அத்தியாயம் 51
அவன் வீட்டை அடையும் பொழுது, தொலைக்காட்சி சத்தம் விண்ணை பிளந்து கொண்டிருக்க, தாயும் மகளும் வழக்கம் போல் அதற்கு இணையாக குரலை உயர்த்தி யாரைப் பற்றியோ மாறி மாறி தீவிரமாக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தனர்.
காரை விட்டு இறங்கும் போதே அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.
ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகுறுவது போலான உணர்வு ஏற்பட ...
கடைசி தினத்தன்று நடந்த தர்க்கம் அவன் மன கண் முன், அவன் அனுமதியின்றி மெல்ல விரியத் தொடங்கின.
"ஐயோ அருணா ... சின்ன குழந்தை மேல சத்தியம் பண்றத முதல்ல நிறுத்து .." என்று உச்சஸ்தாழியில் உரைத்த லட்சுமி குழந்தையின் கரம் பற்றி இழுக்க
"இப்ப என் குழந்தை கைய விட போறீங்களா இல்லையா ... " என அருணா பிளிற,
"அருணா.... குழந்தை மேல சத்தியம் பண்ணி யாருக்கும் நீ உன்னை நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல ... நான் உன்னை நம்பறேன் ..."
அவன் சொன்ன அந்த வார்த்தைகள், பல மெகா டெசிபலில் அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க , துடித்து துவண்டு விட்டான் அந்த இளமாறன் .
தவறே செய்யாத தன்னவள் அந்த வார்த்தைகளை கேட்டு, எவ்வளவு துடித்திருப்பாள் என்ற எண்ணம் பிறக்க உள்ளுக்குள் கலங்கி கரைந்தான்.
தன்னை விட இளையவள், உடன் பிறந்தவள் , எவ்வளவு சுலபமாக தன்னை ஏமாற்றி இருக்கிறாள்.... என்ற எண்ணமே அவன் கழுத்தை ரம்பமில்லாமல் அறுக்க,
அருணா எங்க ஏமாத்தினா... அதுதான் அவளோட பிறவி குணமே.... அவ குணம் என்ன ஏதுன்னு புரிஞ்சுக்காம, கூட பொறந்த தங்கச்சிங்கிற ஒரே காரணத்துக்காக அவ சொன்னதை எல்லாம் நம்பி நீ ஏமாந்ததுக்கு அவ என்ன பண்ணுவா ....
என்று மனசாட்சி அவன் மண்டையில் ஓங்கி குட்டி சொல்ல, ஒரு கணம் மூச்சடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு உறைந்து நின்றான்.
எதிரில் நிற்பவன் எதிரியும் அல்ல தோளில் கை போட்டவன் தோழனும் அல்ல ....இதனைப் புரிந்து கொள்ளாமல் பாசம் என்ற பெயரில் பாழ்பட்டு நிற்கிறோமே...
என்ற உணர்வு அவனைச் சுக்கல் சுக்கலாக சிதறடித்துக் கொண்டிருக்கும் போது அவன் தந்தை ரங்கசாமி கோயம்புத்தூரில் உரைத்தது நினைவுக்கு வந்தது.
"சரண், நான் பண்ண பெரிய தப்பு ... உன் அம்மாவ திருத்தணும்னு முயற்சி பண்ணாம, அப்படியே அவளோட குறை நிறைகளோட ஏத்துக்கிட்டு வாழ்ந்தது தான் ...
ஊட்டில கிளைமேட் சரி இல்ல என்னால இருக்க முடியலனு சொன்னா ... வேற வழி இல்லாம கோயம்புத்தூர்ல குடி வெச்சேன் ....
நான் ஒரு வியாபாரி .... வியாபாரம் பண்றவன் ஒரு இடத்துல நின்னுட்டா ஜெயிக்க முடியாது.. கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு , பறந்து பறந்து உழைச்சேன்... அதனால தான் இந்தியால மட்டும் இருந்த நம்ம பரம்பரை வியாபாரத்தை உலக அளவுக்கு உயர்த்த முடிஞ்சது ...
உங்க அம்மா அடிப்படையில படு சோம்பேறி, சுயநலவாதி , ஊதாரி.... இந்த குணங்கள் இருந்தா ஆட்டோமேட்டிக்கா பொறாமையும் வந்துடும் ... அருணா உங்க அம்மாவோட மறு பிரதி. இது எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும் ....சோ, நான் அந்த குணங்களை பெருசாவே எடுத்துக்கல ... பொதுவா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல, எல்லா மனுஷனும் , அப்படிப்பட்ட குணங்களை கடந்து வந்து தானே ஆகணும்னு நெனச்சு சாதாரணமா விட்டுட்டேன் ....
ஆனா 24 மணி நேரமும் , சுயநலமாவும் பொறாமையோடயும் இருக்கிறவங்க .... எவ்ளோ எக்ஸ்சென்ட்ரிக்கா (Eccentric) யோசிப்பாங்கன்னு யோசிக்க மறந்துட்டேன்...
அது மட்டும் இல்ல உன் கல்யாணத்துலயும் சரியான முடிவு எடுக்கலனு இப்ப தான் புரியுது ...
நீயும் அருணா மாதிரி யாரையாவது லவ் பண்ணுவியோனு எதிர்பார்த்தேன் .... அப்படி நீ எதுவும் பண்ணல ... எனக்கு தான் கல்யாண வாழ்க்கை சரியா அமையல... அதனால தான் உன் கல்யாண விஷயத்துல பார்த்து பார்த்து தேடி லஷ்மியை செலக்ட் பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் ...
மருமக நல்லவளா வரணும்னு நினைச்சேனே ஒழிய, அவள ரெண்டு அரக்கிங்களுக்கு நடுவுல கொண்டு வந்து வைக்கறேன்னு யோசிக்கல ....
லஷ்மி ரொம்ப நல்ல பொண்ணு ... ரொம்ப நல்லவங்களா இருக்கிறவங்க ரொம்ப சென்சிட்டிவ்வாவும் இருப்பாங்க ....
அருணாவும் கற்பகமும் ரொம்ப எக்சென்ட்ரிக் ... லட்சுமி ரொம்ப சென்சிடிவ் .... இரண்டையும் கூட்டி கழிச்சு பார்த்தா ஏதோ புரியிற மாதிரி இருக்குது புரியாதது மாதிரியும் இருக்குது ... ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், உண்மை தெரியற அப்ப உன் அம்மாவும் அருணாவும் இந்த வீட்ல மட்டுமில்ல நம்ம குடும்பத்துல இருக்கிற தகுதியையும் இழந்திடுவாங்கன்னு என் உள்ளுணர்வு சொல்லுது ..."
அவரது வார்த்தைகள், அவன் சிந்தையை முழுவதும் ஆக்கிரமிக்க, பெருமூச்சொன்றை வெளியேற்றி மனதை சமநிலைப்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.
"வா சரண், சாந்தி லீவு... நைட் டின்னர்காக ஏதாவது ஆர்டர் பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் .... உனக்கு என்னப்பா வேணும் ...." என்றார் கற்பகம் அவசரமாக ஒட்ட வைத்துக் கொண்ட புன்னகையில்.
"எனக்கு ஒன்னும் வேணாம் ... வெளியே சாப்ட்டேன்...."
"அண்ணே, இன்னைக்கு சங்கடஹர சதுர்த்தி ... நம்ம தெப்பக்குளம் பிள்ளையார் கோவிலுக்கு போயிருந்தேன் ..... சீக்கிரம் கேஸ் முடிஞ்சு, உனக்கு நல்லபடியா டிவோர்ஸ் கிடைக்கனும்னு வேண்டுதல் வச்சி அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன் ... பிரசாதத்தை எடுத்துக்க ...."
அவன் உள்ளத்தில் எரிமலைக் குழம்பு அருவியாய் கொட்ட, கண்கள் சிவந்தவன்,
" ஓ இன்னைக்கு சங்கடஹர சதுர்த்தியா .... அதான் சங்கடம் மட்டும் இல்ல, சந்தேகமும் தீர்ந்து போச்சு...." என்றான் வினையமாக.
"என்ன சந்தேகம்ணே..." அருணா படபடக்க,
" ஆபீஸ்ல ஒரு பிரச்சனை அதை சொன்னேன்.."
" சரண், வக்கீல் என்னப்பா சொன்னாரு .... எப்ப டிவோர்ஸ் கிடைக்குமாம்..." ---- கற்பகம்.
" கூடிய சீக்கிரமே ...."
தாய் மற்றும் தங்கையின் முகத்தில் மத்தாப்பூக்கள் பூத்துக் குலுங்க ,அதனை ஆழ்ந்து நோக்கி கொண்டே
"டிவோர்ஸ் நாளைக்கே கூட கிடைச்சிடும் ... அது பிரச்சனை இல்ல... ஆனா எனக்கு என் குழந்தையோட கஸ்டடி வேணும்... அதை கொடுக்க மாட்டேங்குறா லட்சுமி ... அதான் கேஸ் இழுத்துக்கிட்டு இருக்கு ..."
பெண்கள் இருவரும் தீயை மிதித்தது போல் எரிச்சல் அடைய
"சரண் , உனக்கு எத்தனை தடவை தான் சொல்றது ... குழந்தை தாய்க்கிட்ட வளர்ந்தா தான் நல்லது ... அவ பெத்து போட்ட குழந்தையே தான் உனக்கு வேணுமா .... நீ ஆம்பள சிங்கம் டா... வேற கல்யாணம் பண்ணிக்க... நிறைய குழந்தையை பெத்துக்க.."
மகனின் புத்திர பாசத்தை திசை திருப்ப வேறு வழி தெரியாமல், அவன் திருமண விஷயத்தில் சற்றே இறங்கி வந்திருந்தார் கற்பகம்.
அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
அவர்களை பொருத்தமட்டில், அதீத பொறுமை கொண்ட லட்சுமியே அவர்களது கொடுமை தாளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்ட போது அடுத்து வரும் பெண்ணெல்லாம் நிச்சயம் தாக்குப் பிடிக்க மாட்டாள் என்ற உறுதி இருந்ததால் அவ்வாறு மொழிந்தார்.
"நீ சொல்றதும் ஒரு வகைல சரியா தாம்மா படுது ...." என ஒத்துப் பேசுவது போல் அவன் நடிக்க
"அம்மா சொன்னா சரியா இருக்கும்ணே..."
என அருணா ஒத்து ஊத,
"நாளைக்கு காலையில ஸ்வீடன்க்கு கிளம்பறேன் .... அடுத்த ஹியரிங் குள்ள திரும்பிடுவேன் ..." என்றான் பேச்சை திசை திருப்பி.
" சரிப்பா ... நல்லபடியா போயிட்டு வா ... நான் சொன்னதை வக்கீல் சார் கிட்ட சொல்லி, சீக்கிரமா அவ கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கற வழிய பாருப்பா ...."
தலை நிமிர்ந்து இருவரையும் ஏற இறங்க பார்த்து
"கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் முடிவு கட்டறேன்..."
வித்தியாசமான குரலில் மொழிந்து விட்டு அறைக்கு வந்தவனுக்கு குளிர்சாதன பெட்டியில் இருந்து அபரிமிதமாக குளுமை பொழிந்துக் கொண்டிருந்தாலும் , உள்ளம் மட்டும் ரணமாய் கொதிக்க, குளியல் அறைக்குச் சென்று ஷவர்க்கு அடியில் நின்று
"உண்மை தெரியட்டும் ... அப்புறம் அம்மா தங்கச்சின்னு பார்க்க மாட்டேன் போட்டு தள்ளிடுவேன் .... " என்று கொலை வெறியில் கர்ஜித்தான் , உண்மை தெரிய வரும் பொழுது மெய்யாகவே கொலை செய்ய போகும் அளவிற்கு அவன் துணியப் போவதை அறியாமல்.
உடனே லட்சுமியின் மீதும், கோபம் கொதித்து கிளம்ப,
" அடியேய்.. உன்னால தான் இப்படி தலையும் புரியாம காலும் புரியாம பைத்தியக்காரனாட்டம் சுத்திகிட்டு இருக்கேன் ... எத்தனை தடவை கேட்டேன் வாயை திறந்து சொன்னா என்னடி ....
எனக்கு வர்ற ஆத்திரத்துல உன்னை கன்னம் கன்னமா அறைஞ்சு.... உண்மைய சொல்ல வைக்கணும்னு தோணுது .... மாசமா இருக்கியேனு பாக்கறேன்....
அதுக்காக உன்னை அப்படியே விட்டுடுவேன்னு நினைக்காத ... நான் படுத்துற பாட்ல நீயா வந்து எல்லாத்தையும் சொல்லுவ... சொல்ல வைப்பேன் ...." என்றான் பற்களை நறநறவென்று கடித்து , அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்ததை முற்றிலும் மறந்து.
ஏதேதோ திட்டங்களை தீட்டியபடி ஆழ்ந்த நித்திரையை தழுவியவன், விடியற்காலையில் வழக்கத்திற்கு மாறாக வெகு சுறுசுறுப்பாக துள்ளலோடு எழுந்து குளித்து முடித்து, அம்சமாக ஆடை அணிந்து பயணத்திற்கு தயாரானான்.
மூன்று குழந்தைகளுக்கு தகப்பன் என்பதெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஏதோ பதின் பருவத்து இளைஞன் தன் காதலியை சந்திக்கப் போவது போல் சீட்டி எடுத்துக் கொண்டே , தன்னவளை சந்திக்கும் ஆவலில் தன் வாகனத்தை இயந்திரப் புரவியாக்கி காற்றில் பறந்தான்.
அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், ஊட்டியில் இருக்கும் பரம்பரை பங்களாவை அடைந்தவனை , வீட்டு தோட்டக்காரரும், சிவகாமியும் இனிதே வரவேற்றனர்.
அவர்களது வரவேற்பை ஏற்றபடி, வீட்டு முன் தோட்டத்தைக் கடந்தவனின் கண்களில் , அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவன் குட்டி பெண்ணரசி விழுந்தாள்.
புவியீர்ப்பு விசைக்கு எதிராக, விண்ணை நோக்கி பார்த்தபடி தலையில் போடப்பட்டிருந்த இரு சிண்டுகளோடு, அழகான கையில்லா அவள் நிறத்தை ஒத்த பிங்க் நிற கவுனில், கையில் அவளைப் போன்றே ஒரு பெண் பொம்மையை ஏந்திய படி, இரு கால்களிலும் செருப்பை மாற்றி அணிந்து கொண்டு , அதி தீவிரமாக செடியிலிருந்து தன் குட்டிக் கைகளால் இலையைப் பறித்து மண்ணில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் அவன் செல்ல, செல்வ மகள்.
கிட்டத்தட்ட நான்கு மாதத்திற்கு பின்பான அவனது குட்டி தேவதையின் தரிசனம் ....
திக்கு முக்காடி போனான் உணர்ச்சி பெருக்கில்....
ஓரிரு கணம் அவளது செய்கையை ரசித்துப் பார்த்தவன், நெருங்கி,
" ஹாய் பாப்பா ..." என்றான்.
திரும்பிப் பார்த்த குழந்தை, வேற்று முகத்தை கண்டு மலங்க மலங்க விழிக்க ,
" அப்பாவ பாரு ..." என்றான் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு.
இப்போது குழந்தை , லேசாகத் தன் சிவந்த வெல்வெட் உதட்டை சுளித்து தலையை திருப்பிக் கொள்ள,
"என்னையே உறுச்சிகிட்டு பொறந்திருக்க .... ஆனா கழுத்து திருப்பற குணம் மட்டும் உங்கம்மா மாதிரி ..." என்றான் லேசாக புன்னகைத்து.
இப்போது என்ன புரிந்ததோ, அவனைப் பார்த்து குண்டு கன்னங்கள் விரிய குழந்தை சிரிக்க, அள்ளி கையில் ஏந்திக்கொண்டு கொஞ்சி மகிழ்ந்தான்.
அறிந்த முகம் போல் தோன்றியதாளோ அல்லது தந்தை என்ற ரத்த பாசமோ ஏதோ ஒன்று குழந்தையை அவனோடு ஒன்ற செய்ய, அவன் ஒரு கையில் முத்தமிட்டால், மறு கையை காட்டினாள், ஒரு கன்னத்தில் முத்தமிட்டால் கந்து வட்டிக்காரியாய் மாறி அவள் மறு கன்னத்தைக் காட்ட, குதூகளித்துப் போனான் அந்தத் தந்தை .
குழந்தையை கொஞ்சி மகிழுந்து கொண்டே அவன் கூடத்திற்குள் நுழையவும் அவனைப் பார்த்துக் கொண்டே ரங்கசாமி மாடியில் இருந்து இறங்கி வரவும் சரியாக இருந்தது.
" வா சரண், கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ... வாட் எ சர்ப்ரைஸ் ..." என்றார் வழக்கத்துக்கு மாறாக சன்னமான குரலில்.
அவரது குரல் ஒலி குறைப்புக்கான காரணத்தை அறிந்தவன், தன் பயண விபரத்தை அவரைப் போன்றே சன்னமாக சொன்னான்.
அப்போது குழந்தை அவன் கையில் இருந்து இறங்கி சென்று, பெரியவரின் காலை பற்றிக்கொள்ள, பேத்தியை மிகுந்த பாசத்தோடு அள்ளிக்கொண்டவர், மைந்தனிடம் அவனது பணி சம்பந்தமான சம்பாஷணையில் ஈடுபட, அச்சமயம் தோட்டக்காரர் ராம்சரணின் பயண பெட்டிகளை அள்ளிக் கொண்டு வந்தார்.
உடனே ரங்கசாமி லட்சுமியின் அறைக்கு நேர் எதிரான அறையில் வைக்குமாறு சைகையில் பணிக்க,
" அப்பா.... இங்க எதுக்கு ..."
" லட்சுமி படி ஏற வேணாம்னு , அவளை கீழயே தங்க வச்சிருக்கேன் ... அதனால தான் உன் திங்க்ஸ்யும் எதிர் ரூம்ல வைக்க சொன்னேன் ...." என்றார் வெகு லேசாக புன்னகைத்து.
தந்தையின் சிந்தனை மற்றும் செய்கையை நினைத்து, அவனும் லேசாக சிரிக்க , உடனே ரங்கசாமி குரலை உயர்த்தி,
"சரண், உன்னை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.... என்ன திடீர்னு இந்த பக்கம் .... " என்றார் கோபம் போல்.
புதிய யூனிட் தொடங்குவதற்கான, திட்ட வரைவு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக, அடர் நீலமும் பச்சையும் கலந்த மங்களபுரி காட்டன் புடவையில் கிளம்பியிருந்த அவன் மனையாட்டி , மாமனாரின் குரலில் தன் கணவனின் பெயர் அடிபடுவதை கேட்டு ஒரு கணம் உறைந்து நின்றாள்.
அவளது அறை கதவு தாழ்ப்பாள் போடாமல் மூடி இருந்தாலும் , மாமனாரின் சிம்ம குரல் அவள் காதுகளை செவ்வனே சென்றடைய, துணுக்குற்றாள் பாவை.
தந்தை வேடதாரியாய் களத்தில் இறங்கியதும், ஒத்திகை ஏதுமில்லாமல் மைந்தனும் அவருக்கு இணையாக,
"இது நம்ம பூர்வீக வீடு .... நான் எப்ப வேணாலும் வரலாம் போலாம்னு நீங்க சொன்னீங்களே மறந்துட்டீங்களா ...."
உச்சந்தலையில் தொடங்கிய நீர் திவலைகள் கார்மேகமாய் திரண்டு விரிந்து அவளது நீண்ட இடைத் தாண்டிய கூந்தலின் நுனியில் சொட்டுச் சொட்டாய் வடிய, தலை துவட்ட பயன்படுத்திய பூந்துவலை, கை நழுவித் தரையில் விழ, சிலையாகிப் போனாள் பெண்.
கணவனின் கம்பீரக் குரல், அவள் காதுகளில் தொடர்ந்து ரீங்காரமாய் ஒலிக்க, இனம் புரியாத பேரின்ப உணர்வில், சிக்கித் தவித்தாள்.
" நீ இங்க வரலாம் தப்பில்ல... ஆனா மேல என் ரூமுக்கு பக்கத்து ரூம்ல தங்கிக்க .... கீழ வேண்டாம் சரண்.... அங்க லட்சுமி இருக்கா ...." ரங்கசாமி சொன்னதும் தான் , கணவன் தன் அறைக்கு எதிர் அறையில் தங்கவிருக்கிறான் என்ற இன்பச் செய்தி தேனாய் அவள் காதுகளில் விழ, நீண்ட பாலைவன நாட்களுக்குப் பிறகு, மெல்லிய புன்னகை அவள் இதழ்களில் எட்டிப் பார்த்தது.
"அவ இருந்தா எனக்கென்ன .... நான் அவள ஒன்னும் பார்க்க வரல ... நான் என் வேலையை பார்க்க வந்திருக்கேன் ..." என வெடுக்கென்று அவன் கூற கேட்டுக் கொண்டிருந்தவளின் முகம், சோகத்தில் சுருங்கியது.
"அந்த தெளிவு உனக்கு கடைசி வரைக்கும் இருந்தா, சந்தோஷம் ...." என ரங்கசாமி முடிக்கும் போது குழந்தை " அம்மா...." என்று பெரும் குரல் எடுத்து அழைக்க,
"அம்மா... ரூம்ல இருக்கா..போய் பாரு .... தாத்தாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு குட்டி ..."
குழந்தையிடம் கூறிவிட்டு ரங்கசாமி மேல் தளத்திற்கு படி ஏறுவது கேட்க, கணவனை காணும் ஆவலும் உடன் எழ , கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்லலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தில் அவள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, குட்டி இளவரசி கதவருகே வந்து "அம்மா" என்றழைக்க , அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் கதவை திறந்தாள் காரிகை.
கதவு திறக்கும் சத்தம் , மனையாளின் வளையோசை, கொலுசொலி, அவளுக்கே உரித்தான பாரிஜாதம் மணம், அவன் நுரையீரலை அப்பட்டமாய் ஆக்கிரமிக்க, அவளுக்கு முதுகு காட்டியபடி மகளுக்காக வாங்கி வந்திருந்த பொம்மைகளை பெட்டியிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
அவனது பறந்து விரிந்த திரட்சியான முதுகில் பார்வை பதித்தவளுக்கு, அவன் பார்வையை சந்திக்கும், சத்தியற்று உள்ளுக்குள் தளும்பினாள்.
அவர்களது சோபன இரவில் முதன் முதலாக அவனை தன்னந்தனியே சந்தித்த போது ஏற்பட்ட குறுகுறுப்பு, உடலெங்கும் மின்சாரமாய் பரவிய சிலிர்ப்பு, ஏகத்துக்கும் எகுறிய இதயத்துடிப்பு ...
எல்லாம் இப்பொழுதும் ஏற்பட, புதுமணப் பெண்ணாய் காதலும் தயக்கமும் போட்டி போட, தயங்கி நின்றாள் அந்த வனிதை .
அவளை திரும்பிப் பார்க்கவில்லை என்றாலும், அவள் உணர்வுகள் சுவாசத்தின் ஊடே ஊர்ந்துச்சென்று, அவன் உணர்வுகளைத் தாக்க, மெய்சிலிர்த்துப் போனவன், மெல்ல திரும்பினான்.
எதிர்பாராத அந்த சந்திப்பில் நான்கு விழிகளும் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்ள, மின்னல் தாக்கிய உணர்வை மின்னாமல் முழங்காமல், கண நேரத்தில் உணர்ந்தவள், விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
அப்போது அவன் கையில் இருந்த பொம்மையை கண்ட குழந்தை, தன் கைகளை நீட்டி, அதனைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு இடத்தை காலி செய்ய, தருணத்திற்காக காத்திருந்த நாயகன் தன் பாத சுவடுகளை அழுந்த பதித்து நடந்தபடி நாயகியை நெருங்கினான்.
அவன் எப்பொழுதும் பயன்படுத்தும் பெர்ஃப்யூம் மணத்துடன், அவனுக்கே உரித்தான பிரத்தியேக வாசனை , அவளது நாசியை துளைக்க, உடலெங்கும் மெல்லிய வெம்மை நாடி நரம்புகளில் பாய, உள்ளுக்குள்ளே தகித்தும் தணிந்தும் தத்தளித்தாள் பெண்.
" என்னை பாரு டி ..." என்றான் அவளவன், நெருங்கிய மாத்திரத்தில்.
உடனே விழி மலர்த்தியவளை ரசனையோடு பார்த்தபடி
" கழுத்தெலும்பு எல்லாம் தெரியுது ... சாப்பிடறதே இல்லையா... என்னை பழி வாங்கணும்னு , என் குழந்தைகளை பட்டினி போடறயா..." என்றான் அரைகுறை கோபத்தோடு.
" ஐயோ அப்படி எல்லாம் இல்ல ..." பதறினாள் பெண்.
" இங்க பாரு... இது உன்னோட குழந்தைங்க இல்ல .... என் குழந்தைங்க .... என்னோட முயற்சியால உருவான சாதனைங்க இதுங்க.. நல்லா சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியத்தோட இந்த குழந்தைகளை பெத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மட்டும் தான் உன்னோடது .... நாளைக்கு குழந்தையோட கஸ்டடி உனக்குனு கோர்ட் ஜட்ஜ்மெண்ட் வந்தாலும், இந்த குழந்தைகளோட பயாலஜிக்கல் ஃபாதர் நான்.... மாசத்துல பாதி நாள் குழந்தைங்க என்னோட தான் இருப்பாங்க .... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க ..."
வாய் வசை பாடிக் கொண்டிருந்தாலும், பார்வை அவள் முகத்திலிருந்து மேனி எங்கும் காதலும் ஆசையுமாய் படர, தாய்மை இத்துணை அழகா .... என்ற கேள்வியும் எழ, கடந்த இரண்டு முறையை காட்டிலும் இம்முறை அவள் வெகுவாக மெலிந்து காணப்பட்டாலும், ஏனோ அவளது தாய்மை, அவளது அழகைக் கூட்டி காட்ட , வாய்ப்பூட்டுப் போட்டுக்கொண்டு பார்வையாலேயே பருகிக் கொண்டிருந்தான் நாயகன்.
கார்மேகமாய் விரிந்திருந்த இடைத் தாண்டிய கூந்தல், மாசு மருவற்று மினுமினுக்கும் சருமம் , பிறை நுதலை ஒட்டிய வகுட்டில் குங்குமம் , சந்தன பால நெற்றியில் வட்ட வடிவ பொட்டு , மல்லிகை மொக்கு நாசி, அதில் ஒற்றை வெள்ளைக்கல் மூக்குத்தி, ஆழ் கடலையும் வாரி சுருட்டும் அகன்ற கண்கள், பஞ்சு கன்னம், பழச்சாறு ததும்பும் வடிவான இதழ்கள், கேள்விக்குறிப்போல் வளைந்து வனப்பைக் கூட்டும் செவிகள்... அதில் ஊஞ்சலாடும் ஜிமிக்கிகள்....
என நீண்ட நாட்களுக்கு பின்பு அந்த அழகில், அவன் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்க, பேச்சு அரைகுறையாய் புரிந்த நிலையில் அவள் பயத்தில் உறைந்து நின்றாள்.
சிலையாக நின்றவளை சட்டென்று அவன் தன் கைகளில் அள்ளிக் கொள்ள,
" ஐயோ என்னது இது ... ஏன் இப்படி பண்றீங்க ..." உச்சஸ்தாழியில் பதறி விட்டாள் பெண் .
" உன் வெயிட்ட தெரிஞ்சுக்கணும் இல்லையா அதான் ... பேலன்ஸ் பண்ண என் கழுத்தை சரியா பிடிச்சக்க ..."
" வெயிட் மெஷின்ல நின்னா தெரிய போகுது ..."
அவள் முத்தமிட்ட அவன் நுனி மூக்கும், அடர்ந்த மீசையில் மறைந்திருந்த திரட்சியான உதடும் மரத்துப் போயிருந்த அவள் உணர்வுகளை வெகுவாக கட்டி எழுப்ப, முகத்தை திருப்பிக் கொண்டு மொழிந்தாள்.
"சரண் ... அங்க என்ன சத்தம் ..." மாடியில் இருந்து குரல் எழுப்பினார் ரங்கசாமி.
"பேசிக்கிட்டு இருக்கேன் பா ..." என்றவன்,
இவள டிவோர்ஸ் பண்ணினதுக்கு பதிலா அவரை டிவோர்ஸ் பண்ணி இருந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பேன் ....
என முணுமுணுத்துக் கொண்டே, உடற்பயிற்சி அறைக்கு அவளைத் தூக்கிச் சென்றான்.
"சொல்லி இருந்தா, இந்த ரூமுக்கு நடந்தே வந்திருப்பேனே ..." என்றாள் பாவை, வெகுவாக வாட்டிய அவனது அருகாமையை தவிர்க்க எண்ணி.
" ஓ.... உன் மேல இருக்குற லவ்ல தூக்கினேன்னு நினைச்சியா ... அந்த முட்டாள் தனத்தை எல்லாம் இனிமே செய்யறதா இல்ல ... வெயிட் மிஷின் காட்ட போற வெயிட், சரியா இருக்கான்னு கிராஸ் செக் பண்ண தான் உன்னை தூக்கினேன் ..." என்றபடி அவளை இறக்கி விட்டவன்
" 51 கிலோ இருந்த உன் வெயிட் இப்ப 54 ஆயிருக்கு ..." என்றான் அசுவாரஸ்யமாக.
அவள் ஆச்சரியமாக அவனை நோக்க,
"இப்ப வெயிட் மெஷின்ல ஏறி நில்லு .. 54 கிலோவுக்கு ஒரு கிராம் கூட அதிகமா இருக்க மாட்ட பாரு..." துல்லியமாகச் சொன்னவன், அவள் கரம் பற்றி, அந்த எடை பார்க்கும் எந்திரத்தில் ஏற உதவி செய்தான்.
அவன் சொன்னது போலவே ஐம்பத்தி நாலு கிலோவை நெருங்கி இருக்க , வியப்பின் குறியாய் அவள் விழிகளை அகற்றி பார்க்க,
"இப்ப புரிஞ்சுதா ... ரொமான்ஸ் பண்றதுக்காக உன்னை தூக்கலனு... இனிமே நாலு நாளைக்கு ஒரு முறை உன் வெயிட் பார்ப்பேன் ....மினிமம் 300 கிராமாவது ஏறி இருக்கணும் .... அதனால ஒழுக்கமா சாப்பிடற... "
வீராப்பாக வாய் பேசிக் கொண்டிருந்தாலும், கண்களும் கரமும் அவளை அணைத்து முத்தமிட துடிக்க, அப்படி செய்து விட்டால் இவ்வளவு நேரமாக அவன் வேஷம் கட்டி இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என்பதால், சிரமப்பட்டு தன் கைகளுக்கு சிறைவாசம் கொடுத்தான்.
அப்போது அங்கு வந்த ரங்கசாமி,
" என்ன சரண், ஏன் அவளை மிரட்டிக்கிட்டு இருக்க ..."
" பாருங்க, ரொம்ப அண்டர் வெயிட்டா இருக்கா .... குழந்தைகள பத்தி அக்கறைப்படாம சரியா சாப்பிடாம இருக்கா... அதான் அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் ..."
" உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை நீ கெளம்பு ..."
"அடுத்த மாசம் டிவோர்ஸ் கிடைச்சாலும் , இவளுக்கு பொறந்த, பொறக்க போற குழந்தைகளுக்கு நான் தான் அப்பா .. அதை யாராலும் மாத்த முடியாது ... என் குழந்தைகளை நல்லபடியா பெத்தெடுக்க வேண்டிய கடமை அவளுக்கு இருக்கு ... அதைத்தான் ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கேன் ..." என்றவன் வெடுக்கென்று வெளியேற ,
"எதிர் ரூம்ல வேற தங்கி இருக்கான் ... ஆளும் பார்வையும் சரியில்ல ... ஜாக்கிரதையா இருந்துக்கோம்மா..." என பெரியவர் அறிவுறுத்த, அவளுள் ஏனோ புன்னகை பொங்கி வழிய, மறைக்க முயன்று அவள் தலை குனிந்து கொள்ளும் போது,
"இந்த ஒரு மாசம் பொறுத்துக்கம்மா... அடுத்த மாசம் டிவோர்ஸ் கிடைச்சதும், அவன் ஆபீஸ்ல கூட ஒர்க் பண்ற மஹிக்காவோ இல்ல மகேஸ்வரியோ ஏதோ ஒரு பொண்ணு பேர் சொன்னான்... அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறானாம் அதனால அதுக்கு மேல இங்க வர மாட்டான் .... நீ பயப்படாதம்மா ...."
என அணுகுண்டை அனாயாசமாக தூக்கி போட்டு விட்டு அவரும் விடை பெற, தலையில் இடி விழுந்த உணர்வில் உறைந்து நின்றாள் காரிகை.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....
DEAR FRIENDS,
HAPPY DIWALI !!!
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
DeleteNice
ReplyDeletethanks ma
DeleteSuper akka very nice 👍👍👍
ReplyDeletethanks ma
DeleteAwesome as always
ReplyDeletethanks ma
DeleteHappy happy Diwali sis. Wow superb. Finally Lakshmi and Charan meeting epi... Hereafter dhamakka than
ReplyDeletethanks ma
DeleteSuper mam
ReplyDeletethanks ma
DeleteIni yeppadi nalla sapdu weight poduva,,, nenga ippadi oru kunda potta
ReplyDelete