அத்தியாயம்-124
"தம்பி பாண்டியா, சொன்னா கேளுப்பா ....
கையில அடிபட்டு இருக்கு ... நேரம் ஆக ஆக வலி இன்னும் அதிகமாவும்... இந்த நிலைமைல ஊட்டிக்கு போறது நல்லதா படலப்பா..." அகல்யா தன் பங்குக்கு நயந்து சொல்ல,
"அம்மா, சரணுக்கு நான் ஃப்ரண்டு மட்டுமில்லம்மா, மச்சான்ங்கிற முறைல அவன் பொண்ணுக்கு தாய்மாமன் ஸ்தானத்துல இருந்து முடி இறக்கி இருக்கேன்.... அதனால சரண் வைஃப் லட்சுமியும், அவ தங்கச்சி ராமலட்சுமியும் , எனக்கு கூட பொறக்காத தங்கச்சிங்க ..... சோ நான் கல்யாணத்துக்கு போயே ஆகணும் .... விரல்ல அடிபட்டதை எல்லாம் ஒரு விஷயமாக்கி , கல்யாணத்துக்கு போகாம இருந்தா நல்லா இருக்காதும்மா... ப்ளீஸ் .... இத பத்தி இனிமே பேசாத... " திட்டவட்டமாக கூறிவிட்டு அவன் தன் அறை நோக்கி செல்ல ,
"இவன் என்னைக்கு தான் என் பேச்சை கேட்டிருக்கான்.... இன்னைக்கு கேக்க ...."
என அலுத்துக் கொண்டே அகல்யா உணவு மேஜையில் வந்தமர்ந்து உணவு உண்ண, அவரைப் பின்பற்றி சுந்தராம்பாளும் பொன்னம்பலமும் உணவு மேஜைக்கு வந்து பாதியில் விட்ட உணவினை தொடர்ந்தனர்.
சில மணித்துளிகளில் , புத்துணர்வு பெற்று உடைமாற்றிக்கொண்டு வந்த வீரா, வழக்கம் போல் இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டு உண்ண முற்படும் போது தான் , அவன் மனையாள் அங்கு இல்லாதது உரைக்க,
"ஸ்ரீ .... சீக்கிரம் வந்து சாப்பிடு.... இன்னும் பேக்கிங் பண்ற வேலை வேற இருக்கு......." உணவில் கவனம் செலுத்திய படி, அவன் அழைப்பு விடுக்க, அடுத்த கணமே அடுக்களையிலிருந்து அவன் அருகில் வந்தமர்ந்தவள், இட்லியை தட்டிலிட்டு மடியில் வைத்துக் கொண்டு தலை குனிந்தபடி உண்ண முற்பட்டாள்.
ஆனால் இட்லியை விள்ளளாக கூட உடைக்க முடியாத அளவிற்கு அவளது கரமும் உடலும் அவளையும் மீறி நடுங்க, பக்கவாட்டில் அமர்ந்திருந்த சுந்தராம்பாளின் விழிகளில் அந்தக் காட்சி எதேச்சையாக பட,
"ஏய் பிரியா .... என்ன ஆச்சு ... கை ஏன் இப்படி உதறுது ..." பதைப்பதைப்போடு அவர் குரலை உயர்த்தி வினவிய போது தான் , வீரா உட்பட மற்றவர்களும் அவளை கவனிக்க,
"ஓ.... ஒன்னுமில்ல பா.... பாட்டி..... " என்றவளின் குரலும் அளவுக்கதிகமாக நடு நடுங்கியதோடு, கண்களும் செந்தணலாய் சிவந்து ,விழி நீர் வழிந்தோட,
"ஏய் ஸ்ரீ .... என்னாச்சுடி உனக்கு .... உடம்பு ஏதாவது சரி இல்லையா .... என்ன பண்ணுது ... சொல்லு ...." என்றான் வீரா ஒருவித பயத்தோடு உண்பதை நிறுத்திவிட்டு அவளை நெருங்கி.
அவள் அமைதிக் காக்க,
"பிரியா, தலை வலிக்குதா ...." அகல்யா எழுந்து வந்து இளையவளின் நெற்றியில் கை வைத்துவிட்டு
"நெத்தி சுடுதுடா ...." என மைந்தனிடம் சொல்ல
"சொல்லு ஸ்ரீ .... என்ன பண்ணுது ..." என்றவனின் கரம் பற்றிக்கொண்டவள்
"உ... உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு ப.. பயமா இருக்கு .... இ ... இனிமே காரை எடுக்காதீங்க ... ப்ளீஸ் ..."
தன் உள்ளத்து நடுக்கத்தை, உதடுகள் துடித்தபடி , கண்ணீர் வழிய அவள் வெளியிட,
"உஃப்... " என்று உதடு குவித்து பெரும் மூச்சொன்றை வெளியேற்றியவன்,
"இதுக்கு தான் இவ்ளோ பெரிய அலப்பறையா....லேசா அடிபட்டதால மூணு விரலும் வீங்கி இருக்கு ... அதுக்கு போய் ஏதோ கையே போன மாறி கதர்ற...."
என்றான் லேசான கோபமும் எரிச்சலுமாய்.
"இவன் யார் பேச்சையும் என்னைக்குமே கேட்டதில்லம்மா ... உன் பேச்சை மட்டும் கேக்கவா போறான் ..."
சுந்தராம்பாள் பழைய படி ஆரம்பிக்க,
"இப்ப நானே ஆசைப்பட்டா கூட காரை ஓட்ட முடியாது .... ஏன்னா கார் ரெடியாகவே இன்னும் பத்து நாளைக்கு மேல ஆகும்னு மெக்கானிக் சொல்லிட்டாரு.... நாளைக்கு ஓலா கேப்ல தான் ஊட்டிக்கு போயாகணும் ..."
"ஓலா கேப் எல்லாம் வேணாம்பா ... நான் உசேன் பாய் கிட்ட சொல்லி கார் அனுப்ப சொல்றேன் .... நல்ல எக்ஸ்பீரியன்ஸ்டு டிரைவரா அனுப்பவாரு... நல்லபடியா ஊட்டிக்கு போயிட்டு நிம்மதியா திரும்பி வாங்க ... " என பொன்னம்பலம் முடிக்க ,
"அப்ப நாளைக்கு காலையில 9:00 மணிக்கே வர சொல்லுப்பா ...." என்றான் மைந்தன் அவசரமாய்.
"பாண்டி, மத்தியத்துக்கு மேல தானே கிளம்பறதா சரண் கிட்ட சொன்ன...." என அகல்யா வினவ ,
"நாளைக்கு மதியம் வரைக்கும் இருந்தா, ஏதாவது பிரச்சனைய இழுத்து விட்டு கிட்டே இருப்பீங்கன்னு தோணுது ... அதான் காலையிலயே கிளம்பறதா முடிவு பண்ணிட்டேன் ..."
"ம்க்கும்.... இவன் புடிச்ச மொசலுக்கு ரெண்டே காலு...." சுந்தராம்பாள் வெடுக்கென்று கூற
"நான் புடிச்ச முயலுக்கு ஒரே ஒரு காலு தான் பாட்டி ... போதுமா ...."
இப்படி இங்கு பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்க, வீராவின் மனையாட்டியின் மனமோ , வார்த்தைகளால் வடிக்க முடியாத அச்சத்தில் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்க, அவள் முகம் கண்டவன் ஏதோ ஒரு இனம் புரியாத பயத்தில் தன் கண்மணி சிக்கி தவிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு இட்லி விள்ளல்களை தன் இரு விரல்களால் எடுத்து அவள் வாயில் வைத்து
"சாப்பிடு ..." என்றான்.
"நானே சாப்டுக்கிறேனே ..." அவள் தயங்க,
"ம்ச்... சாப்பிடு ஸ்ரீ ... சாப்பிட்டு நிம்மதியா போய் தூங்கு .... இப்படி ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு எல்லாம் ரொம்ப யோசிச்சு டென்ஷனாகாத ..." என்றவன் அவள் தட்டில் இருந்ததை மெதுவாக எடுத்து ஊட்டி முடிக்க,
மற்ற மூவரும் தங்களது தட்டில் இருந்ததை உண்ண மறந்து , இளையவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
"உசேன் பாய் கிட்ட, ஊட்டிய நல்லா தெரிஞ்ச டிரைவரை அனுப்ப சொல்லுங்கப்பா ..." என கூறிவிட்டு
"வா போலாம் ...." என மனைவியை அழைத்துக் கொண்டு, தன் அறை நோக்கி அவன் நடை போட,
"உன் ஐய்யன் வண்டில இருந்து விழுந்து, கால ஒடிச்சிக்கினு வந்தப்ப கூட , நான் இவ்ளோ வெசனப்பட்டதில்ல .... இந்த பொண்ணு என்னடான்னா கைவிரல்ல அடிபட்டதுக்கே இந்த நடுங்கு நடுங்குறா ...." சுந்தராம்பாள் அங்கலாய்க்க,
"இவன் தான் அந்த குட்டியை பார்த்து கிறுக்கு புடிச்சி போய் அலையறானு நினைச்சிகினு இருந்தேன் .... இப்ப இல்ல தெரியுது .... இந்த குட்டி இவனுக்கும் மேல அரை கிறுக்கா அலையுதுன்னு... என்னமோ போ .... ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்ல ... ஒன்னும் சொல்றதுக்கும் இல்ல..." அகல்யா தன் பங்கிற்கு பேச
"ஒத்துமையா தான இருக்காங்க .... அது ஏன் உன் கண்ண உறுத்துது .... சும்மா எதையாவது பேசி நேரத்தை கழிக்காம, ஏதாச்சும் வேலை இருந்தா போய் பாரு.. போ..." என உறுமி விட்டு பொன்னம்பலம் நடையை கட்ட, அகல்யா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அடுப்படிக்கு செல்ல, இருவரையும் ஒரு வெற்று பார்வை பார்த்துவிட்டு சுந்தராம்பாள் தன் அறை நோக்கி நடந்தார்.
வீராவின் அறையில், அவன் மனைவி படுக்கையில் குத்துகாலிட்டு நடுநாயகமாக அமர்ந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அதனை துளி கூட கண்டு கொள்ளாமல் மறுதினம் மேற்கொள்ளவிற்கும் பயணத்திற்காக துணிமணிகளை பயணப் பொதிகளில் அடுக்கிக் கொண்டிருந்தவன்
"கிரீன் சாரி, பர்பிள் சாரி , அதோட ஆக்சஸரீஸ், இன்னர்ஸ் எல்லாத்தையும் எடுத்து வைக்கறேன் ... கிரீன் சாரிய ரிசப்ஷனுக்கு கட்டிக்கோ, பர்பிள் சாரிய கல்யாணத்துக்கு கட்டிக்கோ... சரியா ..."
என்றான் பதிலை எதிர்பார்த்து.
பதில் சொல்ல வேண்டியவளோ, முகம் சிவந்து கண் கலங்கி அமைதி காக்க,
"ம்ச்.... பட்டும்மா ... உனக்கு என்ன ஆச்சு ...
ஏன் ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு ஓவர் ரியாக்ட் பண்ணிக்கிட்டு இருக்க ...." என்றவன் படுக்கையில் அமர்ந்துகொண்டு தன்னவளை மடியில் சாய்த்தபடி வாஞ்சையாய் வினவ,
"எனக்கு என்னன்னே சொல்ல தெரியல ராம் .... ஆனா உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு .... இதுவரைக்கும் நான் உங்ககிட்ட இருந்து எதையுமே மறைச்சதில்ல... இதான் பிரச்சனை, இங்க தான் பிரச்சனைன்னு தெளிவா தெரிஞ்சா சொல்லிடுவேனே ... அது தெரியாம இருக்கிறதால தான் இப்படி திணறிக்கிட்டு இருக்கேன் .... " என்றவளின் விழிகள் மீண்டும் வியர்க்க, மௌனமாக அவள் கண்களைத் துடைத்து தன் மார்போடு இறுக்கிக் கொண்டான்.
சில மணித்துளிகள் பனிக்கூழாய் கரைந்த பின், அவன் அணைப்பிலிருந்து விலகியவள்,
"உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா , அப்புறம் இந்த உலகத்துல எனக்குன்னு எதுவுமே இல்ல ... அடுத்த நிமிஷமே நான் இந்த உலகத்தை விட்டே போயிடுவேன் ..."
அவள் கதறி அழ , ஏதோ மன இறுக்கத்தில் இருக்கிறாள் , ஆறுதல் கூறி சமாதானம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, அவளது பேச்சில் இருந்த தீவிரம் வித்தியாசமாகப்பட, உறைந்தே போனான்.
நல்ல குடும்பப் பின்னணியை கொண்டவள். ஆளுமையான தந்தை, அன்பான தாய், அக்கறையான தம்பி, வாழ்வதற்கு தேவையான செல்வம், உலகை அறிந்து கொள்ள போதுமான அளவிற்கு கல்வி, தரமான கௌரவமான பதவி, அது தரும் பொருளாதார சுதந்திரம் என அனைத்திலும் தன்னிறைவு பெற்றிருந்தாலும், அவன் ஒருவன் தான் இவ்வுலகில் இருக்கும் ஒரே உறவு என்றும், அவன் இல்லா உலகில் அரைக்கணமும் வாழ விரும்பவில்லை என்றும் அவள் உரைத்தது, அவனை முழுவதுமாய் அசைத்துப் பார்க்க,
"பட்டு, இப்ப சுத்தமா கை வலி இல்ல .... எல்லா வேலையும் நல்லா செய்ய முடியுது.... நான் நல்லா இருக்கேன் ... எப்பவும் நல்லா இருப்பேன் ... போதுமா... நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது... ஆனா எது நடந்தாலும் கடவுள் காப்பாத்துவாருங்கிற
நம்பிக்கை மட்டும் இருந்தா போதும் எல்லாமே நல்லதாவே நடக்கும்... சரியா .... வா தூங்கலாம் ...." என்றான் அவள் விழிகளைப் பார்த்து.
அவன் சொன்னது ஏதோ ஒரு வகையில் ஆறுதலைத் தர, உடனே அவன் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள, தன் மார்பில் படர்ந்திருந்தவளின் இடையை பற்றி இருந்தவனால் அவளது உடலில் எஞ்சியிருந்த நடுக்கத்தை லேசாக உணர முடிய, தீவிர சிந்தனையில் மூழ்கி போனான்.
அவளது பயமானது, சற்று முன்பு நடந்த விபத்தில் கை விரலில் பட்ட காயத்திற்கானது என்பதை விட இனி வரும் நாட்களில், பெரும் விபத்து ஏதும் நிகழ்ந்து விடக்கூடாதே என்ற உள்ளுணர்வு தரும் அச்சத்தினால் விளைந்ததாக சரியாக கணித்தவன் , தன் இரு விரல்களில் தையல்கள் போட்டதால் ஏற்பட்ட வலியை முற்றிலுமாக மறைத்து, இடது கரத்தால் அவளது கேசத்தை கோதிய படி அவளோடு உறக்கத்தை தழுவ முயற்சித்து கடைசியில் அதில் வெற்றியும் கண்டான்.
மறுநாள் பொழுது பரபரப்போடு புலர, இருவரும் துரிதமாக எழுந்து , புத்துணர்வு பெற்று, பயணத்திற்கு தயாராகி பயணப் பொதிகளோடு கீழ் தளத்திற்கு வர
"பாண்டி, டிபன் ரெடியா இருக்கு ... ரெண்டு பேரும் சாப்பிடுங்க ... ..." என அகல்யா சொன்னதும் இருவரும் காலை உணவு உண்ண தொடங்க,
"நல்லா விவரம் தெரிஞ்ச டிரைவரா அனுப்பறேன்னு சொல்லிட்டாருப்பா ...இன்னும் கால் மணி நேரத்துல வண்டி வந்துடுமாம்... " என்றார் பொன்னம்பலம் அலைபேசி அழைப்பை துண்டித்தபடி.
பொன்னம்பலம் சொன்னது போலவே அடுத்த கால் மணி நேரத்தில், டாக்ஸி வந்து சேர, அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு தன் மனைவியோடு பயணத்தை தொடங்கினான் வீரா.
இருபத்தைந்து வயது கடந்த சுறுசுறுப்பான இளைஞன்
"சார் என் பேரு சமீரு... எனக்கு ஊட்டி மட்டுமில்ல அதை சுத்தி இருக்கிற மலை கிராமம், அங்க இருக்கிற எஸ்டேட்ங்க எல்லாமே அத்துபடி ... உங்களுக்கு எங்க போவணும்னு சொல்லுங்க சார்... சுருக்கா போயிடலாம் ..." என கலகலப்பாக காரை ஓட்டியபடி பேச்சை தொடங்க,
"அயோத்தி எஸ்டேட் போகணும்ப்பா ...."
"அயோத்தி எஸ்டேட் தான ... நல்லா தெரியும் சார் .... ஊருக்குள்ள போகாமலே ரெண்டு மலை கிராமம் இருக்கு அது வழியா போனா சீக்கிரமே போயிடலாம் ... என்ன ஒன்னு, அங்க கொஞ்சம் பள்ளத்தாக்குங்க அதிகம் ... அதனால பாதைங்க கொஞ்சம் கரடு முரடா இருக்கும் ... மத்தபடி பச்ச பசேல்னு அருமையா இருக்கும் சார் .... அங்க இருக்கிற மானூத்து கிராமம் தான் என் அப்பா பொறந்த ஊரு சார்... "
அந்த இளைஞன் தன் சொந்தக் கதை சோகக் கதையோடு பல புதிய தகவல்களை சொல்லியபடி காரை செலுத்த, விறுவிறுப்பான அவன் பேச்சில் மனதை செலுத்தியபடி வீரா தம்பதியர் பயணத்தில் லயித்தனர்.
---------------------------------------
ஊட்டியில் ராம்சரணின் வீடே விழா கோலம் பூண்டிருந்தது.
ராமலட்சுமி தன் தாய் தந்தையோடு முன் தினமே அங்கு வந்திருக்க , ஸ்ரீனி தன் குடும்ப உறுப்பினர்களோடு அன்று காலையில் தான் அங்கு வந்து சேர்ந்தான்.
இரு குடும்பங்களும் பரஸ்பர மரியாதையோடு மிகுந்த அன்புடன் நட்பு பாராட்டி மகிழ்ந்தனர்.
அவர்களை ரங்கசாமியும், ராம் சரணும் முன் நின்று வரவேற்க , அவர்களுக்கான பிரத்தியேக விருந்து உபச்சாரங்களை, சிவகாமி , சிறப்பாக கவனித்துக் கொள்ள, எட்டரை மாத கர்ப்பிணி என்பதெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு, பதின் பருவத்துப் பெண் போல் சுறுசுறுப்பாக இயங்கி அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியோடு லட்சுமி நலம் விசாரிக்க என, அந்த மனையே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி திளைத்தது.
தன் தங்கையின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துத் தர எண்ணி இப்படி ஒரு தரமான குடும்பத்தை தேர்வு செய்திருந்த தன் கணவனின் மேல், அவளுக்கு வகைத்தொகை இல்லாமல் வாஞ்சையும் காதலும் கூடிப்போக, தன்னவனை விழிகளால் வருடியபடி வளைய வந்து கொண்டிருந்தாள் அந்த வனிதை .
கிடைக்கும் சொற்ப தனிமையிலும் ஏதாவது காரணத்தை உருவாக்கிக் கொண்டு, அவனை சந்தித்து உப்பு பெறாத விஷயத்தை எல்லாம் பேசி மகிழ்ந்தாள்.
மனையாளின் மாற்றம் மன்னவனையும் மயக்க, அவளது கூச்ச சுபாவத்தை அறிந்து அவனே அவளை தழுவிக் கொண்டு,
"இதுக்கு தான வந்த ..." என்றான் குறும்போடு.
" இல்லையே ...."
"நீ சொல்லலன்னாலும் எனக்கு புரியும் டி......" என்றவன் அவள் கன்னத்தில் ஆழ்ந்த முத்தமிட்டு விட்டு தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
இப்படியாக தருணங்கள் சர்க்கரைப்பாகாய் கரைய, கூடியிருந்த ஆன்ம உறவுகளோடு
பேச்சும் சிரிப்புமாய், காலை உணவு இனிதே முடிய, ஸ்ரீனி ராமலட்சுமியின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியே, அவர்களது காதலை அற்புதமாய் அனைவருக்கும் பறைசாற்ற,
சற்று நேரம் அவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு மூத்தவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
மதிய உணவிற்கு பிறகு, எஸ்டேட் பங்களாவிற்கு பயணப்பட இருப்பதால், பெரியவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் சற்று நேரம் ஓய்வெடுக்க செல்ல,
அப்போது பார்த்து தேயிலைத் தொழிற்சாலை விரிவாக்க பணிக்காக அரசாங்கத்திடமிருந்து பதில் கடிதம் பதிவு அஞ்சல் மூலம் வந்து சேர்ந்தது.
அதனை எடுத்துக்கொண்டு தந்தையைத் காண அவரது அறைக்குச் சென்ற ராம்சரண்,
அங்கு மேஜையின் மேல், கலைந்திருந்த வீட்டு பத்திரங்கள், மற்றும் அரசாங்க தரவுகளை பார்த்து துணுக்குற்று, பால்கனியில் அமர்ந்திருந்த தந்தையிடம் சென்று,
"அப்பா, ஏன் லீகல் பேப்பர்ஸ், டாக்குமெண்ட்ஸ் எல்லாம் டேபிள் மேல களைஞ்சி இருக்கு ... ஏதாவது காணமா ... தேடிக்கிட்டு இருக்கிங்களா ..."
என்றவனை மர்ம புன்னகையோடு நோக்கிய ரங்கசாமி ,
"அதுவா ... அதெல்லாம் நான் அருணா கற்பகத்துக்கு வச்ச பவர்ஃபுல் பாம்ஸ் ...
ஒன்னு நேத்து சாயங்காலமே வெடிச்சிடுச்சி... இன்னும் ஒன்னு இந்நேரத்துக்கு வெடிச்சிருக்கும்னு நினைக்கிறேன் ..."
என்றார் தன் மீசையை நீவி விட்டபடி .
" சுத்தமா புரியலப்பா......."
"வெற்றி மூலம் அருணாவுக்கு விஷயம் போய் சேர்ந்து இருக்கும். உடனே நம்மளயும் லட்சுமியும் அடுத்து எப்படி டார்கெட் பண்ணலாம்னு அவ திட்டம் போட ஆரம்பிப்பா ... அதைத் தடுக்க தான் இதெல்லாம் ...."
"என்ன சொல்லவரீங்க ... சத்தியமா புரியல .... அருணாவுக்கு போன் பண்ணி திட்டினீங்களா...... ...."
"நான் ஏன் அவளுக்கு போன் பண்ணனும் ... அவளே கதறிக்கிட்டு எனக்கு போன் பண்ணுவா பாரு .... " என்றவரை அவன் புரியாமல் பார்க்க,
"இத்தனை நாளா அருணாவும் கற்பகமும் எந்த பிரச்சனையையும் தூக்கி சுமக்காம, இருக்கிற பணத்தை வாரி இறைச்சுக்கிட்டு,
அடுத்தவங்க குடிய கெடுத்துக்கிட்டு இருந்தாங்க .... இப்ப அவங்களுக்கே சமாளிக்க முடியாத அளவுக்கு பிரச்சனையை உண்டு பண்ணிட்டேன் ...இனிமே அவங்களுக்கு அவங்க பிரச்சனையை சமாளிக்கவே நேரம் சரியா இருக்கும் .... நம்மள நோக்கி , குறிப்பா லட்சுமியை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது .... " என்றவர் சில தரவுகளை எடுத்து அவனிடம் நீட்ட, படித்துப் பார்த்தவன், அதிர்ச்சியில் உறைந்தே போனான் .
"என்னப்பா இது ... கற்பகத்துக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கீங்க .... கோயம்புத்தூர் வீட்டை வேற வித்துட்டு இருக்கீங்க ..."
"சரியா பாரு... வீட்டோட அங்க இருக்கிற ரெண்டு காரையும் வித்துட்டேன் ..."
"அட ஆமா .... ஏன் இப்படி பண்ணீங்க ..."
"அதைவிட ஒரு முக்கியமான விஷயம் பண்ணி இருக்கேன் .... நான் அவங்களுக்கு பணம் போடற பேங்க் அக்கவுண்ட்டையும் ஃப்ரீஸ் பண்ணிட்டேன் ..... இனிமே அவங்களால அதிலிருந்து பணத்தை எடுக்கவே முடியாது ... கோயம்புத்தூர் வீடு என்னோட சம்பாத்தியத்துல என் பேர்ல வாங்கினது ...அதை விக்க நான் யாரையும் கேட்கணும்னு அவசியம் இல்ல.... அங்க இருக்கிற ரெண்டு காருமே என் சம்பாத்தியத்துல வாங்கினது தான்..... ரொம்ப நாளா வடவள்ளி செட்டியார், அந்த ஏரியால வீடு வேணும்னு தேடிகிட்டு இருந்தாரு ...
அதான் அவருக்கு வீட்டையும் காரையும் வித்துட்டேன் .... சும்மா சொல்ல கூடாது நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப நல்ல விலைக்கே போச்சு ...."
"எல்லாம் சரி தான்.. ஆனா ஏன் இந்த திடீர் முடிவு ..."
"நான் தான் அன்னைக்கே சொன்னேனேப்பா.... தாயும் மகளும் செஞ்ச தப்பு, எப்ப எனக்கு தெரிய வருதோ, அப்ப அவங்க நம்ம குடும்பத்துல இருக்குற தகுதியை இழந்திடுவாங்கன்னு ... அதைத்தான் செஞ்சேன் ..."
"அருணாவுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சா..."
"ம்ம்ம்ம்... நேத்து சாயங்காலம் செட்டியார் போய் சொல்லி இருக்காரு .... கேட்டதும் குதிக்க ஆரம்பிச்சிட்டாளாம்.... எப்படி என் அப்பா எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லிக்காம இந்த வீட்டை விக்கலாம் .... நான் கேஸ் போட போறேன் .... இந்த வீடு மட்டும் இல்ல ஊட்டில இருக்குற எஸ்டேட் கூட எனக்கு சொந்தம் தான் .... என் தாத்தா சம்பாதிச்சது... தாத்தா சொத்து பேத்திக்கு சொந்தம்னு ... என்னென்னமோ சொல்லி கத்தி கலாட்டா பண்ணாளாம் .... ஆனா செட்டியார் அதையெல்லாம் கண்டுக்காம, இன்னும் ஒரு வாரம் உங்களுக்கு டைம் தரேன் வீட்டை காலி பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டாராம்..."
"நீங்க அவசரப்பட்டுட்டீங்களோனு தோணுது ப்பா ..." என்றான் மைந்தன் லேசாக தயங்கி.
"இல்லப்பா ... பணம் இருக்கிற திமிர்ல தானே தாய் மகளும் அந்த ஆட்டம் ஆடினாங்க .... பணங்கிற பல்ல புடுங்கியாச்சு ... இனிமே அவங்களால நமக்கு எதிரா ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது .... என்னை எதிர்த்து கேஸ் போட கூட அவங்க கிட்ட பணம் கிடையாது .... வேற வழியே இல்ல இனிமே தாயும் மகளும் அடங்கித்தான் ஆகணும் ..."
"டிவோர்ஸ் நோட்டீஸ் போய் சேர்ந்திருச்சாப்பா ...."
"இன்னும் இல்லன்னு நினைக்கிறேன் .... போய் சேர்ந்து இருந்தா இந்நேரம் தினேஷ்க்கு போன் பண்ணி அருணா ஆடு ஆடுன்னு ஆடி இருப்பாளே ...தினேஷும் எனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பானே ... "
"இத்தனை வயசுக்கு அப்புறம் டிவோர்ஸ் கிடைக்குமாப்பா...
"இப்ப தான் ரொம்ப ஈஸியா கிடைக்கும்ப்பா ... 20 வருஷமா நானும் கற்பகமும் தனித்தனியா தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம் ... என் ரெண்டு குழந்தைகளையும் படிக்க வச்சு கல்யாணமும் செஞ்சி வச்சிட்டேன் ... அதனால கற்பகத்தோட சர்வைவல்க்கு மட்டும் தான் பணம் கொடுக்க முடியும் ....மத்தபடி சொத்துல பங்கு கொடுக்க முடியாதுன்னு சொல்லி தான் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கேன் ... அதை விட எங்க ரெண்டு பேருக்குள்ள பெருசா எமோஷனல் அட்டாச்மென்ட் எல்லாம் என்னைக்குமே இருந்தது கிடையாது ... அதனால அவ அழுது டிராமா பண்ண சான்ஸ் கிடையாது ... ஒரு வேளை பண்ணாலும் அதை நம்பற நிலைல இங்க யாரும் கிடையாது ..."
என முடித்தவருக்கு தெரியாது, அருணா என்ற நாகப்பாம்பு வினோத் என்ற நயவஞ்சகன் மூலமாக, லட்சுமியின் உயிருக்கே உலை வைக்க எப்பொழுதோ திட்டமிட்டு அதனை செயல்படுத்த நேரமும் குறித்து விட்டாள் என்று .
ஏதோ ஒரு நிம்மதி மனதை ஆக்கிரமிக்க,
"அப்பா சரியா 12 ஓ கிளாக்கு லஞ்ச் சாப்பிட வந்துடுங்க ... லஞ்ச் முடிச்சதும் உடனே எல்லாரும் எஸ்டேட் பங்களாவுக்கு கிளம்பினா சரியா இருக்கும் .... வீரா மதியத்துக்கு மேல கிளம்பி ஈவினிங்குள்ள வந்து சேர்ந்துடறேன்னு சொல்லி இருக்கான் .... உங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் இன்வைட் கொடுத்துட்டீங்க இல்ல ..." என்ற இளையவனை பார்த்து,
"எல்லாருக்கும் கொடுக்கல ப்பா.... ரொம்ப முக்கிய பட்டவங்கள மட்டும் தான் இன் வெயிட் பண்ணி இருக்கேன் .... பாதி பேர் இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷனுக்கு வராங்க ... மீதி பேர் நாளைக்கு காலையில கல்யாணத்துக்கு வராங்க ...."
" ஓகே பா .... கெட் ரெடி சூன் ..." என விடை பெற்றான் ராம்சரண் மனநிறைவோடு.
தடபுடலாக மதிய விருந்து பரிமாறப்பட, நடைபெறவிருக்கும் திருமண நிகழ்ச்சிகள் குறித்து ஏதேதோ பேசி சிரித்தபடி அனைவரும் உண்டு முடித்ததும்,
"சரண், முத்துமலை எஸ்டேட் , கோல்டன் கிரஸ்ட் எஸ்டேட் ஓனர் எல்லாம் கிளம்பிட்டாங்களாம் ... அவங்களையெல்லாம் நான் போய் இன்வைட் பண்ணா தான் சரியா இருக்கும் ... அதனால நான் இப்பவே எஸ்டேட் பங்களாவுக்கு கிளம்பறேன் பா .... நீ எல்லாரையும் கூட்டிக்கிட்டு சீக்கிரமா கிளம்பி வர வழிய பாரு ..."
என அந்த வீட்டின் தலைமகனாய் , வீட்டு விசேஷத்தை ஏற்று நடத்தும் பெரிய மனிதராய், ரங்கசாமி முதலில் கிளம்பிச் சென்று விட்டார்.
பிறகு சிவகாமி,
"தம்பி , இப்பவே கிளம்பினா தான் , ராவு காலத்துக்கு முந்தி எஸ்டேட்க்கு போய் சேர முடியும் ... " என ராம்சரணை பார்த்து கூற,
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ருக்மணி,
"அவங்க சொல்றது சரிதான் மாப்ள... கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் பயண தொலைவு ... இப்பவே கிளம்பினா தான் சரியா இருக்கும் ... " என தயங்கி நிற்க,
"உங்களுக்கு கார் ரெடியா இருக்கு அத்தை... நீங்க மாமாவையும் குட்டியையும் கூட்டிகிட்டு கிளம்புங்க ... ஸ்ரீனி தன் கார்லயே உங்கள ஃபாலோ பண்ணி அவன் பேமிலியோட எஸ்டேட் வந்துடுவான் .... நான், லட்சுமி, குழந்தை, சிவகாமி அக்காவ கூட்டிகிட்டு என் கார்ல வந்துடறேன் ...."
என்றவன் சொன்னது போலவே அனைவரையும் வழி கூட்டி அனுப்பிவிட்டு, கடைசியாக தன் மனைவி மகளோடு காரில் ஏற முற்படும் போது , திடீரென்று லட்சுமி வாயைப் பொத்திக்கொண்டு விரு விருவென்று நடந்துச்சென்று சற்று தொலைவில் இருந்த தோட்டத்துப் பாத்தியில் வாந்தியாய் எடுத்து தள்ள, பதறியபடி பின் தொடர்ந்து சென்றவன் ஆதரவாய் அவள் தலையைப் பற்றி கொண்டான்.
சில மணித்துளிகளில் உண்ட உணவு முழுவதும் வாந்தியாய் வெளியே வந்துவிட, களைத்து சோர்ந்தவளை தன் மார்போடு அவன் சாய்த்து கொள்ளும் போது , ஒரு கையில் குழந்தை ,மறுக்கையில் தண்ணீர் பாட்டிலோடு சிவகாமி அங்கு வந்து சேர,
அந்த தண்ணீரை பயன்படுத்தி தன்னவளை புத்துணர்வு பெறச் செய்தவன்,
" புடவை எல்லாம் ஈரம் ஆயிடுச்சு பாரு ... புடவை மாத்திக்கிறியா ...." என்றான் அக்கறையாய்.
"வேண்டாங்க .... ரொம்ப எல்லாம் ஈரம் ஆகல........இதுவுமே ரெண்டு நிமிஷத்துல காஞ்சிடும் ..." என்றவளை கைத்தாங்கலாய் அழைத்து வந்து காரின் முன்பக்க இருக்கையில் அமர செய்யும் போது , அவன் அலைபேசி சிணுங்கியது.
அவனுடைய தொழில்துறை பங்குதாரர் சந்தோஷ் தான் அழைத்திருந்தான்.
"சொல்லு சந்தோஷ் ...."
" சரண், நீ இப்ப எங்க இருக்க ..." என்றான் எடுத்த எடுப்பில்.
"இன்னிக்கு ஈவினிங் என் மச்சினிக்கு ரிசெப்ஷன் இல்லையா... அதனால இப்ப எங்க எஸ்டேட்டுக்கு கிளம்பி கிட்டு இருக்கோம் ..."
"தேங்க் காட், எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ... "
"சொல்லு சந்தோஷ் ..."
"நேத்து ஈவினிங் ஒரு வேலை விஷயமா ஈரோடுக்கு வந்தேன் ... இன்னைக்கு காலையில கிளம்பி ஊட்டிக்கு வந்துடலாம்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது , என் வைஃப் ஓட மாமா திருப்பூர்ல இறந்து போயிட்டாரு .... அதனால திருப்பூருக்கு போக வேண்டியது ஆயிடுச்சு .... நாம கொட்டேஷன் ஃபிக்ஸ் பண்ணி அனுப்பின ரெண்டு ப்ராஜக்ட்சும் நமக்கு கிடைச்சிருக்குன்னு இப்ப தான் மஹிக்கா போன் பண்ணி சொன்னாங்க... ஆனா அதுக்கு அப்ரூவல் கொடுக்கணும்னா என் லேப்டாப் வேணும் ...
அது மட்டும் இல்ல, ஃபர்தர் கால்குலேஷன்ஸ்க்கு சில சப்போட்டிங் டாக்குமெண்ட்சும் என் லேப்டாப்ல தான் இருக்கு ... என் லேப்டாப் நம்ப ஆபீஸ் ரூம்ல மாட்டிக்கிச்சு.... ஆபீஸ் ரூம ஓபன் பண்ணனும்னா, பயோமெட்ரிக் ஸ்கேனர்ல நம்ப ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரோட ஃபிங்கர் பிரிண்ட்டாவது வேணும்.......நீ ஆபீஸ்க்கு போய் ஆபீஸ் ரூமை ஓபன் பண்ணிட்டு, என் லேப்டாப ஓப்பன் பண்ணி அப்ரூவல் கொடுத்துட்டு அதை மஹிக்கா கிட்ட கொடுத்திடு ...
அவங்க அதுல இருக்கிற சப்போர்ட்டிங் டாக்குமெண்ட்ஸ வச்சு சப்மிஷன்கான கால்குலேஷன்ஸ நாளைக்குள்ள பிரிப்பேர் பண்ணி வச்சிடுவாங்க ... நான் எப்படியாவது இன்னைக்கு நைட்டுக்குள்ள அடிச்சு புடிச்சு வந்துடுவேன் ... நாளைக்கு காலையில முதல் வேலையா சப்மிஷன் பண்ணிட்டா, அந்த ரெண்டு ப்ராஜெக்ட்டும் நம்ம கைய விட்டு போகாது சரண் ..."
"வேற வழியே இல்லையா சந்தோஷ் ..." என்றான் யோசனையாய்.
" நீ லீவுல இருக்கேன்னு தெரிஞ்சும், வேற வழி இல்லன்னு தானே உனக்கு போன் பண்ணேன்..... ... நம்ப ரெண்டு பேரோட பிங்கர் பிரிண்ட் மட்டும் தானே ஆபீஸ் ரூம் டோர் பயோமெட்ரிக் ஸ்கேனர்ல ரிஜிஸ்டர் பண்ணி இருக்கோம் ... நல்லவேளையா நீ இப்ப சிட்டியிலயே இருக்க ... உங்க வீட்ல இருந்து ஆபீஸ் ஜஸ்ட் 20 மினிட்ஸ் தானே .... ப்ளீஸ் சரண், நீ போய் ஓப்பன் பண்ணி கொடுத்துட்டு கிளம்பிடேன் ..."
சந்தோஷ் சொன்ன காரணங்கள் அனைத்தும் சரியே , அவர்கள் இருவரும் உழைத்த உழைப்பிற்காக கிடைத்த பரிசு தான் அந்த இரு திட்ட வரைவுகள்.
பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில் அவர்களுக்கு கிடைத்துள்ளது என்பதே பெருமைக்குரிய விஷயம்.
ஆனால் அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அது தொடர்பான சில ஆவணங்களை இன்றைக்கே தயார் செய்து நாளை காலையில் நடைபெறும் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும் ...
அதனால் தான் விடுப்பில் இருக்கிறான் என்று தெரிந்தும், இவன் உதவியை அவன் நாடுகிறான் என்பதை புரிந்து கொண்டவன்,
"சரி சந்தோஷ், ... இப்பவே போய் ஆபீஸ் ரூமை ஓபன் பண்ணிட்டு, அங்க இருக்கிற உன் லேப்டாப்பல அப்ரூவல் கொடுத்துட்டு...
அதை மஹிக்கா கிட்ட கொடுத்துட்டு வந்துடறேன் ... போதுமா ..." என முடித்தான்.
"தேங்க்ஸ்... தேங்க்ஸ் எ லாட் சரண் ..." என எதிர்முனையில் சந்தோஷ் உற்சாகத்தோடு நன்றி தெரிவிக்க, பதிலுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்தவன், சிவகாமியிடம்
"அக்கா, ஒரு முக்கிய வேலைக்காக இப்பவே நான் ஆபீஸ் போய் ஆகணும் .... நீங்க லஷ்மி, குழந்தையை கூட்டிட்டு போய் ஒரு முக்கா மணி நேரம் ரெஸ்ட் எடுங்க ...நான் அந்த சின்ன வேலையை முடிச்சிட்டு வந்ததும் கிளம்பலாம் ..." என பரபரக்க,
"தம்பி, நீங்க ஆபீஸ் போய் திரும்பி வர முக்கா மணி நேரத்துக்கு மேல ஆயிடும் ...இருட்டியும் போயிடும் ... அதுக்கு மேல கிளம்பினா கஷ்டம்பா ... அதை விட சரியா ராவு காலத்துல போய் சேர்ற மாதிரி ஆயிடும் .... கல்யாணம் அதுவுமா வயத்து புள்ள காரிய ராவு காலத்துல கொண்டு போய் நிப்பாட்டினா நல்லா இருக்காது பா ..." என சிவகாமி நயந்து பதிலளிக்க, அவர் சொல்வதும் சரி என்றே பட, செய்வதறியாது அவன் யோசனையில் மூழ்கி இருக்கும் போது , வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை சந்தையில் விற்றுவிட்டு குட்டி யானையை ஒட்டிக்கொண்டு பன்னீர்செல்வம் அங்கு வர,
"அக்கா, பன்னீர் அண்ணன் வந்துட்டாரு ... அவரை வண்டி எடுக்க சொல்றேன்...
நீங்களும் லட்சுமியும் குழந்தையோட அவர் கூட கிளம்பி போங்க ... நான் பைக்ல போயி வேலைய முடிச்சுட்டு, பைக்லயே எஸ்டேட்டுக்கு வந்துடறேன் ..." என துரிதமாக முடிவெடுத்தான்.
அடுத்த சில மணித்துளிகளில் பன்னீரிடம் பேசி முடித்தவன், காரில் குழந்தையோடு அமர்ந்திருந்த மனைவியிடம் விஷயத்தை பகிர்ந்து விட்டு
"லக்ஷ்மி, குழந்தையை அக்கா கிட்ட கொடுத்துட்டு நிம்மதியா சாஞ்சிக்க..... அண்ணே வண்டிய கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க .... " என அவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த பன்னீரிடம் அறிவுறுத்திக் கொண்டிருக்கும் போது முன்னிருக்கையில் அமர்ந்திருந்த லட்சுமியின் முகத்தில் பய ரேகைகள் மின்னலென விரவி பரவத் தொடங்க,
பேசி முடித்துவிட்டு மனைவியின் முகம் பார்த்தவனுள் அது சிறு அதிர்வை ஏற்படுத்த, ஒரு கணம் சிலையாகி போனான்.
உடனே சுதாரித்தவன்
"ஏய் லக்ஷ்மி ... பயப்படாதே ... நான் பைக்ல போறதால சீக்கிரமா போயிட்டு சீக்கிரமே வந்துடுவேன் .... சரியா ..." என்றவனுக்கும்
தொண்டைக் குழியில் சிக்கிய மீன் முள்ளாய் ஏதோ ஒன்று உறுத்த , துரிதமாய் அதனை ஒத்தி வைத்துவிட்டு தன்னவளின் தலைகோதி,
"ஜாக்கிரதையா இரு லட்சுமி ... குமட்டல் வந்தா பன்னீர் அண்ணன் கிட்ட சொல்லு ...
அவர் வண்டிய நிறுத்துவாரு ..." என்றெல்லாம் ஏதேதோ அறிவுரை கூறி முடித்ததும், பன்னீர்செல்வம் காரை கிளப்ப, காரில் இருந்து தலையை வெளியே நீட்டியபடி தன் மன்னவனை பார்த்துக் கொண்டே அவள் பயணத்தை தொடர, அதற்கு மேல் அவளை குற்றுயிரும் , குலையிருமாய் தான் பார்க்கப் போகிறோம் என அறியாமல் , தன் பெண் அணங்கின் உருவம் புள்ளியாய் மறையும் வரை தன்னை மறந்து உறைந்து நின்றான் நாயகன்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
keep rocking 💕💕💕💕💕
ReplyDeletethanks dr
DeleteSuper mam
ReplyDeletethanks dr
DeleteAchachoo sis.. periya accident ethachum pana poreengaloo. Lakshmi ku Aruna pota plan next ud la vechitingala. Y this kolaveri sis. Ramalakshmi marriage nalla nadakum nu path a twist mela twist
ReplyDeletethanks dr
Delete