அத்தியாயம் 59
"ஏன் ஒரு மாறி இருக்கீக ... தலைவலியா ..." என சுசீலா மிகுந்த களைப்போடு காணப்பட்ட அம்மையப்பனை பார்த்து கேள்வி எழுப்ப,
"தலைவலி எல்லாம் ஒன்னுமில்ல ... ஒறமொற வூட்டுக்கு கூட அதிகம் போகாத புள்ளய, திடீர்னு கல்யாணம் கட்டி புது ஆளுங்களோட அனுப்புறது சங்கட்டமா இருக்கு ..." என்றார் எங்கோ பார்வையை செலுத்தி.
"ஏதே... புது ஆளுங்களா ... காலைல கல்யாணம் முடிச்சி, இப்ப மாப்பிள்ளையோட அவிங்க வீட்டுக்கு போவ போறா... இதுல சங்கடப்பட என்ன இருக்கு ... ஊர் நாட்ல நடக்கிறது தானே ... "
"இவளுக்கு கூட்டாளிங்க கூட அதிகம் கிடையாது... யாரோடயும் அதிகம் பேசி பழக மாட்டா... அவிங்க வீட்டாளுங்க எல்லாரும் நல்லா பேசுறாங்க ... எப்படி சமாளிக்க போறாளோனு யோசனையா இருக்கு ..."
"உங்க பொண்ணு நல்லா வாய் பேசுவா ... நீர் கேட்டதில்ல அவ்ளோ தான்... பெரிய படிப்பு படிச்சு வெளிநாட்டுக்கு எல்லாம் போயிட்டு வந்தவளுக்கு இவிங்கள சமாளிக்க தெரியாதா... நமக்கு கல்யாணமாக சொல்ல, எனக்கு மட்டும் உங்களையும் உங்க வீட்டாளுங்களையும் தெரியுமா என்ன... உங்கள கல்யாணம் கட்டிக்கிட்டு மதுரைக்கு வந்த பொறவு தேன், இந்த வீட்டு பழக்க வழக்கத்தையும் நீக்குப் போக்கையும் தெரிஞ்சுகிட்டேன்... இது உம்ம புள்ளைக்கு மட்டுமில்ல, அம்புட்டு பொட்ட புள்ளைகளுக்கும் நடக்கிறது தேன்... இதுல வெசன பட ஒன்னுமில்ல..."
"நான் நல்லவன் டி.... ரொம்ப பொறுப்பா உன்னையும் குழந்தைகளையும் பார்த்துகிட்டேன்... அந்த மாறி இவிங்க எல்லாம் இருப்பாங்களான்னு ஒரு பயம் தேன்..."
"என்ன பேச்சு பேசுறீக ... அப்ப மாப்ள நல்லவர் இல்லங்கறீகளா... மொதல்ல இந்த பேச்சை நிப்பாட்டுங்க ... நீங்க எக்கு தப்பா பேசினது அவிங்க காதுல விழுந்திட போவுது..."
மகளின் மீதான பாசத்தையும் அக்கறையையும் வித்தியாசமாக வெளிப்படுத்திய, அம்மையப்பனின் புதிய பரிமாணத்தைப் பார்த்து , பதறி போனார் சுசீலா.
இதுவரை கண்டிராத அம்மையப்பனை பார்ப்பதற்கு ஒரு புறம் வித்தியாசமாக இருந்தாலும் , மறு புறம் கணவனுக்கு இருந்த அதே பயம் அவருக்கும் இல்லாமல் இல்லை.
கவியரசர் கண்ணதாசன் கூறியது போல், அனுபவம் தானே வாழ்க்கை.... வாழ்ந்து பார்த்தால் தான் வாழ்க்கை புரியும் ... என்ற எண்ணமும் உடன் உதிக்க, ஒருவாறு மகளை புகுந்த வீட்டிற்கு வழி அனுப்ப தயார்படுத்திக் கொண்டார்.
பொன்னம்பலத்தின் பெரும்பாலான உறவினர்கள், திருமணம் முடிந்த கையோடு கிளம்பி இருக்க, மீதம் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பயணிக்க வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
புதுமண தம்பதிகள் பயணிக்கயிருந்த வீராவின் கார் அலங்காரம் செய்யப்பட்டு சாரதியாக சத்யன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, அவன் அருகில் பிரபா அமர்ந்திருந்தாள்.
சத்யனின் இரு புத்திர சிகாமணிகளில், இரண்டாவது மகன் சாய்நாத் வீராவின் செல்லம்.
சித்தப்பா கோண்டு என்று கூட சொல்லலாம் .
வீராவின் அருகில் அமர்ந்து கொண்டு தான் பயணிப்பேன் என அவன் போர்க்கொடி தூக்க,
பெரியவன் ஸ்ரீநாத்தும், அதற்கு போட்டியாக களம் இறங்கினான்.
உடனே பிரபா,
"யாராவது ஒருத்தர் தான் சித்தப்பா பக்கத்துல உக்காந்துக்க முடியும்....இன்னொரு பக்கம் சித்தி உக்காந்துப்பாங்க....." என கூறிய மாத்திரத்தில், குழந்தைகள் இருவரும் போட்டி போட சத்யன் சமாதான படலத்தில் ஈடுபட, கடைசி வரை, முடிவு எட்டப்படாமல் பிரச்சனை வலுத்துக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீப்ரியா மற்றும் அவளது குடும்பத்தினரின் இதழ்களில் அனிச்சையாய் மெல்லிய புன்னகை பூக்கள் பூத்தன.
"வெயிட், வெயிட் ... இப்ப என்ன ... நீங்க ரெண்டு பேரும் என் பக்கத்துல உக்காந்துக்கணும், அவ்ளோ தானே உக்காந்துக்குங்க .... " என தமையனின் மகன்களை பார்த்து வீரா மெல்லிய புன்னகையோடு வசனம் பேச,
" அப்ப சித்தி எங்க உக்காந்துப்பாங்க ...."
துருதுரு குழந்தை சாய்நாத், தன் முட்டை கண்களை உருட்டி, கேள்வி எழுப்ப,
" சித்தி என் மடில உட்கார்ந்துப்பாங்க..." என அவன் குறும்போடு முடிக்க, அம்மையப்பன் உட்பட சுற்றி இருந்த அனைவரின் முகத்திலும் கண்ணிமைக்கும் நொடியில் புன்னகை மலர , ஸ்ரீப்ரியா மெல்லிய இதழ் விரிப்போடு நாணத்தால் முகம் சிவந்தாள்.
வீராவின் பேச்சால் விளைந்த புன்னகையை முகத்தில் தேக்கியபடி பிரபா மீண்டும் குழந்தைகளிடம் சமாதானம் பேச, ஒரு வழியாக வீராவின் அருகில் அமரும் வாய்ப்பு இளையவன் சாய்நாத்திற்கு கிட்ட, மற்றொரு காரில் பயணிக்கும் பிரபாவின் தாய் தந்தையோடு பயணிக்க மூத்தவன் ஸ்ரீநாத் ஒத்துக் கொள்ள, ஒருபுறம் தமயனின் இளைய மகன் , மறுப்புறம் மனம் கவர்ந்த மனையாள் சகிதமாக, வீராவின் வழிப்பயணமும் வாழ்க்கைப் பயணமும் அந்தக் கணத்திலிருந்து அம்சமாக தொடங்கின.
ஸ்ரீப்ரியாயும் ஒரு புதுவித உணர்வோடு தன் வாழ்க்கை பயணத்தை தொடங்க தாய், தந்தை தம்பியிடமிருந்து விழிகளால் விடை பெற்றாள்.
திருமணத்திற்காக செய்யப்பட்ட அலங்காரங்கள் அனைத்தும் களையப்பட்டு, பழுப்பு மஞ்சளும், பாசிப் பச்சை ஜரிகையும் கொண்ட மங்கள்புரி புடவையில், தளர பின்னிய கூந்தல் , அதில் அதிகமாய் அங்கம் வகித்த மல்லிகைச் சரங்கள், மிகப் பொருத்தமான முக அலங்காரம் என அம்சமாக காட்சி அளித்தவளை, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் அருகமர்ந்தபடி விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் வீரா.
பயணத்தில் அசைந்தாடும் பளபளக்கும் வைர ஜிமிக்கியின் ஒளிக்கற்றைகள் அவளது சிவந்த கன்ன கதுப்பில் தெறித்து நாட்டியமாட, கூறிய நாசியின் ஒற்றைக் கல் மூக்குத்தியும் மின்னி தன் இருப்பை காட்ட , சந்தன கழுத்தை தழுவியிருந்த மரகதக்கல் பதித்த அட்டிக்கை ஆழ்கடல் சங்கினை நினைவூட்ட, அவன் அணிவித்திருந்த புத்தம் புது மஞ்சள் தாலியின் மணம் அவன் நாசியை நிரப்ப, அவளது பக்கவாட்டுத் தோற்றத்தை அணு அணுவாக ரசித்துக்கொண்டே , அவள் மீது கைப்படாமல், தனது வலது கரத்தை அவளை சுற்றி விரித்தபடி நெருங்கிய அமர்ந்தான்.
திருமணம் முடிந்த பிறகு இருவரும் இணைந்து நெருக்கமாக பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாலும், அத்துவான காட்டில் தனித்து விடப்பட்டதாய் தோன்றிய அக்கணத்தில் அவன் காட்டிய நெருக்கம், அவளுள் ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்த , அதனை மறைக்க எண்ணி புடவை முந்தானையின் நுனியை இரு கரங்களால் பற்றியபடி பார்வையை வெளிப்பாதையின் மீது செலுத்தலானாள்.
அவன் இயல்பாக உரையாடலை தொடங்க எண்ணினாலும், அதுவரையில் இல்லாத ஏதோ ஒன்று தடைக்கல்லாய் தோன்றி தடுமாறச் செய்ய, முந்தானையை பற்றியிருந்த மருதாணி இட்ட வெண்டை விரல்கள், மணிக்கட்டில் சரிந்து விளையாடிய கண்ணாடி வளையல்களில் பார்வையை ரசனையாய் பதித்துக் கொண்டிருந்தவனிடம் , குழந்தை சாய்நாத் மட்டும் வாய் ஓயாமல் ஏதேதோ பேசிக் கொண்டே வர, அவனுக்கு தோதாக பதில் அளித்துக் கொண்டே, தன் பார்வையைத் தொடர்ந்தான்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த சத்யனும் பிரபாவும் வழக்கம் போல் அலுவலகம், வீடு, குழந்தை என ஏதேதோ பேசிக் கொண்டே வர,ஆழ்கடல் அமைதியை ஆட்சி மொழியாக தத்தெடுத்துக் கொண்டு அடுத்தவரின் அருகாமையில் ஆழ்ந்திருந்த புதுமணத் தம்பதிகளுக்கு அது வெறும் அரவமாகவே சென்றடைந்தது.
பயணம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கெல்லாம், குழந்தை சாய்நாத் நித்திரையில் மூழ்கி வீராவின் தோள் மீது சரிய, அவனது குமரிக்கும் உறக்கம் கண்களை சுழற்றவதை புரிந்து கொண்டவன் ,
"சாய் மாதிரி நீயும் என் தோள்ல சாஞ்சி கிட்டு நிம்மதியா தூங்கு ...." என்ற படி அவள் தோள் மீது கை வைத்து தன் மார்போடு உரிமையாய் பிணைத்துக்கொண்டான் முதன்முறையாக.
அவனது பறந்து விரிந்த திடமான தோளும், அவனின் வாசனையும், அவனது ஸ்பரிசம் கொடுத்த சிலிர்ப்பும் , கண்களில் உலா வந்து கொண்டிருந்த உறக்கத்தை லேசாக விரட்ட, அதன் பிரதிபலிப்பு அவள் உடம்பில் அதிர்வாய் தெரிய, புரிந்து கொண்டவன்,
" நானும் தூங்க போறேன் .... நீயும் தூங்கு ...." என்றான் இயல்பாய் .
அதிகாலையில் இருந்து ஏற்பட்ட அலைச்சல் காரணமாக, சற்று நேரத்திற்கெல்லாம் இருவருமே ஆழ்ந்த நித்திரையில் மூழ்கினர்.
ஒரே ஒருமுறை தேநீர் பருகுவதற்காக, வாகனங்கள் நிறுத்தப்பட்டதோடு சரி, மற்றபடி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாததால், எங்குமே நிற்காமல் தொடர் பயணம் மேற்கொண்டு, இரவு மணி ஒன்பதை கடக்கும் போது கோயம்புத்தூரை அடைந்தனர் .
பொன்னம்பலத்தின் இல்லத்தில் புதுமண தம்பதிகளை வரவேற்க ஏதுவாக, எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அகல்யாவின் தாய் சுந்தராம்பாளின் அறிவுரைப்படி அகல்யாவின் ஒரே தமையன் தாமோதரன் மற்றும் அவரது மனைவி லதா செய்து முடித்து காத்திருந்தனர்.
அகல்யாவின் தாய் சுந்தராம்பாள், சற்று வித்தியாசமான பெண்மணி.
வயது 80ஐ கடந்திருந்தாலும் , ஒரு சில கொள்கை கோட்பாடுகளை வைராக்கியத்தோடு பின்பற்றுபவர்.
இளம் பிராயத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
சிந்தனையில் முற்போக்குவாதியாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் பிற்போக்குவாதி போல் செயல்படுவார்.
அவரது அறுபதாம் வயதில் கணவர் காலமான பிறகு எந்த சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல், வெள்ளை வெளேர் என்ற வெண்ணிற புடவையில் நெற்றியில் பளீர் விபூதி சகிதமாக வலம் வரத் தொடங்கினார் .
பேரன், பேத்தி திருமணத்தில் கூட கலந்து கொள்ளாமல் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகே அவர்களை மனமார ஆசீர்வதிக்கும் பழக்கத்தை மேற்கொண்டார்.
மிகுந்த தைரியமான பெண்மணி. வயதாகிவிட்டதே என்றெண்ணாமல் அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை அனைத்தையும் ஊடக வாயிலாக அறிந்து கொள்ளும் திறன் உடையவர் ....
அவரிடம் ஒரு சிறு குறை உண்டு.
வாய் துடுக்கு சற்று அதிகம் ...
எதிராளியை மடக்கி மடக்கி கேள்வி கேட்பதில் வல்லவர் என்பதால், பெரியவர் முதல் இளையவர் வரை அனைவரும் அவரிடம் சற்று அடக்கித்தான் வாசிப்பார்கள். மற்றபடி பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
வாகனங்கள் வரிசை கட்டி வந்து நின்றதும், அதிலிருந்து இறங்கியவர்களை இன்முகத்தோடு வீராவின் தாய் மாமன் குடும்பம் வரவேற்க , பிறகு பிரபா, அன்பு இருவரும் இணைந்து ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைத்துக்கொள்ளும் சடங்கை அழகாக நடத்தி முடித்தனர் .
பிறகு அவர்களது சமுதாயத்து முறைப்படி மணப்பெண்ணை பூஜை அறையில் தீபம் ஏற்ற செய்தல், மணமக்களுக்கு பால், பழம் கொடுத்து பகிர்ந்துண்ண வைத்தல் போன்ற சடங்குகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அம்சமாக அரங்கேறிய பிறகே பாதம் பணிந்த புதுமண தம்பதிகளுக்கு ஆசி வழங்கினார் சுந்தராம்பாள்.
நடப்பது அனைத்தையும் ஒருவித ஆர்வத்தோடு கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பிரபாவிடம் சத்யன்,
" என்னமோ சினிமா கிளைமாக்ஸ் பார்க்கிற மாதிரி பார்த்துக்கிட்டு இருக்க...."
" இனிமே வரப்போற கிளைமாக்ஸ்காக காத்துக்கிட்டு இருக்கேன் ... டிஸ்டர்ப் பண்ணாதீங்க ..." என்றாள் பிரபா பார்வையை அகற்றாமல்.
பேரனின் புது மனைவியை , உச்சாதிப் பாதம் வரை பார்த்தவர், அவளது படிப்பில் ஆரம்பித்து, தனித்திறமைகள் வரை சிறு பேட்டி கண்டு அறிந்துகொண்டு,
"சும்மா சொல்லக்கூடாது... உன் பொண்டாட்டி நல்லா இருக்கா நல்லாவும் பேசறா ... என்ன... கொஞ்சம் ஒடிசலா இருக்கா .... ஒரு குழந்தை பொறந்தா, உன் அம்மா மாறி கொஞ்சம் தண்டியாயிடுவான்னு நினைக்கறேன் ... "
என வீராவை பார்த்து சுந்தராம்பாள் மொழிந்து விட்டு, ஸ்ரீப்ரியாவிடம் திரும்பி குரலை லேசாக செருமிக்கொண்டு
"இந்த குடத்து தண்ணிய, தூக்கிக்கினு போயி, அந்த துளசி மாடத்து கிட்ட வச்சிடும்மா..."
என்றார் பிரபா எதிர்பார்த்துக் காத்திருந்த உச்சகட்ட காட்சியை செயல்படுத்தி.
புதுக் கணவனின் அருகாமையும், புகுந்த வீட்டுப் பெண்களின் ஹாசியத்திலும் முகம் சிவந்திருந்தவளுக்கு , சுந்தராம்பாளின் பேச்சு லேசான தயக்கத்தை தர, அதனை கண்டுகொண்ட வீரா,
" பாட்டி, இந்த குடத்தை தூக்கிக்கிட்டு போய் அங்க வைக்கணும் ... அதானே ... அவ எதுக்கு .... நான் செய்றேன் ..."
" அடேய் ... விட்டா அவளோட சேர்த்து குடத்தையும் நீ தூக்கிக்கினு போவேன் எனக்கு தெரியும் டா... ஆனா இந்தப் குடத்தை உன் பொண்டாட்டி தான் தூக்கியாவணும்...."
" ஏன் பாட்டி ..."
" ஆ.... அதுல ஏகப்பட்ட அறிவியல் இருக்குது ....
உன் பொண்டாட்டிக்கு இடுப்பு எலும்பு பலமா இருக்குதா .... தண்ணிய தளும்பாம பொறுமையா கொண்டுகிட்டு போறாளானு தெரிஞ்சுக்கதேன் ...."
இப்பொழுது பிரபா வெகு லேசாக களுக்கென்று சிரிக்க,
" ஏண்டி சிரிக்கிற ..." என சத்யன் சன்னமாக கேட்க,
" எனக்கு கொடுத்த குடத்தை விட இந்த குடம் கொஞ்சம் பெருசு தான்... அதை நினைச்சேன்.. சிரிச்சேன் .."
" ச்சே... இதெல்லாம் ஒரு பொழப்பு ... ஏண்டி இப்படி இருக்க ..." சத்யன் அலுத்துக் கொள்ள ,
" நீங்க பேசாதீங்க ... நான் இந்த வீட்டுக்கு வந்து இப்படி குடத்தை தூக்கும் போது இடிச்ச புளி மாதிரி நின்னுகிட்டு இருந்தீங்களே ... மறந்துட்டீங்களா ... பாத்தீங்களா உங்க தம்பிய... நான் தூங்கட்டுமான்னு பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாரு ...." என வெடுக்கென்று கூறிவிட்டு அவள் கழுத்தை திருப்பிக்கொள்ள,
" எப்பா ..... இப்பவே கண்ண கட்டுதே .... போகப் போக உன்னை எப்படி சமாளிக்க போறனோ.... கடவுள் தான் என்னை காப்பாத்தணும் ..." என அவன் அங்குலாய்த்து கொண்டிருக்கும் போதே, தட்டு தடுமாறி ஒரு வழியாக, அந்த ஒரு குடத்து தண்ணிரை சிந்தாமல் சிதறாமல் இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்து சென்று துளசி மாடத்திற்கு அருகில் வைத்தாள் ஸ்ரீப்ரியா.
" இந்த காலத்து புள்ளைங்க எல்லாம் நோஞ்சானா இருக்குதுங்க ...... ஒரு குடத்து தண்ணிய, அந்தாண்ட தூக்கிக்கினு போவறதுக்குள்ள உன் பொண்டாட்டி எப்படி ஆடிப் போயிட்டானு பாரு ..."
வீராவை பார்த்து சுந்தராம்பாள் கூற, பதில் ஏதும் பேசாமல் சாந்தமாக தலை குனிந்து கொண்டாள் அவன் நாயகி.
அளவுக்கு அதிகமான அலைச்சல் காரணமாக மனையாள் முகத்தில் குடி கொண்டிருந்த சோர்வைக் கண்டவன்,
" இன்னைக்கு ரொம்ப அலைச்சல் பாட்டி ... இன்னும் ரெண்டு நாள் கழிச்சு இந்த போட்டிய வச்சிருந்தா, இவ ஒரு குடம் என்ன, நாலு குடம் தண்ணிய அசால்டா தூக்கி இருப்பா ..." என நாயகன் விட்டுக் கொடுக்காமல் பேச,
" போடா டேய் ... அவ நாலு குடம் தூக்குறாளோ இல்லையோ ... ஆனா நீ அவளுக்கு நல்லா சொம்பு தூக்குவேன்னு மட்டும் நல்லா தெரியுது ..." என அவர் முடித்தது தான் தாமதம், குழுமியிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க, வீரா அசடு வழிய , ஸ்ரீப்ரியாவின் முகம் நாணத்தால் அந்திவானமாய் சிவந்தது.
அதன் பின் பிரபாவும் அன்பும் ஸ்ரீப்ரியாவை சூழ்ந்து கொண்டு, நட்பாகப் பேசி பழகியதோடு, அவளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை சுற்றி காட்ட கிளம்பினர்.
அனைவரும் கலைந்து சென்ற பின், கூடத்தில் சுந்தராம்பாள், அகல்யாவோடு தனித்து விடப்பட்ட வீரா, பயணப் பொதிகளை நகர்த்திக் கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.
புதிதாய் மணம் முடித்த அனைத்து ஆண்மகனுக்கும் மனையாளிடத்தில் தோன்றும் ஆசையும் ஆர்வமும் அவனுக்கும் தோன்றினாலும், தன்னவளது தற்போதைய மனநிலையை கருத்தில் கொண்டு, சிறிது நாட்கள் தாம்பத்திய உறவை
தள்ளிப் போட எண்ணினான்.
மனம் கவர்ந்த மனையாளை அருகில் வைத்துக் கொண்டு, ஒரே கூரையின் கீழ் உண்டு, உறங்கி வாழும் வாழ்க்கையில், இளமை விரதம் காப்பது நடக்கக்கூடிய காரியமா.....
என்ற கேள்வியை மனம் கேட்க, பதிலளிக்க முடியாமல் தன்னுள்ளேயே குழம்பிக் கொண்டிருந்தவனிடம் அகல்யா சாவகாசமாய்
" பாண்டி, உன் மாமனார் வீட்டுல கொடுத்தனுபின மறு வீட்டு பலகாரத்துல லட்டு , அதிரசம் எல்லாம் பெருசா நல்லா இருக்குது .... ஆனா ஜாங்கிரியும் பாதுஷாவும் தான் சிறுசா இருக்குது ..." என முடித்தது தான் தாமதம்,
" அம்மா, நீ திருந்தவே மாட்டியா... வாழ்க்கைல நீ ஜாங்கிரி பாதுஷா சாப்பிட்டதே இல்லையா ... ஏம்மா இப்படி படுத்துற ..." அவன் எரிந்து விழ ,
" ஏன் உன் மாமனார் வீட்ட குத்தம் சொன்னா பொத்திகிட்டு கோவம் வருதோ ..." என சுந்தராம்பாள் இடைப் புகுந்து கருத்து சொல்ல,
" ஐயோ ... கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசாம இருக்கீங்களா ..." என்றான் கோபத்தோடு.
ஓரிரு கணம் அமைதி நிலவ, நாயகன் மீண்டும் விட்ட சிந்தனையிலேயே மூழ்க தொடங்கும் போது ,
" அகல்யா .... ஜோசியர் சாந்தி முகூர்த்தத்துக்கு எந்த நேரம் குறிச்சு கொடுத்தாரு ... " என சுந்தராம்பாள் கேள்வி எழுப்பியதும் , எங்கோ சுற்றிக் கொண்டிருந்த அவன் மன குரங்கு உள்ளேன் ஐயா என்ற கூக்குரலோடு அங்கு கூடாரமிட,
" இன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு கொடுத்திருக்காரும்மா..."
" சரி, பிரபாவ கூப்பிட்டு , தேவையான ஏற்பாட்ட செய்ய சொல்லு..." என முடித்ததும், அதுவரை உறைந்திருந்தவன் உணர்வு பெற்று,
" அம்மா, சாந்தி முகூர்த்தம் எல்லாம் வேணாம்மா..." என்றான் அவசரமாக.
உடனே அவனை ஏற இறங்க கண்களால் அளவெடுத்த பாட்டி,
" அடேய் தம்பி ... ஏன்டா இப்படி பேசற ... பாக்க ஆளு ஓங்குதாங்கா அய்யனார் போல இருந்துகினு இப்படி பேசறத பார்த்தா உனக்கு ஏதாச்சும் உடம்புல குறை இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு ..." என லேசான கவலை தோய்ந்த குரலில் கூற,
" ஐயோ பாட்டி ... என் உடம்புல குறை எல்லாம் எதுவும் கிடையாது நான் நல்லா இருக்கேன் ..."
" பின்ன என்னடா ... கலியாணம் கட்டினா, அடுத்தது சாந்தி முகூர்த்தம்னு அஞ்சு வயசு புள்ளைக்கு கூட அம்சமா தெரியுமே ... இம்பூட்டு பெரிய படிப்பு படிச்சு பெரிய வேலை பாக்குற உனக்கு அந்த வெவரம் எல்லாம் தெரியாதா ..."
" ஐயோ பாட்டி, எனக்கு எல்லா விவரமும் தெரியும் ஆனா அவ பாட்டி செத்துட்டாங்க ..."
என்றான் புரிய வைக்கும் பரபரப்பில்.
" அடேய், பாட்டின்னா சாகதான்டா சாகும் .... ஊர் நாட்ல பாட்டி செத்த வீட்ல சாந்தி முகூர்த்தம் வைக்காமலா இருக்காங்க ..."
" அவ பாட்டி இந்த மாசம் தான் செத்து போனாங்க ... அவங்க இறந்து ஒரு மாசம் கூட ஆகல ..."
" அடேய் நீ சொல்ற சாக்குபோக்கு எல்லாம் வச்சு பார்த்தா , உன் உடம்புல ஏதோ குறை இருக்கு.... அதை மறைக்க தான் பாட்டி தோட்டின்னு புளுகறயோனு தோணுது ..."
உஃப் என தன் தலையைப் பற்றிக் கொண்டு அவன் பெருமூச்சு விட ,
" பாண்டியா, செம்பாக்கத்துல பெரிய சித்த வைத்தியசாலை இருக்காம்... அருமையா பாக்குறாங்களாம் ... அட்ரஸ் வாங்கி தாரேன்.. ஒரு முறை அவங்களை போய் பாத்து எந்த சங்கடம் இருந்தாலும் சொல்லு ... மாத்திரை மருந்து கொடுப்பாங்க சரியா போயிடும்...."
என அகல்யா அக்கறையில் மொழிய
ஐயோ என் மானமே போகுதே ... விட்டா சிவராஜ் சித்த வைத்திய சாலைல சிக்ஸ் மந்த்ஸ் ஸ்டே பண்ண வச்சிருவாங்க போல இருக்கே ... என உள்ளுக்குள் புலம்பியவன்,
" நான் என்ன சொன்னாலும் நீங்க கேட்க போறதில்ல ... சரி... சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க ..." என முடித்தான்.
" அடேய், எனக்கு உன் மேல நம்பிக்கை போனது போனதுதேன்... ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள் ... அதாங்காட்டி மூணு மாசத்துக்குள்ள உன் பொண்டாட்டி வாந்தி எடுத்தாவணும் .... அப்பதேன் உன் உடம்புல குறை இல்லன்னு நம்புவேன் ..."
என்ற தீர்மானத்தை சுந்தராம்பாள் இயற்ற,
கடவுளே, இது என்ன மூணு மாசம் கிராஷ் கோர்ஸ் மாதிரி.... கோர்ஸ் முடிஞ்சதும் பாஸ் பண்ணியே ஆகணும்னு டார்கெட் வைக்கிறாங்களே .... இப்ப வரைக்கும் மாக் எக்ஸாம் கூட எழுதினதில்லையே ....
பேசாம சாந்தி முகூர்த்தம்னு சொன்னதுமே சத்தமில்லாம தலைய ஆட்டி இருந்தா, இப்படி சந்தி சிரிக்கிற நிலைமையே வந்திருக்காது போல ... நவ் இட்ஸ் டூ லேட் ....
எனத் தன்னுள்ளேயே முணுமுணுத்த படி இடத்தைக் காலி செய்தான் நாயகன் .
மொட்டை மாடி, வீட்டு பின் தோட்டம் என ஒன்று விடாமல் எல்லா இடங்களையும் பிரபா, அன்பு நட்போடு சுற்றி காண்பித்துக் கொண்டிருந்தாலும், ஸ்ரீப்ரியாவின் மனம் மட்டும் , அவர்களோடு ஒன்றாமல், அடுத்து நடைபெறப் போகும் சோபன இரவைப் பற்றிய சிந்தனையிலேயே சிக்கி தடுமாறிக் கொண்டிருந்தது.
அது எல்லோர் வாழ்விலும் நடக்கும் இயல்பான ஒன்றுதான் என்றாலும், ஏனோ அவளது மனம், அன்றைய தினத்தில் அம்மாதிரியான ஒரு உறவை ஏற்க மறுத்தது.
முக்கிய காரணம் பாட்டியின் இறப்பு என்றாலும், துவக்க நிலை காதலர்கள் பேசும் சாதாரண காதல் பாஷை கூட இதுவரை அவளும் வீராவும் பேசிக் கொண்டதே இல்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமைந்ததில்லை.
அவன் அந்நியன் அல்ல அவளது மனதிற்கினியவன் என்ற எண்ணம் இருந்தாலும், இப்பொழுது வரை அவர்களுக்கு இடையே இருப்பது நட்பா, காதலா மனைவி என்ற உரிமை மட்டுமா ... எது.... என்று சரியாக உணர முடியாத நிலையில், திருமணம் முடிந்த ஒரே காரணத்திற்காக திருமண உறவை ஒரே இரவில் ஏற்படுத்திக் கொள்ள அவள் மனமும் உடலும் தீவிரமாக மறுப்பதை உணர்ந்து தன் மன ஓட்டத்தை தன்னவனிடம் தெளிவாக பேசி புரிய வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் மாது.
பிறகு இரவு விருந்து உண்ணும் படலம் இனிதே தொடங்கியது.
மணமக்கள் இருவரும் அருகருகே அமர்ந்து இன்முகத்தோடு உணவருந்தினாலும், திருமண உறவு குறித்து எடுத்த முடிவை தங்கு தடை இன்றி தன் இணையிடம் பகிர, தரமான வார்த்தைகளை தேர்வு செய்வதிலேயே இருவரின் சிந்தனையும் சுழன்று கொண்டிருக்க, இளசுகளின் கவனம் இரவு உணவில் இல்லாமல் வேறு எங்கோ இருப்பதை அவர்களது முக பாவத்திலிருந்தே புரிந்துகொண்ட சுந்தராம்பாள் தீவிர சிந்தனையில் மூழ்கினார்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
Super akka very nice 👍👍👍👌👌👌💐💐💐
ReplyDeletethanks a lot
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks a lot
Deleteஎவ்வளவு நாள் எங்களை காத்திருக்க வச்சிட்டிங்க . பரவாயில்லை கதை சூப்பர்.அடுத்த அத்தியாயம் சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்
ReplyDeletethanks a lot
DeleteNice
ReplyDeletethanks a lot
DeleteSuperb sis. . happy new year
ReplyDeletethanks dr
DeleteNxt epis ilaye sis.. 60-100..
ReplyDeletelink remove pannitean da
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete