அத்தியாயம் 57
காரை கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு, வெண்ணிற நிறத்தில் அரக்கு பார்டர் கொண்ட மைசூர் க்ரேப் சில்க் புடவையின் முந்தானை நுனியை வலது கையில் பற்றிய படி வேக நடையிட்டு திருமண மண்டபத்திற்குள் நுழைந்தாள் மஹிக்கா.
திருமண கூடத்தை அடைந்தவளுக்கு , திருமண மேடையை சுற்றி குழுமியிருந்த மக்கள் தலைகளை பார்த்ததுமே, திருமணத்தின் முக்கியச் சடங்கான மாங்கல்ய தாரண நிகழ்வு சற்று முன்பு தான் நடந்தேறி உள்ளது என்பதை புரிந்து கொண்டாள்.
மணமேடையில் நின்று கொண்டிருந்த மணமக்களை விட்டுவிட்டு அவளது கண்கள் ராம் சரணை, அந்த கூட்டத்தில் தேடத் தொடங்கின.
இரண்டாவது வரிசையில் அவன் நின்று கொண்டிருப்பது தெரிய, மனம் மகிழ்ந்தவள் அப்பொழுது தான் அவனது இடது புறத்தில் ஸ்ரீனியும் , வலது புறத்தில் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.
அவள் திருமண வரவேற்பிற்கு வராமல், முகூர்த்தத்திற்கு வந்ததற்கு முக்கிய காரணம், 95% அலுவலக நண்பர்கள் வரவேற்பில் கலந்து கொண்டு விட்டு சென்றிருப்பார்கள், அதோடு ராம் சரணும் , வீராவும் உற்ற நண்பர்கள் என்பதால், நிச்சயம் ராம்சரண் திருமணம் முடியும் வரை உடன் இருப்பான், மற்ற அலுவலக நண்பர்களின் தலையீடுகள் இல்லாமல் அவனுடன் இனிமையாக பொழுதைக் கழிக்கலாம் என்பதை எல்லாம் அனுமானித்து தான், அதிகாலையில் கிளம்பி அவசர அவசரமாக வந்து சேர்ந்தாள்.
ஆனால் ராம்சரணுக்கு அருகில் ஸ்ரீனி நின்று கொண்டிருந்து முதல் அடி என்றால், ராம்சரணின் வலது புறத்தில் அவன் மனைவி நின்று கொண்டிருந்தது மரண அடியாக மஹிக்காவுக்கு விழ , ஏற்ற இறக்கத்தோடு பேசிப் பார்த்துவிட்டு வந்த நாடகத்தை, நடத்த முடியாமல் தடுமாறி போனாள்.
அறிமுகப்படுத்தாமலேயே, ராம் சரணுக்கு அருகில் நின்று கொண்டிருப்பது அவனது மனையாள் என்பதை அந்தப் பெண்ணின் பெருத்த மேடிட்ட வயிறும் , குற்றம் குறை சொல்ல முடியாத படி சர்வ லட்சணமும் நிறைந்திருந்த அவளது தோற்றத்தையும் வைத்துக் கண்டு கொண்டாள்.
என் லேடி லவ்வ போட்டோலயாவது பாத்திருக்கியா .... ரொம்ப அழகா இருப்பா ... இப்ப ட்வின்ஸ் கன்சீவ் ஆயிருக்கா ....
என்றவனது வார்த்தைகள் தான், இந்தக் கணம் வரை அவள் காதுக்குள்ளேயே ஒலித்துக்கொண்டிருக்கிறதே...
அப்படி லட்சுமியை கண்டு கொண்டதோடு மட்டுமல்லாமல் காழ்ப்புணர்ச்சியும் காட்டாற்று வெள்ளமாய் பெருக்கெடுக்க , ஒரு கணம் கூட தாமதிக்காமல், வேகமாக ஸ்ரீனியை நோக்கி சென்றவள்,
" ஹாய் ஸ்ரீனி ... ஹவ் ஆர் யூ " என்றாள் பார்வையை ராம்சரணின் மீது பதித்து .
" ஃபைன் மஹிக்கா... ஹவ் ஆர் யூ .." என்றான் ஸ்ரீனி இயல்பாக.
அவளைக் கண்டதும் ராம்சரணின் கோபம் விண்ணை முட்ட, முன் கதை சுருக்கம் அறியாத ஸ்ரீனியோ , அவளது விசாரிப்புக்கு இன்முகத்தோடு பதிலளித்துக் கொண்டிருக்க, கணவனின் முகத்தை பார்க்காமல், அவனை நெருங்கி வந்து நின்ற மஹிக்காவின் முகத்தை பார்த்த ஸ்ரீலட்சுமியின் ரத்த அழுத்தம் ராக்கெட் வேகம் போல் கூட, கோபமும் அழுகையும் மாறி மாறி பொங்க, அதனை மறைக்க முயன்று தலை குனிந்து கொண்டாள் பேதை.
ராம்சரணின் நிறத்திற்கு ஒப்பான நிறத்தில் லட்சணமாக இருந்தாள் மஹிக்கா.
பூசிய உடல்வாகு ....
உயர்பதவி கொடுத்த மிடுக்கும் தோரணையும் உபரியாக அவளது அழகைக் கூட்டி காட்ட, தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்து தடுமாறிப் போனாள் லட்சுமி .
"ஹாய் ராம்சரண் ..." என மஹிக்கா கொஞ்சலாக பேச்சை தொடங்க
" ஹாய் ...." என வேண்டா வெறுப்பாக அவன் மொழிய,
" நீங்க இல்லாம ஆபீஸ்ல உங்க டீமை பார்க்கவே போர் அடிக்குது ...." எனத் தொடங்கி அவள் சரளமாக ஆங்கிலத்திலும், ஆங்காங்கே போனால் போகட்டும் என்று சில வார்த்தைகள் தமிழிலும் பேசியபடி அவனையே உருக்கி குடிப்பது போலான பார்வையோடு , வெகு நெருக்கமாக நிற்க, அதனை பார்க்க பார்க்க, லட்சுமிக்கு அழுகை பீறிட , அப்போது மணமேடையில் இருந்தபடி ரங்கசாமி ராம் சரணை அழைக்க, மஹிக்காவின் பேச்சிலிருந்து தப்பித்துக் கொள்ளும் எண்ணத்தில் மனையாளின் முக மாற்றத்தை கவனிக்காமல்,
"வா ஸ்ரீனி, என் அப்பா கூப்பிடறாரு... ஸ்டேஜ்க்கு போய் வீராவை பார்த்து கங்கிராஜுலேட் பண்ணிட்டு வந்துடலாம் ..." என்றதும் ஸ்ரீனி மணமேடையை நோக்கி முன்னேற ,
"வா ..." என்று மனையாளின் முகத்தை பார்க்காமல் , பொதுப்படையாக அழைப்பு விடுத்து விட்டு, நாற்காலிகளை பிடித்து நடை பயின்று கொண்டிருந்த குழந்தையை அள்ளிக் கொண்டு மணமேடையை நோக்கி நடை போட்டான்.
அவன் வா என்று பொதுப்படையாக அழைத்ததை அடிப்படையாக வைத்து, அவனைப் பின் தொடர்ந்து மஹிக்கா செல்ல , அதற்கு மேல் அங்கு நிற்க மாட்டாமல், தாயிடம் சென்று சாவியை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டாள் லட்சுமி.
ஒவ்வொரு குடும்பமாக வீரா தம்பதிக்கு திருமண வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்ப, ராம்சரணின் முறை வரும் பொழுது , அவனை உற்றுப் பார்த்து
"லட்சுமி எங்கடா ..." என வீரா சன்னமாக அதே சமயத்தில் அழுத்தமாக கேள்வி எழுப்பிய போது தான், துணுக்குற்று ராம்சரண் திரும்பிப் பார்க்க, அவனைப் பின் தொடர்ந்தது லட்சுமி அல்ல, மஹிக்கா என்று தெரிய வர கொதித்துப் போய் விட்டான்.
உடனே சுதாரித்துக் கொண்டு
" லட்சுமி.... பின்னாடியே வந்துகிட்டு இருக்கா.... " என்றவன் லேசாக தயங்கிப் பிறகு கங்கிராஜுலேஷன்ஸ் .." என பேச்சை மாற்ற,
" முதல்ல லட்சுமியோட வா... அப்புறம் கங்கிராஜுலேட் பண்ணலாம் ...." என வெடுக்கென்று வீரா மொழிய , அவன் கூறியதைக் கேட்டு மஹிக்காவின் முகம் விழுந்து விட்டது .
அதற்கு மேல் சற்றும் தாமதிக்காமல், தந்தையிடம் ஏதோ கூறி சமாளித்து விட்டு, குழந்தையோடு மணமேடையை விட்டு இறங்கியவனின் பார்வையில் ராம லக்ஷ்மி விழ,
" குட்டி, உன் அக்கா எங்க ..." என்றான் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் பரபரப்பை மறைத்து.
"அம்மா கிட்ட கீ வாங்கிக்கிட்டு இப்பதான் ரூம்க்கு போனா..." என்றவள் குழந்தையை பார்த்து வா என்பது போல் அழைக்க, உடனே குழந்தை அவளிடம் தாவிக்கொள்ள குழந்தையை கொடுத்துவிட்டு, அறை நோக்கி நடை போட்டான் .
"சம்சாரம் இல்லாம சபை ஏற முடியாதுன்னு சரியாத்தான் சொல்லி இருக்காங்க .... உன் மனசுல என்ன தான் டி நினைச்சுகிட்டு இருக்க... நான் வான்னு கூப்ட்டும், வராம நீ பாட்டுக்கு கிளம்பி ரூமுக்கு போனா என்ன அர்த்தம் ... ரொம்ப தான் பண்ற ... "
அவளாக அவனிடம் வர வேண்டும் ,வேண்டாம் என்று உதறி விட்டுச் சென்ற உறவை, சபை அறிய அவளே பறைசாற்ற வேண்டும்.... என்றெல்லாம் எண்ணி காய் நகர்த்திக் கொண்டிருந்தவனுக்கு, எதார்த்தம் எதிர்மறையாய் வேலை செய்யத் தொடங்க, பொறுத்துக் கொள்ள முடியாமல் வாய் விட்டே சன்னமாக புலம்பியபடி, ஒருகளித்திருந்த கதவை திறந்து கொண்டு நுழைந்தவன் அவள் வாஷ்பேஷனில் வாய் கொப்பளித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், வாந்தி எடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு ஒரு கணம் உறைந்து நின்று விட்டான்.
அவன் கொண்டிருந்த கோபம் எல்லாம் ஊசி குத்திய பலூனின் காற்றாய் காணாமல் போக, கதவை ஒருகளித்துவிட்டு அவளை நோக்கி நடை போட்டான்.
மஹிக்காவின் பேச்சும் , அவள் தன் கணவனோடு ஒட்டி நின்றிருந்த பாங்கையும் பார்த்து , தொண்டை கனத்து அறைக்கு வந்தவளுக்கு, விம்மலும் அதனைத் தொடர்ந்து நெஞ்சை கரித்துக் கொண்டு வர, துக்கத்தை விழுங்க மனமில்லாமல் அவள் வாந்தியாக எடுத்து தள்ள, அதைப் பார்த்ததும் உடல் உபாதையின் காரணமாகத்தான் அறைக்கு வந்திருக்கிறாள் போலும் என்றெண்ணி கொண்டவனின் மனம் பாகாய் உருக, மென் நடையிட்டு நெருங்கி, தன் இறுகிய கூர் நாடியை அவள் தோள் மீது பதித்து கன்னத்தோடு உரசி நின்றான்.
முதுகுக்கு பின்னால் வந்த அழுந்த காலடி அரவமும், தன்னவன் பயன்படுத்தும் நறுமணத்தின் வாசம் மற்றும் அவனுக்கான பிரத்தியேக மணமும் அவன் அவளை நெருங்குவதற்கு முன்பே, அவள் நாசியை அடைந்து அவன் வரவை சொல்ல, உள்ளுக்குள் சிறு மின்சார பூ பூக்க, அந்த மெல்லிய உணர்வில் சிக்குண்டு தவித்தவளின் காதில்,
"லஷ்மி ..." என்று கிசுகிசுத்தான் தன் வெப்ப மூச்சை அவள் பின் கழுத்தில் செலுத்தி.
நீண்ட நாட்களுக்குப் பின்பான,அந்த அழைப்பும் , அவனின் நெருக்கமும் மறந்திருந்த கிளர்ச்சியை மங்கையின் உணர்வுகளில் தட்டி எழுப்ப, உடனே சற்றுமுன் நடந்த நிகழ்வும் நிழலோட்டமாய் மனக்கண் முன் வர , திரும்பி அவன் முகம் பாராமலேயே விலக முயன்றாள்.
விட்டு விடுவானா அவளது காதல் கணவன் ....
அதுவரை கன்னத்தோடு கன்னம் உரசிக் கொண்டிருந்தவன், தன் இரு கரங்களால் அவளைப் பின்புறமாக அணைத்து மேடிட்ட இடையை லேசான அழுத்தத்தோடு பற்றி தன் மார்போடு பிணைத்துக் கொண்டு இளைப்பாற தொடங்கினான்.
அதன்பின் விலக விழையாமல் , ஒன்றிருந்தவளை தன்னை நோக்கி மெல்ல திருப்பி, தாமரை மலர் போல் தலை குனிந்திருந்தவளின் பிறைநுதலில் தொடங்கி , சிறிய மல்லிகை மொக்கு நாசி, சிப்பி போல் மூடியிருந்த விழிகள், மாசு மரவற்ற மழலைக்கு ஒப்பான கன்னக்கதுப்பு, மெல்லிய பலாசுளை உதடுகள் என அனைத்தையும் ஆழமாய் ரசித்தவன், அவள் நாடியைப் பிடித்து உயர்த்தி அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தான்.
அவள் நிமிர்ந்ததில் ஆடவனின் வெப்ப மூச்சு அவள் நெற்றியைத் தீண்டி சிலிர்க்கச் செய்ய, அவள் ரசித்து ரசித்து காதலித்த அவனது குறுகுறு கண்கள், கூரிய நாசி , அடர்ந்த மீசை அவளை வெகுவாக இம்சிக்க, நீண்ட நாட்களுக்குப் பின்பான நெருக்கத்தில் அவனை அப்படி பார்க்க இயலாமல், அவன் மார்பிலும் முகம் புதைத்துக் கொள்ள முடியாமல் தவித்தவள், கண்களில் லேசான கண்டனத்தை தெரிவித்துவிட்டு தலை குனிந்து கொண்டாள்.
ரசாயண கலப்பின் போது தோன்றும் கண நேரம் மாற்றம் போல், கணத்திற்கு கணம் மாறும் அவளது முக பாவத்தை ரசித்து உள்வாங்கியவனின் மனம் , காதலில் கசிந்துருக்க, மயில் தோகையை விட மென்மையாக இருந்த கூந்தலை கோதியபடி அவள் முகத்தை பற்றி தன் மார்பில் புதைத்துக் கொண்டான்.
பல வார்த்தைகளை பக்குவமாய்க் கோர்த்து விளக்க உரை கொடுப்பதைக் காட்டிலும், அந்த நெருக்கம் அவனது ஆழமான அன்பை அழகாய் வெளிப்படுத்த, அவர்களது முதல் அணைப்பு கொடுத்த இனிமையை காட்டிலும், இந்த அண்மை திருமண பந்தத்தின் மேன்மையை அதிகமாக பறைசாற்ற, உள்வாங்கிக்கொண்டவளின் மனம் ஊமையாய் கண்ணீர் வடிக்கத் தொடங்கியது.
அவள் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை சொல்ல காத்திருந்த போது அவன் அவளை தொடர்பு கொண்டு கேட்காமல் விட்டு விட்டான்.
அதனைத் தொடர்ந்து வந்த மூன்று மாத பிரிவு, இருவருக்கும் இடையே பெருத்த இடைவெளியை ஏற்படுத்தி விட , அதன் பின் பள்ளியில் சந்தித்து அவன் காரணத்தைக் கேட்க விழையும் பொழுது , அவனது மூன்று மாத உதாசீனத்தை மனதில் கொண்டு அவள் காரணத்தை சொல்ல மறுத்துவிட்டாள்.
பிறகு கர்ப்பத்தை உணர்ந்த தருணத்தில், பொருளாதார நிலை அவள் தலையில் தட்டி நிதர்சனத்தை உரைக்க, உடன் கணவன் மீதான கோபமும் கூடி கருக்கலைக்கும் நிலைக்கு தள்ளிய போதும், நடந்து முடிந்த அசிங்கம் மனம் குமையச் செய்ததே ஒழிய , அதிக மன அழுத்தத்தை கொடுக்கவில்லை.
ஒருவேளை அன்றே அவள் மனம் திறந்து இருந்தால் , ஓரளவிற்கு தான் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பாள் ...
ஆனால் இன்றோ, அவளது இதயத்தோடு இரு வேறு சின்னஞ்சிறு இதயங்களும் அவளுள் ஓரளவிற்கு தழைத்து வளர்ந்து பலகீனமாக இசை பாடிக் கொண்டிருக்கும் நிலையில், அன்று இரவு நடந்த அசிங்கத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து வெடித்து இயம்பும் சக்தியை அவளது உடலும் மனமும் முற்றிலும் இழந்திருக்க, ஊமை கண்ட கனவு போல், வெளியே உரைக்கவும் முடியாமல், உள்ளேயே எண்ணி எண்ணி மருகவும் முடியாமல், உடையவனின் மார்பில் முகம் புதைத்து விழி நீரை மறைத்தாள்.
கிட்டத்தட்ட நான்கு மாத பிரிவே, நான்கு யுக பிரிவு போல் நாயகனின் நெஞ்சத்தில் ஏக்கத்தையும் காதலையும் அதிகரிக்கச் செய்திருக்க, அவளை விட்டுப் பிரிய மனம் இல்லாமல், இக்கணம் நீளாதோ.... என்ற எண்ணத்தில் மூழ்கிக் களித்தான் காளை.
பொதுவாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஆரம்ப காலத்தில் மணமக்களுக்கு இடையே ஈர்ப்பு தான் அதிகமாக இருக்கும் ... பிறகு மோகம் ... அதன் பின் நேசம் . .. அதனைத் தொடர்ந்து பாசம், பற்று , புரிதல் என தாம்பத்திய உறவு நீண்டு கொண்டே செல்லும்.
ஆனால் ராம்சரணின் கடந்த மூன்று ஆண்டு கால திருமண வாழ்வில் ஈர்ப்பு, மோகம், காதல் இருந்ததே ஒழிய, பாசம், பற்று புரிதலுக்கெல்லாம் நேரமும் இல்லை சந்தர்ப்பமும் அமையவில்லை, அதைவிட அதனை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு அவனிடம் மனப்பக்குவமும் இல்லை .
அவள் அவனுக்கு மனைவியாய் இருந்த தருணங்களுக்கு நிகராக தாயாகவும் இருந்திருக்கிறாள் ...
அவன் பிறந்ததிலிருந்து உணராத தாய்மையின் அரவணைப்பை தாரமான அவளிடம் தான் உணர்ந்து இருக்கிறான் என்பதைக் கூட இந்த நான்கு மாத பிரிவே உணர்த்தி இருக்க , மோகத்தோடும் நேசத்தோடும் பாசமும் பற்றும் போட்டி போட, மனையாளை மேலும் தன்னோடு புதைத்து கொண்டவனின் நெஞ்சில் பாரம் ஏறி கண்கள் லேசாக பனித்தன.
அப்பொழுது பார்த்து சடாரென்று ஒருகளித்திருந்த கதவை திறந்த ராமலட்சுமி, அவர்கள் நின்று கொண்டிருந்த நிலையைப் பார்த்ததும்
"சாரி " என மொழிந்து கதவை மூடிவிட்டு கிளம்ப அவள் வந்ததோ, சாரி சொன்னதோ எதுவுமே மோனநிலையில் இருந்தவர்களை சென்றடையவில்லை.
" குட்டி, அந்த மஞ்ச பைய கொண்டு வந்தியா ...." என்றார் ருக்மணி.
" அக்காவும் மாமா ரூம்ல இருக்காங்கம்மா ..."
" அதுக்கு என்ன... நீ பாட்டுக்கு போய் அந்த பைய கொண்டுட்டு வர வேண்டியது தானே ..."
" ஐயோ அம்மா .... ஃபில்மி ஸ்டைல்ல ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க ..." என நமுட்டுச் சிரிப்போடு ராமலட்சுமி சொல்ல, ருக்மணியின் முகத்தில் லேசான வெட்கமும், மகிழ்ச்சியும் தெரிய,
" சரி, சரி ... அப்புறம் எடுத்துக்கலாம்.." என்றார் மென் புன்னகையோடு.
அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி சத்தத்தில் சுயம் உணர்ந்தவன் , தன்னவளை தன்னிடமிருந்து பிரித்து , அவள் விழி நோக்கி
" வா போலாம்..." என்றான் வாஞ்சையாக.
" எங்க ...."
" எங்கன்னு சொன்னா தான் வருவியா .... வாடி... போலாம் .." என்றவன் மனையாளுடன் அறையை விட்டு வெளியேறி மணமேடை நோக்கி நடந்தான்.
இப்போது குழந்தை ரங்கசாமியிடம் இருக்க, ரங்கசாமியோ பொன்னம்பலத்திடம் பேசிக் கொண்டிருக்க, அவரையும் உடன் அழைத்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களோடு புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு மன நிறைவாக மணமேடையை விட்டு இறங்கியவன் , அடுத்துப் போய் நின்ற இடம் ஸ்ரீனியிடம் பேசிக் கொண்டிருந்த மஹிக்காவின் முன்பு .
ஒரு கையில் குழந்தை, மறு கையில் மனையாளை பற்றியபடி
" மஹிக்கா , நான் என் வைஃப், குழந்தையை உனக்கு இண்ட்ரடியூஸ் பண்ண மறந்துட்டேன் ..." என்றவன்
" மை வைஃப் ஸ்ரீலக்ஷ்மி, மை டாட்டர் ஸ்ரீஷா ..." என்றான் இருவரையும் இரு பக்கமாக அணைத்துக் கொண்டு வெகு இயல்பாக.
லட்சுமிக்கு மட்டுமல்ல , மணமேடையில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த வீராவுக்கு கூட, பொதுவெளியில் ராம்சரண் இவ்வாறு ஒன்றி நின்றது வித்தியாசமாக பட, மஹிக்காவை பற்றி சொல்லவே வேண்டாம் ராம்சரணின் பேச்சு மற்றும் செய்கையில் வாய் அடைத்து நின்று விட்டாள்.
' தான் திருடன் பிறரை நம்பார்...' என்ற பழமொழி போல், ராம்சரண் வெகுவாக மறுத்துப் பேசியும், அவன் பேச்சின் ஆழத்தை நம்பாமல் , அவனும் தன்னைப் போல தான் இருப்பான் , எப்படியாவது அவன் மனதை மாற்றி விடலாம் என்றெண்ணிக்கொண்டு தேடி வந்திருந்தவளுக்கு நிலைமை அவள் எண்ணத்திற்கு நேர் மாறாக இருக்க, எச்சில் கூட்டி விழுங்கிய படி அரைகுறை புன்னகையோடு தலையசைத்து வைத்தாள்.
உயிர் நண்பன் பேசிய வசனங்கள் கேட்கவில்லை என்றாலும், அவன் பெரும் பிரச்சனையை மிக நாசூக்காக கையாண்ட விதத்தை கண்டு, மனதிற்குள் "சபாஷ் சரண் , குட் ஜாப் .." என பாராட்டு பத்திரத்தை வீரா வாசித்துக் கொண்டிருக்கும் போது , ஸ்ரீப்ரியாவின் ஆஸ்திரேலியா நண்பன் சிவா, பரிசுப் பொருளோடு மேடை ஏறி வர
"ஹாய் சிவா ..." என மணமக்கள் இருவருமே, ஒரு குரலோடு பெரும் உற்சாகத்துடன் அவனை வரவேற்றனர்.
மிகுந்த கலகலப்பாக தன் திருமண வாழ்த்தை தெரிவித்தவன், ஒரு பெரிய ஓவியம் ஒன்றையும் பரிசாக வழங்கி,
" பாப்பா, உனக்கு பிடிச்ச ராதா கிருஷ்ணாவை முயூரல் பெயிண்டிங் பண்ணி வாங்கிட்டு வந்திருக்கேன் ..." என்றான் சிவா நட்பாக.
இரு முறை சிவாவை சந்தித்திருக்கிறான் வீரா.
ஒரு முறை அவன் அறியாமல், மறுமுறை அவன் அறிந்து.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே அவனுடைய எதார்த்தம், கண்ணியம், ஆகச் சிறந்த நட்பு, ஹாஸியம், அக்கறை ஆகியவை வீராவை வெகுவாகக் கவர்ந்திருக்க
" உங்க கனிமொழி எப்படி இருக்காங்க .." என்றான் வீரா குறும்பாய் திடீரென்று .
" பாப்பா, நீ கனிமொழியை பத்தி சொன்னையா.... " என சிவா சந்தேகத்தோடு கேள்வி எழுப்ப,
" இல்லையே ..." என்ற ஸ்ரீப்ரியா .
" உங்களுக்கு கனிமொழியை பத்தி எப்படி தெரியும் ..." என்றாள் வீராவை பார்த்து ஆச்சரியத்தோடு.
" இத பத்தி விவரமா அப்புறம் சொல்றேன் ..." என அவன் முடிக்க
" இந்த ட்ரிப் ரொம்ப சக்சஸ் ஃபுல்லா முடிஞ்சது என் மாமா கனிமொழியை எனக்கு கட்டிக் கொடுக்க சம்மதிச்சிட்டாரு..." என்றான் மணமக்களை பார்த்து பெருமிதத்தோடு சிவா.
" கங்கிராஜுலேஷன்ஸ் ..." என அவர்கள் இருவரும் ஒரு சேர வாழ்த்து கூற
" இன்னைக்கு போல எப்பவும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் ... ஒரே ஒரு சின்ன விஷயம் ..... பாப்பாவை கேசரியை மட்டும் கிண்ட வச்சுடாதீங்க வீரா ..."
" ஏன் ...."
" அன்னைக்கு சிட்னில கோவில்ல நீங்க சாப்பிட்ட கேசரி அம்மணி கிண்டினது தான்..."
" ஓ.... அதுக்கு தான் அன்னைக்கு அவ்ளோ என்கொயரியா ..." என்ற வீரா திரும்பி ஸ்ரீப்ரியாவை பார்க்க, அவள் சிரித்தபடி தலைகுனிந்து கொண்டாள்.
" தேங்க்ஸ் சிவா ... உண்மையை சொல்லி என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்திட்டீங்க .." என வீரா கூறிய மாத்திரத்தில் ஸ்ரீப்ரியா சிவாவை முறைக்க முயன்று தோற்றுப் போய் சிரிக்க, மற்ற இருவரும் அதில் இணைந்து கொண்டனர்.
பிறகு மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்து படலங்கள் முடிந்ததும்,
" ஸ்ரீ ...." என வீரா கிசுகிசுப்பாக அழைக்க,
" என்ன ..."
" உனக்கு இன்னைக்கு ஏதாவது எக்ஸாம் இருக்கா ...." அவன் மும்மரமாக கேள்வி எழுப்ப,
" இல்லையே ...."
" இங்க வெளியே ஏதாவது அரசியல் போராட்டம் நடக்குதா ..."
" இல்லையே ... ஏன் இதெல்லாம் கேக்குறீங்க ..."
" ஒன்னும் இல்ல, உனக்கு ஏதாவது எக்ஸாம் இருந்தா, நீ இப்படியே மாலையும் கழுத்துமா போய் எழுது உன் கூடவே நானும் வரேன்.. நிறைய யூடியூப் சேனல் இருக்கு யாருக்காவது போன் பண்ணி சொல்லிட்டோன்னா, வந்து கவர் பண்ணி நியூஸ்ல, youtubeல போடுவாங்க... அப்புறம் ஒரு வாரத்துக்கு நாம தான் டாக் ஆஃப் தி டவுன் ..." என அவன் முடித்தது தான் தாமதம், சமீப காலமாக சிரிக்க மறந்திருந்தவள், கண்களில் நீர் வரும் வரை சிரித்துக் கொண்டே,
" ஏன்... இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ..."
" சும்மா ஒரு விளம்பரம் தான் ...கமெண்ட்ஸ்ல கழுவி கழுவி ஊத்துவாங்க ஆனா நாம கவலை பட கூடாது ... ஏன்னா பிரபலம்னாலே ப்ராப்ளம் தானே ..."
தொடர்ந்து சிரித்தவள்,
" ப்ளீஸ், அதிகம் சிரிக்க வைக்காதீங்க... எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க ..." என்றவளை சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அம்மையப்பனுக்கு மனம் நிறைந்து போனது.
அவள் அப்படி சிரித்து அவர் பார்த்ததே இல்லை ..
அதற்கான சந்தர்ப்பமும் அவர் வீட்டில் இருந்ததில்லை ..
மகளை பிரியப் போகிறோம் என்ற எண்ணம் ஆழ்மனதை அழுத்த ஆரம்பித்ததற்கு பிறகு தான், அவளையும் அவள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பார்த்து பார்த்து கவனிக்க தொடங்கி இருந்த மனிதருக்கு, மகளின் இன்முகம் மகிழ்ச்சியைத் தர , மாபெரும் நிம்மதி அவர் மனதை வியாபித்தது.
ஒரு வழியாக சுப சடங்குகள் அனைத்தும் நிறைவு பெற்றதும் , அறைக்கு வந்து உடைமாற்றிக்கொண்டு விருந்துண்ண பிரபா கிளம்பிக் கொண்டிருக்கும் போது, அவளது அலைபேசிக்கு ப்ரீத்தி இடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல் அழைப்பை பிரபா அனுமதிக்க,
" அக்கா ...." என ப்ரீத்தியின் அழுகை எதிர்முனையில் கேட்டது.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
Super akka very nice 👍👍👍👍
ReplyDeleteOrey twist oda mudichutanga today episode ah wait panren akka next one ku
thanks a lot ma
DeleteNice
ReplyDeletethanks a lot ma
DeleteSuper mam
ReplyDeletethanks a lot ma
DeleteNice
ReplyDeletethanks a lot ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks a lot ma
DeleteWow.. superb sis ... next drama queen Preethi start panitala.waiting for next ud sis.
ReplyDeletethanks a lot ma
Deletethanks a lot ma
ReplyDelete