அத்தியாயம் 113
அரவம் கேட்டு தலை திரும்பிப் பார்த்த ரிஷி, ராம் சரணை கண்டதும், கண நேரத்தில் அதிர்ச்சி ரேகைகளை வெளிப்படுத்திவிட்டு பின் சுதாரித்து இயல்பு நிலைக்குத் திரும்ப,
"என்ன விஷயமா வந்திருக்கீங்க ..."
என்றான் ராம்சரண் தீவிரமாய் , அவன் முகமாற்றத்தை முழுவதுமாய் உள்வாங்கிக் கொண்டே.
"டீ..... டீலர்ஷிப் விஷயமா பேச வந்தேன்..."
"ஓ.... ஓகே .... இதுக்கு முன்னாடி யாரோட பார்ட்னர்ஷிப்ல இருந்தீங்க ....." வேண்டுமென்றே குரலில் கடுகடுப்பைக் கூட்டி ராம்சரண் வினவ ,
"இல்ல.... இதுதான் ஃபர்ஸ்ட் டைம் ..... நான் இந்த பிசினஸ்க்கு புதுசு .... உங்க ப்ராடக்ட்ஸ் எல்லாம் தரமா இருக்கும்ன்னு கேள்விப்பட்டேன் .... அதான் ... பார்த்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம்னு ...." என்றவனின் பார்வை மின்னல் வேகத்தில் லட்சுமியை தொட்டுச் செல்ல, குமுறிப்போன ராம்சரண்,
"ஃபர்ஸ்ட் டைம் அக்ரீமெண்ட் போடணும்னா அப்பா கிட்ட தான் பேசணும் ... நாளைக்கு வாங்க அப்பா இருப்பாரு .... " என வார்த்தைகளை கடித்து துப்பினான் .
ராம் சரணை காணொளி மற்றும் புகைப்படத்தில் பார்த்திருந்ததால் ரிஷிக்கு அவன் முகம் பரிச்சியம்.
ஆனால் ரிஷி என்ற கதாபாத்திரத்தையே இப்பொழுது தான் பார்க்கிறான் ராம்சரண் .
ரிஷியின் முகத்தில் தென்பட்ட திடீர் அதிர்வு, அதற்கு முன்னதாக அவன் லட்சுமியிடம் வழிந்து பேசிய பாங்கு, போன்றவை அவன் வியாபாரம் பேச வரவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்க, அவன் பெயரைக் கூட கேட்காமல், வேறு எந்த விபரத்தையும் அறிந்து கொள்ளாமல் அவனை வெளியேற்றும் நோக்கத்திலேயே அவ்வாறு பேசி முடித்தான் ராம்சரண்.
ஆனால் ரிஷியோ , ராம்சரண் நடந்து கொண்ட முறையை வைத்து, அவனை சந்தேகப் பேர்வழி, முரடன், கொடுமைக்காரன் என்றெல்லாம் மனதிற்குள் வகைத்தொகை இல்லாமல் வசை பாடி தீர்க்கத் தொடங்கினான் .
மனைவியை வேவு பார்க்கவும் அவளை தன்னிச்சையாக செயல்பட விடாமல்,
அனைத்திலும் மூக்கை நுழைத்து முட்டுக்கட்டை போடவும் தான் , என்றுமே வராதவன் இன்று உடன் வந்திருக்கிறான்...
கடைநிலை ஊழியர் போல் இந்த நிலையிலும் வகைத்தொகை இல்லாமல் அவளை வேலை வாங்குகிறான் ... ஆனால் வியாபாரத்தின் முக்கிய முடிவுகளை மட்டும் இவன் தந்தை தான் எடுப்பாராம் ....
என்ன நியாயம் இது .... ஓய்வெடுக்க வேண்டிய நிலையில் இருப்பவளுக்கு ஓய்வை கொடுக்காமல் பல விதங்களிலும் பாடாய்படுத்தி எடுக்கிறான் படுபாவி .....
இனி பொறுத்து பிரயோஜனம் இல்லை ...
காரணம் எதுவாகிலும் தேடி அறிந்து அதற்குத் தீர்வு கண்டு சூழ்நிலை கைதியாக இந்த ராட்சசனிடம் சிக்கி இருக்கும் என்னவளை கூடிய விரைவில் இச்சிறையில் இருந்து மீட்டெடுத்தே தீருவேன் ...
என மானசீகமாக சூளுரைத்துக் கொண்ட அந்த அதிபுத்திசாலிக்கு தெரியவில்லை, தன் இணையிடம் காட்டும் காதலானது மனிதனுக்கு மனிதன் அவரவர் சுபாவங்களின் அடிப்படையில் வேறுபடும் என்று ...
சிலரின் காதல் அமைதியாய் இருக்கும் ....
சிலரின் காதல் அன்பொழுகப் பேசும் ...
சிலரின் காதல் அதிரடியாய் இருக்கும் ....
சிலரின் காதல் ஹாசியத்தோடு வெளிப்படும்...
இப்படித்தான் காதல் புரிய வேண்டும் என்று எந்த ஒரு சூத்திரமும்,
இதுவரையில் வரையறுக்கப்படவில்லை என்றறியாமல் , தன் மனைவி மீது இருக்கும் தீரா காதலால் , அவளைப் பிற ஆண்மகன் உற்று நோக்குவதை கூட விரும்பாமல் ராம்சரண் அவனிடம் காட்டிய கடுமையை, ராம்சரணின் சந்தேக குணமாகவே கருதி ,
மனைவியை சந்தேகிக்கிறான், கொடுமைப்படுத்துகிறான், என்றெல்லாம் தனக்குச் சாதகமாக எண்ணிக்கொண்டு
"ஓகே, ஐ வில் கம் டுமாரோ .... டேக் கேர் லக்ஷ்மி ...." என்று கடைசி வரியில் வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்துவிட்டு, தன் பி எம் டபிள்யூ காரை நோக்கி அவன் செல்ல, குழப்பத்தோடு லட்சுமியை பார்த்தான் ராம்சரண்.
ரிஷியை கண்ட மாத்திரத்தில் லட்சுமியின் மனதில் அபாய ஆலாரம் அடிக்கவே செய்தது.
அன்றைய சூழ்நிலையில் அவள் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருப்பதை அறிந்துகொண்டு அவனும் அவன் தாயும்
மறுமணத்தை பற்றி பேச, அந்தக் கணமே அதனை மறுத்ததோடு, பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு இடமும் பெயர்ந்து விட்டாள்.
அதோடு அனைத்தும் முடிந்து விட்டதாக, எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு
வியாபாரம் பேச வந்திருப்பதாக காட்டிக் கொண்டு, மீண்டும் அவளை தேடி வந்ததே அவன் தீவிரத்தை சொல்லாமல் சொல்ல, இதற்கு மேல் அமைதி காப்பது நல்லதல்ல என முடிவெடுத்து, ரிஷியின் அண்ணன் மகள் அக்கான்ஷாவின் முன் கதை சுருக்கத்திலிருந்து தொடங்கி, பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அவள் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்ததை அறிந்துக்கொண்டு அவளை தங்கள் வீட்டிற்கே அழைத்து தாயும் மகனும் மறுமணம் பேசியது, அதற்கு அவள் மறுப்பு தெரிவித்தது வரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன்னவனிடம் சிறு தயக்கத்தோடு சொல்லி முடித்தாள்.
கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம், கோபத்தில் குருதிப்புனலாய் பளபளக்க,
"ஏன் ஒரு மாறி இருக்கீங்க .... என் மேல கோவமா ...." என்றாள் அச்சத்தோடு அவன் முகம் பார்த்து.
அவனோ அவள் பார்வையை தவிர்க்க, ஓரிரு கணம் அமைதி காத்தவள்
"என் மேல .... என்னை ... ச.... சந்தேகப்படறீங்களா.... "
என தடுமாறி முடித்தாள் ஒரு வித பயத்தோடு.
அதைக் கேட்டதும், திரும்பி அவள் முகம் பார்த்தவன் ,
"உன் மேல கோவம் இல்லனு சொல்ல மாட்டேன் .....நிறைய கோவம் இருக்கு .... ஏன் வருத்தம் கூட இருக்கு ... ஆனா என்னைக்குமே சந்தேகம் வந்ததில்ல... வரவும் வராது ...." என தீர்க்கமாக சொல்லி முடிக்க, அதுவரை சோர்ந்திருந்தவளின் முகத்தில் மின்னல் வெட்டாய் வெளிச்சம் விரவ ,
" ஏன் ...." என்றாள் ஆச்சரியமாய்.
அவன் மௌனியாய் அவள் முகத்தையே மென்பார்வை பார்க்க, அதன் அர்த்தம் விளங்காதவள்
"நீங்கனு இல்ல ... யாராயிருந்தாலும் இதையெல்லாம் கேட்டதுக்கு அப்புறம் நிச்சயம் என்னை சந்தேகப்படுவாங்க .... ஏன்னா அதுக்கான எல்லா முகாந்திரமும் இருக்கு ....
உங்க வீட்டை விட்டு போனதுக்கு அப்புறம், மூணு மாசமாயும் நீங்க கண்டுக்கலன்னதும் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினவ நான் ...
நீங்க என்னை தேடி வந்து பேசினதுக்கு அப்புறம் கூட டிவோர்ஸ் வேணும்னு ஸ்ட்ராங்கா சொன்னவ நான் ....
இதையெல்லாம் விட குழந்தை உண்டா இருக்கேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட உங்ககிட்ட சொல்லாம கலைக்க பார்த்தவ நான்.....
கடைசில
ஸ்ரீனி வீட்டுல உங்க அப்பா, உங்க பிரெண்ட்ஸ் முன்னாடி, நீங்க எவ்ளோ கன்சோல் பண்ணியும் கேட்காம,
டிவோர்ஸ் வேணும்னு ஒத்த கால்ல நின்னு
உங்கள சைன் பண்ண வச்சவ நான்....
இப்படி எல்லாம் நான் நடந்துக்கிட்டதுக்கு அடிப்படை காரணம், இந்த ரிஷியா கூட இருக்கலாம்னு உங்களுக்கு தோணவே இல்லையா ... " என்றாள் அவனை தீட்சண்யமாய் பார்த்து.
"சத்தியமா தோணல.... தோணவும் தோணாது.....ராமலட்சுமியை பத்தி அருணா தப்பா சொன்னதால தான் நடக்க இருந்த ராமலட்சுமியோட கல்யாணம் நின்னு போச்சுன்னு அருணாவோட சண்டை போட்டுட்டு நீ வீட்டை விட்டுப் போனதா,
என் அம்மாவும் அருணாவும் சொன்னப்ப நம்பினேன்.... நான் ஊருக்கு போகும் போது அவ்ளோ சொல்லிட்டு போயும் இப்படி பண்ணிட்டயேனு உன் மேல கோவபட்டேன் .... ஸ்ரீனி வீட்டுல எவ்வளவோ எடுத்து செல்லியும் நீ கேட்காம அடம் பிடிக்கும் போது உன் மேல ஆத்திரப்பட்டேன் .... அதுக்கு மேல வேற வழி இல்லாம டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணி கொடுத்துட்டு வந்ததுக்கு அப்புறம் கூட அந்த கோவம் அப்படியே தான் இருந்துச்சு ....
ஆனா ஒரு கட்டத்துல, நான் உன்னை சரியா புரிஞ்சுக்கலையோனு தோண ஆரம்பிச்சது ... தொட்டதுக்கெல்லாம் கோவப்படற கேரக்டர் நீ கிடையாது .... ரொம்ப பொறுப்பானவ... பொறுமையானவ... அப்படிப்பட்டவ ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு யோசிக்க ஆரம்பிச்சேன் ... ஏதோ தப்புனு தோணுச்சு .... உடனே என் வேலைய விட்டுட்டு, ஊட்டில ஃப்ரெண்டோட கம்பெனில பார்ட்னரா ஜாயின் பண்ணிட்டு உன்னை பார்க்க வந்தேன் .... அப்ப உன் கண்ணுல தெரிஞ்ச காதல இப்ப வரைக்கும் என்னால மறக்கவே முடியாது .... இங்க வந்ததுக்கப்புறம் என் இன்டியூஷன் சொன்னதும் 100 சதவீதம் சரின்னு புரிஞ்சுகிட்டேன் ....."
"எப்படி எப்படி ...." என்றாள் பெண் ஆச்சரியமும் ஆர்வமுமாய்.
"அப்புறம் சொல்றேன் ..... ஆனா ஒன்னு மட்டும் சத்தியம் .... உன் மேல கோவம் இருக்கு... வருத்தம் இருக்கு... எதிர் காலத்துல உன் மேல 100% கோவப்பட வாய்ப்பும் இருக்கு ..... ஆனா எந்த காலத்துலயும் எந்த சூழ்நிலையிலயும் உன்னை சந்தேகம் மட்டும் படவே மாட்டேன்..... "
அவள் வியப்பாய் அவனை நோக்க ,
"உன்னை தனியா யாரோ ஒரு ஆம்பளையோட பார்க்க வேண்டிய நிலை வந்தாலும் அந்த சூழ்நிலையை ஆராய்வேனே ஒழிய , உன்னை தப்பா நினைக்க மாட்டேன் ... இவ்ளோ ஏன் கடவுளே வந்து சாட்சி சொன்னாலும் கடவுள் ஏன் பொய் சொல்றாருன்னு தான் யோசிப்பேனே ஒழிய உன்னை சந்தேகப்பட மாட்டேன் லட்சுமி ..."
என்றவன் ஓரிரு கணத்திற்கு பிறகு,
"என் கோவம் எல்லாம், இப்ப வந்துட்டு போனானே அவன் மேல தான் ....
ஒரு பொண்ணு தனக்கு விருப்பமில்லனு சொல்லியும், இவ்ளோ மாசம் கழிச்சு அவளை தேடி வந்து, வியாபாரம் பேச வந்திருக்கேன்னு பொய் சொல்லி மீட் பண்ணி பேசுறதெல்லாம் எவ்ளோ பெரிய அயோக்கியத்தனம் ....
இவனுக்கெல்லாம் அறிவே கிடையாதா ....
யூஸ்லெஸ் ஃபெல்லோ.... அடுத்த முறை வரட்டும் அவனுக்கு இருக்குது ... " என அவன் ரிஷியை வகை தொகை இல்லாமல் வசை பாடிக் கொண்டே செல்ல, கேட்டுக் கொண்டிருந்தவளின் மனதிலோ
"கடவுளே வந்து சாட்சி சொன்னாலும் உன்னை சந்தேகப்பட மாட்டேன் ...."
என்ற வரி மீண்டும் மீண்டும் எதிரொளித்துக் கொண்டே இருக்க, இத்துணை நாள் தூக்கிச் சுமந்த பெரும் பாரத்தை இறக்கி வைத்த நிறைவை அது கொடுக்க, ஆனந்தக் கண்ணீர் அலை அலையாய் வடிந்த நிலையில் அவனைத் தாவி அணைத்துக் கொண்டு முத்தமிட முனைய, அவளது பெருத்த வயிறு அவனை சரியாக நெருங்க முடியாமல் தடுக்க,
"ஏய் ...ய்...லட்சுமி .... உனக்கு என்ன.... இப்ப என்னை கிஸ் பண்ணனும் அவ்ளோ தானே ..... அதுக்கு ஏன் குழந்தைகளை டிஸ்டர்ப் பண்ற ... நானே உன்னை கிஸ் பண்றேன் ...." என புன்னகையோடு குனிந்து
அவள் முகம் எங்கும் முத்தமிட்டு விட்டு அவளை பின்புறமாக கட்டியணைத்துக் கொண்டவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்து போனது.
அவளது அன்பும் அணைப்பும் , ரிஷி குறித்து அவள் பகிர்ந்தவைகளுக்கு
அவன் கொடுத்த பதிலுக்கானது அல்ல...
அவளது மன கடிகாரம் அருணா அடித்த ஆடிய அந்த அருவருப்பான இரவோடே தேங்கி விட்டதால், அவனுடைய புரிதலான பேச்சை அன்றிரவு நடந்த அசிங்கத்திற்கான பதிலாகவே ஏற்றுக்கொண்டு மனம் மகிழ்கிறாள் எனப் புரிந்து கொண்டான் .
உன் மேல எந்த சூழ்நிலையிலயும் சந்தேகமே வராது .....
என்ற வார்த்தை அவள் கண்களில் வரவழைத்த கண்ணீர், இத்துணை நாட்களாக அவள் தூக்கி சுமந்திருந்த மனக்கலேசத்தை சொல்லாமல் சொன்னதோடு அருணா அன்றிரவு அரங்கேற்றிய அசிங்கத்தை விட , அதனை அறிய நேர்கையில் எங்கு தன்னவனும் அதை நம்பி விடுவானோ என்றவள் அஞ்சி துடித்திருக்கிறாள், என்பதை உணர்ந்தவனுக்கு
1+1 =2 என ஏறக்குறைய அருணாவின் சதி திட்டம் புரிய வர, அவளை அக்கணமே கொன்று போடும் அளவிற்கு கோபத்தில் கொந்தளித்துப் போனான் காளை.
அருணாவின் முகத்திரை கிழிக்கப்படும் நேரத்தில் , லட்சுமி சாட்சிக்காக மட்டுமல்லாமல் சம்பவத்தையும் அருகிருந்து காண வேண்டும் என்பதற்காகத்தான், ஓரளவிற்கு உண்மையை ஊகித்த நிலையில் கூட , அவளின் தற்போதைய உடல் நிலையை கருத்தில் கொண்டு குழந்தை பிறப்பிற்கு பிறகு செயலில் இறங்கலாம் என்று தள்ளி போட்டிருந்தான் ...
ஆனால் குறுக்கெழுத்துப் போட்டி போல், கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனையை அறிய நேர்கையில் இன்னும் ஒன்றரை மாத காலம் வரை தாக்குப் பிடிப்பது என்பது இயலாத காரியம் என அவன் மனம் அடித்துச் சொல்ல,
முடிவெடுக்க முடியாமல் திணறிப் போனான் , அதற்கான சந்தர்ப்பம் கூடிய விரைவில் அமையவிருப்பதை அறியாமல்.
அதன் பின் சற்று நேரம் அங்கு அளவளாவி விட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு மனையாளுடன் வீடு திரும்பியவன், மதிய உணவிற்கு பிறகு, அலுவலகம் புறப்பட்டுச் சென்றான்.
அங்கு அவனது வரவிற்காக காலையிலிருந்து வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் மஹிக்கா.
அவனைக் கண்டதும் துள்ளி குதிக்காத குறையாய் நெருங்கியவள்,
"ராம் சரண், உங்ககிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும் ...."
என்றாள் கண்களில் ஆர்வம் இதழ்களில் தயக்கமுமாய்.
"என்ன சொல்லணும் சொல்லு ....." என்றான் சுரத்தே இல்லாமல்.
"அத இங்க பேச முடியாது .... நாளைக்கு ஈவினிங் ரோஸ் கார்டன் ரெஸ்டாரண்டுக்கு வந்துடுங்க ... அங்க சொல்றேன் ..."
"லிசன் மஹிக்கா .... உன்னோட வெட்டியா கதை பேசற அளவுக்கு எனக்கு நேரமில்ல....
எது சொல்லணும்னாலும் இங்கயே சொல்லு..."
"ஏன்... என்னோட தனியா வந்தா உங்க மனசு மாறிடும்னு பயமா இருக்கா ..."
"ம்ச்.... ஓ காட் .... வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ..."
"நான் வேலையை விட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் .... அதுக்கு முன்னாடி உங்களோட கொஞ்சம் பேசணும் ...
நாளைக்கு நான் ஆபீஸ்க்கு லீவு ....
நீங்க ஒரு ஆறு மணிக்கு கார்டன் ரெஸ்டாரண்டுக்கு வந்தீங்கன்னா, நான் பேச வேண்டியதை பத்தே நிமிஷத்துல பேசிடுவேன் ... அதுக்கு மேல நான் எப்பவுமே உங்கள டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன் .... ப்ளீஸ் ..."
அவளது தொந்தரவுக்கு முடிவு கட்ட வேறு வழி இல்லாமல், அதற்கு தலையசைத்து சம்மதம் சொன்னான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடுத்த நாள் காலை வழக்கம் போல் விடிந்தது.
முன்தினம் அலுவலகத்தில் நடந்துவைகளை ஸ்ரீ பகிர்ந்து கொண்டே சமைக்க, கேட்டுக் கொண்டே தன்னாலான சிறு சிறு உதவிகளை வீரா செய்ய, உணவு சமைக்கும் பணி மளமள வென்று நிறைவுற்றது.
காலை உணவை இருவருமாய் உண்டு முடிக்கும் போது, முந்தைய தினத்தை விட சற்று தாமதமாகி விட, துரிதமாக தன்னவளை அவள் அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு, வீரா தன் அலுவலகம் நோக்கி பயணப்பட்டான்.
ஓட்டமும் நடையுமாய் அலுவலக வளாகத்திற்குள் வந்தவள் அவசர அவசரமாய் மின்தூக்கியில் நுழைய, ராணாவும் திலக்கும் அவளுக்காகவே காத்துக் கொண்டிருந்ததால் அடுத்த கணமே அவளைப் பின்தொடர்ந்தனர்.
காலதாமதமானதால் , வேறு ஊழியர்கள் இல்லாமல் அங்கு அவர்கள் மூவர் மட்டுமே இருக்க, ஐந்தாம் எண் பொத்தானை அழுத்திய ராணா ஸ்ரீயை பார்த்து
"நீங்க ..." என்றதும் புரிந்து கொண்டு
"தர்ட் ஃப்ளோர் ...." என்றவள் தன் பார்வையை கைபேசிக்கு மாற்ற, அவனோ அவள் மீதே பார்வையை பதித்தபடி உறைந்து நின்றான் .
இம்மை மறுமைகளில் நம்பிக்கை இல்லாதவனுக்கு, நம்பிக்கையூட்டும் விதமாக அவன் மதுஸ்ரீயாகவே அவள் காட்சியளிக்க,
கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அவளைக் காண தவம் கிடந்தவனுக்கு ஜென்ம சாபல்யம் அடைந்த நிறைவைப் பெற்றான்.
அவளை அவ்வளவு நெருக்கத்தில் காண காண, அவன் உணர்வுகளில் ஆக்ஸிடோசின், டோபோமைன், செரோட்டோனின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் உற்சாகமாய் ஊற்றெடுக்க கால கடிகாரம் பின்னோக்கி பயணித்து 24 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு போய் நிறுத்த, 21 வயது விடலையாய் உணர ஆரம்பித்தான்.
அவளோ , உடன் பயணித்தவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் புதிதாய் கால் பதித்திருக்கும் இப்ப புதிய பதவியில், திறம்பட செயல்பட்டு நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அலைபேசியில் மூழ்கி இருக்க, திலக் இருவரின் முக பாவங்களையும் ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருக்கும் போதே மின் தூக்கி தரை தட்டியது.
கதவு திறந்ததும், அவள் வெளியேற,
அப்போது மின் தூக்கியில் நுழைய காத்திருந்த சிலர், உள்ளே ராணாவை கண்டதும் உறைந்து நிற்க, மறுகணமே திலக் பொத்தானை அழுத்த மின்தூக்கியின் கதவு மூடியது.
அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆன ராணா முதன்முறையாக, நிறுவன ஊழியர்கள் பயன்படுத்தும் மின் தூக்கியில் பயணித்திருப்பது, அங்கிருந்த ஊழியர்களுக்கு வியப்பை கொடுத்திருக்க
உடன் பயணித்து வெளியேறியவளோ , எதையும் கண்டுகொள்ளாமல்
கருமமே கண்ணாக முன் தினம் அறிமுகமான நண்பர்களை தேடி தன் ODCக்குள் நுழைந்தாள்.
அவள் ராணாவை அறிந்திருந்தால் தானே,
அவனது செயல்பாடுகளையும் அறிந்திருக்க முடியும்.
அது மட்டுமல்ல, அவன் தான் அந்த நிறுவனத்தின் சிஇஓ .... 45 வயதானவன் என்று அறிமுகப்படுத்தி சொன்னாலே, புதியவர்கள் நம்புவது சற்று சிரமம் தான்.
ஏனென்றால் நல்ல உயரம், சற்றே பூசிய உடல்வாகு, வெகு லேசான தொப்பை,
அடர்ந்த சிகை, லேசான மீசையோடு பளபளக்கும் முகச்சருமம் ... என
பார்ப்பதற்கு 35 வயது போல் தெரிபவனை,
அந்த நிறுவனத்தின் தலைமை என்று அறிந்தவர்களை தவிர மற்றவர்களால் அனு மானிக்க கூட முடியாத நிலை என்னும் போது, அவன் முகத்தைக் கூட பார்க்காத
ஸ்ரீப்ரியாவை பற்றி சொல்லவே வேண்டாம் .
'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல், குழு உறுப்பினர்களின் அறிமுகங்கள் , அவளுக்கு வழங்கப்படவிருக்கும் பொறுப்புகள், அதில் புதிதாய் கற்றுக் கொள்ளப் போகும் விஷயங்கள் என அவள் எண்ணங்கள் முழுவதும் திட்ட வரைவை குறித்தே இருந்ததால் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த எதுவும் அஅவள் கவனத்தை கவரவில்லை.
மின் தூக்கியை விட்டு துள்ளி குதித்து வெளியேறி உற்சாகமாய் தன் அறைக்குள் நுழைந்த ராணா சுழல் நாற்காலியில் அமர்ந்துகொண்டு நீண்ட சீட்டி ஒன்று அடிக்க ,
"என்ன ராணா .... டீன் ஏஜ் பையன் மாதிரி பிஹேவ் பண்ற .... உனக்கே ஒரு டீன் ஏஜ் பையன் இருக்கான் நெனப்பு இருக்கட்டும் ...." என்ற திலக் உடனே
"ஆமா எதுக்காக உன் ஆபீஸ் ரூம், மேனேஜ்மென்ட் டிரெய்னிங் டீமை எல்லாம்
ஹெட் ஆஃபீஸ்ல இருந்து இங்க மாத்த சொன்ன...." என்றான் புரியாமல்.
"இனிமே இதுதான் ஹெட் ஆபீஸ் .... இங்க தான் நான், என் மேனேஜ்மென்ட் டிரெய்னிங் டீம் எல்லாரும் வொர்க் பண்ண போறோம் ..."
"இதையெல்லாம் நீ அந்த ஸ்ரீப்ரியாவுக்காக பண்றேன்னு நல்லா தெரியுது .... ஆனா அவ ஒரு ஆர்க்கிடெக்ட் .... நீ ஹெட் ஆஃபீஸ்ல இருந்து மேனேஜ்மென்ட் டிரெய்னிங் டீமை கொண்டு வந்தாலும் அவளுக்கும் மேனேஜ்மென்ட் டீமுக்கும் சம்பந்தமே கிடையாது அதனால அவ இந்த ஃப்ளோருக்கு வரவும் முடியாது... பின்ன எதுக்கு தேவையில்லாம இதையெல்லாம் செய்யற ...."
"கோட்டை தாண்டி வரச் சொல்லி தான், சீதாவை தூக்கினான் அந்த ராவணன் ...
கோவிச்சுக்கிட்டு தானா வரப்போற என் ஸ்ரீயை தூக்க போறான் இந்த ராணா...
பொறுத்திருந்து பார் ... " என உல்லாசமாக மொழிந்தவனை தீ பார்வை பார்த்த திலக்,
"ராவணனோட நிலைமை கடைசியில என்ன ஆச்சுன்னு தெரியுமில்ல.... திரும்பவும் சொல்றேன் தேவை இல்லாம அந்த பொண்ணு விஷயத்துல தலையிடாதே ... உனக்கு நல்லதில்ல ராணா..." என கோபத்தில் கடுகடுத்ததும், உடனே சுதாரித்தவன்,
" ம்ச்... திலக்... சும்மா ஒரு ஃப்லோக்காக சொன்னேன் டா .... இதுக்கு போய் பாடம் எடுக்கற ... அவள பக்கத்துல வச்சு பாத்துக்கிட்டே இருக்கணுங்கிறது தான் என்னோட ஆசை... மத்தபடி வேற எதுவும் தப்பான எண்ணம் எல்லாம் கிடையாது டா ...." என நயந்து நடித்தான் அந்த அசுரன்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....
Super mam
ReplyDeletethanks a lot ma
DeleteAntha Sri ya ram purivhikittan,,,,
ReplyDeleteIntha sri vazhkkai yeppadi yo???
thanks dr
DeleteOmg 😱 the war begins uh sis. Very very interesting. Sri pavam than Raana vishayam therinja she acts very intelligent and nalla decision than edupa
ReplyDeletewell said da... aanaalum situation would make her suffer more... wait and watch dr
DeleteWe are waiting for the twistssss
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete