அத்தியாயம் 53
ஊட்டியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வீரா, உயிர் நண்பன் ராம்சரணை தொடர்பு கொண்டு,
" உன்னையும் , அப்பாவையும் பார்த்து இன்விடேஷன் கொடுக்கலாம்னு ஊட்டிக்கு வந்துகிட்டு இருக்கேன் ..."
"கங்கிராஜுலேஷன்ஸ் வீரா , மோஸ்ட் வெல்கம் டா ..." என்றவன், ராமலட்சுமி திருமண விவகாரத்தில் காமாட்சியை சந்தித்து தெரிந்து கொண்ட உண்மைகளை மூச்சு விடாமல் மொழிந்து முடித்தான்.
"நீ லட்சுமி கிட்ட , காமாட்சியை மீட் பண்ணத பத்தி சொன்னையா ..."
" ம்ச்... இல்லடா ... இப்ப நான் அவகிட்ட அந்த விஷயத்தை சொன்னேனா, உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அவளை தேடி வந்து இருக்கேன்னு நினைச்சுப்பா ... அவ இல்லாம வாழவே முடியாதுன்னு முடிவு எடுத்து வேலையை விட்டுட்டு , ஊட்டிக்கு கிளம்ப தயாரா இருக்கும் போது தான், எனக்கு விஷயமே தெரிய வந்துச்சு... அதையெல்லாம் சொன்னா இப்ப அவ இருக்குற மனநிலையில புரிஞ்சிப்பாளானு கூட தெரியல... அதோட அருணா விஷயத்தை விட,
அவ வீட்டை விட்டு வெளியே போனது தெரிஞ்சும், லாஸ்ட் த்ரீ மந்த்ஸா ஈகோ பார்த்துகிட்டு அவளை நான் காண்டாக்ட் பண்ணாம இருந்தது தான் ... அவள ரொம்பவே ஹர்ட் பண்ணியிருக்கு ....
நான் இப்ப அவளை அதிகமா லவ் பண்ணும் போது தான் அவ என்னை எவ்ளோ கண்மூடித்தனமா லவ் பண்ணி இருக்கான்னு புரியுது...
மூணு குழந்தைகளுக்கு தகப்பன் ஆகப் போகும் போது தான், நான் அவ மேல வச்சிருக்கிற லவ்வையே புரிஞ்சிக்கிட்டேன் ....
நான் புரிஞ்சுகிட்ட என் லவ்வ, அவளுக்கு புரிய வைக்க மூணு மாசவது எனக்கு தேவைப்படும் இல்லையா... அதனால என் லவ்வ புரிய வச்சதுக்கு அப்புறம் தான், எல்லாத்தையும் பேசலாம்னு இருக்கேன் ...
அதோட அவளோட ஹெல்த்தும் இப்போதைக்கு சரியா இல்ல டா... அதனால தான் , எல்லாத்தையும் தள்ளி போடறேன் ..." என்றவனுள் இரு விஷயங்கள் மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தன.
ஒன்று, எஸ்டேட் மேனேஜர் வினோத், வியாபாரத்தில் முறைகேடு செய்து கையூட்டு பெற்றதற்கு , ஆதாரங்கள் இருந்தும், தன் தந்தையிடம் அவள் கொடுக்க தயங்கியதில் இருந்தே, அருணா முன்பாக அவன் ஆதாரம் கேட்ட விவகாரம், அவள் மனதில் ஆழமாக பதிந்து , அவன் தந்தையிடத்தில் கூட ஒருவித நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி இருப்பதைப் புரிந்து கொண்டான் ...
இரண்டாவது, என்ன தான் அவன் தன் தவறை உணர்ந்திருந்தாலும், காரணம் ஏதும் கூறாமல் பலர் அறிய அவனை நிராகரித்தது அவனுள் தீயாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க, தன்னைத் தவிர்த்தவளே வந்து தழுவி கொள்ள வேண்டும் .... என்ற வைராக்கியமும் கூடிப்போனதால் அதற்கு ஏற்றார் போல் காய் நகர்த்த திட்டமிட்டிருந்தான் அந்த காளை.
முதல் , விஷயத்தை நண்பனிடம் இயல்பாகப் பகிர்ந்தவன், இரண்டாவதை பகிராமல், தன்னுள்ளே இறுத்திக்கொண்டு,
"இன்னும் ஒன் ஹவர்ல வீட்ல இருப்பேன் டா ... சீக்கிரம் வீடு வந்து சேரு ..." என்று தொடர்பைத் துண்டித்தவனுக்கு தனது இரண்டு சிண்ட்ரல்லாக்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் , பிறக்க, உடனே அலுவலக வேலைகளை அரக்கப் பறக்க முடித்துவிட்டு வீட்டிற்கு பயணமானான்.
" லட்சுமிம்மா, இப்படி சாப்பிட்டா எப்படி .... இன்னும் ஒரு தோசை வச்சுக்கம்மா..."
"வேணாங்க்கா , ரெண்டு தோசைக்கு மேல சாப்பிட முடியல ... வாந்தி எடுத்துடுவேனோனு பயமா இருக்கு ..."
"சரி கொஞ்ச நேரம் கழிச்சு, பூண்டு தட்டி போட்டு பால் காய்ச்சி கொடுக்கிறேன் குடிம்மா..."
சிவகாமி, லட்சுமிக்கு இடையே ஆன உரையாடல்களை கேட்டபடி தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த, தன் சின்ன சிண்ட்ரல்லாவை தூக்கிக் கொண்டு கூடத்திற்குள் நாயகன் நுழைய , வாஷ்பேஷனில் கை கழுவிக் கொண்டிருந்தவள் ஒரு கணம் உறைந்து நின்றாள்.
பேசிக்கிட்டு இருந்ததை கேட்டிருப்பாரோ .... ஏற்கனவே சாப்பிடலன்னு காலையில பெரிய பஞ்சாயத்து பண்ணிட்டாரே ....
என்ற சிந்தனையிலேயே, அவள் அவனை நோக்க, கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை , கொஞ்சியபடி வந்தவனின் பார்வை, அவள் பார்வையோடு கலக்க, மின்னல் வெட்டிய உணர்வில், உடல் சிலிர்த்தவள் வெடுக்கென்று தலை குனிந்து கொண்டாள்.
நின்று கொண்டிருந்தவளை, வெகுவாக உரசியபடி கண்டுகொள்ளாதது போல் அவன் தன் அறைக்கு சென்று விட, ஏதோ ஒரு புதுவித கலவையான உணர்வு ஆக்கிரமிக்க, அது என்ன என்று சிந்தனையில் மூழ்கிப் போனாள் பெண்.
அவள் எதிர்பார்த்தது, கோபப்படுவான், நெருங்கி பேசுவான், உணர்வு பூர்வமாக உறவை நிலை நாட்ட சாடுவான் என்பதெல்லாம் ...
ஆனால் நடந்தது, முழுக்க முழுக்க நிராகரிப்பு தான்.... ஏனோ காலையில் அவன் கோபத்தை கூட ரசித்து, சிலிர்த்து ஏற்றுக்கொண்டவளால், இப்படி ஒரு பாராமுகத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ....
உயிரை உருவி எடுத்த ,ஒரு கணத்திற்கும் குறைவான, அந்தப் பார்வை தீண்டலை மீண்டும் மீண்டும் மனக்கண்ணாடியில் அவள் ஓட்டிப் பார்த்துக் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்த அதே வேளையில் தன் அறையில், அவளது மருண்ட விழியில் தென்பட்ட ஏக்கம், எதிர்பார்ப்பு ,சிறு பயம் ஆகியவற்றை எண்ணிப் பார்த்து கிறங்கிப் போனான் காளை.
எதிர்பார்த்தது நடந்து விட்டால் சுவாரஸ்யம் ஏதுமில்லை ... அதிலும் குறிப்பாக காதலில் அன்புக்குரியவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால், முதலில் அவர்களது எதிர்பார்ப்பை உடைத்து ஒதுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பால பாடம்... அதனை செவ்வனே கையாண்டவனுக்கு, மனம் வகைத்தொகை இல்லாமல் அலைபாயத் தொடங்க, முதல் அடியிலேயே தோற்று விடக் கூடாது என்பதற்காக,வெகு சிரமப்பட்டு அடக்கி கொண்டான் .
சிவகாமி சிற்றுண்டி பரிமாற, அவன் கூடத்தில் குழந்தையோடு உண்டு கொண்டிருப்பது தெரிந்தாலும், தன் அறையை விட்டு வெளியே செல்ல மனம் இல்லாமல் தடுமாறினாள் மங்கை.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், சிறிதேனும் அவன் மீது வெறுப்போமோ, கோபமோ, பிடித்த மின்மையோ ஏற்பட்டிருந்தால், அதனை நினைத்து மனதை தேற்றிக்கொண்டு அவன் காட்டும் ஒதுக்கத்தை அவள் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அவர்களுக்கிடையே கருத்து முரண்கள் தான் இருந்ததே ஒழிய காட்டமான சண்டை என்றுமே வந்ததில்லை .... அதோடு மட்டுமல்ல, அவளது அழகனை அன்றாடம் அணு அணுவாக ரசிப்பவளுக்கு, அவனது அருகாமை ஒருவித சிலிர்ப்பையும் கிளர்ச்சியையும் தூண்ட, உடன் உயிரை வாரி சுருட்டும் அவன் பார்வை அவள் மனதை ஏகத்துக்கும் பந்தாட, தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள எண்ணி, அறையிலேயே முடங்கினாள்.
அவன் தன் அறையில் மடிக்கணினியில், அலுவலக வேலையை தொடர, அவளும் தன் அறையில் மடிக்கணினியில் தொழிற்சாலை சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டிருக்க, குழந்தை மிகுந்த மகிழ்ச்சியோடு எதிர் எதிரே அமைந்திருந்த அந்த இரு அறைக்கும் இடையே , தன் கை பொம்மையோடு தாய் தந்தையிடம் கூடிக் குலவியப்படி வலம் வந்து கொண்டிருந்தது .
ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு அவளது அறை கதவை திறந்து கொண்டு ராம்சரண் உள்ளே வர,எதிர்பாராத அவன் வரவைக்கண்டு அவள் அதிர்ந்து நோக்க ,
" வீரா , அவன் மேரேஜ் இன்விடேஷன் கொடுகிறதுக்காக வந்திருக்கான் .... வா...வந்து வாங்கிக்க ..."
அவன் முடித்ததும் அவள் விருட்டென்று கட்டிலை விட்டு இறங்க,
"அடியேய்.... உனக்கு பொறுமையாவே இறங்க தெரியாதா .... என்னமோ பஞ்சி ஜம்பிங் பண்ற மாதிரி எகிறி குதிக்கிற .... மெதுவா இறங்கி வா..." என்றவன் நின்று அவளையும் உடன் அழைத்துக் கொண்டே கூடத்திற்கு சென்றான்.
சில நாட்களுக்குப் பிறகு உயிர் நண்பனை சந்திப்பதில் ராம்சரண் மகிழ்ச்சி அடைய சிவகாமி வீராவுக்கு தேநீர், சிற்றுண்டி பரிமாறி உபச்சாரம் செய்தார்.
ஏற்கனவே வீராவின் வரவு குறித்து ரங்கசாமிக்கு தெரிவித்திருந்ததால், அவரும் அப்போது சரியாக அங்கு வர, சிறிய அரட்டைக் கச்சேரி ஆரம்பமானது..
பெரும்பாலும் அவர்களது தொழில் மற்றும் வீராவின் திருமணத்தைக் குறித்த பேச்சாகவே அது இருந்தது.
ஒரு மணி நேர பேச்சுக்கு பிறகு, திருமண அழைப்பிதழை தாம்பூல தட்டில் வைத்து ரந்தசாமியிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டவன், லட்சுமியிடம்
" உடம்ப பாத்துக்கம்மா ... நாளைக்கு உங்க வீட்டுக்கு போய் , பத்திரிகை வைக்கலாம்னு இருக்கேன் ..." என்றதும், அவள் லேசாக தலையசைத்து, புன்னகையோடு அதனை ஆமோதிக்க,
" வரேன் சரண், எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துடுங்க ..." என அனைவரையும் ஒரு முறை பார்வையால் தொட்டுவிட்டு விடை பெற்றான்.
அவன் சென்ற மறு தினமே, தன் தந்தையிடம் கூறி, ஸ்ரீலட்சுமியின் குடும்பத்தினர் வீராவின் திருமணத்திற்காக மதுரைக்கு பயணிக்க வாகன வசதியை ராம்சரண் ஏற்பாடு செய்திருந்த நிலையில், ஸ்ரீனி அவனைத் தொடர்பு கொண்டான்.
இயல்பான நலம் விசாரிப்புக்கு பிறகு,
"நீ லட்சுமி கிட்ட பேசினியா .... இப்ப உங்க ரெண்டு பேருக்கு நடுவுல இருந்த பிராப்ளம் சால்வ் ஆயிடுச்சா ..."
எதிர்பார்ப்போடு கேட்டவனிடம், வீராவிடம் மொழிந்ததையே ராம் சரண் மறு ஒளிபரப்பு செய்ய ,
" ஓ...." என்றவன் ராம லட்சுமியை மெக்டொனால்ஸில் சந்தித்ததை பகிர்ந்து,
" ஃபர்ஸ்ட் டைம் அவங்கள பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி தோணிச்சு .... அப்புறமா அவங்க கிட்ட போய் விசாரித்ததும் தான் தெரிஞ்சது ... அவங்க உன் சிஸ்டர்-இன்-லானு..... முதல்ல அவங்க பேரை கேட்ட போது ரொம்ப கோவப்பட்டாங்க .... உன் பேரை சொன்னதுக்கு அப்புறம் தான், சகஜமா பேசவே ஆரம்பிச்சாங்க .... இன்னொரு முக்கியமான விஷயம் .... உனக்கும், உன் வைஃப்க்கும் நடந்த எந்த லீகல் இஷ்யூசும் அவங்க வீட்ல யாருக்குமே தெரியல .... மேபி உன் வைஃப் எதையுமே அவங்க வீட்ல சொல்லி இருக்க மாட்டாங்கனு தோணுது .... அதனால நீ தேவை இல்லாம கோவப்பட்டு அதை பத்தி அவங்க அம்மா கிட்ட எதையாவது பேசிடாத ... " என முடித்ததுமே
"ச்சே... ச்சே... எனக்கு லஷ்மி மேலேயே கோவம் இல்லடா ... நான் எதுக்காக தேவையில்லாம, அவங்க அம்மா மேல கோபப்பட போறேன் ... இன்பாக்ட் அவங்க அம்மா என் அம்மாவ விட ரொம்ப ரொம்ப நல்லவங்க ...." என்றான் ராம் சரண் பெருமிதத்தோடு.
" சரி கல்யாணத்துல மீட் பண்ணலாம் டா..."
" வீரா கல்யாணம் முடிஞ்சதும், ஒரு முறை ஊட்டிக்கு வா, என் புது ஆபிசுக்கு போலாம் ..."
" ஷ்யூர் ..." என்று முடித்தான் ஸ்ரீனி நட்போடு.
கோயம்புத்தூரில்,
" பிரபா, நமக்கு ஏற்கனவே ரெண்டு குழந்தைங்க இருக்கு... அது போதும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் டி.... ஆனா நீ பண்ற அலப்பறையில, சீக்கிரம் மூணாவது உண்டாயிடுவ போல இருக்கே..." என்றான் சத்யன் கிறக்கமாக மனைவி பிரபாவிடம் , நடு இரவில் , அறையின் தனிமையில்.
அவள் பதில் பேசாமல் வெட்கத்தோடு அவன் வெற்று மார்பில் முகம் புதைக்க ,
"ஏய், என்னடி ஆச்சு உனக்கு ... கிட்டத்தட்ட பத்து நாளா ஒரு சண்டை இல்ல ஒரு பிரச்சனை இல்ல ..... லவ் பண்ணும் போது எப்படி நான் சொன்னதை எல்லாம் பொறுமையா கேப்பியோ , அப்படி இல்லை இப்ப இருக்க ... என்ன ஆச்சு திடீர்னு ..."
என்றான் கனிந்த குரலில் மனைவியின் மாற்றத்தை உணர்ந்து.
திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் , சத்யனின் மேல் குறையாத காதலும், அன்பும் பிரபாவுக்கு இருந்து வந்த நிலையில், அவளது தங்கையின் தரங்கெட்ட தனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல், சத்யன் நடந்து கொண்ட முறையும், அதை மனம் நோகாமல் அவன் எடுத்துச் சொன்ன முறையும் பிரபாவுக்கு மேலும் அவன் மேல் நம்பிக்கையும் பாசத்தையும் அதிகரிக்கச் செய்திருக்க , இயல்பாக எதிர்த்துப் பேசும் ஓரிரு விஷயங்களுக்கு கூட எதிர்ப்பை தெரிவிக்காமல் , அவன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்திருந்தாள் .
மனைவியின் மாற்றத்தை உணர்ந்தவனுக்கு அதற்கான காரணம் சரியாக பிடிப்படாமல் போனதால், அவன் கேள்வி எழுப்ப,
"நீங்க எங்க குடும்பத்தை உங்க குடும்பமா நினைக்கிறீங்க.... என் அப்பா அம்மாவை நல்லபடியா பாத்துக்கறிங்க .... உங்களால எங்க அப்பா அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ..."
உண்மையான காரணத்தை மறைத்து அவள் மேம்போக்காக, கதை சொல்ல,
"சரிடி, இது எல்லாம் நான் எப்பவும் செய்யறது தானே .... இப்ப என்ன திடீர்னு ..."
"ப்ரீத்தி விஷயத்துல நீங்க ரொம்ப மெச்சூர்டா நடந்துகிட்டது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.... போதுமா ..." என்றாள் உண்மையை உடைத்து .
" ஓ .... இதான் காரணமா .... மனசாட்சி இருக்கிற எவனும், சந்தர்ப்பம் கிடைச்சாலும் தப்பு செய்ய மாட்டான் .... இதெல்லாம் ரொம்ப சாதாரணம் டி ... இதுக்கு தான் என் அருமை பொண்டாட்டி கிட்ட இவ்ளோ பெரிய மாற்றமா ...."
" ஏன் இந்த மாற்றம் புடிக்கலையா... சண்டை போடணும்னு ஆசைப்படறீங்களா.... "
" வேணாண்டி ஆத்தா ... ஆள விடு.... பாண்டியன் கல்யாணத்துக்கு எடுத்து கொடுத்த புடவையை பார்த்து வழக்கம் போல தப்பு சொல்லாம ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னயாமே... அம்மா சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க ... இப்படியே இரு ... லைஃப் ரொம்ப நல்லா இருக்கும் டி ..."
என்று மனைவியை மெச்சிக்கொண்டே, அவளை மார்போடு இறுகத் தழுவிக் கொண்டான் .
மறுநாள் காலை, உடம்பு சரியில்லாத தன் தாய்க்கு உணவு பரிமாறி விட்டு, மதுரையில் நடைபெறப்போகும் தன் மைத்துனனின் திருமணத்திற்காக, துணிமணிகளை தேர்வு செய்து பையில் பிரபா திணித்துக் கொண்டிருக்கும் போது,
"அக்கா, நான் கல்யாணத்துக்கு வரல ...." என்றாள் ப்ரீத்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு .
அரை கண அமைதிக்கு பிறகு ,
"இங்க வா .... பாண்டியன் கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்னு உன்கிட்ட என் வீட்டு ஆளுங்க, யாராவது பத்திரிகை கொடுத்தாங்களா..."
"இல்ல ...."
"பின்ன எதுக்கு தேவையில்லாம, சீன் கிரியேட் பண்ற .... இங்க பாரு ... கல்யாணத்துக்கு நான், அப்பா அம்மா, என் குழந்தைங்க மட்டும் தான் இந்த வீட்ல இருந்து போக போறோம் .... நீ வரேன்னு சொன்னாலும் உன்னை கூட்டிட்டு போக எனக்கு இஷ்டம் இல்ல..."
" நீ கூப்பிட்டாலும் நான் வர தயாரா இல்லை ..." என்றாள் இளையவள் வெடுக்கென்று .
" வெரி குட் .... நான் உன் டெசிஷனை மதிக்கறேன்.... வீட்ல இருந்து வீட்டை நல்லபடியா பாத்துக்க... நாங்க எல்லாம் மதுரைக்கு போய் கல்யாணத்த அட்டென்ட் பண்ணிட்டு மறுநாளே திரும்பி வந்துடுவோம்..
ஆ.... இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் .... கல்யாணத்துக்கு வராதது மாதிரி காட்டிக்கிட்டு வேற ஏதாவது குட்டி கலகம் பண்ணனும் நினைச்ச அப்புறம் நடக்கிறதே வேற.... " என்று பிரபா பற்களை நறநறவென்று கடிக்க , அதற்கு பதில் ஏதும் சொல்லாமல், அமைதியாக புன்முறுவல் பூத்து விட்டு இடத்தை காலி செய்தாள் ப்ரீத்தி .
திருமணத்திற்கு மூன்றே நாட்கள் இருந்த நிலையில், வீராவின் இல்லம் களிப்பில் களை கட்டியிருந்தது.
திருமண வேலை ஒருபுறம் , அலுவலக வேலை மறு புறம் என நேரம் கற்பூரமாய் கரைந்தாலும், ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது தன்னவளுடன் அலைபேசியில் உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் வீரா.
பெரிதாக இருவரும், நிகழ்காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ பேசவில்லை என்றாலும், திருமண ஏற்பாடுகளை குறித்த அவனது பத்து நிமிட பேச்சே, ஸ்ரீப்ரியாவை துக்கத்திலிருந்து திசை திருப்ப போதுமானதாக இருக்க, அதை அவள் குரலில் இருந்தே அறிந்து கொண்டு அகம் மகிழ்ந்து போனான் அவளது மணாளன்.
இடைப்பட்ட இரண்டு நாட்கள் இலவம் பஞ்சாய் பறக்க,
அன்று மாலை நடைபெறவிருக்கும் வீராவின் நிச்சயதார்த்த விழா மற்றும் மறு தினம் நடந்தேறவிருக்கும் அவனது திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தன் மனைவியோடு அதிகாலையிலேயே காரில் புறப்பட்டான் ராம்சரண்.
ரங்கசாமி தன் காரில் அவர்களை பின் தொடர்வதாக கூற, குழந்தையும் அவரோடு ஒன்றிக்கொள்ள, ஸ்ரீலட்சுமியின் உடல் நிலைக்கு அந்த ஏற்பாடு வசதியாகி போனது.
தன் பெரிய இயந்திரப் புரவியில் மனையாளை அருகமர்த்திக்கொண்டு, பயணப்பட்டவனின் விழிகள் கள்ளத்தனமாய் மயில் கழுத்து நிறத்தில், அரக்கு நிற பார்டர் கொண்ட பனாரசி புடவையில், பொருத்தமான அணிமணிகளோடு மிளிர்ந்தவளை பருகிக் கொண்டே வர , அதற்கு சற்றும் குறையாமல், தன் கடைக்கண் பார்வையால் நீல நிற ஜீன்ஸ் மற்றும் சிமெண்ட் நிற கேஷுவல் பிளேசரில் ஆணழகனாய் காட்சியளித்தவனை, காதலாய் ரசித்தபடி பயணித்தாள் அவன் மாது.
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, தேநீர் கடை முன்பு காரை நிறுத்திவிட்டு, மனையாள் மற்றும் தந்தைக்கு அவன் தேநீர் வாங்கிக் கொடுக்க, உடலை வருடும் அந்த குளிர் காற்றில், கொதிக்கும் தேநீர் தொண்டை குழிக்குள் இதமாய் இறங்க, நிதானமாக ரசித்து ருசித்துப் பருகினாள்.
அப்போது பார்த்து, ஓட்டுநர் இருக்கையில் , அவன் விட்டுச் சென்ற அவனது அலைபேசி சிணுங்க,
" யாரா இருக்கும் ..." என முணு முணுத்தபடி எட்டிப் பார்த்தவளுக்கு , அலைபேசியின் ஓளிர் திரையில் தெரிந்த ' மஹிக்கா ' என்ற பெயரைக் கண்டதும், மாமனார் கூறிய செய்தி, அவள் மனத்திரையில் மின்னலென ஒளிபரப்பாக, அதுவரையில் இருந்த சந்தோஷம், நிம்மதி எல்லாம் பொங்கிய பாலில் நீரை தெளித்தது போல் வடிந்து போக, தொண்டை கனத்து கண்களில் கண்ணீர் பிரவாகம் எடுக்க, சிலையாகிப் போனாள் பெண் .
ஸ்ரீ-ராமம் வருவார்கள்...
Super akka very nice 👍👍👍
ReplyDeletethanks ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks a lot
DeleteNice
ReplyDeletethanks a lot ma
Deletethanks a lot ma
ReplyDeleteInteresting
ReplyDeleteAzhaathe ,,,, yellam nanmaikke
ReplyDelete