அத்தியாயம் 39
மதுரை விமான
நிலையத்தில், காத்திருப்போர்
பகுதியில், அம்மையப்பன் மிகுந்த பரபரப்பாக, மகளின் வரவை எதிர்பார்த்து பார்வையை இடவலமாக செலுத்திக் கொண்டிருக்கும்
போது ,
“அம்மையப்பா,
அதோ பாரு பாப்பா வருது..." என்றார் உடன் நின்று கொண்டிருந்த அம்மையப்பனின் நீண்ட கால
நண்பனும் தொழில் பங்குதாரருமான சந்தானம்.
அவர் காட்டிய
திசையில் ஸ்ரீப்ரியா பயணப் பொதிகளை தள்ளு வண்டியில் இட்டு
தள்ளிக்கொண்டே வர, முன்பை காட்டிலும் அவள் மெலிந்திருந்ததால்
முதலில் அடையாளம் தெரியாமல் சற்று திணறியவர், மகள் நெருங்கி வர வர, அறிந்து கொண்டதற்கு அடையாளமாக வெகு லேசான
புன்னகையை முகிழ, பதில் புன்னகை பூத்தாள் பாவை.
தடுப்பு பகுதியை
தாண்டி அவள் வெளியே வந்ததும்,
"ரேவதி,
வாம்மா ..." என்றார் சற்று பெருமையும் மிடுக்கும் கலந்த
குரலில்.
"நல்லா
இருக்கீங்களா ப்பா ..." என்ற மகளை பாசத்தோடும் பெருமிதத்தோடும் விழிகளால்
அளந்தவர்,
"நல்லா
இருக்கே ம்மா... நீ எப்படி இருக்க... பயணம் எல்லாம் சொகமா இருந்துச்சா...." என்று படபடத்த படி மகளிடமிருந்து
தள்ளு வண்டியை பெற்றுக்கொண்டு கார் நிறுத்தம் நோக்கி நடக்க, பதில் அளித்தபடி அவரைப் பின் தொடர்ந்தாள் பெண் .
அவர் ரேவதி
என்று விளித்தது ஸ்ரீப்ரியாவை தான் .
அவள் பிறந்ததும்
' ரா, ரே,
ரோ ' என்ற எழுத்தில் பெயர் வைக்க வேண்டும் என
ஜோசியர் கூற, ரேவதி என்ற பெயரை தேர்ந்தெடுத்தார் மனிதர்.
பொதுவாக பெண்
குழந்தைகளை மகாலட்சுமியின் சொரூபமாக கருதப்படும் மரபு இந்துக்களுக்கிடையே உண்டு.
நான்கு தலைமுறைகளுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை என்பதால், மகாலட்சுமி தாயாரின் அவதாரப் பெயர்களில் ஒன்றான ஸ்ரீப்ரியா என்ற பெயரை அம்மையப்பனின் தந்தையான பாண்டியன் தேர்வு செய்திருக்க, அம்மையப்பனோ ரேவதி என்ற பெயரை தேர்ந்தெடுத்து இருக்க, எந்த பெயரை சூட்டுவது என தந்தையும் மகனும் முட்டிக் கொள்ளும் போது வீட்டில் ரேவதி , பள்ளி தரவுகளில் ஸ்ரீப்ரியா என முடிவெடுத்து வழக்கம் போல் நாட்டாமையாய் தீர்ப்பு சொல்லி முடித்தார் செல்வராணி .
ஆனால் இன்று வரை, அவ்விரு பெயர்களில் எந்தப் பெயரையும் அவர் பயன்படுத்தியதே இல்லை.
'கண்ணு '
'அம்மு ' என்று தான் அழைப்பார்.
ஸ்ரீப்ரியா என்ற
பெயர் தரவுகளுடன் மட்டும் தொடர, ரேவதி வீட்டு உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அழைக்கும் பெயர்
ஆகிப்போனது.
வெகு சில
மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெயரை கேட்பது , தன் மண்ணிற்கு வந்து
விட்டோம் என்ற உணர்வை வாரி இறைக்க, இனம் புரியாத இன்பம் சூழ, அதனை உள்ளுக்குள் ரசித்தபடி காரில் ஏறி பயணித்தாள்.
பயணத்தின் போது, செல்வராணியின் உடல் நிலை
குறித்து அவள் கேள்வி எழுப்ப, வழக்கம் போல் ஓரிரு
வார்த்தைகளில் அம்மையப்பன் பதிலளிக்க, உடன் பயணித்த
சந்தானமும் தன் அலைபேசியில் மூழ்கி போக, அதற்கு மேல்
வீடு வந்து சேரும் வரை அங்கு அமைதியே ஆட்சி செய்தது
எனலாம்.
ஸ்ரீப்ரியா காரை
விட்டு இறங்கியதும் சுசீலா மிகுந்த மகிழ்ச்சியோடு ஆரத்தி தட்டுடன் வரவேற்க, உடன் இருந்த செல்வராணி ஆனந்தத்தில் பேத்தியை அள்ளி அணைந்து கொண்டு உச்சி
முகர்ந்தார்.
"அப்பத்தா
, என்ன இது ... அக்கம் பக்கம் ஒரு மாதிரி பாக்கறாங்க
..." என்றாள் தாய் ஆரத்தி எடுப்பதை பார்வையால் குறிப்பிட்டு.
"அவிங்க
கிடக்காங்க.... நம்ப பரம்பரைலயே தன்னந்தனியா சீமைக்கு போயிட்டு வந்த பொட்ட புள்ள
நீ ... ஊர் கண்ணு மொத்தமா உன் மேல தான கெடக்கு
..." என்றார் பேத்தியின் கன்னம் வழித்து.
அதற்கு மேல்
விவாதம் பண்ண மனம் இல்லாதவள், மூத்த பெண்களின் செய்கையை ஏற்று முடித்தோடு அவர்களை பின் தொடர்ந்து
வீட்டினுள் செல்ல, அவளைப்
பின் தொடர்ந்து வந்த அம்மையப்பன்,
" ரேவதி,
நாளைக்கு கோயம்புத்தூர்ல இருந்து உன்னை பொண்ணு பார்க்க வாராங்க ....
இப்பவே உன் அம்மாளோட சேர்ந்து புடவை , நகை எல்லாத்தையும்
ரெடி பண்ணி வச்சிக்க..." என வழக்கம் போல் தகவல் சொல்லிவிட்டு விடை பெற,
உடனே வீராவின் முகம் வானவில்லாய் அவளுள் விரவ, உடன் ஒருவித சிலிர்ப்பும் உற்சாகமும் கூட,
" ம்ம்ம்..."
என்றாள் மென்மையாய் உணர்வுகளை வெளிக்காட்டாமல்.
அம்மையப்பன்
நகர்ந்ததும்,
"என்ன
கண்ணு, இப்படி வத்தி போயிருக்க.... கல்யாணத்துக்கு
இருக்கிற பொண்ணு தளதளனு இருக்க வாணாமா .... தோலு மட்டும் இன்னும் கொஞ்சம் வெள்ளை
ஆயிருக்குது ... மத்தபடி தலைமுடி கொட்டிப்போச்சு ஆளும் இளைச்சு பூட்ட... என்ன
வெளிநாடோ, என்ன சாப்பாடோ.... சட்டு புட்டுனு கை கழுவினு வா
... உன் ஆத்தா உனக்கு பிடிக்குமேன்னு தோசை, தக்காளி
சட்னி, பூரி மசாலா, பொங்கல்னு
அம்புட்டயும் செஞ்சு வச்சிருக்கா..." என
செல்வராணி வாஞ்சையாய் கூற
"பத்து
நிமிஷத்துல குளிச்சிட்டு வந்துடறேன் அப்பத்தா ..."
ஓட்டமும்
நடையுமாய் அறையை அடைந்தவளுள் ஆர்ப்பரிக்கும் சந்தோஷம் அலை அலையாய் கொட்ட தொடங்க,
உடனே
தன்னவனை தொடர்பு
கொண்டு பேசலாம் என்றால் , அலைபேசி எண் இல்லையே .... என்ற நிதர்சனம்
உரைக்க,
என்னை பார்க்க
ஆஸ்திரேலியா வரை வந்தவருக்கு என் அலைபேசி எண் தெரியாதா ..... என்ற கேள்வியும் உடன்
எழ,
என்னை
பார்க்கத்தான் வந்தாரா என்ற திடீர்
சந்தேகமும் முளைக்க, என்னை விட பல
படிகளுக்கு மேல் பதவி வகிப்பவர் .... அவருக்கான பணி எவ்வளவோ இருக்கும் அதை முடிக்க வந்திருப்பார்… அப்போது எதேச்சையாக என்னை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது
அவ்வளவுதான் .... என அவளுடைய வெள்ளந்தி மனம்
முடிவுக்கு வர அமைதியாகி போனாள் அணங்கு .
தாய் சுசிலாவின் அமைதி, வெள்ளந்தி தனம், எதார்த்தம் , பாட்டி செல்வராணியின் சுறுசுறுப்பு, துரு துருப்பு, தாத்தா பாண்டியனின்
தைரியம், நேர்மை , போராட்ட குணம் மற்றும் தந்தை அம்மையப்பனின் பிடிவாதம்,
கோபம் என நால்வரின் சரிவிகிதக் கலவை தான் ஸ்ரீப்ரியா.
பெரும்பாலும்
சூழ்நிலைக்கு ஏற்ப அத்தகைய குணங்கள் தலை தூக்கும் என்றாலும், சுசிலா மற்றும் செல்வராணியின்
குணங்கள் தான் அவளிடம் பிரதானமாக காணப்படும்.
குளித்து
முடித்து உணவருந்த வந்தவள், தம்பி கோபாலனை பற்றி விசாரித்துக் கொண்டே
உணவில் கவனம் செலுத்த, அடுத்த வாரம் ஷார்ஜாவிலிருந்து திரும்பி விடுவான் என தாய் சுசீலா தகவல் சொல்ல, நீண்ட நாட்களுக்குப்
பிறகு அன்புத் தம்பியை சந்திக்கப் போவதை எண்ணி மகிழ்ந்து
போனாள்.
அலுவலகத்தில்
சுழலும் நாற்காலியில் கணினிக்கு முன்பு அமர்ந்தபடி, தன்னவளை பற்றிய நினைவில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தான்
வீரா.
இந்நேரம்
மதுரைக்கு வந்திருப்பா .... போன் நம்பர் இருந்தா பேசி இருக்கலாம் ....ம்ச்.... எனும் போது அவனது அலைபேசி
ஒலித்தது.
அவன் தந்தை
பொன்னம்பலம் அழைத்திருந்தார்.
"பாண்டியா,
பெண்ணோட அப்பா கொஞ்ச நேரத்துக்கு முந்தி
போன் பண்ணி இருந்தாருப்பா... அந்த பொண்ணு ஊருக்கு வந்துடுச்சாம்... நாளைக்கு
நம்மளை குடும்பத்தோட பொண்ணு பாக்க வர சொன்னாரு..."
"சரிப்பா
..." என்றான் மென்மையாய் உள்ளுக்குள்
ஊற்றெடுக்கும் உற்சாகத்தை மறைத்து.
பிறகு
பொன்னம்பலம்
"பொண்ணை
கோவிலுக்கு கூட்டிட்டு வந்தீங்கன்னா அங்கனவே பொண்ண பார்த்துடலாம்னு சொன்னதுக்கு ,
எல்லாம் மொறையா தான் நடக்கணும் .... நீங்க எங்க வீட்டுக்கு வந்தே
பொண்ண பாருங்க ... ஆற அமர உட்கார்ந்து பேசி முடிக்கலாம்னு வெடுக்குன்னு
சொல்றாருப்பா .... நல்ல மனுஷன் தான் ஆனா பேச்சு வெட்டு ஒன்னு துண்டு இரண்டா
இருக்கு ..."
என முடிக்க, அனுபவஸ்தன் அல்லவா ..... உள்ளுக்குள்
பொங்கி எழுந்த சிரிப்பை மறைத்து
என் பொண்டாட்டிய
கல்யாணம் கட்டி என் வீட்டுக்கு கூட்டிட்டு
போறதுக்குள்ள, என்
குடும்பத்து ஆளுங்க அம்புட்டு பேரும் அந்த ஆள் கிட்ட திட்டு வாங்கிடுவாங்க போல
இருக்கே .... என மனதோடு அவன் பேசிக் கொண்டிருக்க,
"ஆபீஸ்ல
இருந்து சீக்கிரம் வந்துடுப்பா... நாளைக்கு காலையிலயே கிளம்பனும் சரியா ..."
என அவர் முடிக்கும் போது சுதாரித்து சுயம் உணர்ந்து
" சரிப்பா
..." என்றான் சந்தோஷமாய்.
விடலைப்
பருவத்து இளைஞன் போல், அவன் மனம் இறக்கை இல்லாமல் விண்ணில் பறக்க,
யார்யா இந்த
பொண்ணு பாக்குற சடங்கை எல்லாம் கண்டுபிடிச்சது ... பொண்ண பார்த்தோமா, உடனே கல்யாணம் பண்ணோமா வீட்டுக்கு
கூட்டிட்டு போனோமானு இருக்க வேணாமா....ம்ச்... ஐடியா இல்லாத பசங்க ..... என தன்னிலை
மறந்து புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு, கலந்தாய்வுக்கான
அழைப்பை அவனது காரியதரிசி நினைவுபடுத்த,
"ஓகே,
ஐ வில் பி தேர் இன் மினிட்ஸ் ..." என
உரைத்து விட்டு, கலைந்திருந்த தலை கேசத்தை கோதி சரி செய்து ,
நாற்காலியின் மேல் இருந்த கோட்டை எடுத்த
அணிந்து கொண்டு பஞ்சாய் பறந்து விட்டான்.
அன்று இரவு உணவு
உண்ணும் போது,
"சத்யா,
நாளைக்கு பொண்ணு பாக்க போகும் போது பிரபா இல்லாட்டி நல்லா இருக்காது
பா ...." என்றார் அகல்யா வீராவின் அண்ணன் சத்யனைப் பார்த்து.
“அவ அம்மாக்கு
உடம்பு சரியில்லம்மா.... நேத்து சாயங்காலம் தான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கே
வந்து இருக்காங்க .... அவ தங்கச்சி வேற சென்னை போய் இருக்கா .... என் மாமனாரும்
ஊர்ல இல்ல ... பாத்துக்க ஆள் இல்லாததால வேற வழி இல்லாம வரலைனு சொல்லிட்டா ம்மா..."
"நெஜமாலுமே
அதுதான் காரணமா ... இல்ல... உனக்கு அவளுக்கும்
ஏதாச்சும் பிரச்சனையா...."
"அம்மா,
கொஞ்சம் சும்மா இருக்கியா... எப்ப
பாத்தாலும் பிரச்சனையா பிரச்சனையான்னு கேட்டு படுத்தாத ..." என அவன்
சலித்துக் கொள்ள,
"விடு
அகல்யா, ஏதாச்சும் நீயே
கற்பனை பண்ணி பிரச்சனைய உண்டு பண்ணாத...." என பொன்னம்பலம் பேச்சுக்கு
முற்றுப்புள்ளி வைக்க, அங்கு நடக்கும் எதிலும் மனதை
செலுத்தாமல், தட்டில் இருந்த நான்கு இட்லியை விள்ளல்களாக
பிரித்துப் போட்டுவிட்டு உண்ணாமல் பார்வையும் மனதையும்
வேறெங்கோ செலுத்திக் கொண்டிருந்தான் நாயகன்.
"தம்பி
பாண்டியா, அம்மா சொல்றத கேளுப்பா ... அந்தப் பொண்ணும்,
அவங்க குடும்பமும் ரொம்ப நல்ல மாறியா தெரியிறாங்க
.... வேணாம்னு சொல்லாம ... அந்த பொண்ணையே கட்டிக்கப்பா
... நாளைக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு வந்துடலாம் ..... அம்மா பேச்சே தட்ட
மாட்டேன்னு வாக்கு கொடுத்து இருக்க.... நினைப்பு இருக்குல்ல ..."
மகனின்
முக மாறுதல்களை தவறாக புரிந்து கொண்டு வழக்கம் போல் அகல்யா
வாஞ்சையாக அறிவுரை கூற,
அவனோ,
எம்மா .... நான் எப்ப பொழுது விடியும்னு
இருக்கேன் நீ என்னடான்னா வழக்கம் போல நான்சிங்காவே (Non-sync)பேசிக்கிட்டு இருக்க ....
என மனதுக்குள் குமுறி கொண்டிருக்க ,
“இங்க பாரு
பாண்டியா, அந்த மனுஷன் கொஞ்சம் கரடு முரடா பேசினாலும்
வார்த்தைல நேர்மை இருக்கு .... ரொம்ப நல்ல பாரம்பரிய குடும்பமா தெரியுது ..."
என தன் பங்கிற்கு பொன்னம்பலம் பேச,
"அவன்
ரியாக்ஷனை பார்த்தா கல்யாணத்துக்கு ரெடி மாதிரி தான் தெரியுது .... நீங்க ரெண்டு
பேரும் ஏன் ரிப்பீட்டடா அட்வைஸ் பண்ணிக்கிட்டு
இருக்கீங்கனு தான் புரியல ...." என சத்யன்
திடீரென்று மூக்கை நுழைக்க, தண்ணீர் அருந்தி
கொண்டிருந்த வீராவிற்கு புரை ஏறி பாதி தண்ணீர் வெளியேறி திணறடிக்க உடனே அகல்யா அவன் தலையை தட்டி
"பாத்து தம்பி, மெதுவா சாப்பிடு ... அவங்க வீட்டுலயும் நம்மள பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க போல... அதான் உனக்கு பொறை ஏறுது...." என உபரி கற்பனையோடு முடிக்க, தன்னவளை நினைத்து மனதோடு சிரித்துக்கொண்டான் அந்தக் காளை.
அகல்யா சொன்னது
போல், செல்வராணி ஸ்ரீப்ரியாவிடம்,
"போட்டோல
பார்க்க அந்த தம்பி நல்லா தான் இருக்காரு.... நாளைக்கு
நேர்ல பார்த்தும் உனக்கு புடிச்சிருச்சினு வை, நான் உன்
அப்பன் கிட்ட சொல்லி அவரோட ரெண்டு வார்த்தை தனியா பேச ஏற்பாடு பண்றேன் .... ஆள் எப்படி .... நல்லா பேசறாரா ... சிகரெட் தண்ணி பழக்கமெல்லாம் உண்டான்னு
கேட்டு தெரிஞ்சுக்க ... சரியா ..."
"ம்ம்ம்"
என்று இசைந்தவளுக்குள், அந்தக் கேள்விகள் குடைய நாளை
நிச்சயம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.
"என்
ஆத்தா சொல்லும் ... ஒருத்தவன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கட்ட முடியாதுனு...
நீ யாருக்கு
வாக்கப்படனும்னு விதி இருக்கோ , அந்த ஆளு உன் வாழ்க்கைல வரும் போது நிச்சயம் கல்யாணம் நடந்தே தீரும்...
சாமி மேல பாரத்தை போட்டுட்டு உன் தாத்தனை மனசுல நினைச்சுக்கிட்டு,
நல்லா படுத்து உறங்கு .... அப்பதான்
நாளைக்கு முகம் பார்க்க நல்லா இருக்கும்... சரியா
கண்ணு " என செல்வராணி விடை பெற, தன் அலைபேசியில் வீராவின்
புகைப்படத்தை எடுத்து ஓரிரு கணம் ரசித்து நோக்கி விட்டு, ஏதேதோ நினைவுகளை அசை போட்டபடி அயர்ந்து
போனாள்.
மறுநாள் அதிகாலை, வீராவின் இல்லம் பரபரப்பாக இயங்கிக்
கொண்டிருந்தது.
பெண் பார்க்கும் படலம் குறித்து அன்புச்செல்வி ( வீராவின் தங்கை) , வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியோடு உரையாடி முடிக்க, அகல்யா பெண் பார்க்க தேவையான சுப வஸ்துக்கள் அனைத்தையும் பைகளில் நிரப்பி பயணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.
வழக்கம் போல் தாய்க்கு கூடமாட உதவி
செய்துவிட்டு தன் அறைக்கு வந்தவனுக்கு , ஏனோ பெண் பார்க்கப்
போவதே , மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு போவது போல்
தோன்றியது.
முதன்முதலாக
ஸ்ரீப்ரியாவை கண்ட பொழுதே, பல ஜென்ம பந்தமாக உணர்ந்ததாலோ என்னவோ தாய்
வீட்டிற்கு சென்றிருக்கும் மனைவியை அழைத்து வரும் நிலையில் தான் அவன் மனம்
இருந்தது.
சீட்டியடித்தபடி
நிலை கண்ணாடியில் பார்த்தவனுக்கு, அணிந்திருந்த காபி நிற கருப்பு கோடிட்ட
முழுக்கை சட்டை ஏனோ பொருந்தாதது போல் தோன்ற, உடனே மெல்லிய
நீல நிற முழுக்கை சட்டையை அணிந்து பார்த்து திருப்தி அடைந்தவனாய், கூடத்திற்கு வரும் போது அகல்யா
"இங்க
பாரு சத்யா, ஏங்க
உங்களையும் தான் (பொன்னம்பலத்தை அழைத்து) ... பொண்ணு பார்த்தோமா,
நல்ல பேச்சு பேசனோமானு இருக்கணும் .... அத விட்டுட்டு இது சரி இல்ல
அது சரி இல்லன்னு பாண்டியன் எதிர்க்க வியாக்கியானம் பேசாதீங்க .... அதையே சாக்கா
புடிச்சுகிட்டு கல்யாணமே வேணாம்னு சொல்லிடுவான்... ஏதோ நான் சொன்னதால இந்த பெண்ணை
பொண்ணு பாக்கவாது வரேன்னு சொல்லி இருக்கான் ...." வெள்ளந்தியாய் கூறிக் கொண்டிருக்க,
"எம்மா
நீ வளரவே மாட்டீயா .... அவன பாரு .... ஒன்னுக்கு ரெண்டு சட்டையை மாத்தி அழகு
பார்த்துட்டு வரான் ... துரைய பத்தி எனக்கு நல்லா தெரியும் ... அவருக்கு புடிச்சா
தான் எதுவுமே செய்வாரு ... ஏதோ உன் பேச்சுக்கு கட்டுப்பட்டு வர்ற மாதிரி நீயா
பில்டப் கொடுத்து ஏமாறாத..."
என துப்பறியும்
சிங்கமாக சத்யன் துப்பு கொடுக்க,
"அட ஆமா
.... ஏம்பா காபி கலர் சட்டைய மாத்தின ... அது நல்லாத்தானே இருந்தது... "
என்றார் அகல்யா எதார்த்தமாய்.
" எம்மா,
அந்த சட்டைல பட்டன் போயிடுச்சு ... அதனால இந்த சட்டையை மாத்தினே....
சட்டையை மாத்த கூட உங்க எல்லார்கிட்டயும் அப்ரூவல் வாங்கணுமா ...."
குட்டு
வெளிப்பட்டதால் கோபத்தை
வீரா வேறு மாதிரியாக வெளிப்படுத்த ,
"வெட்டியா
பேசிக்கிட்டு இருக்காதீங்க... சீக்கிரம் கிளம்புங்க
..." என்றார் பொன்னம்பலம் அனைவரையும் துரிதப்படுத்தி.
" பாண்டியா,
நான் வண்டி ஓட்டறேன்..."
" வேண்டாண்ணே,
நான் ஓட்டறேன் ..."
" நீ
ஓட்டினா ரொம்ப டயர்டு ஆயிடுவ... பொண்ணு பாக்க போற... பாக்க முகம் நல்லா இருக்கணும்
டா... நிம்மதியா தூங்கிகிட்டே வா.... நான் ஓட்டறேன் ..." என வாஞ்சையாக மொழிந்து தம்பியிடமிருந்து
சாவியை பெற்றுக் கொண்டு மதுரையை நோக்கி லாவகமாக வண்டியை
செலுத்தினான் சத்யன்.
வழியில் ஏதோ
பேச்சு வரும் பொழுது , வழக்கம் போல் அகல்யா வாய் தவறி ஸ்ரீப்ரியாவை ஸ்ரீவித்யா
என பெயர் மாற்றி மொழிய, அதனை
திருத்த எண்ணிய வீரா, அருகில் அமர்ந்திருக்கும் அண்ணனை
பார்த்ததும்,
இப்ப பேர மாத்தி
சொன்னேனு வை, அதுக்கு வேற
அண்ணன் எச பாட்டு பாடுவான் .... தேவையா .... என மனதோடு
பேசி அடக்கி வாசித்தான்.
கிட்டத்தட்ட 5 மணி நேர பயணத்தில் மதுரையை அடைந்தனர்.
அதிக பரபரப்பு
உள்ள பகுதிகளை கடந்து, புறநகர் பகுதியில் நகராட்சி போல் காணப்பட்ட இடத்தை அடைந்ததும்,
"என்ன
தான் கூகுள் மேப் சொன்னாலும், டீக்கடைல நிக்கிறவங்க
கிட்ட ஒரு வார்த்தை கேளுப்பா ..." ---- பொன்னம்பலம்.
உடனே சத்யன்,
"அம்மையப்பன்
.... தர்மகத்தா வீடு எங்க இருக்கு ...." என்றான் தயக்கத்தோடு தேநீர் அருந்தி
கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து.
"பட்டாளத்தார்
வீடுக்கு நேரா போய் வலது பக்கம் திரும்புங்க ..."
"பட்டாளத்தார்
வீடு இல்லைங்க தர்மகத்தா வீடு ..."
"ரெண்டும்
ஒன்னு தேன்.... கிளம்புங்க .." என்றவன் கழுத்தை வெடுக்கென்று திருப்பிக் கொள்ள,
"இந்த
ஊர்ல எல்லாருமே, வெடுக்கு வெடுக்குனு பேசறாங்கப்பா
...." என பொன்னம்பலம் அம்மையப்பனை நினைத்து சொல்ல
, வீராவுக்கும் அதே எண்ணம் வந்து சிரிப்பும் வர,
"ஊர்ல
இருக்கிற அம்புட்டு பயல்களும் லந்து புடிச்சவங்களா
இருக்காங்க ...." என்றான் சத்யன் வழக்கம் போல் பொறுமை இழந்து.
உடனே
பொன்னம்பலம் அம்மையப்பனை அலைபேசியில் தொடர்பு கொள்ள, வீட்டை அடைவதற்கான சரியான
வழித்தடத்தை விவரித்தார் அம்மையப்பன்.
அடுத்த பத்து
நிமிடத்தில் கார் அவர் இல்லத்தை அடைய அங்கு கூடியிருந்த உறவினர்களைக்
கண்டதும், காரில் இருந்து இறங்கிய நால்வரும் மலைத்து
நின்றனர்.
வேட்டி
சட்டையில் கம்பீரமாக காட்சியளித்த
அம்மையப்பன் ஒருவித நிமிர்வோடு அதே
சமயத்தில் மரியாதையாய் அவர்களை வரவேற்க, கொண்டு வந்த
பைகளோடு அகல்யா, பொன்னம்பலம் முன்னே நடக்க, அவர்களை சத்யன், வீரா பின் தொடர்ந்தனர்.
வீட்டு வாயிலை
நெருங்கும் போது நினைவு வந்தவனாய்,
"அண்ணே,
என் மொபைல கார்ல விட்டுட்டேன் ... எடுத்துட்டு வந்துடறேன் ..."
என்ற வீரா சத்யனின் பதிலுக்கு காத்திராமல் , காரை அடைந்து முன்பக்க கதவை திறந்து அலைபேசியை எடுத்துக் கொண்டு
திரும்பும் போது , ஏதோ ஒரு உணர்வு , மென்
மாருதத்தில் மிதந்து வந்து அவன் மனதை ஆக்கிரமிக்க, சுற்றி
சுற்றி பார்த்துவிட்டு, எதேச்சையாக தலைநிமிர்த்தி
பார்த்தவனின் விழிகள் வீட்டு பால்கனியில் நின்றபடி
அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீப்ரியாவின் விழிகளை சந்தித்தன.
சற்றும்
எதிர்பார்க்காத அந்த விழிகள் கலப்பு,
ஒரு கணம் ஆச்சரியம் , ஆனந்தம் ,அதிர்ச்சி என மூன்றையும் மின்னலாய் கலந்து
இருவரையும் தாக்க, அரைக்கணத்திற்கும் குறைவான
நேரமே உறைந்து நின்றவன், தன்னவளின் மென் புன்னகையை ரசித்து பதில் புன்னகை பூத்ததோடு தன் இரு புருவங்களையும் ஒன்றின் பின்
ஒன்றாக உயர்த்தி கண்களால் நலம் விசாரிக்க, பதிலுக்கு அவளும்
லேசாக தலையசைத்து கன்னக்குழி தெரிய மென் புன்னகை பூக்க ' யாஹூ'
என குதூகளித்தான் தன் வலக்கரத்தை ஸ்டைலாக காற்றில் குத்தி.
மாடத்தில்
இருந்து மங்கை நோக்க, மண்ணில் இருந்து அதிவீர ராம பாண்டியனும் நோக்க அவனை
அம்மையப்பன் நோக்கி கொண்டிருந்தார் அவன் அறியாமல் ....
"அங்கனவே நின்னுட்டீகளே..வாங்க .." என அவர் அழைக்க,சுயம் உணர்ந்தவன், இவரு இன்னும் வீட்டுக்குள்ள போகலையா .... என தன்னுள்ளே பேசிய படி வேகமாக வீட்டை நோக்கி நடை போட, அவன் சென்றதும் அந்த இடத்திற்கு சென்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு,
"யாரையும்
காணோமே... காக்கா தான் கத்துது .... அத பாத்தா அப்படி
கத்துனாரு ... என்னமோ போ ஒண்ணுமே வெளங்கல ..." என அவர் விலகி நடந்ததும், பால்கனியில்
குனிந்து தலைமறைந்திருந்த ஸ்ரீப்ரியா, விருட்டென்று எழுந்து வீட்டிற்குள் ஓடினாள் .
பெரிய கூடமும் , தேக்கு மர ஊஞ்சலும் உயர்ந்த சாளரமும்,
தஞ்சாவூர் ஓவியங்களும், யானைத் தந்தமும் ,வீட்டின் பழந் தன்மையோடு பாரம்பரியத்தையும் வெகு அழகாக பறைசாற்றி, புதியவர்களை வரவேற்றது .
பொன்னம்பலத்தின்
குடும்ப உறுப்பினர்களை கூடத்தில் நடுநிலையாக இருந்த டாம்பீக நீள்விருக்கையில் நலம் விசாரித்தபடி அமரச் சொன்ன
அம்மையப்பன் தன் மனைவி மற்றும் தாயை அறிமுகப்படுத்தி வைத்தார் .
பேச்சு
சுவாரசியத்தில் அடிக்கடி அவரது பார்வை வீராவை மட்டும் வித்தியாசமாக தொட்டுச் செல்ல,
"ஏன் அவரு உன்னைய மட்டும், அக்யூஸ்ட்ட பாக்கற மாறியே பாக்கறாரு ...." வெகு சன்னமாக சத்யன் வீராவிடம் வினவ, அண்ணன் ஆராய்ச்சில இறங்கிட்டான் டோய் .... என உள்ளுக்குள் உரைத்துக் கொண்டு
"அவரு
பார்வையே அதான் போல ..." லேசான திருட்டு முழியோடு
கூற , ஏற இறங்க அவனை ஓரக்கண்ணால்
பார்த்த சத்யன்
"ஏதோ சரி
இல்லயே..." என்றான் குற்றம் சாட்டும் தொனியில்.
ஆண்டவா, எனக்கு அண்ணனும் சரியில்ல மாமனாரும்
சரி இல்ல ... நீ தான் என் காதலைக் காப்பாத்தி கரையேத்தனும்னு .... அவசர வேண்டுதலை
வைத்துவிட்டு நல்ல பிள்ளையாய் அமைதி காத்தவனை வைத்த கண் வாங்காமல் ஒரு வித
மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு இருந்தார் செல்வராணி.
அம்மையப்பனின்
பேச்சு, அங்கு சூழ்ந்து இருந்த மக்களின்
பார்வை , அவர்களின் செயல்பாடுகளை கண்டு சத்யன் வெகு சன்னமாக,
"இன்னுமா
இந்த சடங்கை எல்லாம் ஃபாலோ பண்றாங்க .... ஏதோ சினிமால பாக்கற மாதிரி இருக்கு
..." என்றான் தாயிடம் ஆச்சரியமாய்.
"ம்ம்ம்....
தாய் தகப்பன் பார்த்து கல்யாணம் கட்டி வச்சா, இந்த
மாறி எல்லா சடங்கும் நடக்கும் .... தானா பொண்ணு தேடி கட்டிகிட்டா, எப்படி நடக்கும்..” என சமயம் பார்த்து சன்னமாக அவர் மூக்கு உடைக்க, மிகுந்த கோபத்தோடு தாயைப்
முறைத்துவிட்டு தலை திருப்பிக் கொண்டான் மைந்தன்.
மக்கள் சூழ்ந்த
சபையில் பேச அச்சப்பட்டு கொண்டு செல்வராணி
தயங்கி நிற்க, அப்போது சபையில்
"நல்ல
நேரம் முடியறதுக்குள்ள பொண்ண பாத்துடுங்க ... பொறவு மத்தத பேசிக்குவோம்
...." என்ற அம்மையப்பன்
"அம்மா,
ரேவதியை கூட்டிகினு வா .." என தாயை பார்த்து கூறி
முடித்தது தான் தாமதம், நாயகன் சுவாசிக்க
மறந்து அதிர்ச்சியில் உறைந்தே போனான்.
ஸ்ரீ-ராமம்
வருவார்கள்...
Awesome as always 💕👏❤️❤️❤️❤️💖
ReplyDeleteThanks a Lot ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
DeleteNice
ReplyDeletethanks ma
DeleteRevathi (a) Priya.💓💓💓💓💓
ReplyDeleteWhere is Sri& Ram?😕😕😕
thanks ma...next epi da
DeleteHahaha... Veera reaction ennathu Revathi yaa... ponna mathitangaloo?? Nice ud sis
ReplyDeletethanks ma
DeleteSemma
ReplyDeletethanks ma
Delete🤣🤣😂😂😂😂😂😂😂🤣
ReplyDelete