ஸ்ரீ-ராமம்-106

 அத்தியாயம் 106 


நாயகனும் நாயகியும் அப்படி ஒர் இரவு இனி வரப்போவதில்லை என அறியாமல் வைகறை வரை பின்னிப் பிணைந்து விட்டு கண்ணயர்ந்து போயினர். 


கீழ் தளத்தில் பேச்சரவம் மற்றும் கார் கிளம்பும் சத்தம் கேட்டதும் கண் விழித்தவன், தன் மார்பில் மாலையாய் படர்ந்திருந்தவளின் கேசத்தை  மெல்ல கோத, அதில் அரைகுறையாய் விழி மலர்த்தியவளிடம் 


"மது .... தாத்தா கிளம்பிட்டாரு ..... மத்தவங்க எழும்பறதுக்குள்ள  நீ கிளம்பு ..." என்றான் அவள் பஞ்சு மேனியை விடாமல் தன்னோடு இறுக்கிக்கொண்டு.


"ம்ம்ம்ம்ம்ம்ம்..... கிளம்பறேன் ..." என சிணுங்கியவளும் , அவனை விட்டு இம்மியளவு நகராமல் மேலும் அவனோடு ஒன்ற, அதிகாலை  இளங்குளிர், வெற்றுடல்களின் உரசல்கள் கொடுத்த  கதகதப்பு , மயக்கமாய் மென் உறக்கத்தை கொடுக்க, மற்றதை மறந்து அப்படியே ஒரு குட்டி தூக்கத்தை தொடர்ந்தனர். 


சில பல மணித்துளிகளுக்கு பிறகு ஆதவனின் கிரணங்கள் மெல்ல படர தொடங்கியதும் , இருவருக்கும் சுயம் பிறக்க, 


"மது,  நேத்து ராத்திரி எங்க போயிருந்தேனு உங்க அம்மா கேட்டா  என்ன சொல்லுவ..." என்றான் தன்னவளோடு அரக்கப் பறக்க தயாராகிகொண்டே.


"அதைத்தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன் ..." என்றவள், ஒரு கணத்திற்கு பிறகு 


"சில நாள்   தீதீயோட இங்க தங்கியிருக்கேன்.... எப்பவாவது மான்சி வீட்டுலயும் தூங்கி இருக்கேன் ....  அதனால ஏதாவது சொல்லி சமாளிச்சுப்பேன் ..." என யோசனையோடே முடிக்க பெருமூச்சொன்றை வெளியேற்றிய ராணா, தன்னவளின் பௌர்ணமி முகத்தை கைகளில் ஏந்தி,  அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கியபடி  நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை  பதிக்க, லேசான கலங்கிய விழிகளோடு  அந்த இதழ் ஒற்றலை அனுபவித்தவள், விட்டு விலக மனம் இல்லாமல்  அவனை  இறுக்கி அணைத்தபடி சில கணகள் இருந்துவிட்டு பிறகு  புயல் போல் விடை பெற்றாள். 


அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது திருமணம் மானசீகமாக  நடந்தேறிவிட்டதால் நடந்து முடிந்த ஆத்மார்த்தமான கூடல் இருவருக்கும்  யாதொரு  குற்ற உணர்வையும் கொடுக்கவில்லை .


அதே சமயத்தில் அந்த பகுதியில் ராஜ்குமாரின் குடும்பத்திற்கென்று ஒரு வித மதிப்பும் மரியாதையும் இருந்ததால்,  இருவரும் சமயோகிதமாக  நடந்து கொண்டனர். 


சற்று நேரத்திற்கெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ, தன் தாய் தந்தையருடன்  ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த ராணாவை சந்திக்க வந்த திலக்,


"நேத்து குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு  சுனந்தா ஹாஸ்பிடல்க்கு கூப்ட்டாடா .... அதான் உன்கிட்ட கூட சொல்லிக்காம பங்க்ஷன் முடிஞ்சதும்  எட்டு மணிக்கே கிளம்பி போயிட்டேன் ..." என்றதும் குழந்தையின் உடல் நலம் குறித்து விசாரித்தவன் பிறகு சூழ்ந்திருந்த உறவினர்களிடம் இயல்பாக பேசிவிட்டு  தன்னவளிடமிருந்து  மட்டும்  விழிகளாலேயே விடை பெற்றான்.


பெங்களூரை அடைந்ததும் படிப்பிற்கு மத்தியில்  தினமும் 10 நிமிடமாவது தன்னவளோடு தொலைபேசியில் உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டான். 


வீட்டுக் கூடத்தில் , அதுவும் கடை உறுப்பினர்கள் , உறவினர்கள் இயல்பாக புழங்கும்  பொதுவான இடத்தில் தொலைபேசி வைக்கப்பட்டிருந்ததால்  இயல்பான நலம் விசாரிப்புகளை தாண்டி,  வேறு எதுவும் தனித்துவமாக பேச முடியாவிட்டாலும்  அவளது குரலை கேட்பதே அவனுக்கு போதுமானதாக இருந்ததால் நாட்கள் நன்றாகவே நகர்ந்தன. 


என்ன ஒன்று ... முன்பு போல் அவனால் சிந்தனையை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்பது மட்டும் ஒரு சிறு குறை ...


ஆனால் அதனைக் கூட சரி செய்ய  கடைசி செமஸ்டரில் ஒதுக்கப்பட்ட  மென்பொருள் செயல் திட்டத்தை  திருமணத்திற்கு முன்பாக முடித்தாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு  முட்டி மோதிக் கொண்டிருந்தான்.  

இப்படியாக இரு வாரங்கள் கழிந்ததும், ஒரு நாள்  அதிகாலையிலேயே விழிப்பு வர இன்னதென்று பிரித்தறிய முடியாத ஒரு புது உணர்வு  இதமாய் பரவ,  திருமணம் நெருங்கிக் கொண்டிருப்பதால், மனையாளை நினைத்து  மனம் இதமாகிறது போலும்  என்ற காரணத்தை தானே  கற்பித்துக் கொண்டவன், வழக்கம் போல்  அன்றாட வேலையில் மூழ்கிப் போனான்.

அன்று மாலையில் தன்னவளை தொடர்பு கொண்டவனுக்கு  வழக்கத்திற்கு மாறாக அவளது குரலில்  உற்சாகமும்  துள்ளலும் தெரிய, 


"என்ன மது .... எப்பவும் விட இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க... என்ன ரீசன்  ...." என குழைந்தவனிடம்,


"உங்களுக்கு சொல்லாம வேற யாருக்கு சொல்ல போறேன் ... சீக்கிரமே ஊருக்கு வாங்க......விஷயத்தை சொல்றேன் ..." என்றாள் நாணி கோணி.


இப்படியாக மேலும் ஒரு வாரமும்,  அவன் காரணம் கேட்க , அவளும் சொல்லாமல் மழுப்ப, சிரிப்பும் சந்தோஷமுமாய் நாட்கள் நகர்ந்தன.


இந்நிலையில் ஒரு நாள் அதிகாலை, ராஜ்குமாரிடமிருந்து ஆதி கேசவனுக்கு அழைப்பு வந்தது.


ராஜ்குமாரின் மனைவி நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் குடும்பத்தோடு துரிதமாக கிளம்பி வருமாறு அவர் கேட்டுக்கொள்ள, உடனே அடுத்த விமானத்திலேயே,  கோட்டா நகரத்தை  அடைந்த ராணாவின் குடும்பம் உறவினர்கள்  சூழ்ந்திருந்த மருத்துவமனைக்கு நேரடியாக சென்றது. 


சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு மற்ற மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் உணர்வில்லாமல் படுத்துக்கிடந்த  தன் தாயைக் கண்டு மனம் நொந்து  தீபிகா கண்ணீர் வடிக்க,  திருமணம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் , இப்படி குடும்பத்தின் மூத்த பெண்மணி மருத்துவமனையில் பேச்சு மூச்சின்றி கிடப்பது அங்கிருந்த  ராஜ்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் கொள்ளா கவலையை கொடுக்க, செய்வதறியாது கலங்கி நின்றனர்.


அவசர சிகிச்சை பிரிவிலிருந்த பாட்டியை கண்ணாடியினுடே  பார்த்துவிட்டு  மருத்துவரை  சென்று சந்தித்து  உரையாடிய ராணா விஷயத்தை அறிந்து கொண்டு திரும்புகையில் மருத்துவமனையின் தாழ்வாரத்தில் தன் தமக்கையோடு பேசிக் கொண்டிருந்த தன்னவளை பார்த்து ஒரு கணம் உறைந்து நின்றான்.


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்ததை விட பன்மடங்கு  பேரழகியாக தோன்றினாள் அவனவள். 


பேச்சினூடே எதேச்சையாக ராணாவைக் கண்டவள், அப்போது தான் அவன் பார்வையில் தெரிந்த வித்தியாசத்தை கண்டு மென் புன்னகை பூக்க, அவனும் அருகில் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தான்.


சில நிமிட பேச்சுக்குப் பிறகு,  இளையவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு மதுவந்தி ஒதுங்கிக் கொள்ள,  இருவரும்  மென் நடையிட்டபடி மருத்துவமனையின் முன் முகப்பு பூங்காவில் சென்ற அமர,


"ஏய் மது .... போன தடவ பார்த்ததை விட இந்த தடவை ரொம்ப அழகா இருக்க  .... என்னமா டாலடிக்கிற ...." என அவன் ஜொள்ள,  


"உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் ... ஆனா கொஞ்சம் பயமாவும் இருக்கு வெட்கமாவும் இருக்கு ..."  என்றாள் பெண் தயங்கியபடி .


லேசாக குலுங்கி நகைத்த படி 


"என்கிட்ட என்ன வெட்கம் .... அதைவிட என்ன பயம் ...." அவன் நெருங்க,


"நான் உண்டா இருக்கேன் ..."  என முடித்தாள் நாணத்தோடு. 


"வாட் .... திரும்ப சொல்லு .." அவன் புரிந்தும் புரியாமலும் கேட்க அவள் முன்பு மொழிந்ததையே மறுஒளிபரப்பு செய்ய,  

"வாவ் .... கன்ஃபார்ம் ஆயிடுச்சா ...." என்றான் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு ஆர்வமாய்.


"இன்னும் டாக்டர பாக்கல .... ஆனா எனக்கு தெரியும் .... என் தீதி உண்டா இருக்கும் போது இருந்த எல்லா அறிகுறியும் எனக்கும் இருக்கு.....வாந்தி எப்பவாச்சும் வருது ... மத்தபடி டயர்டா மட்டும் இருக்கு .... யார்கிட்டயும் சொல்லல .... சொன்னா ஏதாச்சும் சொல்லுவாங்களோனு பயமா இருக்கு  ..." 

அவள் வெட்கமும் தயக்கமாய் கூறி முடிக்க, பூரித்துப் போனான் அவள் காதலன்.


பொது இடமாக மட்டும் இல்லாமல்  இருந்திருந்தால்,  அவளைக் கரங்களில் அள்ளிக் கொஞ்சி தீர்த்திருப்பான்  ..... அவ்வளவு சந்தோஷம், உற்சாகம், வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு பேரானந்தம்   ...


வாழ்க்கையில் சிலருக்கு மட்டுமே தேவதை கதைகள் போல்,  பிறந்தது முதல் நல்லவைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டி அரங்கேறும் ...அப்படி ஒரு வரத்தை தான் வாங்கி வந்திருப்பதாகவே எண்ணினான் ...


நல்ல பெற்றோர்கள்,  அருமையான குடும்பச் சூழல்,  போதுமான அளவிற்கு பொருளாதாரம், சிறந்த கல்வி, கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே விரும்பிய இலட்சிய பணி, வேலை கிடைத்ததுமே மனதிற்குப் பிடித்த மங்கையுடனான முதல் காதல் , அந்தக் காதலுக்கும் வீட்டுப் பெரியோர்கள் பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கு நாள் குறித்தது  ...  இப்படியாக அவன் வாழ்க்கையில் முத்துக்கள் கோர்த்தார் போல் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும்  அடுத்தடுத்து அழகாக அரங்கேறி இருந்த நிலையில், தந்தையாகப்போகும் நிகழ்வும், இப்படி தட்டில் வைத்த தங்கமாய் அவனுக்கு உடனே கிடைக்கப்பெற  மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடி போனான்.


உடன் வந்திருப்பவர்களில் பாதிப்பேர் வீட்டிற்கு  உடை மாற்றிக் கொள்ளவும்,  மீதி பேர் கேன்டினுக்கு உணவருந்த சென்றிருப்பதையும் அறிந்தவன் உடனே தன்னவளை அதே மருத்துவமனையில் இருந்த மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.


கூட்டம் அதிகம் இல்லாமல் இருந்ததால் உடனடியாக மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு அமைய,  மருத்துவரும் ஸ்கேன் செய்து பார்த்து அவனவளின் கர்ப்பத்தை உறுதி  செய்ய, மனம் மகிழ்ந்தனர் இளையவர்கள். 


மருத்துவரை சந்தித்து விட்டு வந்ததும், 

"இப்ப என்ன பண்றது ..." அவள் தயங்கியபடி கேட்க,

"யார்கிட்டயும் எதையும் சொல்லாதே ...  அடுத்த மாசம் கல்யாணம் முடியட்டும் ...   மத்தத  அப்புறம் பேசிக்கலாம் ..." 

என்றவனுக்கும் ஏதோ இனம் புரியாத  நெருடல் இருக்கவே செய்ய, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,


"இங்க பாரு... சும்மா இங்க அங்க அலையாம ஒழுங்கா வீட்ல போய் ரெஸ்ட் எடு.... ஈவினிங்கா வந்து உன்னை பாக்கறேன்..." என்றான் புதுவித தோரணையில், குடும்பத் தலைவனாக,  மனைவிக்கு கணவனாக,  பிறக்கப் போகும் குழந்தைக்கு தந்தையாக. 


அடுத்த சில மணித்துளிகளில் குழந்தைக்கு   உணவு ஊட்ட  மதுவந்தி வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகும் போது தன்னவளை  உடன் அனுப்பி வைத்தவனை தனிமையில் சந்தித்த ராஜ்குமார்,


"நான் ஒன்னு சொல்லுவேன் கேப்பியா ராணா...."  என்றார் தயங்கி .


"சொல்லுங்க தாத்தா .... நீங்க எது சொன்னாலும் கேட்பேன் ...."  என்ற பேரனை பெருமிதத்தோடு பார்த்தபடி,


"உன் பாட்டியோட உடல்நிலை  உனக்கு  நல்லாவே  தெரியும் .... இப்போதைக்கு  முன்னேற்றமும் இல்லாம பின்னடைவும் இல்லாம சீரா இருக்கு .... ஆனா இப்படியே இருக்கும்னு எப்பவும் எதிர்பார்க்க முடியாது .... அவ நிலைமை எப்படி வேணாலும் மாறலாம்......அதுக்காகத்தான் அடுத்த மாசம் நடக்க இருந்த உங்க கல்யாணத்தை, வர வெள்ளிக்கிழமை முகூர்த்த நாளா இருக்கு  அன்னைக்கே வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் ... நீ என்னப்பா சொல்ற ..."  என்றது தான் தாமதம்,  பருத்தியே புடவையாய் காய்த்தது என்பார்கள் ஆனால் இவன் விஷயத்தில் ரேமன்ஸ் ஷர்ட், பேண்ட் , பிலேசராகவே தைத்து வர, மகிழ்ச்சியில் மூச்சு முட்டி போனான்.


மகவை சுமந்து கொண்டிருக்கும் மனையாளை ஒரு மாதத்திற்கு பிறகே மணக்க வேண்டிய நிலைமையை எண்ணி மனம் வருந்தி கொண்டிருந்தவனுக்கு, பெரியவரின் கேள்வி மயிலிறகாய் வருட,


"ஓகே தாத்தா .... நீங்க சொன்ன மாறியே வர வெள்ளிக்கிழமையே கல்யாணத்தை வச்சுக்கலாம் ..." என்றான் அளவுக்கு அதிகமான ஆனந்தத்தில். 


"உன் அண்ணனுக்கு பெரிய கல்யாண மண்டபத்தை புடிச்சு, கல்யாணத்தை  ரொம்ப தடபுடலா செஞ்சேன்...  ஆனா உன் கல்யாணத்துக்கு இப்ப நேரம் கம்மியா இருக்குது... மண்டபம் கிடைக்காது .... அதனால நம்ம  வீட்லயே சிம்பிளா வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் ... என் மேல உனக்கு வருத்தம் இல்லையே .... "  


"ஐயோ தாத்தா,  அப்படி எல்லாம் எதுவும் இல்லை .... நீங்க எது சொன்னாலும் எது செஞ்சாலும் அது என்னோட நன்மைக்காக தான் இருக்கும் ..." என்றான் இளையவன் பூடகமாக .


"இப்ப உனக்கு எல்லாமே சரியா தான் படும் ஆனா கொஞ்ச காலத்துக்கு அப்புறம், தாத்தா நம்ம கல்யாணத்த மட்டும், பைசா செலவு இல்லாம வீட்லயே செய்துட்டாரேனு உனக்கு என் மேல கோவம் வரும் பா  ..." என பெரியவர் தயங்க 


"இல்ல தாத்தா ... எந்த காலத்துலயும் அப்படி எல்லாம் நான் நினைக்கவே மாட்டேன் ..."


"சத்தியமா ...." என்றவரின்  விழிகளில் ஏக்கமும் , எதிர்பார்ப்பும்  இருக்க உடைந்து போனான் இளையவன்.


ராஜ்குமாரை பொருத்தமட்டில் தொழிலாகட்டும் வீடாகட்டும் ... எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பவர் ...


இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில்,  எவரும் எதற்காகவும் அவரை குற்றம் குறை சொன்னதே இல்லை... சொல்லும் அளவிற்கு அவரும்  நடந்து கொண்டதே இல்லை ...


ஊருக்கு பெரிய மனுஷனாக, குடும்பத்தின் தலை மகனாக , வியாபாரத்தில் ராஜதந்திரியாக இருந்தே பழக்கப்பட்டவருக்கு,  முதன்முறையாக இளைய பேரனின் திருமண  விஷயத்தில் தவறிழைக்கின்றோமோ .... என்ற குற்ற உணர்வு ஏற்பட,  அதை அவர்  கலங்கிய விழிகளில்   கண்டவன்  அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் சற்று முன்  நடந்த நிகழ்வையும் அதனால் ஏற்பட்ட நெருடலையும் போக்க எண்ணி  தயங்கியபடி மனம் திறந்தான். 


"ஏய்....ராணா... நிஜமாவே வா சொல்ற என்னால நம்பவே முடியலையே .... " என்றார் மூத்தவர் பெரும் ஆனந்தத்தில். 


" தாத்தா ..... ஐ அம் சாரி .... நான் செஞ்சது ரொம்ப  தப்பு தான் ... ஆனா எனக்கு மதுவ ரொம்ப பிடிச்சிருக்கு தாத்தா .... " என்றவன் மேலும் பேச முடியாமல் தடுமாற , அவன் முகம் குற்ற உணர்விலும் வெட்கத்திலும் மேலும் சிவக்க,


"உனக்குன்னு பரிசம் போட்ட பொண்ணைத்தானே பொண்டாட்டியாக்கி கிட்ட ... அதுல ஒன்னும் தப்பு இல்லப்பா....  இன்னொரு கொள்ளு பேரனோ பேத்தியோ வரப்போறத நெனச்சா  சந்தோஷமா தான் இருக்கு ... உண்மைய மறைக்காம சொன்னது மட்டும் இல்லாம என் குற்ற உணர்வையும் போக்கிட்டப்பா... இப்ப தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு ..." என்றவர்  மறுக்கணமே திருமண ஏற்பாட்டை செய்வதற்காக, ஆதிகேசவன் மற்றும் தீபிகாவிடம் கலந்தாலோசிக்க சென்று விட்டார். 


அன்று மாலை வரை ராணா மருத்துவமனையில் இருக்க, அதிசயம் ஆனால் உண்மை என்பது போலான ஒரு அற்புதம் நடந்தேற தொடங்கியது. 


ஆம் .... மருத்துவர்களால் கைவிடப்பட்டு  அதிகபட்சம்  5 நாட்கள் என  கெடு கொடுக்கப்பட்டிருந்த ராஜ்குமார் மனைவியின் உடல் நிலையில் சீராக முன்னேற்றம் ஏற்பட தொடங்க, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்ச்சி மழையில் நனைய தொடங்கினர்.


வீட்டிற்கு வந்து உடைமாற்றிக் கொண்டு உணவருந்திச் சென்றவன்,  அன்று இரவு முழுவதும் தன் தாத்தா  ராஜ்குமாரோடு மருத்துவமனையிலேயே தங்கினான்.


மறுநாள் காலையில் புத்துணர்வு பெற வீட்டிற்கு வந்தவன்,  குளித்து உடைமாற்றி உணவருந்தியதும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக  மதுஸ்ரீ இல்லத்திற்கு சென்றான்.


அவளே அவனை காணும் எண்ணத்தில் மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் வேளையில்  அவனது எதிர்பாராத வரவு மட்டற்ற மகிழ்ச்சியை தர, மனம் குளிர்ந்து போனாள் பெண். 


ஆனந்தம் ததும்பும்  தன்னவளின் அழகான முகத்தைக் காணக்காண ஆணவனின் மனம் நேசத்தாலும் பாசத்தாலும் பொங்கி வழிய,  மாசமாய் இருக்கும் மனையாளோடு தனிமையை கொண்டாட முடியாத சூழ்நிலையை எண்ணி நொந்து கொண்டவன்,


"உன் கூடயே இருக்கணும் போல இருக்கு .... ஆனா  உன்னோட ரொம்ப நேரம் தனியா இருந்தா வீட்டு பெரியவங்க ஏதாவது  சொல்லுவாங்க ....." என தயங்க 


"யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்ல... இன்னும் மூணு நாள்ல நம்ம கல்யாணம் நடக்கப்போகுது ... எனக்கு உங்க கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு .... நானும் உங்க கூடவே ஹாஸ்பிடல் வரட்டுமா... உங்க கைய புடிச்சுக்கிட்டே உட்கார்ந்துகிட்டு இருந்தாலே போதும் ஜி ...."  




அவன் சொல்ல நினைத்ததை அவள் சொல்லிக் கேட்டதும் , மனம் துள்ளியவன் , எதை பற்றியும் கவலைப்படாமல் அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான். 


அது வெறும் உடல்களின் பிணைப்பாக இல்லாமல்  ஆன்மாக்களின் ஆலாபனையாகவே அமைய, ஓரிரு கணத்திற்கு பிறகு, 


"நீ கல்யாண பொண்ணுன்னு உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க ... அதனால  அங்க இங்கனு அலையாம நிம்மதியா ரெஸ்ட் எடு ...  எனக்கு நீயும் குழந்தையும் ரொம்ப முக்கியம் .... " அவன் சன்னமாக அவள் வயிற்றை தடவியபடி சொல்லி முடிக்கும் போது, வீட்டு தாழ்வாரத்தில் யாரோ வரும்  அரவம் கேட்க,  இருவரும் சட்டென்று  விலகி நின்றனர்.


"மாப்ள நீங்க இங்கதான் இருக்கீங்களா ....  பாட்டி இப்ப எப்படி இருக்காங்க ...."  என அப்போது அங்கு  வந்த மது ஸ்ரீயின் பாட்டி அவனிடம் நலம் விசாரிக்க, அவனும் அதற்கு தன்மையாக மென் புன்னகையோடு  பதில் அளிக்க உடனே பாட்டி 


"என் பேத்தி அழகுன்னு தெரியும் ....ஆனா கல்யாண நாள் நெருங்க நெருங்க இன்னமும்  அழகாயிகிட்டே போறா... உங்களை அவளுக்கு அவ்ளோ  புடிச்சிருக்கு ... எப்ப பாத்தாலும் உங்கள பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கா ..." என்றதும் ராணா பெருமிதமாய்  ஒரு  பார்வையை தன் மனையாளின் மீது செலுத்தி விட்டு ,


"நானும் தான்  கல்யாண நாள் நெருங்க நெருங்க அழகாக்கிட்டே போறதா என் தாத்தாவும் அம்மாவும் சொன்னாங்க.... " என  முடித்ததும்,  


"அப்ப உங்களுக்கும் என் பேத்தியை ரொம்ப புடிச்சி இருக்குன்னு சொல்லுங்க ..." என பெரியவர் கேட்க,  இளையவர்கள் லேசான வெட்கத்தோடு நகைத்தனர். 


சிறியவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு பாட்டி விலக,


"ப்ளீஸ்  ஜி.... உங்க கூட ஹாஸ்பிடல் வரட்டுமா....உங்க பக்கத்துல கூட உட்கார மாட்டேன் ... தள்ளி நின்னு உங்கள பாத்துக்கிட்டே இருந்தா போதும் ...." 

என்றவளைக் காணக்காண அவன் காதல் பொங்க ,


"நீ இப்ப இருக்கிற நிலைமைல ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் உனக்கு நல்லதில்ல... இன்னைக்கு ஒரு நாள் நான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடறேன் .... நாளைக்கு அண்ணன் ஹாஸ்பிடல் போறதா சொல்லி இருக்காரு ... அப்ப நான் உன் கூடவே இங்கேயே இருப்பேன் ... சரியா... "  என்றவன் மென் புன்னகையோடு விலகி மூன்றடி கூட நடந்து இருக்க மாட்டான்,


"ஜி........" என்றவளின் குரல் தடுத்தது.


"என்ன்னடி .....  " என நெருங்கினான் காதலோடு.


"சாயங்காலம் என்னை பார்க்க சீக்கிரமா வந்துடுங்க .... உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன் ...." என்றவளின் குரல் லேசாக கமற, 


"ஏய் ....  ஏன் ஒரு  மாறி பேசற .... திலக்க தாத்தா கூட இருக்க சொல்லிட்டு  சீக்கிரமே வர பார்க்கிறேன் .... போதுமா ..." என கூறி அவள் முகத்தில் கனிவை கண்டுவிட்டே விடைபெற்றவனுக்கு, அவனவளின் காதல் உலகையே வென்ற கம்பீரத்தை கொடுக்க,  சாதித்த உணர்வில் மருத்துவமனையை நோக்கி காரை புயல் வேகத்தில்  செலுத்தினான்.


கடந்த தருணங்கள் தான் தன்னவளுடனான கடைசி கணங்கள் என அப்போது  அவன் அறிந்திருக்கவில்லை ...


வருந்தி வருந்தி வருகிறேன் என்றவளை உடன் அழைத்துச் சென்றிருந்தால்,   சூட்சம சரீரமாய் தொடர்ந்து கொண்டிருந்த காலனிடமிருந்து காப்பாற்றி இருக்கலாமே என காலம் கடந்து  உணரும் போது , அவள்  காற்றோடு காற்றாய் கலந்திருப்பாள் என் அறியாமலே,  கல்யாண கனவுகளை சுமந்தபடி மருத்துவமனையை அடைந்தான்.



ஸ்ரீராமம் வருவார்கள் ....












































Comments

Post a Comment