அத்தியாயம் 114
நண்பன் நடிக்கிறான் என்பதை கண நேரத்தில் புரிந்து கொண்ட திலக், அவனுடைய திட்டத்தையும் அதற்கு பின்னால் இருக்கும் அவன் எண்ணத்தையும் அறிந்து கொள்ள எண்ணி,
"எதுக்கு தலைய சுத்தி மூக்க தொடற ... எனக்கு அப்புறம், மோனிஷா தானே உன் கூட அதிகமா டைம் ஸ்பென்ட் பண்றா... பேசாம அவளைத் தூக்கிட்டு அந்த இடத்துல அந்தப் பொண்ணை போட்டுடு....இஷ்யூ சால்வ்டு ..." என திலக் நக்கலாக மொழிய,
"என்னடா .... இதான் நேரம்னு கலாய்க்கிறயா..... இது ஒன்னும் சிஇஓ செகரட்டரி பேஸ்ட்டு ஆன்ட்டி ஹீரோ ஸ்டோரி கிடையாது.... வெறும் டிகிரி முடிச்சுட்டு எக்ஸ்பீரியன்ஸே இல்லாம வர்றவள செக்ரட்டரி போஸ்ட்ல அப்பாயிண்ட் பண்றதுக்கு ...
கொட்டேஷன், மீட்டிங் ஸ்கெடியூல், டைம் ஷீட் , ஏன் பிசினஸ் லெட்டர்ஸ் ப்ரிப்பேர் பண்ண கூட குறைஞ்ச பட்சம் நாலு மாசமாவது எக்ஸ்பீரியன்ஸ் வேணும் .... அவளுக்கு ஆர்க்கிடெக்டா எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும் மேனேஜ்மென்ட் சைட்ல எதுவுமே தெரியாது..... அதோட அவளும் இப்படி ஒரு போஸ்ட்க்கு வர சம்மதிக்கவே மாட்ட...
நான் என்ன அவளை மேனேஜ்மென்ட்ல போட்டு கொடுமைப்படுத்தவா கூட்டிகிட்டு வரேன் ... இல்லையே.... அவளுக்கு நல்லா ட்ரெய்னிங் கொடுக்கணும்.... அவ எல்லா வேலையும் கத்துக்கிட்டு இங்கயே இருக்கணும் .... நான் அவளை பார்த்துகிட்டே இருக்கணும் .... அவ்ளோ தான் டா என் ஆசை ... அதனால தான் ப்ரோபைல் சேஞ்ச் கூட இயல்பா நடக்கிற மாதிரி நடந்தா தான் , அவ மனசு இந்த வேலையில ஒட்டும்னு யோசிச்சு தான் உள்ளடி வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் ..."
என்றவனின் பேச்சில் , அவனது அடுத்த கட்ட நகர்வுகள் மிகத் தெளிவாகத் இருந்ததோடு , வேறு ஏதோ பெரிய விஷயத்திற்கும் அடி போட்டு விட்டான் என்பதும் தெரிய வர பதில் பேச முடியாமல் உறைந்து போனான் திலக்.
அடுத்த கணமே சற்றும் தாமதிக்காமல் , அதற்கான பணியில் முழு வீச்சில் இறங்கினான் ராணா.
அவன் உயரத்திற்கு, திட்ட வரைவு குழு மேலாளர் கௌதமை நேரடியாக தொடர்பு கொள்வது சரி வராது என்பதால், முறையான படிநிலைகளை பயன்படுத்தி கௌதமிருக்கு கூடிய விரைவில் மேற்கொள்ளவிருக்கும் திட்ட வரைவு உருவாக்கும் வடிவமைப்பு முறை ஒன்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தான்.
அதில் ஏகப்பட்ட மறைமுக இடர்பாடுகள் இருப்பது போல் வடிவமைத்ததோடு குழுவில் இருப்பவர்களிடம் குறிப்பாக பணி அனுபவம் உள்ளவர்களிடம் பகிர்ந்து ஒப்புதலுக்கு உரியதா அல்லது நிராகரிக்க வேண்டிய வடிவமைப்பா என்ற கருத்தை காரணத்தோடு கேட்கச் சொல்லி தெரிவித்திருந்தான்.
கௌதம், சிறந்த உழைப்பாளி திறமையானவன். ஆனால் ஆணாதிக்க குணம் கொண்டவன்.
அதனால் தான் அவன் குழுவில், பத்து நபர்கள் இருந்தாலும், அதில் ஒன்றோ இரண்டோ பெண்கள் இருப்பதே அரிது.
அப்படி இருக்கும் பெண்கள் கூட அவன் இட்ட வேலையை செய்து விட்டு பேசா மடந்தையாக இருந்தால் மட்டுமே அவனிடம் காலம் தள்ள முடியும்.
மீறி கருத்து தெரிவித்தாலோ எதிர்த்து பேசினாலோ, குழு நபர்கள் முன்பாக அதையே பெரும் பிரச்சனையாக்கி அவர்களுக்கு மூக்கு உடைப்பை ஏற்படுத்தி அவமானப்படுத்தி விடுவான்.
ஆமை தன் கூட்டுக்குள் ஒளிவது போல், அதன் பிறகு யாரும், குறிப்பாக பெண்கள் குழு கலந்துரையாடலில் பேசுவதையே நிறுத்தி விடுவார்கள் ...
இது போல் பலமுறை, பல பெண்களுக்கு நடந்து, அந்தத் திட்ட வரைவிலிருந்து வெளியேறி வேறு குழுவிற்கு சென்றவர்களும் உண்டு.
அமைதி என்பதை விட ஒரு வகையில் அடிமையாக இருக்கும் பெண்களால் மட்டுமே அவனிடம் குப்பை கொட்ட முடியும் என்பதை நன்கு அறிந்திருந்ததோடு, அவனது தனிப்பட்ட சில விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்ததால் அவனுடைய குணத்திற்கு நேர் எதிரான, மனதில் பட்டதை நறுக்கென்று சுதந்திரமாக தெரிவிக்கும் ஸ்ரீயை அவன் குழுவில் திட்டமிட்டே பணி அமர்த்தியிருந்தான் ராணா.
குழு கலந்தாய்வு தொடங்கியது.
9 ஆண்கள் கொண்ட கௌதம் குழுவில், பத்தாவதாக ஒரே ஒரு பெண்ணாக ஸ்ரீ இடம் பெற்றாள்.
அலுவலகச் சடங்காய் அவளை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தவன் கலந்தாய்வு அறையின் திரையில், திட்ட வரைவின் வடிவமைப்பை தெளிவாக விளக்கிவிட்டு , அது ஒப்புதலுக்கு உகந்ததா அல்லது நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றா என்ற கேள்வியை முன் வைத்து , கருத்துக்களை பகிருமாறு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவிட்டு தன் பணியில் மூழ்கிப் போனான்.
அடுத்த அரை மணி நேரத்தில், அவளை விட அனுபவம் மிக்கவர்களுக்கு இணையாக ஸ்ரீயும் வரைபடங்கள் மற்றும் கணக்கீடுகள் வாயிலாக அந்த வடிவமைப்பு ஒப்புதலுக்கு தகுதியற்றது என்ற கருத்தை தெளிவாக பதிவு செய்து ஒரு சிறு கட்டுரை ஒன்றை தன் மடிக்கணினியில் தயார் செய்தாள்.
கருத்து கேட்கும் நேரம் தொடங்கியதும், பாதிப்பேர் சில முக்கிய காரணங்களை குறிப்பிட்டு அந்த வடிவமைப்பை நிராகரிக்க, மீதம் இருப்பவர்கள் வேறு சில காரணங்களை குறிப்பிட்டு அதற்கு ஒப்புதல் அளிக்க, இவ்வாறாக கலந்துரையாடல் சூடு பிடித்துக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீயும் தான் தயாரித்து வைத்திருந்த கட்டுரையிலிருந்து அந்த வடிவமைப்பில் காணப்பட்ட நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை வரிசை படுத்துவிட்டு
"இந்த டிசைனை அப்ரூவ் பண்ணா, வித் இன் த டைம் லிமிட் குள்ள முடிக்கிறதே ரொம்ப கஷ்டம்.... அதோட ஆப்டிமம் ரிசல்ட்டும் கிடைக்கவே கிடைக்காது ... சோ இந்த டிசைனை ரிஜெக்ட் பண்றது தான் நல்லது... " என அவள் கம்பீரமாக முடிக்க, அவளது தோரணையும், ஒவ்வொரு அம்சங்களையும் நுண்ணியமாய் அலசி ஆராய்ந்து வகைப்படுத்திய விதமும் கௌதமை கவர்ந்தாலும், ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல்,
"ப்ரியா , இந்த ஆர்க்கிடெக்சுரல் டிசைனோட ப்ரோஸ் அண்ட் கான்ஸ தான் உங்கள சொல்ல சொன்னேனே ஒழிய, முடிவெடுக்க சொல்லல ... முடிவெடுக்க வேண்டியது என் வேலை ..." என்றான் வெடுக்கென்று.
அவளது முகம் கோபத்திலும் அவமானத்திலும் அளவுக்கு அதிகமாக சிவக்க, அதைப் பார்த்து உள்ளுக்குள் ரசித்தவன், அதற்கு மேல் அவள் பக்கமே திரும்பாமல், மற்றவர்களுடன் மட்டுமே கலந்துரையாடிவிட்டு அன்றைய குழு கலந்தாய்வை முடித்தான்.
சோர்ந்த முகத்தோடு தன் கேபினில் வந்தமர்ந்தவளுக்கு எவ்வளவு சிந்தித்தும் ஒன்றுமே புரியவில்லை. மற்ற குழு உறுப்பினர்களை போல் தான் அவளும் தன் கருத்தை பதிவு செய்திருக்கையில் அவளிடம் மட்டும் கௌதம் ஏன் கோபப்பட்டான் என புரியாமல் அவள் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில்,
"ஹாய் ப்ரியா .... " என்றபடி அவள் அருகில் இருந்த நாற்காலில் வந்தமர்ந்தான் இளங்கோ.
கௌதமின் குழுவில் அவனும் ஒருவன். எப்பொழுதும் இன்முகத்துடனேயே வளைய வருபவன் . முந்தைய நாளே ஓரிரு சந்தர்ப்பங்களில் அவளுடன் உரையாடி இருக்கிறான் .
"ஹாய் ...." என்றாள் சட்டென்று முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்து .
"தலை, ஏன் அப்படி தேவையில்லாம உங்க கிட்ட பேசினாருன்னு தானே யோசிக்கிறீங்க..."
ஆமோதிப்பதற்கு அடையாளமாக அவள் மென்மையாக தலையசைக்க,
"தலைக்கு பொதுவா லேடிஸே பிடிக்காது ... அதுக்கு பல காரணம் இருக்கு ... முக்கியமான காரணம் என்னன்னா , அவரோட டிவோர்ஸ் கேஸ் நாலு வருஷமா நடந்துகிட்டு இருக்கு ... டிவோர்ஸ் கொடுக்காம அவங்க வைஃப் இஷ்டத்துக்கும் இழுத்தடிச்சுக்கிட்டு இருக்காங்க ... அதான் அந்த கோவத்தை இப்படி காட்டிட்டு போறாரு ..."
" அதுக்கு என் மேல ஏன் கோவப்படனும் .... "
" காரணம் இருக்கே ..... தலையோட வைஃப் பேரு ஸ்ரீப்ரியா ..." என்று அவன் சொல்லிவிட்டு சிரிக்க, சற்றும் எதிர்பார்க்காத அந்த பதிலைக் கேட்டு, ஸ்ரீயும் குலுங்கி சிரிக்க, சற்று முன்பு வரை புகைமூட்டமாய் சோர்ந்திருந்த அவள் மனதில் ஒருவித மென் வெளிச்சம் பரவி நிம்மதி அளிக்க, அதன் பின் அன்றைய பொழுதை ஓரளவிற்கு நிம்மதியோடே கழித்தாள்.
வழக்கம் போல் மாலை மணி ஆறை கடக்கும் போது அவளை அழைத்துச் செல்ல வீரா வந்தான்.
வரும் போதே காரில் 'கான்ஃபரன்ஸ் கால்' ஓடிக்கொண்டிருக்க , அமருமாறு சைகை செய்தவன், அவள் அமர்ந்ததும் கார் ஓட்டுவதிலும் கலந்துரையாடலிலுமே கவனம் செலுத்த, பொறுத்து பொறுத்து பார்த்தவள் வீடு வந்து சேருவதற்கு முன்பாக தூங்கியே விட்டாள்.
வீட்டை அடைந்ததும்,
"பட்டு, எழுந்திடும்மா...." என்று அவன் கன்னம் தொட்ட போது தான் , விழித்தெழுந்தவள்,
"ககககககக...னு ஒரே பேச்சு .... இவ்ளோ பேரு மாத்தி மாத்தி பேசறாங்க நீங்களும் விடாம பதில் சொல்லிக்கிட்டே வர்றீங்க... அதுவும் அவ்ளோ நம்பர் கால்குலேஷன்ஸ்... அப்பப்பா.... ... நான் டயர்டு ஆயி தூங்கிட்டேன்..... ..." என்றாள் சோர்வாக.
"நாதஸ்க்கு ஏதாவது புடிக்கலைன்னா தூங்கிடுவான் ..." என சிரித்தபடி அவளது நுனி மூக்கை திருகிக் கொஞ்சியவன்
"சிட்டு, நீ உள்ள போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு .... நான் ஃபர்ஸ்ட் கிளாஸ் இஞ்சி டீ போட்டு எடுத்துக்கிட்டு வரேன் ..." என்றவன் உடை கூட மாற்றாமல் நேரடியாக அடுக்களைக்கு செல்ல, மனமும் உடலும் அளவுக்கு அதிகமாக களைத்தது போல் உணர்ந்ததால் பதில் பேசாமல், படுக்கை அறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தாள்.
பத்தே நிமிடத்தில் தேநீரோடு அறைக்கு வந்தவன் , ஒரு கணம் அப்படியே உறைந்து நின்றான்.
அவனவள் வேகவேகமாக 3×3 ரூபிக்ஸ் கியூபை அழகாக நிற வாரியாக மூன்று நிமிடத்திற்குள்ளாகவே வரிசைப்படுத்தி முடிக்க,
"வாரே வாவ் .... பின்னிட்ட பட்டு .... என்னால முதல் ரெண்டு லேயர் தான் பாஸ்ட்டா சால்வ் பண்ண முடியும்..... மூணாவது லேயர் பண்ண கொஞ்சம் நேரம் எடுக்கும் .... நீ ஃபர்ஸ்ட்டா முடிச்சிட்டியே ..." என பெருமை பொங்க சொன்னவனை பெருமை பொங்க பார்த்தாள் நாயகி.
கௌதம் போல் நியாயமான கருத்துக்களை பெண்கள் தெரிவித்தால் கூட, அதனை அடங்காப்பிடாரித்தனம் போல் சித்தரித்து மூக்குடைத்து மூலையில் அமரச் செய்யும் ஆண்களுக்கு மத்தியில், தன் கணவன் தன்னுடைய சின்னஞ்சிறு திறமையை கூட யாதொரு போலித்தனமும் இல்லாமல் பாராட்டும் விதத்தை எண்ணி மெச்சியவள்,
"பெஸ்ட் ஹஸ்பண்டுக்கான அவார்டு கொடுக்கணும்னா உங்களுக்கு தான் கொடுக்கணும் .... " என்றாள் ரசனையாய் அவன் கையில் இருந்த தேநீரை வாங்கி பருகிய படி.
"ஏன்....." என்று குதூகலமாய் கேட்டவனிடம் , அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் அவள் பகிர,
"பட்டும்மா, நீ இப்படி எல்லாம் அந்த ராஸ்கல் கிட்ட கஷ்டப்படணும்னு அவசியமில்ல.... நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஏதாவது பண்ணான்னா, வாக் அவுட் ஆப் தி ப்ராஜெக்ட்.... ... அந்த மாதிரியான சைக்கோ கிட்ட எல்லாம் மனுஷன் வேலை பார்க்க முடியாது ... ஆபீஸ்லயே இப்படி இருக்கான்னா வீட்ல எப்படி இருந்திருப்பானோ ... அதனால தான் அவன் ஒய்ஃப் டிவோர்ஸ் கொடுக்காம இழுத்தடிக்கிறா ...." என்றான் கோபத்தோடு , கௌதமை விட ஒரு சீனியர் சைக்கோ சாம்பி , அவன் மனையாளை கட்டம் கட்டி தூக்க காத்துக் கொண்டிருப்பதை அறியாமல்.
அதற்கு மேல் இருவரும் ஏதேதோ பேசியபடி, ஒன்றாகவே அடுக்களையில் சப்பாத்தியை திரட்டி இரவு உணவாக உண்டு முடித்ததும்
" ஸ்ரீ.... நாளைக்கு அம்மா அப்பா வராங்க இல்ல.... .... வொர்க் ப்ரம் ஹோம் போடலாம்னு இருக்கேன் .... அதான் இப்பவே கொஞ்சம் அப்ரூவல்ஸ் கொடுத்துட்டு வந்துடறேன் .... நீ போய் தூங்கு ... " என்றான் மடிக்கணினியில் பார்வையை பதித்தபடி.
அவளுக்கும் வழக்கத்தை விட சோர்வும், லேசாக கை காலில் வலி இருப்பது போல் தோன்ற, களைப்பாக படுக்கையில் வந்து விழுந்தவள் அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள்.
ஒரு மணிக்கு மேல் வந்தவன், ஆழ்ந்த உறக்கத்தை தழுவ, அதிகாலை 3 மணி அளவில் அரைகுறை விழிப்பில் , சற்று தள்ளி உறங்கிக் கொண்டிருந்த தன் மனையாட்டியை ஒரு கையால் பற்றி இழுத்து தன்னோடு அணைத்து வழக்கம் போல் ஒற்றை காலை அவள் கால் மீது போட்டபடி உறக்கத்தை தொடர, அந்த அசைவில் லேசாக உறக்கம் விழித்தவள்,
"ராம் .... ரெண்டு காலும் என் கால் மேல போட்டுகிட்டு, கொஞ்சம் என் மேல நெருங்கி படுங்களேன் ..." என்றாள் ஈனஸ்வரத்தில்.
"ஏய்...... என் வெயிட்ட உன்னால தாங்க முடியாது டி ... எலும்பு உடைஞ்சு போயிடும் ..."
"இல்ல... ஒன்னும் ஆகாது .... நேத்து நிறைய நேரம் ஆபீஸ்ல நின்னுகிட்டே இருந்தேனா கால் லேசா குடையற மாறி இருக்கு ... " என்றாள் புரண்டு படுத்து.
" இரு.... ஒரு நிமிஷம் ..." என்றவன் அரை தூக்கத்திலேயே படுக்கையை விட்டு எழுந்து சென்று வலி நிவாரணி களிம்பை கொண்டு வந்து, அவளது கை கால்களில் சூடு பறக்க தேய்த்து விட்டு, வழக்கம் போல் அவளை அணைத்துக் கொண்டு அவன் உறங்க, மறுநாளிலிருந்து வீட்டிலும் அலுவலகத்திலும் படாத பாடு பட போகிறோம் என அறியாமல், கணவன் கொடுத்த ஒத்தடத்தில் அருமையாக கண்ணயர்ந்து போனாள் காரிகை.
அங்கு தன் இல்லத்தில் மாத்திரை போட்டும் உறக்கம் வராமல், இடவலமாக நடை பயின்று கொண்டிருந்தான் ராணா.
ஸ்ரீயின் குடும்ப பின்னணி மற்றும் பொருளாதாரத்தை, வெகு சாதாரணமாக எண்ணி காய் நகர்த்திக் கொண்டிருந்தவனுக்கு, முன் தினம் மாலை கம்பீரமாக வந்து நின்ற பிரம்மாண்ட கருப்பு நிற ஜாகுவார் காரின் முன்பக்கத்தில் அவள் ஏறி அமர்ந்து கொண்டு சென்றது, அவன் திட்டத்தை முற்றிலும் குலைத்து விடும் என்ற அச்சத்தை தர , மாற்று வழியை எண்ணியபடி நித்திரை பிடிப்படாமல் திணறி கொண்டிருந்தான்.
காலையில் கலந்தாய்வு அறையில் இருந்து அவள் வெளிப்பட்ட போது மிகுந்த சோகத்தில் இருந்தது, அதன் பின்பு இளங்கோவுடன் உரையாடியதும், அவள் முகம் தெளிவடைந்ததை எல்லாம் கண்டு, தான் வகுத்த திட்டம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தவனுக்கு, அவளது வாழ்க்கை வளம் அவன் திட்டத்தில் மண் அள்ளிப் போட, தீவிர யோசனையில் மூழ்கிப் போனான்.
பெரும்பாலான நிறுவனங்களில் இருப்பது போல், அவனது நிறுவனத்திலும், நிறுவன கட்டிடத்தை சுற்றி சாலைகளை கண்காணிக்க பல கோணங்களில் வெளிப்புற சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
அதோடு நிறுவனத்தின் ஒவ்வொரு தளம் மற்றும் ஒவ்வொரு பிரிவு பணி நிலையங்களின் நுழைவு வாயில்(ODC) மற்றும் அதன் உட்புறத்திலும் ஊழியர்களை கண்காணிக்க, மத்திம பகுதியில் ஒரு சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டிருக்க, ஸ்ரீயின் பணிமனையும்(work station) இயல்பாக அமைவது போல் அதன் கீழேயே அவனது மறைமுக உத்தரவின் பேரில் அமைந்து கொடுக்கப்பட்டிருந்ததால் அவளது அலுவலக நடவடிக்கைகளை தெளிவாக பார்வையிட்டவன், மாலையில் கணவனோடு அவள் காரில் ஏறி புறப்பட்டு சென்றதையும் வெளிப்புற கேமராக்கள் வழியாக பார்த்து விட்டு கொதித்துப் போனான்.
ஆனால் இத்துணை யோசனைக்கு இடையேயும் நேற்றைய ஒரே தினத்தில் அவளை ஓரளவிற்கு கணித்தும் இருந்தான்.
அலுவலக நேரத்தில் கைப்பேசியை துளிகூட பயன்படுத்தாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று பணியில் அதிக ஆர்வத்தோடு அவள் மூழ்கி இருந்த பாங்கு, அதே சமயத்தில் தாமாக முன் வந்து பேசும் குழு உறுப்பினர்களிடம் அவள் காட்டிய வெகு மிதமான நட்பு என அர்ஜுனனின் அம்பு பறவையின் கண்ணை குறி பார்த்தது போல் அவள் செயல்பட்ட விதம், வயதுக்கு மீறிய முதிர்ச்சியை காட்ட, அவன் போட்டு வைத்திருக்கும் முதல் திட்டம் நிறைவேறினாலும், அடுத்த அடுத்த திட்டங்கள் நிறைவேறுவது கடினம் என்பதை அது உணர்த்த, உடனே அவனுக்கு அவளது முகம் தெரியாத கணவனின் மீது பொறாமையும் வன்மமும் வகைத்தொகை இல்லாமல் கூடிப்போனது.
அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது.
என்றாவது ஒருநாள் அவனை நேருக்கு நேர் சந்தித்தே தீர வேண்டும் என்ற அகங்காரமும் பிறக்க, அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது அந்த களமே படுகளமாக மாறப்போவதும், வீராவின் முழு பராக்கிரமத்தையும் அன்று தான் அவன் பார்க்கப் போகிறான் என்றும் இவை எல்லாவற்றையும் விட அதுதான் அவன் இந்த பூமியில் வாழப் போகும் கடைசி நாளாக அமைய போகிறது என்றும் அறியாமலே, ஏதேதோ திட்டமிட்டபடி களைத்துப் போய் கண்ணயர்ந்து போனான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஊட்டியில் விடிய விடிய உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் மஹிக்கா.
பிறந்ததிலிருந்து நினைத்ததை நடத்திக் காட்டியே பழகியவளுக்கு முதல் திருமண வாழ்க்கை ஏமாற்றத்தை கொடுத்ததென்றால் மறுமணத்திற்காக ராம்சரணை பல வகையில் அணுகியும் அதிலும் ஏமாற்றங்களே கிட்ட, செய்வதறியாது திணறி போனாள்.
எவ்வளவு முயன்றும் நித்திரை பிடிப்படாமல் முன் தினம் மாலையில் ராம் சரணை திறந்தவெளி நட்சத்திர உணவகத்தில் சந்தித்து பேசியது , அவள் கண் முன்னே தாண்டவம் ஆடி தலைவலியை கொடுக்க படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தவள், மீண்டும் அதை அசைபோட்டு பார்க்கத் தொடங்கினாள்.
அழகான ஊதா நிற ஷிபான் புடவையில், ராம் சரணுக்காக அந்த நட்சத்திர திறந்தவெளி உணவகத்தில் காத்துக் கொண்டிருந்தாள்.
அவனிடம் பேசவிருப்பது அதி முக்கிய அந்தரங்க சமாச்சாரம் என்பதால், ஜனரஞ்சகமான இடத்தை கடந்து, போகய்ன் வில்லா மற்றும் ரோஜா செடிகள் சூழ்ந்திருந்த சற்று தனிமையான பகுதியை தேர்வு செய்திருந்தாள்.
ராம்சரண் வருவதற்குள், தனித்து மற்றும் குடும்பத்தோடு வந்திருந்த பல ஆண்களின் பார்வை அவள் மீது ஒருவித ஆர்வத்தோடு படர, லேசான பெருமையோடும் கர்வத்தோடும் அதனை காணாதது போல் இருந்தாள்.
ராம் சரணுக்கு ஒப்பான சிவந்த நிறம், குற்றம் குறை சொல்ல முடியாத முக அமைப்பு, சற்று பூசியது போலான அழகான உடல்வாகு, படிப்பும் பதவியும் கொடுத்த தோரணை என சகல விதமான சாமுத்திரிகா லட்சணங்களில் தேர்ச்சி அடைந்திருந்தவளை ஏதோ தேவையற்ற சக்கையை பார்ப்பது போல் பார்த்தபடி வந்தமர்ந்த ராம்சரண்
"சொல்லு .... ஏதோ சொல்லணும்னு சொன்னையே ..." என்றான் எடுத்த எடுப்பில்.
அடர் நீல நிற ஸ்டோன் சட்டை , வெளிர் நீல நிற ஜீன்ஸில் , அடர்ந்த சிகை அசைய கம்பீரமாக கேட்டவனை ரசித்துப் பார்த்தவள்
"அது.... அது வந்து ..... அ.... நான் இப்ப பேசப்போற விஷயத்துக்கு எல்லா ஏற்பாட்டையும் செஞ்சி வச்சிட்டு தான் வந்திருக்கேன் .... நீங்க சரின்னு சொன்னா போதும் ..." என்ற பீடிகையோடு அவள் தொடங்க,
" என்னன்னு மொதல்ல சொல்லு ..."
என்றான் வேண்டா வெறுப்பாக.
"நீங்க லாஸ்ட் டைம் பேசும் போது ஒரு விஷயம் சொன்னீங்க .... நான் ஒன்னும் ஸ்பெர்ம் டோனர் இல்ல.... உனக்கு குழந்தை வேணுங்கிறதுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கன்னு... இப்ப அத பத்தி பேச தான் வந்திருக்கேன்.... நான் பார்த்த சரியான, உண்மையான ஆம்பள நீங்க மட்டும் தான் .... எவ்வளவோ முயற்சி பண்ணாலும் உங்களைத் தவிர வேறு யாரையும் எனக்கு பிடிக்க மாட்டேங்குது .... உங்களோட வாழற அதிர்ஷ்டம் தான் எனக்கு கிடைக்கல.... உங்க குழந்தையை சுமக்கிற சந்தோஷமாவது வேணும்னு கேட்க வந்திருக்கேன் .... என் ஃப்ரெண்ட் எக்ஸ்பீரியன்ஸ்ட் கைனகாலஜிஸ்ட்...... ஃபெர்ட்டிலிட்டி கிளினிக்..... ....... ." என அவள் பேசிக் கொண்டே செல்ல, அவள் சொல்ல போவதை சரியாகப் புரிந்து கொண்டவன்
" பொது இடம்னு பார்க்க மாட்டேன் அடிச்சு பல்ல பேத்துடுவேன் .... நீ கேட்கிறது எவ்ளோ அசிங்கமான விஷயம் தெரியுமா..." என்றான் வெஞ்சினத்தோடு.
"லிசன் சரண் ... இது சயின்ஸ் ..." என அவள் விளக்கம் கொடுக்க விழையும் போது
" நீ சொல்றது சயின்ஸ் இல்ல சாக்கடை .... உலகத்துலயே நான் தான் கடைசி ஆம்பளங்கிற நிலைமை வந்தாலும் இதை நான் செய்ய மாட்டேன் .... வேற யாருக்காச்சும் என் லட்சுமி இப்படி குழந்தை பெத்து கொடுத்தா எப்படி என்னால ஏத்துக்க முடியாதோ அது மாதிரி தான் இதுவும் ... என்னோட லிவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருந்து குழந்தை பெத்துகிறதுக்கும் , ஆர்ட்டிஃபிஷியல் இன்ஸெமினேஷன்ல என் குழந்தைய பெத்துக்கிறதுக்கும் வித்தியாசம் அதிகம் இல்ல... இரண்டுமே என் லட்சுமிக்கு பண்ற துரோகமா தான் பார்க்கறேன்... " என்று விடாமல் படபடத்தவன், ஒரு கணம் நிறுத்தி அவள் முகத்தை உற்று நோக்கி,
" எந்த ஒரு நல்ல பொண்ணும், கல்யாணமான ஆம்பள பின்னாடி சுத்த மாட்டா.... அதுவும் வேணாம்னு விலகி போறவனை வலுக்கட்டாயமா துரத்தமாட்டா .... பச்சையா சொன்னா நீ செஞ்சுகிட்டு இருக்கிறதுக்கு வேற பேரு .... நான் நல்ல குடும்பத்துல பொறந்ததால அந்த வார்த்தைய செல்ல கூச்சப்படறேன் .... அடுத்த முறை இப்படி ஏதாச்சும் செஞ்ச ... அசிங்கப்பட்டு போவ..."
பொரிந்து தள்ளிவிட்டு வேகமாக கிளம்பும் போது , அவன் கைப்பேசி சிணுங்க,
"சொல்லு லட்சுமி .... ஆன் தி வே மா.... இன்னும் 20 மினிட்ஸ்ல வந்துடுவேன் ..." என்றபடி அவன் அலைபேசியில் பேசிக்கொண்டே விலகி நடக்க, பார்த்துக் கொண்டிருந்தவளின் ரத்தம் ஏகத்துக்கும் கொந்தளித்தது.
லட்சுமி... லட்சுமி... லட்சுமி .... பெருசா படிப்பும் இல்ல பதவியும் இல்ல... ஆள அசத்துற நிறமும் இல்ல... அப்படி என்ன தான் அவகிட்ட இருக்கோ....
என மஹிக்கா சென்றவனையே பார்த்து உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் போது, " எக்ஸ்கியூஸ் மீ ...." என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள், ரங்கசாமி நின்று கொண்டிருந்தார் .
ராம் சரணின் சாயல் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிய , அதிர்ச்சியில் நாவெழாமல் உறைந்து நின்றவளிடம் ,
"நான் ராம்சரணோட அப்பா மா ..... இங்க ஒரு பிசினஸ் மீட்டிங்க்காக வந்திருந்தேன் ... நீயும் சரணும் ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்ததை பார்த்தேன் .... மொதல்ல என் மகன் ஏதோ தப்பு பண்றான்னோனு பயந்தே போயிட்டேன் .... அப்புறம் தான் தெரிஞ்சது அவன் உன்கிட்ட கோவத்துல பேசிக்கிட்டு இருக்கான்னு....
நீ அவன்கிட்ட என்ன கேட்ட... அவன் உன்கிட்ட என்ன சொன்னானு எனக்கு தெரியாது .... ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், என் மருமக இப்ப இரண்டாவது முறையா முழுகாம இருக்கா... ரெட்டை குழந்தை பொறக்க போகுது .... இப்பதான் என் மகனும் மருமகளும், அவங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சிருக்காங்க .... அத கெடுத்துடாதம்மா .... "
தொலைவிலிருந்து பார்த்தே, நடந்ததை ஓர் அளவிற்கு கணித்து தன் மகன் மருமகளுக்கு சாதகமாக அவர் பேசுவதை கண்டு , உள்ளுக்குள் பொங்கியவள், அதை கண்களில் தேக்கி மௌனியாக பார்க்க,
"தப்பு பண்றம்மா .... திருத்திக்கனு சொன்னா கோவத்துல என்னை முறைக்கிற .... உனக்கு என் பையன பத்தி தெரியாது ....அவன் பேர் தான் ராம்சரண் .... ஆனா கோவத்துல அவன் லட்சுமணன் .... இனிமே அவன் விஷயத்துல தலையிட்ட சூர்ப்பனகை மூக்க அறுத்த மாறி ,அறுத்துட்டு போய்கிட்டே இருப்பான் .... ஜாக்கிரதை ..." என்றவர் விறு விறுவென்று விலகி நடக்க, உறைந்து நின்றாள்.
நடந்த அனைத்தையும் ஓட்டிப் பார்த்தவளுக்கு லட்சுமி, ராம்சரண், ரங்கசாமி மீது வகைத்தொகையற்ற வன்மம் கூட,
"சரண், என்னை பார்த்து விபச்சாரின்னு சொல்லாம சொல்லிட்ட இல்ல ... எப்ப நீ என்னை நல்ல பொம்பளை இல்லன்னு சொன்னியோ, இனிமே உன் விஷயத்துல நல்லவளா இருந்து பிரயோஜனம் இல்ல, கூடிய சீக்கிரம் நான் யாருனு காட்டறேன்..."
என உள்ளுக்குள் பொறுமிய படி, உறங்க முயற்சித்தாள்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
Super mam
ReplyDeleteThanks ma
Deleteinteresting 💕💕💕💕💕💕
ReplyDeleteThanks ma
DeleteNice sis. Rendu perum stories intha ud la potutinga. Very very interesting. Waiting for next ud
ReplyDeleteThanks a lot ma...
DeleteAdutha kudumbathtai kedukka Inga niraiya Peru irukanga,,, raana vum, mahikka vum oru sample than,,, kadavul irukaan kumaru,,,
ReplyDeleteWell said ma...thanks dr
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete