ஸ்ரீ-ராமம்-55

 

அத்தியாயம் 55


ஓரிரு கணம் மூளை செயலற்றது போல் உறைந்து நின்ற பிரபா, இசைக் கச்சேரி மற்றும் குழுமியிருந்த மக்களின் அரவத்தில் சுயம் உணர்ந்ததும், கணவன் சத்யனை தேடி சென்று நடந்த அனைத்தையும் மொழிந்தாள்.

கேட்டவனுக்கும் எடுத்த எடுப்பில்  அடுத்து என்ன செய்வது என்று விளங்கவில்லை.

ஓரு கணம் யோசித்தவன்,

"பிரபா,  நாம ரெண்டு பேரும் ஒண்ணா  கோயம்புத்தூருக்கு  போக முடியாது .... யாராவது ஒருத்தர் இங்க இருந்தே ஆகணும் ...  நான் இருந்து  குழந்தைகளை பாத்துக்கறேன், நீ மட்டும் கெளம்பு ... உன் அம்மாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்ல... இந்த விஷயம்  கேள்விப்பட்டா, அவங்களுக்கு இன்னும் பிரச்சனை அதிகமாயிடும்  .... உன் அப்பா கிட்ட கூட எதுவும் சொல்லாத ...கேப்(Cab) அரேஞ்ச் பண்றேன் .... யாருக்கும் எதுவும் சொல்லாம நீ கிளம்பு ... யாராவது கேட்டா எதையாவது  சொல்லி சமாளிச்சுக்கிறேன் ...."
என துரிதமாக  முடிவெடுத்து முடிக்கும் தருவாயில்,

"உங்க சைல்டு வுட்  ஃப்ரெண்ட்  ஒருத்தர்,  ஜே பி ஹாஸ்பிடல்ல டாக்டரா இருக்காரு இல்ல ... நம்ம கல்யாண ரிசப்ஷனுக்கு கூட வந்திருந்தாரே..." என்றாள் பிரபா தீவிர யோசனையில்.

"ஆமா ராஜ் .... ஆனா அவனோட  எல்லாம் இப்ப  காண்டாக்ட் இல்ல டி .... அவன் கார்டியாக் சர்ஜன் ...  அதோட  அவன் இந்தியால  இருக்கானானு கூட தெரியல ...."

"ப்ளீஸ்... அவர் நம்பருக்கு ட்ரை பண்ணுங்களேன் ..." என்ற மனையாளின் தொடர்  பேச்சை தட்ட மாட்டாமல், சத்யன் ,
நண்பனை தொடர்பு கொள்ள, சந்தர்ப்பமும் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு சாதகமாக இருந்ததால்  நான்கு அழைப்பிற்குள்ளாகவே,  இணைப்பில் வந்தான்,  அந்த மருத்துவ  நண்பன் ராஜ்.

இயல்பான நலம் விசாரிப்புக்கு பிறகு,

"என் சிஸ்டர்-இன்-லாக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அதுல கால்  ஃபிராக்சராகி,  உங்க ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் ஆயிருக்கா .... நாங்க எல்லாரும் இப்ப அவுட் ஆஃப் ஸ்டேஷன், அவ கிட்ட போன் பண்ணி விசாரிச்சோம்... ஆனா அவளுக்கு கரண்ட் ஸ்டேட்டஸ்  சரியா சொல்ல தெரியல ... ரொம்ப பயப்படறா...  ரொம்ப  அழறா... அவளுக்கு ட்ரீட்மென்ட் பண்ணின டாக்டர் கிட்ட கொஞ்சம் விசாரிச்சு  சொல்ல முடியுமா ராஜ்...."

" ஓ...ஷூயூர்...  ஆனா நான் போய் இப்ப  பர்சனலா மீட் முடியாது .... ஏன்னா  இப்பதான் ஒரு  எமர்ஜென்சி கேஸ் , முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தேன் .... டியூட்டி டாக்டர்ஸ் கிட்ட போன் பண்ணி விசாரிச்சு சொல்றேன் ... உன் சிஸ்டர்- இன்-லாவோட பேரு என்ன ..."

"ப்ரீத்தி சண்முகநாதன் ...."
என சத்யன் முடித்த மாத்திரத்தில் ,

"ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு..
கூப்பிடறேன் ..."  என அழைப்பை துண்டித்தான் ராஜ்.

"ப்ரீத்தி அங்க அடிப்பட்டு ஹாஸ்பிடல்ல இருக்கா ... நீ ஊருக்கும் கிளம்பாம,  ப்ரீத்திக்கும் போன் பண்ணி விசாரிக்காம, எதுக்கு இப்ப  டாக்டர் ராஜ்க்கு போன் பண்ணி, ப்ரீத்தியோட ஹெல்த் ஸ்டேட்டஸ் என்னன்னு  என்னைக் கேட்க  சொன்ன..." என்றான் சத்யன் , பிரபாவை உற்றுப் பார்த்து புரியாமல்.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ... உங்களுக்கே புரியும் ..." என்றாள், கடைசியாக அவள் கடிந்து கொண்ட பொழுது, ப்ரீத்தி குயுக்தியாக நகைத்ததை மனதில் நிறுத்தி.

அடுத்த பத்தாவது நிமிடத்தில்  மருத்துவர் ராஜ் சத்யானைத் தொடர்பு கொண்டு,

"நத்திங் டு வொரி.... உன் சிஸ்டர்- இன்-லாவை  ட்ரீட் பண்ணின டாக்டர் சுரேஷை விசாரிச்சிட்டேன்....  ஷீ இஸ் அப்சல்யூட்லி டூயிங் வெல்னு சொன்னாரு  ....
கால்ல பிராக்சர் எல்லாம் எதுவும் ஆகலையாம் .... லேசா அடிபட்டு ஸ்வெல்லிங் தான் ஆயிருக்காம்... ட்ரெஸ்ஸிங் முடிஞ்சதும்,
டேப்லெட்ஸ் கொடுத்து  வீட்டுக்கு போக சொன்னா, பயத்துல,  இன்னைக்கு ஒரு நாள் நைட் ஹாஸ்பிடல்லயே ஸ்டே பண்ணிட்டு போறேன்னு  சொன்னாங்களாம்..... சோ.... பயப்பட ஒண்ணுமே இல்ல ..."
என்றவனிடம் நன்றி தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டிக்கும் பொழுது சத்யனின் முகம் கோபத்தில் இறுகிப் போனது.

"இவ்ளோ கன்னிங்கா ப்ரீத்தி பிளான் பண்ணுவான்னு  கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.... எனிவே  சரியான நேரத்துல அவ பிளானை  கண்டுபிடிச்சிட்டோம் .... நம்மள சுத்தல்ல விடணும்னு அவ பிளான் பண்ணி காய் நகர்த்தி இருக்கா  ... இனிமே நாம அவள சுத்தல்ல விடணும்... அதனால
அவளோ,  அவ ஃப்ரெண்டோ  ஃபோன் பண்ணா போனை எடுக்காத ..."

" ஏன் ..."

"எடுக்காதன்னா எடுக்காத ... சொன்னத செய்  பிரபா ... எனக்கு போன் பண்ணாலும்
நானும் எடுக்க போறதில்ல .... " என திட்டவட்டமாக சத்யன் முடித்துவிட்டு
திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வந்திருக்கும் தன் நண்பர்கள், மற்றும் உறவினர்களை வரவேற்க சென்று விட்டான்.

தங்கையைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால்,  பிரபா
தன் தாய் தந்தையரின் அலைபேசிகளை வாங்கி,  அவர்களுக்கே தெரியாமல்
அதனை பிளைட் மோடுக்கு மாற்றிவிட்டு, பின் நிம்மதியுற்றவளாய் திருமண வரவேற்பில் கலந்து கொண்டாள்.

அதற்கு மேல்  நேரங்கள் , பனித்துளிகளாய்  கரைந்து காணாமல் போக, ஒரு கட்டத்தில்  வரவேற்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

அதற்குள் கிட்டத்தட்ட 15 முறைக்கு மேல்
ப்ரீத்தியின் தோழி கவிதாவிடமிருந்து
பிரபாவின் அலைபேசிக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது ...

அதுமட்டுமல்ல சத்யனையும் கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் அழைத்திருந்தாள் அந்த பெண்.

அவன் பிரபாவிடம் சொன்னது போல்,
அலைபேசியை அமைதிக்கு தள்ளிவிட்டு,  தன் வேலையில் கவனம் செலுத்த, பொறுக்க மாட்டாமல் ஒரு கட்டத்தில் பிரபா தனக்கு வந்த அலைபேசி  அழைப்பை அனுமதிக்க

"அக்கா கிளம்பிட்டீங்களா ....
இவ்ளோ நேரமா போன் பண்றேன் ஏன்க்கா எடுக்கல .... ப்ரீத்திக்கு
பயங்கரமா பிராக்சர் ஆனதால கால் எலும்பு உடைஞ்சு போயிட்டதா டாக்டர் சொல்றாங்க.." என அழாத குறையாக பேசி முடித்தாள் கவிதா. 

"இங்க பாரு கவி, இருந்து இருந்து இப்பதான் என் கொழுந்தனுக்கு கல்யாணம் ஆகப்போகுது .... அண்ணன் அண்ணி நாங்க இல்லன்னா நல்லா இருக்காது ...
நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும், நாளன்னைக்கு பொண்ணு வீட்ல ஏதோ சடங்காம்... அது எல்லாத்தையும்  முடிச்சிட்டு தான் எங்களால வர முடியும்  ..."

" அ.... .அக்கா .... என்னக்கா இது ... இப்படி பேசறீங்க .... ப்ரீத்தியோட நிலைமை ரொம்ப மோசமா இருக்குக்கா .... கால்ல ஏதோ ஆபரேஷன் பண்ணனும் டாக்டர் வேற சொல்றாங்க... நீங்க என்னடான்னா , நாளன்னைக்கு வரேன்னு கூலா  சொல்றீங்க ..."
என்று அவளது பேச்சை இடைவெட்டி
கவிதா குமுற,

"ஆப்ரேஷன் தானே .... எங்களுக்காக காத்துக்கிட்டு இருக்காம  நல்லா பண்ண சொல்லு .... எவ்ளோ செலவானாலும் ஜிபே பண்றோம் .... "

"அ... அக்கா ...ம்ச்... சொன்னா புரிஞ்சுக்கோங்க இது எமர்ஜென்சி அக்கா .... நாளைக்கு ப்ரீத்திக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா ..."

"அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும் ... ஸ்கூட்டில ராஷ் ட்ரை பண்ணாதீங்கன்னு  எத்தனை தடவை சொல்லி இருக்கேன்... கேட்டீங்களா ... அனுபவிங்க ...
அவ காலயே எடுக்கணும்னாலும்,
கவலைப்படாம டாக்டரை எடுக்க சொல்லு .... எவ்ளோ பணம் செலவானாலும் அனுப்பறேன்... இனிமே இதே விஷயத்துக்காக போன் பண்ணி என்னை இம்சை  பண்ணாத .. கல்யாணத்துக்கு வந்தவங்கள சரியா விசாரிக்க கூட முடியல .... ஃபோனை வை .."
என வெடுக்கென்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

கவிதா ஸ்பீக்கரில் போட்டு பேசியதால்,  இரு பக்க உரையாடல்களையும் தெளிவாக கேட்டுக்கொண்ட ப்ரீத்தி,

"கவி .. நாம செஞ்ச தகுடு தத்தத்தை
எப்படியோ என் அக்கா   கண்டுபிடிச்சிட்டா போல அதான் இப்படி பேசறா...
கல்யாணம் முடிஞ்சும் ஒரு நாள் இருந்து சீராடிட்டு தான் வருவாளாமா.... எனக்கு வயிறு எல்லாம் எரியுது .... இது வரைக்கும் நான் போட்ட திட்டத்துல தோத்ததே இல்ல .... இப்படி என்னை மண்ணை கவ்வ வச்சுட்டாளே .... ராட்சசி ராட்சசி ... ******, ******** .....

நாளைக்கு காலையில முகூர்த்தம் ...
கல்யாணத்துல அவ கலந்துக்க கூடாது .... அதுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு ..."
என்றாள் சகட்டுமேனிக்கு தமக்கையை வசைப்பாடிய படி .

"ஆள விடு ப்ரீத்தி .... ஏற்கனவே எக்கச்சக்கமா செஞ்சு ஏடாகூடமா மாட்டிட்டோம் .... இப்ப கல்யாணம் முடிஞ்சு  உங்க அக்கா ஊருக்கு வந்தா  பிரச்சனை ரொம்ப பெருசாயிடும் .... ப்ளீஸ் ப்ரீத்தி இனிமே நான் இந்த ஆட்டத்துக்கு வரல ... கிளம்பறேன் ..." என முடிவாக  கூறிவிட்டு, இடத்தை காலி செய்தாள் கவிதா.

வரவேற்பு முடிந்ததும்,  வீரா மற்றும் ஸ்ரீப்ரியாவின் குடும்பத்தினர் மட்டும்  ஒன்றாக அமர்ந்து இரவு விருந்து உண்ண பிரத்தியேக  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், உடைமாற்றிக் கொள்வதற்காக
வீராவும் ஸ்ரீப்ரியாவும் தத்தமது அறைகளை அடைந்தனர்.

அலங்காரத்தை கலைப்பதற்காக அறைக்கு வந்தவளின் மனம் , மீண்டும் தாயை தேடும்  கன்றாய்,  காலமான தன் பாட்டியை தேடி அலைந்தது.

பொதுவாக  மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு,  தனிமை தான் முதல் எதிரி.


சற்று முன் வரை, தன் மனம் கவர்ந்தவனோடு திருமண வரவேற்பு கேளிக்கையில் திளைத்திருந்தவளுக்கு,
இந்த சிறு தனிமை, மறந்திருந்த மன பாரத்தை கூட்ட,  அவளது கண்கள் பனிக்கத் தொடங்கின. அருமை பெருமையாய் வளர்த்த அப்பத்தா இறந்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலை.

அவரது பிரிவை ஏற்க முடியாமல்  மனம் ரணமாய் கொதித்துக் கொண்டிருந்தாலும், அதனை வெளிக்காட்டி அழுது ஆறுதல்  தேடும்  நிலையில் அவளது சூழ்நிலை இடம் கொடுக்காததால் ,  உள்ளுக்குள்ளேயே ஒரு வித அழுத்தம் அவளை ஆட்டிப் படைத்துக் கொண்டு தான் இருந்தது ...

அப்பத்தா இல்லை என்ற குறையை தவிர வேறு எதுவும் அவளுக்கு குறையாக தெரியவில்லை,  அதே சமயத்தில் அந்தக் குறையிலிருந்து வெளி வர வழியும் தெரியாததால் தன்னுள்ளேயே கலங்கி  தவித்தாள் அந்த மணப்பெண்.

நிலைக்கண்ணாடியில் தன் அலங்காரத்தை பார்த்தவளுக்கு, இந்த அலங்காரம் தான்,  தன் மன உணர்வுகளை முற்றிலும் மறைத்த கேடயம் என்ற எண்ணம் வர,

" யூ ஆர் லூக்கிங் சோ சோ பியூட்டிஃபுல்  மை டேம்சில்..." என்ற அவளவனது வார்த்தைகளும் உடன் நினைவுக்கு வர, வெட்கம் கூடி சற்றே மன அழுத்தம் குறைய, உடனே
இரவு விருந்து நினைவுக்கு வர
அலங்காரத்தை கலைத்துவிட்டு,
மஞ்சளும், அரக்கும் கலந்த சாதாரண  டசார் புடவையை உடுத்திக் கொண்டு
கிளம்ப எத்தனிக்கும் போது ,
செல்வராணியின் நகைகள் அடங்கிய மரப்பெட்டி அவள் கண்ணில் பட்டது.

உடனே அவளது மனம் , செல்வராணி பேசிய கடைசி வார்த்தைகளை நினைத்து பார்த்தது ..

"என்னைக்கும் உன் மனசு போல உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் தாயி... மகாராசியா இரு..."

மீண்டும் மீண்டும்  அந்த வார்த்தைகள் அவள் மனதில் மையம் கொண்டு ஒலிக்க , திருமண வாழ்வின் மீதான நேர்மறை எண்ணங்கள் அவளை சூழ்ந்து கொள்ள தொடங்கின.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்ற வார்த்தை எல்லாம் என்றோ மலையேறிவிட்டது.

இன்றைய சூழ்நிலையில் மேற்கத்திய நாடுகள் போல், ஏன் அதைவிட மோசமாக நம் நாட்டில் காலையில் திருமணம் மாலையில் விவாகரத்து என்ற நடைமுறை
சர்வ சாதாரணமாகிவிட்டது ...

ஒவ்வொருவரின் திருமண வாழ்விலும் வெவ்வேறு  விதமான பிரச்சனைகள் ... விரல் ரேகைகள்  போல் அவைகள் எல்லாம்  தனித்துவமாக இருப்பதால் சமுதாயத்தால் மட்டுமல்ல  சட்டத்தால்   கூட ஒரு பொதுவான தீர்வினை இன்று வரை காண முடியவில்லை ..

சமீபத்தில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தில் சொல்வது போல், ஒரு மாநிலத்தின் முதல்வர்,  ஏன் ஒரு நாட்டின் பிரதமராக கூட பதவி வகித்து விடலாம்.

ஆனால் மனம் ஒத்த  தம்பதிகளாக,
திருமண வாழ்வில் இணைந்து, அதே காதலோடும் அன்போடும் கடைசி வரை  பயணிப்பதென்பது புலி பாலுக்கு சமமாகிவிட்டது.

தற்போதைய சூழ்நிலையில் அப்படி ஒரு திருமண வாழ்க்கை நூற்றில்,  20% பேருக்கு கூட அமையவில்லை என்பது தான் நிதர்சனம்.

கட்டிக் கொண்டு விட்டோமே என்ற  கடமைக்காக வாழ்பவர் பலர் ...  பொறுத்துக் கொள்ள கூட முடியாமல் பாதியிலேயே பிய்த்துக்கொண்டு செல்பவர்கள் சிலர் ....

இப்படி இருக்கும் நிலையில்,  தன் திருமண வாழ்வு எப்படி இருக்குமோ ... என்ற அச்சம்
அவளது மனதில் ஒரு ஓரத்தில் எழும் போதெல்லாம், செல்வராணியின் அந்த ஆத்மார்த்தமான ஆசிர்வாதம்  தான் அவளுக்கு நம்பிக்கையைத் தரும் அருமருந்து.

அதற்காக அவளுக்கு வீராவின் மேல் காதலோ நம்பிக்கையோ இல்லை என்றில்லை .  பல ஆண்டுகள் மாய்ந்து மாய்த்து காதலித்து,  ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு திருமணம் முடித்த, பலரது திருமண வாழ்வு விவாகரத்தில் முடிந்ததை அறிந்ததால் ஏற்பட்ட அச்சம் அது ... அவ்வளவே..

ஆனாலும் கொண்டிருக்கும் நம்பிக்கையை குலைப்பதும் , எது நடந்து விடக்கூடாது என்று அஞ்சுகிறோமோ அதனை நடத்திக் காட்டுவதும் தானே வாழ்க்கை .... அதற்கு ஸ்ரீப்ரியா மட்டும் விதிவிலக்கா என்ன ....

அவள் அஞ்சிய விவாகரத்தை வலிக்க வலிக்க,  அவளே வீராவிடம் கேட்கும் நிலைமையை கூடிய விரைவில் விதி ஏற்படுத்தப் போகிறது என அறியாமல்,  தன் பாட்டி செல்வராணியை ஸ்ரிசிப்பதாக எண்ணிக்கொண்டு , அவரது நகைகளை  தடவிப் பார்த்தவளுள்

"அம்மு .... "  என்ற செல்வராணியின் குரல்
கம்பீரமாக ஒலிக்க,  விழித்திரையிட்ட நீரோடு,  அறை முழுவதும்
சுற்றிப் பார்த்தாள்.

"அப்பத்தா ... நீ எங்கயோ இங்க  தான் இருக்கேன்னு தெரியுது .... எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு ...."

தேம்பினாள் பெண் .

அப்பொழுது பார்த்து வீராவின் அழைப்பு வர, சுதாரித்துக் கொண்டு அனுமதித்தவள்,

" வந்துகிட்டே இருக்கேன் ... இன்னும் 5 மினிட்ஸ்ல கீழ இருப்பேன் ..."
என்றாள்  இரவு விருந்துக்கு அழைத்தவனிடம்.

சாதாரண வேட்டி சட்டையில் கூட அவன் மிகுந்த கம்பீரமாக இருப்பது போல் பார்த்ததும் அவளுக்கு தோன்ற, அணிமணிகள் அதிகம் இல்லாமல் சாதாரண புடவையில் கூட அவள் அம்சமாக தெரிவது போல் அவனுக்கும் தோன்றியது.

ஆனால் இருவரும் பகிர்ந்து கொள்ளவில்லை.  அதற்குக் காரணம் அவளது முகத்தைப் பார்த்ததுமே,

" ஸ்ரீ ....  கண்ணெல்லாம் கலங்கி இருக்கு...  அழுதயா ..."

"அப்பத்தா நெனைப்பு வந்துடுச்சு ராம் ..."
என்றாள் கமரிய குரலில்.

அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

திருமணத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இருந்த நிலையில், திருமணம் நடப்பதற்கு  காரணமான, காண வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்த அந்த உன்னத ஜீவன் மரணித்தது மிகவும் கொடுமையான ஒன்றாகும்..

இந்த நிலைமை துரோகிக்கு கூட வரக்கூடாது  என்றெண்ணி கொண்டவன்,

" உன் பாட்டி எங்கேயும் போகல ...
அவங்க ஸ்தூல உருவமா இல்லேன்னாலும் சூட்சம உருவமா இருந்து உன்னை பார்த்து கிட்டு தான் இருக்காங்க .... கவலைப்படாத..."
என ஆறுதல் கூற, ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அவள் மெல்லிய புன்னகை சிந்தினாள்.

ஏனோ சூரியனைக் கண்ட பனிப்போல், அவனைக் கண்டதுமே அவளது துயரங்கள் துரும்பாய் காணாமல் போக,  அவளது கண்களில் மிளிர்ந்த புன்னகையே
அதனைப் பளிச்சிட்டு காட்ட  ,
ரசித்தவன்,

" வா....  நமக்காக  நம்ம வீட்டு ஆளுங்க சாப்பிடாம  வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க .... அவங்களோட போய் ஜாயிண்ட் பண்ணிக்கலாம் ..."

என இருவரும் அவரவர் குடும்பத்தினரோடு
சென்றமர்ந்து இரவு விருந்தை தொடங்கினர் .

நாளை திருமணம் முடிந்தால் மறுகணமே,  தன் தமக்கை, வேறு வீட்டு பெண்ணாகி விடுவாள் ....

அதற்கு மேல் அவளோடு ஆர்ப்பரித்துக் கொண்டு ஆரவாரத்தோடு, உணவு கூட உண்ண முடியாது ... போன்ற ஏதேதோ சிந்தனைகள் கோபாலை அதிகமாக வாட்ட,
தமக்கைக்காக காத்திருந்து,
அவளோடு இயல்பாக சிரித்து  பேசிய படி விருந்தை ரசித்து உண்டான்.

அம்மையப்பன் சுசீலாவை பற்றி சொல்லவே வேண்டாம் ...

திருமணம் முடிந்த கையோடு மகளும், திருமணத்திற்காக வந்திருந்த மகனும்
கிளம்பிச் சென்று விட்டால்,
செல்வராணியும் இல்லாத வீட்டில்
எப்படித்தான் தனியாக கழிக்கப் போகின்றோமோ என்ற பிரிவின் சோகத்தை மனதில் தேக்கிய படி ,
மகளோடு இரவு விருந்தை முடித்தனர்.

பிறகு இரு குடும்பத்தினரும், மறுநாள் அதிகாலையில் நிகழவிருக்கும்  திருமண ஏற்பாடுகள் மற்றும் அதற்குப் பின்பான திட்டங்களை பற்றி இயல்பாக
உரையாடிவிட்டு விடைபெற, வீரா
ஸ்ரீப்ரியாவிடம் " குட் நைட் " என நட்பாக மொழிந்து , அவளிடமிருந்து  புன்னகையோடு கூடிய பதிலை பெற்ற பிறகே விடை பெற்றான்.


குழந்தைகளை தங்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட அறையில் உறங்க வைத்துவிட்டு, மறுநாள் காலையில் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு தேவையான உடுப்புகளை பிரபா எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது சத்யன் அறைக்கதவை திறந்து கொண்டு பிரத்தியட்சமானான்.

அவர்களுக்கிடையே ஆயிரமாயிரம்  முட்டல் மோதல்கள் இருந்தாலும்,
இருவரும் அடுத்தவரிடம் யாதொரு விஷயத்தையும் மறைத்ததில்லை.

கொள்கையாக இல்லாமல்,  இயல்பாகவே இருவரும் பின்பற்றி வரும் வழக்கம் என்பதால், பிரபா கவிதாவின் அழைப்பை ஏற்று , பேசிய வசனங்கள் அனைத்தையும் சத்யனிடம் மறு ஒளிபரப்பு செய்ய,  கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் செந்தணலாகி  ஆகிப்போனது .

"பிரபா .... உனக்கு அறிவே கிடையாதா ... ஒரு தடவை சொன்னா புரியாதா ....  படிச்சவ தானடி நீ.... உன் தங்கச்சியை பத்தி நல்லா தெரியும் இல்ல .... இப்ப எதுக்கு தேவையில்லாம போனை எடுத்து,  இப்படி வில்லங்கமா பேசி வச்சிருக்க ...."

"அவ பாட்டுக்கு அவ ஃபிரெண்ட வச்சு போன் பண்ணிகிட்டே இருப்பா நாம பாட்டுக்கு சும்மா இருக்கணுமா  ..."

" ஸ்டுப்பிட் மாதிரி பேசாத ... நான் என்ன சொன்ன...  நீ என்ன செஞ்சு வச்சிருக்க .... இப்ப நீ அவ ஃபிரண்டோட  பேசினதிலிருந்தே, உனக்கு ஏதோ ஒரு வகையில விஷயம் தெரிஞ்சு போச்சுன்னு  உன் தங்கச்சிக்கு நல்லா புரிஞ்சிருக்கும்.... அவ போட்ட பிளான் வொர்க் அவுட் ஆகலன்னு தெரிஞ்சிருக்கும்  ... இப்ப உன்னை ட்ராப் பண்றதுக்காக,
வேற ஏதாவது புது பிளான் போட ஆரம்பிச்சிருப்பா   .... இப்ப நாம இருக்கிற சிச்சுவேஷன்ல இதையெல்லாம் தேவையா ...."

" அது வந்து... சத்யா ..."

" பேசாத ...  ரொம்ப  கோவத்துல இருக்கேன்.... என் தம்பி கல்யாணம் நல்லபடியா நடந்தாகணும்  ... அது ஒன்னு தான் இப்போதைக்கு என் மனசுல ஓடிக்கிட்டு இருக்கு ....இப்ப  நடந்ததை பத்தி பேசி, வீண் விவாதம் பண்ணி  ரெண்டு பேரும் மூஞ்ச தூக்கி வச்சிக்கிட்டு நாளைக்கு சபையில நின்னா  பார்க்க  நல்லா இருக்காது .... இந்த பிரச்சனைக்கு இப்போதைக்கு ஃபுல் ஸ்டாப் வச்சிட்டு போய் தூங்குற வழிய பாரு ..."

ஒரே போடாக போட்டுவிட்டு, 
கட்டிலின் மறுபுறத்திற்கு சென்று, அவளுக்கு முதுகு காட்டியபடி  படுத்துக்கொண்டான்.

பிரபாவுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தன .

திருமணம் முடிந்து இத்தனை ஆண்டுகளில்,  கடந்த பத்து தினங்கள் தான் இருவரும் மிகுந்த அன்னோன்ய தம்பதிகளாக வாழ்ந்த நாட்கள் எனலாம் ...

இருவருக்குமே கடந்து சென்ற 10 நாட்களும் சர்க்கரை துளிகளாகத்தான் இனித்தது ...

இனி துன்பமில்லை துயரமில்லை அன்னியோன்யம் மட்டுமே என்றெண்ணி கொண்டிருக்கும் போது
இப்படி தங்கை என்ற தாடகை மூலம் மீண்டும் பிரச்சனை வரும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை ...

அவள் மீது தான் பிழை இருக்கிறது ...

அழைப்பை ஏற்காதே என திட்டவட்டமாக சொல்லிவிட்டு சென்ற பின்னும்,  அழைப்பை எடுத்ததோடு மட்டுமல்லாமல் மோசமான பின் விளைவை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது என யோசிக்காமல் தங்கையின் கோபத்தை தூண்டுவது போல்  பேசியது 
பெரிய மடமை அல்லவா  ...

திருமணம் முடித்த நாட்களில் இருந்து  கணவன் மனைவிக்கிடையே  ஏற்படும் தொண்ணூறு சதவீத பிரச்சனைக்கு ப்ரீத்தி தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்திருக்கிறாள்  ...

இன்றும் அப்படித்தான்... எங்கேயோ அமர்ந்து கொண்டு, எனக்கும் என்னவனுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்கி  சாதித்து விட்டாளே ...

எத்துணை முறைதான்  தோற்றுப் போவேன் அந்த சிறிய பெண்ணிடம்  ...

அவளை  புரிந்து கொள்ள இத்துணை நாட்கள் தேவைப்பட்ட நிலையில், புரிந்து கொண்ட பின்பும் கணவனின் பேச்சைக் கேளாமல் செயல்பட்டது மாபெரும்  முட்டாள்தனம் அல்லவா   ... என்றெல்லாம்  எண்ணி எண்ணி வருந்தினாள் ...

மாலையில் இருவரும் ஜோடியாக சபையில் இன்முகத்தோடு  வலம் வந்தது  மனக்கண் முன் விரிந்து  மேலும் அவளை துயரப்படுத்த
அந்த இரவு விளக்கொளியில் ,
கண் கலங்கிய படி  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செய்வதறியாது சிந்தித்தவள், 

புலி வாலை பிடித்தது போல் பிரச்சனையை கரடு முரடாக கையாண்டு விட்டோம் ... இனி பின் வாங்கினால் இழுக்கு மட்டுமல்ல பல சேதாரங்களை எதிர் கொள்ள வேண்டி வரும் ..

இனி எது நடந்தாலும், இன்று போலவே விட்டேற்றியாகவும் விரைப்பாகவும் பேசுவது தான் சாலச் சிறந்தது , இறங்கிப் போய் சாந்தமாக  பேசுவது அறிவிலித்தனம் ...

என்ற தெளிவான  முடிவை தன் தங்கையின் விஷயத்தில் எடுத்த  பின்னரே,
உறங்கச் சென்றாள் பிரபா.


ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....












































































Comments

  1. Awesome as always 💕💕💕💕 keep rocking 💕💕💕 waiting for the next one 💕💕💕

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment