியில்லை என்று அனுமானித்தவன் துரிதமாக செயல்பட்டு காரை இடது புறமாக ஓரம் கட்ட முயல , ஆனால் வந்த லாரியோ மட்டுப்படாத வேகத்தோடு காரின் வலப்புறத்தை உரசுவது போல் அதிரடியாக மோதிவிட்டுச் செல்ல, காரின் முன் பக்க கண்ணாடி, தூள் தூளாக உடைந்து சிதறியதோடு, காரும் நிலை குலைந்து போய், தாழ்வான பகுதிக்கு தடம் மாறி போனது.
பயன்பாட்டு பாதையை விட்டு வழி மாறிய கார், கரடு முரடான சற்று குறுகலான பாதையில் வேகத்தடைக்கு கட்டுப்படாமல்
பயணித்துக் கொண்டே சென்று, கடைசியில் அங்கிருந்த பெரும் பாறையின் மீது மிகுந்த அதிர்வோடு மோதி நின்றது.
பெரும் வேகம் இல்லை என்றாலும் லட்சுமி அமர்ந்திருந்த பக்கம் மோதியதால் நில நடுக்கம் போலான அந்த அதிர்வானது சீட் பெல்ட் அணிந்திருந்த லட்சுமியின் பெருத்த வயிற்றை ஏறக்குறைய உலுக்கியது போல் தூக்கி போட்டு நிறுத்த , அந்த விதிர்ப்பு ஏற்படுத்திய வீரியத்தால் அடுத்த கணமே அவளது பனிக்குடம் உடைந்து போக, பயத்திலும் வலியிலும் சுருண்டு போனாள் பெண் .
கண்ணாடி சில்லுகள் ஏற்படுத்திய காயத்தோடு, உயிரை உருக்கும் வயிற்று வலியும் இணைந்து கொண்டு பன்மடங்காகி, அவளுக்கு உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை வெகுவாக கூட்ட, கத்துவதற்கு கூட முடியாமல் நா எழாமல் போக, உடலின் ஒரு பகுதி முற்றிலும் செயலழக்க , கை கால்கள் அசைய முடியாத நிலையில் கண்கள் இருட்டிக் கொண்டு வர, அப்படியே மயங்கி சரிந்தாள் பாவை.
பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்ட உயர்தரமான கார் என்பதால், லாரி மோதிய மறுக்கணமே விபத்துக்கான உணரிகள்( sensors) விழித்துக் கொண்டு ஏர் பேக்குகள் முன், பின், பக்கவாட்டு பகுதியில் கண நேரத்தில்
திறந்து கொண்டதால், காரில் பயணித்த மற்று மூவரும் சொற்ப காயங்களுடன் அதிர்ச்சியின் காரணமாக மயக்க நிலைக்கு ஆட்பட்டனரே ஒழிய , மற்றபடி லட்சுமியை போல் அவர்களுக்கு பெரிதான பாதிப்புகள் ஏதுமில்லை.
குழந்தையை அதற்கான இருக்கையில் அமர்த்தி சீட் பெல்ட் அணிவித்திருந்ததால்,
விபத்தின் போது ஏற்பட்ட அதிர்வு குழந்தையின் குதிக்கால்களை மட்டும் லேசாக பதம் பார்த்திருக்க, சிவகாமிக்கு இடது முழங்கால் முன் இருக்கையில் மோதியதால் பெருத்த காயம் ஏற்பட்டிருக்க , பன்னீர் தன் தலையோடு உடலையும் குறுக்கிக் குனிந்து கொண்டதால், அவனுக்கு கை முட்டி மற்றும் கால் முட்டியில் அடி , தோள் பகுதிகளில் கண்ணாடி கீறல்களால் காயம் ஏற்பட்டிருக்க, என மூவரும் சொற்ப காயத்தோடு தப்பித்தனர் .
லட்சுமிக்கு ஏற்பட்ட குமட்டல் காரணமாக, காரை மிகக் குறைவான வேகத்தில் பன்னீர் இயக்கியதால் நேருக்கு நேர் மோதி உண்டாகும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருந்ததோடு, விபத்து ஏற்படுவதற்கு முன்பு, வழக்கமாக இருக்கும் தலை சுற்றல், களைப்பு போன்ற உபாதைகள் லட்சுமிக்கு இல்லாதிருந்ததால், லாரி உரசுவது போல் மோதி விட்டுச் செல்லும் போதே, விபரீதத்தை உணர்ந்தவள் சீட் பெல்ட் அணிந்திருந்த நிலையிலும் உள்ளடங்க சாய்ந்தமர்ந்து தன் பெருத்த வயிற்றை கரங்களால் பற்றிக்கொண்டு காரின் டேஷ் போர்டில் மோதாமல் பாதுகாத்து வந்த நிலையில், கார் பாறையில் மோதி நின்ற அதிர்வில் அவளது பனிக்குடம் உடைந்து போக, வேதனையில் சுயம் இழந்து போனாள் பேதை.
சில மணித்துளிகள் அங்கு மயான அமைதி நிலவ, பிறகு குழந்தையின் குரல் மெல்ல சிணுங்களாக தொடங்கி அழுகையாக மாற, அந்த சப்தத்தில் அருகில் மயக்கமுற்றிருந்த சிவகாமிக்கு மெல்ல விழிப்பு வந்தது.
சுய உணர்ந்த சிவகாமி தட்டித் தடுமாறி அழும் குழந்தையின் தலைக்கோதி சமாதானம் செய்தபடி மயக்கமுற்று இருந்த லட்சுமியை பார்த்து
"லட்சுமிம்மா ...... என்ன ஆச்சும்மா ..." என பதற அவரது குரலைக் கேட்டு சிரமப்பட்டு கண் விழித்த பன்னீர், லட்சுமி இருந்த நிலையை பார்த்து ,
"பனிக்குடம் உடைஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன் சிவகாமி .... மயக்கத்துல போய்ட்டாங்க ..."
என்றான் பதற்றத்தோடு.
விடாமல் அழும் குழந்தையை அள்ளிக் கொண்டு , கலங்கிய படி வெகு சிரமப்பட்டு கார் கதவை திறந்து கொண்டு சிவகாமி இறங்க, அதற்குள் பன்னீரும் கண்ணாடி சில்லுகள் கை கால்களை கிழித்த நிலையில், காரில் இருந்து இறங்கி வந்து லட்சுமியின் பக்க கார் கதவை திறக்க முயன்று கொண்டிருக்கும் போது , வீராவின் கார் அந்த வழியே பயணிக்க,
" சார்... அதோ பாருங்க ஏதோ ஆக்சிடென்ட் போல .... குழந்தை அழுவுற சத்தம் கேக்குது ..." என வீராவின் கார் ஓட்டுநர் சமீர் மொழிய,
" ஆமா..... வண்டியை நிறுத்துங்க ... என்னன்னு பார்ப்போம் ...."
வீரா உரைத்ததும், உடனிருந்த அவன் மனைவி ஸ்ரீயும் பதட்டத்தோடு காரை விட்டிறங்கி அவர்களோடு நடந்தாள்.
"சார், ஆக்சிடென்ட் தான் போல ... இப்ப தான் நடந்திருக்கு ... கொஞ்ச நேரத்துக்கு முந்தி நாம திரும்ப சொல்ல ஒரு லாரி வேகமா போச்சு .... பாத்தீங்க இல்ல .... அவனுங்க தான் இதை செஞ்சிருக்கணும்னு தோணுது ...பொதுவா
இந்த பக்கம் அவ்ளோ வேகமா யாரும் போவ மாட்டாங்க சார் .... " சொல்லிக் கொண்டே சமீர் வீராவின் வேகத்திற்கு ஏற்ப பீடு நடையிட்டு சம்பவம் நடத்த இடத்தை அடைய, பன்னீர் மற்றும் சிவகாமி அழும் குழந்தையோடு கார் கதவை திறக்க முயற்சித்துக் கொண்டிருப்பது தெரியவர, உடனே இருவரும் களத்தில் இறங்கி உதவ முயன்றனர்.
மயங்கி சரிந்திருந்த லட்சுமியை அருகில் கண்டதும்,
" ஏய்.... லக்ஷ்மி ... " என்று வீரா பதறியதும்,
" சார் இவங்களை தெரியுமா ..." சமீர் கேட்க
"என் ஃப்ரெண்ட் சரணோட வைஃப் ... இவங்க தங்கச்சிக்கு தான் நாளைக்கு அயோத்தி எஸ்டேட்ல கல்யாணம் ......"
என்றவன், சிவகாமி மற்றும் பன்னீரை பார்த்து நடந்ததை விசாரிக்க, அவர்கள் ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டே இருக்க அதற்குள் இரண்டு ஆண்களுமாய் சேர்ந்து கதவை உடைத்து, லட்சுமியை தூக்கி வந்து வெளியே கிடத்தினர்.
மயக்கமுற்று இருந்தவளின் புடவை முழுவதும் ரத்தமும் நீருமாய் தோய்ந்து காணப்பட, உடனே மருத்துவமனையை தொடர்பு கொண்டு அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த வீரா, காவல்துறைக்கும் தொடர்பு கொண்டு தகவல் சொல்லி முடிக்க
"இங்க ரெண்டு செக்போஸ்ட் இருக்கு சார் .... எப்படியும் போலீஸ் ஆள புடிச்சிடுவாங்க. ..."
என சமீர் சொல்லிக் கொண்டிருக்கும் போது , அந்த வழியாக ஒரு கார் பயணிக்க, அதன் முன் பக்க கண்ணாடியில் 'டாக்டர்' என்ற
ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க, அதனை கவனித்த ஸ்ரீ, வேகமாக ஓடிச் சென்று காரை நிறுத்துமாறு சைகை செய்தாள்.
அவர்களது நல்ல நேரம், அந்தக் கார் நிறுத்தப்பட்டு அதிலிருந்து ஒரு தம்பதியர் இறங்கினர்.
கணவன் மனைவி இருவருமே மருத்துவர்கள்.
அதில் அந்த பெண்மணி மகப்பேறு மருத்துவர் என்பதால், தன்னிடம் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து துரிதமாக லட்சுமியை பரிசோதித்து விட்டு,
"பிபி ஹெவியா இருக்கு.... பிபி ஸ்ட்ரோக் மாதிரி தெரியுது .... பனிகுடம் உடைஞ்சு போச்சு ..... இம்மிடியட்டா ஆப்பரேட் பண்ணி குழந்தைய வெளியே எடுத்தாகணும் .... லக்கிலி ஸ்டொமக்ல எந்த இஞ்சுரியும் இல்ல.... ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டீங்களா ..." தன்னாலான முதலுதவியை செய்து கொண்டே அவர் கேள்வி எழுப்ப
"சொல்லியாச்சு டாக்டர் ..." என்ற வீரா, ராம்
சரணை தொடர்பு கொண்டான் .
" சரண் ,எங்கடா இருக்க ..."
" நீ எங்க இருக்க வீரா.... கிளம்பிட்டியா ..."
" நான் சொல்ல போற விஷயத்தை பொறுமையா கேளு, டென்ஷன் ஆகாத ..."
என்றவன் நடந்த அனைத்தையும், மேம்போக்காக சொல்லி முடித்து,
"ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு பண்ணிட்டேன்... ஆன் த வேல இருக்கு ... போலீஸ்க்கும் கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு .... இங்க ஒரு டாக்டர் ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்காங்க.... ... லட்சுமி ஈஸ் ஜஸ்ட் அன்கான்சியஸ் .... மத்தபடி அவ நல்லா தான் இருக்கா ... ஏதோ பிபி பிரச்சனைன்னு டாக்டர் சொல்றாங்க ... பனிக்குடம் உடைஞ்சு போச்சாம் ...."
எப்படி சொல்வது என தெரியாமல் , நடந்ததை மென்று முழுங்கி அவன் சொல்லிக் கொண்டே செல்ல, எதிர்முனையில் பலத்த குரல் எழுப்பி துடித்து அழுதான் ராம்சரண் .
"சரண், கண்ட்ரோல் யுவர் செல்ப் .... அழறதுக்கு இது நேரமில்ல... நீ சீக்கிரம் வா.... ஜாக்கிரதையா வா ..."
" ச...சரிடா ..... என் குழந்தை ...."
"குழந்தை நல்லா இருக்கா .... அழுதுகிட்டு இருக்கா ..."
"இதோ வந்துடறேன் டா ..." என அழைப்பை துண்டித்தவன், துரிதமாக புறப்பட்டான்.
ராம்சரண் அங்கு வந்து சேரவும், ஆம்புலன்ஸ் வந்து நிற்கவும் சரியாக இருக்க, அதற்கு மேல் நடந்ததெல்லாம் மின்னல் வேகம் தான்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லட்சுமி அனுமதிக்கப்பட்டு, மருத்துவர் குழு சிகிச்சையை தொடங்கியதும், தன் தந்தையை அழைத்து ராம்சரண் தகவல் சொல்ல, ரங்கசாமி மூலம் விஷயத்தை அறிந்து கொண்டு, லட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு ராமலட்சுமி மற்றும் ஸ்ரீனி தங்கள் குடும்பத்தாரோடு பதறியபடி வந்து சேர,
ஸ்ரீனியின் தமக்கை சுமித்ரா மகப்பேறு மருத்துவர் என்பதால், உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள மருத்துவர் குழுவோடு அவசர சிகிச்சை பிரிவில் இணைந்து கொண்டாள்.
ரங்கசாமிக்கு 100% இது அருணாவின் வேலை என்று புரிந்து போக, ஆதாரத்துடன் அவளை சிக்க வைக்க, உடனே தன் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறைக்கு அவர் அழுத்தம் கொடுக்க, அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே இரண்டாவது செக் போஸ்டிலேயே காவல்துறையினரால் அந்த லாரி மடக்கி பிடிக்கப்பட்டது.
லாரி ஓட்டுநர்களை கைது செய்து விசாரணையை தொடங்கியதும், செய்தி ரங்கசாமிக்கு தெரிவிக்கப்பட , உடனே அவர்
மனமொடிந்து கண் கலங்கிய நிலையில் இலக்கின்றி அமர்ந்திருந்த மகனிடம்,
" சரண் என்கூட வா ..... போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்துடலாம் ...."
என சன்னமாக மொழிய, அவனோ அவரை உக்கிரமாய் உறுத்து நோக்க
"இதெல்லாம் அருணா வேலையா தான் இருக்கும் .... அவளையும் கற்பகத்தையும் சும்மா விடக்கூடாது ...." என அவர் குமுற,
"லஷ்மிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு .... போலீஸ் கோர்ட்டுன்னு எல்லாம் பாத்துட்டு இருக்க மாட்டேன் .... அருணாவையும் கற்பகத்தையும் என் கையாலயே வெட்டி பொதைச்சிடுவேன்...... ...."
அவன் கர்ஜிக்க ,
"பொறுமையா இரு சரண் ... இதுல வேற யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா .... லட்சுமிக்கு ட்ரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு... அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்துடலாம் வா...."
என ரங்கசாமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அதனைக் கேட்டுக் கொண்டே வந்த வீரா,
"அங்கிள், நானும் உங்க கூட வரேன் ... நான் ஸ்பாட்ல இருந்ததால, ஏதாவது தேவைன்னா சொல்ல வசதியா இருக்கும் ..."
என அவன் முடிக்க, மூவரும் ஒரு வழியாக காவல் நிலையத்திற்கு கிளம்பினர்.
அப்போது சிவகாமி மற்றும் பன்னீர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க, குழந்தையின் பாதங்களுக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அதனை கையில் வைத்திருந்த ஸ்ரீயிடம் விஷயத்தை சொல்லி விட்டு வீரா கிளம்பும் போது , சமீர் எதிர்ப்பட,
"ரொம்ப தேங்க்ஸ் சமீர் ..... நீங்க மட்டும் ஷார்ட் கட் ரூட்ல வரலைன்னா, லஷ்மியை காப்பாத்திருக்கவே முடியாது ...."
" சில பேரு ஊட்டிய சுத்தி பார்க்க வருவாங்க..... ஆனா நீங்க அயோத்தி ஸ்டேட்ன்னு சொன்னதால அந்த வழி ஈஸியா இருக்கும் அந்த வழியில வந்தேன் சார்... மத்தபடி நான் ஒன்னும் பெருசா பண்ணல ..."
" அப்படியெல்லாம் சொல்லாதீங்க ... எத்தனை பேருக்கு இந்த காலத்துல மனிதாபிமானம் இருக்கு .... ரோட்ல யார் அடிபட்டு இருந்தா எனக்கென்னனு போற காலம் இது சமீர் .... "
"மனுஷனுக்கு மனுஷன் இதை கூட செய்யலன்னா அப்புறம், வாழற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்ல சார் ....
உசேன் பாய் கிளம்பும் போதே உங்க அப்பாவும் அவரும் ரொம்ப வருஷம் தோஸ்துன்னு சொல்லி, பொறுமையா அவங்களுக்கு எங்க போகணுமோ அங்க கொண்டு போய் விட்டுட்டு வானு சொல்லி தான் அனுப்பினாரு..."
" உசேன் பாயை கேட்டதா சொல்லுங்க ..."
என்றவன் பயணத்திற்கான பணத்தைக் காட்டிலும் அதிகமான பணத்தை கொடுக்க, சமீர் மறுக்க, ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து நன்றி கூறி அனுப்பிவிட்டு, ரங்கசாமி ராம்சரணோடு
காவல் நிலையத்திற்கு பயணப்பட்டான்.
அதற்குள் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வலி தாங்காமல், எஸ்டேட் மேலாளர் வினோத் சொல்லி தான் செய்தோம் என அந்த இரண்டு ஓட்டுநர்கள் வாக்குமூலம் அளிக்க, உடன் அவர்கள் கடைசியாக கைபேசியில் வினோத்தை தொடர்பு கொண்டிருப்பதும் தெரிய வர, உடனே காவல்துறையினர் அவர்களது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து
வினோத்தை தேடி விரைந்தனர்.
அவனோ இயல்பாக தன் வீட்டு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, அப்போது காவல்துறை வாகனத்தில் இரு காவல்துறையினர் அங்கு வந்து இறங்க, அவர்களைக் கண்டதும், உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் அதனை மறைத்தபடி தன் பணியில் மூழ்கி இருப்பது போல் அவன் பாசாங்கு செய்ய
"நீங்க தானே வினோத் ...."
கேட்டிற்கு வெளியே நின்று ஒரு காவல்துறை அதிகாரி விசாரிக்க,
" ஆமா ...."
" கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வர முடியுமா ..."
" ஸ்டேஷனுக்கா ஏன் ...."
" உங்க பங்காளிங்க சிக்கி இருக்காங்க ... சீட்டு விளையாட ஒரு கை குறையுதாம்.... உங்க பேர சொன்னாங்க ... அதான் கூட்டிக்கிட்டு போலாம்னு வந்தோம் ..."
"என்ன விளையாடறீங்களா... நான் யார் தெரியுமா ...."
" ரொம்ப அலம்பாத ... அரெஸ்ட் வாரண்ட் இருக்குது .... வரலன்னா, 10 பேர் பார்க்க நாலு போடு போட்டு இழுத்துக்கிட்டு போவேன் ... பரவாயில்லையா ..."
அதற்கு மேல் தாமதித்தால் அக்கம் பக்கத்தினரின் பார்வையில் பட்டு, பேசு பொருளாகி விடுவோம் என்று அஞ்சி, மனைவியிடம் சொல்லிவிட்டு, அதிகாரிகளோடு காவல் நிலையத்திற்கு பயணப்பட்டான் வினோத்.
காவல் நிலையத்தில் , உயர் அதிகாரியோடு ரங்கசாமி உரையாடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவனிடம், லாரி ஓட்டுனர்கள் கொடுத்த வாக்குமூலத்தைக் காட்டி காவல்துறையினர் விசாரணையில் இறங்க,
"இவங்க எல்லாம் யாருன்னே எனக்கு தெரியாது .... இவங்க சொல்றதெல்லாம் பொய்.... ...நான் எதுக்காக அயோத்தி எஸ்டேட் ஓனரோட மருமகள, ஆள வச்சு தூக்கணும் ... நான் அவங்க எஸ்டேட்ட விட்டு வந்தே கிட்டத்தட்ட 6 மாசத்துக்கு மேல ஆகுதே .... " என மறுத்தான் அவசரமாக.
"நீ அயோத்தி எஸ்டேட்ல மேனேஜரா இருக்கும் போது லட்சக்கணக்குல பணத்தை கையாடிட்டதால தான , அதோட ஓனர் ரங்கசாமி உன்னை வேலையை விட்டு தூக்கினாரு ..."
" சுத்த பொய் ... ஆதாரம் இருந்தா காட்டுங்க ..."
" நீ கடந்த ரெண்டு வருஷத்துல எங்கெங்கெல்லாம் வீடு நிலம் வாங்கி இருக்கேன்னு எங்களுக்கு தெரியும்டா ...
அதுக்கான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் தேடி கண்டுபிடிச்சு எடுத்தாச்சு ..."
வினோத்தின் முகம் வெளிறி போக ,
" திருடினதே தப்பு அதை கண்டுபிடிச்சிட்டாங்கன்னதும் கொலை பண்ண ஆரம்பிச்சிட்டியா ...." என்றபடி காவல் அதிகாரி, அவன் கன்னத்தில் ஓங்கி அறைய, வெள வெளத்துப் போனவன்,
"அவரு பொண்ணு அருணா தான், அவரு மருமக லட்சுமிய தூக்க சொல்லி பணம் கொடுத்துச்சு ... மத்தபடி நானா பழைய பகைய மனசுல வச்சி எதையும் செய்யல ..."
என முடிக்க, எதிர்பார்த்து வந்தது தான் என்றாலும், ஏனோ அருணா செய்யச் சொன்னதாக அவன் வாக்குமூலமாக சொன்னது அவர்களை திகைக்கச் செய்ய, மூவரும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து தான் போயினர்.
இம்மாதிரியான பல சம்பவங்கள் ஊர் உலகத்தில் நடப்பதாக பலமுறை செய்தித்தாள்களில் வாசித்த போது இயல்பாகக் கடந்த சென்றவர்களால் , தற்போது தங்கள் வீட்டிலேயே நடந்திருப்பதை எண்ணி ஜீரணிக்க முடியாமல் போக, அப்போது ஏனோ திடீரென்று ராம்சரணின் மணக்கண்ணில்,
கடைசியாக மஹிக்கா அவனை வன்மத்தோடு உறுத்துப் பார்த்தது வலம் வர
"சொல்லு ... உங்க கூட்டணில எப்படி மஹிக்கா வந்தா ...." என்றான் எல்லாம் தெரிந்தது போல்.
" மஹிக்காவா யாரது ..." வினோத் பட்டும் படாமலும் கேட்க ,
" நடிக்காத ... இன்னும் கொஞ்ச நேரத்துல அவளும் இங்க வந்துடுவா .... அவ வந்து வாக்குமூலம் கொடுத்தா உன் நிலைமை இன்னும் மோசமாயிடும் ..."
ராம்சரண் பேசிக் கொண்டே செல்ல, ரங்கசாமி உட்பட மற்ற காவல் அதிகாரிகளுக்கு அவன் திடீரென்று பயன்படுத்திய 'மஹிக்கா' என்ற பெயர், புதிது என்பதால், அவன் சொல்ல வருவதை அறிந்து கொள்ள அவர்கள் அமைதிக்காக்க, வீராவுக்கோ ஏதோ மர்ம கதை கேட்பது போல் இருந்தது.
லட்சுமி வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை ரவி மூலம் அறிந்துகொண்டு ராம்சரண் வெற்றியை புரட்டி எடுத்தது ....
அதற்கு அருணாவும் கற்பகமும் மறைமுக காரணம் என்பதை அறிந்து கொண்ட ரங்கசாமி, அருணா கற்பகம் வசிக்கும் வீட்டை விற்று, அவர்களது வங்கி கணக்கை முடக்கியதோடு, கற்பகத்திற்கு விவாகரத்து பத்திரமா அனுப்பியது ...
அதற்குப் பழி வாங்கத்தான் தற்போது அருணா லட்சுமி பயணித்த காரை விபத்துக்குள்ளாக்கியது என்ற வினோத்தின் வாக்குமூலம் ஆகியவை எல்லாம் வீராவுக்கு புதிது என்பதால் ஒன்றுமே புரியாமல் அவன் நடப்பதை வேடிக்கை பார்க்க,
"மஹிக்கா என் வீட்டு மேல் போஷன்ல குடி இருக்காங்க .... உங்க கீழ கோயம்புத்தூர்ல வேலை பார்த்தாங்களாம் ... அப்ப நீங்க அவங்கள திட்டி அசிங்கப்படுத்திட்டீங்களாம்.... .... அதனால வேலையை விட்டுட்டு வந்துட்டாங்களாம் ...."
"அதெல்லாம் சரி.... உங்க கூட்டணில அவளுக்கு என்ன வேலை ...."
" நீங்க எப்ப ஆபீஸ்க்கு வரீங்க ... போறீங்க ... லஷ்மி தனியா கார்ல போறாங்களா இல்ல .... உங்க கூட வராங்களானு தெரிஞ்சுக்க, அவங்கள பயன்படுத்திக்கிட்டோம் அவ்ளோ தான்...."
"சோ, அருணா, நீ , மஹிக்கா மூணு பேரும் போட்ட பிளான் தான் இன்னிக்கு நடந்த ஆக்சிடென்ட்...... இல்லையா.."
அவன் மௌனமாய் தலை குனிந்து கொள்ள , அவனை அப்புறப்படுத்த உத்தரவிட்ட காவல்துறை தலைமை அதிகாரி , ரங்கசாமியை பார்த்து,
"எல்லாத்தையும் அவசர அவசரமா செஞ்சிருக்காங்க ..... அதோட இவங்க எல்லாம் ப்ரொபஷனல்ஸ் இல்லாததால பொசுக்குனு மாட்டிக்கிட்டாங்க.....
இவங்க கொடுத்த வாக்குமூலத்தை வச்சு இப்ப அருணாவையும் உங்க மனைவி கற்பகத்தையும், நாங்க அரெஸ்ட் பண்ண வேண்டி வரும் ...."
அவர் தொக்கி நிறுத்த,
" நான் அதுக்காக தானே போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்திருக்கேன் .... கற்பகம் என் மனைவி கிடையாது, நான் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டேன் .....அருணா என் மகளா இருக்கிற தகுதிய இழந்து ரொம்ப நாளாச்சு ... சோ கோ எ ஹெட் ..."
என ரங்கசாமி முடிக்க உடனே, தலைமை அதிகாரி துணைக் காவல் ஆணையரிடம்
" நீங்க அந்த மஹிக்காகவ அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்துடுங்க .... நான் கோயம்புத்தூர் S1 ஸ்டேஷனுக்கு போன் பண்ணி அருணா, அவ அம்மா கற்பகம் ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ண சொல்றேன் ..." என முடிக்க,
அருணா கற்பகத்தை நினைத்து, ராம்சரணின் கண்கள் கனலை கக்க தொடங்கின .
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
.
Very emotional and fast epi asusal super mam
ReplyDeletethanks dr
Deletejust amazing 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
ReplyDeletethanks dr
DeleteVera level sis. Orey epi la all criminals matikitanga. Story mudiya poguthaaa 😢
ReplyDeletethanks dr
DeleteNxt epi sikram podunga ji...enachinu thrijika eager ah iruku
ReplyDeletethanks dr
DeleteThnk god lakshmi ku ethum agala... Iniyum ethum agama iruntha podhum... Rmba nal ku apuram indha part potu irukingala chinnatha irukura pola fl aguthu... Sikkirama nxt ud podunga sis...
ReplyDeletethanks dr
DeleteNext episode please
ReplyDeletedone ma
Delete