அத்தியாயம் 50
தன்னவளை அழைத்து பேசலாமா என்ற எண்ணம் தோன்றிய மாத்திரத்தில், அங்கு சூழ்நிலை என்னவாக இருக்குமோ என்ற சிந்தனையும் உடன் எழ, செவ்வனே அந்த முயற்சியை கைவிட்டு விட்டு அடுத்து செய்ய வேண்டியதை பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போனான்.
பெரிய நிறுவனங்களில் தலைமை பதவி வகிப்பவர்கள் எதிர்கொள்ளும் பணி சம்பந்தமான நெருக்கடி அவனையும் இறுக்க,பாதியில் விட்டு செல்ல முடியாத நிலையில் சிக்கி கொண்டு தவித்தான் நாயகன்.
அதே சமயத்தில் திட்டமிட்டபடி மேலும் ஒரு வார காலம் இருந்து கலந்தாய்வை சிறப்பாக நடத்தி முடிக்கும் மனநிலையும் இல்லாததால் , ஓரிரு தினங்கள் மட்டும் இருந்து 75% வேலைகளை முடித்துவிட்டு சென்றுவிடலாம் என்ற முடிவை அவன் எடுத்து முடிக்கும் தருவாயில் அலைபேசி சிணுங்கியது .
அவன் நாயகி தான் அழைத்திருந்தாள்.
இரண்டாவது ஒலியிலேயே அழைப்பை ஏற்றவனுக்கு, மறுமுனையில் இருந்து லேசான விம்மலுடன் கூடிய அழுகை கேட்க,
"ஏய் ஸ்ரீ .... அழாத ... இப்பதான் அப்பா போன் பண்ணி எல்லாத்தையும் சொன்னாரு மனசுக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு .... ஒரே முறை பார்த்திருக்கேன்.. ஒரே முறை ஃபோன்ல பேசி இருக்கேன் .... எனக்கே அவங்களோட இழப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு .... சின்ன வயசுல இருந்து உன்னை வளர்த்தவங்களாச்சே உனக்கு இன்னும் அதிகமா தான் இருக்கும் ... ஆனா வேற வழி இல்லம்மா.... "
அவளுடைய விம்மல்கள் சற்று குறைந்திருக்க,
"எனக்கு உங்க வீட்ல, உனக்கு அப்புறம் அதிகம் பிடிச்ச ஆள்னா உங்க பாட்டி தான் .... உங்க அம்மா கூட அவங்களுக்கு அப்புறம் தான் ..." என்றவன் அவள் மனதை இலகுவாக்க, அவளை மனம் திறந்து பேச வைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டான்.
முந்தைய தின இரவில், கடைசியாக செல்வராணி பேசியவற்றை அவள் மொழிய, கேட்டுக் கொண்டிருந்தவனின் கண்கள் பனிக்க தொடங்கின.
ஒரே ஒரு முறை பார்த்து பழகிய தன்னிடம், அந்த மூதாட்டி வைத்திருந்த நம்பிக்கையை கண்டு மலைத்துப் போனான் ...
ஏற்கனவே மனதளவில் தன்னவளை மனைவியாக வரித்திருந்தவனுக்கு, தற்போது பொறுப்புகள் மேலும் கூடியது போன்ற உணர்வு எழ,
" ஸ்ரீ ... உன் கஷ்டம் எனக்கு புரியாம இல்ல ஆனா வேற வழி இல்ல... நீ அழுதா உங்க பாட்டிக்கு பிடிக்காது ... ப்ளீஸ் .... அழாத அவங்க உடம்ப விட்டு தான் உயிர் பிரிஞ்சு போயிருக்கு ... மத்தபடி அவங்க ஆன்மா இன்னும் நம்ம கூடத்தான் இருக்கு .... நீ அழாம கொஞ்சம் கொஞ்சமா மனச தேத்திக்கிட்டா தான் அவங்க ஆன்மா ரொம்ப சந்தோஷப்படும்மா ..."
அவள் சுக்கு நூறாக மனதளவில் உடைந்திருப்பது தெரிந்திருந்தாலும் மீட்டெடுக்கும் வழி அறியாததால் ஏதோ தனக்கு தெரிந்தவற்றை கூறி அவளை தேற்ற முயன்றான்...
அலுவலக பணிகளை பிரித்து மேய்பவனுக்கு, வாழ்க்கையைப் பற்றிய அனுபவங்கள் அதிகம் இல்லாததால் அவளைப் போலவே அவனும் விழி பிதுங்கி நின்றாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவளுக்கு நிதர்சனத்தை நிதானமாக புரிய வைக்க முயற்சித்ததன் பயனாக அவள் அழைப்பை தொடங்கிய போது இருந்ததை காட்டிலும், முடிக்கும் போது ஓரளவிற்கு திடத்தோடு முடிக்க, ஓரளவிற்கு நிம்மதியுற்றான் காளை.
மதுரையில் ....
செல்வராணிக்கு நெருங்கிய உறவுகள் அனைவருமே மதுரையிலேயே மையம் கொண்டிருந்ததால் யாருக்காகவும் காத்திருக்காமல் அவரது உடல் இனிதே தகனம் செய்யப்பட்டது.
கம்பீரத்திற்கு பெயர் போன அம்மையப்பனே, நடந்து முடிந்த சோகத்தில் இருந்து வெளி வர முடியாமல் ஆடிப் போயிருந்த நிலையில் சுசிலா மற்றும் ஸ்ரீப்ரியாவை பற்றி சொல்லவே வேண்டாம்.
திடீரென்று வீசிய புயல் காற்றில், வேருடன் விழுந்த மரத்தில் வசித்த குட்டி குருவிகளின் நிலைப்போல் ஒன்றுமே புரியாமல், திக்கு திசை தெரியாமல் துக்கத்தின் உச்சத்தில் தோய்ந்து திளைத்தனர் .
திருமணத்திற்காக வந்திருந்த உறவினர்கள், ஈமச்சடங்கில் கலந்து கொள்ளும் நிலையைக் கண்டு, அங்கு சென்றிருந்த பொன்னம்பலம் ஆழ்ந்த வருத்த முற்றார்.
ஆனால் நடந்த துக்கத்தின் மூலம் ஒன்றை நன்றாக தெரிந்து கொண்டிருந்தார், அதுதான் அம்மையப்பனின் நேர்மை.
தன் தாய் இறந்த செய்தியை தெரிவிக்கும் போது,
" சம்மந்தி, ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆவணும் ... நீங்க உங்க குடும்பத்தோட வந்து என் மகளை உங்க மகனுக்கு சம்பந்தம் பேசிட்டு போன பொறவு கூட , எனக்கு உங்க குடும்பத்துல சம்பந்தம் வச்சுக்க அவ்வளவா இஷ்டம் இல்ல .... அதை நான் என் அம்மா கிட்டயும் சொன்னேன் .... ரொம்ப கோவப்பட்டா ... ஒத்த கால்ல நின்னு, இந்த கல்யாணத்தை நடத்தியே தீரனும்னு என் கிட்ட வாக்கு கூட வாங்கிக்கினா... அந்த அளவுக்கு உங்க குடும்பத்தையும் மாப்பிள்ளையும் அவளுக்கு புடிச்சிருந்திச்சு... இப்ப அவ ஆசைப்பட்டபடி எல்லா ஏற்பாடும் செஞ்சு கல்யாணமும் நடக்கப் போற நிலையில இப்படி இல்லாம போயிட்டாளே ..."
அவர் குமுறி அழுத்தது பொன்னம்பலத்தின் மனக்கண் முன் விரிய , மனம் கலங்கினார் மனிதர்.
துக்கத்தில் கரைந்து கொண்டிருக்கும் மருமகளை கண்டு ஆறுதல் கூறியவர், தகனம் நடந்து முடிந்த வீட்டில், சுப காரியங்களைப் பற்றி பேச மனம் இல்லாமல், தன் வருகையை பதிவு செய்துவிட்டு அம்மையப்பன் மற்றும் வீட்டின் மூத்த ஆண் மகனாய் இருந்து, பெரும்பாலான வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட கோபாலனிடம் வாய் வார்த்தையில் கூறாமல் தலையசைப்பில் விடைபெற்றார்.
கோயம்புத்தூரில் ....
தன் கொழுந்தனுக்கு சம்பந்தம் பேசி இருக்கும் இல்லத்தில் நடைபெற்றிருக்கும் துயர நிகழ்வை தன் தந்தையிடம் பிரபா பகிர்ந்து கொண்டிருக்க, மிகுந்த ஆவலோடு கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி .
"ரொம்ப வருத்தமா இருக்கும்மா.... இன்னும் ஒரு மாசம் அந்த அம்மா உயிரோட இருந்திருந்தா பேத்தி கல்யாணத்தை பாத்துட்டு நிம்மதியா போயிருந்திருக்கலாம் ஆனா வாழ்வும் சாவும் நம்ம கையில இல்லையே ..."
பெருமூச்சோடு பிரபாவின் தந்தை முடிக்க,
"அக்கா, இப்ப கல்யாணம் நின்னு போயிடுமாக்கா ...."
கண்ணில் ஆர்வத்தை தேக்கி தனக்குத் தேவையான கேள்வியை சட்டென்று முன் வைத்தாள் ப்ரீத்தி .
தங்கையின் கேள்வி தணிந்திருந்த அவளது கோபத்தை தட்டி எழுப்ப,
"அந்த பாட்டி சாகறத்துக்கு முன்னாடி , தம் பேத்திய பாண்டியனுக்கு தான் கட்டி வைக்கணும்னு அவங்க புள்ள கிட்ட வாக்கு வாங்கிட்டு செத்துப் போயிட்டாங்களாம் ...
பாண்டியனும் கட்டினா அந்த பொண்ணைத்தான் கட்டுவேன்னு ரொம்ப உறுதியா இருக்காரு ... சோ, ரெண்டு பக்கமும் இந்த கல்யாணம் நடத்துறதுல எந்த பிரச்சனையுமே இல்ல ...
ஒரு வேளை யாராச்சும் ஏதாச்சும் குட்டி கலகம் பண்ணி கல்யாணத்தை நிறுத்தினாலும், அந்த பொண்ண தூக்கிட்டு போய் கோயில்ல வச்சியாவது தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துடுவாரு பாண்டியன் ...."
தங்கையை முறைத்தபடி அவள் கூறி முடிக்க, தன் எண்ண ஓட்டத்தை தமக்கை அறிந்து கொண்டதை உணர்த்து தலை குனிந்து கொண்டாள் ப்ரீத்தி .
மூன்று நாட்கள் இரவும் பகலுமாக , ஊண் உறக்கம் இன்றி ஓயாமல் உழைத்து 75% பணியை முடித்துவிட்டே லண்டனை விட்டு புறப்பட்டான் வீரா.
லண்டன் விமான நிலையத்திலிருந்து ராம்சரணை அழைத்து அவன் நடந்த செய்தியை பகிர, கேட்டுக் கொண்டிருந்தவன் அதிர்ச்சியில் உறைந்தே போய்
" ஐயோ .... பக்கத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்படி ஆயிடுச்சே டா..... " என வெகுவாக வருந்தினான்.
கல்யாண ஏற்பாட்டை குறித்து ராம்சரண் கேள்வி எழுப்ப, தனக்குத் தெரிந்த தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து விட்டு
" கல்யாணத்த குறிச்ச நாள்லயே நடத்தி ஆகணும்னு ஸ்ரீயோட அப்பா சொல்லிட்டாரு .... அதுக்காகவே ஐயரை பார்த்து பேசி மூணாம் நாளே ஏதேதோ சாங்கியங்கள் செஞ்சு கடைசி காரியத்தை முடிச்சிட்டாராம்... என்ன தான் செய்ய வேண்டியதை செஞ்சி முடிச்சிருந்தாலும் , அவங்க வீட்டு ஆளுங்க நடந்து முடிஞ்ச சோகத்துல இருந்து வெளியே வராம கஷ்டப்பட்டு கிட்டு தான் இருக்காங்க டா ..."
"என்ன சொல்றதுன்னே தெரியல ... இவ்ளோ நாள் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்த ... இப்ப கல்யாணம் நடக்க போற சமயத்துல, இப்படி ஒரு பிரச்சனை ...ம்ச்..." என ராம்சரண் வருந்த,
" கோயம்புத்தூர்ல தானே இருப்ப ... ஊருக்கு வந்ததும், இன்விடேஷன் எடுத்துட்டு வரேன் ..."
"இல்லடா ... நாளைக்கு காலையில ஊட்டிக்கு போறேன் ... ஃபார்மாலிட்டீஸ் எதுவும் தேவையில்ல ... இன்விடேஷனை whatsapp பண்ணிடு ... கல்யாணத்துல மொத ஆளா இருப்பேன் ... " என்றான் உயிர் நண்பனுக்கு சிரமம் கொடுக்க விரும்பாமல்.
" அது எப்படி முடியும் ... உன் பொண்ணுக்கு முடி இறக்கும் போது, என் வீட்டுக்கு வந்து முறைப்படி பத்திரிகை வச்சி தானே கூப்பிட்ட ... "
" அதுக்காக ஊட்டிக்கு வர போறயா ..."
"ஆமா ... அங்க வந்து உங்க அப்பாவ நேர்ல பார்த்து பத்திரிகை வச்சிட்டு அப்படியே லட்சுமிய இன்வைட் பண்ணலாம்னு ..."
மனைவியின் பெயர் அடிபட்டதுமே மனம் குளிர்ந்து போனவன்,
" சரி வா ..." என்றான் சந்தோஷத்தை வெளி காட்டாமல்.
" நீயும் லட்சுமியும் ஜோடியா என் கல்யாணத்துக்கு வர்றீங்க ... ஞாபகம் வச்சுக்க.." என மீண்டும் அறிவுறுத்தியவனிடம்,
" நிச்சயமா வரேன் டா ..." என முடித்தான் ராம்சரண் அழுத்தமாக.
அடுத்து, வீரா ஸ்ரீப்ரியாவை அழைத்து தனது பயண விபரத்தை சொல்ல, இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு விடிவெள்ளி தென்பட்டது போல் அவனது வருகை அமையப் பெற, நிம்மதி பெருமூச்சு விட்டாள் மங்கை.
திருமணத்திற்கு பிறகு, ஒரு வார காலம் தேன் நிலவிற்காக டார்ஜிலிங் செல்ல எண்ணியிருந்ததால் லண்டனில் முழு பணிகளையும் முடித்துவிட்டு திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்தான்.
ஆனால் தற்போது நிலைமை முழுவதுமாக மாறிவிட்டதால், அவனது பயண திட்டமும் மாறி போயிருக்க, தன்னவள் இருக்கும் மனநிலையில் அது குறித்து விபரமாக பேச மனம் இல்லாமல், மேலோட்டமாக, தன் வரவை பற்றி கூறி முடிக்க,
" தேங்க்ஸ் ...." என்றாள் மென்மையாக.
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் கூட ,தற்போதெல்லாம் இளைய தலைமுறையினர்கள் திருமணத்திற்கு முன்பாக, அலைபேசியில் ஒருவரோடு ஒருவர் காதல் மொழி பேசுவதும் கல்யாணத்தைப் பற்றிய கனவுகளை பகிர்வதும் இயல்பான ஒன்றாகிவிட்டது ....
அதையும் தாண்டி பெரும்பாலானவர்கள் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்ஸ், ஒரு சிலர் டேட்டிங் போன்றவற்றில் ஈடுபடுவதும் தற்போது வெகு சகஜம் ...
ஆனால் வீரா , ஸ்ரீப்ரியாவை பொருத்தமட்டில் , அம்மாதிரியான சந்தர்ப்பங்களை காலமும் சூழ்நிலையும் அமைத்துக் கொடுக்காமல் விட்டுவிட்ட நிலையில், அவளது 'தேங்க்ஸ்' என்ற இந்த ஒற்றை வார்த்தை , அவளது எதிர்பார்ப்பு, அவன் மீதான காதல், அவனுக்கான காத்திருப்பு, திருமணத்தின் மீதான அவளது ஆர்வம், ஆசை ஆகியவற்றை மறைமுகமாக பறைசாற்ற, அதனை உள்வாங்கி ஆழ்ந்து ரசித்து படி,
" மீட் யு சூன் ..." என்று முடித்தான் அவளது காதலன்.
மறுநாள் மனையாளையும் மகளையும் சந்திக்கப் போகும் சந்தோஷத்தில் மூழ்கிய படி பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து முடித்த ராம்சரண் சற்று நேரம் மனதை திசை திருப்ப எண்ணி பேஸ்புக்கில் வலம் வர ஆரம்பித்தான்.
பெரும்பாலும் பேஸ்புக் பரிந்துரைக்கும் சமையல், அரட்டைக் கச்சேரிகள், சினிமா காமெடி , இன்ஃப்ளுயன்சர் இம்சைகள் பெண்களின் அலங்காரங்கள் மற்றும் நடனங்கள் சம்பந்தமான ரீல்ஸ்(Reels) மற்றும் ஷார்ட் வீடியோக்களை தவிர்த்து விட்டு, அறிந்து கொள்ள வேண்டிய வித்தியாசமான முக்கிய உலக விபரங்கள் அடங்கிய ரீல்ஸ், ஷார்ட் வீடியோக்களை பார்க்கும் பழக்கம் உடையவன் அவன்.
அப்படி பரிந்துரைக்கப்பட்ட ரீல்ஸ்களை கடந்து செல்லும் பொழுது, விழிப்புணர்வு பதிவுக்காக கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா எடுத்திருந்த காட்சியை ரீல்சாக கோவில் நிர்வாகம் பதிவேற்றி இருக்க, அதன் ப்ரிவியூ காட்சிகளைப் பார்த்து துணுக்குற்றவன் , அதனை முழுமையாக தட்டிப் பார்த்து உறைந்து போய் விட்டான்.
நவக்கிரகத்தை வலம் வந்து கொண்டிருந்த சிறுமியின் ஆடை அங்கு எரிந்து கொண்டிருந்த தீபத்தில் எதேச்சையாக பட்டு தீப்பற்ற , பதற்றம் மற்றும் வலியில் அந்த சிறிய பெண் பதறி துடிக்க , அவன் மனையாள் ஸ்ரீலக்ஷ்மி ஓடி போய் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததோடு, வலி தாங்க முடியாமல் கதறும் அந்த பெண் குழந்தையை சமாதானப் படுத்திக் கொண்டிருக்கும் போது திருமண தரகு வேலை பார்க்கும் காமாட்சி, அங்கு ஓடி வந்து அந்த சிறுமியை அவளிடமிருந்து பெற்று ஆறுதல் கூறி தேற்றி வேறொரு பெண்மணியிடம் ஒப்படைத்துவிட்டு, ருக்மணி மற்றும் ஸ்ரீலட்சுமியிடம் கண்ணீர் மல்க , ஏதோ பேசுவது போல் அந்த ரீல் முடிவடைந்து இருந்தது.
ஒன்றுக்கு மூன்று முறை அந்த ரீலை ஓட்டிப் பார்த்தவனுக்கு காமாட்சி அன்று ஸ்ரீலட்சுமி மற்றும் அவளது தாய் ருக்மணியை கோவிலில் சந்திக்கவே இல்லை என அவனிடத்தில் பொய்யுரைத்திருக்கிறாள் என்பது தெளிவாக விளங்கியது.
உடனே அவன் கோபம் ராக்கெட் வேகத்தில் விண்ணை முட்ட, அந்த ரீலை தன் அலைபேசியில் தரவிறக்கம் செய்து கொண்டு, காமாட்சியை சந்திக்கும் எண்ணத்தில் துரிதமாக தயாராகி கூடத்தை அடையும் பொழுது, வீடே மயான அமைதியில் மூழ்கி இருந்தது.
தாயும் மகளும் வீட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டவன் இதுவும் தற்போதைய சூழ்நிலைக்கு ஒரு வகையில் நல்லதே என்றெண்ணிக் கொண்டு காமாட்சி வீட்டை நோக்கி காரை புயல் வேகத்தில் செலுத்தினான்.
அவனுடைய நல்ல காலம், காமாட்சி வீட்டு வாயிலில் அமர்ந்தபடி தன் பேத்திக்கு தலை வாரிக் கொண்டிருந்தார்.
காரை விட்டு இறங்கி ராம்சரண் வேகமாக அவரை நோக்கி முன்னேற, துணுக்குற்றவர், அவனையும் அவன் வரும் வேகத்தையும் பார்த்து செய்வதறியாமல் உறைந்து போக, அவரை நெருங்கி, தன் அலைபேசியில் இருந்த அந்த ரீலை தட்டித் துவக்கி காட்டி
"இதுக்கு என்ன அர்த்தம் ....
ஏன் அன்னைக்கு என் பொண்டாட்டியையும் என் மாமியாரையும் கோவில்ல பாக்கவே இல்லன்னு என்கிட்ட பொய் சொன்னீங்க ..." என்றான் எடுத்த எடுப்பில் .
அவன் காட்டிய காட்சிகளை கண்டதும் கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தையும் புரிந்து கொண்ட காமாட்சி, மீண்டும் ஏதேதோ பேசி திசை திருப்ப முயல, உடனே ராம்சரண், அங்கிருந்த அவரது பேத்தியை பற்றி இழுத்து ,
" நெருப்புல இருந்து என் பொண்டாட்டி காப்பாத்தின இந்த சின்ன பொண்ணு மேல சத்தியமா சொல்லுங்க .... அன்னைக்கு நீங்க என் பொண்டாட்டிய கோவில்ல பார்த்து எதையுமே சொல்லலயா ..."
அவன் நேரடி தாக்குதல் நடத்த, அதில் உறைந்து, உடைந்து , உருகுலைந்து போனவர் , கண்களில் கண்ணீர் மல்க, ஒன்று விடாமல் நடந்த அனைத்தையும் கூறி முடித்தார்.
கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அருணாவின் மேல் வகைத்தொகை இல்லாமல் கொலைவெறி கொப்பளிக்க,
" தம்பி, நான் என் தொழில காப்பாத்திக்க வேண்டி தான் அன்னைக்கு பொய் சொன்னேன் .... என்னை மன்னிச்சிடுங்க ஆனா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் இந்த விஷயத்துல என்னைய சாட்சியா வச்சு உங்களால ஓன்னையும் சாதிக்க முடியாது .....
ஏன்னா ராமலட்சுமியை பொண்ணு பாத்துட்டு போன அந்தப் பையனோட அம்மா பார்வதி, நிச்சயமா உங்க தங்கச்சி அருணாவ காட்டிக் கொடுக்க மாட்டாங்க ....
அதே மாதிரி உங்க தங்கச்சியும், அந்தப் பார்வதி அம்மாவ சந்திச்சதை ஒத்துக்க போறது இல்ல....
இப்படி அந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமான ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்காம காப்பாத்திக்கும் போது என்னோட வாக்குமூலமும் இந்த வீடியோவை மட்டும் வச்சு உங்களால என்ன பண்ண முடியும் தம்பி .... யோசிங்க ....
ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கங்க ...உங்க அம்மாவும் தங்கச்சியும் நல்லவங்க கிடையாது .... அவங்க ரெண்டு பேரும் சுகமா வாழறதுக்காக எந்த எல்லைக்கும் போய் யாரை வேணும்னாலும் போட்டு தள்ளுவாங்க... இந்த பிரச்சனைல இருந்து நீங்க புரிஞ்சிக்க வேண்டிய விஷயம் இது மட்டும் தான் ...."
"தொழில் ஒரு மனுஷனுக்கு முக்கியம் தாம்மா... இல்லன்னு சொல்லல .... ஆனா அதை விட மனுசனா பொறந்தவனுக்கு மனசாட்சி ரொம்ப முக்கியம் .... நீங்க அன்னைக்கு மனசாட்சி இல்லாம சொன்ன பொய்க்கு இன்னைக்கு தெய்வமே சாட்சி சொல்லிடுச்சு..
நீங்க ரொம்ப புத்திசாலித்தனமா யோசிச்சு சொன்ன பொய்க்கு கடவுளே ஆதாரத்தை தேடி கொடுத்துட்டாரு...பார்த்தீங்களா...
இப்ப நீங்க புரிஞ்சுக்குங்க ... பொய் தற்காலிகம் தான் உண்மை தான் நிரந்தரம்னு...
இன்னைக்கு சொன்ன மாதிரி நீங்க அன்னைக்கே உண்மையை சொல்லி இருந்தீங்கன்னா, என் வாழ்க்கைல இந்த கணம் வரைக்கும் நான் சந்திச்சுக்கிட்டு இருக்கிற பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலைமையே வந்திருக்காது ....
நான் உங்க வயச மதிச்சு உங்க வார்த்தையை நம்பினது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்ப இல்ல புரியுது ...."
" தம்பி, என்னை மன்னிச்சிடுங்க ... நான் ரொம்ப சுயநலமா நடந்துகிட்டு இருக்கேன்னு இப்ப தான் புரியுது ... நான் லட்சுமியை பார்த்து மன்னிப்பு கேக்கணும் ..." என்றார் ராம் சரணின் வாழ்க்கையில் நிலைமை கை மீறி போய்விட்டதை அறியாமல்.
" நானும் அவள பாத்து மன்னிப்பு கேட்கணும் .... " என்றவன் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர,
" தம்பி, ஒரு நிமிஷம் .... உங்க பொண்டாட்டி லட்சுமி எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவளோ ..... உங்க தங்கச்சி அருணா அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்தானவ.... அதைவிட இப்ப உங்ககிட்ட அருணா பண்ண தப்புக்கு ஆதாரம் வேற இல்ல ... பார்த்து சூதானமா நடந்துக்குங்க...கூடிய சீக்கிரம் லட்சுமியை பாத்து மன்னிப்பு கேட்க உங்க வீட்டுக்கு வரேன் ..."
" எனிவே தேங்க்ஸ் ... நீங்க லஷ்மியை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல நமக்கு கெட்டது செஞ்சவங்களுக்கு கூட நல்லது தான் செய்யணும்னு நம்ம வேதம் சொல்லுது ... ஆனா உங்க வீட்டு குழந்தையை தன் உயிரை பணயம் வச்சு காப்பாத்தி நல்லது செஞ்ச என் பொண்டாட்டிக்கு நீங்க கெட்டது தான் செஞ்சிருக்கீங்க ... அதனால கடவுள் கிட்ட மன்னிப்பு கேளுங்க ... அவரு தான் உங்களை மன்னிக்கணும் ..."
வெடுக்கென்று கூறிவிட்டு காரில் ஏறி பறந்து விட்டான்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள்.....
Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks dr
DeleteSuperrrr ji...
ReplyDeleteWaiting for saran and lakshmi's meeting..
Pandiyan mrge ku preethi nala edhuna problem varuma🤨🤨🤨
thanks a lot ma...varadhu da
DeleteNice nice ud sis... Finally he realise Lakshmi s good character.
ReplyDeletethanks dr
Deleteஆவல் அதிகமானது.மிகவும் அருமை.வாழ்த்துகள்.💐💐💐💐💐💐💐💐💐🎆🎆🎆🎆😙❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟👏👏👏👏👏👏👏👏🎁🎁🎁🎁🎁🌹🌹🌹🌹🌹🌹🌹
ReplyDeletethank u so much dear
DeleteTerrific
ReplyDeletethanks ma
DeleteSuper akka very nice moving 👌👌👌
ReplyDeletethanks ma
DeleteNice
ReplyDeletethanks ma
Deleteஅம்மாவை பற்றி குறிப்பிடும்போது கொஞ்சம் மரியாதையாக சொல்லி இருக்கலாம். அவ இவனு இறந்தவங்களை பற்றி அடுத்தவரிடம் அதுவும் சம்மந்தியிடம் பேசும்பொது கொஞ்சம் நெருடலாக உள்ளது.
ReplyDeleteThats is village slang... அம்மா செத்துப் போச்சு ...அம்மா செத்துப் போயிட்டா ..அப்படித்தான் சொல்லுவாங்க ..ரொம்ப மரியாதையா அவங்க இவங்க அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க ...
ReplyDeleteAma,, uru side appadi than pesuvanga
Delete