அத்தியாயம் 121
கையும் களவுமாக சிக்கிக்கொண்ட ரவி,
செய்வதறியாது திருட்டு முழி முழிக்க,
"என்ன ரவி ... எதுக்காக என்னை பாத்ததும் ஓடி ஒளியற..... ...." என்றான் ராம்சரண் காட்டத்தோடு.
"எ.... எப்படி ..... இருக்கிக .... சொகமா இருக்கிங்களா .... நீங்க ஃபாரின்ல இருக்கிறதா சொன்னாங்க .... எப்ப வந்தீங்க.... "
அவன் பேச்சை மாற்ற முயல,
"நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே .... எதுக்காக என்னை பார்த்ததும் ஓடி வந்து இங்கு ஒளிஞ்ச..."
சரண் விடாமல் கேட்க,
"உங்களைப் பார்த்து ஓடி ஒளியலீங்க.... "
"பொய் சொல்லாத ... நான் தான் உன்னை பார்த்தேனே.... "
ராம் சரண் திட்டவட்டமாய் கேட்க, பதில் சொல்ல முடியாமல் ரவி திணறும் போதே
"ஆமா, நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க .... " என்றான் அடுத்த முக்கிய கேள்வியை முன் வைத்து.
"இ... இங்க ..... தெரிஞ்ச ஒரு நண்பர் இருக்காரு... அவரை பார்க்க வந்தேன் ..." என ரவி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த ஒரு தொழிலாளி,
"ரவி இங்க என்ன பண்ணிக்கினு இருக்க ... அங்க மரத்தை ஏத்த, உன்னை தேடிகினு இருக்காங்க .... சுருக்கா வா ..."
என அவசரமாய் மொழிய,
உடனே ரவி , முகம் கருத்து தலை குனிய, அதனை கனக்கச்சிதமாய் உள்வாங்கிக் கொண்ட ராம்சரண்,
"நீங்க கிளம்புங்க... இவர ஒரு பத்து நிமிஷத்துல அனுப்பி வைக்கிறேன் ..."
என அந்த தொழிலாளியை அனுப்பி வைத்துவிட்டு,
"எதுக்கு பொய்க்கு மேல பொய் சொல்லிக்கிட்டு இருக்க ரவி.... எனக்கு இந்த டிப்போவோட ஓனர நல்லா தெரியும் ... அவர் கிட்ட உன்னை பத்தி விசாரிக்கவா ...."
"அய்யய்யோ வேணாம்ங்க ..."
"அப்ப உண்மைய சொல்லு ...." என்றவன் அங்கிருந்த மர திண்டின் மேல் வாட்டமாக அமர்ந்து கொள்ள ,
"உங்க தங்கச்சி தான், இன்னும் ஒரு வருஷத்துக்கு உங்க கண்ணுல படக்கூடாதுனு சொல்லி அனுப்பிச்சி ..." என்றான் கண்களில் ஒரு வித பயத்தோடு.
"யாரு ... அருணாவா ...."
" ஆமா ...."
"ஏன் ..."
" அது ....."
"சொல்லு ரவி ... நீ சொல்லாம என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது ..."
ஓரிரு கணம் அமைதி காத்தவன், பிறகு மெதுவாக,
"உங்க சம்சாரம் லக்ஷ்மி, உங்க வீட்ல அன்னைக்கு நடந்தத சொல்லி இருக்குமே ..." என்றான் தயக்கத்தோடு.
அவன் கண்களில் தெரிந்த பயம், தடுமாற்றம் எல்லாம் ஏதோ ஒரு பெரிய விபரீதத்தை சொல்ல தயங்குவதாய் தெரிய,
"அவ சொன்னது இருக்கட்டும் ... அன்னைக்கு என் வீட்ல நடந்ததை ஒன்னு விடாம நீ சொல்லு .......
அவ சொன்னதும் நீ சொன்னதும் ஒத்துப் போக்குதான்னு நான் பாக்கணுமில்ல ...." என்றான் அனைத்தும் தெரிந்தது போல்.
உடனே ரவி மௌனம் காக்க, கண நேரத்தில் அவன் மனதை படித்த ராம்சரண்,
"அதுக்காக நான் என் பொண்டாட்டி சொன்னதை நம்பலனு நினைச்சுக்காத....
என் பொண்டாட்டி எது சொன்னாலும் அதுல ஆயிரம் சதவீதம் உண்மை இருக்கும் ....
இருந்தாலும் நடந்தத, உன் மூலமுமாவும் கேட்டு
தெரிஞ்சிக்கிட்டா, நாளைக்கு போலீசுக்கு போகும் போது அவங்களுக்கு சரியான தகவல் கொடுக்க வசதியா இருக்குமில்ல ..."
நடந்ததை மாற்றி சொல்லி தப்பித்துக் கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு, ராம்சரண் கடைசியாக பயன்படுத்திய போலீஸ் என்ற வார்த்தை பயத்தை கொடுக்க, உடனே
"அன்னைக்கு உங்க வீட்ல நடந்ததை, யாருகிட்டயும், குறிப்பா உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு சொல்லி உங்க தங்கச்சி அருணா நிறைய பணம் கொடுத்துச்சு .... அந்த வெற்றியும் நிறைய பணம் கொடுத்தான் ....உங்க கண்ணுல படாம ஒரு வருஷம் காலந்தள்ளறதுக்காக இந்த வேலையும் அவன் தான் வாங்கி கொடுத்தான் .... அவங்க கொடுத்த பணத்துல தான் பஜார் ரோட்ல பழைய வீட்டை வாங்கி அதுக்கு முன்னாடி கடைய போட்டுட்டேன் .... இப்ப என் பொண்டாட்டி தான் அந்த கடையை பாத்துக்குது ..... மத்தபடி நான் எந்த தப்பு தண்டாவும் செய்யலங்க .... என்னை விட்டுடுங்க .... நா.."
என்றவனின் பேச்சை இடைவெட்டி
"பச்சைமலை புரம் வெற்றியா....." என்றான் ராம்சரண் அவசரமாக.
" ஆமா அவனே தான் ...."
ராம்சரணின் முகம் இறுக,
"சரி... நடந்தத ஒன்னு விடாம சொல்லு .... உனக்கு நானும் நிறைய பணம் தரேன் ... "
"நீங்க பணம் கொடுத்தாலும், நான் வாய தொறந்த விஷயம் வெற்றிக்கு தெரிஞ்சா, என்னை அடிச்சே கொன்னுடுவாங்க ...."
"விஷயத்தை மட்டும் சொல்லு...... உன் பேரு எங்கயும் வராம நான் பாத்துக்கறேன் .... அத விட்டுட்டு மாத்தி சொன்ன நானே உன்னை அடிச்சு கொன்னுடுவேன் ..."
உயிர் பயம் ஒருபுறம், போலீஸ் பற்றிய பயம் மறுபுறம் ரவியை பாடாய்படுத்த, வேறு வழி இல்லாமல், லட்சுமி , ராம் சரணின் வீட்டை விட்டு வெளியேறியதற்கான நிகழ்வுகளை விவரிக்க ஆரம்பித்தான்.
"கிட்டத்தட்ட 7 மாசத்துக்கு முந்தி ஒரு நாள், உங்க தோட்டத்துல ரெண்டு மூணு வாழை குலை தள்ளி இருக்கு , தென்ன மரத்துல நிறைய இளநீர் காய்ச்சி இருக்கு அதையெல்லாம் கொண்டுகிட்டு போய் மார்க்கெட்ல வித்து கொடுனு உங்க தங்கச்சி அருணா எனக்கு போன் பண்ணி கூப்டுச்சு ...
பண்டிகை நாளுங்குறதால, கடைக்கு லீவு வுட முடியாது .... சாயங்காலமா கடையை சீக்கிரம் சாத்திட்டு குட்டி யானையோட வாரேன் ... மத்தா நாள் விடிய காலைல வாழைக்குலை, இளநீரை அறுத்து போட்டுகின்னு நேரமா மார்க்கெட்டுக்கு போயிட்டா, நல்ல வேலைக்கு வித்து போடலாம்னு சொன்னேன் ...
சரி வானு சொல்லுச்சு ...
அன்னைக்குன்னு பார்த்து கடைக்கு ஆளுங்க வந்துக்கினே இருந்தாங்க .... கொஞ்சம் இருட்டுனதுக்கு பொறவு தான் கடைய சாத்துற மாறி ஆனதால, உங்க வீட்டுக்கு போய் சேரவே ராத்திரி 9 மணிக்கு மேல ஆயிடுச்சு... நாங்க போவ சொல்ல, அங்கன வெற்றி சாப்டுக்குனு இருந்தான் ....
அருணா சாப்பாடு பரிமாறிகினு இருந்துச்சு .... என்னைய பார்த்ததும்,
வா ரவி , ஏன் இவ்ளோ லேட்டுனு கேட்டது .... நான் அதுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது , குழந்தைக்கு உடுப்பு மாத்திக்கினு இருந்த உங்க சம்சாரம் லட்சுமி, வாங்க.... நல்லா இருக்கீங்களானு என்னைய விசாரிச்சது .... நான் அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள அருணா என்னைய சாப்பிட கூப்டுடுச்சு ...
உடனே, சுகந்தியை கேட்டதா சொல்லுங்கன்னு உங்க சம்சாரம் சொல்லிட்டு, குழந்தையை தூக்கிகினு மேல போயிடுச்சு....
பொறவு நானும் வெற்றியோட சேர்ந்து சாப்பிட்டேன் ... அவன் ஏதோ பெரிய படிப்பு படிக்கிறானாம்... அதுக்கு மத்தா நாள் ஏதோ பரீட்சையாம் .... அதை எழுத வந்திருக்கிறதா சொன்னான் ... அப்புறம் என் கடை வியாபாரத்தை பத்தி விசாரிச்சான் .... அப்படியே ஏதேதோ பேசிக்கினே சாப்பிட்டு முடிச்சோம் ...
பொறவு அருணாவும், உங்க அம்மாவும் என்னைய கூட்டிக்கினு போய் தோட்டத்துல இருக்கிற வாழை , தென்னைய காட்டினாங்க ... அப்ப எங்க கூட வெற்றியும் வந்தான் ...
பேசிக்கினே காலாற தோட்டத்துல நடக்கும் போதே அன்னைக்கு முச்சூடும் வேலை பார்த்ததால எனக்கு சீக்கிரமே கண்ணு சொக்கிடுச்சு.... உடனே அருணா எனக்கு பாயும் தலயாணியும் கொடுத்து கூடத்துலயே படுத்துக்கனு சொல்லிச்சு ....
படுத்தது தான் தெரியும் நிம்மதியா தூங்கி பூட்டேன்..
ஒரு , ஒரு மணிக்கு மேல இருக்கும்னு நினைக்கிறேன் ....
திடீர்னு ஒரு பொம்பள குரல் கேட்டுச்சு..... அரைகுறை தூக்கத்துல எழுந்த எனக்கு எங்கிருந்து சத்தம் வருது... யாரு அலர்றானு ஒண்ணுமே புரியல..... சுத்தி முத்தி நான் பாத்துக்கிட்டே இருக்கும் போது
யாரோ மாடில இருந்து திபுதிபுன்னு இறங்கி வராப்ல சத்தம் கேட்டது... எனக்கு முழுசா முழிப்பு வந்துடுச்சு ... எழுந்து போய் பார்க்கலாம்னு நினைக்கும் போது ....
லட்சுமி வேகமா தல தெறிக்க மாடிலயிருந்து ஓடி வந்துச்சு ....
எனக்கு ஒண்ணுமே புரியல ....
யாரு துரத்திக்கினு வரா... எதுக்காக ஓடி வருதுனு நினைக்கும் போது, அது பின்னாடியே வெற்றியும் ஓடி வந்தான்....
என்னாச்சிம்மா லக்ஷ்மினு கேட்கறேன் அதை காதுல வாங்கிகாம , வேகமா போய் சாப்பாட்டு டேபுல்ல இருந்த கத்திய கையில எடுத்துகிட்டு கிட்ட வந்த ... கழுத்து அறுத்துக்குனு செத்துப் போயிடுவேன்னு வெற்றியை பார்த்து மிரட்ட ஆரம்பிச்சிடுச்சு......
எனக்கு அஷ்டமாடியும் அடங்கி போச்சு ... வெற்றியும் அப்படியே சிலையா நின்னுட்டான் ..
கைல கத்திய வச்சுக்கினே வீட்டு வாசப்படி நோக்கி லட்சுமி மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க வேகமா ஓட சொல்ல, அது கால்ல குழந்தையோட விளையாட்டு சாமான் பட்டுடுச்சு ...
ஐயோ... குழந்தையை மறந்துட்டேனேனு... அழுதுக்கின்னே திரும்பி ஓடி வந்துச்சு ...
ஓரளவுக்கு நடந்தது புரிஞ்சதால லட்சுமி... நில்லும்மா பயப்படாதனு சொன்னேன் ... ஆனா அது காதுலயே வாங்கிக்காம மறுபடியும் வெற்றியைப் பார்த்து,
என் பின்னாடி வந்த.... என் பொணம் தான் உனக்கு கிடைக்கும்னு சொல்லிட்டு கத்தியோடயே மேல ஓடிப் போச்சு .... அப்புறம் கதவ ஓங்கி அடிச்சு சாத்தின சத்தம் கேட்டுச்சு ....
வெற்றி கிட்ட என்னன்னு கேட்டேன் ....நிறைய பணத்தை என் கைல கொடுத்து இங்க நடந்த எதையும் நீ பார்க்கல... போய் பேசாம தூங்கு.... அப்படின்னு சொல்லிட்டுஅவன் ரூம்ல போய் தூங்கிட்டான் ...
அப்புறம் எனக்கு ரொம்ப நேரம் தூக்கம் வரல. ... மனசுக்கு ரொம்ப பாரமா இருந்துச்சு .... சரி தப்பு தண்டா எதுவும் நடக்கலனு ஆறுதல் பட்டுக்குனே கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் தூங்கி பூட்டேன் .....
காலையில ஒரு 7:00 மணி இருக்கும் ... அருணாவும் உங்க அம்மாவும் டீ குடிச்சிகினு இருந்தாங்க .... வெற்றி அங்க இல்ல எங்க போனான்னு தெரியல ...
அப்ப குழந்தையை தூக்கினு கைல ஒரு பையோட கீழ வந்த லட்சுமி, அங்க டீ குடிச்சுக்கினு இருந்த அருணாவ பார்த்ததும், பைய கீழ வச்சிட்டு வேகமா போய் அருணா கன்னத்துல ஓங்கி ஆக்ரோஷமா அறைஞ்சிட்டு
"நீ எல்லாம் மனுஷியே இல்ல .. உன்னை கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் அடங்காது டி.... இப்பவே உன்ன கொன்னு போட்டுடுவேன் ... ஆனா என் குழந்தைக்காக பாக்கறேன்...
என்னைக்கும் இல்லாத திருநாளா , நேத்து நைட்டு என் ரூம்ல விளையாடிட்டு இருந்த உன் குழந்தைகளை கூட்டிக்கிட்டு போகும் போது எனக்கும் என் குழந்தைக்கும் சேர்த்து பாலை கொண்டு வந்து கொடுத்த பாரு .... அப்பவே நான் உஷாரா இருந்து இருக்கணும் ...
இல்லாம, உன்னை நம்பி நீ கொடுத்துட்டு போன பாலை குழந்தைக்கு கொடுத்தேன் பாரு... அது நான் பண்ணின முதல் தப்பு ...
கூடவே நானும் குடிக்கலாம்னு நினைச்சேன் பாரு , அது அதைவிட பெரிய தப்பு ...
நல்ல வேளையா அப்ப மழை பெய்யிற சத்தம் கேட்டுச்சு ... பால்கனில காயற துணியை எடுத்துட்டு வந்துட்டு குடிக்கலாம்னு அங்க போனா அதுக்குள்ள எங்கிருந்தோ பூனை வந்து ஜன்னல் வழியா குதிச்சு டேபுல்ல வச்சிருந்த பாலை கொட்டிடுச்சு ...
அப்படி மட்டும் நடக்காம அந்த மயக்க மருந்து கலந்த பாலை நான் குடிச்சி இருந்தேன்னா இந்நேரம் என் மானம் போயிருக்கும் நானும் செத்தே போயிருப்பேன் ... நீ எவ்ளோ சூழ்ச்சி பண்ணாலும் கடவுள் ஏதோ ஒரு வழில என்னை காப்பாத்திட்டாரு ...
இனிமே இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன்.... தாயும் மகளும் என் குழந்தையை கொன்னுட்டு, என்னை எவனுக்காவது கூட்டி கொடுக்க கூட தயங்க மாட்டீங்கன்னு தெரிஞ்சு போச்சுனு கோவத்துல கத்திட்டு லஷ்மி வீட்டு வாயில நோக்கி போக சொல்ல,
ஒரு நிமிஷம், நீ இங்க நடந்த எல்லாத்தையும் என் அண்ணன் ஊர்ல இருந்து வந்ததும் சொல்லு .... நம்புதான்னு பார்க்கலாம் ...
அருணா நையாண்டியா சொல்லுச்சு ...
அதுக்கு, உன் அண்ணன் கிட்ட சொல்லப் போறேன்னு நான் சொல்லவே இல்லையே ... சொன்னாலும் பிரயோஜனம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியுமேனு லட்சுமி சொல்லுச்சு ...
சொல்லித்தான் பாரேன் ... என் அண்ணன் நம்பாது ... ஒரு வேளை என் அண்ணன் நம்பிச்சின்னா , இந்த மொபைல்ல இருக்கிறத காட்டுவேன் ....
உன் பொண்டாட்டியோட லட்சணத்தைப் பாருன்னு...... இதுல இருக்கிற ரெண்டு சீன் போதும் .... என் அண்ணன் தன் வாழ்க்கையிலிருந்தே உன்னை தூக்கி எறிஞ்சிடும்னு... அருணா சொல்லுச்சு ...
அதை கேட்டதும் லட்சுமி முகத்துல லேசான அதிர்ச்சி , ஆனா உடனே சமாளிச்சிகினு
அதுல என்ன இருந்தாலும் எனக்கு அக்கறையில்ல... அதோட , உன் அண்ணன் யாரு என்னை தூக்கி எறிய .... இப்படிப்பட்ட குடும்பத்துல வாக்கப்பட்டு வந்ததுக்காக நான் தான் உன் அண்ணனை என் வாழ்க்கையில இருந்து தூக்கி எறியனும் .... கூடிய சீக்கிரம் அது நடக்கும்னு லட்சுமி சொல்லிட்டு, விரு விருன்னு வீட்டை விட்டு போயிடுச்சு ....
லட்சுமி போனதும், இது என் அண்ணனுக்கு தெரிய கூடாதுன்னு சொல்லி அருணா எனக்கு நிறைய பணம் கொடுத்துச்சு ...
நான் வந்த வேலையை முடிச்சிட்டு அன்னைக்கே என் வீடு போய் சேர்ந்துட்டேன் ...ஒரு ரெண்டு நாள் கழிச்சு வெற்றி என்னை தேடி என் கடைக்கு வந்தான் ....
ஏன் வெற்றி அப்படி பண்ண ... லட்சுமி அழுதுக்கினே வீட்டை விட்டே போயிடுச்சுனு கேட்டதுக்கு,
அவ அந்த வீட்டை விட்டு போகணும்னு தான் அப்படி பண்ணேன் .... எனக்கு லட்சுமிய பச்சைமலை புரத்துல மொத முறை பார்க்கும் போதே ரொம்ப பிடிச்சு போச்சு .... அது மட்டும் இல்ல ராம்சரண், அவன் அப்பா ரங்கசாமி மேல எனக்கு எப்பவுமே கோவம் உண்டு .... என் அக்கா மீனாட்சி ராம்சரணை கட்டிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுச்சு... அவ படிக்காதத காரணம் காட்டி , என் மருமகளா ஏத்துக்க மாட்டேன்னு ரங்கசாமி நிராகரிச்சுட்டான் .... என்னதான் என் அக்காவுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருந்தா கூட, ராம் சரணை கட்டிக்கலையேன்னு ஒரு வருத்தம் அதுக்கு இப்ப வரைக்கும் இருந்துகிட்டு தான் இருக்கு ....
என் அம்மா, பாட்டிக்குமே அப்படி ஒரு வருத்தம் இப்ப வரைக்கும் இருக்கு ... ராம்சரணோட குழந்தை காதுகுத்துக்கு ரங்கசாமி தன் குடும்பத்தோட பச்சைமலைபுரம் வந்தப்ப நீயும் தானே வந்திருந்த ... அப்பவே ரங்கசாமி முன்னாடியே லட்சுமி கிட்ட எல்லாத்தையும் என் பாட்டி சொல்லி பொருமிச்சே ... பார்த்த இல்ல ..
எனக்கும் , என் அக்காளை வேணாம்னு சொல்லிட்டு, அந்த ராம்சரண் லட்சுமிய கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழறது சுத்தமா பிடிக்கல ...
ஆனா என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்ப, அருணா , காது குத்து முடிஞ்சதும் என்னை தேடி வந்து வெளிப்படையா பேசினா...
இங்க வந்ததிலிருந்து, உன் பாட்டி , அம்மா , உன் அக்கா மீனாட்சினு எல்லாரையும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன் , அவங்க பேசினதையும் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் ... அவங்களை விட நீ லட்சுமிய ஆசையா பார்க்கிறதையும் பார்த்துகிட்டு தான் இருந்தேன் ...
நீ நினைக்கிற மாறி என் அண்ணனும் லட்சுமியும் அன்னோன்ய தம்பதிகள் எல்லாம் கிடையாது.... என் அப்பா சொன்னாருங்கிறதுக்காக தான் என் அண்ணன் லட்சுமிய கல்யாணம் கட்டிக்கிச்சு ..... போன வாரம் கூட ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை .... என் அண்ணன் லட்சுமிய அடிச்சிடுச்சு ... எவ்ளோ சொல்லியும் லட்சுமி சொன்னத கடைசி வரைக்கும் என் அண்ணன் நம்பவே இல்ல .... என் தங்கச்சி சொன்னதைத்தான் நம்புவேன்னு வெளிப்படையா சொல்லிடுச்சு .... லட்சுமி அழுது கூட பார்த்தா ...ம்ஹும்... என் அண்ணன் துளி கூட மசியலயே.....
உனக்கு லட்சுமி வேணுன்னா ஏதாச்சும் திட்டம் போட்டு , என் அண்ணன் கிட்ட இருந்து பிரிச்சிடு...
அதுக்கப்புறம் அவளை எப்படியாவது சம்மதிக்க வச்சி கல்யாணம் கட்டிக்கிட்டா கட்டிக்கோ ... இல்ல... அப்படியே குடும்பம் நடத்தறதா இருந்தாலும் நடத்திக்கோ .... அது உன் சாமர்த்தியம் .... எனக்கு அவ என் அண்ணன் வாழ்க்கையை விட்டு போகணும்.... அதுக்கு உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னாலும் சொல்லு ... செய்யறேன்னு அருணா சொன்னா ... அதைத்தான் நீ முந்தா நாள் அருணா வீட்ல பார்த்தேன்னு சொன்னான் ...
உடனே நான், அருணா லட்சுமி கிட்ட மொபைல்ல உன்னை பத்தின ரெண்டு சீன் இருக்கு ... அதை என் அண்ணன் கிட்ட காட்டினா என் அண்ணன் உன்னை தூக்கி எறிஞ்சிடும்னு சொல்லுச்சே அது என்னன்னு கேட்டேன் ...
உடனே வெற்றி அவன் மொபைல்ல போட்டு காட்டினான் .....
படுக்கையில லட்சுமியோட இடுப்புல கையை போட்டு தன்னோட கட்டிக்கிறான்.... லட்சுமியோட நெத்தி கன்னம்னு அவன் முத்தம் கொடுக்கிறான் .... அதுல அதான் இருந்தது ..."
கேட்டுக் கொண்டிருந்த ராம்சரணின் முகம் செங்குருதியாய் கோபத்தில் சிவக்க, அதனை உள்வாங்கிக் கொண்டே தொடர்ந்தவன்
"இந்த ரெண்டு சீன தான் அருணா சொல்லுச்சானு கேட்டேன் ...
ஆமா, பால்ல தூக்க மாத்திரை கலந்ததால நல்லா தூங்கி இருப்பான்னு நினைச்சு தான் தொட்டேன் .... எப்படி அவளுக்கு முழிப்பு வந்துச்சுன்னே தெரியல ... தூக்க கலக்கத்துலயே லைட்ட கூட போடாம, யாருடா நீ வெளிய போனு கத்திக் கூப்பாடு போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டா ...
அது எல்லாமும் மொபைல்ல ரெக்கார்டு ஆயிருச்சு...
நான் தான் எனக்கு தேவையானதை மட்டும் ட்ரிம் பண்ணிட்டேன்னு சொன்னவன்
இதையெல்லாம் ஏன் உன்கிட்ட விலாவரியா சொல்றேன்னா, ராம் சரண் ஊர்ல இருந்து வந்ததும் ஒருவேளை லட்சுமி அன்னைக்கு நடந்ததுக்கு உன்னை சாட்சியா சொல்லி, அவனும் உன்னை தேடி வந்து விசாரிச்சான்னா , நான் உங்க வீட்டுக்கு வரவே இல்ல .... நான் வெளியூர்ல வேலை செய்யறேன் .. .உன் பொண்டாட்டி லட்சுமி சொன்னது முழுக்க முழுக்க பொய்யின்னு நீ ஒரே அடியா அடிச்சி பேசணும் ... அதுக்காக தான்னு சொன்னான் ..
சரி நான் அப்படி சொல்லிட்டா, ராம்சரண் நம்பிடுவாரானு கேட்டேன் ...
அத பத்தி நீ கவலைப்படாத.... ராம்சரணை நம்ப வைக்கிறது அருணாவோட வேலை ....
அவ ராம் சரண் கிட்ட,
ராமலட்சுமியோட கல்யாண நின்னதுக்கு நான் தான் காரணம்னு சொல்லி அண்ணி என்னை அடிச்சுட்டு வீட்டை விட்டு போனதா நான் உன்கிட்ட சொன்னது பொய்ண்ணே... அண்ணியோட கேரக்டரே கொஞ்ச நாளா சரி இல்ல... அண்ணிக்கும் பச்சைமலை புரத்து வெற்றிக்கும் கொஞ்ச நாளாவே தப்பான தொடர்பு இருக்கு ... நீ ஊர்ல இல்லாத நேரத்துல, எக்ஸாம்னு சொல்லிட்டு வெற்றி இங்க வந்தான்... அப்ப அவங்க ரெண்டு பேரும் உன் ரூம்ல இருந்த லட்சணம் தான் இதுனு அவளே கண்டுபிடிச்ச மாதிரி வீடியோ ஆதாரத்தை காட்டி , தேவையில்லாம உன் மனச கஷ்டப்படுத்த வேண்டாமேனு தான் இதையெல்லாம் உன்கிட்ட இருந்து மறைச்சிட்டேண்ணேனு சரியா டயலாக் பேசி ராம் சரணை நம்ப வச்சு லட்சுமியை அவன் கிட்ட இருந்து பிரிச்சிடுவா .... அதுக்கப்புறம் லட்சுமிய எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் ....
இப்போதைக்கு நான் சொன்னதை மட்டும் நீ செஞ்சா போதும் ... இந்தா இந்த பணத்தை வச்சிக்க ... என் காலேஜ்ல இருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்துல ஒரு டிம்பர் டிப்போ இருக்கு ... அங்க உன்னை வேலைக்கு சேர்த்துவிடறேன் ....
ஒரு வருஷம் ராம்சரண் கண்ணுல படாம அங்க நீ வேலை செஞ்சே ஆகணும் ....
ஒருவேளை ராம்சரண் உன்னை தேடி வந்து விசாரிச்சான்னா நான் சொல்லிக் கொடுத்த மாறியே சொல்லணும் ... மாத்தி சொன்னேனு தெரிஞ்சது உன்னை கொன்னே புதைச்சிடுவேன் ஜாக்கிரதைனு மிரட்டினான் ...
உடனே நான், இவ்ளோ தெளிவா நீயும் அருணாவும் திட்டம் போட்டீங்களே , எதுக்காக என்னைய நடுவால கூப்பிட்டீங்க ... என்னை கூப்பிடாம விட்டிருந்தா, உங்களுக்கும் பிரச்சனை இருந்திருக்காது நானும் நிம்மதியா இருந்திருப்பேன் இல்லனு மனசு தாங்காம கேட்டேன் ....
அதுக்கு அவன், அன்னைக்கு நாங்க போட்ட திட்டப்படி நடந்திருந்தாலும் சரி நடக்கலன்னாலும் சரி ..... நான் அருணாவை பார்க்க வந்ததுக்கு நீ தான் சாட்சி ...சோ நடந்ததுக்கு சாட்சியா உன்னைத்தான் லட்சுமி ராம்சரண் கிட்ட சொல்லுவா .... அவனும் ஆதாரம் இல்லாமல எதையும் நம்பறவன் கிடையாதுங்கறதால அவன் உன்னை தேடி வந்து விசாரிப்பான் ... அப்ப
நீ நான் உங்க வீட்டுக்கு அன்னைக்கு வரவே இல்ல ... உன் பொண்டாட்டி சொல்றது மொத்த பொய்யின்னு சொன்னேன்னு வை அது ஒன்னு போதும் அருணா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஆயிடும் ....லட்சுமி சொன்னது மொத்தம் பொய்யின்னு ஆயிடும் ... அதுக்காக தான் அருணா உன்னை அவங்க வீட்டுக்கு வாழைகுலைய காரணமா வச்சு வரவழைச்சானு சொன்னான்..
அத கேட்டு நான் அப்படியே ஆடிப் போயிட்டேன் ...."
என ரவி முடிக்க, அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான் ராம்சரண்.
எவ்வளவு தெளிவாக திட்டமிட்டு, தன் குணத்தை தங்கை பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை கேட்க கேட்க அவன் ரத்தம், உலைக்கலமாய் கொதிக்க தொடங்கியது.
பச்சைமலைபுரத்தில் குளியல் அறையில் யாரோ எட்டிப் பார்த்ததாக என்னவள் பயந்த போது கூட, அதனை இயல்பாக கடந்து சென்றுவிட்டேனே ....
பாவம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க பலவகையில் முயன்றாளே.... எதையும் ஏற்காமல் விட்டுவிட்டேனே ...
மூன்றாவது மனுஷியான தரகர் காமாட்சியே தனக்கு எதிராக சாட்சி சொன்ன போது, ஏறக்குறைய அருணாவிற்கு கொத்தடிமையாக இருக்கும் சுதந்தி - ரவி தம்பதியை பற்றி சொல்லவே வேண்டாம் ....
நிச்சயம் தனக்கு எதிராகத்தான் சாட்சி சொல்வார்கள் என்று எண்ணித்தான் என் கண்மணி ரவியைப் பற்றி சொல்லவில்லை போலும்....
அதைவிட விசாரணை என்ற ஒன்றை நான் நிகழ்த்தியிருந்தால் தானே , குறைந்தபட்சம் நடந்ததையேனும் அவள் சொல்லி இருப்பாள் ...
பிறகு தானே சாட்சியத்தை பற்றி யோசிக்க வேண்டும் ...
நான் தான் வீட்டை விட்டு சென்றவளை ஏதோ விரோதி போல் நினைத்து அதற்கெல்லாம் சந்தர்ப்பமே கொடுக்கவில்லையே ... பிறகு என்னவள் என்ன தான் செய்வாள் பாவம் ...
ஆதலால் நடந்த அனைத்திற்கும் மற்றவர்களை காட்டிலும் முழு முதற் குற்றவாளி நான் தான்...
என்று தன்னைத் தானே வகைத்தொகை இல்லாமல் அவன் மானசீகமாக நிந்தித்துக் கொண்டிருக்கும் போது ,
"பணத்துக்கு ஆசைப்பட்டோ, போலீசுக்கு பயந்தோ இதையெல்லாம் நான் சொல்லல ... அடிப்படையில உங்க சம்சாரம் லட்சுமி ரொம்ப நல்லதுன்னு சுகந்தி அடிக்கடி சொல்லும் ....
நானும் லட்சுமி பொறுப்பா பொறுமையா பல சமயங்கள்ல இருந்தத பாத்திருக்கேன் ... அதனாலதான் எனக்கு தெரிஞ்ச மொத்த விஷயத்தையும் ஒன்னு விடாம உங்க கிட்ட சொல்லிட்டேன் ....லட்சுமி ரொம்ப நல்ல பொண்ணு ... அருணாவையும் உங்க அம்மாவையும் எந்த காலத்துலயும் நம்பாதீக..."
என ரவி மனசிலிருந்து பேசப்பேச, ராம் சரணின் குற்ற உணர்வு கொண்ட மனம் அப்பளமாய் நொறுங்க,
"சரி, உன் நம்பர் சொல்லு ...gpay பண்றேன் ..." என்றான் அவசரமாய் .
"வேணாங்க.... ஏற்கனவே அருணா கிட்டயும் வெற்றி கிட்டயும் ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கையை கெடுத்து பணத்தை வாங்கிட்டேன்னு மனசாட்சி உறுத்திக்கினே இருந்துச்சு .... இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு .... நீங்க கிளம்புங்க ..."
என அவன் மறுக்க, எப்படியோ பேசி வற்புறுத்தி ஒரு பெரும் தொகையை
அவனுக்கு பணப்பரிவர்த்தனை செய்துவிட்டே அந்த இடத்தை விட்டு துரிதமாக கிளம்பினான் ராம்சரண்.
அதற்குள் ரங்கசாமி வியாபாரத்தை பேசி முடித்திருக்க, தந்தையை அழைத்துக் கொண்டு டிம்பர் டிப்போ முதலாளியிடம் இருந்து விடைபெற்றவன், துரிதமாக தன் காரை வெற்றி பணியாற்றும் கல்லூரிக்கு செலுத்தினான்.
"என்னப்பா, வீட்டுக்கு போற வழி மாதிரி தெரியலையே ... ஏன் குன்னூரை நோக்கி போற.... " என ரங்கசாமி வினவ,
"ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்துல ஒரு முக்கியமான வேலை இருக்குப்பா ... அங்க போனா உங்களுக்கே புரியும் ..."
என அவன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒன்றுமே விளங்காமல் ரங்கசாமி அமைதிக்காக்க, 10 கிலோமீட்டரை 15 நிமிடத்தில் கடந்து, அந்த விவசாயக் கல்லூரியை அடைந்தான் நாயகன்.
"சரண் .... இது ...... வெற்றி வேலை செய்யற அக்ரிகல்சுரல் காலேஜ் இல்ல ...."
"அதே தான் பா ...."
"இங்க எதுக்குப்பா வந்திருக்கோம் ... அவனைப் பார்க்கவா வந்திருக்கோம்...."
"ஆமாம்பா ..." என்றவன்
எரிமலைக் குழம்பாய் கொந்தளித்த கோபத்தை உள்ளுக்குள்ளேயே
அடக்கியபடி தன் காரை மரத்தடியில் நிறுத்திவிட்டு , மதிய உணவு வேளை என்பதால் பேராசிரியர்கள் அறை நோக்கி போகலாமா என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு இளைஞன் அவனைக் கடக்க,
"எக்ஸ்கியூஸ் மீ, லெக்சரர் வெற்றிவேல பார்க்கணும் ...." என்றான் நட்பாய்.
"அவரு .... இப்ப ஸ்டாப் ரூம்ல இருப்பாரு ..." என்ற இளைஞன், உடனே,
"அதோ அவரே ஃபீல்டுக்கு போய்கிட்டு இருக்காரு .... பாருங்க.." என்றான் அவசரமாய்.
"ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா ... அவரை பாக்க ஒரு பெரியவர் வந்திருக்காருன்னு சொல்லி, அவரை இங்க வர சொல்ல முடியுமா ...."
"ஓ.... ஷூர்...." என்றவன் துரிதமாக ஓடிச் சென்று வெற்றிவேலிடம் விஷயத்தைச் சொல்ல,
"பெரியவரா யாராயிருக்கும் ...." என வாய்விட்டே கேட்டுக் கொண்ட வெற்றி,
"எங்க இருக்காரு ..." என்றான் யோசனையாய்.
"அதோ அந்த மரத்தடில ஒரு கார் நிக்குதே... அதுல தான் அந்த பெரியவர் இருக்காரு..."
என அந்த இளைஞன் சொல்ல
"சரி நீ போ .... நான் அவரை போய் பாக்கறேன் ..."
என்றவன் ராம்சரணின் காரை நோக்கி யோசனையோடே வர, அடுத்து சில மணித்துளியில் பெரும் கலவரம் நடந்தேறவிருப்பதை அறியாமல் , வழக்கம் போல் ரங்கசாமி டிம்பர் டிப்போவில் நடந்த வியாபாரத்தை பற்றி காரில் சாய்ந்தமர்ந்தபடி கதைக்க தொடங்க, அதை எதுவும் உள் வாங்கிக்கொள்ளாமல் , வருபவனையே கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான் ராம் சரண்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள்....
awesome 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
ReplyDeleteThanks dr
DeleteSupero superb sis. Semma epi tdy. Waiting for fight sequence
ReplyDeleteThanks dr
DeleteSuper mam
ReplyDeleteThanks dr
DeleteNext episode
ReplyDeletei ill upload tonite dr
Delete