அத்தியாயம் 122
காரின் மறுபுறத்தில் சற்று மறைந்து நின்றபடி, வகைத்தொகை இல்லாத வன்மமும் கோபமாய் வருபவனையே உறுத்து நோக்கிக் கொண்டிருந்த ராம்சரண், வெற்றி காரை நெருங்கியதும் அவன் முன் மின்னலென பிரத்யட்சமாக, சற்றும் எதிர்பார்க்காத அவன் வரவில் பேரதிர்ச்சி அடைந்த வெற்றி, உறைந்து நிற்க, அவனை பஸ்பமாக்கி விடும் தீ பார்வை பார்த்தபடி ராம்சரண் நெருங்க, கண நேரத்தில் சுதாரித்தவன்,
"எப்படி இருக்க சரண் ... " என்றான் ரெடிமேட் புன்னகையோடு .
அருணா மூலம் ராம்சரண் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த செய்தி அறிந்ததுமே, லட்சுமி நடந்ததை அவனிடம் முறையிடுவாள், அவனும் தன்னை தேடி வருவான் என்றெல்லாம் காத்துக்கிடந்தான் ...
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அப்படி ஏதும் நடக்காததோடு லட்சுமியும் காரணம் ஏதும் சொல்லாமல் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க, ராம்சரணும் அதற்கு ஒப்புதல் விண்ணப்பம் சமர்ப்பிக்க என, அவன் எதிர்பார்த்ததை காட்டிலும், ராம்சரண் லட்சுமியின் பிரிவு துரிதமாக நடந்தேற, பருத்தியே புடவையாய் காய்த்ததாக எண்ணிக்கொண்டு , அவர்களது அதிகாரப்பூர்வ பிரிவுக்காக அவன் காத்துக் கொண்டிருந்த நிலையில், இப்படி ராம்சரண் உக்கிரத்தின் மறு உருவமாய் திடீரென்று காட்சி அளித்தது, அவனுள் பெரும் பயத்தை ஏற்படுத்த, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லி அவன் குசலம் விசாரிக்க
"நான் நல்லா இருக்கேன் ... ஆனா இனிமே நீ நல்லா இருக்க மாட்ட டா ...." என கர்ஜித்துக் கொண்டே அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் ராம் சரண்.
எதிர்பாராத அந்த தாக்குதலில் வெற்றியின் நுனி மூக்கு மற்றும் கடை வாயிலிருந்து ரத்தம் பொலபொலவென்று கொட்ட, மிகுந்த வலியில் அதனை துடைத்த படி
"ஸ்ஸ்ஸ்ஸ்... ஓ..... லட்சுமி எல்லாத்தையும் சொல்லிட்டாளா.... தெரிஞ்சுகிட்டு தான் வந்திருக்கியா .... இங்க பாரு.... அவ என்னை விரும்பற .... அவளுக்கு உன் கூட வாழ விருப்பம் இல்ல .... அதுக்காக தான் என்னை பத்தி எதுவுமே உன்கிட்ட சொல்லாம டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணினா .... இப்ப அவளைக் கொடுமைப்படுத்தி என்னை பத்தி தெரிஞ்சுக்கிட்டு வந்து அடிக்கிறியா ...."
அருணா அனு தினமும் தொடர்பில் இருப்பதால் அவள் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என அனுமானித்து, நடந்ததை தனக்கு சாதகமாக அவன் திரித்துக் கூற அடுத்த கணமே அவன் சட்டை காலரை கொத்தாக பற்றி தூக்கிய ராம்சரண்,
"யாரைப் பத்தி யாரு கிட்ட டா சொல்ற... பொறம் போக்கு .... என் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரியும் டா .... " என உறும,
"உன்னை விட உன் பொண்டாட்டிய பத்தி எனக்கு நல்லாவே தெரியும் .... காட்ட வா ... ஒரு செகண்ட் கொடு youtube வழியா ஊருக்கே காட்டறேன் ...."
அந்தரத்தில் தொங்கிய போதும் அவன் அகங்காரத்தோடு பேச, அடுத்த கணமே அவனைத் தூக்கி வீசி, நைய புடைக்க தொடங்கினான் ராம்சரண் .
காரின் கருப்பு கண்ணாடி முழுவதுமாக மூடப்பட்டிருந்ததால், காட்சியும், சப்தமும் வியாபார கணக்கில் ஆழ்ந்திருந்த ரங்கசாமியை சற்று தாமதமாகவே சென்றடைய , மிகுந்த பதற்றத்தோடு கார் கதவை திறந்து கொண்டு ஓடி வந்தவர்,
"டேய் சரண் நிறுத்துடா... அவனை ஏன்டா அடிக்கிற ...." என்றபடி ராம்சரணின் சட்டையைப் பிடித்து இழுக்க,
"இந்த கை தானே என் பொண்டாட்டிய தொட்டுச்சு .... இனிமே இந்த ஜென்மத்துல உனக்கு கையே கிடையாது டா ..." ராம்சரண் வெறி கொண்டு, விறகை உடைப்பது போல் , அவன் கையை மடக்கி முறிக்க, வெற்றியோ வலியில் மரண ஓலமிட, கூட்டம் கூடி போனது.
மகனின் பேச்சிலிருந்து, நடந்திருப்பதை கண நேரத்தில் புரிந்துகொண்ட ரங்கசாமி அதிர்ச்சியில் உறைந்து நிற்க,
"சார்... யார் சார் நீங்க .... எதுக்காக வெற்றி சாரை அடிக்கறீங்க ..."
குழுமியிருந்த கூட்டத்திலிருந்து தடுக்க வந்த மாணவன் ஒருவன் குரல் எழுப்ப,
"ம்ம்ம், பொம்பள பொறுக்கிய அடிக்காம என்ன பண்ணுவாங்களாம்...." ராம்சரண் பெருங்குரலில் கூற, சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியில் சிலையாகி போயினர்.
"இவன் எல்லாம் ஒரு லெக்சரர் .... இவன் கிட்ட போய் நீங்க எல்லாம் எப்படித்தான் படிக்கறீங்களோ .... பார்த்து ... இவனோட பொறுக்கி தனத்தை உங்க கிட்டயும் காட்டிட போறான் ..."
கூட்டத்தில் இருந்த பெண்களைப் பார்த்துக் கூறிய ராம்சரண், எழுந்து நின்று வெற்றியின் கால் முட்டியில் ஓங்கி ஒரு மிதி மிதிக்க, ஏற்கனவே கை முறிந்ததில், அலறிக் கொண்டிருந்தவன், இம்முறை வலி தாங்க முடியாமல் கதறி கூப்பாடு போட,
"சார், அவரை விட்டுடுங்க சார் .... அவருக்கு ஏதாச்சும் ஆயிடுச்சின்னா காலேஜ் பேர் கெட்டுப் போயிடும் சார் .... "
விரிவுரையாளர் போல் காட்சி அளித்த வேறொரு நபர் ராம்சரணிடம் கெஞ்ச,
"இவன் ஒண்ணா நம்பர் பொம்பள பொறுக்கி......இவன காலேஜ்ல வச்சுக்கிறதும் வச்சுக்காததும் உங்க இஷ்டம் .... ஆனா இவன் மறுபடியும் எந்த பொண்ணு விஷயத்திலும் தலையிடக்கூடாது .... அப்படி தலையிட்டான் இவன் தலை இருக்காது ... " துடித்துக் கொண்டிருந்தவனின் மற்றொரு பாதத்தை தன் ஷூ காலால் ஏறி அழுத்தமாக மிதித்துவிட்டு ராம்சரண் கிளம்ப, உயிர் போகும் வலி ஒருபுறம், சேர்த்து வைத்திருந்த மானம் மரியாதை சின்ன பின்னமாகி போனது மறுபுறம் என உள்ளுக்குள் கலங்கிக் கொண்டிருந்தவனின் கண்கள் மட்டும் , ராம்சரணின் முதுகையே குரூரத்தோடு நோக்க, அது ரங்கசாமியின் விழிகளில் பட, உடனே அவர் கூட்டத்தினரின் சலசலப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்த மகனிடம் வந்து
"சரண்.... இதுக்கு மேல இங்க நிக்காத கெளம்பு ....... " என பதற்றத்தோடு, அவன் கையை பற்றி இழுக்க, அவனோ திரும்பி தரையில் தத்தளித்துக் கொண்டிருந்த வெற்றியை பார்த்து
"டேய் .... உன்னை கொன்னு புதைச்சிருப்பேன் டா ..... நான் என் பொண்டாட்டி குழந்தைகளோட நிம்மதியா ரொம்ப காலம் வாழனும்னு ஆசைப்படறேன்... அதனால தான் உன்னை குறைந்தபட்ச சேதாரத்தோடு விட்டேன் ...." என விடாமல் கொந்தளிக்க, அதற்குள் விஷயம் அறிந்து அங்கு வந்த கல்லூரி முதல்வர்,
"ப்ளீஸ் சார்.... பிரச்சனை என்னன்னு சொல்லுங்க.... நாங்க அக்ஷன் எடுக்கிறோம்.... அத விட்டுட்டு இப்படி ரவுடி மாதிரி சண்டை போடறது, எங்க காலேஜுக்கும் நல்லது இல்ல உங்க ஸ்டேட்டஸுக்கும் நல்லது இல்ல ..." என சமரசம் பேச,
"அதைத்தான் சொல்லிட்டேனே சார்.... எத்தனை தடவை சொல்லுவேன் .... இவன் ஒரு பொம்பள பொறுக்கி ..... இவனை இனிமே காலேஜ்ல வச்சுக்கிட்டீங்க, உங்க காலேஜ் பேர் கெட்டுப் போயிடும் ..."
என முடித்தவன் விரு விருவென்று காரில் சென்றமர, மகனைப் பின் தொடர்ந்து காரின் பின் இருக்கையில் ரங்கசாமியும் அமர, கார் சிறுத்தை போல் சீறிப்பாய்ந்தது.
கண நேர அமைதிக்குப் பிறகு,
"என்ன தான் நடந்தது சரண் .... நீ பேசினதுல சில விஷயம் அரைகுறையா புரிஞ்சது .... முழு விவரத்தை சொல்லு ..." என ஆதங்கமும் அதிர்ச்சியுமாய் ரங்கசாமி வினவ, தன் மனைவி லட்சுமி விவாகரத்திற்கு விண்ணப்பித்தது முதல் கடந்த முறை உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை அனைத்திற்கும் பின்புலமாக இருந்த அருணா, கற்பகத்தின் அயோக்கியத்தனத்தை சற்று முன்பு ரவி மூலம் அறிந்து கொண்டதை , அவன் விலாவாரியாக சொல்ல சொல்ல ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார் ரங்கசாமி.
தன் வீட்டில், தன் மருமகளுக்கு நேர்ந்த கதியை அறிந்து ஆக்ரோஷமாய் கொழுந்து விட்டு எரியும் கோபத்தில் அருணா, கற்பகத்தை வகைத்தொகை இல்லாமல் திட்டி தீர்த்தவர், கணநேர அமைதிக்குப் பிறகு ,
"இப்ப என்ன பண்றதா உபதேசம் ....இங்க வெற்றிய அடிச்சா மாதிரி , இப்ப கோயம்புத்தூர் போய் அருணா கற்பகத்தை அடிக்க போறியா ...." என்றார் இறுகிய குரலில்.
"அது வந்து .... அதைத்தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்ப்பா ...."
"சில நேரத்துல சத்ரியனா இருக்கிறத விட சாணக்கியனா இருந்தா தான் ஜெயிக்க முடியும் சரண்..... நீ வெற்றி விஷயத்துல கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோன்னு தோணுது .... லட்சுமிக்கு அடுத்த மாசம் டெலிவரி .... அருணா, கற்பகம் ரெண்டு பேரும் பான்(born) கிரிமினல்ஸ்னு தெரிஞ்சு போச்சு .... அவ்ளோ கனகச்சிதமா திட்டம் போட்டு லக்ஷ்மியும் உன்னையும் பிரிக்க நினைச்சவங்களுக்கு , நடந்ததை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நீ வெற்றியை அடிச்சு பொளந்தேன்ற விஷயமும் தெரிஞ்சுச்சின்னா அவங்க எந்த எல்லைக்கும் போவாங்கப்பா... டெலிவரி முடிஞ்சதுக்கு அப்புறம் , நீ அவனை என்ன செய்திருந்தாலும் ஈஸியா பேஸ் பண்ணி இருக்கலாம் ... ஆனா நீ அவசரப்பட்டுட்ட .... அவங்க பண்ணின கொடூரத்தை, நாம தெரிஞ்சுக்காத வரை, தெரிஞ்சாலும் ரியாக்ட் பண்ணாத வரை தான், லட்சுமி சேஃப் ..." என பெரியவர் அறிவுறுத்த ,
"நீங்க சொல்றதும் ஒரு விதத்துல சரி தான்..... லட்சுமிக்கு பிபி சூட் அப் ஆகி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கும் போதே ,டாக்டர் மூலம் ஓரளவுக்கு நடந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரிஞ்சிருச்சு ..... ஆனா ஆள் தான் யாருனு தெரியாம கொதிச்சுக்கிட்டு இருந்தேன் .... அப்பவே எனக்கு அருணா, கற்பகத்த கொன்னு போடற அளவுக்கு கோவம் தான் .... இருந்தாலும் லட்சுமியோட டெலிவரி முடியட்டும்னு பொறுத்து போனேன்.... ஆனா இன்னைக்கு திடீர்னு ரவி மூலமா நடந்த எல்லா அசிங்கத்தையும் கேட்க கேட்க என்னாலயே என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியல... அதான் அந்த நாய அடிச்சு பொளந்துட்டேன் ..... ராமலட்சுமியோட கல்யாணத்துக்கு மொதல் நாள்ல இருந்து லட்சுமியோட டெலிவரி வரைக்கும், லீவு எடுக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கேன் .... நான் லட்சுமி கூடயே இருக்கிற வரைக்கும், அவளை யாரும் நெருங்க முடியாதுப்பா.... நீங்க கவலைப்படாதீங்க .... லட்சுமியோட டெலிவரி நல்லபடியா முடியட்டும் .... அப்புறம் அருணாவும் கற்பகமும் இதுவரைக்கும் பார்க்காத ராம் சரணை பார்ப்பாங்க ..." என இளையவன் கருவ,
"எனக்கு என்னவோ அதுவரைக்கும் அருணாவும் கற்பகமும் தாக்கு பிடிப்பாங்கன்னு தோணல .... ஏன்னா நீ அடிச்சிட்டு போனதும் வெற்றியோட முகத்தை பார்த்தேன் .... அவன் கண்ணுல அப்படி ஒரு வன்மம் தெரிஞ்சது ... நிச்சயம் அவன் அருணாவுக்கு ஃபோன் பண்ணி நடந்த எல்லாத்தையும் சொல்லிடுவான் ... அருணா எதுவுமே தெரியாதது மாதிரி நம்ப ரெண்டு பேருக்கும் ஃபோன் பண்ணாலும் பண்ணுவா.... இல்ல எதையுமே காட்டிக்காம வேற வழிய ஆப்பு வச்சாலும் வெப்பா .... பீ கேர் ஃபுல் ...."
மேனேஜர் வினோத் மூலமாக ஏற்கனவே விதி, தன் வேலையை செவ்வனே செய்து அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்றை நிகழ்த்திக் காட்ட, காத்திருக்கிறது என அறியாமல் இருவரும் ஏதேதோ கதைத்த படி அடுத்த அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.
"இன்னைக்கு பிரதோஷம் .... சாமிக்கு நைவேத்தியமா எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் செஞ்சி இப்பதான் படைச்சோம் .... நீங்களும் மாமாவும் சாப்பிட வாங்க ...."
என தன் பெருத்த வயிறை , துப்பட்டா கொண்டு மூடியபடி மெதுவாக நடந்து வந்து தன்னவனைப் பார்த்துக்கொண்டே வழக்கம் போல் இருவரையும் லட்சுமி வரவேற்க, வந்தவர்களுக்கோ ஒரு கணம் துக்கம் தொண்டையை அடைக்க, அப்படியே உறைந்து நின்றனர்.
சற்றுமுன் கேள்விப்பட்டதை மிகவும் கடினப்பட்டே ரங்கசாமி மென்று முழுங்கி இருந்த நிலையில் , லட்சுமியின் சாந்தமான முகம் , அவள் எதிர்கொண்ட கடினத்தை மீண்டும் நினைவூட்ட, கோபம் ,ஆத்திரம், ஆற்றாமை ,பிரமிப்பு, என பலவிதமான உணர்வுகள் ஒன்று கூடி அவரைத் தாக்க , சிலையாகி போனார் அந்த பெரியவர்.
லட்சுமி நினைத்து இருந்தால், ரங்கசாமியின் இல்லத்தில் அவளுக்கு நடந்த அசிங்கத்தை அரங்கேற்றி, சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் ரங்கசாமியின் மானம் மரியாதையை ஒன்றும் இல்லாமல் செய்திருக்கலாம் ....
ஒரு படி மேலே போய், விவாகரத்து என்ற பெயரில் கோடிகளை ஜீவனாம்சமாக கூட பெற்றிருக்கலாம் ....
ஆனால் அட்டாலும் பால் சுவையில் குன்றாது.....சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது போல், எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் , விலகி நடக்க எண்ணினாளே ஒழிய , ஒருபோதும் விஷத்தைக் கக்கவில்லை... வியாபாரம் பேச வில்லை ..... என்ற உண்மை உரைக்க,
"அம்மா லஷ்மி .... நீ போய் முதல்ல சாப்பிடும்மா... கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வந்துடறேன் ..."
என கமரிய குரலில் அவர் விடை பெற,
" தம்பி நீங்க சாப்பிட வாங்க ...." என சிவகாமி குழந்தைக்கு உணவு ஊட்டியபடி அழைக்க,
"ஒரு நிமிஷ க்கா .... டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வந்துடறேன் ...." என்றவன் மனைவியை பார்த்து,
" லட்சுமி, கொஞ்சம் என் கூட வாயேன்..."
என அவசரமாக மொழிந்து விட்டு தன் அறை நோக்கி நடக்க , தளர் நடையில் பின் தொடர்ந்தவள், அறைக்குள் நுழைந்த மறுகணம் பின்புறமாக இறுக கட்டிக்கொண்டு , அவளது பின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான் அவளது மணாளன் .
காரணம் புரியாத அந்த திடீர் அணைப்பில் சில மணித்துளிகள் அவள் தடுமாறித்தான் போனாள்.
அந்த அணைப்பில் காமமில்லை, காதலில்லை, மோகமில்லை, தாபமில்லை மாறாக பாசமும் பற்றும் அளவுக்கு அதிகமாக மலிந்து கிடப்பதை உணர்ந்தவளுக்கு அதற்கான காரணம் புரியாமல் போக,
"என்னங்க .... என்ன ஆச்சு .... டெலிவரிய நெனைச்சு பயமா இருக்கா .... அதுக்கு தான் இன்னும் ஒரு மாசம் இருக்கே...." என வெள்ளந்தியாக மொழிந்த போது தான் ,
குற்ற உணர்வில் தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு, பிரசவத்தை குறித்த சிந்தனையும் வர, உடனே
"உன்னை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன் லட்சுமி ...." என்றான் தழுதழுத்தக் குரலில் சமந்தா சம்மந்தம் இல்லாமல்.
" நீங்க வேலைய தான் ஊட்டிக்கே மாத்திக்கிட்டீங்களே .... பின்ன வேற எங்க போக போறீங்க .... ஏதாவது ஆன்சைட் போகனுமா ...." யோசனையும் தீவிரமுமாய் அவள் கேள்வி எழுப்ப ,
"சேச்சே ... இப்போதைக்கு எந்த ஆன்சைட்டும் இல்ல .... அப்படியே போகணுங்கிற நிலைமை வந்தாலும் போகப் போறதில்ல ..."
அவன் இயல்பு போல் மொழிந்தாலும், முன்னுக்குப் பின் முரணாக தெரிந்த அவனது செய்கையும் பேச்சையும் கண்டு அவள் சந்தேகமாக நோக்க,
"என்ன அப்படி பாக்கற ...." என்றான் குறும்பும் காதலுமாய்.
"இல்ல .... இந்த மாதிரி எல்லாம் நீங்க பேசினதும் இல்ல... நடந்துக்கிட்டதும் இல்ல ... அதான் யோசனையா இருக்கு ...."
"ஏண்டி, உன்னை நான் பகல்ல இப்படி கட்டி புடிச்சதே இல்லையா ...."
"புடிச்சிருக்கீங்க .... ஆனா இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கு ...."
அவன் லேசான வெட்கத்தோடு தடுமாறி சொல்ல ,
"வழக்கமா முன்னாடி கட்டிப்புடிப்பேன் ... இப்ப எல்லாம் உன் வயிறு முட்டுதா... அதான் பின்னாடி கட்டிப்பிடிச்சேன் ... அது தான் வித்தியாசம்... வேற ஒன்னும் இல்ல... ரொம்ப யோசிக்காத ... போய் சாப்பிடு ... நான் டிரஸ் மாத்திகிட்டு வரேன் ..."
என தன்னவளை அனுப்பி வைத்தவனுக்கு, அவள் பட்ட கஷ்டத்தை நினைத்து , ஒருபுறம் தன் மீதும், அருணா கற்பகத்தின் மீதும் அளவில்லா கோபம் ஏற்பட, மறுபுறம் அருணாவும் கற்பகமும் அடித்து ஆடியதற்கு , தன்னுடைய நடத்தையே காரணம் என்ற குற்ற உணர்வும் கொல்லாமல் கொல்ல, இவை எல்லாவற்றையும் விட , ஏதோ ஒரு உள்ளுணர்வு தன் மனையாட்டியின் பிரசவத்தை குறித்து ஒருவித அச்சத்தை உண்டு செய்ய, யாரிடமும் பகிர முடியாமல்
தனக்குள்ளேயே தளும்பத் தொடங்கினான் ரங்கசாமியின் தனையன் .
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்
"இவரை எத்தனை பேர் சேர்ந்து அடிச்சாங்க......?" என கேள்வி எழுப்ப ,
"ஒருத்தர் தான் டாக்டர் அடிச்சாரு ..."
என வெற்றியை மருத்துவமனையில் சேர்த்த விரிவுரையாளர் மற்றும் மாணவர்கள் குழுவிலிருந்து ஒருவர் கூற,
" நாலஞ்சு பேரு சேர்ந்து அடிச்சா மாதிரி அடி பலம்மா பட்டிருக்கு ....வலது கை எலும்பு உடைஞ்சிருக்கு .... பிளேட் வைக்கணும் .... இடது கால் முட்டியும் பிசகி இருக்கு... இவரு வீட்டு ஆளுங்களுக்கு சொல்லிட்டீங்களா ....
இன்னும் பத்து நாள் இவரு ஹாஸ்பிட்டல்ல இருந்தாகணும் ... "
" சொல்லிட்டோம் டாக்டர் .... இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாங்க ...."
என்றதும், தாமதிக்காமல் மருத்துவர் சிகிச்சையை தொடர, அடுத்த ஒரு மணி நேரத்தில் கை கால் முழுவதும் கட்டு போடப்பட்ட மயக்க நிலையில், அறுவை சிகிச்சை அறையிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டான் வெற்றி.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சுயநினைவு வந்ததும் , முதல் வேலையாக அருணாவை தொடர்பு கொண்டு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவன் பகிர, பதிலுக்கு அவளும் முன்தினம் இரவு அறிந்து கொண்டதை மேலோட்டமாக பகிர்ந்து,
"நேத்து நைட்டு தான், என் அப்பனும் அண்ணனும் எங்களை எப்படி எல்லாம் ஏமாத்தி இருக்காங்கன்னு எங்க எஸ்டேட் மேனேஜர் வினோத் மூலமா தெரிஞ்சுகிட்டேன்.....இன்னைக்கு ஈவினிங் உனக்கு போன் பண்ணி அதையெல்லாம் சொல்லலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்... அதுக்குள்ள என் அண்ணன் அங்க வந்து இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ...."
வருத்தமும் ஆங்காரமுமாய் அருணா முடிக்க, எதிர் முனையில் வெற்றி அமைதி காக்க,
" வெற்றி, நீ கவலைப்படாதே .... இதுக்கெல்லாம் காரணம் அந்த லட்சுமி தான்.....கூடிய சீக்கிரம் அவளுக்கு ஒரு முடிவு கட்டறேன்.... நீ உன் உடம்ப பாத்துக்க.... ஏதாச்சும் பணம் வேணும்னா கேளு... தரேன்........" என படபடத்து விட்டு அவள் அழைப்பை துண்டிக்க, மருந்தின் காரணமாக மரத்திருந்த வலி மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பிக்க, வலியில் துடிக்க ஆரம்பித்தான் வெற்றி.
------------------------------------------------------
அப்போது தான் அலுவலக கேப்பில் ஸ்ரீ வீடு வந்து சேர , அவளைக் கண்டதுமே,
"இப்படி நித்தம் நித்தம் காலையில எட்டு மணிக்கு போயிட்டு ராத்திரி எட்டு மணிக்கு வந்தா உடம்பு என்னத்துக்கு ஆவும்...."
சுந்தராம்பாள் வழக்கம் போல் குற்ற பத்திரிக்கை வாசிக்க தொடங்க,
"கொஞ்சம் வேலை அதிகம் பாட்டி .... அதான் லேட் ஆயிடுச்சு .." என்றாள் மென்மையாய்.
"வீட்ல அத்தகாரி இருக்கா ... ஆக்கி வச்சிடுவான்னு நம்பிக்கினு ஆபீஸ்ல இருந்து லேட்டா வர்றியாக்கும்..."
"அய்யய்யோ... அப்படி இல்ல பாட்டி .... பீரியட்ஸ் டைம்ல அத்தை சமைக்க விட மாட்டாங்க .... அதோட இன்னிக்கு ஆபீஸ்லயும் கொஞ்சம் வேலை அதிகம்... அதான் லேட் ..."
"என்னம்மோ போ .... கல்யாணம் கட்டிக்கினோமா காலா காலத்துல புள்ள குட்டிய பெத்தோமானு இல்லாம, இப்படி மாங்கு மாங்குனு உழைச்சு , சமைச்சு சாப்பிட கூட நேரமில்லாம, என்னத்த தான் சாதிக்க போறியோ .... முருகா நீதான் என் பேரனை காக்கோணும்.."
என அவர் ஜாடை மாடையாக வசைபாட, அதற்கு மேல் அங்கிருந்தால் மேலும் பல வசவுகளைக் கேட்க நேரும் என்பதால், ரணமான மனதோடு மௌனமாக தன் அறைக்கு வந்தவளின் விழியில், அவளது கணவன் ஜூம் மீட்டிங்கில் அலுவலகக் குழுவோடு தீவிரமாக கலந்துரையாடிக் கொண்டிருப்பது பட, ஓசை எழுப்பாமல் புத்துணர்வு பெற குளியல் அறைக்குள் புகுத்துக் கொண்டாள்.
அவள் வெளியே வரும் போது, கலந்தாய்வு முடிந்து, அவளவன் மடிக்கணினியில் கணக்கீடுகளில் மூழ்கி இருக்க,
" ராம் ...." என்றாள் மெதுவாக.
"ஏய் எப்ப வந்த .... நீ வந்தத நான் கவனிக்கவே இல்ல ... "
" நான் வரும் போது ஸூம் மீட்டிங்ல இருந்திங்க ...அதான் டிஸ்டர்ப் பண்ணல..." என அவள் கமரிய குரலில் மொழிய
" ஸ்ரீ... ஏன் குரலும் முகமும் ஒரு மாறி இருக்கு .... ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா ..."
" அப்படி எல்லாம் எதுவும் இல்லை ராம்..."
" கார்த்திகேயனை பார்த்தியா .... பேசினியா ... "
" ம்ம்ம்ம்.... ஆபீஸ் போனதுமே அவர மீட் பண்ணி , நீங்க சொன்ன மாதிரியே சொன்னேன் .... RFP Dealing எல்லாம் உங்க எக்ஸ்பீரியன்ஸ்க்கு ரொம்ப கஷ்டம் தாம்மானு அவரும் ஒத்துக்கிட்டு கொட்டேஷன் ப்ரிப்பரேஷனை மட்டும் இப்போதைக்கு செய்யுங்கனு சொல்லிட்டாரு...... ..."
" குட்.... தெரியாதத கத்துகிறது நல்ல விஷயம் தான் .... ஆனா அதுக்கான சரியான டைம ஒதுக்கி கத்துக்கணும் ... அத விட்டுட்டு ஆறு மாசம் வேலையை ஆறு நாள்ல கத்துக்கிட்டு செய்யணும்னு நினைச்சா தலைவலி தான் மிஞ்சும் .....எனிவே இப்பவாது நோ சொல்ல கத்துக்கிட்டயே ..."
"கொட்டேஷன் பிரிப்பரேஷன் ஓரளவுக்கு ஈசியா இருந்தாலும், ஆண்டனியும் கயலும் ஒரு வாரம் லீவுங்கிறதால , அவங்களோடத்தையும் சேர்த்து நானே செய்யறதா இருக்கு ராம் .... " என சோர்வாக உரைத்தவளின் தோள் மீது கை போட்டு லேசாக அணைத்துக் கொண்டவன்
"ஓ... அதான் லேட்டா .... சரி வா சாப்பிட போலாம் ..." என அவளோடு கீழ் தளம் சென்றான்.
ஆவி பறக்கும் இட்லியும் சட்னியும் தயாராக இருக்க, கணவனுக்கு பரிமாறி விட்டு வழக்கம் போல் மூன்று இட்லிகளை தன் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அவள் உண்ண தொடங்க , இட்லி விள்ளல்களை மெல்ல முடித்ததே ஒழிய , அவளால் விழுங்க முடியவில்லை.
சற்று முன் சுந்தராம்பாள் பேசியது நினைவுக்கு வந்து இட்லி தொண்டையில் சிக்கிக் கொண்டு இறங்க மறுத்தது.
அடுத்தவர்களின் உடல் உழைப்பில், அவள் உல்லாசமாக உண்பது போலான அந்த பேச்சு அவளது அடித்தொண்டையை அறுக்க, வெகு லேசாக கண்கள் பனிக்க , மிகவும் சிரமப்பட்டே அவள் முதல் இட்லியை உண்டு முடிக்க,
" ம்க்கும்... சாப்பிடறதே மூணு இட்லி... அதுல ஒரு இட்லி சாப்பிடவே இவ்ளோ நேரம் எடுத்துக்கினா , மத்த ரெண்டுத்தயும் எப்ப தான் சாப்பிடுவ ..."
சுந்தராம்பாள் இரண்டாம் கட்ட வசை பாடலை தொடங்க, அவரை தூண்டி விட்டு விட்டு அகல்யா அமைதிக்காக்க,
" பாட்டி இவ எப்பவுமே மெதுவா தான் சாப்டுவா ..... நீ இங்க நின்னுகிட்டு இப்படி பேசிக்கிட்டே இருந்தேன்னு வை... அவ இன்னும் மெதுவா தான் சாப்பிடுவா.... ப்ளீஸ் பாட்டி .... நீ இடத்தை காலி பண்ணு ..."
என வீரா கூற,
"என்னமோ சீமையிலயே இல்லாத சீமாட்டிய கட்டிக்கினு வந்த மாறி, அவளை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்குறானே..."
முணுமுணுத்துக் கொண்டே சுந்தராம்பாள் இடத்தை காலி செய்ய, உண்ணவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் ஸ்ரீ தடுமாறிய படி ஒருவழியாக உண்டு முடிக்க,
" ஸ்ரீ, நீ போய் ரெஸ்ட் எடு... நான் கிச்சன கிளீன் பண்ணிட்டு வரேன் ..."
என்றான் வீரா , அவளது முகத்தில் தெரிந்த அளவுக்கதிகமான சோர்வைக் கண்டு.
விட்டால் போதும் என அறைக்கு வந்தவள் மனதை திசை திருப்ப தன் மடிக்கணினியில் விடுபட்ட வேலைகளை தொடர, சில மணித்துளிகளுக்கு பிறகு அறைக்கு வந்தவன், தன்னவளை ஆராய்ச்சி பார்வை பார்க்கத் தொடங்க , அவனது அரவம் கண்டு,
"ராம்.... அதுக்குள்ளேயே கிச்சன கிளீன் பண்ணி முடிச்சிட்டீங்களா..."
" ம்ம்ம்ம், ஃபடாஃபட்னு வேலை முடிஞ்சு போச்சு .... சரி அத விடு ..... பாட்டி பேசினது மனசுக்கு கஷ்டமா இருக்கா ..."
"அப்படி எல்லாம் இல்ல ராம்.... அவங்க அவங்களோட எதிர்பார்ப்பையும் ஆதங்கத்தையும் ஏதோ ஒரு வழில கொட்டறாங்க .... நான் வேலைக்கே போலன்னாலும் Pcod பிரச்சனையால குழந்தை உண்டாக லேட் ஆகும்னு அவங்களுக்கு எடுத்துச் சொன்னாலும் புரிய போறதில்ல .... அதனால அவங்க வார்த்தைக்கு நான் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறதில்ல .... "
என்று உதட்டளவில் கணவனுக்காக உரைத்தாலும், அவளது உள்ளம் அளவுக்கு அதிகமான வலியில் துடித்துக் கொண்டிருக்க, அதுவே சோர்வாய் அவள் முகத்தில் பிரதிபலிக்க ,
"இங்க பாரு பட்டு .....குழந்தை விஷயத்தை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத .... எப்ப நடக்கனும்னு இருக்கோ அப்ப தானா நடக்கும்.... ..." என்றபடி வாஞ்சையாக அவள் தலைக்கோதியவன்,
" ஸ்டமக் பெயின் அதிகமா இருக்கா .... ரொம்ப டயர்டா இருக்கடா ..." என்றான் அவளது களைப்பை கண்டு .
" ஸ்டொமக் பெயின் வழக்கம் போல தான் இருக்கு... ஆனா ஆபீஸ்ல வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு .... லைட்டா தலைவலி வேற இருந்துகிட்டே இருக்கு .... தூக்கம் வேற சரியா இல்லயா ... அதான் டயர்டா இருக்கேன் ..."
"இங்க பாரு ... நீ உன் ப்ரொபைலையே கம்ப்ளீட்டா மாத்தி இருக்க ...புது வேலையை கத்துக்கிட்டு செய்யறது கொஞ்சம் கஷ்டம் தான் .... அதுவும் இது முழுக்க முழுக்க மேத்தமேட்டிக்கல் கால்குலேஷன் இல்லையா.... .... கொஞ்ச நாள் இப்படித்தான் இருக்கும் ...."
"நீங்க என்னை விட மில்லியன்ஸ் ட்ரில்லியன்ஸ்ல கால்குலேஷன்ஸ் எல்லாம் பண்ணிக்கிட்டு தான் இருக்கீங்க .....ஆனா இப்படி நீங்க ஃபீல் பண்ணி நான் பார்த்ததே இல்லையே ...."
" பட்டும்மா.... நான் எந்த புது விஷயத்தை கத்துக்கிறதா இருந்தாலும் , அதுக்கான கரெக்டான டைம் பவுண்டுல தான் லேர்ன்(learn) பண்ணுவேன் .... உன்னை மாதிரி எல்லாத்தையும் ஒரே நாள்ல கத்துக்கணும்னு மைண்டுக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்க மாட்டேன்..... இது எல்லாத்தையும் விட, தூங்குறதுக்கு முன்னாடி என் மைண்ட்ல இருக்கிற ரிப்பீட்டட் தாட்ஸ் எல்லாத்தையும் நான் க்ளேன்ஸ்(Cleanse) பண்ணிடுவேன் ....
அதனால தான் என்னால நிம்மதியா தூங்க முடியுது .... உனக்கும் சொல்லித் தரேன் .... அது ஒரு சின்ன மைண்ட் கேம் .... விடாம ஃபாலோ பண்ணா , எதை வேணாலும் அச்சிவ் பண்ணலாம் ...."
"15 டிஜிட்ஸ் வரைக்கும் நீங்க நம்பரை ஞாபகம் வச்சிகிறது கூட, இது மாதிரியான ஒரு மைண்ட் கேம் தானா ...."
"ஆமா .... அதுவும் ஒரு மாதிரியான மெமரி கேம் தான் .... நம்மளோட மெமரில எதை ஞாபகம் வச்சுக்கணும் எதையெல்லாம் ஞாபகம் வச்சுக்க கூடாதுன்னு நாமளே டிசைட் பண்றது .... அதை மட்டும் நீ சரியா கத்துக்கிட்ட, உன் மைண்ட சரியான இடத்துல சரியான நேரத்துல 100% யூட்டிலைஸ் பண்ணலாம் ...."
"வாவ் .... எனக்கு இப்பவே சொல்லிக் கொடுக்கறீங்களா ..."
"இப்ப சொல்லிக் கொடுக்க முடியாது இன்னும் ரெண்டு நாள் போகட்டும் .... அப்புறம் சொல்லித் தரேன் ..."
அவன் விஷமமாக மொழிய,
" ஏன்...."
"அதுக்கு எல்லாம் சில பல முன்னேற்பாடுகள் செய்யணும்மா.... குருதட்சணை எல்லாம் கொடுக்கணும் ....இப்படி மக்கு மாதிரி இருந்தா மண்டைல ஏறாது ..." என்றவன் குறும்பாக குறுநகை பூக்க, புரிந்து கொண்டவள்,
" கொஞ்சம் இப்படி வாங்களேன் ..." என்றாள் பொய் கோபத்தோடு.
" வந்தேன் ..."
" கொஞ்சம் கீழ குனிங்களேன் ..."
" ஏன் கிஸ் பண்ண போறியா ...."
" ம்ச்.... சொல்றத செய்ங்க ..."
அவன் குனிந்ததும், அவன் தலையில் அவள் ஓங்கி கொட்டிவிட்டு,
" இதுதான் குரு தட்சணை போய்ட்டு வாங்க ..."
குலுங்கி நகைத்தவன்,
" வேலை செஞ்சது போதும் டி .... வா தூங்கலாம்... ....." என்றான் காதலோடு.
வழக்கம் போல அவன் அருகில் வந்து படுத்தவள், தன் கால்களை அவன் மீது போட்டுக் கொண்டு ஏதேதோ பேசியபடி சில மணித்துளிகளில் கண்ணயர்ந்து போக,
இவளை வேலைக்கு அனுப்பினதே தப்பா.... இல்ல .... ப்ரோபைல் சேஞ்ச் பண்ணிக்கட்டுமான்னு கேட்டதுக்கு சம்மதம் சொன்னது தப்பா ... ரொம்பவே கஷ்டப்படறாளே .... ஏற்கனவே சரியாவே சாப்பிட மாட்டா... தூக்கம் கூட கம்மி தான் ....
இப்ப தலைவலின்றா .... தூக்கமும் நிம்மதியா இல்லன்னு தவிக்கிறாளே.... இன்னும் ஒரு மாசம் பார்ப்போம் ... நிலைமை பாசிட்டிவா இம்ப்ரூவ் ஆச்சுன்னா ஓகே ...
இல்லன்னா, வேலையை விட்டுட சொல்ல வேண்டியது தான் ....
தனக்குள்ளே நினைத்தபடி மனையாளை அணைத்துக்கொண்டு சில மணித்துளிகளில் அவனும் ஆழ்ந்த நித்திரையை தழுவினான்.
தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும் யாதொரு மாறுபாடும் இல்லாமல் மெதுவாக கழிந்தன.
அன்று வார இறுதி நாள்...
தானே வந்து அழைத்துச் செல்வதாக சொன்னவன், மாலையானதும் அலுவலக வாயிலுக்கு வந்து தன்னவளுக்கு அழைப்பு விடுக்க, கணவனின் வரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தவள் , அவனது அழைப்பை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியோடு மின்னலென கிளம்பிச் சென்று காரில் ஏறிக் கொள்ள, மனம் கொள்ளா பொறாமையோடும், கனல் கக்கும் கண்களோடும் அதனை உறுத்து பார்த்துக் கொண்டிருந்தான் ராணா.
"பட்டு ... மொதல்ல உனக்கு புடிச்ச ஃபேவரிட் ஐஸ்கிரீமை சாப்பிடறோம் ..... அப்புறம் ஒரு சின்ன ஷாப்பிங் பண்றோம் .... அப்புறம் ஹோட்டல்ல டின்னர் முடிச்சுட்டு, வீட்டுக்கு கொஞ்சம் லேட்டா போறோம் சரியா ..."
என்று வீரா சொன்னதுமே,
" சூப்பர்ப் ராம்....." என்றாள் குதூகலமாய்.
ஐஸ்கிரீம், ஷாப்பிங் ,ஹோட்டல் என்பதை தாண்டி, சுந்தராம்பாளின் பேச்சு மற்றும் அகல்யாவின் பார்வையில் இருந்து சற்று நேரம் தள்ளி இருப்பதே அவளது மகிழ்ச்சிக்கு காரணமாகி போக, மிகுந்த சந்தோஷத்துடன் கணவனோடு பயணப்பட்டாள்.
வெவ்வேறு வகையான ஐஸ்கிரீம்களை வாங்கி இருவரும் ரசித்து ருசித்து உண்டு மகிழ்ந்தனர் .... பிறகு அவரவர்களுக்கு பிடித்தமான சில துணிமணிகளை வாங்கி குவித்தனர் .... கடைசியாக உணவகத்திற்கு சென்று நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக உணவருந்தினர் ....
இப்படியாக இரவு மணி ஒன்பதை கடக்க , உல்லாசமாக ஊரைச் சுற்றி விட்டு இருவரும் கிளம்பும் தருவாயில் ஸ்ரீயின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.
ட்ரூ காலர் 'ராணா பிரதாப்' என்று தெரிவிக்க துணுக்குற்றவள் , ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த கணவனிடம் காட்ட, அவன்
"எதுக்காக போன் பண்ணி இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் ... பேசு பட்டு ..." என்றதும், ஸ்பீக்கரில் அழைப்பை அவள் அனுமதிக்க,
"ஸ்ரீ..... ஈஸ் இட் ரைட் டைம் டு டாக் .... ஐ அம் சாரி ... இந்த நேரத்துல இப்படி போன் பண்ணி கேக்கறதுக்கு ...." என்றவனின் குரலில் இயல்பான தயக்கம் தெரிய,
"இட்ஸ் ஓகே ....சொல்லுங்க ராணா....."
"ஸ்ரீ, SMC, Tanco ரெண்டு ப்ராஜெக்டோட பேசிக் கொட்டேஷன் அவசரமா தேவைப்படுது .... உனக்கே தெரியும் ஆன்டனி, கயல் ரெண்டு பேருமே ஒரு வாரம் லீவுனு ....
கார்த்திகேயனுக்கு போன் பண்ணா நாட் ரீச்சபிள் வருது .... அதான் உனக்கு போன் பண்ணேன் .... இன்னைக்கு நைட்டே எனக்கு முடிச்சு கொடுக்க முடியுமா ...."
ஸ்ரீ செய்வதறியாது உறைந்து போக, வீரா அவனது பேச்சில் கவனம் செலுத்த , ஒரு சில மணித்துளிகளுக்கு பிறகு,
"என்ன ஸ்ரீ .... ஆர் யூ ஓகே .... இந்த மாதிரி கொட்டேஷன் எல்லாம் நான் பிரிப்பேர் பண்ணி ரொம்ப நாள் ஆகுது .... அதனால தான் உன் ஹெல்ப் கேட்கறேன் ...."
அவன் பேச்சு இயல்பாக இருப்பது போல் இருந்தாலும், ஏதோ சரி இல்லை என்றே தோன்ற,
"ஷ்யூர் ராணா, நான் வெளியே இருக்கேன் ... இன்னும் 10 மினிட்ஸ்ல வீட்டுக்கு போயிடுவேன் ... போனதும் ப்ரிப்பேர் பண்ணி அனுப்பறேன் ..."
"தேங்க்ஸ் ஸ்ரீ .... நான் இம்மீடியட்டா ஆன்சைட் சேல்ஸ் டீமோட மெயில உனக்கு பார்வேர்ட் பண்றேன் ... டேக் யுவர் ஓன் டைம் ... நானும் தூங்காம தான் இருப்பேன் ... ஏதாவது டவுட் இருந்தா ஃபோன் பண்ணு..."
என அழைப்பை துண்டித்தான்.
"ராணா, எப்பவுமே உன்னை ஸ்ரீனு தான் கூப்டுவானா ..." என வீரா யோசனையோட கேட்க,
" ஆமா ராம் ..."
" பொதுவா ஆபீஸ்ல ஒரு பர்சனை எல்லாரும் ஒரே மாதிரி தான் கூப்பிடுவாங்க ..... உன் ஆபீஸ்ல எல்லாரும் உன்னை ப்ரியானு கூப்பிடும் போது இவன் மட்டும் ஏன் ஸ்ரீ ன்னு கூப்பிடறான்.... சரி, அத விடு, உன் லேப்டாப ஓபன் பண்ணு .... அவன் அனுப்பின மெயில பாக்கணும்...."
அவன் அவசரமாக மொழிய, அவள் தன் மடிக்கணினியை திறந்து, ராணா அனுப்பிய மின்னஞ்சலை காட்ட, ஆதி முதல் அந்தம் வரை அதனை ஆராய்ந்து பார்த்தவனுக்கு, அனைத்தும் சரியாகப்பட , அவன் அமைதியாய் அப்படியே சிந்தனையில் உரைய
" என்ன ராம் , என்ன யோசனை ...."
" சரியா ஒன் ஹவர்க்கு முன்னாடி, ஆன்சைட் கவுண்டர் பார்ட் கிட்ட இருந்து ராணாவுக்கு இந்த மெயில் வந்திருக்கு ... அதனோட லூப்ல கஸ்டமரோட மெயிலும் இருக்கு ... சோ.... அவன் சொன்ன மாதிரி எல்லாமே சரியா இருக்கு .... ஒரு வேளை இப்படியான ஒரு மெயில ஃபேக்காஆ (Fake) அவனே பிரிப்பேர் பண்ணியிருந்தாலும் அதுக்கான இன்டென்ஷன் அவன் பேச்சுல கொஞ்சம் கூட தெரியலயே ...." என வீரா குழம்ப , ஒன்றும் புரியாமல் ஸ்ரீயும் சிலையாகி போனாள்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள்....
keep rocking mam ,💕💕💕💕💕💕💕
ReplyDeletethanks dr
DeleteSuper mam
ReplyDeletethanks dr
DeleteSemmayo semma sis. Waiting for next week.. very interesting. Sri pavam la
ReplyDeletethanks dr
DeleteAtleast one episode once in 5 days ma'am, please..
ReplyDelete8 daysKKU once 3 UDs mathiri 1 mega UD upload panneren da... chinna chinna tha kudutha flow of the story would spoli dr... thats y...anyhow ll try...now uploading next ud
Delete