ஸ்ரீராமம்-56

 அத்தியாயம் 56  


"உனக்கு என்ன தான் டி பிரச்சனை ... எதுக்கு மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு என்னை பார்க்க கூட மாட்டேங்குற ... வாயை திறந்து  சொன்னா தானே தெரியும் ... பெரிய இவளாட்டம் கழுத்து கழுத்த திருப்பிட்டு போனா உன் பின்னாடியே ஓடி வருவேன்னு நினைச்சியா ..."


திருமண வரவேற்புக்கு பிறகு வேக வேகமாக இரவு விருந்தை தனியே அமர்ந்து உண்டு முடித்த  அவன் மனையாள்,  அவளது  தாயின் அறையில் சென்று முடங்கியதால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஏற்க மாட்டாமல்  இப்படி தாட் புட் தஞ்சாவூர் என்று கண்ணாடியை பார்த்து கடிந்து கொண்டிருந்தான் ராம் சரண். 


கடந்த ஒரு வார காலமாக ஊட்டியில்  இருவரும் பேசிக்கொள்ளாமல் எதிரெதிர் அறையில் தங்கியிருந்த போது கூட,  அவளது அருகாமையே போதும் ,  அவனைக் கடந்து செல்லும் பொழுது அவன் பார்வையை ஸ்பரிசிக்கும் அவளது பார்வையே போதும் என்ற  எண்ணங்களில்  அமைதியாக நாட்களை  கடத்தியவனுக்கு,  கடந்த அரை தினமாக, அவன் விழிகளில் விழாமல், அவள்  பாராமுகமாக இருப்பது பெரும் வலியை கொடுக்க,  உள்ளுக்குள் மெழுகாய் உருகியவனின் கோபம் வெளியே இப்படி  வெம்மையாய் வெளிப்பட்டது. 


காலையில் பயணிக்கும் போதே,  மனைவியாளுடன் தனி அறையில் தங்கப் போகும் சந்தர்ப்பத்தை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தவனுக்கு , இப்படி ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை அவன் மனையாள் ஆடி காட்ட, கடுப்பாகிப் போனான் அந்தக் காளை.


இரவு மணி பதினொன்றை கடந்திருக்க, கூடத்தில் இருந்த திவானில் ரங்கசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ருக்மணியின் அறையில் அவன்  மனைவியும் குழந்தையும் பள்ளிக் கொண்டிருக்க ,  உறக்கம் வராமல் இட பலமாக படுக்கை அறையில் நடந்து கொண்டிருந்தவனுக்கு மஹிக்காவை பற்றிய சிந்தனை வர,


"இனிமே உன் விஷயத்துல பொறுமையா இருந்தேன்னா என்னை  விட முட்டாள் வேறு யாருமே இருக்க முடியாது .... நாளைக்கே உனக்கு  முடிவு கட்டறேன் பாரு ..." என பற்களை நறநறவென்று கடித்த படி அவளை வசைப்பாடி விட்டு ஒரு வழியாக கண்ணயர்ந்து போனான்.


வீரா தன் அறையில் உறக்கம் பிடிபடாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். 


அளவுக்கு அதிகமான கவலை, அளவுக்கு அதிகமான காதல் இரண்டுமே உறக்கத்தை மறுக்கவல்லது என்பதற்கு ஏற்ப, உண்மை காதலில் உழன்று கொண்டிருந்ததால் உறக்கம் பிடிப்படாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.


ஏதோ ஒரு பிரித்தறிய முடியாத புத்துணர்வு அவன் நாடி நரம்புகளில் தெறித்து ஓட , பொழுது எப்பொழுது விடியும், தனக்கானவளை தன்னவளாக்கிக் கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே சிக்கி தவித்தான்.


ஊர் உலகத்திற்கு வேண்டுமென்றால்,  இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கலாம்  ஆனால் அவனைப் பொருத்தமட்டில், ஜென்ம ஜென்மமாய் வாழ்ந்த தன் ஆன்ம பெண்ணை,  இப்பிறவியில் தன்னோடு இணைத்துக் கொள்ளப் போகும் ஒரு முக்கிய சடங்கு அவ்வளவே.... 

வீரா ஒன்றும் ராம்சரணை போல் கடுவன் பூனை அல்ல , அவன் கலகலப்பான பேர்வழி . 

 வித்தியாசமான பெயருக்கும்,  அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் தோரணையுடன் கூடிய  அவனது கம்பீர தோற்றமும்,   எப்பொழுதுமே கலகலப்பாக இருக்கும் அவன் சிரித்த முகமும் அவனை கல்லூரி கால கதாநாயகனாகவே சித்தரித்த காலங்களும் உண்டு.


ஆண் பெண் பேதம் இல்லாமல் அனைவருடனும் இணைந்து பழகும் பாங்கு உடையவன் என்பதால் பெண் தோழிகளும் இருக்கத்தான் செய்தனர் ...

அவன் வாழ்க்கையில் முக்கிய காலங்கள் ஐஐடியில் சேர வேண்டும் என்ற குறிக்கோளில் மூழ்கி போக,  அங்கு சேர்ந்ததும் ஆழ்ந்து படித்தால் தான் பட்டம் பெற  முடியும் என்ற கெடுபிடிகள் அவனை காதல் என்ற வட்டத்திற்குள் சிக்க விடாமல் செய்திருந்த சூழ்நிலையில் தான்,  சத்யனின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர,  வீடு இரண்டாகி போனது.


முதலில் அவனது வீட்டில் பலத்து எதிர்ப்பு கிளம்பியது.  ஆனால் சத்யன் வழக்கம் போல் கொண்ட கொள்கையில் நிலையாக நின்றதோடு,  நல்ல பணியில் அமர்ந்ததும் தன் தாய் தந்தையரை ஓரளவிற்கு சமாதானம் செய்து பிரபாவை மணந்தான்.


தங்கையை பற்றி துளிகூட கவலைப்படாமல் ,  வீட்டின் முதல் மகன் வேறு சமுதாயத்துப் பெண்ணை மணந்து கொண்டதை  அகல்யாவால் தொடக்க காலத்தில் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.


அதற்கேற்றார் போல் அன்புவின் திருமணமும் தட்டிக் கொண்டே செல்ல,  அந்நிலையில்  சத்யனுக்கும் பிரபாவுக்கும் இடையே புரிதல் இல்லாமல் அடிக்கடி புதுப்புது பிரச்சனைகள் முளைக்கத் தொடங்க,  வீட்டில் நிம்மதி என்ற ஒன்றே இல்லாமல் போனது. 


ஒருபுறம் தங்கையின் திருமணம் தாமதப்படுவது,  மறுப்புறம் காதல் திருமணம் செய்து கொண்ட அண்ணனின் திருமண வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதெல்லாம் சேர்ந்து, வீராவை  காதல் என்றால் காத வழி ஓட செய்தது .


ஒரு கட்டத்தில்,  தனக்கு  எல்லா வகையிலும்  பிடித்தமான, தன் சமுதாயத்தை சார்ந்த பெண் அமைவதெல்லாம் நடவாத காரியம் என்ற எண்ணத்திலேயே திருமண விஷயத்தை அவன் முற்றிலுமாக கை கழுவி இருந்த தருணத்தில் தான், ஸ்ரீப்ரியாவின் ஜாதகத்தை, இணைய திருமண தகவல் நிலையம் வழியாக தேர்வு செய்து , புகைப்படத்தோடு அவனுக்கு அனுப்பி வைத்தாள் புதிதாக மணமான அவன்  தங்கை அன்புச்செல்வி. 


திருமணமே வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்ததால் எடுத்த எடுப்பில் வேண்டா வெறுப்பாக புகைப்படத்தை பார்த்துவிட்டு, பெண் நன்றாக இருந்தாலும் அதீத ஒப்பனையோடு இருக்கிறாள் ... என ஏதேதோ காரணங்களை கூறி அவளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் தட்டிக் கழித்தான்.


அப்போது அவன் அவ்வாறு பேசியதற்கு  பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்து கொண்ட ராம்சரணின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட குளறுபடியும் ஒரு காரணம் என கூறலாம். 


பிறகு திருமணத்தை நிறுத்த எண்ணி  அம்மையப்பனிடம் பேசும் பொழுது தான் ஸ்ரீப்ரியாவின்  மீது ஒரு சிறு ஈர்ப்பு ஏற்பட,  அதன்பின்  அலுவலக காணொளியில் அவளை கண்டதுமே முற்றிலுமாக கவிழ்ந்து போனான்.


சிட்னியில் அவளை முதன் முதலாக சந்தித்த போது கூட அவன் தன் காதலை வார்த்தைகளில் உரைக்காமல் விழிகளில் கடத்தியதோடு, அவள் மனதையும் அதே விழி வழியே படித்துவிட்டு தான்,  இந்தியாவில் அவளை பெண் பார்க்கவே சென்றான்.


இதோ .... இடையில் ஒரு சில தடைகள் வந்திருந்தாலும் ,  அனைத்தும் கடந்து  நாளை காலை அவனது திருமதி ஆகப்போகிறாள் அவள் ...


ஆயிரத்தில் 10 பேருக்கு கூட, இப்படி அனைத்து எதிர்பார்ப்புகளும் பூர்த்தியான நிலையில் மனம் ஒத்த  திருமணம் தானாக அமையுமா... என்ற ஆச்சரியம் அவனது ஆழ்மனம் வரை அகண்டு விரிந்து, சிந்தை முழுவதும்  வியாபிக்க, எல்லாம் வல்ல கடவுளுக்கு நன்றி தெரிவித்தபடி உறக்கத்தை தழுவினான் நாயகன்.  


மறுநாள் அதிகாலையிலேயே விழித்தெழ வேண்டும் .... ஒப்பனை மற்றும்  சிகை அலங்காரத்திற்கெல்லாம் நேரம் எடுக்கும் .... என சுசிலா கூறிக்கொண்டே உடன் ஒரு சில  அறிவுரைகளை வாரி வழங்க அதனைக் கேட்டபடி நாளைய தினத்தின் இனிமையை  மனக்கண்ணில் காட்சிப்படுத்திக் கொண்டே கண்ணயர்ந்து போனாள் வீராவின் கண்ணாட்டி.


பிரபா அரக்கப் பறக்க எழுந்து குளித்து முடித்து,  அழகான பட்டுப் புடவை , அணிகலன்களை அணிந்து கொண்டு, கணவன் மற்றும் பிள்ளைகளை எழுப்ப நினைக்கும் போது, சத்யனிடமிருந்து அசைவு தெரிந்தது.


ஓரிரு கணம் அவள் தயங்கி நிற்க,  படுக்கையில் இருந்து பரபரப்பாக எழுந்தமர்ந்தவன்  அவள் முகத்தைக் கூட பார்க்காமல்,


" நீ கிளம்பி கீழ போ... அம்மா காத்துகிட்டு இருப்பாங்க ... நான்  பிள்ளைகளை ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன் ...." வேகமாக மொழிந்து விட்டு, குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.


நேற்றைய கோபம் தணியாமல் இருப்பது தெரிய வர,  கலங்கிப் போனாள் பெண். 

பெரும்பாலும் மனையாளின் ஆடை ஆபரணங்களில் அவன்  கவனம் செலுத்தாவிட்டாலும், குறைந்தபட்சம்  அவளைப் புதுவித அலங்காரத்தில் பார்க்கும் பொழுது, ஒரு கணம் அவன் பார்வை,  அவளை முழுவதும் ஸ்பரிசித்துவிட்டே நகரும் ... 


வழக்கமான விசேஷ தினங்களை விட,  இன்று அவளது அலங்காரம் சற்று கூடுதலாக மட்டுமல்ல அவளுக்கும் வெகு பொருத்தமாக இருப்பதாக தோன்றிய நிலையில்,  அவனது பாராமுகம்  கவலையை தர , தொண்டை கனத்து லேசாக கண் கலங்கியவளுக்கு ப்ரீத்தியின்  மீது கோபம் வகைத்தொகை இல்லாமல் கூடிப்போக


" இன்னைக்கு இருக்குடி உனக்கு ..இன்னைக்கு மட்டும்  நீ போன் பண்ண ... செத்த  ...."  என குமுறிக் கொண்டே மணமேடை நோக்கி நடை போட்டாள். 

   


பிரம்ம முகூர்த்தத்தில்,  மஞ்சள், அத்தர், பன்னீர் கலந்த தண்ணீரில் குளித்து முடித்து வந்த மணப்பெண்ணிற்கு  அழகு கலை நிபுணர்கள் அலங்காரத்தை தொடங்கினர்.


மிளகாய் பழ நிறத்தில்,  மெல்லிய தங்க கம்பியிட்ட , அகலமான பிஸ்தா நிறப் பச்சை பார்டரில் பளபளக்கும்  ஜரிகை கொண்ட  தரம் வாய்ந்த காஞ்சி பட்டு புடவையை அவளுக்கு அணிவித்ததோடு,  அந்தக் கால நகைகள் என சொல்லப்படும் ' பிடி நகைகள் ' அதாவது மூன்று கைப்பிடி, (அ) ஐந்து கைப்பிடி நீளம் கொண்ட காசுமாலை,  மாங்கா மாலை ஆகியவற்றை  அவள் கழுத்தில் பாந்தமாக அணிவித்து, ராமர் பட்டாபிஷேகத்தை அச்சில் வார்த்த ஓட்டியாணத்தை இடையில் பூட்டி , மாணிக்க கற்கள் பதித்த வங்கி,  வைரமும் மரகதமும் கலந்த குடை ஜிமிக்கி, வைடூரியம் பதித்த புல்லாக்கு என ஆபரண பூஷிதையாக அலங்கரிக்கப்பட்டவள் தங்கத்தேர் அசைவது போல்  நளினத்தோடு உறவுப் பெண்கள் புடை சூழ நடந்து வந்து, வேள்வியின் முன்பு அமர்ந்திருந்தவனின் அருகில் அமர்ந்தாள்.


அக்னி ஜுவாலையின் வெம்மையில் வியர்த்திருந்தவனுக்கு  அவளது அருகாமை ஆல்பஸ் மலை சாரலை அள்ளி வீச, உள்ளுக்குள் முக்குளித்துப் போனான்.


அவனுக்கு அவர்களது சமுதாயத்து முறைப்படி தலையில் பரிவட்டம் போல் அழகாக முண்டாசு கட்டப்பட்டிருக்க,  பட்டு வேட்டி சட்டையில், நெற்றியில் விபூதி கீற்றோடு கம்பீரமாக காட்சியளித்தவனை, கீழ்கண்களால் ஓரிரு முறை அவள் நோட்டம் இட,


" ஸ்ரீ ...." என்றழைத்தான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.


உடனே லேசாக கழுத்தை திருப்பி பார்த்தவளை பார்த்து வழக்கம் போல் கண்கள் சிமிட்டியவன்,


" நீ ரொம்ப அழகா இருக்க.... நான் எப்படி இருக்கேன்..." 

குறும்போடு கேட்க,  சற்றும் எதிர்பார்க்காத அந்தக் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், சபையை அரை கணம் விழிகளால் அளந்து விட்டு, மெல்லிய புன்னகையோடு தலை குனிந்து கொண்டாள்.


துக்கம்  நடந்த வீடு என்பதால், சில சடங்குகளை தவிர்த்து விட்டு, முக்கிய சடங்குகளில் மட்டும் ஐயர் கவனம் செலுத்த, மணமேடையில் திருமண சாங்கியங்கள் வெகு வேகமாக களைகட்ட தொடங்கின.


ஸ்ரீப்ரியா தன் தாய் தந்தைக்கு பாத பூஜை செய்யத் தொடங்க, சுசீலா,  அம்மையப்பனின் மனம்  பாசத்தால் பரிமளிக்க தொடங்கியது. 


பெண்ணை அழகாகப் பெற்று, ஆகச் சிறந்த கல்வி கொடுத்து,  அம்சமாக வளர்த்து, மிகுந்த மன நிறைவோடு மணமுடித்துக் கொடுக்கும் பெற்றோர்கள்  அடையும் ஆத்ம திருப்தி என்னும் பேரின்பத்தை அப்பொழுது  அவர்களும் அணு அணுவாக அடைந்து   ஆனந்தக் கண்ணீரில் அகம் திளைத்தனர்.


பிறகு வீரா தன் பெற்றோருக்கு பாத பூஜையை தொடங்க, மெல்ல மெல்ல திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக வேகம் எடுத்தது. 


ராம்சரண் அடர் மெஜெந்தா நிறத்தில் கருப்பு கட்டம் போட்ட  சட்டை,  கருப்பு நிற பேண்ட் சகிதமாக  ஃபார்மல் உடையில் மிகுந்த கம்பீரமாக  தயாராகி, மனையாளின் தரிசனத்திற்காக தன் அறைக்கதவை திறந்து வைத்துக் கொண்டு இடவலமாக நடந்த படி காத்துக் கொண்டிருந்தான்.


முந்தைய இரவு,  லட்சுமி,  அவள் வீட்டு குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் துயில் கொள்ள விழையும் போதே , ருக்மணி சந்தேகத்தோடு கேள்வி எழுப்ப, குழந்தையை காரணம் காட்டியதோடு,  வேறு ஏதேதோ காரணங்களை அடுக்கி தப்பித்துக் கொண்டாள்.


 தற்போது தியாகராஜன், ராமலட்சுமி குழந்தையோடு தயாராகி மணமேடையை நோக்கி பரபரப்பாக நகர, அவர்களோடு இணைந்து பேசியபடி ரங்கசாமியும் நடை போட, அனைத்து அரவத்தையும் கேட்டபடி அறையை விட்டு இயல்பாக வெளியேற முடியாமல் தடுமாறினாள் லட்சுமி. 


அவள் மனம் முழுவதும் அந்த முகம் தெரியாத பெண் மஹிக்காவை பற்றியே சிந்தனையே வியாபித்திருக்க, உடன் கணவனிடம் உரிமையாக சண்டை போடவோ, கோபப்படவோ உரிமை இல்லாத நிலையை எண்ணி வருந்திய படி அரைகுறை மனதிலேயே அலங்காரத்தை முடித்தவள் தன் அறையை விட்டு மென் நடையில் வெளியே வர, எதிர் அறையின் வாயிலில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவளது மணாளன்.


சற்றும் எதிர்பார்க்காத அவனது தரிசனத்தால்  அவள் விழிகள் வியப்பில் மிதக்க, வெந்தய நிறத்தில் அரக்கு பார்டர் கொண்ட பனாரஸி புடவையில் அம்சமாக காட்சி அளித்தவளை ஏதோ  காணாததை கண்டது போல் நுணுக்கமாக  ரசித்துக் கொண்டிருந்தான் அவள் நாயகன்.


அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. 


அவளை அந்த புடவையில் முதன்முறையாக பார்க்கின்றான் ... அவளிடம் இருக்கும் புடவைகள் எல்லாம் அவனுக்கு அத்துபடி என்பதால்,  இந்த புதிய புடவை அவளது அழகிற்கு மேலும் அழகூட்டி அவனது தாய்மையின் மிளிர்வை மேம்படுத்தி காட்ட, ஏதோ இருவரும் தொடக்க நிலை காதலர்கள் போல்,  மென் பார்வை பரிமாற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கணத்தில், அவளைப் பின் தொடர்ந்து வந்த ருக்மணி,


" நீ கிளம்பு லஷ்மி ... நான் கதவை பூட்டிக்கிட்டு வரேன் .."  என சொல்லிக்கொண்டே ராம்சரணை பார்த்ததும் ,


" மாப்பிள்ள, நீங்க இன்னும் கிளம்பலையா ... நல்லதா போச்சு ... லட்சுமி,  நீ மாப்பிள்ளையோட  போய்கிட்டே இரு, நான் பின்னாடியே வரேன்..." 


இருவரையும் வழிக்கூட்டி அனுப்பியவருக்கு நேற்று இரவிலிருந்து,  மகளின் முகம் ஏதோ விசனத்தில் இருப்பது போல்  தோன்றியதோடு,  அவள் அவர்களோடு  உறங்கியதற்காக சொன்ன காரணங்களிலும் சந்தேகம் பிறந்திருக்க,  மகள் மற்றும்  மாப்பிள்ளைக்கிடையேயான உரசல்களை கண்டும் காணாதது போல் கவனிக்க தொடங்கினார். 


ஸ்ரீலட்சுமி கர்ப்பவதி என்பதால்  கீழ் தளத்திலேயே  அவர்கள் குடும்பத்திற்காக இரு அறைகளை எதிரெதிரே ஒதுக்கச் செய்திருந்தான் வீரா. 


உல்லாச மனநிலையோடு கிளம்பிய ராம்சரண்  மனையாளை உரசியப்படி  இணைந்து நடக்க, மெதுவாக நடந்தே  ஐந்து நிமிடத்திற்குள் இருவரும்  திருமண கூடத்தை அடைந்தனர். 


அவன் நெருக்கம் என்றும் இல்லா இம்சையை அவளுள் தோற்றுவிக்க,  அப்பொழுது பார்த்து அவன் அலை பேசி சிணுங்கியது.


ஸ்ரீனி தான் அழைத்திருந்தான்.


"சொல்லு ஸ்ரீனி ..." என ராம்சரண் அலைபேசியை  காதுக்கு கொடுத்து கேட்க,


" கல்யாண மண்டபத்தோட என்ட்ரன்ஸ்க்கு  வந்துட்டேன் டா ... நீ எங்க இருக்க ..."


"ஒன் செகண்ட்,  வெயிட் பண்ணு... நான் ரிசப்ஷனுக்கு வரேன் ..."  

என முடித்தவன்,  மனையாளை , மணமேடையை நோக்கி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இரண்டாவது வரிசையை தேர்வு செய்து அதன் மத்தியில் அமரச் செய்துவிட்டு, 

" ஒரு நிமிஷம் வந்துடறேன் ..."  என விடைபெற, அவனோடு இணக்கமாக இருக்கவும் முடியாமல், விலகிச் செல்லவும் முடியாமல், அவனை விலக்கி வைக்கவும் முடியாமல் எல்லா வழிகளிலும் வகையற்று போனாள் பாவை. 


 விடைபெற்றவனின் மனம் மட்டும் என்ன ... அதுவும் தான்  ஏகத்துக்கு குழம்பி தவித்தது...  அவனாலேயே அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.


மனையாள்  மீதிருந்த  கோபமெல்லாம் அவளைக் கண்ட மாத்திரத்தில்  கொப்பறையில் இட்ட வெண்ணையாய் கரைந்துருகி ஓடியதை நினைத்து,


" எனக்கு என்ன ஆச்சுன்னே எனக்கே தெரியல, எவ்ளோ தான் கோவத்தை இழுத்து புடிச்சாலும் உன்னை பார்த்ததும் கம்ப்ளீட்டா பிளாட் ஆயிடறேன் டி.... "  என தனக்குள்ளேயே புலம்பிய படி வரவேற்பை நோக்கி நடை பயின்றவன்,  அங்கு சந்தனம் குங்குமம், பன்னீர் சொம்பு , சாக்லேட்டுகளோடு திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த பெண்களின் குழுவில், கையில் அவன் குழந்தையை ஏந்திய படி நின்று கொண்டிருந்த ராமலட்சுமியிடம் ஸ்ரீனி சில கணங்களுக்கு மேல் தன்னை மறந்து சிரித்து சிரித்து உரையாடிக் கொண்டிருந்ததை பார்த்தான். 

ஸ்ரீனி அடிப்படையில்  பொறுமையானவன்,  அதிகம் பேசாதவன். கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கும் சுபாவம் கொண்டவன்.


ராம்சரண்,  வீராவோடு மட்டும் தான் ஓரளவிற்கு இயல்பாக பழகுவான். மற்றபடி ஏதாவது வேலை இருந்தால் மட்டுமே  அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் பேசுவான் ...


அதுவும் அவன் திருமணத்தில், வாங்கிய மரண அடியிலிருந்து, பெண்களோடு இயல்பாகப் பழகுவதைக் கூட அடியோடு நிறுத்தி இருந்தான்.


இப்படிப்பட்ட சுபாவம் கொண்டவன்,  ராமலட்சுமியுடன் தன் இயல்பை தொலைத்து,  இனிமையாக பேசிக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கு ராம் சரணுக்கு வித்தியாசமாகப்பட்டது.


ஓரிரு கணம் அவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டு நின்றவன்,  பிறகு மெதுவாக அடி எடுத்து அவர்களை நோக்கி நகரும் போது , ராமலட்சுமி அவனைப் பார்த்துவிட்டு 


" மாமா,  உங்க ஃப்ரெண்ட் வந்திருக்காரு .."என  அறிமுகப்படுத்த, அகண்ட புன்னகை பூத்தபடி ஸ்ரீனியை வரவேற்றான் ராம்சரண் .


ராம்சரணை கண்டதும் குழந்தை தாவ, குழந்தையை வாங்கி  கொஞ்சிய படி , ஒரு சில இயல்பான விசாரிப்புகளை   ராமலட்சுமியிடம்  முடித்துக் கொண்டு  அவன் விடைபெற,


"இன்னும் தாலி கட்டல இல்ல ... பின்ன  ஏன்  நீ இங்க  வர இவ்ளோ நேரமாச்சு ..." என்றான் ஸ்ரீனி அவனோடு இணைந்து நடந்தபடி. 



"நான் எப்பவோ வந்துட்டேன் ... நீ குட்டியோட பேசிகிட்டு இருந்த ... அதான் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு வந்தேன் ..."


" குட்டியா ..."


" வீட்ல அவளை அப்படித்தான் கூப்பிடுவோம்..." என்றவனின் குரலில் லேசாக குறும்பு எட்டிப் பார்க்க 


"அவங்க வீட்ல  பசங்க கிடையாது இல்ல ... "


"இல்ல ... இரண்டுமே பொண்ணு தான்  ... ஆமா நீ எதுக்கு அவளைப் பத்தி  விசாரிக்கிற ..."


" ஜஸ்ட் .... சும்மா தான் .... அன்னைக்கு  எங்க வீட்டுல அண்ணி( ஸ்ரீலக்ஷ்மி)  பேசும் போது , ரொம்ப எமோஷனலா இருந்தாலும், அவங்க பேச்சுல நிறைய  யதார்த்தமும் உண்மையும் இருந்துச்சு  ...  அதே மாதிரி வக்கீல் தினேஷ்  அன்னைக்கு அவங்க அம்மாவ பத்தி சொல்லும் போது , அவங்களும் ரொம்ப நல்ல மாதிரியா என் மனசுக்கு பட்டுச்சு ... அப்புறம் நான் ராமுவ மெக்டொனால்ஸ்ல மீட் பண்ணும் போது அவளும் ரொம்ப எதார்த்தமா பேசினா... மொத்தத்துல அவங்க குடும்பத்தையே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு ..."


" கைய கொடு சகல... ஆல் தி பெஸ்ட் ..."


" வாட் டூ யூ மீன் ..." என்றான் ஸ்ரீனி லேசான அதிர்ச்சியை கண்களில் காட்டி உடன் புன்னகைத்து.  


" நீ எனக்கு சகலயா வர்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன் .."


" எனக்கு கல்யாணம்னாலே   அலர்ஜியா இருக்கு டா ... ஆள விடு ..."


" மார்க் மை வேர்ட்ஸ் மேன் ... ஒரு நாள் நீயே இந்த விஷயத்தை என்கிட்ட வந்து பேசுவ... அதுவும் கூடிய சீக்கிரத்துல ... நடக்குதா இல்லையானு பாரு..."  என சவால் விடுவது போல் நட்பை கண்களில் தேக்கி ராம்சரண் பேச, 


" அப்படி ஒரு நிலைமை வந்தா...நிச்சயமா  மூத்த மாப்பிள்ளை உன் கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேச போறேன் .." என ஸ்ரீனி ஒத்து பேச,  இருவரும் இணைந்து நகைத்த படி திருமண கூடத்தை அடைந்தனர்.


மாங்கல்ய தாரணம் நடைபெறப் போவதை ஒட்டி, மண மேடை மற்றும் திருமண கூடத்தில் உறவினர்கள்,  நண்பர்கள் கூட்டம் பொங்கி வழிய, ஐயர் மாங்கல்யத்தை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த அக்னியை சாட்சியாக வைத்து வீராவின் கைகளில் கொடுக்க,  அவன் தன் மனசாட்சியை மட்டும் சாட்சியாக வைத்துக்கொண்டு,  தன் ஆன்ம நாயகியின் கழுத்தில் பூட்டி  அர்த்தநாரீஸ்வரர் போல் அவளை  தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.


இருவருக்குள்ளும்  பெயரிட முடியாத நிம்மதியும் ஆனந்தமும் பேராழியாய் பொங்கி வழிய,  பாவை அவள் பொன் கழுத்தில் பொன் தாலி இட்டு தன்னவள் ஆக்கிக் கொண்டவன், அவள் மென் கரம் பற்றி  அக்னியை சுற்றி வலம் வரும் பொழுது, அந்த பிஞ்சு கரத்தை பற்றி கொடுத்த அழுத்தத்தில்,  ஏழேழு ஜென்மத்திற்கும் உன்னை பிரியேன் என்று செய்தி மட்டும் அல்ல சத்தியமும் இருந்தது.


கொடுத்த வாக்கை  விதி ஆடப்போகும்  புயல் ஆட்டத்திற்கு அசராமல் காப்பாற்றுவானா ....?  எச்சூழ் நிலையிலும் இதே போல் அவளை விட்டு விடாமல் இறுகப்பற்றுவானா.....? காலம் பதில் சொல்லும்  ... 


திருமணம் முடிந்த சந்தோஷத்தில் நண்பர்களும் உறவினர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, மஹிக்காவின் கார் திருமண மண்டபத்தை அடைந்தது.



ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....

















































































 




Comments

Post a Comment