அத்தியாயம் 47
"என்னத்த சொல்ல .... நீங்க இங்க இல்லாதப்ப ஏதேதோ நடந்து போச்சு.... " என தொடங்கிய கற்பகம்,
ராமலட்சுமியின் திருமணம் நின்று போனதற்கு அருணா தான் காரணம் என லட்சுமி குற்றம் சாட்டியதை எதுகை மோனைகளோடு கேட்போரின் மனதில் இரக்கம் பிறக்கும் அளவிற்கு சுவைப்பட மொழிந்து முடிக்க, உடன் அருணாவும் இணைந்து கொண்டு
“ராமலட்சுமிக்கும் எனக்கும் ஏதாவது முன்பு முன் விரோதமா ... எதுக்காக நான் அவளோட வாழ்க்கையை கெடுக்கணும்... அதோட அந்த காமாட்சி அக்காவை நான் பார்த்தது கூட இல்லப்பா.... இது எல்லாத்தையும் எடுத்து சொன்னாலும் அண்ணி கேட்டுக்க தயாரா இல்ல.... நான் என் ரெண்டு குழந்தைங்க மேல கூட சத்தியம் பண்ணி பார்த்துட்டேன் ... ஆனா அண்ணி நம்பவே இல்ல
..." என தன் பங்கிற்கு, தன்னை நியாயவாதியாக காட்டிக் கொள்ள, சிறந்த சீரியல் நடிகை போல் கிளிசரின் இல்லாமலேயே அழுது நடிக்க, ரங்கசாமி ஒரு கணம் ஒன்றுமே புரியாமல் உறைந்து போனார்.
அவரை பொருத்தமட்டில் அந்த செய்தி மிக மிகப் புதிது.
இவ்வளவு பெரிய பிரச்சனை தன் பார்வைக்கு வராமலேயே நடந்து முடிந்திருக்கிறது என்பது
அவருக்கு பெருத்த அதிர்ச்சியோடு சிறு ஆச்சரியத்தையும் கொடுக்க, மனிதர் தீவிர சிந்தனையில் மூழ்கிப் போனார்.
கண்ணால் காண்பதும் பொய்.... காதால் கேட்பதும் பொய்.... தீர விசாரிப்பதே மெய்....
என்ற கருத்தில் கூட
தீர விசாரிப்பது மெய்யை கொடுக்காது என்ற கலியுக கள நிலவரத்தை என்றைக்கோ புரிந்து கொண்டு தன் வியாபார கொடுக்கல் வாங்கலில் கூட பெரும்பாலும் ஒப்பந்தத்தைக் காட்டிலும், தன் உள்ளுணர்வுக்கு தான் மதிப்பளிப்பார் .
உடன்படிக்கையைக் காட்டிலும் நேர்மறை உணர்வுகளை அடிப்படையாக வைத்து அவர் செய்த பல வியாபாரங்கள் பெருத்த அளவில் லாபத்தை கொடுத்திருக்க, இப்படி மனிதர்களின் தராதரத்தை அறிந்து தரமான வியாபாரத்தை
மேற்கொள்பவருக்கு மனைவி மற்றும் மகளின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.
குழந்தையையும் பைத்தியக்காரனையும் எப்பொழுதுமே நம்பலாம் .... ஏனென்றால் எத்தருணத்திலும் அவர்கள் தங்கள் தன்மையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் ... அப்படி ஒருவேளை மாற்றிக் கொண்டாலும் அதில் துளிகூட சூது இருக்காது ..
ஆனால் அன்றாட வாழ்க்கையில் அரசியல்வாதிகளை விட அரசியலில் மூழ்கி திளைக்கும் சாமானியர்கள் தான் இங்கு மிகவும் அதிகம் ... அவர்களை என்றைக்குமே நம்ப முடியாது.
இவன் நேற்றைக்கு உதவினான் ...
அவன் நாளைக்கு உதவுவான் .... போன்ற சுயநலமான பலன்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை மட்டும் அடிப்படையாக வைத்து, தற்போதைய நிகழ்விற்கான நியாய தர்மங்களை அலசி ஆராயாமல் அரசியல் செய்வது தான் அவர்களது சிறப்பம்சம் ....
அப்படிப்பட்டவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் ...
அவ்வகையில் அந்த அட்டவணையில் கற்பகமும் அருணாவும் முதலிடம் பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதை உணர்ந்தவர் ஆதலால், மனைவி மற்றும் மகளின் கூப்பாடும், குமுறல்களும் அவர் இதயத்தை சென்றடையவே இல்லை.
அதோடு மருமகள் ஸ்ரீலட்சுமியின் குணத்தையும் நன்கு அறிவார். அவள் கள்ளம் கபடமற்றவள், பொறுமைசாலி என்பதை விட நேர்மையானவள்.
எந்த விஷயத்திலும் உண்மைக்குப் புறம்பாக நடந்து கொள்ள மாட்டாள்
என்பதில் நம்பிக்கை உள்ளவர் ஆதலால், எதிரில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களையும் ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு,
"நிச்சயமா இதுதான் காரணமா இல்ல வேற ஏதாவது காரணமா .. ஏன்னா நீங்க ரெண்டு பேரும் பிரச்சனை நடந்ததா சொன்ன நாளுக்கு அப்புறம் கூட நம்ப குலதெய்வ கோவிலுக்கு வந்து நல்லபடியா குழந்தைக்கு முடி இறக்கி, கருப்பசாமி கோவிலில் பூஜையும் செய்துட்டு போயிருக்கா லட்சுமி .... அதனால தான் உங்க வார்த்தைகளை என்னால நம்ப முடியல ...."
" அப்பா... நாங்க சொல்றது மொத்தம் உண்மை பா ... அண்ணன் ஊருக்கு போவதற்காக வேண்டி அண்ணி காத்துகிட்டு இருந்தாங்க போல.... அண்ணன் அப்படி போனதும் முடிஞ்ச பிரச்சனையை மறுபடியும் தோண்டி துருவி எடுத்து பேசி பெரிய சண்டை போட்டு என்னையும் அடிச்சிட்டு குழந்தையை கூட்டிக்கிட்டு வீட்டை விட்டே போய்ட்டாங்கப்பா... நானும் அம்மாவும் நிறைய தடவை போன் பண்ணி பார்த்தோம், ஆனா அண்ணி போனையே எடுக்கல... அப்புறம் திடீர்னு ஒரு நாள் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டாங்க... இப்ப கோர்ட்ல கேஸ் நடந்துகிட்டு இருக்கு ..." என முடித்தாள் கோர்வையாக .
அருணாவின் விழிகளில் அப்பட்டமாக பொய் தெரிய,
"ஏன் இத்தனை நாளா இதை என்கிட்ட சொல்லல .... ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாமே ..."
"அது வந்து .... ஏற்கனவே நீங்க பிசினஸ் டூர்ல ரொம்ப டென்ஷனா
அலைஞ்சுகிட்டு இருப்பீங்க .... இதை சொல்லி உங்க கொஞ்சநஞ்ச நிம்மதியும் கெடுக்க வேணாம்... ஊருக்கு வந்ததும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன் ..." என கற்பகம் ரெடிமேடாக வைத்திருந்த பதிலை சொல்ல,
"நாளைக்கு நான் லட்சுமி வீட்டுக்கு போய், நடந்தது என்னனு கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு இருக்கேன்... அவ மட்டும் வேற ஏதாவது காரணம் சொன்னா நீங்க ரெண்டு பேரும் தொலைஞ்சீங்க ...." என்றார் மிரட்டலாக.
கற்பகம் அருணாவிற்கு ரங்கசாமியின் பார்வையும் பேச்சும் பயத்தைக் கொடுத்தாலும், லட்சுமியின் மீது மலை அளவு நம்பிக்கை இருந்தது.
நடந்த பிரச்சனையை சொல்லி அவர்களை நாறடிக்க வேண்டும் என்றால் , அதனை லட்சுமி என்றோ செய்திருப்பாள்... போதுமான ஆதாரம் இல்லை என்பதால் தான் அவள் அடக்கி வாசிக்கிறாள் என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
அதோடு கணவனிடமே பகிராதவள், மாமனாரிடமா பகிரப் போகிறாள்.... ஒருவேளை நூறில் ஒரு சதவீதமாக பகிர்ந்தாலும், அவளுக்கு எதிராக தயார் செய்து வைத்திருக்கும் ஆதாரத்தைக் காட்டி வழக்கம் போல் அவள் சொல்வது பொய் என்று சத்தியம் செய்து தப்பித்து விடலாம் .... என தாயும் மகளும் திட்டம் தீட்டி கொண்டிருந்தனர், உண்மையில் லட்சுமி உள்ளூரில் இல்லாமல் ஊட்டியில் இருப்பதை அறியாமல்.
உடனே ரங்கசாமி ராம்சரணிடம் ,
"நீ லட்சுமியை பார்த்து பேசி என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கிட்டயா ...." என்றார் மீண்டும் தன் நடிப்பை தொடங்கி.
" இல்லப்பா .... எதுவுமே சொல்லாம வீட்டை விட்டு போனதோட டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பனவ கிட்ட போய் என்னத்த பேச சொல்றீங்க .... "
"இல்ல சரண் .... நீ அவளை போய் பார்த்து பேசி இருந்தா, நிச்சயம் அவ வீட்டை விட்டு போனதுக்கான காரணத்தை சொல்லி இருந்திருப்பா ..."
மகனை உசுப்பி விடுகிறார் ரங்கசாமி என்பதை உணர்ந்து கொண்ட கற்பகம் உடனே,
"எதுக்காக என் மகன் அவளைத் தேடிப் போய் பேசணும் ..." என தன் இன்ஸ்டன்ட் பாசத்தை கொட்ட,
"அதானே... அம்மா சொல்றது தான் சரி ... எந்த தப்பும் செய்யாத நான் எதுக்காக அவ பின்னாடி போகணும் ...? டிவோர்ஸ் கேட்டா கொடுக்கிறேன்னு ஒத்துக்கிட்டேன் ... குழந்தையோட கஸ்டடிய கேட்டேன்.. குடுக்க மாட்டேன்னு சொல்றா.. அதான் கேஸ் இன்னும் இழுத்தடிச்சுக்கிட்டு இருக்கு ..." என்றான் ராம்சரண், தன் தந்தை ரங்கசாமிக்கு இணையாக தன் நடிப்பை வெளிப்படுத்தி.
எங்கு குழந்தையை கொண்டு வந்து கொடுத்து காலமெல்லாம் பார்த்துக் கொள்ள சொல்லி விடுவானோ என்ற பய ரேகை தாய் மற்றும் மகள் முகத்தில் வேர் போல் விரைவாகப் பரவ, அதனை ஆண்கள் இருவரும் ஆழ்ந்து கண்ணுற, உடனே சுதாரித்துக் கொண்டு,
"அவ நல்லவளோ கெட்டவளோ... ஆனா குழந்தைக்கு அவ தான் தாய் .... குழந்தை தாய்கிட்ட வளர்ந்தா தான் நல்லபடியா வளரும் ... அதனால இந்த குழந்தையை கேக்குற வேலைய மட்டும் விட்டுடு சரண் ..."
குறுக்கே பாய்ந்து, தாய்மை பற்றிய தத்துவத்தை தத்ரூபமாக கற்பகம் பேசி முடிக்க, உடன் அருணாவும் அச்சுப்பிழறாமல் அதற்கு ஆமாம் சாமி போட்டு முடித்தாள்.
நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமல் செல்வது என்பது போல், பாதிக்கப்பட்டவள் நடந்த பிரச்சனையை குறித்து வாய் திறவாமலே சென்று விட்டாள்...
இன்னமும் வாய் திறக்கவில்லை ...
பாதிப்பிற்கு உள்ளாக்கிய இந்த இரு பாதகிகளின் கழுத்தை அறுத்தாலும்
உண்மை அணு அளவு கூட கசியப் போவதில்லை… என்கின்ற நிலையில், யாதொரு முடிவுக்கும் வர முடியாமல் திணறிப் போனார் ரங்கசாமி.
தாயும் மகளும் அளவுக்கதிகமாக
பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரங்கசாமி உடனான நேர்காணல் சாதகமாக முடிவுற்றதால் , இருவர் முகத்திலும்
மகிழ்ச்சி பிரவாகம் எடுத்து ஓட,
அதனைக் கண்டு கொண்ட ரங்கசாமி குரலை செருமிக் கொண்டு,
"உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் .. நான் இந்த விஷயத்தை சாதாரண விடப்போறதில்ல.... பிரச்சனைனு வந்துட்டா ஒரு தரப்பு மக்கள் பேசுறதை மட்டும் கேட்டுகிட்டு முடிவு சொல்ற ஆள் நான் கிடையாது .... லட்சுமியை பேச வைக்கப் போறேன் ... அவ பேசினா தான் பிரச்சனையோட இன்னொரு பக்கம் தெரியவரும் .... உங்களால அவளுக்கு ஒரு அநியாயம் நடந்து இருக்குன்னு தெரியவந்தா உங்க யாரையும் சும்மா விட மாட்டேன் .... அதே மாதிரி வீட்ல நடந்த பிரச்சனைக்கு அவ தான் காரணம்னு தெரிய வந்தா அவளையும் சும்மா விட மாட்டேன் .... மைண்ட் இட் ..." என கர்ஜித்து விட்டு அவர் இடத்தை காலி செய்ய, ராம்சரண் தன் அறை நோக்கிச் செல்ல, தாயும் மகளும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
தன் அறைக்கு வந்த ரங்கசாமிக்கு லட்சுமியின் மீது கோபம் கரை புரண்டோடியது .
குழந்தை என்றால் அடித்து கேட்கலாம் .... குமரி ஆகிவிட்டாளே... அவளாகவே வாய் திறந்தால் தான் உண்டு ...
அவளுடைய அந்த மௌனத்தை தன் மனைவியும் மகளும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும், முடிவெடுக்க முடியாத
கையறு நிலையில் இருப்பதை எண்ணி கோபமுற்றவர் ராம்சரணோடு மனம் விட்டு பேச அவன் அறைக்குச் சென்றார்.
"வாங்கப்பா, எப்படியும் நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்..." என்ற மைந்தனை கண்களில் எரி மலையை கக்கியபடி பார்த்து,
" நீ எல்லாம் மனுஷனே இல்ல டா ... நீ பண்ற பாவம் இந்த ஜென்மம் மட்டும் இல்ல ஏழு ஏழு ஜென்மத்துக்கும் உன்னை தொடர தான் போகுது .... கர்ப்பிணி பொண்டாட்டியை நிர்தாட்சிண்யமா கை விட்டுட்டு வந்த பாரு .... உனக்கு வாழ்க்கையில என்னைக்குமே நிம்மதியே கிடையாது டா ...."
"சாபம் எல்லாம் விட்டு முடிச்சிட்டீங்களா .... நடந்த விஷயம் உங்களுக்கு நல்லாவே தெரியும் ...தெரிஞ்சும் என்னையே குத்தம் சொன்னா என்ன அர்த்தம் ....நீங்க தான் பாத்தீங்க இல்ல நான் கடைசி வரைக்கும் டிவோர்ஸ் கொடுக்க மாட்டேன்னு தான் சொன்னேன் .... அவ தான் வேணும்னு ஒத்தக்கால நின்னா நீங்களும் அவளுக்கு சாதகமா பேசி, என்னை தூண்டி விட்டு கையெழுத்து வாங்கி கொடுத்துட்டீங்க ... இப்ப வந்து எனக்கு சாபம் கொடுத்தா என்ன அர்த்தம் ...."
"படிச்சவன் தான நீ ... நான் ஆயிரம் சொல்லுவேன் உனக்கு எங்க அறிவு போச்சு... அப்பா அம்மா அக்கா தங்கச்சி எது சொன்னாலும் கண்ண மூடிகிட்டு நம்பிடுவ இல்ல... ஏன்னா நாங்க எல்லாம் உன் ரத்த உறவு .... நாங்க சொன்னா சரியா இருக்கும்னு நம்பற ... உன் பொண்டாட்டி வேற வீட்டு பொண்ணு... அதனால அவ எது சொன்னாலும் அதுக்கு ஆதாரம் இருந்தா தான் நம்புவ இல்லையா .."
" அப்பா... அவ மேல நம்பிக்கை இல்லாம அப்படி கேட்கலப்பா ..." என அவன் இடை மறித்து பேச ,
"பொண்டாட்டிங்கிற உறவு தனி மனுஷி இல்ல டா ... அவ உன்னோட பாதினு உணர்ந்திருந்தா அவ சொல்லாமலே அவளோட உணர்வுகள்ல இருக்கிற உண்மையை உன்னால புரிஞ்சுகிட்டு இருந்திருக்க முடியும் ... ஆனா அவ வாயை விட்டு சொல்லியும் நீ ஆதாரத்த கேட்டதால தான் உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லனு நடைய கட்டிட்டா லட்சுமி ..."
உடனே அவன் தன் தரப்பு நியாயத்தை ஒவ்வொன்றாய் முன் வைக்க, அதுவும் ஓரளவிற்கு ரங்கசாமிக்கு சரி என்றே பட,
" சரி சரண், இப்ப என்னதான் முடிவு பண்ணி இருக்க ..." என்றார் அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி சிந்தித்து.
"இனிமே என்ன பண்ண ... அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே... டிவோர்ஸ் பேப்பர்ஸ் வந்ததும் நான் என் ஆபீஸ்ல ஒர்க் பண்ற மஹிக்காவை செகண்ட் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்…” என அவன் முடித்தது தான் தாமதம், ரங்கசாமியின் கோபம் ராக்கெட் வேகத்தில் எகுற
"அயோக்கிய ராஸ்கல் ... இவ்ளோ நேரம் உன் தரப்பு நியாயத்தை பத்தி சொல்லும் போது கூட என் பையன் நாலயும் யோசிச்சு சரியா தான் செயல்பட்டு இருக்கான்னு நெனச்சேன் டா ... இப்ப இல்ல தெரியுது .... நீ மலருக்கு மலர் தாவுற வண்டுனு... உனக்கு போய் ராம் சரண்னு பேரு வச்சேன் பாரு என்ன சொல்லணும் டா ..." என கோபத்தில் அவர் கொந்தளிக்க, லேசாக அவரைப் பார்த்து புன்னகைத்தவன்,
"திட்டி முடிச்சிட்டீங்களா ....ஏன் ஷாக் சர்ப்ரைஸ் எல்லாம் உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா .... நான் எல்லாம் கொடுக்க கூடாதா..”
" என்ன சரண் சொல்ற ..."
" என் செகண்ட் மேரேஜை பத்தி நான் சொன்னதெல்லாம் பொய்..”
" ரியலி ...." என்றார் மனிதர் ஆச்சரியத்துடன்.
" ஆமாம்பா .... நானே ஊட்டிக்கு வரலாம்னு இருக்கேன் ..."
" குட் குட்... அப்ப வா நாளைக்கே போலாம் ..."
"நான் வேற ஒரு விஷயமா ஊட்டிக்கு வரலாம்னு இருக்கேன் அது நடக்க இன்னும் ஒரு வாரத்துக்கு மேல ஆகும்னு தோணுது..”
" என்ன விஷயம் ..."
"அதை நான் அப்புறம் சொல்றேன் .. மொதல்ல எனக்கு சில விஷயங்கள் தெரிஞ்சாகணும் .... உங்களுக்கு எப்படி தினேஷை தெரியும் .... நீங்க எப்படி ஸ்ரீனி வீட்டுக்கு அன்னைக்கு சரியான நேரத்துல வந்தீங்கன்னு சொல்லுங்க... "
"நான் ஊர் திரும்புறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடி, உங்க அம்மாவுக்கும் அருணாவுக்கும் போன் பண்ணேன் ... ரெண்டு பேரோட மொபைலும் நாட் ரீச்சபிள்னு வந்துச்சு .... உடனே நம்ம வீட்டு லேண்ட் லைனுக்கு அடிச்சேன் .... சாந்தி தான் எடுத்தா....
உங்க அம்மாவ கூப்பிட சொன்னதுக்கு, உங்க அம்மாவும் அருணாவும் வெளியே போய் இருக்கிறதா சொன்னா .... உடனே நான் லட்சுமியை கூப்பிட சொன்னேன் .... அவங்க வீட்டை விட்டு போய் கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுதுன்னு சொன்னா ....
உடனே எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு ... ஏன்னா அப்ப தான் ஒரு வாரத்துக்கு முன்னாடி லட்சுமிக்கு போன் பண்ணி புது யூனிட்ட பத்தி பேசினேன் ... அப்ப கூட அவ வீட்டை விட்டு போனத பத்தி ஒரு வார்த்தையும் சொல்லல...
அதே போல கற்பகம் அருணாவும் கூட லட்சுமி வீட்டை விட்டுப் போனதை என்னோட போன்ல பேசும் போது சொல்லல ...
இவ்ளோ ஏன் அப்ப சிங்கப்பூர்ல இருந்த உன்கிட்ட கூட தான் பேசினேன்.... நீ கூட லட்சுமி வீட்டை விட்டு போனதை பத்தி ஒரு வார்த்தையும் சொல்லலயே ....
அதனால விஷயம் ஏதோ பெருசுன்னு தோணுச்சு ....
எனக்கு முதல்ல உன் மேல தான் சந்தேகம் வந்துச்சு ...
நீ லட்சுமியோட அட்லீஸ்ட் போன் காண்டாக்ட்லயாவது இருக்கியான்னு தெரிஞ்சுக்க தான் நம்ப ராஜேந்திரனை( பிசினஸ் டிடெக்டிவ்)
கூப்ட்டு உன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் ஃபாலோ பண்ண சொன்னேன் ....
நீ ஒரு தடவை கூட லட்சுமிக்கு போன் பண்ணல அவளும் உனக்கு போன் பண்ணலன்னு உன்னோட கால் லிஸ்ட்ல தெரிஞ்சுகிட்டோம் ... லட்சுமியோட கால் லிஸ்ட்ட எடுத்துப் பார்த்தா, அவ வக்கீல் தினேஷை தவிர வெளி ஆளுங்க யாருக்கும் போன் பண்ணலனு தெரிஞ்சது ...
உடனே தினேஷை காண்டாக்ட் பண்ணினேன் ... லட்சுமி அவன் கிட்டயாவது வீட்ல நடந்த பிரச்சனையை பத்தி சொல்லி இருக்காளானு தெரிஞ்சுக்க ....
ஆனா அவன் கிட்டயும் அவ எதையுமே சொல்லலனு அப்புறம் தான் தெரிய வந்துச்சு ....
உடனே நான் தினேஷ் கிட்ட நான் ஊருக்கு வர வரைக்கும், கேசை எவ்ளோ தூரம் இழுக்க முடியுமோ அவ்ளோ தூரம் இழுத்துக்கிட்டே இரு... மறந்து கூட லஷ்மி கிட்ட எதையும் சொல்லிடாதேன்னு சொன்னேன் ....
அவனும் நான் சொன்னபடி எல்லாம் செஞ்சான்...
நான் கோயம்புத்தூர் வந்ததும், மொதோ வேலையா லட்சுமிக்கு போன் பண்ணி பேசினேன் ...
ஆனா அப்ப கூட அவ எதுவுமே சொல்லல ... சரி அன்னைக்கு சாயங்காலம் சர்ப்ரைஸ் விசிட்டா அவங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது தான், தினேஷ் எனக்கு போன் பண்ணி ,
உங்க மருமக கன்சீவா இருக்காங்கனு நினைக்கிறேன் சார்... கோர்ட்ல கேஸ் இருக்கும் போது புருஷனுக்கு தெரியாம அபார்ஷன் பண்ணலாமான்னு இப்பதான் சார் கேட்டாங்கன்னு சொன்னான் .... லட்சுமி எங்க இருக்கான்னு அவகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டயானு கேட்டேன் ...
என் ஆபீஸ் இருக்குற தெருவுலயே, கடைசில இருக்கிற டாக்டர் வீட்ல இருக்கிறதா சொன்னாங்க சார்னு சொன்னான்...
உடனே நீ முதல்ல அங்க போய் பிரச்சனையை திசை திருப்புற வழியை பாரு ... நான் அரை மணி நேரத்துல அங்க வந்துடுவேனு சொல்லி அவனை அனுப்பி வச்சேன் ... அதுக்கு மேல நடந்தது உனக்கே தெரியும் ...." என கோர்வையாக அவர் முடிக்க, மிகுந்த ஆச்சரியத்தோடு தந்தையை பார்த்தான் மைந்தன்.
மைந்தனின் பார்வையை புரிந்தவராய்,
“நான் லட்சுமியை உனக்கு மனைவியாவும் இந்த வீட்டு மருமகளா மட்டும் கொண்டு வரல... நம்ம பரம்பரையோட தொழில் வாரிசாவும் கொண்டு வந்தேன் ... அவ வந்ததுக்கு அப்புறம் தான், நம்ம பரம்பரை தொழிலை பத்தி இன்னும் ரெண்டு தலைமுறைக்கு கவலை இல்லன்னு சந்தோஷமா இருந்தேன் ... அவ ரொம்ப திறமையான பொண்ணு நேர்மையான பொண்ணு நல்ல நிர்வாகியும் கூட ....
எனக்கு அவளையும் தெரியும் உங்க அம்மாவையும் அருணாவையும் தெரியும் ....
அதனாலதான் விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே என் மருமகளை கண்மூடித்தனமா சப்போர்ட் பண்ணி ஊட்டிக்கு கூட்டிகிட்டு போயிட்டேன்...
உங்க அம்மாவும் அருணாவும் இன்னைக்கு பேசினதை எல்லாம் கேட்டதுமே நான் அப்படி செஞ்சது துளி கூட தப்பில்லன்னு புரிஞ்சிகிட்டேன் ....
லட்சுமி வாய திறந்து உண்மைய சொல்லட்டும் .... அப்புறம் அருணாவுக்கும் கற்பகத்துக்கும் இருக்குது கச்சேரி ..." என முடித்தார் சிறு கோபத்துடன்.
ஸ்ரீ-ராமம் வருவார்கள் ...
இனிய வாசக கண்மணிகளுக்கு ,
வெற்றி தரும் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள்.
Surprise episode ☺️☺️☺️☺️ awesome as usual 💕👏❤️❤️
ReplyDeletethanks a lot ma
Delete💓💓💓💓💓
ReplyDeletethanks a lot ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks a lot ma
DeleteRangasamy sir super ❤️❤️❤️
ReplyDeletethanks dr
DeleteSemma semma... Lakshmi epo than nadanthatha solla poralo. Karpagam Aruna ku epo climax iruko.. U take care of your health sis.
ReplyDeleteclimaxLA varun da.... thanks a lot ma
Delete