ஸ்ரீ-ராமம்-43

அத்தியாயம் 43 

 

கணவனின் அருமை பெருமைகள் ஒவ்வொன்றும் ரயில் பெட்டிகளாய்  அவள் மனக்கண் முன் அணிவகுத்து வர, தீவிர ஆலோசனையில்  அதனை அட்டவணை படுத்த ஆரம்பித்தாள் மாது .

தாய் தங்கையின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் என்றாலும், அவள் ஐந்து மாத கருவை இழந்து தவிக்கும் போது, அவள் உடல் நிலையோடு மனநிலையையும் புரிந்து கொண்டு அருமையாக நடந்து கொண்டவன்...

அவளது தந்தை பொறுப்பற்றவர் என்று தெரிந்திருந்தாலும், அவள் தாய் ருக்மணிக்கு கொடுக்கும் அதே மரியாதையை அவருக்கும் கொடுத்திருக்கிறான் ...

அதேபோல் அவள் தங்கை ராம லட்சுமியை அவன் தன் உடன்  பிறந்த தங்கையாகவே பாவித்ததை  பல  தருணங்களில் கண்கூடாக கண்டிருக்கிறாள்...

தன் பிறந்த நாளை மறந்தாலும் அவள் பிறந்த நாளை  அவன்  மறந்ததில்லை.

திருமணத்திற்கு பின்பான அவளது முதல் பிறந்தநாளை, அவளுக்கே தெரியாமல் அருமையாக திட்டமிட்டு ஆசையோடு கொண்டாட கோவாவுக்கு அழைத்துச் சென்றவன் ...

 

இரண்டாவது பிறந்த நாளின் போது அவள் கருத்தரித்திருந்ததால்புகழ்பெற்ற  ஐந்து நட்சத்திர விடுதிக்கு இரவு உணவிற்கு அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தவன் ...

 

பணம், பதவி, அந்தஸ்து, அழகு என  எதுவுமே இல்லாத போதும்  குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் தறுதலைகளுக்கு மத்தியில் அவனுடைய பதவிக்கும் பணத்திற்கும் கம்பீரத்திற்கும்  சந்தர்ப்பங்கள் அமைந்தும் ,அதனை விடுத்து குடும்பம், குழந்தை என்று சதா  காலத்தைக் கழித்தவன்...

 

திருமணத்திற்கு பின்பான இந்த மூன்று ஆண்டுகளில் நகைகள் பட்டுப் புடவைகளை அவளுக்காக வாங்கி  குவித்தவன்  ...

 

அவளுக்கென்று பெரிதாக தனிப்பட்ட  செலவுகள் இல்லை என்றாலும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை  கை செலவிற்காக கொடுத்து அவளது பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவித்தவன்...

 

இப்படி அனைத்திலும் சரியாக இருந்தவனை எப்படி தவற விட்டேன் .... இதற்குத்தான் தன் தாய் கூறிய அனுபவம் வேண்டும் போலும் ...

 

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது போல்ஒரு சந்தர்ப்பத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து  காரணத்தையே சொல்லாமல் அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தியல்லவா பலர் அறிய தண்டித்திருக்கிறேன் ....

 

நடந்ததைக் கூறி , முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தையே வழங்காமல் நானே அவசர அவசரமாக தீர்ப்பு எழுதி அனைத்தையும் முடித்துக் கொண்டு விட்டேனே ...

 

சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம்மனிதருக்கு மனிதர்  விசாரணைகளும் தீர்ப்புகளும் வேறுபடும் என்று ஏன் என் புத்திக்கு உரைக்காமல் போனது ...

 

வீரா கூறியது போல் அடுத்தவர்களை ஏமாற்றும் வகையில் மாய்மாலம் செய்து பேசும் பேச்சு அவனுக்கு சுத்தமாக வராது ....

 

மனதில் இருப்பதை அதிக வார்த்தை கோர்ப்புகளோடு இல்லாமல் நேர்மையாக பட்டென்று மொழிந்து விடுவான்...

 

உளவியலாளர் மணியம்மையின்  

 

"அவர் உன்கிட்ட அன்பா காதலா இல்லேன்னாலும்  உண்மையா இருக்காரு ம்மா.... அருமையான தாம்பத்தியத்திற்கு காதலை விட, உண்மை தன்மை தான் முக்கியம் ..." 

என்ற வார்த்தைகள் அவள்  காதுகளில் தெளிவாக ஒலிக்க,  

எவ்வளவு அழகாக எடுத்துச் சொன்னார் ... அதற்கான அர்த்தம் இப்பொழுதல்லவா புரிகிறது ...

 

திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு நிலையிலும் தன் இணையிடம் காதலை விட உண்மையை கடைப்பிடிப்பவர்கள்  தான் ஆக சிறந்த தாம்பத்தியத்திற்கு உதாரணமானவர்கள் என்பதை அதிகபட்ச விலை கொடுத்தல்லவா அறிந்து கொண்டுள்ளேன் .... ஐயோ  கடவுளே ...

என்று மானசிகமாக மண்டியிட்டு அழுது புலம்பலானாள்  மாது.

 

அழுது தெளிந்தவளுள், அவளது உயிர்த்தோழி கீதா  என்றோ அலைபேசியில் கூறியது நினைவுக்கு வர தொடங்கின ...

 

"இங்க பாரு லட்சுமி  ..... லவ் மேரேஜோ அரேஞ்ச்டு மேரேஜோ ... எதுவாயிருந்தாலும் இப்ப இருக்கிற பெரிய பிரச்சனை என்னன்னா கணவன் மனைவிக்குள்ள யாராவது ஒருத்தர் அடுத்தவங்களை ஏமாத்திக்கிட்டு தான் இருக்காங்க..

இந்த ட்ரஸ்ட் இஷ்யூவால தான் இப்ப நிறைய டிவோர்ஸ் கேஸ் வருது ... நான் ஆண்களை மட்டும் தப்பு சொல்லலபெண்களையும் சேர்த்து தான் சொல்றேன் நூத்துக்கு 25 பேர் அவங்க இணைக்கு உண்மையா இருக்கிறது இல்லனு ஒரு உளவியல் பத்திரிக்கையோட சர்வே சொல்லுது ..... பக்கத்துல இருக்கிறவங்களோட  அன்பா ஆதரவா பேசாம, எங்கோ இருக்கிறவங்களோட மொபைல்ல நலம் விசாரிச்சு நாசூக்கா பேசுறதால தான் கணவன் மனைவிக்குள்ள பிரச்சனையே வருதாம் ... 

இப்ப எல்லாம் கல்யாணம் வாழ்க்கையில காதல் இருக்குது காமம் இருக்குது ஆனா, உண்மை, நம்பிக்கைங்கிற உன்னதமான விஷயங்கள் மட்டும் இல்லாமையே போயிடுது ..."  என்ற தோழியின் வார்த்தைகள் வேறு அவளது சிந்தனைக்கு உரம் சேர்க்க 

 

"ஆமா கீதா.... நீ சொல்லும் போது புரியல.... எல்லாத்தையும் இழந்ததற்கு அப்புறம்  எல்லாமே புரியுது ... ஆண்டவன் கொடுத்த அற்புதமான வாழ்க்கையை  அகம்பாவத்தால் கெடுத்துகிட்டேனே.."  

 

என வாய்விட்டுக் கூறி கதறி துடித்தவளுக்கு , ரங்கசாமியிடம் இருந்து  அலைபேசி அழைப்பு வந்தது.

 

"அம்மாஉடம்பு நல்லா இருக்காம்மா ...  ஃபேக்டரிக்கு வர முடியுமா இன்னைக்கு  ..."

 

" நல்லா இருக்கேன் மாமா ... அங்கதான் கிளம்பி கிட்டு இருக்கேன் ... இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன் ..."  என முடித்தவள்தன் குற்ற உணர்வை புறந்தள்ளிவிட்டு, பணிக்கு புறப்பட்டாள்.

 

வீரா ஸ்ரீப்ரியாவை பெண் பார்த்து விட்டு வந்த தினத்தன்று அவள் இல்லத்தில் நடந்தவைகள்.

 

"ஏய்யா, கலியாணத்துக்கு சரியா ஒரு மாசம் கூட இல்ல... நல்ல கலியாண மண்டபமா பார்த்து முடிவு பண்ணோனம் ... மாப்பிள்ள வூட்டுக்காரங்க எல்லாம் நல்ல மாறியா  தெரியறாங்க ... அவிங்க எதையும் கேக்காததால சரியா செய்யாம விட்டுட கூடாதுய்யா..”

என செல்வராணி அம்மையப்பனிடம்  , வீராவின் குடும்பத்தினர் கிளம்பிச் சென்ற அரை மணி நேரத்தில் கூற, அதனை காதில் வாங்காமல் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கி இருந்தார் மனிதர். 

 

"அம்மையப்பா, என்ன யோசனை ..."

 

"எனக்கு இந்த சம்பந்தம் புடிக்கலம்மா... "

 

தன் பாட்டி மற்றும் தந்தைக்கிடையேயான உரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டே மேல் மாடியில் இருந்து இறங்கி வந்த ஸ்ரீப்ரியாவுக்குஅம்மையப்பனின் பேச்சு  மின்சாரமாய் தாக்கி நிலைகுலைய செய்ய,   கூடத்தில் கேட்டுக் கொண்டிருந்த சுசீலா செல்வராணி இருவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

 

"என்னய்யாஏன் இப்படி பேசற ... " 

செல்வராணி படபடக்க,

 

"அந்த குடும்பத்துல அந்த வீட்டம்மாவை தவிர வேற யாருமே பேசல ... அந்த அம்மா தான்  முழுக்க முழுக்க சம்மந்தம் பேசி முடிச்சிச்சி... கூட ஒண்ணுக்கு மூணு ஆம்பளைங்க வந்திருந்தாங்க ஒருத்தரும் வாயைத் தொறக்கல... அந்த வீட்ல பொம்பள கை ஓங்கி இருக்கு .... அந்த மாறியான இடத்துல என் பெண்ணை கொடுக்க நான் தயாரா இல்ல... ஏன்னா கல்யாணத்துக்கு பொறவு அந்த பொம்பள ஏதாச்சும் என் பொண்ண சொன்னாலும்மாப்பிள்ளை பையனோட அம்புட்டு பேரும் வாய மூடிக்கினு தான் இருப்பாய்ங்க ... கண்டுக்கிட மாட்டாங்க .... அதனால இந்த சம்பந்தம் ஒத்து வராதுனு முடிவு பண்ணிட்டேன் ..." என்று அவர் முடித்தது தான் தாமதம்,

 

"என்றா, உனக்கு கொஞ்சமாச்சும் கூறு இருக்கா  ....  பொண்ணு கொடுக்கறதா பேசி முடிச்சி முழுசா ஒரு மணி நேரம் கூட ஆவல ... இப்படி வாக்கு மாறி பேசற..."

 

"நாம ஒன்னும் பரிசம் போடலையே ... குறைந்தபட்சம் ஒப்பு தாம்பூலம் கூட மாத்திகிடலயே சும்மா பேசி தானே வச்சிருக்கோம் ..." என்று பார்வையை எங்கோ செலுத்திய படி கூறியவரை, செல்வராணி  உணர்ச்சிப் பெருக்கில் கண்கள் சிவக்க, மிகுந்த கோபத்தோடு முறைத்துப் பார்த்து 

 

"நீய்யா இப்படி பேசுற ... உங்க அப்பாரை பத்தி தெரியுமில்ல .... ஒரு வாக்கு கொடுத்தாருன்னா, உசுர கொடுத்தும்  காப்பாத்துவாரு... உனக்கு என்னையும் தெரியும் இல்ல.... எங்களுக்கு பொறந்துட்டு எப்படிய்யா உன்னால  இப்படி பேச முடியுது ....  பரிசம் போடறது ஊருக்காக வேண்டி செய்யற விசேசம்... அம்புட்டுதேன்... ஆனா வாக்கு கொடுக்கிறது ஆண்டவனுக்கு முந்தி செய்ற சத்தியம் மாதிரி .... அதை மறுக்கவும் கூடாது மாத்தவும் முடியாது ....

நீ மதுரைக்காரன் ... ஆனா உன் வீட்ல சிதம்பரம் ஆட்சி நடக்குது .... அவிங்க கோயம்புத்தூர்காரவங்க, அவிங்க வீட்ல மதுரை ஆட்சி நடந்துட்டு போவட்டுமே.... உன்  பொன் ஜாதி  வாய் செத்தவளா இருந்தாஊர் உலகத்துல இருக்குற அம்புட்டு பொம்பளைங்களும் வாய் செத்தவளா தான் இருக்கோணுமா என்ன....  மாப்பிள்ளை தம்பி சொக்கத்தங்கம் ..... மனசு விட்டு வெளிப்படைய ரொம்ப கலகலன்னு பேசினாப்பல... குலம் கோத்திரம் , குணம்படிப்பு ,வேலை, ஜோடி பொருத்தம்னு அம்புட்டும் பொருந்தி வந்திருக்கு... அத எல்லாத்தையும் விட்டுபூட்டு ஒன்னுக்கும் உதவாத  விஷயத்தை  பேசிக்கினு  இருக்க....  என் அனுபவத்துல சொல்றேன் கேட்டுக்க...  அந்த மாப்பிள்ள பையன்  நம்ம பொண்ணை  தங்கமா பாத்துக்குவாரு... தாங்கு தாங்குனு தாங்கத்தான் போறாரு .. என் பேச்சை நம்பு ...." என முடிக்கபதில் ஏதும் பேசாமல் இடத்தை காலி செய்தார் அம்மையப்பன்.

 

எங்கு தன் ஆசை நிராசை ஆகிவிடுமோ  என்ற அச்சத்தில் விழிகள் கண்ணீரில் மிதக்கமுகம் சிவந்து உறைந்து நின்ற பேத்தியைக் கண்டு,

 

"நீ கவலைப்படாத கண்ணு ... உங்கொப்பன் கிடக்கான்... நான் சொல்றேன் இந்த கல்யாணம் நடந்தே தீரும் .... நான் நடத்திக் காட்டாம விட மாட்டேன்... நீ நிம்மதியா போய் ஓறங்கி ஓய்வெடு ... எனக்கு கொஞ்சம் கழுத்தெல்லாம் வலிக்குது ... கொஞ்ச நேரம் படுத்து உறங்கிட்டு வாரேன் ..." என்று விடை பெற்றவர் , அடுத்த அரை மணி நேரத்தில் மூச்சு திணறல் அதிகமாகி நெஞ்சை பிடித்துக் கொண்டு வலியில் முனங்கிய படி  படுக்கையில் உருளசத்தம் கேட்டு அடுப்பங்கரையில்  இருந்து சுசீலாவும், ஸ்ரீப்ரியாவும் அவர் அறைக்கு விரைந்தனர். 

 

அவர் வலியில் துடிப்பதை பார்த்தும், செய்வதறியாது ஒரு கணம் திணறிய ஸ்ரீப்ரியா ஓடி சென்று அம்மையப்பனிடம் தெரிவிக்க , உடனே அவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு செல்வராணியை மருத்துவமனையில் சேர்த்தார். 

 

நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகுசெல்வராணி கண் விழிக்க, அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறிய மருத்துவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்துவிட்டு செல்ல அறிவுறுத்தினர்.

ஸ்ரீப்ரியா பாட்டியை பார்த்துக் கொள்வதாக சொல்லி அன்றைய இரவு  மருத்துவமனையில் தங்கினாள். 

 

மறுநாள் செல்வராணியை அம்மையப்பன் பாதுகாப்பில் விட்டு விட்டு குளித்து உடைமாற்ற  வீடு திரும்பியவள்முதலில் சென்று தேடியது  செல்வராணியின் அலைபேசியை தான்...

 

செல்வராணிக்கு பெரும்பாலும் வீட்டு உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை தாண்டி வேறு எவரும் அழைப்பு விடுக்க மாட்டார்கள்  என்பதால் அவரது கைபேசியில் இருந்த நான்கு விடுபட்ட அழைப்புகளை பார்த்ததும் வீரா அழைத்து இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.

 

கண்கள் கரித்துக் கொண்டு வந்தன.

 

சிறு வயதிலிருந்து இந்தக் கணம் வரை தந்தையை மீறி எதையுமே அவள் செய்ததில்லை.

 

சில குடும்பத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு  ஒழுக்கத்தை  காலத்திற்கு தகுந்தாற் போல் சுதந்திரத்தோடு சொல்லிக் கொடுத்து வளர்ப்பர். ஆனால் அம்மையப்பனை பொறுத்தமட்டில்சடங்கு சம்பிரதாயத்துடன் கூடிய நமது  கலாச்சாரமும் கட்டுப்பட்டித்தனமும் தான் ஒழுக்கம் என்பார். 

 

அதேபோல் அவர் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்து விட்டால்,  அதனை மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்பதையும் அறிந்தவளாதலால் , தன் திருமண விஷயத்தில் முடிவுக்கு வர முடியாமல் திணறினாள்.

 

அவள் வீராவின் மனதை நன்கு அறிவாள்.

 

சிட்னியில் மட்டுமல்ல முந்தைய தினம்  பெண் பார்க்க வந்த போது கூட , அவன் கண்களே அவள் மீதான காதலை  சொல்லாமல் சொல்லதன் தந்தையின் முடிவை தெரிந்து கொண்ட பிறகு தேவையில்லாமல் அவன் மனதில் ஆசையை வளர்க்க  மனம் இல்லாமல்,  

 

"வேணாம் ராம்.... அப்பாவுக்கு ஏனோ உங்களையும் உங்க குடும்பத்தையும் பிடிக்கல .... இன்னைய வரைக்கும் அவரை மீறி நான் எதையுமே செஞ்சதில்ல... நீங்க என் ஃபோனுக்காக காத்துகிட்டு இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் .... ஐ அம் சாரி ..." என்று வாய்விட்டே கூறி லேசாக விம்மியவள் , செல்வராணிக்கு காலை உணவாக  கஞ்சி கொண்டு போக வேண்டும் என்ற நினைவு வந்ததும் மற்ற சிந்தனைகளை புறம் தள்ளிவிட்டு, அந்த காரியத்தில் இறங்கினாள்.

 

 

 

வீராவின் இல்லத்தில் ......

 

 

நேற்று இரவு 4 முறை அழைத்தும், பதில் இல்லாமல் போனதோடு,  இன்றும் இக்கணம் வரை தன்னவள் தன்னை தொடர்பு கொள்ளவில்லையே ..... காரணம் என்னவாக இருக்கும்...  என்ற ஆழ்ந்த சிந்தனையிலேயே தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தான் வீரா.

 

தம்பியின் லண்டன் பயணத்திற்காக, அவனது துணிமணிகளை பயணப்பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான் சத்யன்.

 

அகல்யா இரவு உணவுக்காக சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருக்கபொன்னம்பலம் குருமா செய்வதற்காக காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தார்.

 

ஆங்கிலத்தில் Closely knitted Family என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்அதற்கு வெகு பொருத்தமான உதாரணமாக வீராவின் குடும்பத்தை கூறலாம்.

 

ஆண்கள் வேலை பெண்கள் வேலை என்று தரம் பிரிக்காமல் குடும்ப உறுப்பினர்கள்  அனைவரும் வீட்டு வேலைகளை பங்கு போட்டுக் கொண்டு செய்வார்கள் ...

 

அம்மாதிரியான நேரங்களை அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் தருணமாகவும் பயன்படுத்திக் கொள்வார்கள் ...

 

 வீட்டில் யாருக்கேனும் மனக்கசப்பு இருப்பதாக அறிய நேர்ந்தால் சம்பந்தப்பட்ட  நபரை மனம் விட்டு பேச செய்து,  அவரது மனவேதனையை அறிந்து அதற்கு தீர்வு காண்பதை வழக்கமாகக் கொண்டவர்கள்  ...

 

சரியாகச் சொன்னால் ஆண் பெண் பேதம் இல்லாமல் அனைவரது கருத்துக்களும்  பரிசீலிக்கபடும் இடமாக இருந்தது அந்த குடும்பம் ...

அகல்யாபொன்னம்பலம் அன்யோன்யமான குடும்பத் தலைவி தலைவன் ஆவர். அதேபோல் பிள்ளைகள் சத்யன், வீரா அன்பு மூவர் இடத்திலும் அன்பும் பாசமும் கொட்டிக்கிடக்கும் .....

 

சத்யன்  முன் கோபி, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவன்  , தன் கருத்து சரியோ தவறோ எதை பற்றியும் கவலைப்படாமல்  மனதில் இருப்பதை  பகிரும்  சுபாவம் கொண்டவன் என்பதால் பல தருணங்கள்  அவனைக் கடின மனிதனாக காண்பித்தாலும் அவன் பேச்சில் அவ்வப்போது  தென்படும் நிதர்சனத்திற்கு அவன் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பு இருக்கவே செய்தன ....

 

அவன்  எவ்வளவுக்கு எவ்வளவு தன் குடும்பத்தின் மீது பாசமும் பற்றும் கொண்டவனோ அதே அளவிற்கு பிரபா மற்றும் தன் குழந்தைகளிடத்தில் அன்பும்  பிரியமும் கொண்டவன்   ...

 

பிரபா மாற்று சமுதாயத்தை சேர்ந்தவள் என்பதால் அரைகுறை மனதுடன் அவளை மருமகளாக வீராவின் குடும்பம் ஏற்றுக் கொண்டாலும்அந்த வீட்டின் மூத்த மருமகள் என்ற கௌரவத்தை எந் நிலையிலும் கொடுக்கத் தவறியதில்லை ...

 

அதேபோல் பிரபாவும் , தன் புகுந்த வீட்டு உறவினர்களுக்கு தன் கடமையை யாதொரு குறையும் இல்லாமல் செய்து முடித்து விடுவாள் ....

 

என்ன ஒன்றுசத்யன் பிரபா இருவரும் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனைக்காக முட்டிக் கொள்வார்கள் ...

திருமணம் முடிந்து முதன்முறை இருவரும் முட்டிக் கொள்ளும் போது, இரு குடும்பத்தாரும் சமாதானம் செய்ய வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்  ....

 

ஆனால் நாட்கள் செல்ல செல்ல எவ்வளவு பெரிய பூகம்பமாக இருந்தாலும்யாருடைய தலையிடும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்  இருவருமேஅதுவும் சண்டையிட்ட மறு தினமே பேசி சமாதானம் ஆகி விடுவதை கண்டு வீட்டு மனிதர்கள் அமைதி காக்க தொடங்கினார்கள்  ...

வீட்டு வாசலில் டாக்ஸி வந்து நிற்கஅதிலிருந்து  கட்டைப் பையுடன் இறங்கினாள் பிரபா.

அவள் போர்டிகோவை தாண்டி கூடத்தை அடையும் முன்பே,

"வா பிரபாஇப்ப அம்மா எப்படி இருக்காங்க ...." என அகல்யா நலம் விசாரிக்க, உடன் சத்யனும் இணைந்து கொண்டான். 

 

"இப்ப பரவாயில்ல அத்தை  ..... ஓரளவுக்கு எழுந்து நடமாடறாங்க ..."  என்றவளிடம்  சிகிச்சை முறைகள், மருந்து மாத்திரைகளை பற்றி பொன்னம்பலம் விசாரிக்க, பதில் அளித்துக் கொண்டிருந்தவளின் பார்வையில் அடுப்பங்கரையில் வேலை செய்து கொண்டிருந்த வீரா விழ , உடனே விறுவிறுவென அங்கு  சென்று,

 

"நீங்க போங்க தம்பி, நான் டீ போடறேன் ..." என்றாள் வழக்கம் போல் .

 

"வேலை முடிஞ்சிருச்சு அண்ணி... இந்தாங்க ...."  என்றவன் அவள் கையில் ஒரு குவளை தேநீரை திணித்தான்.

  

"புள்ளைங்கள கூட்டிக்கிட்டு வரலையா  பிரபா ..." ---- சத்யன்.

 

"டிவி பார்த்துகிட்டு இருந்தாங்க டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு விட்டுட்டு வந்துட்டேன் ..."  தேநீர் அருந்தியபடி பதில் அளித்தவளின் விழிகள் வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் ஆழம் பார்க்கத் தொடங்கின ...

அனைவரும் எப்பொழுதையும் விட, நல்ல மனநிலையில் இருப்பதை குறித்துக் கொண்டு 

 

"பொண்ணு பார்க்க போயிருந்தீங்களே பொண்ணு  எப்படி இருந்துச்சு.... அவங்க குடும்பத்து ஆளுங்க எல்லாம் நல்லபடியா பேசினாங்களா அத்தை ...." என  தொடங்கியதுதான் தாமதம்,  நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அகல்யா வழக்கம் போல் உளறி கொட்ட, கேட்டுக் கொண்டிருந்தவளின் முகம் மொத்தமாக விழுந்து விட்டது.

 

பேச்சை தொடங்கி வைத்தது அவள் தான் என்றாலும், மற்ற நால்வரும் அது குறித்து இயல்பாக பேசி சிரிப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போகஒரு கட்டத்தில் பிறர் அறியாமல் சத்யனிடத்தில் தனியாக பேச வேண்டும் என்பது போல் அவள் சமிக்ஞைகள் செய்ய,  புரிந்து கொண்டவன் அவர்களது அறை நோக்கி சென்றான்பெண் பின் தொடர்ந்தாள். 

 

"பிரபா, என்ன பேசணும் ..." என்றான் ஆர்வமாய்  அவள் முகத்தில் பார்வையை பதித்து. 

"அது வந்து ......"

"சொல்லுடி .... உங்க வீட்ல ஏதாவது பிரச்சனையா ...."

 இல்லை என்பது போல் அவள் இடவலமாக   தலையசைக்க,

 

"பின்ன என்ன தான் பேசணும் ... சொல்லு ...."

 

"அது வந்து .... உங்க தம்பிக்கு பொண்ணு பார்த்து பேசியே முடிச்சிட்டீங்களா ...."

 

"அதைத்தான் அப்பாவும் அம்மாவும் சொன்னாங்களே திரும்பத் திரும்ப அதையே ஏன் கேக்குற ....சரி அத விடு உன் பிரச்சனை என்ன ..."

 

"அது ..............என் தங்கச்சி ப்ரீத்தியை, உங்க தம்பிக்கு கட்டி வைக்கலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்......" 

 

 அவள் முடிப்பதற்கு முன்பாகவே 

 

"எதே...... பிரீத்திய பாண்டியனுக்கு கட்டிக் வைக்கணுமா .... யாரோட ஐடியா டி இது... உன் ஐடியாவா... இல்ல உங்க அப்பா அம்மாவோட ஐடியாவா  ..."

கண்கள் சிவந்து, கோபம் கொந்தளிக்க கேட்டவனை பார்த்து அஞ்சியபடி அவள் அமைதி காக்க

 

"நீ அமைதியா இருக்குறத பாத்தா... ப்ரீத்தியோட வேலையா இது ..."

 

"இல்ல இல்ல ... அவளுக்கு நம்ம பாண்டியனை கட்டிக்க விருப்பம் இருந்தாலும்அவளா வாய விட்டு சொன்னதில்ல  .... எனக்கு தான் இந்த ஆசை ரொம்ப நாளாகவே இருக்கு ... எப்படியும் ப்ரீத்தி அடுத்த வருஷம் படிப்ப முடிச்சிடுவா... அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசலாம்னு இருந்தேன் ஆனா அதுக்குள்ள கல்யாணமே வேணாம்னு சொல்லிக்கிட்டு இருந்த உங்க தம்பி திடீர்னு பொண்ணு பாக்க ஒத்துக்கிட்டதோட  பார்த்த அந்த முதல் பெண்ணையே புடிச்சிருக்குனு  சொல்லுவாருனு எதிர்பார்க்கல ...."

 

" முட்டாள்தனமா ஆசைப்பட்டிருக்க..."

 

" ஏன் ... என் தங்கச்சியை உங்க தம்பிக்கு கட்டி வைக்க கூடாதா....ப்ரீத்திக்கு என்ன குறைச்சல் .... ஒருவேளை உங்க தம்பி மட்டும் ஜாதி பார்க்கிறாரோ ..."

 

"ஓங்கி அறைஞ்சன்னா மூஞ்சி பேந்துடும் .... வாய்க்கு வந்தபடி ஒளறாதே .... அனாவசியமா என் வாயை கெளறி  வில்லு பாட்டு பாட வைக்காத .... அப்புறம் உனக்கு தான் பிரச்சனை ..."

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Post a Comment