அத்தியாயம் 104
வந்து நின்ற மான்சியை அவன் கண்டு கொள்ளாமல்,
"எவ்ளோ லட்டு வேணுமோ சொல்லு .... வாங்கி தரேன்... இல்லனா வீட்ல ஆள வச்சு செஞ்சி கொடுக்க சொல்றேன் ... அத விட்டுட்டு நான் எதுக்காக லட்டு செய்ய கத்துக்கணும் .... நாம என்ன கல்யாணத்துக்கு அப்புறம் ஸ்வீட் ஸ்டாலா போட போறோம்........" மதுஸ்ரீயிடம் அவன் கெஞ்சாத குறையாக கேட்க,
"நல்லா லட்டு செய்யறவங்கள தான் கல்யாணம் கட்டிக்கணும்னு ஒரு கொள்கையோடு இருக்கேன் ..." என அவள் விடாப்படியாக சொல்ல,
"ஏம்மா.... இதெல்லாம் ஒரு கொள்கையாம்மா...."
அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வர, அடக்கியபடி
"ஆமா கொள்கை தான் ...." என்றாள் கன்னக்குழி விழ கஞ்ச புன்னகையோடு.
இதையெல்லாம் பார்க்க பார்க்க மான்சியின் காதலிக்கும் மனது காந்தியது.
ஆம் ... அரை மணி நேரத்திற்கு முன்பாக தான் அவள் கற்பனைக்கு உயிர் கொடுத்திருந்தான் அங்கிருந்த ஆடவன்.
கடையில் ஏதோ ஒரு பொருள் வாங்கி வருவதற்காக, சற்று நேரத்திற்கு முன்பு அவள் ராஜ்குமாரின் வீட்டு வாயிலை கடக்கும் போது கார் வந்து நிற்க, அதிலிருந்து ராணா, அவன் தாய் தீபிகா, தந்தை ஆதிகேசவன் இறங்குவதை எதேச்சையாக பார்த்தவள் ஒரு கணம் இமைக்க மறந்து உறைந்து போனாள்.
நித்தம் நித்தம், கணத்திற்கு கணம் நினைவு தெரிந்த நாளிலிருந்து கணவனாக உருவகபடுத்தப்பட்டிருந்த உருவம் அவள் கண் முன்னே பிரத்யட்சமாகி இருந்ததைக் கண்டு, தன்னைத் தேடி தன் மனக்காதலன் வந்து விட்டான் என்றெண்ணியவள் , சற்று ஒதுங்கி நின்று அவர்களுக்கிடையேயான உரையாடல்களை உற்று நோக்கிய போது அவன் யார் என்று தெரிய வர , மகிழ்ந்து போனாள் மாது.
அடிக்கடி ராஜ்குமார் வீட்டிற்கு மதுஸ்ரீயுடன் வருபவள் என்பதால், மீண்டும் அவனது தரிசனம் பெற ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கிக் கொண்டு அவள் அங்கு வந்து நிற்கவும், அவன் மதுஸ்ரீயிடம் தன் காதலை வெளிப்படுத்தவும் சரியாக இருக்க, உள்ளுக்குள் உடைந்து போனாள் பேதை.
பட்டாம்பூச்சியின் ஆயுட்காலம் சில நாட்களே என கேள்விப்பட்டிருக்கிறாள்.... ஆனால் அதனை விட அவளது காதல் நீர்க்குமிழி போல் சில வினாடிகளிலேயே காணாமல் போய்விட்டதே ....
எங்கோ விழ வேண்டிய மழைத்துளி, காற்றின் திசையால் கரங்களில் பட்டு வழிந்தோடியது போல், கிட்டாமல் போன காதலை எண்ணி ,மனம் பட்டுப்போனாள்....
இந்த உலகிலேயே மிகச் சிறிய சோகமான காதல் காவியம் என்றாள் அவளுடையது தான்.....
அரை மணி நேரத்தில் காதல் காவியமா என்றால், ஆம் என்று சொல்வதற்கு அவளுக்கு முழு தகுதி உண்டு ....
காரணம் தன் மனம் கவர்ந்தவனை ஸ்தூல உருவமாக , அரை மணி நேரமாக தான் பார்க்கிறாள் ..... ஆனால் அவனது அருவுருவத்தோடு அணு அணுவாக குடும்பமே நடத்தி இருக்கின்றாளே ...
இப்படியாக உள்ளுக்குள் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் புயல் சின்னமாய் உருவாகி ஓங்காரமாய் ஒலிக்க, அதன் விளைவு கண்கள் கசிய, இமை சிமிட்டி சரி செய்து மென் புன்னகை பூத்து சமாளித்தாள் அணங்கு .
"வேற வழியே இல்லையா....." மீண்டும் அவன் இறங்கி வந்து கெஞ்ச,
"ம்ஹூம்.... லட்டு புடிக்க கத்துக்குங்க அதான் ஒரே வழி ...." என்ற மதுஸ்ரீ
"வாடி போலாம் ...." என மான்சியிடம் சொல்லிக்கொண்டே அவள் கரம் பற்றி வெளியே அழைத்து செல்ல , மனம் கவர்ந்தவளின் அசைந்தாடும் நீண்ட கூந்தலில் மனதைத் தொலைத்த படி சிலையாகிப் நின்றான் நாயகன்.
பத்து நிமிடத்திற்கு முன்பு வரை யார் என்றே தெரியாத பெண்ணிடம், தற்போது திருமணத்திற்காக பேரம் பேசிக் கொண்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டு போனான்.
பெங்களூர் போன்ற பெரு நகரத்தில் வசிப்பவனுக்கு பல்வேறு பண்பாட்டுக் கலாச்சாரங்களைக் கொண்ட பெண்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தாலும், ஏனோ அவன் மனதை எந்த ஒரு யுவதியும் இந்தக் கணம் வரை ஊசியின் நுனி அளவிற்கு கூட தொட்டதில்லை.
அந்த வயதிற்கே உரிய எதிர்ப்பாலின ஈர்ப்பால் தன்னைக் கடக்கும் பெண்களை சிறு சுவாரசியத்தோடு அவன் கண்கள் பார்த்தாலும் அரை கணம் கூட அந்தப் நினைவை அவன் தூக்கிச் சுமந்ததில்லை.
ஆனால் எங்கிருந்தோ சற்று முன்பு சிட்டுக்குருவி போல் சிறகடித்து வந்தவள், அவன் இதயத்தில் சிம்மாசனம் போட்டல்லவா அமர்ந்து விட்டாள் .....
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து....
என்ற குறள் போல் கல்வி மட்டுமல்ல, கொண்ட தூய்மையான காதலும் ஏழேழு பிறவிக்கும் தொடர்ந்து வருமோ என்று என்னும் அளவிற்கு, அவளைக் கண்ட மாத்திரத்திலேயே யாதொரு முன்னுரையும் இல்லாமல், காதல் தீ கனலாய் பற்றிக் கொண்டதை எண்ணி லயித்துக் கொண்டிருக்கும் போது தான், அவள் பெயரை கேட்கவில்லையே என்ற நிதர்சனம் உரைக்க,
"என் வீட்டுக்கும் வராம, கடைக்கும் வராம இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க..." என்ற திலக்கின் குரல் சுயத்தை உணர்த்த,
"இப்போ ஒரு பொண்ணு வந்தா ... தீதீனு சொன்னா... உடனே வெளியே போய்ட்டா ..." என்றான் தத்தி தடுமாறி அரைகுறையாக.
தன் அண்ணிக்கு ஒரு தங்கை உண்டு என்று மட்டும் அறிவான் ஆனால் அவளை சந்திக்கும் சந்தர்ப்பமோ ஆர்வமோ அப்போது இல்லாததால், அவளை பற்றி அறிந்திருக்கவில்லை. இப்போது அவள் பெயரில் இருந்து அனைத்தும் தேவைப்படுவதால் முற்றுப்பெறாமல் அவன் வாக்கியத்தை முடிக்க,
"ஓ.... ஸ்ரீய பத்தி சொல்றியா ..." என்றான் திலக் இயல்பாக.
"ஸ்ரீயா....???"
"ஆமாண்டா... அது உங்க பாபி மதுவந்தியோட தங்கச்சி... பேரு மதுஸ்ரீ.... பாபிய சின்ன வயசுல இருந்தே அவங்க வீட்ல மதுன்னு கூப்பிடறதால, மதுஸ்ரீயை அவங்க வீட்ல ஸ்ரீனு தான் கூப்பிடுவாங்க ...."
" ஓ......" என்றவன்
எல்லாரும் உன்னை கூப்பிடற மாறி ஸ்ரீன்னு கூப்பிடமாட்டேன்.... உன்னை மதுன்னு தான் கூப்பிடுவேன் .... என மனதோடு மொழிந்து விட்டு,
" திலக் ... எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்டா ..." என்றான் ஆர்வமாய்.
" என்ன ...."
"எனக்கு லட்டு செய்ய யாராவது கத்து குடுப்பாங்களா ...."
"லட்டா.... அதை ஏன் செஞ்சுகிட்டு... அகர்வால் பையா கடைக்கு போனா சூப்பர் மோத்தி லட்டு கிடைக்குமே..."
"அது வேணாம் டா ..." என்றவன் நாணிக்கோணி ஒருவழியாக தன் காதல் விவகாரத்தை பகிர ,
"அடப்பாவி .... நீ ஊருக்கு வந்தே ரெண்டு மணி நேரம் தான் ஆகுது .... அதுக்குள்ள இவ்ளோ வேலை பார்த்துட்டயா ... ஆமாம் திடீர்னு உனக்கு ஏன் மதுஸ்ரீ மேல லவ் வந்துச்சு ..."
"அவ சிந்தி ரொம்ப அழகா பேசறாடா..."
"ஆள பாத்து மயங்கிட்டு, அவ சிந்தி பேசறா ஹிந்தி பேசறானு புளுகறயா... அப்படி பார்த்தா அவளை விட நான் நல்லா சிந்தி பேசறனே டா..."
"அதுக்காக உன்ன லவ் பண்ண முடியுமா ... சரி அத விடு .....தாதிக்கு வயசாயிடுச்சு... அம்மாவுக்கும் லட்டு எல்லாம் சரியா செய்ய வராது ...." என அவன் யோசனையில் இருக்கும் போது,
"டேய் என் வீட்டுக்கு வாடா .... சுனந்த( திலக்கின் மனைவி) நல்லா லட்டு செய்வா... " என்றான் திலக் நட்பாய்.
அப்போது திலக்கிற்கு திருமணம் ஆகி பெண் குழந்தை பிறந்த நேரம் ...
ராணாவின் அண்ணன் ராகேஷின் திருமணத்திற்கு, இரண்டாம் நாள் திலக்கின் திருமணம் நடந்தேறி இருந்தது ...
"வேணாம்டா நான் என் பாபி கிட்ட கேட்டுக்கறேன் .... நாளைக்கு ஈவினிங் பெங்களூருக்கு ஃப்ளைட் ... அதுக்கு முன்னாடி மதுக்கு லட்டு செஞ்சு கொடுத்தாகணும் ..." என்றவன் தன் அண்ணி மதுவந்தியிடம் தன் காதல் விவகாரத்தை பற்றி மூச்சு விடாமல் லட்டு செய்ய கற்றுக் கொடுக்குமாறு கேட்க அவளும் தானே லட்டு செய்து தருவதாக கூற, அவன் மறுக்க என நீண்ட தர்க்கத்திற்கு பிறகு ஒரு வழியாக, மதுவந்தியின் அறிவுறுத்தலின் படி கை தேர்ந்த சமையல் கலை நிபுணர் போல் அருமையாக மோத்தி லட்டு செய்து முடித்தான்.
ஒன்றை உண்டு பார்த்து, தன் திறமையை வியந்தவன், மீதம் இருந்ததில் இரண்டு லட்டுக்களை மட்டும் ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு மதுவந்தியிடம் உப்பு பெறாத ஒரு காரணத்தை சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று விட்டான்.
மாலை 6:00 மணிளவில், ராணாவை பார்வையால் தேடியபடி வீட்டிற்குள் நுழைந்த மது ஸ்ரீயிடம், ராணாவின் படிப்பு, பட்டயங்களை பகிர்ந்த மதுவந்தி அவன் லட்டு செய்த கதையையும் இயல்பாக கூற, ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தாள் இளையவள்.
அவனிடம் ஈர்ப்பு இருந்தாலும், ஏதோ விளையாடி பார்க்கிறான் என்ற எண்ணத்தில் தான், லட்டு செய்து கொடுக்கச் சொல்லி அவன் ஆசையை திசை திருப்பினாள்.
ஆனால் மெய்யாகவே அவன் அவள் தமக்கையிடம் பயின்று அழகான நிறம், அளவான வடிவம் , தேனாய் கரையும் லட்டுவை நேர்த்தியாக செய்திருந்தது அவளை வியப்பில் ஆழ்த்த, மேலும் ஒன்றை உட்கொண்டவளுக்கு , லட்டுவின் தித்திப்பைக் காட்டிலும், அவனது காதலின் தீவிரம் இனிப்பாய் உள்ளிறங்க, கன்ன கதுப்புகள் சிவக்க, மெல்லிய வெட்கத்தோடு தமக்கையிடமிருந்து விடை பெற்றவளை யாருமற்ற வீட்டு முற்றத்தின் தூணிற்கு பின்னால் வழிமறைத்தான் அவள் நாயகன் .
"இந்தா நீ கேட்ட லட்டு .... நானே செஞ்சேன் ..." என்றவனின் நேர்மையும், அவனது காதலின் தீவிரமும் அவளைப் உள்ளூர நெகிழச் செய்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒரு லட்டை எடுத்து ருசி பார்ப்பது போல் தின்றுவிட்டு,
"ம்ம்ம்ம்.... பரவால்ல .... ஓரளவுக்கு நல்லாவே செஞ்சி இருக்கீங்க ... என்ன... இன்னும் கொஞ்சம் இனிப்பு தூக்கலா போட்டிருக்கலாம்...இன்னும் கொஞ்சம் நெய் போட்டு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் ... அடுத்ததா நீங்க என்ன பண்றிங்க .... பாதுஷாவும் செய்ய கத்துக்கங்க... ... அப்புறம் நம்ம கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம் ..." என மிடுக்காக மொழிந்துவிட்டு அவள் விலகி நடக்க முயல ,
"ஏய் .... விளையாடறியா... விட்டா என்னை சமையல்காரனாக்கிடுவ போல இருக்கே ..." என்றவன் தன் இரு கரங்களால் அவள் மென் இடையை வளைத்து பிடித்து தன்னோடு இறுக்க, பெண்ணவளின் உடலும் மனமும் ஒரு சேர ரயில் வண்டியின் தடதடக்கும் சத்தத்தை உணர, வேகத்தில் அணைத்தவனுக்கும் முதல் பெண் ஸ்பரிசம் மோனநிலையைக் கொடுக்க, வீட்டு வாயிலில் ராஜ்குமாரின் குரல் அப்போது பார்த்து ஒலிக்க, இருவரும் பட்டுக் கத்தரித்தாற் போல் விலகி , அவன் மாடிக்கும், அவள் வாயிலை நோக்கியும் வேகமாக நடையை கட்டினர்.
அன்று இரவு இருவருக்குமே உறக்கம் பிடிபடவில்லை ....
விடியலுக்காக விருப்பமாய் காத்திருந்தனர் ..
அதிகாலை ஆறு மணி அளவிலேயே வீடு விழா கோலம் பூண்டு உறவினர்கள் நண்பர்களால் நிரம்பி வழிய தொடங்கியது.
அவசர அவசரமாக குளித்து முடித்து, சிவப்பும் மஞ்சளும் கலந்த காக்ரா சோளியில் பொருத்தமான அணிமணிகளோடு அம்சமாக தயாரானாள் நாயகி.
ராணாவோ சந்தன நிறத்தில் தங்கச் ஜரிகையிட்ட ஷெர்வானியில் கம்பீரமாய் தயாராகி திலக்குடன் சுப நிகழ்ச்சி நடக்கும் அந்த வீட்டின் பறந்து விரிந்த கூடத்திற்கு வர, அவனையே வைத்த கண் வாங்காமல் தூணின் பின்னே மறைந்து நின்றபடி ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மான்சி.
சற்று நேரத்திற்கெல்லாம்
"ஏய் இங்க என்ன பண்ற ..." என்று மது ஸ்ரீ அவள் தோளை தொட , திரும்பிப் பார்த்தவள் அவள் அழகிலும் அலங்காரத்திலும் ஒரு கணம் அசந்து தான் போனாள்.
மது ஸ்ரீயை பார்க்க பார்க்க மான்சிக்கு பொறாமை கூடியது ...
தன்னிடம் இல்லாத, தனக்கு கிட்டாத ஒன்று பிறரிடத்தில் இருப்பதை பார்த்து வரும் ஏக்கத்தின் வெளிப்பாடே பொறாமை ...
அது பெரும்பாலும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒன்றுதான் என்றாலும் பொறாமை பொறாமையாகவே இருந்தால் பாதகம் இல்லை ...
ஆனால் அது அப்படி இருக்காது ...
கணத்திற்கு கணம் பரிணாம வளர்ச்சி அடைந்து வன்மத்தை வளர்த்து விடும் ....
அந்த வன்மம் பிறர் வாழ்க்கையை மட்டுமல்ல தன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்து விடும் .... என்பதை உணர்ந்திருந்த மான்சி, மனதில் பொறாமை உணர்வு அடியெடுத்து வைக்கும் போதே அதை உரு தெரியாமல் அழித்துவிட எண்ணி, ராணா கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க முடிவெடுத்தாள்.
ஆனால் அவளது தாயும் தந்தையும் விடாப்பிடியாக விழாவிற்கு அழைத்து வந்துவிட, வந்த இடத்தில் மதுஸ்ரீயை கண்டதும் தணிந்திருந்த பொறாமை உணர்வு தூபம் போட்டது போல் வேகமாய் புகைய ஆரம்பித்தது.
மதுஸ்ரீ ஒரு வகையில் அழகு என்றால் மான்சி வேறு வகையில் அழகு ....
மான்சியின் அழகு, நடனம், நளினத்தை புகழாதவர்கள் அவளது கல்லூரியிலேயே கிடையாது ...
இத்தனை அழகும் திறமையும் இருந்து என்ன பயன் ....
அவளது காதலுக்கு எவ்வகையிலும் அது உதவவில்லையே ...
வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு ராணாவை அடைய மதுஸ்ரீயுடன் அவள் போட்டி போட முடியாது ...
காரணம் அவள் ஒரு குஜராத்தி ...சமூகமும் வேறு ... ராணாவும் மதுஸ்ரீயும் சிந்தி இனத்தைச் சார்ந்தவர்கள் .... பத்தாததற்கு அவர்கள் இருவரும் உறவுக்காரர்கள் வேறு ....
அதைவிட மிகவும் முக்கியமானது ...ராணா மதுஸ்ரீயை விழுந்து விழுந்து காதலிக்கிறான் ...
இதையெல்லாம் எண்ணி தான் ,
கிட்டாதாயின் வெட்டன மற .....என விலகி நின்றாள்... ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அதற்கு வழி விடாமல் சோதிக்க, வெளியேறவும் முடியாமல், இன்முகத்தோடு விழாவை சிறப்பிக்கவும் முடியாமல் திணறினாள்.
ஐயர் வந்து சிறப்பாக யாகத்தை நடத்த, அமர்க்களமாக நடந்தேறியது பீமரத சாந்தி பூஜை.
அங்க வந்திருந்த உறவினர்கள் நண்பர்களின் கவனமெல்லாம் விழா நாயகனான ராஜ்குமார் மற்றும் அவர் மனைவியின் மீதே இருக்க, ராணாவோ தன் நாயகியை பார்வையால் அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான்.
அவள் செல்லும் திசையெல்லாம் அவன் விழியால் தொடர, அவளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் கண் கணையால் அவனுக்கு தூது விட்டுக் கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருந்த மான்சியின் மனம் ஊமை கண்ட கனவாய் உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தது .
ஒரு வழியாக விழா முடிந்து அனைவரும் விருந்துண்டு முடித்ததும், தீபிகா ராணாவை அழைத்து பெங்களூருக்கு கிளம்ப பயணப் பொதிகளை தயார் செய்யுமாறு கூறினார்.
கிட்டத்தட்ட 5000 சதுர அடிக்கு மேல் இருந்த அந்த பெரிய வீட்டின், மேல் மாடியில் இருந்த ஒரே தனி அறை ராணாவினுடையது .
அங்கு வந்தவனுக்கு, வேலையே ஓடவில்லை .
மனமெங்கும் அவன் மதுஸ்ரீயே மணம் வீசினாள்.
அது 90களில் கடைசி. அப்போது தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் மிக தீவிரமாக வளர்ச்சி அடைந்த தருணம்.
அவன் ஏற்கனவே வளாக நேர்காணல்(campus interview) மூலமாக ஒரு தலை சிறந்த நிறுவனத்தில், பொறியாளராக நல்ல சம்பளத்தோடு தேர்வாகி இருந்தான்.
என்னதான் தாய் வழி பாட்டனின் சொத்தில் பாதி அவனுக்கு உண்டென்றாலும், பல ஆண்டுகளாக வியாபாரத்தில் ஈடுபட்டு அந்த சொத்தை பல மடங்காக பெருக்கி இருந்த அண்ணன் ராகேஷுக்கு இணையாக அந்த சொத்தில் பங்கு வாங்கிக் கொள்வதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
அதனால் தான் தனக்கு பிடித்த துறையில் கால் பதித்து, சுயமாக முன்னேற வேண்டும் என்று எண்ணத்தில் நன்றாக படித்து நல்ல நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வாகி இருந்தான்.
இந்நிலையில் எதிர்பாராத வகையில் அவன் காதல் வயப்பட, திருமணத்தைப் பற்றி சிந்திக்க தேவையான படிப்பும் தரமான பணியும் கையில் இருந்ததோடு மான்சி எண்ணியது போல் மது ஸ்ரீயை மணந்து கொள்ள எவ்வித தடையும் இல்லாததால் கல்யாணக் கனவு காண ஆரம்பித்தான் காளை.
தனது காதல் 100 சதவிகிதம் திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் அவன் மிதந்ததற்கு காரணம் அவன் தாத்தா ராஜ்குமார் தான்.
அந்த காலத்திலேயே தமிழகத்தை பற்றி அதிகம் தெரியாத நிலையில் கூட மகள் காதலித்து விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக அவன் தந்தை ஆதிகேசவனுக்கு தன் மகளை மணம் முடித்துக் கொடுத்தவர் .... அப்படிப்பட்டவர் நிச்சயம் தனது திருமணத்திற்கும் சம்மதிப்பார் என்ற எண்ணத்தில் உழன்றபடி திரும்பிப் பார்த்தவன் ஒரு கணம் ஆச்சரியத்தில் அசந்து போனான் ...
அவனவள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
ஸ்ரீராமம் வருவார்கள் ....
Dear friends,
அடுத்த அத்தியாயமான 105ம் பதிவேற்றப்பட்டுள்ளது.
With love,
Priya Jagannathan
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteSuper mam
ReplyDeleteInteresting love story sis
ReplyDelete