ஸ்ரீ-ராமம்-49

 அத்தியாயம் 49 


ஊட்டியில் ......

 

லட்சுமிக்கு கர்ப்ப உபாதை ஒரு புறமும், கணவனைப் பற்றிய சிந்தனை மறுபுறமும்  விடாமல் வாட்டி எடுக்க,  ஆள் பாதியாய் இளைத்துப் போனாள்.


 கோயம்புத்தூர் பயணத்தை முடித்துக் கொண்டு  திரும்பிய ரங்கசாமியும் ,  ராம் சரணை குறித்து வாய் திறக்காமல்,  வழக்கமான வியாபார பயணம் போல் நடந்து கொள்ள,  தன் கணவனைக் குறித்த செய்திக்காக காத்திருந்து காத்திருந்து கலங்கிப் போனாள் காரிகை. 


வீட்டில் பெரும்பாலும் பகல் பொழுதில்  சுடிதார் , இரவு வேளையில்  நைட்டியில் இருப்பவள், தொழிற்சாலைக்குச் செல்லும் பொழுது மட்டும் தன் பதவிக்கேற்றார் போல்  தரமான உயர்தர பருத்தி புடவைகளை அணிந்து செல்வது வழக்கம்.


அன்று அது போல் மெஜண்டா நிறத்தில்,  அடர் பச்சை நிற பார்டர் கொண்ட பருத்தி  புடவையை அணிந்துகொண்டு தொழிற்சாலைக்கு கிளம்பி கொண்டிருந்தவளுக்கு ,


" இந்த மெஜண்டா கலர் உனக்கு ரொம்ப அழகா இருக்கு லட்சுமி ..." 

என்ற ராம்சரணின் குரல்  காதோரம் ஒலித்ததோடு,  அந்த  தீபாவளி தினத்தன்று  அவன்  செய்த  குறும்பும் அலை அலையாய்   அகமெங்கும் ஆக்கிரமித்துக் அலை கழிக்க தொடங்க, ஒரு கணம் செய்வதறியாது உறைந்து நின்றவள் ஒரு வழியாக மனதை  நிலைபடுத்தி, அன்று தொழிற்சாலை பணியாளர்களின் குறை கேட்கும் தினம் என்ற கடமையை மனதில் இறுத்திக் கொண்டு

குழந்தையை சிவகாமியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு பணிமனைக்கு பயணப்பட்டாள்.


ராம்சரணோடு  தேன் நிலவிற்கு வந்த போது அவள் தேயிலைத் தோட்ட வரப்புகளில் இறங்கி  சுற்றிப் பார்த்திருக்கிறாள்.


தற்போது கர்ப்பவதியாக இருப்பதால்  தொழிற்சாலையை மட்டும் மேற்பார்வை பார்த்துவிட்டு கிளம்புவதை வழக்கமாக்கி கொண்டிருந்ததால், பெரும்பாலான கடைநிலைப் பணியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையாமலேயே போயிருக்க,  குறை தீர்க்கும் தினம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்த நிலையில் கொழுந்து தேயிலைகளை கூடைகளில் பறித்துக் கொண்டு வந்து எடைக்கு கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணுடனும் நட்போடு அளவளாவ தொடங்கினாள். 


ஒரு சில தரமான கோரிக்கைகளை அப்பெண்கள் முன் வைக்க,  அதனை செய்வதாக அவள் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கும் போது மத்திம வயதை கடந்த பெண்மணி  ஒருவர் அவளை நெருங்கி,


" நீங்க சின்னய்யா சம்சாரங்களா ..."


" ம்ம்ம்..."  என அவள் லேசாக புன்னகை பூத்தபடி தலையசைக்க ,


" ரொம்ப அழகா இருக்கீங்க ... மாசமா இருக்கீங்க போல ... நல்லபடியா குழந்தை பொறந்து  நீங்களும் உங்க குடும்பமும் எப்பவும்  நல்லா இருக்கோணும் ..."


அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தவள்,  அவருடன் மேலும் உரையாடலை தொடர,


" இங்க சுத்து வட்டத்துல மொத்தம் 12 எஸ்டேட் இருக்கும்மா....  ஆனா நம்ம எஸ்டேட்ல வேலை செய்ய தான் கூட்டம் அலைமோதும் ... ஏன்னா,  இங்கதான் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு அதிகம் ... அதோட சம்பளமும் அதிகம் ...  கரெக்டாவும் கொடுத்துடுவாங்க ..."  


அவள் அமைதியாக அவர் சொல்வதை  சிரித்த முகத்தோடு  உள்வாங்கிக் கொண்டே  நிற்க,


" சின்னய்யா வரலீங்களா ... அவர பாத்து ரொம்ப நாளாச்சுது .."  அந்தப் பெண்மணி கண்களில்  ஆர்வத்தை தேக்கி கேட்க ,


வேறு வழி இல்லாமல் உணர்வுகளை மறைத்துக் கொண்டு,


" சீக்கிரமே வந்துடுவாரு ..."  என்றாள் ஒரு பேச்சுக்காக  உடனே அது  பலிக்க போவதை அறியாமல்.


" அவருக்கு நாங்க எப்போதும் நன்றி சொல்ல  கடமைப்பட்டு இருக்கோம் ...

 முன்னெல்லாம் பெரியய்யாவ(ரங்கசாமி) பாக்கவே முடியாது ... அப்படி பார்க்கிற சந்தர்ப்பம் அமைஞ்சாலும்  அவரு எங்க கூட எல்லாம் அதிகம்  பேச மாட்டாரு...  எங்களுக்கு எது வேணும்னாலும் நாங்க பழைய  மேனேஜர் கிட்ட தான் பேசி ஆகணுங்கிற நிலைமை   இருந்துச்சு ... 

அதனால அந்த  பழைய மேனேஜர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு,   இங்கு கொழுந்து பறிக்க வர பொண்ணுங்க கிட்ட  ரொம்ப தப்பா நடந்துகிட்டாரு...

இதை நாங்க யார் கிட்ட சொல்றதுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கும் போது தான் ஒரு நாள் சின்னய்யா இங்க வந்தாரு ... அவரும் பெரியய்யா மாதிரி அதிகம் பேசல ... இறுக்கமா தான் இருந்தாரு ... இருந்தாலும்

அவரு முகத்துல ஒரு சாந்தம் தெரிஞ்சிச்சி ... ஓரளவுக்கு தைரியத்தை வர வழிச்சிக்கிட்டு ,

இங்க நடக்கிற கொடுமையை நான் தான் எடுத்துச் சொன்னேன் .... 

அன்னைக்கு நம்ம எஸ்டேட்டே  கலகலத்து போச்சுது...  அந்த பழைய மேனேஜரை போட்டு அடிச்சு பொரட்டி எடுத்துட்டாரு .... அதுக்கு மேல அந்த ஆளு எங்க போனாருனு யாருக்குமே தெரியல .... அதுக்கப்புறம் தான் மூணு மாசத்துக்கு ஒருக்கா,  குறை தீர்க்கும் தினம்னு ஒரு நாள ஏற்பாடு பண்ணி புது  மேனேஜரும் பெரியய்யாவும் எங்களை சந்திக்க ஆரம்பிச்சாங்க ...

 பெரியய்யாவோட மேற்பார்வைல நடக்கிறதால, இப்பல்லாம் எங்களுக்கு அந்த மாதிரியான பிரச்சனைகள்  வர்றதில்ல .....


பத்தாங்கிளாஸ், 12ஆம் கிளாஸ் படிக்கிற பெண்டு புள்ளைங்க கூட, லீவு நாள்ல வந்து நிம்மதியா  வேலை பாக்குதுங்க  ..."  என முடித்தவர் ஒரு சில தரமான கோரிக்கைகளை வைத்து விட்டு விடை பெற,  தன் கணவனைப் பற்றிய சிந்தனையில் மீண்டும் ஆழ்ந்து போனாள் பெண். 


அவனுக்கு கோபம் விருட்டென்று வந்துவிடும், அப்போதெல்லாம்  வார்த்தைகள் குத்தீட்டிகளாய் பாயும்..


அப்படி ஆயுதங்களாய் பாயும்  கேள்விகளும், அத்தருணத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளும் கூட  எதிராளி  பதில் சொல்ல முடியாத அளவிற்கு சரியானதாகவும், அவர்களே மெச்சும் அளவிற்கு நாகரீகமானதாகவும்  தான் இருந்திருக்கிறது ...


அதேசமயம்  கோபத்திற்கு பின்பான அவன் சாந்தம்,  எப்பொழுதுமே அளந்து அளந்து பேசும் அவன்  சுபாவம் ,  சொல்லும் சில வார்த்தைகளில் அவன் காட்டும் ரசனை....  அப்பப்பா ...


எக்காலமும் எண்ணி எண்ணி லயிக்கலாம் .... 


பெரும்பாலான ஆண்கள்,   புது மனைவியிடம் தங்களது வீர பிரஸ்தாபத்தையும், படாடோபத்தையும், தங்களது பதவியின் உயரத்தையும்  தற்பெருமையாகப் பேசுவது வழக்கம் ...


ஆனால் அவ்வாறு அவன் பேசி அவள் கேட்டதே இல்லை ....


இந்தக் கணம் வரை அவன் நண்பர்கள் மற்றும் வீட்டு வேலையாட்கள் மூலம் தான்,  அவனது பதவியின் உயரம், அவன் செய்த ஆகச் சிறந்த செயல்கள் அவளை வந்தடைந்திருக்கிறது ...


ஒரே ஒரு சமயம் அது குறித்து கேட்டும் இருக்கிறாள் ...


அப்போதும் ஆரவாரம் ஏதும் இல்லாமல் மிகுந்த அழுத்தத்தோடு 'ம்ம்ம்'  என்ற ஒற்றைத்தலை அசைவில் நிறுத்திக் கொண்டு விட்டான்.....


என அவள் மனம் தாறுமாறாய்  அவன் தனித்துவத்தை அவனோடு வாழ்ந்த காலத்தைக் காட்டிலும், தற்போது  அணு அணுவாக  அசைபோட்டு பார்த்து  ரசிக்க,  அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. 


இத்தனை அழுத்தமும் இறுக்கமும் நிறைந்த மனிதன்,  தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் விட்டுவிட்டு தன்னைத் தேடி வருவானா .....?


என்ற கேள்வி அவளை மேலும் நிலைகுலைய செய்ய, அன்றைக்கான  வேலை குறித்த தகவல்களை மாமனாரை அலைபேசியில் அழைத்து  பகிர்ந்து விட்டு , தனிமை வேண்டி  வீடு நோக்கி பயணப்பட்டாள்.




கோயம்புத்தூரில் .....

 

" ஏய்  ராமு....

 அந்த மூணாவது  டேபிள்ல இருக்கிற அந்த ஹாண்ட்சமான ஆளு நம்மளையே பார்த்துகிட்டு இருக்கான் ... பாரு டி..."


என ராமலட்சுமியுடன் மெக்டொனால்ட்ஸில்(Mac Donalds) அமர்ந்து சிற்றுண்டி உணவை கொறித்து கொண்டிருந்த அவளது தோழி சொல்ல 


"அட ஆமா  ... ஏன் நம்மளையே பார்த்துகிட்டு இருக்கான் ..."  என்றாள் ஸ்ரீலட்சுமியின் தங்கை ராமலட்சுமி ஆராய்ச்சியோடு.


அப்போது பார்த்து திரையில் எண் தெரிய ,


"நம்பர் வந்துருச்சு ... நான் போய் பர்கர் வாங்கிட்டு வந்துடறேன் ..."  கவுண்டருக்கு சென்று அவள் பர்கரை  வாங்கிக் கொண்டு திரும்பியதும்,


"இப்ப தாண்டி கவனிச்சேன் .. அவன் நம்மள பார்க்கல... உன்னை தான் பார்த்துக்கிட்டு இருக்கான் ... நீ கவுண்டருக்கு போய் பர்கரை வாங்கிட்டு திரும்பி ... தோ இப்ப வந்து உட்கார  வரைக்கும் உன்னையே  பார்த்துக்கிட்டு இருக்கான் பாரு ..." என முடித்தாள் தோழி ஒரு பெருமூச்சோடு.


அவள் சுட்டிக்காட்டிய ஆசாமி வேறு யாருமல்ல ராம்சரணின் அலுவலக நண்பன்  ஸ்ரீனி என்னும் ஸ்ரீனிவாசன் தான் ....


"விடு... இப்ப எல்லாம் இந்த மாதிரி நெறைய தறுதலைங்க சைட் அடிச்சு ஜொள்ளு விடறதையே தொழிலா வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்குதுங்க ...  சீக்கிரம் சாப்பிட்டு  கிளம்பு  ... லேட்டா போனா எங்க அம்மா திட்டுவாங்க ..."


அடுத்த பத்து நிமிடத்தில்,  அங்கிருந்த டிஷ்யூ பேப்பரில் கைகளை துடைத்துக் கொண்டு இருவரும் கிளம்பி கடையின் வாயிலை அடையும் பொழுது,


"எக்ஸ்கியூஸ் மீ ..."  என்றான் அவர்களைப் வேகமாக  பின் தொடர்ந்த ஸ்ரீனி. 


"எஸ்...." என்றாள் ராமலக்ஷ்மி திரும்பி நின்று  அமர்த்தலாய்.


" உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு  ..." என்றவனை அவள் வகைத்தொகை இல்லாமல் முறைக்க,


" நெஜமாங்க... உங்கள நான் எங்கேயோ பார்த்திருக்கேன்..."


" நீங்க என்னை எங்கயும் பார்த்திருக்க முடியாது... ஏன்னா இப்பதான் நான் உங்களையே பார்க்கறேன் ..."


 " சரி... உங்க பேர சொல்லுங்க.. உங்க பேர் என்ன  ..."


" ஹலோ ... எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பி இருக்கீங்க ..."


" இதுவரைக்கும் உங்ககிட்ட  எத்தனை பேர் இப்படி  கேட்டாங்கன்னு எனக்கு தெரியாது ஆனா  நான் இப்படி கேட்கிறது ஃபர்ஸ்ட் டைம்ங்க..."


" என்ன விளையாடறீங்களா ..."


" ஏங்க கோவப்படறீங்க.. உங்க பேர சொல்றதுல உங்களுக்கு என்னங்க பிரச்சனை ..."


" என் பேரை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க ..." 


" ஆ.... ஞாபகம் வந்திடுச்சு.... 

உங்க பேரு சீ....சீதாலட்சுமி தானே ..."


இல்லை என்பது போல் அவள் தலை அசைத்ததோடு,  பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,


" ஒரு வேளை உங்களுக்கு சிஸ்டர் யாராவது இருக்காங்களா ... அவங்க பேரு சீதாலட்சுமியா.." என்றான் அவளை முதன்முறையாக ஏற இறங்க உற்றுப் பார்த்துவிட்டு 


" அவ சிஸ்டர் பேரு ஸ்ரீலட்சுமி ..." என்றாள் உடன் வந்திருந்த தோழி வெடுக்கென்று .


" வாவ்,  நவ் ஐ காட் இட் ... உங்க சிஸ்டர் கன்சிவா இருக்காங்க ரைட்... என் சிஸ்டரோட கிளினிக்கு தான் வந்திருந்தாங்க..." 


என்றதை கேட்டதும் ராமலட்சுமியின் முகத்தில் ஒருவித தெளிவும் புன்னகையும் பிறக்க  ,


" ஓ... எஸ்.கே கிளினிக்கு தான் அக்கா போயிருந்ததா அம்மா சொன்னாங்க.. அது உங்களோடது  தானா ..."


" ஆமா என் சிஸ்டர் சுமித்ரா கேசவனோடது.... "


" நீங்களும் அங்க ஒர்க் பண்றீங்களா ..."


" இல்ல இல்ல.... நான் ஐடி  கம்பெனில உங்க அக்கா வீட்டுக்காரர் ராம்சரணோட  ஒர்க் பண்றேன் ..."


ராம்சரணின் பெயரைக் கேட்டதும்,  மேலும் தெளிவடைந்தவள்


" சாரி ... நீங்க எடுத்ததும் பேரை கேட்டீங்களா ... கோவத்துல ஏதேதோ பேசிட்டேன் ... உங்க பேர் என்ன ... நீங்க என் மாமா ராம்சரணுக்கு ஃபிரண்டா ..."


" என் பேரு ஸ்ரீனிவாசன் ... ராம்சரண் என்னோட ஆபீஸ் கோலிக் கம் க்ளோஸ்  ஃப்ரெண்ட்...  இப்ப அக்கா எப்படி இருக்காங்க ..." என்றான் விசாரிக்கும் விதமாக. 


" ரொம்ப நல்லா இருக்காங்க ... இப்ப ஊட்டில இருக்காங்க ... நானும் ஊட்டிக்கு போய் அக்காவை பார்க்கணும்னு நினைக்கிறேன், ஆனா லீவு கிடைக்க மாட்டேங்குது ..."


" ட்வின்ஸ் கன்சீவா இருக்காங்க இல்ல ..."


"ஆமா ... அந்த ட்வின்ஸ் கன்சீவ் ஆனதுக்கு அப்புறம்தான் அக்கா வாழ்க்கையே செட்டில் ஆச்சு ...  எல்லா பிரச்சனைகளும் சால்வாகி இப்ப அவளோட லைப் ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு .."


ராம் சரணின் உற்ற நண்பன் என்பதால் ஓரளவிற்கு விஷயம் தெரிந்திருக்கும் என்றெண்ணி, குடும்ப விஷயத்தை அவள் இயல்பாகப் பேச,  அவள் பேசுவதை வைத்து நடந்து முடிந்த எந்த பிரச்சனையும் அவளை மட்டுமல்ல அவள் குடும்பத்தாரையும் சென்றடையவில்லை என்பதை நிமிடத்தில் புரிந்து கொண்டவன்,


" குட் ... நைஸ் மீட்டிங் யூ.... பை ..."  என அவன் விடை பெற,  அவளும் புன்முறுவலோடு  அங்கிருந்து விடைபெற்றாள்.



மதுரையில் .... 


திருமணக் கனவுகளோடே  உறங்கி, எழுந்து, உலாவிக் கொண்டிருந்த ஸ்ரீப்ரியாவுக்கு மட்டும் கடந்து சென்ற ஒரு வாரம் சற்று இழுவையாய் தெரிய,  திருமண வேலைகளில்  மூழ்கி இருந்த  மற்ற அனைவருக்கும் மின்னல் வேகத்தில் கடந்து சென்றதாக தோன்றியது .


கடந்து சென்ற வாரத்தில் ஒரு நாள்  அம்மையப்பன் கோபாலனோடு பொன்னம்பலம் வீட்டிற்கு சென்று வீடு வாசல் பார்க்கும் நிகழ்வை ஆரவாரம் இல்லாமல் முடித்ததோடு,  திருமணத்திற்கு தேவையான பண்டம் பாத்திரங்களிலிருந்து நகை நட்டு அழைப்பிதழ்கள்  வரையான ஏற்பாடுகளை  பொன்னம்பலத்தோடு கலந்து கொண்டு செவ்வனே  செய்து முடித்து இருந்தார். 



சொல்லப்போனால் நெருங்கிய உறவினர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ்  விநியோகம் இருபுறமும் நடைபெற தொடங்கியிருந்தது.


இந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை மட்டுமே வீரா ஸ்ரீப்ரியாவை தொடர்பு கொண்டு பேசியிருந்தான்.


 ஒரு முறை நகைகளுக்காகவும்,  மற்றொரு முறை அழைப்பிதழ் வடிவமைப்புக்காகவும் அவளை அழைத்து இருந்தான்.


நின்று நிதானித்து காதல் மொழி பேச அவனுக்கு  ஆசையும் ஆர்வமும் இருந்தாலும் அவனது பணி அழுத்தமும் சூழ்நிலையும்  அதற்கு ஒத்துழைக்காததால் அடக்கி வாசித்தான். 


திருமணத்திற்கு பத்தே நாட்கள் இருக்கும் நிலையில் அம்மையப்பன் மற்றும் பொன்னம்பலத்தின் வீடுகள்  உறவினர்கள் வருகையால்  களை கட்ட தொடங்கியது.


தம்பியின் திருமணத்திற்கு பிறகே சிங்கப்பூர்க்கு பயணப்பட  முடிவு செய்து   சத்யன் அலுவலகப் பணிகளை இணைய வழியாகவே செயலாற்றிக் கொண்டிருந்தான். 


பிரபாவும்   உடல்நிலை சரியில்லாத தாயை கவனித்துக் கொண்டே அவ்வப்போது மாமியார் வீட்டிற்கு வந்து  தன்னால் இயன்ற உதவியை  திருமண  ஏற்பாடுகளில் செய்து முடித்தாள். 


வீராவின் தங்கை அன்பு ,  தமையனின்  திருமணத்தை முன்னிட்டு, கணவனோடு  மும்பையில் இருந்து பத்து நாட்களுக்கு முன்பாகவே ஒத்தாசைக்கு வந்து சேர்ந்தாள்.


இப்படி வீராவின் திருமணத்திற்காக,  அவனுடைய தமையன் குடும்பம்,  தங்கை குடும்பம்  என அனைவரும்  ஆர்வத்தோடும் முனைப்புடனும் செயல்பட்டுக் கொண்டிருக்க, திருமணத்தின் நாயகனோ அந்நிய தேசத்தில்  கருமமே  கண்ணாக தான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் அலுவலகப் பணியை முடிப்பதில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.


ஸ்ரீப்ரியாவுக்கு வந்திருந்த உறவினர்களை கவனிக்கவும், தாயிடமிருந்து சில உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொள்ளவுமே நேரம் சரியாக இருந்தது.


இந்நிலையில்,  இரவு உணவிற்கு பிறகு, செல்வராணி ஸ்ரீப்ரியாவை அழைத்து,


" அம்மு, இந்தப் பொட்டில என் அம்மா, என் ஆயா,  மாமியாரோட நகை எல்லாம் இருக்கு.... 

இதெல்லாம் ரொம்ப பழைய மாடல் .. உனக்கு புடிக்காட்டா கடையில கொண்டு கொடுத்து,  புதுசா இப்ப போட்டுக்கிற மாதிரி மாத்திக்க... 

உங்கப்பன் அவன்  பங்குக்கு உனக்கு நிறைய நகையை செஞ்சு வச்சிருக்கான் ... இருந்தாலும் இதெல்லாம் இந்த பாட்டியோட சீதனம் ... உனக்காகவே இத்தனை வருசமா பொத்தி பொத்தி வச்சிக்கினு இருந்தேன் இனிமே இதெல்லாம் உனக்கு தேன் ..." 


செல்வராணியின் முகத்தில் தெரிந்த அளவுக்கு அதிகமான பாசமும் சாந்தமும்,  அவளை கண் கலங்கச் செய்ய,


" நகைங்க இருக்கட்டும் அப்பத்தா ... என்னதான்  கல்யாணம் பண்ணிக்க புடிச்சிருந்தா கூட , உன்னை  விட்டுட்டு போறது ஒரு மாதிரி இருக்கு ... புது வீடு புது ஆளுங்க எப்படி இருப்பாங்களோனு பயமா வேற இருக்கு   ..." 

"அப்பத்தா எங்க போயிடப் போறேன் கண்ணு... தோ  இங்கன தானே இருக்க போறேன் .... கல்யாணத்துக்கு பொறவு தினமும் உன் கூட போன்ல பேசப் போறேன்..  மாசத்துக்கு ஒருக்கா உன் வூட்டுக்கு வந்து ஒரு நா ராத்திரி தங்கி இருந்துட்டு தான் போவேன்.... போதுமா ..."


" சரி அப்பத்தா ...." என்று தலை அசைத்தவளின் முகத்தில் தெளிவு பெற்றதற்கான அடையாளம் இல்லாமல் இருப்பதைக் கண்டு 


" அம்மு,  அப்பத்தா ஒன்னு சொல்றேன் மனசுல வச்சுக்க .... உன் புகுந்த  வீட்ல மாமியார்,  ஓரகத்தி, நாத்தனார் அவங்களோட குடும்பத்து ஆளுங்கன்னு நிறைய பேர் இருப்பாங்க   .... எல்லாரும் நம்ம வீட்டு ஆளுங்க  மாதிரி இருப்பாய்ங்கன்னு வெள்ளந்தியா  நினைச்சிட கூடாது ....  ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தேன் இருப்பாய்ங்க ... நீ தான் கொஞ்சம் பொறுமையா புரிஞ்சு நடந்துக்கோணும் .... ஏன்னா உன் புகுந்த  வூட்டுல உன்னால  ஏதாச்சும்  பிரச்சனை வந்துச்சின்னு உன் அப்பன் கேள்வி பட்டான்  பெண்ணை  சரியா வளக்கலன்னு உன் ஆத்தாள தான் ஏசுவான்...


அதுக்காக வேண்டி உங்க அம்மாக்காரி மாதிரி வாய் செத்தவளா இருக்கோணும்னு சொல்ல வரல .... உனக்கு அந்த வூட்ல ஏதாச்சும் புடிக்காட்டி போனா உன் வூட்டுக்காரர் கிட்ட சொல்லு .... ரொம்ப நல்ல மாதிரியா இருக்காரு ... அவரு பார்த்துகிடுவாரு ....." 


 திருமணத்திற்கு முன்பே உன் வீட்டுக்காரர் என்று பெரியவள் சொன்னது அவளுள் பெருத்த இதத்தை பரவ செய்ய,  லேசான வெட்கத்தோடு தலை குனிந்து கொண்டாள் இளையவள் .


" பொறுத்துப்போகக்கூடிய பிரச்சனையா இருந்தா  பொறுத்து போய்டு கண்ணு... விட்டுக் கொடுத்தவங்க கெட்டுப் போனதா சரித்திரம் இல்ல.. புரியுதா ..... 


உன் மனசாட்சிக்கும் உன் புருஷனுக்கும் மட்டும்  உண்மையா இரு ... மத்தத கடவுள் பாத்துப்பான் ... பிரச்சனை இல்லாத கூட்டுக் குடும்பம் உலகத்துலயே  கிடையாது ஆனா உன்னால அந்த வீட்ல எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்க......


இதுக்கு மேல இந்த கெழவிக்கு  எதையும் வகை தொகையா சொல்ல தெரியல கண்ணு.......  ஏதோ என் மனசுக்கு சரின்னு பட்டத சொல்லி இருக்கேன் .... புரிஞ்சி நடந்துக்க ஆத்தா ..."


" கவலைப்படாத அப்பத்தா... நீ சொன்ன எல்லாத்தையும் நான் ஃபாலோ பண்ணத்தான் போறேன் நீயும் பார்க்கத்தான் போற..." என்றவள் லேசான புன்னகையோடு மொழிந்து கொண்டிருக்கும் போது , செல்வராணி லேசாக இடது கையை தூக்கி "ஸ்ஸ்ஸ்" என்று சத்தம் எழுப்ப,


" என்ன அப்பத்தா ... என்ன பண்ணுது ..." பதறினாள் இளையவள். 


" ஒன்னும் இல்ல கண்ணு.... மாத்திரை போட்டு இருக்கேன் ... தூங்கி எந்திரிச்சா சரியா போயிடும்...."


" சரி நீ நிம்மதியா தூங்கு ... நான் கிளம்பறேன் ..." என்றவள் நகர எத்தனிக்கும் போது ,அவளது இடது கரத்தைப் பற்றி நிறுத்தியவர்,


" என்னைக்கும் உன் மனசு போல உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் தாயி... மகாராசியா இரு..." என்று வாழ்த்தியவரின் கண்களின் லேசாக கண்ணீர் மின்ன,


" அப்பத்தா உடம்பு ஏதாவது பண்ணுதா... நான் அப்பாகிட்ட சொல்லட்டுமா ...."


" அட... ஒன்னும் இல்ல கண்ணு ... எப்பவும் இருக்கிற வலி தேன் தூங்கினா சரியாயிடும் உன் அப்பன் கல்யாண வேலைக்காக அலைஞ்சுகிட்டு கெடக்கான் ... அவன் கிட்ட இதையெல்லாம்  சொல்லி வச்சு  கஷ்டப்படுத்தாதே .... சரியா கல்யாணத்துக்கு இருக்குற பொண்ணு .... ராத்திரி அதிகம் கண்ணு முழிக்காம நிம்மதியா போய் தூங்கு ..."  

ஏனோ காரணமே தெரியாமல் அடி மனது பிசைய, கண்களை மூடி சயனித்திருந்தவரை ,ஓரிரு கணம் நின்று பார்த்துவிட்டு தன் அறைக்குச் சென்று விட்டாள் அன்று இரவே அவர் நிம்மதியான நிரந்தர நித்திரையை நாடி பயணிக்கப் போகிறார் எனத் தெரியாமல்.


மறுநாள் காலை அம்மையப்பன் தன் மனைவி சுசிலாவிடம்,


"கல்யாணத்துக்கு பந்த கால் போட இன்னிக்கி ஆளுங்க வந்துடுவாங்க .... "


" சரிங்க ..."


" அம்மா எங்க ..."


" இன்னும் எழும்பல தூங்கிகினு இருக்காக..."


" இன்னுமா ...." என்று மனைவியோடு பேசிக்கொண்டே செல்வராணியின் அறைக்கு சென்று


" அம்மா .... நான் மாட்டுத்தாவணி வரைக்கும் போயிட்டு வாரேன்... இன்னைக்கு பந்தகால்  போட மதியத்துக்கு மேல  ஆளுங்க வருவாங்க ...." 


பேசியபடி தாயின் முகத்தை உற்று நோக்கியவர்,   அது ஜீவன் இல்லாமல் அசைவற்று காணப்படுவதைக் கண்டு  நெருங்கி சென்று தொட்டு பார்த்து அதிர்ந்து விட்டார்.


தன் தாய் இப் பூஉலகின் உறவை முடித்துக் கொண்டு விட்டார் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரிய, சிக்கல் சுக்கலாக  உடைந்து போய்விட்டார் மனிதர்.


அதற்கு மேல் நடந்ததெல்லாம் மின்னல் வேகம் தான்.


செய்தி பொன்னம்பலத்துக்கு  தெரிவிக்கப்பட,   வீராவின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து போனது .


 லண்டனில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மைந்தனை அழைத்து   பொன்னம்பலம்  பகிர,  அரைகுறை உறக்கத்தில்  எழுந்தமர்ந்தவனுக்கு செய்தியை உள்வாங்கிக் கொள்ளவே ஓரிரு கணம் தேவைப்பட்டது.


அவன் நெஞ்சங்கூட்டில் கற்பாறையை யாரோ ஏற்றி வைத்தது போல் உணர்ந்தவனின்  சிந்தை முழுவதும் செல்வராணியை பற்றிய நினைவுகளே நிரம்பி வழிந்தன.


முதன்முறையாக அவரை சந்தித்து பேசியது,  பிறகு அலைபேசி வழியாக உரையாடியது எல்லாம் அவன் அகம் முழுவதும் ஆக்கிரமிக்க,  லேசாக கண் கலங்கிய படி  உறைந்து போனான் இளையவன்.


" பாண்டியா,  சம்மந்தி ரொம்ப மனசு ஒடஞ்சு போயிருக்காரு .... நான் இப்பவே அவங்க வீட்டுக்கு கிளம்பலாம்னு இருக்கேன் ...."


" நீங்க மட்டும் போறீங்களாப்பா ..."


" ஆமாம்பா .... கல்யாணத்தை வச்சுக்கிட்டு அங்கெல்லாம் கும்பலா போவக்கூடாது ... நான் மட்டும் தனியா போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்துடலாம்னு இருக்கேன் ..." என முடித்தார். 


தன் சொந்த பாட்டியை இழந்தது போல் சோகத்தில் மூழ்கியவனின்  இதயம் அவன் நாயகியை எண்ணி கலங்கி துடித்தது. 


அவளை நன்கு அறிவான் ...

அவளுக்கு  பாட்டி செல்வராணி என்றால் உயிர் ....


சொல்லப்போனால் நடக்கப்போகும் திருமணத்திற்கு காரண கர்த்தாவே  அவர் தான் ....


இப்படி பேத்தியின் ஆசைக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவரை கல்யாணம் நடக்கும் முன்பே  காலன் கவர்ந்து சென்று விடுவான் என்று யாருமே கனவு கூட காணவில்லையே ...


தன்னவள் நிச்சயம் நிலைகுலைந்து  கரைந்து கொண்டிருப்பாள்...


அழுது கரையும்  அணங்கை அரவணைத்து ஆறுதல் கூற கூட அருகில் இல்லாமல் அந்நிய தேசத்தில் இருக்கின்றோமே ... என்ற எண்ணமும் நெஞ்சை அழுத்த,  செய்வதறியாது தடுமாறி நின்றான் நாயகன்.


ஸ்ரீ-ராமம் வருவார்கள் .....















  



























 




























































Comments

  1. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  2. RIP selvarani paati... Such a nice person sis, konutingaley... Marriage nadakuma illa athulayum twist mela twist vechi irukingala?? Ram epo Ooty vanthu Sri Lakshmi meet pana poran

    ReplyDelete
    Replies
    1. Thanks ma... இன்னைக்கு அப்லோட் பண்ற எபிசோட்ல எல்லா கேள்விகளுக்கும் ஆன்சர் கிடைச்சிடும்மா

      Delete

Post a Comment