அத்தியாயம் 54
அருந்திய தேநீருக்கு பணத்தை செலுத்தி விட்டு வந்து ராம்சரண் காரை கிளப்பிய மாத்திரத்தில், மீண்டும் அவனது அலைபேசி அலறியது.
சற்று முன் கார் கதவில் பொருத்திய அலைபேசியை எடுத்து பார்த்தவனுக்கு மஹிக்காவிடமிருந்து அழைப்பு வருவது தெரிய , கோபம் சுருக்கென்று ஏற, ஏற்கனவே கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லாத நிலையில், பொறுமையான மனநிலையும் இல்லாததால் மஹிக்காவின் அழைப்பை ஏற்று பிரச்சனையை பெரிதாக்க விரும்பாமல் அழைப்பை அனுமதிக்காமல் அலைபேசியை அமைதிக்கு தள்ளினான்.
அவன் தந்தை, மஹிக்காவை பற்றி லட்சுமியிடம் கொளுத்தி போட்டது தெரியாமல் , அவன் அவ்வாறு யோசிக்க அவன் மனையாளோ , தான் அருகில் இருப்பதால் பேச பிடிக்காமல், அழைப்பை எடுக்காமல் விட்டு விட்டான் என்றெண்ணிக் கொண்டு உள்ளுக்குள் கலங்கித் தவித்தாள்.
கிளம்பும் போது இருந்த புத்துணர்வு மொத்தமாய் வடிந்து சோகமே உருவாய் காணப்பட்டவளை கடைக் கண்ணால் ஆராய்ந்தவனுக்கு காரணம் பிடிபடாமல் போக,
" ரொம்ப நேரமா, ட்ராவல்ல இருக்கிறதால உடம்பு ஏதாவது பண்ணுதா டி ... பின் சீட்ல கால நீட்டி படுத்துக்கிறயா... " என்றான் அவளை பார்த்து அக்கறையாக.
அவளோ அவனை பார்க்காமல், வேறெங்கோ பார்த்தபடி,
"ஒன்னும் இல்ல ... தூக்கம் வருது ..." என்ற விலகலான பதிலை சொல்லிவிட்டு, கண்ணயர்வது போல் காரின் பக்கவாட்டு கதவின் மீது சாய்ந்து கொள்ள, ஏனோ அதனை ஏற்க மறுத்த அவன் உள்ளுணர்வு அவளிடம் தென்படும் மாற்றத்தை ஆராயும் பணியில் இறங்கியது.
அவனுக்கு முகம் காட்டாமல் கண்மூடி சாய்ந்திருந்தவளின் கண்கள் குளம் கட்டியிருக்க, மனமோ முதன்முறையாக வேறு மாதிரி சிந்திக்கத் தொடங்கியது.
அவனுக்கு குழந்தைகள் என்றால் உயிர் .... ஊட்டிக்கு வந்த முதல் தினத்தன்றே அவன் சொன்னது போல், அவர்களுக்கிடையே இருக்கும் உறவு , குழந்தைகள் மட்டும் தான் ...
சற்றுமுன் அவன் காட்டிய அக்கறை கூட, அவள் வயிற்றில் வளரும் அவன் குழந்தைகளின் நலம் கருதி தான் .....
அதோடு என் குழந்தைகளை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டியது மட்டும் உன்னுடைய கடமை.... என்று அவன் வாய்விட்டே மொழிந்தும் கூட அதனை உள்வாங்கிக் கொள்ளாமல், எனக்காக, என்னை காண்பதற்காக வந்திருக்கிறான் என்றெண்ணியது எவ்வளவு பெரிய மடமை ....
என்று தன்னுள்ளேயே புலம்பித் தவித்தபடி அசதியின் காரணமாக கண்ணயர்ந்து போனாள்.
அப்போது பார்த்து மீண்டும் அவனது அலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று மஹிக்காவிடமிருந்து வந்தது, அதில்
"நீங்கள் மதுரைக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா ..." என்ற கேள்வி ஆங்கிலத்தில் இருக்க, துணுக்குற்றவன் தீவிர சிந்தனையில் இறங்கினான்.
ஓரிரு கணம் யோசித்ததில், கேள்வியின் அடிநாதம் புரிந்துவிட, தந்தையிடம் இளைப்பாறுவதாக கூறி, காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று வீராவை தொடர்பு கொண்டு,
"வீரா, உன் மேரேஜ்க்கு மஹிக்காவையும் இன் வெயிட் பண்ணி இருக்கியா ..." என்றான் எடுத்த எடுப்பில்.
"ஆமா .... ஏன் கேக்குற ..."
"அடேய், ஏன்டா தேவை இல்லாம என்னை சிக்கல்ல மாட்டி விட்ட ..."
"ஏன் , என்னாச்சு .. அவ நம்ப ஆபீஸ்ல சேல்ஸ் டீம்ல இருக்கா ... எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுக்கும் போது அவளுக்கும் கொடுக்கிறது தானே முறை ....ஏன் உனக்கும் அவளுக்கும் ஏதாவது ப்ரொபஷனல் டிஸ்ப்யூட்டா..."
"அப்படி இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேனே... பிரச்சனை வேறடா ..." என்றவன் தனக்கும் மஹிக்காவுக்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாக நடந்து கொண்டிருக்கும் பனிப்போரை விவரிக்க, கேட்டுக் கொண்டிருந்தவன் குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
"டேய் , சிரிக்கிறத நிப்பாட்டு டா .... கல்யாண மாப்பிள்ளனு பார்க்க மாட்டேன், அடிச்சு பொளந்துடுவேன் ..."
"சரண், இதையெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டீயா ... இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி , அவ கல்யாண மண்டபத்தோட லொகேஷன் கேட்டிருந்தா .... ஷேர் பண்ணேன் ..." என சிரிப்பினூடே அவன் முடிக்க,
"ஏற்கனவே எனக்கும் லட்சுமிக்கும் நடுவுல ஏகப்பட்ட பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு ... ஏதோ குடும்ப பிரச்சினை, புருஷன் பொண்டாட்டிகுள்ள இருக்கிற ஈகோ பிரச்சனைங்கிறதால, அவ என் முகத்தையாவது பார்த்துகிட்டு இருக்கா .... இவ வந்து உன் கல்யாணத்துல ஏடாகூடமா ஏதாவது செஞ்சா என் நிலைமை இன்னும் மோசம் ஆயிடும் டா ..."
வீரா சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய படி ,
"கவலைப்படாத, அவ ரிசப்ஷனுக்கு வரல கல்யாணத்துக்கு தான் வர போறா... அப்ப மட்டும் கொஞ்சம் சூதானமா இருந்துக்க... "
" அடேய், எனக்கு வர்ற கோவத்துக்கு உன்னை நாலு சாத்து சாத்தணும் போல இருக்கு ....."
"கோவப்படாதீங்க மிஸ்டர் ராம் சரண் ... பி கூல்... நான் இருக்கேன் ..."
" நீ இருப்ப... நான் இருப்பேனா ..."
" சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ..."
" உன் சிந்தனையில தீய வைக்க .." என கொந்தளித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தவன், பற்களை நறநறவென கடித்த படி , யோசனையில் மூழ்கி போனான்.
நண்பன் கோபத்தில் அழைப்பை துண்டித்ததை எண்ணி மீண்டும் வாய்விட்டு சிரித்தபடி, நலகிற்கு தயாரானான் வீரா.
சற்று பெரிதான, வசதி படைத்தவர்கள் தேர்வு செய்யும் திருமண மண்டபத்தை தேர்வு செய்திருந்தார் அம்மையப்பன்.
திருமண மண்டபத்தின் முகப்பு அலங்காரத்தில் இருந்து, விதவிதமான உணவு வகைகள் வரை அனைத்திலும் உயர் தரத்தையே கையாண்டிருந்தார் மனிதர்.
மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களுக்கு மட்டும் ஒரு படுக்கை அறை, பெரிய கூடம் கொண்ட மினி அபார்ட்மெண்ட் போலான டீலக்ஸ் அறைகளை ஒதுக்கி இருந்தார்.
வீரா மற்றும் ஸ்ரீப்ரியா குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள் புடை சூழ, அன்றைய காலைப்பொழுதில் அழகாக நடந்தேறியது நலங்கு வைபவம்.
மெஜண்டா நிறத்தில், வெந்தய நிற பார்டர் கொண்ட அழகிய பட்டு புடவையில், மிதமான அலங்காரத்தோடு ஸ்ரீப்ரியா அம்சமாக காட்சி அளிக்க, சபை நடுவே அவளை ஆழ்ந்து ரசிக்க முடியாமல் எதேச்சையாக பார்ப்பது போல் அவ்வப்போது தன் விழிகளால் ஸ்பரிசித்து கொண்டிருந்தான் நாயகன்.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வீற்றிருந்தவனை , ஓரிரு முறை தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு, அவனது நாயகியும் நாணத்தோடு குனிந்து கொண்டாள்.
மணப்பெண், மணமகனுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, காப்பு கட்டும் சடங்கு அழகாக நடந்தேறியது.
பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு, ஒவ்வொரு சடங்கிலும் பங்கெடுத்துக் கொண்டு நலங்கு விழாவை சிறப்பித்தனர்.
கம்பீரத்திற்கும், மிடுக்கிற்கும் பெயர் போன அம்மையப்பனை , தாயின் இறப்பும், மகளை திருமணத்திற்கு பின் பிரியப் போகிறோமே என்ற பிரிவின் துயரமும் வெகுவாக வாட்ட, வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெகு இயல்பாக இருக்க முயற்சித்தார் மனிதர்.
அவருக்குள் நீர் பூத்த நெருப்பாய் மறைந்திருந்த பாசம், தற்போது மழை வெள்ளமாய் ஊற்றெடுக்க, இத்துணை ஆண்டு காலம் தன் மகளிடம் தேவைக்கு மட்டுமே பேசிக் கொண்டிருந்தவர், தேவையை உருவாக்கிக் கொண்டு பேசி மகிழ்ந்தார்.
சடங்குகள் நடந்து முடிந்ததும்,மதிய உணவு உண்ண, அனைவரும் விடைபெறும் போது ஸ்ரீப்ரியாவின் விழிகள் வீராவை தேட, அதற்காகவே காத்திருந்தவன் போல் சத்யனிடம் பேசிக் கொண்டிருந்தவன் பேச்சை அரைகுறையாக முடித்துவிட்டு, தன்னவளை பார்த்து இரு புருவங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தி , கண்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் சிமிட்டி, அழகிய வெண்பற்கள் தெரிய சிரிக்க, அதனை அழகாக உள்வாங்கி நீண்ட நாட்களுக்குப் பிறகு கன்னக்குழி தெரிய, மனக்கலேசம் மறைந்து புன்னகைத்தாள் அவன் மாது.
அவளுக்கு நட்பு வட்டம் வெகு குறைவு. கல்லூரி கால நட்பு வட்டங்களில் ஓரு சிலரை தவிர, வேறு எவருடனும் அவள் நட்பை நீட்டிக்காததால், அவர்களை மட்டும் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
அவளது ஆஸ்திரேலியா நட்பு வட்டங்களான சிவா, அனுவிற்கு Whatsappல் அழைப்பிதழை அனுப்பியதோடு தொடர்பு கொண்டு பேசினாள்.
பணி சுமை காரணமாக திருமணத்திற்கு வர இயலாது என அனு வருந்த, சிவா மட்டும் திருமண முகூர்த்தத்தில் கலந்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தான்.
இப்படி பெரிதாக நட்பு வட்டம் அமையப் பெறாதவள், வீட்டு மூத்த தலைமுறை பெண்களோடு மட்டும் புடை சூழ வலம் வந்து கொண்டிருந்த நிலையில், வீராவின் இயல்பான உற்சாக புன்னகை, சமீபகாலமாக சோகத்தை மட்டுமே அனுபவித்து வந்தவளுள் புதுமணப் பெண்ணுக்கான உற்சாகத்தையும் பூரிப்பையும் அங்குலம் அங்குலமாக அரும்ப செய்ய தொடங்கின.
வீராவின் மனமோ விண்ணைத் தொடும் விண்கலம் போல் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
தன்னவளுடன் மதிய உணவை உண்டு களிக்க ஆசை பிறந்தாலும் , தற்போதைய சூழல் அதற்கு தடை விதிப்பதை உணர்ந்து , நாளைய தினத்தை எதிர்பார்த்தபடி அடக்கி வாசித்தான்.
ருக்மணியின் குடும்பம் திருமணம் மண்டபத்தை அடைந்த பத்தாவது நிமிடத்தில், ராம் சரண் தன் குடும்பத்தோடு அங்கு வந்து சேர்ந்தான்.
அவன் ஸ்ரீலட்சுமியின் தாய் தந்தையை மரியாதையோடு நலம் விசாரிக்க, மகள் வாழ்வு சீரடைந்ததாக எண்ணி மகிழ்ந்த அந்தத் தாய், வழக்கம் போல் மருமகனை மிகுந்த பணிவோடு கொண்டாடி தீர்த்தார்.
வீரா தன் அண்ணன் சத்யனுடன்அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை வழங்கியதோடு, அவர்களுடனேயே அமர்ந்து மதிய உணவை உண்டு முடித்தான்.
பிறகு இரு குடும்பத்திற்கும் எதிரெதிரே அமைந்த டீலக்ஸ் சியூட் அறைகள் வழங்கப்பட , உண்டு முடித்து அறைக்கு திரும்பிய லட்சுமி குளியலறைக்குச் சென்று புத்துணர்வு பெற்றதும், தன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கும் கணவனின் முகம் பாராமல் தன் பெற்றோருக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று முடங்கினாள்.
சமீபகாலமாக அவளும் ராம்சரணும் பேசிக் கொள்வதில்லை என்றாலும், இப்படி பாராமுகமாகவும் இருந்ததில்லை.
இருவருக்குமே அடுத்தவரின் அருகாமை மிகவும் பிடித்திருந்தது.
இவ்வளவு ஏன், வீராவின் திருமணத்திற்காக ஊட்டியில் பயணத்தை தொடங்கும் போது கூட, அவள் கண்களில் ஒருவித மென்மையும் உற்சாகமும் பொங்கி வழிய காணப்பட்டவளுக்கு , திடீரென்று ஏன் இந்த விலகல்... என புரியாமல் குழம்பி தவித்தான் அவளவன்.
குழந்தையை ராமலட்சுமியும் ருக்மணியும் மாறி மாறி கொஞ்சியபடி தங்களது அறைக்கு கொண்டு சென்றதும்,
மஹிக்கா நாளைக்கு தான் பிச்சர்க்கே வரப்போறா .... வந்து என்ன செய்யப் போறாளோனு வயித்துல புளிய கரைச்சுக்கிட்டு இருக்கிற நேரத்துல இது என்ன புது பிரச்சனை .... இவ ஏன் திடீர்னு மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்கா ...
என தனிமையில் யோசித்து யோசித்து தலைவலியை இலவசமாக பெற்றான் நாயகன் .
மாலையில் இரு குடும்ப முக்கிய உறுப்பினர்களும் மணமேடையில் புடை சூழ , அம்மையப்பனும் பொன்னம்பலனும் தாம்பூலம் மாற்றிக் கொள்ள நிச்சயதார்த்த வைபவம் அருமையாக நடந்தேறியது.
கடல் நீல நிறத்தில் , வாடாமல்லி நிற ஜரிகையில் வைர ஊசி அச்சு இழையோடிய பட்டு புடவையில், பொருத்தமான அணிமணிகளோடு மிகுந்த அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தாள் வீராவின் நாயகி.
அவளது புடவைக்கு பொருத்தமாக அதிக தங்க கரையிட்ட பட்டு வேட்டிக்கு, நீல நிற சட்டை அணிந்து மிகுந்த கம்பீரத்தோடு காட்சியளித்தவன் , காணக் கோடி கண்கள் வேண்டும் என்பது போல், அவ்வப்போது பிறர் அறியாமல் அவளை விழிகளால் தீண்டி ரசித்துக் கொண்டிருந்தான்.
அவனது அருகாமையே அவளது முகச்சிவப்பை கூட்டி இருக்க, தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் உரசியப்படி நின்றிருந்தளிடம், தன் குடும்ப உறுப்பினர்களில் ஆரம்பித்து, ராம்சரண் மற்றும் இன்னும் பிற முக்கிய உறவு, நட்பு வட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்தான்.
அவளும் தனது குடும்ப உறுப்பினர்களை அவனுக்கு அறிமுகப்படுத்த, உடன் ஆர்கெஸ்ட்ராவில் இசைத்த அருமையான தமிழ் திரை இசை பாடல்களும் , அவர்களது உள்ளக் காதலை அழகாக கிளர்ந்தெறிய செய்ய, காதலன் திரைப்படத்தில் வரும் 'என்னவளே' பாடல் போல் இருவரது ஆன்மா மட்டும் உடலில் இருந்து தனியாகப் பிரிந்து சுவிட்சர்லாந்து, டார்ஜிலிங் போன்ற பனிப்பிரதேசங்களில் டூயட் பாடி ஆடத் தொடங்கின .
மேற்கூறிய மென்மையான இசையை கூட ரசிக்கும் மனநிலையில் இல்லாமல், பாசி பச்சை நிற செமி காஞ்சிபட்டில், குறைவான அலங்காரத்துடன் லேசான மேட்டிட்ட வயிற்றோடு மிளிர்ந்த மனையாளையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் ராம்சரண்.
அவளும் சந்தன நிற சட்டை , கருப்பு நிற ஜீன்ஸில் மிகுந்த ஆளுமையும் தோரணையுமாய் வலம் வந்து கொண்டிருந்த தன்னவனை , அவன் அறியாத தருணத்தில் , பார்த்து ரசித்துக் கொண்டு தான் இருந்தாள், ஆனால் ஒருவித வலியோடு.
இந்த ஜோடிக்கு நேர் மாறாக, சத்யனும் பிரபாவும் மிகுந்த ஆர்ப்பரிப்போடு சபையில் இணை பிரியாமல் சுழன்று சுழன்று வரவேற்பு பணியில் ஈடுபட்டிருக்க, வீராவின் தங்கை அன்புச் செல்வி தாய்மை அடைந்திருந்தாலும், தன் கணவன் செந்திலோடு அவளது புகுந்த வீட்டு உறவினர்களை வரவேற்பதில் ஆர்வம் காட்ட, அப்பொழுது பார்த்து பிரபாவின் அலைபேசி சிணுங்கியது.
சபை அரவத்திலிருந்து தப்பித்து, சற்று தள்ளிச் சென்று, அலைபேசியை அனுமதித்தவளிடம்,
" அ....அக்கா நா... நான் கவி பேசறேன்க்கா......." என திக்கி திணறி உயிர் போகும் வலியில்,எதிர் முனையில் ப்ரீத்தியின் தோழி பேச,
" சொல்லு கவி, ஏன் ஒரு மாதிரி பேசற... என்ன ஆச்சு ...." என்றாள் பிரபா பதட்டத்தோடு.
" அக்கா .... இ....இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நானும் ப்ரீத்தியும் ஸ்கூட்டில ரவுண்டானால திரும்பும் போது , ராங் சைடுல வந்த ஆம்னி வேன் எங்க மேல மோதிருச்சு ... நான் பிளாட்பார்ம்ல போய் விழுந்துட்டேன்.... எனக்கு கை முட்டி சிராய்ச்சிடுச்சு .... கால்ல லேசா அடிபட்டுடுச்சு .... ப்ரீத்தி பக்கத்துல இருந்த கரண்ட் கம்பத்து மேல விழுந்ததால, கையும் காலும் பயங்கரமா பிராக்சர் ஆயிடுச்சிக்கா.. "
"ஓ காட் ... இப்ப ப்ரீத்தி எங்க ..." என பிரபா தன்னை மீறி உச்சஸ்தாழியில் பதற
"நாங்க ரெண்டு பேருமே ஜேபி ஹாஸ்பிடல்ல தான் இருக்கோம்கா... எனக்கு அடி கம்மிங்றதால, இப்ப தான் டாக்டர் ட்ரீட்மென்ட் முடிச்சுட்டு போனாங்க .... ப்ரீத்திக்கு ட்ரீட்மெண்ட் போய்கிட்டு இருக்கு , ப்ளீஸ் கா சீக்கிரம் கிளம்பி வாங்க .... என் அம்மா அப்பாவுக்கு போன் பண்ணிட்டேன் ... அவங்களும் கேரளால இருந்து கிளம்பிட்டாங்க ..."
அழுகையினூடே அவள் சொல்லி முடித்து அழைப்பை துண்டிக்க, ஒன்றுமே புரியாமல் உறைந்து நின்றாள் பிரபா.
"பரவால்ல மச்சி ... சும்மா சொல்லக்கூடாது ... நீ கூட சீரியல் நடிகை மாதிரி அழுது வடிஞ்சு அழகாவே நடிக்கிற ...." என்றாள் ப்ரீத்தி தன் தோழி கவிதாவிடம் மருத்துவமனை கட்டிலில் தெனாவட்டாக படுத்தபடி .
"ப்ரீத்தி, எதுக்கு தேவையில்லாம இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க ... உன் அக்கா பாவம் டி ..."
"அவளா பாவம் .... அவ மச்சினன்... அதான்... பாண்டி அத்தானை நான் லவ் பண்றேன், கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுன்னு சொன்னதுக்கு, என்னை அடிச்சு வெளுத்துட்டா... அதைவிட கொடுமை, காதுல ரத்தம் வர்ற அளவுக்கு அட்வைஸ் மழை வேற ..." என்றாள் உண்மையை முற்றிலும் மறைத்து.
"உன் அக்கா உனக்கு கெட்டது செய்வாங்களா.... அவங்க மச்சினன் குடி , கஞ்சானு கெட்ட பழக்கமுள்ள தப்பான ஆள இருக்கலாம் ... அதனால உன்னை அவருக்கு கட்டி வைக்க அவங்க இஷ்ட படாம இருந்திருக்கலாம் ..." என்றாள் கவிதா, ப்ரீத்தியின் சூது தெரியாமல்.
"அந்த ஈர வெங்காயம் எல்லாம் ஒன்னுமில்ல... பாண்டி அத்தானை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கே ஓரகத்தியா நான் அந்த வீட்டிக்கு போறது அவளுக்கு புடிக்கல ..." என்றாள் ப்ரீத்தி வன்மத்தோடு .
"நான் இப்ப விஷயத்தை சொன்னதும் உன் அக்கா ரொம்ப ஷாக் ஆயிட்டாங்க .... எப்படியும் இன்னைக்கு ராத்திரியே கிளம்பி வந்துடுவாங்க ... வந்ததும் நிச்சயம் உண்மை தெரிஞ்சிடும் ... அப்ப என்ன பண்ணுவ ...."
"கையை எப்படி அறுத்துக்கிட்டா உயிர் போகாதுனு தெரிஞ்சு திட்டம் போட்டு கைய அறுத்துக்கிட்டு , போலீசையையே ஏமாத்தி டீச்சர்ரோட வேலைக்கு ஒல வச்சவ நான்... இதைக் கூட யோசிச்சி இருக்க மாட்டேனா ....
என்னை மட்டும் ஒதுக்கி வச்சிட்டு, அவ மட்டும் நிம்மதியா கல்யாணத்துல என்ஜாய் பண்ணலாமா .... பண்ண விட்டுடுவேனா அதுக்காகத்தான் கால் லேசா பிசகறா மாதிரி,
வண்டிய நேக்கா கொண்டு போய் கம்பத்துல இடிச்சு, கீழ விழுந்து, இங்க அட்மிட் ஆயிருக்கேன் .... இங்க வந்து உண்மைய தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் அவ என்னை வெட்டி போட்டாலும் பரவால்ல ... ஆனா அவ நிம்மதியா கல்யாணத்துல கலந்துக்க கூடாதுங்கிறது தான் என் ப்ளானே....
அதோட அடிபட்டு ஹாஸ்பிடல் இருக்கேன்னு தெரிஞ்சாலே எதையுமே விசாரிக்காம அவளும் மாமாவும் இங்க கிளம்பி வந்துடுவாங்க... ஒருவேளை சந்தேகப்பட்டு ஹாஸ்பிடல் போன் நம்பரை தேடி கண்டுபிடிச்சு போன் பண்ணி என் பேரை சொல்லி ரிசப்ஷன்ல விசாரிச்சாங்கன்னா ....... அதுக்காக தான் இந்த அட்மிட் நாடகம் ...."
" ஓ.... அதுக்கு தான் டாக்டர், கால் சிராய்ப்புக்கு பிளாஸ்டர் போட்டுட்டு கிளம்புன்னு சொல்லும்போது கூட, ஒருநாள் அட்மிட் ஆயிட்டு போறேன்னு பிடிவாதம் பண்ணியா ம்ம்ம்ம்.... சும்மா சொல்லக்கூடாது ... சீரியல் வில்லிங்க எல்லாம் உன்கிட்ட பிச்சை எடுக்கணும் ...." என்ற கவிதாவை மிடுக்காக பார்த்து
" உனக்கே தெரியும், ஸ்கூல் படிக்கும் போது நம்ம கிளாஸ்ல படிச்ச பிரபுவோட எனக்கு பிரேக் அப் ஆயிடுச்சு ...."
"அதான் தெரியுமே ... இப்ப தானே சொன்ன... அதுக்கு அவனை பழி வாங்காம , உனக்கு நல்லது நெனச்சு அட்வைஸ் பண்ண டீச்சரை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் எழுதி வச்சதோட கையறுத்துகிட்டு நாடகமாடி , அவங்கள போலீஸ் கேஸ்ல மாட்ட வச்சு, அவங்களோட வேலையே போக வச்சியே ..."
" யூ ஆர் ரைட் ... எனக்கு அப்பவும் சரி, இப்பவும் சரி பிரபுவோட பிரேக் கப் பத்தியோ, இல்ல பாண்டி அத்தானோட கல்யாணம் நடக்காதது பத்தியோ கவலை இல்லை ... எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு ... யார் எனக்கு பெரிய புடுங்கி மாதிரி அட்வைஸ் பண்ணாலும் புடிக்காது .... அன்னைக்கு அந்த டீச்சர் பண்ணா ... இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் அக்கா பண்ணா.... அதுக்கு பழி வாங்க தான் இது ...." என்று ஏதேதோ காரணங்களை அடுக்கினாள் உண்மை காரணத்தை முற்றிலும் மறைத்து .
ப்ரீத்திக்கு புத்தி தெரிந்த நாட்களில் இருந்து, தமக்கையின் திருமண வாழ்வின் மீது ஒருவித பொறாமை உண்டு.
காரணம் ...
சத்யனின் தோற்றம், அவன் பல சமயங்களில் எடுத்தெறிந்து பேசும் ரகம் என்றாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் பாங்கு, கணவன் மனைவிக்கிடையே எத்துணை கலவரத்தை திட்டமிட்டே ஏற்படுத்தினாலும் ஏதாவது ஒரு வகையில் சரி கட்டி விடும் அவன் திறமை, அவனுடைய பொருளாதார நிலை .... இப்படி பலவற்றில் அவனை பிடிக்கும் ....
ஆதலால் தான் தன்னைவிட கிட்டத்தட்ட 15 வயது பெரியவன் என்று தெரிந்தும், சத்யனின் மீது ஒருவித ஈர்ப்பு அவளுக்கு இருக்கவே செய்தது. வீராவின் மீதும் இனக்கவர்ச்சி உண்டென்றாலும் அவ்வப்போது சந்திக்கும் சத்யனின் மீது அதை விட ஈர்ப்பு அதிகமாகவே இருந்தது ....
அதற்குக் காரணங்கள்..
அவளது அடிப்படை குணம் ... வயது, சிந்தனைகளை சரியான வழியில் செலுத்தாமல், குறிக்கோள்கள் ஏதும் இல்லாமல் தற்குறியாக அலையும் பாங்கு, படிக்கும் பாலுணர்வுகளை தூண்டக்கூடிய புத்தகங்கள், பார்க்கும் திரைப்படங்கள்... உடன் இருக்கும் கண்ணியமற்ற நண்பர்கள் ....என பலவற்றை சொல்லலாம் ...
இப்படி மேற் சொன்னவை எல்லாம் ப்ரீத்தியின் செயல்பாடுகள், சிந்தனைகளுக்கு காரணமாகி போயிருந்த நிலையில் ,
குழந்தையாக எண்ணி வளர்த்த தங்கையின் தரங்கெட்ட செயல்பாடுகளை சமீபத்தில் பிரபா அறிந்து கொண்டதிலிருந்து, அவளைக் கண்டமேனிக்கு வசைப்பாடுவதை வழக்கமாக்கி கொள்ள, தமக்கை தன்னை இனம் கண்டு விட்டாள் என்பதே ப்ரீத்திக்கு வகைத்தொகை இல்லாமல் வன்மத்தையும் கோபத்தையும் அவள் மீது அதிகரிக்கச் செய்திருக்க, அதன் வெளிப்பாடே, இந்தப் போலி விபத்தைச் கூறி பிரபாவை திருமணத்தில் கலந்து கொள்ள விடாமல் செய்யும் பழிவாங்கும் திட்டத்தின் தொடக்கப் புள்ளியாகி போனது.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
என் இனிய உறவுகளுக்கு,
கார்த்திகை தீப தின நல்வாழ்த்துக்கள் ...
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா
ReplyDeletethanks a lot ma
DeleteSuper akka very nice 👍👍👍
ReplyDeleteIntha Preethi thiruntha porathu illa
thanks a lot ma
DeleteNice இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் 💐
ReplyDeletethanks a lot ma
DeleteTerrific
ReplyDeletethanks ma
DeleteIniya dheepa thirunaal nalvazhthukal akka... Asusual story interesting uh poguthu... Preethi ya lam nambi prabha ethukaga varanu therila.. Avalam thirunthatha jenmam. Oru nalla punishment yaarachum kudutha nalla irukum...
ReplyDeletekoodiya sekiram preethikku kidikum da... thanks ma
Deletethanks a lot ma
ReplyDeleteSontha veettulaiye oru visham,, ulagathil ippam ippadi than nadakkirathu
ReplyDelete