ஸ்ரீ-ராமம்-109

 அத்தியாயம் 109


திருமணம் முடிந்த கையோடு ராணாவின் பெற்றோர் மணமக்களை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.


இயல்பான தம்பதி போல் ராணாவின் அறையை மான்சி பகிர்ந்து கொண்டாலும்,  அவர்களுக்கிடையேயான இடைவெளியை அவன் தெளிவாக கடைப்பிடித்தான்.


அவன் சொன்னது போல், இரவு உணவிற்கு பிறகு  மாத்திரையை எடுத்துக் கொண்டு  படுக்கையில் விழுந்தவன், அடுத்த சில நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, அயர்ந்துறங்குபவனை  அதே படுக்கையில் படுத்தபடி  கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே சற்று நேரத்திற்கெல்லாம் அவளும் கண்ணுறங்கி போனாள்.


அவன் எவ்வளவு திடமானவன் என வந்த அந்த  ஒரு தினத்திலேயே  தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டாள்.


தன் அறையில்  ஒரு பெண் இருப்பதாகவே அவன் கருதவில்லை.


தான் உண்டு தன் வேலை உண்டு தன் மடிக்கணினி உண்டு என்றே காலத்தைக் கழித்தான் ..


தேவைக்கு தாய் தந்தையிடம் பேசினான்.

 தாய் செய்து வைத்த உணவை உண்டு விட்டு மறுநாளே அலுவலகம் சென்று விட்டான்.

இரவு 8 மணிக்கு மேல் வந்தவன்,  ஓரிரு வார்த்தைகள் தாய் தந்தையருடன் பேசியபடி  வழக்கம் போல் இரவு உணவு உண்டு முடித்தான்.


அவன் அருகில் அமர்ந்து கொண்டு அவளும்  உண்டாள் என்றாலும்   அவள் பக்கம் கூட அவன் திரும்பவில்லை. 


 நிர்பந்தத்தோடும் நிபந்தனையுடனுமே திருமணத்தை முடித்திருக்கிறான் என்பதை அவன் செயல்கள் சொல்லாமல் சொல்ல,அதனை  கண்டும் காணாதது போல் கவனித்துக் கொண்டிருந்தனர் வீட்டு பெரியவர்கள்.


இப்படியே ஒரு வாரம் கழிந்தது. 


ஒரு நாள் காலை அவன் அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கும் போது,


"ராணா,  உன் ஆபிஸ் கிட்டயே உனக்கு ஒரு பிளாட் வாங்கியிருக்கேன் .... ரொம்ப நல்ல ஏரியா .... டு பெட்ரூம் அபார்ட்மெண்ட் ரொம்ப நல்லா இருக்கு ..." என ஆதிகேசவன் தொடங்க, 


"இப்ப எதுக்கு தேவையில்லாம பிளாட் வாங்கினீங்க  .... " என்றான் மைந்தன் வேண்டா வெறுப்பாக. 


"நீ டிராபிக்ல ஆபீஸ் போய் வரவே கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுது .....  அதை மிச்சப்படுத்தனா உடம்புக்கும் நல்லது , உன் வேலைலயும்  அதிகம் கான்சன்ட்ரேட் பண்ணலாமே... அதுக்காகத்தான் ...."


"நீங்க எதுக்காக இதெல்லாம் பண்றீங்கன்னு எனக்கு தெரியும் ...." 


"தெரியுது இல்ல... அப்புறம் என்ன ....    கல்யாணம் பண்ணோமா குடும்பம் நடத்துனோமான்னு  இருக்கணும் .... "


"ப்ளீஸ்....  என்னை நிம்மதியா இருக்க விடுங்க...." என ராணா சொல்லிய மாத்திரத்தில், 


"உனக்கு உன் மேலயே நம்பிக்கை இல்ல .... அதனால தான் மான்சியோட தனியா இருக்க யோசிக்கிற ...." என்றார் தீபிகா வெடுக்கென்று. 


"என்னம்மா இது ...  ஏதேதோ  முட்டாள்தனமா பேசறீங்க .... அவ என்ன புலியா சிங்கமா .... எதுக்காக நான் அவளோட இருக்க யோசிக்கணும் ..."


"அப்ப அவ கூட தனி குடுத்தனம் போய் ப்ரூவ் பண்ணு ..." என மீண்டும் தீபிகா, அவனது தன்னகங்காரத்தை  தூண்டிவிட, அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல்,


"நீங்களே சொல்லிட்டீங்க ... இனிமே எனக்கென்ன   .... தனி குடித்தனம்  போயிடறேன் ....."  என்றவன்,  அதற்கு மேல் அங்கு நிற்காமல் இடத்தை காலி செய்தான்.


அடுத்த வெள்ளிக்கிழமையே முகூர்த்த நாளாக அமைந்ததால் அன்றே  ராணாவின் பெற்றோர்  புது வீட்டில்  புதுமனை புகுவிழா நடத்தி இளம் தம்பதியை குடித்தனம் வைத்தனர்.


அவன் தயங்கியது போலவே தனியாக வந்தததும்  அவனுக்கு சில சங்கடங்கள் இருக்கவே செய்தன.


அதில் மிகவும் முக்கியமானது  இரு வேளை உணவிற்காக மான்சியை சார்ந்திருப்பது.


ஆனால் மான்சியோ,  அவனது மனநிலையை அனுமானித்து  , அவனுக்கு விருப்பமான உணவுகளை , வேளா வேளைக்கு ருசியாக சமைத்து  உணவு மேஜையில் வைத்துவிட்டு , அவன் கண்களில் படாமல் தன் வேலையில் மூழ்கிப் போனாள்.



இப்படியாக  கொடுத்த வாக்கை காப்பாற்றும் படியாகவே நடந்து கொண்டாள்.


அவனிடம் எதையுமே  எதிர்பார்க்கவில்லை.  


சந்தர்ப்பமே அமைந்தாலும் அவனிடம் பேச விழையவில்லை . அதே சமயத்தில் அவனுக்கு தேவையானவைகள் அந்தந்த நேரத்தில் அவனைத் தேடி வருவது போல் பார்த்துக் கொண்டாள்.


அந்த நிமிர்வும்,  கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக  அவள் விலகி நடந்த பாங்குமே , அவன் மனதில் கனிவை விதைக்க முன்பு போல் ஒதுக்கம் காட்டாமல்  தோழியாய் பாவித்து இயல்பாக இருக்க முனைந்தான்.


நாட்கள் நகர நகர , பெண்ணவளுக்கு விலகி இருப்பது போல் நடிப்பது வெகு சிரமமாகி போனது. 


உள்ளுக்குள் ஏக்கமும் ஆற்றாமையும் கரையான் போல்  அணு அணுவாக அரிக்க, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு மிகவும் கடினப்பட்டு போனாள்.


ஒரு கட்டத்தில் மனமார காதலித்த மானசீகக்காதலனை அருகே வைத்துக்கொண்டு  விரதம் காப்பது,  அவளது மன உளைச்சலை அதிகப்படுத்த, அதற்கு தீர்வு காணும் பொருட்டு சிந்தனையை திசை திருப்ப ஆடை வடிவமைப்பில் இறங்கினாள்.


தையல் இயந்திரம் மற்றும் ஆடை வடிவமைப்பு தொடர்பான மூலப் பொருட்கள் அனைத்தையும்  தன் சேமிப்பிலிருந்தே வாங்கினாள். 


முதலில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் ஆடை வடிவமைத்து கொடுத்தவள்,  இரண்டு மாதத்தில் அவள் குடியிருந்த அடுக்குமாடி கட்டிடத்தில்  பெரும்பாலானோரின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்று, அவர்களை தன் வாடிக்கையாளராக மாற்றி முழு நேர தொழிலாகவே செய்ய ஆரம்பித்தாள்.


இடையில் கிடைத்த சொற்ப நேரத்தில் அழகு கலை பயிற்சியும் பெற்றாள்.


இயற்கையிலேயே  நேர்த்தியும் திறமையும் அமையப்பெற்றவளாதளால் ,  ஓரிரு மாதத்திலேயே அதையும் தெளிவாக கற்று தேர்ந்தாள்.


இந்நிலையில் அவளுக்கு ஒரு துணை நடிகையின் அறிமுகம் கிடைக்க,  அவளுக்கு  வடிவமைத்த ஆடைகள் மிகவும் பொருந்திப் போக,  அவள் மூலம் பல சினிமா துறையினரின் அறிமுகம் மான்ஸிக்கு கிட்ட ஆடை வடிவமைப்பு ஒரு புறம்  அழகுக்கலை மறு புறம்  என இரண்டிலும் கவனம் செலுத்தி,  சொற்ப நாட்களிலேயே சினிமா பின்னணியை கொண்ட  அதிக வாடிக்கையாளர்களை பெற்றாள்.


இரு படுக்கை அறையில்  ஒரு  அறையை தன் தொழில் ஸ்தலமாக  அமைத்துக் கொண்டு,  ராணா அலுவலகம் சென்றதும் முழுமூச்சாக அதிலேயே காலத்தை கழித்தவளுக்கு ,  எதிர்பார்ப்புகளால் ஏற்படும் மன உளைச்சல்கள் ஓரளவிற்கு  விலகியதோடு ,  நிறைவான வருமானமும் வர தொடங்கின .


மொத்தத்தில் இரு நண்பர்கள்,  ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினால் எப்படி இருக்குமோ,  அப்படி தான் அவர்களது மண வாழ்வு ஓடிக்கொண்டிருந்தது. 


இந்நிலையில் ஒரு நாள் வழக்கம் போல்,  அவன் காலை உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு, அலுவலகம் கிளம்ப முற்படும் போது , வழக்கத்திற்கு மாறாக உடல் வலியும் காய்ச்சலும் ஏற்பட, திலக்கை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லிவிட்டு ,  தன் அறைக்குச் சென்று முடங்கினான் .


அவன் வாய்விட்டுச் சொல்லவில்லை என்றாலும்,  அலுவலகம் செல்லாமல்  ஓய்வெடுத்தது அவன் உடல் நிலை  சரி இல்லை என்பதை உணர்த்த உடனே கார் ஓட்டுநரை தொடர்பு கொண்டு வரவழைத்தவள்,


"உங்களுக்கு உடம்பு சரியில்லைனு நினைக்கிறேன் .... வாங்க டாக்டரை போய் பார்த்துட்டு வந்துடலாம் ...." என்றாள் முதன் முறையாய் அவன் முகம் பார்த்து .


"டாக்டரை பார்க்கணும்னு அவசியம் இல்ல ஒர்க்லோட் ஹெவியா இருந்தது.... அதனால டயர்டா ஃபீல் பண்றேன்... தூங்கி ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் ..." என்று மறுத்தவனை பலவாறு சமாதானப்படுத்தி ஒரு வழியாக மருத்துவரை சந்திக்க அழைத்துச் சென்றாள்.


அவனை சோதித்துப் பார்த்த மருத்துவர் பாக்டீரியா தொற்று என கண்டறிந்து,  ஒரு வாரத்திற்கான மருந்து மாத்திரைகளை கொடுத்தனுப்ப,  தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும் அவன் அலுவலகம் செல்லாமல் ஓய்வெடுக்க,   உடனிருந்து தேவையான உணவு மற்றும் மாத்திரைகளை கொடுத்து மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொண்டாள்.


அதே சமயத்தில் எப்பொழுதும் கடைபிடிக்கும் விலகலை அவள் கடைப்பிடிக்க தவறவில்லை.


அப்படி அவன்  வீட்டில் இருந்த அந்த இரண்டு நாட்களிலும் ஆடை வடிவமைப்பு மற்றும் அழகு படுத்திக் கொள்வதற்காக வந்த வாடிக்கையாளர்களை கண்டு வந்த  இடத்தில் தனக்கான அடையாளத்தை சத்தமில்லாமல் உருவாக்கிக் கொண்டவளின் மீது அவனுக்கு சிறு ஈர்ப்பு ஏற்பட தொடங்கியது.


இதற்கிடையில், இளையவர்களுக்கிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள,  ராணாவின் பெற்றோர் ஓரிரு முறை வந்து தங்கியிருந்து விட்டு முன்பு போல் இல்லாமல் முகம் கொடுத்து பேசும் அளவிற்கு  அவர்களுக்கிடையே உறவு மேம்பட்டிருப்பதைக் கண்டு சிறு திருப்தியோடு புறப்பட்டு சென்றிருந்தனர்.


இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு நாள்,  அவன் அலுவலகத்திற்கு   கிளம்பிக் கொண்டிருக்கும் போது 


"ஜி,  இன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா ...."  என்றாள் மான்சி அவன் முகத்தை பார்த்தபடி லேசான தயக்கத்தோடு.


அவனோ அவள் முகம் பாராமல் மடிக்கணினியை பையில் திணித்தபடி

" ஏன்....." என்றான் அசுவாரசியமாக .


" இன்னைக்கு கர்வா சவுத்....  " எனத் தொடங்கி அவள் ஏதோ சொல்லிக்கொண்டே செல்ல, கர்வா சவுத்  என்ற வார்த்தையை தாண்டி வேறு எதுவும் அவன் காதுகளில் விழவில்லை .


அவனது  உணர்வுகள் இயல்புக்கு மாறாக விறைப்புத் தன்மையை கூட்ட,  ஒருவித உஷ்ணம் கண நேரத்தில்  உடலெங்கும் பரவ, சிலையாகிப் போனான் அவள் மனையான். 


தன் மதுஸ்ரீயோட  கழித்த அந்த ஓர் இரவு அவன் மணக்கண்ணில் படமாய் ஓட,  அதிலேயே திளைத்துப் போனான் .


மதுஸ்ரீ  அவன் அணுவோடு  கலந்தவள் ... 


வளர்சிதை மாற்றத்தின் காரணமாக புதுப்புது அணுக்கள் உருவாகிக்கொண்டே சென்றாலும்,  அதிலும் புத்துயிர் பெற்றுக் அவனோடு பயணித்துக் கொண்டே இருப்பவள் ....


அப்படிப்பட்டவளை இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவனால் மறக்க முடியாது ...


அதுதான் நிதர்சனம் .... அதனை அவன்  நன்கு அறிவான் ....


அதே சமயத்தில்,  மான்சியின் மீது அவனுக்கு கோபமோ வருத்தமோ இல்லை ... 


கொடுத்த வாக்கினை காப்பாற்றும் தெளிவு,  தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு பயணிக்கும் நிமர்வு ஆகியவற்றால் கவரப்பட்டு தோழியாக ஏற்றிருந்தவனுக்கு ஏனோ அவளை  மனைவியாக ஏற்றுக் கொள்ள  மனம் வராமல் போக,  உள்ளுக்குள் தடுமாறிக் கொண்டிருந்தான்.


 மஞ்சத்தில் மனைவியாக இல்லை என்றாலும், மனைவி என்ற  ஸ்தானத்தை மட்டும்  விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதை  அவளது செயல்கள் சொல்லாமல் சொல்ல,  ஓரிரு கண அமைதிக்குப் பிறகு ,


"வர பார்க்கறேன்  ...." என்ற பதிலை பொத்தாம் பொதுவாக மொழிந்து விட்டு எதிலிருந்தோ  தப்பிப்பது போல் துரிதமாக வெளியேறினான். 


அன்றைய தினம் முழுவதும் , தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து அவள் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட, அலுவலகத்திற்கு வந்தவனோ மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தான். 


மதுஸ்ரீ இருந்த இடத்தில் மான்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறினான்.


மதுஸ்ரீ கடந்த காலம்... மான்சி நிகழ்காலம்...

கடந்த காலத்தை மறந்து விட்டு நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வது தான்  நிதர்சனம் என மனம் போதிக்க, பானகத்துரும்பாய் உருவகப்படுத்த முடியாத ஏதோ ஒன்று அதற்கு  முட்டுக்கட்டை போட , முடிவுக்கு வர முடியாமல் திண்டாடிப் போனான். 


ஆனால் கடிகாரம் தன் பணியை செவ்வனே செய்ய, சூரியன் மறைந்து  பௌர்ணமி ஒளிரத் தொடங்கியது.


மணி ஏழு ஆனது....  எட்டானது.... ஒன்பதையும் கடந்தது.  


அவனுக்கு வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை....


"யாரை பழி வாங்கற .... மான்சியயா... இல்ல உன்னையே வா ..." என்ற திலக்கின் குரல்,  அவனை நிகழ் உலகிற்கு கொண்டு வர, 


"அது வந்து .... இல்லடா ..." எனத் தடுமாறி அவன்  வார்த்தைகளை தேட,


"மான்சி காலையிலிருந்து சாப்பிட்டு இருக்க மாட்டான்னு உனக்கு தெரியுமில்ல... இப்ப எதுக்காக இங்க வெட்டியா பொழுதை கழிச்சுகிட்டு இருக்க ..... செத்துப் போனவள நினைச்சுக்கிட்டே இருக்கிறவளையும்  சாகடிக்க பாக்கறயா .... மதுஸ்ரீ இறந்து எவ்ளோ வருஷமாயிடுச்சு ... அவங்க அக்காவே இன்னொரு குழந்தைய பெத்துகிட்டு சந்தோஷமா தான் இருக்காங்க ... அவங்க அம்மா அப்பாவும் வியாபாரத்துல அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க .... ஆனா நீ மட்டும் அவளையே  நினைச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை மட்டுமில்லாம மான்சியோட வாழ்க்கையையும் கெடுத்துக்கிட்டு இருக்க.. " 

என திலக் காட்டமாக சாட,  பதிலற்றவன், அதற்கு மேல் அங்கு நிற்காமல் நண்பனுக்கு பதில் அளிக்கும் வகையில் வீட்டிற்கு நடையை கட்டினான்


நேரம் கடந்தும் கணவன் வராததைக் எண்ணி  வருந்தியவள்,


பணிச்சுமை காரணமாக மறந்து விட்டானா ...

தொடர்பு கொண்டு அழைக்கலாமா.......

 என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே , லேசான இறுகிய முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்தவன்,  அவளை  கண்டு  இமைக்க மறந்து லயித்துப் போனான்.


சிவப்பு நிற பனாரசி பட்டுப்புடவையில்,  அலங்கரிக்கப்பட்ட தங்க சிலை போல் நடை பயின்றவள் சாட்சாத் அவனது மதுஸ்ரீயாகவே  காட்சி அளிக்க , அசைவற்று நின்றவனிடம்,


"ஒருவேளை மறந்துட்டீங்களோனு நினைச்சு,  போன் பண்ணலாம்னு இருந்தேன் .... தேங்க் காட்  நீங்களே வந்துட்டீங்க ... வாங்க மொட்ட மாடிக்கு போலாம் ..."  என்றவள்,  அவனது பதிலுக்கு காத்திராமல் , பௌர்ணமி பூஜைக்கு தேவையானவைகள் அடங்கிய கூடையை எடுத்துக் கொண்டு மின் தூக்கியில் நுழைய,  உடன் அவனும் பின் தொடர்ந்தான்.


பாலாய் பொழியும் பௌர்ணமியை சல்லடையினூடே பார்த்துவிட்டு , தன்னவனின் முகத்தை லேசான வெட்கத்தோடு அவள் நோக்க, அந்தப் பார்வையின் வசீகரத்தில் கரைந்து காணாமல் போனவன் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல்,  அவளது வகுட்டில் குங்குமம் இட்டு , அவளுக்கு தண்ணீர் இனிப்புகள் என ஒன்றன்பின் ஒன்றாக வழங்கி உண்ணச் செய்து  அவளது விரதத்தை முடிக்க, மனம் குளிர்ந்து போனாள் மங்கை .


மீண்டும் மின் தூக்கியில் பயணிக்கும் போது அவள் அவன் முகத்தைப் பார்க்க, அவனோ தறி கெட்டு ஓடும் மனதை அடக்க, வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.


இருவரும் வீட்டுக்குள் நுழைந்ததும்,  புத்துணர்வு பெற்று  இலகு உடைக்கு மாறி வந்தவனுக்கு அவள்  உணவு பரிமாறிவிட்டு  தானும் உடன் அமர்ந்து உண்ண தொடங்க, அவன் கையும் வாயும் உணவு உண்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாலும், அவன் மனம் எங்கும்  மதுஸ்ரீயின் மாயத் தோற்றங்கள் மின்ன மின்னி மறைந்து கொண்டிருக்க அருகில் இருப்பவள் 'மான்சி'  என ஆயிரம் முறை அவனது மூளை  அறிவுறுத்தினாலும்,  மனக்கண்ணில் தோன்றும் மாயத் தோற்றம் மது ஸ்ரீயாகவே தெரிய , முடிவுக்கு வர முடியாமல் அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே மாட்டிக்கொண்டு அல்லாடி கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில்  வேகவேகமாக உண்டு முடித்து விட்டு , விட்டால் போதுமென தன் அறைக்குச் ஓடிவிட்டான்.


பத்து நிமிடம் கழிந்திருக்கும்...


அறை கதவு திறக்கும் சத்தம் கேட்க, நடை பயின்று கொண்டிருந்தவன் திரும்பிப் பார்த்தான். 


"சாரி,  இதை கைல கட்ட மறந்துட்டேன் ..." என்றவள் நெருங்கி வந்து அவன் வலக்கரத்தை பற்றி துர்கா மாதாவின் கோவிலில் கொடுத்த சிவப்பும் மஞ்சளும் கலந்த நூலை கட்டி முடிக்க,  அவன் மனக்கட்டுப்பாடு கட்டோடு அவிழ, விலக முயன்றவளின்  கரம் பற்றி நிறுத்தி, தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.




மான்சியின் நிஜத் தோற்றம் மறைந்து, மதுஸ்ரீயின் நிழல் தோற்றம் அவனை முற்றிலும்  ஆக்கிரமிக்க , மெல்ல முன்னேறி அவள் இதழை சிறைப்பிடித்தவன்  சற்று இளைப்பாறிய பின் மேலும் முன்னேற, மணாளனின் திடீர் நெருக்கம் மங்கையை மயக்க,  தூக்கிச் சுமந்திருந்த தாபத்தையும் மோகத்தையும் தயக்கம் இன்றி தணித்துக்கொள்ள அவளும் ஒத்துழைக்க, பூமேனியாளை பூமாலையாய் சுமந்து படுக்கையில் இட்டவன் மறு நொடியே புயலாய் மாறி பூம்பாவையை முழுவதுமாய் ஆட்கொண்டான். 


 அணு அணுவாய் அள்ளிப் பருகி ஆடிக் களைத்தவன் , அவளை அணைத்தபடியே ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல,  மன்னவனின் ஸ்பரிசம் கொடுத்த நெருக்கம் மான்விழியாளின் உறக்கத்திற்கும் வழி வகுக்க, இருவரும் மெய்மறந்து நித்திரையை தழுவினர்.


மதுஸ்ரீயின்  இறப்பிற்கு பின் முதன்முறையாய் மருந்து மாத்திரைகள் இன்றி,  அயர்ந்து உறங்கினான்...


நீண்ட நாள் தாபமும் மோகமும் பூர்த்தி அடைந்த நிம்மதியில் மங்கையும்  புளங்காங்கிதமாய்  துயில் கொண்டாள் ....


மறுநாள் காலை அவள் கண் விழிக்கும் போது மணி எட்டை கடந்திருந்தது.


அவளவன்  வீட்டில் இல்லை என்பதற்கு அடையாளமாக அவனது மடிக்கணினியும் அலுவலக  பையும் மேஜையில் இருந்து காணாமல் போயிருக்க,  லேசான யோசனையில் மூழ்கிய படி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.


புத்துணர்வு பெற்று வந்தவள் தன்னவனை  தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாமா என்ற எண்ணத்தில் இருக்கும் போதே  , இரு சினிமா துணை  நடிகைகளுக்கு அலங்காரம் செய்ய வேண்டி இருப்பது நினைவுக்கு வர,

மதிய உணவு இடைவேளையில் தொடர்பு கொள்ளலாம் என முடிவெடுத்து தன் வேலையில் மூழ்கிப் போனாள்.


எண்ணியது போல் மதிய உணவு வேளையின் போது அவனது அலைபேசிக்கு அழைப்பு விடுத்தாள் .....


அடித்து அடித்து அடங்கியதே ஒழிய அலைபேசி எடுக்கப்படவேயில்லை ....


ஆழ்ந்து சிந்தித்ததில் காரணம் விளங்க,  காரிகையின் கண்கள் குளமாகிப் போயின. 


அலுவலகத்தில் இருந்தவனுக்கோ நேற்றைய இரவின் எச்சங்கள் மிச்சங்களாய் மனமெங்கும்  வலம் வர , மான்சியோடு மஞ்சத்தில் இருந்தது,  ஏதோ ஒரு வகையில் குற்ற உணர்வை கொடுக்க அதிலிருந்து வெளியேற முடியாமல்  தடுமாறிக் கொண்டிருந்தான்..


ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை .....


நீண்ட நாட்களுக்குப் பிறகு  நேற்றைய இரவு தான் அவன் உடலும் உள்ளமும்  செயற்கையாய் உறங்காமல் இயற்கையாய்  உறங்கியிருந்தது ...


காலையில் கண் விழிக்கும் போதும்  வழக்கமாய் இருக்கும் மெல்லிய தலைவலியும் சோர்வும் கூட காணாமல் போயிருந்தது ...


 அவளை ஏற்றுக் கொண்டதற்கு  அடையாளமாக அவனது உடலும் ஆழ்மனமும்  நேர்மறையாக செயல்பட்டிருப்பதை உணர்ந்தாலும் , காரணம் புரியாத ஏதோ ஒன்று ஆட்சேபம் தெரிவித்துக் கொண்டே இருக்க , நீண்ட நேரமாக போராடியவன் கடைசியில் ஒரு முடிவு எடுத்துவிட்டு, மாலை மங்கிய வேளையில் வீடு வந்து சேர்ந்தான். 


வந்தவனை எப்பொழுதும் போல் எதிர்கொண்டாள் அவன் மனையாட்டி. 


வழக்கம் போல் இரவு உணவு மேஜையின் மீது ஆவி பறக்க காத்திருக்க ,  உடைமாற்றிக் கொண்டு வந்து உண்ண ஆரம்பித்தவனோடு,  இணைந்து கொண்டாள் பெண் .



இருவரின் உணர்வுகளும் உள்ளுக்குள்  உச்சஸ்தாயில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், கடிகாரத்தில் நொடி முள் நகரும் ஒலி,  பரிமாற மற்றும் உண்ண பயன்படுத்தும் கரண்டியின் ஒலிகள் மட்டுமே அங்கு ஒலித்துக் கொண்டிருந்தன ...


தான் பேசப்போவதை அவன் மனதில்  சரி பார்த்துக் கொண்டிருக்க,  பெண்ணவளோ அவன் சொல்லயிருப்பத்தை அனுமானித்து அதற்கான பதிலை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.


இப்படியாக இரவு உணவு முடிந்ததும், வழக்கம் போல அவன் தன் மடிக்கணினியில் மூழ்க,  அவளோ விடுபட்ட வேலைகளை முடித்துவிட்டு லேசான ஆசுவாசத்தோடு அறைக்குத் திரும்ப,


"மான்சி .... நீ நாளைக்கே ஊருக்கு கிளம்பு ..." என்றான் முதன் முறையாய் அவள் பெயரைக் குறிப்பிட்டு அழைத்து.


எதிர்பார்த்ததுதான் என்பதால்,


"ஏன்...." என்றாள் பெண் ஆராய்ச்சிப் பார்வையோடு. 


"அது வந்து ..... நேத்து நடந்தது ....என்னோட தப்பு .... இனிமே அப்படி நடக்காம இருக்கணும்னா நீ உன் வீட்டுக்கு போறது தான்  நல்லது ...."


" நடந்ததுல  தப்ப என்ன இருக்கு.... நாம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் .... இதுல கில்ட்டி யா ஃபீல் பண்ண ஒண்ணுமே இல்லையே ...." என்றாள் பெண் அமர்த்தலாக.


"இங்க பாரு மான்சி.... நா... நான் .... நேத்து ....  மதுவை தான் நினைச்சேன் .... மதுதான் என் மனசுல இருந்தா .... நீ இல்ல ... அது தப்பு .... அதான் ...."


" தெரியுமே... உங்க மனசுல மது தான் இருந்தான்னு .... அதான் மது மதுனு நேத்து பல தடவை  சொன்னீங்களே .... "


அவன் முகம் சிவந்து தலை குனிய,


" உண்மைய சொல்லனும்னா  அப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது .... ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்து  தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்....   அதனால என்னை நானே தேத்தி கிட்டேன் .................... ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு என்னைக்காவது ஒரு நாள்,  உங்க மனசுல நான் இருப்பேன்.... நான் மட்டும் தான் இருப்பேன்னு...." என்றவள் அவன் மார்பில் தலை சாய,  வேறு சிந்தனை ஏதுமின்றி அவளை தன்னோடு பிணைத்துக் கொண்டான்.


நாட்கள் அழகாக நகர்ந்தன ....


100% மனைவியாக அவள் அர்ப்பணிப்போடு  நடந்து கொள்ள,  இயல்பான கணவனாக இருக்க அனு தினமும் முயற்சித்து ஓரளவிற்கு வெற்றியும் கண்டான் ராணா. 


சில நாட்கள் அவளாக அணுகினாள்.... 


சில நாட்கள்  அவனும் நாடினான்...


மருந்து மாத்திரைகளை விட,  அவள் முந்தானையில் மனம் தொலைப்பது நிம்மதியை அளிக்க, மற்ற எண்ணம் ஏதும் இல்லாமல் மண வாழ்க்கையை மனம் உவந்தே வாழத் தொடங்கினான். 


அதே சமயத்தில் அவன் மதுஸ்ரீயை மறந்தானா...? என்றால் இல்லை என்பது தான் உண்மை ....


என்னதான் அவன் மான்சியோடு உள்ளத்தோடும் உடலோடும் ,  ஒன்றினாலும் ஏனோ மதுஸ்ரீயிடம் தான் காட்டிய இணக்கத்திற்கு அது ஈடு இணை இல்லை என்று அவனுக்கே தோன்றியது ....


அதில் மான்சியின் பிழை ஏதுமில்லை ...அவள் நல்லவள், நேர்மையானவள், எதிர்பார்ப்பே இல்லாமல் அன்பு செலுத்துபவள் ....


மதுஸ்ரீ தன் முதல் காதலி  என்பதால், எளிதில் மறக்க முடியாமல்   சிரமப்படுகிறோம்... என தனக்குத் தானே அறிவுரை கூறிக் கொண்டவன் தன் ஆழ்மனதை மறைத்து,  இயல்பாக இருக்க விழைந்தான். 


இப்படியாக இருவரும் தத்தம் பணியில் கவனம் செலுத்தியபடி இணக்கமாக வாழ்ந்தனர் ....


இரு மாதங்கள் இனிக்க இனிக்க கழிந்தன ...


இந்நிலையில் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து திரும்பியவனை மிக ஆவலோடு வரவேற்றவள், 


" டாக்டர பார்க்க போலாமா ..."

என்றாள் கண்களில் காதலோடு .


"ஏன் உடம்பு சரி இல்லையா ..."


" உண்டாயிருக்கேனோனு தோணுது .... கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்னு ..."


மருத்துவமனை வளாகத்தில் அவன் மதுஸ்ரீ லேசான வெட்கத்தோடு அவனிடம் மொழிந்த காட்சி , ஒரு கணம் திரைப்படமாய்  மனக்கண்ணில் ஓடி மறைய,  தலையை குலுக்கி சுதாரித்தவன்,


"வாவ் சூப்பர்ப்... வெயிட் எ மினிட் ....  டிரஸ் மாத்திட்டு வந்துடறேன் .... இப்பவே கிளம்பலாம் ..." என்றவன் துரிதமாக புத்துணர்வு பெற்று வந்து,  அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.


எதிர்பார்த்தது போலவே அது இன்பச் செய்தியாக இருக்க, தன் பெற்றோர்,  தாத்தா பாட்டி, அண்ணன் அண்ணி,  நண்பன் திலக் என அனைவருக்கும் தெரியப்படுத்தி மனமகிழ்ந்து போனான்.


ஓய்வு தேவை என்று  மருத்துவர் அறிவுறுத்தியதால், குழந்தை பிறக்கும் வரை வேலையை விட்டு விலகி இருக்கும்படி அவன் சொல்ல, சிரமம் இல்லாத வேலைகளை மட்டும்  செய்வதாகவும்,  மற்றதை தன்னிடம் பயிற்சிக்கு வந்திருக்கும் இரு பெண்களை வைத்து செய்வதாகவும் அவள் பதிலளிக்க , அரைகுறை மனதோடு ஏற்றான்.


 இப்படியாக ஒரு வாரம் கழிய, ஒரு நாள் அவன் அலுவலகத்தில் இருக்கும் போது ராஜ்குமாரிடமிருந்து அழைப்பு வந்தது .


 தன் மனைவி சாந்தினியின்  (ராணாவின் பாட்டி) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்,  துரிதமாக கிளம்பி வருமாறு அவர் கேட்டுக் கொள்ள,  அடுத்த விமானத்திலேயே தன் தாய் தந்தை மனைவியோடு ராஜஸ்தானிற்கு பயணப்பட்டான் , இனி தன் திருமண வாழ்க்கையை நரகமாக உணரப் போகிறோம் என அறியாமல்.


ஸ்ரீராமம் வருவார்கள் ...

Dear friends,

UD-110 is also updated.


with love 

Priya Jagannathan















































































 



















 

















































  








Comments

Post a Comment