ஸ்ரீ-ராமம்-52

 அத்தியாயம் 52


கேட்டதை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தவளின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிய,  கணவனின் வருகையை எண்ணி திக்கு முக்காடி போயிருந்த இதயம், தற்போது  இசைக்க மறந்தது போன்ற உணர்வைத் தர, துடித்து துவண்டு போனாள் ஸ்ரீலட்சுமி. 


அவளால் மாமனார் சொன்னதை நம்பவும் முடியவில்லை, அவளை அணைத்து தூக்கிய அவள்  கணவனின் கண்களில் காணப்பட்ட ஸ்ருங்கார ரசத்தை நம்பாமலும்  இருக்க முடியவில்லை .... 


கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்.... தீர விசாரிப்பது கூட இந்த காலத்தில் சில சமயங்களில் பொய்  தான் ஆனால் உள்ளுணர்வு சொல்வது என்றைக்குமே  100% மெய் ....  என்பதற்கேற்ப  அவளது மனம் அவனது உணர்வுகளை விழிகளூடே படித்ததை நினைத்துப் பார்க்க , ஏதோ புரிவது போல் தோன்றியது.


என்னவன் எனக்காகவே வந்திருக்கிறான்...  என்ற உள்ளுணர்வின் மொழி  அவளது அடி மனதின் ஆழம் வரை சென்று,  அம்சமாக அமர்ந்ததுமே அவளது ஆறாம் அறிவு அழகாக வேலை செய்யத் தொடங்கியது.


பெற்ற மகள் திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள,  எப்படி எல்லாம் போராடுகிறாள் என்பதை துளி கூட புரிந்து கொள்ளாமல் அவளால் வந்து கொண்டிருந்த வருமானம் நின்று விட்டதே என்ற எண்ணத்தில் திளைக்கும் அவளது தந்தையை காட்டிலும் , மகன் மருமகளின் வாழ்க்கை சிறக்க போராடும் மாமனாரை அவள் நன்கு  அறிவாள்.


 ரங்கசாமியை மாமனார் என்ற உறவுமுறையை  காட்டிலும் பல சமயங்களில்  மாமனிதராகவே வியந்திருக்கிறாள். 


ஆகச் சிறந்த மனிதர், மிகவும் அன்பானவர் நேர்மையானவரும் கூட.  


அப்படிப்பட்டவர் பொய்யே உரைத்திருந்தாலும்,  சர்வ நிச்சயமாக அது தன்னுடைய நன்மைக்காகத்தான் இருக்கும்  என்பதைப் புரிந்து கொண்ட மாத்திரத்தில்,  மற்றவற்றைப் புறந்தள்ளிவிட்டு கணவனின் வரவும் அவனது அருகாமையையும் நினைத்து மனம் கொள்ளாம மகிழ்ச்சியோடு, கலந்தாய்வுக்கு புறப்பட்டாள்.  


அதே சமயத்தில்,  எஸ்டேட் விருந்தினர் மாளிகையில், தந்தையிடம் ராமலட்சுமி திருமண விஷயத்தில்  அருணா பொய் சொன்னதை காமாட்சியை சந்தித்து அறிந்து கொண்டதை ராம்சரண் விவரித்துக் கொண்டிருக்க கேட்டுக் கொண்டிருந்த ரங்கசாமி, அளவுக்கு அதிகமான அதிர்ச்சிக்கு உள்ளாகிப் போனார். 


"அருணா, கற்பகம் ரெண்டு பேருமே மோசமானவங்கனு தெரியும் ஆனா இவ்ளோ மோசமானவங்களா இருப்பாங்கன்னு  எதிர்பார்க்கல .... நீ சொன்ன மாதிரி இதை நேரடியா அருணா கிட்ட கேட்கவும் முடியாது ரொம்ப நேர்த்தியா திட்டம் போட்டு  ஆதாரமே இல்லாம செஞ்சிருக்கா ....

அந்த விஷயத்துலயே இவ்ளோ தெளிவா காய நகத்தினவங்க, லட்சுமியை வீட்டை விட்டு அனுப்பின, விஷயத்துல எவ்ளோ தெளிவா காய் நகத்தியிருப்பாங்களோ ... 

அவங்க ரெண்டு பேரையும்  வெட்டி போடற அளவுக்கு கோவம் வருது .... ஆனா நடந்தது என்னன்னு தெரியாம எதையும் செய்ய  முடியல... லட்சுமி வாய தொறக்காம இருக்கிறது அவங்களுக்கு வசதியா போனதால இன்னும் அதிகமா  ஆட்டம் போட்டுகிட்டு இருக்காங்க .... 


இந்த லட்சுமி வேற அவங்களுக்கு  நேர் மாதிரியா இருக்கா ... நம்ம ஸ்டேட் மேனேஜர் வினோத்தை பத்தி  எங்கிட்ட தப்பு  சொல்லக்கூட பயப்படறா... இவ எப்படி அருணா, கற்பகத்தை பத்தி சொல்லுவா .."


" என்னப்பா பிரச்சனை ....  வினோத் என்ன பண்ணான் ..." என ராம்சரண் துணுக்குற,


" வினோத்,  நம்ம கிட்ட வேலைக்கு சேர்ந்த முதல் ஒரு வருஷம் சரியாத்தான் வேலை பார்த்து இருக்கான்.... அதுக்கப்புறம் கடந்த நாலு வருஷமா,  லட்சக்கணக்குல கமிஷன் வாங்கிட்டு , தனக்கு தெரிஞ்ச டீலர்ஸ்க்கு மட்டும்,  கம்மியான கொட்டேஷன்க்கு ஆடர்ஸ சேங்ஷன் பண்ணி இருக்கான் ....

நான் ஒத்த ஆளு எவ்ளோ விஷயத்தை தான்  கவனிப்பேன்.... வயசானவன் வேற.... எனக்கு  பிசினஸ்ல  நம்ம ஃபேமிலி சப்போர்ட்டு கிடையாதுன்னு நல்லா தெரிஞ்சுக்கிட்டு  ஏமாத்தி இருக்கான் ....  

நாலு வருஷத்துல கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு மேல சம்பாதிச்சிருக்கான் .... இதை எல்லாம் வந்த இந்த ஒரு மாசத்துக்குள்ளவே  லஷ்மி ஆதாரத்தோட கண்டுபிடிச்சிட்டா... ஆனா அதை  என்கிட்ட சொல்ல மொதல்ல ரொம்ப தயங்கினா... அதே சமயத்துல அவளால சொல்லாமலும் இருக்க முடியல.... ஒரு கட்டத்துல ரொம்ப பொறுமையா ஆதாரத்தோட எல்லாத்தையும் விளக்கினா....

அப்ப தான் பிரச்சனையோட தீவிரம் புரிஞ்சுது, உடனே வினோத்தை வேலையை விட்டு தூக்கிட்டு வேற ஆளை போட்டுட்டேன் ..  இந்த மாதிரி பல பிரச்சனைகளை சந்திச்சி தான் நானும் மேல வந்து இருக்கேன் .... அதுக்காக தான் நம்ம வீட்டு ஆளுங்க யாராவது பிசினஸ்ல இருக்கணும்னு ஆசைப்பட்டேன் ....

ஆனா உங்க யாருக்கும் விருப்பமில்ல ... உங்கள வற்புறுத்தவும்  மனசும் இடம் கொடுக்கல .... இப்ப லக்ஷ்மி வந்து, பெரும்பாலான விஷயங்களை பார்த்துக்கிறதால நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் ..." 

தந்தையின் பேச்சில் இருந்த உண்மை மைந்தனை சுட்டது. 

வயதான காலத்தில் யாதொரு உதவியும் இல்லாமல்,  இவ்வளவு பெரிய வியாபார சாம்ராஜ்யத்தை தனியாக எடுத்து நடத்துபவருக்கு தான் உறுதுணையாக இல்லையே என்ற குற்ற உணர்வு எழ,


" ஐ அம் சாரிப்பா ....  நீங்க  பெரிய பிசினஸ் மேன் ... உங்களுக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேனே ஒழிய,  பிஸ்னஸ்ல இப்படியெல்லாம் பிரச்சனை வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலப்பா .... இத எல்லாத்தையும் விட,  பிசினஸ்ல இவ்ளோ பிரச்சனைகள் இருந்தும், என் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்து,  என்னை என் வழில போக விட்டீங்களே... ஐ அம் வெரி லைக்கி டு ஹேவ் யூ ப்பா..." என்றான் பேரன்பின் வெளிப்பாடாக. 


மைந்தனின்  மெச்சுதலான பேச்சில், மனம் லயித்தவர்,


"எல்லாரையும் அவங்க அவங்க சுபாவத்தோட அப்படியே ஏத்துக்கிற என்னோட  அந்த குணம் தானே,  இப்ப உன்  வாழ்க்கையை  கெடுத்து வெச்சிருக்கு ... நான் உங்க அம்மா, அருணா, ஏன் உன் கிட்ட கூட ஸ்ட்ரிக்ட்டா இருந்திருந்தேனா, பிசினஸ்ல மட்டுமில்ல , உன் கல்யாண விஷயத்துல கூட பிரச்சனை வந்திருக்காதே ..." என  ஆதங்கத்தோடு மொழிந்துவிட்டு


"லஷ்மியோட அப்பாவை பத்தி  நல்லாவே தெரியும் .... பொறுப்புன்னா கிலோ என்ன விலைனு கேக்குற மனுஷன்  ... அதனால ராம லட்சுமிக்கு நாம தான் நல்ல வரனா  பார்க்கணும் ... அருணா அவ கல்யாண கெடுத்துட்டாங்கிறதுகாக  பிராய சித்தமா செய்யணும்னு சொல்லல ....  ஒருவகையில ராமலட்சுமியோட கல்யாணம் நம்ம கடமையும் கூட ... அதுக்காகத்தான் சொல்றேன் ..."  என முடித்தார். 


தந்தை சொன்னதை எல்லாம்  அசை போட்டுப் பார்த்தவன், ஓரிரு கண நேரத்திற்கு பிறகு 


" அப்பா,  லஷ்மியை கூப்பிட்டு பொறுமையா என்ன நடந்ததுன்னு விசாரிக்கலாம்னு இருக்கேன் ..." என்றான் யோசனையாக. 


" அதுக்கு முன்னாடி,  டாக்டர் சுமதி கிட்ட பேசு , லட்சுமி ரொம்ப வீக்கா அனிமிக்கா இருக்கா ... ஏதோ தூக்கம் வரலன்னு சொன்னானு என்னென்னமோ  சொன்னாங்க ..."


" தூக்கம் வரலையா ... என்னப்பா ..." என்றான் லேசான  அதிர்ச்சியோடு.



" நீ சுமதி கிட்ட பேசினா சரியா இருக்கும் ... சுமதியோட  நம்பர் தரேன் பேசு ..." என்றார்,  மருத்துவர் சுமதியின்  கைபேசி எண்ணை பகிர்ந்து.



தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மருத்துவர் சுமதியிடம் மனையாளின் உடல்நிலை குறித்து  அவன் விசாரிக்க , உடனே முன் அனுமதி கொடுத்து,  தன்னை மருத்துவமனையில் சந்திக்குமாறு தெரிவித்தார். 


அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மருத்துவர்  முன் அமர்ந்திருந்தவனிடம் 


" உங்க வைஃப்க்கு ஏற்கனவே செர்விக்கல் இன் காம்பிட்டன்ஸ்(Cervical incompetence - கர்ப்பப்பை பலகீனம்) இருக்கு... அதோட இப்ப ட்வின்ஸ கன்சீவா இருக்கிறதால , இன்னும் வீக்கா இருக்காங்க .... நிச்சயமா ப்ரீ மெச்சூர் டெலிவரி தான் நடக்கும் ...ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கங்க ...பிபி கொஞ்சம் ஹைய்யா இருக்குது .... ஆ..... முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் ....  தூக்கம் வரமாட்டேங்குது ....  கண்ண மூடினா கெட்ட கெட்ட கனவா வருது .... கண்ண மூடவே பயமா இருக்குன்னு என்னை மீட் பண்ணின கடந்த இரண்டு முறையும் சொன்னாங்க .... ஏதோ அவங்க  டிப்ரஷன், இல்ல ட்ரமால இருக்க மாதிரி தோணுது .... ஆனா அதுக்கான மாத்திரை இப்ப கொடுக்க முடியாது ... அதனால நேச்சுரலா  எப்படி எல்லாம் தூக்கத்தை வரவழைக்கலாம்னு அவங்களுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கேன் ...

அஞ்சு மாசம் முடிஞ்சு 6 ஆம் மாசம் தொடங்க போகுது ... பொதுவா இந்த மாதிரியான நேரத்துல கொஞ்சம்  ஸ்ட்ரஸ் இருக்கும் தூக்கம் வராது ...

அது எல்லாருக்கும் இருக்கிற காமனான  சிம்டம்ஸ் தான் .... ஆனா உங்க வைஃப் ஓட  பிரச்சனை வேற மாதிரி தோணுது ....

அவங்க சில விஷயத்தை பேச தயங்குறாங்க, அப்படி பேசும் போது குழந்தைக்கு ஏதாவது ஆயிடுமோனு பயப்படறாங்க போல... என்னால வேற எதையும் நேரோ டவுன் பண்ண முடியல ... ஆனா ஒரு விஷயத்தை  நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க ...

அவங்க பிசிகல் ஹெல்த்துக்கு எவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கறீங்களோ அதே அளவுக்கு அவங்க மெண்டல் ஹெல்த்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும்..

சோ,  அவங்க நல்லா சாப்பிட்டு நல்லபடியா தூங்கி எழுந்து நிம்மதியா இருந்தாலே,

அவங்க டெலிவரில எந்த பிரச்சனையும் வராது நெக்ஸ்ட் வீக் அவங்களை செக்கப்க்கு கூட்டிக்கிட்டு வாங்க... "என மருத்துவர் முடிக்க, மீண்டும் தந்தையை சந்தித்து, மருத்துவர் சொன்னதை மறுஒளி பரப்பு செய்தான்.


"இப்ப நமக்கு அருணாவோ கற்பகமோ முக்கியம் இல்ல... என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுகிட்டு  ஒன்னும் ஆகப் போறதும் இல்ல...  இன்னும் நாலு மாசம் நல்லபடியா கடந்தாகணும் .... லஷ்மி இங்க வந்து இவ்ளோ நாள்ல  இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமா பார்த்தேன்... அவளுக்கு நீ இங்க வந்திருக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு .... அவள அவ போக்குல விட்டு பிடி ....   நிம்மதியா பாத்துக்க... இப்போதைக்கு அது தான் அவளுக்கு தேவை ..." 


ரங்கசாமி முடிக்க,  அவர் சொன்னதை அப்படியே மனதில் ஏற்றிக்கொண்டு  தனக்கான அலுவலக வேலையில் இறங்கினான். 

அவன் பங்குதாரராக பதவியேற்க இருந்த அவன் நண்பன் சந்தோஷின் நிறுவனத்தை அடைந்தவனுக்கு,  மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


நிறுவனத்தின் பங்குகள்,  தற்பொழுது நடப்பில் இருக்கும் திட்ட வரைவுகள்,  நிறுவனத்தின்  கிளைகள் மற்றும் பணி புரியும்  பணியாளர்கள் என அனைத்து விதமான தகவல்களும் பரிமாறப்பட்டு விவாதிக்கப்பட்டு இருதரப்பிற்கும் சமமாக  பயனளிக்கும் வகையில் முடிவு இயற்றப்பட , நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆழ்ந்த நிம்மதி  ஒன்று அனாயாசமாக அவனைப் பற்றிக் கொண்டது. 

கடந்த நான்கு மாதங்களாக,  தணல்  மேல் தவிக்கும் தாமரையாய் தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு, மனையாள் மற்றும் மகளின் அருகாமை , சூழல் மாற்றம், பணி மாற்றம் எல்லாம் இதம் அளிக்க , புதிதாய் உதித்த புத்துணர்வோடு புதிய பணியில் மூழ்கிப் போனான்.


மதிய இடைவேளையை நெருங்கும் போது , மஹிக்காவிடமிருந்து அழைப்பு வந்தது . 

எடுத்த எடுப்பில்,


"சரண்,  ஏன் இப்படி சொல்லாம கொள்ளாம  திடீர்னு பேப்பர் போட்டீங்க ..... " 


மஹிக்கா கோபத்தில் உச்சியில் எகுற, 

"நான்  எதுக்கு உன் கிட்ட சொல்லணும்  ...." என்றான் பொங்கி எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு. 


"என்ன கேள்வி இது .... உங்க வைஃப் உங்களை வேண்டாம்னு டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்காங்க .... உங்களை வேண்டாம்னு சொன்னவங்களுக்காக நீங்க எதுக்கு வேலையை விட்டுட்டு அவங்க பின்னாடி போகணும்   "


"திஸ் இஸ் டூ மச் ... லிசன் மஹிக்கா, நான் அன்னைக்கே என்னோட முடிவை சொல்லிட்டேன் .... நான் எவ பின்னாடியோ சுத்துறதுக்காக இங்க வரல ... என் வைஃப் ஓட வாழணுங்கிறதுக்காக வந்திருக்கேன் ... அவளுக்காக தான்  வேலையை மாத்திக்கிட்டேன்...."


"நெஜமாவே அது தான் காரணமா ... இல்ல ... ஆபீஸ்ல என்னை பாத்துக்கிட்டே இருந்தா உங்க மனசு மாறிடுங்கிற பயத்தால பேப்பர் போட்டீங்களா ..."


எதிர் முனையில் குலுங்கி நகைத்தவன்,


"ரொம்ப அபத்தமா பேசற மஹிக்கா... என் லேடி லவ்வ ஃபோட்டோலயாவது பாத்திருக்கியா... எவ்ளோ அழகா இருப்பா தெரியுமா ....  அவ அழகாக இருக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும் .... அவளோட கேரக்டர், பிஹேவியர் எல்லாம்... எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ... பூதக்கண்ணாடி வச்சு கூட தேடிப் பார்த்துட்டேன் .... அவள பிடிக்கலைன்னு சொல்றதுக்கு எந்த காரணமும் கிடைக்கல .... இது எல்லாத்தையும் விட, நான் எவ்ளோ மெண்டலி வீக்ன்னு அவள பிரிஞ்சு இருந்த இந்த நாலு மாசத்துல தெரிஞ்சுகிட்டேன் ... நான் அவளை கல்யாணம் பண்ணும் போது லவ் பண்ணல ... ஆனா இப்ப லவ் பண்றேன் ... ரொம்ப ரொம்ப அதிகமா லவ் பண்றேன் ... 

இந்த லவ் அவ மேல எப்ப வந்ததுன்னு எனக்கு தெரியாது ... எங்க ஹனிமூனுக்கு அப்புறமா, இல்ல அவ மொத முறையா மசக்கைல வாந்தி எடுக்கும் போதா... இல்ல அவளுக்கு பிரசவ வலி வந்த போதா.... இவ்ளோ ஏன் இப்ப ட்வின்ஸ் உண்ட இருக்கா இப்ப வந்ததா .... எதுவுமே எனக்கு தெரியாது ... ஆனா ஒன்னு மட்டும் தெரியும் அவ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு ....


என் இயல்புக்கு மீறி இவ்ளோ பெரிய லெக்சர் எதுக்குன்னா, என் வைஃப் என் மனசுல எந்த அளவுக்கு இருக்கான்னு நீ தெரிஞ்சுக்கணுங்கிறதுக்காக  தான்...  

உன் டிவோர்ஸ்  விஷயத்துல கருத்து சொல்ல நான் விரும்பல ... அதே மாதிரி என்  பர்சனல் விஷயத்துல நீ தலையிடாத... அடுத்த மாசம் நம்ம ஆபீஸ்ல இருந்து நான் ரிலீவ் ஆகறேன் ...  ப்ளீஸ் மஹிக்கா .... இனிமே எனக்கு போன் பண்ணாத ....  என்னை மீட் பண்ணனும்னு ட்ரை பண்ணாத ... கெட் லாஸ்ட் ..."  

மிகுந்த கோபத்தோடு அழைப்பை துண்டித்தான்.  

விமான நிலையம் வந்தடைந்த  தம்பியை ஆரத்தழுவி வரவேற்றான் சத்யன். 


" இங்க பாரு பாண்டியா,  கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாள் கூட இல்ல...  இப்ப   மதுரைக்கு போய்  ஸ்ரீப்ரியாவை பார்க்கணும்னு சொல்ற.... அதோட  ஊட்டிக்கு போய் உன் ஃபிரண்டு சரணுக்கு வேற பத்திரிகை வைக்கனும்னு சொல்ற இதெல்லாம் தேவையா ..."


"இல்ல அண்ணே.... ஸ்ரீயை கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்தே ஆகணும் .... சரணுக்கும் நேர்ல போய் பத்திரிகை வச்சே ஆகணும் ப்ளீஸ் தடுக்காதீங்க ..."


" எனக்கு ஆபீஸ் வேலை அதிகமா இருக்கு .... என்னால உன் கூட வர முடியாது ... நீ வண்டி ஓட்டாத ... டிரைவர் வச்சுக்க...உன் மாமனார்  ஒரு மாதிரி ... பாத்து ஜாக்கிரதையா நடந்துக்க.."


ஏகப்பட்ட அறிவுரைகளை வழங்கிய படி தம்பியோடு வீடு வந்து சேர்ந்தான் சத்யன்.


வீட்டில் தாய் தந்தையோடு,  தங்கையும் , அவளது கணவரும் இனிதே வரவேற்றனர்  ஒரு இனிப்புச் செய்தியோடு.


அவன் தங்கை அன்பு,  கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்ற சர்க்கரை செய்தி தான் அது.


பிரபாவும் தன் மைந்தர்களோடு,  மைத்துனனை  மிகுந்த மகிழ்ச்சியோடு  வரவேற்க,  தமையனின் பிள்ளைகளின் வரவேற்பில் குதூகளித்து போனான் வீரா.  

செல்வராணியின் மறைவு மட்டும்  நிகழாதிருந்திருந்தால்,  இன்னும் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகி இருக்கும்.  அப்படி ஒரு மகிழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மூழ்கி  திளைத்திருந்தனர்.


அனைவரோடும் உரையாடி விட்டு அறைக்கு வந்தவன், முதல் வேலையாக  ஸ்ரீப்ரியாவை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.


எதிர்பார்த்து காத்திருந்ததால் இரண்டாவது ஒலியிலேயே , அவனது காதலி அழைப்பை ஏற்க 


" ஸ்ரீ...." என்றான் மென்மையாக.


அவனது குரலைக் கேட்டதும், ஏதோ மொழிபெயர்க்க முடியாத ஒரு வித நிம்மதி வியாபித்தாலும், விடாது கருப்பு போல் துரத்திக் கொண்டிருக்கும் துக்கமும் தொண்டையை அடைக்க, லேசான விசும்பல் சத்தத்தோடு,


" ஹலோ ராம்..." என்றாள்.


அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக ஆறுதல் கூறினான். 

அவளை அன்றே சந்திக்க வருவதையும் தெரிவித்தான் . 

ஓரிரு கணம் மட்டுமே உரையாடிவிட்டு அழைப்பை துண்டித்தாலும் இருவர் மனதிலும், ஏதோ ஒரு இதம், இனிதாக பரவி இருக்க , மதிய உணவிற்கு பிறகு  மதுரையை நோக்கி பயணமானான் வீரா.


பொன்னம்பலம், தன் பங்கிற்கு அம்மையப்பனை தொடர்பு கொண்டு வீராவின் வருகையை தெரிவிக்க , வீட்டை விட்டு எங்கும் செல்லாமல்,  காத்திருந்து அவனை மெலிதான  இன்முகத்தோடு வரவேற்றார் அம்மையப்பன். 


" வாங்க ..." என்ற வரவேற்பிற்கு பிறகு,  என்ன பேசுவது எப்படி பேசுவது என தெரியாமல் இருவருமே தடுமாற,  முதன்முறையாக


" வாங்க மாப்ள ..." என்றார் சுசீலா பணிவாக.


செல்வராணியின் மறைவு மட்டும் நிகழாதிருந்திருந்தால்  இம்மாதிரியான  சந்திப்பிற்கெல்லாம் அம்மையப்பன் ஒத்துக் கொண்டே இருந்திருக்க மாட்டார்.


தற்பொழுது நிலைமையே வேறு என்பதால் வேறு வழி இல்லாமல் அடக்கி வாசிக்கிறார் என்பதை உணர்ந்திருந்ததால் வீராவும்  அவரிடம் எப்பொழுதும்  போல் இடைவெளி விட்டே பழகினான்.


பேச்சரவம் கேட்டு மிகுந்த ஆர்வத்தோடு  கூடத்திற்கு வந்தாள் அவன் நாயகி.


இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள,  வாய் வார்த்தைக்கு வேலையே இல்லாமல் போனது.


ஏற்கனவே அவனது  திடகாத்திரமான  உருவத்திற்கு,  அவளது மெல்லிய தேகம் சற்று பொருத்தமில்லாதது போல் காட்சியளித்த நிலையில்,  தற்போது அவள் வெகுவாக மெலிந்திருந்தது, மேலும் பொருத்தமில்லாததாக அவளுக்கு தோன்றியது. 


கன்னங்கள் ஒட்டி, கண்களைச் சுற்றி கருவளையத்தோடு,  சிவந்த நிறம் மறைந்து வெளிறி காணப்பட்டவளை பார்க்க அவனுக்கு  பாவமாக இருந்தது.


இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, சுசீலா தேநீர் மற்றும் சிற்றுண்டியை கொண்டு வந்து  வீராவிற்கு பரிமாறினார். 


ஸ்ரீப்ரியாவின் தம்பி கோபால் வழக்கம் போல் சற்று கலகலப்பாக பேச,  சூழ்நிலை ஓரளவிற்கு இலகுவாக மாறியது.  


பிறகு  காதலர்கள் இருவரும் தோட்டத்தில் தனித்து விடப்பட்டனர்.


அந்தத் தோட்டத்தை பார்த்ததுமே,   கடைசியாக செல்வராணியிடம் உரையாடிய நினைவுகள் அவன் மனதில் அலைமோத,


" வீட்ல எந்த இடத்தைப் பார்த்தாலும் அப்பத்தா ஞாபகம் தான் வருது ..."  என்றாள் நாயகி அவனது எண்ணத்தை பிரதிபலித்து.


 யாதொரு அலங்காரமும் இல்லாமல், பிறந்த குழந்தையின் சருமத்தில் , இருந்தவளை ரசனையோடு நோக்கியவனின் கரங்கள், காற்றில் படபடத்து காதோரம் வழிந்த அவளது கற்றை கூந்தலை ஒதுக்க எண்ணி உயர, உடனே சுதாரித்துக் கொண்டவன்,


" கல்யாணம் முடியட்டும் .... நம்ம வீட்டுக்கு போயிட்டா, கொஞ்சம் கொஞ்சமா இந்த கவலைல இருந்து நீ வெளியே வந்துடலாம்,   இந்த மாதிரி சமயத்துல இடமாற்றம் ரொம்ப முக்கியம் ஸ்ரீ..." என்றான் நல்ல நண்பனாக.


திருமணத்திற்கு முன்பு,  அலைபேசியிலேயே காலம் கழிக்கும் இளைய தலைமுறையினர்களுக்கு மத்தியில்,  'ஸ்வீட் நத்திங்ஸ்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூடத் தெரியாமல் இருவரும் மணந்து  கொள்ளப் போவது அவனுக்கு விந்தையாக இருந்தாலும் ,  அதிலும் ஒரு வித சுவாரசியம் இல்லாமல் இல்லை என்ற எண்ணத்தோடே  அவளிடமிருந்து பிரியா விடை பெற்றான் அவள் கணவன்.



ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...























































 



Comments

Post a Comment