அத்தியாயம் 110
ராணாவின் குடும்பம் கோட்டா நகரை அடைவதற்கு முன்பே, ராஜ்குமாரின் மனைவி சாந்தினி காலமாகிவிட , அடித்துப் பிடித்து சென்றவர்கள் கடைசியில் சாந்தினியின் பிரேதத்தை பார்க்கும்படி ஆகிப்போனது.
ராஜ்குமார் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகால ஆகச் சிறந்த திருமண பந்தத்தை அனுபவித்தவர் என்பதால் தன் இணை
இயற்கை எய்தியதை ஏற்க மனம் இல்லாமல் குழந்தை போல் கண் கலங்கினார்.
ராஜ்குமாருக்கு அடுத்தாக சாந்தினியின் இறப்பு தீபிகாவையும் ராணாவையும் வெகுவாக பாதித்திருந்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு கூட,
மான்சி தாய்மை அடைந்திருப்பதை ராணா தெரிவிக்கையில், சாந்தினி மிகவும் மனமகிழ்ந்து வாழ்த்து கூறியதோடு, கொள்ளு பேரனை பார்க்க ஆவலாக இருப்பதாக குதூகலித்தெல்லாம் மணக்கண்ணாடியில் வந்து போக , மனம் நொந்து கண்ணீர் வடித்தான் ராணா.
சொந்த பாட்டியை இழந்தது போல் மான்சியும் கண்கலங்கி நின்றாள்...
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மதுஸ்ரீயோடு பலமுறை ராஜ்குமார் வீட்டிற்கு சென்று சாந்தினியோடு பழகி இருக்கிறாள்.
மதுஸ்ரீ இறந்தபோது உடல் நலம் சரியில்லாமல் இருந்தவர், ஓரளவிற்கு தேறிய பின், அவளது இறப்பைப் அறிந்து மிகவும் மனம் வருந்தினார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு மான்சி
ராணாவை மணக்கப் போகும் செய்தியை அறிந்து , நிம்மதி அடைந்தவர் மான்சியை அழைத்து மிகுந்த சந்தோஷத்தோடும் முழு மனதோடும் ஆசீர்வதித்தார்....
அப்படிப்பட்டவரை கடைசியாக சந்திக்கும் வாய்ப்பை கூட கொடுக்காமல் காலன் கவர்ந்து சென்றது தான் , ராணாவின் குடும்பத்தாரை வெகுவாக பாதிக்க, செய்வதறியாது கலங்கி துடித்தனர்.
உறவினர்கள் அனைவரும் கூடி இருந்ததால் உடனே இறுதி சடங்கு செய்யப்பட, அன்பான துணையை கால தூதனிடம் அள்ளிக் கொடுத்ததை எண்ணி ராஜ்குமார் கதறி துடிக்க, குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழியாக முதியவருக்கு ஆறுதல் கூறி அரவணைத்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அன்றைய இரவு, அனைவருக்குமே மிகுந்த மன அழுத்தத்தோடு கண்ணீரும் கதறலுமாய் கழிந்தது.
மறுநாள் மனதை திசை திருப்ப, திலக் வீட்டிற்கு சென்றான் ராணா.
அங்கு திலக், அவன் மனைவி சுனந்தா, அவளது தாய், தந்தை ஆகியோர் அவனை வரவேற்க சற்று நேரம் அவர்களோடு மனம் விட்டு அளவளாவினான்.
சிறிது நேரம் திலக்கின் இரு குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்ந்தவன்
லேசான மன பாரத்தோடு விடைபெறும் போது சுனந்தாவின் தாயார்,
"இங்க பாருப்பா .... இந்த உலகத்துல வயசானவங்க , வாலிப பசங்க, ஆம்பள பொம்பள, குழந்தைங்கனு எந்த ஒரு பாகுபாடும் இல்லாம யாருக்கும் எப்ப வேணாலும் சாவு வரலாம் ... கிட்டத்தட்ட நாலு வருஷத்துக்கு முந்தி உங்க பாட்டி ஆஸ்பத்திரில படுத்து கிடக்கும் போது அவங்க தான் போய்டுவாங்களோன்னு நாம எல்லாம் பயந்துகிட்டு இருந்தோம் .... ஆனா எதிர்பாராத விதமா ஸ்ரீ நெருப்புல மாட்டிகிட்டு செத்துப் போயிட்டா....
அதைத்தான் விதிங்கறது ...
ஆனா ஆஸ்பத்திரில படுத்து கிடந்தவங்க உடம்பு தேறி வீட்டுக்கு வந்து, மேற்கொண்டு நாலு வருஷம் நல்லா இருந்து மான்சிக்கும் உங்களுக்கும் நடந்த கல்யாணத்தை பார்த்துட்டு தானே போயிருக்காங்க ....
அதனால அவங்க இறந்ததை நினைச்சு
வருத்தப்படாதீங்க ....
அவங்க முழுமையான வாழ்க்கை தான் வாழ்ந்து இருக்காங்க ..."
என ஆறுதல் கூற,
"போன வாரம் மான்சி மாசமா இருக்கிறத
சொன்ன போது கூட ரொம்ப சந்தோஷப்பட்டாங்க ஆன்ட்டி ... கொள்ளு பேரனை பார்க்கணும்னு ஆசையா இருக்குன்னு சொன்னாங்க ... ஆனா இப்படி திடீர்னு ஹார்ட் அட்டாக்ல போவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ..."
என்றான் ஆற்றாமையோடு விழிகளில் கண்ணீர் குளம் கட்ட.
பாட்டியின் எதிர்பாராத மரணம் தான் பேரனை வாட்டுகிறது என்பதை புரிந்து கொண்ட சுனந்தாவின் தாய் ,
"வாழ்க்கையில எது நடக்கணும்னு இருக்கோ அது நடந்தே தீரும் பா .... யாராலயும் விதியை மாத்த முடியாது ....
நீங்க மான்சின்னு சொல்லும் போது தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது ....
குடோன் தீ பிடிச்சுகிச்சே, அப்ப மதுஸ்ரீயோட
மான்சியும் செத்திருக்க வேண்டியது ... ஆனா அவளுக்கு அன்னைக்கு நல்ல நேரம் போல .... அதான் குடோனுக்குள்ள அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா போனாலும், தண்ணி தாகம் எடுத்ததால மதுஸ்ரீய அங்கயே விட்டுட்டு மான்சி மட்டும் தண்ணி குடிக்க எங்க வீட்டுக்கு வந்துட்டா... இல்லன்னா அவளும் ஸ்ரீயோட நெருப்புல மாட்டிகிட்டு இல்லாமலே போயிருப்பா ....
ஸ்ரீய உங்களுக்கு நிச்சயம் பண்ணி இருந்தாலும், மான்சிய தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு விதி இருந்திருக்கு போல .... அதான் அன்னைக்கு அப்படி நடந்து இருக்கு ....
இதைத்தான் நல்லதோ கெட்டதோ எப்ப நடக்கணும், யாருக்கு நடக்கணும் , யார் கூட நடக்கணும்னு ஆண்டவன் தான் முடிவு எடுக்கிறான் நம்ம கைல ஒன்னும் இல்லன்னு சொல்றது... "
என ஆதங்கத்தோடு இயல்பாக மொழிந்துக் கொண்டே செல்ல , அவரது பேச்சில் துணுக்குற்றவன்,
"என்ன சொன்னீங்க ..... மான்சி மதுவோட குடோனுக்குள்ள போனாளா...??? நீங்க பாத்தீங்களா ...."
"பார்த்தேன் பா .... ஸ்ரீயும் மான்சியும் ஒன்னா தான் வந்தாங்க ... ஒண்ணா தான் குடோனுக்குள்ளயும் போனாங்க ....
கொஞ்ச நேரத்துல மான்சி மட்டும்
எங்க வீட்டுக்கு தண்ணி குடிக்க வந்தா ..." என்றவரின் பேச்சு இடைவெட்டி,
"குடோனோட ஷட்டரை மான்சி தான் மூடினாளா .... பாத்தீங்களா ...." ராணா பரபரக்க ,
ஓரிரு கணம் யோசித்தவர்
"இல்லப்பா ... நான் அதை பார்க்கல பா ... ரெண்டு பேரும் குடோனுக்குள்ள போனதை மட்டும் தான் பார்த்தேன் ..."
"கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன் ப்ளீஸ்.... ...." என்றான் பரிதவிப்போடு.
"டேய் உனக்கு என்ன டா ஆச்சு ...." என திலக் குறுக்கிட,
"ப்ளீஸ் ஒரு நிமிஷம் பேசாதடா ... ஆன்ட்டி நீங்க சொல்லுங்க .... ஷட்டரை மூடினது யாரு......"
"எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு ... அன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் குடோனுக்குள்ள போனத நான் என் பேத்திக்கு பால்கனியில சோறு ஊட்டிக்கிட்டு இருக்கும் போது பார்த்தேன்... அப்ப என் கையில இருந்த மொபைல என் பேத்தி பிடுங்கி கீழ போட்டுட்டா ..... ஃபோன்ல இருந்து பேட்டரி தனியா தூரப் போய் விழுந்துடுச்சு .... அதைத் தேடி எடுத்து போட்டு பார்க்கும் போது தான் ஃபோனோட டிஸ்ப்ளே போயிடுச்சுன்னு தெரிஞ்சது ... நான் அதுலயே கவனமா இருந்ததால ஷட்டர் எப்படி முடிச்சின்னு கவனிக்கல ... ஆனா மான்சி தண்ணி வேணும் ஆன்ட்டினு சொல்லிக்கிட்டே குழந்தையை பார்த்து சிரிச்சுக்கிட்டே படியேறி வந்தது மட்டும் ஞாபகத்துல இருக்கு..... .... "
"அப்ப குடோன் எரியும் போது நீங்க அங்க இருந்தீங்களா ...." அவன் ஆவலாக வினவ
"இல்லப்பா அதுக்குள்ள என் பொண்ணு சமையல முடிச்சிட்டு வந்துட்டா .... அவகிட்ட குழந்தையை குடுத்துட்டு ஃபோனை ரிப்பேர் பண்றதுக்காக இவரை ( தன் கணவரை காட்டி) தேடிப் போயிட்டேன்.... அதுக்கப்புறம் தான் எல்லா இடமும் கருப்பு புகையா ஆயிடுச்சு ... எங்க என்ன ஆச்சுன்னு புரியறதுக்குள்ள, குடோன்ல இருந்து ஸ்ரீ அலர்ற சத்தம் கேட்டுச்சு .... அப்புறம் ஓடிப்போய் எங்களால முடிஞ்சத செஞ்சோம்....... ...." என்றவர் ஒரு கணம் அவனை ஆழ்ந்து நோக்கி விட்டு,
"நீங்க பேசறத எல்லாம் வச்சு பார்த்தா மான்சிய சந்தேகப்படறீங்களோனு தோணுது.... நீங்க இப்படி புரிஞ்சிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, இதையெல்லாம் உங்க கிட்ட சொல்லி இருக்கவே மாட்டேன் பா.... மான்சி தங்கமான பொண்ணு ... அவ சின்ன கெடுதல் கூட யாருக்கும் நினைக்க மாட்டா... அதுவும் ஸ்ரீ , அவ கூட பொறந்தவ மாறி ..... அதனால தேவையில்லாம மான்சிய சந்தேகப்படாதீங்க .... நான் உங்களுக்கு ஆறுதல் சொல்லணும்னு நெனச்சு ஏதோ சொல்ல போய் .... அதை நீங்க தப்பிதமா புரிஞ்சுகிட்டீங்க ..."
என சுனந்தாவின் தாயார் கவலை தோய்ந்த குரலில் சொல்ல, ஒரு கணம் அமைதி காத்தவன்,
"இட்ஸ் ஓகே ஆன்ட்டி .... நான் கிளம்பறேன்.
திலக் நான் கிளம்பறேன் டா ..."
என்றவனின் வேக நடையிலேயே ஏதோ வில்லங்கம் நிகழப்போகிறது என்று உணர்ந்த திலக்,
"இங்க பாரு, கரும்புக்காடு தீ புடிச்சதால தான் ஷார்ட் சர்க்யூட் ஆகி குடோன் எரிஞ்சதுன்னு போலீஸ் தரப்பே சொல்லி இருக்காங்க ..... இதுல மான்சியோட பங்கு எதுவுமே கிடையாது .... ஷட்டரை மதுஸ்ரீ தான் வழக்கமா மூடற மாதிரி மூடி இருக்கணும்னு தோணுது ....
அதனால தேவையில்லாம மான்சி கிட்ட,
இதையெல்லாம் கேட்டு சண்டை போடாத புரிஞ்சுதா ..." அறிவுரை கூறிக் கொண்டே பின்னே தொடர, அதில் கவனம் செலுத்தாமல்
"சரிடா நான் கிளம்பறேன் ...." என விருட்டென்று காரைக் கிளப்பிக்கொண்டு
சென்றுவிட்டான் ராணா.
ராணா வீட்டை அடைந்ததும் முதலில்
தன் தாத்தா ராஜ்குமாரின் அறைக்குச் சென்று அவரது மர பீரோவில் முக்கிய தரவுகள் வைத்திருக்கும் பகுதியில் மதுஸ்ரீயின் இறப்பு சம்பந்தமாக காவல்துறை மற்றும் மருத்துவ குழு கொடுத்த ஆய்வறிக்கைகளின் நகல்களை தேடி எடுத்தான்.
அதில் குறிப்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட தரவை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்தான்.
அவன் மருத்துவமனையில் இருந்த போது ராஜ்குமார் சொன்னது தான்
தரவுகளிலும் இருந்தது.
அதாவது மான்சி தனது வாக்கு மூலத்தில்
"நாலு தெரு நடந்து வந்ததால எனக்கு தண்ணி தாகம் எடுத்துச்சு .... பக்கத்துலயே சுனந்தா திதி வீடு இருந்ததால, அங்க போய் தண்ணி குடிச்சிட்டு வரேன்னு ஸ்ரீகிட்ட சொல்லிட்டு வந்தேன் .... அவ சரின்னு சொல்லிட்டு துப்பட்டாவை தேடப் குடோனுக்குள்ள போயிட்டா .... இங்க நான் தண்ணி குடிச்சிட்டு கிளம்பும் போது தான், யாரோ கத்தற மாதிரி சத்தம் கேட்டது .... காத்து வேற ரொம்ப பலமா அடிச்சதால எங்கிருந்து சத்தம் வருதுன்னு முதல்ல எங்களால கண்டுபிடிக்க முடியல ... அப்புறம் குடேன்ல இருந்து புகை நெருப்பும் வேகமா பரவ ஆரம்பிக்கும் போது தான், அது பத்திகிச்சுனு புரிஞ்சது அப்புறம் தான் இங்க ஓடி வந்தோம் ....."
என கூறியிருக்க, அது அப்படியே வார்த்தை மாறாமல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மான்சி மதுஸ்ரீயோடு குடோனுக்குள் சென்றதை காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூட மறைத்து இருக்கிறாள் என்பதை அந்தத் தரவுகள் தெள்ளத் தெளிவாக ஊர்ஜிதப்படுத்த, உடனே அவளை
தேடி மாடியில் இருக்கும் தன் அறைக்குச் சென்றான்.
அங்கு அவள் துணிகளை சூட்கேஸில் மடித்து வைத்துக் கொண்டிருக்க,
"மான்சி ....." என்றான் உரத்தக் குரலில் ,
ஒருவித அந்நியத் தன்மையோடு.
" ஜி... வாங்க சாப்பிட போலாம் ... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ...." அவள் எதேச்சையாக அழைக்க,
"அன்னைக்கு நீயும் மதுவும் ஒன்னாதானே குடோனுக்குள்ள போனீங்க ..." என்றான் எடுத்த எடுப்பில்.
"என்னைக்கு.... எப்போ ...." என்றாள் புரியாமல்.
"குடோன்ல தீ புடிச்சதே அன்னைக்கு ..."
ஒரு கணம் தடுமாறியவள்,
பிறகு சுதாரித்து,
"ஆமா... இப்ப போய் அதை ஏன் கேக்கறீங்க...... ..." என்றாள் லேசான கலக்கத்தோடு.
"அன்னைக்கு என்ன ஆச்சு முழுசா சொல்லு ..."
அவன் பார்வையில் தெரிந்த தீவிரம், ஒரு வித பயத்தை கொடுக்க, அச்சத்தில் எச்சில் கூட்டி விழுங்கியவள், காவல்துறை வாக்குமூலத்தில் சொன்னதையே மறுஒளிபரப்பு செய்ய, ஓங்கி அறைந்தான் ராணா.
அலறி துடித்தவள்,
"ஐயோ ஏன் அடிக்கிறீங்க ..... என்ன ஆச்சு உங்களுக்கு ...." என அழுகையினூடே
கேட்க,
அன்னைக்கு என்ன நடந்ததோ அப்படியே சொல்லு .... மாத்தி சொன்ன கொன்னு புதைச்சிடுவேன் .... " அவன் கோபத்தில் கொக்கரிக்க,
"நான் உண்மையத்தான் சொல்றேன் ..."
"எனக்கு உண்மை என்னன்னு தெரியும் ....
அதுக்கான சாட்சி என்கிட்ட இருக்கு ...
நீ உண்மைய சொல்றியானு தெரிஞ்சுக்க தான் இந்த கேள்வியே ... சொல்லுடி ..."
என அவன் கர்ஜிக்க, அதற்கு மேல் விவாதிக்க விரும்பாமல், அன்று நடந்ததை ஒன்று விடாமல் கூற ஆரம்பித்தாள்.
மதுஸ்ரீ மான்சியின் வீட்டிற்கு சென்று,
"ராணா வீட்ல கொடுத்த ரெட் துப்பட்டாவ காணும் டி .... எல்லா இடத்துலயும் தேடி பாத்துட்டேன் .... புதுசா வந்த சாரி கலெக்ஷன்சோட கலந்திருக்க வாய்ப்பு இருக்கு, குடோன்ல போய் தேடி பாருன்னு அம்மா சொன்னாங்க .... அங்க தான் போலாம்னு இருக்கேன் ... வர்றியா..."
என்றழைத்ததும், வேறு வேலை ஏதும் இல்லாததால், மான்சி அவளுடன் புறப்பட,
இருவரும் ஏதேதோ பேசியபடி நான்கு தெருக்களை கடந்து குடோனை அடைந்தனர்.
கொண்டு வந்த சாவியை போட்டு குடோனின் ஷட்டரை மதுஸ்ரீ திறந்ததும் இருவரும் உள்ளே நுழைய, அப்போது காற்று வீசத் தொடங்கியது.
"காத்து வேற அடிக்குது .... ஏணிய வேற காணோம் ... ஒருவேளை வெளியே இருக்குமோ ..." மதுஸ்ரீ பேசிக்கொண்டே
அங்கிருந்த மர அலமாரிகளை திறந்து புதிதாக அடுக்கப்பட்ட துணிமணிகளை ஆராய ஆரம்பிக்க,
"வெளிய தான் ஏணிய பாத்த மாதிரி தோணுது... .... தண்ணி தாகமா இருக்குது சுனந்தா தீதீ வீட்ல குடிச்சிட்டு ஏணிய கொண்டாறேன் ... " என்ற மான்சி
குடோனை விட்டு வெளியேறி ஷட்டரை இழுத்து மூட முற்பட,
"மான்சி..... ஷட்டரை மூடாத எனக்கு பயமா இருக்கு ... இந்த குடோனுக்கு நான் தனியா வந்ததேயில்ல ... யாரையாச்சும் கூட கூட்டிகிட்டு தான் வருவேன் .... ஏனோ இங்க தனியா இருக்க எனக்கு எப்பவுமே பயமா இருக்கும்..."
"ஸ்ரீ.... காத்து கொஞ்சம் பலமா அடிக்குது ....
பாரு... வெளியே இருக்கிற தும்பு தூசிங்க எல்லாம் புதுசா வந்திருக்க காஷ்மீர் கம்பளத்து மேலயெல்லாம் படியுது ....
உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா வழக்கம் போல உன்னை திட்டி தீர்த்திடுவாரு..."
"அது என்னவோ சரிதான் .... போன முறை இந்த மாறி காத்து அடிச்சதுல தும்பு தூசி விழுந்த இடத்துல எல்லாம் என்னை பெருக்க வச்சி கால ஒடிச்சிட்டாரு .... சரி நீ சீக்கிரம் போய் தண்ணி குடிச்சிட்டு... ஏணிய கொண்டா..." என்றவள் தன் வேலையில் கவனம் செலுத்த, மான்சி ஷட்டரை அச்சாணி போடாமல் சாதாரணமாக இழுத்து மூடிவிட்டு, சுனந்தா வீட்டிற்கு சென்றாள்.
சுனந்தாவுடன் பேசியபடி அவள் தண்ணீர் பருகி கொண்டிருந்த போது
அதுவரை சாதாரணமாக வீசிக் கொண்டிருந்த ஊதக்காற்று, திடீரென்று சூழல் காற்றாய் மாறி இலைதழைகள் காகிதங்கள் எல்லாம் மானாவாரியாக பூமியில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு அடிக்கு மேல்
பறந்து பரவ, அப்போது கரும்புகையும், அலறல் சத்தமும் கேட்க, புரியாமல் சுற்றி முற்றி பார்த்தவள், குடோன் புகை மண்டலமாக காட்சியளிப்பதை கண்டு
அதை நோக்கி ஓட சுனந்தாவும் தன் குழந்தையை அள்ளிக் கொண்டு பின் தொடர்ந்தாள்.
நடந்ததை அவள் ஒரு வித பயத்தோடு கூறி முடிக்க,
"அப்ப வேணும் முன்னே, நீதான் ஷட்டரை மூடி என் மதுவை கொன்னுருக்க..." என்றான் ராணா தீர்க்கமாய்.
"ஐயோ நான் வேணும்னே செய்யலங்க .... காத்து அடிச்சதால தான் மூடினேன் ..."
"அப்ப ஏன் நீ அதை போலீஸ் விசாரணையில சொல்லல ..."
" நான் அப்படி சொல்லி இருந்தா ... இப்ப நீங்க என்னை சந்தேகப்படற மாதிரி போலீசும் என் மேல சந்தேகப்பட்டிருக்கும் .... அதான் சொல்லல ...."
"அப்போ உன்னை காப்பாத்திக்க தான் சுயநலத்தோட உண்மையை சொல்லாம மறைச்சிருக்க ...."
"நான் அப்ப சுயநலத்தோட யோசிச்சது உண்மை தான் ... ஆனா என்னை காப்பாத்திக்க இல்ல என் காதலை காப்பாத்திக்க ..."
அவன் முறைத்துப் பார்க்க அவள் தொடர்ந்தாள்...
"மொதல்ல நடந்தத அப்படியே சொல்லலாம்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன் ... ஆனா எப்ப ஸ்ரீயும் இறந்து போய் , நீங்களும் அதிர்ச்சில மயங்கி விழுந்தீங்களோ ..... அப்பவே முடிவு பண்ணேன்... நடந்தது அப்படியே சொன்னா போலீஸ் மட்டுமில்ல உங்க தாத்தாவும் என்னை சந்தேகப்படுவாங்க .... சொல்லாம விட்டேன்னா, என்னைக்காவது ஒருநாள் உங்கள கல்யாணம் பண்ணிக்கிற வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னு யோசிச்சு தான் சொல்லாம விட்டுட்டேன் ..."
"வாரே வா .... என்னம்ம்ம்மா கதை சொல்ற .... இப்ப அன்னைக்கு நடந்ததை நான் சொல்லவா ...
நீ முதல் நாள் சொன்ன மாறி,
என்னை பாக்கறதுக்கு முன்னாடியே ட்ரீமி கேரக்டரா நீ லவ் பண்ணி இருக்க ...
அந்த சமயத்துல தான் நான் இங்க வந்து
ரியலா மதுவ லவ் பண்ண ஆரம்பிக்க, அது தெரிஞ்சதும் உனக்கு மது மேல ஏகப்பட்ட பொறாமை வன்மம் ஏற்பட ஆரம்பிச்சுடுச்சு ...
ஏதாவது செஞ்சு எங்க காதலை பிரிக்கலாமான்னு நீ திட்டமிட்டு கிட்டு இருக்கும் போது , எங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிஞ்சு கல்யாணத்துக்கும் நாளும் குறிச்சுட்டாங்க ....
அதை தாங்கிக்க முடியாம , கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தனும்னு நீ திட்டம் போட்டுக்கிட்டு இருக்கும் போது , மது இயல்பா குடோனுக்கு உன்னை கூப்பிட, நீ அந்த சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்திக்கிட்டு அவளை சாக அடிச்சுட்ட..." என கோபத்தோடு அவன் முடிக்க,
"ஐயோ முட்டாள்தனமா பேசாதீங்க ... ஷட்டரை மூடினது நானா இருந்தாலும், கரும்பு காடு தீ பிடிச்சதால தானே
ஷார்ட் சர்க்யூட் ஆகி குடோன் பத்திக்கிச்சு ... அதையெல்லாம் நானா செஞ்சேன் ..."
"இவ்ளோ செஞ்சவ அதையும் செஞ்சிருக்க மாட்டேன்னு என்ன டி நிச்சயம் ... "
"ப்ளீஸ் என்னை நம்புங்க .... நான் எதையும் வேணும்னே செய்யல .... ஸ்ரீ ஷட்டரை மூடாதன்னு சொல்லும் போதே , நான் மூடாம போய் இருந்தா .... இவ்ளோ பிரச்சினையே வந்திருக்காது .... நான் தான் அங்க புதுசா வந்திருக்க துணிமணி எல்லாம் தூசி ஆயிடும்னு சொல்லி அவ மனச மாத்தி மூடிட்டு போனேன் ...
அது தான் இப்ப வரைக்கும் என் மனச அரிச்சுகிட்டே இருக்கு .... மத்தபடி நான் எதையும் திட்டம் போட்டு செய்யல ..."
"லாக் போடாம தானே ஷட்டரை மூடின அப்ப ஏன் மதுவால உள்ளே இருந்து திறக்க முடியல..... ...."
"நெருப்பு வேகமா பரவினதால இரும்பு ஷட்டர் சூடானதோட கூடவே ஏற்பட்ட பிரஷரால இன்னும் ஸ்ட்ராங்கா லாக் ஆகி இருக்கும்னு ஃபயர் டீம் சொன்னாங்க....
போலீசும் அதையே தான் சொன்னாங்க ...
மறுபடியும் சொல்றேன் நான் ஷட்டரை மூடினேன் ஆனா லாக் போடலங்க..... என்னை நம்புங்க ..." அவள் கண்ணீரோடு கெஞ்ச
"நீ நல்லவளா இருந்திருந்தா, அன்னைக்கே போலீஸ் கிட்ட
நடந்ததை அப்படியே சொல்லி இருந்திருப்ப .... ஆனா நீ நல்லவ இல்லடி... சுயநலம் புடிச்ச சூனியக்காரி .... உன் கண்ணு முன்னாடியே உன் கூட பழகினவ எரிஞ்சு சாம்பல் ஆகுறா.... அந்த சூழ்நிலையில கூட உன் காதல் ஜெயிக்கணும்னு சுயநலமா திட்டம் போட்ட பாரு .... உன்னை வடிகட்டின முட்டாள் கூட நம்ப மாட்டான் டி .... என்னை கல்யாணம் செஞ்சிகணுங்கிறதுக்காக நீ ஏதோ செஞ்சு என் மதுவை நெருப்புல தள்ளிட்ட..... அதான் உண்மை ..."
"நான் நல்லவனு ப்ரூவ் பண்ண இப்ப என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை ... ஸ்ரீ உயிரோட வந்து சாட்சி சொன்னா தான் உண்டு .... அது நடக்க வாய்ப்பே இல்ல... ஆனா நான் உங்க மேல வச்சிருக்க என் காதலுக்கு சாட்சியா
என் வயித்துல வளர நம்ம குழந்தை மேல சத்தியமா சொல்றேன்.... ஸ்ரீய நான் ஒண்ணுமே பண்ணலங்க... அவ சாவு ஒரு விபத்து ...." என அவள் குலுங்கி அழ, அவளை விரத்தியாய் பார்த்து வில்லங்கமாய் சிரித்தவன்,
"நம்ம குழந்தையா ..... எத்தனையோ சினிமாக்காரனோட தினமும் மேக்கப் போடுறேன்னு சொல்லி ஊர சுத்திட்டு வந்துட்டு இப்ப என் குழந்தைனு என்கிட்டயே பொய் சொல்றியா.... "
"ராணா ... ஸ்டாப் இட் ... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க...
நான் மனுஷியா இருக்க மாட்டேன் ..."
அவள் கண்கள் சிவக்க பொங்க,
"என்னடி பண்ணுவ .... எவன் கூடயே போய் ****** வந்துட்டு, குழந்தை உண்டானதும்,
எம் பேரை இனிஷியலா போட்டுக்கலாம்னு பிளான் பண்றயா ...." என அவன் முடித்ததுதான் தாமதம், பழ கூடையில் இருந்த கத்தியை எடுத்து அவள் தன் மணிக்கட்டை கோபமும் அழுகையுமாய் அறுத்துக் கொண்டு துடிக்க, அதை குரூர ரசனையோடு பார்த்துக் கொண்டே உறைந்து நின்றான்.
அவளது அலறலைக் கேட்டு, அங்கு ஓடி வந்த மதுவந்தி, ராகேஷ் , ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் துடித்தவளுக்கு முதலுதவி செய்து காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றனர்.
தாய்மை அடைந்திருக்கும் நிலையில் தற்கொலைக்கு முயன்றிருப்பதால் அவளது நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர் சொல்ல, துடித்து போனார் ராஜ்குமார்.
மான்சியின் குடும்பத்தினர், மதுவந்தி ராகேஷ், திலக் ஆகியோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கலக்கத்தோடு காத்திருக்க ராணாவிடம் பேசி நடந்ததை தெரிந்து கொள்ள ராஜ்குமார் மட்டும் வீட்டிற்கு வந்தார்.
வீட்டுக் கூடத்தில் இருந்த தொலைக்காட்சியில்
மேற்கத்திய திரைப்பட பாடலை அலற விட்டுவிட்டு, எதையோ சாதித்த உணர்வில்
ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து சுவைத்துக் கொண்டிருந்தான் ராணா.
"ராணா ....." என்ற ராஜ்குமாரின் அழைப்பில் சுயம் உணர்ந்து பார்த்தவனிடம்,
"என்ன நடந்தது .... ஏன் திடீர்னு மான்சி அப்படி ஒரு முடிவு எடுத்தா ..." என்று கேட்டுக் கொண்டே ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை நிறுத்தினார்.
பாட்டனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தில்
ஒன்று விடாமல் பகிர்ந்தவன்,
"மான்சி தான் என் மது இறந்து போனதுக்கு காரணம் .... என் மதுவை துடிக்க துடிக்க கொன்னவளோட இனி என்னால வாழவே முடியாது தாத்தா ... "
"இப்படி ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசாத ராணா...."
"ஆதாரம் இல்லன்னு நெனச்சு தான் இவ்ளோ நாளா நம்மள ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கா.... ..."
"இப்ப கூட அவ தான் குற்றவாளினு அடிச்சு சொல்ல உன்கிட்ட எந்த ஆதாரமும் இல்லயேப்பா.... சுனந்தாவோட அம்மா சொன்னத அவளும் ஒத்துக்கிட்டா , ஆனா
மது இறந்து போனதுக்கு அவ தான் காரணம்னு எதை வச்சு சொல்ற ..."
"ஷட்டர அவ தான் மூடி இருக்கா .... லாக் மட்டும் போடலன்னு சொன்னா நம்பற மாறியா இருக்கு ...."
"இவ்ளோ தெளிவா கேள்வி கேக்கறியே ... நீ கேக்குற கேள்விக்கு உன்கிட்டயே பதில் இருக்குன்னு தெரியாதா ...." என்ற பெரியவர் அவன் அருகில் வைத்திருந்த மதுஸ்ரீ இறப்பு சம்பந்தமான காவல்துறையின் ஆய்வறிக்கையை எடுத்து கிட்டத்தட்ட 10 பக்கங்களை புரட்டிவிட்டு,
"இங்க பாரு ..... குடோனோட ஷட்டர் வெளியே இருந்து லாக் பண்ண படலன்னு ஃபயர் டீம், போலீஸ் ரிப்போர்ட்ஸ் எல்லாம் தெளிவா சொல்லி இருக்கு ... மான்சி பொய் சொல்லலப்பா .... கொஞ்சம் நடுநிலையா யோசிச்சிருந்தா உனக்கே இதெல்லாம் தெரிஞ்சிருக்கும் .... "
அவன் ஏதோ சிந்தித்தபடி அமைதிக்காக்க,
"இப்ப என்னோட பிரார்த்தனை எல்லாம்,
மான்சி நல்லபடியா உயிர் பொழச்சி வரணும்...... .... நீங்க ரெண்டு பேரும் குழந்தை குட்டியோட நல்லபடியா வாழனும் ...."
"நெவர் தாத்தா .... அது மட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது .... ஏனோ என்னால அவள நல்லவனு ஒத்துக்க முடியல ..... என் மதுவை கொன்னவளோட என்னை வாழ சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க .... அவ ரெக்கவர் ஆகி வந்ததும் அவளை டிவோஸ் பண்ணலாம்னு இருக்கேன் ..."
என உரத்த குரலில் அவன் பேசிக்கொண்டே செல்ல ,
"என்னோட இத்தனை வருஷ வாழ்க்கையில, நான் செஞ்சு வச்ச கல்யாணம் தோத்ததே இல்ல.... மான்சி நல்லவ.... உன் மேல உயிரையே வச்சிருக்கா... அவளை நம்புப்பா ..."
"அதனால தானே அவ என் மதுவோட உயிரையே எடுத்தா ...."
"ராணா .... குதர்க்கமா பேசாத .... மான்சி தான் குற்றவாளின்னு உன்கிட்ட ஏதாவது தரமான ஆதாரம் இருந்தா காட்டு நம்பறேன்... அத விட்டுட்டு உன்னோட அனுமானத்துக்கு எல்லாம் நான் ஆமாம் சாமி போட முடியாது......."
இளையவன் தலை குனிந்த படி அமைதிக்காக்க,
"உண்மைலயே உனக்கு என் மேல பாசமும், மரியாதையும் இருந்தா
நான் செஞ்சு வச்ச கல்யாணம் டிவோர்ஸ்ல முடியாம பாத்துக்க ... இதுதான் இந்த தாத்தாக்கு நீ கடைசியா செய்யற நன்மை ..." என்றவர் அதற்கு மேல் ஒரு கணம் கூட நிற்காமல், டிரைவரை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு பயணமானார்.
ஏற்கனவே தன் துணையை இழந்து விட்டு தவித்துக் கொண்டிருந்த அந்த முதியவருக்கு தற்போது பேரனின் வாழ்க்கையும் பேரிடியாய் மாறி மன அழுத்தத்தை கொடுக்க,
மருத்துவமனையை அடைவதற்கு முன்பே காரிலேயே மரணத்தை தழுவினார்.
தன் பாட்டனின் மரணத்தை அறிந்து கதறி துடித்தான் ராணா ....
ராஜ்குமாரின் இறுதியாத்திரை முடிந்த இரண்டாவது நாள் தான் மான்சி கண் விழித்தாள்.
ராணாவால் தாத்தாவின் கடைசி பேச்சை தட்டவும் முடியவில்லை, அதே சமயத்தில் மான்சிய மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழவும் பிடிக்கவில்லை ...
உடல் தேறி வந்தவளிடம் ,
"இனிமே உனக்கு என் பெட்ரூம்ல இடமில்ல... பழைய மாறி உன்னோட கொஞ்சம் குலாவி எல்லாம் என்னால வாழ முடியாது .... இந்த வாழ்க்கையை ஏத்துக்க தயாரா இருந்தா என்னோட பெங்களூருக்கு வா ... இல்லன்னா உன் வழியை பார்த்துகிட்டு நீ போலாம் ..."
என்றவனிடம் விவாதிக்காமல் பெங்களூரு கிளம்பி சென்றாள்.
எட்டு மாதத்திற்கு பிறகு அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அதை அவன் தொட்டுக் கூட பார்க்கவில்லை ... அந்தக் குழந்தையை சுமையாக கருதினான்......
பார்ப்பதற்கும் பழகுவதற்கும் அவனைப் போலவே இருந்தாலும் ஏனோ அவனால் அந்தக் குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை ....
காலம் செல்ல செல்ல, குழந்தை இயல்பாக அவனைத் தேடி வந்து அவன் கால்களைப் பற்றிக் கொண்டு ஏதேதோ பேச, அதன் குதலை மொழியில் மயங்கியவன்
ஒரு கட்டத்தில் தன் ரத்தம் என்பதால் அதனை மட்டும் அரைகுறை மனதோடு ஏற்றுக்கொண்டான்....
மான்சியும் கணவன் என்ற முறையில் அவனிடமிருந்து பாதுகாப்பையோ, பணத்தையோ காதலையோ எதிர்பார்ப்பதை முற்றிலும் நிறுத்திக் கொண்டாள் ....
அவள் முதல் நாள் பேசியது போலவே,
அவனைப் பார்த்துக் கொண்டே அவன் அருகாமையை உணர்ந்து கொண்டே
காலத்தை கழிக்க தொடங்கினாள்....
இருவரும் தத்தம் பணியில் உச்சத்தை தொட ஓட ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு, எடுத்துக்கொண்ட பணியில் இருவருமே முன்னிலை வகிக்க தொடங்க, அப்போது தான் அவர்களுக்கு சமூக அந்தஸ்து என்ற
நிலை அத்தியாவசியமாகி போனது.
இருவரும் ஒரே வீட்டில் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தாலும், வெளி உலகத்திற்கு ஆகச்சிறந்த நாயகன் நாயகியாக வேஷமிட்டார்கள் ....
அவர்களது பிறந்தநாள், மகனின் பிறந்த நாள், மென்பொருள் நிறுவனம் தொடங்கிய தினம், அவளது அழகு நிலையம் தொடங்கிய தினம் ... என அனைத்து
முக்கிய தினங்களையும் ஆடம்பரமாக ஊரைக் கூட்டி நடத்தி, தங்களது திருமண வாழ்க்கையின் அன்னியோன்யத்தை பலர் அறிய பறைசாற்றி ஆதர்ச தம்பதிகள் என்ற போலி பட்டத்தையும் பெற்றனர்.
வெளி உலகத்தில் சிறந்த தம்பதிகள் என்ற பட்டத்தை பெற்றாலும் , வீட்டில் எலியும் பூனையுமாய் காலம் தள்ளியதால், சில சமயம் விருது வழங்கும் விழா போன்ற சில முக்கிய நிகழ்வுகளுக்கு , மான்சி மேல் இருக்கும் கோபத்தில் ராணா கலந்து கொள்ளாமல் விட்டுவிட்டால்
மான்சி வீட்டை இரண்டாக்கிவிடுவாள் .
ஜாடை பேச்சு பேசுவாள் .... கையில் கிடைத்தை எல்லாம் தூக்கிப்போட்டு உடைப்பாள் .... வீட்டு வேலையாட்கள் முதல்
பெற்ற மகன் வரை வகைத்தொகை இல்லாமல் வசைப்பாடி தீர்ப்பாள் ....
ராணா எதிர்த்து பேச ஆரம்பித்தால் சண்டை வலுக்குமே ஒழிய முடிவே கிட்டாது ...
தாத்தாவிற்கு கொடுத்த வாக்கால், அவனாக அவளை விவாகரத்துச் செய்ய முடியாது.... அவளாக விவாகரத்து பெற்று சென்றால் தான் உண்டு ....
அதை அவள் இந்த ஜென்மத்தில் செய்ய மாட்டாள் என்பதால் ஒரு கட்டத்திற்கு மேல்,
மன நிம்மதியை காப்பாற்றிக்கொள்ள,
மற்றும் வேலைக்காரர்கள், பெற்ற மகன் முன்பாக மானத்தை காப்பாற்றிக் கொள்ளவும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தான்...... ....
அதிலிருந்து பெரும் பிரச்சனைகள் ஏதுமில்லாமல் வாழ்க்கை ஓரளவிற்கு மென்மையாகவே கழிய தொடங்கியது ...
சிறிது காலத்திற்கு பிறகு
தமிழகத்தில் தொழிலை விரிவு படுத்த பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்தனர் ....
தாமரை இலை தண்ணீராய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால வாழ்க்கை பனிக்கூழாய் கரைந்து கொண்டிருந்த நிலையில் தான் , மது ஸ்ரீயின் மறு அச்சாய் ஸ்ரீப்ரியாவை விதி காட்ட, நெருப்பில் எரிந்து போனவளை நீண்ட காலத்திற்குப் பின்பு காணொளியில் கண்டது, தணலோடு தவித்துக் கொண்டிருந்தவனின் மனதில் எரி எண்ணெய் ஊற்றியது போல்
உள்ளத்தின் அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மதுஸ்ரீயின் மீதான காதல் கொழுந்து விட்டெரிய, அதன் தீட்சண்யம் தாளாமல் தான் அலுவலகத்தில் மயங்கி சரிந்தான்.
ராணாவிடம் மெல்ல அசைவு தெரிய ...
இமைகளை சுமை ஏற்றிய லாரி போல்,
மெல்ல தள்ளாடி மலர்த்தினான்.
மருத்துவர் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மேலும் சில மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்து விட்டு,
"இவருக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் .....
இந்த டேப்லெட்ஸ் எல்லாம் கொடுங்க இவர் நிறைய தூங்கணும் .... நல்லா தூங்கினா தான் இனிமே தலைவலி வராது ..." என்று திலக்கைப் பார்த்து சொல்லிவிட்டு
"ராணா, நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் .... உங்க ஆபீஸ்ல புதுசா சேர்ந்திருக்கிற அந்த பொண்ண இம்மீடியட்டா வேலை விட்டு தூக்குங்க ....
அந்த பொண்ணை எந்த காரணத்தைக் கொண்டும் இனிமே நீங்க மீட் பண்ணவே கூடாது .... ஒருவேள நீங்க என் பேச்சை சீரியஸா எடுத்துக்காம, மீட் பண்ண ஆரம்பிச்சீங்கன்னா உங்க மனநிலையும் உடல் நிலையும் ரொம்ப மோசமாயிடும்.. ஜாக்கிரதை ...."
"ஓகே டாக்டர் .... தேங்க்யூ டாக்டர் ..."
என நல்ல பிள்ளை போல் மென்மையாக மொழிந்தவன் , மருத்துவமனையை விட்டு வெளியேறி கார் பார்கிங்கை அடைந்ததுமே,
"எனக்கு அவளோட ஃபுல் டீடைல்ஸ் வேணும்......... அவ பேர் என்ன .... என்ன படிச்சிருக்கா ... அவ அப்பா யாரு? எந்த ஊரு ..... எல்லாம்...எல்லாம் ... எல்லா டீடைல்சும் வேணும் .... மோனிஷா கிட்ட சொல்லி எனக்கு whatsapp பண்ண சொல்லு .... " ஏறக்குறைய கர்ஜிப்பது போல் அவன் சொல்லிக்கொண்டே செல்ல
"ராணா, இப்பதான் டாக்டர். ....ர்......ர்......"
என திலக் குறுக்கிட , அவன் எரி பார்வை பார்க்க, அஷ்டநாடியும் அடங்கிப் போனவன்
காரின் பின்பக்க இருக்கையில் ராணாவின் அருகில் அமைதியாக அமர, கார் டிரைவர்
வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்தினான்......
ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....
Super mam intersting
ReplyDeletethanks dr
DeleteOMG Sri ku periya problem vara poguthu polaye sis... Nalla ending la than mudipeenganu theriyum. Irunthalum neraya twist irukum pola
ReplyDeletetwistkka pancham ....athu intha kadhaila nerayave iruku da...thanks dr
DeleteSuper sema intersting ,, appam Mansi love unmai than,,, yen raana varthaiyala mansiya kollura,, Avan maraicha oru unmaiyala ava life fulla elanthu nikkira,, un kuzhanthaiya kuda yeppadi illainu unnala solla mudiyuthu, yentha pennum yethukka mudiyatha oru kutrachattu,,, raana unnoda puriyatha thanmaiyala ippam Sri priya vazhkkaiyum sethu kedukka pakura,,,
ReplyDeleteunga pointum correct da.... well said da
Deleteinteresting 💕💕💕💕💕💕💕
ReplyDeletethanks dr
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDelete