ஸ்ரீ-ராமம்-108

 அத்தியாயம் 108


சம்பவ இடத்தில் நடந்த ஆய்வறிக்கைகள்,  வாக்குமூலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு  ராஜ்குமாரிடம் படித்துக் காட்டி கையொப்பம் பெறப்பட்டு, அதன் நகலும் அவரிடம் கொடுக்கப்பட்ட பின்னர் மருத்துவ குழு மற்றும் காவல்துறையினர் விடைபெற, உறவுகள் அனைத்தும் உடன் இருந்ததால்  தன் மகளின்  கருகிப்போன உடலை மேலும்  காக்க வைக்க மனம் இல்லாமல் இறுதிச் சடங்கை மனம் கனத்தபடி செய்து முடித்தார் மகாவீர்.


மறு  தினமே உறவினர்கள் கூட்டம் கலைய, மருத்துவமனையில் கோமாவில் இருக்கும்  மைந்தனைப் பார்த்துக் கொள்ளவும், மெல்ல உடல் நலம் தேறி வரும் தன் தாயை கவனித்துக் கொள்ளவும் தீபிகாவும் ஆதி கேசவனும் பெங்களூருக்கு செல்லாமல் அங்கேயே தங்கினர்.


இப்படியே பத்து நாட்கள் கழிய, ராஜ்குமாரின் மனைவி ஓரளவிற்கு உடல்நிலை தேறிய நிலையில் வீடு திரும்பினார். 


நடந்து முடிந்த துயர சம்பவம் அவர் காதுகளை எட்டி விடக்கூடாது என்ற காரணத்தால் ராணா மற்றும் அவனது திருமணத்தை குறித்த அவரது கேள்விகளுக்கு,  ஏதேதோ சொல்லி சமாளித்தனர்  உற்றார்  உறவினர்கள். 


சரியாக மதுஸ்ரீ இறந்து பதினாறாவது நாள் ராணாவிற்கு நினைவு திரும்பியது.


மருத்துவர்கள் குழு  நன்கு பரிசோதித்து விட்டு அவனது  உடல் நிலையில் தரமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட பின், செவிலியர் மூலம்  ராஜ்குமார் , திலக்கிற்கு தெரிவிக்க,  மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கியவர்கள்  இளையவனை சந்திக்க அவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு  விரைந்தனர். 


பாட்டனையும் நண்பனையும் அறிந்து கொண்டதற்கு அடையாளமாக  முகத்தில் சிறு  புரிதலை காட்டியவனின் மனம், மதுஸ்ரீயின் மரணத்திலேயே  நிலைத்து நின்றதால்   மிகுந்த ஆயாசத்தோடு அதற்குப் பின்பான நிகழ்வுகளை கேட்டறிய தொடங்கினான்.


அவனது நிலைமையை அறிந்து ராஜ்குமார் மேம்போக்காக  சொல்லி முடித்ததும்,  கண்ணீர் விட்டுக் கலங்கியவன்


"மதூ..... என் குழந்தை .... எல்லாம் போயிட்டாங்க.... இனிமே நான் மட்டும் உயிரோட இருந்து என்ன செய்யப் போறேன் ... என்னை மட்டும் ஏன் காப்பாத்துனீங்க ....  ப்ளீஸ் என்னை கொன்னுடுங்க ...."  


என ஜெபிப்பது போல் திரும்பத் திரும்பச் சொல்லி  பெருங்குரலெடுத்து கதறி துடித்தான். 


நேரமாக ஆக ஆக,  அவனது கதறல்கள் ஆவேசமாக மாற, நிலைமை கை மீறி போவதை உணர்ந்த  மருத்துவர்கள் உடனே   மயக்க மருந்தை செலுத்தி அவனை அமைதிப்படுத்தினர். 


ராணா உறக்க நிலைக்கு சென்றதும், சோர்ந்த முகத்தோடு அறையை விட்டு வெளியேறிய ராஜ்குமாரை பின் தொடர்ந்த திலக்,


" தாத்தா,  ராணாவுக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு எனக்கு பயமா இருக்கு அவன் பேசறதே புரியல.... அது என்ன குழந்தை.... ஒருவேளை மது ஸ்ரீயை தான் அப்படி சொல்றானா .... ஏன் இப்படி வித்தியாசமா  உளர்றான் ..."  


என ஆதங்கத்தோடு கேள்வி எழுப்ப,


"அவன் சரியாத்தாம்ப்பா  சொல்றான் ..." 

என்றவர்,  ராணாவும்  மதுஸ்ரீயும் கணவன் மனைவியாக வாழ்ந்ததோடு,  அவனது வாரிசு மதுஸ்ரீயின்  வயிற்றில் வளர்ந்ததையும் கூற,  உறைந்து நின்றான் திலக்.


"பொதுவா காதலிச்ச பொண்ணு கூட  மூணு நாள்ல கல்யாணங்கிற நிலைமையில  இப்படி நடந்தாலே,  எந்த ஒரு மனுஷனாலயும் தாள முடியாது .... ஆனா என் பேரன்  ஸ்ரீயோட குடும்பமே நடத்தி,   குழந்தைக்கு தகப்பனாக போற சந்தோஷத்துல  இருக்கும் போது இப்படி நடந்தா ... எப்படி தாங்க முடியும்...  அதான் இப்படி ஆயிட்டான் ...... " 

என முடித்தார் பெரும் கவலையாக.



மேலும் இரு வாரங்கள் மெல்ல நகர்ந்தன ...


ராணாவின் உடல் நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் அடைந்தாலும்  மனநிலையில் பெருத்த மாற்றம் ஏதுமில்லை ...


சதா சர்வ காலமும் , காலம் கடந்த தன் காரிகையை எண்ணியே கலங்கி துடித்துக் கொண்டிருந்தான் ....


கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் காலவேலான் ....


என்ற அற்புத வரிகளை கம்பர் கம்பராமாயணத்தில்  அருமையாக  எழுதியிருப்பார் ...


அதாவது  ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் தசரதனிடம் ராமனைக் தன்னுடன் காட்டுக்கு அனுப்புமாறு கேட்ட போது, பிறவியிலேயே கண் இழந்தவனுக்கு  பார்வையை கொடுத்துவிட்டு,  சகல விதமான சந்தோஷங்களையும் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அதனைப் பறித்தால் அவன் எவ்வளவு துயரப்படுவானோ  அந்த அளவிற்கு தசரதன் துயரப்பட்டான் ... என்ற உவமையோடு எடுத்துரைத்திருப்பார் .


அது போல , தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றிருந்தவனுக்கு,  திடீரென்று காதலை கொடுத்து,  அந்தக் காதலும் யாதொரு எதிர்ப்பும் இல்லாமல் கல்யாணத்தில் முடியவிருக்கும் தருவாயில், எதிர்பாராத  கூடலும் ஏற்பட்டு அந்த கூடலால் குழந்தையும் உருவாகி பெருத்த பேரானந்தத்தில் திருமணத்திற்காக காத்திருந்த வேளையில் திடீரென்று  புயலில் சிக்கிய பாய்மரப் படகாய் அனைத்துமே கைவிட்டுப் போக, உணர்வுகள் அனைத்தும் வற்றிய நிலையில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடைப்பிணமாய் கடும் துயரத்திற்கு உள்ளாகிப் தவித்துக் கொண்டிருந்தான்  நாயகன் .


அவனது மனநிலையை அறிந்து,  தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு நாள் , அனைவரும்  சற்று அசந்திருந்த நேரத்தில்  மருத்துவமனையின் பால்கனியில் இருந்து அவன் தற்கொலைக்கு முயல, அப்போது பார்த்து  எதேச்சையாக அங்கு வந்த செவிலியர் சத்தம் போட்டு ஊரைக் கூட்ட, கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றப்பட்டான்.


செய்தி அறிந்து துடிதுடித்துப் போன ராஜ்குமார் உடனே  பேரனை சந்தித்து,


"இந்தக் கிழவன் வாழுறதே , என் பேர புள்ளைங்க உங்க ரெண்டு பேருக்காகவும் தான்...  நீ இப்படி எனக்கு முன்னாடி போய் சேர முடிவு பண்ணா,  உன் பொணத்தோட என் பொணத்தையும் எடுக்க வேண்டிய நிலைமை வரும்... பரவாயில்லையா ..." என்றார் கோபமும் ஆதங்கமுமாய்.


"என்ன தாத்தா இப்படி ஏதேதோ பேசறீங்க ..."


"வாழவேண்டிய காலத்துல நீ வாழாம சாகப்போகும் போது,  சாக வேண்டிய காலத்துல நான் சாகுறது ஒன்னும் தப்பில்லையேப்பா..."


"என்னால மது இல்லாம இருக்க முடியல தாத்தா ..... எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்துட்டேன் ....  மறக்கவே முடியல ...  கண்ண மூடினா அவ கருகி செத்துப் போனது தான் படமா ஓடுது ...  உடனே தாள முடியாத அளவுக்கு தலைவலி வந்துடுது ... அவ இல்லாம வாழ முடியாது இந்த தலைவலியோடயும் என்னால வாழ முடியாது  .... அதான் ஒரேடியா போய்ட்டா எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிட்டுமேனு அப்படி ஒரு முடிவு எடுத்தேன் ..."


"தப்பு ப்பா... யாருக்கு தான் கவலை இல்ல... கஷ்டம் இல்ல... இந்த உலகத்துல மனுஷனா பொறந்த அத்தனை பேருக்கும் கவலையும் கஷ்டமும் இருக்கத்தான் செய்யுது...  அதோட தான் வாழ பழகிக்கணும் ... கவலைக்கும் கஷ்டத்துக்கும் சாவு தான் தீர்வுன்னா இந்த உலகத்துல யாருமே வாழ முடியாதுப்பா.... "


இளையவன் தலை குனிய,


"இங்க பாரு  ராணா...  இந்த தாத்தா பேச்சை எப்பவும் கேட்ப இல்ல .... "


அவன் ஆம் என்பது போல் தலையசைக்க,


"அப்ப எனக்கு ரெண்டு சத்தியம் பண்ணி கொடு ...."


அவன் புரியாமல் பார்க்க,


"என்னடா தசரதன் கிட்ட கைகேயி கேட்ட  மாதிரி நான் உன்கிட்ட கேக்கறேன்னு நினைக்கிறயா ...."


" அது வந்து ....."


"இங்க பாருப்பா .... கைகேயி தசரதன் கிட்ட கேட்டது சுயநலத்துக்காக,  நான் உன்கிட்ட கேட்கிறது உன்னோட நலத்துக்காக.."


"இனிமே நான் நல்லா இருந்து என்ன ஆகப்போகுது தாத்தா ...."


"இனிமே தான் நீ நல்லா இருக்கணும் ...  இந்த கிழவனுக்காக நல்லா இருக்கணும் ... சரி இந்த மாறியான பைத்தியக்காரத்தனத்தை  இனி செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடு....."


அவன் அமைதி காக்க,


"நீ வளர்ந்துட்ட பா ... உனக்கு எப்பவும் நாங்க காவல் இருக்க முடியாது .... உன் வாழ்க்கையை நீ முடிவு பண்ண வேண்டிய கட்டத்துக்கு வந்துட்ட .... அதனால இனிமே இந்த மாறி  செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடு ..." 


அவர் தன் கரத்தை நீட்ட,  மிகுந்த மனபாரத்தோடு  அதில் தன் கரத்தை இளையவன் பதிக்க, 


"வாக்கு மாற மாட்டேன்னு நம்பறேன் .... இன்னொரு சத்தியம் நேரம் வரும் போது கேட்பேன் ..."  என்று கூறிவிட்டு பெரியவர் இடத்தை காலி செய்ய,  இருந்த ஒரே வழியும் அடைபட்டுப் போனதை எண்ணி கலங்கியபடி உறைந்த நின்றான் நாயகன். 


சில தினங்களுக்குப் பிறகு,  ஓரளவிற்கு உடல் நிலை  தேறியதும்,  அவனை அவன்  பெற்றோர்கள் பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.


இடமாற்றம்  அவன் மனப் போராட்டத்திற்கு மருந்தாக அமைந்தாலும், சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உழைக்களம் என்பது போல், எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தவனின் மனதில்    மதுஸ்ரீயை பற்றிய நினைவுகளே வலம் வர  அதிலிருந்து தப்பிக்க விடுபட்ட படிப்பில் கவனம் செலுத்தி ,  பட்டம் பெற்றான்.


பிறகு வளாக நேர்காணலில் தேர்வாகி இருந்த  நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான்.


அவன் இருந்த மனநிலைக்கு,  அந்தப் பணி யானை பசிக்கு சோளப் பொறியாகிப்போனது.


காலையில் 9 இல் இருந்து மாலை ஏழு வரை மட்டுமே பணி இருந்ததால் மீண்டும் அவன் மனதை மதுஸ்ரீ ஆக்கிரமிக்க   தடுமாறிப் போனவனுக்கு திடீர் சிந்தனையாய் மென்பொருள் நிறுவனம் தொடங்கும் எண்ணம் பிறந்தது. 


24 மணி நேரமும்  வியாபார சிந்தனையில் இருந்தால் மட்டுமே, தன் வாழ்க்கை ஓடும் என்ற நிலையில் , துணிந்து முடிவெடுத்தவன்,  அதனை  செயல்படுத்த தன் தந்தை மற்றும் தாத்தாவிடம் கூற,  அவர்களும் உடனே பண உதவி செய்தனர்.


தன் நண்பர்கள் 10 பேருடன் ஒரு சுபயோக சுப தினத்தில் பத்துக்கு பத்து என்ற அறையில்  மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினான்.


முதலில் திட்ட வரைவுகளை பெறுவது சற்று சிரமமாகத்தான் இருந்தது.


ஆதிகேசவன் தனக்குத் தெரிந்த பெரும் நிறுவனங்களில் இருந்து,  திட்ட வரைவுகளின்  வெகு சிறு பகுதிகளை மட்டும் பெற்றுத் தர, அதனை தன் குழுவோடு பிழை ஏதும் இல்லாமல் குறித்த காலத்திற்கு முன்பாகவே ராணா முடித்து தர,  அந்தக் கணத்திலிருந்து அவனது மென்பொருள் நிறுவனத்தின் எதிர்காலம் தொடங்கியது. 


பத்து பேர் நூறு பேர் ஆனார்கள். ஈராண்டு உழைப்பிற்கு  பிறகு 100 பேர் 200 பேர் ஆனார்கள் இப்படியாக தொழில்துறையில் படிப்படியாக  முன்னேற தொடங்கினான். 


வீடு அலுவலகம் என்ற இரு சூழல்களைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்காமல்,  உண்ண உறங்க கூட மறந்து தீவிரமாக தொழிலை விரிவு படுத்தினான்.


என்னதான் நாட்கள் உருண்டோடினாலும்,  மன அழுத்தத்திற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இல்லாமல் இரவில் உறக்கம் வருவதில்லை என்பதால்,  மருந்தின் உதவியோடே உறங்கிக் கொண்டிருந்தான். 


காலம் வேகமாய் நகர , மேலும் ஈராண்டுகள் வெண்ணைப் போல் மென்மையாக கரைந்தன.


இந்நிலையில் ஒரு நாள்,  ராஜ்குமாருடன் நிலேஷ் தேசாய் ( மான்சியின் தந்தை) வியாபார விஷயமாக  பேசிக் கொண்டிருக்கையில்,  ராணாவின் திருமணத்தை குறித்து விசாரிக்க,


"அவன் இன்னும் மதுஸ்ரீ நினைப்பாவே இருக்கான் ...  நானும் பலமுறை பேசி பார்த்துட்டேன் .... பிடி கொடுத்து பேச மாட்டேங்குறான்... அதோட இன்னும் அவன் மாத்திரை மருந்துகளை எடுத்துக்கிட்டு தான் இருக்கான் .... இந்த நிலைல அவனுக்கு எப்படி கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க முடியும்.... யாரு பொண்ணு குடுப்பாங்க ..." என ராஜ்குமார் வருந்த ,


"ஏன் நான் என் பொண்ணை  கொடுக்க மாட்டேனா .... "


" மான்சியயா  சொல்ற...." 


"ஆமா ... எப்பவோ கேட்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் .... அதுக்கு இப்ப தான் சந்தர்ப்பம்  அமைஞ்சது ...நாங்க வேற இனங்கறதால வேணாம்னு சொல்லிடுவீங்களோனு  தயக்கத்துல இருந்தேன் .... சரி கேட்டு பார்த்தா தான் என்னன்னு தோணிச்சு ... அதான் இப்ப கேட்கறேன்  ..."


"இதுக்கு மான்சி சம்மதிப்பாளா...."


"அவ சொல்லி தானே நான் உங்ககிட்ட கேட்கறேன் ....வயசாயிட்டே போகுது கல்யாணமே வேணாம்னு சொல்றயேனு கேட்டதுக்கு,  கல்யாணம் கட்டினா ராணாவதான் கல்யாணம் கட்டுவேன், இல்லன்னா கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டா  ...  நாங்களும் எவ்வளவோ சொல்லி பார்த்தோம் .... அவ கேட்கிறதா தெரியல அதான் வேற வழி இல்லாம, வியாபாரம் பேசும் போது இத பத்தி உங்க கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வரலாம்னு வந்தேன்.... ..."

  

பெரியவர் சற்று தயங்க,


"மான்சிக்கு ராணாவ பத்தி எல்லாமே தெரியும்... அவரை புரிஞ்சு நடந்துப்பா... கவலைப்படாதீங்க ..." 

என மான்சியின் தந்தை தன்மையாக சொன்னதும்,  ராணாவிடம் பேசிவிட்டு முடிவு சொல்வதாக சொல்லிவிட்டு வந்தவர் ராணாவை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு,


"உன்னை பாக்கணும் போல இருக்கு அம்மா அப்பாவ கூட்டிட்டு ஒரு வாரம் வந்து இங்க இருந்துட்டு போப்பா ...." என்றார் நயந்து.


"தாத்தா... அது வந்து ....வேலை ..." என ராணா தடுமாற


"வேலை எப்பவும் இருந்துக்கிட்டே தாம்பா இருக்கும் .... இந்த தாத்தாவுக்காக ஒரு எட்டு வந்துட்டு போப்பா  ..."


பாட்டனின் பேச்சு அவன் மனதை இளக செய்ய,  மறுநாள் இரவே தாய் தந்தையோடு கோட்டா நகரத்துக்கு புறப்பட்டான்.


மதுஸ்ரீயின் இறப்பிற்கு பிறகு இப்பொழுது தான் இங்கு வருகின்றான்.


தொழில் முறை கொடுத்த தன்னம்பிக்கையும் கௌரவமும் முன்பை காட்டிலும் அவனை வெகு கம்பீரத்தோடு காட்ட,  அந்த தோரணையை கண்டு பெரியவர் வியக்க, அவனோ  உள்ளுக்குள் சில்லு சில்லுல்களாக உடைந்து கொண்டிருந்தான்.


அந்த வீட்டின் பெரும்பாலான இடங்கள், அவனவளை நினைவு படுத்த,  தெளிந்திருந்த குளத்தில் கல் எறிந்தது போல்,  மீண்டும் அவன் மனம்  உலைக்களம் போல் கொதிக்கத் தொடங்கியது.


திடீரென்று பேரனின் முகத்தில் விரவிய , சஞ்சலம்  பெரியவரை தாக்க,


"ராணா, உன் மனசு  புரியுது .... எவ்ளோ நாள் தான்  ஓடி ஒளியுவ .... ஒரு நாள் இல்ல ஒரு நாள் இங்க நீ வந்து தானே ஆகணும் ...நடந்தது ஒரு விபத்து .... அதையே  நினைச்சுக்கிட்டு இருந்தா, மீதி வாழ்க்கை ஒன்னுமில்லாம போயிடும் பா .... மீண்டு வர முயற்சிக்கணும் ... அதுக்காக தான் உன்னை இங்க கூப்பிட்டேன்.... ..."  என பூடகமாக முடிக்க ,  அமைதியாகி போனான் பேரன்.


அன்றைய தினம் வெகு  இயல்பாக கழிந்தது.


நீண்ட நாட்களுக்குப் பிறகு  பாட்டியோடும்,  பாட்டனோடும்  அவர்களது அறையிலேயே தங்கிக் கொண்டு  நேரத்தை செலவழித்தான்.  


மறுநாள் காலை ராஜ்குமார் அவனை அழைத்து,


"ராணா, நீ எனக்கு செஞ்சு கொடுத்த ரெண்டாவது சத்தியம் ஞாபகம் இருக்கா ..." என்றார் சற்று கடுமையாக.


"அதெல்லாம் இப்ப எதுக்கு தாத்தா ..." என பேரன் தட்டிக் கழிக்க ,


"காரணத்தோட தான் கேட்கறேன்... கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் ..... நீ சம்மதிச்சு தான் ஆகணும் ... வாக்கு கொடுத்திருக்க.... ஞாபகம் வச்சிக்க..."


இளையவன் அதிர்ந்து நோக்க,


"எவ்ளோ நாள் தான் இப்படி தனியா இருப்ப... பெரியவனுக்கு ஒண்ணுக்கு ரெண்டு குழந்தை ஆயிடுச்சு .... ஆனா நீ இன்னமும் கல்யாணமே முடிக்காம இருக்க ... உனக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி பார்த்து,  கொள்ளு பேரனோ பேத்தியோ பார்த்துட்டேன்னா நான் நிம்மதியா கண்ண மூடிடுவேன் ப்பா ..." என ராஜ்குமார் தொடர, 


"ஐயோ தாத்தா ... என் நிலைமை புரியாம பேசுறீங்களே .... தினமும் மாத்திரை எடுக்காம என் வாழ்க்கையே ஓடாது ...மாத்திரை எடுத்தும் சில சமயம் தலைவலியால துடிக்கிறேன் .... இப்படி ஒரு நிலையில எனக்கு கல்யாணம் தேவையா  .... சரி நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாலும் என்னை யார் கல்யாணம் பண்ணிப்பா...நடந்ததை மறைச்சு கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்ல தாத்தா... ஒருவேளை உண்மைய சொல்லி பொண்ணு தேடினாலும் எந்த பொண்ணு என்னை கல்யாணம் பண்ணிக்க முன் வருவா... .... " என ராணா வேகமாக பேசிக் கொண்டே செல்ல,


"உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து வச்சிட்டேன்பா ... அந்த பொண்ணுக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியும் ....  தெரிஞ்சுதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கா ..."


"யாரு ...."  

ஆச்சரியமும் அதிர்ச்சியமாய் அவன் வினவ,


"மான்சி ...."  என்றார் பெரியவர். 


மான்சியை பலமுறை மதுஸ்ரீயோடு பார்த்திருக்கிறான்.  


மதுஸ்ரீயும்  தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம்  உயிர்த்தோழி என பலமுறை  அவள் பெயரை குறிப்பிட்டிருக்கிறாள்  ...


ஆனால் அவன் தான் மான்சியை ஒரு பொருட்டாகவே கருதியதில்லை.


அவளை ஞாபகப்படுத்த முயன்றவனுக்கு  நிழலோட்டமாய் ஒரு பிம்பம் வந்து போனதே ஒழிய,  மற்றபடி அவள் முகத்தை நினைவிற்கு கொண்டு வர முடியவில்லை. 


பேரன் அமைதியாக இருப்பதை சம்மதமாக எடுத்துக்கொண்டு,  உடனே அவனை தன் கடைக்கு அழைத்துச் சென்றார் ராஜ்குமார்.


அந்த பறந்து விரிந்த பிரம்மாண்ட கடையில் மதிய நேரம் சற்று இளைப்பாற  கடையின் உட்புறத்தில் ஒரு பெரிய கூடமும் அறையும் உண்டு.  


அவன் கடைக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் நிலேஷ் தேசாய் தன் மகள் மான்சியோடு அங்கு வந்து சேர்ந்தார். 


இயல்பான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு,


"உங்க பொண்ணோட நான் கொஞ்சம் பேசணும் ..."  என்றான் ராணா மான்சியின் தந்தையை  பார்த்து .


அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்திலிருந்தே,  ஏதோ முக்கியமாக உரையாடவிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு பெரியவர்கள் இருவரும் வெளியேற, அடுத்த கணமே அவன் பார்வை கடுமையாக மான்சியின் மீது  படிய ,  அவளோ அவனை காதல் பார்வையால் வருடிக் கொண்டிருந்தாள் .


மதுஸ்ரீ நெருப்போடு போராடிக் கொண்டிருக்கும் போது,  அவளைக் காப்பாற்ற அவன் தவித்துக் துடித்ததெல்லாம் அவள் மனக்கண்ணில் வந்து போனது. 


மதுஸ்ரீயின் மீதான அவன் காதலை நன்கு அறிவாள்.


அதில் ஒரு துளி கூட அவளுக்கு என்றுமே கிடைக்காது என்றும்  அறிவாள்.


எல்லாம் தெரிந்தும் அவளது  மானங்கெட்ட மனம்,  அவனது அன்பை அல்லவா யாசித்து கொண்டிருக்கிறது ....


அவனைத் தானே தேடிக் கொண்டிருக்கிறது ...


அவனோடு தானே காலம் முழுவதும் கழிக்க விரும்பிக் கொண்டிருக்கிறது  ....


கடைசியாக மருத்துவமனையில் அவன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது பார்த்தது அதன் பின் இப்போதுதான் பார்க்கிறாள்.


அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் கல்லூரி மாணவனாகவே காட்சி அளித்தவன்,  தற்போது மென்பொருள் வியாபாரத்தை தொடங்கி நடத்துவதால்,  பெரிய வியாபார காந்தம் போல் மிடுக்கும் தோரணையுமாக மின்னினான்.


ஒரு நாள் என்ன.... ஒரு யுகம் கூட, அவனையே பார்த்துக் கொண்டிருக்கச் சொன்னால் பார்த்துக் கொண்டிருப்பாள்....


அப்படி அவனது அழகும் , ஆளுமையும் கனவு கதாபாத்திரமாய் சிறு வயதிலேயே மனதில் பதிந்திருந்ததால், அவனைக் காணக்காண அவளுக்கு தெவிட்டவில்லை...


ஆனால் அவனோ,


" என் மது நெருப்புல மாட்டிகிட்டு,  கொஞ்சம் கொஞ்சமா கருகிக்கிட்டு இருக்கும் போதே, அதே நெருப்புல குதிச்சு அவளோடயே உயிரை விட ட்ரை பண்ணவன் நான் ... அப்ப அங்க இருந்த உனக்கு அது நல்லாவே தெரிஞ்சிருக்கும் .... இன்னமும் என் மது தான் என் மனசுல இருக்கா... எப்பவும் அவ மட்டும் தான் இருப்பா...  என்னால உன்ன மட்டும் இல்ல யாரையுமே என் மனைவியா நினைச்சு கூட பாக்க முடியாது ....அது இல்லாம எனக்கு உன்ன பத்தி எதுவுமே தெரியாது .... ரெண்டு மூணு தடவை எப்பவோ உன்னை  பார்த்திருந்தாலும் இப்பதான் மொதமுறையா உன்னோட பேசறேன்... நீயும் இப்பதான் மொதல் முறையா என்னோட பேசற... சோ தேவை இல்லாம என் தாத்தா சொன்னாங்க உங்க அப்பா சொன்னாங்கனு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு  உன் வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்காத...."


அவள் எதிர்பார்த்து வந்ததைத் தான் அவன் பேசிக் கொண்டிருந்தான். 

அவன் இப்படி எல்லாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம். 

இப்படி பேசி தட்டிக் கழிக்க எண்ணுவான் என்று அனுமானித்ததால் தான் வரும் போதே , ஒரு நோட்டு புத்தகம் ஒன்றை கொண்டு வந்திருந்தாள்.



" நீங்க சொன்னது எல்லாமே சரி ஆனா ஒரு விஷயத்தை தவிர ...  நானா தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்து என் அப்பா கிட்ட சொன்னேன்  ..... என்னை யாரும் வற்புறுத்தல....ஏன்னா,  நான் உங்கள பாக்கறதுக்கு முன்னாடியே உங்கள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன் ...."


இப்போது அவன் பார்வை கூர்மை அடைய,


"இதை நான் என்னோட 17 வயசுல உங்கள மானசீகமா  மனசுல நெனச்சிக்கிட்டு வரைஞ்சது....  அப்ப நான் உங்கள  பார்த்தது கூட கிடையாது .... " எனத் தொடங்கி, முதன் முதலாக அவன் தன் தாய் தந்தையோடு காரில்  வந்திறங்கியதை கண்டதும்  மானசீக ஓவியம் உருபெற்று உலவுவதை  பார்த்து  உறைந்து நின்றது .... உடனே அன்றே அவனை மறுமுறை பார்க்க எண்ணி அவன் வீட்டிற்கு  போன போது, மதுஸ்ரீயிடம் அவன்  தன் மனக்காதலை பகிர்ந்து கொண்டிருந்ததைக் கண்டு சிலையாகி நின்றது .... என ஒன்று விடாமல் தன் மன உணர்வுகளை வலியோடும் காதலோடும் அவள் பகிர பகிர  கேட்டுக் கொண்டிருந்தவன் வியப்பில் லயித்துப் போனான்.


அவனால் அவள் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை ....


அவள் கையில் கொண்டு வந்திருந்த நோட்டுப் புத்தகத்தில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பான ஒரு தேதியில், அவனுடைய உருவம் சாதாரண மை பேனாவில் அவ்வளவு நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது.


அந்தப் பக்கம் சற்றே கசங்கி இருந்ததோடு, அதன் பின்புறமும்,  தொடர்ந்து வந்த பக்கங்களிலும் ஏதேதோ  வகுப்பு பாடத்தின் குறிப்புகள் சற்று அடித்தல் திருத்தலோடு எழுதப்பட்டிருக்க,  பதில் பேச முடியாமல் திணறிப் போனான்.





ஓரிரு கணத்திற்கு பிறகு,


" சரி நீ சொன்னது உண்மையாவே இருக்கட்டும் .... ஆனா இப்ப நான் இருக்கிற நிலையில நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது ... பொழுது விடிஞ்சு பொழுது போனா மாத்திரைல தான் என் வாழ்க்கையே ஓடிக்கிட்டு இருக்கு .... ராத்திரி மாத்திரையை போட்டு படுத்துட்டா காலைல தான் எந்திரிப்பேன்  .... அதோட காலைல ஆபீஸ் போனேன்னா வீடு திரும்ப ராத்திரி ஆயிடும் .... சொல்றத புரிஞ்சுக்கோ... என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை வீணா  போயிடும் .... இதையெல்லாம் என் தாத்தா கிட்ட சொல்லி புரிய வைக்க முடியாதுங்கிறதால தான் உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் ...." 


அவன் பேச்சைக்  இடைவெட்டி 


"நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும் ... நான் வேற எதுவும் உங்க கிட்டிருந்து எதிர்பார்க்கல... நான் உங்க பக்கத்துல இருக்கணும்னு கூட ஆசைப்படல .... தள்ளி இருந்து உங்களை பாத்துக்கிட்டே காலத்தை ஓட்டிடுவேன் ..." 


அவள் பேசிய அந்த வரிகள்,  கடைசியாக அவனது மது பேசியதை நினைவு படுத்த,அதற்கு மேல் அவளை நிராகரிப்பதற்கு காரணம் ஏதும் இல்லாததோடு , தாத்தாவிற்கு கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் பொருட்டு  திருமணத்திற்கு சம்மதித்தான்.


அடுத்த முகூர்த்தத்திலேயே, அவர்களது திருமணம்  உறவினர்கள் நட்பு வட்டங்கள் புடைசூழ எளிமையாக அருமையாக  நடந்தேறியது.


அவள் சொல்லாத ஒரு உண்மையும்,  சொல்லிய பல உண்மைகளும் சேர்ந்து அவளது வாழ்க்கையையே ஒன்றுமில்லாமல் ஆக்கப் போகிறது என அறியாமல்,  மனதில் மானசிகமாக தீட்டியிருந்தவனை மணம் முடித்து விட்டோம் என்ற மனதிருப்தியில் மனம் மகிழ்ந்திருந்தாள் பாவை. 




ஸ்ரீராமம் வருவார்கள் ....
































































Comments

Post a Comment