அத்தியாயம் 115
வழக்கம் போல் வேக வேகமாக அலுவலகத்திற்கு ஸ்ரீ தயாராகிக் கொண்டிருக்கும் போது, வீட்டு வாயிலில் வாடகை கார் வந்து நின்றது.
சத்தம் கேட்டு அவள் கூடத்தை அடைவதற்கு முன், தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த வீரா சென்று பார்க்க, அகல்யா, பொன்னம்பலம் பயணப் பொதிகளோடு காரில் இருந்து இறங்குவதைக் கண்டு வேகமாகச் சென்று அவைகளை பெற்று கொண்டவன் ,
"ஒன் ஹவர் பிலைட் லேட்டுனு சொன்னயே ப்பா ...." என்றான் பொன்னம்பலத்தை பார்த்து.
"ஃபர்ஸ்ட் அப்படி தாம்ப்பா அனவுன்ஸ்மென்ட் கொடுத்திருந்தாங்க.... அப்புறம் கொஞ்ச நேரத்துலயே எடுத்துட்டாங்க.... சீக்கிரமே வந்து சேர்ந்துட்டோம் .... இறங்கினதும் டாக்ஸி கிடைச்சது... உன்னை கஷ்டப்படுத்த வேணாமேனு அதுலயே வந்துட்டோம் ..."
என்ற பொன்னம்பலம் பயண விவரங்களை விவரித்துக் கொண்டே அகல்யாவுடன் வீராவை பின் தொடர, அலுவலகத்திற்கு தயாராகி வந்திருந்த ஸ்ரீ அவர்களை இன்முகத்தோடு வரவேற்க, அதுவரையில் அகல்யாவின் முகத்தில் குடி கொண்டிருந்த மென்மை கரைந்து காணாமல் போக
"ஆபீஸ்க்கு கிளம்பிட்டயா...." என்றார் அவளைப் பார்த்து வேண்டா வெறுப்பாக.
"ஆமா அத்தை.... ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது ......."
அவள் இயல்பாக நலம் விசாரிக்க,
"ம்ம்ம்ம்.... ஏதோ இருந்தது ...." அவள் முகம் பாராமல் சுரத்தே இல்லாமல் அவர் பதில் அளிக்க ,
" உங்களுக்கு பிரேக் பாஸ்ட் செஞ்சு வச்சிருக்....... .."
அவள் முடிக்கும் முன்பே ,
"அத நான் பாத்துக்கறேன்... நீ கெளம்பு..."
என்றார் வெடுக்கென்று .
ஸ்ரீயின் முகம் சுருங்கி போக, வீராவின் முகத்தில் கடுமை குடியேற,
"நான் இவள ஆபீஸ்ல டிராப் பண்ணிட்டு வந்துடறேன் ப்பா..." என்று பொன்னம்பலத்திடம் சொன்னவன் அகல்யாவிடம் எதுவும் பேசாமல் மனையாளை அழைத்துக் கொண்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டான்.
அலுவலகத்தில் நுழைந்ததிலிருந்து நிம்மதியாக சுவாசிக்க கூட முடியாத அளவிற்கு, மூட்டை மூட்டையாக வேலைகளை ஸ்ரீயின் தலையில் கட்டியிருந்தான் கௌதம் .
அவள் இயல்பிலேயே 'ஒர்க்க ஹாலிக்' என்பதால் , நியமிக்கப்பட்ட வேலைகளின் அளவு மற்றும் அதன் கடினத்தை பற்றி கவலை கொள்ளாமல் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த, அப்போது அங்கு வந்த இளங்கோ,
"ப்ரியா , எஸ் பி எம்மோட(SPM) மெயில் பார்த்தீங்களா ..." என்றான் சற்று குரலை உயர்த்தி ஆர்வமாய் .
"இல்ல , நான் இன்னும் பார்க்கல ..." என சொல்லிக்கொண்டே கௌதமின் தலைமை அதிகாரி கருணாகரன் அனுப்பிய மின்னஞ்சலை பார்வையிட்டவளின் விழிகள் ஆச்சரியத்தில் ஜொலித்தன.
அவள் அந்த திட்ட வரைவு வடிவமைப்பை நிராகரிக்க தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்த பல காரணங்களில் ஒரு முக்கிய காரணத்தை குறிப்பிட்டு , அதற்காகத்தான் அந்த வடிவமைப்பு நிராகரிக்கப்படுகிறது என தன் மின் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தவர், கடிதத்தை முடிக்கும் முன்பாக அவளுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
"வெல்டன் ப்ரியா ... கருணா சார், அவ்ளோ சீக்கிரம் யாரையும் புகழ மாட்டாரு.... வந்த ரெண்டாவது நாள்ல, அவர்கிட்ட இருந்து இப்படி ஒரு அப்ரிசியேஷன் வாங்கறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் ..." என இளங்கோ பாராட்டிக் கொண்டே செல்ல,
"இது ஒரு பெரிய விஷயமே இல்ல இளங்கோ .... ஏற்கனவே நான் சிட்னில ஒர்க் பண்ண ப்ராஜெக்ட்ல இதே மாதிரி சில பிட் ஃபால்ஸ(Pitfalls) ஃபேஸ் பண்ணி இருக்கேன் .... அத வச்சு தான் டிராஃப்ட் பண்ணேன் ..."
என ஸ்ரீ இயல்பாக உண்மையை சொல்லிக் கொண்டிருக்கும் போது , அதனைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த கௌதம்,
"ப்ரியா, உங்களுக்கு ஹேண்ட்ஃபுல் ஆன்சைட் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும் .... நீங்க இங்க இருக்கிற சீனியர்ஸை விட பெட்டர் ரிசோர்ஸ்ன்னும் எல்லாருக்கும் தெரியும்.... சோ, டோன்ட் ஃப்ளாண்ட்(Flaunt) டூ மச் ..." என அவன் வெடுக்கென்று குரலை உயர்த்தி சொல்ல, குழு உறுப்பினர்களின் காதுகளில் அது செவ்வனே சென்றடைய அனைவரின் பார்வையும் ஸ்ரீயின் மீது படர, மிகுந்த அவமானத்தோடு, தொண்டை கணக்க, லேசாக கண்கள் பனிக்க, தலை குனிந்து கொண்டாள்.
அதற்கு மேல் அன்றைய பொழுது முழுவதும், அவள் முடிக்க வேண்டிய பணிகள் தலைக்கு மேல் இருந்தாலும், முழு மனதோடு கவனம் செலுத்த முடியாமல் திக்கி திணறி அந்த நாளை ஒருவழியாக நெட்டித்தள்ளி முடித்தவளை வழக்கம் போல் அழைத்துச் செல்ல மாலையில் வீரா வந்து சேர்ந்தான்.
அன்றும் அவன் காரில் ' கான்ஃபரன்ஸ் கால்' ஓடிக்கொண்டிருந்தது.
அலுவலகத்தில் நடந்ததை பகிர வேண்டும் என்ற அவலில் வந்தவளுக்கு அது ஏமாற்றத்தை தர, வீட்டிற்கு சென்றதும் சொல்லிக் கொள்ளலாம் என்றெண்ணி பொறுமை காக்க தொடங்கினாள்.
கார் வீட்டை நெருங்கும் போது, கலந்தாய்வு முடிவுக்கு வர,
"பட்டு, எனக்கு இன்னைக்கு கிளைட் டின்னர் இருக்கு .... ஏற்கனவே லேட் ஆயிடுச்சு... நான் உன்னை வாசலோட ட்ராப் பண்ணிட்டு கிளம்பறேன் ..." என படபடத்தவனிடம்,
" எப்ப வருவீங்க ...." என்றாள் ஆவலோடு.
" மிட் நைட் ஆயிடும்மா..." என்றவன் சொன்னது போலவே, அவளை வீட்டு வாயிலிலேயே விட்டு விட்டு பஞ்சாய் பறந்து விட்டான்.
வீட்டிற்குள் நுழைந்தவளை வா என்று கூட அழைக்காமல் ,
"அவனுக்கு கிளைன்ட் டின்னராம் .... நம்ம மூணு பேருக்கு மட்டும் தான் டிபன் செய்யணும் ... சப்பாத்தி குருமா வச்சிடு ..."
என்று கட்டளை பிறப்பிப்பது போல் அகல்யா சொல்லிவிட்டு, தன் கைபேசியில் மூழ்க, அவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.
ஒரு வழியாக அறைக்கு சென்று புத்துணர்வு பெற்று வந்தவள், வேகவேகமாக இரவு உணவை தயார் செய்து மூத்தவர்களை அழைத்து பரிமாறி விட்டு, தானும் உடன் அமர்ந்து உண்டு முடிக்க
" கையோட அடுப்பங்கரையும் சுத்தம் செஞ்சுட்டு போயிடு .... ரொம்ப லேட் ஆச்சுன்னா கேஸ் அடுப்ப தொடைக்கிறது கஷ்டமாயிடும்...."
என அடுத்த கட்டளையை இட்டு விட்டு அகல்யா தன் அறைக்குச் சென்று விட,
"ம்மா... நான் சுத்தம் பண்ணிக்கிறேம்மா... நீ போய் ரெஸ்ட் எடு..." என்றார் பொன்னம்பலம் சுணங்கிய முகத்தோடு அந்தக் கையறு நிலையை கையாள தெரியாமல்.
"வேணாம் மாமா ... நான் பத்து நிமிஷத்துல கிளீன் பண்ணிடுவேன் ..." என்றவள் சொன்னது போலவே, அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு தன் அறைக்கு வந்து படுக்கையில் விழ, உடல் சோர்வோடு மனச்சோர்வும் வாட்டி வதைக்க, அக்கரை சீமையில் இதே பணியை செய்யும் போது வராத அலுப்பும் களைப்பும் தற்போது வந்து அலை கழிப்பதை எண்ணி காரணங்களை தேடலானாள்.
தன் மாமியார் அகல்யா உணவு தயாரிக்க உதவவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், எத்தனையோ மணமான பெண்கள் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு உதவிக்கு கூட ஆட்கள் இல்லாமல் , அலுவலகப் பணியையும் வீட்டுப் பணியையும் சரிவர செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் எங்கிருந்தோ உதிக்க , உடனே வீட்டு வேலைகளை இதுவரை தான் தனித்து செய்து பழகாததால் வந்த தளர்ச்சியாய் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாள்.
அதோடு அகல்யாவை சார்ந்து வாழ ஆரம்பித்தால், மீண்டும் அவர் எங்காவது யாத்திரைக்கு செல்ல நேரிட்டால், அவளும் அவள் கணவனும் தான் கடினப்பட்டாக வேண்டும்.
காரணம் அவள் கணவன் வீராவுக்கும் அவளுக்கும் வெளி உணவுகள் பிடிக்காது என்பதை விட உடலுக்கு ஒவ்வாது ,என்ற நிலையில் வீட்டில் சாதாரண சமையலாவது செய்தாக வேண்டிய கட்டாயம் என்பதால் யாரையும் எதிர்பார்க்காமல் தனித்து சமையல் செய்து பழகுவதே நல்லது என்ற முடிவை அவள் எடுத்த தருணத்தில் அகல்யாவின் அறையில் சிறு தர்க்கமே தொடங்கி இருந்தது.
"அந்த குட்டி வந்ததுலயிருந்து அவனுக்கு கிறுக்கு புடிச்சு போச்சு ...." என அகல்யா குமுற,
"யார சொல்ற ...." என்றார் பொன்னம்பலம் புரியாமல்.
"ம்ம்ம்ம்.... வேற யாரு... அவன் பொண்டாட்டிய தான் சொல்றேன் ..."
"உனக்கு தாண்டி கிறுக்கு புடிச்சு போச்சு .... நீ தானே அந்த பொண்ண பார்த்து அவனுக்கு கட்டி வச்ச .... பெரியவன் போல என்னமோ அவனே கூட்டியாந்த மாதிரி பேசற ... வந்ததிலிருந்து உன் புள்ள முகம் கொடுத்து பேசலன்னு பொறுமிகிட்டு இருக்கியே ... நீ வந்ததும் ப்ரியா கிட்ட மூஞ்ச காட்டினயே அதை மறந்துட்டியா.. அதோட அந்த பொண்ணு ஆபீஸ்ல இருந்து வந்ததும் வராததுமா ராத்திரிக்கு சமைக்க சொன்னயே... .... கூட மாட ஒத்தாசை பண்ணனும்னு உனக்கு கொஞ்சமாச்சும் தோணிச்சா ... என்னமோ வெட்டி முறிக்கிற மாதிரி எப்பவுமே ஃபோனும் கையுமாவே சுத்திகினு இருக்க .... அந்த பொண்ணு இடத்துல அன்பு இருந்தா இப்படித்தான் வகைத்தொகை இல்லாம வேலை வாங்குவியா .... மனசாட்சியோட நடந்துக்கோ டி.... அந்த பொண்ண பார்க்கவே பாவமா இருக்கு ...."
"நானா அவள வேலைக்கு போய் கஷ்டப்பட சொன்னேன் .... இந்த வீட்ல அவளுக்கு என்ன குறை .... என் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான் .... பொண்ணா லட்சணமா வீட்டோட இருக்கிறத விட்டுட்டு, இப்படி மாங்கு மாங்குனு வேலைக்கு போயிட்டு வந்தா, சோர்வா தான் இருக்கும் ... கல்யாணமாகி மூணு மாசம் ஆகப் போகுது ,
இன்னும் ஒரு குழந்தை குட்டிக்கு வழிய காணோம்.... இதைத்தான் அன்னைக்கே அன்பு சொன்னா அந்த வேலைக்கு போறவங்களுக்கு குழந்தை குட்டி பெத்துக்கவே புடிக்காது ம்மா.... அப்படியே அவங்க பெத்துக்க ஆசைப்பட்டாலும் குழந்தை உண்டாவறது கஷ்டம் ... ஏன்னா அந்த வேலை ரொம்ப மன உளைச்சலை கொடுக்கும் .... அதனால கரு தங்குறது கஷ்டம்னு சொன்னா ... அது இப்ப உண்மையா இல்ல இருக்கு .... " என அகல்யா இதுதான் சாக்கு என்று ஸ்ரீ வேலைக்கு செல்ல ஆரம்பித்த இரண்டாம் நாளிலேயே பெரிய அளவில் பஞ்சாயத்து வைக்க ,
"முட்டாளாட்டம் பேசாத அகல்யா ... குழந்தை உண்டாறது கடவுள் கையில இருக்குது .... நேரம் காலம் வந்தா தானா நடக்கும் ..... "
"என்னமோ போங்க .... நடக்கிற எதுவும் நல்லதா படல .... ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்.... ...என் பையன் மேல எந்த குறையும் கிடையாது ... என் வீட்டு வித்த குத்தம் சொல்ல முடியாது .... வந்த மகராசிக்கு தான் என்னா குறையோ...."
"அடியேய் நீ அடங்க மாட்டியா ... உன் வாயில நல்ல வார்த்தையே வராதா.... "
"நான் நல்லதா பேசினா மட்டும் நல்லது நடந்திடவா போவுது ... என்னமோ மனசே சரியில்ல ..." என புலம்பிக்கொண்டே, போர்வையை போர்த்திக்கொண்டு அகல்யா உறங்க முயற்சிக்க, பொன்னம்பலம் பயண செலவுகளை குறிப்பேட்டில் எழுதும் பணியில் மூழ்கிப் போனார்.
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு, திடீர் ஞானோதயமாய் அந்த மாத மாதவிலக்கு குறித்த சிந்தனை வர, உடனே தன் அலைபேசியில் நாள்காட்டியை தேடி எடுத்து எண்ணிப் பார்த்தாள்.
இன்னும் ஒரு வாரம் இருந்தது.
உடன் இந்த முறையாவது கருத்தரிக்க வேண்டுமே ....
என்ற எண்ணமும் ஆசையும் பிறக்க, ஏனோ காரணம் புரியாமல் உடனே கண்கள் பனிக்க, கணவனை தேடியது மனது.
திருமணமான நொடியில் இருந்து இந்த கணம் வரை , அவன் அருகாமை ஒன்று போதும் ஆயிரம் யானைகளின் பலத்தை அனாயாசமாக உணர்வாள் .
கணவன் என்ற உறவை தாண்டி, அவன் அன்பான தோழன், ஆகச் சிறந்த வழிகாட்டி ...
இப்படிப்பட்டவனிடம் காலையில் அலுவலகத்தில் நடந்ததை பகிர முடியாமல் போனது நினைவுக்கு வந்து வருத்தமளிக்க, நாளை எப்படியும் மனதை அழுத்தி கொண்டிருக்கும் அந்த அலுவலக பிரச்சனையை பகிர்ந்தே தீர வேண்டும் என்று உரு போட்டபடி உறங்கிப் போனாள்.
நள்ளிரவுக்கு மேல், வீட்டின் தானியங்கி கதவை திறந்து கொண்டு வந்த வீராவுக்கு மனையாளிடம் பேச , ஒரு முக்கிய விஷயம் இருந்தது.
ஆனால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு, மறுநாள் காலை பேசிக்கொள்ளலாம் என்ற முடிவெடுத்தவன் சற்று தள்ளி படுத்துக்கொண்டு நித்திரையில் மூழ்கிப் போனான்.
மறுநாள் காலை பரபரப்பாக விடிந்தது.
வழக்கம் போல் அவனுக்கு முன்பாக அவள் எழுந்து குளித்து முடித்து தயாராகி, சமைப்பதற்காக கீழ் தளத்திற்கு செல்ல, அவளது வரவிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த அகல்யா,
"இந்தா முதல்ல டீய குடி ... டீய குடிச்சிட்டு, காலையில டிபனுக்கு இட்லி ஏத்தி சாம்பார் சட்னி வச்சிடு .... உங்க ரெண்டு பேத்துக்கு மதிய சாப்பாட்டுக்கு தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு பொரியலும் செஞ்சி டப்பா கட்டிடு .... அப்புறமா எங்களுக்கு மதிய சாப்பாட்டுக்கு நான் சாதம் வடிச்சிக்கிறேன் ..." என்றார் அகல்யா,
கைபேசியில் பார்வையை பதித்த படி.
முந்தைய இரவைக் காட்டிலும், உடலில் கொஞ்சம் புத்துணர்வும் தெம்பும் இருந்ததால், அவர் சொன்ன அனைத்தையும் ஒரு மணி நேரத்தில் அவள் பரபரவென்று செய்து முடிக்க,
"இன்னும் இவள காணமே .. இவ்ளோ நேரமா கிச்சன்ல என்ன பண்றா ..." என்ற யோசனையோடே குளியல் அறையில் இருந்து வந்தவன், வேகவேகமாக அலுவலகத்திற்கு தயாராகி கீழ் தளத்திற்கு வந்தான்.
"வாப்பா, மொதல்ல டிபன் சாப்டுட்டு பொறவு டீ குடி..." என்று அவனை அழைத்த அகல்யா, ஸ்ரீயை பார்த்து,
"நேரம் ஆயிடுச்சு... நீயும் டிபன் சாப்பிடும்மா... " என்றார் இரு தட்டில் இட்லிகளை வைத்து சாம்பார் ஊற்றி.
இருவரும் சாப்பிட ஆரம்பித்ததும், பயணத்தின் போது நடந்த சில விஷயங்களை அவர் பகிர, கேட்டுக்கொண்டே உண்டவனின் விழிகள், எதேச்சையாக அவனுக்கு நேர் எதிராக அமர்ந்து உண்டு கொண்டிருந்த மனையாளின் மீது படிந்து ஒரு கணம் அப்படியே நின்றன.
மிகவும் சோர்வாக தென்பட்டாள் அவனவள் .
சமீபத்திய பழக்கமாக அகல்யா அவளுக்கு அடுக்களையில் உதவுவதில்லை என அறியாமல், அலுவலக பணிச்சுமையால் அவ்வாறு காட்சியளிக்கிறாள் போலும் என்றெண்ணி கொண்டவன், அது குறித்து பேச வேண்டும் என்ற முடிவெடுத்தபடி உண்டு முடிக்க, அதற்குள் அவன் மனையாள் உண்டு முடித்து லேசான ஒப்பனையோடு தயாராகி வந்தாள்.
அவள் காரில் அமர்ந்ததும், அருகில் அமர்ந்தவன், வாகனத்தை கிளப்பிய படி,
"ஸ்ரீ .... உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ..." என்றான்.
" நானும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை ஷேர் பண்ணனும் ..." என ஆர்வமாய் அவள் சொல்லும் போதே, அவனது செயலாளர் ப்ரீத்தியிடமிருந்து அழைப்பு வந்தது.
" டெல் மீ ப்ரீத்தி ..." என அழைப்பை அனுமதித்து அவன் சொல்ல
"சார், எல்லாருக்கும் மீட்டிங் இன்வைட் அனுப்பியாச்சு... உங்களுக்கு பிரிட்ஜ் நம்பர் ஷேர் பண்ணி இருக்கேன் .... நீங்க ஜாயின் பண்ணிக்கலாம் ....." என்று அவள் முடித்ததும், குழு கலந்தாய்வில் அவன் இணைய, இணைந்திருந்தவர்கள் , ஏதேதோ மில்லியன் ட்ரில்லியன் கணக்குகளில் கதைக்க ஆரம்பிக்க, பதிலுக்கு அவள் நாயகனும் எண் இலக்கங்களை எண்ணிலடங்கா மொழிய, சலித்து போனாள் பெண்.
ஒரு வழியாக அலுவலகத்தை அடையும் போது , அலைபேசி கலந்தாய்வு முடிவுக்கு வர, கோபத்தை முகத்தில் பிரதிபலித்தபடி வெடுக்கென்று வாகனத்தை விட்டு அவன் நாயகி இறங்க
" ஏய் பட்டு , என்னாச்சு உனக்கு ..." என்றபடி அவளைப் பின் தொடர்ந்து வாகனத்தை விட்டு அவனும் இறங்க,
" இங்க பாருங்க நானும் பார்த்துகிட்டு இருக்கேன் .... கார்ல நிம்மதியா பேசிக்கிட்டு கூட வர முடியல ... எப்ப பாத்தாலும் கான்பரன்ஸ் கால் .... இனிமே என்னை ட்ராப் பண்ணும் போதும், பிக்கப் பண்ணும் போதும் இந்த மாறியான கால்ஸ அவாய்ட் பண்ணுங்க... .... " என அவள் பொங்க,
"என்னடா பண்றது , என் தொழில் அப்படி ..." என அவன் காரின் மீது லேசாக சாய்ந்த படி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு சமாதானம் பேச , அவள் பதில் பேசாமல் முகம் திருப்பிக் கொண்டாள்.
" சாரிம்மா.... இனிமே மேக்ஸிமம் அப்படி நடக்காம பாத்துக்கறேன் ..... "
என அவள் உயரத்திற்கு குனிந்து, அவள் கண்களைப் பார்த்தபடி அவன் சாந்தமாக மொழிய,
"உங்ககிட்ட முக்கியமா ஒரு விஷயத்தை ஷேர் பண்ணனும்னு நேத்துல இருந்து நெனச்சுக்கிட்டு இருக்கேன் .... வீட்ல கிளம்பற அவசரத்துல சொல்ல முடியல... கார்ல போகும் போதாவது சொல்லலாம்னு பாத்தா அதுக்கும் இந்த மாதிரி முட்டுக்கட்ட வந்தா என்ன பண்றது ....
இங்க பாருங்க.... இனிமே நான் டிராவல் பண்ணும் போது இந்த மாதிரி கால்ஸ் வந்தா உடனே இறங்கி வேற கேப் புடிச்சுகிட்டு போய்கிட்டே இருப்பேன் ....."
என அவள் ஆள்காட்டி விரலைக் காட்டி மிரட்டுவது போல் சொல்ல, ஆமோதிப்பதற்கு அடையாளமாக அவன் தன் தலையை இடவலமாக வஞ்சனை இன்றி அசைக்க, பக்கென்று சிரித்து விட்டாள் பெண் .
"டு பி ஹானஸ்ட் பட்டு ... கிளைன்ட் கால்ஸ போஸ்ட் போன் பண்றது கொஞ்சம் கஷ்டம் ... ஆனா என்னோட டீம் கால்ஸ பண்ணலாம் ... அதை நிச்சயம் பண்றேன் ...சரியா ..." என்று மீண்டும் அவள் கண்களைப் பார்த்து அவன் சமரசம் பேச, அவளும் மென் புன்னகையோடு அதற்கு செவி சாய்க்க , இந்த கவிதையான காட்சி, அலுவலக வளாகத்தை ஒட்டிய சாலையோரம், அதுவும் போக்குவரத்து சமிக்கைகளுக்காக பெருவாரியான வாகனங்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில் நடந்தேறியதால் பெரும்பாலானோர் கண்களுக்கு விருந்தாகி போக, இருவருக்கு மட்டும் விருப்பமின்மை ஆகிப்போனது.
அந்த இருவரும் வேறு யாருமல்ல ... ராணாவும் கௌதமும் தான்.
போக்குவரத்து சமிக்கைகளுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த ராணாவின் கண்களில் அந்தக் காட்சி பட்ட அதே நேரத்தில், அந்த சாலையில் இருந்த அலைபேசி விற்கும் கடையிலிருந்து வெளிப்பட்ட கௌதமும் அதைப் பார்க்க, இது அறியாத நாயகியோ இன்முகத்தோடு கணவனுக்கு விடை கொடுத்துவிட்டு தன்னிடத்திற்கு வந்து வழக்கம் போல் வேலையில் மூழ்கிப் போனாள்.
உணவு இடைவேளைக்கு பிறகு, கணினியில் மூழ்கி இருந்தவளிடம் ,
"ப்ரியா , நான் அனுப்பின டிசைன பாருங்களேன் .... சரியா வரும்னு தோணுது .... " என இளங்கோ ஆர்வமாய் சொல்ல, உடனே அந்தக் கோப்பை திறந்து பத்து நிமிடம் ஆழ்ந்து நோக்கியவள்,
" கரெக்டா இருக்கு இளங்கோ ... எனக்கும் சரியா வரும்னு தான் தோணுது .... கருணா சாரும் எஸ் னு தான் சொல்லுவாருன்னு நினைக்கிறேன் ..." என அவள் பேசிக் கொண்டே இருக்கும் போதே,
"அது எப்படி அவர் எஸ்ன்னு சொல்லுவாருன்னு நீங்க சொல்றீங்க ..." எனக் கேட்டுக் கொண்டே கௌதம் அங்கு வர, இருவரும் திகைத்து திரும்பி பார்த்தனர்.
அவன் அமைதியாக அவளையே பார்க்க,
" அது வந்து ... " என அவள் அந்த வடிவமைப்பின் விளக்க படத்தை விவரிக்க முயலும் போது,
" நீங்க சொல்றதுக்கு எல்லாம் உங்க ஹஸ்பண்ட் மண்டைய மண்டைய ஆட்றா மாதிரி கருணா சாரும் ஆமா சாமி போடுவாருனு எப்படி நீங்களே முடிவு பண்ணலாம் ..." என உக்கிரமாக அவன் மீண்டும் அதே கேள்வியை எழுப்ப, சட்டென்று அந்த பேச்சு அவளுக்கு விளங்காமல் போனது.
ஓரிரு கணக்கிற்கு பிறகு, அவன் பேச்சின் அர்த்தம் விளங்க,
" மைண்ட் யுவர் ஓன் பிஸ்னஸ் கௌதம் .... இத்தனை நாளா ப்ராஜெக்ட்ட பத்தி பேசி என்னை மட்டம் தட்டினீங்க... பொறுத்துக்கிட்டேன் .... என் பர்சனல் லைஃப் பத்தி பேசற ரைட்ஸ் உங்களுக்கு யார் கொடுத்தது ... ஐ டோன்ட் வான்ட் டு கண்டினியூ இன் திஸ் ப்ராஜெக்ட் ஹியர் ஆஃப்டர் ... ப்ளீஸ் ரிலீவ் மீ ..." என குழு உறுப்பினர்கள் முன்பாக, அவள் கர்ஜிக்க,
கௌதம் அந்த இடத்தை விட்டு பதில் பேசாமல் நடக்க, அதை தன் கைபேசியில் காணொளியாக பார்த்து ரசித்துப் கொண்டிருந்தான் ராணா.
குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு பிறகு தான் பிரச்சனை வெடிக்கும் என்று எண்ணி இருந்தவனுக்கு, கை மேல் பலனாக மூன்றாம் நாளிலேயே அனைத்தும் முடிவுக்கு வர, துள்ளி குதிக்காத குறையாய் வெற்றி சிரிப்பை தன் அறையே அதிரும் அளவிற்கு சந்தோஷமாக சிரித்தான்.
ஸ்ரீயோ மிகுந்த மன உளைச்சலுடன் நடந்த அனைத்தையும் மேலோட்டமாக எழுதி மின்னஞ்சல் ஒன்றை கருணாகரனுக்கு அனுப்பி, CCல் கௌதமை டேக் செய்ய, அடுத்த பத்தாவது நிமிடத்தில், கருணாகரனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
கருணாகரன் நடந்ததை ஒருமுறை நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டுவிட்டு
"ப்ரியா, உங்களை இந்த ப்ராஜெக்ட் ல இருந்து ரிலீவ் பண்ண சொல்றேன் ... நீங்க ஒன் வீக் பெஞ்ச்ல இருங்க ... அப்புறம் யுஎஸ் அக்கௌன்ட் ப்ராஜெக்ட்ல கிளைன்ட் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுங்க ... " என சொல்ல, ஆமோதித்து விட்டு அவள் கிளம்ப எத்தனிக்கும் போது ,
"ஒன் மினிட், உங்கள சிஇஓ பாக்கணும்னு சொன்னாரு ..." என்றார் இயல்பாய்.
" சிஇஓ வா ...." என்றாள் கண்களை அகல விரித்து புரியாமல்.
கருணாகரனுக்கு ஸ்ரீ மின்னஞ்சல் அனுப்பிய மறு நொடி, அவரை தொடர்பு கொண்டு, அவளை அழைத்து நடந்ததை விசாரிக்கும் படி உத்தரவிட்டதோடு, தன்னை சந்திக்க சொல்லுமாறும் ராணா பணித்திருக்க, கிளிப் பிள்ளையாய் அதனை கருணாகரன் வழி மொழிய
"எதுக்காக ...." என்றாள் தயக்கத்தோடு.
" நீங்க அனுப்பின மெயில , நம்ம கம்பெனி சிஇஓ ராணாவுக்கு ஃபார்வேர்ட் பண்ணி இருந்தேம்மா... "
" ஆனா.... அவருக்கு ... எதுக்கு ...."
" இந்த கம்பெனியில, சின்ன விஷயம் கூட சிஇஓ-க்கு தெரியாம நடக்காதம்மா ... உங்க மெயில பாத்துட்டு நடந்த எல்லாத்தையும் என்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் தான் நீங்க அவரை மீட் பண்றதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்கிறாரு..." என முடிக்க ,
அடுத்த இருபதாவது நிமிடத்தில் ஐந்தாவது தளத்தில் இருந்த ராணாவின் அறை கதவின் முன்பு சிறு பயத்தோடும் தயக்கத்தோடும் நின்றாள் ஸ்ரீ.
ஒரு கணம் தொண்டையை சரி செய்து கொண்டு
" எக்ஸ்கியூஸ் மீ...." என்று அவள் அந்த அறையின் கண்ணாடி கதவை தட்ட,
" கம் மின் ... " என்றான் ராணா மிகுந்த மகிழ்ச்சியோடு கம்பீரமாக.
அவள் உள்ளே நுழைய, அவனோ ஏதோ பெரும் தலைவர்களை வரவேற்பது போல் வாயிலிலேயே நின்று ,
"எப்படி இருக்க.... வா வா .. வந்து உட்காரு ..." என அ படபடக்க, ஒன்றுமே புரியாமல் மலங்க மலங்க விழித்தாள் நாயகி .
காரணம் அவன் பேசியது முழுவதும் சிந்தி மொழியில்.
அவள் முக பாவத்தை கண்டு சுதாரித்தவன்,
" கமான் ஸ்ரீ ... ப்ளீஸ் டேக் யுவர் சீட் ..." என்றான் கலகலப்பாக.
இப் பிறவியில் இனி கிடைக்காது என்று அனுதினமும் எண்ணி தவித்துக் கொண்டிருந்தவளின் தரிசனம் , 24 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு நெருக்கமாக கிடைக்கப்பெற்றதை எண்ணி உள்ளுக்குள் பூரித்துப் போனான் .
ஆனால் அவளுக்குத்தான் ஒன்றுமே விளங்கவில்லை.
நிறுவனத்தின் சிஇஓ தலையிட வேண்டிய அளவிற்கு நடந்தது பிரச்சனையே இல்லை என்கின்ற நிலையில், அவளை அழைத்து அவன் பேசுவது, அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் தோழியிடம் நட்பு பாராட்டுவது போல் அவன் நடந்து கொள்வதெல்லாம் விந்தையாக இருக்க, புரியாமல் அவள் உறைந்து போக
" ப்ளீஸ் டெல் மீ யுவர் கன்சர்ன் ஸ்ரீ ..." என்று அவளைப் பேச ஊக்கினான்.
பிரச்சனைகளை அவன் சொல்லச் சொன்னதை விட, ஸ்ரீ என்று அழைத்தது தான் வித்தியாசமாகப்பட , குழம்பிப் போனாள் பெண்.
பொதுவாக 'ப்ரியா' என்ற விகுதியை பெயர்களாகக் கொண்டவர்களை ப்ரியா என்று தான் பெரும்பாலானோர் அழைப்பது வழக்கம்.
அது சத்ய ப்ரியாவாக இருக்கட்டும் , சண்முகப்ரியாவாக இருக்கட்டும், விஷ்ணு ப்ரியாவாக இருக்கட்டும் ... பத்மபப்ரியாவாக இருக்கட்டும் ... எதுவாக இருந்தாலும் ' ப்ரியா' என்று அழைப்பது தான் நடைமுறையில் உள்ள ஒன்று ...
ஆனால் இவன் மட்டும், அவள் கணவன் அழைப்பது போல் தனித்துவமாக , 'ஸ்ரீ' என்று அழைத்தது நூதனமாக தெரிய, விளங்காமல் விழித்தாள் வனிதை.
அவனுடைய மதுஸ்ரீயை , அவளை பெற்ற தாய் தந்தையிலிருந்து ஊரே ஸ்ரீ என்று அழைக்கும் போது, அவன் மட்டும் தன்னவள் தனக்கு தனியாகத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் " மது" என்றே விளித்தவனாயிற்றே...... ....
அதே எண்ணத்தில் தான், இவளை ஸ்ரீ என்று அழைத்திருந்தான் ராணா.
சிந்தனையில் இருந்து மீண்டவள், நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடிக்க, ஹா ஹா ஹா என்று வாய்விட்டே அவன் குலுங்கி நகைக்க, அவளோ புரியாமல் அவனை முறைக்க,
" ஏய்... சாரி சாரி .... ... " என்றவன் புன்னகையோடே,
" அந்த சீன நானும் பார்த்தேன் .... உன் ஹஸ்பண்ட் தலை குனிஞ்சு , உன் முகத்தை பார்த்துகிட்டே நீ சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டினது ரொம்ப ரொம்ப க்யூட்டா இருந்தது .... நான் மட்டும் இல்ல சிக்னல்ல இருந்த அத்தனை பேரும் அதை பார்த்தாங்க...... .... இந்நேரம் ஏதாவது ஒரு சோசியல் மீடியால அந்த சீன்ஸ் எல்லாம் வைரல் ஆனா கூட ஆச்சரியத்துக்கு இல்ல ... அவ்ளோ பியூட்டிஃபுல்லா இருந்தது .... "
அவள் புன்னகையோடு ஆச்சரியமாய் அவனை நோக்க,
" கௌதம் சொன்ன விதம் வேணா தப்பா இருக்கலாம் ஆனா அந்த சீன் ரொம்ப ரொம்ப லவ்லியா இருந்தது .... நியூலி வெட்டட் வைஃப் ... அதுவும் அழகான வைஃப் எதை சொன்னாலும் கேட்டுக்கிட்டா தானே மேரேஜ் லைப் சந்தோஷமா இருக்கும் ... அதைத்தான் உங்க ஹஸ்பண்ட் செய்யறாரு ..."
என்றவனின் பேச்சில் அவள் முகம் மாற,
" ஜஸ்ட் கிட்டிங்.... உன் ஹஸ்பண்ட் மட்டும் இல்ல கல்யாணமான புதுசுல நானும் அப்படித்தான் இருந்தேன் .... ஆனா இப்ப என் வைஃப் எது சொன்னாலும் நான் கேக்குறது இல்ல .... " என்றான் வாய்விட்டு நகைத்து.
அவன் பேச்சும் செய்கையும் புரியாத புதிராய் இருக்க, சிலையாகிப் போனாள் பெண் .
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
awesome 💕😘
ReplyDeleteThanks dr
DeleteSuper mam
ReplyDeleteThanks dr
DeleteVillan ulla vanthachu,, all ready mamiyar panra vambu thangalaa,, ini Ivan enna panna poranoooooo
ReplyDeleteThanks dr
DeleteOMG 😲 Sri pavam sis.. intha agalaya ethukaga ipadi irukangalo... Mamiyar na ipadi than nadanthukanumnu ethachum rules iruka enna. The ramayan starts now..
ReplyDeleteThanks a lot dr...
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete