அத்தியாயம் 58
"என்ன ...." என்றாள் பிரபா கடின குரலில் .
"நானும் கவியும் ஸ்கூட்டில போகும் போது ஆக்சிடென்ட் ஆயிடுச்சு ... என் கால் சிவியரா பிராக்சர் ஆயிடுச்சு ... ரெண்டு நாளா நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன் ... கவிக்கு வெறும் சிராய்ப்பு தான்... அவ தான் என்னை பார்த்துக்கிறா... அவ உனக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லியும், எனக்கு என் கொழுந்தன் கல்யாணம் தான் முக்கியம், பணம் வேணா அனுப்பறேன் டாக்டரை ஆபரேஷன் பண்ண சொல்லுன்னு சொல்லிட்டு கண்டுக்காம இருந்துட்ட ... ஏன்க்கா இப்படி மாறிட்ட ..."
கேவலும் விம்மலுமாய் ஏற்ற இறக்கத்தோடு ப்ரீத்தி வசனம் பேச,
"நடிக்காத ப்ரீத்தி... உன்னை ட்ரீட் பண்ண டாக்டர் கிட்ட எப்பவோ பேசிட்டேன் ... உன் கால் ஒன்னும் பிராக்சர் ஆகல... ஜஸ்ட் ஸ்பெரேய்ன் ஆயிருக்கு அதனால ஸ்வெல்லிங் வந்திருக்கு .... த்ரீ டேஸ் டேப்லெட்ஸ் எடுத்தா சரியா போயிடும்னு சொன்னாரு ..."
தமக்கை தான் போட்ட நாடகத்தை அறிந்து கொண்டு விட்டாள், என்றதுமே ப்ரீத்தியின் உடலும் குரலும் இறுகி போனது.
இந்த உலகில் மிக மோசமாக கோபப்படும் மனிதர்களோடு கூட வாழ்ந்து விடலாம் ஆனால் 'மேனுபுலேட்டர்ஸ் '(Manipulators) என்னும் திரித்துப் பேசுபவர்களோடும் 'நார்சிசிஸ்டிக்'
( Narcissistic) என்னும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் சுயநலக்காரர்களோடும் வாழவே முடியாது.
முதலில் இம்மாதிரியானவர்களிடம் அவர்களது குறைகளை எடுத்துச் சொன்னால் அவர்களுக்கு பிடிக்காது ... ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் ...
தன் சுயநலத்திற்காக, எதையும் , எப்படியும் மாற்றிப் பேசுவார்கள் .... எவர் மீதும், எந்தக் கொள்கையின் மீதும் பற்றோ , பிடிப்போ அவர்களுக்கு கிடையாது .... எந்நேரமும் தன்னைத் பற்றிய சிந்தனையில் மட்டுமே இருப்பவர்கள் ...
சுகமாக, தன் மனம் போன போக்கில் வாழ்வதற்காக, கிஞ்சித்தும் கவலைப்படாமல் எவ்வித அநீதிகளையும் அரங்கேற்றுவதில் வல்லவர்கள்...
சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் மாற்றிப் பேசும் திறன் படைத்தவர்கள் ....
எங்கும், எந்நிலையிலும் தனக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்கள் ...
அதாவது சாவு வீடு என்றால், தான் தான் பிணமாக இருக்க வேண்டும் ... திருமண வீடு என்றால், தான் தான் மணமக்களாக இருக்க வேண்டும் ... என்ற எழுதப்படாத விதியை அடுத்தவர்கள் அறியா வண்ணம் அம்சமாக கையாளுவார்கள் ...
இப்படி மேற்சொன்ன குணங்களில் ஏதேனும் ஒரு குணம் நிச்சயம் எல்லாரிடமும், ஏதோ ஒரு வகையில் இருந்தே தீரும் ... குறை இல்லாத மனிதன் இவ்வுலகில் ஏது ...
ஆனால் கூறப்பட்டுள்ள அனைத்து குணங்களும் ஒரே நபரிடம் குடியிருக்குமேயானால் அவருடன் குடும்பம் நடத்துவது, கூடி வாழ்வதென்பதெல்லாம் இயலாத காரியம்.
அப்படிப்பட்ட ஒரு நபர் தான் தன் தங்கை என்பதை சமீப காலமாக புரிந்து கொண்ட பிரபா, முற்றிலும் பொறுமையை இழந்துவிட்டு நடந்த உண்மையை உடைத்துப் பேச, அதை கண நேரத்தில் புரிந்து கொண்ட ப்ரீத்தி,
" சோ, எனக்கு என்ன ஆனாலும் உனக்கு கவலை இல்ல.... உனக்கு உன் கொழுந்தன் கல்யாணம் தான் முக்கியம்... இல்லையா ....."
" உனக்கு தான் ஒன்னுமே ஆகலையே ப்ரீத்தி ..." என்றாள் பிரபா பொறுமை இழந்து.
"இனிமே ஏதாவது ஆச்சுன்னா .....?" ப்ரீத்தி வினையமாக தொக்கி நிறுத்த, கேட்டுக் கொண்டிருந்த பிரபாவின் உடலில் மெல்லிய மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்வலைகள் தோன்ற, உடனே சுதாரித்தவள்
"என்ன....? மிரட்டி பாக்குறியா ... உன் சூசைட் டிராமாக்கெல்லாம் எனக்கு நேரமில்ல... " என்றாள் வெடிக்கென்று, கெஞ்சினால் மிஞ்சுகிறாள் மிஞ்சினால் கெஞ்சுகிறாள் என்பதை புரிந்து கொண்டு.
மிருகங்கள் என்றுமே தனக்கு இணையான விலங்கினை வேட்டையாடாது. தன்னை விட வலிமையில் குறைந்த, பலகீனமான விலங்கிடம் தான் தன் வீர தீரத்தை நிரூபிக்கும் இதனை ஆங்கிலத்தில் 'அனிமல் இன்ஸ்டிங்ட்' (Animal instinct) என்பார்கள்.
ப்ரீத்தியும் அதே மாதிரியான ஒரு ரகம் தான்.
காதல் என்ற பெயரில் கண்டமேனிக்கு அவளோடு சுற்றிவிட்டு கழற்றி விட்டுச் சென்ற பிரபுவை பழி தீர்க்க திராணி இல்லாமல், அவளுக்கு அறிவுரை வழங்கிய ஆசிரியரை பழி வாங்கினாள், இப்போது சத்யனை நெருங்க கூட முடியாத நிலையில் , தமக்கையை பழிவாங்க துடிக்கிறாள்.
" இன்னைக்கு மதியம் வரைக்கும் தான் டைம் ... நீ கெளம்பி வரலைன்னா என்னை உயிரோடவே பார்க்க முடியாது ..." என குரலில்கடினத்தைக் கூட்டி இம்முறை ப்ரீத்தி பகிரங்கமாகவே மிரட்ட
"உனக்கு ஆயுசு அவ்ளோ தான்னா, யாரால என்ன பண்ண முடியும் .... எனிவே குட் பை ஃபார் யுவர் ஜெர்னி ..." என்றாள் பிரபாவும் அசராமல்.
தமக்கை எதற்கும் மசியவில்லை,என்று புரிந்ததும்,
"சும்மா சாக மாட்டேன் .... நீ டார்ச்சர் பண்ணதால தான் இந்த முடிவு எடுத்தேன்னு உன் பேரை எழுதி வச்சுட்டு தான் சாவேன் ..."
என்றாள் இளையவள் குரலில் குரூரத்தைக் காட்டி.
உரையாடல் பயணித்த திசையை வைத்து, ஏற்கனவே இதனை எதிர்பார்த்திருந்தவள் ,
" ஒரு விஷயத்தை மறந்துட்டு பேசற ப்ரீத்தி ... பிரபுவோட பிரேக்கப் இஷ்யூல, உனக்கு அட்வைஸ் பண்ணின டீச்சர் மேல பழிய போட்டு லெட்டர் எழுதி வச்சுட்டு கைய அறுத்துக்கிட்டயே ... அது கூட போலீஸ் கேஸ் ஆச்சே... ஞாபகம் இருக்கா ... அந்த கேஸ் இன்னும் போலீஸ் ஸ்டேஷன் ரெக்கார்ட்ல இருக்கு ... நீ எழுதின லெட்டரும் அங்க சேஃபா இருக்கு ....
அதைவிட ஒரு முக்கியமான விஷயம் ... சூசைட் அட்டம்ட் பண்றது சட்டப்படி கிரைம், அந்த கேஸ்ல இருந்து உன்னை வெளியே கொண்டு வர, நம்ம வக்கீல், நீ மன அழுத்தத்துக்கு ரொம்ப நாளா மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருக்கிறதா, டாக்டர் சர்டிபிகேட் ரெடி பண்ணி கொடுத்து தான் உன்னை வெளியவே கொண்டு வந்தாரு...
அந்த சர்டிபிகேட்டும் போலீஸ் ஸ்டேஷன்ல சேஃபா இருக்கு... ஒருவேளை நீ என் பேரை எழுதி வச்சிட்டு செத்துப் போனேன்னு வை நீ எழுதின லெட்டர், டாக்டர் சர்டிபிகேட் இத ரெண்டையும் வச்சு, உனக்கு சைக்கலாஜிக்கல் டிஸ்டர்பன்ஸஸ் அதிகமா இருக்குனு சொல்லி கேசை உடைச்சு நான் ரொம்ப ஈஸியா வெளிய வந்துடுவேன் ...
ஒரு காலத்துல மரண வாக்குமூலம்னா, எந்த விசாரணையும் இல்லாம கோர்ட் அப்படியே நம்பிச்சு ... ஆனா இப்ப, உன்னை மாதிரி பல
குள்ளநரிங்க, தான் செத்தாலும் பரவாயில்ல அடுத்தவன் வாழ கூடாதுன்னு, வேணுமின்னே அடுத்தவங்கள பழிவாங்க டெத்து நோட் எழுதி வச்சுட்டு சூசைட் பண்ணிக்கிறதால தான் மரண வாக்குமூலத்தை கூட அப்படியே நம்பாம கோர்ட் மறுபரிசீலனைக்கு ஆர்டர் போடுது ...
எனிவே ...ஆல் தி பெஸ்ட் ...
கயிறு, விஷம், தண்டவாளத்துல தலைய கொடுக்கிறதுன்னு ... நிறைய ஆப்ஷன்ஸ் இருக்குது... எது பெட்டர் ஆப்ஷன்னு யோசிச்சு செய் ...
இன்னும் ஒன்னுத்தையும் சொல்லிடறேன் ....
நாம ரெண்டு பேரும் இப்ப பேசிகிட்டு இருக்கிறத நான் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் ...
நாங்க ஊருக்கு வரும் போது ஒரு வேளை நீ உயிரோட இருந்தா, இந்த ஆடியோவை அப்பா கிட்ட போட்டு காட்டி, உன்னை வீட்டை விட்டு துரத்த போறேன் ...
உன்ன மாதிரியான ஆளுங்க வீட்டுக்கு மட்டுமில்ல நாட்டுக்கும் கேடு ...
இது எல்லாத்தையும் விட, நீ செத்துப் போனா, சிந்தாம சிதறாம மொத்த ப்ராப்பர்ட்டியும் எனக்கு வந்து சேர்ந்திடும் .... நான் சந்தோஷமா
என் புருஷன் குழந்தைகளோட இன்னும் ஆடம்பரமான வாழ்க்கையை நிம்மதியா வாழ்வேன்.....
அதனால நீ சூசைட் பண்ற ஐடியால இருந்து பின் வாங்காம ப்ரொசீட் பண்ணு ... ஒன்ஸ் அகைன்... ஆல் த பெஸ்ட் ..."
படபடவென்று அடை மழை போல் , தன் ஆழ்மனதின் கோபத்தை கொட்டிவிட்டு, ப்ரீத்தியின் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தவளின் விழிகளில் நீர் துளிகள் நிரம்பி வழிந்தன.
' வெளியே சொன்னால் வெட்கம்... நினைக்க நினைக்க துக்கம்' என்பது போல் தன் கணவனை நெருங்க முடியாத ஒரே காரணத்தால், தன்னை படாத பாடுபடுத்தும் தங்கையின் தரம் கெட்ட செயல்களை எண்ணி கலங்கினாள்.
தங்கையால் அவளது திருமண வாழ்வில் கடந்த பத்து ஆண்டுகளாக அடித்த புயல்கள் அதிகம் என்றாலும் , கெட்டதிலும் நல்லது என்பது போல், அவளது கணவனின் தரமான குணத்தை அறிந்து கொள்ள இம்மாதிரியான நிகழ்வுகள் பயன்பட்டதை எண்ணி ஒரு கணம் நிம்மதி உற்றாள்.
உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் ...
யாருக்கெல்லாம் விசுவாசமான நேர்மையான இணை அமையப்பெறுகிறதோ அவர்கள் தான் ...
அந்த வகையில், தான் அதிர்ஷ்டசாலி என்ற நேர்மறை சிந்தனை, அவள் மனம் எங்கும் வியாபிக்க, மற்றதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மகிழ்ச்சியுடன் விருந்துண்ண புறப்பட்டாள் .
முதன்முறையாக அருகருகே உரிமையோடு அமர்ந்து ஹாசியம் பேசியபடி , மிகுந்த மன நிறைவோடு விருந்துண்டனர் மணமக்களான வீராவும் ஸ்ரீப்ரியாவும் .
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கேலி, கிண்டல் பேச்சுகள் வேறு அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க, விருந்துண்ணும் வைபவம் இனிதே நிறைவுற்றது.
"ஒன்ஸ் அகைன் கங்கிராஜுலேஷன்ஸ்... ஹாப்பி மேரீட் லைஃப் ..." என மணமக்களை மீண்டும் வாழ்த்திய ராம்சரண்,
"ஹனிமூன்க்கு எங்க போறதா இருக்க ..." என்றான் வீராவிடம் கிசுகிசுப்பாக.
"இப்போதைக்கு எதுவும் பிளான் பண்ணல டா ..." என்ற பதிலிலிருந்தே அதற்கான காரணத்தை புரிந்து கொண்டவன்
"சரி, ஊட்டிக்காவது ஒரு நாலு நாளைக்கு வந்துட்டு போ .... " என்றான் ராம்சரண் உரிமையோடு.
"ஷ்யூர் ..." என்றவன் லட்சுமியை பார்த்து,
"உடம்பு பாத்துக்கம்மா..." என்றான் அக்கறையாக.
அவள் வழக்கம் போல் மெலிதாக தலையசைக்க, ராம்சரணின் குடும்பம் இனிதே விடைபெற்றது .
அவனைத் தொடர்ந்து ருக்மணி குடும்பம், ஸ்ரீனி, மஹிக்கா, சிவா என ஒருவர் பின் ஒருவராக மீண்டும் ஒருமுறை மணமக்களை வாழ்த்தி விட்டு விடை பெற்றனர்.
அப்போது அங்கு வந்த பொன்னம்பலம், வீராவிடம்
" உன் மாமாவும் இப்பவே கிளம்பறாராம்..." என்றார் சூசகமாக.
" ஏம்ப்பா..."
" உன் பாட்டி சுந்தராம்பாள, கிராமத்துல இருந்து கூட்டிகிட்டு வரணும் இல்ல அதுக்கு தான் ..." என்றதும் அவன் துணுக்குற்று,
" அய்யய்யோ பாட்டி ..." என்றான் ஒரு வித பயத்தோடு.
" ஏன் பாட்டிக்கு என்ன ஆச்சு... உடம்பு சரியில்லையா ..." ஸ்ரீப்ரியா ஆதங்கத்தோடு விசாரிக்க,
" பாட்டி ஸ்ட்ராங் பாடி தான் ... பாட்டியோட பேசுற நாம தான் பாடி ஆயிட கூடாதுன்னு பண்ணாரி அம்மனுக்கு நேந்துக்கணும் ..."
" ஏன் ..."
"அவங்கள மீட் பண்ணும் போது உனக்கே புரியும் ..." என்றான் மென் புன்னகை பூத்து.
களைத்து போன குழந்தைகளை உறங்க வைக்க பிரபா அறைக்கு அழைத்துக் செல்ல, அவளைப் பின் தொடர்ந்தான் சத்யன்.
கடந்த இரண்டு மணி நேரமாக இருவருமே, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் மௌன விரதத்தை தத்தெடுத்திருந்த நிலையில்,
" உன் தங்கச்சி கிட்ட இருந்து போன் வந்ததா ....? நீ அவகிட்ட ஏதாவது சொன்னையா..???. ..." என்றான் அறைக்குள் நுழைந்த மறு நொடி.
" ஆமா சுரக்காய்க்கு உப்பு இல்லன்னு சொன்னேன் ..."
" அடியேய் கோவத்தை கெளறாத... என்ன நடந்ததுனு உண்மையை சொல்லு..." என்றவனை முறைத்து பார்த்துக்கொண்டே, குழந்தைகளை படுக்கையறையில் பக்குவமாக படுக்க வைத்து விட்டு, அறை கதவை மூடிக்கொண்டு வெளியே வந்தவள்,
" உங்க தம்பி கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சு இல்ல .... மத்ததை பத்தி உங்களுக்கு என்ன கவலை .."
"பிரபா, நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் .... " என்றவனின் முகம் கோபத்தில் சிவந்ததுமே, உள்ளுக்குள்ளே லேசாக உதறல் எடுத்தது பிரபாவிற்கு.
அவள் ப்ரீத்தியிடம் பேசியதை அப்படியே பகிர்ந்தால், நிச்சயம் அறைத்து விடுவான்.
அவனுக்கு கோபம் வந்து விட்டால், இடம் பொருள் ஏவல் என எதையுமே பார்க்க மாட்டான், கை நீட்டி விடுவான் என்பதால்,
" அக்கா, உனக்கு என்னை விட, உன் கொழுந்தன் கல்யாணம் தான் முக்கியமா போச்சானு சொல்லி அழுதா .... நாளைக்கு வந்துடுவோம் ஒழுங்கா வீட்ல இருன்னு சொல்லி வச்சிட்டேன் ..." என்றாள் முழு பூசணியை சோற்றில் மறைத்து.
அவனிடம் முதன்முறையாக பொய் உரைப்பதால், அவள் கண்களில் அது அப்பட்டமாய் தெரிய,
"நெஜமா அவ அப்படித்தான் பேசினாளா..." என்றான் நம்பாமல் .
" ஆமா ..." என அவள் தலை குனிந்து கொள்ள,
" நீ சொன்னதை இப்போதைக்கு நம்பறேன் ... ஊருக்கு போனதும் வேற ஏதாவது பிரச்சனைனு தெரிய வந்துச்சு ... நீ தொலைஞ்ச ... " என்றவன் ஒற்றை காலை மடக்கி, பட்டு வேட்டியின் நுனியை பற்றி எடுத்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
திருமணத்திற்கு பின்பான அனைத்து சடங்குகளும் ஒன்றன்பின் ஒன்றாக அருமையாக நடந்தேறியதும் ஸ்ரீப்ரியாவை சுற்றிக்கொண்டு அவர்கள் வீட்டு உறவு பெண்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அலுவலக தலைமை மற்றும் உடன் பணிபுரிவோரிடமிருந்து வந்த வாழ்த்துச் செய்திகளை தன் அலைபேசியில் பார்த்து பதில் அளித்துக் கொண்டிருந்தான் வீரா.
அவனை நெருங்கி,
" ப்ரியாவை கூப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்க சொல்லு... நீயும் போய் கொஞ்ச நேரம் தூங்கு ..." என்றார் மெல்லிய குரலில் வீராவின் தாய் அகல்யா.
" ஏம்மா ..."
" என்னப்பா விவரம் இல்லாம இருக்க .... இன்னைக்கு அவங்க வீட்டில உங்களுக்கு சாந்தி முகூர்த்தமாம்..."
"அப்ப இன்னைக்கு நாம ஊருக்கு போகலையா ..." என்றான் தீவிரமாய் பேச்சை இடைவெட்டி.
" இல்லப்பா, நாளைக்கு அவங்க குல தெய்வ கோவில்ல பூஜை முடிஞ்சதும் தான் ஊருக்கு கிளம்பணும்னு இப்பதான் சம்பந்தி அம்மா சொல்லிட்டு போறாங்க ..."
ஒரு கணம் உறைந்து நின்றவன்,
" இல்லம்மா, இன்னைக்கு சாயங்காலமே நாம ஊருக்கு கிளம்பறோம் ... ஆக வேண்டியதை பாருங்க ..."
"தம்பி, ஏம்பா இப்படி அவசரப்படற ... அவங்க குலதெய்வ கோவில்ல ஏதோ பூஜைன்னு சொன்னாங்களே ..."
"இன்னைக்கே அந்த பூஜையை முடிச்சுட்டு, நாம இன்னைக்கு ஈவினிங்கே ஊருக்கு போறோம் ... நான் போய் என் மாமனார் கிட்ட பேசிட்டு வரேன் ..." என பரபரத்துவிட்டு , ஸ்ரீப்ரியாவை சூழ்ந்திருந்த உறவுக்கார பெண்களை எல்லாம் பார்த்து நட்பாக புன்னகைத்தபடி அந்தக் கூட்டத்தில் நுழைந்து,
" ஸ்ரீ, ஒரு நிமிஷம் என்னோட வா ..."
என்றவன், அவள் கைப்பற்றி நடக்காத குறையாய், இணைந்து நடந்தபடி போய் நின்ற இடம் , அவளது பெற்றோரின் அறை.
யாருடனோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த அம்மையப்பன், வீரா தன் மகளோடு வருவதைப் பார்த்ததும், பிறகு பேசுவதாக கூறி அழைப்பை துண்டித்து விட்டு,
" வாங்க மாப்ள ... வாங்க .... உட்காருங்க ..." என்றார் மரியாதையோடு.
வீரா அங்கிருந்த சோபாவில் ஸ்ரீப்ரியாவோடு அமர்ந்ததும்,
" நாங்க இன்னைக்கு ஈவினிங் 5 ஓ கிளாக் கோயம்புத்தூர்க்கு கிளம்பலாம்னு பிளான் பண்ணி இருக்கோம் .... அதுக்கு முன்னாடி நீங்க உங்க குலதெய்வக் கோவில்ல பூஜையை ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும் ..." என்றான் இயல்பாக .
கேட்டுக் கொண்டிருந்த அம்மையப்பனுள் ஏதோ இனம் புரியாத ஆற்றாமை உணர்வு உதயமாக , லேசான இறுகிப்போன முகத்துடன் பதில் பேசாமல் மகள் மற்றும் மாப்பிள்ளையை அமைதியாக உற்று நோக்கினார்.
அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீப்ரியாவிற்கு கூட அவன் கூறிய செய்தி பகீர் என்று தான் இருந்தது.
தன் தந்தை போட்ட திட்டத்தை இதுவரையில் யாருமே மாற்றி அமைத்ததில்லை என்கின்ற நிலையில் , கணவன் திடீரென்று வேறொரு திட்டத்துடன் வந்தது அவளுக்கு சிறு அச்சத்தை ஏற்படுத்த, என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினாள்.
அவளுக்கு புத்தி தெரிந்ததிலிருந்து,சற்று முன்பு வரை அவளது வாழ்க்கையில் அம்மையப்பன் வைத்தது தான் சட்டம்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற சொல்லாடல் அவளுக்கு 100% பொருந்தும் ...
அப்படி தந்தையின் கண்ணசைவிற்கு கூட கருத்து கூறாமல் வளர்ந்திருந்தவளை , சூழல் இக்கட்டில் நிறுத்தி இருக்க, அம்மையப்பனும் பதில் பேசாமல் அமைதி காக்க, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தால் அந்த மௌனத்தை உடைத்த வீரா,
"அடுத்த மாசம் நாங்க ரெண்டு பேரும் ஒரு வாரம் தங்கற மாதிரி வரோம்.... அப்ப எங்களோட மேரேஜை ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கலாம் ... என் கூட வெளிநாட்டுக்கு ட்ராவல் பண்ணனும்னா, பாஸ்போர்ட்ல இவ பேரை மாத்தணும்... அதுக்காக அந்த டாக்குமெண்ட் தேவைப்படுது... " என முடித்தான் அமர்த்தலாக.
இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாலும், ஏனோ ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறியது போல் தோன்றும் உணர்வை மட்டும் அம்மையப்பனால் தவிர்க்க முடியவில்லை.
மகளின் வாழ்வில், முடிவெடுக்கும் உரிமையிலிருந்து, அவளது பெயரின் பின்னே ஒட்டிக் கொண்டிருந்த தன் பெயர் வரை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மடைமாற்றம் செய்யப்பட போவது உவப்பாக இல்லை என்றாலும், நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற உண்மை உரைக்க,
" சரிங்க மாப்ள ..." என்றார் குரலை செருமிக்கொண்டு.
அனைத்தையும் காதில் வாங்கிய படி பாத்திரம் பண்டங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சுசீலாவிற்கு வீரா எடுத்திருந்த முடிவுக்கு பின்னால் இருக்கும் காரணம் புலப்பட,
" அப்படியே செய்துடலாம் மாப்ள ..." என்றார் முதன்முறையாக தன் கணவனின் முன்பு தன் கருத்தை பதிவு செய்து.
" தேங்க்ஸ் ...." என பெரியவர்கள் இருவரையும் ஒரு சேர பார்த்து மொழிந்துவிட்டு ,
" ஸ்ரீ, நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, கோவிலுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி மெசேஜ் பண்ணு ..." என மெல்லிய புன்னகையோடு அங்கிருந்து விடை பெற்றான்.
அதற்கு மேல் அங்கு அமர்ந்திராமல், படுக்கை அறைக்குச் சென்று ஸ்ரீ முடங்க, கணவனின் முகத்தில் காணப்பட்ட கவலை ரேகைகளை கண்டு,
" மாப்பிள்ள ஏன் அப்படி ஒரு முடிவெடுத்தாருன்னு தானே யோசிக்கிறீக .... காரணம் இல்லாம அவரு அப்படி ஒரு முடிவு எடுக்கல ..."
" என்ன பெரிய காரணம் இருக்கப் போவுது ... நம்ப சமுதாயத்துல பொண்ணு வீட்ல தானே சாந்தி முகூர்த்தம் வைக்கிற பழக்கம் ... அந்த மொறையை ஏன் மாத்தணும் ..."
" அத்தை போய் முழுசா ஒரு மாசம் கூட ஆவல... நம்ம அம்மு, அடிக்கடி தனியா இருக்க சொல்ல, அவிங்கள நினைச்சு அழுதுகினு தான் இருக்கு ... இந்த மாறி சமயத்துல, நம்ம வூட்டுல எந்த ரூம்ல சடங்குக்கு ஏற்பாடு செய்தாலும், அது சரி வராது ... எல்லா ரூம்லயும் அவிங்க உலாத்தி இருக்காக ... அந்த நெனைப்பு அவ மனசுல இருக்கும்னு புரிஞ்சுகிட்டு தான் உடனே ஊருக்கு கிளம்பனும்னு சொல்றாரு ..."
மனையாளின் புரிதலை மனம் மெச்சினாலும் , வழக்கம் போல் தலை தூக்கும் தன்னகங்காரம் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்க,
" எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு... கோயில் பூஜைக்கு சாமான் செட் எல்லாம் ரெடி பண்ணி வை .... நான் வந்ததும் உடனே கோவிலுக்கு கிளம்பணும் ..." மனையாளின் முகம் பாராமல் மொழிந்து விட்டு இடத்தை காலி செய்தார் அம்மையப்பன்.
மதியம் மூன்று மணி அளவில், குலதெய்வ பூஜை அவர்களது சமுதாயத்து குலதெய்வமான வேம்புலி அம்மனுக்கு பட்டுப் புடவை சாற்றி , மணமக்களின் பெயரில் அர்ச்சனை செய்து மணமகனுக்கு பரிவட்டம் கட்டி, அம்மன் பாதத்தில் வைத்து வணங்கிய கண்ணாடி வளையல்களை மணமகளுக்கு பூட்டி, திருஷ்டி கழித்து அருமையாக குலதெய்வ கோவிலில் நடந்தேறியது.
ஒன்றன்பின் ஒன்றாக சடங்குகள், சம்பிரதாயங்கள், என அனைத்தும் அரங்கேறியதும், சுசீலா அன்பாக பேசி , ஓரிரு வார்த்தைகளில் மகளுக்கு அறிவுரை வழங்க, அம்மையப்பன் லேசான இறுகிய முகத்தோடு,
கமரியக் குரலில், " நல்லா இரும்மா..." என பிரியா விடை கொடுத்தார்.
கோபால் கலங்கிய விழிகளோடு துக்கத்தை மறைத்துக் கொண்டு தமக்கையிடம் ஏதேதோ பேச, அவன் பேச்சிலிருந்தே அவன் பயத்தை புரிந்து கொண்ட வீரா,
" மச்சான் .... உன் அக்காவை நான் ரொம்ப நல்லா பாத்துப்பேன் ... நீ என்னை 100% நம்பலாம் ... அதே மாதிரி உன் அக்காவும் என்னை கண் கலங்காம பாத்துக்கணும்னு கொஞ்சம் அவளுக்கு அட்வைஸ் பண்ணு ..." என்று கூறி நிலைமையை சுமூகமாக்குவதை விட சந்தோஷமாக மாற்றினான்.
பிறகு பயணத்திற்கான ஏற்பாடுகள், தொடங்கின.
ஸ்ரீ-ராமம் வருவார்கள்...
Wow very nice akka.
ReplyDeleteThanks Ma
DeleteAwesome as always 💕💕💕💕
ReplyDeleteThanks ma
DeleteNice
ReplyDeleteThanks Ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteThankS ma
Deleteரொம்ப ரொம்ப அழகான எழுத்துக்கள்.. யதார்த்தம் ...உங்களை போல கதை எழுத வேறு யாரால் முடியும் அக்கா..உங்கள் எல்லா கதைகளும் வித்தியாசமானவை. வாழ்த்துக்கள்
ReplyDeleteMa'am, next chapter please??
ReplyDelete💓💓💓💓💓
ReplyDeleteThankS Ma
DeleteMa'am, What happened? Why next episode not uploaded?
ReplyDeleteSorry for inconvenience causef... we have travelled to tirumala For darshan...day after tomorrow onwards u will get proper updates....
DeleteSuper akka
ReplyDeletethanks ma
Delete