ஸ்ரீ-ராமம்-42

அத்தியாயம் 42 

 

சுவற்று கோழி இரவு மணி 12ஐ காட்டியும் உறக்கம் வராமல் கொட்ட கொட்ட விழித்துக்  கொண்டிருந்தான் ராம்சரண்.

அவன் மனம் முழுவதும் அவன் மனையாளே பொங்கி வழிந்தாள்.

அவளை  பெண் பார்க்க சென்றது, பிறகு திருமணம், முதல் கூடல், முதல் கர்ப்பம் எனத் தொடங்கி அவர்களது வாழ்வின் முக்கிய கட்டங்கள் எல்லாம்  படக்காட்சியாய் அவன் மணக்கண் முன் விரிய, மோகம், காதல் , தாபம், ஏக்கம்அழுகை, பிரிவு என பல்வேறு உணர்வுகளின் கலவையில் சிக்கி கலங்கி காணாமல் போய்க்கொண்டிருந்தான்.

தந்தையின் உந்துதலால் ஏற்பட்ட வீராப்பில் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டு விட்டு வந்தவனுக்கு, தன் மனைவி இல்லாத வாழ்க்கையை  வாழவே முடியாது என்பதை கடந்து சென்ற தினங்கள் தலையில் அழுத்தமாக குட்டி சொல்ல, சிறந்த மாணாக்கனாய் உடனே புரிந்து கொண்டவன்  தீர்வை தேடி மாற்று வழியில் யோசிக்க ஆரம்பித்தான் .

 

தன் மனைவியை மீண்டும் தன் வாழ்க்கையில் கொண்டு வந்தே தீர வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்தவன்தன் தந்தை மற்றும் மனையாளின் மீது இருக்கும்  கோபத்தால் அதனை நேரடியாக செயல்படுத்த மனம் இல்லாமல் புதிய திட்டம் ஒன்றை விடிய விடிய தீட்டிவிட்டே  வைகறைப்பொழுதில் உறக்கத்தை தழுவினான். 

 

அவன் காலையில் கண்விழிக்கும் பொழுது மணி பத்தரையை தொட்டிருக்க, தூங்கி எழுந்த புத்துணர்வே இல்லாமல்மிகுந்த களைப்போடே  குளித்து முடித்து அலுவலகம் கிளம்பியவன் உணவு உண்ண கூடத்திற்கு வந்த போது வழக்கம் போல் தாயும் மகளும் ஏதோ ஒரு சீரியலை பார்த்துக்கொண்டே இடையிடையே  வெட்டி கதை பேசிக் கொண்டிருக்க , காலை உணவு என்ற பெயரில்  எதையோ செய்து வைத்திருந்தாள் அவன் வீட்டு சமையல் பணியாளர் சாந்தி  .

 

 

"காதலி அருமை பிரிவில் ...

 மனைவியின் அருமை மறைவில் ..."

என்ற வைரமுத்துவின் வரிக்கேற்ப மனைவியாக வாழ்க்கையில் வந்து, காதலியாக அவன் இதயம் கவர்ந்தவளின் பிரிவுஅவனைக் கொல்லாமல் கொல்ல , உள்ளுக்குள்ளே உஷ்ணத்துடன் கூடிய ஒரு ஏக்கம் பரவி தொண்டை அடைக்க , காலை உணவை உண்ண பிடிக்காமல் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் புறப்பட்டான்.

 

 

அரை மணி நேரத்தில் அலுவலகத்தை அடைந்தவன், முதல் வேலையாக தன் உயர் அதிகாரியை சந்திக்க அவருடைய அறைக்குச் சென்றான்.

 

"ஹாய் சரண்  ... ஹவ் ஆர் யூ ..." என நட்போடு   அவனது உயர் அதிகாரி திலக் வரவேற்கஅவருக்கு அருகில் அமர்ந்திருந்த  மஹிக்கா ( ராம் சரணுக்கு இரண்டு படி நிலைக்கு கீழே பணிபுரியும் பெண் ஊழியர்) " ஹாய் ராம்சரண் ..." என்றாள் புன்னகையோடு. 

 

அவளை அங்கு கண்டதும்பேச வந்ததை பேச முடியாமல்  தடுமாறியவன்பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு,   அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து , அலுவலக சம்பந்தமான வேறு  விஷயங்களை பற்றி பேசலானான்.

 

அரை மணி நேர உரையாடலுக்கு பிறகுஅவன் கிளம்ப எத்தனிக்கும் போது ,

"ராம் சரண்உங்க டிவோர்ஸ் கேஸோட ஸ்டேட்டஸ் என்ன.... நெக்ஸ்ட் மந்த் உங்களால ஸ்வீடன்க்கு ட்ராவல் பண்ண முடியுமா ...."  இயல்பாக திலக் கேட்க, ஒரு கணம் திணறியவன், பிறகு சுதாரித்து,

 

"எல்லாம் முடிஞ்சு போச்சு திலக் ... என் சைடுல எவ்வளவோ ட்ரை  பண்ணேன் ... ஆனா டிவோர்ஸ் தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னதால வேற வழி இல்லாம மியூச்சுவலுக்கு சைன் பண்ணி கொடுத்துட்டேன் ... எல்லா லீகல் ஃபார்மாலிட்டிசும் முடிஞ்சிருச்சு .... அடுத்த மாசமே டிவோர்ஸ் பேப்பர்ஸ் வந்துடும் ..."

 

"ஓ.... ஐ அம் சாரி ராம்சரண் ..." என்ற திலக்குடன் இணைந்து மஹிக்காவும் சொல்ல,

 

"முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தது ... நவ் ஸ்லோலி ஐ அம் கம்மிங் அவுட் ஆஃப் இட் ..." 

 

 ஒருவித விரக்தியோடு முடித்தவன் ,

 

"ஸ்வீடன் ட்ராவலை பத்தி யோசிச்சி சொல்றேன் திலக் ..." என முடித்துவிட்டு விறு விறுவென்று விடைபெற்றவனை  பார்வையால் தொடர்ந்தாள் மஹிக்கா. 

 

ராம் சரணை நட்பு ரீதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவாள். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் வெவ்வேறு திட்ட குழுவில் பணி புரிவதால் அவ்வப்போது  நடக்கும் பொதுவான கலந்தாய்வுகளில் சந்திக்கும் போது ஏற்பட்ட  பரிச்சயதால் , அவனை பற்றி ஓரளவிற்கு நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள்.

 

 இரு ஆண் நண்பர்களோடு, அலுவலக கேண்டீனில் மதிய உணவை முடித்துக் கொண்டு, தன் பணிமனை நோக்கி வேகமாக  சென்று கொண்டிருந்தவனை பரபரப்பாக நெருங்கிய மஹிக்கா 

 

"ஹேய் ராம்சரண் , என்ன அவசரம்... எதுக்காக இப்பவே கேபின்க்கு போறீங்க... ஏதாவது மீட்டிங் இருக்கா ..."  என்றாள் உரிமையோடு. 

 

அவள் மீது ஒரு வெற்றுப் பார்வை வீசி

 

"இல்ல, ஏன் கேக்குற ..." என்றான் வேண்டா வெறுப்பாக.

 

"இப்பதான் லஞ்ச் முடிச்சோம்.... கேம்பஸை ஒரு ரவுண்டு அடிக்கலாமே.... உடம்புக்கு நல்லது ..."

 

"சாரி, எனக்கு வேலை இருக்கு ..."

 

"ராம்சரண் ப்ளீஸ் ... நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ... நடந்து கிட்டே பேசலாமே ..." 

 

பதில் பேசாமல், அவளோடு அவன் இணைந்து நடக்க, ஓரிரு கண அமைதிக்குப் பிறகு 

 

"வி ஆர் செய்லிங் இன் த சேம் போட் ..." என்றவளை அவன் வித்தியாசமாக பார்க்க,

 

"ஆமாநாங்களும் போன வாரம் தான் மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணினோம் ..."

 

"ஓ...." என்றான் அசுவாரஸ்யமாக.

 

மீண்டும் ஓரிரு கணம் அங்கு அமைதி நிலவபொறுத்துப் பார்த்தவள் தானாகவே 

 

"காரணம் கேக்க மாட்டீங்களா ..." என்றாள் அவன் முகத்தைப் பார்த்து.

 

"சொல்லு ...." என்றான் விடேற்றியாக.

 

"நானும் மகேஷும் ( அவள் கணவர்) டூ இயர்ஸ் லவ் பண்ணோம் ... எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் ஒத்துக்கல .... கேஸ்ட், (Caste)ஸ்டேட்டஸ்னு ஏகப்பட்ட பிராப்ளம் .... வேற வழி இல்லாம ரெண்டு பேரும் வீட்டை எதிர்த்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ...."

 

ஒரு கண அமைதிக்குப் பிறகு , தொடர்ந்தவள் 

 

"கல்யாணத்துக்கு அப்புறம் சின்ன சின்ன மிஸ் அண்டர் ஸ்டாண்டிங், சின்ன சின்ன சண்டைங்கனு ரொம்ப சாதாரணமா லைஃப் போய்கிட்டு இருந்தது ... எனக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்... கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியும் குழந்தை உண்டாகலயேனு  டாக்டர போய் பார்த்தேன்.... டாக்டர் நிறைய டெஸ்ட்ஸ் எடுத்தாங்க ...அதுல என் ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கிறதா ரிசல்ட் வந்திருச்சு .... டாக்டரை மீட் பண்ணனும்  மகேஷை கூப்பிட்டேன்... ஆறு மாசம் இழுத்தடிச்சாரு ... 

அதனால அடிக்கடி எங்களுக்குள்ள சண்டை வந்தது…. எப்படியோ பேசி சம்மதிக்க வச்சி ஒருநாள் டாக்டரை பார்க்க அவரை கூட்டிக்கிட்டு போனேன் ... எல்லா டெஸ்ட்டும் எடுத்தாங்க.... டெஸ்ட் ரிசல்ட்ல தான் தெரிஞ்சது அவருக்கு ஸ்போம் கவுன்ட் (Sperm count)ஜீரோனு... ரொம்ப அப்செட் ஆயிட்டேன் ....

 

மகேஷ் ஒரு செயின் ஸ்மோக்கர் ... வாரத்துல ரெண்டு மூணு நாள் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவாரு... அதைத்தான் டாக்டர் காரணமா சொன்னாங்க ...  அந்த கெட்ட பழக்கங்களை ஸ்டாப் பண்ணிட்டாஸ்போம்  கவுன்ட் இன்க்ரீஸ் ஆகும்னு சொன்னாரு... ஆனா மகேஷ் கேட்கிறதா இல்ல.. அவர் எப்பவும் போல ஸ்மோக் பண்ணிக்கிட்டு ட்ரிங்க் பண்ணிக்கிட்டு தான் இருந்தாரு...

இதனால எங்களுக்குள்ள இன்னும் சண்டை வலுத்தது...  ஆர்பனேஜிலிருந்து குழந்தையை அடாப்ட் பண்ணிக்க அவருக்கு  விருப்பமில்ல ... எனக்கும் விருப்பம் இல்ல தான் ஆனா வேற சாய்ஸ் இல்ல... ஆனா அதுக்கும் அவர் ஒத்துக்கல ...

எனக்கும் வேற யாரோ ஒருத்தரோட குழந்தைய எடுத்து வளர்க்கிற அளவுக்கு  பரந்த மனப்பான்மை இல்ல ...  என்னோட பயாலஜிக்கல் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டேன் .... ஆனா அது நடக்காதுனு தெரிஞ்சதுக்கப்புறம்ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து பிரயோஜனம் இல்லன்னு ஒரு வழியா பேசி முடிச்சு மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கோம் ...."

 

"ஓ....." என்று ஒரு வார்த்தையில் ஏனோ தானோ வென்று  முடித்துக் கொண்டவனை பார்த்து மஹிக்காவிற்கு லேசான கோபம் துளிர்க்க

 

" நான் என்னோட பர்சனலை உங்க கிட்ட எதுக்காக இவ்ளோ டீடைல்டா சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா ...." என்றாள் ஆதங்கத்தோடு. 

 

அதுவரை சாதாரணமாக இருந்தவனின் முகத்தில் மின்னல் வெட்டுகளாய் கோபம்  விரிய, அவன் உடல் சற்று இறுக 

 

"லிசன் மஹிக்காஏற்கனவே நான் ஒரு பொண் குழந்தைக்கு அப்பா ... இப்ப  என் வைஃப் ட்வின்ஸ கன்சிவா இருக்கா  ... சோ, நீ எதுக்காக டீடைல்டா  உன் பிரச்சனையை சொன்னேனு புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் ஒன்னும் இன்னசென்ட் கிடையாது .... உனக்கு குழந்தை வேணுங்கிறதுக்காக  உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் ஒன்னும் ஸ்போம் டோனர் இல்ல ... என் லைஃப் ஆல்ரெடி செட்டில்டு..  எனக்கு மூணு குழந்தைகங்க... எனக்கு அது போதும் ..." 

 

என வெடுக்கென்று அவன் முடிக்க 

 

மீண்டும் அமைதி சில கணங்கள் அங்கு ஆக்கிரமிக்க

 

"இப்ப தான் நீங்க இன்னசென்ட்டா பேசறீங்க ராம்சரண் ... நீங்க எவ்வளவோ ட்ரை பண்ணியும் உங்க வைஃப்  டிவோர்ஸ் தான் வேணும்னு வாங்கிக்கிட்டு போய்ட்டாங்க ... உங்க குழந்தைகளும் அவங்க கிட்ட தான் வளர போறாங்க இந்த நிலைமைல உங்களுக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா ..."

 

"அவ ஒன்னும் என் கூட வாழ்ந்த வாழ்க்கையை வெறுத்துட்டு டிவோர்ஸ் வாங்கிக்கிட்டு போகல ... அவளுக்கு என்னை ரொம்ப புடிக்கும் ... அந்த பைத்தியக்காரி இந்த நிமிஷம் கூட என்னை தான் நினைச்சுகிட்டு இருப்பா... என்ன ஒன்னு, காரணமே சொல்லாம டிவோர்ஸ் கேட்டாளேனு தான் எனக்கு அவ மேல கோவம் .... மத்தபடி நான் அவளோட வாழ்ந்த போது லவ் பண்ணினதை விட இப்பதான் அவளை அதிகமா லவ் பண்றேன் ... இட்ஸ் நாட் ஆன் எண்ட் ... இட்ஸ் ஜஸ்ட் எ ஸ்டம்ப்ளிங் ப்ளாக் இன் அவர் மேரேஜ் லைப் ... தட்ஸ் இட்... கூடிய சீக்கிரம் அதுவும் கிளியர் ஆயிடும் ...  உனக்கு சீக்கிரமே நல்ல குடும்ப வாழ்க்கை அமைஞ்சு குழந்தைகளோட நீ நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன் ...." என்று படபடத்துவிட்டு அவளது பதிலுக்கு காத்திராமல் விடை பெற்றவனின் பறந்து விரிந்த முதுகையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள் மஹிக்கா. 

 

இடம் : ஊட்டி 

 

ராம்சரண் மஹிக்காவிடம் சொல்லி சென்றது ஆயிரம் மடங்கு சரியாகத்தான் இருந்தது. 

 

லட்சுமி ஊட்டிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரமான நிலையில்நின்றால், நடந்தால், உண்டால் உறங்கினால் என முப்பொழுதும் அவன் சிந்தனையிலேயே சிக்கி தவித்தாள்.

 

கடைசியாக நயனங்களில் மெல்லிய நீர் திரையிட , மித மிஞ்சிய வலியோடு பார்த்துவிட்டு சென்றவனின் முகம் அவள் மனதில் கல்வெட்டாய் பதிந்து போய் இம்சித்தது.

 

 என்னதான் வெளியே இறுகிய முகத்தோடு கம்பீரமாக அதிகம் பேசாமல் தன் கௌரவத்தை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் வலம் வருபவனாலும் , அவன் ஆழ்மனதின் மென்மையை அவள் மட்டுமே அறிவாள்.

 

அவன் தன் நிலையை விட்டு இறங்கி வந்துகாரணத்தைக் கேட்டும் சொல்லாமல் விட்டது தற்போது பெரும் குற்றமாக அவளுக்கு தோன்றியது .

 

காரணம் தெரியாத நிராகரிப்பு மிகவும் கொடுமையானது ... அதுவும் அவன் நண்பர்களுக்கு முன்பாக அப்படி நடந்து கொண்டது அவனது  கௌரவத்திற்கு பெரிய இழுக்கு ... இனி எக்காலத்திலும் தான் இருக்கும் திசை பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டான்...

 

என்றெல்லாம் அவளது மனம் அபரிமிதமாய் சிந்தித்து கலங்கடிக்க,ஏக்கத்திலும் காதலிலும் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தாள் மங்கை .

 

அன்று  புடவை கட்டும் பொழுது, குழந்தைகளின் முதல்  அசைவை உணர்ந்தவள்தலைகுனிந்து பார்த்து தன் மணிவயிற்றை தடவி சிலிர்த்துப் போனாள்.

 

தன்னவனுக்கு குழந்தைகள் என்றால் உயிர் என்று நன்கு அறிவாள்.

 

கிடைக்கும் சொற்ப நேரத்தை கூட அலைபேசி, தொலைக்காட்சிநண்பர்களுடனான சந்திப்புகள் போன்றவைகளில் செலவழிக்காமல், குழந்தையை குளிக்க வைப்பது, உணவு ஊட்டுவது, உடை மாற்றுவது தோளில் தூக்கி வைத்துக் கொண்டு காலாற நடை பயல்வது என அவனுக்கு கிடைக்கும்  சொற்ப ஓய்வு நேரங்களை அருமையாக ஒருவித அலாதியோடு குழந்தையுடன்  செலவழிப்பவன்...

 

 இரட்டைக் குழந்தைகளுக்கு  தாயாகப் போகிறாள் என்ற செய்தியை அறிந்து, வந்தவனின் கண்களில் காணப்பட்ட உணர்வுக்குவியல்களை எண்ணிப் பார்த்தவளுக்கு  வார்த்தையில் விவரிக்க முடியாத அளவிற்கு நெஞ்சில் வலி ஏற்பட பூஜை அறையில்  மனக்கவலை தீர  வெறும் கூடாய் குலுங்கி அழுதாள் பாவை  கூடிய விரைவில் அவள் ஜீவன்  அவளைத் தேடி வரப்போவதை அறியாமல். 

 

 

அவள்  ஊட்டிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆக போகிறது.

 

பெரிதும் இல்லாமல் சிறிதும் இல்லாமல்மிகுந்த அழகாக இயற்கை வளங்களோடு கனகச்சிதமாக தோட்டத்திற்கு மத்தியில்  அமைந்திருந்தது அவள் வசிக்கும் ராம்சரணின் பரம்பரை பங்களா .

 

இரண்டு அடுக்குகளை கொண்ட அந்த பங்களாவின் கீழ்தளத்தில் எதிரெதிரே இரண்டு பெரிய படுக்கை அறைகள்ஒரு பெரிய கூடம்சமையலறை, மேல் தளத்தில் ஒரு பெரிய கூடம், மூன்று பெரிய படுக்கை அறைகள் என  விஸ்தாரமாக அமைந்திருந்தன.

 

 மேல் தளத்தில் இருந்த ராம்சரணின் அறையில்  திருமணமான புதிதில் தேன் நிலவின் போது  தங்கிய நினைவுகள் எல்லாம் வரிசை கட்டி  அந்த வீட்டில்  அடியெடுத்து வைத்த தருணத்திலிருந்து ரங்கராட்டினம் போல்  சுழன்றடிக்க, பொங்கி எழுந்த உணர்வுகளை  அடுத்தவர்கள் அறியா வண்ணம் கட்டுக்குள் கொண்டுவர கடினப்பட்டு போனாள் மங்கை. 

 

அந்த வீட்டு தோட்டத்தை பராமரிக்க இரண்டு தோட்டக்காரர்கள்வீட்டை பராமரிக்க 2 வேலைக்காரர்கள்,

மூன்று வேளையும் சமையல் செய்து பரிமாற சிவகாமி என்ற நடுத்தர வயது  பெண்மணி என வீடு முழுவதும் உதவியாளர்கள் நிரம்பி வழிந்தாலும், தன்னவன் இல்லாத வாழ்க்கைதனித்து பாலையில் இருப்பது போல் அவளை வாட்டி வதைக்கவே செய்தது .

 

இம்முறை அவள் கருத்தரித்து இருந்ததால்வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கை  அறையை ஒதுக்கி இருந்தார் ரங்கசாமி. 

 

ரங்கசாமி  8:00 மணிக்கு காலை உணவை முடித்துக் கொண்டு  வீட்டை விட்டு கிளம்பினால் வீடு திரும்ப இரவு 8 மணிக்கு மேல் ஆகிவிடும்.

 

மதிய உணவு கூடஅவர் இருக்கும் இடம் அறிந்து அந்த பணிமனைக்கே சென்றுவிடும்.

லட்சுமியின் உடல்நிலையை கருதி, அவளை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தொழில் தளங்களுக்குச் சென்று மேம்போக்காக பார்வையிடும் பணி செய்ய அனுமதித்திருந்தார்  ரங்கசாமி.

 

மற்றபடி மனிதர் யாரிடமும் நின்று பேசி அவள் பார்த்ததில்லை.

வீட்டில் இருக்கும் வேலைக்காரர்கள் எல்லாம் தானியங்கி எந்திரம் போல், தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலையை மிகுந்த கவனத்தோடு செய்து முடிக்கஅதனை ஒருவித ஆச்சரியத்தோடு கண்ணுற்றவள் வழக்கம் போல்  கணக்கு வழக்குகளை  பார்த்து கணினியில் பதிவேற்றும் பணியை செம்மையாக செய்து முடித்தாள். 

 

மகளின் வாழ்க்கை சீராகி விட்டதாக எண்ணிக் கொண்டு உடன் பயணித்த தாய் ருக்மணியிடம் நடந்து முடிந்த  பிரச்சனைகளை முற்றிலுமாக மறைத்து இருந்தாள் பெண்.

 

எப்பொழுதும் போல் தன் கணவன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருப்பதாக கூறியவள்பள்ளியில் சமர்ப்பிக்க தன்  ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கஅதனைப் பெற்றுக் கொண்டு மகளோடு மூன்று நாட்கள் மகிழ்ச்சியோடு  தங்கி இருந்துவிட்டு மிகுந்த நிம்மதியுடன்  ஊர் சென்று சேர்ந்தார்  ருக்மணி.

 

பிறகு வந்த தினங்கள் இயல்பாக கரையஅன்று தொழில் மனைக்கு செல்லும் தினம் என்பதால்ஆரஞ்சு நிறத்தில் கரும்பச்சை ஜரிகை கொண்ட கல்யாணி காட்டன் புடவையை மேடிட்ட இடுப்பு பகுதியில் அழகான கொசுவங்களை வைத்து கட்டி முந்தானையை பட்டை எடுத்து போடும் பொழுது அவளது நெஞ்சாங் கூட்டின் மத்தியில் ஒரு மிளகு அளவிற்கு காணப்பட்ட சிவப்பு மச்சத்தையும், அதனை வருடியபடி தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தையும் நிலைக்கண்ணாடியில் பார்த்தவளுக்கு,

 

"பியூட்டிஃபுல் லட்சுமி .... எவ்ளோ அழகா சென்டர்ல டீப்பா அழகான மோல்(Mole) உனக்கு ... "  என  இரவு விளக்கொளியில் அவளவன் ரசித்துக் கூறி அங்கு  முத்தமிட்டது நினைவுக்கு வர, கண்களில் குளம் கட்டி நின்றாள் பேதை.

 

பெரும்பாலும்  நின்று பேச நேரமில்லாதவன், அருணா, கற்பகம் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் அடுக்களைக்கு வந்து 

 

"இன்னைக்கு ஒரு நாள் சமையலுக்கு உனக்கு கூட இருந்து கைடு பண்ணலாம்னு இருக்கேன்.... " என்று கம்பீரமாக பெருமிதம் பேசியவன்வேகமாக கடலை பருப்பை எடுத்துப் பாத்திரத்தில் போட முயலும் போது,

 

" ஐயோ... இப்ப எதுக்கு இந்த பருப்ப எடுக்குறீங்க ..."

 

" சாம்பார் வைக்க தான் ..."

 

"பெரும்பாலும்  கடலை பருப்புல சாம்பார் வைக்க மாட்டாங்க ...." என்றாள் சிரிப்பை அடக்கியபடி. 

 

" அப்படியா ...." என்றவனின் முகத்தில் லேசான ஏமாற்றம் தெரிய உடனே சுதாரித்துக் கொண்டு,

 

"கடலை பருப்பும் ஒரு பருப்பு தான் ... அதுலயும் புரோட்டீன் இருக்கு ... அது உடம்புக்கு நல்லதுனு டாக்டர் சொல்லி இருக்காங்க ..." என அவன் முரட்டு முட்டுக் கொடுக்கஅவள் கலகலவென்று சிரிக்கபதிலுக்கு சிரிப்பை அடக்க முயன்று தோற்றவன் பிறகு இணைந்து நகைத்து

 

"அப்ப இதுல சாம்பார் வைக்க மாட்டாங்களா ..." என அப்பாவியாக கேட்க,

 

"வைப்பாங்க ... எப்பவாச்சும் வைப்பாங்க ... டேஸ்ட்டும் அவ்வளவா நல்லா இருக்காது .... துவரம் பருப்புல சாம்பார் வச்சா தான் நல்லா இருக்கும்  ..."

 

"ஓ... ஆனா ரெண்டு பருப்புமே ஒரே மாதிரியே இருக்கே..." என்று சரண்டர் ஆனவனின் முகத்தில், அளவுக்கு அதிகமான குழந்தைத்தனம் தெரிய, அதனை ரசித்தபடி, இரண்டு பருப்புகளுக்கு இடையே ஆன வித்தியாசத்தை விளக்கி

 

"நீங்க உங்க வேலைய பாருங்க பத்து நிமிஷத்துல சமையல் தயார் ஆயிடும் ..." என்றாள் மென் புன்னகையோடு .

 

 அவளிடம் இருந்து குழந்தையை அள்ளிக் கொண்டு கொஞ்சிய படி வெளியேறியவனின்வெள்ளந்தி முகம் தற்போதும் அவள் மனதில் நிரம்பி வழிய 

 

" லட்சுமிம்மா, மதியம் ஒரு மணிக்கு சாப்பாடு அனுப்பினா போதுங்களா ..." என்ற சமையல் ஊழியர்  சிவகாமியின் குரல்அவளை நிகழ்காலத்திற்கு இழுத்து வர,

 

"சரி..... அனுப்பிடுங்க  ..." என்றாள் தடுமாறி. 

 

அப்போது சிவகாமியை பார்க்க அவளது கணவன் வந்திருப்பதாக தோட்டக்காரன் வந்து கூற,

 

"ஏன் அந்த ஆள உள்ள விட்ட ... உனக்கு ஒரு முறை சொன்னா மண்டையில ஏறாதா ... இனிமே அந்த ஆள உள்ள விட்ட நடக்கிறதே வேற ... அந்த ஆள பாக்க விரும்பலன்னு  போய் சொல்லு ....." என கோபத்தோடு படபடத்து விட்டு சென்ற சிவகாமியை, பார்வையால் தொடர்ந்தவள்,

 

"அக்காஏன் உங்க வீட்டுக்காரர் மேல இவ்ளோ கோவம் ..." என்றாள் லட்சுமி ஆதங்கத்தோடு.

 

"அந்த ஆள் எல்லாம் மனுஷனே இல்லம்மா மிருகம்..”

 

கேள்வியாய்  லட்சுமி சிவகாமியை உற்று பார்க்க ,

 

"என் 15 வயசு பொண்ணுஅஞ்சு மாசத்துக்கு முன்னாடி கிணத்துல குளிச்சு தற்கொலை பண்ணிக்கிச்சும்மா ..."

 

லட்சுமி அதிர்ந்து நோக்க ,

 

"அதுக்கு காரணம் அந்த ஆள்தான் ... என் பொண்ணு சிவப்பா உங்கள மாதிரியே லட்சணமா அழகா இருக்கும்மா... அது நின்னா தப்பு உக்காந்தா தப்புன்னு தொட்டதுக்கெல்லாம்  சந்தேகப்பட்டு அவளை சாகடிச்சிட்டான் இந்த படுபாவி .... வயசு பொண்ணு அழகா இருந்தா வாலிப பசங்க சுத்த தான் செய்வானுங்க ....எவனோ ஒருத்தன் லவ் பண்றேன்னு பின்னாடி வந்த ஒரே காரணத்துக்காக  சொந்த பொண்ணோட படிப்ப நிறுத்துனது மட்டும் இல்லாம, வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தையால அவளை ஏசி ஏசியே தற்கொலை பண்ணிக்க வச்சிட்டாம்மா.... சண்டாளன் ...

 

நான் என் பொண்ணு கிட்ட  அப்பன் வார்த்தையை பெருசா எடுத்துக்காதே... எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு... அடுத்த வருஷம் நல்ல பள்ளிக்கூடமா பார்த்து சேர்த்து விடறேனு எவ்வளவோ சொன்னேம்மா... அதுகாட்டியும்  இப்படி ஒரு முடிவு எடுப்பானு எதிர்பார்க்கலம்மா ...."

 

 

" சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அக்கா ... 90 சதவீதம் உங்க வீட்டுக்காரர் மேல தப்பு இருந்தாலும்  10% உங்க பெண்ணோட நல்லதுக்கு நினைச்சு கூட அவர் அப்படி பேசி இருக்கலாம் இல்ல ...."

 

 

"ஐயோ போம்மா நீ வேற.... அந்தாளுக்கு பொண்ணு மேல மட்டுமில்ல யார் மேலயுமே  அக்கறை கிடையாது .... தண்ணி, தம்மு , குட்டினு எல்லா பழக்கமும் உண்டு .... அவனை மாதிரியே இருக்கிற ஒரு கெழட்டு  பொறம்போக்குக்கு என் பொண்ணை இரண்டாந் தாரமா  கட்டி வைக்க தான் இல்லாத பொல்லாத காரணத்த சொல்லி படிப்பை  நிறுத்தி இருக்கான்னு அப்புறம் இல்ல தெரிஞ்சது ....

 

ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு முந்தி எனக்கு உடம்புக்கு முடியலனு என்னைய பாத்துக்க வந்த என் தங்கச்சியை கூட அந்தாளு விட்டு வைக்கல .... அவ பத்ரகாளியா மாறி இந்த ஆள எங்க தெரு ஜனங்களுக்கு முன்னாடி செருப்பாலயே அடிச்சிட்டு போனா... அவ்ளோ அசிங்கப்பட்டு அவமானப்பட்டும் அந்த ஆளு திருந்தல .... என் பொண்ணு இறந்து அஞ்சு மாசம் ஆவப்போகுது ...  பார்த்து பார்த்து வளர்த்த பொண்ணு எமனுக்கு தூக்கி கொடுத்துட்டேனேனு நித்தம் நித்தம் தூக்கம் வராம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன் .... ஒரு சமயம் தற்கொலை பண்ணிக்கலாமானு கூட தோணிடுச்சு  ... நம்ம அங்காளம்மன் கோவில்ல இருக்கிற பூசாரியை கூப்பிட்டு என் பொண்ணுக்கு  படையல் போடும்போது அவர்கிட்ட சொல்லி அழுதேன் ... தற்கொலை பண்ணிக்கிறது ரொம்ப தப்பும்மா.... கஷ்டமோ நஷ்டமோ எடுத்த பிறவியை நேர்மையா வாழ்ந்து முடிச்சிடுனு என்னென்னவோ  சொன்னாரு... அவர் சொன்னது சரியா பட்டுச்சு ... அதனாலதான் இந்த  உடம்புல உசுர  வச்சுக்கிட்டு இருக்கேன் ....

 

ஆனா பொண்ணு செத்துப் போய் அஞ்சு மாசம் கூட ஆகலஅந்தாளுக்கு படுக்கை சுகம் கேட்குதம்மா ..... கலியாணம் முடிச்ச நாளிலிருந்து அந்த ஆளால  எந்த வகையிலும் நான்  சொகப் பட்டதே கிடையாது ... என் ஒரே பொண்ணுக்காக வேண்டி அந்தாளோட பல்ல கடிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருந்தேன் ...

 

இப்ப என் பொண்ணும் போய் சேர்ந்துட்டா ...

 

அவ போனதுக்கு பொறவு என் மனசு ரெம்ப ரணமா இருக்கும்மா... என்னால அந்த ஆளோட ஆசைக்கு சம்மதிக்க முடியல அதனால நித்தமும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறான் .... 

 

பொண்ணு போன வலி ஒரு பக்கம் ... உடம்பெல்லாம் அடி வாங்கின ரணம் ஒரு பக்கம் .... என்னால அந்த ஆளோட வாழ முடியல ... அதான் பெரிய ஐயாகிட்ட பேசி, இங்க வந்து முழுசா  தங்கிட்டேன் ..."

 

என்று  உடல் குலுங்கி அழுதவரை பார்க்க பார்க்க பரிதாபமாக இருந்தவளுக்குஉடனே தன் கணவனைப் பற்றிய சிந்தனைகள் சிந்தையில் விஸ்தாரமாக விரியத் தொடங்கின.

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள்....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. So sad to read sivakamy story. Now our Lakshmi would realise what kind of husband ram is. His only draw back his affection for his mother and sister. SisterNonrealised that. And lakahmi

    ReplyDelete
  2. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  3. Super 👍👍👍👍👍👍🥳🥳🥳🥳🎆🎆🎆🎆🎆🌈🌈🌈🌈🌟🌟🌟❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐

    ReplyDelete

Post a Comment