அத்தியாயம் 111
வீட்டை அடைந்ததும், மான்சி சற்று முன்பு தான் படப்பிடிப்பிற்காக ஊட்டிக்கு கிளம்பி சென்றதாக வீட்டு வேலைக்காரர் சொல்ல,
நிம்மதி பெருமூச்சு விட்டான் ராணா.
மகனும் இசைக்கல்லூரிக்கு சென்றிருப்பதாக தகவல் கிட்ட, மதிய உணவை திலக்குடன் அமர்ந்து கொறித்தவன், மருத்துவர் கொடுத்த மருந்தை உட்கொண்டு விட்டு படுக்கையில் விழ
" நீ இன்னும் ரெண்டு நாள் ஆபீஸ் பக்கமே வராம நிம்மதியா தூங்கி ரெஸ்ட் எடு .... எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்..."
என்று அறிவுறுத்திவிட்டு திலக் கிளம்ப எத்தனிக்கும் போது,
" திலக், நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல..... ... எனக்கு அந்த பொண்ணோட எல்லா டீடெயில்சும் வேணும் ... இம்மிடியட்டா அரேஞ்ச் பண்ணு..." என்றான் விடாப்படியாக.
ராணா இப்படி சொல்லவில்லை என்றால் தான் ஆச்சரியம்...
மதுஸ்ரீ தான் அவனது சுவாசமே ...
அவளோடு மானசீகமாக அனு தினமும் புதுப்புது கற்பனைகளோடு குடும்பமே நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதை திலக் மட்டுமே அறிவான்.
ஒரு சமயம், திடீரென்று,
"இன்னைக்கு வீட்டுக்கு சீக்கிரமா போகணும் டா .... கர்வா சவுத் வருது இல்ல ... அவளுக்கு புடவை எடுக்கணும் ..." என்றான் ராணா தீவிரமாய்.
"யாருக்குடா... மான்சிகா ...." என திலக் கேட்க
"ம்ச்.... என் மதுக்கு டா...." என்றான் மெய்யாகவே.
அவனது இந்த நூதனமான பேச்சைக் குறித்து மருத்துவர் ஷர்மாவிடம் தனிமையில் திலக்
விளக்கம் கேட்க,
"மதுவோட மரணத்தை ராணாவோட ஆழ்மனம் ஏத்துக்கிட்டாலும், அதை சில நேரங்கள்ல அங்கீகரிக்க தயாரா இல்ல...
அவர் தன் மதுவோட வாழ நினைச்ச வாழ்க்கைய தினம் தினமும் விதவிதமான கற்பனைல பொருத்திப் பார்த்து வாழ்ந்துகிட்டு இருக்காரு....
அந்தக் கற்பனையும் கனவு தான்,
அவரை இந்த அளவுக்கு உயிர்ப்பா வச்சிருக்க உதவுது ....
அதனால அவர் இப்படி வித்தியாசமா பேசும் போது அதுக்கு முக்கியத்துவம் கொடுக்காம கடந்து போயிடுங்க ...."
என மருத்துவர் பதிலளித்ததும் தான், தன் நண்பனின் மனநிலையே திலக்கிற்கு வெட்ட வெளிச்சமாகிப்போக, அன்றிலிருந்து, ராணா மதுவைப் பார்த்தேன் என்றாலும் சரி, மதுவை பார்க்கணும் என்றாலும் சரி, புரிய வைக்கவோ, விவாதிக்கவோ செய்யாமல்
வெகு இயல்பாக பேச்சை மாற்றி விடுவான் திலக்.
ஆனால் திலக் அறியாத ஒன்றும் இருக்கத்தான் செய்தது ... அது மான்சி, மருத்துவர் ஷர்மாவை தனியே சந்தித்து
உரையாடியது.
மான்சி பெயரளவில் மட்டுமே மனைவி என்பதால், ராணாவை பற்றியோ, அவனது மனநிலை பற்றியோ அவளுக்கு அவ்வளவாக தெரியாது.
மதுஸ்ரீ இறந்ததிலிருந்து அவனுக்கு தலைவலி வரும்..... மிகவும் துடிப்பான்.... உறக்கம் வராமல் தவிப்பான் என்று மட்டுமே அறிவாள்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒரு நாள், ஷர்மாவை சந்தித்தவள்
"சார், அவருக்கு என்ன தான் பிரச்சனை ...
அவர் என்னோட பேசறது இல்ல .... எங்க வீட்டு டிரைவர் மூலம் அவர் இங்க அடிக்கடி வந்து போறத தெரிஞ்சுக்கிட்டேன்.... அதான் உங்களை பார்க்கலாம்னு வந்தேன் ... ப்ளீஸ் சொல்லுங்க .... அவருக்கு என்ன ஆச்சு ...."
என்றவளிடம் ,
"ஓ.... நீங்கதான் ராணாவோட வைஃபா ...."
என்றவர், ராணாவின் வாழ்க்கையில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என அனைத்தையும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாகப் பேசிவிட்டு,
"நீங்க கொஞ்சம் பொறுமையா அவரை ஹேண்டில் பண்ணி இருக்கலாமோனு தோணுது ..." என முடித்தார்.
"டாக்டர் சார், உங்களுக்கு நடந்த எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு ....
அதனால நான் சொல்ல போறதையும் உங்களால சரியா புரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன் ...
சினிமா இண்டஸ்ட்ரிய சாக்கடைனு சொல்றவங்க தான் இங்க அதிகம் .... ஆனா எத்தனையோ மேக்கப் ஆர்டிஸ்ட், டெக்னீசியன்ஸ், நடிகர் நடிகைங்க ஒழுக்கமாவும் நேர்மையாவும் அங்க வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்கன்னு நிறைய பேருக்கு தெரியாது ....
நான் மதுஸ்ரீ விஷயத்துல எந்த பொய்யும் சொல்லல .... ஒரே ஒரு உண்மையை மறைச்சேன்... அவ்ளோ தான்... ஆனா அத எவ்வளவோ புரிய வைக்க பார்த்தும் , அவர் புரிஞ்சுக்காம,
"உன் வயித்துல இருக்கிற குழந்தை என்னோடது இல்ல.... தினமும் எத்தனையோ சினிமாக்காரனோட ஊர சுத்திட்டு வர்ற... அதுல எவனோடதோ யாரு கண்டானு .... காது கூசற அளவுக்கு இல்லாததையும் பொல்லாததையும் பேசினத என்னால தாங்கிக்கவே முடியல ....
குழந்தை பொறந்தப்ப வந்து பார்க்கவும் இல்லை .... அவனுக்கு ரெண்டு வயசு ஆற வரைக்கும் அவனைத் தொட்டு தூக்கினதும்
இல்ல ....
அவருக்கு நல்லா தெரியும், எங்க பையன் பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அவர மாதிரியே இருக்கான்னு ... ஆனா அத ஏத்துக்க தான் அவருக்கு மனசு இல்ல ....
எங்க ஏத்துக்கிட்டா .... எங்கிட்ட மன்னிப்பு கேட்கணுமோனு கண்டுக்காதது மாதிரி இருக்காரு.....
நான் பொதுவெளியல அவரை என்னைக்கும் விட்டுக் கொடுத்ததே இல்லை.... ஏதாவது எங்க சினிமா சர்க்கிள்ல நடக்கிற ஃபங்ஷனுக்கு கூப்பிட்டா,
வரேன்னு சொல்லி கடைசி நேரத்துல ஏமாத்திடுவாரு...
ஏன் வரலன்னு கேட்டா, நான் வந்து அங்க ஒன்னும் ஆகப் போறது இல்ல ....
உனக்கு தான் அங்க ஏகப்பட்ட ப்ரெண்ட்ஸ் இருக்காங்களேனு ஒரு நக்கலான பதில் வரும்......
அவர் அப்படி பேசும் போது அதில் இருக்கிற அர்த்தம், அவ்ளோ அனர்த்தமாவும், அபத்தமாவும் இருக்கும் ...
இப்படி சந்தேகப்படற மனுஷனோட எவ்ளோ நாள் தான் சார் பொறுமையா இருக்க முடியும்..... ...." என அவள் கோபமும் ஆதங்கமாய் புலம்ப,
"மான்சி, நீங்க ராணாவுக்கு உண்மையா இருக்கீங்க சரி .... நல்ல விஷயம் ...
ஆனா நீங்க ராணாவை சரியா புரிஞ்சிக்க தவறிட்டீங்க ....
நீங்க நானெல்லாம் நார்மலா இருக்கோம் .... அதனால ஒரு விஷயத்தை சீக்கிரமே மறக்கவும் முடியும் மன்னிக்கவும் முடியும் ...
ஆனா ராணா நார்மல் பர்சன் கிடையாது ....
மறதிங்கிறது கடவுள் மனுஷனுக்கு கொடுத்த ஆகச்சிறந்த வரம்.... ஆனா துரதிஷ்டவசமா அது ராணாவுக்கு மட்டும் கொடுக்கல ....
அவருக்கு இந்த உலகத்துல அவர் மதுவை தவிர மத்த எல்லாமே இரண்டாம் பட்சம் தான்....
மதுஸ்ரீ இறந்தப்ப, நீங்களும் மதுவும்
குடோன்குள்ள ஒண்ணா போனதை போலீஸ் விசாரணைல நீங்க சொல்லாம மறைச்சது மொதல் தப்பு ....
அதுக்கு ராணா மேல வச்சிருந்த காதலை காரணமா சொன்னது ரெண்டாவது தப்பு ....
அந்தக் க்ரூஷியல் சிச்சுவேஷன்ல கூட மதுஸ்ரீ இறந்ததை நினைச்சு வருந்தாம, உங்க காதலை எப்படி எதிர்காலத்துல நிறைவேத்திக்கலாம்னு பிளான் பண்ணினது ரொம்ப ரொம்ப தப்பு ....
நீங்க நடந்ததை நடந்த மேனிக்கு அன்னைக்கே சொல்லி இருந்தா... போலீஸ்காரங்க விசாரணை நடத்தி இருப்பாங்க .... அப்பவே குடோனோட ஷட்டர் வெளில லாக் ஆகலங்கிற உண்மைய கண்டுபிடிச்சு உங்களை இன்னசென்ட்னு ப்ரூவ் பண்ணி இருப்பாங்க ....
ஆனா இப்ப குடோனோட ஷட்டர் வெளியே
லாக் ஆகலன்னு ரிப்போர்ட்டே சொன்னாலும்,
நீங்க போலீஸ்ல சொல்லாம விட்டதுக்காக ராணா உங்களை முழுசா வெறுக்கிறாரு...
நீங்க சுயநலவாதி... உங்க சந்தோஷத்துக்காக நீங்க எந்த அளவுக்கும் போவீங்கனு நம்பறாரு.... அதனால தான் உங்க நடத்தைய சந்தேகப்படறாரு....
அவர் மதுவை மறந்தா தான், உங்க விஷயமும் அவருக்கு மறக்கும் ....
ஆனா அவர் இந்த ஜென்மத்துல மதுவ மறக்க மாட்டாரு.... அதனால மது விஷயத்துல நீங்க நடந்துக்கிட்டதையும் அவரால மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது ...." என அவர் திட்ட வட்டமாக முடிக்க, அன்றிலிருந்து
ராணாவின் விஷயத்தில் திலக்கிடம் எகுறினாலும், ராணாவிடம் மட்டும் அடக்கியே வாசித்தாள்.
அவளது அந்த திடீர் மாற்றம் ராணாவை சென்றடைந்ததோ இல்லையோ, ஓரளவிற்கு திலக் மட்டும் புரிந்து கொண்டான். ஆனால் காரணம் தான் அவனுக்கு விளங்கவில்லை.
ஏனென்றால் இந்தக் கணம் வரை அவள் மருத்துவரை சந்தித்தது , அவர்கள் இருவருமே அறியாத ஒன்று.
"ஓகே ராணா ..... நான் மோனிஷா கிட்ட
டீடைல்ஸ் வாங்கிக்கிட்டு உனக்கு ஃபோன் பண்றேன் ......" என விடை பெற்றான் நண்பனின் அடுத்த கட்ட திட்டத்தை அறிய.
ராணாவின் உறக்கத்திற்கு ஊறு விளைவிக்காமல் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவனைத் தொடர்பு கொண்டவன் ஸ்ரீப்ரியாவை பற்றிய தகவல்களை பகிர,
"ஓ.... பேரு ஸ்ரீப்ரியா அதிவீர ராம பாண்டியனா..... ...." என்ற ராணா மதுஸ்ரீ ... ஸ்ரீப்ரியா .... என மனதுக்குள் சொல்லிப் பார்த்துவிட்டு
"கல்யாணம் ஆகல இல்ல ..." என்றான் ஆவலோடு.
"மிஸ்ஸஸ் ஸ்ரீப்ரியா அதிவீர ராம பாண்டியன்...... ..." என திலக் அழுத்தி சொல்ல,
" வாட்.... கல்யாணம் ஆயிடுச்சா ... "
"ஆமா ராணா .... கல்யாணம் ஆகி 3 மாசம் ஆகப்போகுதாம் .... அந்த பொண்ணு தன்னை பத்தி செல்ப் இண்ட்ரொடியூஸ் பண்ணிக்கும் போது சொன்னாளாம்..."
" ஓ.... காட்...." என அவன் ஏறக்குறைய வெளிப்படையாக குமுற,
"இங்க பாரு ராணா.... தேவையில்லாம இந்த பொண்ணு விஷயத்துல தலையிடாதே ..... ஏதாவது ஒரு ரீசன் சொல்லி அந்த பொண்ண நாளைக்கே வேலையை விட்டு அனுப்பிடறேன் ..." என திலக் மொழிந்து கொண்டே செல்ல,
"முட்டாளா டா நீ ...... என் மதுவை இந்த பிறவில இனி பார்ப்பேன்னானு நான்
தவமா தவம் கிடந்துகிட்டு இருக்கேன் ..... கையில கிடைச்ச பொக்கிஷத்தை உதறி தள்ள சொல்றியா .... நோ வே .... மோனிஷா கிட்ட சொல்லி ஸ்ரீப்ரியாவை கௌதமோட
ப்ராஜெக்ட்ல ப்ளேஸ் பண்ணு ...."
"கௌதமா ....???? அவன் ரொம்ப கோவப்படுவானே.... ஈகோ புடிச்ச ஆளாச்சே .... ரொம்ப கெடுபுடியான ஆசாமி வேற ..."
"சொன்னத செய் திலக் ... கௌதம் கிட்ட இருக்கிற ஏதாவது ஒரு ப்ராஜெக்ட்ல ஸ்ரீப்ரியாவ நாளைக்கே பளேஸ் பண்ற வழிய பாரு .... மத்த டீடைல்சோட எனக்கு அவ ஓரியண்டேஷன்ல பேசின லிங்கையும் இப்பவே அனுப்பி வை ... " என பரபரத்துவிட்டு அவன் அழைப்பை துண்டிக்க ,
ஏதோ பெரிய திட்டத்தை தீட்டி விட்டான் ....
என்பதை ஊகித்த திலக், பெரும் மூச்சு ஒன்றை வெளியேற்றியபடி அழைப்பை துண்டித்துவிட்டு அடுத்த பத்தாவது நிமிடத்திற்குள் ராணா கேட்ட அனைத்தையும் பகிர்ந்தான்.
ஸ்ரீப்ரியாவின் சுய விவரங்களை ஆழ்ந்து பார்த்து முடித்த ராணா, அவள் கலந்து கொண்ட ஓரியண்டேஷன் நிகழ்ச்சியின் காணொளியில் கவனம் செலுத்த தொடங்கினான்.
அவள் தன்னைப் பற்றி கன்னக்குழி விழ சிரித்த முகத்தோடு தகவலை பகிர்ந்து கொண்ட காட்சியை காணக்காண
முகம் மட்டுமல்லாமல் உடல் மொழியும் அவனது மது போலவே அச்சு அசலாக இருப்பதைக் கண்டு அசந்து போனான்.
Good eaters are good cook .... ( நன்றாக சாப்பிடுபவர்கள் நன்றாக சமைப்பார்கள் ....)
என்ற தலைப்பை கொடுத்து, புதியவர்களின் இறுக்கத்தை தளர்த்த, நட்பு மேம்பட
ஒரு சிறு குழு கலந்தாய்வு நடத்தப்பட்டிருந்தது.
ஓரியண்டேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 பேரில், குறைந்த பட்சம் 20 பேர் தாமாக முன்வந்து கலந்து கொண்டு கொஞ்சம் அறிவியலோடும் ஹாசியத்தோடும் கருத்துக்களை பகிர, சிலர் அந்த கருத்துக்களை நகைச்சுவையாக எதிர்க்க , பலர் ஆமோதிக்க என
நிகழ்ச்சி வெகு அழகாக களைகட்டி இருந்தது.
"என்னை பொறுத்த வரைக்கும் இந்த சேயிங் ரொம்ப கரெக்ட் .... என் ஹஸ்பண்ட் குட் ஈட்டர் குட் குக் ... ஆனா எனக்கு சாப்பிடவும் இன்ட்ரஸ்ட் கிடையாது சமைக்கவும் சரியா வராது ...." என ஸ்ரீப்ரியா சொல்ல,
"அப்ப நீங்க சமைக்கிறதே இல்ல ... உங்க ஹஸ்பண்ட் தான் சமைக்கிறாருனு சொல்லுங்க ......" என்ற மனிதவள மேம்பாளர்(HR) கேள்வியில் ,
அந்த அறையே சிரிப்பொலியில் குலுங்க ,
"இல்ல இல்ல.... ரெண்டு பேரும் சமைப்போம்......இன்ஃபெக்ட் என்னோட சமையல இப்ப எல்லாம் என் ஹஸ்பண்ட் ரொம்ப விரும்பி சாப்பிடறாரு... நல்லா இருக்குன்னும் சொல்றாரு... என்ன ஒன்னு சமைக்க கத்துக்கிட்டாலும் இன்னும் நீ சரியா சாப்பிட கத்துக்கலன்னு திட்டுவாரு.."
என அவள் அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவை கலந்து சொல்லி முடித்திருந்ததோடு, தனித் திறன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அழகாக ஒரு தமிழ் பாடலையும் பாடி இருந்தாள்.
அதனை எல்லாம் மெய்மறந்து பார்த்தாலும் ஏனோ அவனால் முழு மனதாய் ரசிக்க முடியவில்லை.
அவளது முகம் தெரியாத கணவனின் மீது கட்டுக்கடங்காத பொறாமை ஏற்படுவதையும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
உடனே
தன் மதுஸ்ரீக்கும் இந்த ஸ்ரீப்ரியாவிற்குமான வித்தியாசங்களை அவன் மனம் மின்னல் வேகத்தில் கணக்கிட தொடங்கியது.
அவனது மது, ஆங்கிலத்தை நன்றாக புரிந்து கொள்வாள் .... ஆனால் அவளுக்கு திரும்ப பேச வராது ....
வெகு நன்றாக சமைப்பாள்.... ரசித்து ருசித்து உண்பாள் .....
அவனிடம் மட்டும் அதிகம் பேசுவாள் ....
சபை நிறைந்த இடங்களில் பெரும்பாலும்
அடக்கியே வாசிப்பாள்...
அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் கருத்துக்கள் உலா வந்தாலும், அதனை வெளிப்படையாக எடுத்துரைக்க பலமுறை யோசிப்பாள்...
அவளுக்கு பாட வராது .... ஆனால் நடனத்தில் நாயகி ...
படிப்பில் ஆர்வம் கிடையாது .... ஒவ்வொரு ஆண்டும் அடித்தட்டு மதிப்பெண்களை பெற்றே தேர்ச்சி அடைவாள் ....
ஆனால் புதிதாக வந்திருப்பவளோ அவனது ஆன்ம நாயகிக்கு முற்றிலும் எதிர் சுபாவம் கொண்டவளாக இருந்தாள் ...
பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் தரத்தில் தேர்ச்சி அடைந்திருந்தாள் ...
சரிவர சமைக்க தெரியாது ... சாப்பிடவும் ஆர்வம் இல்லை ....
யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தன் மனதில் பட்டதை அழகு ஆங்கிலத்தில் புத்தி கூர்மையோடு பகிரும் சுபாவம் பெற்று இருந்தாள் ....
அருமையாக பாடினாள் ....
என்றெல்லாம் அவன் மனம் அட்டவணை இட்டு பொருத்திப் பார்க்க, குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் அழகாகவே தெரிந்தன.
அச்சு அசலாக
உருவ ஒற்றுமை இருந்தாலும் சுபாவத்தில் 100% வித்தியாசம் இருப்பதை உணர்ந்தவனுக்கு, ஒரு விஷயம் விவரமாக புரிந்து போனது.
அதாவது அவன் திட்டமிட்டிருப்பதை அவளது சுபாவமே வெகு சுலபமாக நிறைவேற்றி வைக்க உதவப் போகிறது என அவனது வயது முதிர்ச்சியும் அனுபவமும் அனுமானிக்க , வெற்றி சிரிப்பு ஒன்று அனிச்சையாய் அவன் இதழை ஆக்கிரமித்தது.
*****************************************
அலுவலகத்தில் முக்கிய கலந்தாய்வுக் குழுவோடு அமர்ந்திருந்த வீராவின் மனநிலை ஒரு நிலையில் இல்லை.
மனைவியை முதல் நாள் அலுவலகத்தில் இறக்கி விட்டு வந்தது ஏதோ பெற்று வளர்த்த குழந்தையை முதன்முதலாய் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்தது போலான உணர்வைத் தர, அதிலிருந்து வெளியே வர முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.
அவன் மனைவிக்கு அலுவலகப் பணி ஒன்றும் புதிதுதல்ல.....
ஏற்கனவே நான்கு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறாள் ....
அதுவும் அயல் நாட்டிற்கு தனியே சென்று அந்நிய மக்கள் கூடியிருந்த சபையில் புத்தி கூர்மையோடு அப்பளம் பொரித்தவள் ....
அப்படிப்பட்டவள் புதிய அலுவலகத்தில்
தரமான பதவியில் பணியாற்ற இருப்பதை எண்ணி தன் மனம் மகிழ்ச்சி அடையாமல், ஏன் மறுகுகிறது ... என்ற கேள்வியை தனக்குத் தானே பலமுறை கேட்டும் விடை கிடைக்காமல் போக, தவித்துப் போனான்.
ஏதோ பொக்கிஷத்தை பொதுவெளியில் வைத்து விட்டு வந்தது போல், அவள் பாதுகாப்பற்று இருப்பதாக அவன் உள்ளுணர்வு சொல்ல, அதன் உள் அர்த்தத்தை மொழிபெயர்க்க முடியாமல் திண்டாடி போனான்.
தொடர் கலந்தாய்வுகள் இருந்ததால், தொடர்பு கொண்டு பேசாமல் தன்னவளுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விசாரித்தான்.
அனைத்தும் சரியாக நடந்து முடிந்ததாகவும்,
இன்னும் ஒரு மணி நேரத்தில் முதல் நாளுக்கு உண்டான அலுவலக சடங்குகளை முடித்துவிட்டு கேப்ல் வீட்டிற்கு கிளம்புவதாக அவள் பதில் அளிக்க , நிம்மதியுற்றான்.
அவன் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் மிக முக்கிய தலைமை பதவியை வகித்து வருபவன் .
அவனுக்கு கீழே ஆண் பெண் பேதமின்றி பல ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள்.
இன்று வரை நல்ல தலைமை அதிகாரி என்ற பெயரோடு நல்ல மனிதன் என்ற பெயரையும் பெற்றிருக்கிறான்.
எந்த ஒரு அசாதாரண சந்தர்ப்பங்களில் கூட
உடன் பணி புரியும் ஊழியர்களை எடுத்தெறிந்து பேசும் பழக்கம் இல்லாததால், அவனது தலைமைக்கு கீழ்
பணிபுரிய ஆண் பெண் பேதம் இல்லாமல் ஊழியர்கள் போட்டி போடுவது வழக்கம்.
அதுவும் பெண்கள் விஷயத்தில், எப்பொழுதுமே ஒரு ஒதுக்கத்தை கடைப்பிடிப்பவன்.
அதிலும் குழந்தைகளை பெற்ற புது தாய்மார்களுக்கு, அவர்கள் கேட்காமலே பணிகளை குறைத்தல்,
வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணி புரியும் சலுகைக்கு ஒப்புதல் வழங்குதல் போன்ற காரணங்களால் பெண் ஊழியர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அவன் தலைமையில் பணிபுரிய விரும்புவார்கள்...
அவன் மட்டும் தான் அப்படி என்று சொல்லி விட முடியாது அவனைப் போல் பல தலைமை அதிகாரிகளும் அவன் நிறுவனத்தில் இருக்கத்தான் செய்தார்கள் ...
அது போல் தானே, தன் மனைவி பணிபுரிய போகும் இடத்திலும் தரமான
தலைமை அதிகாரிகள், ஊழியர்கள் இருக்கத்தானே செய்வார்கள் ....
பின்பு ஏன் என் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது ...... என்ற தொடர் கேள்விக்கு மட்டும் கடைசி வரை விடையே கிடைக்காமல் போக, அன்றைய பொழுதை ஒரு வழியாக முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
கார் நிறுத்தும் சத்தம் கேட்டு ஓடி வந்த அவனவள், அவனைக் கண்டதும்
"வாங்க வாங்க உங்க கிட்ட நிறைய பேசணும்.... ...."
என்றாள் மிகவும் மகிழ்ச்சியாய்.
"நீ ஹாப்பியா இருக்கிறத பார்த்தா, உனக்கு இந்த கம்பெனி ரொம்ப புடிச்சி போச்சு போல....." என்றான் அவள் கரம் பற்றி.
"ம்ம்ம்... குட் கம்பெனி ராம் ..."
" என்னடி .... இது கையா இல்ல கரண்டியா ...
இவ்ளோ சூடா இருக்கு ..."
"ம்ச்.... நான் சொல்றத கேளுங்க ...."
"முதல்ல என்னை கட்டிக்கோ .... அப்புறம் நீ என்ன வேணாலும் பேசு .... "
" ம்ச்... என்ன பேச விடுங்க ..." அவள் விலக
" ரொம்ப குளிருது டி.... இங்க வா ... இப்படி மடியிலே ஏறி உட்காரு ...." என்றவன் சோபாவில் அமர்ந்துக்கொண்டு
அவளை தன் மடியில் அமர்த்தி வாகாக கட்டி கொண்டு
" இப்ப சொல்லு ..." என்றான் கிறக்கமாய்.
"வந்ததும் வராததுமா டிரஸ்ஸ கூட மாத்தாம.....என்னது இது ... அதுவும் கூடத்துல........"
"ம்ம்ம், அம்மா அப்பா ஊர்ல இல்லாததால
இந்த மாதிரி நிம்மதியா உட்கார முடியுது ... நாளன்னிக்கு வந்துடுவாங்க ... அப்புறம் இப்படி உட்கார முடியாது ... அதுவரைக்கும் என்ஜாய் பண்ணலாமே .... "
அவள் முறைக்க,
"இப்ப சொல்லு பட்டு... என்ன ஆச்சு..."
என அவன் துவங்கி வைக்க, கிட்டத்தட்ட அரை மணி நேரம் நிறுவனத்திற்குள் நுழைந்ததிலிருந்து, வீடு திரும்பும் வரை நடந்த அனைத்தையும் விடாமல் அவள் ஒப்புவிக்க, ஒரு கட்டத்தில் அவள் பேச்சை நிறுத்த அவள் இதழோடு தன் இதழை பதித்தான் .
மணித்துளிகள் மாயமாய் கரைய, லேசான வெட்கத்தோடு விலகியவள்
"நான் எவ்ளோ சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன் ... இப்படி திடீர்னு ரொமான்ஸ் பண்ணா என்ன அர்த்தம் ... " என்றாள் நாணிகோணி.
"உனக்கும் ரொமான்ஸ் பண்ண புடிச்சிருக்குன்னு அர்த்தம் .... அதனால தானே நீயும் இப்ப கிஸ் பண்ண ..."
அவன் குறும்பாய் கேட்க, நச்சென்று அவன் தலையில் கொட்டி விட்டு, அவள் இறங்கி நடக்க, அவளை பின் தொடர்ந்து தன் கரங்களால் அவள் இடைப்பற்றி தூக்கியவனுக்கு, அன்று முழுவதும் இருந்த குழப்பங்கள் அனைத்தும், பனிப்புகையாய் காணாமல் போக அவளை அப்படியே கரங்களில் அள்ளிக் கொண்டு தன் அறை நோக்கி நடந்தான்.
ஸ்ரீராமம் வருவார்கள் ....
வணக்கம் நட்புகளே,
112ஆம் அத்தியாயத்தையும் பதிவேற்றியுள்ளேன்.
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்
Super Happy Vinayaka Chaturthi mam
ReplyDeleteThanks a lot da
Deleteawesome 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
ReplyDeleteThanks dr
ReplyDeleteNice sis.
ReplyDeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete