ஸ்ரீ-ராமம்-123

 அத்தியாயம் 123 


"ஸ்ரீ,  உனக்கு தெரியாதது இல்ல, IT Concernல இதெல்லாம் ரொம்ப காமன் .... அவசரன்ற பட்சத்துல நான் கூட என் ஜூனியர்ஸ் கிட்ட நேரம் காலம் பாக்காம இப்படி வேலை வாங்கி இருக்கேன்.... அதனால  ராணா கேக்கறதுல எதுவும் தப்பா தெரியல,  உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு நானும் செய்றேன் ... இன்னைக்கு  நைட்டே கொட்டேஷன்ஸ முடிச்சு கொடுத்துடலாம்..."


என  தகவல் தொழில் நுட்ப துறையில்,  ஒரு பெரும் திட்ட வரைவின் துணை தலைவர் என்ற ரீதியிலேயே அவன் பேசி முடிக்க, அவளுக்கும் அது சரியென்றே  பட ,


"நீங்க நிம்மதியா தூங்குங்க....  கொட்டேஷன் ப்ரிப்பேர் பண்றது ஒன்னும் கஷ்டம் இல்ல .... நானே முடிச்சு கொடுத்துடறேன் ....."


என்றவள் வீட்டை அடைந்ததும் புத்துணர்வு பெற்று வந்து தன் மடிக்கணினியில்  வேலையை தொடங்க,


"ப்பா.... இப்படி ஜாலியா வெளிய ஊர சுத்திட்டு,  அம்மாவும் பாட்டியும் தூங்கினதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்தது ரொம்ப நல்லா இருக்கு இல்ல  ..." 


அவள் மனதில் இருந்ததை, படித்தது போல்  அவன் சொல்ல, அவள் மென் புன்னகை பூக்க, எப்பொழுதும் போல் அதை ரசித்தவன் 


"ம்ச்.... என்னென்னமோ வீகென்ட் நைட்  பிளான் வச்சிருந்தேன்.... எல்லாம் ஸ்பாயில் ஆயிடுச்சு ..."   என முடித்தான் ஏக்கமும் குறும்புமாய். 


"ஒரு ஒன் ஹவர்ல வேலைய முடிச்சுட்டு வந்துடறேன் ..."  


என வெட்கமும் புன்னகையுமாய் கூறியவள், அவனை  நெருங்கி கன்னத்தில் ஆழ்ந்த முத்தமிட்டு விட்டு,  இதழ் நோக்கி நெருங்க ,


" ம்ச்...  தூர போடி  ..."  என அவன் விலக 


"ஏன்....   நான் வர வரைக்கும் நீங்க ப்ரெஷா இருக்கணும் இல்ல .... அதுக்காக ஒரு மைல்ட் பேவரேஜ் ...." மீண்டும் அவள் குழைவோடு  நெருங்க ,


"நான்  மைல்டா சாப்டற மைண்ட் செட்ல இல்ல டி ... மெகா மீல்ஸ் சாப்டற மைக்செட்ல இருக்கேன் .... கிட்ட வந்த உன் வேலை கெட்டுப் போயிடும் ...ஒழுங்கா வேலைய முடிச்சு குடுத்துட்டு வா ..... "


அவன் மீண்டும் விலக, விடாமல்  அவன் உயரத்திற்கு எம்பி , கன்னத்தில் தன் பற் தடத்தை மென்மையாக பதித்தவள் ஒரு வெற்றிப் புன்னகையோடே விடை பெற,


"ரொம்ப படுத்தற டி .... போ... போய் ஒழுங்கா  வேலையை பாரு.... ஏதாவது  ஹெல்ப் வேணும்னா எழுப்பு ..."  என அவன் படுக்கையில் விழ, கணவனை காதலாய் பார்த்தபடி,  தன் பணியில் மூழ்கிப் போனாள் பெண் .


ஒரு மணி நேரத்தில் முடித்து விட எண்ணி   தொடங்கிய வேலையானது  ,  நள்ளிரவை கடந்த பின்பே முடிவுக்கு வர,  நிம்மதி பெருமூச்சு விட்டாள் பாவை.


கிட்டத்தட்ட அந்த இரண்டரை மணி நேரத்தில் நான்கு  முறை மட்டுமே  ராணா குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.


அதுவும் அவள் முடித்து மின்னஞ்சலில் அனுப்பி இருந்த வரைவுகளில் செய்ய வேண்டிய திருத்தத்தை மட்டுமே குறிப்பிட்டு செய்தி அனுப்பி இருந்தவன், பணி எல்லாம் முடிவுக்கு வந்ததும் இரவு வணக்கம் , உதவியதற்கு நன்றி ... என்ற தனிப்பட்ட செய்தியை அனுப்பிவிட்டு முடித்துக் கொள்ள, பெருத்த மன நிறைவோடு,  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனை ரசித்துப் பார்த்தபடி,  அவன் அருகில் சென்று படுத்துக்கொண்டு  நித்திரைக்காக அவள் கண்களை மூட, அங்கு ராணாவோ தன் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு  பெருத்த நிம்மதியோடு  தன் அறையில் இடவலமாக  நடை பயில தொடங்கினான். 


ஸ்ரீ , வீரா இருவருக்கும் இடையே ஆன அன்றைய  இரவின் தனிமையை கெடுத்தது அவனுக்கு ஒருவித நிம்மதி என்றால்,  ஸ்ரீ அவனோடு மெய் நிகராக (virtually)  கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இணைப்பிலிருந்தது ஏதோ அவள் அவன் அருகிலேயே அமர்ந்திருந்தது போலான உணர்வை கொடுத்திருக்க,  விடலை சிறுவன்  போல் எகுறி குதித்தவன் , கடைசியாக அவளிடம் இருந்து வந்த நல்லிரவு செய்தியை மீண்டும் ஒருமுறை கைபேசியில் தடவி பார்த்து  ரசித்து வாசித்தான். 


தினமும் அலுவலகத்திற்கு பிறகு, ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கிக் கொண்டு இப்படி அவளோடு  இரவு முழுவதும் மெய் நிகராக இணைந்திருக்க ஆசை தான் என்றாலும், அப்படிச் செய்தால், ஏதாவது ஒரு தருணத்தில் நிச்சயமாக, தன்னை இனம் கண்டு விடுவாள் , பிறகு கண்ணியமான நண்பனாக காட்டிக் கொண்டு நட்பை வளர்ப்பதெல்லாம் இயலாத காரியம் ,  என்பதோடு அவனது  எதிர்கால திட்டமும் கெட்டுப் போகும்  என்பதையெல்லாம்  கருத்தில் கொண்டு அடக்கி வாசிக்க முடிவு செய்தவன்,  பல்வேறு சிந்தனைகளுக்கு பிறகு வைகறையை நெருங்கும் போது தான் கண்ணயர்ந்து போனான். 


காலையில் எட்டு மணிக்கு  மேல் ஆதவனின் கிரணங்கள் சுள்ளென்று வீராவின்  முகத்தில்  படரவும்,  அவனது நண்பனிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.


அரைகுறை உறக்கத்தில்  அழைப்பை அனுமதித்தவனிடம், 


"வீரா,  இன்னைக்கு ஒரு நாள், மேட்ச் அட வாடா..... ..." என அவன் தோழன் ஈஸ்வர்  எடுத்த இடுப்பில் கெஞ்சுதலாக கேட்க,


ஒரு கணம் யோசித்தபடி மனைவியை பார்த்தவன், அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு 


"ஓகே,  இன்னும் அரை மணி நேரத்துல  அகாடமில இருப்பேன் ..." என அழைப்பை முடித்துக்கொண்டு  குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.


சில மணித்துளிகளில் அவன் புத்துணர்வு பெற்று வந்தும், அவனவள்  நிம்மதியான நித்திரையில்  லயித்திருக்க ,  whatsapp மூலம் அவளது அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவன் அவளது உறக்கத்தை கெடுக்காமல் பூனை நடை இட்டு அறையை விட்டு வெளியேறினான்.


மணி பதினொன்றை நெருங்கும் போது தான் வீராவின் கண்ணாட்டிக்கு விழிப்பு வர, லேசான தலைவலியோடு எழுந்தமர்ந்தவள், தன் அலைபேசியை தேடி புதிய அறிவிப்புகளை ஆராயும் போது,  கணவன் அனுப்பி இருந்த whatsapp செய்தி கண்ணில் பட, படிக்கும் போதே மென் புன்னகை பூத்தாள் பெண் .


பிரபல நிறுவனத்தின்,  பெரிய திட்ட வரைவின் துணைத் தலைவர் என்ற பதவி எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு, விடலை சிறுவன் போல்,  அவளவனின் கிரிக்கெட் மீதான காதல் , ரசிப்பை தர,


" யோவ் .... இன்னும் நீ வளரவே இல்லய்யா ..." 

என கொஞ்சனாள்  புகைப்படத்தில் இருந்தவனின் மீசையை பற்றி ...


பிறகு துரிதமாக புத்துணர்வு பெற்று,  கீழ் தளத்திற்கு சென்றவளிடம் 


"எப்பவும் சீக்கிரமே எந்திரிச்சிடுவ... இன்னைக்கு என்ன ஆச்சு ... சூரியன் உச்சிக்கு வர சொல்ல  தூங்கி ஏன்ஞ்சி வர ..."  


சுந்தராம்பாள் குத்தலாக நலம் விசாரிக்க,


"நேத்து நைட்டு கொஞ்சம் ஆபீஸ் வேலை இருந்தது பாட்டி .... தூங்கவே மணி ஒன்னு ஆயிடுச்சு...  அதான் ..." என்றாள் பெண் தன்மையாய். 


"ம்க்கும்... உன்னைய சொல்லி தப்பில்ல...நீ சொல்றதுக்கெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டறானே அவனை சொல்லோனும்.... வா சுருக்கா வந்து இட்லி சாப்டு ..." 


என்றவரிடம் மேற்கொண்டு பேச  மனம் இல்லாமல், வழக்கம் போல் இட்லியை தட்டில் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட தொடங்கியவளுக்கு,  'வின் வின்' என்று தலைவலி தெறிக்க ஆரம்பிக்க, வெகு சிரமப்பட்டு இட்லி விள்ளல்களை  தொண்டைக்குள் இறக்க தொடங்கினாள். 


"ஏன் ஒரு மாறி இருக்க பிரியா ...  உடம்பு சரி இல்லையா ...." தோட்டத்திலிருந்து வெளிப்பட்ட அகல்யா அவள் சிரமப்படுவதைக் கண்டு  கேட்க,


"தலை வலிக்குது அத்த..." என்றாள் சோர்வாய். 


"ராத்திரி  ஒரு மணி வரைக்கும் ஆஃபீஸ் வேலை பார்த்தா தலை வலிக்காம என்ன பண்ணும் ...."   ----- சுந்தராம்பாள்


"நீ ராத்திரி முழுக்க ஆபீஸ் வேலைய பாத்துட்டு தலைவலின்னு கஷ்டப்பட்டுகினு இருக்க ... அவன் என்னடான்னா காலங்காத்தால மட்டையை தூக்கினு கிரிக்கெட் விளையாட போயிட்டான் .... என்னமோ போ .... நீயும் அவனும் குடும்பம் நடத்தற அழக கண் கொண்டு பாக்க முடியல...... ...."  ---- அகல்யா அலுத்துக் கொள்ள ,


" பிரியா, நீ இவ்ளோ கஷ்டப்பட்டு  வேலை பார்த்து தான் ஆகணுமாம்மா..." முதன்முறையாக பொன்னம்பலம், தன் எதிர்மறை  கருத்தை மொழிய


"அது வந்து, மாமா ..." என்றவளின் பேச்சை இடைவெட்டி 


"இங்க பாரும்மா...  இத்தனை நாளா உன் வேலைய பத்தி நான் ஒண்ணுமே சொல்லல .... ஆனா இப்படி உடம்ப வருத்திகிட்டு நீ கஷ்டப்படுறத பார்க்க ரொம்ப சங்கடமா இருக்கு .... உனக்கு குடும்ப சூழல் நல்லா இருக்கிற நிலைமைல நீ இப்படி வேலைக்கு போய் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லயே .... இந்த உலகத்துல எல்லாத்தையும் விட ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்மா .... ஞாபகத்துல வச்சுக்க ..."  


வீட்டில் இருந்த பெரியவர்கள் அனைவரும்,  ஏதோ ஒரு விதத்தில்  தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய, பதில் பேசாமல் உண்டு முடித்தவள்,  பிறகு  அனைவருக்கும் மதிய உணவை துரிதமாக  தயாரித்து பரிமாறியதோடு  தானும் அரைகுறையாக கொறித்து விட்டு,  விட்டால் போதும் என அறைக்கு  செல்ல எத்தனிக்கும் போது ,


"பிரியா,  ரெண்டு தெருவு தள்ளி இருக்கிற நாகாத்தம்மன்  கோவிலுக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு  ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம் வரியா ...." 


அகல்யாவின் குரல் தடுக்க,   அவளுக்குமே அது உவப்பைத் தர,


"ஓகே அத்த... போலாம் ... " என்றாள்  மனநிறைவோடு.


கிளி பச்சை நிறத்தில் பாக்கு நிற பார்டர்  கொண்ட செட்டிநாடு பருத்தி புடவையை  மூன்று பட்டை எடுத்து தழைய தழைய  அணிந்து வந்தவளுக்கு, தொடுத்து வைத்திருந்த ஜாதி மல்லியை தலையில் சூட்டி அழகு பார்த்த சுந்தராம்பாள்,


"ம்ம்ம்ம்.... சும்மா சொல்லக்கூடாது இந்த சாதாரண பருத்தி புடவைலயே அம்சமா தேன் இருக்க....   கொஞ்சம் சதை புடிச்சா இன்னும் அழகா இருப்ப....   கூடிய சீக்கிரம் உன்னை மாறியே ஒரு பொட்ட புள்ள பொறக்கணும்னு அம்மனை வேண்டிக்க... சரியா ...."   

என  கன்னம் வழித்து திருஷ்டி கழிக்க, ஏனோ அவர் கடைசியாய் மொழிந்த அந்த வார்த்தைகள் நம்பிக்கை தராமல்,  ஒருவித பயத்தை உள்ளுணர்வில் மின்னலென விதைக்க, அமைதியாகி போனாள் மடந்தை. 


கோவிலில் நாகங்களின் தலைவியாக காட்சியளித்த, அந்த அம்மனின்  தீட்சண்ய ஸ்வரூபம் அவள்  மனதை வெகுவாக  கொள்ளை கொள்ள,  ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதி மனம் எங்கும் பரவ, மெய்யுருகி பிரார்த்தித்தாள்.


பிறகு சற்று நேரம் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்து விட்டு, மூவரும் ஆட்டோவில் கிளம்பி  இரவு சுமார் 8 மணி அளவில் வீடு வந்து சேர,  அவர்களைக் கூடத்தில் எதிர்கொண்டு வரவேற்ற வீரா,


"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி இருந்தா  நான் வந்து  உங்களை கோவிலுக்கு கூட்டிகிட்டு போயிருப்பேனே ..." என்றான் பார்வையை மனைவியின் மீது ரசனையாய் பதித்து.


"கிரிக்கெட் விளையாட போய்ட்டா, நீ உலகத்தையே மறந்திடுவ ... ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்ட... உன்னைய நம்பி  காத்துகெடந்தா எங்க வேலை தான் கெட்டுப் போவும் ... அதான் ஆட்டோலயே போயிட்டு , ஆட்டோலயே வந்துட்டோம் ..." 

வழக்கம் போல் வெடுக்கென சுந்தராம்பாள் மொழிய,


"நானும் அப்பாவும் தோசை சுட்டு சாப்ட்டுடோம் .... உங்க எல்லாருக்கும் தோசை சுட்டு ஹாட் பாக்ல வச்சிருக்கோம்  ....  சூடு ஆறுறதுக்குள்ள சாப்பிடுங்க ...." 


என வந்தவர்களை பார்த்து கூறிவிட்டு  அவன் தன் அறைக்கு விடைபெற,  ஸ்ரீக்கு இரவு உணவு  சமைக்கும் பணி இல்லை என்பதே,  புத்துணர்வு   பானம் அருந்தியது போல் ஒரு வித உற்சாகத்தை தர ,  துரிதமாக பெரிய பெண்களுக்கு பரிமாறி விட்டு தானும் அவசர அவசரமாக உண்டு விட்டு  தன்னவனை காண தன் அறைக்குச் சென்றாள் .


அலைபேசியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தவன்,  தன்னவளின் கொலுசொலி அரவத்தைக் கேட்டு விழி மலர்த்தி பார்க்க,


"மேட்ச் எப்படி போச்சு .... யார் வின் பண்ணா...."  அவன் மனையாட்டி கேள்விகளை அடுக்கியபடி அவனை நெருங்க, 


"ரொம்ப நல்லா போச்சு .... எங்க டீம் தான் லீடிங்ல இருக்கு .... நாளைக்கும்  கண்டினியூ ஆகுது .... போட்டுமா ..." என்றவன்  அவள் இடை  வளைத்து தன்னோடு அணைத்துக் கொள்ள,


"அதுக்கு என்ன... போயிட்டு வாங்க ... நீங்களே எப்பயாவது தான விளையாட போறீங்க ..."

என்றவளின்  விழிகளில் கிறங்கியவன் ,

"இந்த புடவைல ரொம்ப அழகா இருக்க..."  என்றான் சரசமாய். 


"நெஜமாவா ... புடவையே கட்ட வராது .... இது காட்டன் புடவை வேற ... பாந்தமா உடுத்த தெரியாம அள்ளி போட்டுக்கிட்டு இருக்கேன் ... இத போய் நல்லா இருக்குன்னு சொல்றீங்களே...."


"கடை பொம்மைக்கு கட்ற மாதிரி, மடிப்பெல்லாம் வச்சு அயன் பண்ணி கட்றத விட இப்படி சாதாரணமா புடவைய அள்ளிப் போர்த்துக்கிட்டு  இருக்கிறது  இயல்பா அம்சமா  இருக்கு தெரியுமா ....  அளவெடுத்து வரைஞ்ச ஓவியம் ஒரு விதத்துல  அழகுன்னா, அள்ளித் தெளிச்ச  சித்திரம் வேற வகைல அழகு .... அதெல்லாம் சொன்னா புரியாது .... ரசிச்சா தான் புரியும் ... உன் தலையில இருக்கிற ஜாதிமல்லி மேக்ஸ் யூ மோர்  ஹோம்லி டா பட்டு ..."  


"பாட்டி  தான் வச்சு விட்டாங்க .... ஒரு பக்கம்  நீளமா,  இன்னொரு பக்கம்  குட்டையா பாவம் வெக்க தெரியாம வச்சிட்டாங்க  ..."


"அதாண்டி இன்னும் அழகா இருக்க ..." என்றான் அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி .


"என்ன .... இன்னைக்கு AVR எக்கச்சக்கமா அளந்து விடறாரு ..."


"உண்மைய சொன்ன உருட்டுன்னு சொல்றியா .... உன்ன ..."


என்றவன் அவள் இதழோடு தன் இதழை  சேர்த்து தன் வேட்கையையும்,  விருப்பத்தையும் அவளுள் கடத்த, பெண்ணவளும் அவனுக்கு இணையாக தன்  தளிர் இதழால் அவன் நாவை சிறைபிடிக்க,  ஊற்றெடுத்த அமிர்தம் உற்சாக பானமாய் செயல்பட, கண நேரத்தில் நாயகியை கைகளில் அள்ளிக் கொண்டு இரவு விளக்கை ஒளிர விட்டு  படுக்கையில் தஞ்சமடைந்தவன் , சேர்த்து வைத்திருந்த  தாபத்தை தணித்துக்கொள்ளும் முயற்சியில் முழு வீச்சில் மும்மரமாய் இறங்க, கலவிக்களம் மென் போர்க்களமாய் ஆகிப்போக,  கொலுசொலியும்  வளையோசையும் போர் முழக்கமாய் முழங்கிய நிலையில் அழகான கூடலொன்று ஆழமும் அற்புதமுமாய் அங்கு  அரங்கேற தொடங்கின.

மறுநாள் கதிரவனின் கிரணங்கள் கிற்றுகளாக பூமியில் படரும் பொழுது   கண் விழித்தவன், அருகில் அயர்ந்திருந்தவளை  ஓரிரு கணம் ரசனையாய்  பார்த்துவிட்டு,  குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.


புத்துணர்வு பெற்று  மட்டைப்பந்து விளையாடுவதற்காக துரிதமாக கிளம்பி கீழ் தளத்திற்கு சென்றவனிடம் 


"இன்னைக்கும் கிரிக்கெட் விளையாட போவணுமா ....  " 

என அகல்யா ஆரம்பிக்க , வீரா சற்று கோபத்தோடு முறைத்துப் பார்க்க, 


"சரி சரி முறைக்காத டா ... சுட சுட பூரி போட்டு வச்சிருக்கேன்... சாப்பிட்டு டீ குடிச்சிட்டு கிளம்பு ..."   என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த சுந்தராம்பாள்,


"எங்கடா உன் பொண்டாட்டி .... தூங்கிக்கினு  இருக்காளா....  நேத்து ராத்திரியும் ஆபீஸ் வேலை பார்த்தாளா... " 

கேள்விகளை சரமாரியாக அடக்க, பதில் சொல்லத் தெரியாமல் அவன் திணற, 


" நேத்தைக்கு  காலையில 11 மணிக்கு தேன் உன் பொண்டாட்டி டிபன் சாப்பிடவே வந்தா....... வந்ததும் தலைவலின்னு சொன்னா.... வச்ச 2 இட்லியை கூட  சாப்பிட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டா..."


அவர் பேசிக் கொண்டே செல்ல,  


நேத்தைக்கும் அவளுக்கு  தலைவலியா... சொல்லவே இல்லையே ....


அவன் அதிர்ந்து யோசிக்க,


"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத .... எல்லா பொட்டச்சி உடம்பும் ஒரே மாறி இருக்காது ... அதுவும் உன் பொண்டாட்டி பத்து வயசு புள்ள கணக்கா  சாப்டுகினு இருக்கா... கன்னி பொண்ணா இருக்க சொல்ல கம்மியா சாப்பிட்டா தப்பில்லய்யா  ... இப்பவும் அப்படியே சாப்பிட்டா எப்படி .... புள்ள பெத்துக்க எம்புட்டு  தெம்பு வேணுமோ அம்புட்டு தெம்பு புள்ள உண்டாவவும் வேணுமில்ல.... இப்படி ஆபீஸ், வேலைன்னு பாத்துக்கினு சரியாவும் சாப்பிடாம இருந்தா,  பேருக்கு வேணா பொண்டாட்டியா இருக்கலாம் .... புள்ள பெத்துக்கெல்லாம்  முடியாது...."


அவர் வெடுக்கென்று முடிக்க,  அவன் உறைந்து போனான்.


அவன் அறிந்த வரையில்,  அவள் என்றைக்கு பணியில் சேர்ந்தாளோ, அன்றிலிருந்து தான் தலைவலி அவளை பாடப் படுத்திக் கொண்டிருக்கிறது ....

என்ற சிந்தனையில் அவன் மூழ்கி இருக்கும் பொழுது ,


"எய்யா...  சந்தோசமா இருக்கியா நீயி....." சந்தேகத்தோடு பெரியவரிடம் இருந்து அர்த்தபுஷ்டியான  கேள்வி வந்து விழ, அவரது பார்வையும் கேட்ட தொனியுமே எதைக் கேட்கிறார் என்பதை சொல்லாமல் சொல்ல, 


" உன் பொண்டாட்டி உன்னை சந்தோசமா வச்சிருக்காளா...."  அடுத்த கேள்வியும் அவர்களது அந்தரங்கத்தை பற்றியதாகவே இருக்க, சுய உணர்ந்தவன்,


"ம்ச்.... என்ன பாட்டி .... இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேக்கற...  சந்தோஷமா இருக்கோம் ... சந்தோஷமா இருக்கேன்..... போதுமா ..." 


என்ற பதிலை மூதாட்டிக்கு சொன்னாலும், அவன் உள்ளுணர்வு அதில் இருக்கும் சமீபத்திய  சுணக்கத்தை எடுத்துச் சொல்ல, உள்ளுக்குள்ளேயே அவசரகதியில் அசை போட தொடங்கினான்.


திருமணம் முடிந்து ஆஸ்திரேலியா சென்று வந்த வரையில் அவர்களது தாம்பத்திய வாழ்க்கை இனிமையாகவே இருந்தது ...


ஆனால் என்று பணியில் சேர்ந்தாளோ , அன்றிலிருந்து தலைவலி வந்ததோடு  தாம்பத்தியத்திலும் மாற்றங்கள்  ....


தலைவலியால் தூக்கமின்மை என்பதோடு அவனது வேகத்திற்கும் வீரியத்திற்கும் அவளால்  ஈடு கொடுக்க முடியவில்லை என்பதும்,  அப்போது தான் அவனுக்கு  மெதுவாக உரைக்கத் தொடங்க முன்தின இரவு கூட , அனைத்தும் அழகாகத்தான் தொடங்கியது ... ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் களைப்பும் சோர்வும் அவளை வாட்டி வதைத்ததும் நினைவுக்கு வர,  பேச்சிழந்து போனான் அந்தக் காளை.


"என்னடா ....  சமஞ்ச பொண்ணு மாறி , உரைஞ்சு நிக்கற..."  பாட்டியின் வார்த்தைகள்,  நிகழ் உலகத்திற்கு கொண்டு வர  ,


"ஒன்னும் இல்ல பாட்டி .... இன்னைக்கு கிரிக்கெட்ல எங்க டீம் ஜெயிக்கணும்... அத பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் ..."


"வெளங்கிடும் போ .... இம்புட்டு சொல்லியும் கிரிக்கெட்ட பத்தி யோசிகினு இருக்கானாம்....  என்னத்த சொல்ல .... வந்தது தான் சரி இல்லன்னு நினைச்சா .... வாய்ச்சதும் சரியில்லாம இல்ல இருக்கு .... ஈசா...." 

என அவர் விடை பெற,  தன் தாய்க்கும் மகனுக்கும் இடையேயான சம்பாஷணையை  அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவும்,  அவனை உறுத்துப் பார்த்து விட்டு இடத்தை காலி செய்ய, மூச்சு முட்டுவது போல் உணர்ந்தவன், வேகவேகமாக உணவை அள்ளி விழுங்கி விட்டு,  இருசக்கர வாகனத்தில் பஞ்சாய் பறந்தான்.


அவன் கிளம்பிச் சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகே விழித்தெழுந்தவளுக்கு,  புதுவித சோர்வு வாட்டி வதைக்க,  அப்படியே சற்று நேரம் விட்டத்தை வெறித்த படி படுத்து கிடந்தாள்.


இரவில் மூன்றாம் ஜாமம் கடந்தே தூங்கினாலும்  அதிகாலையில் விழித்தெழுவது தான்  அவளிடம் அவளுக்கே பிடித்த பிரத்தியேக பழக்கம் ....


ஆனால் கடந்த இரு தினங்களாக எவ்வளவு முயன்றும் அதனை தொடர முடியாமல் போவது வருத்தத்தை கொடுக்க,  மறு தினத்திலிருந்து  வழக்கத்தை பின்பற்ற  வேண்டும் என்ற உறுதிமொழி பூண்டபடி புத்துணர்வு பெற சென்றவள் துரிதமாக குளித்து முடித்து உடைமாற்றி தலை சீவி கீழ் தளத்திற்கு செல்ல முனையும் போது,  ஏனோ அவள் மனம் கணவனை தேடியது. 


 திருமணமான இந்த சொற்ப காலத்தில், ஒரு புதுவித பழக்கம் அவளே அறியாமல்  அவளிடம்  முளைத்திருந்தது எனலாம். 


அடிக்கடி தாய்,  தம்பியோடு அலைபேசியில் உரையாடினாலும்,  அவர்களிடம் 100% நல்லவைகளை மட்டுமே பகிர்வாள் ...


ஆனால் அவளது உள்ளக்கிடக்கை , மன அழுத்தம்,  உடல்நிலை பாதிப்பு, உள்ளுணர்வு பயம், தோல்வி போன்ற  பலவித  எதிர்மறை நிகழ்வுகளை  எந்தவித தயக்கமும் இல்லாமல் தன் கணவனிடம் மட்டும் தான் பகிர்வாள் ...

அவனும் பொறுமையாக காது கொடுத்து கேட்பதோடு,  அதற்கு தன்னாலான தீர்வையும் தேடித் தருவான் ...


இப்படி தோழனாக இருக்கும் கணவனை மனம் தேட, திருமணத்திற்கு பிறகு அவனுக்கென அவன் ஒதுக்கும் நேரம் மிகக் குறைவு என்பதும் நினைவுக்கு வர   மாலையில் பேசிக் கொள்ளலாம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு கீழ் தளத்திற்கு சென்றாள்.


அகல்யா அன்புவோடு அலைபேசியில், சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருக்க,  சுந்தராம்பாள் தொலைக்காட்சியில் மூழ்கி இருக்க,  காலை உணவை உண்டு முடித்தவள்,  மதிய உணவிற்கான வேலையில் மும்மரமாக இறங்கினாள்.


இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஒரு சில சலசலப்புக்கள் இருந்தாலும்,  பெரிதாக ஏதுமில்லாமல் அன்றைய தினம் அமைதியாகவே கழிய, மாலையில் கணவனை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு  அவனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது.


அதில் இரவு வீடு திரும்ப தாமதமாகும் என  குறிப்பிட்டு இருக்க,  மீண்டும் மனச்சோர்வு அவளை ஆக்கிரமிக்க,   வேண்டா வெறுப்பாக இரவு உணவை கொறித்து விட்டு படுக்கையில் வந்து விழுந்தாள்.


நள்ளிரவை கடக்கும் போது, தன்னவனின் அணைப்பை ஆழ்ந்த நித்திரையிலும் உணர்ந்தவள் ,


"ராம், சா.... சாப்பிட்டீங்களா .... எ... எங்க போயிருந்தீங்க....  "   என அவள் அரைத்தூக்கத்தில் குழற,


"ஈஸ்வர் வீட்டுக்கு போயிருந்தேன்ம்மா.... அவங்க வீட்டிலயே டின்னர் சாப்பிட்டேன்... நோ மோர் கொஸ்டின்ஸ்... காலையில பேசிக்கலாம்... இப்ப நிம்மதியா  தூங்கு ...."  என மேற்கொண்டு பேச விழைந்தவளை தடுத்து  தன் மார்போடு புதைத்து கொண்டு அவன் உறக்கத்தை தழுவ , அந்த அணைப்பு கொடுத்த கதகதப்பு அவளுக்கும் அமைதியை தர,  ஆழ்ந்த நித்திரை அம்சமாக அவர்களை ஆட்கொண்டது. 


மறுநாள் காலை,  வழக்கமான ஒன்றாக தொடங்கியது.


சுந்தராம்பாள் வந்ததிலிருந்து,  காலை உணவிற்கு முன்பு போல்  அகல்யா உதவு ஆரம்பித்திருந்ததால், அதிக சிரமம் இல்லாமல்  துரிதமாக அலுவலகத்திற்கு தயாரானவள்,  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கணவனை ஒரு கணம் லயித்துப் பார்த்துவிட்டு, தனக்காக காத்துக் கொண்டிருந்த கேப்பில் ஏறி அலுவலகத்திற்கு பயணப்பட்டாள்.


அலுவலகத்தில் தன் தளத்தை அடைந்து,   இருக்கையில் அமர்ந்த மறு நொடியே உள் தொலைபேசி சிணுங்க,


அதுக்குள்ள யாரா இருக்கும்....


 என்றெண்ணியபடி  அழைப்பை அனுமதித்தவளிடம் 


"ஸ்ரீ,  என் ஆபீஸ் ரூமுக்கு கொஞ்சம் வர முடியுமா ..."  என்றான் ராணா வெகு லேசான குழைந்த குரலில்.


இப்ப தான் என் சீட்டுக்கே வந்தேன் .... அதுக்குள்ள நான் வந்ததை தெரிஞ்சுகிட்டு எப்படி தான் போன் பண்றாரோ.... ஒருவேளை பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் சிஸ்டம் அவர் லேப்டாப்போட  கனெக்ட் ஆயிருக்குமோ .....  தனக்குத்தானே பேசிக்கொண்டு,  அவன் அறையை அடைந்தாள்.


வந்தவளைப் பார்த்ததும்,  ஏதோ நீண்ட நாள் பிரிந்திருந்த காதலியை பார்ப்பது போல் ஆச்சரியமும் ஆசையுமாய் பார்த்தவன்,


"ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்,  உனக்கு  தேங்க்ஸ் சொல்லணும் ... அப்புறம் உன் தலையில சின்னதா ஒரு  கொட்டு கொட்டணும் ..." என

வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மெல்லிய கருப்பு கோடுகள் போட்ட முழு கை சட்டை,  கருப்பு நிற பேண்ட் சகிதமாக,  அவள் அந்த அலுவலகத்தில் சேர்ந்த தினத்தைக் காட்டிலும்,  பத்து வயது குறைந்தாற் போல் உற்சாகமாக காணப்பட்டவன் , துள்ளலாய் பேச,


"தேங்க்ஸ் ஓகே ... அது என்ன கொட்டு ..." என்றாள் ஸ்ரீ மென் புன்னகையோடு .


"இங்க வா ....."  என தன் அறையின் பறந்து விரிந்த  ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு  அவளை அவன் அழைக்க, லேசான தயக்கத்தோடு மெதுவாக அந்த ஜன்னலை நோக்கி அவள் நடைபயில,


"அதோ....  அங்க பாரு .....  அவங்க எல்லாம் யாரு...... ...."  என்றான் லேசான குறுநகையில் .


"அவங்க ......??? பிச்சைக்காரங்க ...." அவ யோசனையோடே பதில் அளிக்க ,


"ஃப்ரைடே நைட்  நீ ப்ரிப்பேர் பண்ணி அனுப்பின கொட்டேஷன்ஸ நான் கிராஸ் செக் பண்ணி சேஞ்சஸ்  பண்ணாம  கிளைண்டுக்கு அனுப்பி இருந்தேன்னா,  இப்ப நான் கூட  அவங்க பக்கத்துல  தட்ட வச்சிகிட்டு ஒக்காந்திருக்கணும் . ..."


கண்களில் மட்டும் சிரிப்பை காட்டி,  இயல்பு போல அவன் சொல்ல,


" அச்சச்சோ .... அவ்ளோ பெரிய தப்பா பண்ணி இருந்தேன்  .....  அப்பப்பா ..." அவள் கண்களை அகல விரிக்க


"ஆமாம்பா .... அது தப்பப்பா ....." என சிரித்தபடி

தன்னுடைய மடிக்கணினியில் கணக்கீடுகளை காட்டி அவன் விளக்க, மலைத்துப் போனாள் பெண். 




அவளது கவனம் முழுவதும்,  தான் செய்திருந்த  மாபெரும் பிழையை அறிந்து கொள்வதிலேயே இருக்க,  அவனுக்கோ அவளது அருகாமை ஆக்சிடோஸினையும் டோப்போமைனையும் வகைத்தொகை இல்லாமல் உடலில் ஊற்றெடுக்க செய்ய, சிரமப்பட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அவன் போராடிக் கொண்டிருக்கும் போது , அவனது உள் தொலைபேசிக்கு  அழைப்பு வந்தது.


திலக் தான் அழைத்திருந்தான்.  ஸ்பீக்கரில் போட்டவன் 


"சொல்லு திலக் ...." என்றதுமே 


"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ..." 

என்றான் எடுத்த இடத்தில் காட்டமாக .


"பேசலாமே .... இன்னைக்கு  ஈவினிங் வீட்டுக்கு வா பேசலாம் ...."


"இன்னும் 5 நாளைக்கு  எனக்கு சில முக்கிய வேலங்க இருக்கு .... இப்ப உன் கூட ஆற  அமர ஒக்காந்து டிஸ்கஸ் பண்ண எல்லாம் நேரமில்லை ....  கம்மிங் மண்டே '&&&&' ஹோட்டலுக்கு வந்துடு .... அங்க பேசிக்கலாம் " என்றவன் வெடுக்கென்று  அழைப்பை துண்டிக்க, தனது உரையாடலை கண்டு கொண்டாளா, என ராணா  கீழ்க்கண்ணால் அருகில் இருந்தவளை  நோட்டமிட , அவளோ கருமமே கண்ணாக , கணக்கீடுகளில் மூழ்கி இருக்க , அவளது தளிர் விரல்கள் , மடிக்கணினியில் ஆனாயாசமாக  தாண்டவமாடுவதை ரசித்துப் பார்த்தவன்,


"ஸ்ரீ... நீ லெஃப்டீயா ...."  என்றான் ஆச்சரியத்தோடு .


" ம்ம்ம்...  ஆமா...."


" ஏய்.... நானும் லெஃப்டீ தான்..." 


அவள் அமைதியாய் மென் புன்னகையில் ஆமோதிக்க 


"எனிவே , ஆண்டனி, கயலோட வேலைகளை சேர்த்து செஞ்சதுக்கும், என்னை பிச்சை எடுக்காம வச்சதுக்கும் , ஷல் வீ கோ ஃபார் எ காபி ...." 

அவன் உற்சாகமாய் கேட்க,  நெருப்பிலிட்ட தளிர்வாழையாய் அவள் முகம் கண நேரத்தில் சுருங்கி போக,  உடனே சுதாரித்தவன்,


"வெளிய போகணும்னு கூட கிடையாது ...  

இங்கயே காபி ஆர்டர் பண்ணட்டுமா ..." 


இயல்பு போல அவன் வினவ,


"வே...வேணாம்.... எனக்கு காபி , டீ எல்லாம் பழக்கம் இல்ல.... " என முடித்தாள் ஸ்ருதி குறைந்து.


" இட்ஸ் ஓகே .... ......"


அவளது முகமாற்றமும்,  சட்டென்று மனிதர்களை தள்ளி நிறுத்தும் பாங்கும்,  அவனுள் கனலைக் கக்கினாலும்,  துளிகூட வெளிக்காட்டிக் கொள்ளாமல், புன்னகையோடே அவன் பேச்சை மாற்ற, 


"கார்த்திகேயன் ரிப்போர்ட்ஸ்  ப்ரிபேர் பண்ற வொர்க்க அசைன் பண்ணி இருக்காரு ... ஷல் ஐ லீவ் நவ்..... " என பட்டு கத்தரித்தார் போல் அவள் கேட்க,  


" ஷூயூர்... "  என ஒட்ட வைத்த புன்னகையில் விடை கொடுத்தவன், அவளை தன் வழிக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல  என்பதை  சற்று அதிகமாகவே உணர,   மனம் தளராத விக்ரமாதித்தனாய் மாற்று வழியை மானசீகமாக தேர்ந்தெடுக்கும் சிந்தனையில் மூழ்கிப் போனான். 


அவள் தன் இருக்கை நோக்கி வரும் போதே வீராவிடமிருந்து அழைப்பு வர, அங்கிருந்த பரந்து விரிந்த தாழ்வாரத்தில் நடந்தபடி உற்சாகமாய் அழைப்பை  அனுமதித்தவள்,


"என்ன... தூங்கி எழுந்துட்டீங்களா .... " என்றாள் காதலாய். 


"ஹாஃப் அண்ட் ஹவருக்கு முன்னாடி தான் எழுந்தேன் ...  ஆபீஸ்க்கு போகும் போது என்னை எழுப்பிருக்கலாமே டி ... "


"நிம்மதியா தூங்கிட்டு இருந்தீங்க ... அதான் எழுப்பல...."


" சரி, லீவ் அப்ளை பண்ணிட்டியா ..."


"என்ன லீவு ...."


"கிழிஞ்சது போ ... நாளைக்கு நாம ஊட்டிக்கு ஸ்ரீனி கல்யாணத்துக்கு போறோம்  இல்ல .... மறந்துட்டியா ..."


"அட ஆமா ... மறந்தே போயிட்டேன் ....   இப்பவே போய் கார்த்திகேயன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு , லீவ் அப்ளை பண்ணிடறேன்..."


"தட்ஸ் மை கேர்ள் ..."  என்றவன் மேற்கொண்டு ஓரிரு வரிகள் பேசிவிட்டு  அழைப்பை துண்டித்ததும்,  சற்றும் தாமதிக்காமல் கார்த்திகேயனின் கேபினை நோக்கி நடை போட்டாள் .


ஆண்டனி மற்றும் கயலின் பணிகளைக் கடந்த நான்கு நாட்களாக அவள் செய்து வருவதால்,  விடுப்பு கேட்டதுமே கார்த்திகேயன் சம்மதிக்க,  மிகுந்த மகிழ்ச்சியோடு  தன் இருக்கைக்குத் திரும்பியவள்,  அன்றைய தினம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு செயல்பட்டு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துவிட்டு  வீட்டிற்கு பயணப்பட, அப்போது  வாடிக்கையாளர் அனுப்பி இருந்த திட்ட வரைவு  கணக்கீடு குறித்து கலந்துரையாட கார்த்திகேயனை  தன் அறைக்கு அழைத்தான் ராணா. 


முதலில் சில மணித்துளிகள் திட்ட வரைவு கணிதங்களை பற்றி பேசியவன், 


"நாளைக்கு ஸ்ரீ கிட்ட,  இந்த கிளையன்ட்  கொட்டேஷன காட்டி ...."   என சொல்லிக் கொண்டே சென்றவனின் பேச்சை இடை மறித்து


"நாளைல இருந்து மூணு நாளைக்கு ஸ்ரீப்ரியா  லீவு ராணா....  அவங்க ப்ரண்டோட கல்யாணத்துக்கு போறாங்களாம் .... " என கார்த்திகேயன் சொல்ல 


"வாட் ....." என்றான் தன்னை மறந்து பேரதிர்ச்சியில்.


அப்படி ஒரு முக பாவத்தை அதுவரையில்  கண்டதில்லை என்பதால் கார்த்திகேயன் லேசாக அதிர்ந்து,  ராணாவை வித்தியாசமாக நோக்க,


"ஐ மீன்...... இட்ஸ் வெரி பேட் ...  ஏற்கனவே ஆண்டனி கயல் லீவ் .... ஸ்ரீயும் லீவு எடுத்தா... அப்புறம்  யாரு தான் வேலை பார்க்கிறது .... " 


உள்ளுக்குள் கார்த்திகேயனை கண்ட கண்ட வார்த்தைகளால் கடிந்து கொண்டே,  வெளியில் அவன் வேறு காரணம் சொல்ல,


"இதுவரைக்கும்  ஸ்ரீப்ரியா லீவு கேட்டதே இல்ல... அது மட்டும் இல்ல அவங்களுக்கு அசைன் பண்ண எல்லா வொர்க்கயும் முடிச்சு கொடுத்துட்டு தான் போயிருக்காங்க ..."  கார்த்திகேயன் மேலும்  விளக்கம் அளிக்க,  


"அப்ப இந்த விஷயத்தை இன்னும் மூணு நாள் தள்ளி போடணும்னு சொல்றீங்க ... எனிவே  இட்ஸ் ஓகே....  "  என வேண்டா வெறுப்பாக கூறி கார்த்திகேயனை அனுப்பிவிட்டு, இரைக்கு காத்திருக்கும் வேட்டை புலியாய் இடவலமாக தன் அறையில் நடைபயில தொடங்கினான். 

வீட்டை அடைந்தவள் , புத்துணர்வு பெற்று வந்து மிகுந்த உற்சாகத்தோடு இரவு உணவு  தயாரித்து முடித்து வீட்டுப் பெரியவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டு வாயிலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்க,  


" ஆட்டோ சத்தம் கேக்குது .... யாரா இருக்கும்......."  சுந்தராம்பாள் சொல்ல,


" நீங்க சாப்பிடுங்க பாட்டி... நான் போய் பார்க்கறேன்..."  என்றவள் வீட்டு வாயிலை அடையும் போது வீரா ஆட்டோக்காரருக்கு பணம் கொடுப்பது தெரிய,  


" நம்ம கார் எங்க ராம் ..." என்றாள் புரியாமல். 


" கார் ஓட ஹெட்லைட் உடைஞ்சு போச்சு .. வொர்க் ஷாப்ல விட்டிருக்கேன்... " என்றவன் வேகமாக கூடத்தைக் கடக்கும் போது தான்

அவனது வலது கையின் கடைசி மூன்று விரல்களில் கட்டு போடப்பட்டிருப்பது தெரிய,


"கையில எப்படி அடிபட்டது ராம் ...." என்றாள் பதறி.


" திரும்பும் போது ராங் சைடுல ஒரு சின்ன பையன் பைக்ல வந்துட்டான்... அவன் மேல இடிச்சிட கூடாதுன்னு ஓரம் கட்ட பார்த்தேன் ... ஆனா  வண்டி பிரிட்ஜ் ஓட ஆர்ச் ஓபன்ல மோதிடுச்சு .... அதனால கை விரல்ல அடிபட்டுடுச்சு  ..."


"அதுக்கு இவ்ளோ பெரிய கட்டா போடுவாங்க.... பொய் சொல்லாம சொல்லுங்க..... ... என்ன ஆச்சு ..." 

அவள் பதைப்பதைக்க , வீட்டு பெரியவர்களும் அவனை சூழ்ந்து கொண்டு கேள்விக்கணைகளை தொடுக்க, பொறுமையாக பதில் அளித்தவன் 


"ஃபிராக்சர் எல்லாம்  எதுவும் இல்ல ... ஜஸ்ட் வீக்கம் தான் .... இன்னும் ரெண்டு மூணு நாள்ல சரியாயிடும்னு டாக்டர் சொல்லி இருக்காரு ....."

என முடிக்கும் போது  , அவனது அலைபேசி ஒலித்தது.


ராம்சரண் தான் அழைத்திருந்தான்.


" வீரா,  லீவ்  அப்ளை பண்ணிட்ட இல்ல .... நாளைக்கு நீயும் ஸ்ரீப்ரியாவும் காலையில கிளம்பி வரீங்க தானே ...." என்றான்   எடுத்த இடத்தில் உற்சாகமாய்.


"ஆமா சரண்,  நாளைக்கு மதியம் கிளம்பி ஈவினிங்குள்ள அங்க வந்துடுவோம் ...."


" குட் வீரா , ரிமைண்ட் பண்ண தான் போன் பண்ணேன் ...வீ வில் மீட் டுமாரோ ..." 

மிகுந்த மகிழ்ச்சியோடு அழைப்பை துண்டித்தான், அவன் கனவிலும் எதிர்பார்க்காத நிகழ்வுகள் எல்லாம் வரிசை கட்டி அரங்கேற காத்துக் கொண்டிருப்பதை அறியாமல் .


நண்பனுடன் பேசி முடித்தவனை  சுந்தராம்பாளும் அகல்யாவும்  கோபத்தோடு பார்த்துக் கொண்டே நிற்க, அவர்களைக் கண்டு கொள்ளாமல்  தன் அறைக்குச் செல்ல வீரா படி ஏற 


"அடேய்...  உனக்கு கொஞ்சமாச்சும் கூறு இருக்கா .... காரை எங்கயோ கொண்டு போய் மோதி,  கைய ஒடிச்சுகினு வந்திருக்க .... இந்த லட்சணத்துல நாளைக்கு ஊட்டிக்கு போறயாக்கும் ..." 


சுந்தராம்பாள் வசை பாடத் தொடங்க,  எரிச்சலோடு திரும்பிப் பார்த்தான் வீரா .



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....





 


















 















 











































 

 



























 































Comments

Post a Comment