அத்தியாயம் 105
ஊருக்குச் செல்வதற்குள் எப்படியாவது தன்னவளை சந்தித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு அவன் காரிகையே காட்சி கொடுத்தது அளவில்லா ஆனந்தத்தை கொடுக்க,
"ஏய் ... எப்ப இங்க வந்த ...." என்றான் ஆச்சரியமாக .
"இப்பதான்.... ஆனா உங்கள பாக்க ஒன்னும் வரல .... எனக்கு ஓசில எதுவும் வாங்கி சாப்பிட்டு பழக்கம் இல்ல.... நீங்க செஞ்ச ரெண்டு லட்டும் சுமாரா இருந்தாலும் வாங்கி சாப்பிட்டேன் இல்ல ... அதுக்கு பணம் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன் ..." என்றவள் கையில் இருந்த பத்து ரூபாயை மிடுக்காக நீட்ட , அதை வாங்கி
"இப்படி ஒரு பத்து ரூபாவ நான் பார்த்ததே இல்ல ..... பொட்டலமா மடிச்சி வச்சிருக்க..." என்றான் குறும்பாக.
"உண்டியல்ல சேர்த்து வச்ச பணத்திலிருந்து எடுத்துட்டு வந்தது ..."
என அவள் பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் அவனை ஆசை தீர ரசிக்க,
"ஆமா எப்படி வந்த ..." என்றான் ஆர்வமாய்.
"பக்கத்து வீட்டிலிருந்து ஏணி போட்டு ஏறி வந்தேன் ..."
அவள் மொட்டை மாடியின் பக்கவாட்டுச் சுவற்றில் சாய்ந்திருந்த ஏணியை காட்ட, வாய்விட்டே சிரித்தவன்
"நிஜமாவே லட்டுக்கு பணம் கொடுக்க தான் வந்தியா .."
"பின்ன... உங்கள பாக்க வந்தேன்னு நினைச்சீங்களா ..."
"உலகத்துலேயே ஏணி போட்டு ஏறி வந்து லட்டுக்கு பணம் கொடுத்த ஒரே ஆள் நீயா தான் இருப்ப ... சரி சரி பணம் கொடுத்தாச்சில்ல கிளம்பு ..."
என்றான் இம்முறை அவன் மிடுக்காக.
உடனே அவள் தான் கொண்டு வந்திருந்த மஞ்சளும் சிவப்புமாய் இருந்த கயிற்றோடு தன் ஆரஞ்சு துப்பட்டாவிலிருந்து சில நூலிழைகளை உருவி எடுத்து அதனோடு இணைத்து அவன் வலக்கரத்தை பற்றி அதில் கட்டினாள்.
" ஏய் மது .... இது எதுக்கு ..." அவன் வியப்பாக கேட்க,
"ம்ம்ம்ம்ம்.. லட்டு செஞ்சு கொடுத்தீங்க இல்ல... அதுக்கு தான் இந்த கையில கட்டறேன் ..." என்றாள் மென் புன்னகை பூத்த படி.
"நிஜம்மா சொல்லு.... எதுக்காக கட்டற..."
"நீங்க என்னையே நினைச்சுக்கிட்டு இருக்கணும் .... சீக்கிரமா ஊருக்கு திரும்பனும்... நமக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகணும்... உடனே குழந்தை பொறக்கணும் .... அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு இன்னொரு குழந்தை பொறக்கணும்........" அவள் சொல்லிக் கொண்டே செல்ல, அவன் கற்பனையில் மூழ்க
"அப்படி எல்லாம் கடவுள் கிட்ட வேண்டுதல் வச்சி கொண்டு வந்து கயிறு கட்டுறேனு நினைக்காதீங்க .... லட்டு புடிச்சு கொடுத்தீங்க இல்ல அதுக்காக மட்டும் தான் கயிறு கட்டறேன் ..."
அவள் மறைமுகமாக தன் ஆசையை வேண்டுதலாய் சொல்லிவிட்டு, வெட்டி வீராப்புக்காக மறுக்க, அதைக் கேட்டு லயித்து சிரித்தவன்,
"என்னோட ஊருக்கு வரியா ...." என்றான் காதலாய் .
" படிப்பு இருக்கே ..."
"அவ்ளோ உனக்கு படிக்க பிடிக்குமா ..."
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ... படிக்கலைன்னா அப்பா திட்டுவாரு அதுக்காக தான் படிச்சிக்கிட்டு இருக்கேன் .... எனக்கு சமையல் செய்ய தான் பிடிக்கும் ..."
அவள் வெகு எதார்த்தமாய் மொழிய, அதற்கும் அவன் சிரிக்க உடனே அவள்
"எப்ப வருவீங்க ..." என ஏக்கத்தோடு இயம்ப
" லட்டு செய்யறதுக்காக கூப்பிடறியா ..."
" இல்ல பாதுஷா செய்யறதுக்காக கூப்பிடறேன் ..."
கலகலவென்று நகைத்தவன்,
"நவராத்திரி லீவுல வந்துட்டு ஒரு ரெண்டு வாரம் இருந்துட்டு போலாம்னு இருக்கேன் ..." என்றான் .
அவள் யோசிக்க,
"சரி இவ்ளோ கேட்டயே ... நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே இல்லையே ..." அவன் விஷமமாக கேட்க,
"நீங்க இன்ஜினியரிங் படிச்ச அறிவாளின்னு நினைச்சேன் ... ஆனா நீங்க படு மக்கு .... யாராவது ஏணி போட்டு ஏறி வந்து லட்டுக்கு காசு குடுப்பாங்களா ..."
"ஓ... அப்ப லட்டுக்கு காசு கொடுக்க வரலயா... என்னை பாக்க தான் வந்தியா ... அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்க ஓகே தானா ..."
" ஐயோடா... இப்பவாது புரிஞ்சதே...."
என்ற பதிலில் ஆயிரம் பௌர்ணமி நிலவுகள் அவன் முகத்தில் ஜொலிக்க, அப்போது படியில் பேச்சு அரவம் கேட்க,
" ஐயய்யோ ... யாரோ வராங்க நான் கிளம்பறேன் ..." ஏணியை நோக்கி நடந்தபடி பரபரத்தாள்.
" ஏய்.... பாத்து போ ..."
" நவராத்திரிக்காக காத்துகிட்டு இருப்பேன் ..." என மொழிந்த படி வந்த வழியே அவள் இறங்கிச்செல்ல, லேசாக வெட்கப்பட்டு சிரித்தான் காளை.
ரோமியோ ஜூலியட் காலத்தில் இருந்து இன்று வரை, காதலில் ஆண்கள் மட்டும் தான் சுவர் ஏறி குதிப்பதும், ஏணி வைத்து ஏறுவதுமான சாதனை நிகழ்த்திய நிலையில், அவன் காதலுக்கு மட்டும் விதிவிலக்காய் அவனவள் சுவர் தாண்டி வந்ததோடு, அவளது காதலையும் எந்தவித மேல் பூச்சும் இல்லாமல், வெள்ளந்தியாய் வெளிப்படையாக மொழிந்தது ஆணாகிய அவனை கர்வம் கொள்ள செய்ய, கையில் இருந்த கசங்கிய பத்து ரூபாயை பெரிய பொக்கிஷம் போல் பர்சில் வைத்தவன் , அவள் கயிறு கட்டிச் சென்ற கையை ரசனையாய் தொட்டு தழுவினான்.
நாட்கள் அழகாக நகர்ந்தன.
குதிரைக்கு கடிவாளம் போடுவது போல், வெகு சிரமப்பட்டு மனதிற்கு கடிவாளம் இட்டு படிப்பில் கவனம் செலுத்தினான்.
வீட்டில் ஒரு தொலைபேசி, கடையில் ஒரு தொலைபேசி என பொதுவாக இருந்ததால் அவளை இயல்பாக தொடர்பு கொண்டு பேச முடியாத நிலை.
அதோடு காதலை வீட்டு பெரியவர்களிடம் பகிராமல், கடிதம் எழுதுவதும் சரி வராது என்பதால் இருவரும் மானசீகமாகவே தங்கள் காதல் பயிரை வளர்த்தனர்.
நவராத்திரியும் வந்தது. எங்கு காணினும் உறவினர்கள் நண்பர்கள் வருகை என ஊரே விழா கோலம் பூண்டிருந்தது.
ஆனால் நாயகன் ஊர் வந்து சேரவில்லை ...
பொறுமையாக மனம் கொள்ளா காதலோடு காத்திருந்தாள் பெண்....
நவராத்திரியின் ஒரு வாரம் கடந்த நிலையில் அவன் ஊர் வந்து சேர, செய்தி அறிந்த மறுக்கணமே ராஜ்குமார் வீட்டில் இருந்தாள் மதுஸ்ரீ.
அவளைக் கண்டதும், அவன் விழிகளால் வரவேற்க, அவளோ அவன் கரத்தில் தான் கட்டிருந்த கயிறு இருக்கிறதா என தேட , பாவையின் பார்வை அறிந்தவன்,இயல்பாக கரத்தை உயர்த்தி கேசத்தை கோதுவது போல் காட்ட, நாணத்தோடு மென்புன்னகை பூத்தாள் பெண்.
காதலை முதலில் மொழிந்ததென்னவோ அவன் தான் .... ஆனால் அடுத்த அடுத்த படிகளில் அதனை அழகாக அம்சமாக நகர்த்தி செல்வது அவள் அல்லவா ...
என்று எண்ணுகையில் பூரித்துப்போனவன், வீட்டு பெரியவர்கள் முன்பே அவளிடம் இயல்பாக நலம் விசாரித்தான்.
பேரனின் முகத்தில் தென்பட்ட புதுவிதமான கூச்சம், சந்தோஷம், கண்களில் வழிந்த காதல் அனைத்தையும் கண நேரத்தில் கண்டுகொண்ட ராஜ்குமார், மதுஸ்ரீ முகத்திலும் அதற்கு இணையான உணர்வுகள் பிரதிபலித்ததை கவனிக்க தவறவில்லை.
வீட்டில் எங்கு திரும்பினும் உறவினர்கள் கூட்டம் இருந்ததால், இளையவர்களுக்கு தனிமை கிட்ட வில்லை ...
இந்நிலையில் நவராத்திரியின் கடைசி இரு தினங்கள் தாண்டியா(கோலாட்டம்) நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆண்கள், பெண்கள் ,சிறியவர்கள் பெரியவர்கள், மணமானவர்கள் , ஆகாதவர்கள் என்ற பேதம் இல்லாமல் அழகழகான வண்ணங்களில் விதவிதமான ஆடை ஆபரணங்களோடு மிக நேர்த்தியாக துர்கா மாதா மகிஷாசுரனை அழித்த ஆனந்தத்தில் தாண்டியா, கர்பா நடனங்கள் நவராத்திரி தினங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.
மான்சி தாண்டியா நடனத்தை அருமையாக ஆடுவாள். ஆனால் அவள் இருந்த மனநிலைக்கு அவளால் அனைவரோடும் குறிப்பாக ராணாவோடு இணைந்தாட முடியாது என்பதால் கால் வலி என்ற காரணத்தைச் சொல்லி ஒதுங்கிக் கொள்ள, தோழி ஆடாதது வருத்தம் அளித்தாலும், தன் மன்னவனோடு ஆடும் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அருமையாக ஆடினாள் மதுஸ்ரீ.
நள்ளிரவை நெருங்க நெருங்க இருவரின் ஆட்டமும் அழகாய் சூடு பிடிக்க, வந்திருந்தவர்களின் பார்வைக்கு அது விருந்தாகி போக, இம்முறை ராஜ்குமாரை தாண்டி ராணா மற்றும் மதுஸ்ரீயின் பெற்றோர்களுக்கும் அவர்களுக்கு இடையே ஆன நேசம் புரிய வர, அங்கேயே பெரியவர்கள் கூடி அவர்கள் திருமணத்தை பேசி முடிவு செய்தனர்.
அதற்கு மேல் நடந்ததெல்லாம் மின்னல் வேகம் தான் ...
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் புடை சூழ ஆடம்பரம் இல்லாமல் வெகு அழகாக அவர்களது நிச்சயதார்த்தம் நடந்தேறியது.
நிச்சயதார்த்தத்தின் ஒரு நிகழ்வாக மணமகனின் தாய், வெகு அழகாக அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணின் கைகளில் மருதாணி இட்டு, அவள் மடியில் பரிசுப் பொருட்களை வைத்து விலை உயர்ந்த அடர் சிவப்பு நிற பனாரசி துப்பட்டாவை அவளது தலையில் போர்த்தி அழகு பார்ப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுவதோடு, அதற்கு மேல் அந்த மணப்பெண் மணமகனின் குடும்பத்திற்கு சொந்தமாகி விடுகிறாள் என்பதையும் ஊர்ஜிதப்படுத்தும் சடங்கு என்பதால், திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதற்கும் கொடுக்கப்பட்டது.
மான்சியை தவிர அங்கிருந்த அனைவருக்கும், நடந்த நிச்சயதார்த்தம் பேரின்பத்தை கொடுக்க, மணமக்களை இலை மறை காய் மறையாக மட்டுமல்லாமல் நேரடியாகவும் கேலி கிண்டல் செய்து மகிழ்ந்தனர்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு திருமணம் என முடிவெடுக்கப்பட்டு அதற்கு நாளும் குறிக்கப்பட, அந்த வார இறுதியில் ராணா ஊருக்குச் செல்ல இருப்பதால் திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் ஆபரணங்களை தன் வீட்டு பெரியவர்களோடு தன்னவளையும் அழைத்துச் சென்று தேர்வு செய்தான்.
தனிமை காதலர்களுக்கு எதிரி என்பதோடு அதற்கான சந்தர்ப்பமும் அமையாததால், காலை மாலை என இரு வேளைகளில் வீட்டு பெரியவர்கள் மற்றும் நட்பு வட்டங்களுக்கு முன்பாகவே இளையவர்களின் சந்திப்பு நடந்தேறியது.
இந்நிலையில் ஒரு வாரம் பனிக்கூழாய் கரைய 'கர்வா சவுத் ' என்னும் வடமாநிலங்களில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகை வந்தது.
கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக தமிழகப் பெண்கள் கொண்டாடும் வரலட்சுமி விரதம், சத்தியவான் சாவித்திரி விரதம், காரடியான் நோன்பு போல் அது திருமணமான பெண்களுக்கான பண்டிகையாகும்.
அன்று சூரிய உதயத்திலிருந்து சந்திரன் உதயம் வரை மணமான பெண்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதத்தை மேற்கொள்வர்.
அது பெண்களுக்கான பண்டிகை என்பதால், விரதம் மேற்கொள்ளும் பெண்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு, விதவிதமான ஆடை ஆபரணங்களோடு உறவினர் மற்றும் நட்பு வட்டங்களோடு ஆடிப்பாடி மகிழ்வர்.
பிறகு மாலையில் சல்லடையின் வழியே பௌர்ணமி சந்திரனை பார்த்து பால், இனிப்பு பண்டங்கள் , தண்ணீர் ஆகியவற்றை படைத்து விட்டு பின் அதே சல்லடையினுடே கணவரின் முகத்தையும் காதலோடு பார்ப்பர்.
தனக்காக ஒரு நாள் முழுவதும் விரதம் மேற்கொண்டிருந்த மனையாளின் வகுட்டுல் கணவன்மார்கள் குங்குமம் இட்டு பிறகு பௌர்ணமிக்குப் படைத்த தண்ணீர், இனிப்பு பண்டங்களை மனையாளுக்கு வழங்கி விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவர்.
அதன் பின் அனைத்து உறவினர்களும் நட்பு வட்டங்களும் ஆண் பெண் பேதம் இல்லாமல் அந்த மொட்டை மாடி பௌர்ணமி வெளிச்சத்தில் கொண்டு வந்த உணவினை பகிர்ந்துண்டு மகிழ்வர்.
இப்படி கொண்டாடப்படும் 'கர்வா சவுத்' பண்டிகை தினத்தன்று காலையில் தன் அக்காள் மதுவந்தியை சந்திக்கச் சென்றவளிடம்,
"ஸ்ரீ, இன்னைக்கு நான் விரதங்கிறதால,என் மாமியார் தான் சமைக்கிறதா இருக்காங்க ..... உனக்கும் அப்பாவுக்கும் சேர்த்து சாப்பாடு கொடுத்துவிடறேனு சொல்லி இருக்காங்க ..." என அவள் கூற,
"இல்லக்கா .... அப்பாவுக்கு மட்டும் சாப்பாடு கொடுத்து விட்டா போதும் ... நானும் விரதம் இருக்கலாம்னு இருக்கேன் ..." என்றாள் இளையவள் லேசான வெட்கத்தோடு நாணிகோணி.
"அடேங்கப்பா இப்பவே விரதமா .... நடத்து நடத்து... தப்பு ஒன்னும் இல்ல ..."
"எப்படியும் அடுத்த வருஷம் இருக்க தானே போறேன் ...." என மீண்டும் மதுஸ்ரீ லேசான வெட்கத்தோடு மொழிய,
"அதான் சொல்லிட்டேனே .... என்ஜாய் ..."
என்றாள் பெரியவள் தங்கையின் முகத்தை வாஞ்சையாய் பார்த்து.
மதுஸ்ரீ வந்திருப்பதை அறிந்து, அடுக்களை நோக்கி வந்த ராணா, அனைத்தையும் கேட்டுவிட்டு மெல்லிய புன்னகையோடு, வந்த தடம் தெரியாமல் வெளியேறினான்.
அனைவரது இல்லங்களிலும் பண்டிகை கொண்டாட்டம் என்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.
மாலையில் ராஜ்குமாரின் வீட்டு பெரிய மொட்டை மாடியில், உறவினர்கள், நண்பர்கள் பண்டிகையை கொண்டாட ஒன்று கூடினர் .
மான்சி மட்டும் வரவில்லை.
ராணாவை சந்தித்தாலே அவளது காதல் மனம் ஏகத்துக்கும் ஏக்கம் கொண்டு மன அழுத்தத்தில் தவிக்கிறது என்பதால் முடிந்தவரை அவனைப் சந்திக்கும் சந்தர்ப்பத்தை அறவே தவிர்த்தாள்.
பெண்கள் ஜல்லடையின் வழியே சந்திர தரிசனத்தை பார்த்துவிட்டு தன் கணவனின் முகத்தை பார்க்கும் சடங்கு அருமையாக நடந்தேறிக் கொண்டிருக்க, மொட்டை மாடியை நோக்கி நடந்த ராணாவின் கரத்தை தூணின் பின்புறம் இருந்து பற்றி இழுத்தாள் மதுஸ்ரீ .
ஒரு கணம் புரியாமல் தடுமாறியவன்,
"ஏய், இங்க இருட்டுல என்ன பண்ணிக்கிட்டு இருக்க ...." என்றான் ஆச்சரியமாய்.
"ஒரு நிமிஷம் என் கூட வாங்க ..." என்றவள் அவன் கரம் பற்றி தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்.
உறவு வட்டங்கள் அனைத்தும் மொட்டை மாடியில் கொண்டாட்டத்தில் இருக்க, பால் நிலா காயும் தோட்டத்தில் தன்னவனை நிறுத்தி, சல்லடையினுடே பௌர்ணமியை பார்த்து படைத்துவிட்டு, பிறகு ராணாவின் முகத்தையும் சல்லடையின் வழியே அவள் காதலோடு நோக்க, ஒரு கணம் உறைந்தவன், சுதாரித்துக் கொண்டு குங்குமத்தை அவள் வகுட்டில் வைத்ததோடு, தண்ணீர் மற்றும் இனிப்புகளை ஊட்டி அவள் விரதத்தை முடித்தான்.
வழக்கமாக அக்னியை சாட்சியாக வைத்து தான் திருமணம் நடந்தேறும்.
ஆனால் அவர்களுக்கு அந்தக் குளிர் நிலவின் வெள்ளொளியை சாட்சியாக வைத்து மானசீகமாக திருமணம் நடந்தேற, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு இருவரின் மனமும் நேசத்தால் நிரம்பி வழிந்தன.
"மது, எனக்கும் தண்ணியும் ஸ்வீட்டும் கொடு.... ....." என்றவனை அவள் புரியாமல் நோக்க,
"நானும் என் விரதத்தை முடிக்கணுமில்ல ..."
" நீங்களும் விரதமா ...."
" ஆமா.... நான் நல்ல ஆரோக்கியத்தோடயும் ஆயுளோடயும் இருக்கணும்னு நீ விரதம் இருக்கும் போது நீ நல்ல ஆரோக்கியத்தோடயும் ஆயுளோடயும் இருக்கணும்னு நான் விரதம் இருக்க கூடாதா..... ..." என்றான் அவனது விரதம் பலிக்க போவதில்லை என அறியாமல் .
பெரும் காதலோடு கண்கள் கசிய, தன் கையால் தண்ணீர் குவளையை எடுத்துக் கொடுத்தவள், உடன் இனிப்பையும் எம்பி அவனுக்கு ஊட்ட, அப்போது அங்கு வந்த திலக்,
" நடக்கட்டும் நடக்கட்டும் ....." என்றான் பெரும் புன்னகையோடு.
" எங்கடா ஆள காணோமேனு பார்த்தேன் ..... வந்துட்டயா...." என்ற ராணாவிடம்,
"ரெண்டு பேரும் கிளம்புங்க .....மேல டின்னர் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க ... நாமளும் போய் சாப்பிடலாம் ..... " என்றவனை காதல் ஜோடி பின் தொடர்ந்தது.
அனைவரும் கொண்டு வந்த உணவினை அழகாக பங்கிட்டு கதை பேசியபடி உண்டு மகிழ்ந்தனர்.
ராணா ஆண்களின் கூட்டத்தில் இருந்தாலும் அவன் பார்வை அவ்வப்போது மதுஸ்ரீயை தொட்டுச் செல்ல, அவளும் பிறர் அறியாது அவன் பார்வையை உள்வாங்கிக் கொண்டே பெரியவர்களோடு வட்டமடித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் நள்ளிரவை நெருங்கும் சமயத்தில், அனைவரும் மெதுவாய் விடை பெற தொடங்கினர்.
மறுநாள் காலையில் ராணா பெங்களூருக்கு பயணப்படவிருப்பதால், அவனுக்கு தன்னவளோடு பத்து நிமிடமாவது தனிமையில் பேச வேண்டும் என்ற ஆசை எழ, அதை செயல்படுத்த எண்ணி, விடைபெற முயன்றவளை பார்வையால் அழைத்து பிறர் அறியாமல் தன் அறைக்குள் இழுத்துக் கொண்டான்.
"என்ன பண்றீங்க ... யாராவது ஏதாவது சொல்ல போறாங்க ..." என தயங்கியவளிடம்
"உனக்காக ஒன்னு வாங்கினேன் ... " என்றவன் அவள் கரம் பற்றி மோதிர விரலில் 'R' என்ற ஆங்கில எழுத்தை கொண்ட தங்க மோதிரத்தை அணிவித்தான்.
"என்னது இது ... ஏற்கனவே எல்லாம் வாங்கிட்டோமே ...." அவள் ஆச்சரியமாய் கேட்க ,
"அது எல்லாம் என் அப்பா அம்மா பணத்துல வாங்கினது .... இது என்னோட இன்டர்ன்ஷிப்ல கிடைச்ச பணத்துல வாங்கினது ... உனக்கு இன்னைக்கு கொடுக்கணும்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருந்தேன் .... அதான் இன்னைக்கு காலையில போய் வாங்கிட்டு வந்தேன் ...நான் எப்பவும் உன் கைக்குள்ளேயே இருக்கணும்னு தான் இப்படி வாங்கினேன் ... புடிச்சிருக்கா .."
கதவின் மறைவில் அவளை நிறுத்தி வைத்து சன்னமாக கேட்டுக்கொண்டிருந்தவனின் விழிகளில் அவன் தாத்தா ராஜ்குமார், திலக்கின் தந்தை தனுஷ் மற்றும் மேலும் இருவர் அவனது அறை நோக்கி வருவது ஜன்னலின் வழியே தெரிய,
"வெளிய வராத... இங்கேயே இரு ... தாத்தா வராரு ..." என தன்னவளிடம் பரபரத்துவிட்டு, அறையை விட்டு வெளியே வந்து பாட்டனை பார்த்து மென் புன்னகை பூத்தான்.
"நான் நாளைக்கு காலைல நாலு மணிக்கு உஜ்ஜய்ன் கிளம்பறேன்... நீ ஊருக்கு நல்லபடியா போயிட்டு வா .... உடம்ப பாத்துக்கப்பா ... கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் தான் இருக்கு ஞாபகம் வச்சிக்க ..."
கம்பீரமாக மொழிந்தவரிடம்
"சரி தாத்தா ... நீங்களும் நல்லபடியா போயிட்டு வாங்க ..." என்றவன் படி இறங்கியவர்களை பின் தொடர, அப்போது
"நாங்க மூணு பேரும், இங்க தாழ்வாரத்துலயே படுத்துகிறோம் ராஜ்..... அப்பதான் காலையில சீக்கிரமா எழுந்து கிளம்ப முடியும் ...." என திலக்கின் தந்தை கூற, ராஜ்குமாரும் ஆமோதிக்க , உடனே அந்த வீட்டின் பெரிய கனமான தேக்கு மர வாயிற் கதவு மூடப்பட, ஒரு கணம் செய்வதறியாது உறைந்து போனான் நாயகன்.
ராஜ்குமார் மட்டும் இருந்திருந்தால், மதுஸ்ரீயை பற்றி கூறியிருப்பான் . ஆனால் உடன் இருக்கும் மற்ற மூவரும் குடும்பத்தில் முக்கிய நபர்கள் என்பதோடு சற்று பழமைவாதிகளும் கூட என்பதால் யோசித்தபடி அவன் அசையாமல் நிற்க,
"போய் தூங்கு பா ... நான் இப்ப போய் படுத்தா தான் காலையில நாலு மணிக்கெல்லாம் ரயில புடிக்க முடியும் ..." என்றபடி ராஜ்குமார் விடைபெற,மற்ற மூவரும் வாயிற் கதவிற்கு அருகிலேயே பாய் விரித்து படுக்க, எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டோமே என்றெண்ணியபடி அறைக்கு வந்தவனிடம் ,
"சரி நான் கிளம்பறேன் ..." என்றாள் அவன்
கண்மணி பரபரப்பாக.
"எங்க போற .... கீழ கதவை மூடிட்டாங்க .... இப்ப கீழப்போனா நிச்சயம் மாட்டிக்குவோம்.... ..."
" ஐயோ, ஏணி வேற இல்லையே .... நான் என்ன பண்ணுவேன் ...."
" எதுக்கு பயப்படற .... நான் இருக்கேனில்ல..."
" அதான் எனக்கு பயமே ..." அவள் குறும்பும் வெட்கமுமாய் முடிக்க, அதுவரை இருந்த தயக்கமும் பயமும் தடம் தெரியாமல் விலகி ஓட, குலுங்கி நகைத்த படி நெருங்கியவன் அவள் விழிகளோடு தன் விழியைக் கலந்து, அவள் இடைப்பற்றி தன்னோடு இறுக்கிக் கொண்டு,
"நாளைக்கு காலைல ஊருக்கு போறேன் .... இதோட நம்ம கல்யாணத்துக்கு தான் வருவேன் .... அதனால இன்னைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா தப்பில்லயே ..." என்றபடி அவள் இதழை மென்மையாய் சிறைபிடித்தான்.
பௌர்ணமி இரவில், பனிக்குளிரில் மனதிற்கினிய மணாளனின் அத்துமீறல் மயக்கத்தைத் தர, மெய் மறந்தாள் பெண் .
கழுத்து வளைவினில் அவன் மூச்சுக்காற்று மோகத்தைக் கூட்ட, அவள் உடல் சிலிர்க்க அவன் உயிர் துடித்தது ....
தனிமை சந்திப்பு, தவிப்பைக் கூட்டி தன்னிலை இழக்கச் செய்யும் என்றறிந்தே விலகி இருந்தவர்களுக்கு தானாக அமைந்த சந்தர்ப்பம் தாபத்தைக் கூட்ட, நாள் கணக்காய் சுமந்து கொண்டிருந்த நாணம் நலிந்து போக , இறுக அணிந்திருந்த ஆடைகள் விடுதலை பெற, அந்த விடியாத இரவில் விலகாமல் இருவரும் ஒரே போர்வைக்குள் புத்துலகத்தை நோக்கி பயணப்பட்டனர் ...
ஸ்ரீராமம் வருவார்கள் ....
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
DeleteSuper mam
ReplyDeletethanks ma
DeleteAyyo yellam nalla pogum pothu ippam puthusa oru aabbu vaikka poranga,,,
ReplyDelete