அத்தியாயம் 112
ப்ரீத்தி காவல் நிலையத்திலிருந்து வீடு திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தன.
ஆள் பாதியாகி இருந்தாள்...
கல்விச்சாலை சொல்லிக் கொடுக்காததை, சிறைச்சாலை சொல்லிக் கொடுத்திருந்தது ....
தூய்மையற்ற அறை, தரமற்ற சுவையற்ற உணவு, கொசுக்கடி, கரடு முரடான தரையில் தூக்கம், தினமும் அதிகாலையில் 4 மணிக்கே விழித்தெழ வேண்டிய கட்டாயம் .... பிறகு விசாரணை ..... ஏகப்பட்ட கேள்விகள்... வசவுகள் .... எங்கு திரும்பினும் வக்கிரமான முகங்கள், சினிமா பாட்டு போல் சரளமாக காதில் விழும் கெட்ட வார்த்தைகள்,
நான்கைந்து தடவைக்கு மேல் காது சவ்வு கிழியும் அளவிற்கு விழுந்த அடிகள் ...
போன்றவைகள் நரகம் எப்படி இருக்கும் என்பதை சாகாமலேயே அவளுக்கு உணர்த்தியிருந்தது.
NIA அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் , அவள் கொடுத்த தகவலை அடிப்படையாக வைத்து,
அவள் படித்த கல்லூரி மற்றும் அதன் விடுதியில் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.
அவள் சொன்னது போலவே பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அந்த பெண் சுகன்யா , நாகர்கோவிலை சேர்ந்தவள் என்றும், அவளது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கல்லூரி இரண்டாம் ஆண்டு தேர்வு கூட எழுதாமல் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றதும் உறுதியாகி போனது.
அவள் கல்லூரி மற்றும் கல்லூரி விடுதியில் சேர்ந்த போது கொடுத்திருந்த முகவரியில் காவல்துறையினர் சென்று விசாரித்ததில், அந்த குடும்பமே தலை மறைவு என்றும் தெரிய வர, அவர்களை தேடி கண்டுபிடிக்க ஒரு தனி படை ஒன்று அமைக்கப்பட்டது.
ப்ரீத்தியின் வாக்குமூலம் சரியாக இருந்ததால், வெளிநாடு, வெளி மாநிலம் எங்கும் செல்லக்கூடாது .... சந்தேகப்படும்படியாக யாராவது அவளைத் தொடர்பு கொண்டால், உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற பல கட்ட நிபந்தனைகளை விதித்தே NIA அவளை பிணையில் விடுவித்தது.
என்னதான் செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அந்த செய்தி வெளிவரவில்லை என்றாலும், அவள் படித்த கல்லூரி மற்றும் கல்லூரி விடுதியில் விசாரணை நடைபெற்றதால் , அவள் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் குற்றவாளி என உடன் படித்தவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு , தகவல் சென்றடைய, வாய்மொழியாகவே அந்தப் பகுதி முழுவதும் அவளைப் பற்றிய செய்தி அம்பலமாகிப் போனது.
கல்லூரி நிர்வாகம், அவளை வலுக்கட்டாயமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றியது.
அவளுடன் நட்பில் இருந்த தோழிகள் தோழர்கள் எல்லாம் ஓட்டம் எடுத்தனர்.
சமூக ஊடகத்தில் அவளை பின்தொடர்ந்த உள்ளூர் வாசிகள் விஷயம் அறிந்து அவள் தொடர்பில் இருந்து வெளியேறினர் .
யாரையெல்லாம் அவள் தூக்கி வைத்துக் கொண்டாடினாளோ , அவர்கள் அனைவரும் அவளை நட்டாற்றில் விட்டு விட்டு ஓடி விட, அவள் உதாசீனப்படுத்திய பெற்ற தாய் தந்தை உடன் பிறந்த தமக்கை மட்டுமே, அந்த சூழ்நிலையில் அவளுக்கு ஆதரவாக நிற்க சூழ்நிலைக் காட்டி கொடுத்த மனிதர்களின் மறுபக்கத்தை கண்டு மிரண்டு போனாள் மாது.
தனிமையை விரும்பினாள்...எதிலும் ஆர்வமில்லாது போனது ....
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் ...
கெடுவான் கேடு நினைப்பான் போன்ற சொல்லாடல்கள் எல்லாம் மூத்தோர்கள் வெறும் வார்த்தை ஜாலத்திற்காக சொல்லிச் செல்லவில்லை என்பதை அனுபவரீதியாக உணர ஆரம்பித்தாள்...
அவள் பள்ளியில் பழிவாங்கிய ஆசிரியையிலிருந்து, தன் தமக்கை பிரபா, அவள் கணவன் சத்யன், வீரா, வீராவின் மனைவி ஸ்ரீப்ரியா , வரை ஒரு கணம் அவள் மனக்கண்ணில் வந்து போயினர்.
அவர்கள் யாருமே, அவளுக்கு தீங்கு நினைக்கவில்லை .... ஆனால் பொறாமை மற்றும் தன்னகங்காரத்தின் காரணமாக அவர்களை பழி தீர்க்க நினைத்த அவள் அல்லவா அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறாள் என்பதை மனம் எடுத்து இடிந்துரைக்க உணரத் தொடங்கினாள்.
யார் யாரையோ பார்த்து பேசி அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை, மகள் திரும்பிய சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்த தாய், தொலைபேசியில் நலம் விசாரித்த தமக்கை என அனைவரையும் ஒரு முறை எண்ணிப் பார்த்து கண் கலங்கினாள்.
எதிர்காலமே இருண்டு போனதாக எண்ணி விழி நீர் வழிய விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தவளின் தோளை அவள் தந்தை ஆதரவாக தொட,
"அப்பா ...... என் வாழ்க்கையே போச்சுப்பா .... இனிமே எப்படி நான் வெளியே தலை காட்டுவேன் ...." என விம்மி விம்மி அவள் கண்ணீர் வடிக்க,
"கொஞ்ச நாள் பொறுமையா இரு .... எல்லாத்துக்கும் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் .... இப்பதான் உனக்கு வாழ்க்கைன்னா என்னன்னே புரிய ஆரம்பிச்சிருக்கு ..... கெடச்ச அனுபவத்தை தண்டனையா நினைக்காம, இனிமே வாழ போற வாழ்க்கைக்கு அஸ்திவாரமா பாரு... அது நல்ல வாழ்க்கைய அமைச்சிக்கிற தன்னம்பிக்கையை கொடுக்கும் ..." என்றார் சண்முகநாதன் கலங்கியிருந்த மகளின் கண்ணீரைத் துடைத்தபடி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்னும் பத்து தினங்களில் நடக்கவிருக்கும் ராமலட்சுமியின் திருமணத்திற்காக ரங்கசாமியின் எஸ்டேட் பங்களா கோலாகலமாக தயாராகிக் கொண்டிருந்தது.
உடன் தேயிலைத் தோட்ட வேலைகளும் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்ததால் எப்பொழுதையும் விட அதிக நேரத்தை எஸ்டேட்டிலேயே கழித்தார் ரங்கசாமி.
எட்டாம் மாதம் தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் கூட, லட்சுமியை விடாமல் மசக்கை பாடாய் படுத்தியெடுத்ததோடு உடல் எடை அதிகரிப்பு, கால் வீக்கம் எல்லாம் சேர்ந்து வகைத்தொகை இல்லாமல் வாட்டி எடுக்க முன்பு போல் துரு துருவென்று இயங்க முடியாமல் தடுமாறிப் போனாள்.
அவள் வாய் விட்டுச் செல்லவில்லை என்றாலும் முகத்தில் தெரிந்த அயர்ச்சியை கண்டுகொண்டு அவளுக்கு முழு ஓய்வை கொடுத்துவிட்டு தந்தையின் வேலை பளுவை குறைக்க , தேயிலை தொழிற்சாலை சம்பந்தமான கணக்கு வழக்குகளை அவ்வப்போது பார்வையிட தொடங்கி இருந்தான் ராம்சரண்.
ராமலட்சுமியின் திருமணத்தை தன் சொந்த மகளின் திருமணம் போல், ரங்கசாமி முன் நின்று நடத்துவதால், அவர்களது தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ் மற்றும் வேட்டி சேலைகள் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
இம்மாதிரியான செயல்பாடுகள் ஒன்றும் ரங்கசாமியின் குடும்பத்திற்கு புதிதல்ல.
பரம்பரை பரம்பரையாக அவர்கள் வீட்டில் நடைபெறும் எல்லாவிதமான சுப நிகழ்ச்சிகளுக்கும், குறிப்பாக திருமணம் மற்றும் பிள்ளைபேறை தங்கள் ஊழியர்களோடு கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
வீட்டிலிருந்து எஸ்டேட்டுக்கு செல்ல கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதோடு, பாதையும் சற்று குண்டு குழிகள் நிறைந்த மலைப்பாதை என்பதால், தோட்டத் தொழிலாளர்களுக்கு தானே போனஸை வழங்கி விடுவதாகவும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மட்டும் லட்சுமியை வழங்கச் சொல்லியும் அறிவுறுத்தி இருந்தார் ரங்கசாமி.
அதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தேயிலை தொழிற்சாலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் லட்சுமி.
கணவனோடு செல்லலாம் என்றால், கடந்த இரு தினங்களாக அலுவலகம் மட்டுமல்லாமல் வீட்டிலும் மடிக்கணினியே கதி என்ற நிலையில் ராம்சரண் வேலையில் மூழ்கி இருந்ததால், அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல்,
"அக்கா, பன்னீர் அண்ணன் எங்க ..." என்றாள் சிவகாமியிடம் கார் ஓட்டுநரை சுற்றி முற்றி தேடியபடி .
"இப்பதான் வாழை இலை அறுத்துட்டு வர சொல்லி இருந்தேன் .... தோட்டத்துக்கு போயிருக்காப்ல... வந்துடுவாரு ..." என சிவகாமி பதிலளிக்க அவர்களது உரையாடல்களை கேட்டபடி வந்த ராம்சரண்,
"பன்னீர் அண்ணன் வேணாம் .... நானே உன்னை கூட்டிட்டு போறேன் ..." என்றான் தன் சட்டை பொத்தானை துரிதமாக போட்டபடி.
" உங்களுக்கு ரெண்டு நாளா வேலை அதிகம்....... .... அதான் உங்கள தொந்தரவு பண்ண வேண்டாமேனு ...."
"எனக்கு எப்பவுமே நீ முக்கியம் .... உன் சம்பந்தமான வேலைகள் முக்கியம் .... மத்த எல்லாமே உனக்கு அப்புறம் தான்..." என்றான் அவள் விழியோடு விழி நோக்கி.
இம்மாதிரியான வார்த்தைகளுக்காக அவள் தவமிருந்த காலங்கள் உண்டு .....
இப்படி அவன் அவளையே சுற்றி வர வேண்டும் என்று ஏங்கிய காலங்களும் உண்டு.....
அப்படி விருப்பப் பட்டியலில் சேமித்து வைத்தவைகள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக தற்போது நிறைவேறி வருவதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தவள்,
"சரி வாங்க போலாம் ..." என்றாள் லேசாக முகம் சிவந்து.
"இதுக்கு போய் எதுக்கு டி வெக்கப்படற ..."
அவள் மனதை புரியாமல், அவன் சன்னமாக வினவ, இம்முறை லேசான அந்த செம்மண் ரேகைகள் செஞ்சாந்தாய் பரவி மேலும் அவளை சிவக்கச் செய்ய,
"IITல கூட சேர்ந்து இரண்டாவது தடவையா படிச்சிடலாம் போல, ஆனா உன் மனசுல நீ என்ன நினைக்கிறேன்னு புரிஞ்சுக்க ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு டி ...." என குழைவோடு மொழிந்து விட்டு அவள் கரம் பற்றிக்கொண்டு அவன் நடக்க விழைய,
"தம்பி, ஒன்னு சொல்லனும்னு தோணுது சொல்லட்டுங்களா ..." என்றார் சிவகாமி லேசாக தடுமாறி.
"சொல்லுங்க அக்கா ..."
" ஸ்ரீ பாப்பாவ முழுவாம இருக்க சொல்ல, நம்ம அருணாம்மாவோட மாமியார் தவறிட்டதால , லட்சுமிம்மாவுக்கு சீமந்தம் செய்ய முடியாம போயிடுச்சு ... இப்பதான் எல்லாரும் இரண்டாவது குழந்தைக்கு கூட சீமந்தம் வைக்கிறாங்களே .... நாம ஏன் சீமந்தம் செய்யக்கூடாது ...???"
"செய்யலாமே குட் ஐடியா .... எப்ப செய்யலாம் க்கா ..."
"அடுத்த மாசம் செஞ்சா சரியா இருக்கும் ..."
"ராமலட்சுமி கல்யாணம் முடியட்டும் .... ஜமாய்ச்சுடலாம் க்கா ...."
ஆர்வத்தோடும் புன்னகையோடும் தன்னவளை பார்வையால் வருடியபடி சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தான், அந்த ஆசை நிறைவேறப் போவதில்லை என அறியாமல்.
காரில் ஏறி அமர்ந்ததும், அருகில் இருந்தவளிடம் ,
"நீ கார் ஓட்ட கத்துக்கணும் டி.... என்னைக்காவது கார் ஓட்ட கத்துக்கணும்னு உனக்கு தோணவாவது செஞ்சிருக்கா ..."
என்றபடி அவன் வாகனத்தை துவக்குவதில் கவனத்தை செலுத்த, அமைதியாக ஒரு வெற்றுப் பார்வை பார்த்தாள் பெண்.
பதில் வரவில்லை என்றதும், பக்கவாட்டில் திரும்பி பார்த்தவன், ஒரு கணம் அந்தப் பார்வையில் உறைந்து போனான்.
அவர்களது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையில் படுக்கை அறையைத் தாண்டி, அவளோடு இயல்பாக நின்று பேசக்கூட அவனுடைய தாய் தங்கை மனது வைத்தால் தான் உண்டு என்கின்ற அவல நிலை காட்சியாய் விரிய அமைதியாகிப் போனான் நாயகன்.
சில மணித்துளிகள் வாகனத்தை அமைதியாக செலுத்தியவன்,
"சாரி லட்சுமி, இதுவரைக்கும் உனக்கு என்ன வேணும்னு நானும் கேட்டதில்ல நீயாவும் சொன்னதில்ல.... சரியா சொல்லணும்னா அதற்கான சந்தர்ப்பமும் அமைஞ்சதில்ல... நானும் அமைச்சிக்கல.... நானா எனக்கு தோணினதை தான் உனக்கு செஞ்சிருக்கேன்.....இனி அப்படி நடக்காது ...
உனக்கு புடிச்சிருந்தா டெலிவரிக்கு அப்புறம் நானே உனக்கு கார் சொல்லிக் கொடுக்கிறேன் .... நீ கார் ஓட்ட கத்துக்கிட்டா எனக்காகவோ, பன்னீர் அண்ணனுக்காகவோ காத்துக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமே இருக்காது ... " என பேசிக் கொண்டே சென்றவனின் பேச்சை இடைவெட்டி,
"இப்பவே ஃபங்ஷனாலிட்டியை சொல்லிக் கொடுங்க.... தெரிஞ்சுக்கிறேன் ..... அப்புறம் ஓட்டி பழகிக்கிறேன் ...." என்றாள் ஆர்வமாய்.
"வாவ் சூப்பர்ப் லக்ஷ்மி.... தட்ஸ் தி ஸ்பிரிட் ... இனிமே தினமும் ட்ராவல் பண்ணும் போது , என்ன பண்ணனும் எப்படி ஓட்டணும்னு சொல்லிக்கிட்டே கார் ஓட்டறேன் .... ஒரு ரெண்டு வாரத்துக்குள்ள உனக்கு எல்லாம் ஓரளவுக்கு பிடிபட்டுடும் ..."
என்றவன் முதல் நாள் பாடமாய், அவளுக்கு அடிப்படையை சொல்லிக் கொடுத்துக் கொண்டே வண்டியை செலுத்த, மிகச்சுலபமாக மற்றும் துரிதமாக அவன் சொல்வதை அவள் கிரகித்துக் கொள்ள, ஒரு வழியாய் நேரம் போனதே தெரியாமல் இருவரும் தேயிலைத் தொழிற்சாலையை வந்தடைந்தனர் .
மேலாளர் முத்துராமன் மூலம் விஷயம் அறிந்திருந்ததால் தொழிற்சாலை ஊழியர்கள் அவர்களது வரவுக்காக காத்திருக்க, மேலும் காக்க வைக்காமல் போனஸ் பணத்தை வேட்டி புடவையோடு தாம்பூல தட்டில் வைத்து, பெயர் வாசிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியரிடமும் தனித்தனியே நலம் விசாரித்த படி கொடுக்க ஆரம்பித்தாள் லட்சுமி.
ஒரு வழியாக அது சிறப்பாக முடிந்ததும், மற்ற கணக்கு வழக்குகளை மேலாளரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டவள், தன் மடிக்கணினியை உயிர்பித்து அதில் பதிவேற்ற தொடங்க, ராம்சரணும் தன் மடிக்கணினியோடு வந்திருந்ததால், அந்த அலுவலக அறையில் இருந்த பால்கனி நீள்விருக்கையில் அமர்ந்தபடி தன் அலுவலக வேலையில் மூழ்கிப் போனான்.
அரை மணி நேரம் கழிந்திருக்கும், மேலாளர் அவள் அறை கதவைத் தட்டி அனுமதி பெற்ற பின் வந்து,
"மேடம், டீலர்ஷிப் சம்பந்தமா உங்க கிட்ட பேசணும்னு ஒருத்தர் வந்திருக்காரு ..."
என்றார் கையில் தரவுகளோடு.
" யாரு ... எந்த ஊர்ல இருந்து வந்திருக்காங்க........ ....."
லட்சுமி மடிக்கணினியில் இருந்து பார்வையை எடுக்காமல் கேள்வி எழுப்ப,
" பேரு ரிஷி... கோயம்புத்தூர்ல இருந்து வந்திருக்கிறதா சொன்னாரு ...."
" வர சொல்லுங்க ....." என்றாள் சொன்ன விபரத்தில் சரியாக கவனம் வைக்காமல்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், சிரித்த முகத்தோடு அவளது அலுவலக அறைக்கதவை திறந்து கொண்டு பிரத்யட்சமானான் ரிஷி.
வந்தவனைப் அறிந்து கொள்ள, அவள் மூளைக்கு அரைக்கணம் தேவைபட, அவள் சுதாரிக்கும் முன்பே,
" ஹாய் லட்சுமி .... எப்படி இருக்கீங்க ...."
என்றான் பல்வரிசை தெரிய மென் புன்னகை பூத்தபடி.
" ம்ம்ம்ம்.... ந.... நல்லா இருக்கேன் ...."
என்றவளுள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் ....
அன்றைக்கு இவனும் இவன் அன்னையும் மறுமணம் குறித்து கேட்ட போதே என் முடிவையும் தெளிவாகச் சொல்லிவிட்டேனே ..... இன்று எதற்காக , என்னை தேடிக் கொண்டு இங்கு வந்திருக்கிறான் ...
இவனா வியாபாரம் பேச வந்திருக்கிறான் இவனுக்கும், தேயிலை தொழிலுக்கும் சம்பந்தமே இல்லையே....
போன்ற எண்ணங்களில் அவள் மூழ்கி இருக்கும் போதே ,
" அக்கான்ஷா உங்கள ரொம்ப மிஸ் பண்றா..."
" ஓ.... எப்படி இருக்கா ...." என்றாள் வேறு வழியற்று .
"ரொம்ப நல்லா இருக்கா.... இன்ஃபெக்ட் அவ மட்டும் இல்ல, நான் .... ஐ மீன் எங்க ஃபேமிலியே உங்கள மிஸ் பண்றாங்க ...."
என்றான் அவளை ரசித்துப் பார்த்து.
அவன் பேச்சும் பார்வையும் சரியாக இல்லாததை உணர்ந்தவள் , உடனே பேச்சை திசை திருப்பும் பொருட்டு,
"டீலர்ஷிப் பேசணும்னு நீங்க வந்திருக்கிறதா மேனேஜர் சொன்னாரு ..."
என்றாள் வந்த வேலையை பார் என்று மறைமுகமாக அறிவுறுத்தி.
இதனை எல்லாம் சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ராம்சரணின் காதுகளில் இருந்து வெப்ப காற்று புகைமண்டலமாய் வெளியேற,
"யார்ரா நீ ..... பிசினஸ் பேச வந்த மாதிரியே தெரியலயே ... ரொம்ப நேரமா என் பொண்டாட்டிய ஏதோ ஸ்வீட் ஸ்டால பார்க்கிற மாதிரி பார்த்துக்கிட்டு இருக்க .... இதோ வரேன் ..." என்று வேகமாய் எழுந்து நடந்தான் அவர்களை நோக்கி.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...
Super mam
ReplyDeleteThanks dr
DeleteSuper,, rendu Sri kkum nalla tharamana sambavangal kaathu irukku pola,
ReplyDeleteS... da... thanks ma
DeleteWow interesting sis. After long long days Lakshmi ud potutinga
ReplyDeleteThanks da
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteThanks da
Delete