அத்தியாயம் 107
மருத்துவமனையில் தனது பாட்டிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு, அவர் இயல்பாக சுவாசிக்க தொடங்கி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தவன்
"ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு தாத்தா..... பாட்டி என் கல்யாணத்துக்குள்ள இவ்ளோ தேறி வருவாங்கன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... சரி... நான் பார்த்துக்கிறேன்.... நீங்க கிளம்புங்க ..." என முடித்த மாத்திரத்தில்
"மதிய சாப்பாட்டுக்கு மேல கொஞ்சம் கடைல வேலை இருக்கு.... அத முடிச்சுட்டு, தனுஷை அங்கயே விட்டுட்டு, திலக்க கூட்டிட்டு வாரேன் .... அப்புறம் நீ வீட்டுக்கு போலாம் ... " என அவன் மனதில் போட்டிருந்த திட்டத்தை படித்தவராய் ராஜ்குமார் சொல்ல, குதூகலித்துப் போனான் இளையவன் .
பிறகு தன் நண்பன் தனுஷ், மகள் தீபிகா , மருமகன் ஆதிகேசவனோடு ராஜ்குமார் விடைபெற, தனித்து விடப்பட்டவனின் மனம் முழுவதும் அவனது மது ஸ்ரீயே நிரம்பி வழிய தொடங்கினாள்.
சற்று நேரத்திற்கு முன்பு, விடைபெற முயன்றவனை அழைத்து அவனது இடையை பற்றிக் கொண்டு,
"சாயங்காலம் என்னை பார்க்க சீக்கிரமா வந்துடுங்க .... உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன் ...." என்றவளின் நெருக்கம், வாசம், சுவாசம் என அனைத்தும் தற்போதும் மானசீகமாய் அவன் மனமெங்கும் நிரம்பி உடலெங்கும் மின்னலாய் பரவி சிலிர்ப்பை ஏற்படுத்த உள்ளூர ரசித்தபடி உறைந்து நின்றான் காளை.
சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த தலைமை மருத்துவர், அவனது பாட்டியை பரிசோதித்து விட்டு, உடல்நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்துவிட்டு ஓரிரு தினத்திற்கு பிறகு அவசர சிகிச்சை பிரிவிலிருந்து, தனி அறைக்கு மாற்றப்படுவார் என தெரிவிக்க, நிம்மதி பெருமூச்சு விட்டான்.
தன் திருமணத்திற்கு பாட்டி உயிருடன் இருக்க வேண்டுமே என்று தன் ஆன்ம தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தவனுக்கு கை மேல் பலன் கிடைக்கப்பெற்றதை அடுத்து, பளபளக்கும் பகல் கனவில் மூழ்கத் தொடங்கினான்.
உற்றார் உறவினர்கள் புடை சூழ அழகாக அவனும், அவன் மதுவும் திருமண பந்தத்தில் இணைய, காதலும் ஈர்ப்புமாய் வாழ்க்கை பாதை தெவிட்டாத புரிதலோடு பயணிக்க, அதற்கு சாட்சியாய் ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என இரு குழந்தைகள் ஜெனிக்க, பேரின்பத்தோடு அவர்களை வளர்த்து ஆளாக்கி மூப்பினை நெருங்க என அவனது சொப்பனம் நீண்டு கொண்டே செல்ல, ஏறக்குறைய 25 ஆண்டு கால வாழ்க்கையை இரு நிமிடத்திற்குள்ளாகவே மனக்கண்ணில் ஒட்டிப் பார்த்து மகிழ்ந்தவனுக்கு, ஏனோ திடீரென்று புது வித உள்ளுணர்வு அடி மனதில் புயல் சின்னமாய் உருவாகி அழுத்த, அதனை மொழிபெயர்க்க முடியாமல் தடுமாறிப் போனான்.
"என்னை பார்க்க சீக்கிரமா வந்துடுங்க .... உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன் ...."
என்ற வரிகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளுக்குள் அலாரமாய் ஒலிக்க, ஆனால் இம்முறை அது கொடுத்த அதிர்வுகள் ஆனந்தத்தை கொடுக்காமல், ஏதோ அபாயத்தை உணர்த்துவது போல் இருக்க, ஒரு கணம் செய்வதறியாது திணறியவன் , பிறகு முடிவெடுத்தவனாய் மருத்துவமனை வரவேற்பிற்குச் சென்று, தன்னவளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றான்.
அடித்து அடித்து அடங்கியதே ஒழிய தொலைபேசியை எவரும் எடுத்த பாடில்லை ....
மீண்டும் ஒருமுறை முயன்று தோற்று விட்டு, அவசர சிகிச்சை பிரிவுக்கு திரும்பியவன், வழியற்று ஏதேதோ சிந்தித்தபடி காலத்தை கழிக்க இடவலமாக நடக்கத் தொடங்கினான்.
ஆழமாக நேசிக்கும் இதயம் , ஆழ்கடலுக்கு அப்பால் இருந்தாலும் , அதன் மன உணர்வுகளை பிரத்தியேகமாய் உணர வைக்கும் சக்தி இப்பிரபஞ்சத்துக்கு உண்டு .... என்பதாய் பேரண்டம் தூது விட்ட தன்னவளின் உணர்வுகளுக்கு உரு கொடுக்க முயன்று, தொய்வு கண்ட நிலையில் அவன் மன அழுத்தம் கூடிக் கொண்டே செல்ல, பொறுமை பனிக்கூழாய் கரைந்து நீர்த்துப் போகும் வேளையில், ராஜ்குமார் திலக்கோடு வந்து சேர்ந்தார்.
பெரியவரை கண்டதும்,
"தாத்தா இவ்ளோ சீக்கிரம் நீங்க வருவீங்கனு எதிர்பார்க்கல ...." சின்னவன் சந்தோஷமும் அவசரமுமாய் மொழிய ,
"கடை வேலை சீக்கிரமே முடிஞ்சு போச்சுப்பா...இன்னும் மூணு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு, உன்னை ஹாஸ்பிடல்லயே பழியா கெடக்க விட்றது நல்லதா படல, அதான் இவனை(திலக்) கூப்பிட்டுகிட்டு சீக்கிரமே வந்துட்டேன் .... தீபிகாவும் மாப்ளயும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க ... நீ வீட்டுக்கு கிளம்பு..... "
என்று ராஜ்குமார் முடித்த மாத்திரத்தில், துரிதமாக ஒரு நன்றியை தூவி விட்டு காரை கிளப்பிக் கொண்டு பஞ்சாய் பறந்தான்.
மைக்கேல் ஷூ மேக்கரை போல் வாகனத்தை செலுத்தி, அடுத்த 15-வது நிமிடத்தில் மதுஸ்ரீயின் வீட்டை அடைந்தவன்
"அத்த... மது எங்க ..... போன் பண்ணேன் எடுக்கவே இல்ல ...." என பரபரத்தான் அப்போது தான் அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட மதுஸ்ரீயின் தாயாரை பார்த்து.
"வாங்க மாப்ள ..... காலையில நீங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம், நிச்சயதார்த்ததன்னைக்கு உங்க அம்மா கொடுத்த அந்த செவப்பு கலர் பனாரசி துப்பட்டாவ தேட ஆரம்பிச்சவ தானாம்.... வீட்டையே கொட்டிக் கிளறி ரெண்டாக்கிட்டானு அவ பாட்டி சொன்னாங்க..... அப்ப நான் அவங்க அப்பா கூட கடைல இருந்தேன் ... இப்பதான் வீட்டுக்கு வந்தேன் ... நான் திரும்பி வந்தப்பவும் தேடிகிட்டு தான் இருந்தா ....
அப்பதான் ஞாபகத்துக்கு வந்தது ... நேத்து காலையில கடையிலிருந்து வீட்டுக்கு புதுசா வந்த புடவைங்க பாக்ஸ்ல தவறி போய் கடை ஆளுங்க சேர்த்து வச்சாலும் வச்சிருப்பாங்க குடோனுக்கு போய் தேடிப் பாருன்னு சொன்னேன் .... உடனே கிளம்பி போயிட்டா ...."
" எப்ப போனா ....."
"இப்பதான் கால் மணி நேரத்துக்கு முன்னாடி.... கார் கடைக்கு போய் இருக்கிறதால , அதுக்கு வெயிட் கூட பண்ணாம நடந்தே போயிட்டா மாப்ள ...."
"ஓ காட் ... இவளை யாரு இந்த வேண்டாத வேலை எல்லாம் செய்ய சொன்னது .... காணாம போனா என்ன... வேற வாங்கிகிட்டா போகுது .... அதுக்காக இப்படி மூணு நாலு தெரு நடந்து போகணுமா...."
ராணா கோபத்தில் கடிந்து கொள்ள,
"நானும் அதையே தான் மாப்ள கேட்டேன்... அதுக்கு கல்யாணத்துக்கும் அதையே தான் போட்டுக்கப் போறேன் .. புதுசா வாங்கின கல்யாண புடவை கூட இரண்டாம் பட்சம் தான்னு சொல்லிட்டு அரக்க பறக்க ஓடறா....... " என மதுஸ்ரீயின் தாயார் விளக்கம் கொடுத்துக் கொண்டே செல்ல , அப்போது தான் அவனுக்கு உரைத்தது, தன்னவள் எதற்காக அந்த நிச்சயதார்த்த சிவப்பு நிற துப்பட்டாவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாள் என்று .
கர்வா சவுத் தினத்தன்று பௌர்ணமியை சாட்சியாக வைத்து அவர்களுக்கிடையே நடந்த கந்தர்வ விவாகத்திற்கு மட்டுமல்ல , முதல் கூடலுக்கும் அந்த சிவப்பு வஸ்திரமே அஸ்திவாரம் என்பதால், அதனைத் தேடி போயிருக்கிறாள் ...
தொலைபேசியில் உரையாடும் போதும் திருமணம் முடிந்து விட்டதாக கருதியே நிச்சயதார்த்த துப்பட்டாவை கர்வா சவுத் தினத்தன்று அணிந்ததாக சொல்லி சிலாகித்தும் இருக்கிறாள் ....
என்பதை எல்லாம் எண்ணி பார்த்தவன், அதற்கு மேல் ஒரு கணம் கூட தாமதிக்காமல் புறப்பட முனையும் போது தொலைபேசி ஒலித்தது.
உள்ளுணர்வு ஏதோ சொல்ல ஒரு கணம் அவன் நிற்க, தொலைபேசியை எடுத்துப் பேசிய மதுஸ்ரீயின் தாயாரிடம்
"......."
"ஐயோ சுனந்தா ( திலக்கின் மனைவி) .... ஸ்ரீ அங்க தானே வந்திருக்கா ... " என மதுஸ்ரீயின் தாயார் அலற,
"......."
"ஐயையோ ..... பகவானே ...."
எதிர்முனை தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, கை நடுக்கமும் அழுகையுமாய் பற்றி இருந்த தொலைபேசியை அவர் நழுவ விட,
"அத்த... என்ன ஆச்சு ...." என்றான் ராணா பதற்றத்தோடு.
" நம்ம .... ...ந.... நம்ம குடோன்... தீ புடிச்சி.... எரியுதாம் ...."
"ம..... மதுக்கு என்ன ஆச்சு .... " அவன் குரல் நடுங்க,
"அ... அவ ....கு.... குடேன்குள்ள மாட்டிக்கிட்டாளாம் .......... ஷட்டரை திறக்க முடியலையாம்... நெருப்ப அணைக்க ..."
அவர் கேவி கேவி அழுதபடி சொல்லிக்கொண்டே செல்ல, கேட்பதற்கு ராணா அங்கு இருந்தால் தானே ....கழுகை விட வேகமாக பறந்திருந்தான்.
மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட துணிமணிகள், ஜெய்ப்பூர் கம்பளங்கள் கைவினைப் பொருட்களை எல்லாம் சேகரித்து வைக்க, தன் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட நான்கு தெருக்கள் தள்ளி வயல்வெளிகள் கரும்பு காடுகள் நிறைந்த ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு குடோன் ஒன்றை அமைத்திருந்தார் மதுஸ்ரீயின் தந்தை மகாவீர் .
அந்த குடோனை பார்த்தபடி அமைந்திருந்தது திலக்கின் மனைவி சுனந்தாவின் தாய் வீடு. தாய் தந்தையை சந்திக்க அவள் தினமும் ஒரு முறையேனும் குழந்தையோடு அங்கு வருவது உண்டு ...
அப்படி அவள் அங்கு வந்திருக்கும் போது மதிய வேளையில் திடீரென்று வீசத் தொடங்கிய பலத்த காற்றின் காரணமாக கரும்பு காட்டை ஒட்டியிருந்த மின்கம்பத்தில் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் தீப்பொறிப் பறந்து விழுந்து, கரும்பு காடு தீ பற்றிக் கொண்டது
காற்று தொடர்ந்து பலமாக வீசியதால், தீ அனைத்து பக்கங்களிலும் தீவிரமாக பரவி குடோனிற்கு செல்லும் மின் கம்பியிலும் பட்டு மின் கசிவை ஏற்படுத்த, அதனால் ஏற்பட்ட தீப்பொறி, குடோனிற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பிடிக்கும் மென்மையான கம்பளத்தின் மீது விழுந்து கொழுந்து விட்டெரிய, மின்னல் வேகத்தில் அந்த நெருப்பலை, அங்கிருந்த மற்ற புத்தம் புது துணிமணிகளின் மீது பரவத் தொடங்க, அந்த இடமே கண நேரத்தில் நெருப்பு குண்டமாய் மாறிப்போனது.
இவையெல்லாம் மதுஸ்ரீ அந்த குடோனுக்குள் நுழைந்த பத்தாவது நிமிடத்திற்கு மேல் தான் நடக்க தொடங்கியது..
குடோனுக்குள் நுழைந்த முதல் இரண்டாவது நிமிடத்திலேயே லேசான புகைமண்டலம், கருகிய வாடை எல்லாம் வர , விவசாய நிலங்களை பண்படுத்துவதற்காக கரும்பு சோகையை எரிக்கிறார்கள் போலும் என்றெண்ணியதால் , அதனை கருத்தில் கொள்ளாமல் , தன் துப்பட்டாவை தேடும் பணியிலேயே மும்மரமாக இருந்து விட்டாள் பாவை.
ஆனால் அடுத்த சில கணங்களில், அந்த குடோனிற்குள் இருந்த விளக்குகள் எல்லாம் , மின்மினிப் பூச்சிகளாய் மின் கசிவு காரணமாக விட்டு விட்டு எரிய தொடங்க , உள்ளிருந்த மின் பெட்டியிலிருந்தது நெருப்பு பொறி தெறிக்க ஆரம்பித்து மென் கம்பளங்கள், ஆடைகள் எல்லாம் பற்றிக்கொள்ள , காற்றின் காரணமாக தீ வேகமாக பரவ, அப்போதுதான் விபரீதத்தை உணர்ந்தவள் தப்பிக்க எண்ணி குடோனின் ஷட்டரை தூக்க முயலும் போது அது வெப்பம் மற்றும் காற்றழுத்தத்தால் இறுகிக் கொண்டது தெரிய வர, தவித்துப் போனாள்.
அதற்குள் நெருப்பு எல்லா இடங்களிலும் வேகமாக பரவி, துணி மணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மர பீரோக்களை தீக்கிரையாக்கி சில்லு சில்லுலாய் முறிந்துடைந்து விழ செய்ய, எங்குமே நிற்க முடியாமல் காட்டுத் தீயாய் வெப்ப வீச்சு விரவ, அலறி அடித்துக் கொண்டே கிடைத்த சொற்ப இடத்தில் இடம் மாறிக்கொண்டே இருந்தவளின் ஆடையிலும் தீப்பிடிக்க, அலறி துடிக்க தொடங்கினாள் பெண் .
அவள் அலறும் சத்தம் கேட்டதும் தான், குடோன் தீ பற்றி கொண்டதே சுனந்தாவிற்கு தெரிய வர, அவளுடன் பேசிக் கொண்டிருந்த மான்சியும் அப்போதுதான் அதனைப் பார்த்துவிட்டு அலறிக்கொண்டே குடோன் நோக்கி ஓட அதற்குள் அங்கு குழுமியிருந்த மக்கள் கூட்டம் நெருப்பை அணைக்க முயன்றனர்.
தீயணைப்புத் துறையினருக்கும் அழைப்பு விடுக்க பட்டது ...
உடனே சுனந்தா, தன் கணவன் திலக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னதோடு மதுஸ்ரீயின் தாய்க்கும் தெரியப்படுத்திவிட்டு, தன்னால் இயன்ற உதவியை செய்ய களத்திற்கு சென்றாள்.
குடோன் என்பதால் மேல் தளத்தை ஒட்டிய மேல் ஜன்னல்களே அதிகம் இருந்தன.
கிட்டத்தட்ட ஆறடிக்கு மேல் , இட வலப்பக்க இரு சுவர்களில் மட்டும், சாதாரண இரு ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்க துரதிஷ்டவசமாக, அதிலும் தீப்பிடித்ததோடு அதன் வழியே வீசிய பலத்த காற்றும் நெருப்பை கொழுந்து விட்டு எரியச் செய்ய, குழுமியிருந்த மக்களும் விடாமல் தண்ணீர் மற்றும் மணலை பக்கெட் பக்கெட்களாக வாரி இறைத்துக் கொண்டிருக்கும் போது, ராணாவின் தமையன் ராகேஷ் திலக்குடன் அங்கு வந்து சேர , அவர்களைப் பின் தொடர்ந்து அடுத்த சில கணங்களிலேயே கதி கலங்கிய நிலையில் அங்கு வந்து சேர்ந்தான் ராணா.
அலறும் குரல், அவனவளின் குரல் என வந்த கணத்திலேயே அறிந்து கொண்டவன், சுற்றி முற்றி பார்த்து, சற்று தொலைவில் இருந்த ஏணியை எடுத்துக்கொண்டு போய் தீப்பிடி எரிந்து கொண்டிருந்த ஜன்னலுக்கு அருகே போட்டு, விறுவிறுவென்று அவன் ஏற, உடன் இருந்தவர்கள்,
"ராணா வேணாம் .... கிட்ட போகாத.... "
என ஏணியை பிடித்து தடுக்க, எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் ஏணியில் ஏறியவனுக்கு, அவனது ஆறடி உயரம் அந்த ஜன்னலின் வழியே எட்டிப் பார்ப்பதற்கு வசதியாகி போக, தங்கத்தில் ரோஜா சாறை குழைத்து செய்த சிலை போல் இருந்தவளை தீ கரி சட்டியாய் முற்றிலும் உருமாற்றியிருக்க எரிச்சலும் ரணமுமாய் அவள் அலறி துடித்தபடி ஓரிடத்தில் நிற்காமல் தத்தளிப்பதைக் கண்டு உருக்குலைந்து போனவன்,
"மதூ......... மதூ.......... " என கம்பீரமாக திரண்ட ஓசையில் ஒலி எழுப்ப, அத்துணை களேபரத்திலும் , அவனது குரலைக் கேட்டதும் , ஒலி வந்த திசை நோக்கி பார்த்தவள், அவனைக் கண்டதும் பெரும் நிம்மதியோடு அவன் முகத்தையே நின்று நிதானித்து கண்ணீரோடு கண் சிமிட்டும் கணத்தில் கண்டுவிட்டு அப்படியே மயங்கி சரிந்தாள்.
"என்னை பார்க்க சீக்கிரமா வந்துடுங்க .... உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன் ...."
என்ற குரல் காற்றோடு காற்றாய் கலந்து அவன் காதுகளில் ஒலிக்க, விழுந்தவள் அசைவற்று இருப்பதை கண்டு விண்ணுலகம் சென்று விட்டாள் என புரிந்து கொண்டு,
" மதூ.....மதூ........ " என அலறியபடி கொழுந்து விட்டெரியும் அந்த ஜன்னலுக்குள் அவனும் குதிக்க முயல, தம்பியின் முடிவை கண நேரத்தில் புரிந்து கொண்ட ராகேஷ் உடனே ஏணியை திலக்கின் உதவியோடு கீழிருந்து வேகமாக பின்னோக்கி சரிக்க முனைய, ராணாவோ விடாமல் ஜன்னலின் தகிக்கும் இரும்பு கம்பியை பற்றிக் கொண்டாவது உள்ளே குதித்து விட முயலும் போது, மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டது போல் அவனது பின் மண்டையில் பெருவலி ஏற்பட , கண்களின் குறுநறும்புகள் வெடித்து விடுவது போல் எரிச்சலோடு கண்ணீர் பெருவெள்ளமாய் பொங்க, அதற்கு மேல் செயல்பட முடியாமல் அவன் மயங்கி சரிய, ராகேஷூம் திலக்கும் விழுந்தவனை திடமாய் தாங்க, அதையெல்லாம் பார்த்துக் கொண்டே பதறி துடித்தபடி ராஜ்குமார், தனுஷ், தீபிகா, ஆதிகேசவன், மகாவீர் , மதுவந்தி அனைவரும் காரை விட்டிறங்கி ஓடி வந்தனர்.
தாங்கிப் பிடித்த ராணாவிடம் மூச்சு மட்டுமே இருந்தது. யாதொரு முதலுதவிக்கும் அவன் எதிர்வினை ஆற்றவில்லை என்றதுமே, நிலைமை மோசம் என புரிந்து கொண்ட ராஜ்குமார் உடனே திலக் மற்றும் ஆதிகேசவனின் உதவியோடு அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மரணமடைந்த மகளைப் பார்த்து மகாவீர் கதறி துடிக்க, தமக்கையாய் மட்டுமில்லாமல் தாயாகவும் வளர்த்த மதுவந்தி பொங்கி அழ, கை மீறி போன விஷயத்தில் கவனத்தை செலுத்தாமல் ராகேஷூம் தனுஷும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைப்பதில் குறியாக இருக்கும் போது தீயணைப்புத் துறையினர் வந்திறங்கினார்.
அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டதும் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராணா மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்க, ஆதிகேசனும் ராஜ்குமாரும் அடியோடு உடைந்து போயினர் .
அப்போது ராகேஷ் ராஜ்குமாரை மருத்துவமனை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வந்திருப்பதாக தெரிவிக்க, கணநேரம் கூட தாமதிக்காமல் அவர்களை சந்திக்க சம்பவ இடத்திற்கு விரைந்தார் ராஜ்குமார்.
முற்றிலும் எரிந்து கரிக்கட்டையாய் கிடந்த மதுஸ்ரீயின் சடலத்தை உடற்கூறாய்வு செய்வதற்கு மருத்துவக் குழு ஒருபுறம் ஏற்பாடு நடந்து கொண்டிருந்த வேளையில் மதுஸ்ரீ ஏன் அங்கு வந்தாள்... எப்படி வந்தாள்..... யாரோடு வந்தாள்.... என்ற விசாரணையை மேற்கொள்ள காவல்துறை அதிகாரி முதலில் சுனந்தாவை விசாரிக்க, அவள் மான்சியோடு தான் மதுஸ்ரீ அங்கு வந்தாள் என வாக்குமூலம் கொடுக்க , உடனே மான்சியை அழைத்து விசாரித்தார்.
"நானும் ஸ்ரீயும் ஒண்ணா தான் இங்க வந்தோம்....."
"எதுக்கு...." என அதிகாரி குறுக்கிட்டு கேள்வி எழுப்ப,
"அவளோட நிச்சயதார்த்தத்துக்கு மாப்ள வீட்டுல கொடுத்த ரெட் துப்பட்டாவ வீட்ல எங்க தேடியும் கிடைக்கலையாம் ..... ஒரு வேளை வீட்டிலிருந்து குடோனுக்கு கொண்டு வந்த புது சாரி கலெக்ஷன்ஸோட தவறுதலா சேர்த்துக் கொண்டு வந்துட்டாங்களோன்னு சந்தேகப்பட்டு தேட என்னையும் இங்க கூட்டிட்டு வந்தா ... " ------- மான்சி
" அப்புறம் என்ன ஆச்சு ..."
" நாலு தெரு நடந்து வந்ததால எனக்கு தண்ணி தாகம் எடுத்துச்சு .... பக்கத்துலயே சுனந்தா திதி வீடு இருந்ததால, அங்க போய் தண்ணி குடிச்சிட்டு வரேன்னு அவகிட்ட சொல்லிட்டு வந்தேன் .... அவ சரின்னு சொல்லிட்டு துப்பட்டாவை தேடப் குடோனுக்குள்ள போயிட்டா ....இங்க நான் தண்ணி குடிச்சிட்டு கிளம்பும் போது தான், யாரோ கத்தற மாதிரி சத்தம் கேட்டது .... காத்து வேற ரொம்ப பலமா அடிச்சதால எங்கிருந்து சத்தம் வருதுன்னு முதல்ல எங்களால கண்டுபிடிக்க முடியல ... அப்புறம் குடேன்ல இருந்து புகை நெருப்பும் வேகமா பரவ ஆரம்பிக்கும் போது தான், அது பத்திகிச்சுனு புரிஞ்சது அப்புறம் தான் இங்க ஓடி வந்தோம் ....." என்றவளின் குரலில் அளவுக்கு அதிகமான வலியும், தடுமாற்றமும், ஒருவித பயமும் மேலிட்டிருக்க , உடனே அந்த அதிகாரி, கரும்புக்காடு குடோன் ஆகிய இடங்களில் தன் குழுவோடு ஆய்வு நடத்த தொடங்கினார்.
பற்றி எரிந்து கொண்டிருந்த கரும்பு காட்டை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், பலத்த காற்றினால் ஏற்பட்ட மின் கசிவால் தான் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது என தெள்ளத் தெளிவாக ஆதாரத்தோடு விளக்கம் கொடுக்க, குடோன் பற்றி எரிந்ததற்கும் அதே மின் கசிவு தான் காரணம் என ஆய்வுக்குப் பிறகு அதிகாரிகள் கண்டறிந்து முடிவுக்கு வந்த போது ராஜ்குமார் அங்கு வந்து சேர்ந்தார்.
வந்தவர் நேரடியாக மருத்துவக் குழுவை சந்தித்து,
"சார், இன்னும் மூணு நாள்ல ஸ்ரீக்கும் என் பேரனுக்கும் கல்யாணம் வச்சிருந்தோம் ஆனா அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு ... ஸ்ரீ எரிஞ்சு செத்துப் போனதை பார்த்து மயங்கி விழுந்த என் பேரனுக்கு பிரைன் ஸ்ட்ரோக் வந்துடுச்சு .... கோமால போய்ட்டான்.... இப்போதைக்கு அவனோட நிலைமையை பத்தி எதுவும் சொல்ல முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க .... தயவு செஞ்சு என் பேத்தி ஸ்ரீயை என்கிட்ட அப்படியே குடுத்துடுங்க போஸ்ட்மார்ட்டம் எல்லாம் வேணாங்க ஏற்கனவே எரிஞ்சு போன உடம்பு .... அதை அறுத்து பார்த்து மேற்கொண்டு என்ன பண்ண போறீங்க ...." என அழாத குறையாய் கேட்க,
"இது ஆக்சிடென்ட்டா .... இல்ல யாராவது வேணுமுன்னே ஏதாவது செஞ்சாங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் போஸ்ட்மார்ட்டம் செய்யலாம்னு ...." என்ற மருத்துவரின் பேச்சை இடைவெட்டி,
"எல்லாம் கிளியர் ஆயிடுச்சு .... பலமா காத்து வீசினதால ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு குடோன் பத்திக்கிச்சு .... அதோட டெம்பரேச்சர் பிரஷரால எவ்ளோ போராடியும் செத்துப்போன பொண்ணால ஷட்டரை திறக்க முடியாம போயிருக்கு... மத்தபடி இதுல சந்தேகப்பட ஒன்னுமே இல்ல ... ஏற்கனவே அவங்க கல்யாணத்துக்கு இருந்த பொண்ண வாரி கொடுத்துட்டு கஷ்டத்துல இருக்காங்க ... இதுல நாம வேற தேவையில்லாம போஸ்ட்மார்ட்டம் அது இதுன்னு அவங்கள கஷ்டப்படுத்த வேணாம்..... ..."
என காவல் அதிகாரி முடித்ததும் மருத்துவர் குழு உட்பட மற்றவர்கள் அனைவரும் அடுத்த கட்ட வேலையில் கவனம் செலுத்த சென்றுவிட்டனர்.
மதுஸ்ரீ சுமந்து கொண்டிருந்தது தன் பேரனின் வாரிசு தான் என்பதற்கு இப்போது ராஜ்குமார் மட்டுமே சாட்சி ....
கரு கொடுத்தவனோ உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான் ....
கருவை சுமந்தவளோ காற்றோடு காற்றாய் கலந்து விட்டாள் ....
இந்த நிலையில் உடற்கூறாய்வு செய்து அறிக்கை வெளியானால், இறந்து போன அந்த புண்ணிய ஆத்மாவிற்கு களங்கம் ஏற்பட நேருமே என்பதற்காகவே, மது ஸ்ரீ யின் மரணத்தை தடுக்க முடியாவிட்டாலும் மானத்தையாவது காப்பாற்றலாமே என்ற எண்ணத்தில் தான் அடித்துப் பிடித்து அங்கு வந்து பேசினார் ராஜ்குமார்.
ஸ்ரீராமம் வருவார்கள் ....
என் இனிய நட்பு வட்டங்களுக்கு,
தேசத்தின் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ...
ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்
happy independence day
ReplyDeleteThanks a lot mq
Deleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அக்கா supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteThanks a lot ma
DeleteSuper mam
ReplyDeleteThanks a lot ma
DeleteStory very interesting sis. Madhushree uh potu thaliteenga, ipo happy thaney. Mansi mela than doubt iruku
ReplyDelete😂😂😂😂Thanks dr
DeleteNalla kathal,,ippadi mudinchidu,,Mansu yethum pannirupalo,, 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ReplyDelete