ஸ்ரீ-ராமம்-101

 அத்தியாயம் 101

 

மறுநாள் காலை உணவை அவள் தயாரித்து முடிக்கும் போது தான் வீராவிற்கு விழிப்பு வர, துரிதமாக குளித்து முடித்து வெள்ளை நிற சட்டை,   அடர் நீல நிற பிளேசரில், அடர்ந்த சிகை லேசாக காற்றில் அசைய கம்பீரமாக  வந்தவனை  அவன் நாயகி வைத்த கண் வாங்காமல் பார்க்க,


" என்ன அப்படி பாக்கற ..."    குழைந்து கொண்டே   அவன் நெருங்க,   அவளோ அவன் கழுத்து டையை  பற்றி இழுத்து அவன் கன்னத்தில் தடம் தெரியும் அளவிற்கு அழுத்தமாக கடித்தாள்.


" ஸ்ஸ்ஸ்ஸ்ஷ்....  என்னடி இது...  நீ என்ன ஸாம்பியா ..... இப்படி கடிச்சு வைக்கிற .... நான் உன்னை கூட்டிகிட்டு வந்து இருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும் .... சும்மாவே இது அபிஷியல் ட்ரிப்பா ஹனிமூன் ட்ரிப்பானு ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க .... இப்படி பல் தடம் தெரியிற மாதிரி கடிச்சு வச்சா மீட்டிங்ல நான் பேசறதை கேட்க மாட்டாங்க... என் கன்னத்தை தான் பார்ப்பானுங்க ..." 


" பாக்கட்டுமே... எனக்கு என்ன ..."

என்றது தான் தாமதம், அவளைப் போலவே அவனும் அவள் கன்னத்தில் பற்தடம் பதிக்க, அவள் "ஷ்ஷ்ஷ்ஷ்" என்று ஏறக்குறைய கத்த, அதைக் கண்டு கொள்ளாமல் 

" நான் கிளம்பறேன் ... "  விடை பெற முயன்றவனிடம்

"ராம் ...ரெண்டு தோசையாவது சாப்ட்டு போங்க ..."  என்றாள் பெண் நயந்து. 


" டைம் ஆச்சும்மா...  கிளம்பறேன்..."  என்றவனை விடாமல் வற்புறுத்தி,  அவன் சட்டையில் படாமல்   பொறுமையாக  இரண்டு தோசைகளை பிய்த்து  எடுத்து அவள்  ஊட்ட,  சட்னியின் ருசியில் மேலும் ஒரு தோசையை கேட்டு வாங்கி விழுங்கி விட்டே


"எனக்கு மதியம் ஹெவி லஞ்ச் இருக்கு .... நீ  ஏதாவது செஞ்சு சாப்பிடு ..ஈவினிங் சீக்கிரமா வர பார்க்கிறேன்  .."  என்றபடி வாசல் வரை சென்றவன் ஒரு கணம் நின்று பின் தொடர்ந்தவளை  லேசாக அணைத்து ,

" தேங்க்ஸ் டா ... நீ வந்ததால அருமையான தோசை சாப்ட்டேன் ...இல்லன்னா வெறும் ஆரஞ்சு ஜூஸ் குடிச்சிட்டு போயிட்டு நைட் வந்து  தான் டின்னர் செஞ்சு சாப்பிட்டிருப்பேன் ...."  என்றான் காதலும் நட்புமாய். 


அவன் சென்றதும் , அங்கும் இங்குமாய் நடை பயின்றவளுக்கு அருமையான காலநிலை ... எங்கு காணினும் பசுமையும் சுகந்தமுமான சூழ்நிலை,  அந்த வீட்டின் எந்த அறையில் இருந்து பார்த்தாலும், ஆரவாரம் இல்லாத  பறந்து விரிந்த நீலக்கடல் அலையின் மென்னோசை  என அந்த ஏகாந்தம் மனதை மயக்க,  மெய்மறந்து ரசித்தாள்.


தனக்கென்று எதையும் செய்து சாப்பிட மனம் இல்லாததால் மதிய உணவாக பிரட் , ஜாமை கொறித்து விட்டு  மாலை நெருங்க நெருங்க கணவனின் வரவுக்காக  வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க,  மணி ஏழை  கடக்கும் போது,  ஆலம்பனா என்னும் அலாவுதீன் பூதம் போல் பிரதியட்சியமானான் அவள் கணவன்.


வந்தவன் அவளை குறுகுறுவென்று பார்க்க,

"ரொம்ப டயர்டா தெரியறீங்க ...   வொர்க் லோடு ஹெவியா ..."  என்றாள் எம்பி நின்று அவன் நெற்றியில் கை வைத்து .


"டயர்டா.... எனக்கா ... ஆமா நீ சாப்டியா ..." என்றான் அவள் இடையில் கை வைத்து தன்னோடு சேர்த்து  இறுக்கி.

"சமைச்சு சாப்பிட போர் அடிச்சது.... அதான்  பிரெட் ஜாம் சாப்பிட்டேன் .... இப்ப டின்னருக்கு என்ன செய்யட்டும் ..."  

"சாப்பிடவா டி இங்க வந்தோம் ..." அவன் ஏக்கமும் குறும்புமாய்  கேட்க, 

"அப்ப வேற எதுக்காக வந்திருக்கோம்  ..." அதே குறும்போடு  அவளும் வினவ, 


"எதுக்காக வந்திருக்கோம்னு  தெளிவா சொல்றேன்... அதுக்கு முன்னாடி,  இந்தியன் ரெஸ்டாரண்ட்ல போய் சாப்பிட்டு வந்துடலாம்.... ..." விஷமமாய் முடித்தவன்,  உணவகத்திற்கு கிளம்புவதற்குள்  மெல்லிய சில்மிஷங்களை அரங்கேற்ற, அதில் ரங்கோலியாய் அவள்  சிவக்க,மனையாளின் வாசம் மாயவனை மயக்க , அரைகுறை ஆடையில் இருந்தவளை அள்ளி எடுத்து மஞ்சத்திலிட்டு மலைப் பாம்பாய் அவன் படற,  கண்ணாட்டியோ காளையவனின் காட்டாற்று காதலில் பனிக்கூழாய் கரைய, வேட்டாளின் வேட்கையில் அவன் விசை கூட,  விடுபட்ட தாபத்தை விடாமல் தணித்து முடிக்கும் போது நேரம் நள்ளிரவை நெருங்கிப் போனது. 


மலர் கொடியாய் தன் மதனின் மார்பில் படர்ந்திருந்தவள்,

"ராம் ..... பசிக்குது ... ரொம்ப டயர்டாவும் இருக்கு ...."  

சோர்வாக மொழிந்ததும், 


" வா... ஏதாவது செஞ்சு தரேன் ..." என்றான் படுக்கையை விட்டு துரிதமாக இறங்கி. 


 இருவரும் புத்துணர்வு பெற்று அடுக்களைக்கு சென்றதும், அன்று அலுவலகத்தில் நடந்த விஷயங்களை அவன் ஆர்வமாய் பகிர,  அதில் பல ஹாசியங்களும் இருக்க, அவள் அடுக்களை மேடையில் அமர்ந்து கொண்டு  அவன் வார்த்து போட்ட தோசையை ரசித்து ருசித்தபடி கேட்டு  குலுங்கி சிரித்தவள், ஏதோ பேசுகையில் ,

"ஒழுங்கா ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டிருக்கலாம் ... எல்லாத்தையும்  கெடுத்துட்டீங்க ..." என இயல்பாக மொழிய

"கடைசியா சொன்ன வரியை திரும்ப சொல்லு... ..."  அவன் விஷமமாக வினவ,

"ஏதாவது டபுள் மீனிங்ல பேசினீங்க ... மண்டைல ஒரே போடு ..."  என அவள் குமுற, அதில் லயித்தவன் தன்னவளின் நெற்றி முட்டி தன்னை மறந்து  வெடித்து சிரித்தான் ....


இப்படியாக தொடர்ந்து வந்த மூன்று நாட்களும் குதூகலமும் கூடலுமாய் அற்புதமாகக் கழிந்தன.




அலுவலகத்தில் இருந்து துரிதமாக வந்து  ஆர்ட் கேலரி, பொட்டானிக்கல் கார்டன் , நேச்சுரல் பிரிட்ஜ் வாக், சன்செட் பாயிண்ட்,  பீச் வாக் என மனையாளோடு அழகாக நேரத்தை கழித்தான். 


பிரிஸ்பேனில் பணி  முடிந்ததும் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு,  அருகில் இருந்த அழகான மோரிட்டன் தீவிற்கு சொகுசு கப்பலில் தன்னவளோடு பயணமானான்.


மக்கள் அடர்த்தியற்ற மிகவும் தூய்மையான,  வெகு அழகான அந்த தீவில் குளித்து , விளையாடி ஆட்டம் போட்டனர் ...


இறைவன் படைத்த இயற்கை இத்துணை அழகா ..... என காணக் கிடைக்காத காட்சிகளை கண்டு வியந்தனர் ...


அவர்கள் இருவருக்கும், 

வாழ்வின் பொன்னான தருணங்கள் என்றால்  அங்கு செலவழித்த  அந்த மணித்துளிகள் தான்.. ...

மரணப் படுக்கையில் கூட மறக்காத, மரணிக்காத உணர்வுக்குவியல்களை அணு அணுவாக ஆர்ப்பரித்து அனுபவித்த வேளைகள் அவைகள் ...

அங்கு  விடுமுறையை முடித்துக் கொண்டு பெர்த் நகரத்துக்கு விமானத்தில் பயணம் ஆனார்கள்.

அங்கும் சகல வசதிகளுடன் கூடிய அடுக்கு மாடி கட்டிடத்தில் அவர்கள்  தங்குவதற்காக ஒரு குடியிருப்பு ஒதுக்கப்பட்டிருந்தது.

சூரிய கிரணங்கள் முகத்தில் அடித்தாலும் கண்டுகொள்ளாமல் ஒருக்களித்து உறங்கிக் கொண்டிருந்தவனின் முதுகில் அவள் ஏறிப் படுத்துக்கொண்டு,


"ராம் ... எழுந்துருங்க... ஆபீஸ் போகணும் இல்ல... ...."  அவள் அவன் காதில் கிசுகிசுக்க, அதன் கூச்சத்தில்  சிலிர்த்தெழுந்தவன் அப்படியே அவளை புரட்டி போட்டு அணைத்து,

"ஆபீஸ் போகவே புடிக்கல டி...  இது அபிஷியல் ட்ரிப்பா இல்லாம பர்சனல் ட்ரிப்பா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது ... " என கிறங்க


" AVR,  தி கூல் பாஸ், எனர்ஜிடிக் அண்ட் டிலிஜென்ட் AVPனு பேர் எடுத்த நீங்களா இப்படி பேசறது ....  எடுத்துக்கிட்ட வேலைய ஒழுங்கா செஞ்சு முடிக்கணும் .... நேரமாச்சி ஆபீஸ் கிளம்புங்க ...."


என்றவளிடம் மஞ்சத்தில் மட்டுமல்ல, குளியலறையிலும் மல்லுக்கட்டி விட்டே , அலுவலகம் கிளம்பிச் சென்றான். 


இங்கும் நான்கு நாட்கள் இப்படியே கழிய,  அவன் மனைவியோடு வந்திருப்பது தெரியும் என்பதால், திட்டமிட்ட  கால அட்டவணையை விட ஒரு நாள் முன்பாகவே அலுவலகப் பணியை முடிக்க , அவனது வாடிக்கையாளர் தலைமை உதவ, தன்னவளை அழைத்துக் கொண்டு  'ஸ்வேன் வேலி ' என்னுமிடத்திற்கு கப்பலில் பயணப்பட்டான்.


உலகில் காதலர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அதுவும் ஒன்று ....

அத்துணை ரம்யம்,  நிசப்தம்,  ஏகாந்தம், இனிமை ..... 

எங்கு காணினும் பசுமை.... 

திராட்சைத் தோட்டங்கள்,  வைனரீஸ், உலர் பழங்கள்,  தர்பூசணி,  ஆப்பிரிக்காட், ஆப்பிள்  தோட்டங்கள் என கண்களுக்கு குளிர்ச்சியாக,  அழகான சீதோஷண நிலையில் அமைந்திருந்ததை அணு அணுவாக ரசித்துவிட்டு ,ஏரி சவாரி , இயற்கையை ரசித்தபடி பிரிட்ஜ் வாக் என இயற்கையோடு இயற்கையாய் இனிமையாய் பொழுதைக் கழித்தனர் ....


ஸ்வேன் வேலி தரமான திராட்சைகளுக்கு பெயர் போன இடம் ....


அதுவும் சிவப்பு  திராட்சைகளைக் கொண்டு  வைனரிஸில் தயாராகும் ஓயின்களை அருந்துவதற்காகவே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட்டம் அங்கு கூடி களிப்பது வழக்கம் ...



"ம்ம்ம்... வாட் எ கோஇன்சிடென்ஸ் ....கிரேப்ஸ் கலரோட உன்  பர்பிள் கவுன் பக்காவா மேட்ச் ஆகுதே ... " ஸ்ரீயை நெருங்கி வீரா சொல்ல,

"ஆமா இல்ல ... நான் கூட இப்பதான் பார்க்கிறேன் ...." அவள் ஆச்சரியமாய் சொல்ல 

" ம்ம்ம்.. சும்மா சொல்லக்கூடாது ... இந்த டிரஸ்ல பொம்மை மாறியே இருக்க டி... சரி வா.... ... வைன் டேஸ்ட் பண்ணிட்டு வரலாம் ..."


" ம்ஹும்...."


"இவ்ளோ தூரம் வந்துட்டு வைன் டேஸ்ட் பண்ணலன்னா எப்படி ..."  அவள் காதோரம் உரசி வீரா கேட்க,


"ஐய்யய்யோ ... வேணாம்ப்பா...  குடிச்சிட்டு டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டா ... அவ்ளோ தான்" 


" எல்லாரும் ஆடறாங்க ... நாமளும் ஆடலாம்.."


" ம்ஹும்... வேணாம் ..."


"ஏண்டி டாஸ்மாக்லயா  உனக்கு சரக்கு வாங்கி கொடுத்து குடிக்க சொல்றேன் ... இத்துனூண்டு .. ஒரு சின்ன பெக்... ரெட் வைன் உடம்புக்கு ரொம்ப நல்லதுடி ..."


" ம்ஹும்.... நான் மயங்கி விழுந்துட்டா...  என்னை யாராவது தூக்கிட்டு போயிட்டா..."


"இந்த கதை எல்லாம் இங்க வேணாம் .... அப்படியே நீ மயங்கி விழுந்தாலும் நான் எதுக்கு இருக்கேன்... உன்னை யாராவது தூக்கிட்டு போக விட்டுடுவேனா ..."


" நோ வே ... ப்ளீஸ் "


" கொஞ்சோண்டு ஒரே ஓரு டிராப் ..." அவன் விடாமல் வேண்ட, மூக்கிற்கு அருகே கொண்டு சென்றவள்,


" உவ்வேக்.... இந்த ஸ்மெலே எனக்கு பிடிக்கல..... ...."  என அவன் கையிலேயே திணிக்க, கடைசியில் வாங்கிய இரண்டு பெக்கையும் குடித்து விட்டு தன்னவளோடு நடனமாடி மகிழ்ந்தான். 


இப்படியாக  மனம் நிறைந்து  அள்ள அள்ள குறையாத ஆனந்த தினங்களாக கழிந்த தருணங்கள் எல்லாம்,  கனவோ என்றென்னும்  அளவிற்கு வாழ்க்கை பாதை  கூடிய விரைவில் வலிகள் நிறைந்ததாக மாறப்போவதை அறியாமல்,  தாய்நாடு திரும்ப தயாராயினர். 


மறுநாள் காலையில் இருவரும் துரிதமாக கிளம்பி  புகழ்பெற்ற ஷாப்பிங் மாலுக்கு சென்று  துணிமணிகள், பரிசுப் பொருட்கள், அழகு சாதனங்கள் , அழகிய ஆபரணங்கள் என விரும்பியதை எல்லாம் வாங்கி குவித்துவிட்டு அங்கிருந்த உணவகத்தில் உண்டு முடித்ததும், 


"நான் டாக்சி ஸ்டாண்ட்ல இருந்து  டாக்ஸி கூட்டிட்டு வரேன் .... நீ மெதுவா ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு மெயின் டோருக்கு வந்திடு ..." என ரசித்து ருசித்து ஐஸ்கிரீம் தின்று கொண்டிருந்த மனைவியிடம் கூறிவிட்டு வீரா பஞ்சாய் பறந்தான்.


ஐஸ்க்ரீம் உண்டு விட்டு, அலைபேசியை பார்த்தபடி , ஷாப்பிங் மாலின் வாயிலில் இருந்த சுழற் கதவை பயன்படுத்தி அவள் வெளியேற முயலவும்,  ஷாப்பிங் மாலிற்குள் நுழைய அதே சுழற் கதவின் மறுபகுதியை  பயன்படுத்திய ராணா அவளைப் பார்த்தபடி உறைந்து நிற்கவும் சரியாக இருந்தது.


தானியங்கி எந்திரம் என்பதால் முதல் சுற்றின் முடிவிலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் வெளியேறியிருக்க, உறைந்து நின்றவன் உணர்வு பெறும் போது , ஷாப்பிங் மாலின் உள்ளே இருந்தான்.


" மது.... மது...." என அலறியவன்  வெறி கொண்டது போல்  எதிரே வருபவர்களின்  மீது முட்டி மோதி மீண்டும் அதே சுழற் கதவை பயன்படுத்தி  வேகமாக வாயிலை அடைவதற்குள், வீரா அழைத்து வந்த டாக்ஸியில் அவள்  பறந்திருந்தாள்.


" மது... மது..... மது....." என்று அளவுக்கதிகமான முகச்சுவப்பில் லேசான கண்ணீரோடு முக்கிய பொக்கிஷத்தை தொலைத்தது போல்  நின்ற இடத்திலேயே அவன் கதறி அழ, கூட்டம் கூடிப்போனது.


கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச்,  சட்டை பொத்தானில் தொங்கிக் கொண்டிருந்த  ரேபன் கிளாஸ், கைகளில் மின்னிய பெரிய வைர மோதிரம்,  அவன் அணிந்திருந்த உயர்ரக சட்டை ஜீன்ஸ் பேண்ட் அவனது  செல்வ செழிப்பை காட்ட  , பார்ப்பதற்கும் நன்றாக இருந்தவன் தன்னை மறந்து பொது இடத்தில் கலங்குவதைக் கண்டு  குழந்தையை தொலைத்து விட்டானா....அல்லது பொருளையா என புரியாமல்


"சார்.... ப்ளீஸ் டெல் மீ வாட் ஹேப்பண்ட் ..."   என ஒருவன் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போது , எங்கிருந்தோ ஓடி வந்த திலக், ஏதேதோ சொல்லி சமாதானம் பேசி கூட்டத்தை கலைக்க


" திலக்.... நான் ம....மதுவை பார்த்தேன் டா... இங்க தான் பார்த்தேன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பார்த்தேன் .... திடீர்னு காட்சி கொடுத்துட்டு காணாம போயிட்டாடா ..." என அவன் ஆவேசமாக அலற 


"உனக்கு ஆங்சைட்டி முத்தி போச்சு ....  ஒழுக்கமா நாளைக்கு காலைல மொத பிளைட்ல ஊர் போய் சேர்றோம்... வா..."


"ப்ளீஸ்டா .... இதே ஊர்ல தான் டா இருக்கா .... ஒரு ரெண்டு மூணு நாள் இருந்து தேடிப் பார்த்தா கிடைப்பாடா..."


" டேய் லூசா  நீ ....  நாளன்னைக்கு  சாயங்காலம் நீ உன் வீட்ல இல்லனா மான்சி வீட்ட ரெண்டாக்கிடுவா .... ஞாபகம் வச்சுக்க...  மது மதுனு ஓளர்றத நிறுத்து ... பாரு... கை எல்லாம் நடுங்குது .... காலையில மாத்திரை சாப்பிட்டியா ..." என்றான் திலக் கரிசனமாய். 


"......."


" பதில் சொல்லுடா ...."


"இல்ல .... ஸ்டேக் ஹோல்டர் மீட்டிங்ல இருந்ததால மறந்துட்டேன் ..."


" ஓ காட் .... இதா தண்ணி .... மொதல்ல டேப்லெட்ட போடு... குல்கர்னி வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பான் ..... மேக் இட் பாஸ்ட்... ..." என்றவன், நண்பன் மாத்திரையை உட் கொண்டதும்,  கைப்பிடித்து இழுத்துச் செல்லாத குறையாக அழைத்துச் சென்றான்.


ராணாவின் மனமோ சற்று முன் கண்டவளை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து  அசை போட, கருமே கண்ணாக,  மின்தூக்கியில் நுழைந்ததும் அந்த மாலின் கடைசி தளத்து எண்ணை அழுத்தினான் திலக் குல்கர்னியுடன் வியாபாரம் பேச. 


சுறுசுறுப்பாக பயணப்பொதிகளை தயார் செய்து கொண்டிருக்கும் போது, சுட சுட ஒரு செய்தி ஸ்ரீயின் மின்னஞ்சலுக்கு வந்தது .


அலைபேசியில்  திறந்து  படித்தவள் ,


"ராம்,  வேலையில எப்ப ஜாயின் பண்ண போறீங்கன்னு கேட்டிருக்காங்க .... வென்ஸ் டே  ஆர் ஃப்ரைடேனு ரெண்டு ஆப்ஷன் கொடுத்திருக்காங்க ...." என்றாள் யோசனையாய். 


"நாளைக்கு  மண்டே .... நாம ஊர்ல இருப்போம்... டியூஸ்டே ரெஸ்ட் எடுத்துக்கோ... வென்ஸ் டே  ஜாயின் பண்ணிடு ..."  அவன்  சொல்லிக் கொண்டிருக்கும் போது , அவனது அலைபேசி சிணுங்கியது.


பொன்னம்பலம் தான் அழைத்து இருந்தார்.


புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ராமர் கோவிலுக்கும் சென்று தரிசிக்க விருப்பதால்,  அந்த வார இறுதியில் தான் ஊர் திரும்பப் போவதாக அவர்  தகவல் சொல்ல,  வீராவோ  அன்றிரவே அவர்கள் ஊர் திரும்ப போவதை சொல்ல,  மிகுந்த மகிழ்ச்சியோடு அது தொடர்பான ஓரிரு விஷயங்களை நினைவு படுத்திவிட்டே அழைப்பை துண்டித்தார் பொன்னம்பலம் .


போகும் போதிருந்த சந்தோஷத்தை காட்டிலும், வரும் போது  சந்தோஷம் இரட்டிப்பாகி இருக்க,  மனம் கொள்ளா நிம்மதியோடு வீராவும் அவன் மனைவியும் தாய் மண்ணில் அடியெடுத்து வைத்தனர்.


புதன்கிழமையும் வந்தது.


எப்பொழுதும் போல் அதிகாலையில்  விழித்தெழுந்து குளித்து புத்துணர்வு பெற்று தனக்கும் தன் கணவனுக்கும்,  காலை மற்றும் மதிய உணவினை தயார் செய்தவள், புதிய பணியில் சேர்வதற்காக அழகான மென் ஊதா நிற சுடிதாரை தேர்வு செய்து அணிந்தாள்.


சமீபகாலமாக அகல்யா அடுக்களைக்கே வருவதில்லை என அறியாமல், தாய் இருந்தால் மனைவிக்கு உதவியிருப்பார் என்ற எண்ணத்தில் தன்னாலான பெரும்பாலான வேலைகளை உடனிருந்து செய்து முடித்து அவள் முதல் நாள்  அலுவலகம் கிளம்ப உதவி புரிந்தான் வீரா. 


பிறகு தானும் அலுவலகத்திற்கு கிளம்பியதோடு  தன்னவளையும் அழைத்துச் சென்று அலுவலகத்தில் விட்டு விட்டு,


"பட்டு.... ஓரியண்டேஷன் முடிஞ்சதும்  ஃபோன் பண்ணு , நான் ஃப்ரீயா இருந்தா வந்து பிக் பண்ணிக்கிறேன்... இல்லனா கேப் புக் பண்றேன் .... ஆல் தி பெஸ்ட் ..." மிகுந்த மகிழ்ச்சியோடு அவள் கரம் பற்றி குலுக்கி விட்டு, அலுவலகம் நோக்கி பயணமானான்.

அந்த பெரிய கலந்தாய்வு அறையில், நேர்காணலில்  வெவ்வேறு  பணிக்காக தேர்வு செய்யப்பட்ட  40 பேரில் ஸ்ரீயும் ஒருத்தியாக ஓரியண்டேஷன் நிகழ்ச்சிக்காக அமர்ந்திருந்தாள்.


நிறுவனத்தில் புதிதாக சேர்ப்பவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி அது.


நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள்,  அவர்களது சாதனைகள்,நோக்கங்கள்,  இலக்குகள் பற்றி மனிதவள மேலாளரால் (HR) விளக்க உரைகள் வழங்கப்படுவதோடு, புதிதாக நிறுவனத்தில் சேர இருப்பவர்களின் ஆளுமைத் திறனை அறிவதற்காக, விளையாட்டுகள் போல் சில போட்டிகள் நடத்தப்படும் ....


விருப்பம் இருப்பவர்கள் பங்கு கொண்டு,  தங்கள் திறனை வெளிப்படுத்தலாம் ....


தனித்திறமைகள் இருந்தாலும் வெளிப்படுத்தலாம் ...


வந்திருந்தவர்களில் பாதிப்பேர் பணிக்கே புதிது ....


மீதமிருப்பவர்களின் பாதிப்பேர் ஸ்ரீயை போல் கிட்டத்தட்ட நான்காண்டு  பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளராக  பணி அனுபவம் உள்ளவர்கள் ....


கடைசியில் ஐந்தாறு நபர்கள் மட்டும்,  மேலாண்மை நிர்வகித்தலுக்காக (Management administration) கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றவர்களாக இருந்தனர் .... 


இப்படியாக கிட்டத்தட்ட மூன்று  மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில்  அறிவிக்கப்பட்ட ஒரு சில  நிகழ்வுகளில்  ஸ்ரீயும் பங்கேற்று  வெற்றி  பெற்றாள்.


மதிய உணவு வேலையின் போது தான்,  புதிதாக சேர்ந்தவர்களோடு பழகும் சந்தர்ப்பம் அமைந்தது .


ஆண் பெண் பேதம் இல்லாமல், அனைவரும்  அருமையாக நட்பு பாராட்டினர் ....


பிறகு பணியில் சேர்வதற்காக படிவங்கள்  நிரப்புதல் ,  பள்ளி கல்லூரி சான்றிதழ்களை ஒப்படைத்தல் என்பன போன்ற முதல் நாள் அலுவலக  சடங்குகளில் அவள் தீவிரமாக ஈடுபட்டிருந்த  தருணத்தில் ,நிறுவனத்தின் தலைமை கிளையில்  அன்றைய நிகழ்வுகளைப் பற்றி தன் செயலாளர்  மோனிஷாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தான் ராணா.


"நம்ம B1 ஆபீஸ்ல , இன்னைக்கு  ஃபார்ட்டி  மெம்பெர்ஸ் ஓரியண்டேஷன் ப்ரோக்ராம்ல கலந்துக்கிட்டாங்க ...." என்றவள் மனித வள மேலாளர் அனுப்பிய திரியை  ஐபேடில் தட்டித் துவக்க அது காணொளியாய் விரிந்தது.


எப்பொழுதும் போல் மேம்போக்காக பார்வையிட்டுக் கொண்டே வந்தவன்,  அதிக நெருக்கம்  இல்லாமல் அமர்ந்திருந்த  40 பேரையும் ஓரளவிற்கு நெருக்கமாக காணொளி படுத்தப்பட்டிருப்பதை கவனித்தபடி இயல்பாக கடந்து செல்லும் போது , ஸ்ரீப்ரியா தென்பட, ஒரு கணம் அவனது உயிர் நின்று துடிக்க, ஆயிரம் வோல்ட்  மின்சாரம் தாக்கியது போல் உடலெங்கும் மின்னலென குத்தி கிழிக்கும் உஷ்ணம் பாய,  கண்ணிமைக்கும் நொடியில் வியர்வைத் துளிகள் ஆறாய் வழிந்தோட, கை கால்கள் அளவுக்கதிகமாக நடுங்கத் தொடங்க, மிகவும் சிரமப்பட்டு சுதாரித்தவன்,

"மோனிஷா ப்ளீஸ் கெட் அவுட் ..." 

என்றான்  பற்களை கடித்து பொங்கி எழும் பெரும் குரலை அடக்கி .


"சார் ......." என தயங்கினாள் பெண் புரியாமல் .


ஏனென்றால் இதுவரை அவனை இப்படி கண்டதும் இல்லை ... அவன் இப்படி  சொன்னதும் இல்லை என்பதால்...


"ப்ளீஸ்.... கெட் அவுட் ..." இம்முறை குரல் சற்று அழுத்தம் திருத்தமாக, பலமாக ஒலிக்க,  மௌனமாக இடத்தை காலி செய்தாள்.


அவள் அறையை விட்டு வெளியேறியதும்,  தலையை  கரங்களால் தாங்கிக் கொண்டு, கண்கள் சிவக்க , "ஓ......." என்று வாய்விட்டே பெருங்குரல் எடுத்து அலறினான். 


நல்ல வேளை ...அவன் அறை சவுண்ட் ப்ரூப் செய்யப்பட்டிருந்ததால்,  வெளியில் இருந்த யாருக்கும் எதுவும் கேட்கவில்லை .


ஒரு கணத்திற்கு பிறகு உடனே உள் தொலைபேசியில் திலக்கை தொடர்பு கொண்டு,

" திலக்...  ஒரு நிமிஷம் என் ரூமுக்கு வாடா .... வெரி இம்பார்ட்டண்ட்..." என கலவர குரலில் சொல்லி  அழைப்பை துண்டிக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் திலக் அவன் அறையில் இருந்தான்.


வந்தவனிடம் எதுவும் பேசாமல், காணொளியை மட்டும் காட்ட, அதில் ஸ்ரீயைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போனவன்


"இவ எப்படிடா........" மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாற,


" நா...நான் சொல்லல.... கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் கனவுல வந்தா ..... ரெ ....ரெண்டு நாளைக்கு முன்னாடி பெர்த்ல பார்த்தேன்... இப்ப இங்கேயே  வந்துட்டா ...." என குழறிய குரலில் முடிக்க,


"ஓ மை காட் .... நம்பவே முடியல.... கிட்டத்தட்ட 24 வருஷத்துக்கு முன்னாடி செத்துப் போனவ,  எப்படி டா... அப்படியே அதே மாறியே வந்திருக்கா   ...." என அவன் பேசிக் கொண்டே செல்ல, ராணாவின் மனக்கண்ணில், கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனது 'மது ஸ்ரீ'  சிக்கிக் கொண்டு அலறி துடிக்கும்  காட்சி ரணமாய் விரிய, மயங்கி சரிந்தான்.



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....



















































 









































Comments

Post a Comment