அத்தியாயம் 37
கிரீன் பார்க்
உணவகம்:
செயற்கை
நீரூற்றுக்கு அருகில் குடில்கள் போன்று அமைக்கப்பட்டிருந்த தனித்தனி
உணவு மேஜைகள் ஒன்றில் ராம்சரண் சென்றமர்ந்த
பத்தாவது நிமிடத்தில், அந்த இடத்தை தேடி
வந்தமர்ந்தான் வீரா.
ஓரிரு கணம்
அங்கு அமைதி நிலவ, உடனே வீரா உணவு அட்டவணையை பார்க்காமலேயே, அங்கிருக்கும்
சிப்பந்தியை அழைத்து அவர்கள் இருவரும் எப்பொழுதும்
விரும்பி உண்ணும் இருவகை உணவுகளை தயார் செய்து கொண்டு வருமாறு பணித்துவிட்டு
ராம்சரணின் மீது பார்வையை பதித்து,
"சரண் ,
எல்லாம் சரியாயிடும் கொஞ்சம் பொறுமையா இரு ..." என்றான்
ஆதரவாய்.
"என்ன
சரியாயிடும் ... லட்சுமி, என் குழந்தைகளும்
என் வாழ்க்கையை விட்டுப் போனதை நினைச்சா மனசு நெருப்பா கொதிக்குது டா ...
வாழ்க்கையில மொத முறையா அனாதையான உணர்வ அனுபவிக்கறேன்...
என் அம்மா கூட அவளை மாதிரி அக்கறையா அனுசரணையா என்னை
பார்த்துக்கிட்டதில்ல... தெரியுமா...
நான் அவளை
கல்யாணம் பண்ணிக்கும் போது எனக்கு அவ மேல பெருசா ஈர்ப்போ லவ்வோ எதுவுமே கிடையாது
... பொண்ணு பாக்க நல்லா இருக்கா
.... ஹாரஸ்கோப் பொருந்தி வந்திருக்குன்னு அப்பா சொல்றாரு, சோ, கல்யாணம் பண்ணிக்கணும்னு பண்ணிக்கிட்டேன்....
ஆனா பழக பழக தான், அவ என் மேல வச்சிருக்கிற அளவுக்கு அதிகமான லவ் அண்ட் அபெக்ஷன்,
அவளோட பேஷன்ஸ், பிரில்லியன்ஸ்
எல்லாமே எனக்கு பிடிக்க ஆரம்பிச்சுது ... நான் கூட சில சமயம் அவளோட
எமோஷன்ஸ்சுக்கு சரியா ரியாக்ட் பண்ணினது இல்ல ... ஆனா அவ எனக்கு ஒன்னுனா துடிச்சு
போயிடுவா.... அப்படி இருந்தவ எப்படிடா இப்படி மாறிப்
போனா ...."
மனம் நொறுங்கிப்
போகும் சந்தர்ப்பங்களில், பெரும்பாலானவர்களுக்கு தீர்வை காட்டிலும், மனதில்
இருப்பதை உணர்வுபூர்வமாக கொட்டவும் , அதனை குறுக்கிடாமல் செவிமடுத்து கேட்கவும் ஒரு ஜீவன் தேவைப்படுகிறது ...
அது தாய், தாரம், சகோதரன் சகோதரி, உயிர் நண்பன் யாராகிலும் ,
மனதை அழுத்தி கொண்டிருக்கும் உணர்வுகளை பகிர்ந்து
விட்டால், ஒருவித தெளிவு பிறப்பதோடு, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு தயாராவதற்கு அது பேருதவியாக இருக்கும்
என்பதால் அவனை பேச விட்டு அமைதி காத்தான் வீரா.
"என்
அப்பா என்கிட்ட, அவ உன்னை வேணாம்னு சொல்லிட்டா, டிவோர்ஸ்க்கு சைன் பண்ணுன்னு சொல்லும் போது எனக்கு டிவோர்ஸ் வேணாம் மாமானு சொல்ல மாட்டாளான்னு ஒரு சின்ன நப்பாசை இருந்தது... ஆனா அப்ப கூட ஒரு வார்த்தை பேசாம அமைதியா நின்னா பாரு ... அப்பவே என் மனசு சுக்கு நூறா
ஓடைஞ்சு போச்சு ...
ஆனா ஒன்னு
மட்டும் புரியவே இல்லை .... அவ மனசை என்னால அவ கண் வழியா படிக்க முடியுது… அதுல எப்பவும் போல என் மேல லவ்
அண்ட் அபெக்ஷன் எல்லாமே இருக்கு .... ஆனா அவ பேசுறதும் நடந்துகிறதும் தான் ரொம்பவே
வித்தியாசமா இருக்கு .... எப்பவுமே அவகிட்ட வைராக்கியம் இருக்கும் அது எனக்கு நல்லாவே தெரியும் ... ஆனா இப்படி ஒரு முரட்டு பிடிவாதத்தை நான்
பார்த்ததே இல்லை ..."
"சரி
ரொம்ப யோசிக்காத ... லஷ்மி எங்கயும் போகல.... உங்க
வீட்ல, உன் அப்பா கூட தான் இருக்க போறா ... நீ எப்ப
ஊட்டிக்கு போனாலும் அவளையும்
குழந்தையையும் பார்க்கலாம் .... "
"இல்லடா,
இனிமே அவளை எந்த காரணத்துக்கொண்டும் பார்க்கக் கூடாதுன்னு முடிவு
செஞ்சிருக்கேன் .... ஸ்ரீபாப்பாவ பார்த்து மூணு
மாசத்துக்கு மேல ஆகுது ... குழந்தையை மட்டும் ஒரு
தடவையாவது பார்க்கணும்னு ஆசையா இருக்கு ... அவ்ளோ தான்
..."
"நீ
ஊட்டிக்கு போனா லட்சுமியை பார்க்கறயோ இல்லையோ , உன்
குழந்தையை பார்க்கலாமே ... நீ சொல்ற மாதிரி லட்சுமியும் உன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கா... கடைசியா நான் அவ கிட்ட பேசிட்டு வரும்
போது ரொம்ப அழுதுட்டா ... ஏதோ ஒரு படத்துல வருமே, அது மாதிரி
உன் மனசுல இருக்கிற உணர்வையும் லட்சுமி மனசுல இருக்குற உணர்வையும் கோர்ட்
பேப்பர்ஸால பிரிக்க முடியாது ... கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் சொல்யூஷன்
கிடைச்சிடும் ....டோன்ட் வரி ..."
மீண்டும் ஓரிரு
கணம் அங்கு அமைதி நிலவ, எதையோ யோசித்த ராம் சரண்
"என்
மேலயும் தப்பு இருக்குடா ... அவ வீட்டை விட்டு வெளியே போனதுக்கு, ராமலட்சுமியோட கல்யாண விவகாரம் தான் காரணம்னு என் அம்மாவும் தங்கச்சியும் சொன்னத நம்பி, ஏற்கனவே
பேசி முடிச்ச விஷயத்தை மறுபடியும் கிளறி சண்டை போட்டுட்டு அவங்க அம்மா வீட்டுக்கு
கிளம்பி போய்ட்டாளே...
ஏதோ ஒரு பெரிய
விஷயம் என் வீட்ல நடந்திருக்கு டா... அது என்னன்னு கண்டுபிடிச்சே
ஆகணும் ... எவ்ளோ கேட்டாலும் என்
அம்மாவும் தங்கச்சியும் ராமலட்சுமி கல்யாணம் நின்னு போன விஷயத்தை தான் காரணமா
சொல்றாங்க .... ஆனா லட்சுமி வீட்டை விட்டு போனதுக்கு
அது காரணமா இருக்காதுன்னு இப்ப 100% நம்பறேன்....
கூடிய சீக்கிரம் அது என்னன்னு கண்டுபிடிக்கிறேன் .."
"சரி, உன் அப்பாவுக்கு இந்த விஷயம் எல்லாம் எப்படி தெரிஞ்சது .... யார் சொன்னது ... அவருக்கு எப்படி தினேஷை தெரியும் .... 80 மூவிஸ் ல கிளைமாக்ஸ்ல போலீஸ் வர்ற மாதிரி , சரியா எப்படி ஸ்ரீனி வீட்டுக்கு வந்தாரு..”
"டேய்,
நீ கேட்ட ஒரு கேள்விக்கு கூட என்கிட்ட பதில் இல்ல டா .... அவருக்கு
எப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சது , எப்படி அங்க சரியா
வந்தாருன்னு நானும் உன்னை போல யோசிச்சுகிட்டு தான் இருக்கேன் ... அவர கேட்டா தான்
தெரியும் ... ஆனா எனக்கு அவரு மேல கழுத்து வரைக்கும் கோவம் இருக்குது .... அவரைப்
பார்த்தா கூட பேச கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன் ...."
"சரண்......
என்னை விட உனக்கு உன் அப்பாவை பத்தி நல்லாவே தெரியும் ... அவர் எது செஞ்சாலும் உன்
நல்லதுக்காகத்தான் செய்வாரு ... அவர் மேல கோவப்படாம, அவருக்கு
எப்படி விஷயம் தெரிஞ்சது, ஏன் அப்படி ஒரு முடிவு
எடுத்தாருனு கேளு ..."
"ஓகே
..." என்றான் வேண்டா வெறுப்பாக.
"சரி,
ஊட்டிக்கு எப்ப போக போற ...."
"நான்
ஊட்டிக்கு போக போறது இல்ல .."
"இப்ப
மட்டும் போகலயா ... இல்ல எப்பவுமே போக போறதில்லையா ..."
"இனி
எப்பவும் போக போறதில்ல ..." என்று முடித்தான் வைராக்கியத்தோடு .
வைராக்கியம்
நிலைக்குமா ...??...
காலம் அதற்கு
ஒத்துழைக்குமா ...???
அதற்கு மேல்
சிப்பந்தி கொண்டு வந்து பரிமாறிய உணவை கடமைக்கே என்று கொரித்துவிட்டு இருவரும்
தத்தம் வீடு நோக்கி பயணித்தனர்.
காரின் முன்
இருக்கையில், ஓட்டுனருக்கு
அருகில் ரங்கசாமி அமர்ந்திருக்க, பின்புறத்தில் அமர்ந்திருந்த
லட்சுமியின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிய, வாய் விட்டு அழ
முடியாத நிலை என்பதால் மனதுக்குள்ளேயே பொங்கி கரைந்தாள். ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
தோன்றி அவளை அணு அணுவாக துளைத்தெடுக்கத் தொடங்கின.
திருமணத்திற்குப்
பின்பு எத்தனையோ பிரச்சனைகள் நடந்திருந்தாலும்,
கடைசியாக நடந்த ராமலட்சுமி திருமண விவகாரத்தை விடுத்துப் பார்த்தால்
அவன் ஒருமுறை கூட அவளை தனிமையிலோ
அல்லது பலர் முன்னிலையிலோ எவ்வகையிலும் விட்டுக்
கொடுத்ததில்லை அவமானப்படுத்தியதில்லை ......
அவளுக்காக அவனுடைய இயல்பை மீறி, பல விஷயங்களில் இறங்கி வந்திருக்கிறான்... அவனுடைய கல்வி, பணி, வாழ்க்கை அமைப்பு, பெரும்பாலும் உயர் மட்டத்தை சார்ந்திருந்த நிலையில், நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவள் என்பதால் ஒரு சில தருணங்களில் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவள் திணறிய போது கூட, சிறு புன்னகையோடு ஏற்றுக்கொண்டு, அவளுக்கு நல்ல வழிகாட்டியாய் வழிகாட்டியவன் ...
அவள் அறியாதவற்றை தன்மையாக சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்தினானே ஒழிய அவளை எந்த நிலையிலும் அவன் உதாசீனப்படுத்தியதில்லை ... சரியாகச் சொன்னால், அவளது அறியாமையை அவன் மனமுவந்து ரசித்து கொண்டாடினான் .... எந்நிலையிலும் கோபப்பட்டதில்லை ..
கடைசியாக வீரா
சொன்னது போல், அவளது
குடும்பத்தை அவன் குடும்பமாகத்தான் கருதினான்..
அவளது தங்கை, தாய், தந்தை அனைவரிடமும் ஆத்மார்த்தமாக அன்பு பாராட்டினான்...
அவளது குடும்ப
பொருளாதார நிலை குறித்து ஒரு நாளும் அவன் தவறுதலாக சிறு வார்த்தை கூட
மொழிந்ததில்லை .....
தலை தீபாவளிக்கு
பெண் வீட்டிலிருந்து தனக்கு என்ன சீர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கும் ஆண்களுக்கு
மத்தியில், அவர்களது
தலை தீபாவளியின் போது அவளது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் துணிமணிகளை
வாங்கிக் கொடுத்தவன் ....
இவ்வளவு ஏன், அவளது தாய் ஆசை ஆசையாக வீட்டின்
மூத்த மாப்பிள்ளைகாக தலை தீபாவளி தினத்தன்று தங்கத்தால்
ஆன சிறிய சங்கிலியை சீராக வழங்கிய போது கூட, அதனை
ஏற்றுக் கொள்ளாமல் பெரும்பாலும் தவிர்க்கப் பார்த்தவன்..
இவ்வாறாக
இத்துணை நாட்கள் மனதில் மண்டி கிடந்த
கணவன் மீதான பிழைகள் முழுவதும் துடைத்தெறியப்பட்டு
, அவன் அருமை பெருமைகள் அனைத்தும் வரிசை கட்டி வலம் வர தொடங்க , துடித்துப் போய்விட்டாள் மங்கை .
வாழ்க்கையில்
சில உறவுகளை நழுவ விட்ட பிறகு தான் அதனுடைய உன்னதத்தை அறிந்து கொள்ளும் நிலை வரும் என்பது
போல் அன்பு கணவனை விட்டு
விலகி வந்த பின்பு தான்,அவனின் ஆகச் சிறந்த குணங்கள் அவள் சிந்தையை ஆக்கிரமித்து இம்சிக்க வழியற்றுப் போனாள் அந்த வனிதை.
அவளுக்காக அவன்
அதிக நேரம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், கிடைத்த நேரங்களில்
அவளிடம் காதலாகி கசிந்துருகினான் என்பதை மறுக்கவே முடியாது ...
அவனுக்கு அதிகம்
பேச வராது என்றாலும், அவளது பேச்சை பொறுமையாக கேட்டு ரசித்து சிரிப்பான் ...
அவனுக்கு
குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் அவள் இரண்டாவது முறை கருத்தரித்த
தினத்திலிருந்து அவளை மனையாளாக பார்க்காமல் மழலையாக கண்ணும் கருத்துமாக பார்த்துக்
கொண்டவன் ....
அதுபோல் குழந்தை பிறந்ததிலிருந்து, அவனுக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரத்தை கூட, அதுக்காக
ஒதுக்கி, அதனுடன் அழகாக கொஞ்சி விளையாடி
மகிழ்வான்...
இப்படியாக பல
நேரங்களில் மனைவியாகவும் சில நேரங்களில் மழலையாகவும் அவளை அவன் ரசித்து கொண்டாடிய தருணங்கள் எல்லாம் அவசர கதியில்
திரைப்படகாட்சிகள்
போல் ஒன்றன்பின் ஒன்றாக அவள்
மனக்கண்ணில் வரிசை கட்டி ஒளிபரப்பாக, துடித்து துவண்டு போனவளுக்கு வீரா கடைசியாக சொல்லி சென்றது ஒரு வகையில்
சரியோ என்று கூட தோன்ற ஆரம்பித்தது.
மாமனார் தன்
கணவனை விவாகரத்துக்கு சம்மதிக்க வைக்க,
அவளது விருப்பமின்மையை காரணியாக பயன்படுத்தும்
போது , எதையும் சிந்திக்காமல் தன்
கணவன் மீதான தன் மன விருப்பத்தை பகிர்ந்திருந்தால்,
இத்துணை துயரத்திற்கு இப்பொழுது ஆளாக வேண்டிய அவசியமே
இருந்திருக்காதே....
அப்படி பகிர
முடியாமல் வாய் புட்டு போட்டு தடுத்தது எது .... வீரா சொன்னது போல் ஈகோவா .... என்ற
ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினாள்....
பொதுவாக எந்த உறவுக்கு நடுவிலும் ஈகோ ( தான் என்னும் அகங்காரம்) வந்துவிட்டால் அந்த உறவு நிலைக்காது என்பார்கள் .... அதுவும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய புனிதமான உறவான கணவன் மனைவிக்குள், இந்த குணம் வரவே கூடாது என்பார்கள் ஆத்மார்த்தமான, அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த மூத்த தலைமுறையை சார்ந்தவர்கள் ...
இப்படி
அனைத்தும் தெரிந்தும் , நெருக்கடியான நேரங்களில் செயல்படாமல் விட்டு விட்டோமே ...
இவ்வளவு ஏன்
வீட்டை விட்டு வெளியேறி, ஓரிரு தினங்களுக்குப் பிறகு, தன்னவன்
அழைக்கவில்லை என்றாலும் தான் அழைத்துப் பேசி இருக்கலாமே....
ஆதாரம் இல்லை
என்றாலும் நடந்த அசிங்கத்தை பகிர்ந்து இருந்தால், அவனது நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வாய்ப்பாவது
கிடைத்திருக்குமே…
இப்பொழுது அனைத்து வழிகளும் அடைபட்டு விட்டனவே ... வீரா சொன்னது போல், நான் என்னவனை நம்ப மறுத்து விட்டேன் போலும் ....
ஒரு
சந்தர்ப்பத்தில் அவன் எடுத்த முடிவை அடிப்படையாக வைத்தல்லவா , கண்களை மூடிக்கொண்டு
முடிவெடுத்துள்ளேன் ....
சந்தர்ப்ப
சூழ்நிலைக்கேற்ப மனிதர்களின் சிந்தனைகளும் செயல்களும் மாறுபடும் என்பதை கூட அடியோடு மறந்து போனேனே
....
கோபம் என்பது தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்பதை அறிந்தும் , அருணா கற்பகத்தின் மேல் இருக்கும் கோபத்தை அல்லவா , என்னவனிடம் காட்டி, என் வாழ்க்கைய சிதைத்து கொண்டுள்ளேன் .... என்னவனுக்கு மனைவியானதில் இருந்து அவனது கௌரவத்திற்கும், மரியாதைக்கும் சிறு குறை கூட வராமல் காத்து வந்தேனே...
இன்று அவனது
நட்பு வட்டம் முன்னிலையில் அவனுடன் வாழ மறுத்து, அவமானப்படுத்தி விட்டேனே ... என கலங்கி
துடித்தவளுக்கு கணவனின் வைராக்கியமும் பிடிவாத குணமும் மின்னலென மனதில் வந்து போக, இனிமேல் எந்நிலையிலும்
தன்னைத் தேடி வரமாட்டான் என்ற எண்ணம் அவள் சிந்தையின் ஆழத்தில் உரைக்க,
உயிர் உடலை விட்டு பிரிவது போலான வலியில் உருகி கரைந்தாள் அவன்
உயிராள்.
பத்து
நிமிடத்திற்கு மேல் உள்ளுக்குள்ளேயே அழுது கரைந்தவளுக்கு, ஓரளவு மனம் நிதானத்துக்கு
வந்ததும், எப்படி தன் கணவனுக்கு, தான்
கர்ப்பம் தரித்து இருப்பது தெரிய வந்தது .... என்ற யோசனையில் இறங்கினாள்.
நண்பனின் இல்லம்
என்றாரே ...
ஒருவேளை
மருத்துவர் சுமித்ரா, முன்பே பரீட்சையமோ ...
உடனே
அச்சமயத்தில் மாமனாரின்
வருகை , மனக்காட்சியாய் விரிய , அவரின்
வருகையை தன்னவனும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன்
முகத்திலிருந்தே அறிந்திருந்தவளுக்கு பல விஷயங்கள்
மூடு மந்திரமாகவே இருக்க, அதனை கேட்டு அறிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாததால், மௌனம்
காத்தாள் மாது .
கிட்டத்தட்ட அரை
மணி நேர பயணத்திற்கு பிறகு, ரங்கசாமியின் கார் லட்சுமியின் இல்லத்தை அடைய, தயாராகி
வீட்டு வாயிலில் காத்திருந்த ருக்மணியின் முகத்தில் கேள்வி ரேகைகள் விரவி
இருந்தாலும், சடுதியில் மறைத்துக் இன்முகத்தோடு
இருவரையும் வரவேற்றார்.
ரங்கசாமி, தியாகராஜன் மற்றும் ராமலட்சுமி உடன்
கூடத்தில் இயல்பாக உரையாடிக் கொண்டிருக்க, மகளைத் தனியே அழைத்து விசாரணையில் இறங்கிய
ருக்மணி
"உடம்பு
சரியில்லன்னு ஸ்கூலுக்கு லீவு எடுத்துட்டு, மதியத்துக்கு
மேல குழந்தையை அப்பாகிட்ட விட்டுட்டு, ஃபிரண்ட பார்க்க போனவ, எப்படி உன் மாமனாரோட திரும்பி
வர... ஒண்ணுமே புரியலையே டி ..."
"அது
வந்து ...." என முதலில் தடுமாறியவள் பிறகு தான் கருத்தரித்திருப்பதை உறுதி
செய்து கொள்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றதை ஒரு வழியாக கூறி முடித்தாள்.
செய்தியறிந்ததும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்த
ருக்மணி,
"ரொம்ப
ரொம்ப நல்ல விஷயம் லக்ஷ்மி ... உன் வீட்டுக்காருக்கும்
மாமனாருக்கும் விஷயத்தை சொல்லிட்டியா ... அதனால தான்,
உன் மாமனார் பரபரப்பா இங்க வந்து எதுவும்
சொல்லாம, என்னை ஸ்கூலுக்கு மூணு நாள் லீவு சொல்ல சொல்லிட்டு
ஊட்டிக்கு போக குழந்தையோட கிளம்பி தயாரா இருக்க சொன்னதோட
உன்னையும் கூட்டிட்டு வரேன்னு போனாரா ...
அப்பாடா இப்ப
தான் நிம்மதியாச்சு... உன் வாழ்க்கை என்ன ஆகுமோனு பயந்துகிட்டே இருந்தேன் ...
அந்த கருப்பசாமி
தான் உன் வாழ்க்கைக்கு நல்ல வழியை காட்டி இருக்கான் ...
இனிமேலாவது
நல்லபடியா உன் புருஷனோட கூடி பொழைக்கிற வழிய பாரு ....
ஆமா, எதுக்காக உன்னை இங்கு இருக்க
விடாம ஊட்டிக்கு கூட்டிட்டு போறாரு ....
சரி ஊட்டிக்கு
போறது கூட ஒரு வகைல நல்லது தான்.... ஒன்னுக்கு ரெண்டு சிசுவை சுமந்துகிட்டு இருக்க, இங்க இருந்தா தாயும் மகளும் உன்னை
ஒரு வழி பண்ணிடுவாங்க ..."
என மிகுந்த
சந்தோஷத்தில் தானே கேள்வி கேட்டு, தானே பதில் அளித்துக் கொண்டு அவர் படபடக்க,
உள்ளுக்குள் துடித்து போனாள் கோதை .
அமைந்த
அற்புதமான வாழ்க்கையும் அன்பான கணவனையும் சற்று முன்பு தான் தூக்கி எறிந்து விட்டு தனி
மரமாக வந்து நிற்கும் நிலையில், தாயின் மன ஓட்டத்தையும்,
ஆனந்தத்தையும் கண்டு வாடியவள் , அவரது
மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மனமில்லாமல் அமைதி காத்தாள்.
ரங்கசாமி
எப்போதும் எதையும்
விவரித்து பேசும் நபர் கிடையாது என்பதால், தியாகராஜன், ராமலட்சுமிக்கும் ருக்மணி புரிந்து கொண்டது போலவே செய்தி பகிரப்பட, அடுத்த
பத்து நிமிடத்தில் தயாராகி, தன் தாய் , குழந்தை மற்றும் மாமனாருடன் ஊட்டிக்கு
பயணமானாள் லட்சுமி.
"ஏன்டா
மதியம் ஃபிரண்ட பாக்க போறேன்னு போன… இப்ப தான் வர ...
எதையாவது வெளிய சாப்ட்டியா இல்ல தோசை ஊத்தட்டுமா ..." என்றார் அகல்யா, அப்போது தான் வீடு திரும்பிய வீராவை
பார்த்து.
" எதுவும்
வேண்டாம்மா.... வெளியே சாப்ட்டேன் ...."
"ஏம்பா
உன் அண்ணன் உனக்கு போன் பண்ணானா..”
" பண்ணலையே...
ஏன் ..."
"குழந்தைகளையும்
, பிரபாவையும் கூட்டிட்டு
வரேன்னு மாமனார் வீட்டுக்கு போனான்... போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான்...
என்னவோனு பயமா இருக்கு ...."
"இப்பதான்
ஒரு பஞ்சாயத்தை முடிச்சிட்டு வரேன்... அதுக்குள்ள அடுத்த பஞ்சாயத்தா ..." என
வழக்கம் போல் வீரா அலுத்துக்கொள்ள,
"டேய் எப்பவுமே பஞ்சாயத்தே தான் உனக்கு நினைப்புல இருக்குமா.... குழந்தைகளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையோனு நான் யோசிச்சு பயந்துகிட்டு இருக்கேன்... நீ பழசையே பேசிக்கிட்டு இருக்க..."
"பிரச்சனை
இல்லாம நல்லபடியா இருந்தா சரி தான்…” என்றவனிடம்
" தம்பி, சொல்ல மறந்துட்டேனே... அந்த மதுரை பொண்ணு வீட்ல இருந்து அவங்க அப்பா போன்
பண்ணி இருந்தாரு ..."
அதுவரை ஏனோ தானோ
வென்று கேட்டுக் கொண்டிருந்தவன், தன் காதோடு அனைத்து அவையங்களையும் கூர்மையாக்கி கொண்டு,
"சொல்லும்மா
... அவரு என்ன சொன்னாரு ..." என்றான் ஆவலோடு.
"அவங்க
அம்மாவுக்கு, ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாம்..."
"பெண்ணோட
அம்மாவுக்கா ..." என அதிர்ந்தவனிடம்
"இல்லப்பா,
அவரோட அம்மாவுக்கு அதான் பொண்ணோட பாட்டிக்கு ஹார்ட் அட்டாக்
வந்துடுச்சாம்... மூணு வாரமா ஹாஸ்பிடலே கதியா
இருந்தாராம் ... அதனால தான் யாரோட போனுக்கும் சரியா
பதில் சொல்ல முடியலனு சொன்னாரு ... இப்ப அந்த அம்மா ஓரளவுக்கு குணமாகி வீட்டுக்கு
வந்துட்டாங்களாம் ... நம்மள வர வெள்ளிக்கிழமை அவங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வர
சொல்லி இருக்காரு...."
"ஸ்ரீ
வந்துட்டாளா ..." என தன்னை மறந்து மகிழ்ச்சி பெருக்கில் அவன் கேள்வி எழுப்ப,
"யாரு
ஸ்ரீ ...."
"ஸ்ரீன்னா உன் காதுல கேட்டுச்சு... சிட்னில இருந்த பொண்ணு வந்துடுச்சானு கேட்டேன்
..."
"ஏன்டா ,
அந்த பொண்ணு ஆஸ்திரேலியால வேலை செய்யறதா
இல்ல அவங்க அப்பா சொன்னாரு ... நீ என்னமோ சிட்டினிங்கிற ..."
நல்லவேளை அண்ணன்
வீட்ல இல்ல ... என தனக்குள்ளே மொழிந்து கொண்டு
"அம்மா,
உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த இன்னசென்ட் தான் ... சிட்னிங்கறது
ஆஸ்திரேலியால இருக்க ஒரு ஊருமா ..."
"சரி, உனக்கு எப்படி தெரியும் அந்த பொண்ணு அந்த ஊர்ல தான் இருக்குன்னு ..."
இப்பதான் உன்னை
இன்னசென்ட்னு நினைச்சேன் ... நீ உசாருனு ப்ரூவ் பண்ணிட்ட... என மீண்டும் மனதோடு
பேசியவன்,
“அது
வந்து..." என்று சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஒரு
கணம் நிறுத்தி,
"அப்பா
எங்க ..."
"அவரு
ஃபிரண்ட பாக்க போயிருக்காரு ... நீ சொல்லு..”
"அப்ப
சொல்லலாம் ... அதாவது ஆஸ்திரேலியாவுக்கு போற எல்லாருமே முதல் ஒரு வருஷம் சிட்னில
தான் இருக்கணும் .... அப்புறம் தான் வேற ஊருக்கு போக முடியும் ... இந்த பொண்ணு
போய் ஒரு வருஷம் தான் ஆகுது இல்லையா ... அதனால தான் ..."
"அந்த
பொண்ணு போயி ஒரு வருஷம்தான் ஆகுதுன்னு உனக்கு எப்படி தெரியும் ..."
உடனே நாக்கை
கடித்துக் கொண்டவன்,
"அம்மா
கேள்வி கேக்குறதுக்கு ரொம்ப சுலபம் பதில் சொல்றது ரொம்ப கஷ்டம் தெரியுமா ...
" என பொங்கியபடி யோசித்தவன் ,
"அன்னைக்கு
அந்த பொண்ணோட அப்பா போன் நம்பரை அனுப்ப சொன்னேனே.. அப்ப அவர்கிட்ட பேசி
தெரிஞ்சுகிட்டேன் ..."
" ஓ
அப்படியா ..."
"ஆமா
அப்படியே தான் ..." என்றவன் அதற்கு மேல் அரை கணம் கூட, நிற்காமல் தாவி குதித்து தன் அறைக்கு வந்து சேர்ந்ததும், பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு
"சிட்னில அவளை மீட் பண்ணத அவங்க அப்பா கிட்ட சொல்லி இருப்பாளா ... அப்படி சொல்லி இருந்தான்னு வையி, அந்த ஆளு ஒரு ஏடாகூடம் புடிச்ச மனுஷன், அவரு பொன்னம்பலத்து கிட்ட சொல்லி, அது நம்ம வீட்டு துர்வாச முனிவன் காதுக்கெல்லாம் போச்சின்னா என் மானம் மரியாதை கப்பல் ஏறிடுமே .....
கடவுளே கல்யாணம் முடியற வரைக்கும் என்னை காப்பாத்து ... அதுக்கு மேல சமாளிச்சிடுவேன்... " என அவசர அவசரமாக வேண்டுதல் வைத்தவனுக்கு தெரியாது, கல்யாணம் முடிந்த பிறகு தான் அவன்அதிக விஷயங்களை சமாளிக்க வேண்டிய நிலை வரப்போகிறது என்று.
இடம் : சிட்னி
" அப்பத்தா,
நாளான்னிக்கு கிளம்பறேன் ..." என்றாள் ஸ்ரீப்ரியா மிகுந்த கவலை
தோய்ந்த குரலில்.
"சீக்கிரம்
வந்துடு கண்ணு.... எங்க உன்னை பாக்காம கண்ண
மூடிடுவேனோனு பயந்துகினே இருந்தேன் ..." என்றவரின் வார்த்தையில் தெரிந்த
வலியில் கண் கலங்கியவள்,
"இப்படி
எல்லாம் பேசாத அப்பத்தா... உனக்கு ஒன்னும் ஆகாது ..."
"உன்
கல்யாணம் முடியறவரைக்குமாச்சும் நான் உசுரோட இருக்கணும்னு சுடலை மாடனுக்கு
வேண்டுதல் வச்சிருக்கேன்.."
"ஐயோ
அப்பத்தா... உனக்கு ஒன்னும் ஆகாது .. நீ ரொம்ப வருஷம் நல்லா இருக்க போற... என்
கல்யாணமும் நல்லா சந்தோஷமா நடக்க போகுது ... சரியா
..." என்றாள் விபரீதம் காத்துக் கொண்டிருப்பது தெரியாமல் .
ஸ்ரீ-ராமம்
வருவார்கள் ....
Super akka very nice moving 👌👌👌💐💐💐
ReplyDeletethanks ma
DeleteSuper mam
ReplyDeletethanks ma
DeleteSupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletethanks ma
DeleteInteresting 💕💕💕💕💕
ReplyDeletethanks ma
DeleteWow finally Sri story started ... Super super... Happy janmashtami sis.. ungaludaya Krishnar celebration enjoy enjoy
ReplyDeletethanks da.... naalaikku engalukku janmashtami illa... day after tomorrow...krishna gokulam ponadhum dhaan da
Delete