அத்தியாயம் 119
மறுநாள் காலையில் வழக்கம் போல் ஸ்ரீ துரிதமாக எழுந்து அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருக்கும் போது, லேசாக வயிற்று வலி ஏற்பட குளியலறைக்கு சென்று பார்த்தவளுக்கு, அவளது எதிர்பார்ப்பும் ஆசையும் குருதியாய் களைந்து வழிந்தோட , மழலையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவளின் மனம் உள்ளுக்குள் ஓலமிட்டு அழ , அப்படியே உறைந்து போனாள் மங்கை.
சில மணித்துளிகளுக்கு பிறகு மனதை தேற்றிக்கொண்டு வெளியே வந்தவளிடம் மடிக்கணினியில் முகம் புதைத்திருந்தபடி அவளது மன்னவன் ,
"ஸ்ரீ, கிளம்பலாமா ...." என்றான் அரவம் கேட்டு.
எங்கு வாய் திறந்தால் ஓங்காரமிட்டு அழுது விடுவோமோ என்ற அச்சத்தில் அவள் சிலையாகி நிற்க, அவளிடம் இருந்து பதில் வரவில்லை என்றதும், அவன் தலை திருப்பி பார்க்க, அவளோ முகம் சிவந்து , கண்கள் கலங்கிய நிலையில் நிற்க,
"ஏய் என்ன ஆச்சு ....." என்றான் லேசான பதற்றத்தோடு.
"பீரியட்ஸ் ராம் ...." என அவள் குரல் உடைய, ஒரு கணம் தடுமாறியவன் பிறகு விருட்டென்று எழுந்து சென்று அவளை நெருங்கி
"ஸ்ரீ..... கல்யாணம் ஆகி நாலு மாசம் கூட சரியா ஆகல .... இப்ப ஒரு மாசமா தானே PCODக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்க ... உடனே குழந்தை உண்டாகணும்னு எதிர்பார்த்தா முடியுமா.... ஒரு வருஷமாவது வெயிட் பண்ணனும்னு டாக்டர் சொன்னாங்களா இல்லையா ..." என ஏதேதோ பேசி மனைவியை மார்போடு அணைத்து சமாதானம் செய்தவனுக்கும் ஏமாற்றம் இல்லாமல் இல்லை.
ஆனால் அதனை இளையவளான தன் பிராட்டியிடம் காட்டிக்கொள்ள மனம் வராமல் உள்ளுக்குள்ளே மருகியபடி
"பெய்ன் அதிகமா இருந்தா லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடு ..." என்றான் அவள் தலைக்கோதி.
"பெயின் அவ்வளவா இல்ல ராம் .... நான் ஆபீஸ் போறேன் ..... என்னால மேனேஜ் பண்ண முடியும் ..."
"அப்ப நாலஞ்சு பேட்ஸ் ஹேண்ட் பேக்ல வச்சுக்கோ... ரொம்ப உடம்பு முடியலன்னா போன் பண்ணு, இம்மீடியேட்டா வந்து பிக் (Pick) பண்ணிக்கிறேன்..."
என தன்னாலான அறிவுரைகளை கூறி தன்னவளை சமாதானம் செய்து கீழ் தளத்திற்கு அவன் அழைத்து வரும் போது
"பிரியா, இன்னைக்கு சாயந்திரம் சீக்கிரம் வர முடியுமா .... தெருமுனைல இருக்கிற கிருஷ்ணவேணி அம்மா வீட்ல சுமங்கலி பிரார்த்தனைக்கு கூப்பிட்டிருக்காங்க.... ரெண்டு பேரும் போயிட்டு வந்துடலாம் ..." என அகல்யா பூ தொடுத்து கொண்டே கேட்க, ஸ்ரீ தடுமாற,
"இவளுக்கு உடம்பு சரியில்லம்மா ...." என்றான் வீரா முந்திக்கொண்டு.
"உடம்புக்கு என்ன ...." அகல்யா இருவரையும் ஒருசேர பார்க்க,
" உடம்பு சரியில்லைன்னா புரிஞ்சுக்கோயேன்....."
"என்ன.... வீட்டுக்கு தூரமா ... இந்த மாசமும் நிக்கலயா .... 24 மணி நேரமும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருந்தா .... குழந்தை எப்படி தங்கும் ...."
"அம்மா.... கொஞ்சம் வாய மூடறியா ...."
" நான் எதுக்காக டா வாய மூடணும் .... தெரியாம தான் கேக்கறேன் ... நீங்க ரெண்டு பேரும் இப்படி நிக்க நேரமில்லாம ஓடி ஓடி லட்ச லட்சமா சம்பாதிச்சு என்ன தான் பண்ண போறீங்க ... காலத்தே பயிர் செய்யின்னு சொல்லுவாங்க .... அப்படிப்பட்ட நேரத்தை விட்டு போட்டு , மண்ணு மலடு ஆனதுக்கு அப்புறம் மகசூலை எதிர்பார்த்தா முடியுமா ... "
"வாய மூடு அகல்யா, எதுவும் பேசாம உள்ள போ .... மீறி பேசின இங்க நடக்கிறதே வேற .... " என பொன்னம்பலம் கர்ஜிக்க,
"என் புள்ள வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நான் நினைக்க கூடாதா ... இவனுக்கு கல்யாணம் முடிஞ்சதே லேட்டு .... காலா காலத்துல குழந்தை பொறந்தா தானே குடும்பம் நல்லா இருக்கும் ... நீங்களும் நல்லது கெட்டத எடுத்து சொல்ல மாட்டீங்க ... சொல்ற எனக்கும் வாய் பூட்டு போடறீங்க ..."
"நல்லது எது கெட்டது எதுன்னு இவங்களுக்கு நல்லாவே தெரியும் .... இவங்க ரெண்டு பேரும் ஒன்னும் குழந்தை கிடையாது ...அதனால நீ பாட எடுக்க வேண்டிய அவசியம் இல்ல ..." என்ற பொன்னம்பலம் மகன் மருமகளை பார்த்து,
"நீங்க ரெண்டு பேரும் ஆஃபீஸ்க்கு கிளம்புங்க.... .... இங்க இருந்தா இவ இப்படித்தான் பேசிக்கிட்டே இருப்பா..."
என முடிக்க, இளையவர்கள் கணநேரம் கூட தாமதிக்காமல் அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.
காரில் சில மணித்துளிகள் மெழுகாய் கரைந்ததும், பக்கவாட்டில் திரும்பி அமைதியாய் இருந்த மனைவியிடம்,
"அம்மா சொல்றதை எல்லாம் மனசுல வச்சுக்காத .... அவங்க .." அவன் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே , அவனது அலுவலகத்தில் உடன் பணி புரியும் ஊழியரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
அழைப்பை அனுமதித்தவனிடம், திட்டவரைவு சம்பந்தமான கணக்கீடுகள் குறித்த சந்தேகங்களை அவர் முன் வைக்க, இவன் பதிலளிக்க என வினாடி வினா போல் கேள்வி பதிலாய் உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அவளது அலுவலகமும் வந்து சேர
"பாய் ராம் .... " என அவள் விடை பெற,
"டேக் கேர் ...." என்றான் ஒரு தீர்க்கமான பார்வை பார்த்து.
அன்று அலுவலகத்தில் வழக்கம் போலான பணிகள் தான் என்றாலும் ,மன உளைச்சலால் அதில் சற்றும் மனதை செலுத்த முடியாமல் தடுமாறினாள் பாவை.
அகல்யா பேசியது அக்கறையாகவும் இருக்கலாம் .... தன்னகங்காரமாகவும் இருக்கலாம் ...
எதுவாக இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதால் அவர் மீது அவளுக்கு துளி கூட கோபமில்லை ...
ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று, ஏதோ ஒன்றை அறிவுறுத்த விழைய , அது என்ன என்று யோசித்து யோசித்து ஏற்பட்ட மனக்கிலேசமே அவளைப் பாடாய்படுத்த, வார்த்தைகளில் விவரிக்க முடியாமல் அவ திணறிக் கொண்டிருக்கும் போது கயல்விழி வழக்கம் போல் அங்கு வர , பொதுவாக ஸ்ரீ தன் தனிப்பட்ட பிரச்சனைகளை மூன்றாம் நபரிடம் பகிரும் பழக்கமில்லாதவள் என்றாலும் ஏனோ அன்று மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்ட வேண்டும் என்ற எண்ணம் பிறக்க, அகல்யா பேசியதை மட்டும் தவிர்த்து விட்டு, தன் எதிர்பார்ப்பு பொய்த்து போனதை மட்டும் வந்தவளிடம் சொன்னாள்.
கயல்விழியும் அவளது காதல் விவகாரத்தை முன்பே மனம் விட்டு அவளிடம் பகிர்ந்திருந்ததால், ஒளிவு மறைவு இல்லாமல் தன் மனக்குமுறல்களை ஸ்ரீ இயல்பாகப் பகிர,
"PCOD பிரச்சனை இப்ப எல்லாம் ரொம்ப காமன் ப்ரியா .... மெடிசன்ஸ்ச விட லைப் ஸ்டைல் சேஞ்ஜஸ் தான் அதுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட்னு சொல்லுவாங்க.... என் அக்காவுக்கும் இந்த பிரச்சனை இருந்தது .... டூ இயர்ஸ் கழிச்சு நேச்சுரலாவே கன்சீவ் ஆயிட்டா .... " ஆறுதல் சொன்ன கயல்
"உங்களுக்கு குழந்தைங்கன்னா பிடிக்குமா......." என்றாள் தோழியின் முகம் தெளிவடையாததைக் கண்டு.
"எனக்கு ரொம்ப பிடிக்கும்... என்னை விட என் ஹஸ்பண்ட்க்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்... அவரோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கு .... எனக்கு தான் ஹீமோகுளோபின் கன்டென்ட் கம்மியா இருக்கு .... PCOD பிரச்சனைனு என்னென்னமோ இருக்கு ..... "
"கவலைப்படாதீங்க ப்ரியா.... கூடிய சீக்கிரம் எல்லாமே சரியாயிடும் ..." என்றவள் வீராவை பற்றி எதேச்சையாக ஓரிரு வார்த்தை விசாரிக்க,
ஸ்ரீயோ பூஸ்ட் குடித்தது போலான புத்துணர்வோடு கணவனைப் பற்றி மனம் லயித்து பேச,
" கேட்கணும்னு அடிக்கடி நினைச்சிப்பேன் மறந்தே போயிடுவேன் .... உங்களோடது லவ் மேரேஜா .... ஏன் கேட்கிறேன்னா ... ரெண்டு செகண்டுக்கு முன்னாடி அவ்ளோ சோகமா இருந்தீங்க .... இப்ப உங்க ஹஸ்பண்ட பத்தி பேச ஆரம்பிச்சதும் ரொம்ப ஹாப்பி ஆயிட்டீங்க... லவ்வோ லவ் மேரேஜோ ..."
குலுங்கி சிரித்த ஸ்ரீ,
"எங்களோடது அரேஞ்ச்டு கம் லவ் மேரேஜ்னு சொல்லலாம் .... எங்க பேரன்ஸ் அலையன்ஸ ப்ரொபோஸ் பண்ணினதுமே, என் ஹஸ்பண்ட் என்னை பார்க்க ஆஸ்திரேலியா வந்துட்டாரு...... "
"வாவ் ... " என்றவளிடம் அப்போது நடந்த ஓரிரு முக்கியமான மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களை அவள் பகிர, மெய்மறந்து கேட்ட கயல்,
"பொண்ணு பாக்க வர்றதுக்கு முன்னாடியே , ஃபர்ஸ்ட் மீட்டிங்கே ஆஸ்திரேலியால தானா .... சூப்பர்ப்..." என சிலாகிக்க,
"ஒரு மாசத்துக்கு முன்னாடி ஹனிமூன் கூட ஆஸ்திரேலியா தான் போயிருந்தோம் .... ஆனா சிட்னி போகல ....குயின்ஸ்லாண்ட், பெர்த் போயிருந்தோம் ..." என்றவளின் பதிலில் ஒரு கணம் அதிர்ந்து போனான் ராணா.
ஆம், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒன்று விடாமல் தன் மடிக்கணினியின் வழியே கேட்டுக் கொண்டிருந்த ராணாவிற்கு, பெர்த்ல்(Perth) அவளை சந்தித்தது நினைவுக்கு வர, உடனே தன் மது மீண்டும் பிறந்து வந்து தன்னையே பின் தொடர்கிறாள் என்ற எண்ணமும் வர , அடுத்த கணமே உள் தொலைபேசி மூலம் ஸ்ரீக்கு அழைப்பு விடுத்தான்.
மெய்மறந்து கயல் விழியோடு பேசிக் கொண்டிருந்தவள், அடுத்த கணமே அழைப்பை எடுக்க ,
காணொளியில் அவளை பார்த்துக்கொண்டே அவன்
"ஹலோ ..." சொல்ல, கார்த்திகேயன் குரல் போல் இல்லாததால் அவள் தடுமாற, புரிந்து கொண்டவன்
"நான் ராணா பேசறேன் .... என் ஆபீஸ் ரூம்க்கு வர முடியுமா ஸ்ரீ ..." என்றதும் ஒரு மணித்துளி அமைதிக்கு பிறகு
" ஓகே ராணா.... வரேன் ...." என்றாள்.
உடனே அவன் அழைப்பை துண்டிக்க
" கயல், ராணா கூப்டாரு .... என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன் ..."
அவள் தகவல் சொல்லிவிட்டு கிளம்ப, சென்றவளையே வித்தியாசமாக நோக்க தொடங்கினாள் கயல்.
" வா ஸ்ரீ .... உட்காரு ....." என்றான் ராணா புத்துணர்வும் புன்னகையுமாய்.
அவள் மென் புன்னகையோடு அமர்ந்ததும்
"உனக்கு இந்த டீம் பிடிச்சிருக்கா. ... வேலையெல்லாம் எப்படி போகுது ..."
குசலம் விசாரித்தான் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள.
புதிய பிரிவில் கற்றுக்கொண்டவைகள் மற்றும் குழு உறுப்பினர்களை பற்றி அவள் நேர்மறையாக எடுத்து இயம்ப, திருப்தி அடைந்தவன்,
"குட் ஸ்ரீ... கீப் இட் அப் ... நான் உன்னை எதுக்கு வர சொன்னேன்னா நாளையிலிருந்து உங்க ரூட்டுக்கும் கேப் அரேஞ்ச் பண்ணியாச்சு.... மார்னிங் 8 ஓ கிளாக் , ஈவினிங் 6 ஓ கிளாக், அண்ட் 7 ஓ கிளாக் ரெண்டு ஷட்டில் ஆப்பரேட் ஆகும் .... உனக்கு எது வசதியோ அதுல நீ போய்க்கலாம் ...." என்றதும் அவள் முகம் லேசாக வாடி போக,
"ஹேய் என்ன ஆச்சு .... நல்ல விஷயம் தானே இது .....ஓ.... ஒருவேளை ஹஸ்பண்டோட பேசிக்கிட்டே வர ஆப்பர்ச்சூனிட்டி மிஸ் ஆகிடுமோன்னு பயப்படறியோ.... "
உள்ளுக்குள் குமுறினாலும் , வெளியில் இயல்பு போல் அவன் சிரித்தபடி கேட்க,
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ... கேப்(cab) அரேஞ்ச் பண்ணது நல்ல விஷயம் தான் ...." என முடித்துக் கொண்டாள், தன் மன உணர்வை வரையறுக்க தெரியாமல்.
"உன்னோடது லவ் மேரேஜா ...." திடீரென்று அவன் அடுத்த கேள்வியை சம்மந்தமில்லாமல் அடுக்க , சற்று முன்பு இதே விஷயத்தைப் கயல் விழியுடன் பேசிவிட்டு வந்தது நினைவுக்கு வர, அவள் குழப்பப் பார்வை பார்க்க, கண நேரத்தில் சுதாரித்தவன்,
"ஆபீஸ் வந்ததுக்கு அப்புறம் கூட, ஒரு நிமிஷம் நின்னு பேசி சிரிச்சிட்டு தான வர்ற ... அதனால கேட்டேன் ...." என்றான் லேசான புன்னகையோடு.
முதல் தினத்திற்கு பிறகு, இன்று தான் அவளுடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி கேட்கிறான் என அவள் யோசிக்க, அவள் முகம் மாற்றத்தை கண்டதும்
" உங்க ரெண்டு பேரையும் பார்த்தா மேட் ஃபார் இச் அதர்னு சொல்லலாம் ... அவ்ளோ பொருத்தமா இருக்கீங்க .... " பார்க்காத வீராவை பார்த்தது போல் பொய்யுரைத்தவன் பொங்கி எழும் கோபத்தை மறைத்துக் கொண்டு பற்களை நறநறவென்று கடித்த படி , மென் முகத்தோடு சாமர்த்தியமாக சொல்ல, முகம் தெளிந்தவள்,
"தேங்க்ஸ் ....." என பெருமையும் சந்தோஷமுமாய் மொழிந்து விட்டு ,
"உங்களோடது கூட லவ் மேரேஜ் தான் போல........ மேடமோட நீங்க கொடுத்த இன்டர்வியூவ யூடியூப்ல பார்த்தேன்.... கயல் தான் காட்டினாங்க .... அருமையா இருந்தது..... மேடம் ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க ..."
வெள்ளந்தியாய் கன்னக்குழி விழ அவள் உரைக்க,
"உன்னை விடவா ...." என மனதுக்குள் மொழிந்தபடி,
"உன் ஹஸ்பண்ட் பேர் என்ன ..." என்றான் பேச்சை மாற்றி.
"ராம்..." என அவள் மொழிந்த மாத்திரத்தில், இனம் புரியாத லேசர் அளவு மின்சார வெட்டு அவன் உடலில் பாய, ஒரு கணம் அந்த தீ தீண்டலில் சிலிர்த்தவன்,
"உன் ஐடி கார்டுல வேற மாதிரி இருக்கே ..." என்றான் புரியாமல்.
"அவர் ஃபுல் நேம் அதிவீர ராம பாண்டியன்.... நான் மட்டும் அவரை ராம்னு கூப்டுவேன் ...."
"ஓ.....குட்.... ஆங்.. ஸ்ரீ ... சொல்ல மறந்துட்டேனே..... teva ப்ராஜெக்டோட கொட்டேஷன இன்னைக்கே முடிச்சு கார்த்திகேயனுக்கு அனுப்பிடு.... ஏதாச்சும் டவுட்டு இருந்தா ஆண்டனிய கேளு .... அவர் சொல்லிக் கொடுப்பாரு... "
என அவன் தீவிரமாகச் சொல்ல, அமோதிக்கும் விதமாய் தலை அசைத்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறியவளுக்கு ராணாவை பற்றிய குழப்பம் அதிகமாக , முடிவுக்கு வர முடியாமல் தடுமாறியவள் எது எப்படி இருந்தாலும், இன்று ராணாவை பற்றிய தன் மன உணர்வுகளை கணவனிடம் பகிர்ந்தே ஆக வேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டு அன்றைய பணியில் மூழ்கிப் போனாள்.
வழக்கம் போல் அன்று மாலை கணவனோடு வீட்டிற்கு பயணப்படும் போது ராணாவுடன் நடந்த அனைத்து சம்பாஷணைகளையும் அவள் பகிர்ந்து விட்டு,
"எனக்கு என்னவோ இந்த ராணாவை கெஸ் பண்ணவே முடியல ராம் ..... ஏனோ அந்த ஆள் என்னை பார்த்து ஃப்ளட் (Flirt) பண்ற மாதிரியே ஒரு ஃபீல் .... ஃப்ளட் பண்றதுங்கிறத விட அவரோட பார்வையே சரியில்ல .... ஏதோ தப்பா இருக்குது .... ஆனா என்ன தப்புனு தான் கண்டுபிடிக்க முடியல ..."
என ராணாவை பற்றி தன் அபிப்பிராயத்தை சொல்ல, ஓரிரு கணம் அமைதி காத்தவன்,
"intuition is a message from Godனு சொல்லுவாங்க ... தப்ப கண்டுபிடிக்க முடியலன்னாலும் ஏதோ தப்பா இருக்குன்னு உன் உள்ளுணர்வு சொல்லுதுன்னா அது சரியா தான் இருக்கும் பட்டு ... " என அவன் கண நேரத்தில் தீவிரமாய் சொல்ல
"என் இன்டியூஷன் சொல்றது இருக்கட்டும் ... நான் ராணா பேசினதை சொன்னேன் இல்ல ... உங்களுக்கு என்ன தோணுது ..."
"ராணா பேசினது எனக்கு சாதாரணமா தான் படுது ... ஏன்னா நேத்து கூட நீ கார்ல இருந்து இறங்கினதும் என் கூட நின்னு பேசிட்டு தான் போன .... அப்ப தானே லிப்ட் கிட்ட ராணாவை பார்த்தேன்னு சொன்ன ... ஒருவேளை அவரு நாம பேசிக்கிட்டு இருந்ததை பார்த்திருக்கலாம் .... நீ கௌதமோட சண்டை போட்டுட்டு ப்ராஜெக்டை விட்டு வெளியே வந்ததுக்கு கூட நாம ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தத பார்த்து அவன் தேவையில்லாம கமெண்ட் பண்ணினது தானே காரணம் .... அதனால கூட அவன் அப்படி சொல்லி இருக்கலாம் ... இன்னொரு விஷயம் புரிஞ்சுக்கோ .... உன்னை தப்பா பாக்கறவங்க யாரும், நீயும் உன் ஹஸ்பண்ட்டும் மேட் ஃபார் ஈச் அதர்னு காம்ப்ளிமென்ட் கொடுக்க மாட்டாங்க .... அதனால எனக்கு எல்லாமே சாதாரணமா தான் தெரியுது ... ஆனா உனக்கு தப்பா பட்டா, பேசாம பேப்பர் போட்டுடு ... என் ஆபீஸ்ல ஓப்பனிஙஸ் வரும் போது அங்கு ஜாயின் பண்ணிக்கலாம் ..."
என அவன் முடிக்க, மீண்டும் நாயகிக்கு குழப்பம் அதிகமாகி தான் போனது.
அவளது கணவன் சொன்னதும் 100% சரியாக பட, உள் உணர்வை நம்புவதா அல்லது தன் உள்ளத்தை கொள்ளை கொண்டவனின் வார்த்தைகளை நம்புவதா எனப் புரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போது கார் வீட்டை அடைய, வீட்டினுள் சுந்தராம்பாளின் குரல் கணீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது.
இளையவர்களை கண்டதும்,
"வா பாண்டி .... வா ம்மா... " சுந்தராம்பாள் வரவேற்க,
"எப்படி இருக்க பாட்டி ...." வீரா நலம் விசாரிக்க
"எனக்கு என்ன .... நான் சொகமாதேன் இருக்கேன் ... கல்யாணம் ஆகி மூணு மாசத்துக்கு மேல ஆவுது .... நல்ல விஷயம் சொல்லாம, என்னை நல்லா இருக்கியானு குசலம் விசாரிக்கிற..." சுந்தராம்பாள் வழக்கம் போல் வார்த்தைகளை விட சின்னவர்களின் முகம் மாற ,
"அம்மா.... வந்ததுமே ஆரம்பிச்சிட்டியா .... கொஞ்சம் வாய மூடும்மா ...." என தாயை அடக்கிய தாமோதரன்( வீராவின் தாய் மாமன்)
"பாண்டி, உன்கிட்ட சொல்லிட்டு போக தான் இவ்ளோ நேரம் காத்துகிடந்தேன் .... எனக்கு பத்தரை மணிக்கு பிளைட்டு .... நான் கிளம்பறேன் பா ..." என்றார் அவசரமாக.
"என்ன மாமா வந்ததும் கிளம்பறீங்க .... ஒரு நாளாவது இருந்துட்டு போங்க ..."
"இல்ல பாண்டி... வேலை நிறைய போய்கிட்டு இருக்கு .... பாதில விட்டுட்டு வந்து இருக்கேன்....உடனே கிளம்பி ஆகணும் .... மூணு மாசம் கழிச்சு பாட்டியை கூட்டிட்டு போக வருவேன் .... அப்ப ஒரு வாரம் நிச்சயம் இருக்கேன்ப்பா ..." என்றவர் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கேப்ல விமான நிலையத்திற்கு பயணப்பட, அதுவரை அடக்கி வாசித்த சுந்தராம்பாள்,
"கல்யாணத்தப்ப எப்படி இருந்தியோ இப்பவும் அப்படியே தான் இருக்க.... கொஞ்சம் கூட உடம்பு புடிக்கல .... இப்பவும் மூணு இட்லி தான் சாப்பிடறேன்னு உன் அத்தை சொல்றா.... இந்த லட்சணத்துல வேலை வேலைன்னு காலையில போயி இப்ப வீடு வந்து சேர்ந்தா எப்படி கர்ப்பம் தரிக்கும் ..."
நேரடியாக ஸ்ரீயை சாட, அவள் எதிர்பார்த்தது தான் என்றாலும், இருக்கும் குழப்பத்தில் அவரது ஏச்சும் பேச்சும் அடித்தொண்டையை கணக்கச் செய்ய, கலங்கிய கண்களை காட்ட மனமில்லாமல் அமைதியாக தலை குனிந்து கொண்டாள்.
"பாட்டி... வந்ததும் வராதுமா இப்படி பேசி இம்சை பண்ணாத .... எது எப்ப நடக்கணுமோ அப்ப தானா நடக்கும் ..."
"எதுவும் தானா நடக்காது அப்பூ.... நாம தான் நடத்தோணும்.... ஆம்பள 60 வயசுலயும் அப்பன் ஆவலாம் ... பொட்டச்சிங்களால முடியாது ... காலம் போச்சுன்னா கரு தங்காது..... ... "
அகல்யா மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டு அவர் வெடுக்கென்று வசை பாட
"சரி பாட்டி, இன்னும் மூணு மாசம் இங்க தானே இருக்க போற ... அதுக்குள்ளயும் நல்ல விஷயம் நடக்கும் ..."
வேண்டுமென்றே குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதாக அன்பு கிளப்பி விட்ட வதந்தி தான் அகல்யா மற்றும் சுந்தராம்பாளை ஆட்டி வைக்கிறது என புரிந்து கொண்டவன் இனி மருத்துவ விளக்கங்கள் கொடுத்து பயனில்லை என முடிவெடுத்து , அவ்வாறு பேசி முடிக்க, வேண்டா வெறுப்பாக தலை அசைத்தபடி இடத்தை காலி செய்தார் சுந்தராம்பாள்.
ஸ்ரீயின் மாதவிலக்கு நாட்களில் அகல்யா சமைப்பது வழக்கம் என்பதால், இரவு உணவு தயாராக இருக்க, புத்துணர்வு பெற்று வந்தவர்கள் துரிதமாக உணவை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்ப,
"ஸ்ரீ... ராணா உன்கிட்ட ஏதாவது மிஸ் பிஹேவ் பண்ணி இருந்தான்னா, இந்நேரம் அவன் உடம்புல உயிர் இருந்திருக்காது ... ஆனா அவன் அப்படி எதுவும் பண்ணல ... அதோடு இப்ப வரைக்கும் அவனோட நடவடிக்கை எல்லாம் எனக்கு நார்மலா தான் படுது ... அதே சமயத்துல உன்னோட கட் ஃபீலிங்கையும் நான் அவாய்ட் பண்ண தயாரா இல்லை ... பேசாம ஒன்னு பண்ணு ... வேலையை விட்டுட்டு , என்னோட யூகே கிளம்பி வந்துடு....... ...." என்றான் வீரா திடீரென்று தீவிரமாய்.
"இப்ப உங்களுக்கும் ராணா மேல சந்தேகம் வந்துடுச்சா ..."
"எனக்கு இப்பவும் வரல .... உனக்கு வந்ததால சொல்றேன் ... " என அவன் முடிக்க, சிந்தனையில் மூழ்கினாள் பாவை.
வேலையை ராஜினாமா செய்து விட்டு, கணவனோடு இரு வார காலம் வெளிநாட்டுக்கு சென்று விட்டு வரலாம் ...
ஆனால் திரும்பி வந்ததும் அடுத்த வேலை கிடைக்கும் வரை வீட்டில் காலம் கடத்தியாக வேண்டுமே ...
அதுவும் மூன்று மாத காலம் வரை சுந்தராம்பாள் என்னும் புயல் இங்கு மையம் கொண்டிருக்கும் நிலையில் , அடுத்த வேலை தேடுவதெல்லாம் நடவாத காரியம் ...
மேலும் தன்னவன் சொன்னது போல், ராணா இதுவரை நேரடியாக தனக்கு எவ்வித தொல்லையும் கொடுக்கவில்லை என்கின்ற நிலையில் வெறும் உள்ளுணர்வை மட்டும் அடிப்படையாக வைத்து முடிவெடுப்பதெல்லாம் முட்டாள்தனம் ....
என்றெல்லாம் யோசித்து முடிவுக்கு வந்தவள்,
" ராம், இப்போதைக்கு நான் பேப்பர் போடல....... எதிர்காலத்துல ஏதாவது பிரச்சனைனு வந்தா நிச்சயமா எதையும் யோசிக்காம பேப்பர் போட்டுடறேன் .... சரியா..... " என முடிக்க,
"நான் எப்பவும் சொல்றது தான் .... உன்னை எந்த விஷயத்துக்காகவும் நான் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன் .... உனக்கே நல்லது கெட்டது தெரியும் ... அதே சமயத்துல எந்த விஷயமா இருந்தாலும் என்கிட்ட ஷேர் பண்ணு... எல்லாத்துக்கும் நான் இருக்கேன் .... " என்றான் அவள் தோள் மீது கை போட்டு தோழனாய் அணைத்து.
--------—---------------------------------
அதே நேரத்தில், அதே ஊரில், கற்பகமும் அருணாவும் , கற்பகத்தின் பணக்கார தோழியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது மணமக்களுக்கு பரிசு வழங்க, நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையில் வினோத் ( பழைய எஸ்டேட் மேனேஜர்) நின்று கொண்டிருப்பதை பார்த்த அருணா, விரு விருவென்று நடந்து சென்று அவனை நெருங்கி,
"எப்படி இருக்கீங்க .... பார்த்து ரொம்ப நாளாச்சு ... வீட்டுக்கு வந்திருந்தா, ஒன்னாவே இங்க வந்திருக்கலாமே...." வழக்கம் போல் அவள் நலம் விசாரிக்க, அவனோ மெல்லிய புன்னகையோடு,
"நல்லா இருக்கேன்... நீ எப்படிம்மா இருக்க..." என்றான் பட்டும் படாமல்.
"நான் நல்லா இருக்கேன்.... என் அப்பா எப்படி இருக்காரு ..." அவள் அடுத்த கேள்வியை அடுக்க,
"எனக்கு எப்படி தெரியும் ...." அவன் வெடுக்கென்று கேட்க, துணுக்குற்றவள்,
"என்ன பேசறீங்க ... என் அப்பா எப்படி இருக்காருன்னு தானே கேட்டேன் .... அதுக்கு இப்படி பதில் சொன்னா என்ன அர்த்தம் ..." என்றாள் காட்டமாய்.
"நான் உங்க அப்பாவ பார்த்தே கிட்டத்தட்ட நாலு மாசத்துக்கு மேல ஆகுதே ..."
" ஏன் ..."
"உங்க அப்பா தான் என்னை வேலைய விட்டே தூக்கிட்டாரேம்மா..."
"என் அப்பாவா .... ஏன் ... எதுக்கு ..."
"அவரா செய்யல .... உங்க அண்ணி லட்சுமி நான் பண விஷயத்துல மோசடி பண்ணிட்டேன்னு உங்க அப்பா கிட்ட என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, என்னை வேலையை விட்டு தூக்க வச்சிட்டாங்க ..."
"அவ எங்க அங்க வந்தா ...."
"அவங்க அங்க வந்து கிட்டத்தட்ட நாலு மாசத்துக்கு மேல ஆகுதே .... என்னம்மா உனக்கு ஒரு வெவரமும் தெரியாதா .... உங்க அண்ணியோட தங்கச்சிக்கு கூட வர வாரம் உங்க எஸ்டேட் பங்களால கல்யாணம் நடக்க போகுதே.... "
அருணா அதிர்ந்து நோக்க,
"உண்மையாவா சொல்றீங்க ..." அவள் நம்ப முடியாமல் கேட்க,
" என்னம்மா இப்படி இருக்கீங்களே மா ....
அங்க உங்க எஸ்டேட் பங்களாவே, மைசூர் மகாராஜா பேலஸ் மாதிரி கல்யாணத்துக்காக ஜொலிச்சுக்கிட்டு இருக்கு .... எஸ்டேட்ல வேலை செய்யறவங்களுக்கு எல்லாம் விலை உயர்ந்த புடவையும் வேட்டியயும் பத்திரிகையோட வச்சி உங்க அப்பா கல்யாணத்துக்கு கூப்பிட்டிருக்காரு ... "
அருணாவின் தலை ஒரு கணம் தட்டாமலை சுற்ற,
"என் அண்ணன் .....????" என்றாள் கேள்வியாய்.
"அவரும் அங்க தான் இருக்காரு .... அவரு அங்க ஐடி கம்பெனி நடத்திக்கிட்டு இருக்காரு..... ...."
இப்பொழுது அருணாவிற்கு இதயம் இடம் மாறி துடிக்க,
"நீங்க சொல்றதெல்லாம் உண்மையா ..."
என்றாள் தொண்டை கனத்து கமரிய குரலில்.
"நான் ஏம்மா பொய் சொல்லணும் .... மஹிக்கான்னு ஒரு பொம்பள என் வீட்ல மேல் போஷன்ல குடி வந்திருக்காங்க .... அவங்க உங்க அண்ணனோட கம்பெனில தான் வேலை செய்றாங்க.... "
" நெஜமாவா ...."
"ஆமாம்மா .... ஒரு நாள் நானும் என் வீட்டம்மாவும் ஹோட்டலுக்கு போய் இருந்தோம், அப்ப இந்த மஹிக்காவும் உன் அண்ணனும் ஒரு டேபிள்ல உக்காந்துகிட்டு ஏதோ பேசிக்கினு சாப்பிட்டுகினு இருந்தாங்க... அத பாத்துட்டு வீட்டுக்கு வந்ததும் அவங்க கிட்ட விசாரிச்சோம் .... அப்ப தான் உங்க அண்ணன் அந்த ஐடி கம்பெனில பார்ட்னரா ஜாயின் பண்ணி இருக்காரு.... அங்க தான் அந்த மஹிக்கா வேலை பாக்குறாங்கனு தெரிஞ்சுகிட்டோம் ...."
"அப்ப என் அப்பா, என் அண்ணன், அண்ணி, அவங்களோட குழந்தை எல்லாரும் அங்க ஊட்டில ஒன்னா தான் இருக்காங்களா ...."
"இவ்ளோ சொல்லியும் என்னம்மா இப்படி பச்ச புள்ளத்தனமா கேள்வி கேக்கற ..."
"அவங்க எல்லாரும் ஒன்னா தான் இருக்காங்க.....அடுத்த மாசம் உங்க அண்ணிக்கு சீமந்தம் வேற நடக்க போகுதே ..."
" சீமந்தமா ....."
"ஆமாம்மா .... உங்க அண்ணி ரெட்ட குழந்தை உண்டா இருக்காங்க இல்ல ..."
கொதிக்கும் கொப்பரை எண்ணெய்யை யாரோ தலையில் ஊற்றியது போல் அந்த செய்தியில் கொதித்துப் போனவள்,
"அவ மாசமாவா இருக்கா....."
" ஆமாம்மா .... அவங்க ஊட்டிக்கு வரும் போதே மாசமா தான் இருந்தாங்க....."
அப்படியே சிலையாய் சரிந்தமர்ந்தவளுக்கு மூச்சு பந்தனம் செய்வது போல் தோன்ற, அருகில் பழச்சாறு பரிமாறிக் கொண்டிருந்த நபரை அழைத்து ஒரு பாட்டில் பழச்சாற்றை வாங்கி முழுமூச்சாய் குடித்து முடித்தவள், நிலைக்கு வந்த தேர் போல் தன் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி நின்று நிதானித்து சிந்திக்க ஆரம்பித்தாள்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
Super mam
ReplyDeletethanks dr
Deleteawesome 💕💕💕💕💕
ReplyDeletethanks dr
DeleteAchachoo sis... Yaaruku theriya kudathunu nenachangaloo antha Aruna ku therinjiduchey. Pavam Lakshmi, Aruna enna enna plan pana poralo therila
ReplyDeletea lot more dr...
DeletePlease upload atleast once in 4days ma'am.. been searching daily for an episode
ReplyDeletediwali purchase is going on ma.. tonite will be uploaded
Delete