ஸ்ரீ-ராமம்-41

அத்தியாயம் 41

 

வீரா, தன் குடும்பத்தினரோடு காரில் புறப்பட்டு சென்றதை  சாளரத்தின் வழியே ஒருவித ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளை  செல்வராணி நெருங்கி,

 

"பார்க்கவும் பழகவும் ரெம்ப நல்ல மாறியா இருக்காரு ..." என வழக்கம் போல் படபடக்க,

 

"அப்பத்தா, அவரு கெளம்பும் போது  உன் கிட்ட வந்து என்னமோ பேசினாரே .... என்ன பேசினாரு...." என்றாள் ஸ்ரீப்ரியா ஆர்வத்துடன். 

 

"உன் ஃபோன் நம்பரை கேட்டாரு..."

என்றதும் அவளுள் ஒரு சிறு படபடப்பு உருவாகி அடங்க, அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பொழுதுகைபேசி எண்களை பரிமாறிக் கொள்ள தவறிவிட்டதால்,  கிளம்பும் போது பாட்டியிடம் கேட்டிருக்கிறான் என புரிந்து கொண்டவள்,

 

" கொடுத்தியா அப்பத்தா..." என்றாள் அவசரமாக. 

 

"இல்லையே... எனக்கு உன் போன் நம்பர் நெனப்புல இல்லன்னு சொல்லிட்டேன் ..... உடனே என் போனை கேட்டாரு...  சார்ஜ்ல இருக்குனு சொன்னேன் ... அவரு ஃபோனும் கார்ல சார்ஜ்ல வச்சுட்டு வந்துட்டாராம்...  கடைசில வேற வழி இல்லாம, என் போன் நம்பரை சொல்ல சொன்னாரு .... சொன்னேன் ... உடனே போயிட்டு வரேன் பாட்டினு  கிளம்பிட்டாரு..."  என்றார் செல்வராணி வெள்ளந்தியாக .

 

அது எப்படி..... ஃபோன் நம்பரை கேட்ட மாத்திரத்துல நினைவுல வச்சுக்க முடியும் ... என தனக்குள்ளே உற்சாகம் வடிந்தவளாய் பேசிக் கொண்டவளுக்கு தெரியாது, அவளவன் அனாயாசமாக 15 இலக்க எண்கள் வரை செவி வழி செய்தியாக நினைவில் வைத்துக் கொள்வான் என்று.

 

"கண்ணுஎன் போன் என் ரூம்ல  இருக்குது... போய் எடுத்து உன் கூடவே வச்சுக்க... எப்ப வேணாலும் அவரு போன் பண்ணலாம்... " 

மூத்தவள் அவ்வளவு சொல்லியும், இளையவளுக்கு தன்னவனிடம் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கை துளி கூட இல்லாமல் போக, நகர மறந்து நின்றவளிடம்

"போ ஆத்தாஎன்ற வூட்டுக்காரு என் கூட பேசின மாறி, அந்த தம்பிக்கும் உன் கூட பேசணும்னு நிறைய ஆசை இருக்கு... வூடு போய் சேர்ந்ததும் பேசுவாப்ல ...சரியா ..." என்றவரின் அனுபவ அறிவை உள்வாங்கிக் கொள்ளாமல் வெறும்  நப்பாசையோடு  சிட்டுக்குருவி  போல் தாவி குதித்து அறை நோக்கி ஓடினாள். 

 

அப்போது எங்கிருந்தோ , வைரமுத்துவின் வரிகள், ஏ.ஆர் ரகுமான் இசையில் மிதந்து வந்து அவள்  காதுகளை நிறைக்க, ஒரு கணம் இமைக்க மறந்து உறைந்து நின்றாள் மங்கை ....

 

சின்ன சின்ன நட்சத்திரம்  பறிக்க வந்தாய் இந்த வெண்ணிலவை வெண்ணை பூசி விழுங்கி விட்டாய்....

 

அதிவீரா உயிரை உயிரால் தொடு வீரா....

 

அதிவீரா....  உயிரை உயிரால் தொடு வீரா....

 

உடனே அந்த வரிகளை சன்னமாக ரசித்து  பாடிக்கொண்டேசெல்வராணியின் பொத்தான் உள்ள கைபேசியைதன் கைகளில் பொத்தி எடுத்துக் கொண்டாள் தன்னவனின் அழைப்பை எதிர்பார்த்து. 

 

திரும்பி போகும் போது தானே காரை ஓட்டுவதாக கூறி சத்தியனிடமிருந்து  உற்சாகத்துடன்  சாவியை பெற்று, காரை  லாவகமாக செலுத்திய வீராவின்  சிந்தையில் அவனவள் உதிர்த்த அழகான  புன்னகையே அலை அலையாய் வந்து போக, ஒருவித உற்சாகத்துடன் எஃப் எம் ரேடியோவை தட்டினான். 

 

ஓ...... ப்ரியா ப்ரியா ...

என் ப்ரியா ப்ரியா ....

ஏக்கம் என்ன பைங்கிளி ...

 

என எஃப் எம்மில் ஒலிக்க , காரின் பின்புறம் அமர்ந்திருந்த தாய் தந்தை  அவனை ரியர் வியூ கண்ணாடி வழியே பார்ப்பது போல் ஒரு பிரம்மை தோன்றகுறிப்பாக அருகில் அமர்ந்து இருந்த சத்யன் அவனையே உற்றுப் பார்ப்பதை போல் உணர்ந்தவன் உடனே இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்ள வேறொரு  எஃப்எம் சேனலுக்கு  மாறினான்.

 

அங்கு ...

 

ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா...

ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ...

 

மீண்டும் மற்ற மூவரும் ஆச்சரியத்தோடு அவனையே பார்க்க, மீண்டும் அவன் வேறொரு  எஃப் எம் சேனலுக்கு மாற்ற,

 

அங்கும்,

 

ஓ ப்ரியா ....ஒ ப்ரியா....

ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே ....

 

என்ற பாடல் ஒலிக்க, இம்முறை மற்ற மூவரோடு வீராவும் ஆனந்தம் கலந்த அதிர்ச்சியில் உறைந்து தான் போனான்.

 

"ஏன்டா , எங்க திருப்பனாலும் ஒரே  பிரியா பாட்டாவே இருக்கே ...." என அகல்யா ஆச்சரியமாக கேட்க,

 

"என்னமோ நான் எல்லா சேனல்காரன் கிட்டயும் சொல்லி ப்ரியா பாட்டு போட சொன்ன மாதிரியில்ல சொல்ற  .... அதுவா வந்தா நான் என்ன பண்ண  ..." என்றான் வீரா உள்ளுக்குள் பொங்கி எழும் உல்லாசத்தை மறைத்து.

 

"ஏம்பா உனக்கு பொண்ணு புடிச்சிருக்கு இல்ல ..." பொன்னம்பலம் வெகுளியாய்  கேட்க,

"துரைக்கு பொண்ணு புடிச்சதால தான் , 32 பல்லையும் காட்டி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வந்திருக்கான்  ..." என்ற சத்யன்,

 

"எங்க இந்த பொண்ணையும் பார்க்க வராம இழுத்து அடிப்பானோனு  நினைச்சேன் .... நல்ல வேளை  பொண்ணு பாக்க வந்ததோட இவனுக்கு பொண்ணும் பிடிச்சது நிம்மதியா போச்சு ...." என முடித்தான்.

 

"ஒரு விஷயத்தை கவனிச்சிங்களா, அவங்க வீட்ல அம்மையப்பனை தாண்டி யாருமே பேசல ..." என்ற பொன்னம்பலத்திடம்,

 

"நம்ம வீட்ல நம்ம அம்மாவை தாண்டி வேற யாருமே பேசலயே ..." என்றான் சத்யன் உபரி தகவலை கொடுத்து. 

 

"கரெக்ட்  சத்யா... அந்த அம்மா( ஸ்ரீபிரியாவின் தாயார்)  வாயவே தொறக்கல .... நம்ம வீட்டுல உங்க அம்மா வாயவே மூடல ..."--- பொன்னம்பலம். 

 

இதைக் கேட்டதும் இரு மைந்தர்களும் குலுங்கி நகைக்க,

 

"பாண்டியாஅந்த பிரியா அவங்க அம்மா மாதிரியே அமைதியோ ..."--- அகல்யா. 

 

இந்த கேள்வியை  சற்றும் எதிர்பார்க்காத வீரா 

 

"ரொம்ப அமைதி ... கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் சொன்னா " என்றான் பொங்கி எழுந்த சிரிப்பை மறைத்து.

 

"உங்க அம்மாவுக்கு அவ கவலை .... மருமக வாய் பேசா அப்பிராணியா வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறா... ஆனா அம்மையப்பன் உன் அம்மா பேசறதை பார்த்துட்டு பையன் வீட்டுல அம்மா மட்டும்தான் பேசும் போல , மத்த மூணு பேரும் வெறும்  மிச்சர் பாய்ஸ் தான்... மிச்சர் சாப்பிட மட்டும் தான் வாய தொறப்பாங்கன்னு நெனச்சிருப்பாரு ...." என பொன்னம்பலம் முடிக்க, அதற்கு மற்ற மூவரும் வெடித்து சிரித்தனர். 

 

"கல்யாணத்துக்கு அதிக நாள் இல்லாததால இந்த வார கடைசில பொண்ணுக்கு புடவை , தாலிக்கொடி வாங்கணும் ...." என அகல்யா முடித்தது தான் தாமதம் 

 

"11 சவரனுக்கு ஒரு குந்துமணி குறைய கூடாது  என் பொண்டாட்டிக்கி..." என அவசரமாக வீரா வாயை விட ,

 

" எதே பொண்டாட்டியா ...." --- சத்யன்.

 

"ஆமா ... அவதான் என் பொண்டாட்டினு பக்காவா மனசுல ஃபிக்ஸ் பண்ணிட்டேன் ..."

 

"அடேய்இந்த பொண்ணை பொண்ணு பாக்க கூட வர மாட்டேன்னு எவ்ளோ அக்கப்போர் பண்ண...இப்ப என்னடான்னா  இப்படி அந்தர்பல்ட்டி அடிக்கிற ..." என்ற சத்யனின் அலைபேசி ஒலிக்க , தன் மனைவி பிரபா என்பதை ஒளித்திரையில் கண்டு காதுக்கு கொடுத்தவனிடம், எடுத்ததும் 

 

"ஏங்க பொண்ணு பாக்க நல்லா இருக்குதா ..." என்றாள் பிரபா ஆர்வத்தோடு.

 

"கூறு கெட்டவளே .... இந்த கேள்வியை உன் கொழுந்தன் கிட்ட கேளு டி ... அவன் தான் பொண்ணு பார்க்கவே வராம அலப்பறை பண்ணவன்..." வழக்கம் போல் சத்யன் துர்வாச முனிவர் மோடுக்கு மாற ,

"அண்ணேபோனை குடு நான் அண்ணிகிட்ட  பேசறேன் ..."  அலைபேசியை பெற்று நடந்ததை ஒன்று விடாமல் அவன் விவரிக்க, எதிர்முனையில் பேசிய பிரபாவின் குரல் நேரம் ஆக ஆக ஸ்ருதி அற்று போக,

 

"நல்லது தம்பி .... நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க ..." என்றவள் வேறு சில சாதாரண விஷயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள். 

 

வீட்டை அடைந்ததும்  தன்னவளுடன் பேச வேண்டும் என்ற திட்டம் போட்டவன் அதனை செயல்படுத்த தன் இயந்திர தேரை வேகமாக செலுத்த, அடுத்த நான்கரை மணி நேரத்தில் அது செவ்வனே அவனது இல்லத்தைச் சென்றடைந்தது.

 

உள்ளம் உற்சாகமாக இருந்தாலும் உடல் மிகவும் களைப்பாக இருந்ததால், ஒரு சின்ன குளியல் போட்டான.

 

செல்வராணி சொன்ன அவரது அலைபேசி எண்ணை தன் அலைபேசியில் சேமித்து வைத்திருந்தவன் அதனை தேடி அழைப்பு விட எத்தனிக்கும் போது ராம்சரணின் நினைவு வர , உடனே அவனைத் தொடர்பு கொண்டான்.

 

"நானே உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன் டா .... நீயே பண்ணிட்ட... ஸ்ரீப்ரியாவை பாத்தியா... என்ன நடந்தது அவங்க  வீட்ல ...." என்றான் ராம்சரண் ஆர்வமாக.

 

" ம்ம்ம்... பெண் பார்க்கும் படலம் ... ரொம்ப  ட்ரெடிஷனலாசினிமாவுல காட்ற மாறி நடந்துச்சு..."

 

"ஓ.... குட் குட் ... அப்புறம் அம்மையப்பன் என்ன சொன்னாரு ..."

 

"என்ன சொல்லுவாரு ... மனுஷன் முகத்துல கடுகு போட்டா, படபடன்னு வெடிக்கும் ... அந்த மாறி கொதிச்சு போய் தான் இருந்தாரு .... அவருக்கு என்னையும் எங்க குடும்பத்தையும் பிடிச்சதோ இல்லையோ.... அவங்க அம்மாவுக்கு பிடிச்சதாலவேற வழி இல்லாம கல்யாணத்துக்கு  ஒத்துக்கிட்டாருன்னு  தோணுது ..." என்று சிரித்தான் வீரா.

 

"டேய் நீ அவரையா  கட்ட போற ... அவரு பொண்ணை  தானே கட்ட போற அவர் எப்படி இருந்தா உனக்கென்ன .. விட்டு தள்ளு ....  ஸ்ரீப்ரியாவோட பேசினியா அதை சொல்லு ..."

 

 "ம்ம்ம், ரெண்டு பேரும் பேசினோம் டா ..." என ஆரம்பித்தவன் அங்கு நடந்த அனைத்தையும் ஒரு வழியாக சொல்லி முடித்துவிட்டு,

 

" சரண்அவ என்னை  ராம்னு கூப்ட்டா டா .... கேட்கவே எவ்ளோ நல்லா இருந்துச்சு தெரியுமா...  ஐ அம் இன் செவன்ஸ் ஸ்கை .... ஐ அம் இன் லவ் .. ஐ அம் ...."

"நிறுத்து நிறுத்து  விட்டா பேசிக்கிட்டே போவ .... புதுசா சரக்கு அடிக்கிறவனும், புதுசா லவ் பண்றவனும் ஒன்னு தான் ... வாய்க்கு வந்தபடி உளருவாங்க..."

 

சரியா சொன்ன .... லவ் பண்ணி கல்யாணம் பண்றது விடகல்யாணம் பண்ண போற பொண்ணை லவ் பண்றது ரொம்பவே நல்லா இருக்கு ... எ பியூட்டிஃபுல் ஃபீல் யூ நோ  ..." என வீரா சிலாகிக்க,

 

" என்ஜாய் மேன் ...." என்று வாழ்த்து தெரிவித்த ராம் சரண்  மேற்கொண்டு சிலவற்றை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

உடனே வீரா செல்வராணியின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்கஅது அடித்து அடித்து அடங்கிப் போனது.

 

"ம்ச்.... காம் ஆன் .... பிக் அப் மை கால் பேபி  ..." என்றான் நிச்சயம் தன்னவள் செல்வராணி மூலம் நடந்ததை அறிந்து கொண்டு அவனது அழைப்பை எதிர்பார்த்து அவரது கைபேசியை கையில் வைத்திருப்பாள் என்று.

 

ஆனால் தொடர்ந்து இரு முறை அழைத்தும்அழைப்பு அடித்து அடித்து அடங்க, வேறு வழி இல்லாமல் அவளே அழைப்பாள் என்று விட்டு விட்டு  அலுவலகப் பணியில் மூழ்கிப் போனான். 

 

வீராவுடன் பேசி முடித்து அழைப்பை துண்டிக்கும் போதுராம்சரணின் பார்வை சுவரில் மாட்டியிருந்த தன் குடும்பப் புகைப்படத்தின் மீது விழசற்று முன்பு அமைதியை தத்தெடுத்திருந்த  மனம்மீண்டும் புதை குழியில் சிக்கிக் கொண்டது போல் வழித்தடம் தெரியாமல் திணற தொடங்கியது.

 

எவ்வளவு யோசித்தும்அவள் அவனை நிராகரித்ததற்கான காரணம் கிடைக்காமலே போக  காரணம் தெரியாத நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து துவண்டு போனான் அந்தக் கணவன். 

 

சற்று முன் வீரா பேசியதை நினைத்துப் பார்த்தவன் தன் மனையாள் தன்னை எவ்வாறு அழைப்பாள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடும்  பொழுது தான் ஒரு விஷயம் வெட்ட வெளிச்சம் ஆகிப்போனது .

 

அதாவது அவன் மனைவி ஸ்ரீலட்சுமி அவனை பெயரிட்டே அழைத்ததில்லை என்று. 

 

அதிகம் பேசமாட்டாள் ... கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிப்பாள், அதில் எங்காவது  'ங்க' என்ற விகுதிகள் வரும்மற்றபடி அவள் அவனை செல்லப் பெயரிட்டோஏதாவது ஒரு உறவு முறையை கூறியோ, அல்லது அவனது பெயரை சுருக்கியோ அழைத்ததே இல்லை என்பது தெரிய வர,

 

மனம் ஒட்டாமல் கடமையே என்று  வாழ்ந்திருக்கிறாள் போலும்ஆதலால் தான்  எளிதாக விவாகரத்துக்கு சம்மதித்து விட்டாள் ....

 

நான் தான் பைத்தியக்காரன் ... லட்சுமி லட்சுமி என்று உருகி இருக்கிறேன் ....  என்று வாய்விட்டு கூறி துடித்தான்.

 

ஓரிரு கணம் அந்த உணர்வில் உறைந்திருந்தவனுள் வேறு சில காட்சிகள் நிழற்படமாய் விரியத் தொடங்கின ...

 

விபரம் தெரிந்த நாட்களில் இருந்து விடுதி வாசம் என்பதால்அவனே பெரும்பாலான வேலைகளுக்கு தன்னை பழக்கி வைத்திருந்தான்.

 

என்றுமே அமர்ந்த இடத்திலிருந்து இது வேண்டும் அது வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கும் பழக்கத்தை அவன் மேற்கொண்டதே இல்லை. 

 

அப்படி அவன் தன் தேவையைக் கேட்க நேர்ந்தாலும் அதை உணர்ந்து அதற்கு கற்பகமோ, அருணாவோ செவி சாய்த்ததும் இல்லை .

 

இப்படியான வாழ்க்கையை தான் திருமணத்திற்கு முன்பு வரை அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

 

எப்பொழுது ஸ்ரீலட்சுமி அவன் வாழ்க்கையில் மனைவியாக அடி எடுத்து வைத்தாளோ, அந்தக் கணத்திலிருந்து அவன் தன் தேவையை சொல்வதற்கு முன்பாகவே குறிப்பறிந்து  நடந்துக்கொள்வாள்.

 

அப்படித்தான் ஒரு நாள் இரவு  மிகுந்த தலைவலியோடு  சிட் அவுட்டில் அமர்ந்தபடி  மடிக்கணினியில்  மிகுந்த மன அழுத்தத்தோடு அவன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

சுடச்சுட ஆவி பறக்க காபி பருகினால்இதமாக இருக்கும் என்று தோன்ற, அதை செயல்படுத்த எண்ணி  சிறு தயக்கத்தோடு  மனைவியை தேடியவனுக்கு அவள்  குழந்தையோடு மல்லு கட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

 

இரவு வேளையில்அவளை சிரமப்படுத்த மனமில்லாமல், மீண்டும் தன் பணியில் அவன் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் போது அவன் தலை கேசத்தில் திடீரென்று பஞ்சு விரல்கள் தாண்டவமாட, அதிர்ந்து பார்த்தவனின் அருகில்கையில் ஆவி பறக்கும்  காபி யோடு  , கண்களில் அன்பு,பாசம்  காதலின் கலவையை காட்டியபடி  நின்று கொண்டிருந்தாள் அவன் மனைவி. 

 

"ரொம்ப தலை வலிக்குது போல..." என அவன் நெற்றியில் லேசான அழுத்தம் கொடுத்தவள்

 

" சூடா காஃபி குடிங்க ... சரியாயிடும் ..."  என்றாள் வாஞ்சையாக.

 

அவள் சொன்னது போலவே, அவள் கொடுத்த அருமையான காபி, அவன் தொண்டைக் குழியில் இறங்கிய பத்தாவது நிமிடத்தில் அந்த மாயாஜாலத்தை செய்யபார்வையால் அவளை அழைத்தவன், அமர்ந்தபடியே அவள் இடையை கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்தான்.

 

அந்த அணைப்பில் காதல் இல்லை காமம் இல்லை.  மாறாக தாய்மை இருந்தது.

 

ஓரிரு கணம் நீடித்த அந்த அணைப்பு கொடுத்த வெம்மையின் சுகத்தை சொற்களால் விவரிக்க முடியாது. 

 

அது மட்டும் அல்ல ...

 அதிக எண்ணெய் பயன்படுத்தாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் கீரை வகைகள் , காய்கறிகள் , வாழைத்தண்டு வாழைப்பூ ஆகியவற்றை கொண்டு சமைத்து கொடுத்து   அவன் வெளியில் சாப்பிடுவதை 95 சதவீதத்திற்கு மேல் குறைத்தாள்.

உணவு மட்டுமல்லஅவனது உடை, ஊர் பயணம்  ஆகியவற்றுக்காகவும் பார்த்து பார்த்து மெனக்கெட்டாள்.

அம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவளிடம் காதலை தாண்டித் தாய்மையை தான் அனுபவித்திருக்கிறான்...

 

மனையாளை வெறும் உடல் தேவைகாக மட்டும்  தேடுகின்றான் என்றால் அதனை  இயந்திரகதியில்  தணித்துக்கொள்ள பல இடங்கள் இருக்கின்றன ..

 

ஆனால் அவன் மனமோ உணர்வு பூர்வமான இணைப்போடு  பயணித்து உச்சக்கட்ட  உணர்ச்சியில் முடியும் புணர்ச்சியை  எதிர்பார்க்க, அது அவன் மனையாளை தாண்டி வேறு எங்குமே கிடைக்காதே ... என்கின்ற  நிதர்சனம் உரைத்ததும் மனம் வெதும்பி போனான் அந்த மன்னவன். 

 

அவனும் சராசரி ஆண்மகன் தான் .. அவனுக்கு காதலும் தேவை காமமும் தேவை என்றாலும்காலநேரம் பார்த்தே கலப்பில் ஈடுபடுபவன் ....

 

கடந்த முறை  அவன் மனையாட்டி மாசமாக இருக்கும் போதுமன்மதனாக நெருங்கும் ஆசை அவ்வப்போது துளிர்த்தாலும்அவள் உடல் நிலையை மனதில் கொண்டு மாசக்கணக்கில் அவன் மதன லீலைகளுக்கு விடுப்பு கொடுத்திருந்தவன்....

 

அவனுடைய தற்போதைய தேவை கூட, கர்ப்பவதியாக இருக்கும் மனையாளின் அண்மை .... அவளது வாசம் ...  அந்த வாசத்தை  நெருக்கமாக சுவாசிக்கும் எண்ணம்... மட்டுமே ....

 

பொதுவாக மனதிற்குப் பிடித்தவர்களை மேம்போக்காக கட்டி அணைத்துமுத்தமிட்டு கைவளைவில் வைத்து கொண்டு  கதை பேசும் தருணங்களை  ஆங்கிலத்தில் 'ஸ்கின் டச்' என்பார்கள் ....  

 

அது உடல் ரீதியான உணர்வினை  தூண்டுவதை காட்டிலும் , உளவியல் ரீதியான நெருக்கத்தை அதிகரிக்கும்  தன்மையுடையது ...

 

ஆத்மார்த்தமான துணையோடு அவ்வாறு  கழிக்கும் தருணங்கள்தேக சுகத்தில் கிடைக்கும் இன்பத்தைக் காட்டிலும் , பல மடங்கு உணர்வுபூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் இன்பத்தைக் கொடுக்க வல்லது ... என்பதை ஏற்கனவே ஓராண்டு காலம் உள்வாங்கி சுகித்தவன் அல்லவா ... அதற்கு தான் அவன் மனம் தற்போது தவியாய் தவித்துக் கொண்டிருந்தது  ....

 

திருமண உறவோநட்போ எதுவானாலும் பிரிந்து வந்தும் அவர்களுக்காக ஆழ்மனம் ஏங்கித் தவிக்குமானால்  நிச்சயம் அந்த உறவில் உண்மை இருக்கும் ....  என அவன் உள்ளுணர்வு குட்டி சொல்ல, மனையாளைப் பற்றி ஒரு  முடிவுக்கு வர முடியாமல் திணறிப் போனான்.

 

சுவரில் சிரித்துக் கொண்டிருந்தவளின் நிழலை நெருங்கி,

 

"நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைல  ஒருத்தருக்கு ஒருத்தர் 100 சதவீதம் உண்மையா இருந்திருக்கோம்.... ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தோம் ...

 

அதுல நம்ம ரெண்டு பேருக்குமே சந்தேகம் இல்ல.. ஆனா திடீர்னு  என்ன டி ஆச்சு உனக்கு ...

 

உலகத்துலயே எந்த காரணத்துக்காக டிவோர்சுனு தெரியாமலே டிவோர்ஸ் கொடுத்தது நானா தான் இருப்பேன் ...

 

ஊர் நாட்டுல குடிகாரன், பொம்பள பொறுக்கி , சோம்பேறி,   குடும்பத்தை பார்க்காதவனு எத்தனையோ பேர் இருக்கான் ... 

 

அப்படியாடி  நான் இருக்கேன்... உன்னை எப்படி எல்லாம் பார்த்துக்கிட்டேன் ... நீயே கதின்னு இல்ல  சுத்தி சுத்தி வந்தேன் .. காரணமே சொல்லாம இப்படி நட்டாத்துல நிறுத்திட்டு போயிட்டியே ...  " என்று குமுறியவனின்  பார்வை தன் பெண் குழந்தையின்  மீது படிய, மனையாளின் மீதான கோபம் கரையைக் கடந்தது. 

 

" உனக்கு ஒன்னுக்கு மூணு குழந்தைகளை குடுக்க நான் வேணும் ... ஆனா  புருஷனாவும்என் புள்ளைகளுக்கு தகப்பனாவும் நான் வேணாம் ... என்ன நியாயம் டி இது ... இதுக்கெல்லாம் கூடிய சீக்கிரம் முடிவு கட்றேன் ... பாரு ... "

 

என தன் ஆண்மையின் கர்வத்தை எண்ணி கொதித்துக் கொண்டிருந்தவனிடம் 

 

இருந்த இடத்திலிருந்து கூப்பாடு போடுவதால்  ஆகப்போவது ஒன்று இல்லை ... ஊட்டிக்கு போ... நீ தொலைத்த உயிர்ப்பும் உணர்வும் அங்கு உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது ...

என உள் மனம் ஊக்குவிக்க, உடனே  தன் தந்தை மற்றும் மனையாளின் மீது இருந்த கோபத்தால் அதனை நேரடியாக செயல்படுத்த விரும்பாமல் மாற்று வழியில் செயல்படுத்த முடிவு கட்டினான். 

 

அதற்காக வேண்டி  தீவிர சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுக்கு  மேலும்  சில விஷயங்கள் புதிதாக தோன்றி அவன்  சிந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கின.

 

அவன் கடைசியாக அவனவளை ஸ்ரீனியின் இல்லத்தில்  சந்தித்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு கிட்டத்தட்ட ஒரு வார காலமான நிலையில் தன் தந்தை ரங்கசாமி இந்தியா திரும்பியது

ஸ்ரீலட்சுமியை குழந்தையோடு ஊட்டிக்கு அழைத்துச் சென்றதெல்லாம்  கற்பகம் அருணாவை சென்றடையவில்லை  என்பதை அவர்களது சில நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொண்டவன் தானும் தன் பங்கிற்கு அதைப் பற்றி பேசாமல்  விட்டு விட்டான். 

 

கற்பகம் அருணாவை பொருத்தமட்டில் ரங்கசாமி  இன்னமும் வியாபார சுற்று பயணத்தில்  இருப்பதாகத்தான் எண்ணிக்கொண்டிருக்க, அதனை புரிந்தும் அவர்களை ஆழம் பார்க்க எண்ணி அடக்கி வாசித்தான் மைந்தன். 

 

முன்பெல்லாம் அவன் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினால் போதும்அவனிடம் இரவு 11 மணி வரை  கதைக்க தாய்க்கும் மகளுக்கும் ஏகப்பட்ட கதைகள் இருந்தன ...

 

ஆனால் இப்போது அவனது வரவை இருவருமே கண்டு கொள்வதில்லை...

 

அவன் மனைவியாள் வீட்டை விட்டு சென்ற முதல் ஒரு மாதம்  மட்டும்  தாயும் மகளும் அவன் மேல் அக்கறையாய் இருப்பது போல் வேஷம் கட்டினர் ...

 

இப்போது லட்சுமி சென்று மாதக்கணக்கானதால் இனிமேல் அவள் திரும்பப் போவதில்லை என முடிவெடுத்து  கட்டிய வேஷத்தை கலைத்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்  ...

 

அதேபோல் அவன் மனைவியாள் இருக்கும் போதெல்லாம் அவன் படுக்கை அறைக்கு வந்து ஏகபோக ரகளையில் ஈடுபடும் அருணாவின் குழந்தைகளும் தற்போது வருவதில்லை ...

 

தாயையும் மகளையும் சரியாக இனம் கண்டு கொண்டதால் தான்தான் ஊர் திரும்பியதையும், லட்சுமியை  ஊட்டிக்கு அழைத்துச் சென்றதையும் தன் தந்தை தெரிவிக்கவில்லை போலும் ...என மிக தாமதமாக புரிந்து கொண்டவனுக்கு  மனைவியாள் உடன் இருக்கும் போது புரியாத, உணராத பல விஷயங்கள்  தற்போது விளங்கத் தொடங்கின. 

 

தன் மனைவியாள் வீட்டை விட்டு வெளியேறியதற்கு தன் தாய் தங்கை தான் காரணம் என அறிந்திருந்தாலும் , இத்துணை காலம் அந்தக் காரணத்தை வெகு  இலகுவாக எடை போட்டிருந்தான்.

 

மனையாள் உடனான விவாகரத்தை தொடர்ந்து தந்தை எடுத்த அதிரடி முடிவுதாய் தங்கையிடம் காணப்படும் தீவிர  மாற்றங்கள்  ஆகியவை அவனை ஆழ்ந்து சிந்திக்க வைக்க , தன்னவள் தன்னைப் பிரிந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் இறங்கினான், எந்தக் கடவுளின் மீது அருணா பொய் சத்தியம் செய்தாளோ, அதே கடவுளே அதற்கான முதல் அடியை எடுத்து வைத்து  அவளை அவனுக்கு  காட்டிக் கொடுக்கப் போவது தெரியாமல்.

 

 

ஸ்ரீ-ராமம் வருவார்கள் ....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Comments

  1. Wow superb akka very nice 👍👍👍 waiting for next epi

    ReplyDelete
  2. Very interesting sis... asusual ur way of writing semma. Take care sis.

    ReplyDelete
  3. Very good ud sis...avangaloda divorce ku problem avanga native Lakshmi kulikumbothu yaruo pathamari crunched antha problem edum irukumo

    ReplyDelete
  4. Supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete

Post a Comment