ஸ்ரீ-ராமம்-117

 

அத்தியாயம் 117

அலுவலக அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் செஞ்சாந்தாய் சிவந்திருக்கும் அவள் முகம் பார்த்ததும், குரலை செருமி,

"லட்சுமி .... நான் இப்ப பிசினஸ் விஷயமா பேச வரல .... உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்னு வந்திருக்கேன் ..."  என்றான் சிறு தயக்கத்தோடு.

"இப்ப கூட நீங்க பிசினஸ் விஷயமா பேச வந்திருக்கீங்கன்னு நினைச்சுக்கிற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல சார் ..."  அவள் காட்டமாக மொழிய,

"லட்சுமி, ப்ளீஸ்  என்னை பேச விடுங்க ... அன்னைக்கே உங்க கிட்ட மனம் விட்டு பேசலாம்னு தான் உங்கள தேடி இங்க  வந்தேன்... ராம்சரண் இருந்ததால என்னால பேச முடியல ....  இங்க பாருங்க .....
நீங்க ஏதோ ஒரு நிர்பந்தத்துல தான் இங்க வந்திருக்கீங்கன்னு எனக்கு நல்லா புரியுது .... தயவு செஞ்சு எந்த பிரச்சனையா  இருந்தாலும் ஃப்ராங்க்கா சொல்லுங்க.... எல்லாத்தையும் சால்வ் பண்ணிட்டு  உங்களை  கல்யாணம் பண்ணிக்கிறேன்  .... இப்ப இருக்கிற பெண் குழந்தையும், இனிமே பொறக்க போற குழந்தைய பத்தியும் கவலைப்படாதீங்க ... அவங்க என் குழந்தைங்க... அவங்கள நான் ரொம்ப  நல்லா பாத்துப்பேன்... நீங்க ..." என்றவனின் பேச்சை இடைவெட்டி,

"ஐயோ .... முதல்ல இப்படி பேசறத நிறுத்தறீங்களா.... கேட்கவே நாராசமா இருக்கு ....  " என தன் காதுகளை பொத்திக்கொண்டு கண்கள் சிவக்க அலற,

"ப்ளீஸ் லஷ்மி  உங்க பிரச்சனை எதுவா இருந்தாலும் சொல்லுங்க  ..."  

"முதல்ல நீங்க யாரு சார் ... எதுக்காக தேவையில்லாம இங்க வந்து இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க ..... நான்  பிரச்சனைல இருக்கேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா..... .... "

"கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா ...
 ராம்சரணோட வாழ பிடிக்கவில்லைனு தானே டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருந்தீங்க .... டிவோர்ஸ் கிடைக்க போற நேரத்துல,  கோயம்புத்தூர்ல வேலையை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்கன்னா , வேற ஏதோ ஒரு நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு  தான் வந்து இருக்கீங்கன்னு கூடவா எனக்கு புரியாது  ..."

"சார் ப்ளீஸ் ... அடுத்தவங்க வாழ்க்கைய மனம் போன போக்குல ஜட்ஜ் பண்றத மொதல்ல நிறுத்துங்க .... "

"நீங்களும் ராம் சரணும் மியூச்சுவலலா டிவோர்ஸ்க்கு  அப்ளை பண்ணி இருக்கீங்கன்னாலே , உங்க ரெண்டு பேருக்குள்ள ஒத்துப் போலன்னு தானே அர்த்தம் .... ப்ளீஸ் லஷ்மி சொன்னதையே சொல்லி  என் டைம வேஸ்ட் பண்ணாதீங்க .... ஊர் உலகத்தை பத்தி கவலைப்படாம என்ன நடந்ததுன்னு சொல்லுங்க .... ராம்சரண் கிட்ட பணமும் அழகும் இருக்கலாம் ஆனா குணம் துளி கூட இல்லன்னு அன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன் .... தொட்டதுக்கெல்லாம்  சந்தேகப்படறவனோட கஷ்டப்பட்டு  வாழணுமா ......"

"இனிமே என் வீட்டுக்காரரை பத்தி ஒரு வார்த்தை பேசின... மரியாதை கெட்டுடும் ..... "   திடீரென்று  அவள் கர்ஜிக்க,
சற்று முன்பு வரை  ஓரளவிற்கு  சாந்தமாகவே பதில் அளித்துக் கொண்டிருந்தவளின் திடீர் காளி அவதாரம்,  அவனை திகைக்க செய்ய
உறைந்து போனான் ஆண்.

"கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு நீங்களா ஒரு முடிவு எடுத்துகிட்டு வந்துட்டா, அது உண்மை ஆயிடுமா .... என் ஹஸ்பண்ட் ரொம்ப தங்கமானவரு... என் மாமனாரும் ரொம்ப நல்லவரு.... என் மாமியார் நாத்தனார் தான் சுயநலமானவங்க ... அவங்களால ஏற்பட்ட  பிரச்சனையால தான் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதாயிடுச்சு  ... " என்றவளின் விழிகள் ஆத்திரத்தால்  சிவந்து ஆற்றாமையால் குளம் கட்ட,

"ராம்சரண் ஸ்ட்ராங்கா இருந்திருந்தா,
எப்பேர்ப்பட்ட பிரச்சனையையும் சால்வ் பண்ணி இருக்கலாமே...." 

ரிஷி  மீண்டும் ராம் சரணையே குற்றவாளியாக்க, அவன் சொன்னது ஓரளவிற்கு உண்மை தான் என்றாலும், தன்னவனை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல்

"என் ஹஸ்பண்ட் என் நாத்தனாரையும் மாமியாரையும் கண்ணை மூடிக்கிட்டு நம்பினாரு... அதுதான் அவரு செஞ்ச ஒரே தப்பு.... .... மத்தபடி  எனக்கு எவ்ளோ சப்போர்ட் பண்ணாருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் .... இதெல்லாம் உங்க கிட்ட நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல .... ஏன் சொல்றேன்னா மறுபடியும் என் ஹஸ்பண்ட  தப்பா புரிஞ்சுகிட்டு   என்னை தேடி  நீங்க  வந்துடக்கூடாதுங்கிறதுக்காகத்தான்   சொல்றேன் ..." அவள் திட்ட வட்டமா கூறி முடிக்க, அந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி போனவன்,

"ஆர் யூ ஷூர் லட்சுமி .... நீங்க பொய் சொல்லல இல்ல ..."  என்றான் கண்களில் வெகு  மெல்லிய நீர் திரையிட்டு.

"உங்க வீட்டு பொண்ணுக்கு நல்லது நெனச்ச  ஒரே காரணத்துக்காக,  எனக்கு நல்லது செய்யறதா  நெனச்சு என்  வாழ்க்கையை கெடுக்க பாக்கறீங்களே சார் ... எவ்ளோ பிரச்சனைகளுக்கு அப்புறம் இப்ப கொஞ்ச நாளா  தான் என் ஹஸ்பண்ட் குழந்தைங்கனு  நிம்மதியா சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கேன் .... அதுல மண்ணள்ளி போட்டுடாதீங்க .... உங்க வீட்டுக்கு கூப்பிட்டு நீங்க கேட்ட அன்னைக்கே என் முடிவை தெளிவா  சொல்லிட்டேன் ... ஆனா அதுக்கு முக்கியத்துவம் கொடுக்காம இவ்ளோ தூரம் நீங்க தேடி வருவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... உங்ககிட்ட நான் இவ்ளோ பொறுமையா பேசறதுக்கு ஒரே காரணம் , நீங்க அடிப்படைல ரொம்ப நல்ல மனுஷன்.... தயவு செஞ்சு என்னை பத்தின உங்க அபிப்பிராயத்தை மாத்திக்கிட்டு கிளம்புங்க.... கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணு அமைஞ்சு உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்....." என அவள் முடிக்க ,

"மொத மொதல்ல சோனா (அக்கான்ஷா)  உங்க போட்டோவ காட்டினப்ப கூட,  யாரோ ஒரு டீச்சர் பத்தி சொல்றானு ரொம்ப இயல்பா கடந்து போயிட்டேன் ....  ஆனா அவ கிட்ட ஏற்பட்ட சேஞ்ஜஸ் ,  அவளுக்காக அவகிட்ட நீங்க பேசின விஷயங்கள்,  எல்லாத்தையும் கேட்க கேட்க தான்
எப்படி ஒருத்தரால இப்படி சரியா
மெச்சூர்டா யோசிக்க முடியுதுன்னு மொத மொதல்ல உங்கள பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன் ..... அப்பதான் எனக்கு உங்க கேரக்டர பிடிக்க ஆரம்பிச்சது ... அதனால தான்  உங்க டிவோர்ஸ் இஷ்யூல கூட உங்க மேல தப்பு இருக்காதுனு ஆழமா நம்பினேன்.. கோயம்புத்தூரை விட்டு நீங்க  போனதுக்கு அப்புறம் கூட உங்களை தேடி இங்க வந்ததுக்கும் அதுதான் காரணம் .... " என்றவனின் குரல் லேசாக கமர, வேறு வழி இன்றி அமைதி காத்தாள் ராம்சரணின் பத்தினி.

காதல் வர பல காரணங்கள் உண்டு ...

அழகைப் பார்த்து வரலாம் ...
அறிவைப் பார்த்து வரலாம் ....
அடக்கத்தை பார்த்து வரலாம் ....
ஏன் பரிதாபப்பட்டு கூட வரலாம் ...

ஆனால் இவனுக்கு அவளது மனமுதிர்ச்சியை பார்த்து வந்துள்ளது அவ்வளவே...

அதற்கு எவ்வகையிலும் தான் பொறுப்பாளி அல்ல என்பதையும், தன் கணவனையும் விட்டுக் கொடுக்காமல் அவள்   எடுத்துரைத்த விதம் கூட,  அவனை  கவரவே செய்ய ,

"ஓகே லட்சுமி .... ஆல் தி பெஸ்ட் ..... எல்லாருக்கும் எல்லாமே சரியா அமைஞ்சிடாது ... ஆனா  ராம்சரண் அதுல கூட எக்செப்ஷன் ....  அவருக்கு எல்லாமே நல்லா அமைஞ்சிருக்கு ....  ஒரு பிசினஸ்மேனா
வெற்றி தோல்வி  எல்லாம் எனக்கு பெருசா  எமோஷன்ஸ கொடுத்ததில்ல...
ஆனா இந்த தோல்வியை மட்டும் என்னால  மறக்கவே முடியாது ... டேக் கேர் ..." என்றவன் சிவந்த கண்களோடு அதற்கு மேல் ஒரு கணம் கூட தாமதிக்காமல் அந்த அறையை  விட்டு வெளியேற, அவன் சென்றதும் , அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை  நிம்மதியாக வெளியேற்றியபடி  அலுவலக சுழல் நாற்காலியில் அமர்ந்தவள் , ஏதோ சுமந்து கொண்டிருந்த பெரும் பாரத்தை இறக்கி வைத்தது போலான மன அமைதியில் அன்றைய  பணியில் மூழ்கி போனாள்.

ஒரு  மணி நேரத்திற்கு பிறகு  தேயிலைத் தோட்டத்தில் தரக்கட்டுப்பாட்டு பணிகளை  முடித்துக் கொண்டு திரும்பிய ராம்சரண், அவள் முகம் சிவந்து சோர்வோடு காணப்படுவதை கண்டு

"ஏய் லக்ஷ்மி,  என்னாச்சு ...."  என்றான் அலுவலக அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில்.

ஓரிரு கணம் அமைதி காத்தவள்,  பிறகு

"அன்னைக்கு வந்திருந்தாரே
ரிஷி .... அவரு மறுபடியும்  வந்திருந்தாரு..."

என்றாள் மென்மையாய்.

"ஓ.... அந்த இடியட் இன்னைக்கும் வந்திருந்தானா ...."  என்றவன் மேஜையின் மேல் இருந்த அவளது கைப்பையை  எடுத்துக்கொண்டு,

"சரி வா , ரொம்ப பசிக்குது .... என்னை விட உனக்கு பசிக்கும் ....  லஞ்ச் ரெடினு சிவகாமி அக்கா போன் பண்ணி இருந்தாங்க ..... வா போலாம்..." என்று பரபரத்தபடி அவளை அழைத்துக் கொண்டு போய் காரின் முன்னிருக்கையில்  அமரச் செய்துவிட்டு, அவன்  ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு வாகனத்தை செலுத்தத் தொடங்கினான்.

பயணிக்கத் தொடங்கி 10 நிமிடங்கள் ஆகியும் தேயிலைத் தோட்டத்தில் நடைபெற்ற தரக்கட்டுப்பாட்டு பணிகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தானே ஒழிய
ரிஷியைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை.

பொறுத்துப் பார்த்தவள், ஒரு கட்டத்தில்,

"ரிஷி என்ன பேசினாருனு  நீங்க கேட்கவே இல்லையே ..."   பக்கவாட்டில் திரும்பி அவன் முகம் பார்த்து கேட்க ,

"என்ன பெருசா பேசி இருப்பான் .... உன் வீட்டுக்காரனை பார்த்தா நல்லவனா தெரியல.... ... ரொம்ப சந்தேகப்படற மாதிரி தெரியுது ..... நீ  ரொம்ப பெரிய கஷ்டத்துல இருக்கனு தோணுது ....
எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்துடுன்னு சொல்லி  இருப்பான் ...." 

என ராம்சரண் அசட்டையாக சொல்லிக் கொண்டே வாகனத்தை  செலுத்த , அவள் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய்  அவனை  நோக்க,

"இதுல ஆச்சரியப்பட ஒன்னுமே இல்ல லட்சுமி....அவன் அப்படி பேசலேன்னா தான் ஆச்சரியப்படணும் .... நான் அன்னைக்கு  சரியா இருந்திருந்தா நீ டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ண வேண்டிய அவசியமே வந்திருக்காது...... அது முழுக்க முழுக்க என் தப்புங்கிறதால தான் அவன் விஷயத்துல பொறுத்து போய்கிட்டு இருக்கேன் .... இல்லன்னா என்னைக்கோ அவன் கதையை முடிச்சிருப்பேன் .... ஆனா இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் டைம் ...

இன்னொரு தடவை இந்த மாதிரி அவன் உன்னை தேடி வந்தான் .......................... இனிமே வர வாய்ப்பில்ல .... அப்படி வந்தா .... உயிரோட ஊர் போய் சேர மாட்டான் ...."

என்றுமில்லாத கடுமையில் அவன் கூறி முடிக்க,  உறைந்து போனாள் பெண்.

கண நேர அமைதிக்குப் பிறகு, 

"ப்ளீஸ் கோவப்படாதீங்க .... இப்ப கொஞ்ச நாளா கோவப்படாம இருந்தீங்க மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா ...."

"கோவப்படல லட்சுமி .... உன்னை யாராவது உத்துப் பார்த்தாலே என்னால தாங்கிக்க முடியாது .... இவன் நம்ம ஃபேக்டரிக்கே வந்து  கல்யாணம் பண்ணிக்கிறியானு உன்கிட்ட கேட்டிருக்கான்னா அவனுக்கு எவ்ளோ நெஞ்சை அழுத்தம் இருக்கும் .... அதைவிட அவன் என்னை எவ்ளோ அண்டர் எஸ்டிமேட் பண்ணி இருந்தா அப்படி  வந்து கேட்டிருப்பான் ... அதைத்தான்  கொஞ்சம் கூட என்னால டைஜஸ்ட் பண்ணிக்கவே முடியல... "  என்றவனின் பேச்சை இடைவெட்டுவது போல் அவனது அலைபேசி சிணுங்க , ஒளிர் திரையில் அருணா என்ற பெயரைக் கண்டதும் துணிக்குற்றவன்,  தன்னவளை பார்த்து அமைதியாக இரு என்பது போல் சைகை செய்துவிட்டு, காரின் ப்ளூடூத்தின் வழியே அழைப்பை அனுமதித்து,

"சொல்லு அருணா ....." என்றான் இயல்பாக.

"அண்ணே, காலங்காத்தால போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றேன்னு தப்பா எடுத்துக்காத .... ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ..."  என்றதும்

காலங்காத்தாலயா.... என்று யோசிக்கும் போது தான்,   ஸ்வீடனுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தது நினைவுக்கு வர,  உடனே சுதாரித்தவன்,

"அதெல்லாம் ஒன்னும் இல்ல... இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு  ஆபீஸ்க்கு போய்கிட்டு இருக்கேன் ...என்னன்னு சொல்லு ...."  என்றான் ஆர்வத்தை மறைத்து.

"நீ எப்ப தான் ஊருக்கு வருவ ... ஆன்சைட் போறேன்னு சொல்லிட்டு போய் நாலு மாசத்துக்கு மேல ஆகுது .... உன்னோட டிவோர்ஸ் கேஸ் என்ன ஆச்சு ... அடுத்த ஹியரிங்கே வரேன்னு சொன்ன.... ஆனா இவ்ளோ நாள் ஆயிடுச்சே...."

கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் கோபத்தில் சிவக்க,

"ம்ச்.... ஒரு மாசம் கோர்ட் லீவு .... ஒரு மாசம் வக்கீல் உடம்பு சரியில்லைன்னு வாய்தா வாங்கினாரு .... இப்படி ஏதேதோ காரணத்தால தள்ளிப்போன ஹியரிங்,  அடுத்த மாசம் தான் வருது .... அத விடு.... நீ எதுக்காக போன் பண்ண அதை சொல்லு..."

"அண்ணே,  ஹரிஷ் எனக்கு டிவோர்ஸ்  நோட்டீஸ் அனுப்பி இருக்காரு  ....."

கேட்டுக் கொண்டிருந்த இருவரும் ஒரு கணம் சிலையாகி மீண்டும் உயிர் பெற,

"ஏன்... ஏன்.... என்ன காரணம் ...."
என்றான் கொண்டிருந்த கோபம் காணாமல் போய்,  பொங்கி எழுந்த உற்சாகத்தை மறைத்து.

"நான் வருஷக்கணக்கா அவரோட வாழவே இல்லயாம்....  எப்பவுமே அம்மா வீட்லயே இருக்கேனாம் .... குழந்தைகளை கூட கண்ணுலயே  காட்றதில்லயாம்னு  நிறைய தப்பு சொல்லி இருக்காரு .... உடனே  நான் ஆள வச்சு விசாரிச்சு பார்த்ததுல தெரிஞ்சது,  கடைல புதுசா சேர்ந்த பொண்ணோட அவருக்கு தொடர்பு இருக்குனு.... அந்த பொண்ணோட தான் மதிய சாப்பாடு கூட சாப்பிடறாராம் ... ரெண்டு பேரும் அடிக்கடி வெளியே போயிட்டு வராங்களாம் .... அதையெல்லாம் கேட்க கேட்க  எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு அண்ணே .... இப்படி பொண்டாட்டியும் புள்ளைங்களையும் மறந்துவிட்டு எப்படி ஒரு மனுஷனால இருக்க முடியுது .... என் வாழ்க்கையே ஒன்னும் இல்லாம ஆயிடுமோன்னு பயமா இருக்கு .... நீ
சீக்கிரம் வந்து அவரைப் பார்த்து பேசுண்ணே..... "

"என்னதை  பேச சொல்ற .... ஹரிஷ் சொன்னதுல எந்த தப்புமே இல்லையே .... எனக்கு தெரிஞ்சு உனக்கு கல்யாணமானதிலிருந்து நம்ம வீட்ல தான இருக்க .... "

"இப்படி நீயே பேசலாமா ....  தங்கச்சி வாழ்க்கை கெட்டுப் போகுதுன்னு உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லையா ....
என் குழந்தைங்க அப்பா இல்லாம எப்படி அண்ணே இருப்பாங்க ...."

"ஏன் இவ்ளோ நாளா இல்ல .... அதெல்லாம் இருப்பாங்க .... ஒன்னும் பிரச்சனை இல்ல ...
என்னையே எடுத்துக்கோ,  என் பொண்ண பாத்து ரொம்ப நாள் ஆகுது .... என் பொண்ணும் தான் அப்பா இல்லாம வளர்றா .... "

"என்ன அண்ணே.... பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு ....   ஹரிஷ் மாதிரி நீ ஒன்னும்  டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பலயே.... அண்ணி தானே உனக்கு  ஃபர்ஸ்ட்  அனுப்பினாங்க .... அதே மாறி அவங்க தங்கச்சி கல்யாணம் நின்னு போனத காரணமா சொல்லி என்கிட்ட சண்டை போட்டு என்னை அடிச்சுட்டு வீட்டை விட்டு வெளியே போனதும் அவங்க தானே  ...."

கேட்க கேட்க லட்சுமியின் முகத்தில் ஆத்திரம் குருதிப்புனலாய் வழிந்தோட,
கண நேரத்தில் மனையாளின்  முகமாற்றத்தை கண்டவன்,

"நீ சொன்னதெல்லாம் சரி தான் ... கவலைப்படாத அருணா  ... நான் ஹரிஷ்க்கு போன் பண்ணி பேசறேன் .... "

"சரிண்ணே.... சீக்கிரம் ஊருக்கு வர வழிய பாரு ..."

" ஓகே  அருணா....."  என அவசர அவசரமாக அவன் அழைப்பை முடிக்க,  அன்றைய இரவு அவன் வீட்டில் நடந்த அராஜகம்  லட்சுமியின் மனக்கண்ணில் படமாய் ஓட
மூச்சு பந்தனம் செய்வது போல் லேசாக  அவள்  சுவாசிக்க திணற, ஊட்டி குளிரிலும் வியர்வை முத்துக்கள் அவள் முகம் எங்கும் விரவ,   நிலைமையை உணர்ந்தவன் உடனே வண்டியை ஓரம் கட்டி விட்டு , தன்னவளை மெதுவாக இறக்கி  பருகத் தண்ணீர் கொடுத்தான்.

குடித்து முடிப்பதற்குள் அவள் கரங்கள் அளவுக்கு அதிகமாக நடுங்க, பொறுமை காத்தவன் அவளை தன் மார்போடு சாய்த்துக் கொண்டு,

"அன்வாண்டடா எதையும் யோசிக்காதே ....
  எனக்கு எல்லாம் தெரியும் .... நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன் ...."  என்றான் அழுத்தம் திருத்தமாய்.

கணவனின் குரலில் தென்பட்ட உறுதியை கண்டவள்

"அருணா சொன்னதெல்லாம் பொய்.... அன்னைக்கு என்ன நடந்தது  தெரியுமா ..."
அவள் உடல் குலுங்க மிகுந்த மன உளைச்சலோடு சொல்ல எத்தனிக்க

"லட்சுமி... நீ எதுவும் சொல்ல வேணாம் .... ஏற்கனவே  பிபி பிரச்சனை இருக்கு ... இந்த டைம்ல எந்த ரிஸ்க்கும் எடுக்காத .... உன்னை விட எனக்கு அருணாவ  நல்லாவே தெரியும் ... கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாள் ராத்திரி திடீர்னு இப்படி தான் போன் பண்ணி பணம் வேணும்னு கேட்டா....
அப்பா எனக்கு பணமே அனுப்பலன்னு  கதை விட்டா..... ஆதாரம் இல்லாம என்னை நம்புவியானு என்னென்னமோ பேசி  சிம்பதி கிரியேட் பண்ண பார்த்தா... நானும் அவளுக்கு ஈகுவல்லா நடிச்சு உன்னை நம்பாம யாரை நம்புவேன்னு சொல்லி சமாளிச்சிட்டேன் ...

அதே மாதிரி இன்னிக்கு ஹரிஷ் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினதுக்காக சிம்பதி கிரியேட் பண்ற மாதிரி பேசறா .... எனக்கு அன்னைக்கும் அவளை நல்லா தெரியும்..... இன்னைக்கும் தெரியும் ... நீ கவலைப்படாத ..."

என்ற போது தான்,  அன்று அவன்   அருணாவிடம் உரையாடியதை , மூடிய கதவின் பின்னாலிருந்து
ஒட்டு கேட்டு விட்டு தங்கையை கண்மூடித்தனமாக நம்புகிறான் என  தவறுதலாக புரிந்து கொண்டதை அவள் சொல்லி மன்னிப்பு கேட்க

"அடிப்பாவி, அருணா கிட்ட பேசினத அரைகுறையா ஒட்டு கேட்டுட்டு,  என் ரூம்குள்ள வர பிடிக்காம அப்படியே போயிட்டியா...  வெரி பேட் வெரி பேட் ... நல்ல சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கே ..." என்றான் மென் சிரிப்போடு அவள் மனநிலையை திசைத்திருப்ப.

குளிர்ந்த காற்று சோர்ந்திருந்த அவள் முகத்தில் பட்டு  புத்துணர்வை கொடுக்க, இருந்தாலும் அவளது அவள் உடலில் லேசாக நடுக்கம் இருந்து கொண்டே இருக்க,  மென் புன்னகை பூத்தவளை பார்த்து

"நம்ம ரெண்டு பேரும் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கும் போது அருணா என்னை பத்தியும் கவலைப்படல... நம்ம  குழந்தையை பத்தியும் கவலைப்படல .... ஆனா இன்னைக்கு அவளுக்குன்னு வரும் போது எப்படி எல்லாம் பேசறா பாத்தியா .... இப்ப கூட அவளுக்கு தேவைங்கிறதால தான் ஃபோன் பண்ணி எப்ப ஊருக்கு வரேன்னு விசாரிக்கிறா....
பொறந்ததிலிருந்து  அவ சுயநலமா தான் இருந்திருக்கா நான் தான் அவளை புரிஞ்சுக்காம இருந்திருக்கேன்னு நினைக்கும் போது , ரொம்ப வருத்தமா இருக்கு ...
சரி வா... நேரமாச்சு ... வீட்டுக்கு போலாம் ...
போனதும் சாப்பிட்டு எதை பத்தியும் யோசிக்காம டேப்லெட் போட்டுகிட்டு நிம்மதியா  தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்  ... சரியா.. " என்றபடி வாகனத்தை கிளப்பினான் .





கோயம்புத்தூருக்கு பயணித்துக் கொண்டிருந்த ரிஷிக்கு அவனது தாய் அமிர்தா ஷாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஓட்டுநர் யாரும் இல்லாமல் தனியே காரை செலுத்திக் கொண்டிருந்தவன்,  வண்டியின்
ப்ளூடூத்தின் வழியே தாயின் அழைப்பை அனுமதிக்க

" என்ன ஆச்சு ரிஷி  .... லட்சுமி என்ன சொன்னா....." என்றார் எடுத்த எடுப்பில்  ஆர்வமாய்.

நடந்த அனைத்தையும் வரி விடாமல் மைந்தன்  மொழிய, எதிர் முனையில் கணநேரம் அமைதி காத்தவர்,

"நல்ல பொண்ணு .... உன் வாழ்க்கையில வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் ....
சரி விடு ....  உனக்கு நான் வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ...."

"படுத்திருந்த பரம்பரை பிசினஸ்ஸ கூட தூங்கி நிறுத்திட்டேன்ம்மா ..... ஆனா என் கல்யாண வாழ்க்கை மட்டும் ஏம்மா இப்படி ஆயிடுச்சு .... முதல் கல்யாணமா இருக்கட்டும்,  இப்ப லட்சுமி விஷயமா இருக்கட்டும்,  எல்லாத்துலயும் நானே ஏமாந்துகிட்டு இருக்கிற மாதிரி ஒரு ஃபீல்  .... என்னால லட்சுமிய மறக்கவே முடியல மா ...."

தாயிடம் மட்டும் தனயன் தன் மன ஓட்டத்தை 
ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல,

"இங்க பாரு ரிஷி.... மொதல் கல்யாணத்துல உன்னை பொண்ணு வீட்ல ஏமாத்தினது முழுக்க முழுக்க உண்மை ...
ஆனா லட்சுமி உன்னை   ஏமாத்தல.... நம்ம வீட்டுல  அன்னைக்கே அவ முடிவ
தெளிவா  சொல்லிட்டா ....  நீதான் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம்னு அனுமானிச்சுகிட்டு அங்க  போன ....  "

மைந்தன் அமைதி காக்க,

"ரிஷி மறுபடியும் சொல்றேன் ....  விருப்பம் இல்லாதவங்கள  கட்டாயப்படுத்தக் கூடாது .... அவ, அவ ஹஸ்பண்ட் குழந்தையோட சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கா .... இனிமே அவள பத்தி நீ  நினைக்கிறது கூட தப்பு ....  சில விஷயங்கள் நடக்கப்போறதில்லனு  விதி பல வகைல சொல்லிக்கிட்டு தான் இருக்கு நாம தான் அத கேக்குறது இல்ல .... நீ லக்ஷ்மியை பார்க்க ஊட்டிக்கு போகணும்னு ஒவ்வொரு தடவை பிளான் பண்ணும் போதும் வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருந்தது ....  ஏன் இவ்ளோ தடங்கல் வருதுனு நெனச்சேன் இப்ப அதுக்கான பதில் கிடைச்சிடுச்சு ....  சரி ....  எதுவுமே நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ .... ஒழுங்கா ஊர் வந்து சேரு .... கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்துடும் ... அப்புறம் புது வாழ்க்கைய ஆரம்பிக்கலாம் ...."

"லட்சுமி என்ன தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசினாலும்,  எனக்கு என்னமோ அவன் அவங்களை நல்லபடியா வச்சு வாழலயோனு தோணுதும்மா .... " என்றவனின் பேச்சை மறித்து

"ம்ச்...  தப்பா யோசிக்கிற ரிஷி  .... அடுத்தவங்க பொருளா இருக்கட்டும் ... பெண்ணா இருக்கட்டும் .... தட்டிப் பறிக்கணும்னு நினைக்கிறது தப்பு ...  அதுவும் ரொம்ப நாளைக்கு  அப்புறம்   இப்பதான்  சந்தோஷமா இருக்கிறதா லக்ஷ்மி  சொல்லி இருக்கா...  தேவையில்லாம அவ வாழ்க்கையில தலையிடாத...."

"என் மனசு இன்னும் சமாதானம் ஆகலம்மா .... ஆனா நீ ஒரு விஷயம் வேணாம்னு சொல்லி இதுவரைக்கும் நான் செஞ்சதே இல்ல .... " என்றவன் ஆழ்ந்த சிந்தனையில்  மலைப்பாதையில் திரும்பும் போது  திடீரென்று ஒரு லாரி வேகமாக வர,  காரை ஓரம் கட்ட நினைத்து, அதன் வேகத்தை  மட்டுப்படுத்த முயலும் போது தான் , காரின்  தடுப்பக்கருவி(brake) பணி செய்யாமல் போனது  தெரிய வர,

உடனே அவன் காரை திசை திருப்ப, மழைநீர் வழிந்தோடும் மலை பாதையின் சகதியில்  காரின் சக்கரங்கள் சறுக்கி திக்கு திசை தெரியாமல் பயணிக்க ,  வேகம் , திசை என எதையுமே கட்டுப்படுத்த முடியாத நிலையில், கடைசியில்  வேளாண் பகுதிக்குள் புகுந்த கார் பலத்த சப்தத்தோடு ஒரு பக்கமாக  கவிழ்ந்து விழுந்தது.

*****************************************
மூன்று நாட்கள் கழிந்திருந்தன....

வீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.  ஆனால் அலுவலகத்தில்,  தன்னுடன் பணிபுரியும்  , தன் தளத்தில் இருக்கும் 40 பேருடனும்  ஓரிரு வார்த்தையாவது சமய சந்தர்ப்பத்திற்கேற்றார் பேசி நட்பு பாராட்டி இருந்தாள் ஸ்ரீ.

அதுமட்டுமல்லாமல் புதிய பணியின் அடிப்படையை துரிதமாக கற்றுக்கொண்டு,  அவள் தயார் செய்து அனுப்பியிருந்த  கணக்கீடுகள் மிகச் சரியாக இருந்ததை பார்த்து , அவளது தலைமை அதிகாரி கார்த்திகேயன் மனமார பாராட்ட ,
ராணாவிடமிருந்தும் அதற்காக  ஒரு பாராட்டு பத்திரம் மின்னஞ்சல் வழியே வர மனம் மகிழ்ந்து போனாள் பெண்.

வெறும் மூன்று நாட்களில்,  புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டு சிறப்பாக பணியாற்றியது ஓரளவிற்கு சாதனை தான் என்றாலும், 
மாநில விருது கொடுக்க வேண்டிய ஒன்றிற்கு  ஆஸ்கார் விருது  கொடுத்தால்  எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அதற்கு ராணா அனுப்பிய  புகழாரம்.

வார்த்தைகளில் வகைத்தொகை இல்லாமல் அவளை பெருமைப்படுத்தியிருந்தான்....

அதே சமயத்தில்
அவள் இருக்கையில் அமர்ந்ததிலிருந்து வீடு செல்லும் வரை, அவளது ஒவ்வொரு அசைவையும் அணு அணுவாக தன் மடிக்கணினியில் நேரலையாக ரசித்தாலும்
அந்த மூன்று நாட்களில் ஒரு முறை கூட,  அவளை  சந்திக்கும் சந்தர்ப்பத்தை அவன்  ஏற்படுத்திக் கொள்ளவே இல்லை.

ஆதலால் ஸ்ரீயை பொருத்தமட்டில்,  அனைத்துமே இயல்பாக பட,  மிகுந்த மகிழ்ச்சியாக,  புத்தம் புது விஷயங்களை கற்பதில் ஆர்வம் செலுத்தியதோடு,  கயல் விழியோடும் ஆழமான நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு அவள்  உற்சாகமாக உலா வர,  இது ஏதுமறியாமல்  கணவரின் திடீர் மாற்றத்திற்கான  காரணம் புரியாமல்  அங்கு வீட்டில் குழம்பிக் தவித்தாள் மான்சி.

அவள் முதன் முதலாக சந்தித்த 22 வயது ராணாவை கடந்த மூன்று நாட்களாக,
உடை, உற்சாகம்,  உருவ மாற்றம் என அனைத்திலும் கண்டு,

தலைக்கு  கொஞ்சம் ஹேர் டை,  பிளைன் ஷர்ட்க்கு பதிலா  பக்கா டைட் பிட்டிங்   செக்குடு ஷர்ட்,  வச்சிருந்த தாடிய  எடுத்துட்டு  திக்கா ட்ரீம் பண்ணின மீசை ....
பார்க்க 35 வயசுனு சொல்ற மாறி ஒரு ஹம்சம்  மேன்லி பிசிக் லுக் ....  அதைவிட முகத்துல ஒரு புத்துணர்வு, கண்ணுல ஒரு உற்சாகம் ..... 

எப்படி இப்படி மாறி போனாரு மனுஷன் ....

எனத் தனக்குள்ளே புலம்பியவள்,
அவனது கார் ஓட்டுநரை அழைத்து விசாரணையில் இறங்க,

"சார்,  எப்பவும் போல ஆபீஸ்க்கு தாம்மா போறாரு .... காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் ஆபீஸ்ல தாம்மா இருக்காரு ...
வேற எங்கேயும் போறதில்ல ..."  என அவன் வாக்குமூலம் கொடுக்க, மறுநாள் ராணா  அலுவலகத்திற்கு கிளம்பியதும்  தன் தோழியின் காரில் பின் தொடர்ந்தாள்.

அலுவலகத்தை அடைந்ததும்,  அவனது கார்  தரைத்தள கார் நிறுத்தத்தை நோக்கிச் செல்ல,  ஓட்டுனர் சொன்னது உண்மை என்றாகி விட , பின் தொடர்ந்து அலுவலகத்திற்குள் செல்லலாமா, அல்லது திரும்பிச் சென்று விடலாமா  என அவள் குழம்பிக் கொண்டிருக்கும் போது அடுத்த ஓரிரு கணத்தில் ஸ்ரீ தன் கணவனின் காரிலிருந்து அலுவலக வாயிலில் இறங்க,  வெறும் 10 அடி தொலைவில் இருந்தவளை எதேச்சையாக  கண்டு பேரதிர்ச்சியில்  சுவாசிக்க மறந்து

"ஸ்ரீ...........மது  ஸ்ரீ ............"  என்றாள் மான்சி மானசீகமாக  உறைந்த நிலையில்.

கணவன் மனைவியாக இருவரும் ஒட்டி உறவாடவில்லை என்றாலும்  எட்டி நின்று வாழும் அந்த வாழ்க்கையிலேயே ராணாவை பற்றி  ஓரளவுக்கு நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள்.

காதல்,  தாம்பத்தியம் ஆகியவை அவனைப் பொருத்தமட்டில்  இறந்த கால கணக்கில் சேர்ந்தவை ...

உடல் தேவைக்காக பெண்களை தேடிச் செல்லும் பழக்கமுடையவன் என்றாலும்  இக்கணம் வரை அவன் மனதை தொட்டவள், அவன் மனதை ஆள்பவள்,  அதில்  வாழ்ந்து கொண்டிருப்பவள் மது ஸ்ரீ மட்டுமே  என்பதையும் நன்கு அறிவாள் ....

அவள்  ஒருத்திக்காக மட்டும் தான்,  அவன் தன்னையே மாற்றிக் கொள்வான்.... என்றெண்ணி இருந்தவளின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில்  24 ஆண்டுகளுக்கு முன் இறந்தவள்  கண்முன்னே  உயிர் பெற்று உலாவ ....
இது கண் கட்டு வித்தையா... அல்லது அமானுஷ்யமா ....  என குழம்பும் அளவிற்கு அச்சு அசலாய் அவளது முகம் மற்றும் உடல் மொழி மது ஸ்ரீயை கொண்டிருக்க  , உடனே
வீராவின்  கார் பதிவு எண்ணை  பார்க்க முயலும் போது  அது வாகன போக்குவரத்து நெரிசலில்  கலந்து  காணாமல் போக,
அவளது  காதலன்,  அழகன்,  கணவனாவன்  இத்துணை ஆண்டு காலம் அவளை  ஒதுக்கி வைத்திருந்த நிலையிலும் வராத கண்ணீர்,
முதன்முறையாய் அவள் விழிகளில் கோடாய் வழிய,  உடனே  தலை குனிந்து மறைக்க முயன்றாள் அந்த மடந்தை.

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ......



































  
 





























Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. Wow interesting sis. Rishi accident unexpected. Maansi entry vera level. Intha ud neraya twist oda koduthathuku mikka nandri

    ReplyDelete

Post a Comment