அத்தியாயம் 100
கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு முன்பு நடந்தவைகள்....
அழைப்பு மணி ஒலிக்க, கணவனாக இருக்கும் என்றெண்ணிய படி, துரிதமாகச் சென்று கதவைத் திறந்த சுசீலா, ஒரு கணம் உறைந்து போனார்.
புன்னகை மன்னனாய் பயணப் பொதிகளோடு நின்று கொண்டிருந்தான் வீரா.
என்ன பேசுவது ... எப்படி பேசுவது ... என தடுமாறி , உடனே சுதாரித்துக் கொண்டு,
"வாங்க மாப்ள ...." என வரவேற்றார் பெரும் மகிழ்ச்சியோடு.
வீட்டிற்குள் நுழைந்தவன்,
"ஸ்ரீ... எங்க அத்த...." என்றான் பார்வையை சுழல விட்டு.
"இப்பதேன் கோயிலுக்கு போயிட்டு வந்தோம்.... மேல அவ ரூம்ல இருக்கா ...." என்றவர் தயங்கியபடி
"நீங்க .... ஏதோ வெளிநாடு போவறதா சொன்னா ...." என இழுக்க,
"ஒரு ப்ராஜெக்ட்டோட பிசினஸ் மீட்டிங் கேன்சல் ஆயிடுச்சு .... அதான் ஸ்ரீயையும் கூட கூட்டிகிட்டு போலாம்னு...." லேசாக அசடு வழிந்த படி, குறும் புன்னகையோடு அவன் முடிக்க, அவன் சொன்னது விளங்கவில்லை என்றாலும் கேள்வி கேட்க விரும்பாமல்
"அம்முவ கூப்டட்டுங்களா...." என்றார் மென்மையாய்.
"வேணாம் அத்த... நானே போய் பாத்துக்கறேன் ...."
என அவளது அறைக்குள் பிரவேசித்த முன் கதை சுருக்கத்தை அவன் கூறி முடிக்க,
அவள் அதிர்ச்சியும் ஆச்சரியமாய் பார்க்க,
"அடியேய் நீ அறிவுக்கொழுந்து டி .... ஃபிளைட்ட மிஸ் பண்ணா அங்க தானே இருப்பேன்... இங்க எப்படி வருவேன் ..." என்றான் வாஞ்சையாய் அவள் தலைக்கோதி.
"அதானே..." தலை நிமிர்த்தி பேராழி கண்களில் மகிழ்ச்சி கொப்பளிக்க அவள் ஒத்துப் பேச, ரசித்தபடி தன்னவளை அவன் இறுக்கிக் கொள்ள ,
" சரி சொல்லுங்க .... என்ன தான் நடந்தது ..." என்றாள் மேலும் அவனோடு ஒண்டிக் கொண்டு.
" இந்த ட்ரிப்ல மொத்தம் 3 ப்ராஜெக்ட்ஸோட பேஃபோ பிசினஸ் மீட்டிங் இருந்தது .... அதுல மிடில் ப்ராஜெக்ட்டோடது கேன்சல் ஆயிடுச்சு....அந்த நாலு நாள், உன்னோட ஊர சுத்தலாமேனு தான் , இம்மீடியேட்டா ப்ளானை சேஞ்ச் பண்ணேன் ..." என முடித்தது தான் தாமதம், அவன் முகத்தை கரங்களில் தாங்கி , விழிகள் பொங்க , முத்த ஊர்வலம் நடத்த தொடங்கினாள் அவன் நாயகி.
அன்பை வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் இருந்தாலும், ஆதி வழி என்னவோ முத்தம் தானே ....
அப்படிப்பட்ட முத்தத்தில் தன் மொத்த உணர்வுகளையும் கடத்தி கொண்டிருந்தாள் ...
கனவிலும் எதிர்பார்த்திராத நிகழ்வல்லவா ....
அவன் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்தவளுக்கு, என்றும் இல்லாத அவனது விலகல் பேச்சு வேறு வகைத்தொகை இல்லாமல் வருத்தி எடுத்திருக்க , பற்று கோல் அற்று ஆழ் கடலில் மூச்சுக்காக முங்கி எழுபவள் போல், திணறிக் கொண்டிருந்தவளுக்கு, கட்டுமரமாய் வந்து அவன் காட்சியளித்தது, ஏதோ கடவுளைக் கண்ட உணர்வாய் தோன்ற, விடாமல் கட்டிக்கொண்டு விசும்பினாள் காரிகை.
அவளது உணர்வுகளை சரியாக உள்வாங்கிக் கொண்டவன்,
"ஆக்சுவலி பேக் டு பேக் கால்ஸ் அண்ட் மீட்டிங்னு பிஸியா இருந்ததால உன்னோட என்னால சரியா பேச முடியல ....
அதைவிட நார்மலா சர்ப்ரைஸ் பண்ணாம இப்படி பட்டும் படாம பேசி வச்சுட்டு திடீர்னு வந்து நின்னா, எப்படி இருக்கும்னு தோணிச்சு அதான் அப்படி பேசினேன் ....
சும்மா சொல்ல கூடாது .... ரொம்ப ரொம்ப சூப்பர்பா இருக்கு .."
அவன் விஷமமாக விளக்கம் கொடுத்ததுமே விருட்டென்று விலகியவள், பொங்கி எழுந்த கோபத்தோடு அவன் காதை பற்றி திருக,
"ஸ்ஸ்ஸ்ஸ்.... விடு ஸ்ரீ .... வலிக்குது ..."
அவன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போது அவன் அலைபேசி சிணுங்கியது.
ராம்சரண் தான் அழைத்திருந்தான், ராமலட்சுமியின் திருமணத்திற்கு அழைப்பு விடுவதற்காக.
அழைப்பை அனுமதித்தவனிடம் இயல்பான நலம் விசாரிப்புக்கு பிறகு,
"உன் வீடு தெரிஞ்சாலும் வீட்டு அட்ரஸ் தெரியாது டா... பத்திரிகை அனுப்ப அட்ரஸ whatsapp பண்ணு ..." என்ற ராம்சரணிடம்
" வீட்ல இப்ப யாருமே இல்ல ....ஸ்ரீனி பர்சனலா இன்வைட் பண்ணிட்டான் ... நீ whatsappல பத்திரிகை அனுப்புடா ... அது போதும் .... 100% ஆஜர் ஆயிடுவேன் " என ஆரம்பித்து தன் தாய் தந்தை யாத்திரைக்கு சென்று இருப்பது, திடீர் திட்டமாய் தானும் தன் மனைவியோடு ஆஸ்திரேலியா செல்ல இருப்பது என அனைத்தையும் வீரா பகிர்ந்து முடிக்க ,
"ஸ்ரீப்ரியாவ நீ ஆஸ்திரேலியாக்கு கூட்டிக்கிட்டு போறது உங்க அப்பா அம்மாவுக்கு தெரியுமா ..." என்றான் ராம்சரண் யோசனையாய்.
"அவங்களுக்கு சொல்லல டா ... ஃப்ரைடே தான் பிளான் சேஞ்ச் ஆச்சு ... அம்மாவும் அப்பாவும் இப்ப மாமா வீட்ல இருக்காங்க ... அதான் அப்புறமா சொல்லிக்கொள்ளலாம்னு..."
வழக்கம் போல் வீரா சகஜமாக மொழிய,
"நீ ஸ்ரீப்ரியாவ உன் கூட கூட்டிக்கிட்டு போறது உன் மாமனார் மாமியாருக்கு தெரியுதோ இல்லையோ... உங்க அப்பா அம்மாவுக்கு தெரியணும் ... நீ சொல்லாம விட்டுட்டேன்னா நாளைக்கு தேவையில்லாத கேள்விக்கு அவ பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும் ...."
லட்சுமி முதன்முதலாக கர்ப்பம் தரித்த போது, கற்பகம் நாள் கணக்கு கேட்டு வறுத்தெடுத்ததை மனதில் வைத்து ராம்சரண் சொல்ல, அதனை சடுதியில் புரிந்து கொண்டவன்,
"ஷூயர் டா இம்மீடியட்டா போன் பண்ணி சொல்லிடறேன்..." என்றவன் மேற்கொண்டு லட்சுமியின் உடல்நிலை , ராம் சரணின் புதிய அலுவலகம் ஆகியவற்றை விசாரித்துவிட்டே அழைப்பை துண்டித்தான்.
" வாங்க சாப்பிட போலாம் ..." ஸ்ரீ அவன் கரம் பற்றி இழுக்க,
"நீ போ ... அப்பாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்துடறேன் .... " என்றவன் பொன்னம்பலத்திற்கு அழைப்பு விடுத்து, அவனது பயணம் குறித்து கூற,
"சரிப்பா... சந்தோஷமா போயிட்டு வாங்க ...." என பொன்னம்பலம் மகிழ்ச்சியாக பேசி முடித்து அழைப்பை துண்டிக்கும் போது
"யாரோட பேசிக்கினு இருந்தீங்க ..." என்றார் அகல்யா .
மைந்தன் சொன்ன விஷயத்தை அவர் மறுஒளிபரப்பு செய்ய, முகம் சுணங்கி போன அகல்யா,
"ஏற்கனவே பொண்டாட்டிய கூட கூட்டிக்கினு போவணும்னு திட்டம் போட்டு தான் எல்லாத்தையும் செஞ்சி வச்சிருந்திருக்கான் ... நாம அங்க இருக்கும் போது வேணும்னே சொல்லாம வுட்டு போட்டு இப்ப ஃபோன் பண்ணி கதை சொல்றான் .... புத்தி கெட்ட பய.... புளுகுறான்.... " என வசைபாட,
"அடியேய், இப்ப தான் உன் குணமே எனக்கு புரியுது ... நீ இத்தனை நாளா குழந்தைக்காக வேண்டி தான் பேசிக்கினு இருந்தேன்னு நினைச்சேன் ... இப்ப இல்ல தெரியுது உனக்கு மருமவளயே புடிக்கலனு ... இன்னும் சரியா சொல்லணும்னா உன் மவன் கல்யாணம் கட்டிக்கிட்டதே உனக்கு புடிக்கல ... அவன் காலத்துக்கும் தனிமரமா நின்னு நீ சொன்னதுக்கெல்லாம் பூம்பூம் மாடு மாறி தலையாட்டி இருந்தா சந்தோஷப்பட்டிருப்பியோ என்னமோ ..." பொன்னம்பலம் காட்டமாக கூற
"என்னங்க... இப்படி அபாண்டமா பேசுறீங்க ..."
" என்ன பெருசா அபாண்டத்த சொல்லிட்டேன்..... அவன் தன் பொண்டாட்டிய கூட்டிக்கினு ஆஸ்திரேலியா போறான்... அவன் பொண்டாட்டியோட சேர்ந்து அவன் நிம்மதியா இருந்தா தான குழந்தை உண்டாவும் .... இத்தனைக்கும் நாம ஊர்லயே இல்ல... நமக்கு சொல்ல வேண்டிய அவசியமும் இல்லயே... ஆனா ஃபோன் பண்ணி பொறுப்பா சொல்றான் ... கல்யாணத்துக்கு முந்தியே கண்ட கழிசடைகள கூப்ட்டுகினு லிவிங் டுகெதர்ங்கிற பேர்ல ஊர சுத்துற தருதலைங்களுக்கு மத்தில தன் பொண்டாட்டியோட போறத பத்தி ஃபோன் பண்ணி சொல்றவன நீ பாராட்ட வேணாம் ... இப்படி திட்டாம இருக்கலாம் இல்ல .... தன் பொண்டாட்டிய கூட கூட்டிகினு போவதற்கு அவன் எதுக்காக நம்ம கிட்ட பொய் சொல்லணும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சியா...."
பொன்னம்பலம் கோபத்தில் எகுற,
"அவன் கல்யாணத்துக்காக வேண்டி நான் கோயில் கோயிலா போய் பொங்க வச்சதும், பூஜை செஞ்சதும் உங்களுக்கு மறந்து போச்சா ... பிரபா நம்ப ஆளுங்களே கிடையாது ... அவளையே நான் ஒன்னுமே சொன்னதில்ல... பிரியாவை நம்ம சனத்துல, நானா பார்த்து தான் பாண்டிக்கு கட்டி வச்சிருக்கேன் .... அதோட அது மேல சொல்ற அளவுக்கு தப்பு எதுவும் இல்லையே ... பின்ன எப்படி எனக்கு அவள புடிக்காம போவும்..." என அகல்யா சப்பக்கட்டு கட்ட,
"அப்ப ஏன் பொருமன... ஒருவேளை பெரியவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் சண்டை வர்ற மாறி, சின்னவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் சண்டை வரலயேன்னு அவங்கள பாத்து பொறாமை படறியா... எது எப்படியோ ... எனக்கு ஒன்னு மட்டும் புரிஞ்சு போச்சு ... உனக்கு பிரியா வேலைக்கு போவ போறது புடிக்கல .... அத பையன் கிட்டயும் சொல்லிட்ட... மருமக கிட்டயும் சொல்லிட்ட... அவங்க கேட்கிறதா இல்ல .... எப்பவுமே நம்ம வீட்ல எல்லா முடிவும் நீயே எடுத்து தான் வழக்கம் ... ஆனா இப்ப உன் வார்த்தை செல்லுபடியாகலங்கிற கோவத்துல, அகங்காரத்துல இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக்கினு இருக்க... " என அகல்யாவின் மனதை பொன்னம்பலம் படம் பிடித்துக் காட்ட, ஒரு கணம் வாய் அடைத்துப் போனவர்,
"ஆள விடுங்க சாமி ... இனிமே உங்க பையனை, மருமவளயும் பத்தி ஒரு வார்த்தை பேச மாட்டேன்.... எதேச்சையா ஒரு வார்த்தைய வுட்டு போட்டேன் அதுக்காக இப்படியா வைவீங்க..." என கழுத்தை நொடித்தபடி இடத்தை காலி செய்தார் அகல்யா.
இங்கு மதுரையில் , அம்மையப்பன் வீட்டிற்கு வந்ததும், சுசீலா வீராவின் வரவை சொல்ல,
"கூறு கெட்டவளே .... பட்டப் பகல்லயே கனவு கண்டயாக்கும் ....அவரு தான் வெளிநாடு போயிருக்காரு இல்ல ..." என்ற அம்மையப்பனின் பார்வை ஏதேச்சையாக கூடத்தில் இருந்த பயணப் பொதிகளின் மீது விழவும், தோட்டத்திலிருந்து வாழை இலையோடு மகள் வெளிப்படவும் சரியாக இருக்க,
"ம்மா.. மாப்ள வந்திருக்காரா ..." என்றார் மகளிடம் ஆச்சரியமாக.
"ஆமாம்பா ..." எனத் தொடங்கி, அன்றைய இரவு அவள் தன் கணவனோடு ஆஸ்திரேலியாவிற்கு பயணப்படவிருப்பதை சொல்லிக்கொண்டே இருக்கும் போது வீராவும் வந்துவிட, அம்மையப்பனுக்கு முகமெல்லாம் மத்தாப்பு பூக்கள் ஆகிப்போனது.
கடந்த முறை அவன் அங்கு வந்திருக்கும் போது, சிறு ஒதுக்கத்தை கடைப்பிடித்தவர், இந்த முறை மருமகனை கொண்டாடி தீர்த்து விட்டார்.
காலை உணவின் போது, வழக்கத்திற்கு மாறாக அவர் வீராவிடம் அதிகம் உரையாடி மகிழ, இரு பெண்களுக்கும் அது கனவா அல்லது நினைவா என்று ஆராயும் அளவிற்கு, அவரின் மாற்றம் அதிசயக்க வைக்க, ஆனந்தத்தில் உறைந்தே போயினர்.
அப்போது இரவு பயணத்தை பற்றிய பேச்சு வரும் போது
"ராம் ... நம்ம வீட்ல இருந்து ஏழு எட்டு சாரி, அஞ்சு ஆறு சுடிதார் தான் எடுத்துட்டு வந்திருக்கேன் .... " என ஸ்ரீ தயங்க,
"அது தெரிஞ்சு தான், ஷாப்பிங்கு பிளான் பண்ணி இருக்கேன் ... சாப்பிட்டு முடி போயிட்டு வந்துடலாம் .... "
என்றவன் மனைவியை உலகத்தரம் வாய்ந்த கடைகளுக்கு அழைத்துச் சென்று, அவளுக்கு பொருத்தமான அதே சமயத்தில் ஆபாசமற்ற அழகான நவ நாகரிக உடைகளை தேர்வு செய்து வாங்கினான்.
அன்று இரவு, அவனது பயணப் பொதிகளோடு புதிதாக வாங்கியதை மட்டும் எடுத்துக்கொண்டு, துரிதமாக கிளம்பி விமான நிலையத்தை அடைந்தனர்.
அம்மையப்பன், சுசீலா இருவருமே விமான நிலையத்திற்கு வந்து மகள், மாப்பிள்ளையை மனமார வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
முதன் முறையாக பிசினஸ் கிளாஸில் பயணிக்கிறாள் ஸ்ரீ.
அவள் மேற்கொண்ட அயல்நாட்டு பயணத்தின் போது அமர்ந்தபடி பயணித்தே பழகியவளுக்கு , அந்த பரந்து விரிந்த படுக்கைப் போன்ற சொகுசு இருக்கை , திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக சற்று பெரிய தனிப்பட்ட தொலைக்காட்சித் திரை, உணவருந்த , புத்தகம் படிக்க என பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தனிப்பட்ட மேஜை என அனைத்திலும் கொட்டிக்கிடந்த டாம்பீகம் ஒருவித அந்நிய உணர்வோடு,ஆர்வத்தையும் கொடுக்க, அனைத்தையும் ரசித்துப் பார்த்தாள்.
பல மணி நேர பயணத்தை அந்த ஆடம்பரங்கள் சுலபமாக்கினாலும், அவளது கணவனின் அருகாமையும் பேச்சுமே அந்தப் பயணத்தை மேலும் இனிமையாக்க , பயணக் களைப்பே தெரியாமல் புத்துணர்வும் உற்சாகமுமாய் அன்னிய மண்ணில் அடியெடுத்து வைத்தாள்.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் மாநிலத்தின் தலைநகரம் தான் பிரிஸ்பேன்(Brisbane) . பிரிஸ்பேன் ஆற்றுக்கு அருகே, மக்கள் அடர்த்தி அதிகம் இல்லாமல், மிதமான காலநிலையில் அதிக அளவு அழகான கடற்கரைகளைக் கொண்ட அம்சமான நகரம் அது.
அவர்களை அழைத்துச் செல்ல சொகுசு காரோடு, வீராவின் பெயர் எழுதப்பட்ட பதாகையுடன் ஓட்டுநர் ஒருவர் விமான நிலைய வாயிலில் காத்திருக்க, வாகனத்தில் ஏறி அமர்ந்த பதினைந்தாவது நிமிடத்தில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சர்வீஸ்டு அப்பார்ட்மெண்ட் முன்பு அவர்கள் பயணித்த கார் சென்று நின்றது.
அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த அடுக்குமாடி இல்லமானது உலகத் தரம் வாய்ந்த சகல வசதிகளுடன் கூடிய சமையலறை, ஒரு கூடம், ஒரு படுக்கை அறை என கணவன் மனைவிக்கு தேவைக்கும் அதிகமாகவே இருந்தது.
அறைக்குள் நுழைந்ததுமே அடிவயிற்றை பசி கிள்ள, இரண்டு மீட்டர் தொலைவில் அமைந்திருந்த இந்திய உணவகத்திற்கு கால் நடையாகச் சென்று உண்டு முடித்துவிட்டு, அங்கிருந்த இந்திய பல்பொருள் அங்காடியில் சமைத்து சாப்பிட தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்கிக் கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அதற்குள் அலைபேசியில் நூற்றுக்கணக்கில் பணி நிமித்தம் தொடர்பாக மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருக்க, வந்ததும் வராததுமாக மடிக்கணினியை திறந்து மறுதினம் நடக்கவிருக்கும் கலந்தாய்விற்கு வீரா தயார் செய்ய தொடங்க, வாங்கிக் கொண்டு வந்த பொருட்களை அதனதன் இடங்களில் அடுக்கி வைத்துவிட்டு, மயில் இறகும், மலர் இதழ்களும் சேர்த்து செய்யப்பட்டது போல் மென்மையான ஆளை விழுங்கும் படுக்கையில் படுத்தவள் அலைச்சல் காரணமாக அடுத்த கணமே ஆழ்ந்த நித்திரையில் மூழ்க, அலுவலகப் பணியை ஒரு வழியாக முடித்து விட்டு வந்தவன், உறங்கிக் கொண்டிருந்தவளின் இடையில் வழக்கம் போல் கை போட்டு தன் நெஞ்சோடு இழுத்தணைத்து கொண்டு கதகதப்பான கம்பளிக்குள் கண் அயர்ந்து போனான்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
நட்புகளே ,
அத்தியாயம்-101ம் பதிவேற்றப்பட்டுள்ளது
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteSuper mam
ReplyDeleteWow superb sis. Thanks for one more ud uploaded.
ReplyDeleteSuper super super super super super super super super super super super super
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDelete